ஞாயிறு, 30 நவம்பர், 2025

51. திருவெஃகா

 

 
திருமழிசையாழ்வார்                                                                                       திருச்சந்தவிருத்தம்
 
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?    814
 
      முறையாக யோகவித்தைக் கற்று, தியான யோகத்தாலே உன்னை அடைய நினைப்பவர் மனத்திலே குடி கொண்டு கொடிய பாவங்களைத் தீர்த்தருளும் தேவாதி தேவா! மலை போல் உயர்ந்த மாளிகைகளையுடைய திருப்பாடகத்திலும், திரு ஊரகத்திலும் இருந்தும், நின்றும், திருவெஃகாவில் சயனித்தும் அருள் செய்கிறாய் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      இப்பாசுரத்தில் பகவான் நின்றான், அமர்ந்தான், கிடந்தான் ஆகிய திருக்கோலங்களில் தன் மனத்தில் உள்ளதை எடுத்துக் கூறுகிறார். ஞானநிலை ஏற்படாதவரை எனக்கு வெளியிலிருந்து அருள் புரிந்தான். ஞானம் பெற்ற பின் என்னால் வெளிப்புறத்தில் பகவானைப் பார்க்க முடியவில்லை. இடைவிடாமல் இறைவனைப் பற்றி சிந்தனை செய்வதால் மனதிலேயே தரிசிக்கும் உயர்நிலையை ஆழ்வார் பெற்று விட்டார்.  எனவே அவர்கள் திருக்கோயில்களுக்குசெ சகனெற் தரிசிப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.  பாமர மக்களுக்கு இது பொருந்தாமல் போகின்றது. நொடிப் பொழுதும் அவன் நினைவில் இருந்தால் நம் மனத்தில் அவனை தரிசிக்க முடியும் என்பது உண்மை.
 
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே    815
 

      நான் பிறவாதிருந்த முற்காலத்தில் எம்பிரான் திருவூரகத்தில் நின்றும், திருப்பாடகத்தில் வீற்றிருந்தும், திருவெஃகாவில் பள்ளி கொண்டும் அருள் புரிந்தான். அத்தகைய நாட்களில் எனக்கு ஞானப்பிறவி ஏற்படவில்லை. அன்று முதல் எம்பெருமான் நிற்பதும், வீற்றிருப்பதும், சயனித்திருப்பதுமான செயல்களை என் உள்ளத்தில் நடத்திக் கொண்டிருக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      நாம் ஒருவனிடம் கொடுத்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு பல விதங்களில் முயற்சிக்கிறோம். அவன் இருப்பிடத்திற்குச் சென்று நின்றும், அமர்ந்தும், பின் அங்கேயே படுத்துக்கிடந்தும் அதனைப் பெற முயற்சிக்கிறோம். அது போன்று எம்பெருமான் உடையவன் உடைமையை இழக்க மாட்டாமை போல, அஸ்மாதிகள் செலுத்த வேண்டிய கடனை பெறுவதற்காக அந்தந்த திவ்ய தேசங்களில் நின்றும், அமர்ந்தும், கிடந்துஇருக்கிறான். அத்தகையவன் என் நெஞ்சில் புகுந்து ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் உள்ளான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

 

திருமழிசையாழ்வார்                                                                       நான்முகன் திருவந்தாதி 

நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்        2417
 
      ஆதிசேஷன் என்ற படுக்கையின் மேல் திருப்பாற்கடலில் திருக் குடந்தையில், திருவெஃகாவில், திருவள்ளூரில், திருவரங்கத்தில், அன்பில் என்ற திவ்யதேசங்களில்  அரிதுயில் கொள்ளும் எம்பெருமான், ஆதிமுதல்வன் அடியார்கள் உள்ளத்திலும் புகுவதற்கு காத்துக் கிடக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பல புனிதத் தலங்களில் சயனித்திருக்கும் பெருமானை நாம் அவனை நெருங்கினால் அவன் விரைந்து நம்மில் புகுந்து கொள்ளக் காத்திருக்கிறான்.  ஆனால் நாம் இத்தகைய பேரானந்தப் பெருவாழ்வினைப் புறந்தள்ளிவிட்டு அழியும் பொருட்களுக்குப் பின்னால் சென்று காலத்தை விரயமாக்கி, பின் மரண காலத்தில் புலம்புகிறோம். எனவே பகவானை அடைவதற்கு வாழும் காலத்திலிருந்தே அவனை நெஞ்சில் நிறுத்த முயற்சிக்க வேண்டும். எம்பெருமான் நம் உள்ளத்தில் வந்து நித்தியவாசம் புரிவதற்குத் தயாராக உள்ளார். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.
 

திருமங்கையாழ்வார்                                                                                      பெரிய திருமொழி 

பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர்
விச்சைக் கிறையென்னும் அவ்விறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவனூர் கடல்மல்லைத் தலசயனம்
நச்சித் தொழுவாரை நச்சுஎன்தன் நன்நெஞ்சே!      1102
 
      என் நல் மனமே! மயிலிறகினால் செய்யப்பட்ட சிறு குடையும், சிறிய விசிறியுமுடைய சமணர் முதலானோர்கள் சர்வஜ்ஞனென்று சொல்லிக் கொள்ளும் அவர்களது இறைவனைப் பணியாமல், வேகவதி நதியின் வெள்ளத்தைத் தடுக்க குறுக்கே சயனித்த பள்ளி கொண்ட பெருமானை விருப்பத்துடன் ஏற்று வணங்குபவர்களை, எனது நல்ல நெஞ்சமே! நீ மட்டுமே ஆர்வத்துடன் தொழ வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      குடையும் விசிறியும் கொண்ட சமணர்கள் என்பது வியாக்யானக் கருத்தாகும். இத்தகைய சமணர்கள் சர்வஜ்ஞன் என்ற  தெய்வத்தைக் கொண்டு அவரே கல்விக்குக் கடல் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். பின்பு கச்சி என்னும் காஞ்சியிலுள்ள திருவெஃகாவில் யாதோத்காரியாகவும், திருக்கடல்மல்லையில் தலசயனராகவும் உள்ள பெருமானை ஏற்றுள்ளனர். ‘வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்மல்லையாய், மதிட்கச்சியூராய்’ என்ற திருநெடுந்தாண்டகப் பாசுரம் இங்கு பொருத்தமாக அமைகின்றது. பரவாசுதேவனாகிய ஒரு சிறந்த ரத்தினத்தை வாத்ஸல்யமான கப்பலானது திருக்கடல் மல்லை என்ற தீவினிலே கொண்டு வந்து தள்ளிற்றாம். அங்கு அந்த ரத்தினம் விலை போகாததால் காஞ்சியில் கொண்டு வந்து தள்ளிற்று என்று கூறுகிறார்.
 
கூந்தலார் மகிழ் கோவலன் ஆய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெஃகாவுளே.    1854 
 
      ‘சிறப்புமிக்க அழகிய கூந்தலையுடைய கோபியர் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும்படி ஆநிரை மேய்க்கும் கோபாலனாய் அவதரித்து, உயரத்திலுள்ள உரியில் இருக்கும் வெண்ணெயைக் களவாடி உண்டு, கொடிய நஞ்சு கொண்ட அனந்தாழ்வானை படுக்கையில் விரும்பிப் பள்ளி கொண்டவனை இன்று திருவழுந்தூரில் தரிசித்து நாளை திருவெஃகாவில் சென்று வணங்குவோம்’ என்கிறார் ஆழ்வார்.
      பகவானின் சிறுபிராயத்து லீலைகள் ஆனந்தமயமானவை. அசுரர்களை அழித்தது, பாண்டவர்களுக்காக தேரோட்டியது, திரௌபதியின் மானம் காத்தது, கம்சனைக் கொன்றது, எல்லா செயல்களும் கோபியர்களை ஆனந்தம் கொள்ளச் செய்தவையாக இருந்தன. அத்தகைய  பெருமையைக் கொண்டவன் திருவழுந்தூரில் எழுந்தருளியுள்ளான் என்பது இதன் பொருளாகும்.
 

திருமங்கையாழ்வார்                                                                                  திருநெடுந்தாண்டகம் 

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
     நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
     உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
     காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
     பெருமான் உன் திருவடியே பேணினேனே     2059
 

      ‘திருநீரகம் என்னும் திருப்பதியில் குடிகொண்டிருப்பவனே! உயர்ந்த திருவேங்கட மலையில் நின்றருள்கின்றவனே! நிலாத்திங்கள் துண்டம் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ளவனே! அழகிய காஞ்சியிலும், திருஊரகத்திலும் எழுந்தருளி இருப்பவனே! அழகிய தடாகக் கரையிலுள்ள திருவெஃகாவில் திருக்கண் வளர்ந்தருள்பவனே! சிந்திப்பாருடையவரின் உள்ளத்தில் உறைபவனே! உலகமெல்லாம் துதிக்கும்படி திருக்காரகம் என்னும் தலத்தில் நிற்பவனே! கோபியர் உள்ளங்களைக் கவர்ந்தவனே! விரும்பத்தக்கதாய் அழகிய காவிரியின் தெற்கில் திருப்பேர் நகரில் இருப்பவனே! என் மனதில் நீங்காமல் காட்சி தருபவனே! பெருமைக்குரிய பெருமானே! உன் கமலப் பாதங்களை பூஜித்து சேவிக்கின்றேன்’ என்கிறார் ஆழ்வார்.
      நீரானது பள்ளத்தில் பாயும். அது போன்று எம்பெருமான் தாழ் மக்களிடம் எளிதில் சேர்வான். ஸ்ரீகிருஷ்ணர் விதுரனின் மாளிகையில் தங்கியதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மனிதனின் தேவையே நீர். ஐந்து வகையான நீர் உள்ளது போன்று எம்பெருமானும் ஐந்து நிலைகளில் நமக்கு அருள்கிறான். எம்பெருமான் நினைப்பவரின் நெஞ்சினில் உறைபவன். அது போன்று என் நெஞ்சிலும் உறைபவன். இத்தகையவனின் திருவடிகளை ஆவலுடன் கண்டு நின்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
     

கல் எடுத்துக் கல் மாரி காத்தாய்! என்றும்
     காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்றும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்றும்
     வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்றும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்றும்
     மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்றும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
     துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே.       2064
     
      பரக்கால நாயகியானவள் கல்மழையிலிருந்து கோவர்த்தனகிரியைத் தாங்கிப் பிடித்து கோகுலத்தைக் காத்தவனே என்றும்மலர் வனங்கள் நிறைந்த காஞ்சியில் அமைந்த திருவூரகத்தில் நின்றருள்பவனே என்றும்சிவதனுசை முறித்து மெல்லிடையாளான சீதையின் தோளில் மாலை சூட்டியவனே என்றும், திருவெஃகாவில் சயனிக்கும் அரசனே என்றும்மல்லர்களை அழித்த கேசவா என்றெல்லாம் தன் கிளியிடம் திருநாமத்தில் முதல் சொல்லைக் கூறி அதனை திருப்பிக் கூறுமாறு தனது உபயத்தனங்கள் நனைய கண்ணீரைப் பொழிந்து சோர்ந்து விடுகிறாள்.
      பரக்கால நாயகி மகிழ்வுடன் இருக்கும்போது கிளியிடம் பேசி மகிழ்வாள். இப்போது துன்பத்தில் நாயகி தளர்ந்திருக்கும்போது கிளியும் தளர்ந்து மூலையில் பதுங்கியுள்ளது. தாயாரானவள் கிளியை எடுத்து வந்து பெருமானின் திருநாமங்களைச் சொல்லுமாறு வற்புறுத்த கிளியும் சற்றே சொல்ல ஆரம்பிக்க அவள் கண்ணீருடன் அதைக் கேட்கிறாள். ஆபத்துக் காலத்திலெல்லாம் உதவுவதில் புகழ் பெற்றவனான கண்ணன் இன்று நம்மளவில் உதவாதொழிவதேன் என்று புலம்புகிறாள் நாயகி.
     

திருமங்கையாழ்வார்                                                                                 திருநெடுந்தாண்டகம் 

முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா
     மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
      அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரதகத்தைத் திருத்தண்காவில்
     வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று
     மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.      2065
 
      மலையிலிருந்து உதிக்கும் இளங்கதிரவனைப் போன்றவனை, திருக்குறுங்குடியில் கார்மேகம் போன்று காட்சித் தருபவனை, நித்யமான மூவுலகத்திற்கும் அப்பாற்பட்டனை, வைகுண்டத்து முதல்வனை, அளவிட முடியாத ஆராவமுதனை, திருவரங்கத்து அரங்கனை, வேதியர்கள் என்றும் சிந்தனை செய்பவனை, விளக்கின் ஒளி போன்று திகழ்பவனை, மரகதமணி போன்று கண்ணிற்கு பசுமையானவனை, தண்காவிலும், வெஃகாவிலும் உள்ள பிராட்டி மணாளனை, கிளிப்பாட்டுக் கேட்டு வளர்த்ததனால் உண்டான பயனை நான் அடைந்தேன் வா! என்று அழைத்து கிளியைக் கைகூப்பி வணங்கினாள்.
      பரக்கால நாயகி தன் கிளியை பெருமானின் பல லீலைகளைச் சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள். நாயகியோ பெருமான் மீது பக்தி கொண்டு அவளை ஏற்காதது குறித்து வருந்தினாள். தான் சொன்னதனால் அவள் மோகித்து வருந்துகிறாள் என்று கிளி கவலை கொண்டது. அவள் மனம் குளிர மீண்டும் பெருமானின் நாமங்களைக் கூறியது. அதனால் மகிழ்வுற்று ‘உன்னை வளர்த்ததனால் பயன் பெற்றேன் வா’ என்று அழைக்கிறாள்.
 

பொய்கையாழ்வார்                                                                                            முதல் திருவந்தாதி 

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்.           2158
 
      திருவேங்கடமும், வைகுந்த மாநகரும், திருவெஃகாவும், மலர்கள் நிறைந்த  நீர் நிலைகளைக் கொண்ட எழில்மிக்க திருக்கோவலூர்த் தலமுமான நான்கு புனிதத் தலங்களிலும் பகவான் முறையே நின்றருள்வதும், வீற்றிருப்பதும், சயனித்திருப்பதும், நடப்பதுமாய் தரிசனம் தருகிறார். எனவே நமது இடரெல்லாம் நீங்கிவிடும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளியுள்ளவாறு நாம் பாசுரங்களை அநுஸந்தித்தால் (சொன்னால்) நமது துன்பங்களெல்லாம் நீங்கிவிடும் என்கிறார். அவனது திருப்பதிகளில் நிற்பதும், இருப்பதும், கிடப்பதும், நடப்பதும் போன்ற நிலைகளை நாம் சொல்லச் சொல்ல நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டு அகலும். பகவான் நீக்கமற நிறைந்த போதிலும் மனதை ஒருமுகப்படுத்த ஆலய தரிசனம் செய்தல் வேண்டும். அந்த கட்டத்தில் மனம் முழு ஒருமைப்பாட்டுடன் விளங்கும். அந்நிலையில் மனமே கோவிலாக மாறி அதில் பெருமான் வீற்றிருப்பார் என்ற உயரிய தத்துவத்தை ஆழ்வார் நமக்கு அருளியுள்ளார்.    
 

பேயாழ்வார்                                                                                                 மூன்றாம் திருவந்தாதி 

சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே
தாம் கடவார் தண் துழாயார்         2307
 
      குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பரந்தாமன் ஒருநாளும் நீங்காத இடங்கள் எவையெனில் அனைத்திலும் சிறந்ததான என் நெஞ்சமும், சிவந்த கண்களையுடைய ஆதிசேஷனும், நிறைவான செல்வ வளம் கொண்ட பெரிய காஞ்சித் திருக்கச்சியும், திருவேங்கடமும், திருவெஃகாவும், திருவேளுக்கையும், ஆயர்பாடியுமாகும் என்று ஆழ்வார் கூறகிறார்.
       இவ்விதம் ஆழ்வார் சிறந்து தொழுத தம் உள்ளத்தை, பெருமான் நித்யசூரிகளிலும், உகந்தருளின நிலங்களைக் காட்டிலும் ஆழ்வார் விரும்பிவாறே அவரது நெஞ்சில் நித்யவாசம் செய்தார். திருவனந்தாழ்வானோ மதுவைப் பருகி மயங்குபவர் போல வேதங்களில் குறிப்பிடும் ஆரா அமுதைப் தினசரி அனுபவிப்பதால் ஏற்பட்ட சிவந்த கண்களைக் கொண்டுள்ளான். இதே கருத்தினை பெரியாவார் தமது பெரியாழ்வார் திருமொழியில் ‘அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்து, என் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தா யெம்பிரான்’ என்று கூறுகிறார். இதுபோன்று நாம் சொல்வதற்கான உறுதியை நாம் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
           
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு              2343
 
      திருவிண்ணகரமும், திருவெஃகாவும், நீர்வளம் மிக்க திருமலையும், பூமியிலுண்டான வைகுந்த மாநகர் போன்ற பெரிய மாடங்களையுடைய திருவேளுக்கையும், அழகிய திருக்குடந்தையும், தேன் பாயும் சோலைகளையுடைய திருவரங்க மாநகரும், திருக்கோஷ்டியூரும், தனது உள்ளங்கையாலே (மாவலியிடம்) நீர் ஏற்ற பெருமான் தங்கும் இடங்களாகும்.  போகும் போது எத்தகைய எளிமையும் சௌசீல்யமும் கொண்டவனாகத் தோன்றினானோ அது போல் இத்திருப்பதிகளில் எளிமையாகக் காட்சி தருகிறான். இத்திருத்தலங்கள் அனைத்தும் மூர்த்தி சிறப்பு பெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன.
      பிரம்மனின் துயர் துடைக்க திருவரங்கம் திவ்யதேசத்தில் பாம்பணையில் மேல் பள்ளி கொண்டு நம்மையெல்லாம் காத்து வருகின்றார். சிறப்பு மிக்க இத்தகைய தலங்களுக்குச் சென்று மிகவும் எளிதாக வரங்களைப் பெற முடியும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
 
இசைந்த அரவமும் வெற்பும் கடலும்
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து
கடைந்த வருத்தமோ? கச்சி வெஃகாவில்
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு?        2345
 
      பாற்கடலைக் கடையும் கயிறாக இருக்க ஒப்புக்கொண்ட வாசுகி என்ற பாம்பும், மத்தான மந்தார மலையும், தாழியாவதற்கு ஏற்ற திருப்பாற்கடலும் ஆகிய மூன்றினையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி இணைத்துக் கடலிலே அமுதம் வெளிப்படும்படி கடைந்து மிகவும் களைப்புற்றதாலோ காஞ்சியிலுள்ள திருவெஃகாவில் சயனம் கொண்டும், திருப்பாடகத்தில் வீற்றிருந்தும், திருவூரகத்தில் நின்றருளியும் இருக்கிறீர் என்று வியந்து பாடுகிறார்.
      கடலிலே ஒரு மலையை நாட்டி,  பாம்பினை கயிறாக சுற்றி, கடைவதெனில் இவை அனைத்தும் பொருந்தி வந்ததால்தான் என்கிறார். கயிறாகக் கொள்வதற்கான தகுதி படைத்த வாசுகி என்னும் அரவம், மத்தாக வடமலைப் பர்வதமும், கடலினைத் தாழியாக்கியதும், இம்மூன்றினையும் சேர்த்துக் கடைவதால் பக்குவப்பட்டு அமுதமானது. ஆயிரம் கைகளால் அசைத்து அசைத்து கடலைக் கடைந்ததனால் ஏற்பட்ட ஆயாசமோ, அதனால் திருவெஃகாவில் சயனித்தும், திருப்பாடகத்தில் வீற்றிருந்தும், திருவூரகத்தில் நின்றும் தனது களைப்பைப் போக்கிக் கொண்டார் என்று கூறுகிறார்.
 
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.      2357
 
      உலகத்தவர்களே! மலைகளின் நடுவே நின்று கொண்டும், புண்ணியத் தீர்த்தங்களில் நீராடியும், பஞ்சாக்னி என்கின்ற ஐந்து நெருப்பின் மத்தியில் இருந்தும் தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. எல்லோரும் விரும்பும் திருவெஃகாவில் வந்து பள்ளி கொண்டிருப்பவனை உண்மையான பக்தியுடன் பயன் கருதாமல் மலர்தூவி கைகூப்பித் தொழுதால் தீவினைகளெல்லாம் ஓடிவிடும் என்ற பொருளில் ஆழ்வார் கூறுகிறார்.
      பனிக்காலத்தில் மலையின் நடுவே உடலை வருத்திக் கொண்டும், குளிர் காலத்தில் குளங்களில் நீராடியும், கோடை கலத்தில் தீ மூட்டியும் கடுமையான சாதனங்களை அனுட்டித்தும் நாம் தவம் புரியத் தேவையில்லை. ஊண் வாட வாட உயிர் காவு இட்டு தவம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. விரும்பும் பலனை எளிதில் பெற உபாயம் இருக்கும்போது உடலை வருத்தத் தேவையில்லை. அர்ச்சாவதாரத்தில் நிலை கொண்டுள்ள திருவெஃகாவில் பெருமான் கோயில் கொண்டுள்ளவன், தன்னைப் பேணிக் கொள்ளாமல் நம்மை காக்க வந்து சேர்ந்திருப்பவனை உபாயமாகப் பற்றினாலே போதும் நாம் முக்தி பெறலாம் என்று கூறுகிறார் ஆழ்வார்.     

நம்மாழ்வார்                                                                                                                       திருவிருத்தம் 

நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது அம் பூந்
தேன் இளஞ் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே.      2503
 
      நால்வகையான நிலங்களையும் தனது கதிர்களால் ருசித்து, சாரத்தைக் கொண்ட நீர்ப்பசை அறும்படி மென்று, சாரமற்ற பகுதி இதுவென்று வெம்மையை உமிழ்ந்த சூரியன், பாலை நிலத்தைத் தாண்டி வந்த பொன் போன்றவனே! தேவர்கள் தமது கால்கள் நிலத்தில் பதிய வந்து வணங்கும் கண்ணனது தலமான அருகிலுள்ள திருவெஃகாவில் மலர் வனங்கள் உள்ளன. அவை எத்தகைய துன்பத்தையும் நீக்கி நன்மைகளைத் தரக் கூடியவையாகும் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
      ஆதித்ய பகவானான சூரியன் நான்கு நிலத்தையும் தன்வசமாக்கி அதன் சத்தான நீரை வாயில் இட்டு மென்று தன் வெம்மையாலே மெல்கிறான். இத்தலத்தின் பெருமையினை ஆழ்வார் ஒரு பெண்ணைப் பார்த்துக் கூறுவது போல் அமைந்துள்ளது. இத்தலத்துப் பூந்தோட்டத்திற்கு வந்தாலே உனது துன்பமெல்லாம் அகன்று விடும் என்று கூறுகிறார். இங்குள்ள மலர் வனங்களுக்கே இத்தகைய பெருமை என்றால் அத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் நமக்கு எத்தகையவாறு அருள்வான் என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும்.
x

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...