திங்கள், 10 நவம்பர், 2025

99. திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரயாக்)

 


   பெரியாழ்வார்                                                                                   பெரியாழ்வார் திருமொழி 

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே.      391

      சூர்ப்பனகையின் மூக்கையும், அவளுடைய அண்ணனான இராவணனின் பத்துத் தலைகளையும் அறுத்தவர் எமது சக்ரவத்தித் திருமகன். அயோத்தியில் உலகம் முழுவதும் தமது கீர்த்தியைப் புகழ்பெறச் செய்து அரசாண்டார். உலகத்தார் நீராடும் தீர்த்தங்களை கங்கை கங்கை என்று சொல்லி எந்த நீரில் நீராடினாலும் கடுமையான பாவங்களை அழிக்கும் வல்லமை உடையவள் கங்கை. அந்தக் கங்கைக் கரையிலே தேவப்பிரயாகை என்று அழைக்கப்படும் திருகண்டங்கடியில் புருஷோத்தமன் உறைவதால் வையகத்தில் உள்ளோர் கைகூப்பித் தொழுவதற்கு ஏற்ற இடமாக அது உள்ளது என்கிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் கங்கையின் புகழைப் பாடுகிறார். ஏதாவதொரு குளத்தில் நீராடினாலும் கங்கை என்று நினைத்து நீராடினால் செய்த பாவங்கள் விலகிவிடும். கண்டங்கடிநகர் பெருமானை தரிசித்தால் பாவம் தோன்றாதபடி பிறப்பை அறுத்துப் பேரானந்தம் தருபவன் என்கிறார் ஆழ்வார். 

சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவும் மணிவண்ண உருவின் மால் புருடோத்தமன்  வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே         392 

      குளிர்ச்சி பொருந்திய வடிவழகாயுள்ள அமிர்தகிரணங்களை தெரிக்கும் சந்திரனும், வெப்பத்தை இயல்பாகக் கொண்டு பெரிய கிரணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள சூரியனும் அஞ்சும்படியாக மாவலிச் சக்ரவத்தியை பாதாளத்தில் அழுத்தி மூவுலகங்களையும் திருமால் அளந்தான். அனைத்து லோகங்களும் பிரமித்துப் பார்த்தன. நீலமேகத்தின் நிறத்தைக் கொண்ட அந்த மகாவிஷ்ணு வாழுகின்ற இடம், கங்கையை முடியில் தரிப்பதால் வந்த நன்மை விளங்குகின்ற சிவபெருமான் தலையில் அணியும் கொன்றை மலரும் புருஷோத்தமன் திருவடியில் உள்ள துளசியும் சேர்ந்து பெருகுகின்ற கங்கைக் கரையிலுள்ள கண்டம் என்று சொல்லக்கூடிய கடிநகராகும். மூவுலகங்களையும் அளந்தவன் இத்தலத்தில் வந்து தங்கியுள்ளான் என்று உணர்த்துகிறார் ஆழ்வார். 

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முகம் மணிகொண்டு இழி புனல் கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே.        393 

      முன்னொரு காலத்தில் திருவிக்கிரமனாய் ஓங்கி உலகமளந்த போது நமுசி முதலான அசுரர்கள் இது அக்ரமம் என்று போர் தொடுத்தார்கள். அப்போது பாஞ்சசன்னியம் என்கின்ற வலம்புரிச் சங்கினை  தனது திருப்பவள அதரத்தில் வைத்து ஊதி, தனது சுதர்சனச் சக்கரத்தை உடன் வீசி அவர்கள் எல்லோரையும் விரட்டினார் திருமால். அத்தகைய பராக்கிரமம் கொண்ட புருஷோத்தமன் வீற்றிருக்கும் இடம் கங்கைக் கரையில் உள்ள திருக்கண்டங்கடியாகும். சதுர்முக பிரம்மாவின் கையிலும், சதுர்புஜனான எம்பெருமானின் திருவடியிலும், சிவபெருமானின் ஜடாமுடியிலும் அடுத்தடுத்துத் தங்கி ஒளியுடைய இரத்தினங்களை அடித்துக் கொண்டு பெரும் ஓசையுடன் ஆர்ப்பரித்துக் கொண்டு வேகமாக விழுகின்ற கங்கைக் கரையில் திருக்கண்டங்கடி என்னும் புனிதத்தலம் உள்ளது என்கிறார் ஆழ்வார். 

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட
கமைஉடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே       394 

      இந்திரன் முதலிய தேவர்கள் ஆட்சி செய்வதைப் பொறுக்காமல் அகங்காரம் கொண்ட அசுரர்கள் துணிந்து வந்து அவர்கள் மீது மிகவும் கடுமையான போர் தொடுத்தனர். அப்போது திருமால் நாந்தகம் என்னும் வாள் கொண்டு அவர்களை அழித்து யமனுலகு அனுப்பினார். பகைவர்களால் ஏற்பட்ட அச்சத்தைப் போக்கித் தேவர்கள் பெருமையோடு வாழ வழி செய்தார். அத்தகைய புகழ் பெற்ற நம் புருஷோத்தமன் உறைவிடம் கங்கை கரையில் உள்ள கண்டங்கடியாகும். இமயமலையின் உச்சி முதற்கொண்டு குமரிக்கடல் வரையிலுள்ள மக்கள் இருகரைகளிலும் இருந்து நீராடச்செய்து அவர்களது பாவங்களைப் பொறுப்பவள் என்ற பெருமையினைக் கொண்டு எல்லாவற்றையும் தாங்கும் கங்கைக் கரையில் புருஷோத்தமப் பெருமான் அருள் செய்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.  

உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே.      395 

      உழுவதற்குரிய கருவியாகிய கலப்பை, உலக்கை, வில், சுதர்சனம், சங்கு, கோடாரி, வாள் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு தருமத்தை நிலை நிறுத்தியவர் திருமால். பலராமன், பரசுராமன், இராமன், கிருஷ்ணன் ஆகிய அவதாரங்களில் இத்தகைய படைக்கலன்களை ஏந்தியும், அதனால் அசுரர்களை வதம் செய்தும் உலகத்தைக் காத்த பகவான் கங்கைக் கரையில் உள்ள திருக்கண்டங்கடியில் எழுந்தருளியுள்ளார்.  இந்த அவதாரங்கள் அனைத்தும் தருமத்தை நிலைநிறுத்துவதற்காக தோன்றியவையாகும். தருமத்தைக் காக்க பகவான் சில யுக்திகளைக் கையாண்டார். ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு சிறப்பினைப் பெற்றிருந்தன. ஏழு பிறவிகளிலும் கொண்டுள்ள பாவங்களை இப்பெருமான் நொடிப்பொழுதில் தீர்த்து விடுவார். இத்தகைய சர்வேஸ்வரன் எழுந்தருளியுள்ள இடம் கடிநகராகும் என்கிறார் ஆழ்வார். 

தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே       396 

      மேகங்கள் இந்திரனின் ஆணையால் கடும் மழையைப் பொழிய அதனால் பசுக்களும், கோப கோபியர்களும் துன்பம் அடைந்த போது கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிப் பிடித்துக் காப்பாற்றியவன் கண்ணன். அவன் மதுராவில் வாழ்வதையே விரும்புகிறவன். இத்தகைய சிறப்புகளை எல்லாம் கொண்ட அவன் கங்கைக் கரையில் உள்ள கண்டங்கடியில் உறைகிறான். இக்கரையிலே அரிய தவங்கள் புரிந்து வரும் முனிவர்கள் யாவரும் யாகம் முடிந்து அவர்கள் நீராடும்போது யாகபூமியை உழுத கலப்பைகளை கங்கை அலையானது உற்சாகமாக துள்ளியெழுந்துத் தள்ளிக் கொண்டு போகின்றன. அத்தகைய யாகபூமியான கண்டங்கடியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானான புருஷோத்தமன் நமக்கு எல்லா நன்மைகளையும் அளிப்பார் என்று ஆழ்வார் கூறுகிறார். 

வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி
மல் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே         397     

      கொடியவனான கம்சனது ஆயுத சாலையில் பலவித ஆபத்துகள் இருந்தன. அதனையெல்லாம் சிந்தனை செய்யாமல் அவனது இருப்படத்தில் புகுந்து கம்சனது திட்டத்தை முடியடிக்க அவனது வில்லை முறியடித்த, குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தைப் பிடுங்கி அதைச் சாய்த்து வெற்றி வீரனாக வலம் வந்தான் எம்பெருமான். மல்லர்களோடு போரிட்டு வென்று அவன் கம்சனை உதைத்து அழித்தவன். தருமத்திற்கு வெற்றியினை அருள்பவன்.  அத்தகைய பெருமையுடைய பகவான் கங்கைக் கரையில் அமைந்த கண்டங்கடியில் உறைகிறான். ஐராவதத்தின் மதநீரும், தேவமங்கையர் அணியும் சந்தனமும், கற்பக மலரும் விண்ணிலிருந்து இங்கு இறங்குகின்றன. அத்தகைய இடத்தில் பகவான் எழுந்தருளியிருக்கிறான். அத்தகையவனை நாம் மனதில் நிறுத்திப் பேரானந்தப் பெருவாழ்வினைப் பெறலாம் என்ற கருத்தினை ஆழ்வார் இப்பாசுரத்தில் வலியுறுத்துகிறார்.  

திரை பொரு கடல் சூழ் திண்மதில் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய்
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே.     398 

      அலையெறியாய் நின்றுள்ள கடலால் சூழப்பட்ட திண்மையான   மதில்களால் சூழப்பட்ட துவராகாபுரியின் அரசனும், தன் மைத்துனர்களான பஞ்ச பாண்டவர்களின் நலனுக்காக பக்கபலமாக நின்று துரியோதனாதியர்களை அழித்து அவன் சூதினால் கவர்ந்து கொண்ட இராஜ்ஜியத்தை அவர்களுக்கு மீட்டுக் கொடுத்தவனும், சகல பாவங்களைப் போக்குபவனுமான புருஷோத்தமன் திருக்கண்டங்கடியில் பொருந்தி எழுந்தருளியுள்ளான். வேள்வித் தூண்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுத் தனது இரு கரைகளிலும் சமமாக யாகம் செய்யும் கொழுந்துவிட்டு எரியும் அக்னியில் போடப்படும் மூலிகைகள், நெய் போன்றவற்றால் மணம் வீசும் புகை சூழ்ந்த திருக்கண்டங்கடி என்னும் திவ்யத்தலமாகும் என்று இத்தலத்தின் பெருமையைக் கூறுகிறார் ஆழ்வார். 

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே.      399 

      வடதிசையிலுள்ள மதுரையும், புனிதமே வடிவான சாளக்கிராமமும், வைகுண்டமும், துவாரகையும், திருஅயோத்தியும், இடமுடைத்தாயிருந்துள்ள ஸ்ரீபத்ரிகாச்ரமம் போன்றவைகளை பெருமான் வாசஸ்தலமாக கொண்டுள்ளவனாய் உள்ளது. எமக்குப் பெருமானாக உள்ள புருஷோத்தமனாய்த் திகழ்கின்ற ஸ்வாமியின் இருப்பிடமானது, மந்திரம் முதலான பெரிய மலைகளானவை தொடர்ந்து அதிரவும், பூமியானது பிளவுபட்டு இடிந்து விழவும், மாங்கனிகளுடைய தலையளவும் கிளம்பிக் கரையில் நிற்கின்ற மரங்களில் மோதி முறித்தும், எதற்காகவும் எள்ளளவும் கலங்காத கடலும்கூட கலங்கும்படியாக, வேகமாய் கொண்டு இழியா நின்றுள்ள கங்கைநதி தீரத்தில் கண்டமென்னும் கடிநகர் திகழ்கின்றது என்ற கருத்தில் அமைகின்றது. 

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன்  இருக்கை
மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உரு ஆனான்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே       400 

      அகார, உகார, மகார என்ற சொரூபத்தின் மூன்றெழுத்தை ஓம் என்னும் பிரணவத்தை வேத மந்திரத்தினால் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மூன்று பதமாய் மூன்று அர்த்தத்துக்கு வாசகமாயிருக்கும் மூன்றெழுத்தாக்கி அதனை பஞ்சமாக நினைத்து அதை எப்போதும் அநுசந்தித்துக்  கொண்டிருக்கும் பக்தர்களிடம் கருணை காட்டுபவன் எங்கள் புருஷோத்தமன். திருவிக்கிரமன் திருக்கோலம் தாங்கி மூவுலகையும் மூவடியால் அளந்த ஒவ்வொரு ஆத்மாவிடமும் ரஜஸ், சத்வ, தமஸ் என்ற மூன்று குணங்களாகத் தோன்றி வாழ்வதோடு, படைத்தல், காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று உருவமாகி நடத்துபவனும், சேஷத்வம், சரண்யத்வம், பிராப்யத்வம் என்ற மூன்று ஆகாரங்களாக இருப்பவன் எங்கள் புருஷோத்தமனே ஆகும். அவன் வாழ்கின்ற இடம் வாசம் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட கங்கைக் கரையின் மேலுள்ள திருக்கண்டங்கடியாகும் என்று கூறுகிறார் ஆழ்வார். 

பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புருடோத்தமன் அடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன் விட்டுசித்தன் விருப்பு உற்றுத்
தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா உடையார்க்குக்
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்கு ஆமே.          401 

      ஆர்ப்பரித்துக் கொண்டு பொங்கி வரும் பாவங்களைப் போக்கும் கங்கையின் கரையிலுள்ள திருக்கண்டமென்ற நகரினிலே வாழ்கின்ற புருஷோத்தமனின் திருவடியில் பெரியாழ்வார் சரணடைந்த காரணத்தினால் கலி புருஷனால் துன்பப்படாத பெருமை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அமைந்தது. அவர் பாடிய இப்பாசுரங்களை பக்தியோடு பாடுகிறவர்கள் கங்கையில் நீராடிய புண்ணியமும், திருமாலின் திருவடிகளைச் சதா சேவித்த புண்ணியமும் கிடைக்கும் என்கிறார் ஆழ்வார். நாமே நம்மீது பாவங்களைச் சேர்த்து வைத்து நாளும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். கங்கை நதியானது இத்தகைய பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாகத் திகழ்கின்றது. ஆழ்வாரின் இப்பாசுரங்களை நாளும் பாடிவரும் நிலையில் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...