நம்மாழ்வார் திருவாய் மொழி
அன்னையர்களே! உள்ளே சுழித்திருக்கும் வெண்மையான சங்கொடு, சுதர்சனச் சக்கரத்தையும் தரித்துக் கொண்டு தாமரை போன்ற விழிகளையுடைய கண்ணபிரான் கருட வாகனத்தில் என் மனதுக்குள் பவனி வருகிறான். அவ்வழகை வர்ணிக்க வார்த்தைகளேது? அவனது வேத முழக்கமும், திருவிழாக்களின் ஒலியும், குழந்தைகள் விளையாடும் ஒலியும் நீங்காமல் கேட்கும் எம்பெருமான் திருப்பேரையில் வீற்றிருக்கிறான். அவனைத் தரிசிக்க புறப்பட்டுவிட்டேன் என்கிறார். பராங்குச நாயகியானவள் தனது உள்ளத்தில் ஒரு பெரிய திருவடித்திருநாள் நடந்து செல்கிறபடி பேசி தென் திருப்பேரை போக வேண்டுமென்கிறாள். தாம் பெருமானது தாமரைக் கண்களில் அதிக ஈடுபாடு கொண்டதாகவும், திவ்யாயுதங்களுடனும், திருக்கண்களுடனும் காட்சி தரும் பெருமானை அடைய வேண்டும் என்று சொல்லிய வண்ணம் உள்ளாள். வேத ஒலியம், விழா ஒலியும், பிள்ளைகள் விளையாட்டு ஒலியும் என்றும் தன் காதுகளில் கேட்ட வண்ணம் உள்ளது என்று அவனை அடைவது என்நாளோ என்று தலைவி கூறுகிறாள்.
கஸ்தூரி மணம் வீசும் கருங்கூந்தலையுடைய தோழியர்களே! தாய்மார்களே! அக்கம்பக்கம் குடியிருப்பவர்களே! தேன் கொண்ட மலர் வனங்களும், குளிர்ச்சியான கழனிகளும் சூழ்ந்த தென்திருப்பேரையில் வீற்றிருக்கும் தேவர்களின் உபகாரகன், மணிவண்ணனாகிய கண்ணனின் சிவந்த கனிவாய் இதழின் அழகிலே அவனைத் தரிசித்தபின் என் நெஞ்சம் நாளும் பொழுதும் அவனையே நினைத்து வருகின்றது. இது என் கட்டுப்பாட்டில் இல்லை. இவ்விதம் தனியாக செயல்படும் என் மனத்தைக் காக்க என்னால் இயலாது என்று கூறுகிறாள். தாயாரும் தோழியும் அவளை தேற்றத் தொடங்கியவுடன் உங்களுடைய வார்த்தைகளைக் கேட்க அவகாசமின்றி மகர நெடுங்குழைக்காதரை அடைய இருக்கிறேன். எம்பெருமானைப் பிரிந்து என் கரிய கூந்தல் சருகாய் வாடி நிற்கின்றது. நீங்களோ மலர் சூடி நறுமணத்துடன் வந்து நிற்கிறீர்களே என்று வினவுகிறாள். திருப்பேரை பெருமான் மீது முழுவதும் ஈடுபட்டுள்ள என்னை நீங்கள் திருத்த முடியாது என்ற கூறுகிறாள்.
தோழி! ‘சிவந்த கொவ்வைக்கனி போன்ற வாயில் அழகுக்காகவும், சிவந்த ஒளிமிக்க திருமுடியின் இலாவண்யத்துக்காகவும், என் மனம் அவனில் சேர்ந்துவிட்டது. சங்கையும் சக்கரத்தையம் கண்டு ஆனந்தமுற்றது. தாமரை அழகு கொண்ட விழிகளைக் கண்டு வசமிழந்தது. நாளும், மாதமும் விழா நடக்கும் தென்திருப்பேரையில் வீற்றிருக்கும் நமது மகரநெடுங்குழைக் காதருக்கு நான் நாணத்தையும் அடக்கத்தையும் இழந்துவிட்டேன்’ என்று தலைவி கூறுகிறாள். தோழி என் நெஞ்சானது திருப்பேரை எம்பெருமானது பவள வாயழகில் போய் படிந்தும், திருவபிஷேக அழகில் தாழ்ந்தும், திருவாழி திருச்சங்கினை ஏந்தி நிற்கும் அழகினைக் கண்டு உகந்தும், மற்ற அழகுக்கு ஈடுகொள்ளாதபடி அவனது தாமரைக் கண்களைக் கண்டு மயங்கியும் நிற்கிறேன். முன்பாட்டில் அன்னையர்கள் மற்றும் அயல் வீட்டார்கள் வந்து தேற்றியும் இவள் நாம் சொல்லி தேற மாட்டாள் என்று விலகி விட்டதால் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
அன்னையர்களே! முன்பு அவன்
பிரிவினால் பறிகொடுத்த எனது மேனியின் நிறத்தை மீட்டு வர என் நெஞ்சத்தை
அனுப்பினேன். ஆனால் என் மனமோ திரும்பி வராமல் அங்கேயே தங்கி விட்டது. இனி வருந்தி யாருடன் எதனைச் சொல்லி காலம்
கழிப்பது? பெருங்கடல் போல் எங்கும் வேதஒலிகள் முழங்கும் தென் திருப்பேரையில்
வீற்றிருக்கும் பாஞ்சசன்னியத்தைக் கையில் தரித்திருப்பவனின் அற்புதங்களில் இதயத்தை
பறி கொடுத்து விட்டேன். என்னைக் கோபித்து என்ன பயன் என்று கூறுகிறாள்.
தாயானவள், என் நங்கை இழந்த
நிறத்தை மீட்டு வருவதற்காக போன அவளது மனமானது அங்கேயே தங்கி விட்டது. அங்கு வேத
கோஷங்களும், விழா
ஒலியும், சிறார்களின்
விளையாட்டொலியும் சேர்ந்து இவளது மனதை அங்கேயே கட்டி வைத்துவிட்டது. இதோ நான் சென்று
அதைக் கவர்ந்து வருகிறேன் என்கிறாள். பகவானிடம் ஒன்றிவிட்ட என்னை கோபித்து என்ன
பயன்? என்று வினவுகிறாள்.
அன்னையர்களே! கோபத்துடன் வண்டிச் சக்கரத்தில் மறைந்து கொல்ல வந்த சகடாசுரனை உதைத்து, மாயப் பெண்ணாய் வந்த பூதகியின் விஷப்பாலை அருந்தி அவள் உயிரை போக்கியவனும், மருத மரங்களிடையே தவழ்ந்து சென்று அசுரனை வதைத்தவனுமான கண்ணபிரானிடம் என் பெண்மை தோற்றது. இனி என்மீது கோபித்து என்ன பயன்? அவன் குடியிருக்கும் பழத்தோட்டங்கள் நிறைந்த திருப்பேரைககு காலத்தை நீட்டிக்காமல் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்கிறாள். எம்பெருமானுடைய சேஷ்டிதங்களில் ஈடுபட்டதாகச் சொல்கிறாள். பெண்கள் நிற்க வேண்டிய இடத்தில் நில்லாமல் நான்கு குணங்களையும் இழந்து விட்டேன். எனவே என்னை அத்தலத்தில் கொண்டுபோய் சேர்க்கப் பாருங்கள் என்று கூறுகிறாள். பகவானின் தர்மம் காக்கும் திறத்தைப் பார்த்து என்னையே அவரிடம் ஒப்படைத்துவிட்டேன் என்று கூறுகிறாள். அவள் சொல்வது காம மயக்கம் அல்ல, ஆத்ம ஐக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நீலமேக வண்ணனான எம்பெருமான் என் எதிரில் வந்து நிற்கிறான். அணைக்க வேண்டி நெருங்கிச் சென்றால் கைக்கு அகப்படாமல் தப்பிக்கிறான். பூவுலகில் அவன் விரும்பி வந்த தலமான, நான்கு வேதங்களை ஓதுபவர்களும், ஓய்வின்றி யாகம் நடத்துபவர்களும், செழிப்பான நெற்பயிர்கள் கவரி வீசும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கூடும் இடமான திருப்பேரைக்குக் காலம் கடத்தாமல் என்னை அழைத்துப் போய் நிகரில்முகில்வண்ணனைக் காட்டுங்கள். ஏனெனில், நான் கொண்ட காதல் கடலினும் பெரிது என்கிறாள். ஞாலமும், ஏழ்கடலும், நீள்விசும்பும் விட பெரிதாக உள்ளது. அழகு மிக்க பெருமான் என் முன்னே வந்து நிற்க என் காதலைத்தான் கட்டுப்படுத்த வழியுண்டோ. அதனை அடக்கி உங்கள் வார்த்தைகளைத்தான் கேட்க முடியுமா? பரமபதத்துச் செல்வமெல்லாம் தோற்கும்படி தென் திருப்பேரையில் சேவை சாதிக்கிறான் என்கிறாள். ஆத்ம ஐக்கியம் வரும்போது பெருமான் மீது பேரன்பு பொங்கும் என்பதை ஆழ்வார் எடுத்துக் காட்டுகிறார்.
தோழி! பெரிய மதில்கள் சூழ்ந்த கடலுக்கு நடுவில் இருந்த இலங்கையை அழித்த ஸ்ரீராமபிரான் விரும்பி வந் வீற்றிருக்கும் திருப்பேரைக்குள் புகுந்து கொண்ட என் நெஞ்சத்தைத் தேடிப் பெயர்த்துக் கொண்டு வரலாமென்று வந்தேன். எங்கு தேடியம் அதைக் காணவில்லை. இங்கே இனி நமக்கு யார் உள்ளார்கள்? என் இதயத்தைக் கூவி அழைக்கும் வல்லவர்களும் இங்கில்லை. இனி யாரைக் கொண்டு எந்த காரியத்தை சாதிக்க முடியும்? கோயிலுக்குப் போனால் அங்கு எதைப் பார்த்து என் மனம் மயங்கியதோயு? அந்த திருமேனியைத்தான் என் கண்களும் கண்டு செயலிழந்து நின்றன என்று தலைவி கூறுகிறாள். தலைவியின் உடல், பொருள், ஆவி அனைத்தும் பகவானிடம் ஒன்றிவிட்டதால் அவள் காணும் காட்சிகள் அனைத்தும் பகவானின் வடிவங்களாகவே உள்ளன. அது போன்று உலகத்தாருக்கும் அத்தகைய பொன்னான நாள் வருவது என்நாளோ என்று தலைவி கேட்பது போன்று ஆழ்வார் கேட்கிறார்.
தோழி! கரிய நிறம் கொண்ட கடல்வண்ணனிடம் நான் கொண்ட காதலைச் சொல்வதனால் மண்ணாலான இவ்வுலகமும், ஏழ்கடல்களும், நீண்ட ஆகாயமும், சேர்ந்தால் கூட உபமானமாக மாட்டாது. என் உடல் மெலிந்து பசலை நோய் பூத்ததையும், நான் பித்தேறிக் கைகூப்பி வணங்கிப் பாடுவதையும் கண்டவர்கள்கூடி, பழி சொல்லித் தூற்றுகிறார்கள். இதனால் என் காதல் வளர்ந்து பெரியதாயிற்றே தவிர குறையவில்லை.! அங்ஙனம் வளர்ந்த காதலானது ஞானமும், கடலும், விசும்பும் ஆகிய இவையெல்லாம் ஏகதேசமென்னும்படி வளர்ந்து விட்டது. தெளிந்த அலைகளையுடைய நீர் சூழ்ந்த தென் திருப்பேரையில் வீற்றிருக்கும் என் தலைவனிடம் சென்று சேருவேன் என்று கூறுகிறாள். பகவான் மீது பேரன்பு கொண்டு விட்டால் உலகத்தவர் ஒரு பொருட்டாக இருக்க மாட்டார்கள் என்பதை உணர்த்தவே ஆழ்வார் இப்பாசுரம் மூலம் தமது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தோழியரே! தாய்மார்களே! என் நிலை குறித்து யாரும் எனக்கு சமாதானம் செய்ய முயல வேண்டாம். இவை அனைத்தும் வீண் பேச்சுக்களே. என் நெஞ்சமும் இங்கில்லை. என் அடக்கமும் என்னை விட்டு தொலைந்து விட்டது. கடல் சூழ்ந்த உலகினை உண்ட கார்மேக நிறத்தவனான கண்ணபிரான் விரும்பி வந்து வீற்றிருக்கும் வளமான இனிய வயல்கள் சூழ்ந்த தென் திருப்பேரை என்னும் நகரத்துக்கு நான் போவது தீர்மானமான விஷயம் என்று தலைவி கூறுகிறாள். மேலும் தோழிகள் பெருமான் வியப்பிற்குரிய வகையில் இங்கு உனக்கு தரிசனம் அளிப்பான். நீ அங்கு செல்ல வேண்டாம் என்று கூற அவனுடைய சௌந்தர்ய சௌலப்பிய குணங்களை அறிந்து நான் அங்கு செல்ல விரும்புகிறேன். மேலும் நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கான நெஞ்சம் என்னிடம் இல்லை. அவை பெருமானிடம் என்றோ சென்று விட்டது. அவனது திருமேனியில் நான் ஈடுபட்டுவிட்டதால் அவனைக் காணச் செல்கிறேன் என்று கூறுகிறாள்.
தோழியரே! நகரங்களிலும், நாடுகளிலும் மற்றும் பல இடங்களிலும் தானாக வராத சக்ரபாணியைத் தேடுவேன். நாணப்பட்டுக் கொண்டிருந்தால் அவனை அடைய முடியுமா? அவனுடைய அழகினாலும், ஆச்சர்யமிக்க சேஷ்டிதங்களாலும் என்னுள் கொண்ட நாணம் விலகியது. மலைச் சிகரம் போன்ற மணிகள் பதித்த, நெடிய உறுதியான மாட மாளிகைகளைக் கொண்ட தென் திருப்பேரையில் வீற்றிருக்கும் மகர நெடுங்குழைக்காதனை, கௌரவப் படைகளை விழச்செய்த மாயவனை, நிகரில்லாமுகில் வண்ணனை, சக்ராயுதம் தரித்தவனை, நீண்ட காலமாக என் உள்ளம் கவர்ந்தவனை சென்று தரிசித்து வருகிறேன். அநீதியை அழித்ததனால் என் மனம் கவர்ந்தவனானான். அவனின்றி வேறு உற்றார் உறவினர் இல்லை என்ற கருத்தில் தலைவியின் பாடல் அமைந்துள்ளது.
வல்லவர்கள் சக்கரத்தாழ்வாரைப் போலவே கைங்கர்யம் செய்து புகழ் பெறுவர் என்று கூறுகிறார். இப்பாடல்கள் அவருடைய பெருமைகளைத் தலைவி மூலமாக உணர்த்தின. அதர்மங்களை அழிக்க பல்வேறு அவதாரங்களை எடுத்தக் கருணையை நமக்கு உணர்த்தின. நம்முடைய உண்மையான சொந்த பகவானே என்று கூறுகிறார் ஆழ்வார். இதனை பக்தியுடன் வாசிக்க வல்லவர்கள் சக்கரத்தாழ்வாரைப் போல பணி செய்து புகழ் பெறுவார்கள் என்பதை உணர்த்துகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக