திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
அழகிய விசாலமான பூமியில் உள்ளோரெல்லாம் அஞ்சும்படியான ஒப்பற்ற நரசிம்மமூர்த்தியாக எம்பெருமான் தோன்றியதைக் கண்டு இரணியன் வெகுண்டெழுந்தான். இதனைக் கண்ட பெருமான் கோபக்கனலுடன் அவனைப் பிடித்து தன் மடியில் இருத்தி கூரிய நகங்களால் உடலை இரண்டாகப் பிளந்து அவனை மடியச் செய்தார். பரம பரிசுத்தமான இத்தகைய பெருமான் எழுந்தருளியிருப்பது, சினம் கொண்ட கண்களையுடைய சிங்கங்களானவை யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து பக்தியினால் பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பித்த இடமான ஆச்சர்யமிக்க அஹோபிலம் என்னும் சிங்கவேள் குன்றமாகும் என்று ஆழ்வார் இத்தலத்தை மிகவும் பெருமையுடன் தனது பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.
தனது தந்தையான இரணியனால் பிரஹல்லாதனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கண்டு மனம் பொறுக்காமல் மிகுந்த சினத்துடன் நாக்கினால் துழாவுகின்ற அஞ்சத்தக்க பெரிய வாயினையும் வாள் போன்ற ஒளிமிக்க பற்களையும் கொண்டு உக்கிர நரசிம்மமாகி அவுணனான இரணியனை வதம் செய்து மிக்க கூர்மை பொருந்திய வலிமையான நகங்களையுடைய எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமானது, காட்டில் வசிக்கின்ற, வேடுவர்களின் வழியானது ஆக்ரமிக்கப்பட்டு அதனால் அவ்வேடுவர்களுக்கும் தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கும் ஏற்படும் போரிடும்போது வரும் கூச்சலும், வேடர்களின் வில்லின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கின்ற, நீர் நிறைந்த தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தைக் கொண்ட இடம் சிங்கவேள்குன்றமாகும் என்கிறார் ஆழ்வார்.
வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெருத்த வாயும், ஒளி போன்ற பற்களையுடைய, ஒப்பற்றதாய் மிடுக்கையுடையவனாய் நரசிங்கமாகி இரண்யனுடைய வளர்ந்த உடலை தன் கூர்மையான நகங்களாலே கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியுள்ள இடமானது, கடினமான நிலங்களிலிருந்து அங்குமிங்கும் அலைந்து திரிந்ததனால் களைத்துப் போன மிருகங்களும், உடைந்து போன சிறு மலைகளும், நெருப்பாலே குறைக்கொள்ளியாய் கிடக்கிற மூங்கிலும் இவை தவிர வேறொன்றுமில்லாத இடமாகத் திகழும் இடம் சிங்கவேள் குன்றமாகும். இந்நிலங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் ஆழ்வாருக்கு வண்டினமுரலுஞ் சோலையாக காட்சி தருகின்றது. பிறருக்குக் குற்றமாய் தோன்றுமிவை ஆழ்வாருக்கு உகக்கின்றது எனலாம்.
அனைவருக்கும் துன்பம் விளைவிக்க வேண்டி தனது ஒளிமிக்க கூரிய வேலாயுதத்தை தன்வசம் வைத்துக் கொண்டு, பாகவதர்களையும் மக்களையும் இம்சித்து வந்தான் இரண்யன். அத்தகையவனின் இனிமையான பிராணனை எடுத்து அவனுடைய சரீரத்தை கூர்மையான நகங்களால் கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமானது, வேற்று மனிதர்களைக் கண்டு அவர்களது தொடைகளை கௌவிக் கடித்து அவர்கள் இறந்தபின் அந்த பிணங்களைத் தின்னும் கழுகுகள் நிறைந்துள்ள, உச்சி வெய்யிலின் வெம்மையினுடன் சுழற்காற்று எப்போதும் இருப்பதனால் தேவதைகள் தவிர மற்றவர்கள் சென்று அடைய முடியாத இடமாக சிங்கவேள்குன்றம் திகழ்கின்றது என்கிறார் ஆழ்வார். பெருமானின் அழகில் மயங்கி மற்றவர்களால் அவருக்கு இன்னல்கள் வருமென்ற அக்கரையில் ஆழ்வார் இவ்வாறு பாடியுள்ளார் என்பதும் ஒரு கருத்தாக உள்ளது.
கடுஞ்சினத்தினால் பற்களோடு நாக்கை செலுத்தி மடித்த பெரிய வாயையும் வாள் போன்ற பற்களையுடையதுமாய் ஒப்பற்ற மிடுக்கையுடையதான நரசிங்கமாகி தன்னைக் கண்ட மாத்திரத்திலேயே இறந்து போன இரண்யனுடைய உடலை மீண்டும் உயிர்பெறாமலிருக்க கூரிய நகங்களால் பிளந்த பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமானது சுழல்காற்று விடாமல் வீசி வருகின்ற செந்தீயை மொண்டுக் கொண்டு ஆகாயத்தில் ஓடுவது போன்று நெருப்பை வாரிக்கொண்டு விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே நெருங்கிச் சென்று சேவிக்க முடியாத கோயிலாக சிங்கவேள்குன்றம் திகழ்கின்றது. இருப்பினும் பரமபதம் செல்வது போன்று அவனருளால் சென்றடையலாம் என்ற கருத்து இங்கே சொல்லப்படுகிறது.
கடும் சீற்றத்தினால் ஜொலிக்கின்ற பசுமை தங்கிய கண்களோடும், விளங்கா நின்ற பெரிய வாயில் ஒளி பொருந்திய பற்களோடும் கூடியிருக்கின்ற இந்த நரசிம்மரின் திருக்கோலமானது எத்தகையதொரு அதி பயங்கரமான உருவமாகக் கொண்டுள்ளது என்று அஞ்சி தேவர்கள் அனைவரும் அங்குமிங்கும் கால் தடுமாறி விழுந்து பின் மீண்டும் எழுந்துச் சிதறி ஓடுமாறு எழுந்தருளியிருந்த சர்வேஸ்வரனுடைய இடமானது, புலிகளானவை நெருக்கமான மூங்கிற் காட்டுப் புதர்களினின்றும் பெரிய வழியிலே வந்து காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தை ஆராய்ந்து பார்க்குமிடமாக குளிர்ச்சிமிக்க அழகிய சிங்கவேள் குன்றம் திகழ்கின்றது என்கிறார் ஆழ்வார்.
நரசிம்ம மூர்த்தி இரணியன் மீது கொண்ட கடும் கோபமானது வளர்ந்து சென்று ஆகாயத்தைக் கொளுத்தவும் மூன்று லோகங்களும் மற்றுமுள்ள பிற லோகங்களில் உள்ளவர்கள் அனைவரும் அஞ்சும்படியாக, சர்வலோக சம்ஹாரத்திற்கான நேரம் வந்துவிட்டதாகவும், ஒலி செய்கின்ற நெருப்பும், அந்த நெருப்பு எரியும்போது வெடுவெடுவென்று வருகின்ற ஓசையும், அந்த நெருப்பினால் வைக்கோல் போன்று எரிகின்ற கற்களும், உலகத்தில் கண்டறியாத கொடியவர்களான விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே, ஒரு நொடிப் பொழுதும் கிட்ட முடியாத, எக்காலத்திலும் கிடைத்தற்கரிய ஆளரியாய் இருந்த அம்மானது இடமானது சிங்கவேள் குன்றமாகும்.
நான்முகக் கடவுளான பிரம்மனும், சிவபெருமானும் கூடிக்கொண்டு இடைவிடாது நாக்கு தடிக்கும்படி முறைவழுவாது எம்பெருமானது பெருமைகளை ஸ்தோத்திரங்களாக மாறி மாறித் துதிக்கும்படியாகவும், விலக்ஷணமாய் ஓர் ஆளரியாய் இருந்த அம்மானது இடம், காய்கள் காய்த்து தொங்கும்படி வாகை மரங்களினுடைய நெற்றுகளானவை ஒலியெழுப்ப, கல்வழிகளிலேயுண்டான குழல் மூங்கிற் செடிகள் ஆகாயத்தைத் தொடுமளவிற்கு வளர்ந்துள்ளன. அதிலுள்ள மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதானால் உண்டான நெருப்பினால் விண்ணுலகமும் சிவந்திருக்கப் பெற்ற இடமானது சிங்கவேள் குன்றம் என்னும் திருத்தலமாகும்.
இப்பாசுரம் ஆழ்வார் தன் மனதுடன் பேசுவது போல் அமைந்துள்ளது. ஓ மனமே! நீ மிகவும் நல்லவன். நமக்கு ஸ்வாமியாகவும், இத்தலத்து பிராட்டியான செஞ்சுலட்சுமித் தாயாரை தன் வசம் அணைத்துக் கொண்டிருப்பவனும், ஆயிரம் தோள்களையுடையவனாக எழுந்தருளியிருக்கும் இடமாக அமைந்திருப்பது எதுவென்றால், நல்ல நெல்லி மரங்களின் வேரானது அழுத்தம் காரணமாக பாறைகளை உடைத்துக் கொண்டு அதன் கற்களைத் தாண்டிச் செல்லும். புல் மற்றும் பனையோலைகள் சரசரவென்று ஒலியெழுப்பவும், வழியில் சுவர்க் கோழிகள் ‘சில் சில்’ என்று இடைவிடாமல் ஒலிக்கும் இடம் சிங்கவேள் குன்றம் என்று கூறுகிறார். அதனைத் தொழுவோமாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
சிவந்த
கண்களையுடைய சிங்கங்கள் தமக்கு கிடைத்த தந்தம் முதலியவற்றைப் பெருமானின்
திருவடிகளிலே சமர்பித்து வணங்குமிடமான சிங்கவேள் குன்றத்தை இருப்பிடமாக கொண்டவனாய், சம்சாரிகளான
நமக்கெல்லாம் ஸ்வாமியாம் நமக்கு உபகாரகனாக இருப்பவனான ஸ்ரீநரசிம்மமூர்த்தி
தொடர்பாக, பெரிய,
தமிழ் சாஸ்திரத்தில் வல்லவரான திருமங்கை நாட்டிற்குத் தலைவராய். நித்ய சித்தமான
ஸ்ரீவைஷ்ணவ சீரை உடையவராய்,
வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை அணிந்தவராய், மிக்க உதாரரான திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த இச்சொல் மாலையை நாளும் பக்தியுடன் படிக்க வல்லவர்கள் தீமை
ஒன்றுமின்று நன்மையை பெற்றவராவார் என்று கூறுகிறார் ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக