புதன், 12 நவம்பர், 2025

92. திருமோகூர்

 


நம்மாழ்வார்                                                                                                            திருவாய் மொழி 

தாள தாமரைத் தடம் அணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்கு உடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே.      3891 

      அழகுத் தாமரைகள் மலர்ந்திருக்கும் தடாகங்கள், வளமிக்க வயல்களும் நிறைந்த திருமோகூரில், அசுரரைத் தகர்த்த, நான்கு திருத்தோள்களும், சுருண்ட குழல் கற்றைகளும், தாமரை போன்ற விழிகளும், கொவ்வைக் கனிவாயும் உடைய காளமேகப் பெருமாள் விரும்பி அருள் புரிகிறான். அங்கு சென்று அமர்ந்து அவனை வழிபடுக! அவனன்றி வேறு கதி கிடையாது என்று கூறுகிறார் ஆழ்வார்.
      கொடிய தாபத்தால் துன்புற்றவன் தடாகத்தை நோக்கி செல்வது போல், ஆழ்வாரும் தமது சம்சாரத் துன்பங்களை அகற்றுவதற்கு காளமேகப் பெருமாளை வேண்டினார். இவர் தாபம் அகற்றும் பெருமாளானதால் இவரை விட்டால் வேறு கதியில்லை என்கிறார்.  இத்தலத்துத் தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரையானது ஓங்கி வளர்ந்ததைக் கண்டு ஓங்கி வளர்ந்த உத்தமனை இங்கு கண்டேன் என்கிறார். பரமபதத்தை வாசங்காட்டும் இத்தலமே என் திருவுள்ளத்திற்கு உகந்தது. இத்தலத்துப் பெருமான் திருக்குழலொழுங்கையும், செவ்விய தாமரை மலர்ந்தாற்போல் காட்சி தருகிறான் என்று கூறுகிறார் ஆழ்வார். 

இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே.  3892 

      இனிமையான குளிர்ச்சியடைந்த பரம போக்யமான திருத்துழாய் மாலையையும், ஆயிரம் திருநாமங்களையும் கொண்ட எம்பெருமான், நன்மையை செய்கின்ற நான்கு வேதங்களிலும் சிறந்த அந்தணர்கள் வாழும் திருமோகூரில் கோயில் கொண்டிருக்கிறான். நன்மை தரக்கூடிய அவனது திருப்பாதங்களின் நிழலையன்றி நமக்கு எந்தப் பிறவிக்கும் மற்றொரு துணை கிடையாது என்கிறார் ஆழ்வார்.
      திருமோகூர் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் காளமேகப் பெருமானுக்கு ‘நலங் கழல்வன்’ என்றொரு திருநாமம் சாத்தப்படுகிறது. நன்மை மிக்க திருவடிகளைக் கொண்ட பெருமான் என்பது இதன் அர்த்தமாகும். குணமுடையாரைக் கைக்கொள்வது, தோஷம் நிரம்பியவர்களை நிவர்த்தி செய்வது போன்ற குணங்களினால் அனைவரையும் கைவிடாது காத்தருள்பவன். இத்தலமானது நலங்கொள் நான் மறையாளர்கள் வாழப்பெற்ற தலமாகும். நமது கர்மவினைகள் அனைத்தையும் களைவான். பகவானின் திருவடி நிழலின்றி எந்தப் பிறவிக்கும் மற்றொரு துணை கிடையாது என்று இப்பாசுரவழி வலியுறுத்துகிறார் ஆழ்வார். 

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே.    3893 

      சிவபெருமானும், நான்முகனும் தேவர்களோடு கூடி பெருமானை அடைந்து உனையன்றி வேறு புகலிடம் இல்லை என்று வேண்டவும், அசுரர்களை வென்று மூவுலகினையும் காத்து பக்தர்களுக்காக உழல்பவன் திருமோகூரில் கோயில் கொண்டுள்ளான். நாம் நமது துன்பங்கள் அழிய இனி அடைய வேண்டியது அந்தத் தலத்தையே என்று கூறுகிறார் ஆழ்வார்.
      படைக்கும் தொழில் கொண்ட பிரம்மனும், சிவனும், மற்ற தேவர்களும் எம்பெருமானையே புகலிடமாகக் கொண்டு வேண்டுகிறார்கள். அவ்விதமிருக்க நாம் அவனைத் தவிர வேறு யாரிடம் புகலடைய முடியும்? துரியோதனர் முன்னிலையில் திரௌபதியின் மானத்தை பிதாமகரான பீஷ்மரே காப்பாற்ற முடியவில்லை. சாஸ்திர நீதியைக் காரணம் காட்டி அவர் தயங்கினார். ஆனால் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்ணன் திரௌபதியின் மானத்தை, விதிகளை எல்லாம் மீறி காத்தருளினான். அத்தகைய விதிகளுக்கு அப்பாற்பட்டவர் காளமேகப் பெருமாள். 

இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பு அணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே     3894 

      தொண்டர்களே! படங்களையுடைய அனந்தாழ்வான் மீது சயனித்திருக்கும் பரந்தாமனைத் தேவர்களும், முனிவர்களும் சென்று வணங்கி, எங்களுக்காக  நீ எழுந்து வந்து எங்களது துன்பங்களை நீக்க வேண்டும் என்று போற்றிப் பிரார்த்தித்த பெருமான் திருமோகூரில் அருள் புரிகின்றான். நம் துன்பங்கள் நீங்க அவன் திருவடிகளை நாமும் வழிபடுவோம் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
      தேவர்களும் முனிவர்களும் எம் ‘துயரினைத் தீர்ப்பாயாக’ என்று பல காலம் கூறிவந்தார்கள். பாம்பனையில் துயில் கொண்டுள்ள எம்பெருமானை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்றனர். எம்பெருமானின் மேனி இயற்கையாகப் பொலிவு பெற்றதாகும். இவர்கள் துன்ப காலத்திலாவது எம்மைத் தேடி வந்தார்களே என்று நினைத்தார் எம்பெருமான். முனிவர்கள் கோரியது போன்று ஆழ்வாரும் தம் துன்பத்தை தீர்க்குமாறு வேண்டுகிறார். இருவர்களது இடர் வேறு என்று எம்பெருமான் நினைத்து தயங்குகிறாரோ என்று நினைக்கிறார் ஆழ்வார். 

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்டம் மூவுலகு அளந்தவன் அணி திருமோகூர்
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே      3895     

      அடியார்களே! நாம் அனுபவிப்பதற்கான ஒளிமயமான திவ்யமங்களப் பெருமான் ஒரு தனிப்பெருந் தலைவன்! மூவுலகினையும் அளந்தவன். எண் திசையிலும், இனிய கரும்போடு, சம்பாபயிர் விளையக்கூடிய ஏராளமான வயல்கள் நிறைந்த அழகான திருமோகூரில் அவன் கோயில் கொண்டிருக்கிறான். அந்தக் கோயிலை வலம் வந்து மகிழ்ந்து கூத்தாடுவோம் வாருங்கள்! என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
      ஆழ்வார் கூறும் இத்தகைய அனுபவங்களை தொண்டர்கள் இழந்து விடாமல் இருப்பதற்காக அடிக்கடி இதனைப் பிரயோகப்படுத்துகிறார். திருமோகூர் என்னும் திவ்ய ஸ்தலத்தை வலம் வந்து கூத்தாடுவோம் என்று கூறுகிறார். இப்பெருமானும் எப்படிப்பட்டவனென்றால் ‘நஞ்சுடரொளி ஒரு தனி முதல்வன்’ என்று குறிப்பிடுகிறார். சுடரொளிமிக்க தன் வடிவழகினையும் முதன்மையினையும் காட்டி நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறான்.  ஜகத்தினைப் படைத்து அதை வலியார் அபகரித்துக்கொண்டு செல்லாதபடி காத்தருள்கிறார். மூவுலகினை அளந்தவன் உறையும் கோவில். எனவே அங்கு சென்று அவனை வணங்கிக் கூத்தாடுங்கள்  என்கிறார். 

கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே.    3896 

      அழகிய நடையுடைய பெருமானானவன் நமக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இனிமையானவன். கோபாலனான அக்குடக்கூத்தன் பசுக்கூட்டங்களைக் காத்தும், துன்புறுத்தும் கொடிய அசுரர்களை அழிக்கும் காலன் போன்றவன். அவன் வளமான வயல்கள் சூழ்ந்த மருத நிலமான திருமோகூரில் நம்பத்தகுந்த நண்பனாக அருள் புரிகிறான். அவனது தாமரைப் பாதங்களையன்றி நமக்கு மற்றொரு காவல் கிடையாது என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பெருமான் ஆடும் கூத்து நம் நெஞ்சைக் கவரும். இராமபிரானிடத்தில் உள்ள நடையழகு கண்ணனிடமும் காணலாம். கண்ணன் கானகத்தில் உலாவி வரும்போது அவனது குழலோசை நாதம் வானில் உள்ள ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியவர்களை மயங்கச் செய்தது.. கொடிய எண்ணம் கொண்ட வலிமை மிக்க அசுரர்கள் சாதுக்களுக்கு எப்போதும் தீங்கிழைப்பார்கள். அசுரர்களுக்கு காலனாக இருந்து அவர்களை அழித்தவனான பெருமான் திருமோகூரில் வாசம் செய்கிறான். அவனது திருத்தாமரைப் பாதங்களை சென்று வணங்குவோமாக. 

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகுசெய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலஞ் செய்ய நம் துயர் கெடும் கடிதே.   3897 

      பகவானானவன் நம்மையெல்லாம் பாதுகாப்பவனாக உள்ளான். தன்னந்தனியாக ஆலிலையில் பள்ளி கொண்டவன்.  பெரிய வானம் பாழாய் கிடந்தது. அதில் மேகங்களையும், சூரிய சந்திரர்களையும், நட்சத்திரங்களையும், சத்தியலோகம், சொர்க்கம் போன்றவற்றை உருவாக்கினான். அத்தகையவன் திருமோகூரில் அருள் புரிகின்றான்.  அந்தக் கோயிலை நாம் வலம் வந்தால் நம் துன்பங்கள் விரைவில் தீர்ந்து போகும். அவனையன்றி மற்றொரு பாதுகாப்பு நமக்கு இல்லை என்று கூறுகிறார் ஆழ்வார்.
      தலைவியானவள் பெருமானின் ரக்ஷகத் தன்மையினைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொள்கிறாள். இப்பாசுரத்தில் மூலப்பிரகிரிதி பற்றிக் கூறுகிறாள். முக்குணங்களின் திரவியப் பொருளாக அமைந்து, அகில சராசரங்களுக்கும் பிறப்பிடமாக அமைகிறது. பகவான் அந்த பிறப்பிடத்தில் சேதன சமுதாயமான உயிரினங்களின் கருவை வைத்து உயிரினங்களை உற்பத்தி செய்கிறார். கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு பிறவிகள் அமைகின்றன. சேதநர்களுக்கு மோட்சத்தினை விளைவிக்கும் நிலமாகவும் இது அமைகிறது. இவை அனைத்தையும் உண்டாக்குபவன் எம்பெருமான் என்ற கருத்தில் இது அமைகிறது. 

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரதக மணித் தடத்தினையே.    3898 

      அடியார்களே! உயரமாக வளர்ந்த மரங்களையுடைய தோட்டங்களும், உன்னதமான அழகிய தடாகங்களும், அலங்காரம் நிறைந்த பிரகாசமான திருமோகூரில், ஆயிரம் திருநாமங்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான அசுரர்கள் மூழ்கி அழியும் தடாகமான, தசரதன் பெற்ற மரகதமணி நின்றருள் புரிகிறான். அவனைச் சரணடைந்து தொழுவீர்களாக! இதனால் உங்கள் துன்பம் விரைந்து தொலைந்துவிடும் என்கிறார் ஆழ்வார்.
      தாளதாமரை தடாகமுடைய திருமோகூரின் சந்நிதியில் ஒரு தடாகத்தில் தயரதன் மைந்தனான ஸ்ரீராமன் நின்றவண்ணம் சேவை சாதிக்கின்றான். உலகில் தடாகம் வெட்டப்பட்டால் அதில் மக்கள் நீராடி, அந்நீரைப் பருகிப் பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் தம் வாழ்வினை முடிக்க அதில் விழுவார்கள். அது போன்று இத்தடாகம் அடியார்களுக்கு பல விதத்தில் பயன்படுகிறது. அது போன்று அரக்கர்கள் தாமாகவே வந்து இத்தடாகத்தில் விழுந்து தம்மை மாய்த்துக் கொள்கின்றனர். இத்தகைய பெருமானை சரண் கொள்ளுங்கள் என்கிறார் ஆழ்வார். 

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே.    3899

      பகவானின் திருப்பாதங்கள் இரத்தினத் தடாகம் போன்று ஒளி மிக்கனவாக விளங்குகின்றது.  கண்களோ தாமரைப் பூப்போலிருக்கும். சிவந்த வாய் பவளத்தை நினைவூட்டும். அழகிய, அகன்ற நான்கு தோள்களையுடைய அந்தத் தெய்வம் எக்காலத்திலும் அசுரரை அழிக்கும் வலிமையுயையும் மிடுக்கையும் கொண்டது. அத்தகைவன் திருமோகூரில் சேவை சாதிக்கிறார். நம்மைக் காக்கும் அப்பெருமானின் பாதங்களை பற்றி நம் துன்பங்களைக் களைவோம்.
      நமக்கு அரணாக விளங்கும் திருமோகூரை அடைந்ததை தாம் பெற்ற அரிய பேறாகக் கருதுகிறார். தெளிந்த தடாகம் போன்றிருக்கும் குளிர்ந்த திருவடிகளையும் அப்போது மலர்ந்த செந்தாமரை போலிருக்கும் திருக்கண்களையும், பவளைத்தையொத்த திருவதரத்தையும், ஒளிமிக்க அழகிய ஆபரணங்களையும் அணிந்திருக்கும் திருத்தோள்களையும், அத்தோளுக்கு இரை தேடும்படி போரிட்டு வரும் அசுரக்கூட்டங்களை அழித்தும் நம்மைக் காத்து வருகிறான் பகவான். இத்தகைய பெருமான் சோலைகள் சூழ்ந்துள்ள திருமோகூரில் வாசம் செய்கிறான்.  

 நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்.     3900 

      பக்தர்களே! கொடிய அசுரர்கள் தீங்கு விளைவிக்கும் போது அவர்களுக்கு அஞ்சி நல்ல செயல்களையுடைய தேவர்கள், நமக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது பரந்தாமனே என்று எம் பெருமானை சரணடைகிறார்கள்.  அப்போது அவன் தனக்கு விருப்பமான வடிவம் எடுத்து நம்மைக் காக்கிறான்.  அத்தகைய பெருமான் குடியிருக்கும் திருமோகூரின் பெயரைச் சொல்லி வழிபடுங்கள். அவனை நினைத்து முக்தி பெறும் வழியினைத் தேடுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      அடியவர்களின் விஷயத்தில் உடன் வந்து நம்மைக் காக்கும் கொண்டவர் பெருமான். அதை மனதில் வைத்து திருமோகூரில் சேவை சாதிக்கும் காளமேகப் பெருமானின் திருநாமத்தை சொல்லுங்கள். அசுரர்களை நிர்மூலம் செய்து நம்மை என்றும் காப்பான் என்ற நினைவில் அவனை நெருங்கினால் உடன் எழுந்தருளி நம்மைக் காப்பான்.  அது போன்று அசுர குணம் கொண்ட எண்ணங்களும் நம்மை துன்புறுத்தும்போது நமக்கு அரணாக வந்து நம்மைக் காத்தருள்வான். எனவே இத்தலத்தின் பெயரை மிகுந்த பக்தியுடன் சொல்லியவண்ணம் இருங்கள் என்று கூறுகிறார். 

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடம் ஆடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே    3901 

      எம்முடையவர்களே! என்னைப் போற்றுங்கள் என்று கூறி அதற்கேற்றவாறு குடக்கூத்தாடிய எம்பெருமான் மீது குருகூர்ச் சடகோபர் ஆயிரம் பாசுரங்களை அவனது சிறு தொண்டாக எண்ணி இயற்றினார். அவற்றுள் திருமோகூரின் புகழைப் பாடும் இந்தப் பத்துப் பாமாலைகளையும் பக்தியுடன் படிப்போருக்குத் துன்பங்கள் தொலைந்து போகும் என்று கூறுகிறார்.
      இத்திருவாய்மொழியை கற்றுணர்ந்தவர்களுக்கு காளமேகப் பெருமான் நம் வாழ்வில் வழித்துணையாக வருவான். கண்ணன் குடக்கூத்தாடும் போது நமது சேஷ்டிதங்களைக் கண்டு பயன் பெறுங்கள் என்று கூறுகின்றான். இத்தகைய பெருமானை தமது திருமொழியில் பலவாறு போற்றிப் பாடுகிறார். தேவர்களையும், முனிவர்களையும் காத்தவனான பெருமான் திருமோகூரில் நம்மைக் காக்க வந்துள்ளான். எனவே ஆழவாரின் இப்பாசுரங்களை தவறாமல் ஓதுபவர்களுக்கு துன்பங்கள் அனைத்தும் தொலைந்து போகும் என்பது இதன் கருத்தாகும்.           

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...