பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
அழகு பொருந்திய மாடங்களாலே சூழப்பட்ட
திருக்கோஷ்டியூரில் எழுந்தருளியுள்ளார் பெருமான்.
கொடியவனான கம்சன் கேசி என்னும் வலிமைமிக்க அசுரனை அனுப்பி, பகவானைக் கொல்ல
நினைத்தான். குதிரைவடிவம் கொண்டிருந்த அசுரன் கோகுலம் வந்தான். கண்ணன் தனது
இளங்கரத்தை குதிரையின் வாயில் வைத்தான். அக்கரம் வளர்ந்து கொண்டே சென்றது. அதனால்
குதிரை வடிவில் வந்த அசுரன் மூச்சுத் திணறி இறந்தான். இப்பாசுரத்தில் பெரியாழ்வார்
கண்ணன் பிறந்த நாளை சிறப்புடன்
பாடுகிறார். கல்யாண குணங்கள் நிரம்பிய கேசவன் என்கின்ற கிருஷ்ணன் ஆயர்பாடி
மாளிகையில் அவதரித்த போது அங்குள்ள மக்கள் எண்ணெயும், மஞ்சள்
பொடியும் கலந்து ஒருவர்மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். அந்த திருமாளிகையில் உள்ள
விசாலமான முற்றமானது எண்ணெயும், மஞ்சள் பொடியும் கலந்து சேறாகக் காட்சி தந்தது. இரணியனை
முடிப்பதற்காக கோஷ்டிபுரம் என்னும் இத்தலத்தில் தேவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து பின்
ஒரு நன்னாளில் அசுரனை முடித்தான் என்பதாக அறியப்படுகிறது.
ஆயர்பாடி மக்கள் தங்கள் தலைவனான
நந்தகோபனுக்குப் பிள்ளை பிறந்த செய்தி கேட்டதும் மகிழ்ச்சியில் திளைத்துப்
போகிறார்கள். மக்கள் ஆர்பரித்து பிறந்த கண்ணனைப் பார்க்க ஓடுவதும், மஞ்சள் கலந்த
சேற்றில் வழுக்கி விழுந்து பின் எழுந்து ஓடுகிறார்கள். நமக்கெல்லாம் உபகாரனாக
உதித்த கண்ணனைக் காண மகிழ்வுடன் ஆர்ப்பரித்து ஓடுகிறார்கள். பலவகை வாத்யங்களும், பறையும் கொண்டு
கூத்தாடிப் பாடி ஓடி பாலகனைக் காணச் செல்கிறார்கள்.
அவதாரப் புருஷன் பிறக்கும்போது
ஊரே இனம் புரியாத ஆனந்தத்தில் திளைக்கும். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை
நிறுத்த கண்ணன் பிறந்துள்ளான். யாதவ மக்கள், வசுதேவேருக்கு பிறந்த பிள்ளையானாலும் நந்தகோபனுக்கு
பிறந்ததாகவே எண்ணினார்கள். பிள்ளை பிறந்த செய்தியை சொல்வதற்காக சிலர் நாலாபக்கமும்
ஓடினார்கள். அவ்விதம் ஓடும்போது எண்ணெயும் சுண்ணமும் கலந்த சேற்றில் வழுக்கி
விழுந்தனர். சிலர் கூத்தாடி மகிழ்ந்தனர். சிலர் குழந்தையை ஆவலுடன் பார்க்கச்
சென்றனர். இத்தகைய மகிழ்வுடன் ஆயர்பாடி விழாக்கோலம் பூண்டது.
சாமுத்திரிகா இலட்சணம் அறிந்த
சிலர் நந்தகோபன் இல்லத்திற்குச் சென்று கண்ணனை தரிசிக்கின்றனர். முகத்தினால்
அகத்தைக் கண்ட இவர்கள் கண்ணனை பலவாறு போற்றிப் புகழ்கின்றனர். தன்னையும் மக்களையும்
காக்கும் பிள்ளை என்று கூறுகின்றனர். இவனுக்கு நிகரான ஆண்பிள்ளை ஒருவரும் இல்லை.
திருவோணத் திருநாளில் பிறந்த விஷ்ணுவின் அவதாரமான இவன் உலகை ஆளுவான் என்கின்றனர்.
தேவகியின் மைந்தனாகப் பிறந்த
போது சங்கு சக்கரங்களுடன் இருப்பதைக் கண்ட தேவகி கம்சன் செயலால் அஞ்சி அதனை
மறைத்துக் கொள்ளுமாறு கேட்டதன் பொருட்டு பகவான் சங்கு சக்கரத்தை மறைத்துக்
கொண்டான். ஆயர்ப்பாடியில் கண்ணனைக் கண்ட அனைவரும் மகிழ்ந்து பாடினர். இவன் ஆண்
என்ற தன்மையைத் தவிர மற்றவைகளான அழகு, இலட்சணம் போன்றவற்றில் யாருடனும் ஒப்பானவன் இல்லை. திருவோண
நட்சத்திரத்தில் பிறந்த இவன் உலகை ஆளுவான் என்கின்றனர். எனவே இத்தகையவனை நாம்
மனதில் நிறுத்தி பேரானந்தம் கொள்வோம் என்கிறார் ஆழ்வார்.
உறியை முற்றத்து உருட்டி நின்று
ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து
எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே. 16
கண்ணன் பிறந்த செய்தி கேட்டு
யாதவகுல மக்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். நெய், பால், தயிர்,
நிறைந்த உறியை அறுத்துக் கொண்டு
வந்து முற்றத்தில் உருட்டிவிட்டு கும்மாளமிட்டனர். ஒரு சிலர் கண்ணன் நீடூழி வாழ
வேண்டுமென்று அவற்றையெல்லாம் தானம் செய்தனர். ஆனந்தம் அதிகமாகி நிலை கொள்ளாமல்
ஆடியதால் அவர்கள் குடுமியும் அவிழ்ந்து ஆடியது. இவ்வாறு ஆயர்பாடியே மகிழ்ச்சிக்
கோலம் பூண்டது என்கிறார் ஆழ்வார்.
திருவாய்ப்பாடி இடையர்கள் கண்ணன்
பிறந்த செய்தி கேட்டு ஆனந்தித்தார்கள். மகிழ்வின் காரணமாக தாங்கள் என்ன செய்கிறோம்
என்று தெரியவில்லை. தங்களது உறியில் உள்ள பால், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களை அறுத்துக் கொண்டு வந்து
அனைவருக்கும் தானம் செய்தனர். அவதாரப் புருஷர்களும், நன்மக்களும் எவ்விடத்தில் உள்ளார்களோ
அந்த இடம் சொர்க்க பூமியாகிவிடும்.
அவ்விடத்தில் வாழும் பசுக்கள் தடையின்றி பாலைப் பொழியும். மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கி மணம்
வீசும். கனி கொடுக்கும் மரங்களும் நிறைவான பலன் தரும்.
யாதவ மக்கள் மிகவும் எளிய
வாழ்வினை மேற்கொள்பவர்கள்.
அவ்விதமிருந்தும் கண்ணன் பிறந்தான் என்ற செய்தி கேட்டதும் எண்ணெய்க்குப்
பதில் நெய்யைப் பூசிக் குளித்தனர் என்று ஆழ்வார் கூறுகிறார். இச்செயலானது அவர்களை
நிலை மறந்து செய்தனர் என்று கூறப்படுகிறது. இம்மக்கள் என்றும் எளிய வாழ்வினை
மேற்கொள்பவர்கள். தங்கள் மேனிக்கு நெய் பூசி கபடமின்றி வெளிப்படையாக சிரித்து
மகிழ்வார்கள் என்று அம்மக்களைப் பற்றி ஆழ்வார் கூறுகிறார்.
நெருக்கமான கயிற்றினால்
பின்னப்பட்ட உறியைத் தொங்கவிட்டு, அழகிய கூர்மையான மழுக்களைக் கொண்டு பசுக்களை ஆயுதம் கொண்டு
மேய்ப்பர். தாழை மடலிலிருந்து பறிக்கப்பட்ட தண்டிலிருந்து ஓலைகள் மூலம் படுக்கை
செய்வர். வெளிர்நிற முல்லையரும்புகள் போன்ற பற்களையுடைய யாதவ மக்கள்
ஒருவருக்கொருவர் இடையில் புகுந்து நெய்ப்பாடல் ஆடினார்கள். மகிழ்ச்சியுடன் ஒருவர்
மீது எண்ணெய் தடவி ஆரவாரமாக ஆடிப்பாடுவது நெய்யாடலாகும். தங்கள் நல்வாழ்விற்கு ஒரு
குழந்தை பிறந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் இவ்விதமான செயல்களைச் செய்கிறார்கள்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
திருக்கைகளையும், திருக்கால்களையும், பசுமையான
மஞ்சளாலே பாங்காக கண்ணனுக்கு திருமஞ்சனம் செய்து அவனது மெல்லியதான நாக்கை
வழிக்கும் போது அவனது வாயினுள் யசோதை அற்புதக் காட்சியினைக் கண்டாள். திறந்த
வாயினுள் ஏழு உலகங்களும் சுற்றும் காட்சியினைக் கண்டு மிரண்டு போனாள். இந்தப்
பிள்ளை தெய்வத் தன்மை வாய்த்தவன். அவன் பல அற்புதங்களைச் செய்ய வல்லவன் என்று
நினைக்கிறாள் யசோதை.
யசோதைப் பிராட்டி கண்ணனை
நீராட்டும்போது பிஞ்சுக் கரங்களையும், கால்களையும் மெல்ல நிமிர்த்தி, பல வாசனை
திரவியங்கள் கொண்ட வெதுவெதுப்பான நீரினை குழந்தையின் மேல் மெல்ல விட்டு மெதுவாக
நீராட்டினாள். முடிவில் மஞ்சள் தேய்வை முடித்துக் கொண்டு நாக்கு வழிக்குங்கால்
அவனது வாயினைத் திறக்கும்போது அந்த வாயினுள் சகல லோகங்களும் சுழல்வதைக் கண்டு
திகைத்தாள். பின்னாளில் பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு விஸ்வரூப தரிசனத்தை
காட்டியது போன்று தனது தாய்க்கும் எல்லா உலகங்களையும் காட்டி விளையாடினான் என்று
பெரியாழ்வார் கூறுகிறார்.
கண்ணனின் வாயினுள்ளே ஏழுலகங்களையும்
கண்ட யசோதை மிரண்டு போய் நற்குணங்களைக் கொண்ட கோபியர்களை அழைத்து இந்த அதிசயத்தைக்
காண்பித்தாள். கண்ணன் இடைக்குலப் பிள்ளை அல்ல. இவன் அடக்கமும், நற்குணங்களும், சீர்மையும்
கொண்ட மாயக் குழுந்தை என்று சொல்லி மகிழ்ந்தனர். தீயவர்களை அழிக்கும்
நற்குணங்களைக் கொண்டவன் என்று குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் அறிந்தார்கள்.
பிற்காலத்தில் கண்ணன் செய்த மாய லீலைகள் நன்மக்களைக் காத்தன. அசுரர்கள் செய்யும் மாயங்கள் நல்லவர்களை அழிக்கப் பயன்பட்டன. ஆனால் கண்ணன் செய்த லீலைகள் அசுர மாயையை வேரோடு அழிக்கவல்லதாக அமைந்தது. இக்காட்சியினை கோபியர்கள் கண்டு அவன் சாமான்யப் பிள்ளை அல்ல. இவன் தெய்வக் குழந்தையாக காட்சியளிக்கிறான். பிற்காலத்தில் இவன் பல அற்புதங்களை நிகழ்த்த வல்லவன் இவனால் வையகம் நன்முறையில் வாழும் என்று கூறுகின்றனர்.
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே. 20
குழந்தை பிறந்து பத்து நாள்
கடந்து பின் இரண்டு நாளில் நாமக்கரணம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. ஊரே
விழாக்கோலம் பூண்டது. எல்லா திக்குகளிலும் கொடிமரம் வைத்து தோரணங்கள் கட்டப்பட்டன.
பெரிய மதம் பெருகுகின்ற யானைகளைக் கொண்ட கோவர்த்தன மலையைத் தாங்கி மிடுக்கையுடைய
மைந்தனை எளிய கோபியர்கள் தங்கள் கைத்தலத்திலே வைத்து ஆனந்தித்தனர் என்ற கூறுகிறார்
ஆழ்வார்.
கிருஷ்ணனுக்கு பெயர்சூட்டும்
விழா நடைபெறுவதால் ஊரே விழாக் கோலம் கொண்டது. எங்கும் வெற்றித் தோரணங்கள் நாட்டி
அலங்கரித்தனர். பிற்காலத்தில் இந்திரன் கோபத்தினால் கோகுலத்தில் மழை பெய்வித்து
மக்களை துன்புறுத்தினான். இதனையறிந்த கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து
மக்களைக் காத்தான். மாபெரும் மலையினையே தன் விரலால் சுமந்த கண்ணனை கோபியர்கள் தன்
மடியில் அமர்த்திவைத்து மகிழ்ந்தனர். எல்லோருக்கும் இனியவனான கண்ணனின் குணங்களை
பிற்காலத்தில் வந்த ஆழ்வார் இதனைப் பாசுரவழி நமக்கு எடுத்துரைக்கிறார்.
கண்ணனின் தாயாகிய யசோதை தன்
பிள்ளையின் குறும்புச் செயல்களைப் பற்றிக் கூறுகிறாள். அவனை தொட்டிலில்
கிடத்தும்போது தொட்டிலே உடையுமாறு உதைக்கிறான். தூக்கி வைத்துக் கொண்டால்
இடுப்பில் உதைக்கிறான். அவனை அணைத்துக் கொண்டால் வயிற்றால் கால் வைத்து ஏறுகிறான்.
இருப்பினும் இத்தகைய பலசாலியாக இருக்கிறானே என்று பெருமிதம் கொள்கிறாள். என்
பிள்ளையிடம் பேசி என்னால் ஜெயிக்க முடியவில்லை என்று தாய் கூறும்போது அதன் தோல்வி
பெரிதாகத் தெரியவில்லை. அவனது அறிவுக் கூர்மையை மெச்சுவது போல் உள்ளது என்று
கூறகிறார் அழ்வார்.
யசோதை தனது அயலார் இல்லத்துப்
பெண்களை அழைத்து கண்ணன் செய்யும் குறும்புகளை விவரிக்கின்றாள். இப்பிள்ளை
பருவத்திற்குத் தகுந்த செயல்களை செய்வதில்லை. இக்குழந்தை செய்யும்
சேஷ்டைகளால் என் இடுப்பு முறிந்துவிடும்
போல் உள்ளது என்று கூறுகிறாள். இவன் செய்யும் செயல்களைப் பொறுக்கும் தன்மை
என்னிடத்தில் இல்லை என்று சலிப்புடன் கூறினாலும் தன் பிள்ளை செய்யும் செயல்களின்
பெருமைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கிறாள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
செந்நெற் கதிர்கள் கொண்ட வயல்களால்
சூழ்ந்துள்ள திருக்கோட்டியூரில் கோயில் கொண்டிருக்கும் பெருமான், யாதவர்கள்
வாழக்கூடிய ஆயர்ப்பாடியில் அவதரித்த போது செய்த பால லீலைகளை பெரியாழ்வார் தனது
ஞானக்கண் கொண்டு அறிந்து பாசுரவழி நமக்கு எடுத்துரைத்தார். இவற்றை பொருளறிந்து
பக்தியுடன் சொல்பவர்களுக்கு பாவம் விட்டகலும். அவர்கள் நெடுநாள் வாழ்வார் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
ஆழ்வார் கூறும் இப்பாசுரங்களின்
பொருளை நன்குணர்ந்து பக்தியுடன் படித்து வந்தால் கண்ணனின் லீலைகள் அனைத்தும்
நமக்கு நன்கு புலப்படும். பெரியாழ்வார் பகவானின் பேரன்புக்கு என்றும் உரியவர்
என்பதால், கண்ணன்
நடத்திய பால லீலைகள் அனைத்தும் அவர் கண்முன்னே தோன்றின. அதனை அப்படியே நமக்குப்
பாசுரமாகத் தருகிறார். எனவே இதனை நாளும் பொருளறிந்து சொல்பவர்களுக்கு பாவம்
நீங்கும் என்றும் கூறுகிறார்.
கரியநிறக் காக்கையே! கொங்கு
நாட்டிலும், திருக்குடந்தையிலும், திருக்கோஷ்டியூரிலும், கோவிலடியிலும்
மற்றுமுள்ள திருப்பதிகளிலும் திரிந்து விளையாடுகிறவன் என் கண்ணன். சங்கினைப் பிடிக்கும் அவனுடைய பெரிய கைக்குத்
தகுந்தாற்போல் நீ கோல் கொண்டு வா! அக்கோல் அரக்கு பூசிய கோலாக இருக்க வேண்டும்!
என்று ஆழ்வார் கூறுகிறார்.
கண்ணனிடம் உள்ள சங்கு
தீயவர்களுக்கு அச்சத்தைத் தரும். நல்லோர்களுக்கு அபயத்தைத் தரும். குருக்ஷேத்திரத்தில்
கண்ணன் ஊதிய பாஞ்சசன்யம் என்ற சங்கினால் எதிரிகள் நாடி தளர்ந்து போனார்கள். உடலை
வீழ்த்தி என்ன பயன்? ஆன்மாவை அழிக்க முடியாது என்று பார்த்தனைப் பார்த்துக் கூறினான்.
எனவே அந்த கைக்கு கோல் கொண்டு வரச் சொல்கிறார். இங்கு கோல் என்பது அதர்மத்தை
அழிக்கும் ஆயுதமாகும். தருமத்தை நிலைநிறுத்தும் தூண்டுகோலாக நாம் திகழவேண்டும்.
அதையே இறைவனுக்கும் அர்ப்பணம் செய்தால் திசைமாறி செல்பவர்களும் கரை
சேர்க்கப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும்.
பேசக்கூடாததை ஒருநாளும் பேசாத
பாகவதர்கள் வாழும் இடம் திருக்கோட்டியூர். விருந்தோம்பலில் சிறந்தும், அனுதினமும்
பெருமான் கைங்கர்யம், ஆலயம்
தொழுதல் போன்ற நற்பணிகள் செய்பவர்கள் வாழுமிடம் இவ்வூராகும். வேதங்கள் பயின்று
இறைவனின் புகழ் பரப்புவர்கள் வாழுமிடமாகும். தேவர்களுக்குத் தேவைப்படும்
காரியங்களை குறைவரச் செய்யும் முழுமுதற் பொருளாகிய பெருமானை மனதாலும் நினையாத
பாவிகளை பிரம்மன் எதற்குப் படைத்தானோ? என்று கேட்கிறார் ஆழ்வார்.
பொய்யுரைத்தல், பிறரை புகழுதல்
போன்ற குணங்கள் அறவே இல்லாத ஸ்ரீவைஷ்ணவர்கள், பகவதாராதனம் செய்பவர்கள், வேதங்களை நன்கு உச்சரித்துச்
சொல்லக்கூடிய பரம பாகவதர்கள் வாழக்கூடிய இடமாக திருக்கோட்டியூர் திகழ்கின்றது.
வேதங்களை மீட்டு பிரம்மனுக்கு அளித்ததையும், பிரம்மனின் தலையைக் கிள்ளியெடுத்ததால் சிவபெருமானுக்கு
ஏற்பட்ட சாபத்தினைப் போக்கியவனும் இப்பெருமானாகும். இங்கு வாழும் பெருமானை நினையாத
மனிதர்களை, பாவம்
புரிந்தவர்களை பிரம்மன் எதற்குப் படைத்தானோ? என்று வினவுகிறார் ஆழ்வார்.
ஒரு குற்றமும் செய்யாமல்
நற்குணங்களை வளர்த்துக் கொண்டு பாகவதர்களுக்குச் சேவை செய்கிறவர்கள் வாழுகின்ற ஊர்
திருக்கோட்டியூராகும். பொறாமை
சிறிதுமின்றி தருமம் செய்யும் கரங்களை உடையவர்கள் வாழும் புனிதத்தலமாகும். அத்தகைய
ஊரில் குடிகொண்டுள்ள நீலமணி வண்ணனை வணங்காதவர்கள் தன்னுடைய தாய்க்கு வேதனையைக்
கொடுக்கப் பிறந்தவர்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
எவ்விதமான குற்றமுமில்லாமல், சமம், தமம் போன்ற
குணங்கள் உடையவர்களும்,
ஆசாரியர்களுக்குத் தொண்டு புரிபவர்களும், பொறாமை என்ற குணம் சிறிதுமின்றி தருமம் செய்யும் கையை
உடையவர்களும் வாழுமிடம் திருக்கோட்டியூர் என்னும் திவ்யத்தலமாகும். உலகில் பிறந்த பிள்ளைகள் திருக்கோட்டியூரில்
உள்ள சௌமிய நாராயணப் பெருமானை வணங்கினால்தான் அவர்களைப் பெற்ற தாய்மார்கள் பேறு
பெற்றவர்களாவார்கள். அவ்விதம் இல்லையேல் அம்மக்கள் எந்தவிதத்திலும்
உபயோகமற்றவர்களாக இருப்பார்கள். அத்தாய்மார்கள் பிரசவகாலத்தில் தான் கண்ட
துன்பத்தை காண்பார்கள் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
ஒளி பொருந்திய மாணிக்கம் மற்றும்
மரகதம் போன்றவற்றைத் திண்ணைகளில் பதித்து ஒளிபெறச் செய்யும் திருக்கோட்டியூரில்
எழுந்தருளி இருக்கும் திருமாலின் திருநாமங்களைச் சொல்லி எண்ணுவதற்காக படைக்கப்பட்ட
விரல்களை, கேவலம்
சரீரத்தை வளர்ப்பதற்காக சோற்று உருண்டைகளை
எடுத்து வாயிலிடுவதற்கு படைக்கப்பட்டதாக இந்த மூடர்கள் நினைக்கிறார்களே என்று
வருந்திக் கூறுகிறார் ஆழ்வார்.
உலக மக்களுக்கு கை கால்கள்
படைத்திருப்பதற்கான காரணம் நமக்கு உயிரளித்த திருக்கோட்டியூர் பெருமானின்
திருநாமங்களை எண்ணுவதற்கும், அவற்றை வாயினால் சொல்லுவதற்கும், நாம் செய்யும்
பகவதாரதனைகளுக்கு மட்டுமே என்று கூறுகிறார். அதை விடுத்து நாம் உண்ணும்
சோற்றுக்கவளங்களை அள்ளி வாயிலிடுவதற்கு என்று கொள்கிறான் மனிதன். என்ன கொடுமை இது
என்று வெதும்புகிறார் ஆழ்வார். ஒரு காலாக படைக்கப்பட்டாலும் அக்காலினால்
பெருமானின் தலத்திற்கு செல்ல முயற்சித்தல் வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.
அரவின் மெல்லிய படுக்கையில்
துயில் கொண்டவனான திருமாலின் வலக்கரத்தில் வெண்மை நிறமான பாஞ்சசன்யம் என்ற சங்கு
திகழ்கின்றது. அதுபோல் திருக்கோட்டியூரிலுள்ள தாமரை நிறைந்த வயல்களில் அன்னப்
பறவைகள் உள்ளன. அத்தலத்து மாலவன் பக்தர்களின் நரக வேதனையைத் தீர்க்க வல்லவன். அவனை
வாயாரப் பாடாத மனிதர்கள் பருகும் நீரும், அணியும் ஆடையும் அவனுடைய உடலை வருடி என்ன பாவம் செயததோ
என்று ஆழ்வார் கூறுகிறார்.
நாமமும், ரூபமும் கொண்ட
இரண்டும் எல்லாப் பொருள்களிலும் ஜீவனாயிருக்கின்ற பிரமாண பலத்தினால்தான் என்று
நாம் கொள்ள வேண்டும். நாம் பிறவியெடுத்துள்ளது நமது முன்வினைப் பயனைப் போக்கி
கொள்ளத்தான் என்ற எண்ணம் நம் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் இப்பிறப்பில் பெருமானை
நினையாமல், அவனது
நாமங்களை வாயாரப் பாடாமல் இருப்பது பெரும் பாவச் செயலாகும். இத்தகைய பாவிகள்
அணியும் ஆடைகள் அவன் உடலில் படுவதற்கு என்ன பாவம் செய்ததோ. இவர்கள் அரிதான மனிதப்
பிறவியின் காலத்தை வீணடிக்கிறார்களே என்று புலம்புகிறார் ஆழ்வார்.
வாளை மீன்கள் ஆமையின் முதுகில் குதித்து
விளையாடுகின்றன. தாமரை,
அல்லி போன்ற மலர்களோடு மோதிக்கொண்டு ஒன்றோடொன்று விளையாடும் நீர்வளம்
மிக்க ஊர் திருக்கோட்டியூர். அங்கு எழுந்தருளியுள்ள சௌமியனை தியானம் செய்யாது
காலம் கழிப்பவர்கள் கல் மனத்தினைக் கொண்டவர்களாகவே கருதவேண்டும். இப்பூமிக்குப்
பாரமாக வாழும் அவர்கள் உண்ணும் சோற்றினைப் பறித்து அதற்குப் பதிலாக அவர்கள் வாயில்
புல்லைத் திணியுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பெருமானை வணங்காமல் சோம்பித்
திரியும் மக்களைப் பார்த்து ஆழ்வார் இவ்வாறு கோபக்கனலை வீசுகிறார். அவரது கோபம்
எத்தகையதென்று அவர் பாசுரத்திலேயே நன்கறியலாம். மிருகங்கள், பறவைகள்
மற்றும் ஊர்வனங்களை விட ஆறறிவு படைத்த மனிதன் இத்தகைய காரியங்களைச் செய்கிறானே!
என்று வருந்துகிறார். ஆறாவது அறிவு என்பது இறைவனைத் தொழுவதாகும். ஐந்தறிவு படைத்த
யானைக்கு உள்ள இறையுணர்வு மனிதனுக்கு இல்லாமல் போனது வியப்பாகும். மனிதப்
பிறவியின் பலனை நன்குணர்ந்து இறைவனிடம் சேருங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற
பஞ்சபூதத்தாலான உடலைப் பெற்று வேதமுரைப்பவர்கள் வாழும் ஊர் திருக்கோட்டியூராகும்.
ஐம்புலன்களாலும் தவறு நேராதபடி வாழ்பவர்கள் அவர்கள். கொடைத் தன்மை நிறையப்
பெற்றவர்கள் வாழும் இவ்வூரில் எழுந்தருளியுள்ள நரசிம்மராய் அவதரித்த பகவானைத்
துதிக்கின்ற அடியவர்களின் பாதங்கள் படுவதால் இப்பூமி பாக்கியம் பெற்று
விளங்குகின்றது என்கிறார் ஆழ்வார்.
ஐம்புலன்களால் நல்வழியில்
நடப்பவன் பகவானை வெகு எளிதில் காண்பான். மெய்யால் பகவானை வணங்குவதற்காக அது
தரப்பட்டுள்ளது. பகவானைத் தவிர மற்ற மனிதர்களை சிரம் கொண்டு வணங்குதல்
கூடாது. அவனின் திருநாமங்களைச் சொல்வதற்கு
வாய் தரப்பட்டுள்ளது. மற்றவர்களை புண்படும் வார்த்தைகள் பேசுவதற்காக தரப்படவில்லை.
இறைவனை தரிசிக்க கண் வழங்கப்பட்டுள்ளது. உடலுக்கும், மனதுக்கும் பலவீனமளிக்கும் காட்சிகளைப்
பார்ப்பதற்கல்ல. நல் வாசனை நுகர மூக்கு தேவைப்படுகிறது. பகவானின் நாமங்களைக் கேட்க செவி
படைக்கப்பட்டுள்ளது. இவைகளைக் கொண்டு நாம்
பகவானைத் தொழுது பிறவிப்பயன் களைவோம் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைகிறது.
நான்கு வேதங்களையும் நன்றாக
கற்றுணர்ந்த அந்தணர்கள்,
குருந்த மரத்தை முறித்த கோபாலனை நினைத்து ஆடிப்பாடும் புண்ணியம் மிகுந்த தலம்
திருக்கோட்டியூராகும். கரிய மேகம் போன்ற
கருணை மழை பொழியும் பெருமானைத் துதித்து, இதுவே பிறவிப்பயன் என நினைத்து வாழும்
அந்த அடியவர்களோடு வாழும் பாக்கியம் பெற்றவர்கள் எத்தகைய தவம் செய்தார்களோ என்று
கூறகிறார் ஆழ்வார்.
திருக்கோட்டியூர் பெருமானிடம்
அன்பு கொண்டுள்ள பாகவதர்கள் எழுந்தருளியுள்ள இடம் திருக்கோட்டியூராகும்.
எம்பெருமான் குடியிருக்கும் இடத்தில் நாம் குடிபுகுவதற்கு என்ன புண்ணியம்
செய்திருக்க வேண்டும். இப்பாட்டில் வரும் குருந்தமரம் என்பது கோபியர்
குளிக்கும்போது அவர்களது ஆடையினை எடுத்து கட்டிய மரம் குருந்த மரமாகும். அடுத்து
கம்சனால் ஏவப்பட்ட அசுரன் ஒருவன் குருந்த மரம் போன்று வந்து கண்ணனைக் கொல்ல
வந்தான். கண்ணன் அந்த மரத்தை பிடித்து இழுத்த வீசி எரிந்தான் என்பது இப்பாசுரம்
கூறும் செய்தியாகும்.
குளிர்ந்த ஒழுக்க சீலனும், நீதிநெறி
தவறாதவனும், எப்போதும்
தெளிவான புத்தியை உடையவர்களான அடியார்களை ஆட்கொண்ட பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம்
திருக்கோட்டியூராகும். அந்த திருமாலின் குணநலன்களைப் போற்றிப் பாடுகின்றவர்கள்
வசிக்கும் நாட்டில் விளையும் தானியத்தைக்கூட அரக்கர்களால் அபகரிக்க முடியாது என்று
பொருளில் அமைந்துள்ளது.
சிறந்த குணங்கள் அமைந்த செல்வ
நம்பியை அடிமை கொண்டருளின திருக்கோட்டியூர் பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை
வாயாரப் பாடும் ஸ்ரீவைஷ்ணவர்கள் குடிகொண்டிருக்கும் நாட்டில் விளையும் தானியங்களை
விட்டு வைக்காமல் அதை அபகரித்து நாசம் செய்தனர். கண்ணன் அவர்களை அடக்கி ஒடுக்கி ஓட
வைத்தான். நீதியைத் தவறாமல் கடைபிடிக்கும் பெருமானின் புகழ்பாடும் அடியார்களை அசுர
குணங்கள் தாக்க முடியாது. எனவே நம் அசுர குணங்களை அழிக்க பெருமானின் புகழ் பாடி
நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.
கொம்பின் ஆர் பொழில்வாய்க்
குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொன் ஆர் மதிள் சூழ் செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே. 368
சோலைகளில் உள்ள குயில்கள் கூட
கோவிந்தன் புகழைப் பாடுகின்ற சிறப்பு மிக்க புனிதத்தலம் திருக்கோட்டியூராகும்.
தாமிரத்தில் பதித்த மதில்சூழ்ந்த இடமாகும். வளமிக்க வயல்களைக் கொண்ட அப்புண்ணிய
பூமியில் கோயில் கொண்டவனும், நம்பிக்கை நரசிம்மனான எம்பெருமானைத் துதிக்கின்றவர்களைக் காண
நேரும்போது இவர்கள் எம்பெருமானின் அடையாளங்கள் என்று கண்குளிர அவர்களைப்
பார்ப்பேன். அதனால் தேவையற்ற ஆசைகளைக் களைவேன் என்கிறார்.
திருக்கோட்டியூரில் உள்ள
எம்பெருமானின் அடியார்களை சேவிக்கும்போது அப்பெருமான் சாத்வீகர்களால்
சேவிக்கப்படுபவன் என்ற பெருமை பெறுகிறான். இவர்கள் எம்பெருமானது சிறப்பைத்
தெரிவிக்கும் போது அவர்கள் கொண்டுள்ள ஆசைகளை அழிக்கிறார்கள். பாகவதர்களின் சேவை
பகவத் சேவையை விடப் பெரிது என்பார்கள். குலசேகராழ்வார் அடியார்களைப் பற்றி
குறிப்பிடுகையில் அடியார்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் எங்கும் பரவி உலாவி
வருகிறார்கள். அத்தகையவர்களை நாம் சந்திக்கும்போது நம்மில் உள்ள தேவையற்ற ஆசைகள்
நம்மை விட்டு விலகுகின்றன என்று குறிப்பிடுகிறார்.
ஒரு பொற்காசுக்கு ஒரு பிடி நெல்
விற்கும் பஞ்ச காலத்திலும் பிரதிபலன் கருதாமல் தம்மிடம் இருக்கும் உணவை
விருந்தினர்களுக்கு அளிக்கும் வள்ளல்கள் நிறைந்த ஊர் திருக்கோட்டியூராகும்.
அத்தகைய தலத்தில் குடிகொண்டுள்ள பெருமானே, உன்னை கேசவா! புருஷோத்தமா! ஜோதி
வடிவானவனே! வாமனனே!
என்று போற்றுகின்ற அடியார்கள் என்னை விலைபேசவும் உரிமை பூண்டவர்கள் என்று
கருத்தில் இப்பாசுரம் அமைகின்றது.
செல்வ வளம் இல்லாத
பஞ்சகாலங்களிலும் கூட உதவும் மனம் படைத்தவர்கள் இத்தலத்தில் வாழும் அடியார்கள்.
அவர்கள் என்ன விலை பேசவும் உரிமையுள்ளவர்கள். பகவானின் அடியவர்களுக்காக தன் உடல், பொருள், ஆவி போன்ற
அனைத்தையும் தருவதற்குத் தயாராக இருப்பர். பகவான் மீது கொண்ட பற்று இதன் மூலம்
வெளிப்படுகின்றது. மெய்யடியார்களுக்கு நாம் தவறிழைக்கும் போது அதன் விளைவு உடனே
வந்து சேரும். அதை கொடிய பாவமாகக் கருதுவர். எனவே அடியார்களை நாம் மதித்துப் போற்ற
வேண்டும் என்பதே இதன் கருத்து.
குளிர்ந்த நீர்வளமும் நிலவளமும்
கொண்ட கழனிகளையுடைய திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் முதல் பொருளான
ஸ்ரீமந் நாராயணனின் அடியாரையும், அவ்வாறில்லாமல் அடிமை செய்யாமல் திரிகின்ற பாவிகளைக்
குறித்தும் குற்றமற்றவரும் அந்தணத் தலைவருமான பெரியாழ்வார் பாடிய இப்பத்துப்
பாசுரங்களையும் பிழையில்லாமல் படிப்பவர் ரிஷிகேசனின் அடியாராவார் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
நாம் அனைவரும் பக்தி
மார்க்கத்தில் திளைத்து பெருமானின் அடியாராக வேண்டும் என்ற எண்ணத்திலேயே
பெரியாழ்வார் இத்தகைய பாசுரங்களை இயற்றியுள்ளார். தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற
வேண்டும் என்ற எண்ணத்தில் இவற்றைப் பாடியுள்ளார். இதனைப் பக்தியுடன் பாடினால் நம்
வாழ்க்கைமுறை அனைத்தும் மாறி விடும். அழியும் பொருட்கள் மீது நாம் கொண்டுள்ள பற்று
அகன்றுவிடும். நம் ஜீவாத்மா மீது படிந்துள்ள வினைகள் என்னும் தூசிகளை இத்தகைய
பாசுரங்கள் அகற்றிவிடும் என்பதே இதன் கருத்தாகும்.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
உனது திருவருளை அடியேனிடம் நிலை
நிறுத்தினாய். எக்காலத்திலும் இக்கருணையை
மற்றொருவருக்குத் தரமாட்டேன். மேகங்கள்
சூழ்ந்துள்ள பாற்கடலிலும்,
திருமலையிலும்,
திருக்கோட்டியூரிலும் திருவுள்ளம் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் உன்னை
அடியேன் விரும்பி அனுபவித்து மகிழ்வேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
அடியேனுடைய பிரார்த்தனைக்கு
செவிசாய்த்து உன்னையே தொடர்ந்து அழைக்கும்படியாக இத்தகைய அருளை என் மேல்
பிரயோகித்தாயே! இத்தகைய அருளுக்கு வேறு யாரேனும் ஆட்கொண்டதுண்டா? இவ்வருள்
பெற்றவன் நான் ஒருவனே ஆவேன். இதையே வேறு ஒருவருக்கு செய்வதாயினும் நான்
சம்மதியேன். உன்னுடைய கிருபையை அனுபவித்து வேறு எதையும் வேண்டேன். பகவான் நம்
மனத்தில் முழுவதும் குடியேறிவிட்டால் வேறு எவரையும் அதில் குடியமர்த்த மாட்டோம்.
மனம் முழுவதும் அவனே ஆட்கொள்வான் என்பது இதன் கருத்தாகும்.
எமக்கு சுவாமியாய், எமக்கு
உபகாரியாய், தேவர்களுக்கெல்லாம்
தலைவனாய், வணங்கும்
அடியவர்களின் உள்ளத்தை விட்டு அகலாமல் அருள் புரிபவன், மென்மேலும்
பொங்கி வரும் குளிர்ந்த அருவிகள் தாவிப்பாய, அதனால் பொன் துகள்கள் சிதற அதன் மூலம் ஒளித்திகழும்
செந்தாமரைகள் மலரும் திருக்கோட்டியூரில் வீற்றிருக்கிறான் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
நமக்கெல்லாம பெரும் உபகாரம்
செய்வதில் முன்னிருந்தும்,
ஆச்சாரியர்களின் உள்ளத்தில் புகுந்து என்றும் அவரை விட்டுப்பிரியாமல்
அருள் புரிபவன் எங்கள் தலைவன். உயிருக்குத் தவிக்கும் மீனுக்கு தக்க சமயத்தில்
தண்ணீர் கொடுத்து உதவுபவனாக இருக்கிறான். இப்படிப்பட்ட பெருமான்
திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ளான். அது சமயம் அத்தலத்தின் வளத்தையும் நன்கு
கூறுகிறார். அருவிகள் குதிரை போன்று தாவித் தாவி வருகின்றது என்கிறார். ‘வெண்திரைப்
புரவியென்னப் புதஞ்செய்து’ என்று புல்லாணிப் பதிகத்தில் இதே கருத்தை
தெரிவிக்கிறார். அதுபொன்று ‘பொன்கள்
சிதறப்பெற்ற திருக்கோட்டியூர்’ என்கிறார்.
நம் நித்திரையில் ஏற்படும்
குறைகளை அறவே நீக்கி மனநிம்மதி தந்து அருள்பவரான நான் வணங்கும் தெய்வம், பூமிதேவியின்
அழகை அனுபவிக்கக் கூடியவன்,
வண்டுகள் மொய்க்கும் ஜாதி மல்லிகை, மல்லிகை மலர்களோடு அணைந்த காற்று திவ்யமான நறுமணத்தைப்
பரப்புகின்ற திருக்கோட்டியூரில் கோயில் கொண்டுள்ளார் எம்பெருமான் என்கிறார்
ஆழ்வார்.
நம் துன்பங்களையெல்லாம்
தீர்த்தருள்வதற்காக திருமகளும் நிலமகளும் ஒருசேர திருக்கோட்டியூரில்
வீற்றிருக்கும் பெருமான், நோய்வடிவில் வரும் துன்பங்களையெல்லாம்
தீர்த்து வைப்பான். இதனை சம்சாரமென்னும் துன்பக் கடலாகவும் கொள்ளலாம்.
அடியார்களின் குற்றங்களைக் கண்டறிந்தது தகுந்த தண்டனை தருங்கால் பூமிதேவியானவள்
தன் புன்சிரிப்பால் பெருமானைச் சாந்தம் கொள்ளச் செய்து, நம்மைவிட்டால்
இவனுக்கு வேறு யார் உள்ளார்கள் என்று கூறி அத்தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாள்.
பெரிய பிராட்டிக்கு ஈடாக பூமி பிராட்டியும் நம்மை காப்பதற்கு தயாராக உள்ளாள்
என்பது இதன் கருத்தாகும்.
கிருத யுகத்தில் வெண்மையாகவும், துவாபர
யுகத்தில் நீலமணி போன்றும்,
கலியுகத்தில் கருமை வைரம் போன்றும் நிலம் கொண்டவன் தேவர்களின் தலைவன்.
எல்லோருக்கும் மேலானவன்,
உயர்ந்தவன், பிரளய
காலத்தில் உலகத்தை உண்டு, படைப்புக் காலத்தில் அதை உமிழந்தவன். ஆர்பரிக்கும்
அலைகளால் சாமரைக் கற்றைகளையும், சந்தனக் கட்டைகளையும் இழுத்து வந்து தள்ளி ஓடுகின்ற தெளிந்த
நீரையுடைய சூழலை திருக்கோட்டியூர் பெற்றுள்ளது என்கிறார்.
பெருமான் ஒவ்வொரு யுகத்திலும்
ஒவ்வொரு வண்ணங்களில் காட்சி தருகிறான். நான் வைத்தகண் மாறாமலிருக்குமாறு தனது
வடிவழகினை எனக்குக் காட்டி அருள்கிறான். உலகங்களையெல்லாம் பிரளயத்திலிருந்து தப்பி
பிழைக்க உண்டுமிழ்ந்தது போன்று நாம் சம்சாரமென்னும் கடலில் அகப்பட்டு
துன்பப்படும்போது நம்மைக் காப்பதற்காக திருக்கோட்டியூரில் வந்து வாசம் செய்கிறான்.
நமக்கெல்லாம் வெற்றியை தரக்கூடியவன் இப்பெருமானே என்ற கூறுகிறார் ஆழ்வார்.
பெரிய காளையினை வாகனமாகக் கொண்டு
அதன் மேல் ஏறி வருபவரும்,
மழு என்னும் ஆயுதத்தை கையிலேந்திக் கொண்டவருமான சிவபெருமானுக்கு
வலப்புறத்தைத் தந்தவன்,
அழகில் சிறந்த மகாலட்சுமிக்கு இனியவன், நறுமணமுள்ள செண்பகத்தையும், மல்லிகையையும் இளவண்டுள் தழுவி மணமுள்ள
தேனிலே வாய் வைத்துப் பருகும் இடமான திருக்கோட்டியூரில் வீற்றிருக்கிறான் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
காளை வாகனனான சிவபெருமானுக்கு
தனது வலப்புறத்தைத் தந்தவன் என்று கூறுகிறார் ஆழ்வார். ஹரியும் சிவனும் ஒன்று என்ற
கருத்தை முன்வைக்கிறார். இருவரும் பிரிக்க முடியாத பரம்பொருள் என்று
இப்பாசுரத்தின் மூலம் உறுதியாகிறது. எனவே பிரிவினே வேண்டாம் என்பதே இவரது
கருத்தாகும். இது அறியாமையை உணர்த்துவதாகும் என்கிறார். செண்பகமும், மல்லிகையும்
மணம் கொண்டு தேனீக்கள் அதன் மீது வாய்வைத்துப் பருகும் இடம் திருக்கோட்டியூராகும்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
மரக்கலங்கள் செல்லும் பெரிய
கடலின் நிறத்தைப் பெற்றவன்,
நீலமணி போன்ற நிறமுடைய தேவர்களின் தலைவன், தேனுள்ள மலர் மாலையை நீண்ட திருமுடியில்
அணிந்தவன், திருவிக்ரமனாய்
பூமியை அளந்தவன், மேகத்தைத்
தொடும் மணிமாடங்களிலே கட்டியுள்ள வெள்ளைக் கொடிகள் வானத்துச் சந்திரனை எட்டும்படி
உள்ள திருக்கோட்டியூரில் அருள் புரிபவனாக விளங்குகிறான் என்கிறார் ஆழ்வார்.
கடல் போலவும், நீலமணி போன்ற
நிறமும் கொண்ட திருமேனியைத் தனது நித்யசூரிகளுக்கு நித்தம் அளிப்பவனாகத்
திகழ்கிறான். நன்கு திருத்துழாய் அணிந்த திருவபிஷேகத்தையுடைய தன்னோடொப்பாரையும், தன்னில்
மிக்காரையும் காத்தருள்பவன். உலகம் முழுவதையும் தன் ஸ்ரீபாத தூளியில் ஸ்பரிசித்து
புனிதமாக்கியவனான பெருமான் திருக்கோட்டியூரில் வாசம் செய்கிறான். வானம், கடல் ஆகிய இரண்டையும் படைத்த பகவான் அவற்றின் நிறத்தைப்
பெற்றிருப்பது இயல்பானது என்ற பொருளின் இப்பாசுரம் அமைகின்றது.
இலங்கை அரசனான இராவணன்
கலங்கும்படி அம்புகளை எய்து அம்பெய்வதில் அவன் கொண்டிருந்த வலிமையை அழித்தவன்.
என்னை அடியவனாகக் கொண்ட பெருமான். நாவலந் தீவிலுள்ள அரசர்கள் வந்து வணங்க திருமால்
கோயில் கொண்ட இடம் இதுவென்று வானவர்கள் வந்து வழிபடும் திருக்கோட்டியூராகும்.
நாவலம் என்பது உப்புக்கடல், கருங்கடல், கள்கடல், நெய்கடல், தயிர்கடல், பாற்கடல், நீர்கடல் போன்ற
ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவுகளாகும். இதில் ஜம்புத்வீதம் என்பது நடுவில்
அமைந்துள்ளது. அதன் நடுவில் மேருமலை உள்ளது. அதைச் சுற்றியுள்ள நான்கு மலைகளைச்
சுற்றி நாற்றிசையிலும் நான்கு மரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நாவல் மரம்.
இத்தீவானது பலன்களுக்குரிய சாதனமான கருமங்களை அனுட்டிக்க உரிய இடமாக கொண்டுள்ளது.
இத்தீவில் மானிடப் பிறவி எடுப்பது அரியதாகும். அத்தகைய பெருமை பெற்ற தீவு போன்று
திருக்கோட்டியூர் திகழ்கின்றது என்பது இதன் கருத்தாகும்.
இளங்கன்று உருவில் வந்த
வத்சாசுரனைக் கொண்டு பெரிய விளா மரமாய் நின்ற கபித்தாசுரன் மீது வீசி எறிந்து
இருவரையும் ஒரே நேரத்தில் அழித்தவன், ஆயர்குல மக்களுக்கும், பசுக்கூட்டங்களுக்கும் பெருமழையால்
வந்த ஆபத்தினை தடுத்து மலையை குடை போல் பிடித்துக் காத்தவன். பூமிபிராட்டிக்கு
இனியவன். குன்றின் குளர்ச்சியான மல்லிகை, முல்லை சரத்தை அணைந்து இளந்தென்றலானது வீசும்
திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.
துர்புத்தி கொண்ட கம்சனால் ஏவப்பட்ட
இரு அசுரர்கள் கன்றாகவும்,
விளாமரமாகவும் உருக்கொண்டு கண்ணனைக் கொல்ல வந்தார்கள். அவர்களை அழித்து
வெற்றி கொண்டான் கண்ணன். அதுபோன்று இந்திரனின் கோபத்தால் பெருமழைப் பொழிவை தடுத்து
ஆயர்குல மக்களையும் பசுக்கூட்டங்களையும் மலையால் தாங்கிப் பிடித்து காத்தான். இத்தகைய சேஷ்டிதங்களால் அசுரர்களை அழித்து
பூமிதேவியின் பாரத்தைக் குறைத்தவன். அத்தகைய பெருமான் திருக்கோட்டியூரில் வாசம்
செய்கிறான் என்பது இதன் பொருளாகும்.
மலர்ந்துள்ள குருந்த மரத்தை
முறித்துத் தள்ளியவன், குவலயாபீடம்
என்னும் யானையினைச் சீறி முடித்தவன், குதிரை வடிவில் வந்த கேசிகாசுரனைக் கொன்றவன், அடியேனையும்
ஆட்கொண்டு உள்ளம் மகிழ்ந்து என்னுள் புகுந்தவன், தேவர்களின் தலைவன், மா, பலா, வாழைக்கனிகள்
எல்லாம் விழுந்து கிடக்கின்ற குளிர்ச்சியான நீர் நிலைகள் சூழ்ந்த
திருக்கோட்டியூரில் பெருமான் கோயில் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.
கண்ணபிரான் விரும்பி ஏறும்,
மலர்கள் நிறைந்த குருந்த மரமாக மாறி தன் மீது ஏறும்போது கிளை ஒடிந்து கண்ணனை கொல்ல
வேண்டும் என்று நினைத்தவனை அம்மரக்கிளைகளை பிடித்து சுற்றி அசுரனை அழித்தவனை,
குதிரை வடிவெடுத்த கேசியை அதன் காலை பிடித்து சுழற்றி அடித்துக் கொன்றவனை நான்
நாடினேன். சம்சாரத்தில் உழன்று கொண்டிருந்த என்னுள் புகுந்தான். தேவாதி தேவனான அவனை
அடைய தடையாகவுள்ள அறியாமையை அகற்ற பெருமானின் பெருமைகள் என்ற குளிர்ந்த நீரை
பாய்ச்சுகிறார் ஆழ்வார். அதன் முயற்சியில் இப்பாசுரம் உருவானது.
இனிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடுபவர்களும், குடக்கூத்து
ஆடுபவர்களும், நாபிக்கமலத்தின்
மீது வீற்றிருக்கும் பிரம்மாவை விட ஒளி பொருந்திய புரிநூல் அணிந்துள்ள வேதியர்களும், நான்கு
மறைகளைக் கற்றவர்களும்,
ஐவகை யாகங்களைக் கற்றவர்களும், ஆறு வேதாங்கங்களைப் பயில்வதிலும் வல்லவர்கள் வணங்கும்
தேவாதி தேவன் திருக்கோட்டியூரில் வாசம் செய்கிறார்.
இப்பாசுரத்தில்
திருக்கோட்டியூரிலுள்ள வைணவர்களின் பெருமைகளை நன்குணர்த்தியுள்ளார். பாகவதர்களின்
வைபவங்களை கொண்டாடி மகிழ்கின்றார். ஆழ்வார் பாடிய கோவையான இத்தமிழைப் பகவத் குணங்களில் ஈடுபடும் அடியார்கள் பாடி
பெருமானின் அருளைப் பெறுகிறார்கள். மனிதர்கள் தமஸ், ரஜஸ், சத்வம் போன்ற மூன்று குணங்களைக்
கொண்டவர்களாகும். முதலிரண்டு குணங்களைக் கொண்டவர்கள் பகவானுக்கு வெகு தொலைவில்
இருப்பார்கள். சத்வ குணம் கொண்டவர்கள்தான் மேலே சொன்ன வல்லமையைக்
கொண்டிருப்பார்கள் என்பது இதன் கருத்தாகும்.
ஆடல்மா என்ற சிறந்த குதிரையைச்
செலுத்துவதில் வல்லவரும்,
திருமங்கையின் தலைவருமான கலியன் அழகிய தோட்டங்களும், மீன்கள்
துள்ளிப் பாயும் வயல்களும் கொண்ட திருக்கோட்டியூரில் குடிகொண்டிருக்கும் சௌமிய
நாராயணனை, நீலமேக
வண்ணனை, விஸ்வரூபியைக்
குறித்துப் பாடிய இப்பத்துப் பாசுரங்களையும் பக்தியுடன் பாட வல்லார்க்கு வைகுண்டமே
வாசஸ்தலமாகும் என்பது இதன் பொருளாகும்.
இப்பாசுரங்களை ஓதுபவர்கள்
தாங்கள் எங்கு வசிக்கிறார்களோ அதுவே பரமபதமாகும் என்ற கருத்தும் உள்ளது.
எம்பெருமானது திருக்குணங்களை மனத்தினால் நினைக்க அத்தகையதொரு அனுபவம் உள்ளடங்காமல்
பாடல்களாக வெளிப்படுத்தினை என்று கொள்ளத் தக்கதாகும். ‘ஓராயிரத்துளிப்பத்தும்
உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூரெல்லாம்’ என்று நம்மாழ்வாரும்
அருளியுள்ளார். எனவே இப்பத்துத்
திருமொழிகளை பக்தியுடன் கற்பவர்கள் வைகுந்த வாசம் பெறுவார்கள் என்பதாக அமைகிறது.
மிகப் பெரிய குவலயாபீடம் என்ற
யானையைப் பார்த்தவர்களுக்கு நடுக்கம் தர, அந்த யானை அஞ்சிக் கலங்குமாறு ஒரு தந்தத்தைப் பிடுங்கி
வீசியவனை, விசித்ரமான
நடையை உடையவனையும்
அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவனையும், மலர் வனங்கள் நிரம்பப்பெற்ற
திருக்கோட்டியூரில் தரிசனம் செய்து நாளைத் திருநாவாயில் சென்று வணங்குவோம் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
கண்டாரை நடுக்கம் கொள்ளக்கூடிய
வல்லமை மிகுந்த யானை கம்சனால் ஏவி விடப்பட்டு, கண்ணனை அழிப்பதற்கு வந்தது. அத்தகைய
யானையின் தந்தத்தை முறித்து மக்களை காத்தவன். அபயக்குரல் எழுப்பிய ஆயர்களை
நொடிப்பொழிதில் வந்து காத்தருளினான். எக்காலத்திலும் நம்மை கைவிடமாட்டான்.
அத்தகையப் பெருமானை திருக்கோடியூரில் இன்று கண்டேன். நாளை திருநாவாயில் காண்பேன்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
நீலமணி போல் அழகுடன்
விளங்குபவனும், வள்ளலானதால்
நீண்ட திருக்கைகளை உடையவனுமான எம்பெருமான் பள்ளிகொண்ட இடம் திருவரங்கம்.
குடியிருக்கும் தலம் திருக்கோஷ்டியூர்.
மேலும் பல நாட்களாக நித்திய வாசம்
செய்யும் இடம் திருமலை. பலநாள் பயின்றது அழகு மிக்க சோலைகள் சூழ்ந்த
திருநீர்மலையாகும்.
பாகவதர்கள் இதர போகங்களில் லாப
நஷ்டங்களில் மனம் செலுத்துகிறார்கள்.
இவ்வுலகச் செல்வங்களைப் பெறுவதாலும், இழப்பதாலும் பல துன்பங்களை அடைந்து வருகிறபடியால்
எம்பெருமான் பல திவ்ய தேசங்களில் கோயில் கொண்டு அருள்புரிகிறார். இத்தலங்களில்
பெருமான் பிரசாதமாகவும்,
தீர்த்தமாகவும் தன்னை ஆட்படுத்திக் கொண்டுள்ளார். தன்னைக் கொள்வாருண்டோ
என்று நெடுங்காலம் படுத்துக் காத்துக்கிடப்பது திருவரங்கத்தில், விபவம் போல்
வாழ்ந்து மறைந்தது திருக்கோட்டியூரில், சேதனனை வசீகரிக்க நெடுங்காலமாய் தன் அழகை காட்டுவது
திருமலையில், அதனிலும்
திருப்தி கொள்ளாமல் தனது நிலையழகையும், இடையழகையும், இருப்பழகையும், நடையழகையும் ஒருமித்தே காட்டுவது திருநீர்மலையிலாகும்.
விசாலமான நெடிதுயர்ந்த இப்பூமியை
அங்கங்கே வியாபித்து அளந்து கொண்ட திருப்பாதத்தை இன்றுதான் அறிந்து கைதொழுதேன்
என்பதல்ல. முன்பு திருக்கோட்டியூர் பகவானுடைய அழகு லாவண்த்தை நான் கர்ப்ப
ஸ்தானத்தில் குடியிருந்தபோதே அறிந்து அவரது தரிசனம் பெற்று, அனுபவித்து கை
தொழுதேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாடலில் எம்பெருமானிடம்
தனக்குண்டான வைலக்ஷணத்தைக் குறிப்பிடுகிறார். நான் கர்ப்பத்தில் இருந்த
காலத்திலிருந்து எம்பெருமான் ஸ்வருப ரூபகுண விபூதிகளையெல்லாம் எனக்குக் காட்டி
அருளினார். சுத்த சாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணத்தினை நான் அறிந்து
கொண்டேன். அனைவரும் கர்பவாஸ காலத்தில் பெருமானை மறந்துள்ள நிலையில் அடியேன் அவனை
மறவாது வாழ்த்திக் கொண்டிருந்தேன். எனவே நான் பெருமானை நெடுநாட்கள் அறிந்தவன்.
ஆழ்வார் மற்றவர் போல் கர்ப்பத்தில் பிறக்கவில்லை. எனினும் அவர் தோன்றி அவதரித்த இடமே
கர்பவாஸமாகும் என்பது இதன் கருத்தாகும்.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
திருவிண்ணகரமும், திருவெஃகாவும், நீர்வளம் மிக்க திருமலையும், பூமியிலுண்டான வைகுந்த மாநகர் போன்ற பெரிய மாடங்களை உடைய திருவேளுக்கையும், அழகிய திருக்குடந்தையும், தேன் பாயும் சோலைகளையுடைய திருவரங்க மாநகரும், திருக்கோஷ்டியூரும், தனது உள்ளங்கையாலே (மாவலியிடம்) நீர் ஏற்ற பெருமான் தங்கும் இடங்களாகும். போகும் போது எத்தகைய எளிமையும் சௌசீல்யமும் கொண்டவனாகத் தோன்றினானோ அது போல் இத்திருப்பதிகளில் எளிமையாகக் காட்சி தருகிறான். இத்திருத்தலங்கள் அனைத்தும் மூர்த்தி சிறப்பு பெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன. பிரம்மனின் துயர் துடைக்க திருவரங்கம் திவ்யதேசத்தில் பாம்பணையில் மேல் பள்ளிகொண்டு நம்மையெல்லாம் காத்து வருகின்றார். சிறப்பு மிக்க இத்தகைய தலங்களுக்குச் சென்று மிகவும் எளிதாக வரங்களைப் பெற முடியும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக