நம்மாழ்வார் திருவாய் மொழி
உண்ணும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே. 3517
உண்டு பசி தீர்க்கும்படியான
சோறும், தாகம்
தீர்ப்பதற்கான பருகும் நீரும், தின்று களிக்க வேண்டிய வெற்றிலையும் எல்லாம் எனக்கு கண்ணன்
எம்பெருமானே என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடி, கண்களில் நீர் பெருக, சிறப்புமிக்க
அவன் குணங்களையும் அவன் இருக்கும் ஊரையும் விசாரித்துக் கொண்டு இளமான் போன்ற என்
மகள் புறப்பட்டுவிட்டாள். இப்பூமியில் வளமிக்க ஊரான திருக்கோளூரை அவள் அடைவது
உறுதி என்று திருத்தாயார் கூறுகிறாள்.
ஆழ்வார் இப்பாசுரத்தில்
பசித்தவனுக்கான சோறு என்பதை உண்ணும் சோறு என்ற கூறுகிறார். நிறைந்த தாகம்
கொண்டவனுக்கு கிடைக்கும் நீர் எவ்வளவு தேவையோ அது போன்று பருகுநீர் என்று
குறிப்பிடுகிறார். மனிதனுக்கு அவ்வப்போது மகிழ்வும் தேவைப்படுவதால் அந்நேரத்தில்
போடும் வெற்றிலையானது மிகவும் மகிழ்ச்சி தரவல்லது என்பதை ஆழ்வார் இவ்வாறு
குறிப்பிடுகிறார். தனது கண்ணில் நீர்மல்கி அவனை நினைத்து உருகுவதே ஆழ்வாருக்கு
இயல்பாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்
அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே
போரும் கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே?. 3518
நாகணவாய் பறவைகளே! ஊரிலும்
நாட்டிலும், உலகத்தில்
வாழ்பவர்கள் தன்னை போலவே அவனுடைய திருநாமங்களையும், பாமாலைகளையும் பிதற்றிக்கொண்டு
சொல்லும்படி செய்துவிட்டாள். நல்ல வளமான கழனிகள் சூழ்ந்த திருக்கோளூருக்கு
அறிவிழந்த இவள் போய் இருப்பாளோ? மகளைத் தனியே
போகவிட்டுப் புலம்பும் கொடியவளாக நான் ஆகிவிட்டேன். என் கொடி போன்ற புதல்வியின்
நிலை என்னவாகும் என்று சொல்லுங்கள் என்று திருத்தாயார் வருந்திக் கூறுகிறாள்.
பராங்குச நாயகியின்
லீலோபகரணங்களுள் ஒன்றான பூவை என்னும் பறவைகளை நோக்கித் திருத்தாயார் பாடுகிறாள்.
என் மகள் என்னில் பாசமற்று இருந்த போதிலும் உங்களை நினைத்தாவது இங்கு வரக்கூடுமோ என்று
சொல்லுங்கள் என்கிறாள். இவ்வூரில் உள்ளவர்கள் அனைவரும் பெருமானின் திருநாமங்களை
நாளும் சொல்லிவர வேண்டும் என்று தலைவி கூறிக்கொண்டுள்ளாள். ஆனால் அவள்
திருக்கோளூரை நோக்கிச் சென்றுள்ளாள். அவள் திரும்பி வருவாளோ? என்று கேட்கிறாள்.
பெருமானை இங்கேயே நினைத்துக் கொண்டிருக்கலாமே அங்கு செல்ல வேண்டுமோ? என்று
கேட்கிறாள்.
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்
புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ? 3519
மலர் போன்ற மென்மையான என்
புதல்வி பச்சைக்கிளிகள்,
பந்து, சிறு
மரப்பானை, பூக்கூடை
போன்ற விளையாட்டுப் பொருட்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, திருமால்
திருநாமங்களைச் சொல்லிக் கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளாள். குளிர்ச்சியான வயல்கள்
சூழ்ந்த திருக்கோளூரை என் பாவை அடைவாளா? அங்கு போனதும் கொவ்வைக்கனி போன்ற வாய் துடிக்க, மழை போல்
கண்ணில் நீர் பெருக என்ன செய்யப் போகிறாளோ? என்று தாயார் வருந்துகிறாள்.
பூவைப் பைங்கிளிகள் அனைத்தும்
எம்பெருமானைக் கூவி எழும்படி செய்தவள் என்று பொருள் கொண்டாலும், மலரும், பைங்கிளிகளையும்
கண்டால் வரும் லீலாரசமும் பெருமானைக் காணும் போது அதிகரித்து வருகிறது. இங்கிருந்து
பெருமாள் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டு திருக்கோளூர் போனாளோ? என்று தாயார்
கேட்கிறாள். இங்கு என்ன குறை கண்டாள்? அங்கு போகத்தான் வேண்டுமோ? என்ன நினைத்துப்
போனாளோ? நான் அறியேன். போன இடத்திலாவது இவள் குறையொன்றும் இல்லாமல் இருத்தல்
வேண்டும். வாய் புலம்பி,
கண்ணீர் மல்க இப்போது என்ன பாட்டுப் பாடுகிறாளோ என்று கேட்கிறாள்.
கொல்லை என்பர்கொலோ குணம் மிக்கனள்
என்பர்கொலோ
சில்லை வாய்ப் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும்? எல்லே
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மேல் இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே. 3520
தோழியே! செல்வச் செழிப்புடைய
பெருமாள் சயனித்திருக்கும் திருக்கோளூருக்கு, இளமான் போன்ற என் மகள் தன் மெல்லிய இடை அசைய
புறப்பட்டுவிட்டாள். இதைக் கண்டு வம்பு பேசும் வாயையுடைய மங்கையரும், அடுத்த ஊரில்
உள்ளவர்களும் இவை வரம்பு மீறிய செயல் என்று கூறுவார்களோ? காதலித்தவனேயே
தேடி வந்ததற்காகக் குணம் மிகுந்தவள் என்று போற்றுவார்களோ? என்று கேட்கிறாள்
திருத்தாயார்.
என் மகளின் நடவடிக்கைகளைப்
பார்த்து அயலார் நகைப்பார்களோ அன்றி வெறுப்பார்களோ என்று வருந்துகிறாள்
திருத்தாயார். இவ்வாறு படி கடந்து செல்லும் பெண் என்ன பெண் என்று கேட்பார்களோ?
என்று அஞ்சுகிறாள். இவள் வாசலைக் கடந்தவுடன் இவளின் மேல் கொண்ட மரியாதை
அகன்றுவிட்டது. வரம்பழிந்த செயல் செய்தாள். இவள் குணமுள்ளவளாக இருப்பதால் அத்தகைய
தவறு செய்ய மாட்டாள் என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள். பெண்களின் வாய்
வெறுமனே இராது. ஓயாமல் வம்பளப்பதே அவர்களின் பணியாக இருக்கும். இதனை நான் எவ்வாறு
சமாளிப்பேன் என்று கேட்கிறாள்.
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே? 3521
திருக்கோளூர் வைத்தமாநிதிப்
பெருமானின் பெருமைகளில் நெஞ்சை வைத்து நைந்து, உருக்குலைந்து என்
செல்வி விளையாடவும் மறுக்கிறாள். அப்படியான மகாலட்சுமி போன்ற என் மகள், மலர்கள்
மலர்ந்துள்ள நந்தவனங்களையும், தடாகங்களையும், அவளது திருமாலின் கோயிலையும் திருக்கோளூரில் கண்டு
உள்ளிருக்கும் உயிர் குளிரும்படி இன்று எப்படியெல்லாம் மகிழ்ச்சி கொள்ளப் போகிறாளோ
என்று கேட்கும்படி அமைந்துள்ளது.
திருக்கோளூருக்கு நடந்து சென்ற
என் மகள் அங்கு அழகுமிக்க சோலைகளையும், பொய்கைகளையும், அவன் கோவில் கொண்ட இடத்தையும் ஆச்சரியமாகப் பார்ப்பாள்.
அதனை நான் காண முடியாமல் போனேனே! என்று கேட்கிறாள். இவள் விளையாடும் போதும்
பெருமானையே நினைத்து உருகுவாள். அப்போதும் எம்பெருமானையே அனுபவிக்க வேண்டும் என்று
நைந்து கிடப்பாள். இளமையில் தொடங்கி பகவத் விஷயத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறாள். மாட மாளிகையும், அழகு சோலைகளும், பொய்கைகளும் கண்டு அனுபவிக்கும் என் மகளை நான் காணக்
கொடுத்து வைக்காமல் போனேனே! என்று வருந்துகிறாள்.
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான்
இனிப் போய்
தென் திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே. 3522
இளமான் போன்ற வடிவுடைய என் மகள்
இந்நாட்களில் எனக்கு உதவாமல் விட்டுவிட்டுப் போய்விட்டாள். தென் திசைக்கு
நெற்றியணியாக உள்ள திருக்கோளூர் சென்று, தன் திருமாலின் திருக்கண்களையும், சிவந்த
அதரத்தையும் கண்டு நீண்ட விழிகளில் நீர் நிரம்ப, எத்தனை தரிசித்தாலும் திருப்தியடையாமல்
நின்று நின்று நைந்து போகிறாள் என்ற வகையில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
என்னோடு கூட இருந்து எனக்குத்
துணையாக இருந்து காக்க வேண்டிய என் பெண் என்னை விட்டுத் தனியாகச் சென்று விட்டாளே?
என்னையும் உடன் கூட்டிச் சென்றால் நான் மறுப்பேனா? அவளை பகவத் விஷயத்தில் ஈடுபடச்
சொன்னதே நான் தானே? அவ்விதம் இருக்கையில் என்னை ஏன் கூட்டிச் செல்லாமல் சென்றாள்!
என்னைத் தாயாக நினையாமல் அயலாராக நினைத்தாளே! என்று கூறி வருந்துகிறாள். ‘தன்
திருமால் திருக்கண்ணும்,
செவ்வாயும் கண்டு நெடுங்கண்கள் பனிமல்கவே நின்று நின்று நையும்’ என்று
கூறுமாப்போலே ஆகிவிட்டதே என்று ஏங்கித் தவிக்கிறாள் திருத்தாயார்.
மல்கு நீர்க் கண்ணொடு மையல் உற்ற
மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனிப் போய்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே. 3523
கண்ணீர் நிறைந்த கண்களோடு, மயக்கம் கொண்ட
நெஞ்சினைக் கொண்டவள் இரவும், பகலும் ‘உலகை அளந்த நெடியவனே’ என்றழைத்தபடி நடந்து போய்ச்
செல்வம் மிகுந்த ‘வைத்தமாநிதிப் பெருமாள்’ பள்ளி கொண்டிருக்கும் திருக்கோளூருக்கு
வருந்தி, தளர்ந்து
செல்கிறாள். இப்படி நடப்பவள் எப்பொழுது அந்த ஊர் போய் சேர்வாள்? என்று கேட்கிறாள்
தாயார்.
என் மகளானவள் திருக்கோளூர்
பெருமானின் திருகண்ணும்,
செவ்வாயும் கண்டு கண்ணீர் பெருகி நிற்கிறாள். அவள் அங்கு சென்று
சேர்ந்தாளா? அத்துணை தொலைவு உள்ள இடத்தில் எப்படி போய்ச் சேர்ந்தாள்? என்று
கவலையுறுகிறாள். அங்கு செல்ல வேண்டுமெனில் கண் பார்வை நன்கு இருக்க வேண்டும். மனம்
தெளிவுற்று இருக்க வேண்டும். இவை இரண்டும்
நன்கில்லையே! எவ்விதம் போய் சேர்ந்திருப்பாள்? பெருமானின் திருவழகை திருக்கோளூர்
சென்று காணலாம் என்று சென்றிருப்பாளோ
என்று கேட்கிறாள் தாயார்.
ஒசிந்த நுண் இடைமேல் கையை வைத்து
நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை
நீத்த எம் காரிகையே.
3524
துவளுகின்ற மெலிதான இடையின் மேல்
கையை வைத்து நடக்க மாட்டாமல் நொந்து நொந்து உருகும் உள்ளத்தினளாய்க் கண்ணீர்
தளும்பச் செல்கிறாளே! கொடி போன்ற துவண்டிருக்கும் இலக்குமியின் கணவன்
குடியிருக்கும் திருக்கோளூருக்குக் கசிந்த மனத்தோடு என் பெண் என்னைத் துறந்து
போய்விட்டாள் என்று வருந்திக் கூறுகிறாள்.
என் மகள் எம்பெருமானை நோக்கிச்
சென்றாளோ? அவனோ பெரிய பிராட்டிக்குப் பக்கலில் இருத்தலால் அறியாமல் போனானோ? என்
மகளை லக்ஷ்யம் செய்யாமல் உள்ளானே! நான் என் செய்வேன்? என்று என் மகள்
துன்புறுகிறாள். ஆனால் பெரிய பிராட்டியின் புருஷகார பலத்தால் நமக்கு ஒன்றும்
இன்னல் வராது என்று நினைக்க மாட்டாமல் இருக்கிறாளே! என்று தாய் நினைக்கிறாள்.
ஆனால் மகளோ, அவ்விருவருமான
சேர்த்தியழகை சேவிப்போமென்று திருக்கோளூர் செல்லப் புறப்பட்டாள். அத்தனை தூரம்
வழிநடந்து செல்வாளோ என்று ஐயமுறுகிறாள் தாயார்.
காரியம் நல்லனகள் அவை காணில் என்
கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனிப் போய்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே. 3525
என் மகளானவள் சிறந்ததானப்
பொருட்களைக் கண்டால் ‘என் கண்ணனுக்கு உகந்தது’ என்று அன்புடன் சொல்லுவாள். இது
இப்படி இருக்க, ஊரிலுள்ளவர்கள்
பலவிதமாகப் பழி சொல்லித் தூற்றிப் பேசும்படி திருக்கோளூருக்கு நடந்தாள். என் நிலை
பற்றி சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை! என்று கூறுகிறாள் திருத்தாயார்.
திருக்கோளூர் எம்பெருமான்
பக்கலில் ப்ராவண்யமே வடிவெடுத்த இப்பெண்பிள்ளை ஊராருடைய பழிச்சொற்களுக்கு
அஞ்சாமலும், அதனை ஒரு பொருட்டாக மதியாமலும் சென்றாளே என்கிறாள் திருத்தாயார். இவள்
தனக்கு உகந்த ஒரு பொருள் கண்டால் இது பெருமானுக்கு பிடிக்குமே, இது என்
கண்ணனுக்கு ஏற்றதாக இருக்குமே என்று ஆவலுடன் கூறுகிறாள். அவ்விதம் சொல்லும் போது
அவள் நெஞ்சம் நெகிழ்ந்து போகும். இராம காவியத்தில் ஸ்ரீராமன் சீதாபிராட்டியை
காணாமல் தேடிச் செல்லும் வழியில் பழமோ, பூவோ எதைக் கண்டாலும் இது பிராட்டிக்குப் பிடிக்குமே, இதை அவள்
விரும்புவாளே என்று கூறியவாறு செல்வானாம். அது போல் உள்ளது எனது மகளின் செய்கை
என்று கூறுகிறாள் திருத்தாயார்.
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும்
கண் இளமான் இனிப் போய்
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனை
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே. 3526
தெய்வங்களே! இந்தமாதிரியெல்லாம்
நடக்குமென்று நினைத்துக்கூட பாரக்கவில்லை. இளமான் போன்று கூரிய விழிகளையுடைய என்
மகள் இனித் திருக்கோளூருக்கே போய் அனைத்து உலகங்களுக்கும் அதிபதியான அந்த
அரவிந்தலோசனனை சிறு பொழுதும் விடாமல் சேர்ந்திருக்கத் தீர்மானித்து விட்டாள்.
இதனால் எம் குலத்திற்கு ஏற்படும் பெரும் பழியைக் கொஞ்சம்கூட நினைத்துப்
பார்க்கவில்லை. நான் அவளைத் தேடிச் செல்லும்படி செய்துவிட்டாளே என்று கூறுகிறாள்.
திருத்தாயார், தன் மகள் பல
காலம் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள் என்றும், திருக்கோளூர்
சென்று பெருமானை சேவித்து விட்டு வருவதை விட்டு அங்கேயே தங்கி விட்டாளே!
வைத்தமாநிதிப் பெருமானை ஒரு கணமும் பிரியேன் என்று சொல்லிவிட்டுச் சென்றாளே! அவள்
திரும்பி வருவாளா என்று கேட்கிறாள். இதனால் எம் குடிக்குப் பெரும் பழியை
சேர்த்துவிட்டுச் சென்றாளே! என்று கேட்கிறாள். இவை அனைத்தையும் ஆகாயத்தைப்
பார்த்து அனைத்துத் தெய்வங்களையும் கேட்கிறாள். மக்களன்றி தேவதைகளும் பழி
சொல்வார்களே என்று அஞ்சிக் கேட்கிறாள்.
வைத்த மா நிதியாம் மதுசூதனையே
அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே. 3527
வைத்தமாநிதிப் பெருமாளனாய் அருள்
புரியும் மதுசூதனனை போற்றி,
கொத்தாக மலர்கள் மலரும் நந்தவனங்கள் சூழ்ந்த திருக்குருகூரில் தோன்றிய
சடகோபர் அருளிச் செய்த ஆயிரம் பாசுரங்களுள் திருக்கோளூர் பெருமானைப் பற்றிய இந்த
பத்துப் பாடல்களை சிந்தையில் பதித்துக் கொண்டு படிக்க வல்லவர்கள் உயர்ந்த
வைகுண்டத்தை அடைவார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
திருக்கோளூர் பெருமானுக்கு
வைத்தமாநிதி என்னும் திருநாமம். புதைத்து வைக்கப்படும் நிதி என்பதாகும். தைத்ரீய
உபநிடதத்தில் பெருமாள் நிதியாகக் காணப்படுகிறார். நிதியானது நம்மிடம் இருந்தால்
நம் உறக்கம் சென்று விடும். யாரேனும் கொள்ளை கொள்வார்கள் என்று அஞ்சுவோம். அது
போல் எம்பெருமானைக் காண்பதற்கு முன்பும் உறங்குவதில்லை. கண்ட பின்பும்
உறங்குவதில்லை. அத்தகைய அழகு மிக்க பெருமானைப் பற்றி பாடிய இப்பாசுரங்களை மனதில்
பதித்து படிக்க வல்லவர்கள் வைகுண்டத்தை அடைவார்கள் என்று கூறுகிறார்.
கொடியார் மாடக் கோளூர் அகத்தும்
புளியங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. 3697

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக