புதன், 12 நவம்பர், 2025

91. திருமாலிருஞ்சோலை


பெரியாழ்வார்                                                                                 பெரியாழ்வார் திருமொழி 

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி உன்னொடு தங்கள்                                                                                                                       கருத்து ஆயின செய்து வரும்
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு                                                                                                                                                                         அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே                                                                                                                                     கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக                                                                                                                                                        ஆடுகவே!    71 

      உன்னை தனது இடுப்பில் அன்புடன் சுமந்து செல்லும் கோபியர்கள், உன்னைத் விரும்பியவாறு ஆட்டுவித்து மகிழ்கிறார்கள். அவர்கள் மனம் மகிழுமாறும், அதனைக் கண்ணாரக் கண்டு கண்கள் குளிரவும், பாசுரங்கள் எழுதும் கவித்துவம் பெற்ற பண்டிதர்கள் கவிதையாக பொழியவும், என் ஞானக் கண்ணால் கண்டு மகிழவும், நீ செங்கீரை ஆட வேண்டும். திருக்குறுங்குடியில் உறைபவனே! திருவெள்ளறையில் அருள் புரிபவனே! திருக்கண்ணபுரத்து அமுதமே! ஏழு உலகங்களையும் ஆட்கொள்பவனே! என் அவலத்தைப் போக்க செங்கீரை ஆடுக...’’ என்கிறார் ஆழ்வார்.
      பகவானின் செங்கீரை ஆடல் என்பது உலகத்தவரின் அவல நிலைகளையெல்லாம் மாற்றக்கூடியது. உலகத்தில் அழியக்கூடிய பொருட்களின் மீது பற்று கொள்வது அவலநிலையாகும். பகவான் ஒருவனே நமக்கு நிலையான துணை என்று கொள்வது அவலநிலையைப் போக்குவதாகும். இத்தகைய நிலையை மக்கள் பெறவேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும். 

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச் சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு                                                                                                                                                                  அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில்                                                                                                                                                     கோழம்பமே.    258 

      இடையத் தோழர்கள் கண்ணன் மீது வெய்யில் படாதிருக்க மயில் பீலிக் குடையைப் பிடிக்கின்றனர். அது கண்ணனின் கண்கள் மீது சுருண்ட முடிகளை அலங்கரிக்கின்றன. ஆடலும் பாடலும் கொண்டு வரும் கண்ணனை நான் காண்கிறேன். மாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் இவனல்லாது வேறு எவருக்கும் வாழ்க்கைப்பட மாட்டேன். இனி வேறு ஒருவருக்கும்  என்னை மணமுடிக்க நான் சம்மதியேன். கண்ணனுக்கு உரியவள் என்று என்னைக் கொடுத்துவிடுங்கள். அன்றில் குழப்பம் கொள்வீர் என்கிறாள் ஒரு கோபிகை.
      ‘மானிடர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்று உறுதியுடன் நின்ற ஆண்டாளைப் போன்ற ஆய்ச்சி இவள். திருமாலிருஞ்சோலையில் பெருமானே! என்னை தனக்கு உரியதாக்கிக் கொண்ட கண்ணபிரானைத் தவிர்த்து வேறொரு சப்பாணிப்பயலுக்கு என்னை உரிமைபடுத்தாதீர்கள்! என்கிறாள். அவ்விதம் நடந்தேறினால் தாங்கள் அதிக குழப்பம் கொள்வீர்! என்கிறாள். அவளது கருத்தின் நுட்பமான பொருளானது உலக உயிர்கள் அனைத்தும் கண்ணனுக்கு சொந்தமானது என்றும் இதனை மறவாமல் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே ஆகும். 

அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்துக் குலவிளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே.      338 

      உலகத்து உயிர்களை நிம்மதியுடன் வாழ முடியதபடி அரக்கர்கள் அவர்களைத் துன்புறுத்திக் கொன்று குவித்து வந்தார்கள்.  அந்த அரக்க குலத்தோடு, அழியும்படியாக சூரிய குலத்தில் தோன்றியவர் ஸ்ரீராமபிரான். அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் மலை சிலம்பு ஒலிக்க தேவ மங்கையர் நீராடும் திருமாலிருஞ்சோலையாகும் என்ற பொருளில் அமைகிறது.
      அரக்கர்களின் கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்தார்கள். தேவகன்னியர்கள் நூபுர கங்கையில் வந்து நீராடும் போது இராவணனின் அரக்கர்கள் மங்கையர்களைத் துன்புறுத்தினார்களகள். அவர்களுக்கு அஞ்சி வேறிடம் சென்று வாழ்ந்தார்கள். இத்தகைய அரக்கர்களை ஸ்ரீராமன் வென்று அழித்த பிறகு மங்கையர்கள் நிம்மதி அடைந்தார்கள்.  உலகளந்த பெருமான் சத்தியலோகத்தில் இருந்த போது பிரமன் அவரது காலினைக் கழுவினான். அக்கால் சிலம்பிலிருந்து தோன்றியது சிலம்பாறு. இதுவே நூபுரகங்கையாக வலம் வருகின்றது. 

வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே.      339 

      சந்திரஹாசம் என்ற வாளையுடைய பராக்கிரமம் மிக்க இராவணனின் பத்துத் தலைகளையும், இருபது கைகளையும் அழித்தான் இராமன். அவன் இராவணன் தங்கையான சூர்ப்பனகையின் மூக்கையும் அறுத்தவன். அத்தகைய பிரான் எப்போதும் குடிகொண்டிருக்கும் மலை, எல்லா இடத்திலும்  எங்கும் பரந்து விரிந்து  இருக்கும் மலையாகத் திகழ்கின்றது.
      வலிய ஆண்மையுடையவன், ருத்திரனால் பெறப்பட்ட வாளையுடையவன், ஒருவராலும் வெற்றி கொள்ள முடியாதவன், வலிய தோள்களை உடையவனுமான இராவணனை வதம் கொண்டவன் ஸ்ரீராமன். இலங்கை வேந்தனின் தங்கையின் மூக்கை அறுத்தவன். அத்தகைய பரம்பொருள் உறையுமிடம் மாலிருஞ்சோலையாகும். இப்பெருமான் நமது அகம் மற்றும் புறத்திலுள்ள பகைவர்களை அழித்து நம்மையெல்லாம் காத்து வருபவன் திருமலையில் வாசம் செய்கிறான். 

தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரைத்
தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை
எக் காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண்திருமாலிருஞ் சோலையே.      340 

      எப்போதும் எம்பெருமானின் திருவடிகளைத் தொழுதுவரும் பக்தர்களைப் பாவம் என்கின்ற காட்டுவழியிலிருந்து காப்பாற்றுவது திருமாலிருஞ்சோலையாகும்.  எம்பெருமானோடு சேர்ந்தவர்களும், அவருக்கு சேவை புரியும் கருணை உள்ளவர்களுமான பாகவதர்களைத் துன்புறுத்தும் தீயவர்களை நரகத்திற்கு அனுப்பும் தென்திசை கோமான் ஸ்ரீராமன் எழுந்தருளியிருக்கும் இடம் மாலிருஞ்சோலையாகும்.
      எம்பெருமானுக்குத் தகுதியானவர்கள் அதாவது, எல்லா ஆத்மாக்களும் உய்வு பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் என்பது பொருள். எம்பெருமான் மனிதர்கள் செய்யும் குற்றங்களைப் பொறுக்க மாட்டாமல் அவர்களை ஒதுக்கிவிட்டாலும் அத்தகையவர்களையும் அரவணைத்து அவர்களின் குற்றங்களை மன்னிக்கும் திறம் கொண்ட பாகவதர்களை அசுரர்கள் இம்சிக்கும் போது மாலிருஞ்சோலை பெருமான் வந்து காப்பான் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். அவனது திருவடிகளை விடாப் பிடியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும். 

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வான் நாட்டினின்று மாமலர்க் கற்பகத் தொத்து இழி
தேன் ஆறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே.      342 

      சுவர்க்கத்தில் உள்ள கற்பகவிரக்ஷத்தில் அழகிய மாமலரில் உள்ள தேனானது ஆறாக ஓடி நிற்கும் இடம் மாலிருஞ்சோலையாகும். ஆயர்கள் ஒன்றுகூடி இந்திரனுக்காக ஏற்படுத்திய விழாவை அமரர் தலைவனான கிருஷ்ணன் இந்திரனுக்குத் தராமல் தடுத்து கோவர்த்தனகிரிக்கு இடும்படி செய்த பெருமான் சேவை சாதிக்கும் மலை திருமாலிருஞ்சோலையாகும்.
      இந்திரவிழா எடுப்பது தொடர்பாக ஆயர்களிடம் விவரம் கேட்டறிந்த கிருஷ்ணன் உங்களுக்கு வாழ்வளிப்பது பசுக்களும், கோவர்த்தன மலையுமாகும். எனவே இனி இந்திரனுக்கு விழா எடுப்பது தேவையில்லை என்று கூறினான். நான்கு வித்தைகளான தர்க்கம், வேதங்கள், பயிர் மற்றும் இராஜந்தி சாத்திரம் என்பதாகும். இவைகள் அளிக்கும் தெய்வங்களையே நாம் பூஜித்தல் என்பது சிறந்ததாகும் என்று கூறுகிறார். அத்தகையவன் உறையுமிடம் மாலிருஞ் சோலையாகும். 

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன்தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல்வண்ணன்
திருவாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே      342 

      பெரும் பொய்கையில் கஜேந்தினால் பூஜிக்கப்பட்டவனும், கம்சனின் யானையைக் கொன்றவனுமான கண்ணன் குடியிருக்கும் மலை திருமாலிருஞ்சோலையாகும். கரிய ஆண் யானையிடம், பெண் யானை ஊடல் கொண்டு விலகி ஓட, ஆண் யானை அழகர் ஸ்ரீபாதத்தின் மேல் ஆணையிட அதனால் பெண் யானை தன் துணையோடு சேரும் குளிர்ந்த இடம் மாலிருஞ்சோலையாகும்.
      கஜேந்திரனின் கைங்கர்யத்தை ஏற்றவனும், கம்சனின் குவலயாபீடம் என்ற யானையை முடித்தவனுமான கண்ணன் எழுந்தருளியுள்ள மலையாகும். இங்கு ஒரு யானையைக் காத்து ஒரு யானையைக் கொன்றான். ஒரு அசுரனைக் கொன்று ஒரு அசுரனைக் காத்தான். ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றான். ஒரு குரங்கைக் காத்து ஒரு குரங்கைக் கொன்றான். ஒரு பெண்ணைக் காத்து ஒரு பெண்ணைக் கொன்றான். ஒரு மாமனைக் காத்து ஒரு மாமனைக் கொன்றான், இத்தகைய பராக்கிரமசாலி மாலிருஞ்சோலையில் சேவை சாதிக்கின்றான்.  

ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரை
சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத் தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ் சோலையே     343 

      கம்சன் ஏவிய செயல்களைச் செய்து முடிக்க அவன் ஏவிய, சாணூரன் முதலிய மல்லர்களை அழித்தவன் கண்ணபிரான். கூனியிட்ட சாந்தை அவன் அணிந்து கொண்டுள்ள திடம் தோள்களையுடைய சமர்த்தனுமான கண்ணன் எழுந்தருளியிருக்கும் இடம் திருமாலிருஞ்சோலையாகும். பிரமன் முதலிய தேவர்களும், சனகன் முதலிய முனிவர்களும் பாதுகாப்பிற்குத் துணையான இடம் என்பது திருமாலிருஞ்சோலையாகும்.
      கண்ணனும், மூத்த பிரானும் கம்சன் மாளிகை வரும் போது கூனி சந்தனம் அணிவித்தாள். மனமகிழ்ந்த கண்ணன் அவளது கூனினை சரிசெய்தான். தனது திடந்தோள்களைக் கொண்டு மல்லர்களை வீழ்த்தினான். தேவர்களும் முனிவர்களும் தங்களுக்கு இடர் வரும்போது பெருமானிடம் முறையிடுவார்கள். இதுவே பாதுகாப்பான இடம் என்றறிந்து வாழ்வார்கள். இம்மலை நல்லோர்களுக்கு அரணாக அமைந்தது என்று ஆழ்வார் கூறுகிறார். இத்தலம் துன்பங்களைப் போக்கி அறியாமையை அகற்றும் இடமாக அமைந்துள்ளது என்று ஆழ்வார் கூறுகிறார்.     

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல்
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை
கொல் நவில் கூர்வேல் கோன் நெடுமாறன் தென்கூடல் கோன்
தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே     344 

      பகை அரசர்கள் கலங்கி நிற்கவும், பாண்டவர் பக்கமிருந்து அர்ச்சுனனுக்கு சாரதியாக நின்று போரில் தேர்க் குதிரைகளின் தாகம் தீர்க்க எண்ணினான். அருச்சுனன் ஏவிய வர்ணாஸ்திரத்தை பூமியில் பிரயோகித்து நீர் ஊற்று வரச்செய்து தாகம் தீர்த்த கண்ணன் வீற்றிருக்கும்  மலை திருமாலிருஞ்சோலையாகும். கூரிய வேலையுடைய நெடுமாறன் என்ற பாண்டிய அரசன் கொண்டாடும் மலையும் இதுவாகும்.
      குருதேசத்து அரசர்கள் கதிகலங்குமாறு மைத்துணராக, பாண்டவர்களுக்குத் துணையாக ஒரு தேரில் முன்புறத்தில் நின்று கொண்டு நீர்நரம்பில் விட்ட வர்ணாஸ்திரத்தில் கீழுண்டான நீரானது குமிழியுடன் வெளிக்கிளம்புமாறு செய்தவன் கண்ணன். கூர்வேல் கொண்டு ராஜநீதியை வழுவாது நடத்தியவனான மாறன் என்கின்ற பாண்டிய நாட்டுத் தலைவன் கொண்டாடப் பெற்ற இடம் நான்மாடக்கூடல் என்று சொல்லக்கூடிய திருமாலிருஞ்சோலையாகும்.   

குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச்
சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலைப் பாடும் தென் திருமாலிருஞ் சோலையே.   345 

      தன்னைச் சரணடையாத மன்னர்களின் இராஜ்ஜியத்தைப் பறித்து அவர்களைக் கொடிய காட்டிலே குறுகிய பாதைகளில் ஓடிப் போகச் செய்கின்ற அழகனின் மலை திருமாலிருஞ்சோலையாகும். பொழுது புலரும் நேரத்தில் ஆறுகால் வண்டுகள் பரந்தாமனது ஆயிரம் திருநாமங்களைச் சொல்லிப் பாடும் சிறப்பு மிகுந்த மலையும் இதுவேயாகும்.

      திருமாலை சரணடையாமல் அற்ப பொருட்களின் பின்னால் அலைந்து அதைப் பெறுவதற்கு தனது வாழ்நாளை வீணடிக்கும் மனிதர்களின் அறியாமையை ஆழ்வார் நன்கு குறிப்பிடுகிறார். இத்தகையவர்கள் அறியாமை என்னும் காட்டில் அலைந்து அவதியுறுகிறார்கள். பொருளுக்காக நாளும் உழைக்கும் மனிதர்கள் பரந்தாமனை ஒரு விநாடியும் நினைக்கத் தவறுகிறார்கள். இறைவனின் திருக்காட்சியைக் காணுவதற்கு அவர்கள் சலித்துக் கொள்கிறார்கள். இராஜ்ஜியம் என்று ஆழ்வார் குறிப்பிடுவது நம்முள் இருக்கும் ஆத்மாவை உணர்ந்து அதனை இறைவனுடன் ஐக்கியப்படுத்துவது என்ற அரிய தத்துவத்தைக் குறிப்பிடுகிறார். 

சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான்
சிந்தும் புறவில் தென் திருமாலிருஞ் சோலையே     346 

      அழகர் மலையிலுள்ள பூதங்கள் தீயவர்களை உடல் சிதறும்படி அறைந்து கொன்று அவர்களுடைய குருதியை அழகருக்கு ஆராதனையாக சமர்ப்பிக்கின்றன. அனைவருக்கும் தந்தையாக விளங்குவது அழகர் மலையாகும். செந்நிறமான இந்திரகோபப் பூச்சிகள் எம்பெருமானது கோவைப்பழம் போன்ற இதழ்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் நிறைந்தது திருமாலிருஞ்சோலையாகும்.
      ஸ்ரீவைஷ்ணவ பூதங்களானவை அவயங்கள் சிதறும்படி கொன்று அவர்களது இரத்தத்தைக் கொண்டு அந்திப்பொழுதில் எம்பெருமானுக்கு ஆராதனையாக சமர்ப்பிக்கின்றன. இத்தலமானது ஆபத்துக் காலத்தில் நமக்குத் துணையாக இருக்கிறது. இங்குள்ள பட்டுப்பூச்சிகள் அனைவருக்கும் ஸ்வாமியான அழகருடைய கொவ்வைபழ அதரத்திற்கு ஒப்பாகத் திகழ்கின்றது. அத்தகைய பெருமான் வீற்றிருக்கும் இடம் திருமாலிருஞ்சோலையாகும் என்ற ஆழ்வார் செப்புகிறார். 

எட்டுத் திசையும் எண் இறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உரிஞ்சிச் சென்று மாலைவாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திருமாலிருஞ் சோலையே.    347 

      எட்டு திசைகளிலும் கணக்கற்ற தேவியர்கள் சூழ்ந்திருக்க விமலன் வீற்றிருக்கும் இடம் திருமாலிருஞ்சோலையாகும்.  மாலை நேரத்தில் பெண் யானைகள் ஆண் யானைகளை உரசிக்கொண்டு கூடல் இச்சையுடன் மகிழ்வுடன் செல்லும் மலையும் திருமாலிருஞ்சோலை என்ற பொருளில் இப்பாடல் அமைகின்றது.
      கணக்கற்ற தேவியருடன் கண்ணபிரான் இங்கு குடியிருக்கிறார்.  ஒருவனுக்கு ஒருத்தி என்று ஏகபத்தினி விரதனாக இராமாவதாரத்தில் அவதரித்தார். அதே போன்று கிருஷ்ணாவதாரத்தில் தேவியர்கள் புடைசூழ வீற்றிருப்பது இச்சை தொடர்பானதல்ல. ஆண் பெண் வேறுபாடு மறந்து மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற திருவுள்ளத்தோடு கண்ணன் ஆயர் குலப்பெண்களிடம் விளையாடி மகிழ்ந்தார். தெய்வீக அன்பினைக் கொண்ட பெருமான் அவர்களை அழும்படியும் செய்தார். தெய்வீக அன்பு என்பது ஆன்மா இறைவனோடு சங்கமிப்பதாகும். இத்தகைய பரமானந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்கிறார் ஆழ்வார். 

மருதப் பொழில் அணி மாலிருஞ் சோலை மலைதன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான்தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல்
கருதி உரைப்பவர்  கண்ணன் கழலிணை காண்பரே.   348 

      மருத மலர்களின் சோலைகளால் நிறைந்தது திருமாலிருஞ் சோலையாகும். இங்கு வீற்றிருக்கும் கரிய திருமாலைத் துதிப்பவர் பெரியாழ்வார். விரதத்தோடு அவர் அருளிய இப்பாசுரங்களைப் பக்தியோடு படிப்பவர்கள் கண்ணன் திருவடியினை அடைவர் என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
      கோவர்த்தனகிரியில் விழா எடுத்ததன் காரணம், மல்லர்களை வீழ்த்தியது, குதிரைகளின் தாகம் தீர்க்க ஊற்றினை வரவழைத்தது, தன்னை சரணடையாதவர்களை கானகத்தை விட்டு விரட்டியது, கூனியின் கூனை நிமிர்த்தியது, பார்த்தனுக்கு சாரதி ஆனது போன்ற அற்புத நிகழ்வுகளை பெரியாழ்வார் கூறியுள்ளார். இவர் தந்துள்ள பாசுரம் என்னும் புதையல் காலத்தால் அழியாதது. தேவையற்ற சிந்தனைகளால் மனிதர்களின் மனங்கள் குப்பையாக்கித் துன்புறுகிறார்கள். இத்தகைய அவல நிலையைப் போக்கி கண்ணனின் திருவடி நிழலையடைய இப்பாசுரங்களை பக்தியுடன் படிக்குமாறு அறிவுறுத்துகிறார். 

உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஓட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே     349 

      ருக்மணியை கண்ணனிடமிருந்து மீட்டுச் செல்வதற்காக பின் தொடர்ந்து வந்த அவளது அண்ணன் ருக்மனை வென்று அவனைத் தேரில் கட்டி அவமதித்த கம்பீரமான கோபாலன் உறையும் மலை திருமாலிருஞ்சோலையாகும். கொன்றை மரங்களால் நிறைந்த இம்மலை தங்க மோதிரங்கள் போன்று பூ நரம்புகளையும், பொற்காசுகள் போன்ற மலர் இதழ்களையுடைய பெருமை மிகுந்த இடமாகக் கருதப்படுகிறது.
      ருக்மணியை கண்ணன் தேரில் வைத்து அழைத்து சென்றதை ருக்மன் கவனித்து தேரினைத் தொடர்ந்து விரட்டி வந்தான். கண்ணன் தேரினை நிறுத்தி ருக்மனுடன் போரிட்டு அவனைக் கொன்றால் ருக்மணி வருத்தப்படுவாள் என்பதையறிந்து அவனைத் தேர்காலில் கட்டி அவமதித்தான். உரிய காலத்தில் பெண் திருமணம் புரிதல் வேண்டும். ருக்மன் அதை செய்யத் தவறியதால் அவனுக்கு இந்த தண்டனையை பகவான் தந்தார்.  இத்தகையவன் கொன்றை மரங்கள் அடர்ந்த திருமாலிருஞ்சோலையில் நமக்கு சேவை சாதிக்கின்றான். 

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச்
செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே.     350 

      கொடிய எண்ணத்துடன் கண்ணனை வஞ்சகமாய்க் கொல்ல முயன்ற கம்சனையும், காளிங்கனையும், குவலயாபீடம் என்ற யானையையும், மருத மரங்களையும், காளையாக வந்து எதிர்த்த அசுரனையும் தந்திர சாகசம் செய்து அழித்து ஆயர்பாடியில் வளர்ந்த நீலமணி வண்ணன் வாழும் இடம் மாலிருஞ்சோலையாகும். இங்குள்ள விஷத்தைக் கக்கும் நாகம் நிலவினைக் கண்டு தான் உண்ணும் முட்டை என்று நினைத்து நாவை நீட்டி வளைக்கிறது என்கிறார் ஆழ்வார்.
      விஷத்தை உமிழ்ந்து நிற்கும் மலைப் பாம்பானது குளிர்ந்த மலையின் மேல் வரும் சந்திரனைக் கண்டு அதனைத் தனது உணவாக எண்ணி கிளர்ந்தெழுந்து சிவந்த நாவினாலே சீறி அசையாமல் நிற்கும். கம்சனால் ஏவப்பட்ட பல்வேறு அசுரர்களை கண்ணன் தனது சாமர்த்தியத்தால் கொன்று ஆயர்பாடி மக்களைக் காத்து வருகிறான். இந்த அசுரர்களால் பூமிப்பிராட்டிக்கு பாரம் ஏற்பட்டு துன்புற்றிருந்தாள். அதன் பூபாரத்தை பெருமான் குறைத்தான். இத்தகையவன் மாலிருஞ்சோலையில் வாசம் செய்கிறான். 

மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே.       351 

      நரகாசுரனை வதம் செய்ய வேண்டிய வழிவகைகளை ஆராய்ந்து அவனோடு போரிட்டு சக்கரத்தால் அவனைக் கொன்றவன் கடல்வண்ணன். அவன் சிறை வைத்திருந்து கன்னியரைக் கைப்பிடித்து தனது தேவியராக்கிய கண்ணன் வாழும் இடம் திருமாலிருஞ் சோலையாகும். புன்னை, செருந்தி, வேங்கை, கோங்கு  ஆகிய மரங்கள் வரிசையாக அமைந்து பூப்பதனால் பொன்னாலான மாலைகள் சுற்றி இருப்பதுபோல் தோன்றும் சோலைகளையுடையது இம்மலையாகும்.
      நரகாசுரன் ஆள்வலியாலும், தோள்வலியாலும் நமக்கு ஆபத்தில்லை என்று இறுமாப்புடன் தேவர்களையும், தேவமாதர்களையும் சிறைபிடித்து துன்புறுத்தி வந்தான். தேவேந்திரன் கண்ணபிரானிடம் முறையிட்டு தேவர்களைக் காக்குமாறு வேண்டினான். உரிய நேரத்தில் நரகாசுரனுடன் போரிட்டு அவனை தனது சக்ராயுதத்தால் கொன்று முடித்தான். பின் சிறையிலிருந்த பதினாறாயிரத்து நூற்று கன்னியை விடுவித்து அவர்களை மணந்தான். இத்தகையவன் திருமாலிருஞ்சோலையில் சேவை சாதிக்கிறான். 

 மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப்
பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே.     352 

      மகாபலியின் மகனான பாணாசுரன், அவன் மகள் உஷை கண்ணனின் பேரனான அநிருத்தனை விரும்பினாள். பறக்கும் சக்தி பெற்ற உஷையின் தோழி சித்ரலேகா துவாரகையிலிருந்து அநிருத்தனை கடத்தி வந்துவிட்டாள். எனவே பாணாசுரன் அநிருத்தனை சிறையிலிட்டான். இதையறிந்த கிருஷ்ணன் தன் பேரனை மீட்டு உஷைக்கு திருமணம் செய்வித்தான். அத்தகைய வீரம் பொருந்தி கோவிந்தனின் பெருமைகளை இங்குள்ள குறத்தியர் குறிஞ்சி ராகத்தில் பாடி ஆடுகின்றனர்.
      கண்ணன் பாணாசுரனை போர் புரிந்த சமயம் சிவபெருமானால் ஏவப்பட்ட ஜ்வாதேவதை அசுரனைக் காப்பாற்றியது. சுப்ரமண்யரும் பாணாசுரனுக்குத் துணையாக நின்றனர். இதையறிந்த கண்ணன் ஜ்ரும்பாணாஸ்திரத்தை பிரயோகித்து சிவபெருமானை தடுமாறச் செய்தார். மேலும் அதன் ஓங்கார நாதத்தால் முருகனையும் கட்டுப்படுத்தி பாணாசுரனை வதம் செய்தார். அசுர குலத்தில் பிறந்த உஷையை தனது பேரனுக்கு மணமுடித்து வைத்தது அவரது பேதைமையைக் காட்டுகின்றது.     

பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே      353 

      சிசுபாலன் கண்ணன் மீது பல குற்றங்களும், பழிகளும் சரமாரியாக அடுக்கிக் கொண்டே போனான். அவனது அற்பத்தனத்தை அழித்த அலங்காரப் பிரியரான கண்ணன் உறையும் இடம் திருமாலிருஞ்சோலையாகும். குளிர்ச்சி பொருந்திய, பெரும் வெற்றிகளைத் தருகின்ற உறுதிவாய்ந்த, நீண்ட பரந்த மலையாக உள்ளது என்பது இதன் பொருளாகும்.
      காதுகொண்டு கேட்க முடியாத சொற்களால் சிசுபாலன் கண்ணனை வசை பாடினான்.  அவனுக்கு தன்னுடைய அழகினைக் காட்டி அவனது பகையை மறக்க முயற்சித்தார். இருப்பினும் அவன் கண்ணன் மேல் கொண்ட துவேஷம் குறைந்தபாடில்லை. இறுதியில் அவனை சமயம் பார்த்து வதம் செய்தார். இத்தகையவன் தங்கும் மலையானது காய்களும், கனிகளும் வழங்கும் நல்மரங்களை தன்னகத்தே கொண்ட மாமலையாக திருமாலிருஞ்சோலைத் திகழ்கின்றது. 

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருக
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே      354 

      பாண்டவர்களின் மனைவியான திரௌபதி பட்ட துன்பங்களை எல்லாம் பாரதப்போர் நடைபெற்ற போது கௌரவர்களின் மனைவிகளும் அடையச் செய்தவன். இத்தகையவன் வாழும் மலை திருமாலிருஞ்சோலையாகும். இங்கு வண்டுகள் பாடிக் கொண்டு தேன் குடிக்கும்போது அவற்றின் ரீங்காரத்தில் பல ராகங்கள் வெளிப்படும். இதற்கு காரணம் அங்குள்ள செழித்து வளர்ந்துள்ள நீரூற்றுக்களே என்று கூறுகிறார் ஆழ்வார்.    
      பாண்டவர்கள் கௌரவர்களிடம் சூதாடித் தோற்றதால் அவர்களது மனைவியான திரௌபதியை அரச சபைக்கு இழுத்து வந்து துகிலுரித்து அவமானப்படுத்தினர். அவ்வமயம் பகவான் வந்து அவளைக் காப்பாற்றினார். இருப்பினும் அவள் பட்ட துன்பங்களை அறிந்து அதே துன்பங்களை கௌரவர்களின் மனைவிகளுக்கு அவர்களின் திருமாங்கல்யத்தை இழக்க வைத்தான். அத்தகையவன் நீரூற்று நிறைந்த வளம் பொருந்திய மாலிருஞ்சோலையில் சேவை சாதிக்கிறான். 

கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த ஏழில் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே.     355 

      பொன்னாலான காதணிகளை அணிந்த சீதையை மீட்க தனது கூரிய அம்புகளால் அரக்கர் கூட்டத்தை ஸ்ரீராமன் இரண்டாகப் பிளந்தான். அத்தகைய தோள்வலிமை நிறைந்தவன் வாழுமிடம் மாலிருச் சோலையாகும். பொன்னை வாரிக்கொண்டு வரும் அருவியிலே மக்கள் கூட்டம் வந்து நீராடும் புனிதத்தலமாக கருதப்படுகிறது.
      இராவணனுக்கு ஆதரவாக வந்த அசுரர்கள் தாங்கள் தவறு செய்யாத போதும் குற்றவாளிகளாக மாறினார்கள். இராமனின் அம்புகள் கழுவேற்றிய உடல் இரண்டாகப் பிளப்பது போன்று பிளந்தான். உலகத்து உயிர்களுக்கு தீங்கிழைக்கும் குற்றவாளிகளுக்கு துணை நிற்பவரும் குற்றம் புரிந்தவர்கள். பீஷ்மர், துரோணர் ஆகிய நீதிமான்களும் துரியோதனனுக்கு ஆதரவாக இருந்ததால் அவர்களும் குற்றவாளிகளே என்று சொல்லப்பட்டனர். அதற்கான பலனை குருக்ஷேத்திரப் போரில் கண்டனர். பரமாத்மா அவர்களை அழித்தார். அத்தகையவர் மாலிருஞ்சோலையில் வாசம் செய்கிறார்.

 எரி சிதறும் சரத்தால் இலங்கையினைத் தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த
அரையன் அமரும் மலை அமரரோடு கோனும் சென்று
திரிசுடர் சூழும் மலை திரு மாலிருஞ் சோலையதே.     356 

      நெருப்பை சொரிகின்ற அம்புகளால் இலங்கையை அழித்து, ஆணவத்துடன் பேசிய இராவணனின் வாயைப் பேச்சிழக்கச் செய்து மனம் மகிழ்ந்த இராமபிரான் அமர்ந்த இடம் திருமாலிருஞ்சோலை. தேவர்களும் அவர்கள் தலைவன் இந்திரனும், சூரிய சந்திரராகிய சுடரும் தினமும்  வலம் வருகின்ற மலையும் இதுவே என்கிறது இப்பாசுரம்.
      சீதையைக் கவர்ந்து வந்த இராவணனைப் பார்த்து பல பெரியோர்கள் அறிவுரைகள் கூறியும் கேட்காமல் மிகுந்த ஆணவத்துடன் பேசினான் இராவணன். தேவர்கள் அஞ்சி நடுங்கி ஓடும் நிலையில் ஒரு மானிடன் என்னைக் கொல்ல முடியுமா? என்று செறுக்குடன் கூறினான். அவ்விதம் பேசியவனின் வாயை ஸ்ரீராமன் செயலிழக்குமாறு செய்து இரண்டாகப் பிளந்தான். அத்தகையவன் திருமாலிருஞ்சோலையில் வாசம் செய்கிறான். இத்தலத்துப் பெருமானைப் பற்றுபவர்கள் பகைவர்களை வெல்வார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். 

கோட்டுமண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று
ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ் சோலையதே.    357 

      வராக வடிவமெடுத்து பூமியை மீட்டவன், திருவிக்ரமனாய் மாறி மூன்று உலகங்களையும் தானம் பெற்று அளந்தவன், பிரளய காலத்தில் உலகம் அழியாதபடி உண்டு உமிழ்ந்தவன். இத்தகைய விளையாடல்களைப் புரிந்த விமலன் வாழும் மலை திருமாலிருஞ்சோலையாகும்.  இங்கு ஓடிவரும் சிலம்பாறு தன்னிடம் இருக்கும் எல்லாப் பொருட்களும் எம்பெருமானுக்கே காணிக்கை என்பது போல் ஓடி வருகிறது.
      இரண்யனால் பாயாகச் சுருட்டி கடலடியில் இடப்பட்ட பூமியை வராக அவதாரமெடுத்து மீட்டவன் பெருமான். உலகினை தன் வயிற்றில் விழுங்கிக் காத்து அதை உமிழ்ந்தவன் பரந்தாமன். வாமன அவதாரத்தில் அகந்தையில் பெற்றுக்கொண்டு அளந்தருளிய பிரான் பின் பூமிபிராட்டியை காத்தருளினான். இவ்விதம் ஆச்சரியமிக்க செயல்களை விளையாட்டாகச் செய்து முடித்தான். அத்தகையவன் மாலிருஞ்சோலையில் வாசம் செய்கிறான். அங்குள்ள சிலம்பாறு பொன், முத்து, அகில் ஆகியவற்றை எம்பெருமானுக்கு கொண்டு வந்து வழங்குகிறது. 

ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக
ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை மாலிருஞ் சோலையதே.   358 

      ஆயிரம் தோள்களை பரப்பிக் கொண்டு, ஆயிரம் திருமுடிகளும் ஒளிவீச, ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு படுப்பவன் விரும்பி வாழும் மலை திருமாலிருஞ்சோலையாகும். பல ஆறுகளையும், சுனைகளையும், சோலைகளையும் தன்னகத்தே கொண்டு பொலிவுடன் விளங்கும் மலையாக இது திகழ்கிறது என்ற பொருளில் அமைகிறது.
      ஆதிசேஷன் மேல் பெருமாள் பள்ளி கொண்டுள்ள பேரழகினைக் கூறுகிறார். சம்சார சாகரத்தில் நாம் அனைவரும் கரை சேர வேண்டியவர்கள் என்பதை உணர்த்துவதாகும். பிரம்மனும் இத்தகைய சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருந்த போது பகவான் அவரை கரை சேர்த்தார். அதுபோன்று எம்பெருமானை அனுதினமும் தியானித்தால் நாமும் சம்சாரமென்னும் இக்கடலைத் தாண்டி பேரானந்தப் பெருவாழ்வு பெறலாம். இவ்வுலக  மாந்தர்கள் இந்த சாகரத்தில் மூழ்கிவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு ஆழ்வார் பாடியுள்ளார். 

மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்திதன்னை நால் வேதக் கடல் அமுதை
மேல் இருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே     359 

      மாலிருஞ்சோலையை எப்போதும் வாழும் இடமாகக் கொண்ட மலை போன்றவனும், எட்டெழுத்தின் வடிவானவனும், நால்வகை வேதங்களாகவும், அமுதம் போன்றவனாகவும் விளங்குபவர் திருமால். தேவலோகத்து கற்பக விருக்ஷம் போல் வேண்டியதை அருள்பவனாகத் திகழ்கின்றான்.  வேதத்தின் முடிவாகிய உபநிடதங்களில் கூறப்படும் சிறந்த பொருள்களின் தீபமுமான திருமாலை ஆழ்வார் விரிவாக எடுத்துப் பாடிருளியது இப்பாசுரத்தின் சிறப்பாகும்.
      திருமாலிருஞ்சோலை என்கின்ற மலையை தனக்கு இருப்பிடமாக கொண்டவன், ஒரு மலை சாய்ந்தாற்போலுள்ளவனும், நாலிருமூர்த்தியான வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகிய நால்வரையும் கொண்டுள்ளவன், நான்கு வேதங்களின் சாரமாகத் திகழ்பவன், கற்பக விருக்ஷம் போன்று வாரி வழங்குபவனான எம்பெருமான் வேதாந்தங்களில் கூறப்பட்ட சிறந்த அர்த்தங்களுள் உயர்ந்த அர்த்தமாக விளங்குகிறான். தனக்குத் தானே விளங்குபவனான எம்பெருமானைக் குறித்து ஆழ்வார்  இப்பாசுரம்வழி தெரிவிக்கிறார். 

துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப்பறித்து
புக்கினில் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே?
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கென வந்து பிறந்து நின்றாய்! திரு மாலிருஞ் சோலை எந்தாய்    453 

      கொடியவனான கம்சன், பிறந்த ஆறு குழந்தைகளை கல்லில் அடித்து மோதிக் கொல்ல அதனால் துன்புற்ற தேவகி வயிற்றில் உதித்து அவளது துன்பம் நீக்க அவதரித்து அழியாமல் நின்றவனே! மாலிருஞ்சோலையில் எழுந்தருளிய என் தலைவனே! துக்கத்தினால் சூழந்துள்ள வலையான இச்சரீரம் மறுபடியும் பிறக்காமலிருக்க செய்ய வேண்டும்.  நீ இருக்கும் இடங்களில் புகுந்து மந்திர, பூஜைகளால் உன்னைச் சேவித்துப் புரிந்து கொண்டேன். இனி என் மனத்திலிருந்து உன்னை அகலவிட மாட்டேன் என்கிறார் ஆழ்வார்.
      பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று சொல்லப்படுகின்ற ஐந்து நிலைகளில் உன்னை சேவித்து ஆறு வகையான துன்பங்களுக்கு இடமான இச்சரீரத்தின் விருப்பை ஒழித்துக் கொண்டேன். வேறுபாடற்ற ஆத்மாவை வெளிக்கொணர்ந்து அதனைத் தன்னிடம் சேர்க்கிறான் பகவான். அனைத்து உள்ளங்களிலும் வேறுபாடற்று ஆத்மாவில் உறைந்துள்ளான் இறைவன். இந்நிலையில் உன்னை என்னிடத்திலிருந்து போகவிடமாட்டேன் என்கிறார் ஆழ்வார். 

வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உன் தன் இந்திர  ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கல் உற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடைத் திரு மாலிருஞ் சோலை எந்தாய்! 454 

      அறிவுள்ளவர்கள், அறிவற்றவர்கள் என்று பேதம் பார்க்காமல் அனைவரது பாவங்களையும் போக்கி மோட்சத்தைத் தரும் மாலிருஞ் சோலையில் சேவை சாதிக்கும் பெருமானே! உன்னை வளைத்து என் இதயத்தில் வைத்து விட்டேன். இனி போகவிடமாட்டேன். நீ இந்திர ஜாலங்கள் கற்றவன். என்னை விட்டு மறைந்தால் பிராட்டி மீது ஆணை என்கிறார்.  ஆழ்வாருக்கு இத்தகைய துணிவு பெருமான் மீது கொண்ட அன்பினால் வந்தது. மேலும் அடியவர்களுக்கு நீ வேற்றுமையுடன் உனது கிருபையைக் காட்டுவதால்தான் என்று கூறுகிறார்.
      பரதாழ்வான் இராமனை விடாமல் பற்றிக் கொண்டது போல் நான் உன்னைப் பற்றுகிறேன். உலக மாயையில் நான் சிக்கியுள்ளேன்.  பிணைக்கப்பட்டுள்ள மாயையிலிருந்து நான் விடுபட்டு உன்னிடம் அடைதல் வேண்டும். நீ என்னைவிட்டுத் தப்பிச் செல்ல இயலாது. அவ்விதம் செய்தால் நின் மலர்மார்பில் வாசம் செய்யும் பூங்குழலாளிடம் சொல்ல, அவள் ஆணையிட்டால் நீ மறுக்க முடியாது என்று பெருமானைத் தப்பிக்கவிடாமல் செய்கிறார் ஆழ்வார். 

உனக்குப் பணி செய்திருக்கும் தவம் உடை யேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று
இனக் குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ் சோலை எந்தாய்!     455 

      சோலைமலையில் உள்ள குரவர்கள் தினையை அறுவடை செய்து அதை சமைத்து வேள்வி உணவு போல் உனக்கும் படைத்து உன் திருவடி வாழ்க என்று போற்றி நிவேதனத்தை உண்பார்கள். அத்தகைய தலைவனே!  உனக்குச் சேவை செய்து உன்னை மெய்யுருகிப் பாடி பாக்கியம் பெற்ற நான் உன்னை விட்டு வேறு ஒருவனுக்கு தலைவணங்க மாட்டேன். அது உன் பெருமையை அழிக்கும். எனவே உன்னையன்றி வேறு ஒருவருமில்லை என்கிறார் ஆழ்வார்.
      பகவானுக்குச் சேவை செய்து அடியவராகிவிட்ட பிறகு அற்பப் பொருட்களின் மீது பற்று வைத்து அதற்காக வேறொருவனிடம் யாசித்து இழிவாழ்வு வாழ்வது பகவானுக்கு நாம் செய்யும் இழுக்காகும். விலையற்ற நவரத்தினம் என்பது நமது ஆன்மாவைக் குறிக்கும். எல்லையற்ற அந்த ஆத்மாவில் நமது பாவங்கள் மூடியுள்ளது. எம்பெருமானின் திருவடிகளில் சரண்டைந்து அப்பாவங்களைப் போக்கி நமது ஆன்மாவை இறைவனுடன் சேர்க்க வேண்டும். அதுவே இப்பிறவியின் பெரும் பயனாகும் என்பதே இதன் கருத்தாகும்.    

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீருமில்லை  உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர் பொய்ச்சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம்படுத்தாய்! திரு மாலிருஞ் சோலை எந்தாய்   456 

      நெடுந்தூரம் அலைந்து திரிந்து வருந்திய எனக்கு ஆறுதல் தரும் நிழல் கிடைக்கவில்லை. நீரும் கிடைக்கவில்லை. உன் பாதநிழல் இல்லாமல் மற்றெந்த இடத்திலும் எனக்கு உயிர்ப்பு இல்லை. பாண்டவர்களுக்காக தூது சென்றவனே! அங்கு சென்று பாண்டவர்களும் கௌரவர்களும் எனக்கு சமமானவர்களே! என்று கூறி பாரதப் போரை உண்டாக்கியவனே! அதன் விளைவாக தீயவர்களை அழித்தாய். இத்தகையவனிடம் நான் தஞ்சம் அடைகிறேன் என்கிறார் ஆழ்வார்.
      இப்பூமியில் பலகாத தூரம் அலைந்து திரிந்த எனக்கு ஒதுங்க ஒரு நிழல்கூட கிடைக்கவில்லை. நினைத்துப் பார்த்ததில் உனது திருவடி நிழல் ஒன்றுதான் நிரந்தரமானது என்பதை புரிந்து கொண்டேன். இனி உனது நிழல் ஒன்றையே நான் தேடுவேன் என்று கூறுகிறார் ஆழ்வார். உறவு, சுற்றம் ஒருவருமில்லா பகவான் தூது சென்றபோது கௌரவர்களிடம் ‘எனக்கு உங்களிடத்திலும் பாண்டவர்களிடத்திலும் ஒரு நிகரான பக்ஷபாதமே உள்ளது என்றான் கண்ணன். தருமத்தை நிலைநிறுத்த பகவான் பல யுக்திகளை செய்து முடித்தார். அத்தகையவனிடம் நான் தஞ்சம் அடைகிறேன் என்கிறார். 

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா
மால் உகளாநிற்கும் என் மனனே! உன்னை வாழத் தலைப்பெய்திட்டேன்
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திரு மாலிருஞ் சோலை எந்தாய்!    457 

      சேல்மீன்கள் துள்ளி விளையாடும் பெரிய சுனைகள் சூழ்ந்துள்ள திருமாலிருஞ்சோலையில் விளங்கும் எம்பெருமானே!  நான் சிறப்புற்று வாழ நின்னை தஞ்சமடைந்தேன். ஆனால் என் கால்கள் அடிபெயர மறுக்கின்றன. உடல் தளர்ந்து நடுங்குகிறது. குரல் வெளிவராமல் திணறுகிறது.  இயலாமையல் கண் நீரைச் சொரிகிறது.  தோள்கள் தாழ்ந்து, உடலெங்கும் மயிர்க் கூச்செறிகிறது. மனமோ உன் உபகாரங்களை எண்ணி அன்பு கொள்கிறது என்கிறார் ஆழ்வார்.
  மெய்யடியார்கள் இறைவனை அடைய நினைக்கும் போது நமது உடல் பல்வேறு உபாதைகளைச் செயல்படுத்தும். வினைப்பயன் காரணமாக இவ்விதம் ஏற்படும். அதையும் மீறி மனமோ அவனது திருவடிகளையே நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் பெருமான் நம்மை நோக்கி வருவார். உடல் அவயங்கள் எந்த நிலையில் முடங்கிக் கிடந்தாலும் மனத்தின் மூலமாக நாம் இறைவனை துதிக்க முடியும். ஆராதனை செய்ய முடியும். அவன் கருணையை எண்ணி எண்ணி அன்பு காட்ட முடியும் என்பதைப் பெரியாழ்வார் கருணைத் திருவுள்ளத்தோடு இப்பாசுரம் வழியாகத் தெரிவிக்கிறார். 

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா! மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடைப் புகப் பெய் திரு மாலிருஞ் சோலை எந்தாய்!   458     

      திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் எம்பிரானே! காளைக் கொடி கொண்ட சிவபிரானும், பிரம்மாவும், இந்திரனும் வேறு எவரும் பிறவிப் பிணிக்கு மருந்து சொல்வதாக இல்லை. மருந்தும், மருத்துவனாக உள்ள மணிவண்ணா, அடுத்து ஒரு பிறவி வராதபடி என்னைத் திருத்தி உன் கோயில் வாசலில் வாழும்படி அருள வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும் நான் எல்லாவற்றிற்கும் உன்னிடம் கேட்டு சிரமப்படுத்த வேண்டாம் என்று நினைத்து சிவனையும், பிரம்மனையும், தேவேந்திரனையும் பிறவிப் பிணிக்கு மருந்து கேட்டுப் பெறலாமென்று பார்த்தால் உன்னையொழிய வேறொருவருக்கும் பிறவி நோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை. அதனை அறிந்தவன்  நீயேயாகையால் அந்நோயை நீக்கி உன் கோயில் வாசலைக் காக்கவல்ல அடியவனாக அமைத்தருள வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

 அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ் சேல் என்று கை கவியாய்!
சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக ஆடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்! திரு மாலிருஞ் சோலை எந்தாய்!    459 

      சுதர்சனச் சக்கரமும், திருக்கைகளும், திருக்கண்களும், பீதாம்பரமும் செவ்வானத்தின் சிவப்பு நிறமும் கொண்ட திருமாலிருஞ்சோலைப் பெருமானே! சம்சாரம் என்ற அர்த்தமற்ற கடலில் அழுந்தி உன் பேரருளால் கரையேறிச் சோர்ந்திருக்கும் அடியேனை அஞ்சாதே என்பதற்கு அடையாளமாக கையால் ஜாடை காட்டி கிருபை செய்தருள வேணும் என்று வேண்டுகிறார்.
      சம்சார சாகரத்தில் ஆழ்ந்து கிடந்த என்னை அஞ்ஞானத்திலிருந்து நீக்கி ஞானத்தைப் பிறப்பித்தருள வேண்டும். இந்த சம்சாரத்தின் கொடுமையை அறிந்தேன். அலைநீர்க்கடலில் அழுந்துவது போன்று பிறவிக் கடலில் துளங்கின அடியேன் உனது கிருபையால் அக்கடலை கடந்தேனாகி நினது பரமபதத்தை சிக்கெனப் பிடித்து உன் திருவடி தொழுவேன். அவ்விதம் உன்னை அடையும்போது ஒரு சோர்வு ஏற்படும். அந்த சமயத்தில் அஞ்சாதே! என்று கரத்தால் ஜாடை காட்டியருள வேண்டும் என்று பகவானிடம் கேட்கிறார்.     

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே
இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன் இனி உன்னைப் போகலொட்டேன்
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்!
சித்தம் நின்பாலது அறிதி அன்றே திரு மாலிருஞ் சோலை எந்தாய்!   460 

      இன்று நாளை என்று சொல்லி எத்தனைக் காலமும், எத்தனைக் கற்பங்களும் கழிந்துவிட்டன. இவ்வளவு காலமும் அஞ்ஞானத்தில் உழன்று காலம் கழித்தேன். இனி நீ என்னை விட்டுப் போக நான் சம்மதியேன்.  சுபத்திரையின் கணவனான அர்ச்சுனனோடு பாண்டவர்களைக் காத்து அவரது பகைவர்களான கௌரவர்களை அழித்தவனே! என் மனம் உன்னிடம் இருப்பதை நீ அறியவில்லையா என்ற வினவுகிறார் ஆழ்வார்.
      நேற்று, இன்று, நாளை என்று காலத்தை வீணாகக் கழித்தேன். சென்ற பிறவியில் நான் செய்த சிறு நல்ல செயல்களினால் உன்னிடம் வந்தேன். என்னை ஏற்றுக் கொள்வதை விட்டு புறம் தள்ளினால் அதற்கு நான் எள்ளளவும் இசையமாட்டேன். உன்னில் நான் கொண்ட அபரிமிதமான அன்பினால் உன்னை விட்டு மற்றொன்றை நினைக்காமல் உள்ளேன் என்கிறார் ஆழ்வார்.  நம் மனதை பகவானுக்கு அர்ப்பணித்து விட்டால் நம் பகைவர்களை அழிக்கத் தகுந்த துணையை இணைப்பதுடன் தானே துணையாகவும் அவன் இருப்பான் என்பது இப்பாசுரத்தின் உட்கருத்தாகும். 

அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடி மை செய்யல் உற்றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டுகொண்டேன் இனிப் போக விடுவதுண்டே?
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திருச் சக்கரம் அதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய்! திரு மாலிருஞ் சோலை எந்தாய்.   461 

      திருமாலிருஞ்சோலை அழகனே! சோணிதபுரத்தை ஆண்ட பாணாசுரனைப் பேரனுக்காக அந்த அசுரனின் ஆயிரம் தோள்களும், திசைகள் தோறும் சிதறும்படியாக சக்ராயுதத்தால் வீழ்த்தினாய். நீ தாயின் கருவில் இருக்கும்போது உனக்குச் சேவை செய்ய எண்ணியவன் நான். இன்று என் மனதில் உறைந்திருக்கும் உன்னை அடையாளம் கண்டு கொண்டேன். இனி உன்னை விடமாட்டேன் என்கிறார் ஆழ்வார்.
      பெருமானே! அடியேன் நீ கர்ப்பவாசம் செய்த போதே உனக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று பேரவா கொண்டிருந்தேன். நீ பிறந்த பின் நான் சம்சாரமென்னும் கடலில் ஆழ்ந்து இருந்ததால் அத்தகைய பேற்றினை இழந்தேன். கண்ட இடங்களில் நான் அலைந்து திரிந்து கொண்டிருந்த போது இத்திருமாலிருஞ்சோலை என்னும் இடத்தை நான் கண்ட போது அதில் உன்னைக் காணப்பெற்றேன். இவ்வாய்ப்பை நான் நழுவ விடமாட்டேன். எனவே உன்னை விட்டு என்றும் நான் பிரியாமாட்டேன் என்கிறார்.    

சென்று உலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடிமேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பஞ் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புது வைக்கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உல கம் அளந்தான் தமரே   463 

      உலக மக்கள் அனைவரும் நீராடும் சுனைகளையுடைய திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள அழகனது திருவடிகளில் தஞ்சமடைந்ததாக வில்லிப்புத்தூர் பெரியாழ்வாரால் பாடப்பட்ட இப்பத்துப் பாசுரங்களையும் பக்தியோடு பாடக்கூடியவர்கள் உலகங்களை அளந்த திருவிக்ரமனின் பக்தர்கள் ஆவார்கள் என்ற பொருளில் அமைகிறது.
      இச்சரீரம் மறுபடியும் பிறப்பெடுக்காதவாறு மந்திரப் பூஜைகளால் அறிந்து கொண்டேன். என் இதயத்தில் உன்னை வசப்படுத்திவிட்டேன்.  இனி உன்னை போகவிடமாட்டேன் என்று கூறுகிறார். உன் பாத நிழலே எனக்கு ஆறுதலாகும். என் உடல் சோர்ந்தாலும் மனம் உன்னை நாடியே உள்ளது. பிறவிப் பிணிக்கு நீயே மருந்தாக உள்ளாய் என இப்பத்துப் பாசுரங்களில் ஆழ்வார் போற்றிப் பாடுகிறார். இவை அனைத்தும் சம்சார சாகரத்திலிருந்து கரையேறுவதற்கான வழிகளைக் கூறுகிறது. எனவே இதனை பக்தியோடு பாடி திருவிக்ரமனின் திருப்பாதங்களை அடைவோமாக என்று கூறுகிறார். 

ஆண்டாள்                                                                                                          நாச்சியார் திருமொழி 

தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல்மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே.     534 

    தெளிவான சிந்தனையுடைய ஞானிகள் கை தொழுகின்ற வாசுதேவனாய், திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியுள்ள வள்ளல் அழகிய மணவாளனாய்ச் சயனம் கொண்ட இடத்தில் அவனது திருவடிகளைப் பிடிக்கும் பாக்கியத்தை அவன் தரும்போது கூடலே நீ கூடுவாயாக! என்று ஆண்டாள் பாடுகிறாள்.
      நொடிப்பொழுதும் நின்னைப் பிரியாமாட்டாமல் கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கும் நித்யசூரிகளுக்கு ஸ்வாமியாக விளங்கும் பெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருமாலிருஞ்சோலையாகும். தென்திசை இலங்கை நோக்கி சயனிக்கும் திருவரங்கப் பெருமானின் திருவடிகளை வருடும்படியான பாக்கியத்தை எமக்கு அருளினாய். அதுபோன்று கூடல் பிரானே, அத்தாணிச் சேவகம் பண்ணும்படியான விதிவாய்க்கும்படி செய்வாயாக என்று பிரார்த்திக்கிறாள். மணவாளனார் என்று இங்கு குறிப்பிடுவது பெருமான் மணக்கோலத்தில் வந்து நிற்பவன் என்று பொருளில் அமைகிறது. 

பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த *எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே    543 

      அனாதியான சதுர்வேதங்களின் உட்பொருளாய் இருப்பவன் கண்ணன். மதநீர் பெருகும் கஜேந்திராழ்வாரின் இன்னலைத் தீர்த்தவன் அவன்.  என்னை ஈர்க்கும் அழகுடையவன். அழகிய கோபியர் எண்ணத்தில் நிறைந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் வந்தால் மனமே, போலித்தனமில்லாமல் கூடிவிடு என்னும் பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
      ருக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் தனிப்பட்ட ஒருவரால் உருவாக்கப்பட்டதல்ல. எப்போதும் இந்த வேதங்கள் சாஸ்வதமாக உள்ளன. நாம் போற்றிக் கொண்டாடும் நீதிநூல்கள் அனைத்தும் தனிப்பட்ட அவதாரப் புருஷர்களால் ஆக்கப்பட்டதல்ல. அவை இறைவனால் அருளப்பெற்றவை. நால் வேதங்களுக்கு ஆதியும் அந்தமுமாய் விளங்குகிறான். இவ்வேதங்களின் உட்பொருளில் கண்ணன் உள்ளான் என்று ஆண்டாள் தமது பாசுரங்களில் குறிப்பிடுகிறார். அத்தகைய கண்ணன் வரும்போது போலித்தனமில்லாத மனமே! அவனுடன் கூடிடு என்று கூறுகிறாள் ஆண்டாள். 

சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்று உய்துங்கொலோ?    587 

      திருமாலிருஞ்சோலையில் பார்க்கும் இடமெல்லாம் ஜாதிலிங்கப் பொடி போல் சிவந்த இந்திர பட்டுப்பூச்சிகள் பரவியுள்ளன. அன்று திருப்பாற்கடலில் மந்தரமலையை நாட்டிக் கடலைக் கடைந்து மதுரமான அமுதத்தைத் தேவர்களுக்கும், அமுத மங்கையான திருமகளைத் தனக்குமாக ஏற்ற சுந்தரத் தோளையுடையவனின் சூழ்வலையில் அகப்பட்டவர் தப்பிப் பிழைக்க முடியுமோ? என்று கூறுகிறாள்.
      எம்பெருமானுடைய வடிவழகைக் காணவேண்டுமென்று ஆவல் பொங்க வந்தால், மாரிகாலத்து பட்டுப் பூச்சிகள் பறந்து அவை காதலனுடைய அதரத்தின் அழகை மறைக்கின்றதே. மாலிருஞ்சோலை எங்கும் பட்டுப்பூச்சி மயமாகிவிட்டதே! நான் எங்ஙனம் பெருமானின் அதரத்தின் வடிவழகை தரிசிப்பது என்று வருந்துகிறாள். ‘கனிவாயொப்பான் சிந்தும்புறபில் தென் திருமாலிருஞ்சோலையே’ என்று பெரியாழ்வார் பாடியதை இங்கு நினைவில் கொள்ளுதல் வேண்டும். சூழ்ச்சி மிகுந்தவன் தந்திரத்தால் பூச்சிகளையும், மேகங்களையும் மறைக்குமாறு செய்து ஆண்டாளை வருத்துகிறான் என்பது பொருளாகும். 

போர்க்களிறு பொரும் மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் பிடாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கு இடுகோ? தோழீ அவன் தார் செய்த பூசலையே    588 

      தோழி! போர்புரியும் யானைகள் இதையே தொழிலாகக் கொண்டு ஒன்றோடொன்று விளையாடும் மாலிருஞ்சோலை மலையில் அழகாக பூத்துக் குலுங்கிய முல்லைகள் எனக்கு பெருமானின் வெண்மையான புன்னகை பூக்கும் பல்வரிசைகளை நினைவுபடுத்துகின்றன. சினைகொண்ட அரும்புகள் என்னிடமிருந்து தப்ப முடியாதென்று நகைக்கின்றன. அது கண்டு நான் துடிக்கிறேன். தோள்மாலை செய்த துன்பத்தை நான் யாரிடம் முறையிடுவேன் என்கிறாள் ஆண்டாள்.
      யானைகள் கரையோரத்தில் தனது துணையுடன் விளையாடும் இடம் மாலிருஞ்சோலையாகும். அரும்பு கொண்டு விளங்கும் முல்லைகளானவை பெருமான் காதல் வயப்படும்போது ஏற்படும் புன்முறுவலில் அழகுமிக்க வெண்பற்களை நினைத்து நான் துன்பம் கொள்கிறேன். பூக்களையும், அரும்புகளையும் ஆண்டாள் பகவானாகப் பார்க்கிறாள். அதுபோன்று மேகங்கள், குயில்கள், சங்குகள் இவற்றையெல்லாம் பார்க்கும்போது பகவானாகப் பார்த்தாள்.  இது போன்று உலக மக்களும் பார்க்குமிடமெல்லாம் கண்ணனை நினைத்தல் வேண்டும். இத்தகைய ஞானம் அனைவருக்கும் வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டாள் இப்பாசுரத்தைப் பாடியுள்ளாள்.      

கருவிளை ஒண்மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு ஒளி காட்டுகின்றீர் எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி
வரிவளை இல் புகுந்து வந்திபற்றும் வழக்கு உளதே?.     589 

      அழகுமிக்க காக்கணாம் பூக்களே! காயாம் பூக்களே! நீங்கள் திருமாலின் மேனி வண்ணத்தை நினைவுபடுத்துகிறீர்கள். பிரிவுற்று துன்பம் அனுபவிக்கும் எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள். திருமகள் விளையாடும் திடந்தோள்களையுடைய அழகர் என் இல்லத்தில் புகுந்து மெலிந்த என் கைகளிலுள்ள வளையல்களைக் கொள்ளை கொண்டு போனான். இது தகுமோ? என் விரகதாபத்திற்கு உரியவன்தான் என் வளையலைக் களவாடியவன் என்கிறாள்.
      மாரிக்காலத்தில் மலரும் காக்கணாம் பூக்களும் காயா மலர்களும் விசேஷமாக புஷ்பிக்கும். அவை பெருமானின் திருமேனியைப் போலிருக்கும். எனவே அதைக் காணும் போது எனக்கு விரகதாபம் ஏற்படும். இதனால் என் மனம் துன்பம் கொள்ளும். இருவித மலர்களாக உங்களைக் காணும் நிலையில் என்னை முடிப்பதற்காகத்தான் நீங்கள் கற்றதா? நான் பிழைக்கும் வகையை நீங்கள் அறிய மாட்டீர்களா? என்கிறாள். அதற்கு இருவித மலர்களும் தாங்கள் படும் துன்பங்களை நாங்கள் மாலிருஞ்சோலைப் பெருமானிடம் எடுத்துச் சொல்லி நின் துன்பங்களை தீர்க்க முயல்கிறோம் என்ற அளவில் பொருள் அமைகிறது.  

பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறுமலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே?     590 

      அழகிய சோலைகளில் வாழும் குயில்களே! மயில்களே! அழகிய காக்கணாம் பூக்களே! புதிய களாப்பழங்களே! அழகிய நிறத்தையும் மணத்தையும் கொண்ட காயாம் பூக்களே! நீங்கள் ஐவரும் ஐந்து பெரும் பாதகிகள் என்கிறாள் ஆண்டாள்.  நீங்கள் அழகரின் தோளில் நன்கு அமர்ந்து அலங்கரித்து என்னைத் துன்பத்தில் ஆழ்த்துவதற்கா? என்று வினவுகிறாள் ஆண்டாள்.
      குயில், மயில், கருவிளை, களங்கனி, காயாம்பூ ஆகிய ஐந்து மலர்களும் தமக்குத் துன்பம் இழைத்த பஞ்சமஹாபாதகிகள் என்று வெறுத்துக் கூறுகிறாள். இத்தகைய சொல்லானது பஞ்சமஹாபாதகச் செயல்களுக்கு குறிப்பிடுவர். பெருமானை அடைவதற்கு இம்மலர்களெல்லாம் தனக்குத் தடையாக இருப்பதால் வெஞ்சினத்துடன் அத்தகையச் சொற்களைப் பயன்படுத்துகிறாள். இவ்விதம், அனைத்தும் எனக்கு எதிராகச் செயல்பட்டால் நான் என்ன செய்வது என வருந்துகின்றாள்.  என்னைத் தேற்ற வேண்டியவர்களே எனக்கு விரோதியாகச் செயல்படுகிறார்களே என்று வருந்துகிறாள்.  

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கண் கருமுகிலின் திருவுருப் போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்றுமினே.     591 

      உயர்வான மலர்களைக் கொண்ட சோலைகள் சூழ்ந்துள்ள திருமாலிருஞ்சோலையில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியுள்ள சிவந்த கண்களையும், கார்மேகம் போன்ற மேனி வண்ணத்தையும் கொண்ட எம்பெருமானுடைய அழகிய வடிவம் போன்ற மலர் போல் தொங்கும் வண்டினங்களே! நெருங்கியுள்ள அழகிய சுனைகளே! அவனை எனக்கு நினைப்பூட்டிய நீங்கள் எனது விரக வேதனையிலிருந்து நீங்க எனக்கொரு புகலிடம் சொல்லுங்கள் என்று ஆண்டாள் கூறுகிறாள்.

      கனவிலும், நினைவிலும் எப்போதும் பெருமானைப் பற்றி சிந்தனை கொண்டிருந்த ஆண்டாள்  வண்டினங்களையும், சுனைகளையும், செந்தாமரை மலர்களையும் நோக்கி தமது விரக தாபத்தை தீர்க்க வழி சொல்லுமாறு வேண்டுகிறாள். உங்களைக் காணும் போது பெருமானின் நினைவே வருகிறது என்கிறாள். அவளது இத்தகைய உன்னதமான நிலைக்குக் காரணம் எம்பெருமானின் கருணையே.  அதனால் அவள் நமக்குத் தாயாக இருந்து பாசுரங்கள் வழியாக நல்வழி காட்டுகிறார். அணுவளவும் காமத்திற்கு இடமின்றி தெய்வ நிலையை நமக்கு அருளுகிறார். 

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?     592 

      மணமுள்ள சோலைகள் சூழ்ந்துள்ள திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் பெருமானுக்கு அடியேன் நூறு அண்டாக்கள் நிறைய வெண்ணெயும், நூறு அண்டாக்கள் நிறைய அக்கார அடிசிலையும் மனத்தால் வரித்து வாயால் சமர்ப்பித்தேன். நாள் செல்லச் செல்ல அருள் செல்வத்தை அதிகம் பொழியும் அழகன் இங்கு வந்து இவற்றை ஏற்றுக் கொள்வாரா? என்று கேட்கிறாள்.
      பெரும்புதூர் மாமுனியான ஸ்ரீராமானுஜர் இப்பாட்டில் மிகவும் ஆழ்ந்துபோய் ஆண்டாள் பாசுரங்களில் சொன்னதை நாம் செயலில் செய்து முடிப்போம் என்று திருமாலிருஞ்சோலைக்குச் சென்றார். அங்கு நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலையும் அழகருக்கு அமுது செய்து நேரே ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்று ஆண்டாளை மகிழ்வுடன் தரிசித்து அவள் நினைத்ததை செய்து காட்டியதைக் கூறினார்.  என் மனமறிந்து செய்த இச்செயலால் நீர் எனக்கு அண்ணனானீர் என்று ஆனந்தம் பொங்க மகிழ்ந்தாள்.      

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே.    593 

      தென்றல் காற்றானது மலர்களின் மணத்தை சுமந்து வந்து வீசும்  திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் அழகனே! இன்று நான் வாயால் சமர்ப்பித்த வெண்ணெயையும், அக்காரவடிசிலையும் அமுது செய்வித்து, என் மனத்தில் நித்திய வாசம் செய்வதாக ஒப்புக்கொண்டாய். எனவே நூறு அண்டா அக்காரவடிசிலை நன்றியோடு சமர்ப்பித்து கைங்கர்யம் செய்து என்னை ஆளுமாறு செய்தேன் என்கிறாள் ஆண்டாள்.
      நூறு தடா அமுதினை நான் வழங்கும் நிலையில் ஒரு தடாவையாவது அமுது செய்து மீண்டும் செல்லாமல் இருக்க வேண்டும். இத்தகைய மஹோன்னதமான செயலுக்கு நான் கைங்கரியமாக இன்னும் நூறாயிரம் தடா வெண்ணெயும், நூறாயிரம் தடா அக்காரவடிசிலையும் சமர்ப்பிப்பேன். நம் போன்று வசதி வாய்ப்புகள் கேட்காமல் பகவானின் மனதில் இடம் வேண்டும் என்று கேட்கிறாள். அந்த நித்யவாசமே நிரந்தரம் என்றும், பேரின்பத்தில் மூழ்கும் நிலை வரும் என்று கூறுகிறாள்.  மேலும் இதே நிலை அனைவருக்கும் வரவேண்டும் என்று பாசுரவழி தெரிவிக்கிறாள். 

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ?
சோலைமலைப் பெருமான் துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே       594 

      கரிய நிறத்திலுள்ள கரிச்சான் குருவிக்கூட்டங்கள் விடியற் காலையில் எழுந்திருந்து திருமாலிருஞ்சோலைப் பெருமான், துவாரகாபதியை ஆளும் கண்ணன், ஊழிக்காலத்தில் ஆலிலையில் யோக நித்திரை செய்தவனான மகாவிஷ்ணு வருவதாகச் சொல்கிறதே!  ஒருவேளை சதா அவன் நினைவாகவே இருப்பதால் கரிக்குருவி பாடுவதாக மருள்கிறேனோ? பறவையின் பேச்சு உண்மையாக இருக்குமா என்று வினா எழுப்புகிறாள் ஆண்டாள்.
      ஆண்டாள் எப்போதும் பகவானின் நினைவாகவே தாம் இருப்பதாகக் கூறுகிறாள். மாலிருஞ்சோலை பகவான் வருவதாக குருவிகள் கூறுகிறதே என்று நினைக்கிறாள். ஊழிகாலத்தில் ஆலிலையில் வாசம் செய்தவன் இங்கு வருகிறான். நான் படும் துன்பத்தைக் கண்டு என் துயர் போக்க வருகிறானா? உயிர் இருந்தும் இல்லாதவள் போலிருக்கும் எனக்கு உயிர் கொடுக்க வருகிறானா? நாளும் அவனை நினைப்பதால் பறவையின் பேச்சு உண்மைதானோ? இவ்வாறு பலவாறு எண்ணி அவன் வந்தால் எவ்வாறு வரவேற்பது என்பது குறித்து நினைக்கிறாள் ஆண்டாள்.      

கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள்மேல்
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
சார்ங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? கொலோ   595 

      கோங்கு மரங்களில் மலரப் பெற்றிருக்கும் சோலைகளையுடைய திருமாலிருஞ்சோலையில் கொன்றை மரங்களில் தொங்குகின்ற தங்க நிறத்திலுள்ள மலர்கள் பறிப்பாரற்று  கிடக்கின்றன. தாமரை மலர் போன்ற வதனத்திலுள்ள பவள வாயில் வைத்து ஊதப்படும் பாஞ்சசன்னியத்தின் ஒலியும், சார்ங்கம் என்ற வில்லின் நாணோசையும் சமீபத்தில் அதைக் கேட்கும் நாள் என்றைக்கோ? என்று வினவுகிறாள்.
      அழகிய கொன்றை மரங்களில் உள்ள மலர்கள் போன்று நானும் தூங்குகிறேன். யாரும் வந்து பறிக்காததால் அதன் ஜன்மம் வீணாகிறது. அது போன்று என் பிறவியும் வீணாகுமோ? பெரியாழ்வாரின் புதல்வி இவ்விதம் தன்னை இழந்து வருவது தகுமோ? ருக்மணியைக் காத்து மணமுடிப்பதற்காக தனது வெண்சங்கினை ஊதும்போது அப்பிராட்டியின் செவியில் தேன் பாய்ந்தது போலிருந்ததாம். அதுபோன்று இராமன் இறந்தான் என்று இராவணன் பொய்யுரைத்ததால் சீதை துவண்டபோது கடற்கரையில் இராமனின் சார்ங்கம் என்று வில்லின் நாணொலி சீதையின் செவியில் புகுந்து ஆனந்திக்க வைத்ததாம். அத்தகைய ஆனந்தம் எனக்கு உண்டாகுமா? என்று கேட்கிறாள். 

சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனைச் சுரும்பு ஆர் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே.     596 

      சந்தனக்கட்டை, காரகிற்கட்டை அடித்துக் கொண்டு கரைகளை உடைத்துக் கொண்டு ஓடி வந்து பெருகுகின்ற நூபுரகங்கையை உடைய திருமாலிருஞ் சோலையில் நின்ற திருக்கோலத்தினைக் காட்டும் சுந்தரனைக் குறித்து வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய கோதை அருளிச் செய்த இந்த பத்து செந்தமிழ்ப் பாசுரங்களை பக்தியுடன் பாடுபவர்களுக்கு வைகுந்த வாசல் திறந்திருக்கும் என்கிறாள்.
      பிறந்த இல்லத்திருந்து புகும்வீடு செல்லும் பெண்டிர்கள் வேண்டிய பொருட்களை கொண்டு செல்வது போன்று, சந்தன மரங்களையும், காரகில் மரங்களையும் வேரோடு பறித்துக் கொண்டு சிலம்பாறு வழியாக திருமாலிருஞ்சோலைத் தலைவரான அழகரிடம் சேர்க்கின்றது. ஆண்டாள் எம்பெருமானின் கல்யாண குணங்களையெல்லாம் ஒன்று திரட்டிப் பாசுரமாக்கி நமக்குத் தந்துள்ளார். இப்பாசுரங்களை பக்தியுடன் படிப்பவர்களுக்கு திருமாலின் திருவடித்தாமரையை அணுகி நித்ய கைங்கர்யம் பெற்று பரமனடியில் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது இப்பாசுரத்தின் பொருளாகும். 

திருமங்கையாழ்வார்                                                                                          பெரிய திருமொழி 

வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே!       1022 

      வள்ளலாகவும், அசுரத் தலைவனாகவும் இருந்த மகாபலியின் யாக சாலையில் பிரம்மச்சாரி வேடம் பூண்டு மூன்றடி நிலம் யாசித்தவனும், ஏழு மரா மரங்களை ஒரே அம்பினால் துளைத்து வலிமை பொருந்தியவனும், எட்டுத் திருக்கரங்களோடு அட்டபுயகரத்தில் காட்சி தருபவனும், இமயத்தின் திருப்பிருதியில் உறைபவனும், மாலிருஞ்சோலையில் அருள்பவனும், கஜேந்திரனின் துயர் துடைத்தவனுமான பகவான் உறையும் இடம் திருவேங்கடமாகும் என்கிறார் ஆழ்வார்.
      வேண்டியவர்க்கு தானம் செய்கின்ற அசுரத் தலைவனான மகாபலியின் யாகசாலையில் மூன்றடி மணி யாசித்தவன் பகவான். எட்டு கரங்களைக் கொண்டு அட்டபுயகரனாகக் காஞ்சியில் காட்சி தருகிறான். அத்தகையவன் திருவேங்கட மலையில் நின்று அருள்கிறான். மனமே! அவனை நோக்கிச் செல்வாயாக என்கிறார் ஆழ்வார். சூஷ்ம சரீரத்தில் வைரம் கொண்ட மனத்தை நாம் அடக்கிவிட்டால் அது நமக்கு பணியாளனாக  மாறிவிடும். தெய்வீக சக்தி கொண்டு மனத்தை அடக்க வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.  

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு                                                                                                                                                          ஒன்று இலளால்
வளங் கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே என்று வாய்வெருவும்
களங் கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளங் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்இடவெந்தை எந்தை                                                                                                                                                     பிரானே!  1114 

      இடவெந்தைப் பிரானே! இவள் எக்காலத்திலும் உன்னையே நினைத்திருப்பதால் மனம் கனிந்திருக்கிறாள். உன்னைப் பற்றியே பிதற்றுகிறாள். உன்னைத் தவிர என்னிடம் சிறிதும் அன்பின்றி இருக்கிறாள். சோலைகளால் சூழப்பட்ட  திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் பிரானே என்று புலம்புகிறாள்.  புன்சிரிப்பையும் அழகையும் மன வருத்தத்தையும், இளைப்பையும் கொண்டிருக்கும் இக்கன்னிப் பெண்ணின் விஷயத்தில் நீ என்ன செய்வதாக உத்தேசிக்கிறாய் என்று கேட்கிறாள் திருத்தாயார்.
      இளம்பிள்ளையான இவள் பக்குவமின்றி இருக்கிறாள். நெஞ்சு கனிந்திருப்பது தெரிகிறது. எப்போதும் உன்னைப் பற்றியே பேசிப் பிதற்றுகிறாள். மற்ற சிறுமியர்கள் போல் தாய் தந்தையரிடம் அன்பு வைப்பதில்லை. தன் அன்பு முழுவதும் உன்னிடத்திலேயே கொட்டுகிறாள். உன் பெயரைச் சொல்லுவதும் நீ உகந்தருளிய திருப்பதிகளைப் பற்றியும் பேசிய வண்ணம் உள்ளாள். இவள் மீது இரக்கம் காட்டாமல் இவளை இழக்கலாகுமோ என்று பலவாறாக பெருமானைக் கேட்கிறாள். 

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே      1329 

      உள்ளத்தை விட்டு ஒரு நொடிப் பொழுதும் நீங்காதிருக்கும் என் செல்வமே! அனுபவிக்க அனுபவிக்க இன்பமாக இருக்கின்ற தேவகி மைந்தனே! அழகிய குளிர்ந்த திருவாலிநகர் மணாளனே! திருமாலிருஞ்சோலையில் உலாவி வரும் யானைக் கன்று போன்றவனே!  என்றும் அணையாத தீபச்சுடரே! திருநறையூரில் அருள் புரியும் பரிபூரணனே! இந்தளூர் எம்பெருமானே! அடியேனிடம் சிறிதும் இரக்கம் காட்டவில்லையே என்று ஆழ்வார் கூறுகிறார்.
      இப்பாசுரத்தில் ஆழ்வார் பகவானை இறைஞ்சிக் கேட்கிறார். கடலில் நீர் வற்றுவதுண்டோ? உன் திருவுள்ளத்தில் இரக்கம் மாறுவதுண்டோ? இப்படியும் என்னைக் கொல்லலாமா? பாவியான எனக்கு சிறிதும் இறங்க மாட்டாயோ? என்று வினவுகிறார். நம் மீது இரக்கம் கொண்டுள்ளதால்தான் நாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பகவானின் கருணை இன்றும் அமுதவெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் அற்ப பொருளுக்காக அவரது கருணையை அலட்சியம் செய்கிறோம். ஆத்ம தரிசனத்தைத் தவிர வேறு எதையும் பகவானிடம் வேண்டக்கூடாது என்ற மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள். 

 எள் தனைப்பொழுது ஆகிலும் என்றும்
     என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்
     தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை
     காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை பரவைத் துயில் ஏற்றை என்
      பண்பனை அன்றிப் பாடல் செய்யேனே.     1573 

      எள்ளத்தனை நொடிப் பொழுதிலும் என் மனத்தை விட்டு அகலாமல் இருக்கும் புகழ் உடையவனை, கோங்கு மரங்களில் மலர்கள் மலர்ந்து பொன் தகட்டடைப் போல் காட்சி தரும் தழைத்த தோப்புகள் நிறைந்த திருமாலிருஞ்சோலேயில் வீற்றிருக்கும் கற்கண்டு போன்று இனிப்பானவனே! கருப்பஞ்சாறு போலிருப்பவனை, முன்னர் அன்புடன் நான்மறைகளையும் சாந்தீபினி முனிவரிடம் கற்ற பாண்டித்தியத்தை, பாற்கடலில் துயில்பவனை நறையூர் நம்பியை அன்றி மற்றொருவரை நான் பாட மாட்டேன் என்கிறார் ஆழ்வார்.      
      ஆழ்வாரது உள்ளத்தில் பகவான் புகுந்து நித்யவாசம் செய்த அவரது கருணையை இப்பாசுரத்தில் பாடுகிறார். ‘கோங்கு நின்று பொன்னரி மாலைகள் சூழ்பொழில் மாலிருஞ்சோலையதே’ என்று பெரியாழ்வார் பாடியுள்ளார். ‘கோங்கலரும் பொழில் மாலிருஞ்சோலை’ என்றாள் ஆண்டாள் பிராட்டியார். பொன் போன்ற நிறத்தையொத்த கோங்கு மலரானது பொன்தட்டு போல் காணப்பட்டதாக ஆழ்வார் தெரிவிக்கின்றார். எனவே அவரையல்லாது வேறு ஒருவரை என் மனம் நினைக்காது என்று கூறுகிறார். 

சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா எனக்கு உரையாய் இது மறை நான்கின் உளாயோ?
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ? உனது அடியார் மனத்தாயோ? அறியேனே.      1634 

      நெடிதுயர்ந்த குளிர்ச்சிமிக்க திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியுள்ள மாயவனே! நீ நான்கு வேதங்களிலும் இருக்கிறாயா? யாகத்தின் அக்னியை வளர்க்கின்ற வேதியர்கள் வாழும் சிறுபுலியூர்ச் சலசயனக் கோயிலில் இருக்கிறாயா? அல்லது உனது அடியார்களின் நெஞ்சில் குடிகொண்டுள்ளாயா? என நான் அறியேன். எனக்கு அதனைச் சொல்லியருள வேண்டும் என்று ஆழ்வார் வினவுகிறார்.
      வேதப் பொருளாக இருக்கும் பகவான் அதில் நிறைந்துள்ளார். வேதம் ஒலிக்கும் ஹோமத்தில் உள்ளார். அன்பர்கள் நெஞ்சத்திலும் வீற்றிருக்கிறார். மேலும் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.  எங்கும் திரிந்து செல்லாமல் சிறுபுலியூர் சென்றால் இம்மூன்று இடங்களையும் பகவானைக் காண முடியும்.  இம்மண்ணுலகில் சொர்க்கம் என்பது வேத மந்திரங்கள் ஒலிக்கும் திருக்கோயில்களே ஆகும். நரகம் என்பது அற்ப பொருள்கள் உள்ள இடங்கள் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது. 

 வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
     மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ
     தாமரைக் கண்கள் இருந்த ஆறு
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்
     செவ்விய ஆகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்
     அச்சோ ஒருவர் அழகியவா!      1760 

      குன்றுகளால் சூழப்பட்ட திருமெய்யம் மலையில் எழுந்தருளியுள்ள அழகிய மணவாளர், மூன்றடி மண்ணில் உலகை அளந்த உத்தமரோ! தாமரை போன்று திருக்கண்களையுடையவரோ! என் சொல்வேன். நெடிதுயர்ந்தும், பரந்தும் இருக்கின்ற மலைகள் பிரம்மாண்டமாக இருப்பது போன்று அழகும் தேஜசும் உடையவராய், ஆயிரம் திருத்தோள்களும், பொன்னாபரணங்கள் அணிந்தவரோ! அச்சோ இவரது அழகினை எப்படி கூறுவேன் என்று பரகாலநாயகி கூறுவது போல் ஆழ்வார் கூறுகிறார்.
      தோழியைப் பார்த்து பகவானின் அழகினையும், பெருமைகளையும் வியந்துப் போற்றுகிறாள். முற்பாட்டில் பெருமானுக்கு நான்கு தோள்கள் என்று கூறி இப்பாட்டில் அவருக்கு ஆயிரம் தோள்கள் என்கிறார். பெரியவாச்சான் பிள்ளை தனது வியாக்யானத்தில் ‘நான்கு தோள்களே ஆயிரம் தோள்களாகக் காணப்பட்டது, நம்பியைக் காண ஆயிரம் நயனம் வேண்டும், ஆயிரம் கண் கொண்டு காண வேண்டியபடி அழகு மிஞ்சி நிற்கின்றதே’ என்று கூறுவதாக அமைகின்றது. 

மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
     மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
     நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
     மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்
     அச்சோ ஒருவர் அழகியவா.      1765     

      மேக மண்டலத்தை எட்டி நிலவினைத் தொடுமளவு உயர்ந்த திருமாலிருஞ்சோலையில் அருள்புரியும் மணவாளர்! அங்கிருந்து புறப்பட்டு என் உள்ளத்திலும், கண்களிலும் நிலையாக நின்று நீங்காமல் இருக்கிறார். திருநீர்மலைப் பெருமானாய் இருக்குமோ? இன்னாரென்று நான் அறிய முடியவில்லையே!  அழகிய இறக்கைகளைக் கொண்ட கருடன் மீதேறி வந்த இவர், மேக மண்டலத்தை விட உயரமான ஒரு பொன்மலை படிந்த காளமேகம் போல் இருக்கிறார். எல்லோரும் வந்து பாருங்ககள். அச்சோ! இவர் அழகினை ஒருவரால் சொல்ல இயலுமோ? என்று கூறுகிறார் ஆழ்வார்.
      மாலிருஞ்சோலையில் அருள் புரிபவன் என் கண்களிலும் நிலையாக நின்றுவிட்டார். இவர் அழகை ஒருவராலும் சொல்ல இயலுமோ? இவர் யார் என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லையே என்று பரக்கால நாயகியானவள் புலம்புகிறாள். ஆத்ம ஐக்கியத்திற்கு இப்பெண் தகுதி பெற்றுள்ளாள் என்பது இதன் மூலம் அறிய முடிகின்றது. பரம்பொருளை புரிந்து கொள்வது கடினம். ஆனால் அவனுள் இணையும் நிலையில் அவனே நம்மிடம் நெருங்கி வருவான் என்பது இதன் பொருளாகும்.     

முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார்
     கலவியை விடு தடுமாறல்
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும்
     ஆய எம் அடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும்
     தழுவி வந்து அருவிகள் நிரந்து
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை
     வணங்குதும் வா மட நெஞ்சே!    1818 

      மடமையான மனமே! உனக்கு முன்பே ஒன்று சொல்கிறேன். மணம் மிகுந்த கூந்தலையுடைய பெண்களின் கூடலாகிய மயக்கத்தை விட்டு ஒழி. ஏழு தீவுகளும், ஏழு கடல்களும் பரந்து நிற்கும் என் சுவாமியினுடைய திருக்கோயில், சந்தனக் கட்டைகளையம், இரத்தினங்களையும், அழகிய மயில் தோகைகளையும் உருட்டிக் கொண்டு வரும் அருவிகள் நிறைந்த திருமாலிருஞ்சோலையாகும். அதை வணங்குவோம் வா என்று கூறுகிறார் ஆழ்வார்.
      மனமே! பெண்களுடன் கூடும் மயக்கத்தை விட்டு ஒழிக்க வேண்டும். பெண் மயக்கம் என்னும் திரை ஆத்ம தரிசனத்தை மறைத்துக் கொண்டுள்ளது. பெண் இன்பமானது ஒரு சிற்றின்பம். அது அழியக்கூடியது. அதை விட்டு விலகி நிரந்தரமான பேரின்பமே ஆத்ம தரிசனம். அதை அடைவதற்கான வழியைப் பார்ப்பாயாக! என்று கூறுகிறார். இவ்வாழ்வார் கண்ணமங்கை பத்தராவியைப் பற்றி பாடும்போது எம்பெருமானை சிந்திக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. எம்பெருமானை சிந்தியாத பாவிகளின் மனதை விட்டு அகன்றுவிட வேண்டும், இதுவே நமது முதல் நிர்ப்பந்தமாகும்  என்று நமக்கு அறிவுரை வழங்குகிறார். 

இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி
     எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
     சுடர் முடிக் கடவுள் தம் கோயில்
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில்
     விரை மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன்
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை
     வணங்குதும் வா மட நெஞ்சே    1819 

      மலர்மாலையும், தீர்த்தமும் ஏந்தி எப்போதும் வணங்குவோம் எழுந்திருங்கள் என்று தேவர்களும், அண்டத்தில் உள்ளவர்களும் கூடி இருக்கும் வைகுண்டத்தில், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் ஒளி பொருந்திய திருமுடி அணிந்திருக்கும் பரந்தாமன் குடியிருக்கும் கோயில், சிறிதும் விரிசல் காணா மூங்கில்கள் வளர்ந்திருக்கும், சுற்றிலும் மணமுள்ள குறிஞ்சி மலரின் இனிய தேனை அருந்தவரும் வண்டுகளைக் கொண்ட சாரல்களுள்ள மாலிருஞ்சோலையாகும். மட நெஞ்சே! அவரை வணங்குவோம் வா, என்று கூறுகிறார்.
      மேலுலகத்தவர்கள் தங்களைப் போன்ற பக்தர்களை நோக்கி, நல்ல பூமாலைகளையும், ஆசமநீயங்களுக்குரிய தீர்த்தங்களையும் சேகரித்துக் கொண்டு புறப்படுங்கள் என்று சொல்லி பலரையும் கூட்டிக்கொண்டு வந்து திருவனந்தாழ்வான் மீது திருக்கண்வளர்ந்துள்ள பெருமான், அவ்விடத்தைக் காட்டிலும் இதுவே சிறந்த இடம் என்று நினைத்து தங்கியுள்ள திருமாலிருஞ்சோலை நோக்கிச் சென்று அவனைத் துதிச்செய்வோம் என்கிறார் ஆழ்வார். 

பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்தப்
     பெரு நிலம் அருளின் முன் அருளி
அணி வளர் குறள் ஆய் அகல் இடம் முழுதும்
     அளந்த எம் அடிகள் தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலம் அதனில்
     குறவர் தம்  கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை
     வணங்குதும் வா மட நெஞ்சே      1820. 

      நோய்கள் வளரும் உடல் நீங்கும்படி, நின்று வணங்கித் துதிப்பதற்காக, பெரிய உலகத்தார் கருணையால் படைத்தவன், அழகான  வாமனனாய் உலகினை அளந்து கோயில் கொண்ட என் சுவாமி வேங்கை மரங்கள் விசாலமாக சூழந்துள்ள பூமியில் குறவர்கள் தங்களது கவண் கயிற்றிலே வைத்து எறிந்த இரத்தினங்கள் தோன்றுகின்ற மலையினை உடையது திருமாலிருஞ்சோலையாகும். மட மனமே! அதை வணங்குவோமாக! என்று கூறுகிறார் ஆழ்வார்.
      நமது உடலில் வளர்கின்ற நோய்கள் தீர்வதற்காக பக்தர்கள் தன்னைப் பிரார்த்திக்கும் பொருட்டு விசாலமான இவ்வுலகத்தைப் படைத்தருளினவனும், மாவலியின் செருக்கை அடக்குவதற்கு தன்னை வாமன மூர்த்தியாக அவதரித்து மூன்றடிமண் யாசித்து உலகினை அளந்தவனுமான எம்பெருமான் குடியிருக்கும் இடம் திருமாலிருஞ்சோலையாகும். தீவினைகள் காரணமாக இவ்வுலகில் பிறவியெடுத்த நாம் நல்வினைகள் பெறுவதற்காக அவனை சென்று தொழுவதற்காக செல்வோமாக! என்று கூறுகிறார் ஆழ்வார்.  

சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்துச்
     சுடு சரம் அடு சிலைத் துரந்து
நீர்மை இலாத தாடகை மாள
     நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில்
     கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை
     வணங்குதும் வா மட நெஞ்சே!       1821 

      கொடியவளான பூதனையின் நஞ்சு பூசிய தனத்தைச் சுவைத்துக் கொன்றவன், தீ கக்கும் அம்புகளை வில்லிலே தொடுத்து பெண் தன்மையில்லாத் தாடகை இறக்க நினைத்தவன் தங்கியுள்ள தலம், மேக மண்டலம் வரை ஓங்கி வளர்ந்த வேங்கை மரங்களும், கோங்கு மரங்களும் நிறைந்த, மலர்வனங்களில் உள்ள குறிஞ்சி மலரின் இனிய தேன் வெள்ளமாகப் பெருகும் சிறப்புடைய குளிர்ந்த திருமாலிருஞ் சோலையாகும். மனமே! அதனை வணங்குவோம் வா! என்று அழைக்கிறார்.
      வஞ்சகத்தை வீழ்த்தக்கூடிய பகவானை நாம் துணை கொள்ள வேண்டும் என்பது இப்பாசுரத்தின் வழி அறிய முடிகின்றது.  இங்கு வஞ்சகம் என்பது நம்முடைய உண்மையான சொரூபத்தை மறக்கச் செய்யும் பெண் மோகம், பணப்பித்து, பதவிப்பித்து, சுயநலம், துரோகம், கயமை போன்ற தீய குணங்களாகும்.  அது நம்மிடையே இருந்து நம்மை ஏமாற்றி வருகின்றன. இதனை பகவானின் துணை கொண்டு அழித்து அவன் கமலப் பாதங்களை சரணடைதல் வேண்டும் என்பது இதன் கருத்தாகும். 

வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய
     மணி முடி ஒருபதும் புரள
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட
     அமர்செய்த அடிகள் தம் கோயில்
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப்
      பிரசம் வந்து இழிதர பெருந் தேன்
மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை
     வணங்குதும் வா மட நெஞ்சே!         1822 

      வணக்கமற்ற இராவணன் போர்க்களத்தில் இறக்கும்படி அவனது மணிமுடிகள் பத்தும் மண்ணில் உருள, அவனது உடல் மீண்டும் மீண்டும் எழுந்து வர, அதனுடன் யுத்தம் செய்து முறியடித்த என் சுவாமி எழுந்தருளியிருக்கும் கோயில், ஒன்றுக்கொன்று பிணைந்துள்ள மூங்கில் நுனி, மலையிலுள்ள தேன் கூட்டின் வாயைக் கிழிக்க அதிலுள்ள தேனீக்கள் சிதற அதனால் தேனின் மணம் வீசுகின்ற சாரலைக் கொண்ட சோலைமலையை, மட நெஞ்சே! வணங்குவோம் வா.. என்று அழைக்கிறார்.      
மனம் என்பது தகுதியற்ற பொருட்களைத் தேடி அலைகிறது. செய்யக் கூடாத செயல்களைச் செய்து தீவினைகளில் மூழ்குகின்றது. மாற்றான் மனைவியை சிறை வைத்த இராவணன், அறிவுரை சொன்ன விபீஷணனை அவமானப்படுத்தி அனுப்பினான். சகல சாத்திரங்கள் கற்றும் அவன் மனம் அதர்மத்தில் மூழ்கியது. அதனால் பத்து தலைகளையும் இழந்தான். தீவினைகளை அழித்தது போன்று நம் வினைகளையும் பகவான் அழிப்பான் என்பது இதன் கருத்தாகும். 

விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று
     விளங்கனிக்கு இளங் கன்று விசிறி
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த
     கூத்த எம் அடிகள் தம் கோயில்
தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத்
     தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை
     வணங்குதும் வா மட நெஞ்சே!          1823 

      கொடிய நஞ்சுகொண்ட பாம்பின் மீது அரிதுயில் செய்கிறவனும், விளா மரமாய் நின்ற அசுரன் மேல் வந்து அழித்தவனும், கன்றாய் வந்த அசுரனைக் கொன்றவனும், ஆய்ச்சியர்களுடன் குடக்கூத்து ஆடியவனுமான எம்பெருமான் குடியிருக்கும் கோயில், மேகங்கள் சூழ்ந்து கடல்நீரை முகர்ந்து ஆகாயத்தில் முழங்க, அதை செவியுற்ற சிங்கம், மலையிலுள்ள யானைப் பிளிறுவதாக நினைத்துச் சினம் கொண்டு கர்ஜிக்கும் திருமாலிருஞ்சோலையாகும். மட மனமே! அதை வணங்குவோம் வா! என்று அழைக்கிறார் ஆழ்வார்.
      திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது நித்திரை கொள்ளும் எம்பெருமான், அவ்விடத்தை விட்டு வடமதுரையில் பிறந்து திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனான கண்ணன், கம்சனால் ஏவிவிடப்பட்ட கன்றாக வந்த அசுரனை அழித்தவனும், விளாமர வடிவில் வந்த மற்றொரு அசுரனை அழித்தவனும், கைகளிலும், தோள்களிலும் குடங்கள் ஏந்தி வந்த ஆய்ச்சியர்களுடன் ராசக்ரீடை என்னும் குரவைக்கூத்து ஆடிய திவ்ய சேஷ்டித நிதியான பெருமான் தங்கியிருக்கும் இடம் மாலிருஞ்சோலையாகும். அதனை வணங்குவாயாக மட நெஞ்சே! என்று கூறுகிறார். 

தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர்
     செழுந் திரள் பனங்கனி உதிர
தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர்
     எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரதகச் சாயல்
     மா மணிக் கல் அதர் நுழைந்து
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை
     வணங்குதும் வா மட நெஞ்சே        1824 

      தேனுகாசுரனின் உயிரை அழிக்க, மரத்தில் திரண்டிருந்த பனம்பழங்களை உதிரும்படி,  கழுதையாக வந்த அசுரனை பனை மரத்தின் மீது எறிந்து கொன்றவன் கடல்வண்ணனான கண்ணபிரான். இதுவே தகுந்த இடம் என்று நினைத்து குடிகொண்ட கோயில், பச்சை மணி போன்ற ஒளியுடைய வானளாவிய மரங்களைக் கொண்ட சோலைகளில், நீலப்பாறை வழிகளில் மான்கள் மேய்கின்ற சாரல்களைக் கொண்ட திருமாலிருஞ்சோலையாம். மட நெஞ்சே! அதை வணங்குவோம் வா! என்று கூறுகிறார் ஆழ்வார்.
      கண்ணபிரான் பலராமனோடு காட்டுப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது கம்சனின் ஏவுதலால் தேனுகாசுரன் கழுதை வடிவில் வந்து கண்ணனை கொல்லப் பார்த்தான். இதையறிந்த கண்ணன் அந்தக் கழுதையின் பின்னங்காலினை இழுத்துப் பிடித்து சுழற்றி எறிந்தான். அசுரனும் மாண்டு போனான். இத்தகைய பெருமான் மற்றெல்லா இடத்தையும் விட திருமாலிருஞ்சோலையே தமக்கு உகந்ததான இடம் என்று கூறி இங்கேயே வந்து தங்கிவிட்டான். அத்தகையவனை தரிசிக்கலாம் மட நெஞ்சே! நீ வருவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.  

புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவப்
     பொரு கடல் அரவணைத் துயின்று
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த
     பனி முகில் வண்ணர் தம் கோயில்
கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின்
     கவுள் வழிக் களி வண்டு பருக
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை
     வணங்குதும் வா மட நெஞ்சே!         1825 

      மேகங்கள் சூழ்ந்த ஆகாயத்தில் சென்று உராயும்படி உயர எழும் அலைகள் கொண்ட திருப்பாற்கடலில் பாம்புப் படுக்கையில் யோக நித்திரை கொள்பவன், வலிமையுள்ள கால்களையுடைய கேசி என்னும் குதிரை வடிவான அசுரனை அழித்தவன், கார்மேகம் போன்ற வண்ணமுடைய பகவான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில், மிகுந்த கோபத்தைக் கொண்ட யானையின் கபாலத்தில் வழியும் மதநீரை வண்டுகள் பருக, எங்கும் தேன் பெருகும் சாரல்களையுடைய திருமாலிருஞ்சோலையை  மட நெஞ்சே! வணங்குவோம் வா! என்று அழைக்கிறார் ஆழ்வார்.  
      இப்பாசுரத்தில் ஆழ்வார் கிருஷ்ணாவதார சேஷ்டிதத்தை அனுபவிக்கிறார். இந்த அவதாரத்திற்கு முன்பு நிலையான க்ஷீரசாகரசயனத் திருக்கோலத்தை அனுபவிக்கிறார். திருப்பாற்கடல் அலைகள் விண்ணைத் தொடுகின்றன. அங்கு உறங்கியபடி ஆய்ப்பாடியில் உள்ளவாறு அருளிச் செய்கிறார். கம்சனால் ஏவிய அசுரர்களை அழித்து மக்களைக் காத்தவன் கண்ணபிரான். அத்தகைய ஆற்றல்மிக்க பகவான் நம்முடைய அக, புறப் பகைவர்களை அழித்து நமக்குள்ளே ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்ம தரிசனத்தை வெளிப்படும்படி செய்வார் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.    

புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள்
     ஒத்தன பேசவும் உகந்திட்டு
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்
     எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல்
     தாழ்வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை
     வணங்குதும் வா மட நெஞ்சே!      1826    

     வேதத்திற்கு எதிரான சமணர், பௌத்தர் தங்கள் கொள்கைக்கு ஏற்றபடி பேசவும், அதற்கு மகிழ்ந்து என் தந்தைக்கும் நாதராய், தேவர்களின் தலைவனாக உள்ள பகவான் முன்பு விருப்பம் கொண்டு எழுந்தருளிய கோயில், மலை மங்கையர் சந்தனச் சோலையிலுள்ள தாழ்ந்த கிளைகளின் கீழ் இருந்து கொண்டு நித்தமும் மந்திரம் சொல்லி வணங்கும் இடம் மாலிருஞ்சோலையாகும். மட நெஞ்சே! அதை வணங்குவோம் வா! என்று அழைக்கிறார் ஆழ்வார்.
      பௌத்த, சமணர்கள் வேதத்திற்குப் புறம்பாக தாழ்த்திப் பேசினார்கள். அந்தோ! இப்பாவிகள் நம்மை இழந்து சம்சாரிகளாகத் தடுமாறுகிறார்களே என்று பரிதாபப்பட்டாலும், இவர்களுக்கு நாம் வேண்டாதவனாகிலும் நம்மையே பற்றிவரும் நம் பக்தர்களுக்கு நாம் அருள்வோம் என்கிறார். இவர்கள் அன்பு மார்க்கத்தைப் போதித்த போதிலும் இறைகொள்கையில் தெளிவற்றவர்களாக உள்ளார்கள். ஆன்மிகத்திற்கு அகத்தூய்மையும், புறத்தூய்மையும் தேவை. அதனைக் கடைபிடிக்காமல் இருந்ததால் மக்களும் குழம்பினர். நெஞ்சே! முரண்பட்டவரின் கருத்தை ஏற்காமல் உத்தமனான பகவானை நெருங்கிச் செல்வோம் வா என்கிறார் ஆழ்வார்.        
 

வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை
     மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல்
     சூழ் வயல் ஆலி நல் நாடன்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன்
     கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
     ஆள்வர் இக் குரை கடல் உலகே.          1827. 

      வண்டுகள் மொய்த்திருக்கும் சுற்றுச்சூழலைக் கொண்ட திருமாலிருஞ் சோலையிலுள்ள நீலமணி வண்ணனை வணங்குகின்ற அடியார்களைப் போற்றுபவரும், ஒளியுடைய நீண்ட வேலையுடைய திருவாலி நாட்டின் அரசரும், தாழைகளை வேலியாகக் கொண்ட திருமங்கையின் தலைவருமான கலியன் அருளிய இப்பத்துப் பாசுரங்களையும் பாடும் அதிர்ஷ்டத்தைப் பெற்றவர்கள் கடல் கொண்ட இம்மண்ணுலகை ஆள்வாக்ர்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      எங்கும் தேன் ஒழுகியும், வண்டுகள் படிந்து சாரல்களையுடைய திருமாலிருஞ்சோலை மலையிலே திவ்ய விக்ரமாக எழுந்தருளியிருக்கும் நீலவண்ணனான அழகரை அவ்வடிவழகில் ஈடுபட்டு பக்தியுடன் ஆராதனை செய்பவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை பாகவத நிஷ்டையில் காணும் திருமங்கைநாட்டுத் தலைவரான திருமங்கையாழ்வார் மலர்ந்தருளிய இப்பத்துப் பாடல்களை பக்தியுடன் பாடுபவர்களை, ஆர்பரிக்கும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆள்வார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.        

மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து
பூ வளர் உந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடி ஏர் இடை கூடும்கொலோ?        1828 

      மும்மூர்த்திகளில் முதல்வனாக இருப்பவன், அலைகளைக் கொண்ட பாற்கடலில் யோக நித்திரையில் நாபிக்கமலத்தில் உலகை உண்டாக்கி பிரளய காலத்தில் உண்டுமிழ்ந்த தேவர்களின் தலைவன் திருமாலிருஞ்சோலையில் நின்றருளும் யாதவக்குலத் தலைவனான கோவிந்தனைக் கொடி போன்ற இலையுடைய என் மகள் கூடப் பெறுவாளோ என்று திருத்தாயார் கூறுவது போல் அமைந்துள்ளது.
      முன்பாசுரங்களில் தன் மனத்தினை நல்வழிப்படுத்தி பெருமானை அடையப் பார்த்தார் ஆழ்வார். ஆனால் அங்கு சென்று பெருமானின் வடிவழகில் மயங்கி, தமது தன்மையை இழந்து, பிராட்டியின் நிலையை அடைந்தார். அரி, அயன், அரன் ஆகியோருக்குத் தலைவனாக விளங்கியவன். இத்தகையவன் நித்யசூரிகளுக்கு நாதனாயிருப்பதை விடுத்து திருமாலிருஞ்சோலையில் கண்ணபிரானாக வாசம் செய்து வருகிறான். அவனுடன் கூடி இருக்க வேண்டும் என்று பரக்காலநாயகி விரும்புகிறாள். அத்தகைய பாக்கியம் அவளுக்கு கிடைக்குமா? என்று கவலையுடன் தெரிவிக்கிறாள். 

புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும்கொலோ கயல் கண்ணி எம் காரிகையே.?         1829 

      புன்னை மரங்களால் சூழப்பட்ட காவிரியாறு பாயும் திருவரங்கத்தில் இருந்து அருள் புரியும் தலைவனை, மூவுலகைப் படைத்த ஆதிநாதனை, நன்கு வளர்ந்த கிளைகள் கொண்ட, மலர்வனங்கள் நிறைந்த திருமாலிருஞ்சோலையில் குடிகொண்டிருக்கும் பகவானின் திருவடிகளை கயல் போன்ற கண்களையுடைய எனது மகள் காண்பாளோ என்று தாயார் வருந்துகிறாள். இம்மண்ணுலகில் பிறப்பதற்கான காரணம் பகவானிடம் இறுதியில் கூட வேண்டும் என்ற எண்ணம்தான். கீழ்நிலையில் உள்ளவர்கள் மேல் நோக்கி போவார்கள். பகவானிடம் சேருவது நமது பிறப்புரிமை எனக் கொள்ளலாம். பகவானின் ஒளியிலிருந்து தோன்றிய நாம் மீண்டும் பகவானிடம் ஐக்கியமாக வேண்டும். கர்மவினைகளைத் தீர்ப்பதற்கு நாம் இந்த மண்ணுலகில் அவதரிக்கிறோம். இந்தக் கருத்தினை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

 உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆல் இலைமேல்
கண்துயில் கொண்டு உகந்த கரு மாணிக்க மா மலையை
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தம் கோவினை இன்று அணுகும்கொல் என் ஆய் இழையே?        1830 

      பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் தன் வயிற்றினுள் அடக்கி, ஆலிலை மேல் குழந்தையாய் மகிழ்ச்சியோடு கண் வளர்ந்தருளிய, பெரிய கருமாணிக்க மலை போன்ற உருவத்தை உடையவனை, வலிமைமிக்க யானைகள் நிறைந்த திருமாலிருஞ்சோலையில் கோயில் கொண்டிருக்கும் வைகுண்டநாதனை ஆபரணங்கள் அணிந்த என் மகள் அவரை நாட முடியுமோ? என்று தாயார் வினவுகிறாள்.
      பிரளய காலத்தில் உலகினை வயிற்றினுள் வைத்து சிறு குழவியாய் ஆலந்தளிரில் கண்வளர்ந்த தேவாதி தேவனை திருமாலிருஞ்சோலையில் நான் கண்டேன். அவனை அணுகி அனுபவிக்க வேண்டுமென்று இயற்கை அழகுக்கு மேல் செயற்கை அழகாக ஆபரணங்களை அணிந்துள்ள என் மகளானவள் பெருமானை அணுகுவாளா? என்று தாயார் ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறாள். மேலும் அண்டசராசரங்களை ஆட்டிப்படைக்கும், அதனை உண்டாக்கி அழிக்கும் வலிமை பெற்றவனான பகவானை சாதாரணப் பெண் அடைய முடியுமா? என்று கேட்கிறாள். 

சிங்கம் அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
பங்கய மா மலர்க் கண் பரனை எம் பரம் சுடரை
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை இன்று நணுகும்கொல் என் நல் நுதலே?         1831 

      முன்பு நரசிம்மராய்த் தோன்றி இரணியனின் மார்பைக் கிழித்து உள்ளம் மகிழ்ந்தவனை, பெரிய தாமரைப் பூ போன்ற கண்களைக் கொண்டவனை, எல்லோரிலும் மேலானவனை, பரஞ்சோதி என்று போற்றுபவனை, சந்திர மண்டலத்தையும், மேக மண்டலத்தையும் எட்டிப்பிடிக்கும் உயரம் கொண்ட திருமாலிருஞ்சோலையில் கோயில் கொண்டிருக்கும் பகவானை அழகிய நெற்றியையுடைய என் மகள் சென்று சேர்வாளா? என்று தாயார் கேட்கிறாள்.
      பரம பக்தனான பிரகலாதனுக்குப் பல தீங்குகள் புரிந்த இரணியனை மடியில் இருத்தி அவனது மார்பினை இரண்டாகப் பிளந்தவன் பகவான். விரோதி தொலைந்தான் என்று திருவுள்ளமுவந்தவனும், அவ்வுகப்பு திருக்கண்களில் தோன்றும்படி, அனைவருக்கும் மேலானவனை, பரஞ்சோதி ஸ்வரூபியானவனும், நமக்கெல்லாம் எளிமையாக காட்சி தரும் பெருமானை அழகிய நெற்றியையுடைய என் மகள் சென்றடைவாளா என்று கேட்கிறாள்.  

தானவன் வேள்வி தன்னில் தனியே குறள் ஆய் நிமிர்ந்து
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை இன்று வணங்கித் தொழ வல்லள்கொலோ?     1832 

      மகாபலி சக்ரவத்திதியின் யாகத்தில் தனியாக வாமனனாய்ச் சென்று மூன்றடி மண் யாசித்துப் பெற்ற பிறகு திருவிக்ரமனாய் வானுயர வளர்ந்து விண்ணையும் மண்ணையும் அளந்தவனை, மலர்வனங்கள் சூழ்ந்துள்ள திருமாலிருஞ்சோலையில் அருள் புரியும் தேவர்களின் தலைவனை, என் மகள் இன்று வணங்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கிறாள் தாயார்.
      தாயின் ஆதங்கம் இப்பாசுரத்தில் காணப்படுகிறது. அசுர குலத்தில் பிறந்த மஹாபலியினுடைய யாகத்தில் ப்ரக்ருதிகளின் நடுவே தனியாக வாமன வேடம் பூண்டு எழுந்தருளி மூன்றடி மண்ணை யாசித்து, உதகதானம் பெற்றவாறே ஓங்கி வளர்ந்து கீழுலகங்களையும், மேலுலகங்களையும் அளந்தவனை, தேன்மிக்க பூம்பொழில்களால் சூழப்பட்ட மாலிருஞ்சோலையில் சேவை சாதிப்பவனை என் மகள் காண இயலுமோ? என்று கேட்கிறாள் தாயார். செய்வதற்கரியதான செயல்களை என் மகள் செய்து வருகிறாள். தன்னிடம் அன்பு கொள்ள மாட்டானோ? என்று மகள் ஏங்குவதாக தாயார் கூறுகிறாள். 

நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ?     1833 

      பரபக்தியின்றி நாத்திகவாதம் செய்பவர்க்கும், பகவானை நினைக்காதவர்களுக்கும்  கிட்டாதவனை, மணம் மிகுந்த பூம்பொழில்கள் சூழ்ந்த வடமதுரையில் பிறந்தவனை, தேசமெல்லாம் வணங்கும் திருமாலிருஞ் சோலையில் அருள் புரிபவனை, சிறந்த குழல் கற்றையையுடைய பகவானை, மீன் போன்ற விழிகளைக் கொண்ட என் மகள் தரிசனம் செய்ய முடியுமா என்று கேட்கிறாள் தாயார்.
      பக்தியில்லாதவற்கு அவன் அரியவன். இதனால் எம்பெருமானின் ஸ்வாதந்திரம் வெளியிடப்பட்டதாம். பரமபக்தியுண்டானாலன்றி சிலருக்கு இரங்கி அருளான். சிலர் திறத்தில் அந்யபரமான சிந்தனைகளையும் கொண்டோருக்கும் அருள்புரிவான். இத்தகைய திருக்குணத்தை வாய்க்கப் பெற்றவனான பகவான் வடமதுரையில் பிறந்து பிரகாசித்து வந்தான். அது தனது ஏட்டுபுறத்தில் கேட்டு போகவேண்டாதபடி திருமாலிருஞ்சோலையில் விளக்கொளியாக நிற்கிறான். அத்தகையப் பெருமானை என் மகள் காண இயலுமோ? என்று சந்தேகத்துடன் கேட்கிறாள் தாயார்.         

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து
கள்ளச் சகடு உதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாள் நுதலாள் வணங்கித் தொழ வல்லள்கொலோ?      1834 

      கொக்கு வடிவில் வந்த பகாசுரனின் வாயைக் கிழித்தவனை, எதிர்த்து வந்த குவலயாபீடம் என்னும் கொடிய யானையின் தந்தத்தை முறித்தவனை, கள்ளத்தனமாய் சகடத்தில் புகுந்து அசுரனை உதைத்துத் தள்ளியவனை, கரிய மாணிக்கமலை போன்ற வடிவம் கொண்டவனை, தெளிந்த அருவிகள் பொழியும் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் வள்ளலை அழகிய நெற்றியையுடைய  என் மகள் வணங்கித் தொழும்படியான பேறு கிடைக்குமோ? என்று கூறுகிறார் தாயார்.
      இப்பாசுரத்தில் தாயின் ஆதங்கத்தை ஆழ்வார் நன்கு கூறியுள்ளார்.  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சிறுவயது பராக்கிரமத்தை நன்கு உணர்த்தியுள்ளார்.  தாய் மாமனான கம்சன் சிறுகுழந்தையான கிருஷ்ணனை அழித்தே தீருவேன் என்று கூறிக்கொண்டு தன்னிடமிருக்கும் அசுரர்களை விட்டு கிருஷ்ணனை அழிப்பதற்காக அனுப்பி வைத்தான். வெண்மையாக கொக்கு வடிவாகவும், கொடிய யானை வடிவாகவும், வண்டிச் சகடமாகவும் வந்த அசுரர்களை அக்கணமே அழித்தான். இத்தகைய பராக்கிரமசாலியான பகவானை என் மகள் காண இயலுமோ? என்று ஆதங்கப்படுகிறாள். 

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கைதொழவும் முடியும் கொல் என் மொய் குழற்கே?.     1835 

      பாரதப் போரில் அர்ச்சுனனிடம் அன்பு கொண்டு அவனுக்குத் தேரோட்டியாக அமர்ந்து அவனைக் காத்தருளியவனை, தேவர்களுக்குக் கரிய மாணிக்கமலை போன்ற வடிவுடையவனை, பரிசுத்தமானவனை, மலர்வனங்கள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலையில் கோயில் கொண்டிருக்கும் பகவானை வணங்குவதற்கு அடர்ந்த கூந்தலையுடைய என் மகளுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமோ? என்று எதிர்பார்த்துக் கேட்கிறாள் தாயார்.
      பாண்டவர்களின் சத்ருக்களான துரியோதனன் முதலியோர்களை வென்றெடுக்க அர்ச்சுனனுக்கு பக்கபலமாக தேரோட்டியாக இருந்தார் பகவான். பாரதப் போர் முழுவதும் பார்த்தனுடன் கூட இருந்து வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக பகவான் இருந்தார். அவரே நித்யசூரிகளுக்குத் தலைவனாகவும் விளங்கினார். இத்தகையவர் மாலிருஞ்சோலையில் நித்யவாசம் செய்கிறார். ஆவல் கொண்ட என் மகள் அவரைக் காண முடியுமோ என்று கேட்கிறாள் தாயார்.  

வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன் தன்னை
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனை
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நணுகும் கொல் என் நல் நுதலே?.   1836 

      வலம்புரிச் சங்கும், சுதர்சனச் சக்கரமும் தரித்திருப்பவனை, மலை போல் திரண்ட தோள்களையுடைய, கவர்ச்சியான புரிநூல் அணிந்தவனை, மலர்வனங்கள் சூழந்த திருவேங்கட ஆண்டவனை, மறை வடிவானவனை, சிலம்பாறு என்று அழைக்கப்பெறும் நூபுர கங்கையையுடைய திருமாலிருஞ்சோலையில் கோயில் கொண்டிருப்பவனை, திருக்கல்யாண குணங்கள் கொண்ட நாராயணனை அழகான என் மகள் அடையும் பேறு கிட்டுமா? என்று வினவுகிறாள் தாயார்.
      பக்தர்களுக்கு துன்பம் வரும் நேரத்தில் உடன் வந்து காப்பதற்காக திருவாழியும் திருச்சகரமும் திருக்கைகளில் ஏந்தியவனும், திவ்யமான தோள்களும், அழகும் மிளிரப்பெற்றவனும், திருவேங்கடத்தில் நின்றருள்பவனும், மிக நீசர்களுக்கும் அருள் புரிந்தவன் திருமாலிருஞ்சோலையில் காட்சி தருகிறான். இத்தகைய திருக்கல்யாண குணங்கள் நிரம்பப்பெற்ற பெருமானை அடைவதற்கு என் மகளானவள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளாள். அவள் பெருமானை வணங்க இயலுமோ? என்று கேட்கிறாள் தாயார்.    

தேடற்கு அரியவனைத் திருமாலிருஞ்சோலை நின்ற
ஆடல் பறவையனை அணி ஆய் இழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே.      1837 

      ஒருவருக்கும் தன் முயற்சியால் தேடியலைந்தாலும் கண்டுபிடிக்க இயலாதவனை, திருமாலிருஞ்சோலையில் அருள் செய்பவனை, கருடனை வாகனமாகக் கொண்டவனை, அழகிய ஆபரணங்களை அணிந்த என் மகள் தரிசிப்பாளென்று, கொடி பறக்கும் மாளிகையில், மதில்கள் சூழ்ந்த திருமங்கையின் அரசனான கலியன் பாடிய இப்பத்துப் பாசுரங்களையும் பாடுபவர்களைப் பாவங்கள் நெருங்காது என்று கூறுகிறார் ஆழ்வார்.
      எத்தகைய முயற்சி எடுத்தாலும் எளிதில் காண முடியாத பகவான், பெரிய திருவடியின் தோளில் அமர்ந்து திருமாலிருஞ்சோலையில் சேவை சாதிக்கின்றான். என் மகளானவள் ஆற்றாமை மிகுந்து பகவானுடனை சேருவாளோ அல்லது நோய்வாய்பட்டு துன்பம் அனுவித்து பின் அவனுடன் சேருவாளோ? என்று வினவுகிறாள் தாயார். முன் பாசுரங்களில் பெருமானுடன் சேருவாளோ என்று சந்தேகத்துடன் பாடுவது போல் அமைந்தது. ஆனால் இப்பாசுரத்தில் நிச்சயம் என் மகள் பெருமானை அடைந்துவிடுவாள் என்று தீர்மானமாக சொல்வது போல் அமைந்துள்ளதாக வியாக்யானவழி தெரிவிக்கப்படுகிறது. 

பத்தர் ஆவியைப் பால் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினை சென்று விண்ணகர்க் காண்டுமே.    1855 

      அடியார்களுக்கெல்லாம் உயிராக இருப்பவனை, களங்கமற்ற நிலவையொத்த அழகு பொருந்தினவனை, ஆபரணமாலை போன்றவனை, முத்து, நீலமணி, மாணிக்கம் போன்ற இரத்தினக்குவியல் போன்ற ஜகத்காரண பூதனுமான பெருமான் இன்று திருமாலிருஞ்சோலையில் வணங்கி, நாளை திருவிண்ணகர் சென்று வணங்குவோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பக்தர்களுக்கு ஆவியாக இருப்பவன் என்பதை இங்கு ’பத்தராவி’ என்று கூறுகிறார் ஆழ்வார். ஞானியர்களான பக்தர்களைத் தனக்கு உயர்நிலையாக இருப்பவன் என்று கீதையிலும் அருளியுள்ளார். மக்கள் உயிர், உடல் ஆகியவற்றை லௌகீகப் பொருட்களைப் பெறுவதற்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் எம்பெருமான் அவர்களை விட்டு விலகி இருக்கிறான். ஆனால் அடியார்கள் என்றும் பகவானின் சிந்தனைவயப்பட்டு வாழ்கிறார்கள். எனவே அவர்களது உயிரில் அவன் கலந்துள்ளான் என்பது இதன் பொருளாகும். 

மஞ்சு உறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர்
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ?
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே.         1969 

      மேக மண்டலத்தைத் தொடும்படியான உயர்ந்த சிகரத்தையுடைய மாலிருஞ்சோலை மலையிலே எழுந்தருளியுள்ள மணவாளனார் என் மன அமைதியைக் கொள்ளை கொண்டு போனார்.  என் நினைவே அவருக்கில்லை. ஆதவன் மறைந்து போயும் இன்னும் வராமல் எங்கோ ஒளிந்து கொண்டுள்ளார்.  விரக வேதனை என்ற நஞ்சு பரவிய இந்த உடல் ஒரேயடியாக தூங்கிவிட்டால் நமக்கு இனி நல்லதாகும் என்று பரக்காலநாயகி கூறுவது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது.

      திருமாலிருஞ்சோலையில் நித்யவாசம் செய்தருளும் அழகர் பெண்மைக்கு ஈடாக என் நெஞ்சிலிருந்த அடக்கத்தைக் கொள்ளை கொண்டு போய்விட்டார். போனவர் ஒருத்தியை இவ்விதம் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறோமே. அவள் எப்பாடு படுவாள் என்று சிறிதும் நினையாமல் நெஞ்சில் இரக்கமின்றி உள்ளார். அவர்தான் இப்படியென்றால் ஆதவனும் இரக்கமின்றி செல்ல வேண்டுமா? அவன் அஸ்தமித்து இரவு வந்தால் என் பாடு என்னாகும். இதையெல்லாம் அறியாமல் எங்கோ ஒளிந்து கொண்டுள்ளாரே. இந்நிலையில் எம்பெருமானுக்கு உபயோகமில்லாத இந்த உடலை சுமந்து வாழத்தான் வேண்டுமா? என்று வருந்திக் கூறகிறாள். 

தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை
தான் இடமாக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆள் ஆனார் அல்லாதார்
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே   2020 

      வண்டுகள் வாயில் தேனோடு ரீங்காரமிடும் திருமாலிருஞ் சோலையைத் தமது வாசஸ்தலமாகக் கொண்டவனுக்கு, முன்பு அகன்ற குவளை மலர் போன்ற கண்களையுடைய நப்பின்னைக்காக ஏழு காளைகளை அடக்கியவனுக்குத் தொண்டர்களாகாதார் மனிதர்களே அல்லர் என்று என் மனதில் உறுதியாக நினைத்து வைத்துள்ளேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      தேனொழுகும் வாயுடன் வண்டுகள் மாலிருஞ்சோலையில் திரிந்த வண்ணம் உள்ளன. உணவு உண்பது, நித்திரை கொள்வது போன்றவை பசுக்களுக்கும், மானிடர்களுக்கும் பொதுவான குணங்களாகும். விலங்கினங்களைத் தவிர நாம் ஒருபடி ஏற்றம் கொள்ள வேண்டும். அதற்கு ஒரேவழி எம்பெருமானை ஆட்படுவதேயன்றி வேறொன்றுமில்லை. அத்தகைய குணங்கள் இல்லாதவர் மானிடர்களே இல்லை என்ற எண்ணத்தை என் மனத்தில் வைத்துள்ளேன் என்று ஆழ்வார் கூறுகிறார். 

திருமங்கையாழ்வார்                                                                                  திருக்குறுந்தாண்டகம் 

பா இரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்கு
ஆய் இருந்து அமுதங் கொண்ட அப்பனை எம் பிரானை
வேய் இருஞ் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற
மா இருஞ் சோலை மேய மைந்தனை வணங்கினேனே.        2034 

      அகலமும் ஆழமும் கொண்ட திருப்பாற்கடலில் பெரிய மந்தார மலையை நட்டு அது சுழலும்படிக் கடைந்து தேவர்கள் பக்கமிருந்து அவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட்ட தந்தையான எம்பெருமானை, மூங்கில் புதர்கள் சூழ்ந்த விரிந்த கதிர்களையுடைய சூரியன், மரங்களின் நிழலால் தனது ஒளி விழாதபடி ஒதுங்கித் திரியும் திருமாலிருஞ்சோலையில் அருள்புரியும் அழகை நான் தொழுதேன் என்கிறார் ஆழ்வார்.
      மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தனர். தேவர்களும் அசுரர்களும் செய்த இக்காரியத்தால் அசுரர்களுக்கு அமுதம் கிடைக்காதபடி பகவான் மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு மட்டும் அமுதத்தினை கிடைக்குமாறு செய்தருளினான். தகுதியற்றவர்களுக்கு ஆற்றலை வழங்கினால் அது உலகத்தையே பாதிக்கும் என்பதை நன்குணர்ந்தவன் பகவான்.  

பூதத்தாழ்வார்                                                                                             இரண்டாம் திருவந்தாதி 

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல்நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால்               2227 

      நீலமணி போல் அழகுடன் விளங்குபவனும், வள்ளலானதால் நீண்ட திருக்கைகளை உடையவனுமான எம்பெருமான் பள்ளிகொண்ட இடம் திருவரங்கம். குடியிருக்கும் தலம் திருக்கோஷ்டியூர்.   மேலும் பல நாட்களாக  நித்திய வாசம் செய்யும் இடம் திருமலை.  பலநாள்  பயின்றது அழகு மிக்க திருமாலிருஞ்சோலை மற்றும் சோலைகள் நிறைந்த சூழ்ந்த திருநீர்மலையாகும்.
      பாகவதர்கள் இதர போகங்களில் மனம் செலுத்துகிறார்கள்.  இவ்வுலகச் செல்வங்களைப் பெறுவதாலும், இழப்பதாலும் பல துன்பங்களை அடைந்து வருகிறபடியால் எம்பெருமான் பல திவ்யதேசங்களில் கோயில் கொண்டு அருள்புரிகிறார். இத்தலங்களில் பெருமான் பிரசாதமாகவும், தீர்த்தமாகவும் தன்னை ஆட்படுத்திக் கொண்டுள்ளார். தன்னைக் கொள்வாருண்டோ என்று நெடுங்காலம் படுத்துக் காத்துக் கிடப்பது திருவரங்கத்தில், விபவம் போல் வாழ்ந்து மறைந்தது திருக்கோட்டியூரில், சேதனனை வசீகரிக்க நெடுங்காலமாய் தன் அழகை காட்டுது திருமலையில், அதனிலும் திருப்தி கொள்ளாமல் தனது நிலையழகையும், இடையழகையும், இருப்பழகையும், நடையழகையும் ஒருமித்தே காட்டுவது திருநீர்மலையிலாகும். 

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை .                  2229 

      திருமாலே! நான்கு வேதங்களையும் நினைவில் கொண்டு ஊழிக் காலம் முடிந்த பிறகு வெளியிடுகின்றாய்!  அந்த வேதங்களின் பொருளை விளக்க, ஸ்ம்ருதி முதலான துணை நூல்களையும் அருளிச் செய்கிறாய்!  அலர்மேல்மங்கையின் தோள்களோடு கூடி வாழ்கின்றாய்! மூங்கில்கள் நிறைந்த தாழ்ந்த மலைகளையுடைய அற்புதமான உலகில் உள்ளோர்  வலம் வரும் திருமாலிருஞ்சோலை மலையிலே கோயில் கொண்டுள்ளாய்! என்று கூறுகிறார் ஆழ்வார். 
      அன்புடையவனே! பிரளய காலத்தில் உனது திருவுள்ளத்தில் ஸம்ஸ்காரரூபமாக சுருக்கத்தை நான்கு வேதங்களையும் பதங்கள், வர்ணங்கள், பதவர்ணங்களின் அமைப்பு அனைத்தையும் மாறுபாடின்றி அருளிச் செய்தாய். வேதத்தின் பொருள்களை ஐயம்திரிபறத் தெளிவுபடுத்தும் ஸ்ம்ருதிகள், இதிகாசங்கள், ஸாத்விக புராணங்கள் போன்ற துணை நூல்களை, மநு, வால்மீகி, வியாசர், பராசரர் போன்ற முனிவர்களைக் கொண்டு அவர்களுக்கு  அந்தர்யாமியாய் நின்று அருளிச்செய்தாய். அது போன்று பெருமானுக்குத் துணையாக பெரிய பிராட்டியின் தோள்களை அணைத்துக் கொண்டவாறு இருக்கின்றாய். பூமியில் உள்ளவர்கள் ஆராதிக்கத் தக்கவாறு திருமாலிருஞ்சோலையில் சேவை சாதிக்கின்றாய் என்று கூறுகிறார். 

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளங் கோயில் கைவிடேல் என்       2235 

      திருமாலிருஞ்சோலை, திருவேங்கடமலை இவ்விரண்டு மலைகளும் முன் விருப்பத்துடன் நின்றருளும் இடமென்று நீ திருவுள்ளம் கொண்டது போல என் இதயக்கோயிலிலும் கருணை கொண்டு வந்த தங்கியது கண்டு மனம் மகிழ்ந்தேன். அதற்காகத் திருப்பாற்கடலில் நித்திரை செய்வதைக் கைவிடக்கூடாது என்கிறார் ஆழ்வார்.
      தெற்குத் திருமலையும், பெரிய திருமலை ஆகிய இரு மலைகளில் நாம் உகந்து வாழுமிடம் என்றெண்ணி நீ திருவுள்ளம் பற்றியிருப்பது போன்று என் இதயமாகிய கோயிலையும் நாம் உகந்து வாழுமிடமென்று எண்ணி என் உள்ளத்தில் வந்தமர்ந்தாய். இதையே எண்ணி திருப்பாற்கடலான பாலாலயத்தை கைவிட வேண்டாமென்று பிரார்த்திக்கிறேன் என்கிறார். திருப்பாற்கடல் நித்திரை என்பது நம்மை ஞான நிலைக்குக் கொண்டு செல்லும் அற்புதத் திருக்காட்சியாகும். நாகக்குடையில் நித்திரை கொண்ட பெருமான் ஐந்துபட நாகத்தை கட்டுக்குள் வைப்பது போன்று நம் ஐம்புலன்களையும் அடக்கியாள பரந்தாமனை மறத்தல் கூடாது என்பது இதன் பொருளாகும்.  

பேயாழ்வார்                                                                                                   மூன்றாம் திருவந்தாதி 

பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர்.            2342 

      திருப்பாற்கடல், வைகுந்தம், திருவேங்கடம் வண்டு கூட்டங்கள் நிறைந்த நந்தவனங்களைக் கொண்ட அழகிய சோளிங்கபுரம், திருவிண்ணகர் போன்றவற்றில் நித்திய வாலிபனான ஸ்ரீமந் நாராயணனுக்கு, முன் காலத்திலிருந்தே கோயில்களாக உள்ளன. இப்போது என் உள்ளமும் அவன் உறைவிடமாக ஆகிவிட்டது என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஸ்ரீவைகுண்டத்தில் நித்யவாசம் செய்பவனுக்கு வியூகஸ்தானமான திருப்பாற்கடலும், மண்ணுலகிலுள்ள திருவேங்கடமும், வண்டு கூட்டங்கள் நிறைந்து காணப்படும் திருக்கடிகையும், அடுத்துள்ள திருவிண்ணகரும் ஆகிய திருப்பதிகளில் வாசம்புரியும் பெருமான் பல எதிரிகளை அழித்துள்ளான். அதுபோன்று என்னுள்ளில் இருக்கும் தடைகளான எதிரிகளை அழிப்பது அவன் பொறுப்பாகும். அது மட்டுமின்றி என் நெஞ்சிலே புகுவதற்காக திருப்பாற்கடலிலும், திருவேங்கடத்திலும் எழுந்தருளி நித்யவாசம் செய்கின்றான். 

நம்மாழ்வார்                                                                                                                திருவாய் மொழி  

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகில் சார்வது சதிரே         3002     

      கிளர்ச்சியுள்ள துடிப்பான இளமை மாறுவதற்கு முன்னர் வளரும் ஒளியினையுடைய திருமால் எழுந்தருளியிருக்கும் இடமான, செழித்து வளரும் பசுமையான சோலைகள் நிறைந்த திருமாலிருஞ்சோலைக்குச் சென்று இறைவனை தரிசிப்பது ஆத்மாவுக்குப் பேறாகும். மனம் தளர்ச்சியில்லாமல் இருப்பதற்கு இதுவே மார்க்கமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      மென்மேலும் கொழுந்துவிட்டு எரிகின்ற ஞான ஒளியினையுடைய இளமை பிராயம் முடிவதற்கு முன்பே அழியாத ஒளி பொருந்தியவனான எம்பெருமான் நித்யஸந்நதானம் பண்ணியிருக்கின்ற கோவிலாக வளர்ந்துள்ள இளஞ்சோலைகளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை என்னும் மலையை, எனது மனம் தளர்ச்சியில்லாமல் இருப்பதற்கு இதுவே நல்ல மார்க்கமாகும். இளமை மாறுவதற்கு முன்னரே மாலிருஞ்சோலை பெருமானை தரிசிக்க வேண்டும் என்கிறார். வலிமையுள்ள இளமைக் காலத்தில் தான் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி காலத்தை வீணாகக் கழிக்காமல் பகவான் மீது இடையறாத சிந்தனையை மேற்கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும்.    

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை
பதியது ஏத்தி எழுவது பயனே        3003 

      அழகும் இளமையும் கொண்ட பருவமங்கையர்  கூறும் பசப்பு மொழிகளையும், செய்யும் செயல்களையும் நம்பி ஏமாற வேண்டாம். அதை விடுத்து திருமாலிருஞ்சோலையைப் போற்றிப் பணிவதே பயனுள்ள  மார்க்கமாகும். சந்திரன் தவழ்ந்து வரும் உயரிய சிகரங்களைக் கொண்ட அழகர் மலையிலே தான் முழங்கும் பாஞ்சசன்னியத்தை ஏந்தி அழகர் வீற்றுள்ளார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      மங்கையர்களால் உங்களுக்கு உண்டாகும் அதிகமான பிரேமையை நினையாமலும், அவர்கள் செய்யும் செயல்களை சற்றும் மதியாமல் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் மொழிகளில் சிக்கி சிற்றின்பத்தில் மூழ்கினால் நாம் பகவானை மறந்த நிலையில் போவோம். பெண்களின் இளமை என்பது நீர்க்குமிழி போன்று நிலையற்றது. அதுபோன்று நம் இளமையும் மாறக்கூடியது. முதுமை வரும், நோய் வரும், பசப்பிய பெண்கள் பரிகசிப்பார்கள். வாழ்நாள் வீணாகும். பெண் மோகத்தால் உயரிய தவத்தை இழந்து பெறற்கரிய பேற்றினை இழந்தவர்கள் உண்டு என்று கூறி ஆழ்வார் நம்மை நல்வழிப்படுத்துகிறார்.  

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயன்மலை அடைவது அது கருமமே     3004 

      நெஞ்சமே! பயனற்ற காரியங்களைச் செய்வதால் பலனில்லை. மழைநீரை சுமந்திருக்கும் கரிய மேகம் போன்ற நிறத்தைக் கொண்ட கள்ளழகர் உறையும் கோயிலான திருமாலிஞ்சோலை மலையை அடைந்து பகவானை வணங்கு. அழகான சோலைகள் சூழ்ந்த அழகர் மலையை அடுத்துள்ளதாலே பேறுபெற்ற அவன் மலையை அடைவதே சிறப்பாகும் என்கிறார்.
      திருமலையோடு தொடர்புடைய ஒரு மலையைத் தொழுதாலும் போதும். அது நமக்கு பயன் தரும் என்கிறார். பரமபதத்திலிருக்கும் இருப்பையும் மற்றும் அதன் அவதாரங்களைப் பற்றியும் சிந்திப்பதனால் மட்டும் பயன் ஏற்படப்போவதில்லை. மனம் என்பது மாறி மாறி சிந்திக்கின்றது. ஒரு சமயம் பகவானைத் தொழும், மற்றொரு சமயம் இகலோக ஆசைகளை சிந்திக்கும். இந்நிலையை மாற்ற வேண்டும் என்கிறார். ஆசையின் காரணத்தினால் அதை அடைவது எப்படி என்று எந்நேரமும் சிந்தித்த வண்ணம் மனம் உள்ளது. திடீரென்று மரணம் சம்பவிக்கின்றது. இதனால் நம் பிறவியே எவ்வித உபயோகமும் இல்லாமல் போய்விடுகின்றது.  இதனைத் தவிர்க்க பயனற்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்கிறார் ஆழ்வார். 

கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலை
திருமலை அதுவே அடைவது திறமே.       3005 

      கருமங்களாகிய கொடிய பாசபந்தங்களை நீக்கி உய்ய வேண்டுமானால் கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்தவன் மிகவும் கம்பீரமாக குடிகொண்டிருக்கும் கோயிலான கார்மேகங்கள் தவழும் திருமாலிருஞ்சோலையான புனித மலையை அடைவதே ஏற்ற உபாயமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஒருவருக்கும் எளிதில் விடுவித்துக் கொள்ள முடியாத கரும பந்தங்களைக் கழிப்பதற்கு எளிதான வழியாக இருப்பது எம்பெருமானின் திருத்தலமே. நம்மை சுற்றியுள்ள பந்தங்கள் அனைத்தும் நம்மை பாசம் என்னும் வலையில் சிக்க வைக்கின்றன.  அதனால் நமக்கு மிஞ்சுவது துன்பம் மட்டுமே. இதனை நாம் புரிந்து கொள்ளாமல் பாசத்திலேயே உழன்று கொண்டிருக்கிறோம். இவைகள் பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்து நம்மை துன்புறுத்துகின்றன. இந்த நிலையற்ற உறவுகளுக்காக நாம் மண்ணுலகம் வரவில்லை. நாம் பிறவி எடுத்தது வினைப்பயனை அனுபவித்து அதனைப் போக்கிக் கொள்ளத்தான். நன்மைகள் பல செய்து தீமைகளைக் களைந்து பரமனை அடைவதே நமது பிரதான நோக்கமாகக் கருத வேண்டும் என்பது ஆழ்வார் நமக்குக் காட்டிய பாதையாகும்.    

திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை
புறமலை சாரப் போவது கிறியே          3006 

      பல வழிகளில் வலிமையுடைய பாவங்களைப் பெருக்கிக் கொள்ளாமல் திருவாழியை ஆயுதமாகக் கொண்டுள்ள பெருமான் குடியிருக்கும், குற்றமற்ற நீர்ச்சுனைகள் சூழ்ந்துள்ள திருமாலிருஞ்சோலையில் தர்மத்தை நிலை நிறுத்தும் சக்கரத்தை தரித்த பகவான் கோயில் கொண்டிருக்கும் மலையினை சார்ந்து போவது சிறந்த மார்க்கமாகும்.
      வலிமையுள்ள தீவினைகளால் சிக்கியிருப்பதால்தான் நாம் கணக்கற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறோம். நம் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியக் காரணம் இத்தகைய கொடிய தீவினைகள்தான். இதனைப் புரிந்து கொள்ளாமல் பலர் தெய்வ நிந்தனை செய்கிறார்கள். ஒருவரை செல்வந்தராகவும் மற்றொருவரை ஏழ்மையிலும் படைக்கும் காரணமே அவர்கள் கொண்டிருக்கும் கர்மவினைகள் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வினைகளுக்குத் தக்கவாறு பலன்களை அளிக்கிறான் இறைவன். பகவான் நடுநிலைமையாக உள்ளான் என்பதை அறியாமை நிறைந்தவர்கள் உணர்வதில்லை என்பதே இதன் கருத்தாகும். 

கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே.   3007 

      கீழ்மையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று ஆழ்வார் கூறுகிறார். உறியில் உள்ள வெண்ணெயை எடுத்துண்டவன் எழுந்தருளியிருக்கும் கோயில், தன் குட்டியோடு பெண்மான் சேர்ந்து வாழும் திருமாலிருஞ் சோலையாகும். நன்னெறியில் வாழ்வதற்கு அதை நினைப்பதே நலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஸ்ரீகிருஷ்ணராக சௌலப்ய, சௌசீல்ய குணங்களைக் கொண்ட   எம்பெருமான் பிற்பட்டவர்களும் எளிதாக காணுமாறு திருமலையில் வாசம் செய்கிறான். அவனே திருமாலிருஞ்சோலையிலும் வாசம் செய்கிறான். எனவே அவன் வழியில் மனதைச் செலுத்துமாறு கூறுகிறார். உண்மையை புறந்தள்ளி பொய்யில் ஈடுபடும் மக்களை நல்வழிப் படுத்துகிறார் ஆழ்வார். மற்றவர்களுக்காக நமது வாழ்வை அர்ப்பணிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாமோ தீவினைகள் புரிந்து மீண்டும் பாவத்தை சேர்க்கிறோம். இத்தகைய பாவமூட்டைகளை சேர்த்துக் கொண்டால் நாம் என்று அவற்றைக் களைவது? அதன் பின் எவ்விதம் இறைவனை அடைவது? என்று வினவுகிறார் ஆழ்வார். 

 நலம் என நினைமின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை
வலம் முறை எய்தி மருவுதல் வலமே.      3008 

      மானிடர்களே! நரகத்தில் அழுந்தாமல் நன்மை தருவது எதுவென்று நினைத்துப் பாருங்கள். பிரளய காலத்தில் வராகமாகி பூமியை கொப்பில் குத்தி எடுத்து வந்த எம்பெருமான் நித்தியவாசம் செய்யும் கோயில், குற்றமற்ற சந்திரன் தோன்றும் திருமாலிருஞ்சோலையாகும். அங்கு சென்று முறையாய் அதனை வலம் வருவதே வரம் பெறும் மார்க்கமாகும் என்கிறார் ஆழ்வார்.
      தான் சொல்லும் வார்த்தைகளை நன்மை என்று கருதுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். இதனை விலக்ஷனமான புருஷார்த்தம் என்று நினையுங்கள். நரகத்தில் அழுந்தாமல் இருக்கும் இவ்விடத்தை வலம் வருவதே நன்மை தரும் என்கிறார். ஆழ்வார் குறிப்பிடும் நரகம் என்பது தன்னலம் என்கிறார். மக்களை நல்வழிபடுத்த நான் நூறாயிரம் முறை பிறக்கவும் தயாராகவுள்ளேன் என்கிறார். எனது முக்தியை நான் பெரிதெனக் கருதவில்லை. என் சகோதர மக்கள் துன்பத்தில் ஆழ்ந்து கிடக்க நான் முக்தி  பெற்று இறைவனடி சேருவதில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை என்கிறார்.  இதே கருத்தை இராமானுஜரும் கூறியுள்ளார். நம் மனம் தெளிவடைய சோலைமலை இறைவனை சரண் புகுவதே சிறந்த உபாயமாகும் என்கிறார். 

வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே
வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே         3009 

      கீழ்மையான விஷயங்களில் நாள்தோறும் ஈடுபட்டு அதில் பலத்தைப் பெருக்காமல் தேவர்கள் வலம் வரும் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று மலையை வலம் வாருங்கள். அங்கே ஆநிரைகளை மேய்த்து வரும் கோவிந்தன் கோயில் கொண்டிருக்கிறான்.  அவனை தினமும் வலம் வந்து வாழ்வதே பாக்கியமாகும் என்கிறார் ஆழ்வார்.
      கீழ்த்தர எண்ணங்களைக் கொண்டு பலத்தை பெறுக்காமல் தன்னையே நமக்குக் கொடுத்து, தன்னை மனதார அனுபவிப்பதற்கான சக்தியையும் நமக்கு கொடுத்துள்ள ஸ்ரீகிருஷ்ணன் இங்கு கோயில் கொண்டுள்ளான். மேலும் அரசர் நகர சோதனை செய்யும்போது கூடவே அவருடன் செல்லும் நம்பிக்கையுடையோர் போல நித்யசூரிகள் அவருடன் வலம் வந்தவண்ணம் உள்ளார்கள். ஆழ்வார் குறிப்பிடும் பலம் என்பது ஆன்ம பலமாகும். நமக்குள் ஆத்மா உள்ளது. அதுபோல மற்ற உயிர்களுக்குள்ளும் ஆத்மா பிரகாசிக்கின்றது. எனவே அடுத்தவருக்கு தீங்கிழைக்காவண்ணம் கொண்ட பலம் வர வேண்டுமெனில் சோலையில் உறையும் பகவானை சரண் அடைவதே சிறந்ததாகும். 

வழக்கு என நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெருங்கோயில்
மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே .        3010 

      கொடிய பாவங்களில் மூழ்காமல் பேய்ச்சியான பூதனையைக் கொன்றவன் அமர்ந்தருளும் பெரிய கோயிலான, இளமையான யானைக்கூட்டங்கள் சேர்ந்திருக்கும் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அதை வணங்க முயல்வதே முறை என்று எண்ணுங்கள். அழகனது பெருமைகளை சிந்திப்பதே வெற்றியைத் தரும் என்கிறார் ஆழ்வார்.
      ஆழ்வார் நம் மக்களை கொடிய பாவங்களில் என்றும் ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள் என்கிறார். என்றும் அழகனது பெருமைகளையே சிந்திப்பது நன்மையைப் பயக்கும் என்கிறார். கோவர்த்தன மலைபிடித்து இந்திரனின் அகந்தையை அகற்றினான். விக்ரமனாகத் தோன்றி பலி மன்னனின் ஆணவத்தை ஒழித்தான். பிரளய காலத்தில் உலகத்தையே காத்தருளினான்.  கம்சன், சிசுபாலன் போன்ற துஷ்டர்களை அழித்தான். பொறாமை குணம் கொண்ட துரியோதனின் கதையை முடித்தான். நம்மை காக்க இத்தகைய வலிய போராட்டத்தில் ஈடுபட்ட நம் பகவானின் பெருமைகளை என்றும் பேசுவோம். 

சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலை
போது அவிழ் மலையே புகுவது பொருளே        3011 

      வெற்றி கொள்வதற்கான வழி இதுவென்று நினைத்து சூதாட்டமும், களவும் செய்யாமல் முன்காலத்தில் வேதங்கள் விவரித்துக் கூறிய பகவான் விரும்பிக் குடியிருக்கும் கோயிலான பெண் மயில்களோடு ஆண் மயில்கள் வாழ்கின்ற திருமாலிருஞ்சோலையில் அரும்புகள் மலர்கின்றபோது அழகனை வழிபடுவதே வாழ்வதற்கான பொருளாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      வெல்வதற்கான வழி திருட்டும் சூதாட்டமும் என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். பொறாமை குணம் கொண்ட துரியோதனன் சூதாட்டத்தில் பாண்டவர்களை வெற்றி கொண்டான். அவர்களது ராஜ்ஜியத்தையும், பொருட்களையும் கவர்ந்து கொண்டான். இதுவும் ஒருவிதத்தில் திருட்டே ஆகும்.  ஆனால் அவனுக்கு இந்த வெற்றி நிலைக்கவில்லை. இளமையிலேயே அவன் மரணிக்க வேண்டியதாகி விட்டது. எனவே சூதும், திருட்டும் வெற்றி கொள்வதற்கான மார்க்கம் இல்லை என்று இதன் மூலம் அறியப்பட வேண்டும்.      

பொருளின்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர்சட கோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்து
அருள் உடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே.    3012 

      பயன்படும் என்று இவ்வுலகத்தைப் படைத்தவனுடைய நற்குணங்கள் விஷயமாக மயக்கம் இல்லாத வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த கொடையையுடைய ஸ்ரீசடகோபரால் அனைத்து ஆத்மாக்களும் ஞானத்தைக் கொள்ளும்படியாக அருளிச் செய்யப்பட்ட ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களும் பாவங்களை அழித்து பெருமானின் திருவடிகளில் சேர்க்கும்.
      இதுவரை பாடப்பட்ட பத்து பாசுரங்களும் நம்முடைய வெற்றிக்கு உபாயத்தைக் கூறின. தீய வழிகளில் பாவங்களைப் பெருக்கிக் கொள்ளாமல் திருமாலிருஞ்சோலையை வலம் வரவேண்டும் என்பதை உணர்த்தின. இளமையிலேயே பகவானை நாட வேண்டும். என்றும் பகவானின் பெருமைகளை சிந்திப்பதே நமக்கு வெற்றியைத் தரும். தீய வழிகளில் ஈடுபட்டு பெறற்கரிய இம்மனிதப் பிறவியை வீணடிக்காமல் முற்பிறவியில் செய்த பாவங்களைக் கழித்து இறைவனின் திருப்பாதங்களை அடைய வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.
 

முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச் சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோதிருமாலே கட்டுரையே
    3013 

      பெருமானே! நின் திருமுகத்தின் ஒளியால் திருமுடி ஒளியுடையதாக மலர்ந்திருக்கிறதா? உனது திருவடிகளின் ஒளி நின்றருளும் தாமரையாய் பரந்துள்ளதா? உனது திருமேனியின் ஒளியானது பீதாம்பரத்தோடும் மற்ற ஆபரணங்களோடு கலந்துள்ளதா? எமக்கு சொல்லியருள வேண்டுகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார். 
      பெரிய பிராட்டியாருடன் என்றும் நீங்காதிருக்கும் பெருமாளே! உனது திருமுகத்தின் மேலுள்ள கிரீடத்துடன் கூடிய திருமுடியில் ஒளி திகழ்கின்றதோ?  உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராகப் பரந்து அலர்ந்து விட்டதோ? திருமுடியின் ஒளி காணமுடியாமல் திருவடிக்கு வந்தால் அதன் பேரொளி என்னால் தாங்க முடியவில்லையே! மேலும் நீ சாற்றியுள்ள ஆபரணங்கள் ஒளி வீசுகிறதே! இத்தகைய பேரொளியும், பேரழகும் வாய்த்தது எதனால் என்று சொல்லியருள வேண்டும் என்கிறார்.

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ!    3014 

      பரஞ்சோதியே! சொல்லப் புகுந்தால் தாமரை மலர் போல் உனது கண்கள், பாதங்கள், கைகளுக்கு ஒப்பாகுமா? உருக்கி வார்த்த பத்தரைமாற்றுப் பொன் போன்று உன் திருமேனி ஒளிக்கு ஈடாகுமா? இவ்வுலகத்தார் உன்னை இதற்க்கெல்லாம் ஈடாக புகழ்வதெல்லாம் மனதில் பட்டதைப் பேசும் அறிய பேச்சுக்களே என்பதை உணர்த்துகின்றன என்கிறார் ஆழ்வார்.
      உண்மையைச் சொன்னால் தாமரைமலரானது உமது திருக்கண்கள் திருப்பாதங்கள் திருக்கைகள் இவற்றிற்கு ஒப்பாகாது. காய்ச்சிய நன்பொன்னின் பேரொளியும் உமது திருமேனிக்கு ஒப்பாகாது. இவ்வுலகத்தார் ஏதேதோ ஒப்புக்காக உம்மை புகழ்வதெல்லாம் பெரும்பாலும் வெற்றுரையாக பயனின்றிப் போகும். நீர் பேரொளி உடையவராகத் திகழ்கின்றீர் என்கிறார் ஆழ்வார். ஆழ்வார் கூறும் ஒளியானது பரமாத்மா, பேரொளியின் கூறு நம் உடலில் உண்மை வடிவமாக உள்ளது. கர்மவினை என்னும் மாயத்திரை இவ்வொளியை வெளிக் கொணராமல் உள்ளது என்ற பொருளில் அமைகிறது. 

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே.     3015 

      நீ எல்லாவற்றிலும் மேன்மை பெற்று மேலான ஒளி உருவமாக விளங்குகின்றாய். உன்னைத் தவிர வேறொரு பிரகாசமான வடிவத்தைக் காணாததால் உபமானம் சொல்ல முடியாதவனாகிறாய். உலகங்களை எல்லாம் உன்னுள் அடக்கிய என் பரஞ்சோதி! கோவிந்தா! உன் குணங்களை வர்ணிக்க என்னால் ஆகாது! என்கிறார் ஆழ்வார்.
      எளிமையின் எல்லை நிலமான கோவிந்தனே! பரஞ்சோதியாக பேரழகுடன், பேரொளியுடன் திகழ உம்மைவிட மற்றொருவர் பரஞ்சோதி இல்லாத வண்ணன் இந்த பிரம்மாண்டத்தை நடத்திக் கொண்டு உமது திருமேனியாகவே இந்தப் பிரபஞ்சத்தையெல்லாம் உன் எண்ணத்தாலே படைத்த எமது பரஞ்சோதியே! உலகத்தார் போற்றுவனவெல்லாம் வெற்றுரையாய் பரஞ்சோதியாகவும், நீர்மைக்கு எல்லை நிலமாகவும் உமது அளவில்லாத தெய்வீக குணங்களையெல்லாம அடியேனால் பேச முடியாது என்கிறார் ஆழ்வார். 

மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம்
நின் மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே?      3016 

      பரந்த இவ்வுலகில் வாழ்வோர் அறியாமையால் மலர் போன்ற அழகுமிக்க உன் திருமேனியை மனத்தில் வைத்து பூஜிக்க மாட்டாதவர்களாக உள்ளார்கள்.  மேலும் அவர்கள் அறிவு குழம்பும்படி பல்வேறு சமயங்களைக் கொடுத்துள்ளாய்.  நீயோ திருத்துழாயிலே ஆசை வைத்தாய். இவ்வுலகம் மாந்தர்கள் மீது கொண்ட பேதமையால் உன் அருளை இழந்து துன்பத்தில் வருந்த மாட்டார்களோ.. என்ற பொருளில் அமைந்துள்ளது.
      மலரில் பிறந்த பிரம்மனால் படைக்கப்பட்ட இந்தப் பேருலகத்தில் வாழ்பவர்கள் எல்லாம் மலர் போன்ற உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க முடியாதவர்களாக உள்ளார்கள். அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும்படி பல்வேறு சமயங்களை ஆக்கி வைத்தீர். அவர்களைக் கடைத்தேற்றும் வழியைக் காணாமல் நீர் உமது திருமேனியிலும் திருமுடியிலும் இருக்கும் மலர்த்துழாய் மேலே மனம் வைத்தீர். இவ்விதம் இருந்தால் இம்மாஞாலத்து மக்கள் வருந்த மாட்டார்களா? என்று கேட்கிறார் ஆழ்வார். 

வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்
வருந்தாத ஞானம் ஆய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்
வரும் காலம் நிகழ் காலம் கழி காலம் ஆய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே?    3017 

      பெருமானே! உனது இந்த வடிவழகை என்னால் வர்ணனை செய்ய இயலுமா? வருந்தாமல் இயல்பாக உள்ள மலர்ந்த ஒளிக் கற்றைகளைக் கொண்ட திருமேனியைக் கண்டபோது இது அரிய தவத்தின் பலனோ என்று அறியத் தோன்றுகிறது.  அவ்விதமின்றி இயல்பாக அமைந்த ஞானமாய் என்னால் காண முடியாதபடி எல்லாவற்றிலும் நீ நிறைந்துள்ளாய். முக்காலத்தின் நாயகன்! நீ. உலகங்களைக் காப்பாற்றும் உன் புகழை என்னால் எப்படி வரையறுத்துக் கூற முடியும் என்கிறார் ஆழ்வார்.
       முயற்சி இல்லாத இயல்பான   தவத்தின்  பலனோ என்னும்படி  கிரணங்களின்  ஒளியுடைய  வடிவு உடையவனாய்  இயல்பான  ஞானமுடையவனாய்  எங்கும் வியாபித்திருப்பவனே  எதிர்காலம்   .நிகழ்காலம் இறந்தகாலம் என்று  மூன்று காலங்களுக்கும் தலைவனாய்  உலகங்களை  ஒருபடியாக  காப்பாற்றுபவனே! குணங்களை எங்கே முழுவதுமாக முடியக் கூறுவேன் என்கிறார் ஆழ்வார். 

ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் உலகத்து எவ் எவையும்
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே?      3018 

      மலர்களோடு கூடிய திருத்துழாய் மாலை தரித்த திருமுடி கொண்டவனே! தாமரையில் வாழும் பிராட்டியை மார்பில் தரித்தவனே!  அனைத்து உலகங்களிலும் இந்தக் குலத்தில் பிறந்தவர், அதன் சாகையை ஓதுவது என்ற நியதியுடைய வேதியர்களால் ஓதப்படும் நான்கு மறைகளும், சாத்திரங்களும், சாத்வீக குணம் கொண்ட உன் பெருமைகளின் வகையேயன்றி வேறில்லை. அப்படி இருக்க என்ன சொல்லி நான் வாழ்த்துவேன் என்று கேட்கிறார் ஆழ்வார்.
      ஓதுபவர்களின் வேதங்களெல்லாமும் மற்றும் எந்த உலகிலும் எப்படிப்பட்ட சாத்திரங்களும் உமது புகழைத்தான் ஓதுகின்றன. பிறிதொன்றுமில்லை. மலர்கள் வாழ்கின்ற நந்தவனத்தில் விளைந்த திருத்துழாய் விளங்கும் திருமுடியினாய், அலர்மேல்மங்கை வாழும் மார்பினாய்! உம்மை வாழ்த்துவதற்கு அடியேன் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்? என்கிறார் ஆழ்வார். வேத சாத்திரங்கள் ஓதுவது பகவானின் சாத்வீக குணங்களேயன்றி வேறு இல்லை. நாம் சாத்வீகமாக இருந்தால்தான்  பகவானின் பெருமைகளை அறிய முடியும். மக்கள் தாமச குணங்களில் இருப்பதால் அவனை அடைவதில் தாமதம் ஏறுபடுகிறது என்கிறார். 

வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே?    3019 

      உன்னை வாழ்த்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதேயன்றி எவராலும் முழுமையாக! வாழ்த்த முடியவில்லை. உனது உந்தித் தாமரையில் நான்முகனைப் படைத்து நீர் சூழ்ந்த உலகெல்லாம் படை என அருளினாய். ஞானம் கொண்ட பல தேவதைகளை பிரம்மன் உண்டாக்கினான். பிரம்மாதி தேவர்களும் உன்னைத் துதித்தால் உனது பாரம்பரியப் புகழ் மாசடையாதா? அவர்களால் முழுமையாகப் புகழ முடியாது என்ற கூறுகிறார் ஆழ்வார்.
      பெருகிய பிரம்மாண்ட நீரில் உலகினையும் மக்களையும் படைப்பாய் என்று உமக்குள் இருக்கும் பிரம்மனைப் படைத்தீர். மிகச் சிறந்த ஞானம் கொண்ட அரன் முதலிய தெய்வங்களெல்லாம் உமது குணம் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு பல்வேறாகப் போற்றித் துதிக்கிறார்கள். அவ்விதம் துதிக்கும்போது உமது தொன்மையான புகழ் மங்கி விடாதோ? பிரம்மனால் படைக்கப்பட்ட மக்கள் எவ்விதம் தொன்மையான உமது புகழைப் பாட முடியும். அவ்விதம் பாடினால் உமது புகழ் மாசுபட்டு விடுமே என்று கூறுகிறார். 

மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது
மாசூணா ஞானம் ஆய் முழுதும் ஆய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாத மலர்ச் சோதி மழுங்காதே?    3020 

      பெருமானே! நீ எக்குற்றங்களும் இல்லாத ஒளி வடிவமான திருமேனியைப் பெற்றுள்ளாய். பருப்பதும் இளைப்பதுமில்லாத குறையற்ற ஞானத்தைப் பெற்றவன். உலகில் உருவான அனைத்திற்கும் அதிகாரியாகத் திகழ்பவன்.  பல்வாறு பெருமைகளையுடைய உன்னை குற்றமில்லாத ஞானத்தையுடைய நான்முகன் போற்றினால் மாசில்லாத உன் பாதங்களில் பரவியுள்ள ஒளியானது மழுங்கி விடாதா என்கிறார் ஆழ்வார்.   
      குற்றமே அடையாத ஒளிவீசும் திருமேனியுடன் கூடாது குறையாது குற்றமே அடையாத பேரறிவுடன், எல்லாப் பொருட்களுமாகி அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கின்றீர். அப்படி இருக்க குற்றமில்லாத உயர்ந்த கோலம் கொண்ட தேவர்களின் தலைவனான உம்மை வழிபட்டால் உமது குற்றமில்லாத திருப்பாத மலர்களின் பேரொளி மங்கிவிடுமே! என்கிறார் ஆழ்வார். பகவான் என்ற பேரொளியை நாம் நெருங்கத் தவறியதால்தான் நாம் ஒளிகுன்றி வாழ்ந்து வருகிறோம். இதனை நன்கு உணர்ந்து அவனை அடைதலே பிரதானம் எனக் கொள்ள வேண்டும். 

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே?      3021 

      கூரிய நுனியையுடைய சுதர்சனச் சக்கரத்தை வலக்கரத்தில் கொண்டு பேரன்புடன் உன்னை வணங்கியபடி கூக்குரலிட்டு அழைத்த யானையை காப்பாற்றுவதற்காக கருடன் மேல் வந்து காட்சி தந்தவனே! பூவுலகத்தில் குறைவான ஞானத்தையே ஆயுதமாகக் கொண்டு வணங்கும் அடியார்களுக்கு நீ இரங்கினால் உன் பேரொளி மறையாதா? என்ற வினவுகிறார் ஆழ்வார்.
      தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த பெரும் களிறினைத் துன்பத்திலிருந்து காப்பதற்காக கூர்மை மிக்க ஒளி பொருந்திய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி, கருடப்பறவையின் மேல் அமர்ந்து வந்து யானையின் துன்பத்தைத் தீர்த்த தேவனே! உமது மழுங்காத ஞானமே கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே. அடியார்களுக்கு உதவுவதற்காக நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றிவிடாதா என்று வருந்திக் கேட்கிறார் ஆழ்வார். 

 மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே?   3022 

      நான்கு வேதங்களுக்குள்ளும் பொருளாக நிற்கும் மலர் போன்ற ஜோதியே! முறையாக இவ்வுலகங்களை உண்டாக்கி, வராகமாய் எடுத்து வந்து பிரளய காலத்தில் உண்டுமிழ்ந்து மகாபலியிடம் மண் அளந்தவன் நீ! பிறைசூடிய சிவபெருமானும், நான்முகனும், இந்திரனும் உன்னைப் போற்றி வணங்குகிறார்கள். அவ்வாறிருக்க நீ வைகுண்டத்தில் வீற்றிருப்பது ஓர் ஆச்சரியமோ என்று வினவுகிறார் ஆழ்வார்.
      மறையான நான்கு வேதங்களிலும் உட்பொருளாக விரிந்து கிடக்கும் பேரொளியே! முறைப்படி மூவுலகங்களைப் படைத்தீர். வராகப் பெருமானாகி அவற்றை இடந்தீர்! பிரளய காலத்தில் அவற்றை உண்டீர்! பின் உலகம் தோற்ற காலத்தில் அவற்றை உமிழ்ந்தீர்! வாமன திருவிக்கிரமமாகி அவற்றை அளந்தீர்! பிறைதாங்கிய சிவனும், இந்திரனும், பிரம்மனும் ஸ்வாமியாக நீர் இருப்பதை அறிந்து உம்மைப் போற்ற நீர் வீற்றிருப்பது என்ன வியப்போ? என்று கேட்பது போல் பொருள் அமைந்துள்ளது.     

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ் ஞான வேதியனை
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே.     3023 

      மற்றவருக்கு வியப்பளிக்கும் குணங்கள் பகவானிடம் என்றும் இயல்பாக உள்ளவை. அத்தகைய ஞான தேவனை, வெற்றியால் கீர்த்தி பெற்ற சான்றோர்கள் குடியிருக்கும் திருக்குகூர் சடகோபன் ஐயம் நீங்கி வணங்கிப் பாடிய ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்தும் கடல்சூழ்ந்த இவ்வுலபில் மீண்டும் பிறவி எடுக்காமல் உய்வுப்பெறப் பயன்படும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      மற்றவருக்கு வியப்பாக இருப்பதெல்லாம் தனக்கு வியப்பில்லாமல் போகும்படியான பெருமையையுடைய மெய்ஞானத்தை அருளும், வேத வடிவில் இருப்பவனை, வெற்றியும் புகழுமுடையவர்கள் வாழ்கின்ற திருக்குருகூரில் அவதரித்த சடகோபனாகிய நம்மாழ்வார், குற்றங்கள் ஏதுமின்றித் தொழுதுரைத்த ஆயிரத்தில் இப்பத்து பாடல்களைப் பாடுபவர்கள் ஆர்ப்பரிக்கும் கடல்சூழ்ந்த இவ்வுலகில் முன்னேற்றி மீண்டும் பிறவாநிலை அடைவார்கள் என்பது இப்பாடலின் பொருளாகும்.           

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந் நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?   3024 

      கடல் சூழ்ந்த உலகத்தைப் படைத்த பெருமானே!  நான் கருவறையில் உள்ள காலத்தில் நீ எனக்களித்த தேகத்தின் நல்வினை, தீவினைகளை அனுபவித்துக் கொண்டு உழல்கிறேன். ஒவ்வொரு நாளும் கொடிய நோய் வருத்துகிறது.  அவை வீழ, என் பாவங்கள் வேரறத்து எந்நாளில் உன்னை வந்து சேரப் போகிறேன்? என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
      உன்னை அடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளிய சரீரத்தைக் கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலிலேயே இருந்தேன் என்கிறார் ஆழ்வார்.  இப்பாசுரம் மூலம், கருவில் இருக்கும்போதே நல்வினை தீவினைகளின் தாக்கம் தொடங்கிவிடுகறது. அதற்கேற்றவாறு நம் உடல் அமைகிறது. கர்மவினைகள் தீர்க்கவே நாம் பிறவி எடுத்துள்ளோம். புதிய வினைகள் சேர்த்துக் கொள்ளாமல் பழைய வினைகளைக் களையப் பார்க்க வேண்டும்.  நாம் பெறும் நோய் அனைத்தும் கர்மவினைகளின் பயனே. இதனைப் புரிந்துகொண்டு எம்பெருமானை சரணடைய வேண்டும். 

வன் மா வையம் அளந்த எம் வாமனா
நின் பல் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து  நிற்பது எஞ்ஞான்றுகொலோ?     3025 

      வாமனனாய்த் தோன்றி உலகம் முழுவதையும் அளந்து கொண்டவனே! உனது பலவகையான கடக்க முடியாத பெரும் மாயைக் காரணமாக பலவகைகளில் உழன்றுத் தவிக்கிறேன். அடியேன் பழைய பெரிய பாவச் சங்கிலிகளை முதலில் அறுத்து உனது சிறந்த திருவடிகளை அடைவது எந்நாளோ என்று வினவுகிறார் ஆழ்வார்.
       பெருமானே எல்லார் தலையிலும் உன் திருவடியை வைத்த காலத்திற்குப் பின் உன் திருவடிகளில் வந்து சேர்வது எந்நாளோ? மிகுந்த பாரமும் கடினமும் கொண்ட பூமிப்பரப்பையெல்லாம் உனது மெல்லிய திருவடிகளால் அளந்து, அச்செயலால் என்னை ஈடுபடுத்திக் கொண்ட வாமனரூபியே! யாவரையம் மயக்க நீ வைத்த மூலப்பிரகிருதியில் தேவர்கள் மற்றும் மனிதர்கள் ரூபத்தாலே பல்வேறு பிறப்புகளில் சிக்கிக் கொண்ட நான் சர்வேஸ்வரனான உன்னாலும் அறுக்க முடியாதபடி கொடிய பாவங்களை புரிந்துள்ளோன். அதனைக் கழிக்க உன்னுடைய திருவடிகளில் நான் நிலை பெறுவது எந்நாளோ? என்று கேட்கிறார் ஆழ்வார்.

 கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே     3026 

      என் தந்தையே! நீ பாரதப் போரில் கொல்வதற்குரிய கருவியில்லாத குதிரையை நடத்தும் சாட்டையக் கொண்டு அர்ச்சுனன் எதிரிப் படையை அழிப்பதற்கு வசதியாக தேரினைச் செலுத்தி எல்லா சேனைகளையும் குருக்ஷேத்திரத்தில் அழித்தாய். இந்தப் பொல்லாத சரீரத் தொடர்பை என்னால் அறுக்க முடியவில்லை. நான் உன்னை வந்து அடைவதற்கு ஒரு உபாயத்தைச் சொல்ல வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
      வாமன அவதாரத்தில் கொடுஞ்செயல் புரிந்தவர்களை அழித்து அதில் தப்பியவர்களை கிருஷ்ணாவதாரத்தில் வந்து அழித்தார் பகவான். பாண்டவர்கள் கௌரவர்களை அழித்தார்கள் என்று மேலோட்டமாகப் பார்த்தாலும் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக கிருஷ்ணபகவான் அவர்களை அழித்தான் என்பது உண்மை. கிருஷ்ணர் கையில் இருந்த கோலை ஆழ்வார் கொல்லாமாக் கோல் என்கிறார். அது கொலைக்கருவியாக இல்லாமல் குதிரைகளை அடக்குவதற்காக பயனளித்தது என்கிறார். நோய்கள் கொண்ட பொல்லாச் சரீரத்தை என்னால் அழிக்க முடியவில்லையே என்று வருந்துகிறார். கொடுமைகள் தரும் இச்சரீரத்தை விலக்க வழி சொல்ல வேண்டும் என்று வேண்டுகிறார்.  

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி ஆகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும்  வகை அருளாய் வந்தே.     3027 

      பரந்தாமா! எல்லோரையும் சூழ்ந்து கொள்ளும் ஞானச் சுடரொளியே! வளர்ச்சியும், தேய்தலும் இன்றி என்றும், எங்கும் நினைந்திருப்பவனே! நான் உலக விஷயங்களையெல்லாம் துறந்து உன் திருப்பாதங்களின் கீழ் நிரந்தரமாகத் தொண்டு செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
      பெருமானே! எல்லோரையும் காப்பதற்காக நீ சர்வ இடத்திலும் வியாபித்துள்ளாய். நான் உன்னைப் பெறும் வழியை நீயே பாரத்தருள வேண்டும். சேதநரரையும், என்றும் உன் அருகில் உள்ள ஞானவாதிகளையும் இருத்தி வியாபித்துக் கொண்டிருக்கும்  நீ என்னை அடிமை கொள்வதற்காக வந்துள்ளாய். உன் பொன்னடியில் நான் பரம போக்கியமான கைங்கர்யத்தை பெறுவதற்காக இன்னுமொரு அவதாரத்தை எடுத்தேனும் என்னைக் காத்தருள வேணும். எல்லோரையும் சூழ்ந்துகொள்ளும் சூழ்ச்சிஞானம் என்னை சூழ்ந்து கொள்ளாமல் உள்ளேதே என்று கூறுகிறார் ஆழ்வார். 

வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்
கொந்து ஆர்க் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே?     3028 

      மலர்கொத்துக்கள் நிறைந்த காயாம்பூவின் அழகிய நிறத்தைக் கொண்ட என் தந்தையே! பிரகலாதன், கஜேந்திரன் இவர்களுக்கு உதவ வந்தது போல் வந்தாகிலும் என் மனத்தினை நீ சிதறாமல் செய்கிறாயா என்றால் அதுவும் இல்லை. பாராமுகமாக இருப்பதே உன் திட்டமாகில் அடியேன் உன்னை எப்படி வந்தடைவேன் என்கிறார் ஆழ்வார்.
      ஆழ்வார் வேண்டுதலைக் கேட்ட பெருமான் ‘வந்தருள வேணும், வந்தருள வேணும் என்கிறீரே! இராமனாக பதினோராயிரம் ஆண்டுகள் இருந்தோம், கிருஷ்ணனாக நூற்றாண்டுகள் இருந்தோம். இன்னமும் வருவதென்றால் அது இயலுமா?’ என்று பகவான் வினவ, பகவானே அந்த அவதாரங்கள்  போல் எனக்காக மற்றுமொரு அவதாரம் எடுத்து சேவை சாதிக்கலாமே. அவ்விதம் இல்லையெனில் கஜேந்திரனுக்காகவும், பிரகலாதனுக்காகவும் வந்து சேவை சாதித்தது போல் எமக்கும் சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.    

கிற்பன் கில்லேன் என்று இலன் முன நாளாய் (ல்)
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நற்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?   3029 

      முன்பெல்லாம் புண்ணியம் தரும் நற்காரியங்களைச் செய்க என்றபோது நான் கேட்கவில்லை. பாவங்களைச் செய்யாதே என்று சொன்னபோதும் நான் கேட்கவில்லை. அற்பசுவைகளாக அவற்றைச் சுவைத்துவிட்டு உன்னை விட்டு விலகி இருந்தேன். பல்லாயிரக்கணக்கான உயிர்களை உண்டாக்கிய உத்தமா!  உன் பொன்னான ஒளி வீசும் திருவடிகளை நான் அடைவது எப்போது? என்று கேட்கிறார் ஆழ்வார்.
      பெருமானே! உன் திருவடியை அடைவதற்கான எந்தவொரு நற்காரியங்களையும் நான் செய்ததில்லை. தான்தோன்றித்தனமாக காரியங்களும் அற்பமான விஷயங்களும் செய்து உன்னை மறந்தேன். அனந்தகோடி உயிர்களைக் காக்கும் உனக்கு என்னை உரியவனாக ஆக்கக் கூடாதா? இத்தகைய அரிய பாக்கியம் என்று எனக்குக் கிட்டும். பெரியோர்கள் செய் என்று கூறும் காரியங்களைச் செய்வது கடமையாகும். இத்தகைய கடமையை நான் செய்வதிலிருந்து தவறிவிட்டேன் என்கிறார். ஆழ்வார் இத்தகைய தவறுகளைச் செய்யவில்லை. நாம் செய்யும் தவறுகளை தாம் செய்ததாகக் கருதி பெருமானிடம் வேண்டி அந்தப் பாவங்களை நம்மிடமிருந்து நீக்கப் பார்க்கிறார். 

எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ் ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே.     3030 

      மனமே! நாம் உண்மையான ஞானம் இல்லாததால் வருந்தி இருவினைப் பயன்களால் ஏற்படும் பிறவிச் சூழலில் அகப்பட்டுக் கொண்டோம். எப்பொழுதும் எல்லா இடத்திலும் குறைவில்லாமல் நிறைந்திருக்கும் உண்மையான ஞான ஒளியுடைய பரமாத்மாவை நாம் அடைய முடியுமோ என்று கேட்கிறார் ஆழ்வார்.
      நல்வினைத் தீவினைகளில் ஆழ்வார் சிக்கிக் கொண்டார் என்பது போல் பொருள் இருந்தாலும் இவை அனைத்தும் மனித குலத்தில் பிறந்த நாம் செய்யும் நல்வினைகள் மற்றும் தீவினைகளைக் குறிக்கும். உலகத்து மனிதர்களின் நிலையினை தன்மேல் சுமத்திக் கொண்டு அதனைத் தன் மனத்தில் கேட்டுக் கொண்டு, அதனைத் தீர்ப்பதற்கான உபாயத்தைத் தேடி அலைகிறார் என்பதே சரியான கூற்றாகும். மனமே செயலுக்கு மூலகாரணம். மனம் சொல்படி உடல் கேட்கிறது. எனவே மனதைக் கட்டுப்படுத்தும் நிலையை நமக்குத் தெரிவிக்கிறார்.     

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே?  3031 

      இயல்பான புகழையுடைய கண்ணபிரானே! எனது மேலான ஒளி வடிவானவனே! துன்பங்களைக் கொடுக்கும் பாவ வினைகளை செய்வதை நான் நிறுத்தவும் இல்லை.  ஓய்வு ஒழிவில்லாமல் உன் திருவடிகளை வணங்குகிறேனா என்றால் அதுவுமில்லை. உன் தரிசனம் காண கூவி அழைக்கிறேன். எந்த இடத்தில் போய் அழைத்தால் வருவாய்? என்று கேட்கிறார் ஆழ்வார்.
      பெருமானே! உன்னை நான் அடைவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தால் அதை வைத்துக் கொண்டாவது ஏன் இன்னும் அருளவில்லை என்று கூறலாம். அத்தகைய புண்ணிய செயல்கள் எவையும் யான் செய்யவில்லை. அவ்விதமிருந்தும் ஸாதனங்களை நிறைய அனுஷ்டித்து அதன் பலன்கள் கிடைக்கப்பெறாமல் துன்புற்று துடித்துக் கதறுகின்றேன். நம்மில் உள்ள தீவினைகளை நல்வினைகள் கொண்டு களைய வேண்டும் என்பது நூலில் சொல்லப்பட்ட கொள்கையாகும். ஆனால் நானோ பாவங்கள் மட்டும் புரிந்து அதைப் போக்கிக் கொள்ளவும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று மிகவும் மனம் வருந்திக் கூறுகிறார் ஆழ்வார். 

கூவிக் கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப்பெய்வனே?      3032 

      பாவியாகிய அடியேன் கொடிய பாவங்களுக்கு இருப்பிடமான சம்சாரமென்னும் புதரில் நின்று கொண்டு பல காலமாய் வழி தெரியாமல் திகைத்துக் கூவி, கூவிச் சோர்ந்து கிடக்கின்றேன்.  அன்று மலையைத் தூக்கி ஆநிரைகளைக் காத்தவனை உலகமெல்லாம் தாவியளந்த எம்பெருமானை எங்கே சென்று இன் தேடிக் கண்டுபிடிப்பேன் என்கிறார் ஆழ்வார்.
      இராமனாகவும், கிருஷ்ணாகவும் அவதரித்து இவ்வுலகிற்கு செய்த  நற்காரியங்களிலிருந்து நான் விலகியிருந்து தற்போது உன்னைப் பெறுவதற்கு வழியுண்டா? என்று கேட்கிறார். நான் உள்ள இடத்தில் சம்சாரம் மண்டிக் கிடக்கின்றது. நான் துன்புற்று உன்னைக் கூவி அழைக்கிறேன். ஆனால் நீ வருவதாக இல்லை. திருவாய்பாடியில் பசுக்கள் மழையில் நனையா வண்ணம் காத்தருளினாய். எல்லார் திருமுடியிலும் நின் திருவடி பட்ட நிலையில் என்னை மறந்தது ஏனோ என்று நம்போன்ற சம்சாரிகளுக்காக ஆழ்வார் எம்பெருமானிடம் வருந்தி வேண்டுகிறார்.    

தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகல
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே   3033 

      பலவகைப்பட்ட சாஸ்திர ஞானத்தால் அறிய முற்படும் என் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேன். சரீரத்தை உதறி ஜீவன் பிரியும் காலத்தில் யம தூதர்கள் பாசக் கயிற்றை வீச வருவர். அங்கும் இங்குமாய் அலைகழிக்கும் அந்த பாசத்தால் ஏற்படும் துன்பத்தை பகவான் நீக்கிவிட்டான். அவனது கருணையினால் உள்ளம் திடமானது, உயிரும் நிலை பெற்றது என்று கூறுகிறார் ஆழ்வார்.
      முன்பாட்டில் ஆழ்வார் படும் துன்பங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் இந்நிலை தொடர்ந்தால் இவர் இருக்க மாட்டாரென்று எண்ணி திருமலையில் நின்ற கோலத்தைக் காட்சி தருகிறார். ஆழ்வார் மகிழ்ந்து அந்திமக்காலத்து துன்பங்களிலிருந்து தனக்கு விடுதலை அளித்த பெருமானைப் பாடி மகிழ்கின்றார். பகவானின் திருநாமங்கள் மூலம் பெறும் பாக்கியத்தை இப்பாசுரவழி தெரிவிக்கின்றார். பெருமானில் பக்தர்களுக்கு எம பயம் என்பது கிடையாது. இதுவே பகவானின் கருணைக்கு அடையாளம்.  இப்பிறவியிலேயே காலனை வென்றுவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஆழ்வார். 

உயிர்கள் எல்லா உலக(மு)ம் உடையவனை
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.     3034 

      பகவான் எல்லா உலகங்களுக்கும், அதிலுள்ள ஜீவன்களுக்கும் அந்தராத்மாவாக இருப்பவன். அவனைக் குறித்து, குயில்கள் நிறைந்த தோட்டங்கள் சூழ்ந்த தென்குருகூர் சடகோபர் அருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்துப் பாடல்களயும் பாடினால் உயிரின் மேல் உடம்பு கொண்டாடும் சொந்தம் அழிந்துவிடும் என்கிறார் ஆழ்வார்.
      இத்திருவாய்மொழியை கற்பவர் நோயின்றி சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறுவார். ஆழ்வார் உறங்காமலிருந்ததால் ஆழ்வார் திருநகரியில் உள்ள மலர்வனத்துக் குயில்களும் உறங்காமல் கூவிக்கொண்டே இருந்தனவாம். சொற்குற்றம் பொருட்குற்றமில்லா இத்திருமொழியை கற்பவருக்கு வினைகளைப் போக்கி எம்பெருமான் திருவுள்ளத்தில் உகப்பினை உண்டுபண்ணி அதன்வழி ஸித்தி பெறலாம்.  இந்த நிலை ஏற்பட்டுவிட்டால் உயிர் இறைவனிடம் ஐக்கியமாகிவிடும். பேரானந்தப் பெருவாழ்வைப் பெற்றுவிடும் என்பது இதன் பொருளாகும். 

செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியாவண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே3849 

      செம்மையான சொற்கள் கொண்டு பாடல் புனைபவர்களே! உங்கள் உயிரைப் பாதுகாத்து பாடல் இயற்றுங்கள். மாலிருஞ்சோலையில் உறையும்  வஞ்சகக் கள்வன், அற்புதங்களை நிகழ்த்தியவன்,  மாயக் கவியாய் வந்து என் நெஞ்சிலும், உயிரிலும் கலந்துள்ளான். இதை எவரும் அறியவில்லை. நான் காணாமல் போனேன். என் இதயத்தையும், ஆத்மாவையும் அவன் ஆக்கிரமித்துவிட்டான். கொஞ்சம் இடம் கொடுத்தால் உங்களை இல்லாமல் செய்து விடுவான் என்று ஆழ்வார் எச்சரிக்கிறார்.
      கவிஞர்களே! உயிர்காத்து கவிபாடுமின். நம்மை ஆட்கொள்ள அந்த மாயன் வந்துவிடுவான். அடிமை போல் நம்முள் புகுந்து பின்பு நீர்மை குணத்தால் நம்மையே கொள்ளை கொள்வான். எனவே அதில் மூழ்காமல் திடமாக இருங்கள். எம்பெருமானின் சீல குணங்களிலிருந்து தப்பிப் பிழைப்பது அரிது. அவன் நம்மேல் விழவிழ நம்மை முழுதும் இழக்க நேரிடும். விலங்கிட்டார் போல் வார்த்தை தடுமாறி கைகூப்பி நிற்க, அந்த சீல குணத்தாலே உருகும் நிலை ஏற்பட்டது. இதனால் அவனை விட்டு விலகினால் அவனை இழக்க நேரிடும். எனவே அவருயிரைக் காத்து ஆட்செய்மின். அவன் வழியே சென்று அவனை அனுபவித்துப் பாருங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். 

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய்
தானே யான் என்பான் ஆகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே ஆகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே     3850 

      எனக்குத் தேனாய், பாலாய், கரும்புச் சாறாய், அமிர்தமாய் இருப்பவன், என்னுள் நிறைந்து தானாகவே ஆகிவிட்டவன். எல்லா உலகங்களும், அதிலுள்ள உயிர்களும் தானேயாகி அவற்றில் அணுவாகக் கலந்து இயக்குபவன், என் போன்ற பக்தர்களின் மனதிலும், நாவிலும் குடியிருந்து தன்னைத் தானே துதித்துக் கொண்டவன், திருமாலிருஞ்சோலையில் தலைவனாக அருள் புரிகிறான்.  அவனை நான் அனுபவிக்க நினைக்க, அவன் என் உயிரை முற்றிலும் பருகிவிட்டான் என்கிறார் ஆழ்வார்.
      அமுதமான எம்பெருமானை ரசித்து ரசித்து இன்புறுவதற்கு முன்னர் என்னை முழுவதும் உண்டுவிட்டானே என்று வருந்துகிறார். அவன் சர்வேஸ்வரன் ஆனது என்னை முற்றும் உயிருண்ட பிறகே என்கிறார். உண்மையில் எம்பெருமான் ஆழ்வார் திருவாக்கில் வந்து புகுந்து புறப்படவில்லையென்றால் அவர் சர்வேஸ்வரன் என்ற பேர் பெற முடியாது. துர்வாதிகள் தாம் தாம் கொண்ட தெய்வங்களைப் பரதெய்வமாகப் பேசி நிற்க, ஸ்ரீமந் நாராயணனோ நான் தெய்வமல்லேன் என்கிறார். ஆழ்வார் எம்பெருமானின் பரத்துவ குணத்தை தமது திருவாய் மொழியில் ‘திண்ணைவீடு’ ‘ஒன்றும் தேவும்’ ஆகிய பாசுரங்களில் குறிப்பிடுகிறார். 

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானே ஆய் நின்ற மாய அம்மான் சேர்
தென் நன் திருமாலிருஞ்சோலைத் திசை கைகூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திரு அருளே?    3851 

      எனது நிரந்தரமற்ற இந்த உடம்புக்குள் புகுந்து நான் என்பதை சிறிது சிறிதாக மாற்றி தானேயாகி, என் ஜீவனை முற்றிலுமாக வசப்படுத்திக் கொண்டு நிற்கின்ற அற்புதமான பெருமான் திருமாலிருஞ்சோலையில் அருள் புரிகின்றான். அத்திசை நோக்கி கை கூப்பித் தொழும் நான், இன்னொரு இடம் தேடிப் போவேனோ? இவ்விஷயத்தில் பெருமானின் திருவருள் எவ்விதம் உள்ளதோ தெரியவில்லை என்கிறார் ஆழ்வார்.
      எம்பெருமான் ஆழ்வாரை என்றும் தன்னிடம் இருக்கும் நிலையை தக்க வைத்துக் கொள்கிறார். ஆழ்வாரை அனுபவிப்பதைப் பெறாப் பேறாகக் கருதுகிறார். எம்பெருமானுக்கு மகாலட்சுமியின் தொடர்பு எவ்வளவோ அந்த அளவிற்கு ஆழ்வாரின் தொடர்பும் உள்ளது.  அழுக்குடம்பும், பொல்லா யாக்கையும் கொண்ட என்னுடம்பில், அருவருத்து ஒதுக்காமல் என்னுள் புகுந்த பெருமானே என்கிறார். இவ்விதம் ஆத்ம வஸ்துவிலும், அசித்தான தேகத்திலும் புகுந்ததால் என்னுடைய தேகம் என்று எண்ணாமல் எல்லாம் அவனே என்று எண்ணும்படியாயிற்று. எனவே மாலிருஞ்சோலை மலையை நோக்கி கை தொழுகிறேன் என்கிறார். 

என்கொல் அம்மான் திரு அருள்கள் உலகும் உயிரும் தானே ஆய்
நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே?.     3852 

      எம்பெருமானின் கருணையை என்னவென்று சொல்வது. உலகெங்கும் உலவுகிறான். உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் தானே என்று கூறும்படி அனைத்திற்கும் அந்தராத்மாவாக விளங்குகிறான்.  ஆனாலும் என் சரீரத்தைக் கைவிடாமல் அதில் கலந்துள்ளான்.  அவன் தென்திசைத் திலகமான மாலிருஞ்சோலயை அடியார்களுக்குரிய மலையாக எண்ணி ஸ்திரமாக நின்று சேவை சாதிக்கின்றான். அசுரர்களை அழிக்கவே அங்கு எழுந்தருளியுள்ளான் என்கிறார் ஆழ்வார்.

      பெருமானின் கிருபையை எண்ணி நாம் வியக்காமல், என்னே தங்களது க்ருபை என்று சொல்ல வேண்டும் என்கிறார். உலகினைக் காத்தருள்கின்ற பெருமான் எதுவும் நடவாதது போன்று துயில் கொள்கிறானே, இது என்ன கிருபை என்று கூறுகிறார்.  கயிறை பாம்பாகவும், முத்துச் சிப்பியை வெள்ளியென்று நினைப்பது வினையின் செயல். திருவிக்ரமனாக உலகெங்கும் வியாபித்து ஆழ்வார் மனத்தில் புகுந்து தெற்குத் திருமலையில் சேவை சாதிக்கின்றான். திருமலை வாசத்தை உபாயமாகக் கொண்டு, ஆழ்வார் திருமேனியை உபேயமாகக் கொண்டு நிற்கிறான் என்பது ஸ்ரீவசனபூஷண வியாக்யானமாகும்.  

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே    3853 

      பகவானைத் தஞ்சம் அடையாத அசுர குணம் கொண்டவர்கள் சிறிது சிறிதாக அழிந்து போக, நல்ல தேவகுணமுடைய பக்தர்கள் பெருமை பெற, மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அற்புத குணங்களைச் சிந்திக்கும் முனிவர்கள் இன்புற இசையினாலான பாடல்களை இனிய கவிதைகளை என் மூலமாக என்னுள் இருந்து பாடிக் கொண்டே மாலிருஞ்சோலை பெருமானை அடைகிறேன் என்கிறார்.
      ஆழ்வார் தம் மேனியின் மேல் பெருமான் கொண்டுள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது. அசுரக்கூட்டங்கள் அழியும்படியும்,  தேவர்கள் மேன்மை அடையும்படியாகவும் மற்ற மக்கள் எண்ணாதவற்றை எண்ணுகின்ற சிறந்த முனிவர்கட்கும் இன்பம் மேலும் மேலும் ஓங்கும்படியாகவும் பண்ணோடு கூடிய இனிய இசையையுடைய  இனிய பாசுரங்களைத் தானேயாகி தன்னையே தான்பாடி தென்னாட்டை ஆளும் பெருமானை அடைகிறேன் என்கிறார். 

திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழு மூவுலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலையளிக்கும்
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே!   3854 

      பிரம்மாதி தேவர்களும் காண முடியாமல் பக்தியுடன் திருவடிகளைப் பற்றவும், அவர்கள் தரிசிக்கும்படி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தேவன், திருமாலிருஞ்சோலையில் உள்ளான். உலகங்களை அளக்க திருவிக்கிரமனாக வளர்ந்து பெருகியவன், செழுமையான மூவுலகங்களையும் ஊழிக் காலத்தில் தன் பெரு வயிற்றில் வைத்துக் காத்தவன், திருமகள் மணாளன், எம்பெருமான் என்னை அடிமை கொண்டான் என்கிறார் ஆழ்வார்.
      திருமலையில் நின்றருளி என்னை ஆள்கிறான். என்னை அடிமை கொள்வதற்காக பெருமான் மாலிருஞ்சோலையில் வீற்றுள்ளான். த்ரைலோகத்தையும் சிறிதான வயிற்றில் வைத்து கல்பந்தோறும் ரக்ஷிக்கிறான். நாம் அனைவரும் இத்தலத்திற்கு சென்று வினைகளை நீக்கிக்கொள்ள வேண்டும். உடல் இருக்கும்போதே ஜீவன் முக்தர்களாக வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும். எந்நிலையிலும் இனி மறுபிறப்புக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பது இதன் பொருளாகும். 

அருளை ஈ என் அம்மானே! என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலை மலையே     3855 

      பெருமானே! உன் அருளைத் தந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரம்மாதி தேவர்களும் அஞ்ஞானத்தைப் போக்கும் முனிவர்களும் போற்றும் பரந்தாமன் உறையும் மாலிருஞ்சோலையாகும். அறியாமை நீக்கும் மணி போன்ற மலை திருமாலிருஞ்சோலையாகும் என்று போற்றிப் பாடுகிறார் ஆழ்வார்.
      இப்போதைக்கு திருமலையே உய்ய வழி என்று கொண்டாடுகிறார் ஆழ்வார். அதே போன்று திருமாலிருஞ்சோலை என்பது மருள்களை நீக்கும் மாமலை என்றும், நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் அஞ்ஞானமென்னும் விரோதிகளை அகற்றும் மலை என்றும் கூறுகிறார். தேவர்களும் முனிவர்களும் தம்மைக் காப்பாற்றுமாறு கைகூப்பித் தொழும் மலையாகும். மெய்ஞானிகளும் இம்மலையைப் போற்றுகிறார்கள். போகத்தைத் தாண்டி ஆத்ம சொரூபத்தில் மூழ்க வேண்டும். சுகம் தரும் சொர்க்கம் தேவையில்லை. பிறவா வரம் அளிக்கும் பெருமானின் திருவடிகளில் நாம் பணி செய்வதே நாம் வேண்டத்தக்கதாகும் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.     

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே    3856 

      பிரளய காலத்தில் ஒப்பற்றவனாக, முதல்வனாக இருந்தவன் எம்பெருமான்.  அவன் மாலிருஞ்சோலை மலை போலவும், திருப்பாற்கடல் போலவும் என் சிரசை நினைத்துள்ளான். வைகுண்டத்தைப் போலவும் குளிர்ச்சி மிகுந்த வேங்கடமலை போலவும் என் சரீரத்தை விரும்புகிறான். அரிய  பெரிய மாயமான என் உயிராய், மனமாய், பாடலாய், செய்கைகளாய் இருக்கும் திருமால் ஒரு நொடிப் பொழுதும் என்னைப் பிரிவதில்லை என்கிறார் ஆழ்வார்.
      மாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடம் போன்ற திவ்ய தேசங்களில் தானெழுந்து அருளியிருக்கும் பெருமான் தனது அன்பினை என்னிடம் காட்டி என்னைவிட்டு பிரியாதிருக்கிறான். இரண்டு திருமலைகளிலும் பர வியூகங்களில் காணும் விருப்பமெல்லாம் தன் மேனியில் காண்கிறான் என்கிறார். ஆழ்வார் பகவானை நொடிப் பொழுது கூட பிரியாத நிலையில் உள்ளார். ஆனால் நாமோ அவரை நினைப்பதே இல்லை. சிற்றின்ப வாழ்வில் சிதறுண்டு, துன்பங்களில் உழன்று பின் மரணத்தைத் தழுவி, அரிதான இம்மனித வாழ்வை வீணடிக்கின்றோம். இத்தகைய நிலை வேண்டாம் என்று ஆழ்வார் நமக்கு அறிவுறுத்துகிறார். 

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழிதோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழிவண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே! கைவிடேல்! உடலும் உயிரும் மங்க ஒட்டே.   3857 

      ஊழிக்காலத்தில் ஆலிலையின் மேல் ஒப்பற்ற குழந்தை வடிவில் சயனித்திருக்கிறான்.  உலகங்களை ஊழிதோறும் தன்னுள்ளே வைத்துக் காப்பாற்றி, படைப்புக் காலத்தில் வெளியிட்டு, பின்னர் அழித்து, புதிதாக உருவாக்கி இயக்குபவன், கடல்நிறம் கொண்டவன், குளிர்ச்சியான திருமாலிருஞ்சோலையில் குடிகொண்டுள்ளான். உடல் மட்டுமல்ல, உயிரும் மங்கும் வரை அவனடி பணிவதை கைவிடாதே என் மனமே! என்கிறார்.
      காலத்தால் அறியப்படுகிற எல்லாப் பொருள்களுக்கும் காரணமாக இருப்பவன் ஒருவனே! பிரமாணங்களில் சொல்லப்படுபவன் அவன் ஒருவனே! கடல் போன்ற வண்ணத்தைக் கொண்டவன்! என்னை சம்சார பிரளயத்திலிருந்து காப்பாற்றியவன்! மனம் நினைக்கும் அற்ப விஷயங்களை விட்டு நாம் அகன்றிருக்க வேண்டும். ஆனால் பகவான் நம்மைவிட்டு அகலுவதில்லை. மனமே! நான் சொல்லுகிற இந்த நன்மை உனக்கு மாறாதிடுக. அவன் நம் அருகில் வருவதற்கு காரணம் இப்பெரும் மலையே. இதனை ஒருகாலும் மறவாதே என்று கூறுகிறார். 

மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே    3858 

      எங்கள் கொற்றவனே! என்னுள் புகுந்து எல்லாம் நீயாகி என்னைக் காத்தவனே! எப்போதும் பொங்கும் உணர்ச்சியோடிருக்கும் ஐம்புலன்களுக்கும், அவற்றை இயங்க வைக்கும் ஐம்பொறிகளும், கர்மேந்திரங்கள் ஐந்தும், ஐம்பூதங்களும், இவ்வுலக வாழ்வில் உழல்கின்ற இந்த உயிரோடும் பொருந்திய பிரகிருதி என்ற மூலப்பகுதியும் அகங்காரம், மனம் ஆகியவை சேர்ந்த இந்த உடலை உனது பெரும் மாயையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
      ஒருவராலும் தப்பித்துக் கொள்ளாதபடி நீ வைத்த பிரக்ருதியை மங்க வைத்தாய். பெருமலையில் வந்து நின்று என்னை அடிமை கொண்டாய். நான் புரிந்துகொள்வதற்கு ஏற்றாற்போல் என்னை அனுக்கிரகித்தாய். அகங்காரம், மனம் ஆகிய இரண்டும் சேர்ந்து நம் உடலாகி இந்த மாயையிலிருந்து என்னை விடுவித்தல் வேண்டும். ஆணவத்தின் காரணமாக தகுதியற்ற காரியங்களில் ஈடுபட்டு நாம் துன்புறுகிறோம்.  நொடிப் பொழுதும் மாறிவரும் மனத்தைக் கொண்டு நாம் பகவானை தரிசிப்பது என்பது கடினமான காரியமாகும்.  மாயை அகற்றி நாம் மெய்ப்பொருளைக் காண வேண்டும்.  இந்த மாயை அகல அந்த மாயவனே நமக்கு கரம் அளிக்க வேண்டும். எனவே அவனை வேண்டி, மாயை அகற்றி, நாம் உய்தல் வேண்டும் என்பது ஆழ்வாரின் அருள் வாக்காகும். 

மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்காரமாய்ப் புக்கு தானே தானே ஆனானை
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே.    3859 

      புத்தியின் தத்துவம், அகங்காரம், மனம் மூன்றும் அழிய வல்லமையுடையவர்களான ஐவகை உணர்வுகளும் மங்க, கர்வத்தோடு என்னுள் புகுந்து, தன்னை இல்லாதவனாகச் செய்து தானாகவே ஆனவனை, வண்டுகள் தேனருந்தும் பொழில்கள் சூழ்ந்த குருகூரில் பிறந்த சடகோபர் பாடிய ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களும் பிரகிருதி தொலைவதற்காகவும் திருமாலிருஞ்சோலை மலையினைப் பற்றியும் பாடப் பட்டவையாகும்.
      திருமாலிருஞ்சோலை க்ஷேத்திரம் அஞ்ஞானத்தை நீக்க வல்லது.  சர்வ ஞானம் மிக்க சர்வேசுவரன் இம்மலையில் தங்கியுள்ளான். அடியார்களுக்கு அர்ச்சாவதாரமாக இங்கு எழுந்தருளியுள்ளார். இப்பாசுரங்கள் மனம், அகங்காரம் ஆகியவற்றின் வடிவமான பிரகிரதி தொலைவதற்காக பாடப்பெற்றவை. மனம் நிலையற்றது. அகங்காரம் என்பது நான் என்று எப்போதும் தன்னையே முன்னிலைப்படுத்துவதாகும். இவ்விரண்டையும் அழித்து நமக்கு மெய்ஞானத்தை தருபவன் பகவான். எனவே இப்பத்துப் பாசுரங்களைப் படித்து மனதைக் கட்டுப்படுத்தி உய்வடைய வேண்டும் என்பது இதன் பொருளாகும்.      

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே.    3860 

      திருமாலிருஞ்சோலை மலை என்றேன். உடனே திருமால் என் மனத்திற்குள் வந்து புகுந்து கொண்டான்.  அவன் பிரகாசமான மணிகளை நீரில் அடித்துக்கொண்டு வரும் காவிரியின் தென்பகுதியில் திருப்பேர் நகர் என்னும் தலத்தில் திருமகளை மார்பில் தரித்துக் கொண்டுள்ள அப்பக் குடத்தானாக சென்று சயனிக்கின்றான்.
      அவனைக் காணும் அந்த பாக்கியத்தை ஆழ்வார் பெற்று விட்டார்.  ஆனால் உலகத்தவர் நிலை என்ன? நம்மவருக்கு பகவான் குடிகொண்டுள்ள திருத்தலங்களுக்கு செல்லவும் நேரமில்லை.  பகவானின் பெருமைகளைக் கேட்கவும் அவகாசமில்லை.  அற்ப அழியும் பொருட்களை நாடியே அவன் மனம் அலைகிறது. இறுதியில் இறப்பினைத் தேடும் அவல நிலை அடைவது அவர்களுக்கு வழக்கமாகியுள்ளது. இந்த உண்மைகளை உணர்த்தவே ஆழ்வார் திருமாலிருஞ்சோலையை சரண் அடையச் சொல்கிறார். 

திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே.    3865 

      ‘‘திருப்பேர் நகரில் பள்ளி கொண்டவனும், திருமாலிருஞ்சோலையில் உறைகின்றவனுமான எம்பிரான், ‘இன்று என்பால் வந்து எழுந்தருளி’ என்று என் நெஞ்சு நிறையும்படி புகுந்து கொண்டான். அப்பக்குடத்தானின் விருப்பத்தைப் பெற்றதால் அமிர்தம் உண்டதுபோல் ஆனந்தம் அடைந்தேன்.’’ என்கிறார் ஆழ்வார்.
      எம்பெருமானுக்கு கோயில்களாக பல இடங்கள் இருக்க, ஓரிடமும் இல்லாதது  போல் என்னுள் புகுந்தான். நாம் வாழ்கின்ற இவ்வுலகம் என்பது வேறு, இறைவன் நம்முள் புகுந்து கொள்ளும்போது நாம் அடையும் ஆனந்த உலகம் என்பது வேறு. இதனை அனுபவித்து உணர்ந்தால்தான் புரியும். பகவான் நம்முள் புகுந்தால் நம்மிடம் இருக்கும் தீய குணங்கள் எதுவும் இல்லாத நிலையை நாம் அடைவோம். தூய்மை வந்தால் வலிமை வரும், நம்பிக்கை வரும். அமுதம் உண்ட மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். ஆழ்வாருக்கு கிடைத்த அந்த பாக்கியம் நமக்கும் கிடைக்க அந்த உயர் நிலையை நாம் அடைய வேண்டும் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...