பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
திருமுடியினைச் சூடி மூவுலகங்களான வானுலகம், பூவுலகம் மற்றும் பாதாள உலகம் ஆகியவற்றினைப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானான ஸ்ரீராமனின் தாசனான அடியேனுக்கு அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சித்ரகூடத்தில் இராமனிடம் வேண்டி அரசாள வருமாறு பரதன் பணித்தான். அப்பெருமானைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒப்பற்ற குணங்களையுடைய பரதாழ்வானுக்கு ஆறுதல் கூறி அயோத்தியை அரசாளுமாறு எடுத்துரைதான். பரதன் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸ்ரீபாதுகைகளை அவனுக்கு அளித்தருளிய இராமபிரானைப் பாடிப்பற, அயோத்தியில் உள்ளவர்களுக்கு அரசனானவனைப் பாடிப்பற என்று இராமனைப் போற்றிப் பாடுகிறார் ஆழ்வார்.
மணிமுடியுடன் மாலையிட்டு நாட்டினை ஆள்வதற்கான வயதில்லாத இளமை பிராயத்தையுடையவனான பரதனுக்கு அரச உரிமையினை அளிக்க வேண்டுமென்றும், இராமனைக் கானகம் செல்ல வைக்க வேண்டும் பிடிவாத எண்ணம் கொண்ட கைகேயினுடைய சொல்லை ஏற்றுக்கொண்டான் இராமன். அதன்படி தண்டகாரண்ய வனத்திற்குச் சென்று துவண்டுபோன இடையை உடையவளான சூர்ப்பனகையின் காதினையும் மூக்கையும் அவள் கதறும்படி அறுத்த இராமபிரானைப் பாடிப் பற. அயோத்தியின் அரசனைப் பாடிப்பற என்று அருளியுள்ளார் ஆழ்வார். ‘அரக்கிமுக்கநீக்கிக் கரனோடு தூடணன்றேனுயிரை வாங்கி’ என்று குலசேகராழ்வாரும் இதனையே தமது பாசுரத்தில் எடுத்தியம்பியுள்ளார்.
ஆழத்தின் மிகுதியால் கரிய கடலை கடந்து இலங்கை சென்று இராவணனை முடிப்பதற்காக திருவுள்ளம் பற்றி வானரசேனையுடனே கடற்கரையை அடைந்த இராமபிரான், கடலைக் கடந்து இலங்கை சென்ற பெருமான், யாரையும் மதியாத இலங்கை வேந்தனான இராவணனுடைய வைரங்கள் பதித்த ஒளிமிக்க கிரீடத்தைத் தரித்த அவனது பத்து தலைகளையும் அறுத்தெரிந்துக் கொன்றான். தன்னிடம் சரணடைந்த அவன் தம்பியான விபீஷணனுக்கு நெடுங்காலம் ஆளும்படி அந்த ராஜ்ஜியத்தை அவனுக்களித்து முடிசூட்டி வைத்தான். அத்தகைய பராக்ரமசாலியான ஸ்ரீராமனை எவ்வளவு காலம் பூஜித்தாலும் திருப்தியடையாத அமுதம் போன்றவனைப் பாடிப்பற! அயோத்தி மன்னனைப் பாடிப்பற! என்று பாடுகிறார் ஆழ்வார்.
கச்சை அணிந்த மார்புடைய பெண்பிள்ளாய்! வைதேகிப் பிராட்டியே! ஓர் விண்ணப்பம். தேர்களால் அலங்கரிக்கப்பட்ட அயோத்தி மன்னனின் பெருமைக்குத் தகுந்த தேவியே! விண்ணப்பம் கேட்டருளவேணும். கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் நன்கு பிரயோகிப்பதில் வல்லவனாகவும், ஓடம் விடுவதில் திறன் படைத்தவனும், ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவனும், ச்ருங்கிபோபுரத்தின் அதிபதியும், வேடர் தலைவனுமான குகப்பெருமான் காணிக்கைகளோடு ஶ்ரீராமனை வணங்கி நின்றான். அவனை ஏற்றுக் கொண்ட இராமன் இதுவரை நாங்கள் நால்வராயிருந்தோம் இன்று உன்னுடன் சேர்த்து ஐவரானோம் என்று குகனை அணைத்துக் கொண்டார். சீர்மைமிகுந்த தோழமையைக் கொண்டதும் ஒரு அடையாளமாகும் என்கிறார் ஆழ்வார்.
மை போன்று கறுத்த, சிறந்த மலரைப் அணிந்த கூந்தலுடையவளாய் விதேஹராஜன் குலம்விளங்க வந்து அவதரித்தவளே! அடியேன் நினக்களிக்கும் விண்ணப்பத்தினைக் கேட்டருள வேண்டும். சுக துக்கங்களில் பெருமாளோடு ஒத்தவர் என்கின்ற புகழுடைவராய் வானரர்களுக்கு அதிபதியான சுக்ரீவன், பெருமாளுடன் கூட இருந்து நின்னைத் தேடுகைக்காக அந்நிலைக்குத் தகுதியான கல்யாண குணங்களையுடைய அயோத்தியில் உள்ளோர்க்கு ஸ்வாமியான பெருமாள் இவ்வடையாளங்களை எல்லாம் அருளிச் செய்தார். அடியேன் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் அனைத்தும் இந்தப் பிரகாரத்தால் வந்தவை. இது அவர் கையில் தரித்திருந்து திருவாழி மோதிரம் என்று மோதிரத்தைக் கொடுத்தான்.
வட திசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே . 399
பெரிய
மலைகளானவை அதிரும்படி பூமியானது பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும் மரங்களின் தலையளவு உயர்ந்த மரங்களை
மோதி கடலும்
கலங்கும்படி வேகமாக பாயும் கங்கை மீதுள்ள கண்டம் என்னும் கடிநகரே வடக்கிலுள்ள
மதுரையும் சாளக்கிராமமும்
வைகுந்தமும்
துவாரகையும் அயோத்தியும் விசாலமான பதரியும் இருப்பிடமாகக் கொண்ட எம்பெருமான் இருக்குமிடமாக அமைகின்றது.
மந்தரம் முதலான பெரிய மலைகளானவை அதிர, பூமியானது பிளவு பட்டு, இடிந்து விழவும் மரங்களினுடைய தலையளவும் செல்லக் கிளம்பி கரையில் நிற்கிற மரங்களை மோதி முறித்தும் ஒன்றாலும் கலங்காத கடலும் கூட கலங்கும்படி வேகமாய்க் கொண்டு இழிகின்ற கங்கா தீரத்தில் கண்டம் என்னும் கடி நகர்; வடக்கில் உள்ள மதுரையும், சாளக்க்ராமும் வைகுந்தமும் துவாரகையும் அயோத்தியும் இடம் உடைய பத்ரிகாசிரமம் இவற்றை இடமாகக் கொண்டு வசிக்கின்ற எமக்கு ஸ்வாமியான புருஷோத்தமனுடைய இருப்பிடம் என்று ஆழ்வார் கூறுகிறார்.
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
அயோத்தி
மக்களெல்லாம் உறவினர் போல் உன் ரதத்தைப் பின் தொடர்ந்து வர, பழமையான
தண்டகாரண்யத்தை நீ அடைந்தாய். ஏதும் இல்லாத உன் அடியார்களுக்கு நல்ல மருந்து போல்
ஆனாய். வேதம் கற்றவர்கள் குடியிருக்கும் திருக்கண்ணபுரத்தில் அருள் புரியும் என்
கண்ணின் கருமணி போன்றவனே! சிற்றன்னை கைகேயியின் சொல்லை ஏற்றுக் கொண்ட ஸ்ரீராமனே!
உன்னைத் தாலாட்டுகின்றேன்! என்கிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில்
ஆழ்வார் ஸ்ரீராமனின் உயரிய குணங்களை எடுத்துரைக்கிறார். இராமனிடம் மிகுந்த அன்பு
கொண்டிருந்தாள் கைகேயி. ஆனால் கூனியின் போதனையால் இராமன்
காட்டுக்கு செல்ல வேண்டும், பரதன் நாடாள வேண்டும் என்ற அவளது கட்டளையை ஏற்று இராமன்
கானகம் சென்றான். அவளது வார்த்தைகளை மீறி இருந்தாலும் எவரும் எதுவும் சொல்லப் போவதில்லை. தசரதன் கைகேயிக்கு கொடுத்த
வாக்கினைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அவளது சொற்களை ஏற்று கானகம்
சென்றான் என்று இராமனது பெருமைகளை ஆழ்வார் நினைவு
படுத்துகிறார்.
ஊழிக்காலத்தில் உலகத்தை உண்டு ஆலிலை மேல் யோக நித்திரை
செய்தவனே! வாலியைக் கொன்று வாக்குறுதிப்படி சுக்ரீவனை அரசனாக்கியவனே! அலையினால்
ரத்தினங்களைக் கரை சேர்க்கும் திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் என் கரிய மாணிக்கமே! திருவாலி திருநகருக்குத் தலைவனே!
அயோத்தியின் அரசனே! உன்னைத் தாலாட்டுகிறேன்! என்று ஆழ்வார்
கூறுகிறார்.
இதுவரை
கணக்கற்ற ஊழிக்காலங்கள் தோன்றி முடிந்துள்ளன. தோற்றமும் ஒடுக்கமும் பகவானால்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் அனைவரும் பகவானின் கருணையினால் தோன்றியுள்ளோம்.
அதே கருணையினால் அவர் எல்லோரையும் ஐக்கியமாக்கியுள்ளார். அந்த பேரின்பத்தை அறிந்து
கொள்ளாமல் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். உண்மை நிலையினை உணர்தத்தான் பகவான்
ஊழிகாலம் தோறும் ஆலிலை மேல் நித்திரை கொண்டுள்ளார். அத்தகையவனை நான்
தாலாட்டுகிறேன்! என்று கூறுகிறார் ஆழ்வார்.
அழகிய
இடத்தையுயம், ஒளி
பொருந்திய மதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட பிரசித்தி பெற்ற அயோத்தி நகரத்தில்
சகல லோகங்களை பிரகாசிக்கச் செய்யும் தீபச்சுடராக, சூரியகுலத்து ஜோதியாக அவதரித்தவன்
ஸ்ரீராமன். வானுலகத்து தேவர்களின் துயரைத்
தீர்த்தவன் அவன். சிவந்த திருவிழிகளையுடையவனும், கார்மேகம் போன்ற வடிவு கொண்டவனுமான
ராமனைத் தில்லை நிகரிலுள்ள திருச்சித்திரகூடத்தில் அருள்புரியும் எங்கள் ஒப்பற்ற
முதல்வனை, எம்பெருமானை
கண்குளிரக் கண்டு வணங்கும் நாள் எந்நாளோ!
என்று கேட்கிறார் ஆழ்வார்.
கம்ப
இராமாயணத்தில் அயோத்தியைப் பற்றி கம்பர் இவ்வாறு கூறுகிறார். உலகத்தவர் அனைவரும்
தவம் மேற்கொண்டு முடிவாக வீடு பேறு பெறவே விரும்புவர். ஆனால் அவர்கள் அங்கு சென்ற
பின் இதைவிட சிறந்தது அயோத்தி என்று கூறுவர். மேலும் நிலமகளின் முகம், திலகம், கண், மங்கல நாண்
என்று அயோத்தியின் சிறப்பைக் கூறுகிறார். சந்திரனும் சூரியனும் இமைக்காமல்
இந்நகரின் அழகை கண்டு களிப்படைகிறார்கள். பொன்னும், மலரும் கொண்ட மண்டபங்கள், பொதுமன்றங்கள், செய்குன்றுகள், மணிமேடைகள், முத்துப்பந்தல்கள்
ஆகியன கொண்டு அமைக்கப்பட்டது என்று கம்பர் இந்நகரத்தை கற்பனை செய்து கூறுகிறார்.
உயர்வு மிக்க
பொன்னையும், அழகிய
ரத்தினங்களையும் கொண்டு அமைக்கப்பட்ட மாடமாளிகைள் உள்ள அயோத்திக்குத் திரும்பி
வந்து அரசாட்சியை ஏற்றுக் கொண்டவன் ஸ்ரீராமன். தன்னால் கொல்லப்பட்ட இராவணனுடைய பழைய வரலாறுகளை அகத்தியர் மூலம்
கேட்டவன் அவன். பிராட்டியான சீதை உலகம் முழுதும் உய்யும்படி பெற்ற இலவன் மற்றும் குசன் ஆகியோரின் சிவந்த பவழ
வாயினால் தன் சரிதையான இராமாயணத்தைக் கேட்டருளிய சிறப்பு மிக்கவன் ஸ்ரீராமன்.
அப்பெருமான் தில்லை திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளி இருக்கிறார். அவரை கண் குளிர
சேவித்து இராமாயணத்தைக் கேட்டு அமிர்தத்தையும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டோம்
என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆராஅமுதமான
எம்பெருமானுடைய சேவை, அவனது சரித்திரத்தில் உள்ள இனிமைக்கும், தேவாமிருதத்தின்
இனிமைக்கும் ஈடாகாது என்ற கருத்தில் ‘இன்னமுதமதியோம்’ என்று கூறுகிறார்.
இராமசரித்திரத்தை கேட்ட பின் அமுதத்தை ஒரு பொருளாக மதியோம் என்று கூறுவதிலிருந்து
ஆழ்வார் ஸ்ரீராமன் பெயரில் எத்தகையதொரு அன்பினை வைத்துள்ளார் என்று புலனாகிறது.
இராமனின் புத்திரர்களான இலவன் மற்றும் குசன் ஆகியோர் இராமர் காலத்திற்குப்
பின்னும் அவனது சரித்திரத்தை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நன்னெறியில் கொண்டு
சென்றார்கள். அத்தகைய பெருமான் திருச்சித்ரகூடத்தில் வாசம் செய்கிறான்.
தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி
உயரமும் இளமையும் உடைய எருமைகளை
அவிழ்த்து விடுகிற இடையர்களின்
புல்லாங்குழலின் ஓசையும்
எருதுகளின் கழுத்திலுள்ள மணியின்
ஓசையும் இவ்விரண்டும் கூடின ஓசை எல்லா
திசையிலும் பரவி விட்டது. வயலிலுள்ள
வண்டுகளின் கூட்டம் ஆரவாரித்துக்
கொண்டு கிளம்பின! அசுரகுலத்தை உருவழித்த
அழகிய சார்ங்கத்தை உடைய தேவாதிதேவனே!
விச்வாமித்ர முனிவரின் யாகத்தை
காத்து அவப்ருதஸ்நானம் செய்வித்தருளினவனே!
விரோதிகளை அழிக்கவல்ல பலமுடைய அயோத்திக்கு
அரசனே ஸ்ரீரங்கநாதனே! பள்ளி
எழுந்தருளாயே! என்று கூறுகிறார் ஆழ்வார்.
எருமைக் கன்றுகளை
மேய்ச்சலுக்காகக் கட்டவிழ்த்து விடுகிற இடையர் ஊதுகிற புல்லாங்குழலோசையும், சேக்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலியும் இவ்விரண்டினால்
உண்டான ஓசையானது எத்திசையும் பரவிவிட்டது. சோலைக்குள் மாத்திரமன்றியே வெளிநிலமான
வயலில் தடாகங்களிலுண்டான தாமரை முதலியவற்றில் வண்டுகளானவை ஆராவாரஞ்செய்து கொண்டு
சிதறின; தேவர்களின் காரியமும், முனிவர்களின் காரியமும் செய்தற்குப்
படாதனபட்ட பெருமானே! இன்று எங்கள் காரியமும் சிறிது செய்வதற்கு பள்ளியுணர்ந்த அருளவேணும்
என்கிறார்.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கவளமாக உணவினை
அளித்து மதமூட்டப்பட்ட வலிமைமிக்க யானைகளும், சீறிப்பாய்ந்தோடும் குதிரைகளும் தேர்களுமாக சேனையுறுப்புகளைக்
கொண்ட, அரக்கர்களெல்லாம்
துன்பப்பட்டுத் தொலையுமாறு அவர்களை அழித்து வெற்றி கொள்ளப்பட்ட ஜெயசீலரான
இராமபிரானின் ஆண்புலியொத்த கிங்கரர்களான வானரவீரர்கள் அரக்கர்களான உங்களைக்
கொல்லாதிருக்க வேணுமாயின்,
சிறந்த சுண்ணாம்பு பூசப்பட்ட வெண்மையான நிறத்தினாலான மாட மாளிகைகளினால்
நீண்டிருக்கின்ற அழகு பொருந்திய அயோத்தி நகருக்கு அரசரான, தசரதச் சக்கரவர்த்தியின்
திருக்குமாரரான, குவளை
மலர் போன்ற நிறத்தினைக் கொண்ட இராமபிரான் காணும்படியாக, ‘குழமணி தூரம்’ என்னும்
தோற்றோரின் ஒரு வகை கூத்தை ஆடுங்கள்! என்று கூறுகிறார் ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக