திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
முன்பு இராமாவதாரத்தில் மிகவும் பலம் வாய்ந்தவர்களிடம் போரிடும் எதிரியின் பாதி ஆற்றலைப் பெற்றுக் கொள்பவனாய் இருந்த வாலியைச் சுக்ரீவனுக்காகக் கோதண்டம் என்கின்ற அழகிய வில்லை வளைத்து அம்பெய்தி அவனது சரீரம் சிதறுமாறு அழித்தாய்! பரிமள மணம் வீசும் குளிர்ந்த விசாலமான சோலையில் வசதியாகக் காட்சி தரும் சிறப்பான இமயத்தில் பெரிய காளமேகங்கள் அதிரா நின்று முழங்க சிறிதான தூற்றலுடன், தோகையுடன் பெரிய மயில்கள் ஏற முடியாத மலைகளின் கீழ் வயிறு உரசும்படி அவற்றின் உச்சியில் ஏறி நடனமிட, பரந்த சுனைகளையுடைய திருப்பிரிதி என்னும் இடத்தை மனமே! சென்றடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். பெருமான் பல இடங்களில் கோயில் கொண்டு இருக்கின்றபடியால் திவ்யதேசங்கள் திருமந்திரப் பொருளுக்கு எல்லைநிலமாக அமைந்துள்ளது என்ற கருத்து புலப்படுகிறது.
மகா சமுத்திரமானது முழுவதும் கலங்கும்படி வானரக் கூட்டம் பெருமானுக்கு கைங்கர்யம் பண்ணுவதற்காக அசைக்க முடியாதவாறு உள்ள மலைகள் போன்ற கற்களை நளன் கையில் கொடுத்து, அக்கற்கள் கடலில் மூழ்கிவிடாமல் மிதக்குமாறு செய்து இலங்கைக்கு சேது அமைத்தான். வானரர்கள் கூட்டமாக இலங்கை அடைந்து இராவணன் உள்ளிட்ட அரக்கர் கூட்டத்தினரையும், அந்நகரத்தையும் தூளாக்கிய காகுத்தன் வாழும் சிறந்த பனிமலையில் அமைந்துள்ள, மலை போன்ற வலிமையுள்ள மிடுக்காகவும், கடுஞ்சினமும், வெற்றி நடையும் கொண்ட யானைகள் துன்பப்படும் குகைளை இருப்பிடமாகக் கொண்டு, வாள் போன்ற கூரிய பற்களையுடைய சிங்கங்கள் திரியும் திருப்பிரிதியை மனமே! சென்றடைவாயாக! என்று கூறுகிறார். இப்பாசுரத்தில் இராமபிரானின் பராக்கிரமத்தை ஆழ்வார் எடுத்துக் கூறி தன் மனத்தினை பெருமானுக்கு தூது அனுப்புகிறார்.
கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமும், உடுக்கை போன்ற நுண்ணிய இடையையும், சுருண்ட கூந்தலையும், பளபளக்கும் பல் வரிசையையும் கொண்ட இளங்கொடி போன்ற அழகிய நப்பின்னை பிராட்டிக்காக இடி போன்ற கொடிய உறுமலையுடைய ஏழு காளைகளையும், ஏழு திருவுருவங்கொண்டு ஒரே சமயத்தில் வலிந்து அடக்கி அதனை அழித்த வாசுதேவன் வசிக்கும் இனிய இமயத்திலுள்ள, இந்திர நீலமணிப் பாறைகளின் மேலே வாசனையுள்ள வேங்கை மரத்தின் உதிர்ந்த மலர்ப் படுக்கையில் ஆண் யானைகள், பெண் யானைகளோடு வண்டுகள் கர்ணாமிருதமாக இன்னிசைபாட துயில் கொள்ளும் திருப்பிரிதியை மனமே! சென்றடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார்.
சினமுடைய, அஞ்சி நடுங்கும்படியான நரசிங்கமாய் வடிவமெடுத்து, தேவர்கள் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் பல கொடுமைகள் புரிந்த வீரனில் ஒப்பற்றவனான அசுரன் இரண்ய கசிபுவை வாசற்படியில் தன் மடிமீது வைத்து தன் திருக்கைகளில் உள்ள கூரிய நகங்களைக் கொண்டு அவனது விசாலமான மார்பைப் பிளந்தார் எம்பெருமான். அந்தப் பயன் கருதி தேவர்கள் தங்கள் மணிகளடங்கிய கிரீடங்களோடு அவரது திருவடியை வணங்கினார்கள். அத்தகைய பரம புருஷன் யோகநித்திரை செய்யும் விலக்ஷணமான இமயப் பனிமலையில் பன்றிகள் தலை தாழ்த்தி தன் வளைந்த கொம்புகளால் மலையை முட்டுகின்றன. அம்மலைகள் பிளந்து ஒளிவீசும் மாணிக்கத் தாதுக்கள் அருவி வெள்ளத்துடன் கலந்து வருகின்றன. என் மனமே! அந்தத் திருப்பிரிதிக்கு நீ சென்றடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஆபரணங்களான தண்டையும், சிலம்புகளும் ஒலிக்கும் பெருமானின் அழகிய திருவடிகளை நான்முகன் முதலான பிரம்மாதி தேவர்கள் வணங்குகிறார்கள். தனக்குத் தானே கரை ஏற்படுத்திக் கொண்ட பெரிய பாற்கடலில் க்ஷீராப்திநாதனாகப் பள்ளிகொண்ட திருமால், திருவரையில் சாத்தப்பட்ட மேகலையைத் தரித்திருக்கும் பெரிய பிராட்டியான மகாலட்சுமியோடு இமயப் பனிமலையில் வீற்றிருக்கிறார். மலை போன்ற வடிவமுள்ள பெரிய ஆண் யானைகள் குளிர்ந்த இளைய மூங்கில்களில் வளைந்த முழஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள முளைகளைப் பிடுங்கித் தேன் கூட்டிலுள்ள தேனில் தோய்த்து தன் இளம் பெண் யானைக்கு எவ்வித சிரமும் இல்லாதபடி வாயில் பிழியும் காட்சியினைக் கூறி, அத்தகைய திருப்பிருதிக்கு மனமே! நீ சென்றடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
தேவர்கள் அனைவரும் திரள் திரளாக ஒற்றுமையாக ஒன்றுகூடி ஆயிரம் படங்களையுடைய ஆதிசேஷன் என்ற படுக்கையில் நித்திரை செய்யும் பரந்தாமனை பரமபுருஷனே! தேவரீர் திருப்பாற்கடலில் சேஷசயனத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமானே! என்று சாஷ்டாங்கமாக சேவத்து வணங்குகிறார்கள். பகவானோ மணிமுடிகளால் வணங்கும்படி இமயப்பனி மலையில் வந்து அருள் புரிகின்றான். அங்கு நறுமணம் மிக்க நீண்ட குருக்கத்திக் கொடிகளானவை ஆகாயத்தளவு சென்று மேகங்களைக் கொழு கொம்பாக பற்றி அவற்றோடு சண்டையிட்டு படர்ந்து அதனால் பூக்கள் மலரப்பெற்ற நந்தவனங்களில் வண்டுகள் தேனைப் பருகுவதற்காக ரீங்காரமிடுகின்றன. இத்தகைய இசை பாடும்படியான இந்த திருப்பிருதியை மனமே! நீ சென்றடைவாயாக! என்று ஆழ்வார் தன் மனத்தை வேண்டுகிறார்.
அழகிய தாழ்வரைகளில் நெடிதுயர்ந்த வேங்கை மரங்கள் மேகங்களைத் தழுவினார்போல் செழித்து வளர்ந்துள்ளன. அவற்றைச் சுற்றி மிளகு செடிகளும் கொடிகளாகச் செழிப்பாகப் படர்ந்துள்ளன. பசுமையான கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளில் போர் செய்யத் தயாராகப் புறப்படும் வேங்கைப்புலிகள் உலாவும் காட்சி காணப்படுகின்றன. அழகிய மலர்கள் நிறைந்த சோலைகளில் இமயத்தில் இந்திராதி தேவர்கள் தடாகங்களின் துறைகளில் வந்து நீராடி, செங்கழுநீர், செண்பகம், இருவாட்சி, பாதிரி, புன்னை, குருக்கத்தி, கருமுகை, தாமரை என்னும் சிறந்த எட்டு வகையான மலர்களைத் தடாகங்களிலிருந்து பறித்து வந்து உன் திருவடிகளில் பக்தியுடன் சமர்ப்பித்து, ஆயிரம் திருநாமங்களை ஒருசேர ஓதி வணங்கி பெருமானிடம் நெருங்கி வேண்டுகின்றனர். எனவே மனமே! திருப்பிருதிக்குச் செல்வாயாக! என்று தன் மனத்தை வேண்டுகிறார்.
இராப்பொழுதில் விஞ்சி இருள் அதிகரிக்கப்பெற்ற மலை முழஞ்சுகளில் பெரும்பசி உண்டாக குகைளில் உள்ள மலைப்பாம்புகள் சோலைகளின் மலர்களில் வரும் பரிமள மணத்தை சுவாசித்துக் கொண்டு பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்; உட்புறத்திலுள்ள சோலைகளோடு ஏறுவதற்குக் கடினமான மேடு பள்ளமான தாழ்வரையைக் கொண்டிருக்கும் நிலங்களையுடைய இமயமலையில் நித்திரை செய்யும் உன்னை தேவர்கள் பலவாறு துதிக்கிறார்கள். நான்முகனோடு கூடச்சென்ற பரமன் என்றும் சகல ஜகத்காரணபூதா என்றும், காளமேகஸ்யாமளா என்றும், பரமபுருஷன் என்றும், ஆதிமூலமே என்றும், குளிர்ந்த மேகம் போன்ற வடிவுடைய எம்பெருமானே! என்றும் போற்றி பிரம்மாவோடு உன்னை வணங்குகிறார்கள். அந்த பேற்றினைப் பெற்ற திருப்பிருதியிலே மனமே! நீ போய் அடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். திருப்பிருதி பகவானை வேண்டினால் முன்வினைப் பாவங்களை நீக்கி விடுவான் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.
பகவனுடைய ஆயிரம் நாமங்களையும் வாயால் துதித்து அதன் அர்த்தங்களை மனதார அநுசந்திப்பவர்களுக்கு அதனால் சர்வேஸ்வரே ரக்ஷகன்! என்று நெஞ்சில் நிறுத்தியவர்களுக்குப் பழைய வினைகளால் உண்டாகும் துயரங்கள் மீண்டும் வராமல் எப்போதும் நமக்கு நித்யானந்தத்தை அருளும் பரந்தாமன் எழுந்தருளியிருக்கும், சிறந்த இமயப் பனிமலையில் மகரந்தம் நிறைந்துள்ள அசோக மலர்கள் விரிந்து மலர்கின்றன. அந்த நெருப்பு போன்ற அழகைப் பார்த்து அறிவற்ற வண்டுகள் அது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பென்று அஞ்சி பிறகு அச்சம் ஒருவாறு தணிந்து அது நெருப்பல்ல அசோகமலர் என்று நிதானித்து மீண்டும் காற்றில் அம்மலர்கள் அசைந்தாடும் போது தீச்சுவாலை என்றெண்ணி மீண்டும் அஞ்சி, இவ்வாறு அஞ்சுவதும் பின்பு அஞ்சாமல் இருக்கும் நிலையில் தவிக்கும் இடமான திருப்பிருதியை மனமே! நீ சென்றடைவாயாக! என்று வேண்டுகிறரார் ஆழ்வார்.
பரிபூரண நீரினைக் கொண்டுள்ள கறுத்த பெரிய மேகங்களின் கூட்டம் நீர்கனத்தினால் திரிய மாட்டாமல் ஓரிடத்தில் இருந்துகொண்டு எங்கும் போகாமல் கர்ஜிக்க அதன் பெரு ஓசையைக் கேட்டு தனது கம்பீரத்தையும் பெருமையையும் கொண்ட பருத்த மலைப் பாம்புகளானவை அதைக் கேட்டு நமக்கு இறையாக யானைகள் வருவதாக நினைத்து மலைப் பேர்ந்தாற்போல் பெயர்ந்து அருகில் வருவதாக எண்ணி அசைகின்றன. ஒருசில பாம்புகள் அஞ்சி ஓடி மறைந்தாலும் சில பாம்புகள் அதனை விழுங்கும் நிலையில் தயாராக உள்ளது என்று கற்பனையாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய திருப்பிருதியில் கோயில் கொண்டுள்ள பரம புருஷனைக் குறித்து, அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையில் உள்ளவர்க்குத் தலைவரான திருமங்கையாழ்வார் பாடிய இச்சொல்மாலையினை அருமையான இசையில் பாடவல்ல சிறந்த விலக்ஷணமான தொண்டர்களைக் கொடிய வினைகள் தாக்காது என்று கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக