பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
ஆலையிலிட்டு ஆடும் இனிப்பான கரும்பு போன்று மதுரமான மொழியில் பேசும் யசோதையே! நான் பாலை ஊற்றி அடுப்பில் வைத்தேன். என் மகளைக் காவலுக்கு நிறுத்திவிட்டு நெருப்பு வாங்க மேற்குப் புறத்தில் இருந்த இல்லம் நோக்கிச் சென்றேன். உடன் நெருப்பு கேட்க இயலாத நிலையில் மற்ற சேம விவரங்கள் விசாரித்துவிட்டு நெருப்பு வாங்கி வீடு வந்து சேர்ந்தேன். அங்கே உன் மகனானப்பட்டவன் என் வீட்டிலுள்ள பாலையெல்லாம் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். சாளக் கிராமத்திலுள்ள உனது நம்பியை உடன் கூட்டிச் செல்வாயாக! என்று ஒரு கோபிகை கூறுகிறாள். வரும் பாசுரங்களில் கண்ணனது பெருமைகளை கூறுவதற்காக இப்பாசுரம் அமையப்பெற்றுள்ளது எனக் கூறலாம்.
வடதிசையிலுள்ள மதுரையும், புனிதமே வடிவான சாளக்கிராமமும், வைகுண்டமும், துவாரகையும், திருஅயோத்தியும், இடமுடைத்தாயிருந்துள்ள ஸ்ரீபத்ரிகாச்ரமம் போன்றவைகளை பெருமான் வாசஸ்தலமாக கொண்டுள்ளான். எமக்குப் பெருமானாக உள்ள புருஷோத்தமனாய்த் திகழ்கின்ற ஸ்வாமியின் இருப்பிடமானது, மந்திரம் முதலான பெரிய மலைகளானவை தொடர்ந்து அதிரவும், பூமியானது பிளவுபட்டு இடிந்து விழவும், மாங்கனிகளுடைய தலையளவும் கிளம்பிக் கரையில் நிற்கின்ற மரங்களில் மோதி முறித்தும், எதற்காகவும் எள்ளளவும் கலங்காத கடலும்கூட கலங்கும்படியாக வேகமாய் கொண்டு இழியா நின்றுள்ள கங்கைநதி தீரத்தில் கண்டமென்னும் கடிநகராகத் திகழ்கின்றது என்ற கருத்தில் அமைகின்றது.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மான்கள், யானைகள், குதிரைகளாகிய மிருகங்கள் திரிகின்ற காட்டைக் கடந்து சென்று, வில், அம்பு இவைகளையே துணையாகக் கொண்டு தனக்கு வெற்றியை விளைவிக்கவல்ல போர்க்களத்தில் எழுந்தருளியிருக்கும் அலையடிக்கும் நீரைப் பெற்றிருக்கும் கடலில் மலைகளைப் போட்டு சேது அணையைக்கட்டி, மதிலையும் சமுத்திரத்தையும் காப்பாக உள்ள இலங்கையில் வாளை ஆயுதமாகக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலையை அறுத்துத் தள்ளிய திருவுள்ளமுகந்தவனாகிய எம்பெருமான் திவ்ய தேசமான சாளக்கிராமத்தில் வீற்றிருக்கிறான். மனமே! நீ அங்கு செல்க! என்று தமது நெஞ்சை வேண்டுகிறார். இலங்கையைச் சுற்றி சமுத்திரம் இருந்ததால் அதனைத் தாண்டி யாரும் வரமுடியாது என்ற இராவணனது அகந்தையைப் போக்கிய ஸ்ரீராமன் சாளக்கிராமத்தில் சேவை சாதிக்கின்றான்.
மதம் கொண்ட பெரிய யானைகளும், உயரமான குதிரைகளும், இரதங்களும், காலாட்படைகளும், வீரியத்துடன் இருக்கும், காவல் நிறைந்த இலங்கை முழுவதுமாக அழிந்து போக கூரிய அம்புகள் எய்த ஸ்ரீராமபிரான் திருச்சாளகிராமத்தில் வாழ்கிறான். தேவர்கள் பூலோகம் முழுவதுமாக நிறைந்து நின்று வணங்குகிறார்கள். மணம் வீசும் பூக்கள் நிரம்பிய பொய்கைகளால் சூழப்பட்ட அங்கே மனமே! நீ செல்வாயாக என்று ஆழ்வார் பாடுகிறார். திருமால் இராவணனை அழிப்பதற்காகவே இராமனாக அவதரித்தார். அவதாரமாக மானுடனாகப் பிறந்து மனிதனுக்குண்டான பல இன்னல்களை அனுபவித்தார். இதன் மூலம் அவரது வாழ்வானது அனைத்து மக்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது எனலாம்.
அலைகடலும், மலைகளும் காலம் முதலாக எட்டுத் திசைகளில் உள்ள பொருட்களும், சூரிய சந்திரர், அவற்றிற்கு எதிரான இருள் ஆகிய அனைத்தையும் தன் வடிவமாகக் கொண்டவன் திருச்சாளக்கிராமத்திலே இருக்கின்றான். அவன் வெற்றியையும், பெருமையையும் தருகின்ற சுதர்சன சக்கரத்தை வலக்கையில் ஏந்தியுளான். அவன் தேவர்களுக்குத் தலைவனாகவும் தன்னைச் சேராத அசுரர்களிடம் எக்காலத்திலும் சீற்றமுடையவனாகவும் உள்ளான். மனமே! நீ அங்கு செல்வாயாக! என்று ஆழ்வார் கூறுகிறார். சூரிய சந்திரர்களாக பகவான் உள்ளான். ஒளியும் இருளுமாக இருக்கிறான். இருளாக மானிடர்களும் ஒளியாக ஞானிகளும் வாழ்கிறார்கள். அறியாமை என்ற இருளை நீக்கி நம்மை நல்வழிப்படுத்தும் பெருமான் திருச்சாளக்கிரமத்தில் உறைகிறான் என்ற கருத்தில் அமைகிறது.
திருவூரகத்தில்
வாழ்பவன், திருக்குடந்தையில் ஆலயம் கொண்டவன், பகைவர்கள்
எதிர்த்தபோது வில்லின் இருமுனையும் வளையுமாறு செய்து அசுரர்களின் தேர்ப்படையைத்
தூளாக்கியவன் எங்கள் ஸ்ரீராமபிரான். வற்றாத காவிரி நீர் வளத்தால் சூழப்பட்ட
திருப்பேர் நகரில் வாசம் செய்பவன். ஆயிரம் திருநாமங்களைக் கொண்டவன். வண்டுகள் ரீங்காரமிடும் மலர்மாலைகளை அணிந்தவன்.
தாரா என்னும் நீர்ப்பறவை நிறைந்த நிலங்களால் சூழப்பட்ட சாளக்கிராமத்தை மனமே! நீ
அடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார்.
இவ்வுலகில்
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீராமன் திகழ்ந்தான்.
திருமாலின் அவதாரமாக இருப்பினும் மனிதப் பிறவிக்கேற்றவாறும், அதன் வினைகளுக்கேற்றவாறும் துன்பங்களை அனுபவித்தான். இருப்பினும்
உத்தமனாகத் திகழ்ந்தான். எனவே இராமனின் திருநாமங்களைச் சொன்னாலே நம் வாழ்வில்
சூழ்ந்துள்ள இருள் விலகி ஓடிவிடும். எனவே மண்ணுலகில் வாழும் மனிதர்களின்
மனங்களையும் அங்கு செல்லுமாறு வழிகாட்டுகிறார் ஆழ்வார்.
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில
வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஒன்று ஏந்தி இன நிரைக்
காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே! 992
இராமன் மீது மையல் கொண்டு அவனை அடைய அட்டகாசம் செய்தெழுந்த இலங்கை வேந்தன் இரவாணனின் தங்கையான சூர்ப்பனகை ஓலமிட்டு ஓடும்படி தனது கூரிய வாளால் இலட்சுமணனைக் கொண்டு அவளது மூக்கைத் அறுத்தான். பிரகாசமுள்ள சுதர்சனச் சக்கரத்தை ஏந்திய வானவர் தலைவன், தனக்கு விழா எடுப்பதைத் தடுத்த இந்திரன் பகை கொண்டு கோகுலத்து மக்களின் மேல் மழையைப் பொழிய வைக்க, அவர்களைப் பாதுகாக்க கோவர்த்தன கிரியயைக் குடையாகப் பிடித்துக் காத்த பெருமானான கிருஷ்ணன் சாளக்கிராமத்திலே வீற்றிருக்கிறான். தடாகங்களால் சூழப்பட்ட அத்தலத்தினை, வீணான விஷயத்தில் ஈடுபடாமல் அந்த உத்தமன் வாழும் இடத்தினை நீ சென்றடைவாயாக மனமே! என்று கூறுகிறார் ஆழ்வார்.
தாய் வடிவில் வந்த பேய் மகளான பூதனையின் உயிரையும், தயிரையும், வெண்ணெயையும் ஒரு சேர விழுங்கிய வாயை உடையவன், குட்டை வாமனனாய் மூன்றடி மண் யாசித்து, ஏழுலகங்களையும் தாவும் அளவு வளர்ந்தவன் திருச்சாளகிராமத்திலே உறைகிறான். காயாம்பூ மேனி வண்ணம் கொண்ட அவன் இருக்கும் இடத்தை மனமே! நீ சென்று அடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். இக்கருத்தினைப் பலமுறை கூறினாலும் அதர்மத்தை அழிக்கும் நற்செயல்களை நம் மனதில் அடிக்கடி கூறி இருத்துகிறார். பணமும், பெண் மோகமும் மனிதனை தீராத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. எனவே அவனடி சென்று அடைவாயாக! என்று தன் மனத்தை வேண்டுகிறார்.
பகைவரான அசுரர் பயப்படும்படி போர்க்களத்திலே நின்றவன், நரசிம்ம வடிவம் எடுத்து இரணிய கசிபுவின் மார்பை இரண்டாகக் கிழித்தவன், சூரிய சந்திரராய், ஆகாயமாய், நெருப்பாய், அனைத்து உலகுமாய், வாயுவாய், மலையாய், கடலாய், அனைத்து உலகினைக் காக்கும் விஷ்ணுவாய் அவன் உள்ளான். அவன் கோயில் கொண்டுள்ள திருச்சாளக்கிராமத்தை மனமே! நீ சென்றடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். அதர்மத்திற்குத் துணை நின்று மக்களைத் துன்பத்தில் ஆழ்த்துபவர்கள் அசுரர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் மனங்களிலும் புகுந்துகொண்டு ஆட்டுவிக்கிறார்கள். அதனால் நாம் செல்ல வேண்டிய இலக்கை மறந்து தேவையற்ற விஷயங்களில் நம் மனதைச் செலுத்துகிறோம். அத்தகைய அசுரர்களை ஓடச்செய்பவன் பெருமான். எனவே சாளக்கிராமப் பெருமான் மீது மனத்தை செலுத்துமாறு தெரிவிக்கிறார் ஆழ்வார்.
எரிக்கப்பட்டவர்களின் எலும்புகளை அணிந்து, சுட்ட சாம்பலை உடலில் பூசி, கையிலே துளையுள்ள மண்டை ஓட்டை ஏந்தி வந்தார் சிவபெருமான். அவருடைய சாபத்தைப் போக்க உன் திருமார்பில் உள்ள அமுதமான செந்நீர் (உதிரம்) தந்தாய். சந்தன மரங்களால் சூழப்பட்ட திருச்சாளக்கிராமத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானின் இடத்தை என் நெஞ்சே! நீ சென்று அடைவாயாக! என்று ஆழ்வார் பாடுகிறார். மும்மூர்த்தியின் வடிவங்களால் ஒரே பரம்பொருள் இயக்கத்தை நடத்துகிறது என்பதை தெரிவிக்கிறார். வேற்றுமைகளைக் களைந்து கால விரயத்தை திவிர்க்கக் கூறுகிறார். ஆத்ம தரிசனத்தை அடைய பல தடைகள் வந்து போகும். அதனை முறியடித்து நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
வைணவ அடியார் கூட்டமும், தேவர்களும், பூணூல் தரித்த அந்தணரும், பிரபஞ்சத்தின் தலைவா! எங்களுக்கு அருள் புரிய வேண்டிக் கூடும் கோயில் திருச்சாளக்கிராமம். வண்டுகள் மொய்த்த சோலையில் உள்ள நீர் அங்கே நிலங்களில் பாயும். அப்போது மீன்கள் துள்ளும். தாமரை மலரும், அத்தகைய சாளக்கிராமத்திற்கு மனமே! நீ சென்றடையவாயாக! என்று தன் மனத்தை வேண்டுகிறார். பகவானிடம் அன்பு கொண்டுள்ள அடியார்கள் கைங்கர்யத்தில் ஈடுபடுகிறார்கள். சுகபோக வாழ்வினைத் தவிர்த்து பகவானின் நித்ய விபூதியை வேண்டி அவனுக்கு அருந்தொண்டு ஆற்றி வருகிறார்கள். தேவர்களும் இத்தகைய லட்சியத்தை அடைய மண்ணுலகில் அவதிரித்து அதனை அடைகிறார்க்கள். திசை மாறி செல்லும் அனைத்து மனங்களையும் இப்பாசுரத்தின் மூலம் நல்வழிப்படுத்துகிறார் ஆழ்வார்.
உலகில்
அறிவுடையோரெல்லாம் வானவர் வாழும் அமராவதிப் பட்டணத்தில் சுக போகங்களை அனுபவிக்க
விரும்பினால் புருஷோத்தமனுடைய ஆயிரம் நாமங்களையும் ஓதுங்கள். அதை உச்சரிக்க
இயலாதவர்கள் தாரா என்னும் பறவைகள் நிறைந்த, வயல்களில் சூழப்பட்ட
திருச்சாளக்கிரமத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைக் குறித்து
திருமங்கையாழ்வார் தாளமிட்டு இயற்றிய இந்த தமிழ் மாலையைப் பலமுறை சொல்லுங்கள்
என்று நம்மைக் கேட்டுக் கொள்கிறார் ஆழ்வார். சுகபோகங்கள் இருக்கும்வரை நமக்கு
ஆண்டவனிடம் பற்றுதல் ஏற்படாது. ஆசைகளை அனுபவித்து பின் அதில் வெறுப்பும்
விரக்தியும் ஏற்பட்டு அதில் சாரமில்லை என்பதையறிந்து இறுதியில் இறைவனே கதியென்ற
நிலை நமக்கு ஏற்படும். இத்தகைய நிலைதான் இறுதியானது என்கிறார் ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக