ஞாயிறு, 30 நவம்பர், 2025

55. திருப்பவளவண்ணம்

 


திருமங்கையாழ்வார்                                                                              திருநெடுந்தாண்டகம்
 

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
     மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்கத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
     குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
     பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா!
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
     ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே.       2060     

      ‘‘மரக்கலங்களில் சிறந்த இரத்தினங்களைக் கொண்டு தள்ளும் கடற்கரையைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் கோயில் கொண்டிருப்பவனே! திருமதில்களை உடைய காஞ்சியில் வாழ்பவனே! திருப்பேர் நகரில் குடிகொண்டிருப்பவனே! அழகிய கொன்றை மாலையை இடப்பக்கம் சூடிய மலை மன்னன் இமவானின் மகளான பார்வதியை இடப்பக்கம் அமர்த்தியுள்ள சிவபெருமானுக்கு உன் மேனியில் இடம் தந்தவனே!  குளிர்ந்த திருவேங்கட  மலையில் நின்றருள்பவனே! பவள நிறத்தவனே! எங்கே  போனாய்?  பகவானே! உன்னைத் தேடி இந்த ஏழை அலைகின்றேனே!’’ என்று ஆழ்வார் பகவானை வேண்டுகிறார்.
      பகவானைத் தேடுவதிலும் ஒரு அடித்தளம் அமைய வேண்டும். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்றெண்ணி தேடுவது சுயநலமாகும். இக்காரியத்தால் பகவான் நம்மை விட்டு விலகி விடுகிறான். சுயநலமில்லா அன்பைக் கொண்டு அவனை அடைய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்வார் இப்பாசுரம் இயற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...