செவ்வாய், 18 நவம்பர், 2025

90. திருக்கூடல் - மதுரை

 

திருமழிசையாழ்வார்                                                                           நான்முகன் திருவந்தாதி 

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக்கூடல் கூட மழைப் பேர்
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு            2420 

      திருவேங்கடத்தானை கண்ணால் தரிசிக்க அழைக்கிறேன்.  மழை போல் சொரியும் பெரிய அருவிகள் மின்னிடும் ரத்தினங்களை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு வந்திறங்க, அந்த இரத்தினங்களின் பிரகாசத்தைத் நெருப்பின் ஒளியாக எண்ணி யானைகள் அஞ்சி விலக, நாகங்கள் அந்த ஒளியை மின்னலாகக் கருதி புற்றுக்குள் நுழையும் திருமலையைச் சென்று அடைய வேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறுகிறார்.
      உலகத்தவர் நடந்து கொள்ளும் விதம் பற்றித் துன்பம் கொண்டு அவர்களை விட்டு விலகி திருவேங்கடமுடையானை சேவிக்கப்பெற வேணுமென்று நித்தமும் நித்யவாசம் பண்ணப்பெறுகிறேன். கூடலிழைத்தல், கூடல் வளைத்தல், கூடற்குறி போன்ற திருநாமங்களால் இப்பெருமான் வழங்கப்பெறுகிறார். இத்தெய்வமே நம்மை உய்விப்பவன். பொருளைத் தேடி அலையும் மனிதன் மரணம் குறுக்கிடும்போது அப்பொருள் நம்முடன் வருவதில்லை. நமக்கு வேங்கடவனே உண்மையான பாதுகாப்பு என்பதை அறிந்து அவனை தரிசிக்க விருப்பம் கொள்ளுமாறு தெரிவிக்கிறார் ஆழ்வார். 

திருமங்கையாழ்வார்                                                                                          பெரிய திருமொழி 

கோழியும் கூடலும் கோயில் கொண்ட
     கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
     பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் 
     மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி
     அச்சோ ஒருவர் அழகியவா        1762 

      உறையூரிலும் தென்மதுரையிலும் குடிகொண்டிருக்கும் கோபாலன் தமது திடமான தோள்களில் மணம் வீசும் திருத்துழாய் மாலையும், கைகளில் சுதர்சனச் சக்கரமும், பாஞ்சசன்னியம் என்ற சங்கினையும் தரித்துள்ளார். அனைவராலும் விரும்பத்தக்க எம்பெருமான் நம் இல்லத்தில் உள்ளார்.  பண்புள்ளம் கொண்ட இவரது வாயின் நிறம் செம்பவளமாகும். மரியாதைக்குரிய இவரது உருவமோ அழகிய பவளக் குவியலாகும். இத்தகைய அழகை எப்படி, என்னவென்று சொல்வேன்’ என்கிறாள்.
      பகவான் ஆண், பெண், விலங்குகள், பறவைகள் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் தலைவன். இக்காலத்தில் ஆண் பெண் உறவில் காமம்தான் முன்வந்து நிற்கிறது. காமத்திற்கு அப்பாற்பட்டது தெய்வீக நிலை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஆத்மாதான். இதை நமக்கு புரியவைக்கவே பெண்ணை முன்னிருத்தி பாசுரங்கள் அமைத்துள்ளார் ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...