பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
ஆயர்பாடி மக்கள் தங்கள் தலைவனான நந்தகோபனுக்குப் பிள்ளை பிறந்த செய்தி கேட்டதும் மகிழ்ச்சியில் திளைத்துப் போகிறார்கள். மக்கள் ஆர்ப்பரித்து, பிறந்த கண்ணனைப் பார்க்க ஓடுவதும், மஞ்சள் கலந்த சேற்றில் வழுக்கி விழுந்து பின் எழுந்து ஓடுகிறார்கள். நமக்கெல்லாம் உபகாரனாக உதித்த கண்ணனைக் காண மகிழ்வுடன் ஆர்ப்பரித்து ஓடுகிறார்கள். பலவகை வாத்யங்களும், பறைகளும் கொண்டு மகிழ்ச்சியுடன் கூத்தாடிப் பாடி பாலகனைக் காணச் செல்கிறார்கள். அவதாரப் புருஷன் பிறக்கும்போது ஊரே இனம் புரியாத ஆனந்தத்தில் திளைக்கும். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த கண்ணன் பிறந்துள்ளான். யாதவ மக்கள், வசுதேவேருக்கு பிறந்த பிள்ளையானாலும் நந்தகோபனுக்கு பிறந்ததாகவே எண்ணினார்கள். பிள்ளை பிறந்த செய்தியைச் சொல்வதற்காக சிலர் நாலா பக்கமும் ஓடினார்கள். அவ்விதம் ஓடும்போது எண்ணெயும், சுண்ணமும் கலந்த சேற்றில் வழுக்கி விழுந்தனர். சிலர் கூத்தாடி மகிழ்ந்தனர். சிலர் குழந்தையை ஆவலுடன் பார்க்கச் சென்றனர். இத்தகைய மகிழ்வுடன் ஆயர்ப்பாடி விழாக்கோலம் பூண்டது.
கண்ணன் பிறந்த செய்தியை அறிந்த யாதவர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியில் திளைத்ததை ஆழ்வார் இப்பாசுரவழி தெரிவிக்கிறார். பால், தயிர், நெய் நிறைந்த உறியை அறுத்துக் கொண்டு வந்து முற்றத்தில் உருட்டிவிட்டனர். சிலர் கண்ணன் நீடூழி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றைத் தானம் செய்து மகிழ்ந்தனர். ஆனந்தம் அதிகமாகி, அறிவு மங்கிய காரணத்தால் தங்கள் குடுமி அவிழ்ந்ததுகூட அறியாமல் குதித்தாடினர்.
ஆனந்தம் அதிகரித்தால் நாம் என்ன செய்கிறோம் என்பது மறந்து போகும். பகவானின் அவதாரமான கண்ணன் ஆயர்பாடிக்கு வந்ததும் ஆநிரைகள் மேய்க்கும் இடையர்கள் அனைவரும் ஆனந்தித்து மகிழ்ந்தார்கள். அவதாரப் புருஷர்களும், நன்மக்களும் எவ்விடத்தில் வசித்தாலும் அந்த இடமே சொர்க்க பூமியாக மாறிவிடும். அவ்விடத்தில் வாழ்கின்ற பசுக்கள் அளவின்றி பாலைக் கறக்கும். மரங்கள் பூத்துக் குலுங்கும். கனிகளும் நிறைவாக காய்த்து மக்களுக்குப் பலன்களைத் தரும். கண்ணனின் பிறப்பை இவ்வாறு ஆயர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கண்ணா! துஷ்டபுத்தி கொண்ட கம்சன் உன் மேல் சினம் கொண்டிருக்கிறான். நீ தனிமையில் உள்ளபோது உனக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டால் நான் உயிர் துறப்பேன். தாயின் சொல்லைக் கேட்பாயாக. அதுதான் தருமம். இவ்விஷயத்தில் நான் கட்டாயப்படுத்த வேண்டியுள்ளது. வெளியில் செல்லக்கூடாது. ஆயர்பாடியின் அழகு தீபமே! என் மடியில் படுத்துக் கொண்டு பால் அருந்துவாயாக என்று யசோதை கூறுகிறாள்.
கம்சன் உன்னைக் கொல்ல வேண்டும் என்று பலரை அசுர ரூபமாகவும், பட்சி ரூபமாகவும், தாவர உருவிலும் அனுப்பி நீ திரியுமிடமெல்லாம் தீங்கு செய்கிறான். நீ துணையற்று திரியும் போது நீ அறியாமலேயே உன்னைப் பிடிக்கத் துணிகிறான். என் பேச்சைக் கேட்டு இங்கே இருக்கக் கடவாய். உனக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் இத்திருவாய்ப்பாடியே இருளில் மூழ்கி விடும். இத்தருணத்தில் கண்ணன் செய்யும் துடுக்குத்தனத்தால் தான் கோபம் கொண்டாலும் தாய்ப் பாசத்தால் அவனுக்கு துன்பம் நேராதவாறு பார்த்துக் கொள்கிறாள் என்பதை இப்பாசுரம் வழியாக பெரியாழ்வார் நன்கு எடுத்துரைக்கிறார்.
பாலகனான கண்ணன் தனக்கு பால் மற்றும் தின்பண்டங்கள் எவையும் வேண்டாம் என்று ஓடினான். மூவுலகினை அளந்த திருவிக்கிரமா! நான் உனது காதில் போட்ட காதணியைக் கழற்றி எறிந்துவிட்டாய். கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து பசுக்கூட்டங்களைக் காத்தவனே! இராம அவதாரத்தில் சிவதனுசை முறித்தவனே! இளம் பருவத்திலேயே உன் காதைத் திரியிட்டுப் பெருக்காமல் விட்டது எனது தவறாகும் என்று தாய் யசோதை அலுத்துக் கொண்டு பாடுவது போன்று ஆழ்வார் பாடியுள்ளார். இளங்கண்ணன் யசோதைக்கு தரும் சிறு துன்பங்களைக் கண்டு கோபித்துக் கொள்ள, அதனால் வெறுத்த கண்ணன் தனக்கு பால் வேண்டாம் என்று ஓடி விடுகிறான். அவனது பிடிவாத குணத்தைக் கண்டு அவனிடம் கெஞ்சுகிறாள். பல்வேறு அற்புதங்களையும் பராக்கிரம காரியங்களையும் புரிந்த கண்ணனின் லீலைகளை இந்த உலக மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பாடுகிறார் ஆழ்வார்.
பெண்களை தம் தம் வீடுகளில் தங்க வைத்துவிட்டு, தாய்மார்கள் மோர் விற்பதற்கு வெளியே செல்வார்கள். தந்தைமார்கள் பசுக்களை மேய்ப்பதற்கு சென்று விடுவார்கள். அப்படி அவர்கள் இல்லாத சமயம் பார்த்து நீ அங்கு தனியே இருக்கும் இடைப் பெண்களை, அவர்களிடத்தில் போய் சந்தித்து, நீ விரும்பிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வாய். உன்னை ஏற்கன்றவே ஏசுபவர்கள், உன்னுடைய இந்த செய்கைகளைக் கண்டு மேலும் உன் மேல் பழி சுமத்த சந்தர்ப்பம் கிடைக்காததால் மகிழ்ச்சியடைகிறார்கள். உன்னை விரும்புபவர்கள் கூட அவர்கள் வெறுக்கும்படி இத்தகைய குறும்புகளைச் செய்து திரிகிறாய். ஆயர்குலச் செம்மலே! உன்னைத் தெய்வம் என்று அறிந்து கொண்டபின் உனக்கு பாலூட்ட நான் அச்சம் கொள்கிறேன். சுதந்திரன் போன்று அவன் ஆயர்பாடியில் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய இந்த பால லீலைகள் அன்பினை அடிப்படையாகக் கொண்டது என்ற கருத்தில் ஆழ்வார் பாடியுள்ளார்.
திருவாய்ப்பாடியில் பெண்கள் தமது திருமேனியில் பளிச்சென்று பற்றிக் கொள்ளும் மஞ்சளைப்பூசி கண்ணனைக் நீராட்டுவர். பெண்கள் கட்டிய மணல் வீட்டை விளையாட்டாக அவன் கலைத்து விட்டு ஓடிவிடுவான். எல்லா இடத்திலும் தனக்கு விருப்பமுள்ள பெண்களோடு குறும்புகள் செய்து கொண்டு திரிவான். அப்படிப்பட்ட விளையாட்டுப் பிள்ளையைக் கன்று மேய்க்க காட்டுக்கு அனுப்பிய நான் பாவியானேன் என்று யசோதை புலம்புவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
யசோதையை மையமாக வைத்துப் பெரியாழ்வார் கண்ணனின் பால விளையாட்டுக்களின் பெருமைகளைப் பாடியுள்ளார். இவ்வுலகினை அவன் விளையாடி ஆட்கொள்கிறான். அனைத்தையும் விளையாட்டாகவே அழித்து, அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு, ஆலிலையில் துயில் கொள்கிறான். மீண்டும் சகல உயிர்களையும் படைக்கிறான். ஊழிகாலத்தில் அனைத்தையும் அழித்து பின் உலகினை உருவாக்குகிறான். இத்தகைய பெருமைமிக்க கண்ணனை கன்று மேய்க்க அனுப்பிய நான் ஒரு பாவி என்று யசோதை வருந்துவது போல் பெரியாழ்வார் வருந்திப் பாடுகிறார்.
வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானைக் கான் அதரிடைக் கன்றின்பின்
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே! 237
கோபியர்களின் சேலைகளை மறைத்தல், அவர்கள் இல்லம் சென்று வெண்ணெயைக் களவாடுதல் போன்ற பலவிதமான குறும்புகள் செய்து கோபியர்கள் புகார் சொல்லும்படி திரிந்து விளையாடியவன் கண்ணன். கண்ணுக்கு இனிமையாக இருப்பவன் என் கண்ணன். நினைப்பதற்கு அரியவனாகவும் அவன் இருக்கிறான். அப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட அவனைக் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப் பகுதியில் கன்றுகள் மேய்க்க அனுப்பிய பாவியாக நான் உள்ளேன் என்று தாயார் வருந்துகிறாள். யசோதையும் மற்ற கோபிகைகளும் பகவானால் ஆட்கொள்ளும் பக்குவ நிலையினை ஏற்கெனவே அடைந்துவிட்டார்கள். இவர்கள் முன்பிறவியில் செய்த நல்வினைகளின் பயனால் இத்தகையதொரு நிலையினை அடைந்துள்ளார்கள். அவர்கள் அடைந்த பேற்றினை பாசுரம் வழியாக ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கின்றார்.
என்னுடைய மகனான கண்ணபிரான் வெண்ணெய் எடுத்து உண்ணும்போது அவனது தொண்டையில் வெண்ணெய் வழுக்கிக் கொண்டு போகும்படி அதனை விழுங்கிவிட்டு, பிறரது இல்லங்களுக்குச் சென்று கள்ளத்துடன் கூடிய வேலைகளைச் செய்வான் என் கண்ணன். இந்த ஆயர்பாடி முழுவதும் திரிந்து விளையாடுவான். அவனுடைய அந்த விளையாட்டைத் தடை செய்து, காட்டு யானைகள் நடமாடும் பாதையில் கன்றுகள் மேய்க்க அவனை அனுப்பிய நான் ஒரு பாவி என்று யசோதை வருந்திப் பாடுவது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது. கண்ணனின் இத்தகைய விளையாட்டு என்பது இவ்வையகத்து மக்களை சம்சாரக் கடலிலிருந்து மீட்டு வைகுந்தத்தில் பேரின்ப வாழ்வினை வழங்கும் ஆனந்த விளையாட்டாக கருத வேண்டும் என்று தமது பாசுரவழி தெரிவிக்கிறார் ஆழ்வார்.
பிரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தில், நம் மேலான தலைவன் பூவுலகில் கண்ணனாக அவதரித்துச் செல்வதைக்கண்டு தேவர்கள் மறைந்து நின்று ஆசையுடன் கண்ணனை வணங்குகிறார்கள். பசுக்கூட்டங்களின் பின்னே செல்லும் கண்ணனின் மிடுக்குடன் கூடிய நடையழகும், அலங்காரத்தையும் கொண்டவனை ஆயர்பாடி வீதியிலே கண்ணன் செல்வதைக் கண்டு கோபிகைகள் ஆசை கொண்டதை, வண்டுகள் படிந்துள்ள வில்லிப்புதூரில் வாழும் தலைவராகிய பெரியாழ்வார் பத்துப் பாசுரங்களில், வேதத்தின் சாரமாகிய இந்த அற்புதக் கருத்தினை அறிந்து ராகத்துடனும் பக்தியுடனும் பாடுபவர்கள் பரமபதத்தை அடைவார்கள் என்று கூறுகிறார். பகவானின் பெருமைகளையும், அவதாரச் செயல்களையும், பால லீலைகளையும் ஆழ்வார் திரும்பத் திரும்ப சொல்வதற்குக் காரணம் நாமும் நிலையற்ற இவ்வாழ்விலிருந்து விடுதலை பெற்று மேலான வாழ்க்கையைப் பெற வேண்டும் என்ற கருத்து இப்பாசுரத்தில் புலப்படுகிறது.
பூமியிலே நான் கண்ட அற்புதத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள். ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட கண்ணன் பசுக்களை மேய்க்கும் இடைச் சிறுவர்கள் கூட்டத்தில் இருந்து கொண்டு புல்லாங்குழல் இசைக்கின்றான். அந்தக் குழலோசை தேவலோகத்தில் கேட்கிறது. அதைக் கேட்ட தேவர்கள் வேள்வி உணவை மறந்து ஆயர்ப்பாடிக்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். கூட்ட நெறிசலில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு கண்ணனின் குழலோசையை கேட்டு மகிழ்கிறார்கள். செவிக்கு உணவு கொடுத்து கோவிந்தனைக் கண்டு ஆனந்தித்து அரை நொடிகூட பிரிய மனமில்லாமல் இருக்கும் இந்த அற்புதத்தைக் கேளுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். கிடைத்தற்கரிய வேள்வியிலிருந்து வரும் அவிர்பாகத்தையும் மறந்து கண்ணனின் குழலோசை கேட்டு வந்துள்ளார்கள். திருக்கச்சித் தலத்தில் பேரருளாளனின் உற்சவத்தைக் காண மக்கள் கூடுவது போன்று ஆயர்ப்பாடியில் கூடினார்கள் என்று வியாக்யானங்கள் கூறுகின்றன.
ஆண்டாள் திருப்பாவை
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில், பெருமானுக்குக் கைங்கர்யம் செய்யும் மனதையும் இளம் பருவத்தையும் ஒருங்கே சேர்ந்துள்ள பெண் பிள்ளைகாள், அழகிய ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் பூர்ண சந்திரோதயத்தையுடைய சுக்லபட்சத்து நல்ல நாளும், கூர்மையான வேலாயுதத்தையுடையவனும், கண்ணபிரானுக்குத் தீங்கிழைக்கும் கொடிய எண்ணம் கொண்டவரை, சீறிப்பாயும் கொடுந்தொழில் புரிபவனுமான நந்நகோபனுக்குப் பிள்ளையாய் பிறந்தவனும், அழகுமிக்க கண்களை உடையவனுமாய், யசோதைக்கு இளஞ்சிங்கமாய் திகழ்பவனும் காளமேகத்தைப் போன்று வலிமையான திருமேனியை உடையவனும், செந்தாமரை போன்று அழகிய கண்களை உடையவனும், ஆதவனைப் போன்று ஒளியையும், சந்திரனைப் போன்று குளிர்ச்சியுடைய அழகிய திருமுகத்தைப் பெற்றவனுமான ஸ்ரீமந் நாராயணனே! நமக்கு மோட்சத்தை அளிக்க வல்லவன். அவனால் நாம் பேறு பெறுவோம். அதனால் இவ்வுலகத்தவர்கள் கொண்டாடும்படி இந்நோன்பில் ஊன்றி நீராட விருப்பம் உடையவர்களே! விரைந்து வாருங்கள்! என்று தோழிகளை ஆண்டாள் அழைக்கிறாள்.
ஆண்டாள் நாச்சியார் திருமொழி
நாணி இனி ஓர் கருமம் இல்லை
நால் அயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகு அளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் 618
நாற்புறமும் உள்ளவர்களுக்கும் கண்ணன் மேல் நான் கொண்ட காதல் தெரிந்துவிட்டது. இனி நாணிப் பயனில்லை. காலம் தாழாமல் என் பசலை நோய் தீர பரிகாரம் செய்ய நினைத்தால், வாமன வடிவமெடுத்து உலகினை அளந்த அந்த மாயவனிடம் என்னைச் சேர்த்து விடுங்கள். நீங்கள் என்னைக் காக்க விரும்பினால் உடனே என்னை ஆயர்ப்பாடிக்கு கொண்டு சேர்த்து விடுங்கள். இப்பசலை அவனைக் கண்டால்தான் தீரும் என்று ஆண்டாள் கூறுகிறாள்.
பசலை நோய் என்று கூறுவது அற்பமான உடல் இச்சை என்பதாகும். இப்பாசுரத்தில் ஆத்மாவின் சங்கமத்தை விரும்பும் பசலையாகக் கருத வேண்டும். ஆண்டாள் கொண்ட பக்தி போன்று பகவானுக்காக உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் அவனிடம் ஒப்படைப்பதே காலத்தில் செய்ய வேண்டிய கடமையாகக் கருத வேண்டும். ஆனால் இவ்வையக மக்களோ உறவுகளுக்காகவும், பொருள்களைப் பெறுவதற்காகவும் தமது காலத்தை விரயம் செய்கிறார்கள். பகவான் ஒருவரே நம்மை உய்விக்கக் கூடியவர் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் ஆண்டாள் பாடியுள்ளாள்.
திருஆய்ப்பாடி முழுவதும் தனது பேச்சாலும், செயலாலும், புல்லாங்குழல் இசையாலும் கவர்ந்து அனுபவிக்கும் கறுத்த காளை போன்றவன் கண்ணன். அவன் என்னை விரக வேதனையில் விரட்டுகிறான். அதனால் தளர்ந்து நலிவுற்று நொந்து கிடக்கின்ற என்னை இவ்வுலகத்தில் ஆறுதல் சொல்லித் தேற்றுவார் யாருண்டு? ஆராவமுதனான அவனது அமுத வாயில் ஊறிய தேவாமுதத்தைக் கொண்டு என் சரீரம் உலர்ந்து போகாதபடி பருகச் செய்யுங்கள் என்று தனது விரக வேதனையைக் கூறுகிறாள். தனது பேச்சால் என்று கூறுவது கீதையில் அவன் உரைத்த வேதத்தின் சாரமாகும். எத்தெய்வத்தை ஒருவர் வழிபட்டாலும் அது என்னையே வந்து சாரும் என்பது அவனது கருத்தாகும். செயல் என்பது திரௌபதியின் மானம் காத்த நிகழ்வாகும். உலகளந்தவனின் நிகழ்வும், தூணிலிருந்து வந்து பாலகனைக் காத்ததும் ஒரு செயலாகும்.
விரக தாபத்தால் தன்னை வாட்டிய ஆயர்பாடியின் மங்கல தீபமான கண்ணனை ஸ்ரீவில்லிப்புத்தூரின் தலைவரான விஷ்ணு சித்தரின் மகளும், குணசாலியும், வில்லைத் தோற்கடிக்கும் உருவத்தை உடையவளுமான கோதை ஆசைப்பட்டு ஆராத காதலோடு அருளிச் செய்த இப்பாமாலையை பக்தியோடு துதிப்பவர்கள் துன்பக் கடலில் துவள மாட்டார்கள் என்று ஆண்டாள் கூறுகிறாள்.
பகவான் அணிந்த துளசி மாலையை என் மீது போடுங்கள், வனமாலையை என் மீது போடுங்கள் என்றெல்லாம் சொல்லி எம்பெருமானின் பெருமைகளை நமக்கு பறைசாற்றுகிறாள். காளியனின் செருக்கை அடக்கியது, இரண்யகசிபுவை அழித்தது, கம்சனை தொலைத்தது போன்ற பெருமானின் பெருமைகளைப் பக்தியோடு பாடுபவர்கள் துன்பக் கடலிலிருந்து விடுபட்டு பேரானந்தத்தை அடைவார்கள். முன்வினைப் பயன்கள் அவனது பெருமை மறைக்கின்றது. இத்திரை விலக ஆண்டாளின் பாசுரங்களைப் பக்தி உணர்வோடு படிப்பதே சிறந்த வழியாகும்.
நாள்தோறும் நான் மிகவும் துயரம் கொண்டு என்னைப் பிரிந்து திருவாய்ப்பாடியில் உள்ளோரைத் தன் குறும்பினால் ஈர்த்தவன் கண்ணன். அந்தச் சுகத்தில் திளைத்த வெண்ணெய் மணம் வீசும் இளங்காளையனை கோவர்த்தனனைக் கண்டீர்களோ? மின்னலும் மேகமும் ஓன்றோடொன்று இணைத்தது போல் கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற வனமாலை திகழத் தோழர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் மாதவனை நாங்கள் பிருந்தாவனத்தில் கண்டோம் என்கிறாள் ஆண்டாள்.
உலக உயிர்களைக் காப்பதற்கு மழைமேகம் இன்றியமையாதது. அதுபோன்று உலகத்தாருக்கு வாழ்வும், வளமும் தருபவனாக எம்பெருமான் திகழ்கின்றான். வனமாலை அணிந்த அவனது திருக்காட்சி நமக்குப் பேரருளைத் தருவதற்கு தயாராக உள்ளது. இவ்வாறு அனைவரையும் காக்கும் பெருமான் தனது குறும்புத்தனத்தால் என்னை கவர்ந்துள்ளான். அத்தகைய குறும்புத்தனமும் காரணகாரியமாக அமைந்துள்ளன. அத்தகையவன் பிருந்தாவனத்தில் தனது தோழர்களோடு விளையாடுவதைக் கண்டோம் என்று சொன்னார்கள் என்று கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பாரதப் போரில் அர்ச்சுணனுக்காக தனது திருக்கரங்களால் தேரோட்டி வெற்றி பெற்றுத்தந்த பேரொளியாக் திகழ்ந்த கண்ணபிரான் பிருந்தாவனத்தில் இராசக்கிரீடை செய்தவனாவான். இவனை பக்தியோடு வணங்குபவர் உள்ளத்தில் உறைபவனாகத் திகழ்கின்றான். திருவிடவெந்தையில் அழகாக எழுந்தருளியுள்ளான் எம்பிரான். புனித நீர் நிலைகளாலும், அழகு மிக்க சோலைகளாலும் சூழப்பட்ட உயரிய திருவேங்கடத்தில் கோயில் கொண்டு நம்மையெல்லாம் ஆட்சி செய்து வருகிறான். நெஞ்சமே! நீ அவனிடம் செல்வாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
அண்டசராசரங்களுக்கு அதிபதியாகத் திகழ்ந்த திருமால் கிருஷ்ணனராக அவதாரம் செய்து பாரதப் போரில் விஜயனுக்கு சாரதியாக விளங்கினான். இதனை துரியோதனன் சரிவர புரிந்து கொள்ளாததால் போரில் தோல்வியைத் தழுவினான். பிதாமகரைக் குறை கூறினான். பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணன் இருப்பதால் வெற்றி நிச்சயம் என்பதை அறிந்திராமல் தோற்றான். அத்தகையவன் திருவிட வெந்தையிலும், திருவேங்கடத்திலும் கோயில் கொண்டுள்ளான். மனமே! அவனைத் தேடிச் செல்வாயாக! என்பது இதன் பொருளாகும்.
ஆபரணங்களை பூண்ட தனது தனத்தின் மேல் என் மகள் சந்தனம் பூச மறுக்கிறாள். கயல் போன்ற கண்களில் காதலனை நினைத்து கண்ணீர் சிந்தி மை தீட்டிக் கொள்வதில்லை. தான் அன்புடன் வளர்த்த நாகனவாய் பறவயையும் சரிவர கவனிப்பதில்லை. எனது தலைவன் எழுந்தருளியிருக்கும் திருவரங்கம் எங்கே என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாள். தாமரையில் உதித்த திருமகளின் கணவன் நாம் அறியுமாறு ஆயர்ப்பாடியில் வளர்ந்த கண்ணன் என் மகளை அடைவான் என்கிறாள் தாயார்.
தெய்வீக நிலை என்பது உலக பந்தங்களை மறப்பதுதான். பந்தங்களை யார் வெறுக்கிறார்களோ அவர்கள் மனப்பித்து பிடித்தவர்கள் என்று சொல்கின்றனர். பகவானை நோக்கி செல்பவர்களை இந்த உலகத்தவர் பல்வேறு விதமாக பழிப்பார்கள். இது உலக இயல்பு. அதனையெல்லாம் இலட்சியம் செய்யாது நாம் பகவானை அடைவது என்ற குறிக்கோளை அடைய பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
‘அழகு மிக்க பொன் போன்ற ஏழு உலகங்களும் அறியும்படி ஆயர்ப்பாடியில் நப்பின்னையின் கொடி போன்ற மேனியை அணைவதற்காக காளைகளை கொன்றான். அப்பெருமான் திருப்பேர் நகரில் வாசம் செய்துள்ளான். செப்புத் தகடுகளாலான மதில்கைளால் சூழப்பட்ட அந்நகரில் குடிகொண்டிருக்கும் பகவானின் திருநாமங்களை நாள்தோறும் பாடி உய்ந்தேன்’ என்கிறார் ஆழ்வார்.
மக்களுக்கு துன்பம் விளைவித்த ஏழு காளைகளை பகவான் கொன்றார். அவைகள் நமது ஆத்மாவை மூடி மறைக்கும் ஏழு விதமான திரைகள் என்று நாம் கொள்ள வேண்டும். தியானம், யோகம் போன்றவற்றால் இத்திரைகளை விலக்க முடியும். பகவான் தந்த சக்திகளை சரியான முறையில் உபயோகித்து நம் துன்பங்களை களைய வேண்டும். சோம்பி இருந்தால் பகவானின் துணை நமக்கு கிடைக்காது என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
தோழீ! கொடியவனான கம்சன் தந்தையான வசுதேவருடைய கால் விலங்கு கழன்று விழச் செய்யும் வல்லமை படைத்தவனாகத் தோன்றினான். தந்தையின் அடிமை விலங்கை உடைப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணன் இம்மண்ணுலகில் அவதரித்தான். அத்தகைவன் ஆயர்ப்பாடியில் நந்தன்குலப் பிள்ளையாய் வளர்ந்தான் பார். அடியே! சாதாரண குழந்தையாக ஆயர்ப்பாடியில் வெண்ணெய் உண்டு வளர்ந்தான். குறும்புகள் பல செய்து யசோதையிடம் பிடிபட்டு உரலில் கட்டுண்டான். நந்தகுமாரனாய் வளர்ந்தவன் தான் சகல ஜீவராசிகளையும் படைக்கும் பிரம்மாவுக்குத் தந்தையான பெருமான் கோகுலத்தில் சிறு பிள்ளையாக வளர்ந்தார். பூ பாரத்தைத் தீர்ப்பதற்காக வந்த பகவான் அந்தக் காலத்தை எதிர்பார்த்து இவ்விதம் மிகச் சாதாரணமாக தோற்றம் அளித்தார். எனவே ‘எனக்குத் தலைவன் அவர்தான் தெரிந்து கொள்’ என்று கூறுகிறாள். தலைவியைக் கற்பனைப் பாத்திரமாக வடித்து நம் அனைவருக்கும் நல்வழிகாட்டி கரை சேர்க்கக் கூடியவர் மாயக் கிருஷ்ணனே என்பதை ஆழ்வார் இப்பாசுரத்தில் கூறுகிறார்.
தோழீ! ஆழ்கடலால் சூழப்பட்ட, வையகத்தார் ஏசும்படி, ஆயர்ப்பாடியில் தழைத்துக் கொண்டையிடும் இடைச்சியர் சேமித்து வைத்திருந்த தயிரை உண்டிருக்கிறான் பார்! அடியே! இடைச்சிகள் உறியில் வைத்த தயிரை வாங்கிக் கொண்ட திருவயிறு, ஊழிகாலத்தில் இவ்வுலகங்கள் ஏழையும் உண்டும் இன்னமும் இதமுடையதாக இருப்பது வியப்பல்லவா? என்று வினவுகிறாள் தலைவி. இப்பாசுரத்தில் பகவானின் பெருமைகளை தனது தோழிக்கு எடுத்துறைக்கிறாள். வெண்ணெய் களவாடிய கண்ணன் ஊழிக்காலத்தில் உலகம் அனைத்தும் தன் திருவயிற்றில் அடக்கி நம்மைக் காத்தான். அவ்விதம் செய்தும்கூட அவனது வயிறு இடமுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ஆயர்ப்பாடியில் நாமும் அடக்கம் என்பதை புரிந்து கொள்வாயாக. எனவே அவனையே நாம் துணையாகக் கொள்ள வேண்டும். நாம் கொள்ளும் துன்பம் என்பது நாம் பகவானை மறந்து போனதால் ஏற்பட்டதாகும் என்பதை தலைவி தனது தோழிக்கு எடுத்துறைக்கிறாள்.
தோழீ! இவன் இறைவன் என்றறியாத கோபர்களுக்குள் மாடு மேய்க்கும் இடையனாகச் சென்று ஆயர்ப்பாடியில் உறியிலுள்ள வாசமுள்ள வெண்ணெயை உண்டு மகிழ்ந்தவனைப் பார். அடியே! உறியிலுள்ள வெண்ணெயை அமுது செய்து உகந்ததற்குக் காரணம் தங்கமான வயிற்றுக்குக் கடல் சூழ்ந்த உலகங்களெல்லாம் போதாது என்று மேலும் இவைகளை அமுது செய்தான் என்ற பொருளில் அமைந்துள்ளது.
இப்பாசுரத்ததில் கண்ணன் வெண்ணெயைக் களவாடி உண்பதற்குப் புதிய கண்ணோட்டத்தோடு ஆழ்வார் விளக்கம் தருகிறார். ஊழிக்காலத்தில் உலகங்களை உண்டு காத்த பெருமானின் திருவயிற்றில் மேலும் இடம் இருந்ததால் அதில் தயிர், வெண்ணெய் போன்றவற்றை உண்டு நிரப்பினான் என்ற வகையில் ஆழ்வார் கூறுகிறார். நம்மைக் காத்தருளும் பெருமானை மறவாமல் அவரை தினமும் போற்றிப் பாடி பக்தி கொள்ள வேண்டும். நம்மைக் கரை சேர்க்க பகவான் உள்ள போது வேறு துணையை நாடாமல் இருப்பதே நலம். அமுதம் உள்ள போது நஞ்சினைத் தேடிச் செல்வது சரியா? என்ற வினாவினை எழுப்புகிறார் ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக