பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
வடதிசையிலுள்ள மதுரையும், புனிதமே வடிவான சாளக்கிராமமும், வைகுண்டமும், துவாரகையும், திருஅயோத்தியும், இடமுடைத்தாயிருந்துள்ள ஸ்ரீபத்ரிகாச்ரமம் போன்றவைகளை பெருமான் வாசஸ்தலமாகக் கொண்டுள்ளான்.. எமக்குப் பெருமானாக உள்ள புருஷோத்தமனாய்த் திகழ்கின்ற ஸ்வாமியின் இருப்பிடமானது, மந்திரம் முதலான பெரிய மலைளானவை தொடர்ந்து அதிரவும், பூமியானது பிளவுபட்டு இடிந்து விழவும், மாங்கனிகளுடைய தலையளவும் கிளம்பிக் கரையில் நிற்கின்ற மரங்களில் மோதி முறித்தும், எதற்காகவும் எள்ளளவும் கலங்காத கடலும்கூட கலங்கும்படியாக வேகமாய் கொண்டு இழியா நின்றுள்ள கங்கைநதி தீரத்தில் கண்டமென்னும் கடிநகராகத் திகழ்கின்றது என்ற கருத்தில் அமைகின்றது.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
முழுவதுமாக வயோதிகமடைந்து ஊன்றுகோலைத் துணையாகக் கொண்டு முன்னே வைக்க வேண்டிய அடியைக் குனிந்து பார்த்து முறிந்த கால் போல் தடுமாறி விழுவதற்கு முன்பு பகவான் எழுந்தருளியுள்ள திருவதிரியை தரிசிக்க வேண்டும். மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குவதற்கு முன்பாக, பூதனையின் பெருத்த தனங்களில் வாய் வைத்து பாலோடு அவளது உயிரையும் வறண்டு போகுமாறு உறிஞ்சிக் குடித்த வாயுடைய எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருவதரியின் திசை நோக்கி வணங்குவோம் என்கிறார் ஆழ்வார். முதிய பருவம் வந்தால் தெளிவு இருக்காது. மறதியும், மயக்கமும் நம்மை அண்டும். காலன் வந்து நம்மை அழைப்பான். மறுபிறவி எடுத்தே ஆகவேண்டும். வதரிகாச்சிரமப் பெருமானின் துணை கொண்டு நமனை வெல்வோம் என்கிறார்.
ஒரு கையால் முதுகைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் முன்னால் ஒரு கம்பை ஊன்றிக் கொண்டு, உடல் நடுங்க, கண்கள் சுழல, மேல் மூச்சு வாங்கி, இடையிடையே இருமி வாலிப வயதினரும், சுற்றத்தாரும் ‘இதென்ன இந்தக் கிழவனால் நமக்குத் தொல்லை’ என்று ஏசும் நிலை வருமுன்னரே பூவிலுள்ள தேனைக் குடித்து வாழும் வண்டுகள் இசைபாடும் திருவதரியை வணங்குவோம் என்று கூறுகிறார் ஆழ்வார். இளமை என்பது முடிந்து விடும் என்று நமக்குத் தெரியும். அதனையும் மீறி மாயையின் பிடியில் அகப்பட்டு அதனை மறக்கிறோம். மனிதன் என்றும் வாழ்வான் என்ற நினைப்பே அதிசயம் என்று தருமன் கூறுவது போன்று அதனை மறந்து திரிகிறோம். எனவே இளமையிலே திருவதரி பிரானை வணங்கி கரை சேர வேண்டும் என்கிறார்.
உடலிலுள்ள நரம்புகள் அனைத்தும் உறிக்கயிறு போன்று மேலே கிளம்பும். தசைபிடிப்பு குலையும். அதனால் மனம் வருந்தும். நடக்கும் வழி பார்த்து அதனாலே விழிகள் சுழல முன் அடி வைக்க முடியாமல் நின்று நடுங்கும் காலம் வரும். இப்படிப்பட்ட காலம் வருவதற்கு முன்பே ஏ மனமே! எம்பெருமானிடம் பக்தி கொண்டு அவனது ஆயிரம் நாமங்களையும் சொல்லி, மது உண்டதால் உன்மத்தம் கொண்டு வண்டுகள் இசைபாடும் திருவதிரியை வணங்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வாயாக! என்று தன் மனத்தை வேண்டுகிறார். இப்பாசுரத்தில் முதுமையின் அவல நிலையை நன்கு விளக்குகிறார். முதுமையில் எதுவும் செய்ய இயலாத நிலையில் அது வருவதற்கு முன்பே திருவதிரி நாராயணனைப் பற்றுவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
இந்த உடல், கண்கள் இடுங்கி, பீளை பொங்கி, பித்தம் அதிகமாகிக் கிழத்தன்மை அடையும். காறி காறி உமிழும்படி இருமல் வரும். கால்கள் ஒன்றோடொன்று இடிக்கத் தடுமாறி நடக்க வேண்டிவரும். இந்த நிலை வருவதற்கு முன்பே, இளைஞனாக மாடு மேய்த்து, கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து கோகுலத்தைக் காத்து நின்றவன் இருக்கின்ற, வாளை மீன்கள் மகிழ்ந்திருக்கும் பொய்கைகள் சூழ்ந்த திருவதரியை வணங்குவோமாக! என்கிறார் ஆழ்வார். வயோதிகம் வருமுன்பே பகவானை அடைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார். எத்தகைய வலிமையாக இருப்பினும் வயோதிக காலத்தில் மற்றொருவரின் உதவியை நாட வேண்டும். பணத்தில் மிதந்தவன் வயோதிகத்தில் துன்புறுகிறான். இத்தகைய இழிநிலை பெறமால் வதரி நாராயணனைப் பற்றுவோமாக.
வாலிபப் பருவத்தில் அழகாக இருந்து பெண்கள் தன் மீது மோகம் கொண்டு சுற்றி வந்ததையும், தான் அப்பெண்களிடம் சிற்றின்பத்தில் திளைத்ததையும் வர்ணனை செய்யும்போது, நடுவில் தொண்டை கமற இருமி, ஊன்றுகோல் ஊன்றி தள்ளாடி நடக்கும் காலம் வருவதற்கு முன்பு வண்டுகள் ரீங்காரம் செய்யும் குளிர்ந்த துளசி மாலையை அணிந்திருக்கும் பத்ரி நாராயணன் எழுந்தருளியிருக்கும் திருவதரியை வணங்குவோமாக! என்கிறார் ஆழ்வார். முதுமை வரும்போது எல்லாச் சுகமும் நம்மை விட்டு அகலும். ஆனால் இதனை உணராமல் மாயத்திரை நம் கண்களை மறைக்கின்றது. நம் கூடவே இருந்த பெண்கள் முதுமையில் நம்மைவிட்டு சுயநலத்துடன் அகன்று விடுவார்கள். இது பெண்களுக்கும் பொருந்தும். இந்நிலை வரும்போது பிறவித்தளையை அறுத்தெரிய வதரி நாராயணனைப் பற்றுவோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
நடுநடுங்கும் குரலோடு பேச, சரிவர பேச முடியாமல், மார்பிலே சளி கட்டிக் கொள்ள இருமி, இருமி துப்பித் துன்பம் கொள்ளும் காலம் நமக்கு வந்து சேரும். அப்போது தேகம் இளைத்துப் போகும். புத்தியானது ஒரே சீராக இருக்காது. மறதி அதிகமாகி ஒன்றை நினைத்து அதனைப் பேச முடியாமல் இன்னொன்றைப் பேசி உடல் தளரும் காலம் வரும். இத்தகைய வயோதிக காலம் வருவதற்கு முன்னரே அனைவருக்கும் ஒரே தலைவனாய், எனக்குத் உற்ற தந்தையாய், இந்த மகா உலகம் தோன்றுவதற்கு காரண கர்த்தவாவாய் இருக்கும், தேவர்களுக்கெல்லாம் தேவாமிருதம் கிடைக்கத் திருப்பாற்கடலைக் கடைந்த கரிய மாணிக்கம் போல் ஒளியுடைய எம்பெருமான் கோயில் கொண்டிருக்கும் திருவதரி நாராயணனை வணங்குவோமாக! என்று கூறுகிறார் ஆழ்வார்.
அந்திமக் காலத்தில் மனிதன் இருமும் போதெல்லாம் கட்டி கட்டியாக கோழை வெளிவர, செப்பு போன்ற மென்மையான தனங்களையுடைய பெண்கள் அய்யகோ கிழவரை வயோதிகம் மிகவும்தான் வாட்டுகிறது. இத்தகைய இவர் இளமையில் எப்படி இருந்தாரோ என்று நமுட்டுச் சிரிப்புடன் இகழ்ச்சியாக அருகில் இருப்பவரிடம் ஏளனமாக சிரிக்கும் காலம் வருவதற்கு முன்னர் நமக்கு ஐஸ்வர்யம் போன்றவனும், நம்மை வாழ வைப்பவனுமான நாராயணன் குடியிருக்கும் திருவதரியை வணங்குவோமாக என்று கூறுகிறார் ஆழ்வார். வாலிப பருவத்தில் ஏக்கப் பார்வை பார்க்கும் பெண்கள் வயோதிகத்தில் ஏளனப் பார்வை பார்ப்பார்கள். இத்தகைய இழிவான நிலையை நாம் சந்திக்க வேண்டுமா? என்று ஆழ்வார் கேட்கிறார். நம்மை முழுவதும் புரிந்துள்ள திருவதரி நாராயணனின் பொற்பாதங்களைப் பற்றி இத்தகைய நிலையத் தவிருங்கள் என்கிறார்.
வெளியே போங்கள்! இனி இவ்விடத்தில் இருத்தல் கூடாது. இருமி, இருமியே நெஞ்செலும்பு தெரியுமளவு இளைத்து விட்டீர்கள். இப்படி நாங்கள் பேசும்போது கூசினால் போதுமா? என்று கருநெய்தல் போன்ற கரிய கண்களையுடைய மாதர்கள் பேசுவதற்கு முன்பே, ஸ்வரூபநாசத்தை விளைவிக்கவல்ல ஆசாபாசத்தை விட்டுத் தொலைத்து அவர்கள் மேல் கொண்ட ஆசையை முற்றிலுமாகத் துறந்து, நல்ல வழியில் செல்ல நினைத்தால், மணம் நிறைந்த துளசி மாலையை அணிந்திருக்கும் பரந்தாமன் குடிகொண்டிருக்கும் திருவதரியை வணங்குவோமாக! என்று கூறுகிறார் ஆழ்வார். என்னைவிட்டு என்றும் பிரியக்கூடாது என்று இளமையில் கூறிய பெண்கள் வயது முதிர்ந்தவுடன் நம்மை விரட்டிவிடுவார்கள். திருவதரியில் பரந்தாமன் இருக்க பெண்களின் மோக வலையில் விட்டில் பூச்சிகளாக விழுந்து விடாதீர்கள் என்று ஆழ்வார் நம்மை எச்சரிக்கிறார்.
நம் உடலில் உள்ள கர்மேந்திரங்கான வாய், கை, கால், குதம், குறி போன்றவையும், ஞானேந்திரியங்களான நாக்கு, மூக்கு, கண், காது மற்றும் உடல் ஆகியவைப் பழுதடைய, வயோதிகத்தை அடைந்து நான்கு பேர் இருக்கும் இடத்தை விட்டுத் தனியாக இருந்து மனம் விகாரப்பட்டுக் கலங்கி, வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று பகுதிகளும் வேறுபட்டதாய், கபத்தை உடல் வெளியே தள்ள, மனம் போனபடி வாயில் வந்ததைக் கண்டபடி பிதற்றும் முன்னரே, குளிர்ந்த துளசி மாலையுடன் ஆயிர நாமங்களையும் சொல்லியபடியும் பாமாலை பாடி ஆடியும் அடியார்கள் வலம் வரும் திருவதரி சென்று அடிபணிவோம்! என்று கூறுகிறார் ஆழ்வார். வாதம், பித்தம், கபம் ஆகியவை முதுமையில் மாறுபட்டு நோய்களாக மாறுகின்றன. இத்தகைய மாற்றம் இயற்கையே. நாம் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் திருவதரிப் பெருமானின் நாமங்களைச் சொல்லி உய்வீராக! என்கிறார் ஆழ்வார்.
வண்டுகள் தேனைக் குடித்து வாழும் திருவதரியில் குடி கொண்டுள்ள திருமாலை, தாழைகள் வேலியாக உடைய, திருமங்கைக்குத் தலைவரான திருமங்கையாழ்வார் பாடியுள்ள சிறப்புமிக்க இந்தப் பத்துப் பாடல்களையும் அடியார்கள் கூடிப் பாடி அடுவார்களேயானால் பரமபதத்தில் வாழ்வர் என்பது நிச்சயம் என்கிறார் ஆழ்வார். இளமைப் பருவத்தில் பல சோதனைகளைச் சந்தித்து அற்ப பொருளுக்கு ஆசைப்பட்டு அதில் மதிமயங்கும் மனிதன், வரப்போகும் கொடிய துன்பத்தை அறியாமல் முதுமையும் அடைந்து பல இன்னல்களை அனுபவிக்கிறான். இத்தகைய முதுமையின் இழிவைப் புலப்படுத்தி வாலிப வயதினிலேயே திருவதரிப் பெருமானைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார். அத்தகைய பெருமான்மீது ஆடிப்பாடி பக்தி கொள்பவர்கள் பரமபதத்தில் வாழ்வார்கள் என்பது இதன் கருத்தாகும்.
கொடிய அசுரனான இரண்யாக்ஷகன் பூமிதேவியைக் கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் சிறை வைத்தான். உலகத்தின் இயக்கங்கள் அனைத்தும் முழுவதுமாக நின்றுபோய்விட்டன. தேவர்கள் அனைவரும் பூமாதேவியை காக்குமாறு எம்பெருமான் திருவடிகளை வணங்கினர். பெருமான் வராக அவதாரமெடுத்தது பூமிதேதவியைக் காத்தான். அது போன்று இராமாவதாரத்தில் ஸ்ரீராமனாக அவதரித்து இராவணனது சரீரம் மண்ணில் புரளும்படி கோதண்டத்தை வளைத்தவன் என் தலைவன். அவன் தேன் மிகுந்த சோலையாக உள்ள கற்பக மரம் பூத்த தெய்வத் தன்மையுள்ள வாசனையுள்ள மலர்களைக் கொண்டு வந்து அமரர்கள் வணங்கும் கங்கைக் கரையிலுள்ள திருவதரியாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ளான் என்று கூறுகிறார் ஆழ்வார். திருமால் வராக அவதாரம் எடுத்ததை இங்கு குறிப்பிடுகிறார். பின் இராமனாகி இராவணனை வதம் செய்ததைக் கூறுகிறார். இத்தகைய பெருமான் திருவதரிகாச்சிரமத்தில் சேவை சாதிக்கிறார் என்கிறார்.
பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்ததால் அன்னையை மீட்டுவர பெருங்கடலில் அணைகட்டி கடலரசனின் அகந்தையை அழித்து வானரர்களோடு அங்கு சென்று இலங்கையை அழித்தான் ஸ்ரீராமபிரான். குபேரனை வென்று சங்கநிதி, பதுமநிதி ஆகிய இரண்டையும் கைப்பற்றிய இராணவனையும், அரக்கர்களையும் குலத்தோடு அழியும்படி தனது பாணங்களைச் செலுத்திய அயோத்தி இராமன் திருவதரிகாச்சிரமத்தில் அருள் புரிகிறான். அழகிய தீர்த்தத்தைக் கொண்டுள்ள இத்தலமானது கொழுஞ்சுடரான சூரியன் வலம் வந்து விலங்கலான மேரு மலையில் விழுந்து மோதி ஆகாயத்தின் வெண்மையான கொடியாடையென விரிந்து மிடுக்கான வேகமுடையதாய் ஸ்படிகமணி போல் தெளிவான நீர் நிரைந்த கங்கைக் கரையில் அமைந்துள்ளது. விஷ்ணு புராணத்திலும் இதே கருத்தினை விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளது. இத்தகைய பெருமான் திருவதரிகாச்சிரமத்தில் சேவை சாதிக்கிறார் என்கிறார்.
மனமே! இப்போது உனக்கு உறுதியாக ஒன்று கூறுகிறேன் கேட்பாயாக. பக்தர்களுக்குண்டான நோய்களையெல்லாம தீர்த்து அவர்களைக் காத்து விண்ணுலக வாழ்வு தரும் அருளைத் தருபவன் பகவான். அழகிய மலர்களைச் சூடிய தேவ மங்கையரின் ஆடைகளையும், ஆரங்களையும் அடித்துத் தள்ளியபடி இரத்தினங்களோடு வந்து விழுகின்ற கங்கைக் கரையில் உள்ள திருவதரியாச்சிரமத்தில் நாராயணன் எழுந்தருளியிருக்கின்றான்! அவனை வணங்கி உய்வாயாக என்று தன் மனதிற்குக் கூறுகிறார். இங்கு ஆழ்வார் குறிப்பிடும் நோயானது பற்றை உண்மையென்று நம்பி உணமையைப் புறக்கணிக்கும் நோய் ஆகும். மனதில் ஆத்மஜோதி இருக்க தன்னை வெற்றுடல் என்று எண்ணி நோயுடன் வாழ்கிறார். இத்தகைய நோய்களை நீக்குமாறு திருவதிரிநாதனை நாள்தோறும் வேண்டுமாறு ஆழ்வார் கூறுகிறார்.
யசோதையின் வேஷங்கொண்டு பொய்யாக வந்த பூதனையின் இடுப்பில் அமர்ந்துகொண்டு அவளது மார்பில் கண்ணன் பால் குடித்ததை யசோதைப் பார்த்து இனி இப்பிள்ளையை மடியிலெடுத்துக் கொள்ளக் கூடாது, இக்குழந்தை தன்னிடம் பால் குடிக்கும்போது உயிரை எடுத்துவிடுவானோ என்று கலங்கினாள். இக்குழந்தையின் இயல்புக்கு அஞ்ச வேண்டியுள்ளதே என்று வருந்தினாள். தாயே அஞ்சும்படி இத்தகைய சூரனாக வளர்ந்த பிள்ளை திருவதியாசிரமத்தில் வீற்றிருக்கிறான். அந்தத் திருத்தலம் உயர்ந்த சிகரத்தின் உச்சியிலே அண்டத்தையே தாங்குகின்ற தங்கம் நிறைந்த மேரு பர்வதத்திலே இடப்பக்கத்திலிருந்து விழுகின்ற கங்கைக் கரையில் உள்ளது. நம்மை வீழ்த்த பல தீயசக்திகள் இருந்த போதிலும் நம்மைக் காக்க பலம் பொருந்திய தேவதைகளின் வடிவில் பகவான் காக்கின்றான். அவன் நமக்கு சூட்சும சக்தியை அளித்து நம்மைக் காக்கின்றான் என்ற கருத்தில் ஆழ்வார் தெரிவிக்கின்றார்.
தேர்த்தட்டு போன்ற அழகிய இடையையும், கயல்மீன் போன்ற அழகிய விழிகளையும் கொண்ட, கும்பன் என்னும் இடையர் தலைவனின் மகளான நீளா பிராட்டியான நப்பின்னையை அடைய, கோபம் கொள்ளும் செயல் புரியும் அசுரவேஷம் கொண்ட ஏழு காளைகளையும் கண்முன்னே அழித்த குளிர்ந்த மேக வண்ணனான எம்பெருமான் திருவதரிகாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ளான். அத்திருத்தலம் பகீரதனின் தவத்தால் வெகு வேகமாகப் பெருகி வந்து வழியைத் தடுக்கும் பெரிய மலைகளைப் பிளந்து கொண்டு, அங்கு வாழும் யானைகளையும் தள்ளிக்கொண்டு விழும் கங்கைக் கரையில் உள்ளது. இத்தலத்தில் வந்து ஸ்ரீமந் நாராயணனான வதரிகாச்சிரமப் பெருமானைத் தரிசித்தால் பாவங்கள் நிரந்தரமாக ஓடிவிடும் என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார்.
பாற்கடல் கடையப்பட்டு அதில் தோன்றிய ஐராவதம் என்ற யானையை தேவேந்திரனுக்கு அளித்தான். அதில் வந்த தேவாமிர்தத்தையும், சொர்க்கத்துடன் தேவர்களுக்கு அரசாளும் பாக்கியத்தையும் இந்திரனுக்குத் தந்தவன் எம்பெருமான். அதேசமயம் நமக்கு அருள்புரியும் தந்தையாய், தலைவனாய், தெய்வமாய்க் காக்கிறான். தேவர்கள் அவன் திருப்பாதங்களை வணங்க, ஆயிரம் முகம் கொண்டு அருளினான். அவன் மந்திர மலையிலிருந்து வந்து விழும் கங்கைக் கரையிலுள்ள திருவதரியாச்சிரமத்தில் வீற்றிருக்கிறான் என்கிறார் ஆழ்வார். கங்கையானது ஆர்ப்பரித்துக் கொட்டுவது கடல் சீற்றத்துடன் பெருகி வருவது போலிருக்கும் என்கிறார். அத்தகைய இடத்தில் குடிகொண்டிருக்கும் திருவதரிப் பெருமானை சரணடைந்து எல்லா நன்மைகளையும் பெற முடியும் என்பதை இப்பாடலின் கருத்தாக அமைகிறது.
ஒரு சமயம் பஞ்சவடியில் ஸ்ரீராமன் எழுந்தருளியிருந்தபோது வஞ்சகமாக மான் வடிவில் வந்த மாரீசனை அழித்தவன் அயோத்தி மன்னன். பரம பக்தனான பிரகல்லாதனின் துன்பத்தை அகற்ற அவன் தந்தையான இரண்யகசிபுவின் பொன்நிற சரீரம் இரண்டாகப் பிளந்து கிழித்த நரசிம்மன் திருவதரியாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ளான். சிவபெருமான் கிள்ளிய பிரம்மாவின் தலை கபாலமாக அவரைப் பற்றியது. தன் திருமேனி இரத்தத்தால் கபாலத்தை நிரப்பி அவனது பிரம்மஹத்தி சாபத்தைத் தீர்த்த நாராயணன், பகீரதன் கொண்டு வந்த கங்கையின் கரையிலே எழுந்தருளியுள்ளான் என்கிறார் ஆழ்வார். தவம் புரிந்த மாமுனியான விசுவாமித்திரர் கொண்டு வந்த கங்கை என்று பராங்குசதாசர் பொருள் கொள்ள, அதைக் கேட்ட நஞ்சீயர் இல்லாக் கருத்தைக் கொள்ளலாகாது என்று உரைத்து பகீரதன் தவம் செய்து கொண்டு வந்த கங்கை என்று பொருளுரைத்தார்.
மேகங்கள், காற்று, மலைகள், சப்தமிடும் கடல், உலகங்கள் போன்ற அனைத்து விதமான பதார்த்தங்களை பிரளயம் கொண்டு போகாமலிருக்க அதனை உண்ட பெரிய வயிறு உடையவன், சூரிய, சந்திரர்களையுடைய வானுலகத்தையும், ஊழியையும் தனக்கு அங்கங்களாகக் கொண்ட உபயவிபூதி நாதனான மகாவிஷ்ணு திருவதரியாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ளான். அத்திருத்தலம் பகீரதன் கங்கையை வரவழைத்த சமயம், பிரம்ம லோகத்தின் வழியே வானிலிருந்து இறங்கி பூமிதேவி வருந்தும்படி பெருகி நிறைந்து, ஸ்படிகம் போல் தெளிந்த நீரையுடைய கங்கைக் கரையில் உள்ளது என்கிறார் ஆழ்வார். அண்டசராசரங்கள் அனைத்தும் மகாவிஷ்ணுவின் அங்கங்களாக உள்ளன. தேவர்கள் மட்டுமன்றி அசுரர்களும் அவனுள் ஐக்கியமாக உள்ளார்கள். அத்தகையவனை திருவதரியில் வந்து தரிசியுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
மிக வேகத்தோடு
வருகிற அலைகளையுடைய, ஸ்படிகம் போல் தெளிந்த நீரினையுடைய கங்கைக்
கரையிலுள்ள திருவதரியாச்ரமத்தில் கோயில் கொண்டிருப்பவனை ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் ஆகிய மூன்று வகையான நீரினைக்
கொண்ட கருங்கடல் போன்ற நிறத்தவனை மனதில் நிறுத்தி திருமங்கையாழ்வார் இயற்றிய
இப்பாமாலையிலுள்ள பத்துப் பாடல்களையும் வரம் பெற்றவர்களே பாட இயலும். அவர்கள்
வானவரோடு கூடி இருந்து மறுபிறவியில் சக்கரவர்த்தியாக உலகை ஆண்டு, மறுபிறப்பில்லாமல் தேவ லோகத்தில் நிரந்தரமாக வாசம் செய்வர் என்று
கூறுகிறார் ஆழ்வார். மேலும் பலன் வேண்டி இப்பாசுரங்களைப் பக்தியுடன் பாடுவோர்க்கு
அத்தகைய பலன் கிடைக்கும். எனவே இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித்
தலைக்காட்டும் பாசுரமாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக