திங்கள், 24 நவம்பர், 2025

70. திருக்கடித்தானம்

 


நம்மாழ்வார்                                                                                                              திருவாய் மொழி 

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே     3502 

       என்னுடைய ஆர்த்தியைப் போக்குபவனான பரந்தாமன் இரவு, பகல் என்னும் வேறுபாடின்றி எல்லாக் காலங்களிலும் அவனை நினைத்து நாம் உய்வு பெறவும், நாம் எத்தகைய பாவங்கள் செய்திருப்பினும் நமக்கு நல்லருள் புரிந்து நம்மைக் கருணையுடன் காக்கிறான்.  அவன் தன் திருமுடியில் அழகிய அல்லி மலரோடு, குளிர்ச்சியான திருத்துழாயையும் சூடியுள்ளான். என் தந்தையான அவனுக்கு தொண்டு செய்யும் கைங்கர்ய, ஞான, பக்தி, செல்வம் என்கின்ற  செல்வங்களைப் பெற்றுள்ள விஷ்ணு பக்தர்கள் வாழும் திருக்கடித்தானத்தில் அவர்களுக்காகச் சேவை சாதிக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
       மாயக்கூத்தா உன்னை நான் என்று சேவிப்பேன் என்று மனம் வருந்திக் கேட்கிறார் ஆழ்வார். பெருமானும் அவருக்கு சேவை சாதிக்க எண்ணினார். ஆனால் திடீரெனத் தோன்றி ஆழ்வார் உள்ளத்தில் வந்து தங்கினால் திக்கிதிணறி விடுவார் என்று நினைத்து முதலில் திருக்கடித்தானத் தலத்தில் வந்து தங்கினார். பின் மறுநாள் பெருமான் சேர வேண்டிய இடமான ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்தார். பெருமான் மிகுந்த நன்றி உணர்வுடன் திருக்கடித்தானத்திலும், ஆழ்வார் திருவுள்ளத்திலும் ஒரே சமயத்தில் வாசம் செய்கிறார். 

திருக்கடித்தானமும் என்னுடையச் சிந்தையும்
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக் கடுத்து அன்று திகைத்த அரக்கரை
உருக் கெட வாளி பொழிந்த ஒருவனே   3503 

      திருக்கடித்தானத்தையம், என்னுடைய சிந்தனையையும் ஒன்றாக நினைத்துக் குடியிருக்கும் எம்பிரானைப் பார்த்தீர்களா?  அக்காலத்தில் போர்முனையிலே சீற்றத்தோடு திகைத்து நின்ற செருக்குற்று திகைத்த அரக்கர் கூட்டங்களை அழிய வில்லாலான பாண மழையைப் பொழிந்த ஒப்பற்ற ஸ்ரீராமபிரான்தான் என் உள்ளத்தில் உறைகிறான் என்று கூறகிறார் ஆழ்வார். என்னை பெருமானுடன் சேரவிடாமல் தடுப்பவை பலவிதமான பிரதிபந்கங்கள். இவை அனைத்தையும் போக்கி என்னுள் வந்து சேருகிறார். அங்கும் உறைந்து என்னுள்ளிலும் உறைகிறார் பெருமான். இத்தகைய பெருமானானவன் செருக்குற்ற கொடிய அரக்கர்களை தனது கூரிய அம்புகளால் முழுவதுமாக அழித்தவனான இராமபிரான் திருக்கடித்தானத்தில் அற்புத நாராயணனாக சேவை சாதிக்கின்றான். அவரே என் உள்ளத்திலும் வாசம் செய்கிறார்.    

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்தோறும் தித்திப்பான்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாயப் பிரானே.     3504.\       

      ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி போர்க்களத்தில் ஒருவனாக நின்று போர் செய்திருக்கிறான். சிலர் கண்களுக்கு இருவராகவும், சிலர் பார்வைக்கு மூவராகவும் நின்றிருக்கிறான். தன் திருமேனியைக் காட்டாமலேயே எண்ணுந்தோறும் இனிப்பை ஏற்படுத்துகிறவன். மகாலட்சுமி உறையும் மார்பினனான அந்த அற்புத நாராயணன் திருக்கடித்தானத்தை விரும்பி வந்து உறைந்திருக்கின்றான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      இராமன் நிதானித்து போர் புரியும் போது ஒருவராக இருப்பான். வலிமையுடன் வேகத்தைக் கூட்டி போரிடும்போது இருவராகத் தோன்றினான்.  மேலும் வேகம் கூட்டியவுடன் மூன்று உருவமாகத் தோன்றினான். பின் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போனான். அவ்விதம் போர் புரிந்து அரக்கர் கூட்டங்களை நிர்மூலமாக அழித்தான். அப்பெருமான் நம் உள்ளத்தில் உள்ளான். நினைக்கும் நேரத்தில் ஆராஅமுதமாக தித்திப்பான். மகாலட்சுமியை தனது திருமார்பில் தரித்தவனான பெருமான் திருக்கடித்தானம் என்னும் திவ்ய தேசத்தை விட்டு அசையாமல் அனைவருக்கும் சேவை சாதித்து வருகிறான். 

மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே.
  3505 

      அற்புதங்கள் பல செய்த ஸ்ரீமந் நாராயணன், என் கொடிய பாவங்களை அழித்து, என்னிடம் கொண்ட பிரியத்தாலும், தர்ம சிந்தனையாலும் என் நெஞ்சமென்னும் நாட்டில் வந்து குடி கொண்டான். ஒளி பொருந்திய தேவர்களும் வந்து வணங்கும் திருக்கடித்தானத்தில் அவன் கோயில் கொண்டுள்ளான். அக்கோயிலைச் சுற்றி வாசம் வீசும் பூஞ்சோலைகள் உள்ளன என்று கூறுகிறார்.
      இத்தலத்துப் பெருமான் வியப்பான குணங்களும் சேஷ்டிதங்களும் கொண்டவன். என் வினைகளெல்லாம் தொலையும்படிக்கு என் நெஞ்சத்தையே நாடாகக் கொண்டவன். இங்கு நாடு என்பது பரமபதமாகும்.      பரமபதத்தின் மீது எத்தகைய பற்று கொள்வோமோ அத்தகைய பற்றினை என் நெஞ்சில் வைத்தான். இந்த தேசத்திலே குடிகொண்டுள்ள இவர்கள் பல மலர்வனங்களால் வாசம் சூழ்ந்துள்ள திருக்கடித்தானத்தில் பகவான் கோயில் கொண்டுள்ளான். உபாய பாவத்தால் திருக்கடித்தானத்திலும், நேசத்தினால் ஆழ்வார் திருவுள்ளத்திலும் எம்பெருமான் குடிகொண்டுள்ளான் என்பது இதன் பொருளாகும். 

கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம்;
கோயில்கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே!       3506 

      ஒவ்வொரு கோயிலிலும் தங்கியிருக்கின்ற  தெய்வங்கள் எல்லாம் தொழும்படி, வைகுண்டத்தில் கோயில் கொண்ட குடக்கூத்தாடிய எம்பெருமான் திருக்கடித்தானத்தில் கோயில் கொண்டபின் அதோடு வந்து என் இதயத்திலும் கோயில் கொண்டான் என்கிறார் ஆழ்வார்.
      அரவத் தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து’ என்று பெரியாழ்வார் தமது தேக ஆரோக்கியத்திற்காகப் பாடினார். பெருமான் உறையும் நம் உள்ளம் சுத்தமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற எண்ணத்தை மனதில் இருத்தி கண்ட குப்பைகளை மனதில் சேர்த்தால் அதுவே நம்மை பலவீனப்படுத்தி நோய்தொற்று உண்டாக்கும். ஏழுலகங்களை உண்டாக்கிய பரந்தாமனை நம் மனமென்னும் திருகோயிலில் எழுந்தருளச்செய்தால் நோயெல்லாம் அகன்றோடிவிடும்.  அத்தகைய பெருமான் என்னுள்ளத்தில் குடிபுகுந்தார் என்று ஆழ்வார் கூறுகிறார். மேலும் பெருமான் திருக்கடித்தானத்தையும் விடாமல் பற்றியுள்ளார் என்று கருத்து இதன் மூலம் தெளிவாகிறது.  

கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை
ஏத்த நில்லா குறிக்கொள்மின் இடரே.       3507 

      குடக்கூத்தாடிய என் சுவாமி, கொடியவனான என் துன்பங்கள் முழுவதையும் அழித்த எம்பெருமான், மது என்கிற அரக்கனை அழித்த ஸ்ரீஹரி உறைகின்ற, மலர்கள் நிறைந்த நந்தவனங்கள் நிறைந்த, குளிர்ச்சியான அழகிய திருக்கடித்தானத்தைப் போற்றித் துதிப்பீர்களானால் உங்களையே குறி வைத்திருக்கும் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து போகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      எம்பெருமான் தனது சேஷ்டிதங்களால் எல்லோர் மனதையும் பறிக்கக் கூடியவன். அடியேனின் இடர்கள் அனைத்தும் தொலையும்படிக்கு, பெருமானை நான் பிரிந்து படும் துன்பங்களை அனைத்தையும் அழியும்படி செய்தவன். கொடிய மது கைடபர்களை அழித்த மதுசூதனனை, விரோதிகளை சாமர்த்தியமாக அழிக்கும். திறன் கொண்ட பெருமான் எப்போதும் வாழக்கூடிய மலர்கள் பூத்த பொழில்களாலே சூழப்பட்ட திருக்கடித்தானத்தை நாம் வாயுறைத்தால் நம்மில் கொண்டுள்ள பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும் இதனைக் குறிக்கொண்மின் என்று கூறுகிறார் ஆழ்வார். 

கொள்மின் இடர் கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக்கடித்தான நகரே      3508 

      மண்ணையும் விண்ணையும் முழுவதுமாக அளந்து கொண்ட அழகிய தாமரை போன்ற பாதங்களைப் பூலோகத்தினர் வணங்க, தேவலோகத்தவர் தரிசிக்க விரும்பி வந்து சேரும் தலமானது திருக்கடித்தான நகரமாகும்.  அதில் உறையும் கோவிந்தனை நெஞ்சத்துள் வைத்தீர்களானால் உங்கள் துன்பங்கள் அனைத்தும் அழிந்து போகும் என்கிறார் ஆழ்வார்.
      ஆநிரைகளை மேய்த்து வருபவனான, அனைவருக்கும் எளியவனான கோவிந்தனை என்றும் உங்கள் மனத்தில் நினையுங்கள். மண்ணையும் விண்ணையும் தாமரை மலரையொத்த திருவிக்கிரமனின் திருப்பாதங்கள் அளந்தன. எனவே மண்ணவர் தொழுவதற்கான இடமாக திருக்கடித்தானம் அமைந்தது. அதுபோன்று நித்யசூரிகள் சேவிப்பதற்கான இடம் பரமபதம். இருப்பினும் வானவர்கள் எளிமையாகச் சேவிக்க திருக்கடித்தானப் பெருமானைத் தேடி வருகிறார்கள்.      

தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும்
வான் இந் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும் தன தாயப் பதியே.     3509 

      ஸ்ரீவைகுண்டம், திருப்பாற்கடல் தவிர, இந்தப் பூலோகத்தில் பலவிதமான பெருமைகளை உடைய பல க்ஷேத்திரங்கள் என்று பரந்தாமனுக்கு பல இடங்கள் உகந்ததாயுள்ளன. ஆனாலும் என் நெஞ்சத்தையும், திருக்கடித்தானத்தையும் தனக்கு உரிமையான பூர்விக சொத்தாக எண்ணி மாயவன் குடியிருக்கின்றான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      திருக்கடித்தானம் என்பது தாயப்பிராப்தமான ஒரு ஊராகவும்,  சிறந்த க்ஷேத்திரமாகவும் விளங்கும் நகராகக் கருதப்படுகிறது. சூரிய மண்டலம், ஸ்ரீவைகுண்டம், க்ஷீராப்தி போன்ற வானில் உள்ள உலகங்களும், வானும், கடலும், நிலமும் அனைத்தும் என் மாயவனுக்கு உரித்தாகுகிறது. இருப்பினும் திருக்கடித்தானத்திலும், ஆழ்வார் திருநெஞ்சத்திலும் அவர் விரும்பித்  தங்கிவிட்டார். ஆழ்வார் நெஞ்சத்தை மிகப் பெரிய இடமாகக் கருதி அங்கு தங்கி இருப்பதே அவருக்கு மனநிறைவைத் தருகிறது என்று பெருமான் கூறுகிறார்.   

தாயப் பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும்
மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள்
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே      3510 

       யாதவர்களின் தலைவனாகிய, அற்புதங்கள் பலவும் செய்த கண்ணனுக்குத் தாய்வீட்டுச் சீதனம் போல் மேன்மையான தலங்கள் பல இருப்பினும் விருப்பத்தோடு ஸ்திரமாக உறையும் இடம் திருக்கடித்தானமாகும். அங்கே வானவர்கள் தினமும் வந்து வழிபடுகிறார்கள் என்று தமது பாசுரத்தின் வழி தெரிவிக்கிறார் ஆழ்வார்.
      தான் ஆசைப்பட்டு வந்து சேர்ந்த இடமாக திருகடித்தானத்தைக் கருதுகிறார் பெருமான். திவ்ய தேசங்கள் பல இருப்பினும் அவன் இச்சை கொண்டு நிறைவுடன் வீற்றிருக்கும் இடம் திருக்கடித்தானமாகும். இந்த தேசத்தில் உள்ள தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் வாழும் இத்தலத்தில் என்னை அடைவதற்காக இங்கு வந்து சேர்ந்துள்ளார். மேன்மை, எளிமை இவை இரண்டையும் காட்டி ஆயர்களுக்கு அதிபதியான பெருமான் இங்கு சேவை சாதிக்கிறான். அவனே அற்புத நாராயணனாகத் திகழ்கிறான். 

 அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம்
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே.       3511 

      நற்புகழையுடைய வேதியர்கள் வாழும் நான்கு வேதங்களும் நிலை பெற்று முழங்கும் கற்பகச்  சோலைகள் நிறைந்த திருக்கடித்தானத்தில் நின்றருள் புரியும் அற்புத நாராயணன், ஸ்ரீஹரியான வாமனன் குடியிருப்பது என் மனமாகும் என்கிறார் ஆழ்வார்.
      நாராயணனாகவும், ஸ்ரீஹரியாகவும், வாமனனாகவும் இருந்த பெருமான் இங்கு அற்புதனாகத் திகழ்கிறார். நம்மில் இருந்து நாராயணனாக காட்சி தருகிறார். ஒருநாளும் தன் அடியார்கள் தேடி வரும் நிலையில் அவரை கைவிடமாட்டாமல் எதிரிகளிடமிருந்து காத்தருளும் ஸ்ரீஹரியாகவும் இருக்கிறார். தான் யாசித்தேனும் நமக்கு அருளும் தயாள குணம் படைத்த வாமனனாகவும் இருக்கிறார்.  இத்தகைய குணங்களால் இத்தலத்தில் அற்புத நாராயணனாகத் திகழ்கின்றான். அவன் எழுந்தருளியிருப்பது திருக்கடித்தானத்தில்; மேவியிருப்பது ஆழ்வார் உள்ளத்தில். இதுவே பெருமானுக்கு நிரந்தர வாசமாயிற்று என்பது இதன் கருத்தாகும். 

சோலைத் திருக்கடித்தானத்து உறை திரு
மாலை மதிள் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே       3512 

      சோலைகள் சூழ்ந்த திருக்கடித்தானத்தில் உறையும் திருமாலை, மதில்களைக் கொண்ட திருக்குருகூரில் அவதரித்த சடகோபர் பாடிய, பாலோடு அமுது சேர்ந்ததைப் போன்ற ஆயிரம் பாசுரங்களுள், இந்தப் பத்துப் பாமாலைகளும் பாடக் கூடியவர்களை மேன்மையான வைகுண்டத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் இருக்க வைக்கும் என்கிறார் ஆழ்வார்.
       அழகிய மலர்களாலும், சோலைகளாலும் நல்ல மணத்துடன் சூழப்பட்ட திருக்கடித்தானத்துப் பெருமாள் தூய்மையான பாலைப் போன்றிருப்பார். திருக்குருகூர் சடகோபன் சொல்லான திருவாய் மொழியானது அமுதத்தைப் போன்று இனிக்கும். பாலைப் போல் ஆயிரமும், அமுதத்தைப் போன்று இப்பத்தும் விளங்குவதால் இப்பத்துப் பாடல்களைச் சொல்வதற்கு இப்பூமியிலும் மக்கள் உள்ளனரே என வியந்து அவர்களை வைகுந்தத்தில் இருத்தி விடுவார் பெருமான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...