திருமங்கையாழ்வர் பெரிய திருமொழி
பொல்லாத செயல்களைச் செய்வது, வயிற்றுப்
பிழைப்பிற்காக பிறருக்கு அடிமையாக இருந்து பணி செய்வது, அபத்தமான
உண்மைக்குப் புறம்பான தவறுகள் உள்ள சமய நூல்களை மெய்யான நூல்கள் என்று எண்ணி
படித்துப் பாழாகிப் போகாமல் உய்ய வாருங்கள் என்றும், மனிதர்களே கெட்டுப் போகாமல்
என் சொல்லை ஆதரியுங்கள் என்று வற்புறுத்தியும், அதை ஏற்காமல் அவர்களை
விட்டொழித்தார். பத்தராவிப் பெருமான் முகம் கொடாமல் பிராட்டியுடன் சல்லாபித்து
இருந்ததால் தலசயனப் பெருமானை தஞ்சம் அடையப் புறப்படுகிறார். திருமகள் வாக்கினால் தூண்டப்பட்ட பெருமான்
தலசயனத்தில் வந்து அருள் புரிந்தார். இப்பெருமான்
எனக்குத் தந்தையானவன், என் போன்றோர் வணங்கும்படி எளியவனாய் இருப்பவன், அடியார்கள்
போற்றும் வேதப் பொருளானவன். காளமேகம் போன்ற நிறமுடைய எங்கள் தலைவன்
திருநின்றவூரில் முத்துத் திரள் போல் குளிர்ச்சியாய் இருப்பவன். காண்டவ வனத்தைத்
தீக்கிரையாக்கிய பகவான் கடல்மல்லை பூமியில் பள்ளி கொண்டிருப்பதைக் கண்டேன் என்று
கூறுகிறார் ஆழ்வார். தலசயனத்துப் பெருமானை தாம் சேவித்து ஆனந்தம் கொண்டது போன்று
அனைவரும் சேவித்து ஆனந்திக்க வேண்டும் என்பதே அவரது அவாவாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக