திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தனது பெருமைகளைத்
தான் அறியாமல் சாமானியனாகப் பாண்டவர்களுக்காகத் தூது சென்ற தேவாதி தேவனுடைய ஊர்
திருக்கூடலூராகும். இத்தலம் செங்காந்தள் மலர் போன்ற விரல்களையுடைய மெல்லிய உடை
உடுத்திய நல்ல மங்கையரின் கூந்தல் மணம் கமழும் அழகிய மலர்களுள்ள இடமாகும்
என்கிறார் ஆழ்வார்.
பாண்டவர்களுக்காகக்
கழுத்திலே ஓலைகட்டித் தூது சென்று பாண்டவதூதனென்று பேர்பெற்றான்; இப்படி இவன் இழிதொழில் செய்தாலும்
‘பராத்பரனாயிருப்பவன் இப்படி இழிதொழில் செய்யப்பெறுவதே!’ என்று அறிவித்திறத்தோர்
ஈடுபடும்படி இருக்குமத்தனையன்றி இழிவாகக்கருத இடமில்லையே; ராஜாதிராஜன்
என்கிற பெருமையும் மிக்குத் தோன்றுமென்கிறார்.
ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் தலைவனாக இருப்பவர் பகவான்.
அசுரக்கூட்டங்களை அழித்தவர், ஊழிகாலத்தில் ஆலிலைமேல் வாசம்
செய்தவர், வேதத்தின் பொருளாக இருப்பவர், சகல ஜீவராசிகளுக்கும் ஆத்மாவாக உள்ளவர், இப்படிப்பட்ட
பராக்கிரமசாலி சாதாரண மனிதனைப் போல் பாண்டவர்களுக்குத் தூதுவனாகச் சென்றார். பாண்டவர்கள் பகவானின் பேரில் கொண்ட அன்பினால்
தன்னைத் தாழ்த்தி அவர்களுக்கு உதவி செய்தார். அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும்
பகவான் துணையிருப்பான் என்பது இதன் கருத்தாகும்.
திடமான ஏழு
காளைகளை அடக்கி நப்பின்னையை பரிசுபோல் பெற்ற அழகிய திருமேனியை உடைய பெருமான்
வாழும் ஊர் திருக்கூடலூராகும். இத்தலம் நறுமணமுள்ள மணமிக்கதாய் இனிமையான தேனை
பருகிய வண்டுகள் குறிஞ்சிப் பண்ணை இசைக்கும் இடமாகும் என்று பொருள்பட இப்பாசுரம் அமைந்துள்ளது.
மேல்விழும்
திண்மையான முசுப்புக்களையுடைய
ரிஷபங்களை பந்தயமாக உடையவளான
கண்டவர் கண்குளிரும்
பெறும் அழகியான
நப்பின்னையை பெற்றவரின் ஊர் மணமிக்க குளிர்ந்த இனிய தேனை பருகின வண்டுகள் குறிஞ்சிப் பண்ணைப் பாடும் கூடலூராகும்.
இங்கு ஏழு காளைகள் என்பது ஏழு அசுரர்களாகக் குறிக்கின்றது. நமக்கும்
பெருமானுக்கும் நீண்ட இடைவெளி ஏற்படுத்தும் தீய குணங்கள் என்ற அசுரர்களையும்
அழிக்கும் வல்லைம பெற்றவன் திருக்கூடலூரில் கோயில் கொண்டுள்ளான். மனித வாழ்க்கை
என்பது ஆன்மிக முன்னேற்றத்தினை
அடைவதற்காகவே நமக்கு அளிக்கப்பட்டுள்ள வரப்பிரசாதமாகும். எல்லா ஆசைகளையும் துறந்து
நமக்குள் இருக்கும் ஆத்ம ஒளியை தரிசிக்கவே நாம் வந்துள்ளோம் என்ற உண்மையை நாம்
புரிந்து கொள்ள வேண்டும்.
சிறு
பிள்ளையாயிருந்து கொண்டு தயிரை உண்டு அடியேனின் உள்ளத்தில் குடிகொண்ட கண்ணனது
கோகுலம் போல் இருக்கும் ஊர் திருக்கூடலூராகும்.
இத்தலம் கள்ளத்தனம் உள்ள வெண்மையான நாரைகள், கழனிகளில் நின்று கயல் மீன்களைக் கொத்திக் கொள்ளை கொள்ளும்
இடமாகும்’ என்கிறார் ஆழ்வார்.
ஸர்வேச்வரனாயிருந்து
கொண்டு தயிருண்ணப் பார்த்தால் அவ்விருப்பம் நிறைவேறாதென்று அதற்காகப்
பிள்ளைவடிவு கொண்டு தயிரமுது செய்து, இப்படி ஆச்ரிதருடைய ஹஸ்தஸ்பர்சம் பெற்ற த்ரவ்யத்தாலன்றி வேறென்றாலும்
செல்லாத நீர்மையைக்காட்டி என்நெஞ்சை வசப்படுத்திக் கொண்ட விலக்ஷணபுருஷன்
விரும்பியுறையுமிடம் திருக்கூடலூர்.
நாரைகள் நீர்நிலைகளில் சென்று
உட்கார்ந்திருக்கும்; அவற்றின்
காலிலே சிறுமீன்கள் வந்து குத்தும்; குத்தினாலும் ‘’உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாங்
கொக்கு?” என்றாப்போலே அவற்றை அநாதரித்திருந்து தாம்விரும்பி
உட்கொள்ளும் பெருமீன்கள் வந்து கிட்டினவாறே மேல் விழுந்து கொள்ளை கொள்ளும்.
கோகுலத்தில் வாழும் ஆயர்கள் தமது முற்பிறவிப் பயன் காரணமாகக் கண்ணனைக்
காணும் பாக்கியத்தைப் பெற்றவர்கள். அது போன்று என்னுள்ளத்திலும் பகவான்
குடிகொண்டுள்ளான். தூயவன் நம் உள்ளத்தில் வரவேண்டுமெனில் நம் உள்ளம் தூய்மையானதாக
இருத்தல் வேண்டும். நாம் கருணை உள்ளவர்களாக மாற வேண்டும். ஆசைகளுக்கெல்லாம்
அப்பாற்பட்டவன் நம் உள்ளத்தில் குடியேற வேண்டுமானால் ஆசைகளை அறவே துறக்க வேண்டும்.
இவற்றை நம் மனத்தில் பதிய வைக்கவே ஆழ்வார் பாசுரம்மூலம் தெரிவிக்கிறார்.
கொண்டாடத் தக்க
வடிவைக் கொண்ட வாமனனாகி மூன்றடி நிலம் யாசித்துப் பெற்ற பரந்தாமன் அருள் புரியும்
ஊர் கூடலூராகும். இத்தலம் வயல்களில் சேற்று நீரில் ஏர் பூட்டி உழுகின்ற விவசாயப்
பெண்கள் சூடியிருக்கும் மலர்களில் உள்ள மதுவை உறிஞ்சி இசைபாடும் வண்டுகளை உடைய
இடமாகும் என்கிறார் ஆழ்வார்.
இப்படியும்
விலக்ஷணமானதொரு வாமன வேஷம் உலகிலுண்டோ? என்று கண்டாரடங்கலும் கொண்டாடத் தகுந்த வாமன மூர்த்தியாய்
மாவலி பக்கலிற் சென்று பூமிதானம் வாங்கின பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர்.
அவ்விடத்து ஏர்பிடித்து உழுகின்றவர்களும் முடியிற் பூவணிந்திருப்பர்கள் என்று
காட்டியவாறு. க்ஷேத்ர வைபவங்களில் இதுவும் ஒன்றாகும். மரக்கொம்புகளிலே தட்டித்
திரியும் வண்டுகள் என்கை. இவை தமக்கு
வாய்த்த இடங்களை விட்டுவிட்டு, சேற்றேருழவர்களது தலைப்பூக்களிலே
மதுவில் நசையாலே திரிகின்றனவாம்.
கேட்டதையெல்லாம் கொடுப்பேன் என்று ஆணவத்துடன் கூடிய மகாபலி மன்னனின்
செறுக்கை அழித்தவர் பெருமான். சிறிதளவான ஆணவம் கூட ஆன்மிக முன்னேற்றத்திற்கு தடையை
உண்டாக்கும். நான், எனது என்ற வார்த்தைகள் ஆணவத்தை
குறிக்கும். இவ்வுலகில் நமக்குக் கிடைத்திருக்கும் அற்புதமானதொன்று
மனிதப்பிறவியாகும். இதை நமக்கு அளித்தது பகவானாகும். மனித இயக்கங்கள் சிறு அணுகூட
மனிதனால் உருவானது அன்று. அனைத்தும் பகவானின் செயல்களாகும். இதை மனிதன் நன்கு உணர
வேண்டும் என்பதே இப்பாசுரத்தின் பொருளாகும்.
தொண்டர்கள்
போற்றும்படி சூரிய மண்டலத்தைத் தொடுமாறு வளர்ந்து ஆகாயமெங்கும் பரவிய எம்பெருமான்
உறையும் ஊர், வண்டல்
நிறைந்த அலைகளைக் கொண்ட நீர் நிலைகளில்
கெண்டை மீன்கள் மின்ன அதை மின்னல் என நினைத்து மேகங்கள் இடி முழங்கும் கூடலூராகும்
என்ற பொருளில் அமைந்துள்ளது.
வண்டல் இருக்கும்
நீர்நிலைகளிலே கெண்டை மீன்கள் செருக்காலே துள்ளும்போது அவற்றின் உடல் மின்னல்
மின்னினாற் போலே இருக்கும்; அதனைக்கண்ட மேகங்கள் தம்மிடத்து மின்னுகின்ற மின்னலின் ஒளியேயென்று
நினைத்து மின்னலுக்கு அடுத்தபடியாக உண்டாகவேண்டிய கர்ஜனையைச் செய்கின்றனவாம்.
ஆகாயத்தை அளந்த பகவான் என்பதால் ஆகாயம் முழுதும் வியாபித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இம்மண்ணுலகமும் அவர் வடிவம்தான். நம் கண்களுக்கு வேறுபாடான,
தேவையற்ற காட்சிகள் கண்ணுறுவதால் நாம் துன்பங்களைச் சந்திகின்றோம்.
இம்மண்ணுலக உயிர்கள் அனைத்தும் அவருடைய வடிவங்களே என்ற நிலை நமக்கு வந்தால் அயலவரை
தீண்டமாட்டோம். பகைமை கொள்ள மாட்டோம். பகைவரிடமிருந்து நமக்கு ஆபத்து வருமோ என்று
அஞ்சத் தேவையில்லை. இந்த உன்னத நிலையினை அனைவரும் பெற வேண்டும் என்று ஆழ்வார்
விரும்புகிறார்.
தட்சனுடைய
யாகத்தை அழித்த சிவபெருமானின் துன்பத்தை நீக்கிய மகாவிஷ்ணுவின் வைகுண்டம் போல்
இருப்பது கூடலூராகும். இத்தலம் வண்டல் படிந்த நுண்ணிய மணலெங்கும் மாங்கனிகள்
உதிர்ந்திருக்கும் வளமான இடமாகும். சங்கரன் கொண்ட சாபத்தைத் தீர்த்த பெருமான்
வாழுமிடம் திருக்கூடலூர். வண்டலிட்ட நுண்ணிய மணல்களில் மாம்பழங்கள் விழுந்து
வரிசையாகக் கிடக்கிறப்படியைப் பார்த்தால் பழுக்கைக்குப் பதித்துவைத்தாற் போன்றுள்ளதென்னலாம்.
தட்சனுடைய யாகத்திற்கு அழைப்பு அனுப்பாமல் சிவனை அவமானப்படுத்தினான்.
அதைக் கண்டித்து வீரபத்திரனை அனுப்பி யாகத்தை அழித்தார் சிவபெருமான். அவரது
துன்பத்தை மகாவிஷ்ணு தீர்த்து வைத்தார். பிரம்மனின் ஆணவத்தால் சிவன் தன்
நகத்தினால் பிரம்மனின் ஒரு தலையைத் துண்டித்தார். அதனால் அவரது தலை சிவபெருமானின்
விரலில் ஒட்டிக் கொண்டது. சங்கரன் கொண்ட சாபத்தை தீர்த்தவன் நாராயணன். அத்தகையவன்
வாழும் ஊர் கூடலூராகும். இது போன்று மக்களுக்கு ஏற்படும் துன்பத்தினையும் இத்தலப்
பெருமான் தீர்த்து வைப்பான் என்பது பொருளாகும்.
கறுத்துக்
குளிர்ச்சியான கடல்களையும், மலைகளையும் உலகங்களையும், பிரளய காலத்தில் உண்ட
பரந்தாமன் வீற்றிருக்கும் ஊர் கூடலூராகும். இத்தலம் பெருத்தும், குளிர்ந்தும் இருக்கின்ற முல்லைக்கொடி படர்ந்து குருந்த மரத்தைத் தழுவி
இருக்கும் இடமாகும் என்று கூறுகிறார். கடல்கள் மலைகள் முதலானவற்றோடு கூடிய
லோகங்களை யெல்லாம் பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸர்வேச்வரன்
வாழுமிடம் திருக்கூடலூர். முல்லைக்கொடிகள் குருந்த மரத்தை முட்டாக்கிட்டுப் படர்ந்திருக்கின்றனவாம்.
ஊழிக்காலத்தில் பகவான் செய்த அற்புதங்களை நாம் காணும் வாய்ப்பு
கிட்டவில்லை என்பதால் நடைபெறும் நிகழ்வுகளை அறியாமல் இருக்கிறோம். பிரம்மா
உறங்கும்போது பிரளயம் ஏற்பட்டது. பிரளயம் நீங்கிய போதுதான் பிரம்மன்
விழித்தெழுந்தான். நாம்தான் உலகத்தினை உண்டாக்கினோம் என்று பிரம்மன் நினைத்தான்.
இதைச் செய்தவர் பகவான் நாராயணன். இந்நிகழ்வினை நாம் மனதில் அடிக்கடி நினைக்க
வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ்வார் இப்பாசுரம் மூலம் தெரிவிக்கின்றார்.
ஆண் மான்கள் பெண்
மான்களோடு சேர்ந்து வாழும் திருநீர் மலையில் அருள் புரியும் பரந்தாமன் கோயில்
கொண்டிருக்கும் ஊர் எதுவென்றால் மட்டைகள் தழைத்திருக்கும் தென்னை மரங்களில் உள்ள
இளநீர்க் குலைகள் தன் மேல் சாய்ந்திருக்கப் பெற்ற நீர் நிலை கொண்ட கூடலூராகும்
என்கிறார் ஆழ்வார். படர்ந்த இலைகளையுடைய தென்னைமரங்கள் குளங்களின் கரையிலே
நிற்கும்; அவற்றிலுண்டான
இளநீர்க் குலைகளானவை தாழ்ந்து நிற்கிறபோது, குளங்களை
இளநீராலே நிறைத்து இலைகளாலே மறைத்து வைத்தாற்போலே யிருக்குமாயிற்று. ஆழ்வார் இங்கு மான்களைக்
குறிப்பிடுவது தம்பதியர் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு வாழ்வது எனக் கோடிட்டுக்
காட்டுகிறார். அன்பு என்னும் அமுத ஊற்றுதான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக
ஆக்குகிறது. ஆனந்தம் நிறைந்த வாழ்க்கையாகச்
செல்கிறது. சிக்கல்களைத் தீர்க்கும் அற்புதக் கருவியாகிறது. பணம் பலனைத் தராது.
பட்டம், பதவிகள் நம்மைக் காக்காது. அன்பு ஒன்றுதான் நம்மைக்
காக்கும். அதை அறிந்து கொள்ளாததால் பல துன்பங்களில் ஆழ்ந்துள்ளோம் என்ற கருத்தினை
இங்குத் தெரிவிக்கிறார் ஆழ்வார்.
ஆசை பெருகுகின்ற
என்னுடைய மனமானது கரையும்படி உள்ளே குடியிருந்த பெருமான் எழுந்தருளியிருக்கும் ஊர்
தாழைகள் அருகில் மலர்ந்திருக்க அவற்றைக் கெண்டை மீன்கள், அவைகள் நாரைகள் என்று பயப்படும் ஊர்
கூடலூராலும். நாட்செல்ல நாட்செல்ல ஆற்றுப் பெருக்குப்போலே பெருகா நின்றுள்ள
காதலைக் கொண்ட அடியேனுடைய ஹ்ருதயம் உருகும்படியாக உட்புகுந்த பெருமான்
வாழுமிடம் திருக்கூடலூர். அங்கே வாய்க்காற் கரைகளில் தாழம்பூக்கள்
மலர்ந்திருக்கும்; அவற்றைக் கண்ட கெண்டை மீன்கள்
குருகுகள் நம்மை இரை கொள்வதற்காக வந்து ஸ்தப்தமாய் நின்றெனப் போலும் என்றெண்ணி
அஞ்சி ஒளிகின்றன.
மனிதனின் துன்பங்களுக்கு வித்தாக இருப்பது அடங்காத ஆசையே. பணத்தாசை,
பெண்ணாசை, பதவி, பட்டங்களின்
மீது ஆசை, உலகபோகங்களில் ஆசை. இவை அனைத்தும் நம்மை
ஆட்படுத்துகின்றன. ஆசை நிறைவேறாமல் போகும்போது சினம் கொள்கிறோம். அதுவே நமக்கு
நோயை அளிக்கின்றது. பெருமானின் பிள்ளைகளாகிய நாம் கேவலம் ஆசைக்கு அடிமையாகி
நாதியற்ற பிணங்களாக வாழ்கிறோம். ஆசை நம்மை விட்டு அகல நம் உள்ளத்தில் பகவான்
குடியேற வேண்டும். அதற்கு அவனை நெருங்கிப் பக்தி கொள்ள வேண்டும் என்ற கருத்தில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
நீலோற்பல மலர்
போலவும், கடல் போலவும்
நிறமுடைய கண்ணன் குடி கொண்டிருக்கும் கூடலூரைக் குறித்து சீரான தமிழால் கலியன்
அருளிச் செய்த இப்பாமாலையினைப் பாடுபவர்களின் பாவங்கள் தொலைந்து போகும் என்கிறார்
ஆழ்வார். காவிமலர் போலவும் கருங்கடல் போலவும் வடிவுபடைத்த பெருமான் பொருந்தி
வாமுமிடமான திருக்கூடலூர் விஷயமாகக் கலியனருளிச் செய்த இத்திருமொழியை ஒதவல்லார்
பாவங்கள் தொலையப் பெறுவர்.
திருமங்கையாழ்வாரின் பக்தி பாசுரங்களைப் படிப்பவர்களுக்குப் பாவங்கள்
அணுகாது. உள்ள பாவமும் தொலைந்து போகும் என்று ஆழ்வார் வலியுறுத்துகிறார். பகவான்
நம் உள்ளத்தில் புகுந்தால் வெளிச்சத்தைக் கண்டு இருள் ஓடுவது போல் நமது
அறியாமையும் நம்மை விட்டு விலகும்.
பகவானின் பெயரில் நாம் வைக்கும் அன்பே நம்மைக் கடைத்தேறும். இத்தகைய அரிய
சக்தியை நாம் பயன்படுத்தாமல் நாட்களை வீணடித்து இழிவான வாழ்க்கையில் உழன்று
வருகிறோம். எனவே பகவானிடம் அன்பு கொள்ளுங்கள் என்று ஆழ்வார் வலியுறுத்துகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக