திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி
விழிகளிரண்டும்
சுழல, சூடான செங்குருதி
வெள்ளமெனப் பெருக, தீப் போன்ற செம்பட்டை முடிகொண்ட பூதனை மண்ணில்
சாயும்படி அவள் தனங்களை உறிஞ்சிய ‘கண்ணா! தேவாதி தேவா! என்று துதி செய்யப்படுகின்ற, விண்ணில் சஞ்சரிக்கும் சந்திரனின்
கீழ்வயிற்றை எட்டிப் பிடிக்கும்படி மணிமாடங்கள் கொண்ட செல்வம் மிக்க குளிர்ந்த
திருச்சேறையில் அருள்புரியும் சாரநாதப் பெருமானின் திருவடிகளை வணங்குபவர்களை நான்
தலைமேல் வைத்துப் போற்றுவேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தின் மூலமாகப் பக்தன் இறைவனை
எவ்வாறு நெருங்குகிறான் என்பதை விவரிக்கின்றார். இறைவனைக் கைகூப்பித் தொழுது, மலர்களைத் திருவடியில்
சமர்ப்பிக்கின்றான். பகவானை உள்ளன்புடன் நேசிக்கும் அன்பர்களுடன் பழக்கம் வைத்துக்
கொள்வது பகவானிடமே நெருங்கிப் பழகுவது போன்றதாகும். தன்னலம் கொண்ட துரோக
மனப்பான்மை கொண்டவர்கள் சூழ்ந்துள்ள இவ்வையகத்தில் பகவானின் பக்தர்களைக்
கண்டுகொண்டு அவர்களுடன் இணைவது நமக்கு எல்லையற்ற நன்மைகளைத் தரும் என்பது
இப்பாசுரக் கருத்தாகும்.
அழகு மிக்க
புருவமும், மெல்லிய
வரிபடர்ந்த நீண்ட விழிகளும் கொண்ட அலர்மேல் மங்கையை மலர் போன்ற திருமார்பில்
கொண்டவனை, கன்று வடிவமாய் வந்த அசுரனைத் தடியாகக் கொண்டு
விளாமரத்துப் பழத்தின் மேல் சுற்றியடித்து எறிந்த நடையழகு உடையவனை, மணம் வீசும் குளிர்ந்த தோட்டங்களைக் கொண்ட அழகிய திருச்சேறையில் விண்ணைத்
தொடும் கோயிலில் உறையும் சாரநாதப் பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கள் எப்போதும்
என் உள்ளத்தில் வாழ்கிறார்கள் என்று ஆழ்வார் தெரிவிக்கிறார்.
கன்று, கொக்கு, மரம், சகடம் போன்ற வடிவில் வந்த அசுரர்களைக் கொன்றொழித்தான். அத்தகைய வல்லமையைக் கொண்ட பகவான் திருச்சேறையில் வாசம் செய்கிறான். அந்தச் சாரநாதப் பெருமானின் திருவடிகளை வணங்குகிறவர்கள் எப்போதும் என் உள்ளத்தில் வாழ்கிறார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். இப்பாசுரத்தில் அடியார்களைத் தெய்வமாகக் காண்கிறார். அசுரர்களை அழித்த வல்லமை கொண்ட எம்பெருமான் திருச்சேறையில் கோயில் கொண்டுள்ளார். இப்பாசுரத்திலும் பகவானின் அடியார்களை உங்கள் முன் நிறுத்திப் பகவானின் பெருங்கருணையைப் பெறுங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
பளிச்சிடும்
கோரைப்பற்கள் மேலாக வளர்ந்து மின்னல் போல் ஒளிவிட, முன்னே வந்து நின்ற சூர்ப்பனகையின் காதையும், மூக்கையும் அறுத்த திருக்கரங்களை உடையவனே! நிலையாக நின்று வண்டுகள்
ரீங்காரமிடும் குளிர்ந்த திருச்சேறையில் உள்ள சாரநாதப் பெருமானுடைய திருவடிகளைப்
போற்றி, பாதம் அலம்பி, மலர்கள் தூவும்
புண்ணியர்கள் தேவர்களைக் காட்டிலும் பெருமை உடையவர்களாக இருக்கிறார்கள் என்ற
பொருளில் அமைந்துள்ளது.
ஊர்த்வ முகமாக
வளர்ந்து ஒளியை உடைய கோரைப் பல்லானது மின்னல் போல் பிரகாசித்து நிற்க, எதிரில் நிற்கப் போகாமல் அங்கு
நின்றும் ஒதுங்கிப் போக வேண்டும் படியான ரூபத்தையுடைய சூர்ப்பனகையை செவியுடன்
கூடக் கொடி போன்ற மூக்கில் அறுத்த அந்த ராமாவதாரத்தின் நாயகன் இராமனே, என்று இவ்வண்ணமாக ஒருபடி பட்டு நின்று பூந்தாதுகளோடு கூடி வண்டுகளைச்
சப்தியா நின்ற தண்சேறைப் பெருமாளை திருவடி ஸ்தோத்திரம் செய்து புஷ்பங்களோடு ஜலத்தை
பரிமாறுகின்ற பாக்கியசாலிகள் நித்ய சூரிகளாவார்கள்.
இராமாயணக் கதைப்படி இலட்சுமணன் சூர்ப்பனகையின்
அவயங்களை அறுத்து அவளை அவமானப்படுத்தி அனுப்பினான் என்றுள்ளது. ஆனால் அது
ஸ்ரீராமனின் ஏவுதலால் நடந்தது என்று ஆழ்வார் கூறுகிறார். மேலும் அவனது பாதங்களில்
மலர்தூவி அர்ச்சிக்கும் புண்ணியர்களை வானவர்களைவிட தேஜஸ் உடையவர்களாக இருப்பார்கள்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
தேர் ஓட்டுவதில்
அதிவல்லவனும், சந்திரஹாசம்
என்ற வாளைத் தரித்தவனுமான இராவணனனை இலங்கை போர்க்களத்தில் சிதறி அழிய போரைச்
சிறப்பாக நடத்தவல்ல கோதண்டத்தைக் கொண்டு அம்புகள் எய்தவனே! என்று துதித்து
திருத்துழாய் அணிந்து மலை போன்ற மார்பினை உடைய வைகுண்டத்தை ஆளும் பெருமையைக் கொண்ட
குளிர்ந்த திருச்சேறையில் உறையும் சாரநாதப் பெருமானுடைய திருநாமங்களைக்
அர்ச்சிக்கும் பாகவதர்களை விட்டு ஒருபோதும் பிரியமாட்டேன் என்கிறார் ஆழ்வார்.
பக்தனானவன்
இறைவனை கைகூப்பி வணங்கி அவனது திருவடியில் மலர் தூவி புனிதநீர் ஊற்றிப் போற்றிப்
பரவுகிறான். பின் இறைவனது நாமத்தையும்,
அவனது வீரதீர செயல்களையும் பாடி அவனை ஏற்றுகிறான். ஆழ்வார் கூறும்
இச்செயலினை தான் பெருமானுக்கு செய்து நம்மையும் அதுபோல் செய்ய வைக்கிறார்.
சீதாப் பிராட்டியை சிறைவைத்த நாளிலிருந்து இலங்கை
வேந்தனின் வலிமை குறையத் தொடங்கியது. அதன் காவல் தேவதைக் கூடச் சக்தியற்று
அனுமனைத் தடுக்க முடியாமல் திணறியது. ஆனால் இராவணன் இராமனை மனிதன் என்ற நிலையில்
நிறுத்தி உதாசீனப் படுத்தினான். தேவர்களே ஆனாலும் அதர்மம் செய்தால் அவர்கள்
வலிமையற்று வீழ்வார்கள் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
நரசிம்மராய்த்
தோன்றி இரண்யகசிபுவின் பலத்தை அழித்த, உலகின் முதல்வனான பகவானுக்கு அல்லாமல், அழுக்கான
சரீரத்தை உடையவராய், வலிந்து வாதம் செய்யும் சமணர்களுடனும்,
பௌத்தர்களுடனும் நான் சேரமாட்டேன். மணமுள்ள மலர்வனங்கள் கொண்ட
குளிர்ச்சியான திருச்சேறையில் உள்ள சாரநாதப் பெருமானுடைய திருப்பாதங்களைத் தினமும்
தியானிப்பவர்களிடம் என் நெஞ்சம் தேன் போன்று இனிப்புடன் லயித்திருக்கும் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
உடலைத் தூய்மைப்படுத்தாமல் அசுத்தமாகத் திரியும் நபர்களை ஆழ்வார்
சாடுகிறார். சமணர்கள் அன்பைப் போதித்தார்களேயொழிய புறத்தூய்மை கொள்வதில்லை.
புறத்தூய்மை நீரால் அமையும், அத்தூய்மை வாய்மையால் அமையும்
என்று கூறுகிறார் வள்ளுவர். ஆன்மீகத்திற்கு இவையிரண்டும் அவசியம். ஆனால் அவர்களோ
வீண் வாதம் புரிந்து பரம்பொருளை நிந்தனை செய்பவர்களாக விளங்குகிறார்கள். எனவே தூய்மையற்றவர்களிடமிருந்து நான் விலகி
இருக்கிறேன். உலக முதல்வனாகிய திருமாலை தியானிப்பவர்களிடம் நான் சேர்ந்திருப்பேன்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
முன்பு வராக
அவதாரமெடுத்து பூமியைக் கொம்பால் குத்தி எடுத்து வந்த பண்பாளனே! என்று போற்றி உன்
திருப்பாத கமலங்களுக்கு அடிமையானேன். அவனல்லாது வேறு துணை எனக்குக் கிடைக்காதென்று
உறுதியாகக் கூறுகிறேன். வண்டுகள் நிறைந்த மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருச்சேறையில்
உள்ள சாரநாதப் பெருமானின் தொண்டர்களைக் கண்ட என் மனமும் இரு கண்களும் மகிழ்வதை
என்னைப் பார்த்தவர்கள் அறிவார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இவ்வுலகில் எல்லா உறவுகளும் நம்மை விட்டுப்
போய்விடலாம். ஆனால் பகவானின் உறவு என்பது எக்காலத்திலும் தொடர்ந்து வரும்.
இல்வாழ்விலிருந்து விடுதலை அடைந்த பிறகும் அவருடைய துணைதான் நிலைத்து நிற்கும்.
எனவே திருச்சேறை சாரநாதனின் துணை அடைய நாம் அவன்மீது பக்தி கொள்வோம் என்ற பொருளில்
கூறுகிறார்.
ஆழம் மிகுந்த
பாற்கடலில் விரிந்த படங்களையும், புள்ளிகளையும் உடைய ஆதிசேஷன் மேல் கண் வளர்ந்தருளும் பெருமானே! கருநிறம்
மிகுந்த நீலமணி கொண்ட மாயவனே! வண்டுகள் மொய்க்கும் கருநெய்தல் பூக்கள் வயல்களிலே
மலரும் குளிர்ந்த திருச்சேறை பதிகத்தில் உள்ள சாரநாதப் பெருமானுடைய திருவடிகளைச்
சேவிக்கும் என் ஐம்புலன்களின் செயல்களைத் தன் வசமாக்கிக் கொண்டவனுக்கு அடியார்களாக
இருப்பவர்களுக்கு என் அன்பு உரியதாகும் என்கிறார் ஆழ்வார்.
என்
ஐம்புலன்களின் செயல்பாட்டைத் தன் வசமாக்கிக் கொண்ட சாரநாத பெருமாள் என்று ஆழ்வார்
குறிப்பிடுகிறார். மெய், வாய், கண் மூக்கு, செவி
என்கின்ற ஐம்புலன்களில் போக்கில் விட்டுவிட்டால் பல தீமைகள் விளையும். மனிதர்களின்
நிலை அவ்விதமே. அதனில் நல்லவர்கள் குறைவாகவும் தீயவர்கள் அதிகமாகவும் உள்ளார்கள்.
ஐம்புலன்களை நம் கட்டுக்குள் கொண்டு வந்தால் துன்பம் நெருங்காது. அனுபவ ரீதியாக
நாம் இதனை உணர முடியும். ஐம்புலன்கள் ஒருவருக்குக் கட்டுப்பட்டுவிட்டது என்றால்
பகவானின் கருணையின் அடிப்படையிலேயே அமையும். அவை நம்முள் கட்டுப்பட பகவானின் துணை
வேண்டும் என்பது கருத்தாகும்.
தேவர்களும்
மானிடர்களும் வந்து சேவிக்கின்ற மெல்லிய தளிர் போன்ற திருவடிகளைக் கொண்டவனை, வண்டுகள் இசைக்கும் நந்தவனங்கள்
சூழ்ந்த குளிர்ச்சியான திருச்சேறை சாரநாதப் பெருமானைக் கண் குளிர தரிசித்து,
உள்ளம் உருகி, கைகளின் ஆசை தீரும் வரை
வணங்குவோரை நாம் வணங்கினால் யம பயம் நீங்கிப் பாவங்கள் நம்மைச் சேராது என்கிறார்
ஆழ்வார்.
எமதண்டனை என்பது
நாம் பிறவிப் பயனால் அனுபவிக்கும் பாவங்களாகும். பகவானிடம் உண்மையான பக்தியும், அன்பும் கொண்டவர்களை இத்துன்பம்
அணுகாது. பாவ காரியங்கள் செய்யும் சூழல்கள் வராது. தீமை பல புரிந்தாலும் இத்தகைய
பிரபந்தங்களைப் படிக்கும் வாய்ப்பினை அளித்தது நம் பெருமானே. பகவானின் கருணை நம்
மேல் உள்ளது என்பதை தெளிவாக நம்பலாம். நாம் அதற்குத் தகுதிதானா என்பது
முக்கியமல்ல. அவனது கருணைப் பார்வை நம்மீது விழுந்துள்ளது என்பதை மறுக்க முடியாது
என்ற வகையில் பொருள் அமையும்.
செழித்து வளர்ந்த
பயிர்கள் நிறைந்த கருநெய்தல்களை விவசாயிகள் பிடுங்கி ஒதுக்கித் தள்ள, அவற்றிலிருந்து வழியும் தேனின்
வாசம் வீசுகின்ற திருச்சேறையில் அருள் புரியும் சாரநாதப் பெருமானின் திருப்பாதக்
கமலங்களைத் தினமும் உள்ளத்தில் இருத்தி வழிபடுவோரிடம் என் மனம் பாகாய் உருகுகிறது.
பகவானுக்கு சொந்தமான உயிரைத் தமக்கு உரியது என்று நினைத்த, கள்வனாகிய
வஞ்சக நெஞ்சினன் ஆகிய, கவலை வெள்ளத்தில் மூழ்கிக்
கிடந்தவனாகிய எனக்கு இத்தகைய பாக்கியம் எவ்விதம் கிடைத்தது என்கிறார் ஆழ்வார்.
பகவானுக்கு
சொந்தமான இந்த உயிரை எனது என்று நினைத்த எனக்கு அன்பர்களின் சகவாசம் கிடைத்த
பாக்கியத்தை என்னவென்று சொல்வேன் என்று வியக்கிறார் ஆழ்வார். நம்முடைய உயிர்
இறைவன் தந்தது. அது நமது என்று நினைத்து வாழும்போது கணக்கற்ற துன்பங்கள்
சேர்கின்றது. அறியாமையில் நாம் எப்படி நினைத்தாலும் நம்மிடம் அனுதாபமும், கருணையும் கொண்ட பகவான் தன்
அன்பர்களை அனுப்பி நம்மை நல்வழிப்படுத்துகிறார். மேலும் நாம் சத்சங்கத்துடன்
எப்போதும் தொடர்புபடுத்திக் கொண்டால் இத்தகைய சங்கடங்களை நாம் களையலாம் என்று
ஆழ்வார் கருத்துரைக்கிறார்.
மலர்ச்சூடி கரிய
கூந்தலையுடைய மங்கையர் போல் அன்னப் பறவைகள் கழனிகளில் பேடைகளோடு நடந்து பின்னர்
இனிய மாமரத்தின் நிழலில் கண் உறங்குகின்ற திருச்சேறையில் குடியிருக்கும் சாரநாதப்
பெருமானைக் குறித்துக் குதிரைகள் பூட்டிய தேரையுடைய பரகாலன் இயற்றிய இத்தமிழ்ப்
பாசுரங்களை, தொண்டர்களே! பரிசுத்தமான மேன்மை தங்கிய பெருமானின்
திருவடிகளிலே பாடிச் சமர்ப்பித்து கைக்குவித்து தொழுது நிற்பீர்களாக! என்று
ஆழ்வார் கூறுகிறார்.
தொண்டர்களிடம் கூடியிருத்தல் பகவானிடம் சேர்ந்திருப்பது போன்றதாகும்.
பகவான் நம்மிடம் விரும்புவது பாகவதர்களின் தொடர்பாகும். பரகாலன் கூறிய
இப்பாசுரங்களைப் படித்து ஆன்மிக முன்னேற்றத்தில் நாம் முன்னேறிச் செல்வோமாக என்பது
இதன் பொருளாகும். நமது வாழ்வு நல்வழியில் செல்ல வேண்டும் என்று ஆழ்வார்
நினைப்பதால் அவரிடமிருந்து இத்தகைய கருத்துக்கள் வருகின்றன. அதனால் நாமும் பயன்
பெறுகிறோம்.
வானுலகத்தில்
உள்ளவர்களுக்கு அமுதம் எடுத்து அளித்த உதாரணனை, தேன் போன்று இனிப்பானவனை, குவலயாபீடம்
என்கிற யானையைக் கொன்று அழித்தவனை, தேவாதி தேவனை, இன்று நீண்ட வயல்களையுடைய திருச்சேறையில் தரிசித்து நாளைத் திருக்குடந்தை
சென்று வணங்குவோம் என்று பக்தியுடன் ஆழ்வார் கூறுகிறார்.
தன்னை விரும்பாத பிரயோஜநாந்தரத்தை
விரும்பினவர்கட்கும் திருமேனியைப் போணாதே கடல் கடைந்து அமுதளித்த பரமோதாரனைத்
திருச்சேறையிலே சேவித்தோம், இனித் திருக்குடந்தையிலே சேவிப்போமென்கிறார்.
அசுரர்களால் தேவர்களுக்கு வந்த ஆபத்தினைக் களைய பாற்கடலைக் கடைந்தபோது
மத்தாக இருந்த மந்தார மலை ஆடியதால் அதைத் தாங்குவதற்கு ஆமை வடிவம் கொண்டு கடலுள்
சென்று மத்தைத் தாங்கிப் பிடித்தார். பின் அதில் வந்த அமிர்தத்தை தேவர்களுக்கு
வழங்கினார். இத்தகைய தேவர்களுக்கெல்லாம்
தேவனான பெருமான் திருச்சேறையில் நம்மை ஆண்டு வருகிறார் என்ற பொருளில் இப்பாசுரம்
அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக