தோழியே! நீ
வாராய்! இத்தலத்து பெருமானின் திருமேனி பொன்னாய் ஜொலிக்கின்றது. மரகதப்பச்சையில்
உள்ள ஆரம் மின்னுகின்றது. இவர் வாயினால் நல்வேதத்தை ஓதுகின்ற ஒலி கேட்கின்றது.
இவர் தேவராக இருக்க வேண்டும். என்னையும், என் நிதம்பத்தையும், என்
தனத்தையும் உற்றுப் பார்த்தவண்ணம் உள்ளார். இதைப் பார்த்த என் தாய் என்ன
நினைப்பாளோ என்று அஞ்சுகிறேன். இவரது அழகினை என்னவென்று சொல்வது என்று நாகை
சௌந்தராஜனை பரக்கால நாயகி பாவத்தில் ஆழ்வார் பாடுகிறார்.
நான் பெற்ற பாக்கியம்தான் என்னே! திவ்யாத்ம ஸ்வரூபம், திவ்யகுணம் போன்ற எல்லாவற்றையும்விட திவ்ய மங்கள
விக்ரகத்தில் என் மனத்தை அவரிடம் பறிகொடுத்தேன். பிராட்டியின் பொன் நிறம் அருகில்
இருப்பதால், பெருமானின் கரிய
நிறமும் பொன்னிறத்தில் ஆனது. என்று நாயகி கூறுகிறாள். ஆழ்வார் இப்பெருமானை நாகையழகியார்
என்று அழைக்கிறார். எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரகதப்பச்சை
உவமையாகக் கூறப்படுகிறது. ‘அன்னே இவரை அறிவன் மறை நான்கும் முன்னேயுரைத்த முனிவர்’
என்ற கூற்றினை ஆழ்வார் மெய்ப்பிக்கிறார்.
போகத்திற்கு உறுப்புகள் இன்றியமையாதனவோ அது போன்று பகவதனுபவத்திற்கு
பரபக்தி, பரம பக்திகள் அவசியம்
என்கிறார் ஆழ்வார். பகவான் பரக்கால நாயகியை உற்று நோக்குவது பேரானந்த
பெருவாழ்வுக்குத் தவிர இதில் காம இச்சைக்கு சிறிதும் இடமில்லை என்பது அறிய
முடிகின்றது.
இதழ்கள் மலர்ந்த
நீலோற்பவங்கள் மணம் வீசும் தீர்த்தங்கள் சூழ்ந்த திருக்குடந்தையில் பள்ளி
கொண்டிருக்கும் வாலிபர் இவர்தானோ என்று தெரிந்து கொள்ள இயலவில்லை. சிவந்த ஒளியுடைய
சுதர்சனத்தையும், பாஞ்சஜன்யத்தையும்
தரித்துக் கொண்டு பாத கடகம் அணிந்த பாதங்களை உடையவர், மங்கையர்களால்
சேவிக்கப்பட்டு, பல்வகை இரத்தினங்களோடும், முத்துக்களோடும்
விளங்குகின்றவர். ஒளி வீசும் பொன்னாபரணங்களை அணிந்துள்ள நான்கு திருத்தோள்களைக்
கொணடவர். ஐயோ! இப்படியொரு அழகா! அதை எப்படி விவரிப்பேன் என்று பெண் வியந்து
பாடுவது போல் ஆழ்வார் வியந்து பாடுகிறார்.
தோழி| இப்பெரியவர் திருக்குடந்தையிலே
திருக்கண் வளர்ந்தருளுகிற யுவா என்னலாம்படி. விளங்குகின்றார், அவர்தானோ இவர்!, நன்றாகத் தெரியவில்லையே. திருவாழி
திருச்சங்குகளை திருக்கைகளில் ஏந்தியிருக்கின்றார். இளமகளிர்
யெளவன புருஷர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்களாகையாலே இவரும் இளமகளிர்களால்
சுற்றி வணங்கப்பட்டிருக்கிறார். அவர்கள் உள்ளம் குளிரும்படி முத்துமயமும்,
பொன்மயமுமான திருவாபரணங்களை அணிந்து கொண்டிருக்கிறார். அவர்களை உவகந்து தழுவுவதற்கு நான்கு திருத்தோள்களையுடையராக இருக்கிறார்.
இவருடைய அழகோ நம்மால் பேசப் போகாது. இவர் இன்னாரென்று தெரியவில்லையே
தோழி! என்கிறாள்.
தோழி! இவரை நான் திருக்குடந்தையில் கண்டுள்ளேன். அவர்தான் இவரோ! இளம்
பெண்கள் இவரைச் சுற்றி வணங்கி வலம் வருகிறார்கள். அவர்கள் உள்ளம் குளிர முத்தும்,
பொன்னும் அணிந்திருக்கிறார். அவர்கள் தழுவிக்கொள்ள நான்கு தோள்களைக்
கொண்டவரோ! இவரிடம் இப்படியொரு அழகா என்று வியக்கிறாள். திருக்குடந்தையில் சேவை
சாதித்த பெருமான் இப்பாவிக்கு சேவை சாதிக்கும் பாக்கியம் இருக்குமோ என்று பரக்கால
நாயகி வினவுகிறாள்.
குன்றுகளால்
சூழப்பட்ட திருமெய்யம் மலையில் எழுந்தருளியுள்ள அழகிய மணவாளர், மூன்றடி மண்ணில் உலகை அளந்த உத்தமரோ,
தாமரை போன்று திருக்கண்களையுடையவரோ, என்
சொல்வேன். நெடிதுயர்ந்தும், பரந்தும் இருக்கின்ற மலைகள்
பிரம்மாண்டமாக இருப்பது போன்று அழகும் தேஜசும் உடையவராய், ஆயிரம்
திருத்தோள்களும், பொன்னாபரணங்களும் அணிந்தவரோ! அச்சோ இவரது
அழகினை எப்படி கூறுவேன் என்று பரகாலநாயகி கூறவது போல் ஆழ்வார் கூறுகிறார்.
தோழீ! இவருடைய
திருக்கண்களின் அழகை என் சொல்லுவேன். ஓங்கிப் பரந்த மலைகள் போலே விளங்குகின்ற தோள்வளைகள் முதலியவற்றின்
புகழ்விஞ்சி விளங்கப் பெற்றவையான ஆயிரந் திருத்தோள்களும் அவயவந்தோறும்
திருவாபரணங்களும் விளங்கப் பெறும் அழகை என்ன சொல்லுவேன்! ஒரு அலங்காரமும் வேண்டாத
வடிவுதானே அமையாதோ என்று வேண்டும்படியான அழகு விலக்ஷணமாயிருக்கின்றது. இவ்வழகை
நோக்குங்கால் இவர் ஸாதாரண புருஷராயிருக்க ப்ரஸக்தியில்லை. திருமெய்யமென்னும்
மலையில் எழுந்தருளி இருப்பவரும் இவ்வுலகையெல்லாம் இரண்டேயடியால் தாவி அளந்தவருமான
நாயகராகவே இருக்கத் தகுங்காண் என்கிறாள்.
தோழியைப் பார்த்துப் பகவானின் அழகினையும், பெருமைகளையும்
வியந்துப் போற்றுகிறாள். முற்பாட்டில் பெருமானுக்கு நான்கு தோள்கள் என்று கூறி
இப்பாட்டில் அவருக்கு ஆயிரம் தோள்கள் என்கிறார். பெரியவாச்சான் பிள்ளை தனது
வியாக்யானத்தில் ‘நான்கு தோள்களே ஆயிரம் தோள்களாகக் காணப்பட்டது, நம்பியைக் காண ஆயிரம் நயனம் வேண்டும், ஆயிரம் கண்
கொண்டு காண வேண்டியபடி அழகு மிஞ்சி நிற்கின்றதே’ என்று கூறுவதாக அமைகின்றது.
திருத்தோள்களில்
பரிமளத்தை மிஞ்சுமளவும் திருத்துழாயின் மாலை மணம் வீசுகிறது. சக்கரமும், சங்கும் திருக்கைகளில்
ஏந்திக்கொண்டு எல்லோராலும் விரும்பத் தக்க இவர், நம்
இல்லத்தில் பிரவேசித்திருக்கிறார். பண்பாளராக உள்ள இவர் இளமையான வயதுடையவராக
உள்ளார். இவரது வாயின் நிறம் செம்பவளத்தைப் போன்றுள்ளது. மரியாதைக்குரிய இவரது
உருவமோ பவளக்குவியல் போல் உள்ளது. அச்சோ! இவரது அழகை எவ்விதம் வர்ணிப்பது என்று
தெரியவில்லை என்கிறாள் நாயகி.
பரகால நாயகி பகவானின் பரத்வ, சௌலப்பியங்களைச்
சொல்லுகிறாள். துளசி மாலை அணிந்தவர். இளைஞர், பண்பாளர்
என்றெல்லாம் அவரை வர்ணனை செய்கிறாள். எட்டாதவராயிருக்கின்ற இவர் நாமிருக்குமிடமே
வந்து புகுந்திருக்கின்றார் என்கிறாள். ஆண் பெண் இருவருக்கும் உருவங்களில் தான்
வேறுபாடு. ஆத்மா ஒன்றே. மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றிற்கு தலைவன் இறைவனே. அதில் பெண்ணும் அடங்குவாள். பெண்
ஆணை விரும்பினால் காமம்தான் முன்வந்து நிற்கும். அதற்கு அப்பாற்பட்ட தெய்வீக
நிலையைப் புரிய வைக்கவே பெண் ஒருத்தியை கற்பனையில் வடித்துப் பாசுரம் அமைத்துள்ளார்
ஆழ்வார்.
‘உறையூரிலும்,
தென்மதுரையிலும் குடிகொண்டிருக்கும்
கோபாலன் தமது திடமான தோள்களில் மணம் வீசும் திருத்துழாய் மாலையும், கைகளில் சுதர்சனச் சக்கரமும், பாஞ்சஜன்யம் என்ற சங்கினையும்
தரித்துள்ளார். அனைவராலும் விரும்பத் தக்க எம்பெருமான் நம் இல்லத்தில்
உள்ளார். பண்புள்ளம் கொண்ட இளைவரான இவரது
வாயின் நிறம் செம்பவளமாகும். மரியாதைக்குரிய இவரது உருவமோ அழகிய பவளக் குவியலாகும்.
இத்தகைய அழகை எப்படி, என்னவென்று
சொல்வேன்’ என்கிறாள்.
தோழி!
இப்பெரியவர் உறையூரிலும் தென்மதுரையிலும் கோயில் கொண்டிருந்து காட்சிதந்த
பெரியவர் போலே இருக்கின்றார். மலை போன்று வலிமை பொருந்திய நான்கு திருத்தோள்களை
உடையவராக இருக்கின்றார். திருமேனி
நிறத்தில் கருங்கடலை ஒத்திருக்கின்றார். திருக்கைகளில் திருவாழியும் திருச்சங்குமாய்த் திகழ்கின்றார். இப்பெரியவரை இதற்கு முன் எங்கும் கண்டதாக
நினைவில்லை. இவர் சிற்சில
அம்சங்களுக்கு ஏதோ சிலவற்றை உவமை கூறினேனொழிய
இவருடைய வடிவழகு பேச்சுக்கு நிலமன்றுகாண் என்கிறாள்.
சீற்றத்தையுடைய, குவலயாபீடம் என்னும் யானையினது கொம்பை முறித்த பிரபுதேவர்
இவர். அணியப்படும் ஆபரணங்கைளையுடைய இவர்
மங்கையரின் மனத்தைத் தஞ்சமடைச் செய்யும் கண்ணாக இருக்குமோ? அறியவில்லையே!
அவரது தாமரைப் போன்ற விழிகளின் அழகென்ன?
கம்சன் அஞ்சுமாறு கால்களில் பலத்தினைக் காட்டிய
ஸ்ரீகிருஷ்ணனைப் போலிருக்கிறார். பார்ப்போர் வணங்கும்படி ஒரு பெரிய அஞ்சன மலைக்கு
ஈடான இவரின் அழகை அச்சோ! எப்படி விவரிப்பது என்று மயங்கிக் கூறுகிறாள் இப்பெண்.
தோழீ! இவரைப் பார்த்தால் முன்பு கம்ஸன் தனது
அரண்மனை வாசலில் மதமூட்டி நிறுத்தி வைத்த குவலயாபீடமென்னும் யானையை வென்றொழித்த
வேந்தர் போலே இருக்கின்றார். அவர்தானோ இவர்! ஆபரணங்களை அணிந்திருக்கும் பெண்களுடைய நெஞ்சை
ஆச்சர்யமாகவுடைய திருமால் தானோ இவர்! இன்னாரென்று நிச்சயிக்கக் கூடவில்லையே. தாமரை போன்ற திருக்கண்களிருக்கும்
அழகை என் சொல்வேன்! முன்பு கஞ்சனை மஞ்சத்தினின்று தள்ளித் திருக்காலால் உதைத்த
தனிவீரராகவே இவர் தோற்றுகின்றார். ஒருவருக்கும்
தலைவணங்கமாட்டேன் என்ற இராவணனைப் போன்ற வணங்கா முடிகளும் இவரைக் கண்டவாறே பரவசமாக
வணங்கும் படியன்றோ இவருடைய வதனம் அதிசயமிருப்பது. ஒரு அஞ்சன
மலைதான் இங்ஙனே வடிவெடுத்து நிற்கிறதோ! என்னலாம்படி இருக்கின்றார்காண். வாய்கொண்டு சொல்லவொண்ணாத அழகு படைத்த
இவர் திறத்திலே நான் என்னவென்று சொல்லுவேன்! என்கிறாள்.
பகவானின் பெருமைகளைப் பார்த்து வியக்கும், பெண் நிலையில் உள்ள ஆழ்வார் அதனை நம் நெஞ்சங்களில்
நன்குப் பதிய வைக்கிறார். இந்த மனம் என்பது அலைபாயும் நிலையுடையது. ஆனால்
பயிற்சியும், முயற்சியும்
மேற்கொண்டால் அதனை நம் வழிக்குக் கொண்டுவர முடியும். பகவானின் பெருமைகளை திரும்பத்
திரும்ப வாசிப்பது தவத்திற்கு ஒப்பானது.
ஒரே இலட்சியத்தை அடைய பல வழிகளில் நம் மனதை ஒருமுகப்படுத்த நினைக்கிறார்
ஆழ்வார்.
பாவம் தொலையப்
பெற்று மொட்டாக இருக்கும் அழகிய தாமரையை மலரச் செய்யும் ஆதவனைப் போல் பாவம் என்ற
நோயிலிருந்து விடுவிக்கும் இவர் யாரென அறிய முடியவில்லை. என் மனமானது இவரை வணங்குவது எதனால். சொல் தோழீ! இவரை நான் எப்போதும் கண்டதில்லை. இவரது அழகான
இரு கண்களும், திருக்கைகளும்
தாமரைப் போலுள்ளன. இவரது திருமேனியோ வானில் திரண்டிருக்கும் காளமேகத்தைப் போல்
உள்ளது. அச்சோ! இவரது அழகை முழுவதுமாகச் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லையே’ என்று
கூறுகிறாள்.
தோழீ!
இப்பெரியவரைப் பார்த்தவாறே என்பக்கல் ஒரு நினைவின்றியே இருக்கச் செய்தே
என்னெஞ்சானது நிற்கின்றது. தோழீ! உன்னை அறியாமல் எனக்கு வருவதொரு நன்மையில்லையே. அப்படியிருந்தும் உன்னையும், என்னையும் அறியாமலே
இங்ஙனே ஒரு நன்மையுண்டான விதம் என்னே! இவர் செய்கிற சிருங்கார சேஷ்டைகளோ நெடுநாளாக
மிகப் பழகினவர் செய்யுமவை போலேயிருக்கின்றன. ஆயினும், இதற்கு முன்பு இவரைக்
கண்டதாகவும் எனக்கு நினைவில்லை. உற்று நோக்குகிற திருக்கண்களும், அணைக்க முற்படுகிற
திருக்கைகளும் திரளச்செறியப் பூத்த தாமரையெனலாயிரா நின்றன. வடிவோ மேகம் என்னலாம்படி
இருக்கின்றது. லோக விலக்ஷணமான இவரழகுக்கு ஒப்புச் சொல்லலாவதுண்டோ? என்று
ஆச்சர்யப்பட்டுக் கேட்கிறாள்.
தோழியே! உன்னையறியாமல் எனக்கு வருவதுதொரு எவ்விதமான நன்மையில்லேயே!
அப்படியிருந்தும் உன்னையும் அறியாமலே இங்ஙனே ஒரு நன்மை உண்டான விதம் என்னே! இவரது
சிங்கார சிரேஷ்டைகள் நெடுநாளாக மிகப் பழகினவர் செய்வது போல் உள்ளது. உற்று
நோக்குகின்ற திருக்கண்களும், அணைக்க முற்படுகின்ற
திருக்கைகளும், திரள்கின்ற நன்கு பூத்த தாமரை மலர்
போலுள்ளதே! இவர் அழகுக்கு ஒப்பு சொல்லலாவதுண்டோ? என்று
வினவுகிறாள்.
‘மேக மண்டலத்தளவும் உயர்ந்ததாய் சந்திரக் கிரணங்கள் படுமளவு உயர்ந்துள்ள
திருமாலிருஞ்சோலையில் அருள் புரியும் மணவாளர்!
அங்கிருந்து புறப்பட்டு என் நெஞ்சிலும், கண்களிலும் நிலையாக நீங்காமல் நின்றுவிட்டார். இவர்
திருநீர்மலைப் பெருமானாக இருக்குமோ?
இன்னாரென்று அறிய
முடியவில்லையே. அழகு மிக்க இறக்கைகளைக் கொண்ட பெரிய திருவடி மேல் ஏறி வந்த இவர்,
மேக மண்டலத்தளவு உயரமான பொன்மலை மேல்
படிந்த காளமேகமாக இருக்கிறார். அச்சோ! இவர் அழகினை ஒருவராலும் சொல்ல முடியுமோ’
என்று வினவுகிறாள்.
மேகமண்டலத்தளவு
செல்ல ஓங்கி, சந்திரன் வந்து
தீண்டும்படியான உயர்த்தியையுடைத்தான திருமாலிருஞ்சோலை மலையை இருப்பிடமாகக் கொண்ட
பரமரஸிகர் தாம் எழுந்தருளி என்னுடைய அவயவங்கள் எல்லாவற்றையும் விரும்பி ஒரு
நொடிப்பொழுதும் விட்டு நீங்குமவராயிருக்கின்றிலர். திருநீர்மலை எம்பெருமான் போலவும் திகழ்கின்றார்.
அறுதியிட்டுச் சொல்லமாட்டுகின்றிலேன்.
மிகவுயர்ந்ததொரு பொன் மலைமேலே
காளமேகம் படிந்து வருமாபோலே பெரிய திருவடியின் மீது வீற்றிருந்து எழுந்தருளுங்
கோலத்தை வந்து காணுங்கோள்! இவ்வழகுக்குப்
பாசுரமிட என்னாலாகுமோ? இவருடைய
அழகு விலக்ஷணமென்னுமித்தனையோ என்றாளாயிற்று.
இப்பெண்ணானவள் ஆத்ம ஐக்கியத்திற்கு தகுதி பெற்று வருகிறாள் என்பதை இப்பாசுரம்
உணர்த்துகின்றது. ஒருவர் பகவானின் அழகில் மயங்கி அவரைப் பற்றி ஆய்வில் மூழ்கி
வருபவர்களுக்குப் பகவான் அருள் புரியத் தயாராகிவிட்டார் என்பது பொருளாகும். அவனைப்
புரிந்து கொள்வதற்கு ஆத்ம ஐக்கியம் ஒன்றே சரியான விடை என்றும் கூறலாம். ‘காய்ச்சினப்
பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல’ என்று நம்மாழ்வாரும் தனது
திருவாய்மொழியில் இக்கருத்தினை இயம்பியுள்ளார். ‘மாமலைபோலே தெய்வப்புள்’
என்றும் பெரியவாச்சான்பிள்ளை தமது வியாக்யானத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு
திசைகளிலும் அலைகள் வீசுகின்ற நீரைக்கொண்ட கடல்களையும், ஏழு உலகங்களையும் பிரளய காலத்தில்
விழுங்கி ஓர் ஆலிலையில் மேல் யோகத்துயில் கொண்ட மாயன் இவன்தானோ? இவனது மாயங்களை நான் அறியமாட்டேன்.
நீர் கொண்ட மேகத்தையும், அழகிய பெரிய மலையையும்
ஒத்திருக்கிறார். இவரது அகண்ட விழிகளும், திருமுகமும்
பரிமளம் மிக்க தாமரைதானோ? பரமபதத்தில் உள்ள தேவர்கள்
வணங்குமாறு காட்சி தரும் இவர் அழகை அச்சோ! ஒருவரால் சொல்லக் கூடுமோ? என்று வியந்து பாடுகிறாள்.
திக்குக்களெட்டிலும்
வந்து அலையெறியா நின்றுள்ள கடல்களையும் ஏழுலகங்களையும் ஒருகாலே திருவயிற்றிலே
வைத்துப் பிரளயங் கொள்ளாதபடி காத்து ஒரு சிறிய ஆலந்தளிரிலே துயில் கொண்ட ஆச்சர்ய
சேஷ்டிதன் என்று தோற்றும்படி யிராநின்றாரிவர். ‘கூடாதவற்றையும் கூட்டுவிப்பவர் இவர்’ என்று தெரிகி்ன்றது. ஆயினும் இவருடைய ஆச்சர்யங்களை நன்கு
அறிகிலேன். வடிவைப் பார்த்தவாறே மேகம் போலவும் மலை போலவும் சொல்லாயிரா நின்றார். திருக்கண்களும் திருஅதரமும் பரிமளங்
கமழ்கின்ற தாமரைபோலேயிரா நின்றன. மேன்மையைப் பார்த்தவாறே நித்யஸூரிகளும் வந்து ஆச்ரயிக்கும்படி
யிராநின்றார். இவருடைய மேன்மைக்குத் தக்க மேன்மையை யுடையவர்களே இவரைக் கிட்டலா
மத்தனையன்றி நமக்குக் கிட்டப்போகாதென்று பின்வாங்க வேண்டியிருந்தாலும் லோக
விலக்ஷணமான அழகு பின்வாங்க வொட்டுகிறதில்லை என்கிறார்.
யசோதையால் உரலில் கட்டப்பட்ட மாயக்கண்ணன் ஒன்றும் அறியாதவாறு இருந்தான்.
கோபியர்களிடம் குறும்பு செய்தவன், திரௌபதியின் மானத்தைக்
காத்தவனாவான். அசுரர்கள் அஞ்சுமாறு அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவன்.
பார்த்தனுக்கு தனது எளிமையைக் காட்டித் தேரோட்டினான். இத்தகைய மாயங்கள் செய்தவனை
நினைத்துப் பார்த்தால் யாருக்குத்தான் அவனை உள்ளபடி அறிய முடியும். ஆழ்வார்
பெண்ணின் நிலையிலிருந்து பகவானைப் பாடி நம் மனத்திலும் இத்தகைய நிகழ்வுகளை நிலை
நிறுத்துகிறார்.
அன்னமாகவும், வராகமாகவும், மீனாகவும்
அவதரித்த முழுமுதற் கடவுளை, திருநாகையில் அருள்புரியும்
சௌந்தரராஜனைப் பற்றி வலிமை மிக்க மதில்கள் சூழ்ந்த திருமங்கையின் வேந்தன், சிறந்த குணவானான கலியன் குறைவற்ற இனிய இசையுடன் பாடிய அழகிய சொல் மாலையான
இப்பத்துப் பாடல்களையும் பக்தியோடு பாடவல்லவர்கள் இவ்வுலகை ஆள்வதோடு முக்தியடைந்த
பின்னர் தேவராகி இறைவனுடன் மகிழ்வோடு இருப்பார்கள் என்கிறது இப்பாசுரம்.
வேதங்களையிழந்த பிரம்மனுக்கு அவற்றை மத்ஸமாகவும், அன்னமாகவும்
இருந்து மீட்டுக் கொடுத்தான். அது போன்று பூமிபிராட்டியை சிறை வைத்த அசுரனை
வராகமாகி அழித்துப் பூமியை மீட்டவனான பகவான் திருநாகையில் அழகே உருவாகக் காட்சி
அளிக்கிறான். மொட்டாக இருக்கும் தாமரையை சூரியன் மலரச் செய்வது போல் அஞ்ஞானத்தில்
சுழன்று கொண்டிருக்கும் நமக்கு ஞானத்தை அளிக்கிறார் பகவான். உண்மையான ஞானம் என்பது
நமது சரீரமல்ல. அது நம்முள்ளிருக்கும் ஆத்மா என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்க
இப்பாசுரங்கள் வழி நமக்குத் தெரிவிக்கிறார் ஆழ்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக