வியாழன், 15 ஜனவரி, 2026

20. தஞ்சை மாமணிக்கோவில்

 


திருமங்கையாழ்வார்                                                                         பெரிய திருமொழி      

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.      953

 

அடியார்களே! என்னருகில் எப்போதும் கைக்கொடுப்பவனும், தந்தையாகவும், எனக்கான அனைத்து உறவுகளும்எனது தலைவனும், எனது உயிரும், கூரிய அம்புகளால் அரக்கர் குலத்தைப் பயம் கொள்ள வைப்பவனும், அவர்களது உயிரை முடித்தவனுமான எம்பெருமான் எப்போதும் வீற்றிருக்கும் இடம், நந்தவனங்களும், பெரிய மதில்களும் சூழ்ந்த தஞ்சை மாமணிக்கோயிலில் உள்ளவரை வணங்கி நான் கண்டு கொண்ட ‘நாராயணா’ என்ற நாமத்தை உச்சரிக்கின்றேன் என்கிறார் ஆழ்வார்.

என்னுடைய பெருமானும், என்னுடைய தந்தையும், என் உறவினனும், என்னை ஆள்பவனும், எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிக்கும் என் உயிரானவனும், அம்பால் அசுரர்களை அஞ்சி நடுங்கும்படியாக ஒடுக்கி அவர்கள் உயிரை மாய்த்த எனது இறைவனும், மணம் வீசும் சோலைகளும் உயர்ந்த மதில்களும் சூழ்ந்த தஞ்சையின் மாமணிக்கோயிலில் எழுந்தருளியுள்ளவனுமான அப்பெருமானைத் தொழுது சதாசர்வ காலமும் அவ்வண்ணலையே சிந்தையில் நிறுத்தியிருக்கும் கற்றறிந்த அடியார்களே! உய்வு பெறும் வழியை யான் அவன் அருளால் கண்டு கொண்டேன்!  “நாராயணா” எனும் நாமத்தை ஓதுவதன் வாயிலாக! என்கிறார்.

திருமங்கை  மன்னனின் பக்திப் பேருவகையும், பெருமாள் மீது கொண்ட பேரன்பும் வெளிப்படும் விதம் சற்றே வித்தியாசமானது, அலாதியானது. வீரம், கம்பீரம், கொஞ்சம் தடாலடி அதில் இருக்கும். திரேதாயுகத்தில் ஸ்ரீராமனாக அவதரித்துக் கூரிய அம்புகளால் அரக்கர்களை அழித்தவன், கிருஷ்ணாவதாரத்தில் பார்த்தனை முன்னிருத்தி தீயவர்களை அம்புகளால் அழித்தவனை நான் ‘நாராயணா’ என்ற நாமத்தில் உச்சரிக்கின்றேன் என்கிறார் ஆழ்வார். 

       

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய் உலகு உய்ய நின்றானை அன்று                                                                                                                                                                                                 பேய்ச்சி
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம்                                                                                                                                                                                         காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லைத்                                                                                                                                                                         தலசயனத்தே.       1090

 

இவ்வுலகம் நன்முறையில் இயங்குவதற்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவில் பிரிந்து பிரளய காலத்தில் ஒன்றாக இணைந்து நிற்பவன். கிருஷ்ணாவதாரத்தில் பூதகியின் விஷப் பாலை அருந்தியவன்.  கன்றுகளைத் திறமையுடன் மேய்த்து விளையாடியவன். காளமேகம் போன்றவன். தஞ்சையில் எழுந்தருளி இருப்பவன். உலகம் காக்க குதிரைமீது  கல்கியாய் அவதரிக்கப் போகிறவன். இத்தகைய பெருமை மிக்கவனை சோலைகள் சூழ்ந்த கடல் மல்லையில் தலசயனப் பெருமானாகத் தரிசித்தேன்.   அதர்மம் புரிகிறவர்கள் எத்தகைய உயரத்தில் இருந்தாலும் அவர்கள் அடக்கப்படுவார்கள் அல்லது அழிக்கப்படுவார்கள் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.

 எம்பெருமானுக்கு உயிருள்ள பொருள்களும் உயிரில்லாப் பொருள்களும் உடலாக இருக்கின்றன என்பது வைணவ சமயக்கொள்கை. இது சரீர சரீரி பாவனை (உயிர்-உடல்-உறவு) என்று வழங்கப்பெறும். நான்முகன் முதலிய தேவதைகள் எம்பெருமானுக்கு உடலாக இருப்பவர்கள்; எம்பெருமானோ அந்த உடலுக்கு உயிராக இருப்பவன். உலகத்தில் உடலோடு கூடின ஓர் ஆன்மாவைக் குறிப்பிடுங்கால் உடலை ஒரு தனிப்பட்ட பொருளாகவும், பிரித்துப் பேசாது இரண்டையும் ஒரு பொருளாகவே பேசுகின்றோம். இங்ஙனம் பேசுவதற்கு மேற்குறிப்பிட்ட சரீர-சரீரி நிலையே ஆதாரமாகும். அங்ஙனமே, எம்பெருமானுக்கு உடலாகவுள்ள, நான்முகன் முதலிய தேவதைகளை வேராகவும், அந்த உடலுக்கு உயிராகவுள்ள எம்பெருமானை வேராகவும் பிரித்து நோக்காது ஒன்றாக நோக்கினால் வேற்றுமை தோன்றாது ஒற்றுமையே தோன்றும். இதுவே ‘உடம்புருவில் மூன்றொன்றாய்’ என்று பாசுரத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது.


என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு
     என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன்பெயரோன் நெஞ்சம்
     அன்று இடந்தவனை தழலே புரை
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட
      சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை
      அன்றி என் மனம் போற்றி என்னாதே.      1576  

 

பெருமாள் செய்த பெரிய உதவிக்கு நான் என்ன கைமாறு செய்வேன். எப்போதும் என் மனத்தில் வாசம் செய்து அதனால் ஏற்பட்ட புகழை உடையவன். தஞ்சை மாமணிக்கோயிலை ஆண்டு வருபவன். நரசிம்மராய் அவதரித்து இரணியனின் நெஞ்சை பிளந்தவன். நெருப்பு போன்ற பிரகாசத்தை உடைய சந்திரஹாசம் என்ற வாளை ஏந்திய கொடியவன் இராவணனுடைய நகரமான இலங்கையை அழித்தவன். தேவர்களால் வணங்கப்படுபவன். மேருமலை போன்றவன். நீல மணிக்குன்றினைப் போன்ற நறையூர் நம்பியைத் தவிர என் மனம் மற்றொரு தெய்வத்தைப் போற்றாது.

மனிதர்களுக்கு, ஆண்டவன் ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமும், அவரிடம், பக்தியும் இருக்க வேண்டும். மனிதனுக்கு மனிதப் பிறவியைத் தாண்டி, முக்தி எனும், உயர்ந்த நிலைய அடைய முயல வேண்டும். அதுதான், அவன் பிறவி எடுத்ததற்கான நோக்கம். அதனால் தான், நற்பிறவி கிடைக்க வேண்டுமானால், பெருமானிடம் பக்தி இருக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்கின்றனர். இதற்குப் பணம், காசு வேண்டியதில்லை. மனம் இருக்க வேண்டும். மனம் பகவானிடம் செல்ல வேண்டும். வேறு எங்கெல்லாமோ சுற்றி அலையும் மனதை பகவான் பக்கம் திருப்ப முயற்சி செய்யுங்கள் பலன் கிடைக்கும் என்று ஆழ்வார் கூறுவதாக இப்பாசுரத்தின் கருத்து அமைந்துள்ளது.

        மனிதப்பிறவி பெற்றால்தான் முன்வினைப்பயன் நீங்கி முக்தி பெற முடியும். இம்மனிதப் பிறவியை நமக்கு அளித்தது எத்தகைய பேராகும். இதனை மறவாமல் நன்றியுடன் அவனை என்றும் நினைக்க வேண்டும் என்று நமக்கு வலியுறுத்துகிறார் ஆழ்வார்.    

 

பூதத்தாழ்வார்                                                                              இரண்டாம் திருவந்தாதி

 

தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம்    2251

 

அழகிய தஞ்சை மாமணிக்கோயில், சிறந்து விளங்கும் திருவரங்கம், இயற்கை சூழல் நிறைந்த திருத்தண்கால், பக்தர்கள் தியானிக்கும் திருமலை, அழகிய திருப்பாற்கடல், கடல்சூழ்ந்த  திருக்கடல்மல்லை, நெடிதுயர்ந்த திருக்கோவலூர், அழகிய மதில்களுடைய திருக்குடந்தை ஆகிய இடங்களைவிட அடியார்களின் இதயக்கமலத்தில் குடிகொள்வதே பெருமானுக்கு விருப்பம்.  பகவான் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்றாலும் இத்தகைய தலங்களுக்குச் சென்று வந்தால் நம் மனத்தில் உள்ள எதிரிகள் அழிவர். நம் மனம் அலைபாய்வதை விடுத்து ஒருநிலைப்படும். அதனால் தெளிவு பிறக்கும். தீய வினைகள் செய்யக் கூடாது என்ற வைராக்கியம் வளர்ந்து நாம் உத்தமர்களாக மாறுவோம்.    

பெருமான் மனத்தில் உள்ளான், தலைமேல் உள்ளான், நாம் பேசுகின்றவாக்கில் உள்ளான், தீயில் உள்ளான், மலைமீது உள்ளான், கைலாயத்தின் உச்சியில் உள்ளான், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று கூறுகிறார் அப்பர் ஸ்வாமிகள். இறைவனிடத்திலே ஓர் உறவை ஏற்படுத்தி, அவ்வுறவின் விளைவால் ஏற்படும் உணர்வினைத் துணையாகக் கொண்டு, பெருமானின் திருவருள் துணையால் அவனை அடையப் பெற்றால் அப்பெருமானை காண இயலும் என்று திருமந்திரத்தின் மூலம் திருமூலர் கூறுகிறார்.

திருக்கோயில்களையும் இல்லங்களையும் உறையும் இறைவனை வழிபட்டு அவன் வாழும் மற்றொரு உறைவிடமான உலக உயிர்களுக்கு அன்புடன் தொண்டு செய்தலும் இத்தொண்டு நெறிக்கு உரியது என்றும் குறிப்பிடுகின்றார்.

 

 

நம்மாழ்வார்                                                                                                   திருவாய்மொழி

       

மாசு அறு சோதி என் செய்ய வாய் மணிக்குன்றத்தை
ஆசு அறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம்?
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே.      3139

 

எனது தோழியே! பகவான் அப்பழுக்கற்ற ஒளி பொருந்தியவர். சிவந்த நிறத்து திருவாயைக் கொண்ட மாணிக்கமாலை போன்றவர். குற்றம் அறவே இல்லாத குணசீலன். என் மனம் ஆதிமூர்த்தியை நாடிப் பற்று கொண்டதால் அறிவிழந்து நிற்கின்றது.  எனது இத்தகைய பித்தான நிலையை எண்ணி ஊரார் என்னைப் பேசுவதும், ஏசுவதும் தெரிகிறது.  பித்து பிடித்த என்னை அவர்களது பழிச்சொல் என்ன செய்யும் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

அழுக்கற்ற சோதியையுடைய,  சிவந்த அதரத்தை உடையவனும் என் மாணிக்கமலை போன்றவனும்  குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும் முழுமுதற் கடவுளுமான  பெருமானைத் தேடி அலைந்து,  மேனியின் பசுமை நிறம் அழிந்து அறிவு இழந்து எத்தனை காலம் இருப்போம்?  தோழீ!  ஏசுவதற்கென்றே இருக்கும்  ஊரார்  பழிச்சொல்  என்னை என்ன செய்ய முடியும்? என்று கூறுகிறாள்.

தோழியைப் பார்த்துத் தலைவி சொல்வதைக் கற்பனையில் வடித்துப் பாசுரமாக ஆழ்வார் தந்திருக்கிறார். குற்றமில்லாத பகவானை என் மனம் நாடி எவ்வளவோ நாளாகிறது. என் பித்தினைப் பார்த்த ஊர்மக்கள்என்மீது பழியினைச் சுமத்தி என்னை ஏசுகிறார்கள். பகவான்என்மீது கருணை கொள்ளும்போது இவர்களது ஏச்சும் பேச்சும் என்னை என்ன செய்ய முடியும். இந்த லௌகீக உலகில்என்னைக் குற்றமும் குறையும் சொல்வது, பழி சொல்வது போன்றவை என்னை எதுவும் செய்யாது என்றுதீர்மானமாகச் சொல்கிறாள்.

        இவ்வுலகில் பணப்பித்து, பெண்பித்து, பதவி, பட்டம் போன்றவற்றில் பித்து பிடித்துள்ளார்கள். பெருமானிடம் பித்து பிடித்து இருப்பவர்கள் கோடியில் ஒருவர்தான் இருப்பார். இத்தகைய பாக்கியசாலிகளை பித்தனென்று ஊரார் பழிச்சொன்னாலும் அது அவர்களை ஒன்றும் செய்யாது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...