திருப்பாற்கடலில்
பள்ளி கொண்டிருக்கும் ஆச்சரியமானவனும்,
காவிரிக் கரையிலே சயனித்திருக்கும் திருவரங்க நாதனுமான பரந்தாமனின்
சரமஸ்லோகம் (கீதை பேருரைகள்) என் உள்ளத்தில் பதிந்துள்ளது. ஆகையால் மரணபயம் என்பது எனக்கில்லை. கொடிய பாவங்களும், தீய
விஷயங்களும் என்னை ஒருபோதும் அணுகாமல் இருக்கும் உபாயம் இதுவென்று நான் அறிந்து
கொண்டேன் என்ற பொருளில் ஆழ்வார் கூறுகிறார். திருக்கவித்தலத்தில் காவிரி
ஆற்றங்கரையில் பள்ளிகொண்டிருக்கும் கண்ணனும் திருப்பாற்கடலில் யோகநித்திரையில்
கிடக்கும் மாயவனுமான எம்பெருமான் கண்ணபிரானாக உபதேசித்த சரம ஸ்லோகம் உறுதியாகப் பதிந்துள்ள சிந்தையை நான் கொண்டதாலே, என்னைக் கொடும் பகைமை
அணுகாத, கொடிய
பாவங்களும் தீண்டாத, தீய எண்ணங்களும் செயல்களும் சேராத வழியை
நான் புரிந்து கொண்டேன்!
பகவான் அருளிய கீதையானது நமக்கு அளிக்கும் போதனையாகும் மனிதனே! நீ உடலல்ல,
அழியாத ஆத்மா. மரணம் உடலுக்குத்தான். ஆத்மாவுக்கு அல்ல. அதைக்
கத்தியால் வெட்ட முடியாது, நீரால் நனைக்க முடியாது, தீயால் எரிக்க முடியாது. ஆகவே மரணம், பாவம் முதலானவை
என்னை நெருங்க முடியாதபடியான உபாயத்தை தான் அறிந்து கொண்டதாக ஆழ்வார்
கூறுகிறார். இத்தகைய உயரிய தெளிவானது நம்
எல்லோருக்கும் வர வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக