வியாழன், 15 ஜனவரி, 2026

22. திருவெள்ளியங்குடி

 


 

திருமங்கையாழ்வார்                                                                                                               பெரிய திருமொழி
       

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்
     ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப்
     பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
     எங்கும் ஆம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்
     திருவெள்ளியங்குடி அதுவே.     1338

 

கோபியர்கள் அனைவரும் முறையிடும்படி வெண்ணெயைத் திருடி உண்டவன், ஊழிக்காலத்தில் ஆலிலையில் நித்திரை செய்தவன், இரட்டை மருத மரங்களை முறித்தவன், திருவிக்கிரமனாய் உலகை அளந்தவன் கோயில் கொண்ட இடம் திருவெள்ளியங்குடியாகும். இத்தலம் காய்கள் நிறைந்த உயர்ந்த பாக்கு மரங்களும், வாழை, தென்னை, மாமரங்களும் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் மண்ணி ஆற்றின் தென்கரையில் உள்ளது என்ற பொருளில் அமைந்துள்ளது.

        ஐந்து லட்சத்திற்கும் மேலான மக்கள் வசிக்கும் திருவாய்பாடியில் உள்ள பெண்கள் தங்கள் இல்லத்தில் வெண்ணெய், நெய் களவு போயிற்று என்று அன்னை யசோதையிடம் முறையிட்டார்கள். அதைத் திருடி அமுது செய்தவன் கண்ணன் என்றனர். பிரளய காலத்தில் பூமியை விழுங்கி நம்மைக் காத்தவன், தீய எண்ணத்துடன் வந்த பூதனையின் பாலை உண்டு அவளை மாய்த்தவன், மரங்கள் வடிவில் வந்த அசுரர்களை அழித்தவன், மூன்றடி மண் கொண்டு உலகை அளந்த வாமனனாக அவதரித்தவன் திருவெள்ளியங்குடியில் கோயில் கொண்டுள்ளான். காய்கள்‌ நிறைந்து ஓங்கிக்கிடக்கிற பாக்கு மரங்களும்,‌ வாழை மரங்களும்,‌ தென்னை மரங்களும்‌ எங்குப் பார்த்தாலும்‌ மலிந்திருக்கப் பெற்ற சோலைகளிலே சென்று பாய்கிற மண்ணியாற்றின்‌ தென்கரையிலுள்ளது இத்தலம்.

 

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு
     அரக்கர் தம் சிரங்களை உருட்டி
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்
     கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி
     பொதும்பிடை வரி வண்டு மிண்டி
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்
     திருவெள்ளியங்குடி அதுவே    1339

 

        கண்ணனாய் அவதாரமெடுத்து பசுக்களை மேய்த்தவன், ஸ்ரீராமனாக அவதரித்து அணை கட்டி இலங்கை சென்று அரக்கர்களின் தலைகளை அறுத்துத் தள்ளியவன், மழைக்கால மாரி போன்று வாசுதேவன் உறையும் இடம் திருவெள்ளியங்குடியாகும்.  வரிசையாக மலர்ந்திருக்கும் சுரபுன்னை மரங்கள், முத்துப் போன்ற மொட்டுக்கள்  அரும்பியுள்ள புன்னை ஆகியவற்றின் பொந்துகளிலே கரிய வண்டுகள் நெருங்கித் தேனை ஆரவாரத்துடன் பருகும் இடமாக இக்கோயில் அமைந்துள்ளது என்பது இப்பாசுரப் பொருளாகும்.

        கோலவில் இராமனாகக் கோயில் கொண்டிருக்கும் வெள்ளியங்குடிப் பெருமானை சரண் அடைந்து உங்கள் அசுர குணங்களை நீக்கிக் கொள்ளுங்கள் என்று ஆழ்வார் வழிகாட்டுகிறார்.  கரிய உருவமும், மிடுக்கான மீசையும், கோரைப் பற்களும் கொண்ட அசுரர்களை அழித்தார் என்று கொள்ளக் கூடாது.  ஆழ்வார் கூறுவது மனித நிலையிலிருந்து நம்மைக் கீழ்நிலைக்கு கொண்டு செல்லும் தீய குணங்களையும் அதனால் ஏற்படும் துன்பங்களையும் அழித்துப் புடம் போட்ட தங்கமாக மாற்றுவார் என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அசுர குணங்களும், தீய எண்ணங்களும் திரையாகத் தோன்றி நம்மையும் பகவானையும் மறைக்கின்றது. அந்தத் திரை விலக வேண்டும் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.

 

கடு விடம் உடைய காளியன் தடத்தைக்
     கலக்கி முன் அலக்கழித்து அவன் தன்
படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்
     பல் நடம் பயின்றவன் கோயில்
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள்
     பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்
     திருவெள்ளியங்குடி அதுவே.       1340    

 

கொடிய விஷத்தைத் தடாகத்தில் கலக்கிய காளிங்கனோடு சண்டையிட்டு அவனது படங்கள் முறியுமாறு பலவிதமான நர்த்தனங்கள் ஆடியவன்.  அதன் விளைவாக அந்த நாகத்திடமிருந்த நாக இரத்தினங்களைச் சிதறும்படி செய்தவன், அவன் திருக்கோயில் கொண்ட இடம் திருவெள்ளியங்குடியாகும். இத்தலமானது படமெடுக்கும் நாகம் போன்ற அழகிய மங்கையர் நாட்டியமாட அந்த ஓசை எல்லாப் பக்கங்களிலும் பரவி ஆகாயத்தை அதிர வைக்கும் இடமாகும் என்று ஆழ்வார் கூறுகிறார்.

        அழகு மிக்க தடாகத்தின் நீரை நஞ்சாக்கி மக்களுக்குப் பெரும் துன்பத்தை விளைவித்த காளிங்கனை நர்த்தனமாடி அடக்கினான். பால் போன்ற வெண்மையான தூய உள்ளத்தைக் கொண்ட நாம் மாயை காரணமாகப் பல்வேறு இழிவான எண்ணங்களை வளர்த்துத் தீமையாக்கி பல்வேறு மக்களுக்குத் தீங்கு விளைவிக்கிறோம். அதனால் பாவங்கள் கூடுகின்றன. இதன் காரணமாகப் பிறவியும் கூடுகின்றது. 

        மாயையின் லீலையை வெற்றி கொள்ள வேண்டுமானால் மிகப் பொறுமையுடன், சகிப்புத் தன்மையோடு எந்த ஒரு நிகழ்ச்சியையும் நிதானமாக அணுக வேண்டும். பொறுமை, சகிப்புத் தன்மை, நிதானம் இந்த மூன்று குணங்களும், ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், பிரச்சனைகள், தொல்லைகள், இடையூறுகள், ஏமாற்றங்கள் இவற்றைக் கண்மூடித்தனமாக அணுகாமல் அவைகளை எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டுமோ அவ்வாறு பார்க்கச் செய்யும். அவ்வாறு உரித்தான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது புத்தி பிசகாமல், மனம் குழம்பாமல், தெளிவான அறிவோடு முடிவுகள் எடுக்க மிக உதவியாக இருக்கும். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளே மாயையை வெற்றி கொள்ள சிறந்த ஆயுதங்களாகப் பயன்படும். இந்நிலை மாற வெள்ளியங்குடிப் பெருமானை நாம் சரண் அடைவோம் என்பது இதன் கருத்தாகும்.

 

கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த
     காளமேகத் திரு உருவன்
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற
     பரமனார் பள்ளிகொள் கோயில்
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்
      தொகு திரை மண்ணியின் தென்பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்
     திருவெள்ளியங்குடி அதுவே.      1341

 

முன்பு பசுக்களைப் பாதுகாத்து கம்சனை  மடியச் செய்த காளமேகம் போன்ற மேனி கொண்டவன்,  கருடக்கொடியை உடையவன், பாற்கடலில் சயனம் கொண்ட பரந்தாமன் குடியிருக்கும் கோயில் திருவெள்ளியங்குடியாகும்.  இத்தலத்து துறைகள் தோறும் பொன்னையும், மணியையும் கொழிக்கும் திரண்ட அலைகளையுடைய மண்ணியாற்றின் தென்கரையில் ஒதுங்கி வரும் மாணிக்கங்களைக் கொண்ட மாட மாளிகைகளின் கொடிகள் சூரியன் வரை சென்றடையும் இடமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

திருவெள்ளியங்குடியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் எப்படிப்பட்டவன்? ஆய்ச்சியர் முறையிடும் படியாக வெண்ணெய் அமுது செய்த கள்வன்; பிரளய காலத்தில் ஆலந்தளிரில் கண் வளர்ந்தவன்; பூதனையின் முலைப்பாலை அமுது செய்யும் பாவனையில் அவள் உயிரைக்  குடித்தவன். இரட்டை மருதமரங்களை முறித்து ஒழித்து நளகூபர மணிக்கிரீவர்களின் சாபம் போக்கியவன்.  மாவலியிடம் மூன்றடி மண் பெற்று பெருநிலம் அளந்து கவர்ந்து கொண்டவன் கண்ணனாக வந்து ஆநிரைகளை மேய்த்தவன், கடலில் சேதுகட்டி அரக்கர்களின் தலைகளை அறுத்துத் தள்ளினவன் கார் கால மேகம் போன்ற வடிவுடையவன், கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னழித்து, அவன்றன் படம் இறப்பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடப் பயின்றவன்.

        பகவான் பசுக்களைக் காத்தது போல் அவனைச் சரண் அடைபவர்களையும் காத்தருள்வான் என்பது இதன் கருத்தாகும். கம்சன் கண்ணனைக் கொல்ல பலவிதமான வழிகளைக் கையாண்டான். ஆனால் அனைத்திலும் தோற்றுப் போனான். கடைசியில் பகவான் அவனை அழித்து மக்களைக் காத்தார்.  கொடியவர்கள் வெகுகாலம் கொடுஞ்செயல்களை செய்தவண்ணம் இருக்க முடியாது. அது ஒரு முடிவுக்கு வரும் என்பதை இப்பாசுரத்தின் மூலம் விளக்கியுள்ளார். எனவே அவனைச் சரண் புகுந்து நம்மை உய்விக்குமாறு வேண்டுதல் நலம்.

 

பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து
     பாரதம் கையெறிந்து ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த
     செங் கண் மால் சென்று உறை கோயில்
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி
      எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற
     திருவெள்ளியங்குடி அதுவே   1342     

 

ஊழிக்காலத்தில் உலகங்களைக் காக்க அதனை உண்டு பின்னர் அவற்றை உமிழ்ந்தவன், பாரதப் போரில் அருச்சுனனுக்கு சாரதியாக இருந்து சாட்டையை வீசித் தேரை ஓட்டி எதிரிகளின் தேர்ப்படையை அழித்த செந்தாமரைக் கண்ணன் வாழுமிடம் திருவெள்ளியங்குடியாகும்.  ஏர்பூட்டி உழும் வயல்கள்  நிறைந்தது இத்தலமாகும். அதைக் கண்டு வாளை மீன்கள் பயந்து அழகிய தடாகத்தில் குதித்து செல்லும் வளமிக்க ஊரில் இத்தலம் திகழ்கின்றது என்கிறார் ஆழ்வார்.

பூமியைப்‌ பிரளயங்‌கொள்ளாதபடி திருவயிற்றிலேவைத்து ‌ ரக்ஷித்தவனும்‌, பிரளயம்‌ கழிந்தபின்‌ வெளிப்படுத்‌தினவனும்‌, பாரத யுத்தத்திலே கையுமணியும்‌ வகுத்தவனும்‌, அர்ஜுனனுக்குத்‌ தேர்ப்பாகனாயிருந்து நடத்தினவனும்‌, பீஷ்மர் ‌ முதலானோர்‌ தேரைவிட்டு ஓடும்படி அவர்களைப்‌ பங்கப்படுத்தினவனும்‌, அடியார்‌ திறத்தில் உள்ள வாத்ஸல்யமடங்கலும்‌ திருக்கண்களிலே தோற்றும்படி  இருப்பவனுமான பெருமான்‌ வந்து வாழுமிடம்‌ திருவெள்ளியங்குடியாகும்.

         எல்லா உலகத்தின் தலைவனானவன் அருச்சுனனுக்குத் தேரோட்டியானான். அதர்மத்தை ஒழிக்க எந்தச் சூழலையும் பகவான் பயன்படுத்திக் கொள்வார் என்பது உணரப்பெறுகின்றது. இரண்யனும் மக்களை வதைத்துத் தன் பெயரைச் சொல்லுமாறு வற்புறுத்தினான். ஆனால் அவனது மகன் பிரகலாதனே ‘நாராயண’ மந்திரத்தைச் சொல்லியவண்ணம் இருந்தான். அந்த அசுரனின் அழிவுப் பிள்ளை உருவில் வந்தது. இவை அனைத்தும் பகவானின் திருவுளப்படிதான் நடக்கிறது. எனவே நாம் தருமத்தை பின்பற்றுதல் வேண்டும். மீறினால் பகவான் ஏதாவது ரூபத்தில் வந்து நம்மைத் தண்டிப்பான் என்பது பொருளாகும்.

       

காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உறக்
     கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த
     கோல வில் இராமன் தன் கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்
     ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்
     திருவெள்ளியங்குடி அதுவே.      1343

 

அழகிய மலரானது பெருங்காற்றில் அலைக்கழிக்கப்பட்டு அழிவது போல் அரக்கரின் கடலைப் போன்ற பெரும் படை சிதறி ஓடித் துன்பமடைந்து எமனுலகு சென்று சேரும்படி கொடிய அம்புகளை எய்த கோலவில்லிராமன் உறையும் இடம் திருவெள்ளியங்குடியாகும். இத்தலத்தில் நீரூற்று உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்ட வாழை மரங்களிலிருந்து விழுந்த கனிகளைச் சேற்றில் வாழும் கயல்மீன்கள் உண்டு விளையாடுமிடமாகும் என்று ஆழ்வார் வர்ணிக்கின்றார்.

        இராவணன் அத்ரமமாகச் சீதையைக் கவர்ந்து சென்று சிறை வைத்ததால் இலங்கை பாவம் செய்த பூமியானது. அதனால் ஸ்ரீராமன் இலங்கையை அழித்தார். அழியும் காலம் வரும்போது விபரீத எண்ணங்கள் தோன்றும்.  இராவணன் சிறந்த சிவபக்தி உடையவனாக இருப்பினும் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனால் சீதையைக் கவர்ந்து ஸ்ரீராமனால் கொல்லப்பட்டான். நம்முடைய ஒவ்வொரு அசைவுகளும் நம் முன்வினைப்பயனின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே இந்த விநாடி முதல் நற்காரியங்கள் புரிவது என்ற எண்ணம் கொண்ருத்தல் நலம் என்று கூறுகிறார் ஆழ்வார்.

         ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் செயல்கள், அவரது முன்வினைப் பயனின் வகையைப் பொறுத்து இருக்கும் என்பதைக் குறிக்கும்.   மனித வாழ்க்கை முழுவதும் முன்வினைப் பயன்களால் ஆனது என்பது நம்பிக்கை. இதனை ஆழ்வார் தம் பாசுரங்களில் எடுத்தியம்பியுள்ளார்.

       

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த
     மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு
     திக்கு உற வளர்ந்தவன் கோயில்
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்
     அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்
     திருவெள்ளியங்குடி அதுவே.      1344

 

கேட்பவர்க்கு கேட்டதெல்லாம் தருவேன் என்று சொல்லி மகாபலி வேள்வி தொடங்க அங்கே வாமனமூர்த்தியாகி மூன்றடி பெற்றான் பகவான்.  அதன் பிறகு திருவிக்கிரமனாக வளர்ந்தான். அத்தகைய ஆற்றல்  கொண்டவன் திருவெள்ளியங்குடியில் சயனித்துள்ளான். வளமான  அழகிய தோப்புகளில் வாழும் குயில்கள் ஹரி ஹரி என்று அழைக்க, அசுர குருவான சுக்கிராச்சாரியர் வந்து வழிபட அவருக்கு விரைவில் வந்து அருள் புரிந்த இடம் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        கேட்பதையெல்லாம் தரும் ஆற்றல் இறைவன் ஒருவனுக்கே உண்டு. மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனைப் பாதாள லோகத்திற்கு செல்லுமாறு அழுத்தினார். ஆணவம் எவ்வடிவில் தலை தூக்கினாலும் அதைப் பகவான் அழித்து விடுவார். எனவேதான் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய எண்ணம் எந்நாளும் நம் மனதிலிருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

        ஒரு நல்ல விதை செழிப்பான செடியாக வளர்வதற்கு தடையாக அமைந்து விடுகின்ற முட்செடிகள், களைகள்போல மனித வாழ்விலும் துர்குணம், கபடம், வஞ்சகம், பொறாமை, புறங்கூறுதல் போன்ற வி‌ஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட்டு தூய எண்ணம் வாழ்வில் வளரக் கடவுளுடைய வார்த்தைகள் நமக்கு ஆற்றல் அளிக்கின்றன. எனவே இவ்விஷயங்களைக் களைந்து விட்டு இறைவனை நாடுதல் பேரின்ப வாழ்விற்கு வழிவகுக்கும் என்கிறார் ஆழ்வார்.

       

முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்
     தம் பெருமானை அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட
     மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்
     பதித்த பல் மணிகளின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய
     திருவெள்ளியங்குடி அதுவே.       1345

 

அழகிய கிரீடம் தரித்திருக்கும் தேவர்களுக்குத் துன்பம் தந்து கொண்டிருந்த இரணியனை முன்பு நரசிம்மராய் மடியில் இருத்தி மார்பைப் பிளந்த பெருமான் அருள் புரியும் கோயில் திருவெள்ளியங்குடியாகும்.  இத்தலமானது அழகிய பெரிய மாடங்களில் உள்ள தூண்கள் அடியில் பதிந்திருக்கும் பல்வேறு இரத்தினங்களின் ஒளியினால் விடிகாலை, பகல், இரவு என்று பிரித்துக் காண முடியாத அற்புதத் தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

எங்களில்‌ மேற்பட்டாரில்லை என்று அஹங்காரம் தோற்ற முடிகவித்திருந்த தேவஜாதிக்கெல்லாம்‌ இன்பங்களை விளைத்துக் கொண்டிருந்த இரணியாசுரனைத்‌ தொலைக்க வேண்டி நரசிம்மமூர்த்தியாய்த்‌ தூணில் தோன்றி அவனை மடிமீது ஏறிட்டுக்கொண்டு மார்பைக்‌ கிழித்தெறிந்த மாயன்‌ மன்னுமிடம்‌ திருவெள்‌ளியங்குடி  என்பதாகும்.

        நாராயணனின் பரம பக்தனான பிரகலாதனுக்கு மகன் என்றும் பாராமல் பலவிதமான துன்பங்களை அளித்தான் இரணியன். இறுதியில் அவனைக் கொல்லவும் துணிந்தான். பெருமானின் பெரும் கருணையினால் எவ்வித துன்பமுமின்றி அவனைக் காத்தார். பின் நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார். இறைவனை அவமதிப்பவர்கள் அழிந்து போவார்கள். தவம் செய்பவர்கள் அதன் பலனைத் துஷ்பிரயோகம் செய்தால், பெருமான் அவர்களைத் தண்டித்து விடுவார். எனவே அவனை மறவாமல் நம் வாழ்க்கைப் பயணத்தை நடத்திச் செல்ல வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.

       

குடி குடி ஆகக் கூடி நின்று அமரர்
     குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி அரவு அணைத் துயின்ற
     ஆழியான் அமர்ந்து உறை கோயில்
கடி உடைக் கமலம் அடியிடை மலரக்
     கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும்
     வயல் வெள்ளியங்குடி அதுவே.      1346

 

குடும்ப சகிதமாக அனைத்து தேவர்களும் பெருமானின் கல்யாண குணங்களைத் துதிப்பார்கள்.  பக்தர்களுக்கு அருள் புரிந்து ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம் திருவெள்ளியங்குடியாகும்.  இத்தலமானது மணமுடைய தாமரைப் பூக்கள், கரும்பு, நெற்பயிர் இரண்டுக்கும் நடுவில் உள்ள கழனிகளில் மலர, கரும்பும் சம்பாப் பயிறும் அசைவது அழகான அன்னப் பறவைகள் பேடையோடு சேரும் வயல்களையுடைய சிறப்புடையதாகும் என்கிறார் ஆழ்வார்.

        பகவானின் கல்யாண குணங்களைத் துதிப்பது என்பது பூர்வீக புண்ணியத்தினால் அமைவதாகும். கண்ணிருந்தும் குருடர்களாகவும், காதிருந்தும் செவிடர்களாகவும் நாம் திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறோம். யாரைப் புகழ வேண்டும் என்ற அடிப்படையே தெரியாமல் இருக்கிறோம். அழியக்கூடிய அற்ப பொருட்களுக்காக இம்மானிட வாழ்வினை விரயம் செய்து வருகிறோம்.  பகவானை மறந்து மனம்போன போக்கில் செல்கிறோம்.  ஆன்மீக வாழ்வின் ஆரம்ப நிலையில் புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று பகவத் கீதை (3.41) போதிக்கின்றது. கட்டுப்படுத்தாத மனம் மிகப்பெரிய எதிரி என்று கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார் (பகவத் கீதை 6.6). மேலும், புலனின்பத்திலும் பெளதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை. (பகவத் கீதை 2.44) தூய பக்தியினை அறிந்து அதனை வளர்த்துக்கொண்டால், நாமும் ஆன்மீகவாதியாவோம். நமது பக்தியும் ஆன்மீகமாகும். “செயலாற்றக்கூடிய புலன்கள் ஜடப்பொருளைவிட உயர்ந்தவை; மனம் புலன்களைவிட உயர்ந்தது; புத்தி மனதைவிட உயர்ந்தது; மேலும், அவனோ (ஆத்மாவோ) புத்தியைவிட உயர்ந்தவன்.” (பகவத் கீதை 3.42)     

       

 பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்
     பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற
     திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்
     மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
     ஆள்வர் இக் குரை கடல் உலகே.     11347

 

முன்பு வராகமாகி பூமித்தாயைப் பெயர்த்தெடுத்து தனது கொம்பின் மீது வைத்தவன், தெளிந்த அலைகள் திருப்பாதங்களை வருட திருப்பாற்கடலில் துயின்ற வெள்ளியங்குடி வாழும் பெருமானைப் பற்றிக் கலியன் என்கின்ற திருமங்கையாழ்வார் பாடிய இப்பாமாலையை பக்தியுடன் நாளும் பாட வல்லவர்கள் பெரிய கடல் சூழ்ந்த இவ்வுலகத்தை ஆள்வார்கள் என்று, வண்டுகள் ஒலிக்கும் நந்தவனங்களைக் கொண்ட நாட்டுக்கு மன்னரும், வேற்படையை உடைய திருமங்கையாழ்வார் கூறியுள்ளார்.

        மனத்தினை தூய்மையான புடம் போட்ட தங்கமாக மாற்றுவதற்கு பகவானின் செயல்கள் நிறைந்த கதைகளைப் பாசுரம்மூலம் தந்துள்ளார். வராகமாகி பூமியைக் காத்தது, இராவணனை அழித்தது, அசுரர்களை முழுவதும் அடக்கியது போன்ற செயல்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்துவிட்டால் தீயகுணங்கள் நம் மனதில் நுழையாது. பகவான் நம் மனதில் வந்து குடியேறிவிட்டால் நாம் இப்பூமியில் பிறந்த லட்சியம் நிறைவேறிவிடும்.  ஆழ்வார் அருளிய இப்பாடல்களை பக்தியுடன் பாடவல்லவர்கள் மறுமையில் நிலைபேறான வாழ்வை அடைவது உறுதியாகும்.

        பெருமான் மனிதனை உயர்ந்த படைப்பாகப் படைத்துள்ளான். அவனுக்குப் பகுத்தறிவை வழங்கி அவன் வழிதவறிச் சென்று விடக் கூடாது என்பதற்காகச் சிறந்ததொரு வாழ்க்கை நெறியையும் அவனுக்கு வகுத்துக் கொடுத்துள்ளான். அவன் இந்த வாழ்க்கை நெறியைப் பின்பற்றி வாழ்கின்றபோது மனிதனின் சமுக, பௌதீக வாழ்விலோ, பிரபஞ்சத்திலோ, இயற்கைச் சூழலிலோ எவ்வித பிரச்சினைகளும் குழப்பங்களும் தோன்றாது. மாறாக அமைதியும் நிம்மதியும் நிறைந்த ஒரு வாழ்வே நிலைபெறும். அப்போது இயற்கைச் சமநிலை தோன்றி நிம்மதியான வாழ்வு கிடைக்கும். ஆனால் மனிதன் அவ்வாழ்க்கை நெறியைப் புறந்தள்ளும் போது இயற்கையின் சமநிலை குலைவதோடு அனர்த்தங்களும் அழிவுகளும் நிறைந்து மனித வாழ்வும் நிம்மதியிழக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...