வியாழன், 15 ஜனவரி, 2026

17. திருக்கண்ணபுரம்

 



பெரியாழ்வார்                                                                         பெரியாழ்வார் திருமொழி

 

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம்மில் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின                                                                                                                                                                             செய்து   வரும்
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து                                                                                                                                                                                           அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே.      71

 

உன்னைத் தனது இடுப்பில் அன்புடன் சுமந்து செல்லும் கோபியர்கள், உன்னைத் விரும்பியவாறு ஆட்டுவித்து மகிழ்கிறார்கள். அவர்கள் மனம் மகிழுமாறும், அதனைக் கண்ணாரக் கண்டு கண்கள் குளிரவும், பாசுரங்கள் எழுதும் கவித்துவம் பெற்ற பண்டிதர்கள் கவிதையாகப் பொழியவும், என் ஞானக் கண்ணால் கண்டு மகிழவும், நீ செங்கீரை ஆட வேண்டும். திருக்குறுங்குடியில் உறைபவனே! திருவெள்ளறையில் அருள் புரிபவனே! திருக்கண்ணபுரத்து அமுதமே! ஏழு உலகங்களையும் ஆட்கொள்பவனே! என் அவலத்தைப் போக்க செங்கீரை ஆடுக...’’ என்கிறார் ஆழ்வார்.    

பாலகன் கண்ணனைத் தங்கள் மடிமேல் இருத்தி, சிறுமியரும், பெண்களும் தங்கள் இல்லத்திற்கு அவனை அழைத்துச் சென்று, அவனுக்கு விருப்பமானவற்றை அளித்து, அவனுடன் விளையாடி மகிழும் காட்சியைக் காண்பவர்கள் தங்கள் கண்கள் குளிர கண்டு மகிழ்கின்றனர்; கற்றவர்களோ சொல்வதற்கு வார்த்தையின்றி அவன் மழலைச் சொல்லின் மயக்கத்தில் தடுமாறி நிற்கின்றனர். அத்தகைய ஒரு பேரானந்தத்தை உன்னைப் பெற்ற எனக்கும் அருள்வாயாக! பேரருளாளா! திருக்குறுங்குடி வாமனா! திருவெள்ளறையின் செந்தாமரைக்கண்ணா! திருமாலிருஞ்சோலை அழகா! திருக்கண்ணபுரத்தமுதா! என் துயரம் களையமாட்டாயா? என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! ஏழுலகினுக்கும் இறைவா! ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

        பகவானின் செங்கீரை ஆடல் என்பது உலகத்தவரின் அவல நிலைகளையெல்லாம் மாற்றக்கூடியது. உலகத்தில் அழியக்கூடிய பொருட்களின் மீது பற்று கொள்வது அவலநிலையாகும். பகவான் ஒருவனே நமக்கு நிலையான துணை என்று கொள்வது அவலநிலையைப் போக்குவதாகும். இத்தகைய நிலையை மக்கள் பெற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்

 

ஆண்டாள்                                                                                            நாச்சியார் திருமொழி

       

 காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றி தன்னொடும்
கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே.       535

 

காட்டில் உள்ள திருவேங்கடமலையிலும், நகரமான திருக்கண்ணபுரத்திலும் ஒரே மாதிரியாக மனக்குறையின்றி மகிழ்ச்சியோடு எழுந்தருளியுள்ள வாமனன் ஓட்டமாக வந்து என் கரம் பிடித்துத் தன்னோடு அணைத்துக் கொள்ளும் நேரத்தில் எதையாவது நினைத்து ஊடல் கொள்ளாமல் மனமே அவனுக்குச் சுலபமாக இணங்கிவிடு என்று ஆண்டாள் கூறுகிறாள்.

காட்டில் உள்ள திருவேங்கடமலையிலும், நகரத்தில் உள்ள திருக்கண்ணபுரத்திலும் எந்த வருத்தமுமின்றி மகிழ்ந்து குடி கொண்டுள்ள வாமன அவதாரம் எடுத்த கண்ணன் ஓடி வந்து என் கைப்பற்றி, தன்னோடு என்னை அணைத்துக் கொள்வார். காட்டில் இருக்கிறார்.  நகரத்திலும் இருக்கிறார் எம்தலைவன். என் அருகிலும் அவன் வேண்டும் என்னை அணைத்துக் கொள்ள நற்பொழுது கூட வேண்டும். அது நடக்குமென்று நீ கூடிடு கூடலே என்று குறி கேட்கிறாள் கோதை. ஏன் ஓடி வந்து அணைக்கணும் என்கிறாள்? ஆமா ஏற்கனவே பருவத்தே பயிர் செய் என்பதை அந்தக் கண்ணன் இன்னும் உணரவில்லை. நாளும் கிழமையும் காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துப்போக ஒருகணமும் தாழ்த்தாமல்,  விரைவாக வந்தென்னை அணைத்தலே தன் காதல் நோய்க்கு மருந்து என்கிறாள் ஆண்டாள்.

        காடோ, நகரமோ எவ்வித வேறுபாடின்றி மகிழ்வோடு எழுந்தருளி உள்ளான் என்று ஆண்டாள் கூறுகிறாள். நாடு, நகரம், புகழ்ச்சி, இகழ்ச்சி, நன்மை, தீமை ஆகிய எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் இறைவன்.  அசுர சக்தியை பாதாளத்தில் அழுத்த வாமனன் ஆனான்.  அத்தகைய பெருமையுடையவன் ஓடிவந்து அணைக்க வரும்போது ஊடல் செய்யாமல் இணங்கிவிடு என்று மனத்தினைக் கூறுகிறாள். பகவான் உங்களை நோக்கி வரும்போது அற்ப சுகங்களை எண்ணி அவனை மறந்து விடாதீர்கள் என்று கூறுவது போல் அமைந்துள்ளது.

 

குலசேகராழ்வார்                                                                            பெருமாள் திருமொழி

       

மன்னு புகழ்க் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே
தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ.        719

 

என்றும் நிலைத்த புகழையுடைய கௌசல்யா தேவியின் அழகிய வயிற்றில் பிள்ளையாக அவதரித்தவனே! தென் திசையில் உள்ள இலங்கை வேந்தனான இராவணனின் பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பினைத் தொடுத்தவனே! தங்கத்தால் செய்யப்பட்ட அழிவற்ற அழகிய பெரிய மதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி இருக்கும் என் கண்ணின் கருமணி போன்றவனே! ராகவா! என் இனிய அமுதமே! உன்னைத் தாலாட்டுகின்றேன் என்கிறார் ஆழ்வார்.

நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை மிக்க வயிற்றில் வாய்த்தவனே! தென்னிலங்கை அரசனின் மகுடங்கள் தரையில் சிந்தும்படி செய்தவனே! செம்பொன்னால் அமைக்கப்பட்டு யாராலும் எந்தப் பகைவராலும் தொடப்படாத, மதில் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே! என்னுடைய இனிய அமுதமே! இராகவனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        திருமாலின் அவதாரமான ஸ்ரீராமனின் தாயார் கௌசல்யாவை ஆழ்வார் வாழ்த்திப் பாடுகிறார்.  அடுத்து ஸ்ரீராமனின் பராக்கிரமத்தைப் பாடுகிறார். சீதா தேவியை சிறை வைத்த இராவணன், தூது வந்த அனுமனை அவமதித்தான். நல்வார்த்தைகள் சொல்லியும் கேளாமல் அலட்சியப்படுத்தினான். விபீஷணனை அவமதித்தான். இறுதியில் போரில் தோற்று உயிரை இழந்தான். அத்தகைய பெருமான் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ளார்.

       

புண்டரீக மலர் தன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே
திண் திறலாள் தாடகைதன் உரம் உருவச் சிலை வளைத்தாய்
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணியே
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ.        720

 

தாமரைப் பூவின் மேல் பிரம்மனைத் தோற்றுவித்து அவர்கள்மூலம் உலகங்களைப் படைத்தவனே!  வலிமையுள்ள தாடகையின் மார்பைத் துளைக்கும்படி வில்லை வளைத்து அம்பு எய்தவனே! பார்த்தவரெல்லாம் தங்கள் மனதைப் பறிகொடுக்கும் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் என் கண்ணின் கருமணியே, ராகவனே!  எல்லா திசைகளையும் ஆள்பவனே! உன்னைத் தாலாட்டுகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

தாமரை மலர்மேல் அமர்ந்து இந்த உலகை எல்லாம் பிரமன் உருவில் படைத்தவனே! மிகுந்த வலிமை கொண்ட தாடகையின் வலிமை எல்லாம் அழியும் படி வில்லை வளைத்தவனே! உன்னைப் பார்த்தவர் எல்லாம் தங்கள் மனத்தை உன்னிடம் வழங்கும் படி பேரழகுடைய, திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எட்டு திசைகளையும் ஆளும் வல்லமையுடையாய்! இராகவனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        உலக இயக்கம் என்பது பெருமானால் நடத்தப்படுவது. எம்பெருமானின் கட்டளைப்படி பிரமன் உலகத்து உயிர்களைத் தோற்றுவிக்கிறான். உயிர்களற்ற உலகம் சூனியமாகி விடும் என்பது இதன் கருத்து.  தாடகையின் உயிரை அழித்தவன், மாரீசன், சூர்ப்பனகை, இராவணன் போன்ற அசுரர்களை வேரறுத்த என் கண்ணின் கருமணி போன்ற ராகவனே! உன்னைத் தாலாட்டுகின்றேன் என்று பாடி நமக்கெல்லாம் இராம பக்தியை ஏற்படுத்துகிறார் ஆழ்வார். 

 

       

கொங்கு மலி கருங்குழலாள் கௌசலை தன் குல மதலாய்
தங்கு பெரும் புகழ்ச்சனகன் திரு மருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கருமணியே
எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ.       721

 

நறுமணங்கள் வீசும் கரும் கூந்தலையுடைய கோசலையின் குலத்தை விளங்க வைத்தவனே! பெரும் புகழினை நிரந்தரமாகப் பெற்றிருக்கும் ஜனகனின் மருமகனே! தசரதனின் செல்வனே! கங்கையினும் புனிதமான தீர்த்தங்களையுடைய திருக்கண்ணபுரத்தில் அருள் புரியும் என் கண்ணின் கருமணியே! எங்கள் அரச வம்சத்து அரசனே! உன்னைத் தாலாட்டுகின்றேன் என்கிறார் ஆழ்வார்.

தேனும் மகரந்தங்களும் நிறைந்த பூக்களைச் சூடியதால் அவை நிறைந்த கருங்குழலை உடைய கோசலையின் குலத்தில் உதித்த குழந்தையே! என்றும் தங்கும் பெரும் புகழ் கொண்ட ஜனகனின் மருமகனே! தசரதனின் மகனே தாசரதீ! கங்கையை விடப் புனித மிக்க தீர்த்தங்கள் நிறைந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எங்கள் குலத்தின் இன்னமுதே! இராகவனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        ஒரு சிறந்த மனிதன் எவ்விதம் வாழ வேண்டும் என்று உதாரணப் புருஷனாகத் திகழ்ந்தான் இராமன். அவனது செயல்கள் அனைத்தும் நற்செயல்களாகத் திகழ்ந்தன. இராமனுக்கு பட்டாபிஷேகம் என்று தெரிந்தவுடன் புன்னகையால் ஏற்றான். ஆனால் கூனியின் கலகத்தால் அது இல்லை என்று தெரிந்தும் அதே புன்னகையுடன் அதனையும் ஏற்றான்.  இந்த ஒரு செயலே நிலை பெற்ற அவன் புகழுக்கு அடையாளமாகத் திகழ்ந்தது. இனபம் துன்பம் இரண்டையும் சரிசமமாக ஏற்றான். இச்செயல் மனித குலத்திற்கே எடுத்துக் காட்டாக விளங்கியது.  இத்தகைய புகழ் மிக்க இராகவா உன்னைத் தாலாட்டுகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

 தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே தயரதன் தன்
மா மதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்து என் கருமணியே
ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ.        722

 

நாபிக் கமலத்தில் பிரம்மாவை தோற்றுவித்தவனே! தசரதனின் மூத்த குமாரனே! சீதையின் மணாளனே! வண்டுகள் கூட்டமாக வந்து இசைபாடும் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் என் கண்ணின் கருமணியே! அம்புகள் பொருத்திய சார்ங்கம் என்ற வில்லை வளைக்கும் வல்லமைப் பெற்ற இராகவனே! உன்னைத் தாலாட்டுகிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

தாமரை மேல் நான்முகப் பிரமனைப் படைத்தவனே! தசரதனின் பெருமை மிக்க குழந்தையே! மிதிலை இளவரசியின் மணவாளனே! வண்டுக் கூட்டங்கள் பூக்களில் மது உண்டு இசை பாடும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! வலக்கையில் மிகப் பெரிய வில்லினை ஏந்தியவா! இராகவனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        சார்ங்கம் என்ற வில் அற்புதமான காரியங்களை இந்த வையகத்தில் நிகழ்த்தியுள்ளது. சுக்ரீவன் இராமன் சொல்படி வாலியை சண்டைக்கு அழைக்குமுன் இராமனது வலிமையை சந்தேகித்தான். அப்போது சார்ங்கம் என்ற  வில்லினால் ஏழு மராமரங்களை அம்பினால் ஊடுருவிச் சாய்த்தான். இலங்கை செல்லுமுன் முன் சமுத்திர ராஜனுக்கு பாடம் கற்பிக்க சார்ங்கம் என்ற வில்லினை பயன் படுத்தினான்.  இந்த வில்லினால் இராவணனின் பத்து தலைகளை அறுத்து எறிந்தான். இத்தகைய அற்புதங்களைச் செய்து காட்டிய இராகவனே உன்னைத் தாலாட்டுகின்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
சீர் ஆளும் வரை மார்பா திருக் கண்ணபுரத்து அரசே
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ .            723

 

செல்வம் நிறைந்த அயோத்தியை ஆளும் உரிமையைத் தம்பி பரதனுக்கு அளித்து விட்டு, அளவற்ற அன்பையுடைய தம்பி லட்சுமணனுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்றவனே! வீர லட்சுமியின் இருப்பிடமான மலை போன்ற மார்பை உடையவனே! திருக்கண்ணபுரத்து அரசனே! மாலையோடு கூடிய சிறந்த திருமுடியையுடைய என் தாசரதி! உன்னைத் தாலாட்டுகின்றேன் என்கிறார் ஆழ்வார்.

நாட்டை ஆளும் உரிமையையும் அதோடு பெரும் செல்வத்தையும் பரதநம்பிக்கே அருளித் தீராத அன்பு கொண்ட இளைய பெருமாள் இலக்குவனோடு அரிய காட்டை அடைந்தவனே! அழகை ஆளும் மலை போன்ற மார்பினை உடையவனே! திருக்கண்ணபுரத்தரசே! மாலை அணிந்த நீண்ட திருமுடியை பூண்ட என் தசரதன் மகனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        இவ்வையகத்தில் உடன் பிறந்த சகோதரர்களுக்குச் சேர வேண்டிய பாகத்தை வஞ்சனையுடன் அபகரிக்கும் மனிதர்களைப் பார்க்கிறோம். உடன் பிறந்த சகோதரர்கள் வறுமையில் வாடுவதை பார்த்து வாளாயிருக்கும் மனிதனைப் பார்க்கின்றோம். ஆனால் ஸ்ரீராமன் தனக்குள்ள அரச பட்டத்தைப் பரதனுக்கு அளித்துவிட்டு கானகம் செல்கின்றான். கைகேயியின் வரத்தை இராமன் நினைத்திருந்தால் மறுத்திருக்கலாம். வெகுண்டெழுந்த இலக்குவனே நினைத்திருந்தால் பல எதிர்ப்புகளையும் முறியடித்திருப்பான். ஆனால் இராமனோ அவனைச் சமாதானம் செய்து இவை அனைத்தும் விதியின் விளையாட்டு என்பதை எடுத்துரைத்து அவனுக்கு அறிவுரை அளிக்கிறான். அத்தகைய உத்தமனைத் தாலாட்டுகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

 சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ.       724

 

செல்வம் நிறைந்த அயோத்தியை ஆளும் உரிமையைத் தம்பி பரதனுக்கு அளித்து விட்டு, அளவற்ற அன்பையுடைய தம்பி லட்சுமணனுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்றவனே! வீர லட்சுமியின் இருப்பிடமான மலை போன்ற மார்பை உடையவனே! திருக்கண்ணபுரத்து அரசனே! மாலையோடு கூடிய சிறந்த திருமுடியையுடைய என் தாசரதி! உன்னைத் தாலாட்டுகின்றேன் என்கிறார் ஆழ்வார்.

நாட்டை ஆளும் உரிமையையும் அதோடு பெரும் செல்வத்தையும் பரதநம்பிக்கே அருளித் தீராத அன்பு கொண்ட இளைய பெருமாள் இலக்குவனோடு அரிய காட்டை அடைந்தவனே! அழகை ஆளும் மலை போன்ற மார்பினை உடையவனே! திருக்கண்ணபுரத்தரசே! மாலை அணிந்த நீண்ட திருமுடியை பூண்ட என் தசரதன் மகனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        இவ்வையகத்தில் உடன் பிறந்த சகோதரர்களுக்குச் சேர வேண்டிய பாகத்தை வஞ்சனையுடன் அபகரிக்கும் மனிதர்களைப் பார்க்கிறோம். உடன் பிறந்த சகோதரர்கள் வறுமையில் வாடுவதை பார்த்து வாளாயிருக்கும் மனிதனைப் பார்க்கின்றோம். ஆனால் ஸ்ரீராமன் தனக்குள்ள அரச பட்டத்தைப் பரதனுக்கு அளித்துவிட்டு கானகம் செல்கின்றான். கைகேயியின் வரத்தை இராமன் நினைத்திருந்தால் மறுத்திருக்கலாம். வெகுண்டெழுந்த இலக்குவனே நினைத்திருந்தால் பல எதிர்ப்புகளையும் முறியடித்திருப்பான். ஆனால் இராமனோ அவனைச் சமாதானம் செய்து இவை அனைத்தும் விதியின் விளையாட்டு என்பதை எடுத்துரைத்து அவனுக்கு அறிவுரை அளிக்கிறான். அத்தகைய உத்தமனைத் தாலாட்டுகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

 

ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே  
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே  
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ.      725

 

ஊழிக்காலத்தில்  உலகத்தை உண்டு ஆலிலை மேல் யோக நித்திரை செய்தவனே! வாலியைக் கொன்று வாக்குறுதிப்படி சுக்ரீவனை அரசனாக்கியவனே! அலையினால் ரத்தினங்களை கரை சேர்க்கும் திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் என் கரிய  மாணிக்கமே! திருவாலி திருநகருக்குத் தலைவனே! அயோத்தியின் அரசனே! உன்னைத் தாலாட்டுகிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஆலின் இலைமேல் சிறு பாலகனாய் உருக்கொண்டு பிரளயக் காலத்தில் உலகமெல்லாம் உண்டவனே! வாலியைக் கொன்று கிஷ்கிந்தை அரசை இளைய வானரமாம் சுக்ரீவனுக்குக் கொடுத்தவனே! தென்றல் காற்று நதியின் கரையின் மேல் அலை அடிக்கும் படி செய்யும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! ஆலிநகருக்கு அதிபதியே! அயோத்தி மன்னனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        இதுவரை கணக்கற்ற ஊழிக்காலங்கள் தோன்றி முடிந்துள்ளன. தோற்றமும் ஒடுக்கமும் பகவானால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் அனைவரும் பகவானின் கருணையினால் தோன்றியுள்ளோம். அதே கருணையினால் அவர் எல்லோரையும் ஐக்கியமாக்கியுள்ளார். அந்தப் பேரின்பத்தை அறிந்து கொள்ளாமல் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். உண்மை நிலையினை உணர்தத்தான் பகவான் ஊழிகாலம் தோறும் ஆலிலை மேல் நித்திரை கொண்டுள்ளார். அத்தகையவனை நான் தாலாட்டுகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

 மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே
அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ.       726

 

ஊழிக்காலத்தில்  உலகத்தை உண்டு ஆலிலை மேல் யோக நித்திரை செய்தவனே! வாலியைக் கொன்று வாக்குறுதிப்படி சுக்ரீவனை அரசனாக்கியவனே! அலையினால் ரத்தினங்களை கரை சேர்க்கும் திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் என் கரிய  மாணிக்கமே! திருவாலி திருநகருக்குத் தலைவனே! அயோத்தியின் அரசனே! உன்னைத் தாலாட்டுகிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஆலின் இலைமேல் சிறு பாலகனாய் உருக்கொண்டு பிரளயக் காலத்தில் உலகமெல்லாம் உண்டவனே! வாலியைக் கொன்று கிஷ்கிந்தை அரசை இளைய வானரமாம் சுக்ரீவனுக்குக் கொடுத்தவனே! தென்றல் காற்று நதியின் கரையின் மேல் அலை அடிக்கும் படி செய்யும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! ஆலிநகருக்கு அதிபதியே! அயோத்தி மன்னனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        இதுவரை கணக்கற்ற ஊழிக்காலங்கள் தோன்றி முடிந்துள்ளன. தோற்றமும் ஒடுக்கமும் பகவானால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் அனைவரும் பகவானின் கருணையினால் தோன்றியுள்ளோம். அதே கருணையினால் அவர் எல்லோரையும் ஐக்கியமாக்கியுள்ளார். அந்தப் பேரின்பத்தை அறிந்து கொள்ளாமல் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். உண்மை நிலையினை உணர்தத்தான் பகவான் ஊழிகாலம் தோறும் ஆலிலை மேல் நித்திரை கொண்டுள்ளார். அத்தகையவனை நான் தாலாட்டுகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன் தன் குல மதலாய்
வளைய ஒரு சிலை அதனால் மதிள் இலங்கை அழித்தவனே
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கருமணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ.        727

 

கிரீடத்திற்குள் கட்டுக்கடங்காது அவிழும் அழகும் நறுமணமும் உள்ள தசரதனின் முடியையுடைவனின் குலவிளக்கே! வளைந்த கோதண்டத்தால் வலிய மதில்களையுடைய இலங்கையை அழித்தவனே! செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்து எங்கும் அழகாக மண்டிக்கிடக்கும் திருக்கண்ணபுரத்தில் அருள் புரியும் என் கண்ணின் கண்மணி போன்றவனே! பரதன், சுக்ரீவன், விபீஷணன் போன்ற இளையவர்களிடத்தில் கருணை கொண்ட இராகவனே! உன்னைத் தாலாட்டுகின்றேன் என்கிறார் ஆழ்வார்.

சுருண்டு விழும் நறுமணம் கொண்ட முடியை உடைய தயரதன் தன் குலத்தில் உதித்த குழந்தையே! வளைந்து நிற்கும் ஒரு வில்லைக் கொண்டு மதிள் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே! கழுநீர்ப்பூக்கள் எல்லாத் திசைகளிலும் மலரும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! பக்தர்களுக்கு அருள் தருபவனே! இராகவனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        கானகம் சென்ற இராமபிரானை மீண்டும் அரசாட்சி புரிய அழைத்த பரதனை சமாதானம் செய்து தனது பாதுகையை அளித்து நாட்டினை கவனித்து வருமாறு கேட்டுக்கொண்டான். சுக்ரீவனுக்கு வாலியால் நேர்ந்த துன்பத்தினைக் களைந்து அவனது இராஜ்ஜியத்தினை மீட்டு அவனிடம் ஒப்படைத்தான். அது போன்று விபீஷணன் மாற்றான் மனைவியை அபகரித்தல் தவறு என்று இராவணனிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல் இறுதியில் இராமனிடம் வந்து சரணடைந்தான். இவர்களுக்குக் கருணை புரிந்த இராகவனே என்று ஆழ்வார் பாடுகிறார்.

       

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கருமணியே
ஏ வரி வெஞ்சிலை வலவா இராகவனே தாலேலோ.         728

 

தேவர்களையும், அசுரர்களையும், எல்லா திசைகளையும் உண்டாக்கி வைத்தவனே. எல்லா மக்களும் உனது திருப்பாதங்களில் வந்து வணங்குவதற்கான வாய்ப்பளிக்க சயனத்தில் இருப்பவனே. சிறப்பான காவிரி என்னும் நதிதீரத்தில் அமைந்துள்ள திருக்கண்ணபுரத்தில் எல்லோருக்கும் அருள்பாலிக்கும் எனது கரிய நிற மாணிக்கமே. அம்புகள் தொடுக்கப்பட்டு பகைவர்களுக்குப் பயத்தை விளைவிக்கின்ற கோதண்டத்தை உடைய இராகவா! உன்னை மனம் குளிர தாலாட்டுகிறேன்.

தேவர்கள், அசுரர்கள், திசைகள் என்று எல்லாவற்றையும் படைத்தவனே! எல்லோரும் வந்து திருவடிகளை வணங்கத் திருவரங்க நகரில் துயில் கொண்டவனே! காவிரி என்னும் நல்ல நதிபாயும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! நெடிய சிறந்த வில்லை வலக்கரத்தில் உடையவனே! இராகவனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        அனைத்தும் விளையாட்டாகவே உருவாக்கப்பட்டது. இவை பல யுகங்களாக நடந்து வருகின்றன. முற்பிறவியில் நாம் செய்த பாவங்களைக் களைய இப்பிறவியில் இம்மண்ணுலகத்தில் பிறந்துள்ளோம். நாம் நினைத்தால் இப்பிறவியிலேயே இப்பாவங்களை தீர்த்துக்கொள்ள முடியும். தேவர்கள் கூடத் தாம் செய்த பாவங்களை இம்மண்ணுலகில் வந்துதான் தீர்த்துக் கொள்கிறார்கள்.  எனவே அனைவரையும் உண்டாக்கி அவர்களைக் கரையேற்றும் கருணை உள்ளவனானகத் திகழும் உன்னைத் தாலாட்டுகிறேன் என்று பாடுகிறார் ஆழ்வார்.

       

 கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் காகுத்தன்
தன் அடிமேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே.        729

 

தேவர்களையும், அசுரர்களையும், எல்லா திசைகளையும் உண்டாக்கி வைத்தவனே. எல்லா மக்களும் உனது திருப்பாதங்களில் வந்து வணங்குவதற்கான வாய்ப்பளிக்க சயனத்தில் இருப்பவனே. சிறப்பான காவிரி என்னும் நதிதீரத்தில் அமைந்துள்ள திருக்கண்ணபுரத்தில் எல்லோருக்கும் அருள்பாலிக்கும் எனது கரிய நிற மாணிக்கமே. அம்புகள் தொடுக்கப்பட்டு பகைவர்களுக்குப் பயத்தை விளைவிக்கின்ற கோதண்டத்தை உடைய இராகவா! உன்னை மனம் குளிர தாலாட்டுகிறேன்.

தேவர்கள், அசுரர்கள், திசைகள் என்று எல்லாவற்றையும் படைத்தவனே! எல்லோரும் வந்து திருவடிகளை வணங்கத் திருவரங்க நகரில் துயில் கொண்டவனே! காவிரி என்னும் நல்ல நதிபாயும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! நெடிய சிறந்த வில்லை வலக்கரத்தில் உடையவனே! இராகவனே! தாலேலோ! என்று பாடுகிறார்.

        அனைத்தும் விளையாட்டாகவே உருவாக்கப்பட்டது. இவை பல யுகங்களாக நடந்து வருகின்றன. முற்பிறவியில் நாம் செய்த பாவங்களைக் களைய இப்பிறவியில் இம்மண்ணுலகத்தில் பிறந்துள்ளோம். நாம் நினைத்தால் இப்பிறவியிலேயே இப்பாவங்களை தீர்த்துக்கொள்ள முடியும். தேவர்கள் கூடத் தாம் செய்த பாவங்களை இம்மண்ணுலகில் வந்துதான் தீர்த்துக் கொள்கிறார்கள்.  எனவே அனைவரையும் உண்டாக்கி அவர்களைக் கரையேற்றும் கருணை உள்ளவனானகத் திகழும் உன்னைத் தாலாட்டுகிறேன் என்று பாடுகிறார் ஆழ்வார்.

 

திருமங்கையாழ்வார்                                                                            பெரிய திருமொழி

 

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால் *
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ.      1648

 

சார்ங்கம் என்றும், சுதர்சனம் என்றும், நாந்தகம் என்றும், கௌமோதகி என்றும், அழகிய பாஞ்ச ஜன்னியம் என்றும் என் புதல்வி பரகால நாயகி எப்போதும் புலம்புகிறாள். மலை போன்ற நான்கு தோள்களும் எவ்வளவு கம்பீரமாக இருக்கின்றன என்கிறாள். இவளது தனங்களில் விளங்கும் அழகிய பசலை நிறம் முதலில் தோன்றி பின்பு காதல் ஏற்பட்டிருக்கின்றதே! கலைகள் அறிந்து பேசுபவர் வாழும் திருக்கண்ணபுரத்திலே அருள் புரியும் சௌரிராஜப் பெருமானை இவள் தரிசித்திருப்பாளோ? இல்லையெனில் இவளுக்கு இப்படியான நிலை வருமா என்று தாயார் கூறுகிறாள்.

        பரக்கால நாயகி தம் புதல்வியின் உடலில் பசலை படர்ந்துள்ளது. நாயகி காணும் காட்சிகள் அனைத்தும் பகவானுடையதாகவே உள்ளது. இந்தப் பாக்கியத்தை மகளானவள் எவ்விதம் பெற்றாள். ஒருவேளை திருக்கண்ணபுர சௌரிராஜனை தரிசித்திருப்பாளோ என்று வினா எழுப்புகிறாள். இத்தலத்து பெருமானை வழிபட்டால் லௌகிக வாழ்வினைத் துறந்து ஞான மார்க்கத்தினைப் பெறலாம் என்பது கருத்தாக உள்ளது.

       

 செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால்
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால்
கரு வரைபோல் நின்றானைக் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ?           1649

 

முன்பு போர் வீரர்களை அழித்த சாரங்க வில்லன்றோ கையில் இருக்கின்றது என்கிறாள். முன்னொரு நாள் துன்பம் விளைவித்த மலையை வெட்டி வீழ்த்திய சக்கரமன்றோ இவர் கையில் உள்ளது. ஒருவரையும் உன்னிடம் ஒப்பிட முடியாத ஒப்பிலா அப்பனே என்றும் ஆதங்கப்படுகிறாள். கறுப்பு மலை போன்று திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சௌரிராஜப் பெருமானை இவள் தரிசனம் செய்திருப்பாளோ என்று தாயார் புலம்பும் பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

        பரக்கால நாயகி பகவானின் பெருமைகளை இப்பாசுரத்தில் கூறுகிறாள். இவள் இவ்விதம் ஆனதற்கு என்ன காரணம்? திருக்கண்ணபுரம் சௌரிராஜனை தரிசித்திருப்பாளோ என்று வினவுகிறாள். இக்காலத்தில் ஆண்கள் பெண்கள் லௌகிக வாழ்க்கையை விரும்புகிறார்கள். அவர்கள் எப்போதும் பணம், பொருள், பொன் இவற்றிற்கு அடிமை ஆகிறார்கள். ஆனால் பரக்கால நாயகியோ பகவானின் திருவுருவத்தையும், அவருடைய பஞ்சாயுதங்களையும் காண்கிறாள். அதனால் பகவானின் கருணை அவளுக்குக் கிடைத்து விட்டது. இது போன்ற நிலையை நாமும் அடைய வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

துன்னு மா மணி முடிமேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ.         1650

 

நெருக்கமாகவுள்ள இரத்தினங்கள் இழைக்கப்பட்ட திருமுடிமேல் துளசி மாலையுடன் பொருத்தமாக வீற்றிருக்கின்ற அழகு என் நெஞ்சைக்  கவர்கின்றது என்கிறாள். அழகிய மணிகள் பதித்த மீன் வடிவிலான மகரக்குண்டலங்கள் ஒளியைப் பரவச் செய்து வீசுவதைப் பாருங்கள் என்கிறாள். பொன்னால் செய்து இரத்தினங்களால் இழைக்கப்பட்ட மாலையுடன் திகழும் திருமாலே இவள் என்கின்றாள். உறுதிமிக்க மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் உள்ள சௌரிராஜப் பெருமானை இவள் தரிசித்திருப்பாளோ என்ற பொருளில் பாசுரம் அமைந்துள்ளது.

        பரக்கால நாயகியின் மனநிலையினை ஆழ்வார் எடுத்துரைக்கிறார். மண்ணுலக வாழ்வில் சிக்கித் துன்பங்கள் அடைந்து கொண்டிருக்கும் நமக்கு விமோசனம் அளிக்கவல்ல இடம் திருக்கண்ணபுரம் என்று ஆழ்வார் கூறுகிறார். தேவையற்ற இடங்களுக்குச் சென்ற துன்பம் சேர்க்கும் நீங்கள் திருக்கண்ணபுரம் சென்று வாருங்கள். சௌரிராஜனை அனுதினமும் தரிசித்து இம்மாய வாழ்வுக்கு முடிவு கட்டுங்கள் என்கிறார்.   பெரிய வாச்சான் பிள்ளை தமது         ஸ்ரீசுக்தியில் ‘உள்ளுள்ள எம்பெருமானுடைய சீர்மைக்குத் தகுதியாய் அரணாயிருக்கின்ற திருமதிலால் சேமிக்கப்பட்டு உள்ளே உறைகின்ற எம்பெருமானை எப்படியோ கண்டு கொண்டாளே’ என்று வியந்து கூறுகிறார்.

       

தார் ஆய தண் துளப வண்டு  உழுத வரை மார்பன் என்கின்றாளால்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால்
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ.        1651

 

குளிர்ச்சி மிகுந்த துளசி மாலையில் மொய்க்கும் வண்டுகளால் தேன் வழிந்து மலை போன்ற திருமார்பு ஈரமாயிருக்கின்றனவே, என்கிறாள். போர் புரிய தயாராக இருந்த யானையின் தந்தங்களை முறித்தொழித்த கருடவாகனன் என் அம்மான் எனக்கு ஸ்வாமி என்கிறாள். யாரேனும் பாருங்கள். பவளம் போன்ற சிவந்த திருவதரமானது பவளம் போல் சிவந்துள்ளது என்று என் மகள் புலம்புகிறாள். கார்மேகம் போல் மின்னி முழங்குகின்ற திருக்கண்ணபுரத்து சௌரிராஜனை இவள் சந்தித்திருப்பாளோ என்று வினவுகிறாள்.

        பரக்கால நாயகி பகவானின் பெருமைகளைக் கூறுகிறாள். தாயார் தனது மகள் தான் புரளும் பெருமானது திருமார்பில் திருத்துழாயின் வண்டுகள் வந்து புரள்கின்றதே என்று வருந்துகிறாள். அது என்ன புண்ணியம் செய்தது நான் என்ன பாவம் செய்தேன் என்கிறாள். அதற்குத் தாயார் சிறுக்கியான நீ சொல்வது தகுமோ! நாண்மடமச்சங் கெட்டு வாய்விடுவதை நீ தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறாள். இத்தகைய அபூர்வப் பெண்ணை யாரும் பார்த்திரார்கள். இக்கால பெண்களின் ஆசைகள் அவளிடம் அறவே இல்லை என்கிறாள். பகவானின் தரிசனம் நமக்குக் கிடைத்து விட்டால் ஒரு நொடியில் நம் வாழ்வு மாறியே விடும். உலகமே அற்புதமாகி விடும். பரக்கால நாயகியின் நிலையும் இதுதான் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.

       

அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்
கடிக் கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ.        1652

 

    ðèõ£ù¶ F¼‚¬èèÀ‹, F¼õ®èÀ‹ î£ñ¬ó «ð£™ Þ¼‚A¡øù â¡Á ªð¼Iîñ£è„ ªê£™Aø£œ. F¼º®»‹ ÜF™ ðF‰¶œ÷ F¼õ£ðóíº‹ â¡ ñù¬î M†´ Üèô£ âùˆ b˜ñ£ùñ£è„ ªê£™Aø£œ. ÜöAò ªðKò MNè¬÷‚  ªè£‡ì ðƒèò„ ªê™Mò£ù ñè£ô†²I«ò£ Üõù¶ ñ¬ô «ð£¡ø F¼ñ£˜H™ °®ªè£‡´œ÷£«÷ â¡Á ¹ô‹¹Aø£œ. ñíI‚è èñôƒèœ «î¡ ªð£N»‹ F¼‚è‡í¹óˆ¶ ªê÷Kó£üŠ ªð¼ñ£¬ù Þõœ 𣘈F¼Šð£«÷£ â¡Á ÃÁAø£œ.
  ðó‚è£ô ï£òAJ¡ â‡íƒèÀ‹, õ£˜ˆ¬îèÀ‹ ÞŠð£²óˆF™ IO˜A¡øù. 䋹ô¡èO™ 塸£ù õ£J¡ Þô‚èí‹ ðèõ£¬ù ñùº¼AŠ ð£´õ¶. ðèõ£¡ ÜOˆî õ£¬ò  âšMî‹ ðò¡ð´ˆ¶A«ø£‹ â¡Á â‡í «õ‡´‹. ªð£Œ ÃÁî™, ñŸøõ˜èO¡ ñù¬î ¹‡ð´ˆ¶î™, Ãê‚îò Üðˆîñ£ù õ£˜ˆ¬îè¬÷Š «ð²î™, «î¬õòŸø ÜŸðˆîùñ£ù õ£˜ˆ¬îè¬÷Š «ð²õ¶ «ð£¡ø¬õ«ò Þ‰î õ£Œ «ð²Aø¶ â¡Á ÃP ðèõ£Q¡ ï£ñƒè¬÷‚ Ãø Þ‰î õ£Œ ðò¡ðì«õ‡´‹ â¡Á ÃÁAø£˜.  

       

 பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
கார் ஆர் வயல் அமரும் * கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ.        1653

 

ஆயிரம் திருநாமங்களைக் கொண்டவன் என்ற பெருமை பெற்றவனே! என்று பரக்கால நாயகி பலமுறை சொல்கிறாள். அழகு மிக்க தங்க மகரக் குண்டலங்களை உடைய எட்டுத் தோள்களைக் கொண்டவனே! என்று புலம்புகிறாள். நீர் நிறைந்த கார்கால மேகத்தையும், பெரிய மலையையும், போன்ற பலம் கொண்டவனே! என்று அரற்றுகிறாள். கரிய வயல்களையுடைய திருக்கண்ணபுரத்து சௌரிராஜப் பெருமானை இவள் என்றாவது தரிசனம் செய்திருப்பாளோ என்று தாயார் வினவுகிறாள்.

        அனுதினமும் நாம் வாயார சகஸ்ரநாமத்தை உச்சரித்தல் வேண்டும். பகவானின் பெருமைகளைத் தினமும் சொல்ல வேண்டும். என்னைக் கைவிட்டதனால் தான் பகவானுக்குப் பெருமை இல்லாமல் போய்விடப் போகிறதே என்று கவலை கொள்கிறாள் தலைவி.  தீய செயலைப் புரிந்த ஒரு மனிதன் நல்லோன் வேடமிட்டு நடித்தால் அவன் நல்லவனாக மாறிவிடும் நிலை உள்ளது. அதுபோல் தீயவனும் பக்தியுடன் பகவானைத் தொழ ஆரம்பித்தால் அவன் புண்ணியனாகி விடுகிறான். அத்தகைய பெருமையை நாம் பெற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

செவ் அரத்த உடை ஆடை அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு என்கின்றாளால்
அவ் அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ? மழை முகிலோ? என்கின்றாளால்
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ?       1654

 

சிவந்த நிறத்தில் உயர்ந்ததாய் உடுத்தியிருக்கும் பீதாம்பரமும் அதன் மேல் நிகரற்ற சரிகைத் துண்டால் கட்டியிருக்கும் நேர்த்தியையும் வியந்து சொல்கிறாள். அவனது சிறந்த பாதங்களும், திருக்கரங்களும் தாமரை மலர் போன்றவையெனப் புகழ்ந்து பாடுகிறாள். கருமை வளமும் நீலமணி போன்ற திருமேனியான அவன் ஒரு சமயம் மரகதமாகவும், மற்றொரு சமயம் காளமேகமாகவும் திகழ்கின்றான். வேள்வித் தீ வளர்க்கும் வேள்வியர்கள் வாழும் திருக்கண்ணபுர சௌரிராஜனை இவள் பார்த்திருப்பாளோ என்று கூறுகிறாள் திருத்தாயார்.

        சில மனிதர்கள் தமது வாழ்நாளில் சமூகக் குற்றங்கள் புரிந்தவண்ணம் உள்ளார்கள். அவர்கள் மனம் திருந்தி வாழ்வதற்கான நிலை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் வாழ்க்கைத் தடம் மாறித் துன்புறுகிறார்கள். அவர்கள் மாற்றிக் கொள்ளவும் இயலாத நிலையில் வாழ்கிறார்கள். இவற்றைக் களைய ஒரு வழியினை பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள். பொய் சொல்வதை அந்த மனிதன் விட்டு விட்டால் மற்ற குற்றங்கள்  நாளடைவில்  அவனை  விட்டு விலகும்  என்ற அரிய தத்துவத்தை அவர்கள் அருளியுள்ளார்கள். எனவே வாழ்நாளில் நல்ல பழக்கங்கள் வளர்த்துக் கொள்வது அவர்களின் கடமை என்பதை ஆழ்வார் உணர்த்துகின்றார்.

       

கொற்றப் புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ?          1655

 

வெற்றி தரும் கருடப் பறவையின் மேலேறி திருவீதிகளில் பவனி வருகின்றான் என்று பரபரப்படைகிறாள். போரிலே வெற்றி பெறும் இந்திரனுக்கும் மேலான சிறப்புகளைப் பெற்றவன் இவன் என்று பரவசமடைகிறாள். அப்பெருமானின் மார்பில் அணையும் பாக்கியம் கிடைத்தால் இப்பெண் பிறவி பேறு பெற்றது போல் ஆகாதா? என்கிறாள் பெருமூச்சுடன். வேதியர்கள் அதிகம் வசிக்கும் திருக்கண்ணபுரத்து சௌரிராஜப் பெருமானை இவள் பார்த்திருப்போளோ என்று கேட்கிறாள் தாயார்.

பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அணைந்து வாழ்வதற்கென்றன்றோ அவன் திருமார்பு படைத்தது? ஒருத்தியைத் - அலர்மேல் மங்கையை திருமார்பிலேயே வாழ வைத்திருப்பதைப் போலவே, நமக்கும் அத்திருமார்பைப் பெறுவித்தல் பெண்ணாய்ப் பிறந்த நாமும் வாழ்ந்து போக மாட்டோமோ? என்கின்றாள்.

        பரக்காலநாயகி இவ்விதம் கூறுவது காம இச்சையால் ஏற்பட்ட மோகம் என்று ஆன்மீக பக்தர்கள் கருதக் கூடாது. நம்முள் இருக்கும் ஆத்மா பொதுவானது. அதற்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை. இவை உடல் ரீதியான வேறுபாடு. அந்த ஆத்ம ஐக்கியத்தை பரகால நாயகி இத்தகைய ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறாள். ஆணுக்கு எப்படி முக்தி முக்கியமோ அதுபோல் பெண்ணுக்கும் முக்தி அடைதல் என்பது முக்கியம். நமது ஆத்மா பரமாத்மாவுடன் ஒன்று சேர்வதே நமது தலையாய கடன். அதனை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும் என்கின்றாளால்
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ?        1656

 

துளசி மாலையில் உள்ள வண்டுகள் ரத்தின கிரீடத்தில் ஏறியவாறு செல்கிறது.  துளசியின் வாசத்தால் புளகாங்கிதம் அடைகிறாள். இவரிடம் எனக்கு வற்றாத அன்பு உள்ளது என்றும் இவரை ஒரு நிமிடம் கூடப் பிரிந்திருக்க இயலாது என்றும் தாபம் கொண்டு பேசுகிறாள். இவரை இதற்கு முன் எந்த ஊரிலோ சந்தித்துள்ளேன் என்று கூறுகிறாள். சேவித்தவர்கள் அனைவரும் தங்கள் மனதைப் பறிகொடுக்கும் திருக்கண்ணபுர சௌரிராஜனை இவள் தரிசித்திருப்பாளோ என்று கூறுகிறாள் தாயார்.

 வண்டுகள் படிந்திருக்கும்  துளசிமாலை  ரத்ன கிரீடத்தின் மீது மணம் கமழ நிற்கிறது  என்கிறாள்.  இவரிடத்திலே  அன்பு உண்டு  எனக்கென்று  சொல்லி ஒரு நொடிப் பொழுதும்  பிரிந்திருக்க முடியவில்லையே  என்கிறாள்.  இதற்கு முன்  இவரைப் பார்த்து  அறிந்தது எந்த ஊரில்?  என்றே பலகாலும்  யோசித்துப் பார்க்கிறாள்.  வணங்குபவர் அனைவரின்  மனமும் அவனிடம் ஈடுபடும் திருக்கண்ணபுரத்தில் இருக்கும்  சௌரிராஜப் பெருமானைக் கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

பகவானிடம் நாம் கொண்டுள்ள உறவு இன்றைக்கு நேற்றைக்கு வந்ததல்ல. யுகாந்திர காலமான உறவு இது. அதனால்தான் அந்த உறவைப் பற்றி இப்போது நாம் பேசிக் கொடிருக்கிறோம், கணக்கற்ற பிறவிகள எடுத்தபோதும் பகவானின் உறவு என்பது நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பகவானை மறந்து தடம் மாறிப்போன நமக்கு இப்பாசுரம் மூலம் நம்மை அவனிடம் சேர்ப்பிக்கிறார் ஆழ்வார்.  

       

மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவர் ஆய்ப் புகழ் தக்கோரே.      1657

 

மானின் விழிகளில் மென்மையாகவும், விசாலமாகவும் பார்க்கும் பரகாலநாயகி மாயவனை சந்தித்த செய்திகளை, சோலைகள் நிறைந்த திருக்கண்ணபுரத்தில் அருள் புரியும் சௌரிராஜப் பெருமானைப் பற்றிக் கலியன் பாடிய சந்தங்களான இத்தமிழ்ப் பாசுரத்தின் பத்துப் பாடல்களையும் பக்தியுடன் பாடவல்லவர்கள் மலர்கள் நிறைந்து வளரும் கற்பகமரமுள்ள பரமபதத்தில் நித்ய முக்தர்களைத் தலைவராக்கி எம்பெருமான் இளவரசனாயிருப்பான் என்ற பொருளில் ஆழ்வார் கூறுகிறார்.

        பகவானைத் தவிர வேறெதுவும் பேசாத பெண்ணாகத் தன்னைக் கற்பனையில் வடித்துக் கொண்டு பாசுரங்களை இயற்றியுள்ளார். ஒவ்வொரு பெண்ணின் இலட்சிய இலக்கை இப்பாசுரங்கள் தந்துள்ளன. இவள் காமப்பித்து பிடித்தவள் அல்ல. பகவான் பித்து பிடித்தவளாகும். ஆத்ம ஐக்கியத்தை பெரிதும் விரும்புகிறவள். அனைத்து சரீரங்களிலும் ஆன்மா பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. அந்த ஆத்ம தரிசனமே இந்த உயிர்களுக்கு இலட்சிய இலக்கு. மனித வடிவில் பிறந்துள்ள ஆண் பெண் இவ்விலக்கை அடைய வேண்டும். மனிதப் பிறவி நம் வசமுள்ளவரை பகவானின் நாமங்களை ஓதி, அவனது பெருமைகளைப் பாட வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும். 

       

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ
துள்ளு நீர்க் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ? கை வளை கொள்வது தக்கதே?         1658

 

தெளிந்த சிந்தனையுடையவரே! தேவாதி தேவரே! மகாலட்சுமித் தாயாருக்கு பொருத்தமானவரே! தூய்மையான பண்புடையவரே! தங்கம் போன்ற தேஜஸ் உடையவரே! கரை புரண்டோடும் நீரைக் கொண்ட திருக்கண்ணபுரத்தை இப்பரகாலநாயகி கைக்கூப்பித் தொழுதாள். இவளா உன் மனதைத் திருடியவள்? உன்னை நினைத்து ஏங்கி ஏங்கி கைகள் மெலிந்து அதனால் கைவளைகள் நழுவி விழுந்தது. அவள் கைவளை நழுவி விழும்படி அவள் நெஞ்சத்தை அபகரித்துக் கொண்டாய். இது உனக்குத் தகுமோ என்று தாயார் புலம்புகிறாள்.

        என் மகள் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் உன்னைக் கைகூப்பி வணங்கினாள். அவள் நெஞ்சத்தைத் திருடியது நீதான். நித்யசூரிகளுக்கு நாயகனாய் விளங்கி மேன்மை பெற்றவரே, நீர் என் மகளது வளையலை அபகரித்தல் நன்றுதானா? என்கிறாள். பகவானின் கருணையின்றி அவர்மீது நமக்கு அன்பு தோன்றாது. தன்னிடம் ஐக்கியமாவதற்கு தகுதியுடையவர்களை நன்கு அறிவான். தம்மை நோக்கி வரும்படி செய்பவனும் அவனேதான். மனதை தன்னில் லயிக்கும்படி செய்யும் கருணையும் அவனுடையதுதான். அவன் விருப்பபடிதான் அனைத்தும் நடக்கின்றது என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

       

நீள் நிலாமுற்றத்து நின்று இவள் நோக்கினாள்
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள்
நாணுமோ? நன்று நன்று நறையூரர்க்கே.           1659

 

நிலவொளி வீசும் உயரமான நிலாமுற்றத்தில் நின்று கொண்டு, வாரீர்! திருக்கண்ணபுரம் கோயிலைப் பாரீர் என்று கூறி மற்றவருக்கும் அதைக் காட்டி விவரிக்கிறாள்.  இவளைத் தலைவனுடன் இணைத்து வைக்கும் சக்தியுள்ள பாணரே இவளாக இருக்கும்போது இனி இவள் வெட்கப்பட்டு மீளக் கூடுமோ? இவளை இப்படியாக்கிய திருநறையூர் நம்பியின் செயல் நன்றாகத் தான் உள்ளதா? என்று பொருள்பட அமைந்துள்ளது.

இப்பரகாலநாயகியை மனுஷ்ய ஸஞ்சாரமில்லாத ஓரிடத்திலே கொண்டுபோய்‌ வைத்தால்‌ திருக்கண்ணபுரப் பெருமானிடத்து இவளுக்குண்டான அபிநிவேசம்‌ ஒருவாறு தணியக்கூடும்‌ என்றெண்னித்‌ திருத்தாயார் இவளை ஒரு உயர்ந்த மாடமாளிகையிலே கொண்டு வைத்தாள்‌. அவ்விடமே நீணிலாமுற்றம்‌ எனப்படுகின்றது. உன்னதமாயும்‌ நிலாவோடு கூடினதாயிருக்கிற முற்றம்‌ என்‌றபடி. அவ்விடத்தில்‌ நின்று‌ கொண்டு திருக்கண்ணாபுரத்தை நோக்கினாள்.

        மனிதர்களே இல்லாத இடத்தில் இவளை வைத்தால் பகவான் மீது கொண்ட பித்து குறையும் என்றெண்ணி நிலா முற்றத்தில் அவளை வைக்கிறாள். ஆனால் இவளோ அங்குச் சென்று ‘அதோ கண்ணபுரம்’ என்று அரற்றுகிறாள் என்று திருத்தாயார் புலம்புகிறாள். நாயகியின் தயக்கங்களைப் போக்கி நாயகனுடன் சேர்த்து வைப்பவன் பாணன் எனப்படுவான். பரக்கால நாயகியின் உள்ளிருக்கும் சக்தி பகவானுடன் இணைய முடிவெடுத்து பகவானுடன் சமர்ப்பணம் செய்து விட்டாள். பிறகு அவள் அதிலிருந்து மீள முடியாது. கண்ணபுர சௌரிராஜனை நினைக்கும்போது திருநறையூர் நம்பியையும் நினைத்து வாடுகிறாள். மகளை வருத்தும் இச்செயல் சரிதானா? என்று கேட்பது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது.

 

 அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ?       1660     

 

அருவிகள் நிறைந்த திருவேங்கடம் அவனிடம், இல்லை இல்லை திருநீர்மலை என்றும் பிதற்றுகிறாள். திருமெய்யப் பெருமானைப் பற்றி விசாரித்து வருகின்றாள்.  பெருமை பெற்ற கண்ணபுர சௌரிராஜனைப் பற்றிப் பேசும்போது உருகிப் போகிறாள்.  சரீரம் மட்டுமின்றி அவளது உள்ளமும் பலவீனமாயின. இப்படியொரு நிலையும் ஏற்படுமா என்று புலம்பித்  தவிக்கிறாள் தாயார்.

பரகால நாயகியை நோக்கி நான் ஏதேனும் சொன்னால் அதனை அவள் செவி ஏற்பதில்லை. அதற்கு அவள் யாதொரு மறுமொழியும் கூறுவதும் இல்லை. திருவேங்கடம், திருநீர்மலை என்று சதா வாய் வெருவிக் கொண்டு நிற்கின்றாள். சில சமயங்களில் திருமெய்யம் என்ற திவ்விய தேசம் ஒன்று இருக்கின்றதே. அதற்கு மெய்யம் என்ற பெயர் வந்ததற்குக் காரணம் என்ன? அடியவர்க்கு மெய்யாகவே நின்று செயல் புரிந்த இடம் என்ற காரணத்திற்காகவா?’ என்று அருகிலுள்ளவர்களை வினவுகின்றாள் என்பதாகத் திருத்தாயார் பேசுகின்றார்.

        பகவானிடம் அன்பு தோன்றிவிட்டால் சரீரம், மனம், புத்தி இவை எல்லாமே வேறுபட்டதாகிவிடும். ஏனெனில் ஆன்மா என்பது சரீரமோ, மனமோ, புத்தியோ இல்லை. அது ஆண்டவனின் ஒளிக்கூறு.  ஆண்டவனுடன் ஐக்கியமாகும்போது அழியக்கூடிய சரீரத்தைப் பற்றியோ, நிலையில்லாத மனதைப் பற்றியோ அது கவலை கொள்வதில்லை. பகவானிடம் அன்பு மேலோங்கும்போது மற்றவை எவையும் சிந்தனையில் வராது என்பது இப்பாசுரக் கருத்தாகும்.  

       

உண்ணும் நாள் இல்லை உறக்கமும் தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான்
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார்க் கடல்
வண்ணர்மேல் எண்ணம் இவட்கு இது என்கொலோ?       1661

 

என் மகளானவள் சரியாக உண்பதில்லை, கண்ணுறங்குவதுமில்லை. நன்றாக முதிர்ந்த பெண்மை பருவம் அடைந்தவளில்லை. பேதைப் பெண்ணாகவும், ஏதும் அறியாதவளாகவும்  இருக்கிறாள். என்றும் கண்ணபுரத்து சௌரிராஜனை சேவித்த வண்ணம் உள்ளாள். இவள் சிந்தனையெல்லாம் கடல் வண்ணம் கொண்ட அவன் மீதே பித்தாய் அலைகிறது. இது என்ன விந்தை? என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

இவள் ஒருநாளும் உண்பதில்லை உறங்குவதுமில்லை நன்றாக முதிர்ந்த பெண்மை பருவமுடையவள் அல்லள். இளம் பெண்தான். கண்ணனின் ஊராகிய கண்ணபுரம் தொழுகிறாள். இவளுடைய எண்ணம் எல்லாம் கருத்த கடல் போன்ற நிறத்தை உடைய பெருமான் மேல் தான். இது என்ன ஆச்சரியம்! என்கிறாள் திருத்தாயார்.

        ஒருவருக்கு ஆத்மாவை அறியும் தகுதி வரும்போது பகவானேஅவனுக்குக் குருவாகக வந்து ஆட்கொள்கிறான். இந்நிலையில் பக்தர்களின் போக்கு மற்றவர்களின் கண்களுக்கு விந்தையாகத்தான் தோன்றும். பகவானிடம் லயித்தவர்களைப்பார்க்கும்போது லௌகிகத்தில் மூழ்கியிருக்கும் மனிதர்கள் அவர்களை விந்தையான கண்ணோட்டத்துடன் நோக்குவார்கள். பரக்கால நாயகியின் தாயாரும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது தெளிவாகிறது.

       

கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என்? தன்னுடை உண்மை உரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே.        1662

 

சௌரிராஜப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணபுரத்தை நோக்கி வணங்கும் இப்பெண் பெண்மைப் பண்பு மறந்து தனது நிலையினைத் தானே எடுத்துரைக்கிறாள். அவன் வெண்ணெய் திருடித் தாம்புக் கயிற்றால் கட்டுண்டவன் என்று யாராவது ஏளனம் செய்தால அதைக் கேட்டு அவள் முகம் பூரித்து அவளது சரீரம் பசலை பெற்றுப் பொன்னிறமாக மாறி மங்கி விடுகிறது என்ற பொருளில் அமைந்துள்ளது.

        உலகத்தின் கண்களுக்குக் கண்ணன்  வெண்ணெய் திருடி அதனால் கட்டுண்டு தண்டனை பெற்றான் என்றுள்ளது. அனால் பரக்கால நாயகிக்கோ இச்செயல் மகிழ்ச்சியும் பூரிப்பும் கொள்ளுமாறு அமைகிறது.  தனது உயிர்த்தோழியிடமும் மறைக்கும் விஷயத்தை என்னிடம் கூசாமல் நேரடியாக வாய்விட்டுச் சொல்கிறாளே. இவளது பெண்மை என்னவோ? என்கிறாள். உலகளந்த உத்தமன், அசுரர்களை வதம் செய்தவன், பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக விளங்கியவன் யசோதையின் அன்புக்கு கட்டுப்பட்டு தாம்புக் கயிறினால் கட்டுண்டான் என்பதாகப் பொருள் அமைகிறது. 

       

வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என் கண் துயில் இன்று இவர் கொள்ளவே?       1663

 

இன்று வடக்கில் உள்ள திருவேங்கட  மலையிலிருந்து புறப்பட்டுத் திருக்கண்ணபுரத்தை அடைந்திருக்கும் சௌரிராஜப் பெருமான் நான்தான் என்று பிதற்றுகிறாள். இந்தப் பெருமாள் இவளை இப்படிப் புலம்ப வைத்து, இவளது உறக்கத்தை பறித்துக் கொண்டதால் பகைமைக் குணம் கொண்ட இவள் எந்த விதத்தில் கடமைபட்டுள்ளாள் என்று கேட்பது போல் அமைந்துள்ளது.

இப்பாசுரத்தில் ஆழ்வார் பரக்கால நாயகியாய் மாறித் தான் இறைவனிடம் கொண்ட காதலின் மாட்சிமையை எடுத்துக் கூறுகிறார். இறைவனுடன் இணைதல், சமுதாய மக்களை நல்வழிப்படுத்துதல் போன்றவைகளை பாசுரங்களாக்கி அவை நாட்டுப்புறப்பாணியில் நமக்கு வழங்கியிருப்பது மக்கள் நன்மையைப் பயக்கிறது. மேலும் தலைவி தலைவன் காதல் நிலையில் அமைந்த பனுவல்களை நோக்கும்பொழுது, அப்பாடல் அந்தத் திணைக்கு ஏற்றாற்போலக் காதலன் காதலி இணைப்பைப் பற்றிப் பேசுகின்றது.

பரக்கால நாயகி இப்பாசுரத்தில் பெருமானோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டாள். மடப்பமென்னும் குணத்தை உடைய என் சிறுமியாகிய இவள் இப்படி இருக்கிறாளே என்று தாயார் புலம்புகிறாள். திருவாய்பாடிப் பெண்கள் தன்னை கண்ணனாக நினைத்துத் தமது இல்லங்களை விட்டு யமுனை நதியினை அடைந்து தானே கண்ணன் என்றெண்ணி காளிங்கனுடன் போர் புரிய யத்தனிக்கிறாள். இது போன்று நம்மாழ்வாரும் ‘கடல்ஞானம் செய்தேனும் யானே என்னும்’ என்று தன்னை பெருமானாகப் பாவித்துக் கொண்டுள்ளார். அந்த நிலை பரக்கால நாயகிக்கும் ஏற்பட்டுள்ளது.

       

தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
இரங்குமோ? எத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு உகந்தான் அது தொன்மை ஊர்
அரங்கமே என்பது இவள் தனக்கு ஆசையே.        1664

 

அலைகளையுடைய சமுத்திரம் இரைந்தாலும், குளிர்ச்சி மிக்க சந்திரன் வருந்தினாலும் எனக்கு என்ன வந்தது.  என் மகள் நெடுங்காலமாக இத்தகையப் படுத்தலுக்கு ஆளாகிவிட்டாள். இப்படி எத்தனை நாளாகக் துன்பம் கொள்கிறாளோ? குதிரை வடிவில் வந்த கேசிகாசுரனை  வதம் செய்து மகிழ்ந்த என் பெருமான் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ளார் என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதே அவளது விருப்பமாகப் போய்விட்டது.

கடல்‌ கோஷித்தலும்,‌ நிலாக்காய்‌தலும்‌ விரஹிகளுக்கு மிக்க இளைப்பை உண்டாக்குமாயினும்‌ அவற்‌றிற்கெல்லாம்‌ இவள்‌ இளைக்கின்றிலள்.  நெடுநாளாக அடிபட்டுக்‌ காய்ப்பேறின வலவனுக்குப்‌ பின்னையும்‌ அடிபடுதல்‌ லக்ஷிமோ? இவள்‌ நெடு நாளாகவே இக்கஷ்டங்களை அனுபவித்‌.து வருகிறாளாகையால்‌ இவை இவளுக்கு ௮லட்சியமாகி விட்டன என்கிறாள் தாயார்.

        ஒவ்வொரு சரீரத்திலும் பரம்பொருள் ஓளி வடிவமாக வியாபித்துள்ளார். அதை உணர்த்தத்தான் இந்தச் சரீரம் நமக்குக் கிட்டியுள்ளது. ஆத்ம தரிசனம் பெற்றபின் இந்த உடம்பு வீண். இந்த உடம்பு மெலிந்து போனால் ஞானிகள் கவலை கொள்வதில்லை. ஆத்மா ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாதது. பரக்கால நாயகியான என் மகள் உலக இன்பங்களில் ஈடுபடாமல் பெருமானையே நினைந்து வாழ்கிறாள் என்று புலம்புகிறாள். பெருமானை அடையும் இலட்சியத்தை எட்ட அவள் தயாராகி விட்டாள். அதற்கான தகுதியையும் பெற்றுவிட்டாள் என்கிறார் ஆழ்வார்.

       

தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ணபுரம் தொழப் போயினாள்
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே.       1665

 

அனைத்து அடியார்களும் உனது திருவடிகளைத் தொழுது உய்வு பெறுவதைக் கண்டு என் மகளும் திருக்கண்ணபுரத்தில் உள்ள  சௌரிராஜப் பெருமானை வணங்கப் போயிருக்கிறாள். கரிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய என் பேதை பெண்ணின் அழகிய மேனி நிறத்தை நீ கொள்ளை கொண்டு இப்படி பசலை உண்டாக்கி அநியாயம் செய்வது தகுதியற்ற செயல் அல்லவா? என்று தாயார் கேட்கிறாள்.

ஆழ்வாரது பாடல்கள் அனைத்தும் பக்தனுக்கும் பெருமானுக்கும் இடையே பாலமாக அமைகிறது. அவரது பாடல்களைப் படிக்கும்போது பெருமானை நேடியாகப் போற்றி பக்தி செய்யும் வகையில் அமைந்திருக்காது. கோயில்களில் அர்ச்சையாக உள்ள உருவத்தில் மூர்த்தியைப் போற்றிப் பரவுவதாக இருக்கும். அவனது வீரதீரத்தையும், அழகையும் எடுத்துக் கூறி கோபியர்களால் அவன் விரும்பப்படுவது போன்று அமைந்திருக்கும்.

        உலக இன்பங்களை ஒதுக்கித் துறவறம் போவது போன்ற ஒரு நிலை என் மகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் மகளோ இதனை அலட்சியம் செய்து பகவானை நோக்கி அடி எடுத்து வைத்தவண்ணம் உள்ளாள். இவள் தலையில் மலர்சூடினால் அதில் உள்ள மதுவைச் சுவைக்க வண்டுகள் அவள் தலையை வட்டமிடும். அந்த வண்டுகளுக்கு அஞ்சி அவள் கோயிலுக்குள் புகுந்திருப்பாளோ? இழந்ததை மீட்டுக் கொடுப்பது அரச குணம். ஆனால் நீரோ என் மகளிடம் உள்ள அழகைப் பறிக்கின்றீரே என்றவாறு துன்பம் கொள்கிறாள்.

       

முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன்
கள் அவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?         1666

 

முப்பத்திரெண்டு பற்களும் இன்னும் முளைக்கவில்லை. அள்ளி முடிக்குமளவு கூந்தலும் வளரவில்லை. தெளிவான சிந்தனையுடையவள் என்றும் சொல்வதற்கில்லை. நான் என் செய்வேன். தேன் மிகுந்த சோலைகளையுடைய திருக்கண்ணபுரத்தைக் கையெடுத்துத் தொழும் பிள்ளையை என் வயிற்றுப் பிள்ளை என்று இனி எண்ணக் கூடுமோ? என்று தாயார் கூறுகிறாள்.

இங்குக் கண்ணனின் பிரிவுத்துயர் அவளை வாட்டினாலும் அவனைப் பற்றிய எண்ணம் எப்பொழுதும் அவளது உள்ளத்தைவிட்டு நீங்காது இருப்பது அவள் அவனிடம் கொண்ட காதலின் மேன்மையைச் சிறப்பித்துக் காட்டுகிறது. இத்தன்மையானது அவளது சிறப்பைக் கூறுகிறது.

        இறைவனிடம் ஏற்படும் ஈர்ப்புக்கு தற்போதைய வயதை வைத்துத் தீர்மானிப்பது அறியாமையாகும். பல பிறவிகளில் ஏற்படும் முதிர்ச்சியே ஒருவரை பக்குவப்படுத்திப் பகவானிடம் தீவிர பக்தி ஏற்படுமாறு செய்கிறது. பரக்கால நாயகி மகளாக இருக்கலாம். அவளது தாய் வயதும் அன்பவமும் கொண்டவளாக இருக்கலாம். ஆனால் இவ்விருவரில் யார் பல பிறவிகள் எடுத்தவர் என்று பகவானுக்குத் தான் தெரியும். இத்தகைய தெளிவு நமக்கு வர வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

 

       

 கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளை
பார் மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே.       1667

 

கார்முகில்கள் நிறைந்து காணப்படும் திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் சௌரிராஜப் பெருமானைப் பற்றி இவ்வுலகில் புகழ் பெற்ற, பகவத் குணங்கள் நிறைந்த திருமங்கையின் அரசன் பரகாலன் இயற்றிய இப்பத்துப் பாடல்களையும் பக்தியுடன் பாடவல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வையகத்தில் நீண்ட காலம் நிலைநிற்கப் பெறுவார்கள் என்கிறார் ஆழ்வார்.

        பரக்கால நாயகி பகவானின் நினைவுகளால் அவள் கை வளை கழலும் வரை உடல் மெலிந்து போனாள். கேசி என்ற அசுரனின் வாய்பிளந்த பகவான் திருவரங்கத்தில் உள்ளார் என்று சொல்லியவண்ணம் உள்ளாள். இத்தகைய தெய்வீக நிலையை அறிந்து கொள்ளாத தாயார் என் மகளை இவ்விதம் அலைகழிப்பது முறைதானோ என்று பகவானைப் பார்த்துக் கேட்கிறாள். பரக்கால நாயகியானவள் உண்மைப் பரம்பொருளை நாடினாள். இத்தகைய ஞான நிலையினை நாமும் பெற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடைபெயர
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே.       1668

 

முழங்குகின்ற வளைந்த சங்குகளையும், கனமான முற்றிய பவழக் கொடிகளையும், காவிரி நதியின் அலைகள் அடித்துக் கொண்டு வரப்பெற்ற நீர் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் குடியிருப்பவனும், பரிமளம் மிகுந்த துளசி மாலையை அணிந்து மிடுக்கையுடையதாய் மலை போன்ற திருத்தோள்களை புடைக்குமாறு கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்தவனுமான என் பெருமானிடம் மையல் கொண்டு என் அழகிய வளைகளை இழந்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

        பண்டு இந்திரனால்‌ இடையர்க்கும்‌ இடைச்சியர்க்கும்‌ ஆநிரைகட்கும்‌ நேர்ந்த பெருமழைத் துன்பத்தை மலைக்குடை எடுத்து நீக்கின ஆத்ம பந்துவன்றோ. ௮து என்றைக்கோ நடந்தது என்று நினைக்க வேண்டாதபடி இன்றைக்கும் அப்படிப்பட்ட திருக்குணங்களை விளங்கக்காட்டிக்‌ கொண்டு திருக்கண்ணபுரத்தில் நித்யசந்நிதி‌ பண்ணியிருக்கின்றானன்றோ‌? இப்படிப்பட்ட பெருமான் நம்மைக் கைவிடமாட்டானென்று நாம் விச்வசித்து அவன் பக்கலிலே ஆசை வைத்ததற்குப் பலன் வளையிழக்கலாயிற்றே! என வருந்துகிறாள் பரக்கால நாயகி.

கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்துப் பசுக்களையும் மக்களையும் காத்தருளிய பெருமான் என்னையும் இது போன்றே காப்பான். தன் அடியவர்களான மக்களைக் காக்க வேண்டும் என்ற அத்தகைய கல்யாணகுணமானது அன்று போல் இன்றும் பெருமானுக்கு உள்ளது. அத்தகையவன் காவிரி பெருகும்போது சங்கும் பவழக்கொடியும் ஒருங்கே அலைகளினால் திரட்டிக் கொண்டு வருகின்ற இடமான திருக்கண்ணபுரத்தில் வாசம் செய்கிறான். உலகப் பற்றிலிருந்து விடுபட்டுத் தன்னை பகவான் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தலைவியின் எண்ணமாகும்.

       

அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்து உறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன் என் கன வளையே.      1669

 

சந்திரன் உலவும் கரியநிற மேகக் கூட்டங்களாலும், அகில் புகையாலும், மலையோடு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதவாறு மாளிகைகளையுடைய திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் வரிகொண்டு அரவத்தில் பள்ளி கொண்டிருக்கும், மதநீர் கொண்ட சிறிய கண்களை உடைய குரூரமான குவலயாபீடம் என்னும் யானை மிரளுமாறு அதன் தந்தத்தை உடைத்து அதை அழித்த பெருமானிடம் காதலாகி என் தங்க வளையல்களை நழுவ விட்டேன் என்கிறார் ஆழ்வார்.

கறுத்த மேக கூட்டங்களாலும் அகில் புகைகளாலும் மலைகளுக்கும் மணிமயமான மாளிகைகளுக்கும் வித்தியாசம் பார்க்க முடியாத திருக்கண்ணபுரத்தில் இருக்கும், வரியுடைய ஆதிசேஷன்  மீது துயின்ற மழைபோல் பெருகும் மதஜலத்தையுடைய சீறிய கோபப் பார்வையுடைய குவலயாபீட யானை அஞ்சும்படி அதன் தந்தத்தை முறித்த பெருமானுக்கு எனது அழகிய கனமான வளையல்களை  இழந்தேன் என்கிறாள்.

        பெண்களுக்குப் பொன் ஆபரணங்கள்மீது விருப்பம் அதிகம். பகவானின் பெருமைகளை நினைத்து அந்தத் தங்க வளையல்களைக் கைவிட்டேன் என்பது பொருளாகும். எம்பெருமானிடம் பக்தி வந்தால் தங்கமும் தகரமாகும். யானையின் தந்தத்தை முறித்தது போன்று உலக ஆசைகளெல்லாம் பகவான் நீக்கித் தன்னிடம் ஐக்கியப்படுத்திக் கொள்வான் என்பது இதன் பொருளாகும்.

       

 துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
பைங் கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்து உகந்த
செங் கண் மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே.       1670

 

சிறந்த இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாட மாளிகையின் உச்சியில் பாதுகாப்பிற்காக நடப்பட்டிருக்கும் சூலம் சந்திரனையும், பெரிய மேகங்களையும் கிழித்துத் துண்டிக்கும்படி இருக்கும் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான், காளைகளை அடக்கி நப்பின்னையை மணம் புரிந்தது போல், சந்திரனின் நோயைக் குணமாக்கியது போல், என் காதல் நோயைத் தீர்த்து வைப்பான் என்று ஏமாற்றமடைந்து மெலிந்து என் கை வளைகளை பறிகொடுத்தேன் என்கிறார் ஆழ்வார்.

நப்பின்னைப்‌ பிராட்டியைப்‌ அணைவதற்கு விரோதியாயிருக்க விருஷபங்கள்  ஏழையும்‌ வலியடக்கி அவளை மணந்துகொண்ட பெருமானன்றோ, சந்திரனுடைய க்ஷயரோகத்தைப்‌ போக்கி அவனை அனுக்கிரஹித்த பெருமானன்ரோ; இன்னமும்‌ இங்ஙனே அனுக்கிரகம் செய்தருள்வதற்கு‌ திருக்கண்‌ணபுரத்தில்‌ நித்யஸந்நிதி பண்ணியிருக்குமவனன்‌றோ நப்பின்னைப்‌ பிராட்டியைப்‌ போலே நம்மையும்‌ மணந்து கொள்வானென்றும்,‌ சந்திரனுடைய துயரைத்‌ தீர்த்தாற்போலே நம்முடைய துயரையும் தீர்ப்பானென்றும்‌ கருதி அப்பெருமான்‌ திறத்தில்‌ காதல் கொண்டதற்குப்‌ பலன்‌ வளையிழக்கலாயிற்றே! என்று வருந்திக் கூறுகிறாள்.

        தலைவியானவள் பகவான் தன்னை இன்னும் ஆட்கொள்ளவில்லையே என்று வருந்துகிறாள். என்னை ஏற்பார் என்று நம்பிக்கையோடு இருந்தேன் என்கிறார். பகவான் நம்பியவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. தலைவியின் பக்தி நிலையைப் பெற்று ஆத்ம ஐக்கியத்திற்கு நாம் தகுதியுடையவர்களாக மாற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின்
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே.         1671

 

சிறந்த இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாட மாளிகையின் உச்சியில் பாதுகாப்பிற்காக நடப்பட்டிருக்கும் சூலம் சந்திரனையும், பெரிய மேகங்களையும் கிழித்துத் துண்டிக்கும்படி இருக்கும் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான், காளைகளை அடக்கி நப்பின்னையை மணம் புரிந்தது போல், சந்திரனின் நோயைக் குணமாக்கியது போல், என் காதல் நோயைத் தீர்த்து வைப்பான் என்று ஏமாற்றமடைந்து மெலிந்து என் கை வளைகளை பறிகொடுத்தேன் என்கிறார் ஆழ்வார்.

நப்பின்னைப்‌ பிராட்டியைப்‌ அணைவதற்கு விரோதியாயிருக்க விருஷபங்கள்  ஏழையும்‌ வலியடக்கி அவளை மணந்துகொண்ட பெருமானன்றோ, சந்திரனுடைய க்ஷயரோகத்தைப்‌ போக்கி அவனை அனுக்கிரஹித்த பெருமானன்ரோ; இன்னமும்‌ இங்ஙனே அனுக்கிரகம் செய்தருள்வதற்கு‌ திருக்கண்‌ணபுரத்தில்‌ நித்யஸந்நிதி பண்ணியிருக்குமவனன்‌றோ நப்பின்னைப்‌ பிராட்டியைப்‌ போலே நம்மையும்‌ மணந்து கொள்வானென்றும்,‌ சந்திரனுடைய துயரைத்‌ தீர்த்தாற்போலே நம்முடைய துயரையும் தீர்ப்பானென்றும்‌ கருதி அப்பெருமான்‌ திறத்தில்‌ காதல் கொண்டதற்குப்‌ பலன்‌ வளையிழக்கலாயிற்றே! என்று வருந்திக் கூறுகிறாள்.

        தலைவியானவள் பகவான் தன்னை இன்னும் ஆட்கொள்ளவில்லையே என்று வருந்துகிறாள். என்னை ஏற்பார் என்று நம்பிக்கையோடு இருந்தேன் என்கிறார். பகவான் நம்பியவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. தலைவியின் பக்தி நிலையைப் பெற்று ஆத்ம ஐக்கியத்திற்கு நாம் தகுதியுடையவர்களாக மாற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

 

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே.        1672

 

வேதியர்கள் மந்திரங்களை உரக்க உச்சரித்தும், ஹோமங்களை நன்கு வளர்த்து குறைவின்றி செய்து, வேதங்களை நீடிக்க வைக்கும் திருகண்ணபுரத்தில் கொலுவிருப்பவனும், தாயான யசோதை கையிலெடுத்த  சிறு கோலுக்கு அஞ்சி ஓடித் தயிருண்ட வாயைத் துடைத்துக் கொண்டவனுமான கண்ணனிடம் மையல் கொண்டு மெலிந்ததால் என் வளையல்களை நழுவ விட்டேன் என்ற பொருளில் அமைகிறது.

வேதமந்திரங்களைக்‌ கொண்டு அந்தணர்கள்‌ அக்னி காரியங்கள்‌ செய்து வேத மரியாதையை நடத்திப் போகும்படியான திருக்கண்ணபுரத்தில்‌ எழுந்தருளியிருப்பவனும்‌, முன்பு கிருஷ்ணாவதாரத்தில்‌ தான்‌ செய்த தீம்புகட்‌குச்‌ சீற்றங்கொண்ட யசோதைப்‌ பிராட்டி அடிப்பதற்காகக்‌ கையிற்‌ கோலையெடுக்க, அதற்கு அஞ்சி ஓடுபவர்கள் எதிர்ப்படுமவர்கள்‌ வாயில்‌ தயிருண்ட சுவடு இருப்‌பதைக்‌ காட்டி, "நீ தயிர்‌ களவு கண்டாயன்றோ' என்பார்களேயென்று அதை மறைக்க வேண்டி அத்தயிர்ச்சுவடுதன்னைச்‌ துடைக்கப்‌ புகுந்த தயிரை முகம்‌ முழுதும்‌ தடவிக்கொண்ட பெருமானுடைய ௮க்குணத்திலே ஈடுபட்டு வளையிழந்தேனென்றாள்.

        உலகங்களையெல்லாம் படைத்து பிரளய காலத்தில் உலகங்களை உண்டு பின்பு உமிழ்ந்தவன்.  யசோதையின் கோலுக்கு அன்புக்காக கட்டுப்பட்டு பயந்தவன் போல் நடித்தான். தாயன்புக்கு அவன் கொடுத்த மரியாதை கலந்த பயம் அது எனலாம்.  அத்தகைய பெருமை கொண்ட பெருமான் என்னை ஆட்கொண்டார் என்றெண்ணி என் மனம் உருகி மெலிந்து போய் கை வளைகளை நழுவ விட்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

       

மடல் எடுத்த நெடுந் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே.       1673

 

நீண்ட மடல்கள் கொண்ட தாழம்பூ செடிகளின் பக்கங்களில் எல்லாம்  வளர்கின்ற பவழக் கொடிகள் மேடுகளில் படர்ந்து பிரகாசிக்கும் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும், முன்பு இரணியனோடு யுத்தம் செய்கையில் அவன் அகந்தை அழியுமாறு நெருக்கி நகங்களால் அவன் சரீரத்தைப் பிளந்த நரசிம்மரிடம் மையல் கொண்டு மெலிந்து என் பிரகாசமான வளையல்களை நழுவிட்டேன் என்று தலைவி பாடுவது போன்ற பொருளில் அமைந்துள்ளது.

பரமபக்தனானப்‌ ப்ரஹ்லாதாழ்வானிடத்துள்ள வாத்ஸல்யத்தினால்‌ அவனுடைய விரோதியான இரணியனைப்‌ பிளந்தொழித்த பெருமானன்றோ; ஆச்ரிதர்களை இப்படி பரிந்து காத்தருள்பவனன்றோ; இதற்காகவேயன்றோ திருக்கண்ணபுரத்தில்‌ நித்திய சந்நிதி பண்ணி எழுந்தருளியிருப்பது என்று ஈடுபட்ட நான் ப்ரஹ்லாதனைப்‌ போலே பரமக்ருபைக்குப்‌ பாத்திரமாக எனது‌ வளையிழந்தேன்‌ காண்மின்‌ என்கிறாள்‌.

        நரசிம்ம அவதாரமெடுத்து அசுரனை வதம் செய்தது போல் என்னிடம் உள்ள அறியாமையை பகவான் அழித்து என்னை அவருடன் ஐக்கியப்படுத்திக் கொள்வார் என்ற ஆவலில் நான் மெலிந்து போனேன். கை வளையல்களை நழுவ விட்டேன் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது. பகவானின் வீரமிக்கச் செயல்கள், அசுரர்களை அழித்தது ஆகியவற்றை தெய்வீக கண்ணோட்டத்தில் காண வேண்டும்.  நமக்குள் இருக்கும் அசுர குணங்களை அழிக்கும் ஆற்றல் கொண்டவர் பகவான் என் மனநிலையினைக் கொள்ள வேண்டும்.

       

வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே.          1674

 

வண்டுகள் படிந்திருக்கும் புன்னை மரங்களில் பூத்திருக்கும் மலர்களும், அம்மர நிழலில் முத்துக்களை கரை சேர்க்கும் நிகழ்வும் கொண்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் எட்டு திசைகளையும், ஏழு கடல்களையும், மண்ணுலகையும், விண்ணுலகையும், பரந்த ஆகாயத்தையும் பிரளய காலத்தில் உண்டுமிழ்ந்தான். அவன்மீது ஆசை கொண்டு மெலிந்து என் வளையல்களை நழுவவிட்டேன் என்கிறாள் தலைவி.

ஸகல பதார்த்தங்களையும்‌ பிரளயம்‌ கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தருள்பவனன்‌றோ மீண்டும்‌ ௮வற்றை வெளியிட்டருள்பவனன்றோ; இப்படி ஆபத்துக்கு உதவுமவன்‌ என்று நம்பி ஆசைவைத்துக்‌ கெட்டேனென்கிறாள்.

        ஸகல வஸ்துக்களையும் பிரளய காலத்தில்  திருவயிற்றில் வைத்துக் காப்பான் என்றும், ஆபத்தில் உதவுவான் என்றெண்ணி ஆசை வைத்தேன். இப்போது கைவளை நழுவி நிற்கிறேன் என்கிறாள். மண்ணுலகில் அழியும் பொருட்களை நாடி அலைந்து நம் பிறவியை வீணாக விரயம் செய்து கொண்டிருக்கும் இம்மக்களுக்காகத் தலைவியின் இந்தத் தெய்வீக நிலையை ஆழ்வார் எடுத்துரைக்கிறார். சிற்றினபம், பட்டம், பதவி, பொருட்கள், சுகம் போன்றவற்றை மனதில் எண்ணாமல் பகவானின் சிந்தனையில் இருத்தல் வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

கொங்கு மலி கருங் குவளை கண் ஆகத் தெண் கயங்கள்
செங் கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும்
வங்கம் மலி தடங் கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமலநாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே.          1675

 

தேன் நிறைந்த அழகிய கருங்குவளை மலர்களைக் கண்களாகவும், மலர்ந்த செந்தாமரையை முகங்களாகவும் கொண்டுள்ள நீர் தெளிந்த தடாகங்கள் நிறைந்த திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும், அலை வீசும் பாற்கடலில் அரவின்மேல் அரிதுயில் கொள்ளும், செந்தாமரை வளர்ந்த நாபியை உடைய பெருமான் மேல் ஆசை கொண்டு மெலிந்து என் இறுகலான வளையை பறிகொடுத்தேன் என்று தலைவி கூறுகிறாள்.

ஆர்த்தியுடையாருடைய கூக்குரல்‌ கேட்டுக்‌ கடுகவெழுந்து வந்து காத்தருள்வதற்காகவன்றோ திருப்பாற்கடலில்‌ திருவனந்தாழ்வான் மீது சயனித்திருப்பது; உலகங்களை உண்டாக்கின செங்கமல மலரைச்‌ திருநாபியிலுடையவனன்றோ; இப்படி உலகங்களையெல்லாம்‌ படைத்துக்‌ காத்தருளும்‌ பெருமான்‌ நம்மையா கைவிடப்‌ போகிறான்று நம்பி ஆசை வைத்து வளையிழக்கையைப் பலனாகப்‌ பெற்றேன் என்கிறாள்.

        உலகங்களையெல்லாம படைத்து காத்தவன் நம்மையா கைவிடப் போகிறான் என்று நம்பி ஆசை வைத்த நான் வளையிழப்பைதான் பலனாகப் பெற்றேன் என்று ஏங்குகிறாள். ஆழ்வார் நஞ்சுகொண்ட ஐந்து தலை பாம்பினை ஐம்புலன்களாகப் பாவிக்கிறார். இப்புலன்களின் கட்டுக்கடங்காத செயல்களினால் பல துன்பங்கள் ஏற்படுகின்றன. பாம்பினை படுக்கையாக கொண்ட பெருமான் அதை தன்வசம் வைத்து அடக்கி தனக்கு குடையாக பிடிக்கும்படி செய்கிறார். அதுபோன்ற என் ஐம்புலன்களையும் அடக்கி என்னை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டான் என்று தலைவி கூறுகிறாள். 

       

வார் ஆளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப் பாவை
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு அணைமேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே.        1676

 

கச்சினால் தாங்கப்படும் இளமைமிக்க தனங்களையும், நெடிய மூங்கில் போன்ற தோள்களையும் கொண்ட மடமை குணமுடைய பரக்கால நாயகி, மகாலட்சுமி வாழும் மலை போன்ற மார்பினை உடைய திருக்கண்ணபுரத்தில் திருக்கோயில் கொண்ட பெருமை பொருந்திய சௌரிராஜப் பெருமானை, ஆயிரம் நாமங்களைக் கொண்ட, ஆயிரம் வாய் படைத்த அனந்தாழ்வானின் மேல் கண் வளர்ந்தருளும் நாராயணனை விரும்பி மையல் கொண்டு இளைத்ததால் என் கைவளையை இழந்தேன் என்று கூறுகிறாள்.

கச்சணிந்த இருதனத் தடங்களையுடையளாய்‌ நெடிய பணைபோலே நேர்கின்ற திருத்தோள்களை யுடையளாய்‌ ஆத்ம குணங்களால்‌ நிறைந்தவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி நித்யவாஸம்‌ பண்ணப்‌ பெறுகையாலே செல்வமிக்க மலை போன்றதான திருமார்பையுடையவனும், ஸஹஸ்‌ர நாமங்களாலும்‌ பிரதிபாதிக்கப்படும்‌. திவ்யகுண சேஷ்டிதங்களையுடையவனும்‌, நித்யானுபவத்தால் ஆயிரமுகமாகப் பெருகின பலவாய்களையுடையவனான திருவனந்தாழ்வான் மீது சயனித்தருள்பவனும், பெருமையுடையாரென்று புகழ்பெற்றார் எல்லாரைக் காட்டிலும் பெருமை பொருந்தியவனுமான எம்பெருமான் தன் பெருமைக்குப் பொருந்தாமல் என் கைவளைகளை கவரந்தான் என்று கூறுகிறாள்.

        பகவானின் சகஸ்ரநாமத்தை உச்சரிப்பது மிகப் பெரிய தவத்திற்கு ஒப்பானது.  அதனை உச்சரித்து நாம் அடைய வேண்டிய லட்சியத்தை இக்கலியுகத்தில் எளிதில் அடையலாம். இதன் மகாத்மியத்தை ஆழ்வார் அருள்கிறார். இதனை எண்ணி நாராயணனிடம் மையல் கொண்டு கைவளையல்களை நழுவ விட்டேன் என்று தலைவி கூறுகிறாள். கைவளை என்பது உலகப் பந்தங்கள் என்ற பொருளில் கொள்ளலாம்.  நிலையற்ற பந்தங்களை விட்டு நிலையான வாழ்வினைப் பெறுமாறு ஆழ்வார் கூறுகிறார்.

       

தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ் மாலை
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே.         1677

 

தேன் நிறைந்த மலர்வனங்கள் சூழ்ந்துள்ள திருக்கண்ணபுரத்தில் வாழும்  வாமன அவதாரம் எடுத்த சௌரிராஜப் பெருமானைப் பற்றி கடல் சூழ்ந்த வயல் வளங்களையுடைய திருவாலி நாட்டின் தலைவன், போற்றத்தக்க குணங்கள் கொண்ட கலியன் ஆராய்ந்து பாடிய இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தினையும் பாடக்கூடியவர்களின் பாவங்கள் அழிந்து போகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        இதுவரை ஆழ்வாரால் பாடப்பெற்ற பாசுரங்கள்  உலக பந்தத்தைத் துறந்து நம் அனைவரையும் தெய்வீக பந்தத்தில் சேர்ப்பதற்காகப் பாடப் பெற்றவைகளாகும்.  மக்கள் அனைவரையும் தெய்வீக பந்தத்தில் சேர்ப்பதற்காக இப்பத்து பாசுரங்களை ஆழ்வார் பாடியுள்ளதை நாம் மனதில் கொண்டு அவர்வழியில் நம் வாழ்க்கைப் பாதையைத் தொடர வேண்டும்.  பெருமானின் வீரதீரச் செயல்களையும், பெருமைகளையும் நினைக்க நினைக்க அவனை அடைவதற்கான ஒரு வைராக்கிய நெஞ்சம் வரும்.  நிலையற்ற பொருட்கள் மீதும், பாசங்கள் மீதும் பற்றில்லாமல் போகும். இதனைப் பக்தியுடன் பாடினாலே பாவங்கள் அழிந்து போகும். உள்ளத்து ஒளியாக பிரகாசிக்கும் ஆத்ம ஒளியைத் தூண்டினால் நமக்குள்ளிருக்கும் எல்லா குறைகளும் ஓடி ஒளியும் என்றவாறு பொருள் அமைகிறது.

       

விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
வண்ண நறுந் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ .          1678

 

மரக்கிளைகளில் தேனுக்காக அலையும் கோத்தும்பியே! நித்யசூரிகளின் தலைவனும், திருமகளை மார்பில் கொண்டவன், மண்ணுலகத்தவரெல்லாம் வணங்கும் நிறைந்த கீர்த்தியுடைய திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சௌரிராஜப் பெருமானின் ஒளியுடைய திருமுடி மீதுள்ள அழகிய நறுமுணமுள்ள துளசி மாலையை முகர்ந்து வந்து என் தலையில் ஊதி என் விரகதாபத்தை தீர்ப்பாயாக என்ற பொருளில் அமைகிறது.

நித்ய சூரிகளுக்கெல்லாம் நிர்வாஹனாயிருக்கிற பெருமான் அவன் என்று உனக்குத் தெரியுமே. அவனிடத்தில் நாம் அணுக முடியுமோ வென்று நினையாதே, அவன் திருமார்வன்; புருஷகார பூதையாய் காருண்ய ரூபியான பிராட்டியைத் திருமார்பிலே கொண்டவனாதலால் கூசாமல் சென்று புகலாம்; விண்ணவர் தங்கள் பெருமானிடத்தே நான் சென்றால் மீண்டுவர முடியாதேயென்கிறாயோ? அங்குச் செல்லவேண்டா; லீலாவிபூதியிலுள்ளார் எல்லாரும் எளிதாக வணங்கும்படி நிற்பவன்; ‘பரத்வ நிலைமையை விட்டு இப்படி ஸுலபனாவதே!’ என்ற அனைவராலும் கொண்டாடப்பட்டு நிரம்பிய புகழ்பெற்றிருப்பவன்; திருக்கண்ணபுரத்திலே நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறான்; அன்னவனுடைய திருவபிஷேகத்திற் சாத்தியுள்ள திருத்துழாயின் பரிமளத்தை முகந்துகொண்டு இங்கே வந்து ஊது; இது செய்வையாகில் சத்தைப் பெறுவேன்; உனக்கு ஏராளமாக மதுவுண்ணக் கிடைக்கும் என்கிறாள் பரகாலநாயகி.

        பரக்காலநாயகி தும்பியிடம் பேசுவது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது. என் தலையில் சூடிய மலர்கள், நான் வாடியதால் மலராதிருக்கின்றன. நீ வந்து என் தலையைச் சுற்றிவந்தாலும் ஏமார்ந்து செல்வாய். எனவே பகவானின் துளசி மாலையின் வாசம் பெற்று என்மேல் ஊதுவாயாக என்று கூறுகிறாள். இங்கு விரகதாபம் என்று கூறுவது கீழான காம இச்சை என்பது பொருளல்ல. ஆத்ம ஐக்கியமும் விரகதாபமே. இவ்வுலகில் படும் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஞான வேட்கையும் விரகதாபமே. பகவானின் துளசி வாசம் நம் மேல் பட்டால் அந்த விரகதாபம் தீரும் என்று தும்பியிடம் கூறுவது போல் அமைந்துள்ளது.

       

வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்து ஏத்தி
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம் பெருமான்
தாது நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!       1679

 

கோல்தும்பியே! வேதங்களால் பிரதிபலிக்கும் முதல்வன், திருமேனியில் புரிநூலினை அணிந்திருப்பவர்  பகவானது திருப்பாதங்களை நாடி அனைவரும் வணங்கித் துதித்துப் பக்தி செய்யும் திருக்கண்ணபுரத்து சௌரிராஜப் பெருமானின் மணமும், மகரந்தமும் நிறைந்த துளசி மாலையில் படிந்து அதன் வாசனையை உணர்ந்து என்மீது ஊதி, என் மோகதாபம் தீர்ப்பாயாக என்கிறார் ஆழ்வார்.

வேத நாயகன்! பூணூல் அணிந்த திருமார்பன்! தொண்டரெல்லாம் நாடி தொழுது வணங்கும் திருப்பாதங்களின் சொந்தக்காரன்! கண்ணபுரம் வாழும் சௌரிராஜன்!! அவனது மார்பில் வாசனையும் மகரந்தமும் நிறைந்த துளசி மாலை, தும்பீ அரசே! அந்த மாலையில் படிந்து அதன் நறுமணத்தைக் கொணர்ந்து என்மீது ஊதி என் மோகம் தீர்ப்பாயாக!

        ஆழ்வார் பகவானின் பெருமைகளை இப்பாசுரம்வழி  தெரிவிக்கிறார். இருப்பது ஒரு பரம்பொருளே!  அதனை அறிவதே வாழ்வின் பயன். அனைத்து பந்தங்களையும் துறந்துவிட்டு பரம்பொருளை தியானித்து அழியா வாழ்வினைப் பெறுங்கள் என்று வேதம் கூறுகிறது. பெருமானின் துளசி மணமே விரகதாபத்தைத் தீர்த்துவிடும். எனவே தும்பியைத் தூது அனுப்பி அந்தத்துளசி மணத்தைக் கொண்டு வந்து என்மீது ஊதுவாயாக என்று கூறுகிறாள். தெய்வீக மணத்தை நம் மீது பொழியும் சகஸ்ரநாமங்களை ஓதி நம்முடைய நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம் பெருமான்
வண்டு நறுந் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ.      1680

 

கோத்தும்பியே! நீ மலர்ந்திருக்கும் மலர்களிளெல்லாம் திரிந்து சென்று ஒலி எழுப்புகிறாயே! இதனால் உனக்கென்ன இலாபம்? அண்டங்களையெல்லாம் நிர்வகித்து அதன் அதிபதியாய், தேவர்களெல்லாம் தரிசித்து வழிபடும் திருக்கண்ணபுரத்து எம்பெருமானின், வண்டுகள் படிந்து மணம் தரும் திருத்துழாயை முகர்ந்து என்னிடம் வந்து ஊதுவாயாக. உன் பிறவி புனிதமாகும் என்ற பொருளில் அமைந்துள்ளது.

        தும்பியானது பரக்கால நாயகியின் தலையில் மலர்கள் இல்லாததால் வேறு மலர் தேடி செல்கின்றது. மலர் தாவிச் செல்வதால் என்ன பயன்? அதைவிடுத்து கண்ணபுரத்து எம்பெருமானின் திருத்துழாய் மாலையில் உள்ள வாசத்தினை கொண்டு வந்து என்மேல் ஊதுவாயாக என்கிறாள். இது போன்று சூடிக்கொடுத்த சுடர்கொடியாளும், நாச்சியார் திருமொழியில் ‘வண்ணந்திரிவும் மனங்குழைவும்’ என்ற பாசுரத்தில் துளசி பிரசாதத்தை கொணர்ந்து என் தலையில் சூட்டினால்தான் எனது நோய்கள் தீரும் என்கிறாள். கோத்தும்பி, பரக்கால நாயகி போன்ற கற்பனைப் பாத்திரங்களை ஆழ்வார் இப்பாசுரத்தில் கையாண்டு தெய்வீக மணங்கள் எங்கெல்லாம் உண்டோ அவற்றையெல்லாம் நமக்கு ஆழ்வார் எடுத்துரைக்கிறார். 

       

 நீர் மலிகின்றது ஓர் மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம் பெருமான்
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ.        1681

 

தும்பி அரசனே! சமுத்திரத்தில் ஆத்விதீயமான மீன் அவதாரமாகவும், விலக்ஷணமான ஆமை வடிவமாகவும், சீர்மைமிக்க நரசிம்ம அவதாரம் எடுத்தவனும், கார்மேகத்தைக் காட்டிலும் சிறந்த வடிவம் கொண்ட சௌரிராஜப் பெருமானின் குளிர்ச்சியான துளசி மாலையில் உள்ள நறுமணத்தை முகர்ந்து வந்து என்மீது ஊதி எனது மோகத்தைத் தீர்ப்பாயாக என்று பரக்கால நாயகி கூறுகிறாள்.

        பிரளய வெள்ளத்தில் அனைவரையும் காத்தவனான எம்பெருமான் என்னை விரகப் பெருங்கடலில் வீழ்த்தி வருத்துகின்றான். ஆமை உருவெடுத்துத் தேவர்களைக் காத்தவன் எனக்கு ஜோதி வாயமுதமளிக்காது  வஞ்சனை செய்கின்றான். சிம்ம அவதாரமெடுத்து பேரருள் செய்த பெருமான் எனக்கு அருள் செய்யாமல் உள்ளான். நான் விரகத்தால் நிறம் மாறி வெளுத்து வரும்போது தான் சிறிதும் நிறமழியாது காளமேகமாகக் காட்சி தருகிறான். கண்ணபுரத்தில் தன் எளிமையை காட்டியபோதும் இந்தப் பாவி புரிந்து கொள்ளவில்லை.  என்னைத் தவிக்க விட்டுச் சர்வ லக்ஷணங்களுடன் துழாய் மாலை அணிந்து காட்சி அளிக்கிறான்.  அந்தக் கருணை வள்ளல் சூடியுள்ள துளசி மாலையின் நறுமணத்தை எடுத்து வந்து என் மோகத்தை தீர்ப்பாயாக என்கிறாள்.

       

ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
பார் ஆர் உலகம் பரவ பெருங் கடலுள்
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான்
தார் ஆர் நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!        1682

 

கோத்தும்பியே!  நிறத்தினால் மட்டுமே அழகுள்ளதாக இருக்கும் மலர்களிலெல்லாம் ரீங்காரம் செய்வதால் என்ன பேறு பெறுவாய். அதனால் உனக்கு என்ன பயன்? எதுவுமில்லை. இவ்வுலக மக்களெல்லாம் வணங்கித் தொழும் பெரும் சமுத்திரத்தில் பிரம்மாண்டமான ஆமையாக அவதரித்துத் திருக்கண்ணபுரத்து பெருமானின் துளசி மாலையின் நறுமணத்தை உறிஞ்சி வந்து ஊதி என் மோக தாபத்தைத் தீர்ப்பாயாக என்று பரக்கால நாயகி கூறுகிறாள்.

கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடத்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந்துழாய் கொண்டு என்னெறி மென்குழல்மேல் சூட்டீரே” என்று அவனுடைய திருத்துழாய்ப் பிரசாதத்தைக் கொணர்ந்து தன் தலையில் சூட்ட வேணுமென்று அபேக்ஷித்தாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி; இப்பரகால நாயகி அங்ஙனன்றிக்கே துழாயிற்படிந்து வந்து ஊதினாற்போது மென்கிறாள்.

        பலவித மலர்களை அடைந்தாலும் உன் வயிறு நிறையுமா? ஆமை வடிவான பெருமானை நினை. அவனையே நினைத்துருகும் என்னைய் பற்றிச் சற்று யோசி. அவன் அணிந்துள்ள திருத்துழாய் மாலையின் மணத்தினை கொண்டு வருவாயாக என்கிறாள். அழகு என்பது வெளித் தோற்றத்தில் இல்லை. மற்ற உயிர்களுக்குச் செய்யும் நன்மையில் தான் அழகு தோன்றுகிறது.  மற்றவர்களுக்காக வாழ்பவர்கள்தான் உண்மையான அழகுள்ளவர்கள். பிறர் வாழ்வில் உதவி இன்பம் காண்பவர்கள் அழகுள்ளவர்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். 

       

மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
தாரில் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ.    1683

 

கோத்தும்பியே! திருமார்பில் மகாலட்சுயை உடையவன். வலக்கரத்தில் சுதர்சனச் சக்கரத்தை ஏந்தியவன். சிறைபட்ட பூமித்தாயை வராகமாகிப் பெயர்த்தெடுத்த பரந்தாமன், எங்கும் ஒளிமயமாக இருப்பவன், காயாம்பூ போன்ற கருமை நிறத்தவன். இத்தகைய பெருமைகளைக் கொண்டவனின் ஒளி பொருந்திய திருமுடி மேல் உள்ள வாசனையுள்ள துளசி மாலையின் மீது படர்ந்து அதன் மணத்தை உறிஞ்சி வந்து என்மீது ஊதுவாயாக. அவ்வமயமாவது என் விரகதாபத்தைத் தீர்ப்பாயாக என்கிறாள்.

        கட்டுக்காவலாக உள்ள எம்பெருமான் சந்நிதியில் புகுவது, எவ்வாறு என்று தயங்காதே! திருமார்பில் பிராட்டி இருப்பதால் குறையில்லை. நம்முடைய வினைகளை நீக்குவதற்கு திருவாழியுடன் எழுந்தருளியிருக்கிறான். பிறருக்கு உதவுவது அவன் தொழில். அபிஷேகத்தில் நனைந்த நீரானது துளசியில் பட்டு வரும் பரிமள வாசனையை கொண்டு வந்து என்மீது ஊதுவாயாக என்கிறாள். ஒளி பொருந்திய பகவான் நம்முள் ஆத்மாவாகத் திகழ்கிறார். அந்த ஆத்ம ஒளி பகவானோடு ஐக்கியமாகி நம்மை அவனிடம் கொண்டு செல்லும் என்ற கருத்தினை நம்முன் வைக்கிறார் ஆழ்வார்.

       

 வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தடமார்வன்
காமன் தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான்
தாம நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ.       1684

 

வாமனனாய் அவதரித்தவன், கல்கியாய் அவதரிக்கப் போகிறவன், மது என்ற அரக்கனைக் கொன்றவன், மகாலட்சுமியின் மணவாளன், மாலை பொருந்திய தசரதனின் மைந்தன், மன்மதனின் தந்தை, திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள சௌரிராஜன். இத்தகைய பெருமைகளையெல்லாம் கொண்ட எம்பெருமானின் திருத்துழாய் மாலையில் தோய்ந்து என்னிடம் வந்து மணம் வீசி, கோத்தும்பியே! என் மோகத்தைத் தீர்ப்பாயாக என்கிறாள் பரக்கால நாயகி.

 கோல்தும்பி தன்னுடைமையைப்‌ பெறுகைக்குத்தானே யாசகனாய்ச்‌ சென்றவன்காண்‌; விரோதிகளைச்‌ கிழங்கெடுப்பதற்கு இன்னமும்‌ ஸங்கலபித்து கொண்டிருப்பவன் காண். கல்கியவதாரம் செய்தருளி மண்ணின்‌ பாரம்‌ நீக்கப்‌ போகிறானிறே; மது, கைடபன்‌ என்று சொல்லப்படுகிற அசுரர்களை மாய்‌த்தவன்காண்‌, இக்‌குணங்களையெல்லாம ‌ அவனுக்கு வாய்க்கும்படி லக்ஷ்மீபதியாயிருப்பவன்காண் என்கிறள்.

இப்போதுள்ள கலியுகத்தில் பிற உயிர்களுக்குத் தீமை செய்யும் அசுர குணம் கொண்டவர்கள் உள்ளார்கள். மண்ணின் பாரத்தைக் குறைக்க இத்தகைய கொடியவர்களை அழிக்கக் கல்கி அவதாரம் நிகழவுள்ளது. துளசி மாலையணிந்து கரத்தில் வாளுடன் குதிரையில் அமர்ந்து கல்கி வருவார் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய பகவானின் துளசி மாலையின் மணத்தைக் கொண்டு வந்து என் மோகத்தை தீர்ப்பாயாக என்று கற்பனை பாத்திரத்தை ஆழ்வார் அழகுற கையாண்டுள்ளார்.

 

நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர்
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
கோல நறுந் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ.       1685 

 

கோத்தும்பியே! நீர் நிறைந்த வயல்களில் காணப்படும் நீலோற்பவ மலர்களிலும் மற்றும் சுற்றிலும் உள்ள எல்லா மலர்களிலும் ரீங்காரம் செய்து விட்டு வருவதால் என்ன பயன்? இச்செயல் வீணே!  வாள் வீசும் அரக்கர்களுக்குக் காலனாகவும், இலங்கையை நிர்மூலம் செய்த திருக்கண்ணபுரத்து சௌரிராஜனின்  பிரகாசம் பொருந்திய  திருமுடி மேலுள்ள அழகிய பசுமையான துளசி மாலையின் நறுமணத்தைக் கொண்டு வந்து என்மேல் ஊதி என் விரகதாபத்தைத் தீர்ப்பாயாக’ என்கிறாள் பரக்கால நாயகி.

கோல்‌தும்பீ! வயல்களில் உள்ள நீலோற்பவ மலர்களிலும்‌ மற்றும்‌ சுற்றிலுமுள்ள மலர்களிலும் சென்று ஊதுவதால் என்ன பயன்‌ கிடைக்கும்‌? வீணான காரியத்தைச்‌ செய்யாதே. ராக்ஷஸ குலத்திற்கு மிருத்யுவாகத்‌ திருவவதரித்த இலங்கை பாழாளாப்‌ படை பொருதவனும்‌ அந்த வீரப்பாடு தோன்றத்‌ திருக்கண்ணபுரத்திலே நித்யசந்நிதி பண்ணியிருப்பவனுமான பெருமானுடைய திருவபிஷேகத்தின்‌ மேலுண்டான திருத்துழாயிலே ௮வகாஹித்து வந்து ஊதூவாயாக என்கிறாள்.

        மண்ணுலகில் வாழும் இம்மாந்தர்கள் சாரமற்ற வாழ்க்கையை இன்பத்துடன் ஏற்றுக் கொண்டு துன்பத்தில் சிக்கி இருக்கிறார்கள். கற்றாழையை ஒட்டகம் சுவைத்து சாப்பிடும்போது அதன் உதடுகளில் முள் குத்தி அதன் வாயெல்லாம் இரத்தமாகும். இருப்பினும் அச்செயலை அது விடாது செய்யும். அது போன்று கணக்கற்ற துன்பங்கள் நாம் வாழ்நாள் முழுதும் அனுபவித்தாலும் துன்பம் மிக்க சம்சாரத்தில் உழன்று திரிகிறார்கள் என்ற பொருளில் இப்பாசுரம் அமைகிறது.

       

 நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன்
அந்தம் முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தம் கமழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
கொந்து நறுந் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ.        1686

 

கோத்தும்பியே! நந்தகோபனின் மகனும், பூமிபிராட்டியின் நல்ல துணைவனும், ஆக்கவும், அழிக்கவும் கொண்ட சக்தியினைப் பெற்றவனும், தேவர்களின் தலைவனும், காயாம்பூ நிறத்தவனும், பளபளக்கும் திருமுடிமேல் கொத்தாய் உள்ள மணம் வீசும் துளசி மாலையைச் சூடியவனுமான சௌரிராஜப் பெருமானுக்கு சாத்தியுள்ள துளசியின் மணத்தை உறிஞ்சி வந்து என்மீது ஊதி எனது தாபத்தினை தணிப்பாயாக என்று பரக்கால நாயகி கூறுகிறாள்.

கோல்தம்பி! ‘எல்லார்க்கும்‌ எளியனாகைக்காக, நந்தகோபர்க்குக்‌ குமாரனாத் திருவவதரித்து, பூமிபாரத்தைப்‌ போக்குகைக்காக வாகையாலே பூமிப்பிராட்டியின்‌ மனத்துக்கு இனியனான, துர்ஜனங்கள் மிகைத்தவாறே அவற்றை ஸம்ஹரிப்பதும்‌ இனியாகிலும்‌ ஸஜ்ஜனங்களாக வாழ்கிறார்களோ பார்ப்போம்‌ என்று பாரித்து மீண்டும்‌ ஸ்ருஷ்டி பண்ணுவதுமாக இப்படி அழித்தலும்‌ படைத்தலுமாகிற காரியங்களைச்‌ செய்து கொண்டிருப்பவனும்‌, திவ்யசுகந்த வாசிதனும், காயாம்பூ போன்ற நிறமுடையவனான எம்பெருமானுடைய கதிர்முடிமேல் கொந்து நறுந்துழாய் கொண்டு ஊதுவாயாக’ என்கிறாள்.

ஆக்கம் நின்றுவிட்டால் இவ்வுலகம் சூனியமாகிவிடும். சூன்யத்தால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது. தேவையற்றவைகளை அழித்தால்தான் நாம் துன்பங்கள் நீங்கி இயங்க முடியும். அதற்குத் தடையாக உள்ள அசுர சக்திகளைப் பகவான் அழிக்கின்றார். அவ்விதம் அசுர குணம் கொண்டவர்களை அழித்து இனியாவது நன்முறையில் வாழ்கிறார்களா என்று பார்ப்பதற்காக மீண்டும் அவனுக்குப் பிறவியினை அளிக்கிறான் பகவான் என்ற கருத்தினையும் இங்குப் பதியப்படுகிறது.

       

வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ணபுரத்தானை
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய் கோல் தும்பீ.      1687

 

கோத்தும்பியே! வண்டுகள் மொய்க்கும் தோட்டங்களையும் வயல்களையும் கொண்ட திருவாலி நாட்டுக்குத்  தலைவரும், நற்குணங்கள் நிரம்பியவரும், வெற்றிகளைக் கண்டவருமாகிய கலியன் இயற்றிய இப்பத்து பாசுரங்களைக் கார்மேக வண்ணனான திருக்கண்ணபுரத்தில் கோயில் கொண்டுள்ள சௌரிராஜப் பெருமானிடம் தொண்டர்கள் பாடும்படியான எண்ணத்தை அவர்கள் நெஞ்சில் கொண்டு ஊதுவாயாக என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

இப்பாசுரத்தில் தொண்டரோம்’ என்று தன்மையாகச் சொல்லியிருந்தாலும் படர்க்கையில் நோக்காகக் குறையில்லை.  ஈற்றடியின் உட்கருத்து யாதெனில்; ஆழ்வார் தாம் குறைதீரப் பெற்றால் தொண்டர்களெல்லாரும் தம் குறைதீரப் பெற்றதாக நினைப்பர்களாதலால் அந்த மகிழ்ச்சியினால் இத்திருமொழியை உவந்து பாடுவர்கள்; அப்படி செய்விக்க வேணுமென்று தும்பிபோல்வாரான பாகவதர்களை வேண்டுகிறார்.

        இதுவரை பரக்கால நாயகி தும்பியிடம் பேசுவது போல் கற்பனையில் பாடப்பெற்றதாகும். தும்பியானது எல்லா மலரிலும் செல்வதைக் காட்டி இவை நிலையற்ற பொருட்கள் என்றும், திருத்துழாய் மாலை மட்டுமே ஆத்ம ஐக்கியம் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.  மோகம் என்பது காம இச்சை என்ற பொருள் கொள்ளாமல், பகவானிடம் ஏற்படும் மோகம் என்பது அறியாமையை நீக்கி அறிவொளி ஏற்றுகின்ற அற்புத ஞான வேட்கை என்ற பொருளில் அமைவதாகப் பொருள் கொள்ள வேண்டும்.   

       

தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன்
சிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர்  அவை சுட அதனோடும்
மந்தமாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே.      1688

 

அவதரித்தவுடன் தந்தையான வசுதேருடைய காலில் பூட்டிய விலங்கானது முறிந்து விழும்படி செய்த கண்ணபிரானின் பின்னால் எனது சிந்தை சென்றுவிட்டது. அவனது கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என்னை, இரவில் வந்த காவலனான சந்திரன் தன் அமுதூறும் கிரணங்களால் சுடுகிறான். அதோடு, தென்றலும் என் தனத்தில் பட்டு என்னைத் துன்புறுத்துகிறது என்று கூறுகிறாள் பரக்கால நாயகி.

தகப்பனாரான நந்தகோபருடைய காலில் பூட்டியிருந்த விலங்கானது இற்று முறிந்து விழும்படி திருவவதரித்த ஸ்வாமியான கண்ணபிரானுடைய பின்னே தனிப்பட்டிருக்கின்ற என்னுடைய நெஞ்சானது போய்விட்டது. அப்பெருமானிடத்தில் க்ருபையை பெறுவதற்கு சமயம் பார்த்திருக்கின்ற என்னை இராப்பொழுதுக்கு இறைவனான சந்திரனுடைய அமுதம் மிக்க அப்போதுண்டான கிரணங்களானவை தகிக்க, அதோடு கூட மெல்லிய தென்றல் காற்றும் அழகிய முலைத்தடத்திலே வந்து வீசி இம்சை பண்ணுவதிலிருந்து ஓய்வதில்லை.

தனிக்கிடை கிடந்து வருந்துகின்ற என்னுடைய நெஞ்சானது கண்ணபிரானைப் பின்பற்றிச் சென்றொழிந்தது. நெஞ்சு கைவிட்ட இந்தச் சமயத்திலே அப்பெருமானுடைய அருளாவது கிடைக்குமோ வென்று பார்த்திருக்கு மெனக்கு அவ்வருள் கிடையாதது மன்றிக்கே உலகத்தில் மற்றுள்ளவர்கட்குத் தாபத்தைத் தனித்துக் குளிர்ச்சியைப் பண்ணவல்ல நிலாத்தென்றல் முதலியனவும் என் திறத்திலே விபரீதங்களா இருக்கின்றனவே, அந்தோ! என்கிறாள்.

        கண்ணனின் அவதாரம் வசுதேவரின் கால் விலங்கினை உடைத்து எறிந்தது. அது போன்று பணம், பதவி, பட்டம், ஆணவம், சுயநலம் போன்ற விலங்குகளால் பூட்டப்பட்டு அடிமைகளாக நாம் வாழ்ந்து வருகிறோம். பகவானின் பிள்ளைகளான நாம் ஏன் கொத்தடிமைகளாக வாழ வேண்டும்.  ஐம்புலன்களுக்கும் கட்டுப்பட்டு இழிவான வாழ்வினை மேற்கொண்டுள்ளோம். இவ்விலங்கினை உடைக்க பகவான் ஒருவனுக்கு தான் முடியும். எனவே அவனைச் சரணடையுங்கள் என்று ஆழ்வார் நம்மை அறிவுறுத்துகிறார்.

       

மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்வில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே.        1689

 

காளமேகம் போன்றவனும், நீலக்கடல் போன்றவனும், சங்கு போன்ற வெண்மை நிறத்தவனுமான பலராமனுக்கும் பின்னால் பிறந்தவனான ஸ்ரீகிருஷ்ணனின் மலை போன்று திருமார்பில் உள்ள மாலையிடம் கொண்ட ஆசையால் என்னை விட்டுப் போன மனம் திரும்பவில்லை. எனக்கு எவரும் துணை இல்லை. ஊர் முழுதும் தூங்கியாகிவிட்டது. உலகமும் உறங்கிப் போனது. வானில் செல்லும் கதிரவனின் தேரும் மேற்கில் சென்றுவிட்டது. திசைகளும் தெரியவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை என்று பரக்கால நாயகி கூறுகிறாள்.

மேகம் போன்றவனும் நீலக்கடல் போன்றவனும் சங்கு போன்ற வெளுத்த நிறமுடையனான பலராமனுக்கு பின் பிறந்தவனுமான கண்ணபிரானுடைய மலை போன்ற திருமார்பில் உள்ள மாலையினிடத்து ஆசையினால் என்னைவிட்டு நீங்கின மனமும் மீண்டுவரத் தாமதித்தது அவனிடத்திலேயே நின்றுவிட்டது. உதவியான ஒருவரையும் காண்கிறேனில்லை. ஊரில் அனைவரும் உறங்கினார்கள். உலகங்களும் உறங்கின. ஆகாசத்திலே சஞ்சரிக்கின்ற சூர்யனது தேரும் மறைந்து போயிற்று திக்குக்களும் தெரியவில்லை. இந்நிலையில் செய்யத்தக்கது ஒன்றும் அறிகிறேனில்லை.

        நமது மனம் நிலையற்றது. குரங்கு போன்று தாவும் குணம் கொண்டது.  இம்மனதை பகவான் பக்கம் திருப்பி நமது வாழ்வின் இலட்சியமான ஆத்ம தரிசனத்தை நாம் பெற வேண்டும். ஆனால் இந்த மனமோ அழயும் பொருளில் நிலை கொண்டுள்ளது. நாயகி தன் மனதை பகவானிடம் ஒப்படைத்து விட்டாள்.  உண்மையான துணை எது என்பதை அவள் அறிந்துவிட்டாள். நாமும் இத்தகைய ஞானத் தெளிவினைப் பெற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும். 

       

ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில்

     வளைகளும் இறை நில்லா
பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம்
     பெண் உயிர்க்கு இரங்குமோ?
தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை
      இணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்
      அஞ்சேல் என்பார் இலையே.         1690

 

கோபாலனின் மாயமே அன்றி என் கைகளில் வளைகள் தங்காமல் நழுவுவதற்கு வேறென்ன காரணம் இருக்கிறது. அரக்கியான பூதனையின் உயிரைக் குடித்தவன். சாதாரணப் பெண்ணான என் ஜீவன் தங்குவதற்கு இரங்கி ஓடி வந்துவிடப் போகிறானா?  தூய்மையான வெண் நிலவு என்னை எரிப்பதால் என் தனங்கள் வெந்து போகின்றன. அந்த விரகதாபத்தை அணைக்க ஒரு துணையும் இல்லை. உள்ளமோ கோவிந்தனின் குழலிசையை நோக்கிச் செல்கின்றது. இதற்கெல்லாம் அஞ்சாதே என்று சொல்வதற்கு எவருமில்லையே! என்று பரக்கால நாயகி கூறுகிறாள்.

கண்ணபிரானுடைய வஞ்சனை தவிர வேறு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. வளைகளும் கையில் க்ஷண காலமும் தங்குவதில்லை. பேய்ச்சியாகிய பூதனையினுடைய பிராணனை உண்டு அவளை முடித்த பிள்ளை, அவனைப் போல், பெண்ணாய்ப் பிறந்த நம்முடைய பிராணனுக்கு தயை பண்ண ப்ரஸக்தி உண்டோ?

மறுவற்ற சந்திரனுடைய கிரணங்கள் தகிப்பதாலே இரண்டு முலைகளும் தீப்பற்றி எரிகின்றன. அந்தோ! எரியும் நெருப்பை அணைக்க துணையாவரும் இல்லை. மனமும் கண்ணபிரானுடைய வேய்ங்குழலுக்கு ஈடுபட்டு மாய்கின்றது. 'பயப்படாதே' என்று அபயம் அளிப்பாரும் யாருமில்லை.

        அவனது நினைவில் தலைவி புலம்புகிறாள். ஆபத்தை நீக்கி அபயமளிக்கவல்லவன் அவன். ஆனால் அவனோ ஆபத்தை விளைவித்து அச்சத்தை உண்டாக்கும்போது, அஞ்ச வேண்டாம் என்று கூறுபவர் எவருமில்லையே என்கிறாள். உரிமை கொண்டவர்களிடம் நாம் சண்டை போட முடியும்.  அதுவும் ஒரு அன்பு சண்டையாகும். பகவானுக்கும் நமக்கும் உள்ள உறவு இன்று நேற்று வந்ததல்ல. யுகம் யுகமாக உள்ள உறவாகும்.  என்றஇம் அழியாத உத்தம உறவு. இந்த உறவில் அன்பு காட்டுவதும், சண்டை கொள்வதும், ஊடல் கொண்டு பிதற்றுவதும், பாமாலை சூடுவதும், பக்தி கொண்டு ஆடுவதும் நமக்கே உரித்தாகும்.

 

கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல்
      கழல் மன்னர் பெரும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்
     வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும்
     தழல் முகந்து இள முலைமேல்
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை
     எனக்கு எனப் பெறலாமே.       1691      

 

தடாகம் போலே வற்றாதிருக்கிற புண்கள் நிரம்பிய தலையையுடைய யானைகளைத் தள்ளி நடத்தவல்ல வெவ்விய வலிமையை உடையவரும் வீரக்கழலை உடையருமான அரசர்களினுடைய பெரிய பாரத யுத்தத்தில் அறிவுகலங்கும்படி வெண்மையான பாஞ்சஜன்யத்தை திருப்பவளத்தில் வைத்து ஊதின மஹாபுருஷனும் என்னிடம் வந்து சேர்ந்தானில்லை.  அலைமடிகின்ற கடலினுடைய ஜலத்தில் அசைந்து வருகின்ற வெண்மையான அலைகளாலுண்டான திவலைகளாகிற நுட்பமான பனியென்று சொல்லப்படுகிற நெருப்பை வாரிக்கொண்டுவந்து எனது இளமை தங்கிய முலைகளின் மீது வீசுகின்ற காற்றானது தனியப்பெற்றால் எனது உயிரை எனக்கு உரித்தாக அடையலாகும்.

அங்குசத்தால் குத்தப்படுவதால் மத்தகத்தில் புண் ஏற்பட்ட யானைகளையும், பக்குவமாய் நடத்தவல்ல பலமுடைய வீரக்கழலையும் அணிந்த அரசர்கள், பாரதப்  போரில் பகைவர்கள் கலங்கும்படி பாஞ்சஜன்யத்தை வாயில் வைத்து ஊதிய தேவகி மைந்தனான எம்பெருமான் இன்னும் என்னிடம் வந்து சேரவில்லை. அலை வீசும் சமுத்திர நீரில் அசைந்து வரும் திவலைகளால் ஏற்படும் நீர்த்துளிகள் நெருப்பு போல் என் தனங்களின் மீது தெறிக்கின்றது. எல்லோருக்கும் வீசுகின்ற தளிர் மந்தமாருதமானது இப்போது என் ஆவியை மாய்க்கின்றது போல் வீசுகின்றது. இந்தக் காற்று எனக்கு உதவாமல் போனால் என் உயிர் எனக்குரியதன்று என்று எண்ணலாம் என்று கூறுகிறாள் பரக்கால நாயகி. இவ்விதம் தருமத்தை வெற்றி பெறச் செய்யச் சங்கம் முழங்கிய தேவகி மகன் என்மீது இரக்கம் கொள்ளாமல் இன்னும் என்னைக் காக்க வைக்கின்றானே என்று ஏங்கித் தவிக்கிறாள்.

       

ஏழு மா மரம் துளைபடச் சிலை வளைத்து
     இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும்
     பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை
     சுடர் படு முதுநீரில்
ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவது ஓர்
     அந்தி வந்து அடைகின்றதே.       1692

 

ஏழு மாமரங்கள் துளைபட வில்லை வளைத்து அம்பைச் செலுத்தியவன், இலங்கையை கதிகலங்கச் செய்தவன், அறுகாழி மோதிரத்தைக் கரங்களில் தரித்தவன், நம்மிடம் கொண்ட கருணையோடு பகல் பொழுதும் கழிந்தது. தோழி! நமக்கோ துணை இல்லை. ஆதவன் மேற்கில் கடலில் கலந்து விட்டான். பிழைத்திருக்க  வேண்டும் என்ற நம் எண்ணத்தை முடிக்கின்ற அந்திப் பொழுது வந்துவிட்டதே. என் செய்வேன் என்று நாயகி தவிக்கிறாள்.

சப்தசால விருக்ஷங்கள் சுக்ரீவனுடைய நம்பிக்கைக்காகத் துளைபடும்படி வில்லை வளைத்தவனும், லங்காபுரியை கலங்கப்பண்ணினவனும் அறுகாழி மோதிரத்தை கையிலே உடையவனுமான இராமபிரான் நம் விஷயத்திற் பண்ணின கிருபையோடு கூடப் பகற்போதும் முடிந்து போய் நின்றது.  அந்தோ! வாராய் தோழி. இந்த ஆபத்துக்கு நாம் என்ன பரிகாரம் செய்யவல்லோம். துணை நிற்பார் யாருமில்லை. சூரியனானவன் தான் தோன்றிய சமுத்திரத்தினுள் ஆழ்ந்து மறைந்துபோக பிழைத்திருக்க நினைத்திருக்கின்ற பிராணனை முடிப்பதான ஒரு அந்திமாலை பொழுது வந்து சேர்கின்றதே!.

பகல் எல்லை கழிகின்றது_ எம்பெருமானருள் மறுத்தாலும் பகற்பொழுதாகிலுமிருந்தால் ஒருவாறு உலகப் பொருள்களையாவது கண்டுகொண்டு ஆற்றலாம். அவனருளோடு கூடவே பகற்போதும் போயிற்றே. தோழீ! இதற்கு நாம் என் செய்யக்கடவோம்.

        சுதர்சனச் சக்கரத்தைத் தரித்தவன் வரவில்லையே!  இலங்கையை கலங்கச் செய்தவன் என் கலக்கத்தை தீர்க்க வரவில்லையே! சக்கரத்தைக் கொண்டு அசுரர்களைத் தீர்த்தவன், என் துயரத்தைத் தீர்க்க வரவில்லையே! எம்பெருமான் மறுத்தாலும் பகற்பொழுதில் பொருட்களைக் கண்டு என் துயரினை ஆற்றிக் கொள்ளலாம். ஆனால் அவனருளோடு பகற்பொழுதும் போய் மாலைப் பொழுதும் வந்துவிட்டதே. எனக்கு வரும் துன்பத்தை யார் அறிவார் என்று புலம்புகிறாள் தோழி.

 

 முரியும் வெண் திரை முது கயம் தீப்பட
     முழங்கு அழல் எரி அம்பின்
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்
     வந்திலன் என் செய்கேன்?
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன்
     இணை நெடுங் கண் துயிலா
கரிய நாழிகை ஊழியின் பெரியன
     கழியும் ஆறு அறியேனே.     1693 

 

கிளர்ந்து அலைகின்ற வெண்மையான அலைகளையுடைய கடலானது, தீப்பற்றி எரியும்படி ஆக்நேயாஸ்த்திரத்தை வில்லில் வளைத்து எய்தவனான, கோசலையின் மைந்தன் வரவில்லை. நான் என்ன செய்வேன்? கதிர்களையுடைய ஆதவனும் மேற்கில் மறைந்துவிட்டான். பாவியான எனது இரு விழிகளும் உறக்கம் கொள்ளவில்லை. ஊழிக்காலத்தைவிட இந்த இரவுப் பொழுது நீண்டு வருகிறது. இதனை எவ்விதம் நான் கழிப்பேன் என்ற பொருளில் நாயகி கூறுகிறாள்.

கிளர்ந்து அலைகின்ற அலைகளையுடைய கடலானது தீப்பட்டு எரியும்படி ஒலியுடைய நெருப்பு எரிந்து நின்றுள்ள அம்புகளையுடையதும் அழகியதாய் கொடிதாயிருந்ததுமான வில்லை வளையச் செய்த மஹாவீரனான இராமபிரானும் வரவில்லை.என்ன பண்ணுவேன்? பிரகாசித்துக் கொண்டிருந்த சூர்யனும் அஸ்தமித்தான்; பாவியான என்னுடைய இரண்டு கண்களும் உறங்குகின்றனவில்லை. கல்ப காலத்தைக் காட்டிலும் பெரியவையாய் உள்ள இரவு நாழிகைகள் எப்படி கழியப் போகின்றனவோ? அறிகிறேனில்லை.

        இராமன் கடலைக் கடக்க சமுத்திர ராஜனை வேண்டினான். சர்வலோகன் சர ணாகதி செய்தும் அகந்தையுடன் இருக்க, அருள் வடிவான பகவான் சீறி கடலரசன் மீது அம்பு தொடுத்தான். அத்தகையவன் என்னைக் காண வரவில்லையே! ஊழி நீண்டது போல் பொழுதும் நீண்டு வருகிறதே. இலங்கை சென்று சீதையுடன் சேர்ந்து மகிழ்வுறுகிறார். ஆனால் இது போன்று என்னுடன் கலப்பதற்கு வராமல் என்னை உதாசீனப்படுத்துகிறாரே என்று தலைவி துன்புறுகிறாள்.

       

 கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர்
     கோனது வரை ஆகம்
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம்
     அடிகளும் வாரானால்
இலங்கு வெம் கதிர் இள மதி அதனொடும்
     விடை மணி அடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையும் ஆய் இனி
     விளைவது ஒன்று அறியேனே.        1694

 

திருப்பாற்கடல் கலங்கும்படி அதைக் கடைந்தவனும், பெரிய கடலில் சேது அமைத்தவனும், இராவணனின் மலை போன்ற மார்பு வருந்துமாறு கொடிய போரில் அம்புகளைச் செலுத்தியவனுமான ஸ்ரீராமன் இன்னும் வரவில்லை. கொடிய கதிர்களையுடைய சந்திரனும், எருதின் கழுத்தில் கட்டியுள்ள மணியின் ஓசையும் என்னை வாட்டுகின்றது. ஆவினை மேய்த்து வரும் கண்ணனின் குழலிசை என்ன ஆபத்தை ஏற்படுத்தப் போகின்றதோ என்பதை நான் அறியேன் என்று தலைவி பாடுகிறாள்.

பெரிய கடலானது கலங்கும்படியாக அதனைக் கடைந்தவனும் அக்கடலில் அணை கட்டினவனும் இலங்கையில் உள்ளார்க்கு அரசனான இராவணனது மலை போன்ற மார்பானது வியாகுலமாகும்படி கொடியபோரில் கொலையம்புகளை பிரயோகித்தவனுமான எமது ஸ்வாமியும் வரவில்லை. அந்தோ! விளங்காநின்ற கொடூரமான கிரணங்களையுடைய இளம் சந்திரனோடுகூட எருதினுடைய கழுத்தில் கட்டின மணியின் ஓசையும் என்னைக் கொலை செய்கின்றது. இடையனான கண்ணபிரானிடத்தில் உள்ள மலை மூங்கில் குழலினுடைய த்வனியும் உண்டாக, இனி உண்டாகப்போகும் ஆபத்தை ஒன்றும் அறிகின்றிலேன்.

        தேவர்களுக்குச் சாகா வாழ்வு தர எம்பெருமான் பாற்கடலைக் கடைந்தான். சீதை யை மீட்க சேது கட்டி இராவணனை அழித்தான். பெண்களைக் காப்பதென்றால் எத்தகையத் துயரினையும் அவன் ஏற்றுக் கொள்வான். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பகவான் என் விஷயத்தில் தாமதம் செய்வதேன்.  தன் பிரிவுத் துயரை சொல்வதுபோல் பகவானின் பெருமைகளையும் ஒரு சேரக் கூறுகிறாள்.

       

முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும்
     முனிவனும் முனிவு எய்தி
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய
     மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை
     அடங்க அம் சிறை கோலி
தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர்
     கொடு வினை அறியேனே.      1695

 

மண்ணுலகம் முழுதும் மரியாதைகள் குலைந்து போனதால் ஜமதக்னி முனிவர் கோபம் கொண்டார். அதனால் கோடரியால் அரசர்களுடைய உயிர்களைக் கவர்ந்த கம்பீரமான பரசுராமன் இனி வரப்போவதில்லை. ஒழுகிவரும் பனிக்காக ஒடுங்கிக் கிடந்த பெண் பறவையானது ஆண் பறவை தனது அழகிய இறக்கைகளால் விரித்து அணைத்துக் கொள்வதற்கான இத்தகைய இந்த நள்ளிரவில் நான் தனியாக இருந்து விரக தாகத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். இதனைக் காட்டிலும் கொடுமை எதுவுமில்லை என்று கூறுகிறாள் தலைவி.

இந்த லோகமானது அடங்கலும் மரியாதை குலைந்து போனதனால் ஜமதக்னி முனிவன் சீற்றங்கொள்ள அது காரணமாகக் கோடலியினால் க்ஷத்திரியர்களினுடைய அருமையான பிராணன்களை கவர்ந்த மிடுக்கையுடைய பரசுராமபிரானும் வருகிறானில்லை. பெருகுகின்ற சிறு பனிக்காக ஒடுங்கி வர்த்திக்கிற பெண் பறவையை ஆண் பறவையானது அழகிய சிறகுகளை விரித்து நிமிடமாக அணைத்துக் கொள்வதற்குரிய நடுநிசியில் இப்படி தனிமைபட்டிருப்பதை காட்டிலும் க்ரூரமான வேறொரு பாபத்தை அறிகின்றிலேன்.

        அநீதியை அழிக்க ஷத்ரியர்களை அழித்த எம்பிரான் என்னையும் அழிக்கப் பார்த்து அநீதி இழைக்கிறானே என்று வருந்துகிறாள்.  இங்குத் தலைவி கூறும் விரக தாபம் என்பது காம மயக்கமல்ல. தெய்வீக சிந்தனையால் ஏற்படும் தாபம். உடலும் உடலும் சேர்வது காம வயப்பட்டது. ஆத்மாவும் பரமாத்மாவும் சேர்வது தெய்வீக இணைப்பாகும். உள்ளுணர்வுடன் பகவானை அணுகும்போதுதான் இதன் வேறுபாடு நமக்குப் புலப்படும்.  இத்தகைய ஐக்கியமே நமது லட்சியமாகும் என்பதை ஆழ்வார் இப்பாசுரவழி வலியுறுத்துகிறார்.

       

 கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும்
     கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என்
     வளை நெக இருந்தேனை
சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை என்
     சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன்
     ஆவியை அடுகின்றதே.      1696

 

வலிமை மிக்க பெரிதான மதில்களையுடைய திருக்கண்ணபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் சௌரிராஜப் பெருமானோடு கனவில் கூடி அவன் கொடுத்த சுகத்தை எண்ணி வெட்கப்பட்டு வளையல் நெகிழ நான் இருக்கிறேன்.  வீறுகொண்ட பெரிய காளையின் கழுத்தில் உள்ள மணியோசை, மாடுகள் தொழுவம் திரும்பும் மாலை நேரத்தை உணர்த்தி என் புத்தியை சிறகடிக்கின்றது.  உறக்கமின்றித் தவிக்கிறேன். அன்றில் பறவை தன் துணையில்லாது கதறும் குரல் என் உயிரை வருத்துகிறதே! என்று கூறுகிறாள் நாயகி.

திண்ணிதாகச் செய்யப்பட்டுள்ள பெரிய திருமதில்களையுடைய திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கின்ற அப்பெருமானோடு கூடியிருப்பதாகக் கனவிலே கண்டு, அப்பெருமான் கொடுத்த மானசீகமான இன்பமானது நினைவுக்குவர அத்தாலே ஈடுபட்டு என்கைவளை கழலும்படியிருக்கிற, என்னைக் கோவங்கொண்ட, பெரிய ரிஷபத்தினுடைய மணியினுடைய த்வனியானது எனது நெஞ்சை சிதைக்கிறது. உறங்கிக்கொண்டிருந்த அன்றிற் பறவையினுடைய தழுதழுத்த பேச்சானது பாவியான என்னுடைய உயிரை இம்சிக்கின்றது.

        பரக்கால நாயகியின் கனவில், பெருமான் அவள்படும் துயர் கண்டு மனமிரங்கி மானசிகமாக அவளுடன் சேருகிறான்.  கண்விழித்துப் பார்த்து இவை கனவு என்றுணர்ந்து வருந்துகிறாள். இந்நிலை நம் எல்லோருக்கும் வந்து விட்டால் இம்மண்ணுலகமே சொர்க்கமாகும். ஆனால் நாமோ பணத்தையும் பொருளையும் எக்காலத்திலும் நினைத்து வருகிறோம். பெண் மோகம், பதவி மோகம் கொண்டவர்களிடம் பகவான் நிலைப்பதில்லை. இந்த அவலத்தினால் பிறப்பு இறப்பு என்னும் துன்பத்தில் உழல்கிறார்கள் என்று பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.        

 

வார் கொள் மென் முலை மடந்தையர்
     தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து,
ஆர்வத்தால் அவர் புலம்பிய
     புலம்பலை அறிந்து முன் உரை செய்த,
கார் கொள் பைம் பொழில் மங்கையர்
     காவலன் கலிகன்றி யொலி வல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர்
     புக்கு இமையரோடும் கூடுவரே.      1697 

 

கச்சையணிந்த தனங்களையுடைய மங்கையர் கடல்நிற வண்ணம் கொண்ட கண்ணனுடைய திருவடிகளை விரும்பி ஆர்வத்தோடு, முன்பு கதறிய புலம்பல் வார்த்தைகளை யூகித்து, கார்மேகங்கள் உலவும் மலர்ச்சோலைகள் கொண்ட திருமங்கை நாட்டுத் தலைவனான கலியன் பாடிய இப்பாசுரங்களை பக்தியுடன் பாடக்கூடியவர்கள் வைகுண்டம் சென்று தேவர்களோடு கூடியிருப்பார்கள் என்பது இப்பாசுரப் பொருளாகும்.

கச்சு அணிந்த மெல்லிய தனங்களையுடைய பெண்கள் பெரிய கடலின் நிறமுடையனான கண்ணபிரானுடைய திருவடிகளை ஆசைப்பட்டு அன்பினால் முன்பு கதறின கதறலை உட்கொண்டு, மேக ஸஞ்சாரத்தையுடைய பரந்தசோலைகளையுடைத்தான திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த இச்சொற்களை ஓதியுணரவல்லவர்கள் அழகிய பரமபதமென்னும் திருநாட்டிலே புகுந்து நித்யசூரிகளோடே சேரப்பெறுவார்கள்.

        நம் எல்லோருக்கும் தாய் தந்தையாக இருப்பவன் பகவான். பெற்றோரை மறந்து புறக்கணிப்பவர் புகழுடன் வாழமாட்டார்கள். அது போன்று பகவானின் நினைவின்றி அற்ப பொருட்களின் பின் அலைந்து திரிவது அறியாமையாகும்.  இவ்வுடல் இருக்கும்போது நம்முள் இருக்கும் ஆத்மஜோதியை தரிசனம் செய்ய முயற்சித்தல் வேண்டும்.  இதுவே பிறப்பை அறுக்கும் விவேகமாகும். எனவே அரிதான மனிதப்பிறவி இருக்கும்போது நம் வினைகளை அறுத்துப் பகவானின் தரிசனத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற வைராக்கியம் ஒவ்வொருவர் மனத்திலும் தோன்ற வேண்டும்.

       

 தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திருமார்வன்
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை வடிக் கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் கண்டுகொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே.       1698

 

அடியார்களே! பிழைக்கும் வழியை நான் தெரிந்து கொண்டேன். அன்று கொடிய அரக்கர்களைத் துன்பம் கொள்ளும்படி திடமுள்ள தோள்களை உயர்த்தி வில்லினை வளைத்துச் சினத்துடன் அரக்கரை அழித்த ஸ்ரீராமபிரான் மகாலட்சுமியை மார்பில் தரித்தவன், வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய திருமகள், வாள்விழியொத்த பூமகள் இவர்களின் கடைக்கண் பார்வையை அனுபவித்த சௌரிராஜன் மகிழ்வுடன் அமர்ந்திருக்கும் திருக்கண்ணபுரத்தை வணங்க வேண்டும் என்று இப்பாசுரம் பொருள் கூறுகிறது.

பகவத் கைங்கர்யத்தில் ருசியுடையீர்காள்! உஜ்ஜீவிக்கும் வழியைத் தெரிந்து கொண்டேன். முற்காலத்தில் ஒரு நாளும் கஷ்டபட்டறியாத ராக்ஷஸர்கள் கஷ்டப்படும்படியாக வலிமை பொருந்திய திருத்தோள்கள் நிமிரவும் வில்வளையவும் ஸ்வல்பமான சீற்றமே கொண்டவனாய் மகாலட்சுமியை திருமார்பிலே உடையவனாய், வண்டுகள் படிந்த கூந்தலையுடைய பெரிய பிராட்டியாரென்ன கூர்மை பொருந்திய கண்களையுடைய பூமிபிராட்டியென்ன இவர்களுடைய சிறந்த கடைக்கண் பார்வையை அனுபவிப்பவனான எம்பெருமான் நித்யவாசத்திற்குப் பாங்கான இடமென்று திருவுள்ளம் பற்றி மகிழ்ந்து உறையுமிடமான திருக்கண்ணபுரத்தை தொழுவோம்.

        சேதனனின் குற்றங்களை எண்ணிப் பெருமான் சினம் கொண்டு அவனைத் தண்டிக்க வரும்போது, பிராட்டியானவள் சேதனனுக்காகப் பலவாறு பரிந்து பேசி, அவனுக்கு நம்மை விட்டால் யார் கதி என்று கூறுவாள். ஆனால் பெருமான் பிராட்டியின் கூற்றினை அலட்சியப்படுத்தும்போது, பிராட்டியானவள் கடைக்கண் பார்வை செலுத்தி, கச்சையை நெகிழ்த்தி, கூந்தல் அசைவினால் தனது அழகினைக் காட்டிப் பெருமானை திகைக்குமாறு செய்து, தான் சொன்னபடி செய்து முடிப்பாள். சேதனனிடம் பிராட்டி கொண்டுள்ள கருணைக்கு அளவேயில்லை என்று கூறலாம்.       

 

பொருந்தா அரக்கர் வெம் சமத்துப் பொன்ற அன்று புள் ஊர்ந்து
பெருந் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த அரக்கர் தென் இலங்கை
இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப
கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.       1699    

 

முன்னொரு காலத்தில் கொடிய போர்க்களத்தில் அசுரர்கள் இறக்கும்படி கருட வாகனத்தில் வந்து சுகேசனின் மகனான மாலியின் தலை உருளும்படியும், அவனது சகோதரர்களான மாலியவான், கமாலி ஆகிய இருவரையும் தோற்று பாதாளத்தில் ஒளியுமாறும், படைவீரர்கள் தென்னிலங்கைக்குள் மறையுமாறும் செய்த வலிமை மிக்க சார்ங்கம் என்னும் வில்லைக் கையில் தரித்த சௌரிராஜனுடைய இருப்பிடமான திருக்கண்ணபுரத்தை நாம் சென்று தொழுவோமாக என்று ஆழ்வார் கூறுகிறார்.

முன்பொருகாலத்தில் கொடிய போர்க்களத்திலே சத்ருக்களான ராக்ஷஸர்கள் முடியும்படியாஎ கருடப்பறவையின் மீது எழுந்தருளி வலிய தோள்களையுடையவனான மாலியினுடைய தலையானது அற்று விழுந்து நிலத்தில் புரளும் படியாகவும் அவனைத் தவிர மற்ற ராக்ஷஸர்கள் தென்னிலங்கையிலிருந்து மற்றுமுள்ள ராக்ஷஸர்களையுங் கூட்டிக் கொண்டு அவ்விடத்திலிருந்து பாதாளத்திலே புகுந்து மறையும் படியாகவும் வயிரம்பற்றித் வலிமையான வில்லை திருக்கையிலே தரித்தவனான எம்பெருமானுடைய இருப்பிடமான திருக்கண்ணபுரத்தை நாம் தொழுவோம்.

        உண்மை எதற்கும் தலைவணங்காது. பொய்மைக்கு பயம் அதிகம். நம்மில் பொய்மையை விலக்கினால் அச்சம் அகன்றுவிடும். பொய்மை என்பது பிறர் பொருளை விரும்புவது, சுயநலத்தின் செயல்களாகும். பொய்மை நீங்கின் பகவானைத் தூய்மையான மனத்துடன் நெருங்கலாம். இத்தகைய எண்ணங்களை நம் மனத்தில் கொள்வதே முதல் படியாகும். அதனைப் பெற கண்ணபுரத்தானைத் தொழுவோம் என்பது பொருளாகும்.

       

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்
வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியை
கல்விச் சிலையால் காத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.       1700

 

கொடி போன்ற இடையைக் கொண்ட சீதை பிராட்டிக்காகச் சமுத்திரத்தை அகழியாகக் கொண்ட இலங்கை அரசனான இராவணனை வருந்தச் செய்து கொடிய போர்க்களத்தில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்திய ஆற்றலுள்ளவன், அசுரர் குலத்தில் தோன்றிய சுகேதுவின் மகளான தாடகையை அழித்து விசுவாமித்திர முனிவரின் வேள்வியைக் தனது கோதண்டத்தால் காத்த ஸ்ரீராமன் வீற்றிருக்கும் கண்ணபுரத்தை நாம் வணங்குவோமாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

கொடிபோல் மெல்லிய இடையை உடையளான சீதை பிராட்டியாருக்காக, கடலை அகழாகவுடையதும் மதிள்களையுடையதுமான லங்காபுரியில் உள்ள அரக்கர்களுக்குத் தலைவனான இராவணனை துன்பப்படுத்தி வெவ்விய போர்களத்திலே தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின மகாவீரனும் வலிய ஆண்மைதனமுடைய ராக்ஷஸர்களின் குலத்தில் தோன்றிய தாடகை என்னும் அரக்கியை முடியச்செய்து, விஸ்வாமித்ர முனியினுடைய யாகத்தை தான் கற்றுப் பயின்ற வில்லைக்கொண்டு காத்தருளினவனுமான பெருமானுடைய ஊரான திருக்கண்ணபுரத்தை தொழுவோம்.

        இராம இராவண யுத்தத்தில் இரவாணன் கிரீடங்களையும், ஆயுதங்களையும், சேனைகளையும் இழந்து நிராயுதபாணியாகச் சோர்ந்து நின்ற சமயம் பகவான் அந்த நேரத்திலும் அவன்மீது பரிவு கொண்டு ‘தனியாய் வெறுங்கையனாய் இருக்கின்ற உனை நான் கொல்லேன், இன்று நீ உயிர் தப்பி நாளைச் சேனைகளுடன் போர் புரிவாயாக’ என்று கூறி அனுப்பினார். ‘கைபுகுந்த சத்ருவை கடுக முடித்துவிடாதே, இன்று போய் நாளை வா’ என்றானிறே என்று பெரியவாச்சான் பிள்ளை அருளியுள்ளார்.

 

மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து
கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகல் உற்று
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.         1701

 

கொடிய அரக்கனான இராவணனுடைய இலங்கையில் நுழைவதற்காகப் பரந்த சமுத்திரமானது இடம் கொடுக்கும்படி வில்லை வளைக்க, அப்போது கடலரசன் வந்து வணங்கித் தன் சம்மதத்தைத் தர, மரங்கள் அடர்ந்த சோலையில் வாழும் மல்லை முந்நீரஅதர்பட வரிவெஞ்சிலை கால்வளைவித்து வானரங்களின் உதவியுடன் பழைய மரங்களைக் கடலில் மூழ்குமாறு வெட்டிப் போட்டு, நீர்த்திவலைகள் சேர்ந்து ஆகாயத்தைத் தொடும்படி மலைகளைக் கடலில் அணை கட்டிய தாசரதியின் ஊரான திருக்கண்ணபுரத்தை நாம் வணங்குவோமாக என்ற பொருளில் இப்பாசுரம் அமைகிறது.

கொடியவனான இராவணனுடைய லங்காபுரியில் பிரவேசிக்க வேண்டி அதற்காகச் செழிப்பான கடலானது வழிபடும்படியாக வரிகளையுடையதாய் மெல்லியதான வில்லை வளையச் செய்து காட்டுமிருகங்கள் கைங்கர்யம் பண்ண பழைய மரங்களையும் கடலினுள் புகும்படியாக வெட்டிப்போட்டு திவலைகள் கிளர்ந்து ஆகாசத்திலே அளாவும்படியாக மலைகளைக் கொண்டு சமுத்திரத்தை அணைசெய்த எம்பெருமானுடைய ஊரான திருகண்ணபுரத்தை தொழுவோம்.

        சமுத்திர ராஜனை  வேண்டி, மூன்று நாட்கள் கிடக்க, அவனது அனுமதியுடன் எம்பெருமானின் ஆற்றலால் கடலில் அணை கட்டி கடலைத் தாண்டினார். ஒருநாளும் பூசல்களைக் கண்டறியாமல் பனை மரங்களில் தாவித் திரியும் குரங்குகள் அணை கட்டும் பணியைச் சிரமேற்கொண்டு செய்ய, இராகவனும் வானரங்களும் மலைகளையும், மரங்களையும் பிடுங்கி நீரில் போட்டுச் சேது கட்டி, அவ்வழியாய் இலங்கை சென்றடைந்தான் ஸ்ரீராமன் என்று ஆழ்வார் பாடுகிறார்.

       

ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர் தம்
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.      1702

 

கூர்ம அவதாரமாகவும், நரசிங்க அவதாரமாகவும், அன்னமாகவும் தோன்றியவன், வைதீகர்களின் ஹோமங்களில் ஆராதிக்கப்படுபவன், ஊழியானவன், அலைகளையுடைய சமுத்திரத்தினால் சூழப்பட்ட பாதுகாப்பான மதில்களைக் கொண்ட இலங்கை அரசனான இராவணனுடைய தலைகளையும், கைகளையும் அறுத்தொழித்தவன், கிருஷ்ணாவதாரத்தில் மன்மதனைப் புதல்வனாக அடைந்தவன் எழுந்தருளியிருக்கும் கண்ணபுரத்தை நாம் அடைவோமாக என்ற பொருளில் அமைந்துள்ளது.

கூர்மரூபியாயும், நரசிம்மரூபியாயும், ஹம்ஸரூபியாயும் அவதரித்தவனும், பிராமணர்களினுடைய யாகங்களில் ஆராதிக்கப்படுபவனும் பிரளய காலத்திலும் உள்ளவனும் ஓங்கின அலைகளையுடைத்தான கடலினால் சூழப்பட்டதும், காப்பான மதிள்களாலே சூழப்பட்டதுமான லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய தலைகளையும் தோள்களையும் அறுத்தொழிந்தவனும் முன்பொருகால் மன்மதனை பிள்ளையாகப் பெற்றவனுமான எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருக்கப்பெற்ற ஊரான திருக்கண்ணபுரத்தை நாம் தொழுவோம்.    

        அதர்மம் எவ்வடிவில் வந்தாலும் அதற்கேற்றவாறு வடிவம் எடுத்து அதை அழிக்கக் கூடியவன் பகவான். எத்தகைய இறுமாப்புடன் இருந்தவர்கள் எல்லாம் அழிந்து போவதைப் பார்க்கிறோம். நம்மை இயக்குபவன் பகவான் மட்டும்தான். நாம் ஒரு கருவியாகத்தான் செயல்பட்டு வருகிறோம். எனவே இத்தகைய பெருமைமிக்க பகவான் திருக்கண்ணபுரத்தில் வாசம் செய்து நம்மையெல்லாம் காத்து வருகிறான். அவனை வணங்குவதே மனிதப்பிறவி எடுத்த அரிய பயனாகும் என்பது இதன் கருத்தாகும்.

 

       

வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென் இலங்கை செந் தீ உண்ண சிவந்து ஒருநாள்
பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன்
கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.      1703

 

        தெளிவில்லாத மனமே! நீ வருந்தாதே! நாம் செய்த பாவங்களின் பலன்கள் நம்மை வந்து சேராது. தீங்குள்ள குணத்தைக் கொண்ட அரக்கர்கள் நிறைந்த இலங்கையை தீயினால் அழியுமாறு செய்தவன். கிருஷ்ணாவதாரத்தில் வாணாசுரனை இரக்கத்தின் பால் கொல்லாமல் விட்டவனான நப்பின்னையின் மணாளன். பலமுள்ள குவலயாபீட என்ற யானையை அழித்தவன் திருக்கண்ண புரத்தில் உள்ளான். அவனை வணங்குவோமாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

        சாதுவான நெஞ்சே!வ நீ வருத்தபடமாலிரு. நம்மிடத்து பாவங்களின் பலன் ஒன்றும் வந்து சேரமாட்டாது. ஏனென்றால் முன்னே திருத்தாமலிருந்த ராக்ஷஸர்களின் ஊராகிய தென்னிலங்கையை சிவந்த நெருப்பு ஆக்ரமித்து உண்ணும்படியாகச் சீற்றங்கொண்டவனும் மற்றொருகாலத்தில் பெரிய தோள்களையுடைய பாணசுரன் விஷயத்தில் உயிரைக் கவராது விட்டுடிகையாகிய கிருபையைச் செய்தருளினவனும் நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனானவனும் முன்பொருகால் வலிமையுள்ள கால்களை உடைய குவாலயபீடமென்னும் ஒரு யானையைத் தொலைத்தவனுமான பெருமானுடைய ஊரான கண்ணபுரத்தை நாம் தொழுவோம்.

        நெஞ்சமே! நாம் உய்யும் வகையைச் சார்ந்தவர்கள் என்று தெரிந்த பின்னும் இவ்விதம் வருந்துவது சரியோ! வினைகளுக்குண்டான பலன்களை  நாம் அனுபவித்துத் தீர வேண்டும். ஆனால் திருக்கண்ணபுரம் சென்று சௌரிராஜனை நாம் சேவிக்குங்கால் நாம் செய்த பாவங்கள் விலகிப்போகும். நாம் செய்த வினைகள் நம்மைத் துன்புறுத்தாது என்ற பொருளில் ஆழ்வார் தெரிவிக்கிறார்.

       

இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய அதனுக்கு அருள்புரிந்தான்
அலை நீர் இலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன்
கலை மாச் சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.      1704

 

பெரிய யானையானது மலர்களையுடைய அழகிய பொய்கையில் முதலை வாயால் இழுக்கப்பட்டு அஞ்சி நடுங்கி நிலைகுலைந்து நிற்க, அதற்குக் கருணை காட்டியவன் பகவான்.  அலைகடல் சூழ்ந்த இலங்கை அரசனான இராவணனின் தம்பி விபீஷணனுக்கு அரசாட்சி தந்தவன். அதற்கு முன் மானாக வந்த மாரீசனை அம்பு எய்து அழித்தவனான ஸ்ரீராமன் கோயில் கொண்டிருக்கும் திருக்கண்ணபுரத்தை நாம் வணங்குவோமாக என்கிறார் ஆழ்வார்.

கொலைத் தொழிலை இயற்கையாக உடைய யானையான கஜேந்திராழ்வான் இலைகள் நிரம்பிய மலர்களை உடைத்தான அழகிய தடாகத்திலே முதலையினால் துன்பமடைந்து நடுங்கி கை ஓய்ந்து நிற்க, அந்த யானைக்குக் கிருபை பண்ணியருளினவனும், கடல் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய தம்பியான விபீஷணனுக்கு லங்கா ராஜ்யத்தை கொடுத்தருளினவனும் அதற்கு முன்பே மாரீசனாகிற மானை ஒரு வில்லாலே அம்பெய்த்து கொன்றவனுமான பெருமானுடைய ஊரான திருக்கண்ணபுரத்தை நாம் தொழுவோம்.

        முதலை வாயில் அகப்பட்ட யானைக்கு அபயம் அளித்தது போன்று பஞ்சேந்திரியங்களான பல முதலைகளின் வாயில் நாம் அகப்பட்டுத் தவிக்கிறோம். அவனை நெருங்கினால் நமக்கும் அபயம் அளிப்பான். சரணாகதி அடைந்த விபீஷணனை அனுக்கிரஹித்துக் காத்தது போன்று நம்மையும் காப்பான். மாரீசனை அழித்தது போன்று நம்முள் இருக்கும் மாயங்களையும் அவன் அழிப்பான். எனவே கண்ணபுரம் நோக்கி நாம் தொழுவோமாக என்ற பொருளில் அமைகிறது.        

       

மால் ஆய் மனமே அருந் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மாக் கழுதையும்
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.      1705

 

மனமே! நீ மயக்கம் கொண்டு துயரத்தில் வேதனைக் கொள்ளாதே! கண்ணபுரத்தானைத் தொழும் பாக்கியம் கிடைத்ததால் வீணாகச் சம்சாரத்தில் மூழ்கி வருந்தாதே! கம்சனால் ஏவப்பட்ட பலம் மிக்க வேர் கொண்ட மருதமரங்கள் வடிவல் வந்த அசுரர்களையும், கொலை வெறியுடன் விஷப்பால் புகட்ட வந்த பூதனையையும், கோபம் கொண்டு குதிரை வடிவில் வந்த கேசிகாசுரனையும், கழுதை உருவில் வந்த தேனுகாசுரனையும், கோப வெறியுடன் வந்த காளைகளையும், மதம் பிடித்த யானைகளையும், சாணுகாசுரன், முஷ்டிகன் முதலான மல்லர்களை அழித்தவனும், சகடாசுரனைக் காலால் உடைத்து அழித்தவனும் இறுதியில் கம்சனை வதம் செய்தவனான எம்பெருமான் கோயில் கொண்டிருக்கும் இடம் திருக்கண்ணபுரமாகும். அத்தகைய புனிதமான இடத்தை நாம் சென்று சேவிப்போமாக என்கிறார் ஆழ்வார்.

நெஞ்சே! நீ மயக்கங்கொண்டு அனுபவித்து முடிக்கப் போகாத துக்கங்களில் ஈடுப்பட்டு வருத்தபடாமலிரு. ஏனென்றால், மிகுந்த வலிமையுடையதாய் வேரூன்றியிருந்ததான இரட்டை மருதமரங்களையும் மிகுந்த கோபங்கொண்டு வந்த பேய்ச்சியாகிய பூதனையையும் கோபத்தையுடைய கேசியென்னும் குதிரையையும் கழுதைவடிவம் கொண்டு வந்த தேனுகாசூரனையும் பெரிய வடிவம் பூண்டுவந்த விருஷபங்களையும் குவாலயபீடமென்னும் மதயானையையும் மல்லர்களின் உயிர்களையும் முடித்தவனும், திருவடியால் சகடாசுரனை பாய்ந்து முடித்தவனுமான பெருமானுடைய ஊரான திருக்கண்ணபுரத்தை நாம் தொழுவோம்.

மண்ணுலகில் வாழ்கின்ற மனிதர்களின் மனம் நாளும் பெருந்துயிரில் வாடுகிறது. அதனால் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்து வருகின்றது. பொருளீட்டுவதிலும், அது கிட்டாதபோது மனம் துன்பம் கொள்கிறது. பெண்ணாசையால் மதிமயக்கம் ஏற்பட்டு செயலிழக்கிறது. இவ்வாறு துன்பத்தில் ஈடுபடாமல் கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள கண்ணபுரக்கண்ணனின் திருவடியில் சரணம் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய்த் திரி கால் சகடம் சினம் அழித்து
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.     1706

 

கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துப் பெருமழையை வீணாக்கியவன். முன்பொருநாள் கொடியிடை கொண்ட நப்பின்னைக்காகப் பலம் கொண்ட கால்களையுடைய ஏழு காளைகளை அடக்கிய மாயவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன்,  பஞ்ச பாண்டவர்களுக்காகத் தூது சென்றவன், உருளும் சகடத்தில் கோபத்துடன் அசுரனைக் கொன்றவன், கன்றாக வந்தும், மரமாக நின்ற அசுரர்களைக் கொன்ற எம்பெருமான் கோயில் கொண்ட திருக்கண்ணபுரத்தை நாம் வணங்குவோமாக என்கிறார் ஆழ்வார்.

கோவர்த்தன மலையினால் பெரு மழையை பயனற்றதாம்படி செய்தவனும் முன்பொருகால், கொடி போன்ற அழகிய இடையை உடையளான நப்பின்னை பிராட்டிக்காக வலிய கால்களையுடைய ஏழு ரிஷபங்களை வலியடக்கினவனும் நித்யசூரிகளுக்குத் தலைவனும் மகா மாயனும் பஞ்ச பாண்டவர்களுக்காகத் தூது சென்றவனும், ஊர்ந்து செல்லும் காலை உடைய சகடத்தின் பகையை அழித்தவனும் கன்றாய் வந்த வத்ஸாசுரனை கொண்டு விளாமரமாய் நின்ற கபித்தாசுரன் மேல் வீசியெறிந்து இருவரையும் முடித்தவனுமான பெருமானுடைய ஊரான திருகண்ணபுரத்தை நாம் தொழுவோம்.

        ஏழு நாட்கள் இந்திரன் பெய்வித்த பெருமழையை கோவர்த்தன மலையைக் குடை போல் பிடித்து மக்களைக் காத்து அந்த மழையினைப் பயனற்றதாக ஆக்கியவன் எம்பெருமான். அவனை உறுதிப் பொருளாகப் பற்றிக் கொண்டால் வாழ்க்கை என்னும் போராட்டத்தில் நம்மை நோக்கி வரும் கணக்கற்ற அம்புகள் கூர் மழுங்கி வீணாகிவிடும். எனவே பகவானுக்கு மகிழ்ச்சி தரும் நல்ல காரியங்களை நாம் செய்து வந்தால் நமக்கு எவரும் தீங்கிழைக்க முடியாது என்ற படிப்பினை ஆழ்வார் நமக்குப் போதிக்கின்றார்.

       

கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ணபுரத்து எம் அடிகளை
திரு மா மகளால் அருள்மாரி செழுநீர் ஆலி வள நாடன்
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.         1707

 

கரிய நிறத்தில் பெரிதான மேகங்கள் தங்கியிருக்கும் நெடிதுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் சௌரிராஜப் பெருமானைக் குறித்து, திருமகளால் அருள்மாரியெனப் பெயர் சூட்டப்பட்ட, நீர்வளம் கொண்ட, செழுமைமிக்கதும், எப்போதும் நிலைத்திருக்கும் திருவாலி நாட்டின் தலைவனான காளமேகம் போன்ற வள்ளல் குணம் கொண்ட திருமங்கையின் அரசரான கலியன் இயற்றிய இப்பாடல்களை பக்தியுடன் பாடவல்லவர்கள் பூலோகமும், மேலோகமுமான இரு உலகங்களையும் அரசாட்சி செய்து தேவர்களால் வணங்கிப் போற்றப்படுவார்கள்.

கறுத்தப் பெருமேகங்கள் வந்து படியப்பெற்ற பெரிய மாளிகைகளை உடைத்தான திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் விஷயமாகப் பெரிய பிராட்டியாரடியாக அருள் மாரி என்ற திருநாமம் பெற்றவரும் ஜல ஸம்ருத்தியை உடைய திருவாலி நாட்டுக்குத் தலைவரும் எப்போதும் நிலைத்திருக்கும் தன்மைவாய்ந்த காளமேகத்தோடே ஔதார்யத்தை (கொடைத்தன்மை) உடையவரும் திருமங்கைக்குப் பிரபுவான ஆழ்வார் அருளிச்செய்த இப்பாசுரங்களை கற்றுணர்ந்த வல்லவர்கள் பூமியும் ஸ்வம்காமுமாகிற (தனித்தன்மையாகிற) இரண்டு உலகங்களுக்கு அரசராய் இருக்கப்பெற்று மேல் பரமபதத்திலும் சென்று நித்யமுக்தர்கள் ஸத்கரிக்கும்படி வாழ்வார்கள்.

        எம்பெருமான் இருக்கத் தீவினைகள் வந்து சேரும் என்று அஞ்ச வேண்டியதில்லை. திருக்கண்ணபுரம் வந்து பெருமானைத் தொழுதால் போதும். அனைத்துத் தீவினைகளும் அகன்றுவிடும். அத்தகைய வாய்ப்பும் கூட, அவன் முற்பிறவியில் செய்த நல்வினையால்தான் பெற முடியும் என்று ஆழ்வார் கூறுகிறார். மேலும் இப்பாசுரத்தைப் பயின்றால் நித்யசூரிகள்  இவர் திருவடிகளிலே வந்து விழும்படியான பேற்றினைப் பெறுவார்கள் என்று கூறுகிறார்.

       

வியம் உடை விடை இனம் உடைதர மட மகள்
குயம் மிடை தட வரை அகலம் அது உடையவர்
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில்
கயம் மிடை கணபுரம் அடிகள் தம் இடமே.      1708

 

இளம் மங்கையரின் நடையைக் கண்டு அழகிய நடைபயிலும் அன்னப்பறவைகள் வாழும் பொய்கைகள் அருகருகே உள்ள திருக்கண்ணபுரம், வலிமை பொருந்திய ஏழு காளைகளையும் அழித்து நப்பின்னையின் தனங்கள் அழுந்துமாறு மார்போடு அணைத்த பெரிய மலை போன்ற மார்பினையுடைய சௌரிராஜப் பெருமான் வீற்றிருக்கும் தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

முன்னடிகளில்‌ திருக்கண்ணபுரத்து எம்பெருமானுடைய பெருமையும்‌ பின்னடிகளில்‌ திருக்கண்ணபுரத்தின் சிறப்பும்‌ சொல்லப்படுகின்றன.‌ அன்னப் பறவைகள்‌ இளமகளிரது ௮ழகிய நடையை அநுகரித்‌து நடைபயிலப்‌ பெற்றதும்‌ பலவகைத்‌ தடாகங்கள்‌ நெருங்கயிருக்கப்‌ பெற்றதுமான திருக்கண்ணபுரம்‌, ஏழ்‌ விடைகளைச்‌ செற்று நப்பின்னைப் பிராட்டியின்‌, தனத்‌தடங்களை, ‌ திருமார்பாரத் தழுவிய பெருமான்‌ உறையுமிடம்‌ என்பதாகும்.

        பகவான் பரமாத்மாவாக இருக்கிறார். நாம் ஜீவாத்மாவாக இருக்கிறோம். பரமாத்மாவோடு ஐக்கியமாகும் தகுதி வரும்போது அதற்குத் தடையாக உள்ள ஏழு காளைகள் என்கின்ற ஏழு அசுரர்களைப் பகவானே அழித்து நம்மைக் காத்து, நம்மைப் புடம் போட்ட தங்கமாக மாற்றி விடுவார். வினைப் பயனால் வரப்பெற்ற அசுர குணங்களை நாம் அடியோடு நமக்குள் தடுத்து பகவானின் ஜோதியுடன் நாம் ஒரு சேரக் கலக்க வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.

 

இணைமலி மருதினொடு எருதிற இகல்செய்து 

துணைமலி முலையவள் மணமிகு கலவியுள் 

மணமலி விழவினொடு அடிய வரளவிய 

கணமலி கணபுரம் அடிகள் தம்இடமே.   1709

 

திருக்கண்ணபுரத்தில் நாள்தோறும் உற்சவங்கள் நடந்த வண்ணம் இருக்கும். அங்கு ஸ்ரீவைஷணவர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருவிழாக்களில் ஸ்ரீவைஷ்ணவர்கள் நெருங்கப் பெற்ற, திரள் நிறைந்த இடம் திருக்கண்ணபுரம் ஆகும். சேர்த்தி பொருந்திய இரட்டை மருத மரங்களை இற்று முறிந்து விழும்படி செய்தவனும், ஏழு காளைகளோடு போர் செய்தவனும், அதன் பலனாக நப்பின்னை பிராட்டியை மணமுடித்து இன்பம் அனுபவித்தவனுமான எம்பெருமான் கோயில் கொண்ட இடம் திருக்கண்ணபுரமாகும்.

மகிழ்ச்சி மிகுந்த விழாக்களில்  அடியவர்களின் கூட்டம்  நிறைந்த  திருக்கண்ணபுரமானது, இணைந்திருக்கும் இரட்டை மருதமரங்களை  இற்று விழும்படி செய்தவனும்,  எருதுகளோடு போர் புரிந்தவனுமான அழகிய நப்பின்னையின்  திருமணத்தில் உண்டாகும் சேர்க்கையின் அனுபவத்தை அடைந்த  பெருமான்  இருக்குமிடம் திருக்கண்ணபுரமே.

         நமது வலிமை அனைத்தும் ஆத்மாவில் தஞ்சமாகி உள்ளது. அது போன்று நாம் கொள்ளும் ஒழுக்கத்திலும் வலிமை அடங்கியுள்ளது.  அனைத்தும் நம் ஆத்மாவில் அடக்கம். வெளியே இருப்பவை நமக்கான தூண்டுகோலாகும். பரமாத்மாவின் கூறுகளாக நாம் உள்ளோம். ஆத்ம தரிசனத்திற்கு பெண் ஆசை தடை என்றால், அதையும் தகர்த்தெறிய வேண்டும். கண்ணன் மருத மரங்களை முறித்தது போல் நம்முள் இருக்கும் அற்ப ஆசைகளை முறித்து அவனை அடைய வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

 

புயல் உறு வரை மழை பொழிதர மணி நிரை
மயல் உற வரை குடை எடுவிய நெடியவர்
முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல்
கயல் துளு கணபுரம் அடிகள் தம் இடமே.       1710   

 

வயல்களில் களை பிடுங்குகிறவர்கள் களை பறிக்கும்போது சிறு தூறுகளிலிருந்து, முயல்கள் பயந்து துள்ளி வெளிப்பட்டு ஓடவும், செழிப்பாக விளையும் வயல்களிலே கயல் மீன்கள் துள்ளி விளையாடுமிடம் திருக்கண்ணபுரமாகும். புயலும், பெருமழையும் பொழிந்தபோது அழகிய பசுக்கள் கதிகலங்கி நிற்க, அச்சமயம் மலையால் குடையாய் பிடித்துக் காப்பாற்றிய மாதவன் குடியிருக்கும் புனித க்ஷேத்திரமாகும் என்கிறார் ஆழ்வார்.

களை பிடுங்கும் உழவர்கள் முகத்தில்  சிறு தூறுகளிலிருந்தும், புதர்களிலிருந்தும்  முயல்கள் துள்ள, வளம் மிக்க செழிப்பான வயல்களில் கயல் மீன்கள் துள்ள,  மேகங்களில் புயல் காற்றோடு கூடின கல் மழை பொழிந்த போது  அழகிய பசுக்கூட்டம்  கலங்கி நிற்க, கோவர்த்தன மலையை குடையாக பிடித்த காக்கும் பெருமான்  இருக்கும் ஊர்  திருக்கண்ணபுரமே.

        பசுக்கள் என்று ஆழ்வார் குறிப்பிடுவது உயிரை, அதாவது ஜீவாத்மாவை. அவைகள் பரமாத்மாவுடன் இணைய முயல்கின்றன. அவை நடைபெறாவண்ணம் சில தீயசக்திகள் தடுக்கின்றன. அதையும் பகவானே உடைத்தெறிவார். மலர்களைத் தேடி வண்டுகள் செல்வது போல் தேன் என்ற பக்தி நமக்கு உண்மையாக ஏற்பட்டுவிட்டால் பகவான் வந்த நம்மை ஆட்கொள்வார். நமக்கு துன்பங்கள் ஏற்பட்டால் நம்மை நாமே காத்துக் கொள்ள போராடும்போது பகவானும் முயற்சி செய்யட்டும் என்று விட்டுவிடுவான். நம்மால் முடியாமல் அவனை சரணடையும்போது உடன் வந்து நம்மைக் காப்பான். ‘அவனும் ரக்ஷிக்கத் தானும் ஒரு தலைப்பற்றுகையன்றிக்கே அவனே ரக்ஷகனாம்படியிருக்கை’ என்று பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் அருளியிருக்கிறார்.

       

ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய்
போது செய்து அமரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மதுகரம் குலவிய மலர் மகள்
காதல்செய் கணபுரம் அடிகள் தம் இடமே.       1711

 

நறுமணம் கொண்ட மலர்களைக் கோதி, தேன் பருகிய வண்டுகள் மொய்க்கும் தாமரைப் பூவில் அவதரித்த மகாலட்சுமி விரும்பும் திருக்கண்ணபுரம், மற்றவர்கள் ஏளனம் செய்யும்படி இளம் மங்கையர் கடைந்து வைத்த வெண்ணெயைத் திருப்தியாகத் திருடி உண்ட தூயவன் எழுந்தருளியிருக்கும் தலமாகத் திகழ்கின்றது என்கிறார் ஆழ்வார்.

விரைமலர் கோதிய மதுகரம் குலவிய” என்ற விசேஷணம் மலர்க்கும் ஆகலாம், கணபுரத்துக்கும் ஆகலாம். மலர்க்கு ஆகும் பக்ஷத்தில், வண்டுகள் வந்து மொய்கும்படியான செவ்விவாய்ந்த தாமரைமலரில் தோன்றிய பெரிய பிராட்டியார் விரும்பும்படி ஸ்ரீமத்தான திருக்கண்ணபுரம் என்றதாகும்.  கணபுரத்துக்கு விசேஷணமாகும் பக்ஷத்தில் எங்கும் வண்டுகள் மொய்க்கும்படியான மதுவெள்ளம் பொருந்திய திருக்கண்ணபுரம் என்றதாகும்.  விரைமலர் கோதிய மதுகரம் குலவியதும், மலர்மகள் காதல் செய்வதுமான கணபுரம் என்றவாறு.

         பாற்கடலில் மகாலட்சுமியின் கணவராகவும்,  வெண்ணெய் திருடியபோது யசோதையின் மகனாகவும், எடுத்துக்கொண்ட அவதாரத்திற்கு ஏற்றவாறு பால லீலைகளைப் பகவான் புரிந்தான். இத்தகைய விளையாட்டுக்களால் ஆய்ச்சியர் மீது அன்பு பெருகியதே தவிர எவரும் கண்ணனை வெறுக்கவில்லை.  அவனது லீலைகள் அனைத்தும் தெய்வீகமானது. ஆய்ச்சியர்களின் பிறவித் துன்பத்தைத் தீர்ப்பதற்காகச் செய்யப்பட்ட விளையாட்டுக்கள் இவை என்பது அதன் பொருளாகக் கொள்ளலாம். நவநீதக்களவு போன்ற சேஷ்டிதங்களை தினசரி அநுஸந்தித்து நமது பாவங்கள் தொலையப்பெற்று  புண்ணியம் பெறுவோம். இவ்வகையில் நம்மைப் பரிசுத்தராக்கவல்ல பெருமான் என்று கொள்ளுதல் வேண்டும்.

       

தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ
அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ
கண்டவர் கணபுரம் அடிகள் தம் இடமே.         1712

 

அடியார்களும், தேவர்களும், முனிவர்களும் வணங்கிப் பயன் பெறும்படியாக, அண்டங்களையும், அகன்ற நில உலகங்களையும் திருவிக்கிரமனாய் அளந்தவரும், எதிரிகள் மாளும்படி யுத்தம் செய்து, மதில்களையுடைய இலங்கை தீப்பிடித்து எரியும்படி நாசம் செய்தவருமான சௌரிராஜப் பெருமான் கொலுவிருக்கும் தலம் திருக்கண்ணபுரமாகும் என்கிறார் ஆழ்வார்.

திருக்கண்ணபுரம் தொண்டர்களும், பிரமன் முதலிய தேவர்களும்,  ஸனகாதி முனிவர்களும் தொழுது எழ, ஆகாசமும் பூமியும் அனைத்தையும் அளந்து கொண்டவரும்,  சத்துருக்கள் அழிந்து போகும்படி  போர் புரிந்தவரும்,  மதிளையுடைய இலங்கை முன்பு தீப்பற்றி எரியும்படி  பண்ணினவருமான எம்பெருமானின்  இருப்பிடமாகும்.

        அசுர சக்திகள் கை ஓங்கினால் நல்லவர்களும், முனிவர்களும் சாதுக்களும் நிம்மதியாக வாழ முடியாது. நாம் ஒழுக்கம் மிக்கவர்களாக இருந்தால்எந்தச் சக்தியும்ம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில்அவர்களைப் பகவான்ன் பார்த்துக் கொள்வான். சத்தியத்தை மீறுபவர்களைத் தான் பகவான் துன்பத்தில் ஆட்படுத்துகிறான்.  ஆனால் அவர்கள் தம் தவறை உணர்ந்து திருந்தி வரும் பட்சத்தில் அத்தகைய துன்பத்திலிருந்து பகவான் நம்மைக் காத்தருள்வார் என்பது இப்பாசுரம் கூறும் பொருளாகும்.

       

மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில்
தழுவிய உருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கணபுரம் அடிகள் தம் இடமே.      1713

 

பெரிய பிராட்டியான மகாலட்சுமி பொருந்தி வாசம் செய்யும் செழிப்புமிக்க தாமரை மலரிலே, தேன் பருக  மூழ்கிய வண்டுகள் பாடும் இன்னிசை எங்கும் கலந்திருக்கும் இடம் திருக்கண்ணபுரமாகும். கோடரியை ஆயுதமாகக் கொண்ட பரசுராமராக அவதரித்த நீர்கொண்டெழுந்த கார்மேகம் போன்ற திருவுருவத்தைக் கொண்டவனான சௌரிராஜப் பெருமான் குடியிருக்கும் க்ஷேத்திரமாகும் என்று பாடுகிறார் ஆழ்வார்.

        ஜமதக்னி முனிவரின் மகனாக பரசுராமர் என்ற பெயரில் பகவான் அவதாரம் செய்தார். தன் மனைவியையே வெட்டி வீழ்த்துமாறு தந்தை சொன்ன கட்டளையை உடன் நிறைவேற்றினார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற சொல்லுக்கு பரசுராம அவதாரம் ஒரு உதாரணம். பின் தந்தை மூலமாகவே தாயை உயிர் பெறச் செய்தார். அதர்மம் செய்த அரச குலத்தவரை இருபத்தியோறு தலைமுறைகள் தலை தூக்காதவாறு செய்தார். தருமத்தை நிலை நிறுத்தவே பகவான் அவதாரமாகத் தோன்றினார். அத்தகைய பெருமான் அவதரித்த இடம் திருக்கண்ணபுரமாகும். இப்பாசுரத்தில் ஆயுதம் என்று குறிப்பிடுவது பெருமானின் இருப்பிடத்தையாகும்.

       

பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம்
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர்
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர்
கருதிய கணபுரம் அடிகள் தம் இடமே.        1714

 

நல்ல உச்சரிப்புடன் கூடிய அருமையான வேதங்களை முறைப்படி  ஓதுகின்ற அன்பர்கள் புகலிடமாகக் கருதுமிடம் திருக்கண்ணபுரம் திவ்ய தேசமாகும். சூரியனும், சந்திரனும், பனி மலைகளும், எட்டு திசைகளில் உள்ள நிலங்களும், எரியும் அக்கினியாவும் இருக்கும் சௌரிராஜப் பெருமான் எல்லாவற்றையும் இயக்குபவராகத் திகழ்கிறார். இவர் உறையும் திருத்தலம் திருக்கண்ணபுரமாகும் என்கிறார் ஆழ்வார்.

ஸ்ருதியோடு அருமையான  வேதங்களை முறைப்படி  ஓதும் அடியவர்கள்  பிராப்யமாகக் கருதும்  திருக்கண்ணபுரமானது  சூரியன்,  அழகிய சந்திரன், பனி மலைகள்,  திசைகள்,  பூமி, எரியும் அக்னி என்று  இவற்றை எல்லாம்  தன்னுடையதாகக் கருதுபவரும்  தானே நியமிப்பவருமான எம்பெருமானின்  இருப்பிடமாகும்.

        இவ்வுலகமே பகவானின் வடிவம்தான். ஆனால், மாயத்திரை நம் கண்களை மறைப்பதால் இவ்வுலகத்தையும், பகவானையும் வேறுபடுத்திப் பார்க்கிறோம். அதனால் பகவானின் காட்சி கிடைக்கவில்லை என்று சொல்லி வருகிறோம்.   நாம் காணும் அனைத்துக் காட்சிகளும் பகவானின் வடிவங்கள். இத்தகைய தெளிவு நமக்கு வந்துவிட்டால் நாம் எவருக்கும் தீமை செய்யாதிருப்போம். கடுஞ்சொல் பேசாதிருப்போம், அலட்சியம் செய்து அவர்களைத் துன்பம் கொள்ள செய்யமாட்டோம். அனைத்தும் பகவானின் ரூபங்கள் என்று நினைக்கும் நிலையில் நாம் சொர்க்கத்தை அடைவோம் என்பது இதன் கருத்தாகும்.

       

படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை அகலம் அது உடையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர்
கடி புல்கு கணபுரம் அடிகள் தம் இடமே.        1715

 

நாற்றுகளில் உள்ள வேர்முடிகளோடு இருக்கும் நீளமான வயல்களில் கலப்பையால் உழும்போது காலில் உரசும் தாமரை முதலான மலர்கள் நறுமணம் வீசும் திருக்கண்ணபுரம், பலர் வணங்கும்படி மண்ணுலகை அளாவி திருப்பாதங்களையுடைய, தாமரைப் பூவில் வசிக்கும் கொடி போன்ற திருமகளால் அணைக்கப்பட்ட பெரிய திருமார்பைக் கொண்ட சௌரிராஜப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் க்ஷேத்திரமாகும் என்கிறார் ஆழ்வார்.

        படைநின்ற  பைந்தாமரையோடு அணிநிலம் மடைநின்றலரும் வயலாலிமணாளா’ என்ற பாசுரம் இக்கணம் நினைவில் வருகிறது. விண்ணையும், மண்ணையும் அளந்தால் அவை பகவானுக்கு உரிய இடம் என்பது பொருளாகும். பகவானுக்குரிய இம்மண்ணுலகில் அவரது விருப்பத்தின்படி தருமச் செயல் நடைபெற வேண்டும். அதர்மம் ஓங்கும்போது நான் அவதரித்து அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டுவேன் என்பது கீதையில் பகவான் சொன்னதாகும்.  இந்த நிதர்சனமான உண்மையைப் புரிந்து கொண்டால் எல்லாத் துன்பங்களும் விலகிப் போகும் என்பது பொருளாகும்.

       

 புல மனும் மலர்மிசை மலர் மகள் புணரிய
நிலமகள் என இன மகளிர்கள் இவரொடும்
வல மனு படையுடை மணி வணர் நிதி குவை
கல மனு கணபுரம் அடிகள் தம் இடமே.      1716

 

பொற்குவியல்களைக் கொண்ட மரக்கலங்கள் செல்லும் கடலின் அருகில் உள்ள க்ஷேத்திரம் திருக்கண்ணபுரமாகும்.  இத்தலம் ஐம்புலன்களும் லயிக்குமாறு அழகிய தாமரைப் பூவில் தோன்றிய மகாலட்சுமி, நிலமகள் இருவரோடும் வலக்கரத்தில் சுதர்சன சக்கரத்தோடும், நீலமணி போன்ற நிறமுடைய சௌரிராஜப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் புனிதத் தலமாகும் என்கிறார் ஆழ்வார்.

நிதிக் குவியல்களைக் கொண்டு வரும் மரக்கலங்கள் நிறைந்த திருக்கண்ணபுரம் புலன்களைக் கவரும் தாமரையிலிருக்கும் திருமகளோடும் என்றும் தன்னோடு கூடின பூமாதேவியோடும் என்று இப்படிப்பட்ட பெண்மையையுடைய இவர்களோடும் வலது கையில் சக்கரத்தை உடையவனும் நீலமணி போன்ற நிறமுடைய வடிவழகை உடைய  எம்பெருமானின் இருப்பிடமாகும்.

        இது போன்று ‘நலங்கொள் நவமணிக்குவையும் சுமந்தெங்கும் நான்றெசித்து, கலங்களியங்கும் மல்லை’ என்றும் ஆழ்வார் பாடியுள்ளார். மகாலட்சுமி சகல செல்வத்திற்கும் அதிபதி.  நிலமகள் சகல உயிர்களையும் தாங்கும் தாய்.   இவ்விருவரையும் துணையாகச் சுதர்சனச் சக்கரத்தைத் தாங்கி நிற்கிறார் பகவான். உலக இயக்கங்களை இவ்விருவர் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதர்மமான முறையில் உலகினை சீர்குலைக்க அசுர சக்திகள் வரும்போது சுதர்சனச் சக்கரத்தால் அதனை அழிக்கின்றார் பகவான். அதனால்தான் இம்மண்ணுலகில் இயக்கங்கள் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

       

மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர்
கலியன தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே.       1717

 

நிறைந்த புகழையுடைய திருக்கண்ணபுரத்தை உரைவிடமாகக் கொண்ட சௌரிராஜப் பெருமாளை, வலிமை வாய்ந்த மதில்களருகில், சுற்றிலும் வயல்களை அலங்காரமாகக் கொண்ட திருமங்கையின் தலைவரான கலியன் போற்றி இயற்றிய இத்தமிழ்ப் பாசுரங்களை, இனிய ராகத்தோடு பாடும் அன்பர்கள் துன்பங்களை  எந்நாளும் அனுபவிக்க வேண்டியிருக்காது என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பரவாசுதேவனாகச் சகல குணங்கள் நிறைந்த பரத்துவ நிலையிலும், உபாயமாகப் பற்றுமிடத்தில் சௌலப்யம், வாத்சல்யம் போன்ற குணங்கள் நம் போன்ற சம்சாரிகளுக்குப் பிரகாசிப்பதில்லை. பகல் விளக்கு போன்று மங்கியிருக்கும்.  ஆனால் அர்ச்சாவதாரத்தில் சம்சாரிகளை நேரடியாக முகம் பார்த்துக் கொண்டிருப்பதால் அத்தகைய குணங்கள் இருட்டறையில் உள்ள விளக்கு போன்று பேரொளி பெற்று விளங்கும் என்ற கருத்து இப்பாசுரம் மூலம் அறியப்படுகிறது. எனவே இப்பாசுரங்களை பக்தி சிரத்தையுடன் வாசிப்பவர்களுக்குத் துன்பம் நெருங்காது என்று கூறுவது இந்த ஆத்ம ஐக்கியத்தின் பின்னணியில்தான் என்பதை அறிய முடிகின்றது.

       

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின்
மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா உருவில் ஆன் ஆயன் அவனை அம் மா விளை வயலுள்
கான் ஆர் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே.       1718

 

கடல் வெள்ளம் அமரர்கள் சஞ்சரிக்கும் எல்லை வரைக் கடந்து பரந்து சென்ற காலத்தில் பலமுள்ள பிரம்மாண்டமான மச்ச வடிவில் தோன்றி அனைவரையும் வியக்குமாறு உயிர்களைக் காத்த குளிர்ச்சியான தாமரை போன்ற விழிகளையுடையவனை, விகாரம் சிறிதும் இல்லாத உருவைக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த பெருமானை, அழகிய விளை வயல்களும், காடுகள் போன்ற தோட்டங்களும் கொண்ட திருக்கண்ணபுரத்தில் அடியேன் தரிசனம் செய்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பிரளய காலத்தில் நான்கு வேதங்களைப் பிரம்மனிடமிருந்து அபகரித்த அசுரனிடமிருந்து மீன் வடிவில் சென்று அவற்றை மீட்டு வந்தார் பகவான். இயற்கையின் சீற்றத்திற்கும், அதர்மக்காரர்களின் ஆர்பாட்டங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. அண்ட சராசரங்களைப் படைத்த பகவானின் கூறுகளாக நாம் இருக்கிறோம். பகவான் இருக்க எந்த நிலையிலும் அழிவில்லை. மரணம் என்பது உடலுக்குத்தான், ஆன்மாவுக்கு இல்லை என்ற தத்துவத்தை எடுத்துரைத்த ஸ்ரீகிருஷ்ணன் வாசம் செய்யுமிடம் திருக்கண்ணபுரமாகும்.

       

 மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்
விலங்கல் திரியத் தடங் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே.       1719

 

பாற்கடலில் உள்ள மீன் இனங்கள் தடுமாற்றம் கொள்ளும்படி பெரிய வெள்ளம் வந்து நீர் கலங்குமாறு அதில் மந்தார மலையை நாட்டி, ஒளிமிக்க அமிர்தம் வெளிப்படும் வரை ஒப்பற்ற ஆமையாகத் தோன்றி, அம்மலை நான்கு திசைகளிலும் சுழலுமாறு அதைத் தாங்கிக் கொண்டிருந்த ஆச்சர்யபூதனான பெருமானை கலங்கிய கடல் பக்கமுள்ள கண்ணபுரத்தில் அடியேன் தரிசனம் செய்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பாற்கடல் என்பது நம் மனமாகும்.  இதனைக் கடையக் கடைய அதாவது ஆராய ஆராய ஆலகால விஷம் வெளியேறியது போன்று நம் மனத்தில் உள்ள தீய எண்ணங்கள், அசுர குணங்கள் ஆகியவை வெளியேறி விடும். சிவபெருமான் விஷத்தை உண்டபின் பாற்கடலில் பல அற்புதப் பொருட்கள் வெளியேறின. இறுதியாக அமிர்தம் வந்தது. அது போன்று நம் மனதில் உள்ள தீய குணங்கள் என்ற நஞ்சு வெளியேறியதும் ஆத்மா என்ற அமிர்தத்தை நாம் அடைவோம். ‘மண்ணும் வடமலையை மத்தாக மாசுணத்தால், மின்னுமிரு சுடரும் விண்ணும் பிறங்கொளியும், தன்னினுடனே சுழல மலை திரித்து’ என்ற பெரிய திருமடல் பாடலை நினைவில் கொள்க.

 

பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின்
ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய் எடுத்த ஆற்றல் அம்மானை
கூர் ஆர் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
கார் ஆர் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே.      1720      

 

பொங்கி வரும் சமுத்திரமானது பூமியை விழுங்கியபோது, வளைந்த கோரைப் பல்லைக் கொண்ட, அழகிய திருமேனியையுடைய வராஹமூர்த்தியாகப் பூமியை மீட்டு வந்த வலிமை படைத்த சர்வேஸ்வரனை, கூரிய அலகுடைய நாரைகள் ஆரல் மீன்களைப் பிடிப்பதற்காக நீரில் பாய, கயல் மீன்கள் அஞ்சி ஓடிவிட, கார்மேகங்கள் படிந்த சோலைகளையுடைய திருக்கண்ணபுரத்தில் அடியேன் தரிசனம் செய்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        மஹாவராகமாக அவதரித்தருளின கண்ணபுரத்தில் சேவிக்கப் பெற்றேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஸ்வேதவராஹ கல்பத்திற்கு முந்திய பாத்ம கல்பத்தைப் பற்றிப் பிரளயத்தின் இறுதியில் ஶ்ரீமந் நாராயணன் ஏகர்ணவமான (ஊழிக்காலம்) பிரளய ஜலத்தின்கண் முழுகியிருந்த பூமியை மேலெடுக்க வந்ததென்று காண்கிறோம்.

        இந்தப் பூமியானது கர்மவினைகளைக் தீர்த்துக் கொள்வதற்கான பயிற்சிக் களமாகத் திகழ்கின்றது.  நம்முடைய தீவினைகளின் பலன்களை இம்மண்ணுலகில்தான் நாம் அழிக்க முடியும். அதே போன்று நல்வினைகளையும் இங்குதான் மேற்கொள்ள முடியும். அந்த நல்வினைகள் கொண்டு தீவினைகளை அழிக்க முடியும்.  தீவினைகளை அழித்துவிட்டால் நாம் ஆத்ம தரிசனத்திற்கு தயாராகி விடுவோம். இத்தகைய சிந்தனைகளை நினைவுபடுத்தும் விதமாக இப்பாசுரம் அமைந்துள்ளது.

       

உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்து
பிளந்து வளைந்த உகிரானைப் பெருந் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே .     1721

 

பார்த்த மாத்திரத்தில் அஞ்சி நடுங்கும்படியான சிங்க வடிவும், மனித உடலும் கொண்ட வடிவமாக நரசிம்மராய் தோன்றி, அதன் கோபத்தைக் கண்டு விண்ணுலகத்தவர் அஞ்சி நடுங்கப் பகைவனான இரண்யகசிபுவின் மார்பை மடித்தலத்திலே இருபிளவாக்கிய வளைந்த நகங்களையுடையவன், அழகிய நெற்கதிர்கள் வயிரம் பற்றி இருள் மூடியிருக்கும் நெற்களத்தில் சேமித்து வைக்கும் தலமான திருக்கண்ணபுரத்தில் அடியேன் தரிசனம் செய்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பிரம்மனால் படைக்கப்பட்ட எவ்வுயிராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்ற வரத்தைப் பெற்ற இரணியனின் அகந்தையை அழித்துக் கொன்றான். தன் உயிரான பாகவதர்களுக்கு தீங்கு நேர்ந்தால் தனக்கு நேர்ந்தது போன்று அவர்களின் துயரை உடன் துடைப்பான் பகவான். அதர்மம் எவ்வளவு பலம் உள்ளது போல் தோன்றினாலும் அதைத் தர்மம் அழித்துவிடும். நம்முள் இருக்கும் ஆத்ம ஒளியை காணவொட்டாமல் எவ்வளவு திரைகள் நமக்குப் போடப்பட்டாலும் அந்தத் திரைகள் பகவானின் கருணையால் கிழித்து எறியப்படும் என்பதை இப்பாசுரம் உணர்த்துகின்றது.

 

தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய் வந்து தோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே .       1722  

 

பார்த்தவுடன் வணங்கும்படியான எளிமையான தோற்றத்தில் தோன்றும் வாமனன், மகாபலியிடம் சமுத்திரம் சூழ்ந்த இவ்வுலகத்தை யாசித்துப் பெற்ற மூப்படையாத உருவம் கொண்ட திருவிக்கிரமனை, எப்போதும் உழுகின்ற வயல்களில் பொன் நிறத்தில் நெல் விளைய, மற்றொரு பக்கம் முல்லை மலர்களும், கருமுகைப் பூக்களும், செங்கழுநீர்ப் பூக்களும் பூத்திருக்கும் திருக்கண்ணபுரத்தில் அடியேன் தரிசனம் செய்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

        இராமழை பெய்த வீரவீரத்துள், பனைநுகங்கொண்டு யானையேர் பூட்டி, வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும், வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே’ என்று திருக்கண்ணபுரத்தை வர்ணித்துள்ளார்.  வலிமையுள்ள சக்திகள் அனைத்தும் நுண்ணியமாக உள்ளன. நம் உடல் பெரிதாக இருக்கும் நிலையில் நமது ஆன்மா மிகவும் நுண்ணியதாக உள்ளது.  நம் வலிமைக்கு காரணம் நுண்ணிய நரம்புகள்தான். ஆனால் உடல் பாகங்கள் பெரிதாகத் தெரிகின்றன. நம்மில் இயங்கும் இவை நுண்ணிய வடிவமாக உள்ளது. ஆத்மா சிறியது அதிலிருந்து வரும் அண்டங்கள் பெரியதாகும். எனவே நம் ஆத்மாவைப் போற்றி அதைப் பரமாத்மாவுடன் இணைக்க முயற்சித்தல் வேண்டும்.

 

       

வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால்
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டு உகுக்கும்
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே.      1723

 

கூர்மை பொருந்திய வாயையுடைய, கோடாலியை ஆயுதமாகக் கொண்டு, பரசுராமனாக அவதரித்து, இருபத்தோரு தலைமுறைவரை மண்ணுலகில் பெருகிவிட்ட பகை அரசர்களை அழித்த, மிடுக்குடைய பெருமானை, குடும்பமாக வண்டுகள் தேனை உறிஞ்சும்படியான நீலோற்பவ மலர்களில் உள்ள தேனைப் பெருக்கும், பரிமளம் மிக்க சுற்றுப் பிரதேசங்களையுடைய வயல்களைக் கொண்ட திருக்கண்ணபுரத்தில் அடியேன் கண்டு கொண்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.      

வண்டுகள் உண்ணுமாறு மலர்கள் மதுவைப் பெருக்குகின்றனவாக உரைத்தல் ஒன்று.  வண்டுகள் மதுவை யதேஷ்டமாக உண்ட பின்னும் மலர்கள் மதுவை மேன்மேலும் பெருக்கிக்கொண்டே யிருக்கின்றனவாக உரைத்தல் மற்றொன்று. 

        பரசுராமனின் தந்தையான ஜமதக்னி மகரிஷியை அரச குலத்தவர் அதர்மமான முறையில் கொன்றனர். அவர்களைப் பழிவாங்கும் விதத்தில் அரச குலத்தைத் தமது கோடரியால் வெட்டி அழித்தார். அதர்மம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் பகவான் அவர்களைத் தயவு தாட்சண்யமின்றி அழிப்பான் என்பது இதன் உட்பொருளாகும். ‘கோக்குல மன்னரை மூவெழுகால் ஒரு கூர்மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன்’ என்று இராமாநுஜ நூற்றந்தாதியில் கூறப்பட்டுள்ளது.

 

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழுந் தண் கானல் மணம் நாறும்
கைதை வேலிக் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே.      1724

 

இந்த உலகமெல்லாம் ஒன்று சேர்ந்து திருவடிகளில் வணங்க, தான் எவரையும் அடிபணிய வேண்டாதபடி சக்கரவர்த்தித் திருமகனாய் அவதரித்து, கொடிய கோபம் கொண்டு, அரண்களையுடைய, இலங்கையில் வசித்தவர்கள் குடும்பத்தை எமலோகத்திற்கு அனுப்பக் கடும்போர் புரிந்த ஸ்ரீராமன், குளிர்ந்த நெய்தல் நிலத்தையுடைய மணமுள்ள தாழம்பூக்களை வேலியாகக் கொண்ட திருக்கண்ணபுரத்தில் அடியேன் தரிசனம் செய்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        அதர்மம்  செய்பவர்கள் நரகிற்கு செல்கிறார்கள்.  நல்வினை செய்பவர் சொர்க்கம் செல்கின்றனர். இராவணன் மாற்றான் மனைவியைக் கவர்ந்து சிறை வைத்து அதர்மம் செய்தான். அவனுக்கு ஆதரவு தந்தவர்களை ஸ்ரீராமன் யமலோகம் அனுப்பி வைத்தார். அது சமயம் தர்மத்துடன் வாதிட்ட விபீஷணனுக்கு அரசாட்சியைக் கொடுத்தார். உடன் பிறந்தவர்களாயினும் இருவரும் இரு துருவங்களாகத் திகழ்ந்தனர். அதற்குத் தகுந்தவாறு தீர்ப்பு செய்தார். அத்தகைய பகவான் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ளார்.  அவரை வணங்கி உயர்ந்த நல்வினைகளை பெறுவீர்களாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண்பால் செல்ல வெம் சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல் இருப்ப
கற்ற மறையோர் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே.       1725

 

ஒரு காதில் குண்டலமும், ஒரு பக்கத்தில் கலப்பையும் கொண்டு பலராமனாய் அவதரித்து, வெற்றியை மட்டுமே கொண்ட வேற்படை வேந்தர்களை வீர சொர்க்கத்திற்குச் செல்லுமாறு கொடிய போரில் அவர்களை அழித்து வெற்றி பெறும் பெருமானை, மூன்று வேள்வித் தீயும், இல்லந்தோறும் திகழும் வேதம் பயின்ற வேதியர்கள் நிறைந்திருக்கும் திருக்கண்ணபுரத்தில் அடியேன் தரிசனம் செய்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

ஸ்ரீராமாவதாரத்தில்‌ ஆதிசேஷன் அம்சமாய்‌ தோன்றிய லக்ஷ்மணன்‌ தனக்குச்‌ செய்‌த அரிய பெரிய பணிவிடைக்கு உவந்து பகவானாகிய 'ஸ்ரீம‌ந் நாராயணன்‌ அவ்வாதிசேஷனை நோக்கி மற்றோரவதாத்தில்‌ உமக்கு நான்‌ தம்பியாய்ப்‌ பிறந்து உம்மைப்‌ பூஜிக்கக்கடவேன்‌? என்று வரமளித்திருந்தார்‌. அந்த அவதாரங்களுக்குப் பின்னர்‌ த்வாபர யுகத்தில்‌, இப்பூமியில்‌ முன்‌ ராமாவதாரத்தில்‌ ராம பாணத்தினால்‌ அடிபட்டு மரணமடைந்த  அரக்கர்கள்‌ க்ஷத்ரிய ஜாதியில்‌ பிறந்த ஜனங்களை நலிந்து கொண்டிருக்கையில்‌, பகவான்‌ மீண்‌டும்‌ அவதரித்து, முன்போலவே அவர்களை அழிக்கக்கருதி ௮திசேஷனை நோக்க, அடுத்து வரும் கிருஷ்ணாவதாரத்தில் நீர் எமக்கு வசுதேவராகப் பிறக்க வேண்டும் என்றார். எனவே பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் உள்ள தொடர்பானது யுகங்கள் கடந்தும் நீண்டு வருகின்றது எனலாம்.

        கலப்பை நிலத்தைப் பண்படுத்தப்ப் பயன்படுகிறது. அது போன்று இந்நிலத்தில் தோன்றிய உயிர்களைப் பண்படுத்தி நல்வழியில் செல்வதற்காகக் கொடியவர்களை இக்கலப்பையால் அழித்தான்.  வயல்களில் உள்ள  களைகளை நாம் அழித்துப் பயிர்களைக் காப்பதுபோல் பகவான் தீயவர்களை அழித்து உலகினைச் சிறப்பாக இயக்கி வருகின்றார். நமது ஆத்ம தரிசனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் களைகளான தீமைகளைக் கலப்பை என்னும் விவேகத்தால் விலக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

       

துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
உவரி ஓதம் முத்து உந்த ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே.       1726

 

இலவம்பூ போலவும், கொவ்வைக்கனி போலவும் சிவந்த வாயையுடைய பூமிதேவியின் பாரத்தைத் தீர்க்கப் பாரதப் போரில் பகை வேந்தர்கள் தடுமாறும்படி செய்த தேவகி மைந்தன் நள்ளிரவில் அவதரித்தான். ஒரு பக்கம் கடல் அலைகள் முத்துக்களை பக்கமாகச் சேர்க்க, மற்றொரு பக்கம் அழகிய சம்பாப் பயிர்கள் சாமரம் போல் அசைய திருக்கண்ணபுரத்தில் அந்த மாயவனை நான் தரிசித்தேன்.

        ஒரு பக்கத்தில் கடலலைகள் வந்து முத்துக்களைக் கொழித்துத் தள்ளவும் மற்றொரு பக்கத்தில் செந்நெற் பயிர்கள் கதிர்களை வணங்கிச் சாமரம் வீசுவதுபோல் அசையவும் அழகு மிக்கதாம் திருக்கண்ணபுரம்.  இக்கோயிலுக்கு முன்னர் ஏழு மதில்கள் இருந்தன என்றும், ஏழாவது மதில் கிழக்கே பதின்மூன்று மைல் தூரததில் உள்ள கடல்வரை பரவி இருந்தது என்றும், அதனாலேயே 'வேலை மோதும் மதில்சூழ் திருக்கண்ணபுரம்' என்று நம்மாழ்வார் பாடினார் என்றும் சொல்வர். இத்தலத்தில் உள்ள ஏழாவது மதிலில் கடல்வரை பரவியுள்ளதாக ஆழ்வார் குறிப்பிடுகிறார். ஆழ்வாரது காலத்தில் திருநாகை திவ்யதேசம் கடலினுள் இருந்ததா என்ற ஐயம் தோன்றுகிறது.

        பூமி தேவி எத்தனை பாரத்தை சுமந்தாலும் இலவம் பஞ்சு சும்ப்பது போலிருக்கும்.  ஆனால் ஒரு கொடியவனை சுமப்பது என்பது இரும்பு மூட்டையை சுமப்பது போலிருக்கும். பூமிதேவி அனைவருக்கும் தாய். நல்லவர்களை மகிழ்வுடன் தாங்குகிறாள். தீயவர்களை பாரத்துடன் தாங்குகிறாள். அதனால் அவதியுறுகிறாள்.  அரக்கர் குலத்தைத் தாங்க முடியாமல் தத்தளித்தாள். அவர்களது பாரத்தை நீக்கப் பகவான் பூமியில் அவதரித்து அசுரர்களை வதம் செய்தார். அத்தகையவன் திருக்கண்ணபுரத்தில் சேவை சாதிக்கிறான் என்பது பொருள்.

       

மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய் முன்னும் இராமன் ஆய்த்
தான் ஆய் பின்னும் இராமன் ஆய்த் தாமோதரன் ஆய்க் *கற்கியும்
ஆனான் தன்னை கண்ணபுரத்து அடியேன் கலியன் ஒலிசெய்த
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை செப்ப பாவம் நில்லாவே.       1727

 

மீன், ஆமை, வராகம், நரசிங்கம், வாமனர், பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கல்கி ஆகிய பத்து அவதாரங்களையும் எடுத்த பரந்தாமனைத் திருக்கண்ணபுரத்திலே வணங்கிய பக்தரான கலியன் இயற்றிய தேன் போன்ற இனிய வார்த்தைகளைக் கொண்ட இத்தமிழ்ப் பாசுரங்களைப் பக்தியோடு பாடுவோரின் பாவங்கள் நிற்காமல் ஓடிவிடும் என்று ஆழ்வார் தெரிவிக்கிறார்.

        பத்து அவதாரங்கள் எடுத்து அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநிறுத்திய பரந்தாமனைப் பற்றி ஆழ்வார் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றும் நமக்கு நல்வழிகளைக் காட்டுகின்றன.  இம்மண்ணுலகில் வளமோடு வாழ்வதற்கும், தீவினைகளில் சிக்காமல் இருப்பதற்கும், நம்முள் இருக்கும் ஆத்ம ஒளியைக் காணுமாறு செய்வதற்கும், இப்பாசுரங்கள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன. ஒளி வந்தால் இருள் ஓடிவிடுவது போன்று பாசுரங்களைப் படித்தமட்டில் நம் பாவங்கள் விலகி ஓடிவிடும் என்பது இதன் பொருளாகும்.

 

       

 கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை
மைம் மான மணியை அணி கொள் மரதகத்தை
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே .       1728

 

நீண்ட துதிக்கையைக் கொண்ட மதம்கொள்ளும் இயல்பினைப் பெற்ற கஜேந்திரன் என்ற யானையின் துயரினைத் தீர்த்த கார்மேகம் போன்றவனை, மைப் போன்ற கரிய நிறம் கொண்ட மாதவனை, பெரு விலைபெறும் நீலமணி போன்றவனை, அழகு பொருந்திய மரகதம் போன்ற என் சுவாமியை, என் மனதில் குடியிருக்கும் பெருமாளை, அடியேன் சரண் அடைந்து பிறவிப் பேறு பெற்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

பசுமை, நீலம், கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரதகப் பச்சையையும் உவமை கூறுவதுண்டு “பச்சை மாமாலை போல் மேனி” என்ற திருமாலையுங்காண்க; காணப்புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸாரதாபங்களை யெல்லாம் போக்கும் தன்மையும் இவ்வுவமையினால் தொனிக்கும்.

        கஜேந்திரன் என்ற யானையானது முதலை வாய்பட்டு காலில் குருதி சொட்ட அதனால் ஏற்பட்ட துன்பத்தைவிட, தான் பறித்த செந்தாமரை மலர் காய்வதற்குள் எம்பெருமானது திருவடியில் சேர்ப்பிக்க வேண்டும் என்பதே அதன் விருப்பமாகும். அடியார்கள் துயர் தீர்ந்தால் அதனால் எம்பெருமானின் திருமேனியில் ஒரு புதியபுநர் உண்டாகும். அது போன்று ‘எம்பெருமானே! எனக்கு நீயே அமையும்; உன்னிடத்தில் பெறுவதொரு பேறும் நான் விரும்பவில்லை என்று அடியார்கள் வேண்டுவதும் சேதனனுக்கு புதுத்தெம்பு உண்டாகும் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். எனவே திருக்கண்ணபுரத்து பகவானை சரணடைந்து பிறவிப் பிணியை தீர்த்துக் கொள்ள வாருங்கள் என்பது இதன் பொருளாகும்.

       

தரு மான மழை முகிலைப் பிரியாது தன் அடைந்தார்
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவில்
திருமாலை அம்மானை அமுதத்தைக் கடல் கிடந்த
பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே .       1729

 

கல்பவிருக்ஷம் போன்றவனை, காளமேகத்தைப் போன்றவனை, எப்போதும் பிரியாமல் தன்னை சரண் அடைந்தவர்க்கு ஏற்படும் அவமதிப்பை நீக்கும் சிந்தாமணி போன்றிருப்பவனை, அழகே வடிவாயிருக்கும் லஷ்மிநாராயணனை, சர்வ சேஷியாக இருப்பவனை, அமிர்தமானவனை, திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவனை, திருக்கண்ணபுரத்தில் அடியேன் சரண் புகுந்து பிறவிப் பேற்றினை அடைந்தேன் என்று பாடுகிறார் ஆழ்வார்.

        கல்பவிருக்ஷத்தை விட மேன்மையானவன் எம்பெருமான். விருக்ஷம் மற்றவர்களுக்கு அனைத்தையும் அளிக்கும், தன்னைக் கொடுக்காது. பெருமானோ  அடியார்களுக்குப் பலன்களையும் கொடுத்துத் தன்னையும் கொடுப்பான். மழை மேகமான பெருமான் நீரை சுமந்து சென்று நாடெங்கும் பொழிபவன். அடியார்களைத் தேடிச் சென்று உதவுபவன். கௌரவர் சபையில் பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமதிப்பை உடன் வந்து போக்கியவன், வாலியால் அவமதிப்புக்குண்டான சுக்ரீவனை மானம் காத்து அவனது அவமதிப்பைப் போக்கியவன், அறவுரைகள் பல சொல்லியும் கேளாமல் மாற்றான் மனைவியைக் கவர்ந்த இராவணனால் விபீஷணனுக்கு ஏற்பட்ட அவமதிப்பைப் போக்கியவன் எம்பெருமான் என்பது இதன் பொருளாகும்.

 

விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உற
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ.       1730  

 

முன்பு நப்பின்னையைத் திருமணம் செய்ய ஏழு காளைகளைச் சினந்து அடக்கியவனை, வானரப் படையின் உதவியால் பெரிய சமுத்திரத்தில் அணை கட்டியவனை, பரந்தாமனை, சிறந்த ஒளி வடிவானவனை, மடைகளில் நீலோற்பவ மலர்கள் நிறைந்திருக்கும் வயல்களால் சூழப்பட்ட திருக்கண்ணபுரமென்ற அழகிய தலத்தை வாசஸ்தலமாகக் கொண்ட பெருமானுக்கு அடியவனான நான் இன்னொருவருக்குச் சொந்தமாவேனா என்று வினவுகிறார் ஆழ்வார்.

அன்று கண்ணன் ஏழு எருதுகளை  சீற்றத்துடன் அடக்கினவனும் திருகூடமலையில் சேரும்படி இராமன் வானரச் சேனைகளைச் சேர்த்து கடலில் அணை கட்டினவனும்  பரமனுமான எம்பெருமான்  மடைகள் எங்கும்  அழகிய நீலோற்பவ மலர்களாலே நிறைந்து  சூழ்ந்த வயல்களையுடைய  திருக்கண்ணபுரத்தில் இருக்கும் பெருமானுக்கு  மட்டும்  அடியவனான நான்  மற்றவர்க்கு அடியவன் ஆவேனோ?

        ஏழு காளைகளை அடக்கி மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று பகவான் நினைத்தார்.  சேது அமைத்துச் சீதா பிராட்டியை மீட்பதற்காக மட்டுமல்ல. இராவணனின் கொடும் செயலால் துன்பமுற்ற நல்லோர்ளைக் காப்பதற்காகவும் இராவணனை அழித்தார். நல்லோர்களைக் காக்கும் கற்பக விருக்ஷமாகப் பகவான் திருக்கண்ணபுரத்தில் சேவை சாதிக்கின்றார்.  அனைத்து நலன்களையும் தரக்கூடியவன் திருக்கண்ணபுரத்தில் இருக்கும்போது மற்றவர்களை நாட வேண்டியதில்லை என்றவாறு இப்பாசுரம் பொருள் அமைந்துள்ளது.

       

மிக்கானை மறை ஆய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங் குன்றின்மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்துபோனேனே.       1731

 

மிகவும் சிறந்தவனை, வேதமாய் விரிந்த தீபம் போன்றவனை, என் மனத்தினுள் புகுந்தவனை, புகழ் பெற்ற ஒளி பொருந்திய தங்க மலை போன்றவனை, எல்லாத் தகுதிகளும் கொண்டவனை, கடிகை என்னும் பெரிய மலையின் மீது வீற்றிருப்பவனை, இனிப்பான வெல்லக்கட்டி போலவும், கனி போலவும் இருக்கும் யோக நரசிம்மரைச் சரண் அடைந்து உய்ந்தேன் என்ற பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது.

இப்பாசுரத்தில் ‘மறையாய் விரிந்த விளக்கு’ என்று ஸேவித்து அக்காரக்கனியை அந்வயிக்கிறார் திருமங்கைமன்னன். குன்றிலிடப்பட்ட தீபமானது சுற்றியிருக்கும் அனைத்து இடங்களிலும் பரவி ஒளிர்வது போல், மாடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட தீபமானது தன்னைச் சுற்றியிருக்கும் இடத்தினை ஒளிபெறச் செய்யும். ஆச்ரிதர்களைக் கரை சேர்க்க மார்க்கமாகும் விளக்காய் ஒளிரும் எம்பெருமானையே ‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய’ என்னும் பதத்தின் மூலம் ஆண்டாள் குறிப்பிடும் இக்கருத்தினை இங்கு ஒப்பு நோக்கலாம்.

        பகவான் தீப ஒளியாக விளங்குகிறார். தேவைப்படும் காலங்களில் அவர் உருவங்களைத் தாங்குகிறார். இறைவனது ஒளி என்றும் மறைவதில்லை. எனவே அவனை ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்று போற்றுகிறோம்.  உடலுக்குத்தான் மரணம், அதில் உள்ள ஆத்மாவுக்கு இல்லை. அதை எவராலும் அழிக்க முடியாது. துணிந்து நின்று உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வாயாக! என்று பகவத்கீதையில் பகவான் அருளியிருக்கிறார். சோளசிம்மபுரம் என்கின்ற திருக்கடிகை என்னும் தலத்தில் நரசிம்மராகக் குடியிருகிறார். கடிகை என்றால் நாழிகை என்பதாகும். இத்தலத்தில் ஒரு நாழிகை இருந்தாலும் நமக்கு முக்தி கிடைப்பது நிச்சயம் என்பது இதன் பொருளாகும்.

       

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ?
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா * உன்னை என்றும் மறவாமைப் பெற்றேனே.    1732

 

எம்பிரானே! என் உள்ளத்தினுள் நீ வந்து புகுந்தாய். புகுந்த பின் திரும்பிப் போவதைப் பற்றி நினைக்கவே இல்லை. இந்த ஒரு பாக்கியம் எனக்குப் போதாதோ? பூங்கொத்துக்கள் நிறைந்த நந்தவனங்கள் சூழ்ந்த திருக்குடந்தையில்  எழுந்தருளியிருக்கும் தேவகி  மைந்தனே! உன்னை என்றும் மறவாமல் இருக்கும் பேறு பெற்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        கடும் தவம் புரிந்தவர்களும் பகவான் எதிரே தோன்றியதும் சுயநலமாகச் செயல்பட்டு எனக்கு மரணம் வரக்கூடாது என்று வேண்டுகின்றனர். அண்டங்களை நானே ஆள வேண்டும், மனிதர்களாலும் தேவர்களாலும் எனக்கு ஆபத்து வரக்கூடாது என்ற வகையில் வரம் கேட்கிறார்கள். ஆனால் ஆழ்வாரோ ‘இறைவா! நீ என் மனத்தில் நீங்காமல் இருக்க வேண்டும். அதன் பலனாய் நான் எவ்வித தீவினைகளும் செய்யாதிருத்தல் வேண்டும்’ என்று கூறி தான் அப்பாக்கியத்தைப் பெற்று விட்டதாகக் கூறுகிறார். இதை மக்களுக்கும் ஒரு உபாயமாகத் தெரிவிக்கிறார். உலகத்து இன்பங்களை நாடாதீர். ஆரம்பத்தில் சுகமளிப்பதாக இருப்பினும் பின் துன்பத்தில் கொண்டு சேர்க்கும். எனவே இறைவன் உங்கள் உள்ளத்தில் புகுவதற்கு இடம் கொடுங்கள் என்கிறார் ஆழ்வார்.

       

 எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்திகண்டாய்
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே.       1733

 

எல்லா காலத்திலும் நிரம்பி இருக்கும் கொடிய நரகத்தில் அழுந்தி நடுங்குகின்ற என்னை அஞ்சாதே! என்று தேற்றி என்னை முழுதும் ஆட்கொள்ளும் வல்லவனை, மேகக் கூட்டத்தைத் தொடும் அளவிற்கு உயர்ந்த மாளிகைகளும், வயல்களும் சூழ்ந்த திருவாலியில் அருள் புரியும் பகவானை, சௌரிப் பெருமானை, நெஞ்சமே! நீ நொடிப் பொழுதும் நினையாமல் இருக்கின்றாயே என்று ஆழ்வார் தனது நெஞ்சைக் குறிப்பிடுகிறார்.

கொடிய நரகத்திலே  அழுந்தி  நடுங்குகின்ற என்னைப் பயப்படாதே என்று  அருளி அடியவனான  என்னை ஆட்கொள்ள  வல்லவனை  மேகமண்டலத்தளவும் ஓங்கின  மாளிகைகளால் சூழ்ந்த  வயலாளி அம்மானை, நெஞ்சே! நீ  நொடிப்பொழுதும்  நினைக்காமல் விடுவிக்கும் திறனும் பகவானுக்கு மட்டும் உண்டு. செய்த வினைகளுக்கேற்ப தண்டனை அனுபவிக்கட்டுமென்று இல்லாமல் அப்போதும் அபயகரம் காட்டிநம்மைக் காத்தருள்கிறான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை நாம் ஒரு நொடிப் பொழுதேனும் நினைத்துப் பார்க்காமல் இருக்கலாமா என்று கேட்கிறார் ஆழ்வார்.

       

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே  1734

 

எனது தாய் தந்தை என்னை ஈன்றெடுத்ததோடு தமது கடமை முடிந்துவிட்டதென விட்டு விட்டார்கள். அதன் பின் சகலவிதமான உறவாக இருந்து வளரச் செய்து எனக்கு உயிராகி இருந்து எல்லா நன்மைகளைச் செய்பவனும், வளர்பிறையால் ஏற்பட்ட நோயினைத் தீர்த்த எம்பெருமானை எவ்விதம் என்னால் மறக்க முடியும். என் அறிவற்ற மனமே! இதை நீ சொல்வாயாக என்ற கேட்கிறார் ஆழ்வார்.

பெற்றவர்  பெற்ற பின் விட்டு அகன்றனர். பின்பு எனக்கு இன்று  எல்லாவித உறவுமாகி  என்னை வளர்த்து  என் உயிராக  இருப்பவனான பெருமானை,  இளம் சந்திரனின் நோயைப் போக்கிய பெருமானை  எப்படி நான் மறப்பேன்?  அறியாமையுடைய  மனமே!  இதைப் பற்றி நீ எனக்குச் சொல்லு.

        என்னை ஈன்றெடுத்த பெற்றோர்கள் எவ்வித ஞானபக்தியும் அளிக்கவில்லை. பின் நிலையான பக்தியைத் தந்தவன் இறைவன் ஒருவனே தந்தான். இந்தப் பகவானே திருமந்திரத்தில் உள்ள ஒன்பது வகையான உறவாக இருக்கிறான். எம்பெருமான் ஒருவனே ரக்ஷகன். நிலையான உறவுகள் சந்தர்ப்பவாதிகளாக உள்ளார்கள். அந்திமக்காலத்தில், சேர்த்த பொருள்பற்றித் தெரிவிக்குமாறு நச்சரிப்பார்கள். கோள்களும் நமக்கு அனுசரணையாக இருக்காது.  இந்திரனும், நான்முகனும் பெருமானை நம்பி வாழ்பவர்கள். எனவே அவர்களும் நமக்கு ரக்ஷகர்கள் இல்லை.  மாதாபிதா கைவிட்ட நிலையிலும் ஸ்ரீமந் நாராயணன் மட்டும் நம்மைக் காப்பான் என்பது ஆழ்வாரின் அசைக்க முடியாத கருத்தினை இப்பாசுரத்தின் மூலம் தெரிவிக்கின்றார்.

       

 கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெருங் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே.      1735

 

வேத சாஸ்த்திரம் கற்றவர்கள் முற்றிலும் வெறுத்து ஒதுக்கும் சம்சாரம் என்ற பெரும் கடலைப் பற்றியதால் நான் இங்கு வந்து பிறந்தேன். இவ்விதம் பிறப்பெடுத்த பிறகு, ஒருகாலும் வற்றாத நீர் வளமுடைய வயல்களால் சூழப்பட்ட வயலாலி என்னும் திருவாலியில அருள் புரியும் பகவானின் அருளைப் பெறும் பேறு பெற்றேன்.  அதனால் இனி பிறவாமை என்ற பேறு பெற்றவனாவேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பெருங்கடலில் அலைகள் தொடர்ந்து வந்து செல்வது போல் பல்பிறப்புகள் பிறந்தேன். ஆயினும் பெருமான் வந்து என்னை நெருங்கியமையால் அவனைப் ஆழ்ந்துப் பற்றினேன். அதனால் பிறப்பில்லாமையைப் பேறு பெற்றேன். நன்றியறிவும் பிறவாமலேயே பேறு பெற்றேன் என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்.  சம்சாரம் என்பது மனைவி, மக்கள், சுற்றம் ஆகியவற்றைப் பற்றி இருப்பது. சம்சார சாகரத்தை ஒதுக்குவது என்பது இறைவன் ஒருவனையே பற்றி இருப்பதாகும். பற்றற்ற இறைவனைப் பற்றும்போது நம்முடைய எல்லாப் பற்றுகளும் அகன்று போகின்றது. பிறவாமை என்னும் பாக்கியத்தை நாம் பெறுவோம். எனவே நிலையற்ற சம்சார நிலையை நீக்கித் திருவாலிப் பெருமானை பற்றுவோம் என்பது இதன் பொருளாகும்.

       

 கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெம் சுடரை
கண் ஆரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ.     1736

 

நோக்கிய விழிகளை மீட்டெடுக்காதபடி காட்சி தரும் திருக்கண்ணபுரத்திலும், சோளிங்கபுரத்திலும், மணமுள்ள குளிர்ச்சியான தாமரை மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த தலைச்சங்கத்தில்  மேற்கு திசையில் வானவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் சந்திரன் போன்றவனை,  காலை நேரக் கதிரவனை, அடியேனின் கண்கள் கண்ணார தரிசித்து மகிழும் நாள் எந்நாளோ என்று ஆழ்வார் கூறுகிறார்.

கண் கவரும் திருக்கண்ணபுரத்திலும்  திருக்கடிகாசலத்திலும், மணம் கமழும் குளிர்ந்த பூர்ண தாமரைகளால் சூழ்ந்த  தலைச்சங்காட்டில்  மேற்கு திசையில்  நித்யசூரிகளுக்கு  குளிர்ந்த சந்திரன்போல்  இனியவனாய்  உதயகாலத்தில்  வெப்பமுடைய  சூரியன் போன்ற பிரகாசமான எம்பெருமானை  இங்குக் கண்குளிர  கண்டு வணங்கிக் களிப்பது  எக்காலமோ? என்கிறார் ஆழ்வார்.

        நாம் காணும் காட்சிகள் நிலையற்றது என்று அறியாமல் ஏமாற்றமடைந்து அதனால் துன்பம் அடைகிறோம். மனம் போன போக்கில் நாம் செல்கிறோம். அதனால் மோகமும், காமமும், பணப்பித்தும் நம்மைச் சீர்குலைக்கின்றன. ஒருநாள் மரணமும் நம்மை வந்து சேர்கின்றது. போகத்தில் வாழ்ந்தவர்கள் நற்கதியை எவ்விதம் அடைய முடியும்? எனவே நாளும் நம் மனதை பெருமானின் பாதக் கமலங்களில் பதிக்க வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும். ‘கைப்பால் அலைச்சங்கமேந்து மணியரங்கத் தம்மான் தலைச்சங்க நாண்மதியத்தான்’ என்று பிள்ளை பெருமாள் அய்யங்கார் தனது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பாடியுள்ளார்.

       

செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகில் வண்ணன் கண்ணபுரத்தானை
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினே.       1737

 

கர்ப்பத்தில் நீர்கொண்ட கார்மேகம் போன்ற நிறம் கொண்ட சௌரிராஜப் பெருமானைப் பற்றிப் போரில் ஆர்வம் உள்ள, வேற்படையை பிரயோகிக்கும் வல்லவரான, கலியனான திருமங்கை மன்னன் பாடிய மிக்க நீர்மையையுடைய இத்தமிழ்ப் பாடல்களை இன்னிசையோடு பாடக்கூடியவர்கள் அனைவரும் சமுத்திரம் சூழ்ந்த இவ்வுலகம் உய்ய இவற்றை வாயாரப் பாடியாடுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

இத்திருமொழியில்‌ திருவாலி, திருக்குடந்தை, திருக்கடிகை முதலான பல திருப்பதிகளை ௮நுசந்தித்திருந்தாலும்‌ இப்போது இவர்‌ கவிபாடுவது திருக்கண்ணபுரத்தையே என்பது இப்பாட்டில்‌ விளக்கப்பட்டது.  பகவத்பக்‌தி மிகுந்த தொண்டர்களென்று பெயர்‌ பெற்றவர்களை விளித்து, நீங்கள்‌ இத்திருமொழியைப்‌ பாடியாடுங்கோள்‌ என்கிறார்.

        ஆழ்வாரால் பாடப்பெற்ற இப்பாசுரங்கள் நம்முடைய பிறப்பை நீக்கிப் பிறவாமை என்னும் பேற்றினை அளிப்பதற்கு வழிகாட்டக்கூடியவைகளாக விளங்கின. அலையும் மனதை அடக்கிப் பகவானிடம் செலுத்துவதற்கான வழிமுறைகளை இப்பாசுரங்களில் ஆழ்வார் சுட்டிக்காட்டியுள்ளார்.  வேதமாக விளங்குபவன், ஆதவன் போல் ஒளிர்பவன், நரசிம்மராய் வந்தவன், அவனை அனுதினமும் மனதில் பதிய வைப்பதே பிறப்பை நீக்குவதற்கான முதல் படியாகும். அதன் பின் தியானம், யோகம் போன்றவற்றைப் பயின்று இறைவனை நெருங்கிப் பிறவாமை என்னும் பேற்றினை அடையலாம் என்ற அற்புதமான சிந்தனைகளைத் துண்டிவிடுகிறார் ஆழ்வார்.

       

வண்டு ஆர் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே! உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டு ஆனேற்கு *என் செய்கின்றாய்? சொல்லு நால்வேதம்
கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே.        1738

 

வண்டுகள் மொய்க்கும் அழகிய சிறந்த தாமரைப் பூவில் தோன்றிய திருமகளின் மங்களமான பார்வையால் நனைந்தவனே! நான்கு மறைகளிலும் கலந்தவனே! திருக்கண்ணபுரத்தில் உறையும் சௌரிராஜப் பெருமானே! உன்னை விரும்பிச் சந்தோஷம் கொண்டு உனக்கே பணிவிடை செய்யத் துடிக்கும் எனக்கு நீ என்ன செய்வதாக இருக்கிறாய் சொல்வாயாக! என்று ஆழ்வார் கேட்பது போல் அமைந்துள்ளது.

        பெரியபிராட்டியார் எம்பெருமான் திருவுள்ளத்தில் இருப்பதால் தாயாரை வேண்டுகிறார்.  தாயாரும் தன் கடைக்கண் பார்வையை பெருமானிடம் வீசுகிறாள். பெருமானும் அதைப் புரிந்து கொண்டு  இசைகிறார். இப்பாசுரத்தில் ஆழ்வார் உரிமையுடன் பெருமானை கேட்கிறார்.  நான் உனக்குப் பணிவிடை செய்யத் தயாராக உள்ளேன். அந்த நல்ல வாய்ப்பை எனக்கு அருளப் போகிறாயா? அல்லது உன்னை மறந்து அற்பப் பொருட்களிலேயே என் புத்தியை செலவழிக்க விடப் போகிறாயா? எனது தீவினை இன்னும் அகலவில்லையா? என்று கேட்கிறார்.  இறைவனிடம் உரிமையுடன் கேட்கும் மனோபாவத்தை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால்
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும்
கருதேன் நான்  கண்ணபுரத்து உறை அம்மானே.       1739

 

கடல்களையும், ஆகாயத்தையும், பெரிய மலைகளையும், ஏழு உலகங்களையும் ஒரு மாலைபோல் தன் திருவயிற்றில் அடக்கிய உன்னைத் தவிர வேறொரு தெய்வம் உண்டென்று என் மனதில் சிறிதளவேனும் நான் நினைக்கமாட்டேன். திருக்கண்ணபுரத்தில் உறையும் சௌரிராஜப் பெருமானே! இது உறுதி என்று ஆழ்வார் இப்பாசுரத்தில் தெரிவிக்கின்றார்.

கீழ்ப்பாட்டில்‌ ‘உன்றனக்கே தொண்டானேற்கு’ என்றார்‌ இப்‌படி சொல்லுவானேன்‌? மற்றும் பல தெய்வங்களுமில்லையோ? உலகில் பலர்‌ பல தெய்வங்களை ஆச்‌ரயிக்கக்‌ காண்கிறோமே. அந்த வழியில்‌ உமக்குப் பற்றில்லையோ? என்று எம்பெருமான்‌ திருவுள்ளமாக, பிரானே! நீ உண்டுமிழ்ந்த எச்சிலான தேவர்களை ஒரு பொருளாகவும்‌ நான்‌ நெஞ்சிற்‌ கொள்வேனல்‌லேன் என்கிறார்.

        எம்பெருமானே! நீ உண்டுமிழ்ந்த தேவர்களை ஒரு பொருளாக என் நெஞ்சில் கொள்ள மாட்டேன்.  முன் காலத்தில் மஹா பிரளயத்தைப் போக்கினாய். அதுபோல் எனது சம்சாரப் பிரளயத்தைப் போக்க திருக்கண்ணபுரத்தில் நித்யவாசம் செய்கிறாய் என்கிறார் ஆழ்வார். இவ்வுலகம் கல்பகோடி காலமாக இயங்கி வருகின்றது. நமது சிற்றறிவுக்கு ஊழிக்காலத்தையும், இறைவனின் பேராற்றலையும், அறியும் ஆற்றல் அறவே இல்லை. இந்நிலையில் நமக்குத் தோன்றியதையெல்லாம் பேசிக்கொண்டு இருப்பதை விடுத்து, நமது பெருமானை ஒரே தெய்வமாக ஏற்று உறுதிப் பொருளாகப் பற்ற வேண்டும். ‘தெய்வம் ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு’ என்னும் வாக்கியத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும்  நின் திரு எட்டு எழுத்தும்
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே.       1740

 

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமானே! உன்னைக் காட்டிலும் வேறொரு தெய்வம் உள்ளதென்று நினைப்பவரோடு நான் சேரமாட்டேன். இதையெல்லாம் சொல்வதை விடத் திருவெட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை நான் ஜபம் செய்து உனது அடியார்க்கு அடியாராய் வாழவே விரும்புகிறேன். கண்ணபுரத்துறையம்மானே!  உன்னைக் காட்டிலும் வேறொரு தெய்வம் வணங்க உரியதாக உண்டு என்று நினைத்திருப்பவர்களோடு இணங்கமாட்டேன்.  உனது திருவக்ஷசர மந்திரமானது அறிய வேண்டிய எல்லாப் பொருள்களையும் சொன்னாலும் அதை நான் கற்றறிந்துக் கொண்ட பொருள் பாகவதர்களுக்கு அடிமையாக இருத்தலேயாகும் என்று  பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

        அஹங்காரமும், மமகாரமும் நீங்கப்பெற்ற பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலமான பாகவத சேஷத்வத்தை நாம் அநுசந்திக்க வேண்டுமென்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.   அலை பாய்கின்ற மனது ஆற்றலை இடிக்கின்றது.  ஒரே தெய்வத்தை உறுதியோடு பற்றிக்கொண்டு சாதனை படைப்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. அனைவரும் இவ்விதமான ஒருமைப்பாட்டுடன்தான் வெற்றிகளைப் பெறுகிறார்கள். பெரும்பான்மையான மக்கள் தோல்வியைத் தழுவுவதற்கு காரணம் இவர்களிடையே இத்தகைய ஒருமைப்பாடு இல்லாததுதான். நமது நோக்கம் ஆத்மாவை நேருக்கு நேராகக் காண்பதுதான். அதற்காகவே இம்மனிதப் பிறவி இறைவனின் அருளாள் நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

       

பெண் ஆனாள் பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல்
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை உகந்தேன் நான்
மண் ஆளா வாள் நெடுங் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே.        1741

 

திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே! பூமிபிராட்டியின் கணவனே! வாள் போன்ற கூர்மையான ஒளி பொருந்திய பெரிய கண்களையுடையவனே! தேன் நிறைந்த தாமரை மலரில் பிறந்த திருமகளின் மணாளனே! பெண் வடிவம் கொண்டு வந்த அரக்கியான பூதனையின் தனங்களின் தீப் போன்ற விஷப்பாலை உறிஞ்சி உண்டு உகந்த உன்னைத் தரிசித்தால் மிகவும் மகிழ்வேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

        பேய்ச்சியின் விஷப் பாலை விரும்பி உண்ட உனக்கு அடியேன் விரும்பத்தகாதவனாகப் போய்விட்டேனா? அந்த நஞ்சைக் காட்டிலும் நான் கொடியவனா? என்று ஆழ்வார் வருந்திக் கேட்கிறார்.  இக்கலியுகத்தில் மற்றவர்களின் செல்வங்களை அபகரித்து மகிழ்வாக வாழலாம் என்று பலர் எண்ணுகிறார்கள். தன்னை விரும்பாத பெண்ணை அடைய முயல்கிறார்கள். உண்மையான மகிழ்ச்சி என்பது அனைத்தையும் துறந்து பகவானை தரிசித்து நாள்தோறும் அவரைப் போற்றுகிறவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அத்தகைய மகிழ்வை திருக்கண்ணபுரத்தில் அனுபவிக்கலாம் என்பது ஆழ்வாரின் கருத்தாகும.

 

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே.       1742

 

பெற்றவர்கள், சுற்றத்தினர் என்று இவர்களை நான் கொண்டாடுவதில்லை. வேறு எவரிடத்திலும் எனக்குப் பிரியமும், நட்பும் ஏற்படுவதில்லை.  அதனால் உன்னைச் சரணடைந்தேன். வேதம் படித்தவர்கள் வாழும் திருக்கண்ணபுரத்தில் உறைபவனே! என்னை உன் சொந்தமாக நினைத்து உன் நெஞ்சில் வைத்துக் கருணை காட்டியருள  வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

நிலையாமையான இந்த உலகப் பற்றுகளில் நான் ஈடுபடவில்லை. எல்லா உறவையும் விட உன்மேல் இருக்கும் உறவே சிறந்தது எனக்கருதி, கண்ணபுரப் பெருமாளே உன் திருவடிகளில் சரணடைந்தேன். அதனால் நீ எனக்கு வேண்டியவன் என்று மனதில் வைத்து நீ எனக்கு அருள வேண்டும். உள்ளம் நெகிழ ஆழ்வார் இறைவனிடம் கையேந்துகிறார். நாம் பக்தி செய்யும் வழிமுறைகளை ஆழ்வாரே நமக்குச் சொல்லித் தந்துள்ளார். அதனை வழுவினால் எந்நாளும் நன்னாளே!

        எங்கும் புகலற்று நம்மையே பற்றி வந்தவன் இவன் என்றெண்னி அடியேன்பால் அருள்புரிய வேணும். இல்லையேல் பரமபதம் விட்டுக் கண்ணபுரத்தில் வாசம் செய்தது பயனற்றதாகிவிடும்’ என்கிறார் ஆழ்வார். பகவானால் நமக்குக் கிடைக்கப் பெற்ற பெற்றோரை நாம் போற்ற வேண்டும். ஆனால் அந்தப் புனிதமான உறவுகூட ஒரு நேரத்தில் நம்மை விட்டுப் போய்விடுகிறது. மற்ற உறவுகளைப் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. இவர்கள் சுயநலம் ஒன்றையே கருதி நம்மிடம் உறவாக இருப்பார்கள். ஆனால் பகவான் நமக்கு எல்லாவற்றையும் வழங்கி நம்மிடம் அன்பை மட்டும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறான் என்ற கருத்து இப்பாசுரத்தின் மூலம் தெளிவாகிறது.

 

 ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை
பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ
காத்திபோல் கண்ணபுரத்து உறை அம்மானே.       1743

 

சௌரிராஜப் பெருமானே!  உமது திருவடியில் விழுந்து தியானிக்கும் அடியார்களை,  யம தூதர்கள் உயிர் பிரியும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து, அவர்களைத் தொடராமல் வணங்கி நாங்கள் உங்களை நெருங்க அஞ்சுகிறோம் என்று கூறிவிட்டு அவர்களைத் தொடாமல் அகன்றுவிடுவார்கள். பெருமானே! இத்தருணத்தில் எங்களைக் கவசம் போல் காத்து வருகிறாய் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

        இப்பாடலில் ஆழ்வார் பெருமானை, நான் செய்த குற்றங்களைப் பாராமல் எனக்கு அருள்வது மட்டும் போதாது. நான் செய்த குற்றங்களை ஆராய்ந்து எனக்குத் தண்டனை கொடுக்க யம தூதர்கள் என்னை நெருங்கும்போது அவர்கள் என்னருகில் வராதவாறு என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.  பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்டு இடைவிடாமல் பகவானை சிந்தித்துக் கொண்டிருக்கும் பாகவதர்களின் இறுதி காலத்தில், யமன் தனது தூதுவர்களை அழைத்து நீங்கள் பாகவதர்களிடமிருந்து அகன்றுவிட வேண்டும். மேலும் அவர்களைக் கண்டால் வணங்கி வழிவிடுங்கள் என்று கூறுவான். எனவே இத்தகைய நிகழ்வில் யமபயம் என்பது பகவானின் பாகவதர்களுக்கு அறவே கிடையாது என்பது தெளிவாகிறது. 

 

வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு அணைமேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன்தமர்
கள்ளர்போல் கண்ணபுரத்து உறை அம்மானே.      1744

 

பாற்கடலின் வெள்ளத்தில் ஆதிசேஷன் மீது சிறிய திவலைகள் மெதுவாக வீச, பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமானே! அன்பு மிக்க பக்தர்களிடம் வள்ளலாக இருப்பவனே! எனது கண்ணபுரத்து அம்மானே! உனது தொண்டர்களிடம் எக்காலத்திலும் எமதூதர்கள் திருடர்கள்போல் மறைந்து ஒளிவார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        யமதூதர்கள் பாகவதர்களை அணுக மாட்டார்கள். அவர்கள் கிட்டாதபோது கள்வர் போல் மறைந்தொளிந்து கிடப்பார்கள். அது உனது பிரபாவத்தினால் வந்தது அல்லவா! நோய்வாய்ப்பட்டு அவதியுறும் அடியார்களின் கூக்குரலினை செவிமடுத்து உடன் திருக்கண்ணபுரத்தில் வந்தமர்ந்து எமது துயர் தீர்த்த பெருமானே, நான் யமதூதர்களுக்கு அஞ்ச வேண்டிதில்லை. எத்தகைய எளியவர்களாக இருந்தாலும் ஆற்றல் உள்ளவர்களின் நட்பைப் பெற்றால் யாரும் நம்மை அழிக்க முடியாது. அது போன்று மிக்க ஆற்றல் மிகுந்த பகவானின் நட்பைப் பெற்றுள்ளதால் யமதூதர்கள் என்னை நெருங்குவதற்கு அச்சப்படுகிறார்கள். அதுவே வாழும் காலத்திலும், வாழ்வு முடியும் காலத்திலும் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது இப்பாசுரத்தின் அரிய கருத்தாகும்.   

 

மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே   1745

 

‘திருக்கண்ணபுர சௌரிராஜப் பெருமானே! முன்பு வாமனனாய் அவதரித்து உலகங்களை அளந்து கொண்டதையும், வாளேந்திய இரண்யகசிபுவின் மார்பைக் கிழித்து எறிந்ததையும் இப்போதுதான் எண்ணிப் பார்க்கிறேன். இந்த ஆன்மா நற்கதியடைய எவ்விதமான புண்ணியத்தையும் செய்யாத, கொடிய பாவங்களைக் கொண்ட நான், ஒரு துன்பமும் அடையாமல் இருப்பதற்குக் காரணம் உன் அருளன்றோ’ என்று நெக்குருகக் கூறுகிறார் ஆழ்வார்.

நோய்பட்டுக் கூவும் அடியார்களின் கூக்குரல் செவிப்படுவதற்கு அனித்தாகத் திருப்பாற்கடலிலே சிறுதிவலைகள் துடைகுத்தத் திருவனந்தாழ்வான் மீது உறங்குவான் போல் திருக்கண் வளர்ந்தருள்கின்ற பெருமானே! அத்தனை தூரமும் பொறாமல் திருக்கண்ணபுரத்திலே வந்து மிக அனியனாகவுள்ள பெருமானே! நான் யமதூதர்களுக்கு அஞ்சவேண்டிற்றுண்டோ? உனக்கு அடியனாகும் அத்தனையே வேண்டுவது, யமபடர்கள் அவ்வளவிலே ஓடியொளிக்கப் பெறுவர்களன்றோ என்கிறார்.

        தீவினை புரிந்துள்ளதாகக் கூறிகொள்ளும் ஆழ்வாருக்கு எந்தத் துன்பத்தையும் பகவான் தரவில்லை. இதற்குக் காரணம் பகவான் தம்மீது கொண்ட அன்பு கலந்த அருளே என்று கூறுகிறார். எனவே அவனது கருணை எல்லையற்றது. கொடிய குற்றங்கள் செய்து தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கையில் அரசனின் சிறப்பு அதிகாரத்தால் அவன் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறான். அது போன்று நாம் எத்தகைய பாவங்கள் செய்தபோதிலும் அதனை நினைத்து வருந்திப் பகவானிடம் சரணடந்தால் நமது துன்பங்கள் பகவானால் விலக்கப்படுகின்றன. எனவே அவரையே உறுதிப்பொருளாகக் கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்தாகும். 

       

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ணபுரத்து உறை அம்மானே.       1746

 

திருக்கண்ணபுரத்தில் உறைபவனே!  நீ முதலில் அடியேனை உன் தொண்டனாக மாற்றி நிலைநாட்டினாய்.  அதையே காரணமாகக் கொண்டு நான் செய்த கொடிய பாவங்களை நான் இல்லாமல் செய்து கொண்டேன். என்னை உன்மீது கவிபாட வைத்து என் நெஞ்சில் குடி கொண்டதை எனக்குப் புரிய வைத்தாய் என்று ஆழ்வார் உருகிப் பாடுகிறார்.

 இவரைப் பாடுவித்த முக்கோட்டையிருந்தபடி” என்றொரு வாக்கியமுள்ளது.  அதன் கருத்தாவது, மலையாள தேசத்தில் ‘முக்கோட்டை’ என்று ஒரு இடம் உள்ளது. அவ்விடத்தில் ஊமைகள் சென்றாலும் அந்நிலத்தின் மேன்மையால் வெகு அழகாகக் கவி பாடுவர்களாம்.  இது முற்கால வழக்கமாக இருந்து வந்தது. திருக்கண்ணபுரத்தை அந்த முக்கோட்டையாக ஆழ்வார் போற்றிப்பாடுகிறார்.

        பகவான் முதலில் ஆழ்வாரைத் தொண்டனாக மாற்றினார். அதைக் கொண்டு என்னில் கொடிய பாவங்களே இல்லாத நிலையை உருவாக்கிக் கொண்டேன். அவர்மீது பாசுரம் பாடும்படியாக என் நெஞ்சில் வந்து குடிபுகுந்தார்.  இறைவன் ஏதேனும் சந்தர்ப்பத்தில் ஒரு காரியத்தை நுழைத்துப் பக்தனை தூயவனாக மாற்றுகிறார் என்பது இதன் உட்பொருள்.  கவிபாடும் கவிஞன் தீமைகள் பல செய்தபோதிலும் அவனுக்கு அந்தத் திறமையைக் கொடுத்துத் தீவினையை அழிக்கிறார்.  பெரியவாச்சான் பிள்ளை ‘இவரைப் பாடுவித்த முக்கோட்டை யிருந்தபடி’ என்கிறார்.

 

 கண்ட சீர்க் கண்ணபுரத்து உறை அம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே.        1747 

 

கண்களால் பார்க்கக்கூடிய செல்வம் பொருந்திய திருக்கண்ணபுரத்தில் நித்யவாசம் செய்தருளிய சௌரிராஜப் பெருமானைக் குறித்து, தொண்டரான திருமங்கையாழ்வார் பாடிய இப்பாடல்களை ஐஸ்வர்யமாய் நினைத்துப் பக்தியுடன் பாடும் பக்தர்கள் எப்போதும் பரமபதத்திலிருந்து கொண்டு ஆட்சி செய்வார்கள். அதுவே அவர்களுக்குப் பேறு என்பதை தெரிந்து கொண்டோம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

        செல்வம் அனைத்தையும் விட்டு இராமனிடம் சரணாகதி செய்த விபீஷணனிடம் இருந்தது ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயாகும். அதுபோல் ஸ்ரீராமனுடன் இளையாழ்வார் கானகம் நோக்கி வந்தபோது அவருடன் வந்தது வைஷ்ணவ லக்ஷ்மியாகும் என்பது அன்னங்காச்சாரியர் வியாக்யானம்.  ஆழ்வாரின் பாசுரங்கள் அனைத்தும் நம்பிக்கையினையும், ஆறுதலையும் அளிக்க வல்லதாக அமைந்திருக்கின்றன.  தீவினைகள் மிகுந்து உள்ளவனைத் தொண்டனாக ஏற்று அவனுக்குக் கவிபாடும் திறமையை அளித்து அதனால் அவனது தீவினையைப் போக்கவல்லவர் எம்பெருமான். 

 

திருமங்கையாழ்வார்                                                                திருநெடுந்தாண்டகம்

       

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்
     கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்
     வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
     விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்
     துணை முலைமேல் துளி சோரச் சோர்கின்றாளே!       2067

 

கன்றுகளை மகிழ்ச்சியுடன் மேய்த்துக் கொண்டிருக்கும் காளையே! அழகு மிக்க மலர் வனங்களால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் கொலுவிருக்கும் என் கண்மணியே! நாற்சந்தியிலும் மரக்கால்களைக் கட்டிக் கொண்டு கூத்தாடி ஆனந்தித்தவனே! திருவேங்கடமலையில் எழுந்தருளியுள்ளவனே! அசுரக் குலங்களைக் கொன்று வேரோடு அகற்றிய அரசனே! சோலைகள் நிறைந்த திருநறையூரில் நின்றருள்பவனே! அடர்த்திய குழல்கற்றையும், கறுத்த திருமேனியும் கொண்ட என் துணைவனே! என்றெல்லாம் புலம்பி இரு தனங்களும் நனையுமாறு தாயார் கண்ணீர் பெருகி சோர்வடைகிறாள்.  புல்லாங்குழல் இசைத்துப் பசுக்கள் வேறிடம் செல்லாமல் பாதுகாத்து வீடு திரும்புமாறு செய்கிறான். அதுபோல் உலகத்து உயிர்களைத் தன்பால் ஈர்த்து பாதுகாப்பவன் பகவான் ஒருவனே என்பது இதன் பொருளாகும்.

 ராமகிருஷ்ணாதி ரூபத்தாலே அவதரித்து இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரை ரக்ஷித்தவளவோடே நின்றாலும் ஆறியிருப்பேன்; அறிவுகேட்டுக்கு மேலெல்லையான கன்றுகளையும் உட்பட மேய்த்த உன்னைவிட்டு எங்ஙனே ஆறியிருப்பேன் என்கிறாள். அறிவில்லாமையில் கடைநின்ற கன்றுகளையும் ரக்ஷித்த நீ, உன்வாசியை அறிந்து உன்னையொழியச்செல்லாத என்னை ரக்ஷியாதொழிவதே!, நானும் கன்றாகப் பிறக்கப்பெற்றிலேனே! என்கிறாள்.

கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும்போது அவை கைதவறிப் போகையாலே அவற்றை மடக்கிப் பிடிக்கப்போன இடத்திலே விடாய் தீரவிருப்பதொரு சோலையைக் கண்டு திருவாய்ப்பாடியாக நினைத்துப் புகுந்தான். அப்பொழில் மயல்மிகு பொழிலாகையாலே கால்வாங்க மாட்டிற்றிலன்; அதுவாயிற்றுத் திருக்கண்ணபுரம்“ என்பராம்.

 

செங் கால மட நாராய் இன்றே சென்று
     திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்
     இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்
     பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
     இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே.         2078

 

சிவந்த கால்களைக் கொண்ட அழகிய நாரையே! நீ உடன் திருக்கண்ணபுரம் சென்றடைவாயாக. அங்கிருக்கும் என் செந்தாமரைக் கண்ணனுக்கு, என் துணைவனான சௌரிராஜப் பெருமானுக்கு என்னுள் கொண்ட காதலை திறம்பட எடுத்துச் சொன்னால் நான் மகிழ்வேன். இதைச் செய்யும் நிலையில், வாழும் காலம் முழுதும் இந்த நந்தவனத்தை உனதாக்கிச் செய்வேன். வயல்களில் உள்ள மீன்களை நீ கொத்தி தின்ன அனுமதிப்பேன். பின் உன் பேடைகளோடு இங்கு வந்து குடிகொண்டு மகிழ்வுடன் வாழலாம்’ என்று தலைவி கூறுவது போல் அமைந்துள்ளது.

        மனித மனமானது உலகியல் நிலையில் உள்ள அனைத்து தொடர்புகளையும் விட்டொழித்து அதன் உள்ளீடாக இருக்கும் ஆன்மாவை இறைவனுடன் கொள்ளும் தொடர்பைக் குறிப்பது இறை இணைவு என்னும் பண்பாகும்.  அதன் வெளிப்பாடே நாரை மூலமாகத் தூது விடுதலாகும். தூது செல்கிறவர்கள் தூது அனுப்புபவரின் மனநிலையினை நன்கு அறிந்து கொள்பவர்களாக இருத்தல் வேண்டும். நாரைக்குத் தலைவியின் துன்பநிலை நன்கு தெரியும்.  தலைவிக்கு இருப்பது காமம் அல்ல. பகவானுடன் இரண்டறக் கலக்கும் ஆத்ம ஐக்கியம் கொண்ட காதலாகும்.  இது நிறைவேறினால் மகிழ்விற்கு அளவே இல்லை. இந்நிலையினை ஆழ்வார் அடைந்தார் என்றால் அது மிகையில்லை.

 

நம்மாழ்வார்                                                                                                    திருவாய்மொழி

 

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே.         3772

 

கடல் அலைகள் மோதும் மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் உலகை வயிற்றில் அடக்கி ஆலிலை மேல் பள்ளிகொண்டவன் அருள் புரிகின்றான். அந்தத் திருமாலை நெருங்கி அவன் திருவடிகளில் காலையும் மாலையும் தாமரை மலரினைச் சமர்ப்பித்து தொழுதால் உங்கள் நல்வினைகள், தீவினைகள் எல்லாம் அழிந்து உய்வு பெறுவீர்கள் என்கிறார் ஆழ்வார்.      

        பெருமான் நம்மீது கொண்ட பாசமானது தன் சேதனர்கள் சேய்கள்பால் எப்போதும் மண்டிக்கிடக்கும் பெற்ற மனம்போல், பிள்ளை மனம் வழக்கமாக விளையாட்டில் (உலகியலில்) மூழ்கிக்கிடக்கும். இப்பாசுரத்தில் ஆழ்வார் நல்வினை தீவினை ஆகியவை ஒழிய வேண்டுமென்கிறார். தீவினை ஒழிய வேண்டும் என்பது சரி. எதற்காக நல்வினை ஒழிய வேண்டும். ஆழ்வார் கூறுவது இதுவும் பிறவிக்குக் காரணமாக விளங்கும் என்கிறார். நல்வினையால் நற்பிறப்பு வளரும். நாம் வேண்டுவது பிறவித் தளையை அறுப்பது மட்டும்தான் என்கிறார். வினைகெட என்னும் பதத்திற்கு – நல்வினை தீவினை இவை கெட்டு ஒழியும்படி என்பதாகும். தீவினை ஒழிதல், நல்வினையும் ஒழிய வேண்டுமோ? ஆம் நல்வினையும் ஒழிதல் வேண்டும். இதுவும் பிறவிக்குக் காரணமாய் நிற்கும்.

        உலகத்தையெல்லாம் தனக்கே உரியதாகப் பாவித்து ஆண்டாலும் மரணத்திற்கும் பின் மறுமையில் சுவர்க்க போகத்தை அனுபவித்தாலும் சுவர்க்கத்தின் இயற்கை தன்மையால் அதாவது, செய்த நற்செயலுக்கான காலநிர்ணயம் செய்யப்பட்டு அதன்பின் பிறவிக்கு ஏதுவாக மீளவேண்டிவரும். ஆகையால் பாம்பனண பெருமானது  திருநாமங்களைக் கற்று உய்யும்வழி அடைவீர்களாக என்கிறார். வைகுந்தம் புகுவது மன்னவர் விதியாய் இருப்பதால் பிறவிகளற்று பரமபத்ததில் இருக்கும் இருப்பே மனித உயிரின் இலக்காக இருத்தல் வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

பிரளய காலத்தில் நம்மை அழியவிடாமல் காப்பாற்றியவன் பகவான். அத்தகைய கருணையுள்ளவன் நம் தீவினைகளைப் போக்குவது நிச்சயமான ஒன்று. எனவே மேலும் தீவினைகளை வளர்க்காதீர்கள். அழியும் பொருட்களை நாடி அலையாதீர்கள். சிற்றின்ப மோகத்தில் சிக்கித் தவிக்காதீர்கள்.  சுயநலம், பொறாமை, வஞ்சகம் இவைகளை நிறைத்து பாவமூட்டைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள். திருக்கண்ணபுரம் சென்று உள்ள பாவத்தை அழியுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே.       3773

 

தொண்டர்களே! பெண் நண்டுகள் சேர்ந்த வயல் சூழ்ந்த அகழிகளைச் சுற்றியுள்ள மதில் ஆகாயத்தை அடைந்து சுக்கிர கிரகத்தை எட்டும் அளவு உயர்ந்துள்ள  திருக்கண்ணபுரத்தை அடைந்து அங்கு உறையும் பகவானைத் தேன் துளிர்க்கும் மலர்களால் தினமும் அர்ச்சித்து வணங்கி வேண்டினால் உய்வு பெறுவீர்கள் என்கிறார் ஆழ்வார்.

இயற்கை படைக்கும் காவியம் இனிய காட்சி மொட்டாய் இருந்த பருவத்தே முடங்கிக்கிடந்த இதழ்கள் மலர் மலரும்போது அவை நெகிழந்து விரிகின்றதாம். அப்போது உள்ளிருக்கும் மது வழிகின்றதாம். அவிழும் என்பது அற்புதமானதொரு சொல்லாட்சியாக இங்குக் கையாளப்படுகிறது.

நள்ளி சேரும் என்ற பதத்தில் – ஆண் வண்டானது பெண் வண்டினை தனித்து விடுத்து மலர்த்தேனை நுகருங்கால், இரவானதால் குமுதம் இதழ்கள் மூடிக்கொள்ள வண்டு மலரில் சிறைபட்டது. காலைக் கதிரவன் உதிக்கும்போது மலர்விரிந்து, ஆண் வண்டானது மகிழ்ந்து துணையை தேடிப்போனது. பெண் வண்டோ வேறு யாருடனோ கூடிக் களித்தமையால் ஊடி விலகி நின்றது. தங்கத்துடன் சிறிது செப்பு கலப்பது போல் மெய்யோடு சிறிது பொய் கலந்தால் கள்ளவிழும் மலர்போல் காவியமாகும்.

        இப்பாசுரத்தில் உய்வு என்று ஆழ்வார் கூறுவது விடுதலையைக் குறிப்பதாகும். துன்பமற்ற நிலையே விடுதலையாகும்.  செல்வந்தர்கள் துன்புறுகிறார்கள், ஏழைகளும் துன்பம் கொள்ளுகிறார்கள். படித்தவனும், பாமரனும் துன்பம் அடைகிறான். நோய் உள்ளவனும், நோயற்றவனும் மனதினால் துன்பம் கொள்ளுகிறான்.  எவ்விதம் வாழ்ந்தாலும் துன்பம் துரத்துகிறது. இதைக் களைய ஒரே வழி பிறப்பில்லாத நிலைதான். அதையே ஆழ்வார் விடுதலை என்று கூறுகிறார். இத்தலத்து பகவானை வேண்டினால் விடுதலை பெறலாம் என்று கூறுகிறார் ஆழ்வார்.

 

 

தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே.        3774   

 

அடியார்களே! வண்டுகள் ரீங்காரமிடும் மலர் வனங்கள் நிறைந்த திருக்கண்ணபுரத்தில் குடியிருக்கும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனான தேவர்களின் தலைவனை, வாடாத புதுமலர்களால் அர்ச்சித்து ஒருமித்த சிந்தனையோடு பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் துயரம் நீங்க அது ஒன்றே சிறந்த வழி என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பணத்தால் துன்பம், பெண்ணால் துன்பம், உறவுகளால் துன்பம், நண்பர்களால் துன்பம், நோயினால் துன்பம் எனப் பலதரப்பட்ட துன்பங்களில் நாம் வாழ்ந்து வருகிறோம். இத்துன்பங்களை எல்லாம் நாம் நீக்க முடியும். ஆசைதான் துன்பத்திற்கு காரணம். உலக ஆசைகளை நீக்கப் பகவானிடம் தஞ்சம் புகுந்தால் நமக்கு மெய்ஞானத்தை அருளி அனைத்துத் துன்பங்களையும் அவன் நீக்கி விடுவான். எனவே உங்கள் துயர் நீங்கத் திருக்கண்ணபுரம் வந்து சௌரிராஜனை தரிசியுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        திருக்கண்ணபுரத்தைப் பற்றி வர்ணிக்கும்போது நீலக்கடலில் வெண்திரைகள் ஒருபுறம் வானளாவிய மதிள்கள் ஒருபுறம், கள்ளவிழும் மலர்சோலைகள், நண்டுகள் இணைந்து மகிழும் வயல்கள். இவை போதாதென்று வண்டுகளின் ரீங்காரம். இவைகளைக் காட்டி வாரீர் வாரீர் என அடியார்களை அழைத்து மகிழ்கின்றார் ஆழ்வார். இத்தலத்து எம்பெருமான் திருவெட்டெழுத்தின் ஒட்டுமொத்த வடிவமாக விளங்குகின்றான் என்பதாகக் கூறுவர்.

       

 மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே.        3775

 

வானளாவிய மதில்களால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் பகவான் தானே விரும்பிக் குடிகொண்டுள்ளான்.  மானும் வெட்கி தலைகுனியும் பார்வையுடைய, மென்மையான குணம் கொண்ட நப்பின்னையின் மணாளனான, தேன் போன்ற குணமுடையவனை வாடாமலர் தூவி நீங்கள் அர்ச்சியுங்கள்.  அவனைச் சரணடைவதே நன்மை பெறுவதற்கான மார்க்கமாகும்.

இத்தலத்துப் பெண்டிர்களின் விழிகள் மானையொத்து உள்ளன என்கிறார். அதன் கண்ணழகும், அதில் காணும் மிரட்சியும் இப்பெண்களிடம் உண்டு. இங்கு ஆழ்வார் பெருமான் காட்டும் நயம் அந்த மான் தன் விழிகளின் அழகு நப்பின்னை பிராட்டியின் விழிகளின் அழகிற்குத் தோற்று நின்ற நிலைகண்டு வருந்தி நிற்கின்றதாம்.

        பொன்னும் பொருளும் வைத்திருப்பதும், போகங்களைப் பெறுவதும்,  சொத்துக்களைப் பெறுவதும் இவையனைத்தும் நிலையான  நன்மைகள் அல்ல. நம்முள் இருக்கும் ஆன்மாவை அறிவதுதான் நிலையான நன்மை.  தூய்மையான வாழ்க்கையின் மூலம் தான் ஆன்மாவை மலரச் செய்ய முடியும். அந்த ஆன்மா நமக்குள் மலர்வதுதான் பேரின்ப நன்மையாகும். இதை உணர்ந்தவர்கள் எல்லாவற்றிலும் நன்மை பெறுவார்கள். எனவே இவற்றைப் பெற திருக்கண்ணபுரப் பெருமானை அணுகுங்கள் என்கிறார் ஆழ்வார்.

       

 சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே.   3776

 

காவலாக உள்ள மதில்கள் சூழ்ந்திருக்கும் திருக்கண்ணபுரத்தில் தரணியெல்லாம் ஆள்கின்ற எம்பிரான் கோயில் கொண்டிருக்கிறான். அவனது திருவடிகளை சரணம் என்று பற்றியவர்களுக்கெல்லாம் மரணம் ஏற்பட்டவுடன் வைகுண்டத்தில் வாழும் பேற்றினைக் கொடுக்கிறான். அன்பின் வடிவமான எம்பெருமான் தனது பக்தர்களிடம் அன்பு காட்டுகிறான் என்பது இப்பாசுரப் பொருள்.

        நாம் மரணம் அடையும்போது நரகத்திற்குச் செல்லவிடாமல் வைகுண்டத்திற்குச் செல்லும் நல்வாய்ப்பு கிடைக்கிறது என்பது இதற்குப் பொருளாகும். பகவானின் திருவடியில் பற்று வைப்பவர்களுக்கு மரணத்திற்குப் பின் வைகுந்தப் பதவியும், வாழும் காலத்தில் ஞானமும் உண்டாகும் என்பதை ஆழ்வார் கூறுகிறார். திருக்கண்ணபுரத்தில் பகவான் மச்சாவதாரமாக அருள் புரிவதால் நாம் வேண்டும் வரங்களை அளிக்கிறார்.

        பக்தியோகம் எல்லோருக்கும் சாத்தியமாவதன்று. எளிய உயிர்களுக்கெல்லாம் ஏற்ற மார்க்கம் பிரபத்தி மார்க்கமாகும். பிறப்பு, ஒழுக்கம், ஞானம இவற்றில் குறைபாடு உடையவர்களாயினும் தன் திருவடிகளையே புகலிடமாகப் பற்றிக் கொண்டவர்களுக்குத் தான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று பகவான் கூறுகிறார். சேதனன் எம்பெருமானின் திருவடிகளைப் பற்றிய நிலையிலிருந்து அவனுடைய மரணம்வரை இடைப்பட்ட காலத்தில் அவனது ஆசைகளை அற்றுப் போகும்படி, நசித்துப் போகும்படி அந்தச் சில நாட்கள் அவனை வைத்திருக்கிறான். சேதனன் பிறவித் துன்பத்தைத் தெளிவாகப் புரியும் அளவுக்கு அதாவது அவனுக்குப் பிறவி எடுப்பதில் வெறுப்பு உண்டாகும்படிச் செய்து மரணமானால் வைகுந்தம் அருளி விளங்குகின்றான்.

        பிரபத்தி மார்க்கத்தில் தன்னையே சரணாக அடைந்தவனுடைய பிராரப்த கர்மா, நல்வினை தீவினை இவைகளை அவன் தன் திருவடி சம்பந்தத்தால் அப்போதே அழித்துவிடுகிறான் என்கிறார் ஆழ்வார்.

 

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே.       3777

 

சுத்தமான தங்கத்தால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் பரந்தாமன் தனது திருவடியைத் தஞ்சம் அடைந்தவர்களுக்கெல்லாம் அன்பு மிக்கவனாய் அருள்புரிவான். சிவந்த பொன் போன்ற உடம்பினையுடைய இரணியனின் மார்பைக் கிழித்தவன், தன்னிடம் பக்தி கொண்டவர்களுக்கு அநந்யப் பிரயோஜனராய் இருப்பான் என்பது இப்பாசுரப் பொருளாகும். இத்தகைய பெருமானே இராமனாகி எவர் தன்னை நாடி வந்தாலும் ஏற்கும் தயாள குணம் படைத்தவன். அரக்க சூழலில் விபீஷணன் இருந்த போதும் தன் திருவடிகளைச் சரணாக வந்தபோது தயங்காது ஏற்றுக் கொண்டான். பிரபத்தி எளிதானது. அதைவிட சரணமடைவது அதனிலும் எளிதாகும். ஆனால் அதில் நிலைகுலையாத உறுதிப்பாடு வேண்டும் என்கிறார் ஆழ்வார்.    

        நம்பிக்கையுடன் கடவுள் உண்டு என்று நினைப்பவர்க்கு கடவுள் இருப்பான். நம்பிக்கை அற்ற நாஸ்திகர்களுக்கு அவன் இல்லாமல் போவான். பகவான் நம்மை ஆபத்தில் காப்பாற்றுவார் என்று நம்பிக்கை கொள்பவர்களுக்கு நிச்சயம் காப்பார். எனவே நம்பிக்கையுடன் திருக்கண்ணபுரம் வந்து சௌரிராஜனை தரிசித்தால் எல்லா வெற்றியும் நம்மை வந்து சேரும் என்பதில் ஐயமில்லை என்பது இப்பாசுரத்தில் அர்த்தமாகும்.

       

மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே.   3778

 

        விரும்பி வழிபடுவோர் தரும் நியதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பயபக்தியுடன் பகவானை வழிபடுவதாகக் பொருள் கொள்ளலாம்.  அத்தகையவருக்கும் மெய்யனாக இருந்து எல்லா அருளையும் பொழிகிறான்.  ஒரு சிலர் அடுத்தவர் தம்மைப் புகழ வேண்டும் என்று போலித்தனமாக விளம்பரம் செய்து பறைசாற்றிக் கொள்வர். அத்தகைய செயல்களைப் பகவான் ஏற்கமாட்டான். அவர்களுக்குப் பொய்யனாகவே தென்படுவான். எனவே உள்ளன்புடன் இறைவனை வணங்க வேண்டும்.  அன்புக்கு இணையான சக்தி இவ்வுலகில் இல்லை.  அத்தகைய அன்பினை திருக்கண்ணபுரத்தில் காணலாம் என்று ஆழ்வார் நம்மையெல்லாம் அழைக்கின்றார்.

        பரமனை இப்பாசுரத்தில் ஏகவசனத்தில் ஆயிரம் நாமங்களுக்குரியவனை மெய்யன் பொய்யன் அணியன் என்று குறிப்பிட்டவர், தொழுபவர்கள் என அடியார்களை மிக எச்சரிக்கையோடு பிழை நேர்ந்திடாதவாறு பாகவத அபச்சாரத்திற்கு ஆளாகாது தன்னைக் காத்து நிற்கும் ஆழ்வார் பெருமானின் பேருள்ளத்தின் அழகை இங்கு அனுபவிக்க முடிகின்றது.

        ஶ்ரீ சௌரிராஜன் சௌலப்பியத்தின் சிகரமாய் ஒளிர்பவன். அவன் திருக்கரத்தில் விளங்கும் சக்கரம் பிரயோகச் சக்கரம் நேராக இருக்கும்.  திருவாழியைப் பிரயோகிப்பதற்காக அவ்வமயம் திருப்ப வேண்டிய அவகாசமும் அவசியமும் தேவையற்றதாய் விளங்கி அடியார்களைக் காப்பதில் துடிப்போடு விளங்குகிறான் என்பது கருத்து.

        அர்ச்சாவதாரத்தில் கட்டுண்ணப் பண்ணிக் கிடக்கும் தன்னையே புருஷார்த்தமாகக் கொண்டு விரும்பி நம்பி தொழுபவர்களுக்கு எல்லாம் மெய்யனாக நின்று அருள்வான். மேலெழுந்த வாரியாகச் சில அற்ப நன்மைகளுக்காக விரும்பி மனம் சம்பந்தப்படாது தொழுபவர்களுக்கு எல்லாம் பொய்யனாக நின்று விளங்குபவன். அத்தகையவர்களுக்கு மேலும் மேலும் ஆசையை வளர்க்கக்கூடிய அந்த அற்ப பேறுகளை விரும்பிக் கொடுத்தவண்ணம் தன்னைக் கொண்டு அகலுவான். கண்ணபுரத்தானை தொழுது வந்தால் அங்குள்ள வயல்களில் வாளை மீன்கள்போல் துள்ளி மகிழலாம். அத்தகைய அடியவர்களுக்கு அவன் கடன்பட்டவனாகிறான். தன் மீது பட்ட கடனை உடன் உடன் தீர்க்கும் பொருட்டு துடிப்போடு வந்து நம்மைக் காத்தருள்வான்.

       

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே.      3779

 

தன் திருப்பாதங்களைப் பற்றியவர்களுக்கெல்லாம் அருகே நெருங்கி இருப்பான். நோய்கள் அவர்களை நெருங்காது. மீண்டும் மீண்டும் பிறவியெடுப்பதைத் தடுத்து அவன் ஆட்கொள்வான்.  ஆதலால் மாணிக்கமும், தங்கமும் வேய்ந்த மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திற்குச் சென்று அங்கு உறையும் பரந்தாமன் திருவடிகளை எப்போதும் வழிபடுங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.

        உடல் தொடர்பான நோய்கள் மட்டுமல்லாது, உள்ளம் தொடர்பான நோய்களையும் பகவான் விரட்டி விடுவான். உள்ளம் தொடர்பான நோய் என்பது பொறாமை, ஆணவம், கோபம், ஒழுக்கமின்மை ஆகிய நோய்கள் நெருங்காதபடி செய்து ஞானத்தை அருள்வான். இம்மையில் சுகம் கலந்த வாழ்வையும் மறுமையில் வீடுபேற்றையும் அவன் தருவான் என்பது இதன் பொருளாகும். பிறவித் துன்பத்தை நீக்கும் பேராற்றல் படைத்தவன் திருக்கண்ணபுரத்தில் உள்ளான். அவனை பேரன்போடு வழிபட்டு உய்வடைய வேண்டும் என்பது ஆழ்வார் விருப்பமாகும். சேதனன் எம்பெருமானை அணுக ஒரு அடி எடுத்து வைத்தால் பெருமான் அவனை நோக்கி ஒன்பது அடிகள் முன் வருவான் என்று ஆன்றோர் கூறுவர். மேலும், பரமபதத்தில்  எழுந்தருளியிருக்கும் பரந்தாமனுக்கு பணிவிடை செய்ய விரும்புவோர் இங்கு சௌரிராஜப் பெருமானிடத்தே அதனைச் செய்யலாம். இவனே அவன், அவனே இவன். சேதனருக்காக அர்ச்சையில் எழுந்துள்ளான்.

 

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி

ஏதம் சாரா எனக்கேலினி யென்குறை?

வேதநாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து

ஆதியானை  அடைந்தார்க்கு அல்லலில்லையே.      3780

 

எம்பெருமான் திருப்பாதங்களைத் தினந்தோறும் வழிபடுவதால் நம்மில் பிடித்துள்ள நோய்கள் அனைத்தும் விலகும்.  ஒரு கெடுதலும் நம்மை அண்டாது. இவ்வாறு இருக்கையில் எனக்கென்று எந்தவிதமான குறையும் இல்லை.  நாளும் வேதங்கள் ஓதுகின்ற அந்தணர்கள் விரும்பி வாழ்கின்ற திருக்கண்ணபுரத்தில் உறையும் ஆதிமூலத்தை சரணடைந்தவர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது என்று ஆழ்வார் கூறுகிறார்.

அவன் திருவடிகளை வணங்க இதற்கு முற்பட்ட காலத்தில் நாள்தோறும் செய்து வந்த வினைகளின் தொகுப்பெல்லாம் நீங்கும். இனி எவ்வித வினையும் வாரா. ஆதலால் இந்நிலையை அடையப்பட்ட எனக்கு என்ன குறை இருக்க முடியும். மறையோதுவார் வாழ்கின்ற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி இருக்கின்ற முதல் தனிவித்தாய் விளங்கும் எம்பெருமானை அடைந்தவர்களுக்குத் துன்பம் ஏதும் இல்லை என்பது இதன் கருத்தாகும்.

        ஆதிமூலமே! என்றழைத்த யானையின் துன்பத்தை அடியோடு நீக்கியவர் எம்பெருமான். நமோ நாராயணா என்றழைத்த பிரகலாதனைக் காத்தவர் ஸ்ரீமந் நாராயணன். வாலிக்கு பயந்து பகவானிடம் தஞ்சமடைந்தார் சுக்ரீவன். வாலியை அழித்துக் கிஷ்கிந்தையை சுக்ரீவனுக்கு அளித்தார் பெருமான். இராவணனால் விரட்டப்பட்ட விபீஷணனை ஏற்றுக் கொண்டார். எனவே எம்பெருமானை சரணடைந்தால் அவர் அனைத்துத் துன்பங்களையும் போக்குவார் என்பது இதன் கருத்தாகும்.

       

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே       3781

 

தாமரைப் பூவில் அமரும் மஹாலட்சுமியை, பெரியபிராட்டியை மார்பில் தரித்தவன், கல்லினால் கட்டப்பட்ட சிற்பங்களையுடைய மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் குடிகொண்டிருக்கிறான். அவ்வூரின் பெயரைச் சொன்னாலே துயரங்கள் நீங்கும். இனிமேல் துன்பம் என்பதில்லை என்றால் எனக்கு என்ன குறை என்று ஆழ்வார் கேட்கிறார்.

        கடவுளின் பெயரையும் அவன் திருத்தலங்களின் பெயரையும் தினசரி உச்சரித்தல் வேண்டும். பக்தியோ பிரபத்தியோ அனுஷ்டிக்க இயலாதவர்க்கு திருக்கண்ணபுரம் என்று சொன்ன அளவிற்கு தமது பாபங்களும் துக்கங்களும் தொலையும் என்கிறார் ஆழ்வார். தற்கால உலகத்தவர் இயந்திர கதியில் தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். மேலும் பணம் சேர்க்க வேண்டும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற நினைவில் அவர்கள் பகவானை மறந்து விடுகிறார்கள்.  ஒரு நாளைக்கு ஒரு நொடிப் பொழுதேனும் மனிதன் தன்னை நினைக்கிறானா என்பது மட்டும் பகவான் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.

        சௌரிராஜ பெருமானே! என்று அவன் திருநாமத்தைக் கூடச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இல்லை. அவனது திவ்ய தேசத்தின் திருநாமத்தைக் கூறிய அளவிலே மனம் சம்பந்தமில்லாது கூறினாலும் நாளும் துயர்பாடு சாரா என்கிறார் ஆழ்வார். மேலும் பரிகாரம் என்ற சொல்லால் பக்தி செய்வதாக நம்பும் சில செயல்கள் பேதமைகளைத் தருகிறது. வினைகளைக் களைய இவையெல்லாம் பரிகாரமாகாது. தேவையற்ற பொருள் செலவு செய்து பரிகாரம் செய்வதை விடுத்து பெருமானது அருளிச் செயலே பிறவிப்பிணியை நீக்கும் மருந்தாய் விளங்கும் என்கிறார் ஆழ்வார்.

        இப்பாசுரத்தில் பிராட்டியர்கள் மூவரோடும் தொடர்புபடுத்தி கூறியுள்ளார்.  பெரிய பிராட்டியர் பட்டத்தரசி என்ற நிலையை உணர்த்துகிறாள்.  தன் நிலைக்கேற்ப குற்றம் செய்யாதவர் யாரென அளவோடு பேசி அடியார்களின் குறை தீர்க்கப் பெருமானிடத்து பரிந்துரைத்து முயலுவாளாம். பூமிதேவியோ சிறிது பேசி விரிவாக விளக்கம் கூறி குறை தீர்க்க முயலுவாளாம். நப்பின்னை பிராட்டியைப் பொறுத்தமட்டில் பேச்சுக்கே இடமில்லையாம். அவன் தன் மேனி அழகால் எம்பெருமானை மயக்கி அடியார்கள் குறை தீர்த்து வைப்பாளாம். இவ்வாறு ஆன்றோர்கள் அழகாக அனுபவித்துள்ளார்கள்.

        பக்திக்குத் தேவையான சாதனங்களோ, பிரபத்திக்குத் தேவையான மன உறுதியோ இல்லாதவர்கள் எம்பெருமான் திருநாமத்தைக்கூட சொல்ல வேண்டாவாம். அவன் எழுந்தருளியுள்ள பதியின் பெயர் திருக்கண்ணபுரம் என்ற கூறிய அளவில் அது தன்னைத்தான் குறித்ததாக எண்ணி அருளுகின்றானாம்.

       

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாடம் நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடி பணிமின் அவன் தாள்களே.      3782

 

துக்கம் காரணமாக ஏற்படும் துன்பங்கள் அடியோடு அழிய வேண்டும் என்று விரும்புகிறவர்களே! நெடிய மாடங்களையுடைய திருகுருகூரிலே தோன்றி சடகோபர் இயற்றிய தமிழ்ப்பாடலான ஆயிரம் பாசுரங்களில் இந்தப் பத்துப் பாசுரங்களையும் பக்தியுடன் பாடி, ஆடி அவனது திருவடிகளைப் பணியுங்கள்  என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பாவத்தினால் ஏற்படும் துன்பங்களில் அல்லல்படும்  மக்களுக்குச் சடகோபர் அருளிய இப்பத்துப் பாசுரங்களைப் பக்தியுடன் படித்து வந்தால் துன்பம் நீங்கி அவனது திருவடியை அடையலாம். திருக்கண்ணபுரப் பெருமான் உண்மையான பக்தி கொள்பவர்களுக்கு உண்மையானவன். பொய்யர்களுக்கு

பொய்யானவன். உண்மையான பக்திதான் நம்மைக் கரைசேர்க்கும். போலியும், பொய்யான வார்த்தைகளும் பகவானிடம் எடுபடாது. இத்தகைய அற்புதமான பாசுரங்களை நாம் படித்து இப்பிறவிப் பயனை அடைய வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...