திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
எவராலும் அறிந்து
கொள்ள முடியாதவன். எல்லா உலகங்களுக்கும் உடைமையானவன். எனது தலைவன். வாமனனாய்
வடிவெடுத்து மூன்றடி மண் யாசகம் பெற்று உலகங்களை அளந்து நாடகமாடிய பெருமான் அருள்
புரியும் இடம் திருப்புள்ளம் பூதங்குடியாகும்.
இத்தலம் சுரும்பு வகை வண்டுகள் வாசமுள்ள பூக்கள்மீது அமர்ந்து ரீங்கரிக்க
எழிலான மயில்கள் நடனமாடும் இடமாகும் என்பது இப்பாசுரக் கருத்தாகும். எல்லா
உலகங்களுக்கும் உரிமையுடையவன், எவராலும் அறிய முடியாதவன் பகவான் என்பதை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
நமது வாழ்வில் பகவானைக் காண முடிவதில்லை. ஆனால், அவன்
அனைத்து உலகங்களுக்கும் தலைவனாவான். அவனை நேரில் காண நாம் அதற்காத் தகுதியினை
வளர்த்துக் கொள்ள வேண்டும். சுயநலம், துரோகம், பொறாமை போன்ற தீயகுணங்களுடன் அவனைக் காண்பது என்பது அரிது. எனவே
திருப்புள்ளம் பூதங்குடியில் வல்வில் இராமனாக அவதரித்த தூய்மையானவனைக் காண நாம்
தூய்மை உடையவர்களாக மாற வேண்டும் என்கிறார். இத்தகைய உயர் குணங்களை ஏற்படுத்திக்
கொண்டு திருப்புள்ளம் பூதங்குடியில் பகவானைத் தரிசனம் செய்ய ஆழ்வார் நம்மை
அழைக்கிறார்.
கபடமுள்ள
வாமனனாகி மகாபலியை வஞ்சித்து எல்லா உலகங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டவன்.
கஜேந்திரன் என்னும் யானையின் துன்பத்தைப் போக்க தனது சுதர்சனச் சக்கரத்தை ஏவியவன்.
அத்தகைய பரம பவித்ரன் அருள்புரியும் இடம் புள்ளபூதங்குடியாகும். இத்தலத்தில் உள்ள கழனிகளில் மீன்கள் துள்ளி
விளையாட, பறவைகள் நீர் தேங்கிய நிலத்தில்
சென்று தனது உறவுகளுக்கு இரைதேடும் இடமாகும்.
யானைக்குத்
துதிக்கை நீரில் மூழ்கிப் போகாதவரையில் அபாயமில்லை; துதிக்கையும் மூழ்கிப் போனால்
உடனே அபாயம் திண்ணம் என்பது ப்ரஸித்தமாதலால், இங்குத்
துதிக்கையும் மூழ்கும்படியான பரமவிபத்து நேர்ந்ததென்று காட்டுவதற்காகப்
பொள்ளைக்கரத்தை எடுத்துப் பேசினார் என்பர்.
எத்தகைய தீவினை புரிந்தாலும் பகவானை மறவாமல் பக்தி செய்தால் அத்தீவினை
ஓடிவிடும் என்று மீண்டும் ஆழ்வார் நினைவூட்டுகிறார். செய்த தீவினைகளை நினைத்து
மனம் வருந்துவதை விடச் செய்தவற்றிற்குப் பிராயசித்தம் தேட வேண்டும் என்பதை
இப்பாசுரம் நினைவு கொள்கிறது.
பகைமையையே
குணமாகக் கொண்ட அரக்கர்கள் வாழ்ந்த இலங்கையின் அரசனான இராவணன் வீழுமாறு அம்புகளை
எய்தவன் எங்கள் ஸ்ரீராமன். குதிரை
வடிவில் வந்த கேசுகாசுரனின் வாயைப் பிளந்தவன், இரட்டை மருத மரங்களை முறித்தவன் எழுந்தருளியிருக்கும் இடம்,
அழகு மிகுந்த புள்ளம் பூதங்குடியாகும். சோலைகளில் உள்ள தென்னை மரங்களிலிருந்து தேங்காய்கள்
பொய்கையில் விழ, அதனால்
பயந்து மீன்கள் வேறிடம் பாய, மீன்களுக்காகக் காத்திருந்த நாரைகள் அஞ்சி ஓட, பூக்களால் நிறைந்த வயல்களையுடைய
வளமான இடமாகும் என்று ஆழ்வார் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இத்தலத்து வயல்களில் நிகழும் அதிசயத்தைக்
கூறுவன பின்னடிகள். செறிந்த சோலைகளில் தேங்காய்கள் இற்று முறிந்து வீழ்கின்றன; அதனைக்கண்ட மீன்கள் ‘நம்மைக் கொள்ளை கொள்வதற்கு ஏதோவொரு வலிய பறவை நீரிற்
குதித்தது போலும்’ என்றெண்ணித் துள்ளிச் சிதறுகின்றன; அதனைக்
கண்ட குருகுகள் ‘இக்கயல்கள் நம்மையும்
கபளீகரிக்க வருகின்றன எனமருண்டு சிதறி ஓடுகின்றனவாம். தமக்கு இரையாகத் தக்க கயல்களினின்று
குருகுகள் அஞ்சுகின்றனவாகச் சொன்னவிதனால் அக்கயல்களின் வலிமை கூறப்பட்டதாம். தேங்காய்கள் விழுந்ததைக் கண்டே
குருகுகளும் இரிந்தனவாகக் கொள்ளுதலுமாம்.
அலை பாயும் மனதினை அடக்கி அதில் பகவான் நாமங்களைத் திரும்பத் திரும்பச்
சொல்லும்போது மனம் அதில் லயித்து விடுகிறது. எனவேதான் நம் மனதில் இத்தகைய
கருத்துக்கள் பதிய வேண்டும் என்ற காரணத்தினால் மறுபடியும் இக்கருத்துக்களைப்
பாசுரங்களாகப் பாடுகிறார் ஆழ்வார்.
கோவர்த்தன
மலையால் பெருமழையைத் தடுத்து மக்களைக் காத்தவன் எங்கள் கண்ணபிரான். பலம்கொண்ட வாள் படையை உடைய இலங்கை வேந்தனான
இராவணனின் தோள்களை அறுத்து வலிமையான கோதண்டத்தை ஏந்தியுள்ள ஸ்ரீராமன்
வீற்றிருக்கும் இடம் புள்ளம் பூதங்குடியாகும்.
சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட மதில்களாலும், குன்றுகளாலும், அழகிய வீடுகளாலும்,
மாளிகைகளாலும், மண்டபங்களாலும் அழகோடு இவ்வூர்
திகழ்கின்றது.
பசுக்களையும்
கன்றுகளையும் இடையர்களையும் பரிசழிக்க வேணுமென்று இந்திரன் கற்றுக்கொண்டு, ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது
கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்துப் பிடித்து ௮ம்மழையை வியர்த்தமாக்கியவனும்,
இராவணனது வலிமிக்க இருபது புயங்களையும்
அழித்தவனுமான சார்ங்கபாணி வாழுமிடம்
திருப்புள்ளம்பூதங்குடி: மதிள்களும் மாட மாளிகை`களும் மண்டபங்களும் மலிந்து அழகுபெற்றிருப்பதாகக்
காணப்படுகிறது.
பகவான் கூறிய கருத்துக்களை யார்
பின்பற்றினாலும் அதனைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியாது. எம்பெருமானின்
எண்ணங்களைச் செயல்படுத்தினால் அவரே உறுதுணையாக இருந்து நம் காரியங்களை வெற்றி
பெறச் செய்வார் என்ற கருத்தினை ஆழ்வார் கூறுகிறார்.
கருமையான
மைத்தீட்டிய பெரிய விழிகளையும், கரிய கூந்தலையும் உடைய யசோதை ஒளித்து வைத்த தயிர், நெய்,
பால் போன்றவற்றை உண்டவன். சுதர்சன சக்கரத்தை ஏந்திய பகவான் கோயில் கொண்டுள்ள இடம் புள்ளம்
பூதங்குடியாகும். சிவந்த கால்களையுடைய நாரைகள் வயல்களில் உள்ள ஆரல் மீன்களை உணவாக
எண்ணிப் போகும். பொய்யறியாத வேதங்களை ஓதும் வைதிகர்கள் குடியுள்ள புனிதத் தலமாகத்
திகழ்கின்றது.
இவ்வையகத்தில் உள்ள அனைவரும்
ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அவரவர்கள் முன்னேற்றத்தை நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய யோகியும் கூட ஒரு சில நேரங்களில் சம்சார
சாகரத்தில் சிக்கி துன்பம் அனுபவிக்கிறான். இத்தகைய இடர்களைப் போக்க அவனது ஆசியைப்
பெற முயற்சித்தல் வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
மின்னலைப் போன்ற
மெல்லிய இடையையும், மூங்கில்
போன்ற பருத்த தோள்களும் கொண்ட நப்பின்னை தொடர்பாக, சினம்
கொண்ட ஏழு காளைகளைக் கொன்ற திருமால் உறையும் இடம் புள்ளம் பூதங்குடியாகும். ஆழமான
நீர்களில் உள்ள தாமரையில் வரியுள்ள வண்டுகள் இசைபாட, புன்னை
மரங்கள் பொன்னிற மகரந்தப் பொடிகளை உதிர்க்கும் இடமாக இத்தலம் அமைந்துள்ளது.
மின்னல் போல் மெலிதான இடையையுடைய மாதர்கள்
புன்முறுவல் செய்ய, இளநிலா வந்து மேலே அரும்ப, அப்படிப்பட்ட மாதர்களுடைய மான் போன்ற பார்வையை அநுபவித்து அவ்வளவிலே அழகிய மலர்கள் நிறைந்துள்ள பொன்மயமான கற்பக காடுகள் நிறைந்த பிரதேசங்கள் எல்லாவற்றிலும் பாரிஜாத பூக்களில் உள்ள மகரந்த பிந்துக்களில் இனிமையாக ரீங்கரிக்கும் வண்டுகள் அமரும் சோலைகளில் புஷ்பங்களை அணிந்தும் மயில்தோகை போன்ற கூந்தலை உடையவர்களாயும் குளிர்ந்து விசாலமான கண்களை உடையவர்களாக உள்ளார்கள்.
ஒரு காரியத்தைச்
செய்யும்போது அதன் வாயிலாக மற்றொரு காரியத்தையும் பகவான் முடிப்பான் என்பது
தெளிவாகிறது. காளையை அடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தார் பகவான். அது போன்று, பாண்டவர்களுக்காகத் தூது சென்ற
பகவான், கௌரவர்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தி அவர்களது
பலத்தைக் குறைத்தார். இவை அனைத்தும் உலக நன்மைக்காகவும், தருமத்தை
நிலைநாட்டவும் இத்தகைய செயல்களைச்
செய்தார் என்ற கருத்து தெளிவாகிறது.
கோவர்த்தனகிரியை
குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து பசுக் கூட்டங்களைக் காத்தவன். நீள்முடி தரித்த
சிவபெருமானை ஓர் உடன்பாட்டின்படி வெற்றி கண்டு வாணாசுரனின் தோள்கள் அறுந்து
வீழுமாறு செய்த துவாரகீசன் கோயில் கொண்டுள்ள இடம் புள்ளம் பூதங்குடியாகும். இத்தலத்தில் உள்ள பொய்கையில் நீலமலர்கள்
பூத்திருக்க அதன் தேனை வண்டுகள் கூட்டமாக வந்துப் பருக, நாற்புறமும் வயல்கள் சூழ்ந்த ரம்மியமான சூழல்
திகழும் இடம் என்று பொருள்பட இப்பாசுரம் அமைந்துள்ளது.
இந்திரன்
பெய்வித்த பெருமழைக்குப் பரிஹாரமாக மலையைக் குடையாக வெடுத்துத் தரித்து
நின்றவனும், பாணபுரத்தைக்
காத்துக் கொண்டிருந்த தேவதாந்தரங்களை முதுகுகாட்டி. ஓடும்படி செய்து பாணாசுரனுடைய
தோள்களைத் திருவாழியினால் அறுத்தெறிந்தவனுமான எம்பெருமான் தேனுண்ணும் வண்டுகள்
நிறைந்த வயல் சூழ்ந்த திருப்புள்ளம் பூதங்குடியில் உள்ளான்.
‘அதர்மம் தலை தூக்கும்போது நான் வருவேன்’ என்று கீதையில் சொன்னதை மீண்டும்
ஆழ்வார் நினைவுபடுத்துகிறார். தருமத்திற்காகத் தன்னை அர்பணித்துக் கொள்பவர்களை
இயக்குபவர் கிருஷ்ண பரமாத்மாதான். எந்த நிலையிலும் பகவான் நம்மைக் காத்தருள்வார்
என்று நாம் எப்போதும் உணர வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழ்வார் இதைத் தெரிவிக்கிறார்.
இரத்தக்கறை
படிந்த வேற்படையையுடைய துரியோதனன் பக்கமிருந்த மன்னவர்கள் அழியும்படி அர்ச்சுனன்
தேரை நடத்தியவன், சிவபெருமானின்
தலையில் ஒட்டியிருந்த பிரம்ம கபாலத்தில் பிச்சையிட்டு நிறைத்தவன், கோயில் கொண்டிருக்கும் வீடு புள்ளம் பூதங்குடியாகும். வேதங்களாலும், நித்யாக்னிஹோத்ரம்
என்று மூன்று அக்னிகளை வளர்க்கும் பெருமையாலும், ஈகையாலும்
சகிப்புத் தன்மையாலும் புகழ்பெற்ற அந்தணர்கள் வாழுமிடம் இவ்வூர் என்ற பொருளில்
அமைந்துள்ளது.
எப்போதும்
பகைவருடைய உடல்களிலே வியாபித்துத் கொண்டே இருந்ததலால் ரத்தக்கறை கழுவ அவகாசமில்ல
கறையையுடைய வேற்படையையுடையரான குருவம்சத்தவர்கள் முடியும்படி அர்ஜுனனுக்குத் தேரை
நடத்திய பார்த்தஸாரதியானவனும்
ப்ரஹ்மஹத்தியை பண்ணின ருத்ரனின் கையில் ஒட்டிக் கெண்ட அவனது தலையினை
நீக்கியவனும் வாழும் இடம் புள்ளம்பூதங்குடியாகும்.
மகாபாரத் போரில் கண்ணன் சாரதியாக
இருந்து பாண்டவர்களுக்காகப் பல சாதுர்யங்களைச் செய்தான். அர்ச்சுனன் அதற்கு
அம்பாக இருந்தான். அதை எய்தவன் கண்ணன். அதர்மத்தின் ஆரவாரத்தைக் கண்டு பிரமிக்கக்
கூடாது. தருமம் உறுதியாக இருந்தால் அதர்மம் தோல்வியடையும். இதைக் கண்ணன் நிரூபணம்
செய்தார்.
பூலோகமும்,
விண்ணலகும் பிரித்தறிய முடியாதபடி
எங்கும் இருள் சூழ்ந்து மூடிய சமயம் பிரம்மனிடமிருந்து வெளிப்பட்ட மனித உருவில்
நடமாடிய வேதங்களை களவாடிய சோமுகாசுரனிடமிருந்து மீட்டெடுத்த மகாவிஷ்ணு அன்னப்பறவை
வடிவெடுத்து பிரம்மனுக்கு உபதேசித்தார். அத்தகைய பெருமான் உறையுமிடம் புள்ளம்
பூதங்குடியாகும். இத்தலம் பிரகாசமான நவரத்தினங்களையும், முத்துக்களையும், சாமரங்களையும், தங்கத் துகள்களையும் காவிரி நதி கொண்டு வந்து
சேர்க்கும் இடமாகும்.
பிரளயகாலம் வந்த
போது பிரம்மாவும் மறைந்தார். அப்போது அவர் முகத்தில் வெளிப்பட்ட வேதங்கள் மனித
வடிவம் எடுத்து நடமாடிக் கொண்டிருந்தன. அசுரனான சோமுகாசுரன் வேதங்களை களவாடியதால்
பிரம்மனால் படைப்புத் தொழில் செய்ய இயலாமல் போயின. பகவான் அசுரனை அழித்து வேதங்களை
மீட்டெடுத்தான்.
பெருமான் படைத்த இந்த உலகத்தின் இயக்கங்களைத் தடை செய்வது யாராக இருந்தாலும்
அவர்கள் அழிக்கப்படுவார்கள் அல்லது அடக்கப்படுவார்கள் என்பதை பெருமான்
உலகத்தாருக்கு உணர்த்தும் பொருட்டு இத்தகைய அசுர வதங்கள் நடைபெறுகின்றன.
கன்றுகளோடு கூடிய
பசுக்களை மேய்த்தவன், காளிங்கன்
தலையில் அது நடுங்குமாறு கூத்தாட்டியவன். பொற்றாமரையில் வீற்றிருக்கும் திருமகளின்
மணவாளன் கோயில் கொண்டிருக்கும் புள்ளம் பூதங்குடி குறித்து கற்றவர்கள் போற்றும்
திருமங்கை மன்னன் இயற்றிய இப்பத்துப் பாமாலைகளைப் பாடுபவர்கள் துன்பம் தீண்டாது
என்ற வகையில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
கன்றுகளையும்
பசுக்களையும் மேய்த்துவரும் காலத்திலே கோகுலத்து மக்களை அச்சுறுத்தி வந்த
காளிங்கன் என்ற நாகத்தை தண்டிக்கவேண்டி அது கிடந்த பொய்கையிலே சென்று குதித்து
அதன் படத்தின்மேல் ௮டியிட்டுக் கூத்தாடி அதனைச் செருக்கழித்த திருமால்
திருவுள்ளமுவந்து வாழுமிடமான திருப்புள்ளம்பூதங்குடி விஷயமாகக் கலியனுரை செய்த
இத்திருமொழியைப் பாடவல்லவர்கள் துயரற்றவராவர்.
இப்பத்து பாசுரங்களில் பகவான் அதர்மத்தை அழித்துத் தர்மத்தை
நிலைநாட்டுவதைக் குறிப்பிடுகின்றது. ஆணவத்தை அழித்து ஆறுதல் தருகின்றது. அசுர
குணங்களை அழித்துச் சாத்வீகத்தைத் தருகின்றது.
அச்சத்தை அகற்றி ஆனந்தத்தைத் தருகின்றது. எனவே இப்பாசுரத்தைப் படிப்பவர்கள்
அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலை நாட்டுவார்கள். அதனால் துன்பம் அவர்களைத்
தீண்டாது என்ற கருத்தை இப்பாசுரம் மூலம் ஆழ்வார் நமக்கு உணர்த்துகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக