வியாழன், 15 ஜனவரி, 2026

16. திருக்கண்ணமங்கை

 


திருமங்கையாழ்வார்                                                                         பெரிய திருமொழி

 

பெரும் புறக் கடலை அடல் ஏற்றினைப்
     பெண்ணை ஆணை எண் இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையைப்
     பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை அலரை அடியேன் மனத்து
     ஆசையை அமுதம் பொதி இன் சுவை
கரும்பினை கனியை சென்று நாடிக்
     கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே .     1638 

 

விசாலமான கடல் போன்றவனை, செருக்குடைய காளைபோல் எவருக்கும் கட்டுப்படாதவனை, பெண்களைப் போல் அன்புள்ளம் கொண்டவனை, ஆண்மை மிக்கவனை, கணக்கற்ற முனிவர்களுக்கு அருள் செய்த தவப்பயனாய் இருப்பவனை, முத்துக்குவியல் போன்றவனை, அன்பர்களுக்கு உயிரானவனை, முத்துவடம் போன்றவனை, அரும்பு போல் இளமையானவனை, மென்மையான மலர் போன்று நெஞ்சில் கருணை கொண்டு என் மனதில் புதிதாகத் தோன்றி  எழுந்தருளியிருப்பவனை, அமுதமென்னும் நீர் பாய்ச்சி அதில் விளைந்த கரும்பு போன்றவனை, ஆதியும் அந்தமுமில்லா கனி போன்றவனை, பத்தராவி என்ற பக்தவத்சலனைத் தேடியலைந்து திருக்கண்ணமங்கையுள் சென்று தரிசித்தேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.

ஆழ்வார் திருநின்றவூர் சென்று அங்கு எம்பெருமானின் அழகில் மயங்கிப் பாசுரம் எதுவும் பாடாமல் வந்து விடுகிறார். பிராட்டிக்கு அது குறையாக இருக்க, அதனைத் தீர்க்கப் பெருமான் ஆழ்வாரைத் தேடி மாமல்லபுரம் சென்று அவரிடம் பாசுரம் வாங்கி பிராட்டியிடம் கொடுக்கிறார்.  ஆனால் பிராட்டிக்கு மேலும் ஒரு பாசுரம் தேவை என்று பெருமானிடம் கூற அப்பாசுரத்தைப் பெற திருக்கண்ணமங்கை சென்று பெற்றார். இத்தகைய பெருமை கொண்ட தலம் திருக்கண்ணமங்கையாகும்.

 

       

மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும்
     மெய்யைப் பொய்யினை கையில் ஓர் சங்கு உடை
மைந் நிறக் கடலைக் கடல் வண்ணனை
     மாலை ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை இற்றை நாளினை
     நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்
     கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.        1639

 

உண்மையான நன்மைகளைப் புரியும் குணமுடையவனைபரமபதத்தை அளிக்கவல்ல சத்தியவானை, நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு பொய்யானவனை, திருக்கரத்தில் பாஞ்சஜன்னியம் என்ற சங்கைத் தரித்தவனைகரிய நிறமுடைய கடல் போன்றவனைசமுத்திரம் போன்ற கம்பீரத் தோற்றம் கொண்ட திருமாலை, ஆலிலைமேல் துயின்ற மாயம் உள்ளவனை, இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றினையும் நடத்துபவனை, மாதம், வருடம், ஆகிய காலப்பகுதிகளின் தலைவனை, வெல்லக்கட்டி போன்று இனிமையானவனை, கரும்புச்சாறு போன்றவனை, திருக்கண்ணபுரத்தில் நான் தரிசனம் செய்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        நமக்கு வரும் மெய்யான நன்மை என்பது முக்திக்கு வழிவகுப்பதாகும். அவனிடம் அற்ப பொருளை வேண்டுவது உண்மையான நன்மை பெறாது. ஞானம், வைராக்கியம், அருள் போன்றவை வேண்டும் என்பதே உண்மையான நன்மையாகும். கேட்டதை கொடுப்பவன் என்ற எண்ணத்தில் இகலோக வாழ்க்கைக்கான பொருளில் வேண்டினால் அவன் நிராகரித்து விடுவான். எனவேதான் ஆழ்வார் மெய்யான நன்மைகள் புரியும் பெருமான் என்று தமது பாசுரத்தில் குறிப்பிடுகிறார். 

 

       

எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை
     வாச வார் குழலாள் மலை மங்கை தன்
பங்கனை பங்கில் வைத்து உகந்தான் தன்னைப்
     பான்மையைப் பனி மா மதியம் தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை
     உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்
கங்குலை பகலை சென்று நாடிக்
    கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.      1640

 

எங்களிடம் அருள் வைத்துள்ள எம்பெருமானை, மணமிகுந்த கூந்தலையுடைய சக்திக்குத் தன் உடலின் இடப்பாகத்தை அளித்த சிவபெருமானை, தன் திருமேனியில் மகிழ்வோடு கொண்ட குணமுடையவனை, குளிர்ச்சி மிகுந்த சந்திரன் உலாவிவரும் ஆகாயமாக இருப்பவனை, கதிரவனுக்கு அந்தராத்மாவாக இருப்பவனை, வேங்கடமலையாக இருப்பவனை, நம்மால் விரும்பி வணங்கப்படுபவனை, இரவாகவும், பகலாகவும் உள்ள பரந்தாமனைத் தேடிச் சென்று திருக்கண்ணமங்கையுள் தரிசனம் செய்தேன் என்கிறார் ஆழ்வார்.

        இப்பாசுரத்தின் மூலமாகச் சக்தி, சிவன், திருமால் அனைவரும் ஒன்றே என்ற கருத்தினை ஆழ்வார் வெளிப்படுத்துகிறார். சிவபெருமானின் திருமேனியில் திருமால் இடம் பெற்றுள்ளார் என்ற கருத்தினை உள்வாங்கி அவர்களின் தொண்டர்களும் இத்தகைய மனநிலையில் இருத்தல் வேண்டும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளையும், வாதங்களையும் களைந்து, காலவிரயம் கொள்ளாமல் பரம்பொருள் ஒருவனே என்ற தெளிவு அனைவருக்கும் வர  வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

       

பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையைத்
     தெள்ளியார் வணங்கப்படும் தேவனை
மாயனை மதிள் கோவல் இடைகழி
     மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை
     எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியைச் சென்று நாடிக்
    கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.       1641

 

        பேய்ச்சியான பூதனையின் தனங்களில் உள்ள நஞ்சினை அருந்திய பாலகனை, தெளிவுமிக்க அறிவுடைய ஞானிகளால் போற்றி வணங்கப்படும் இறைவனை, திருமதில்களையுடைய திருக்கோவலூர் இடைக்கழியில் முதலாழ்வார்களிடையில் நின்றவனை, மாயவனை, வேதம் கற்ற அந்தணர்களின் நெஞ்சில் ஜோதியாய்க் குடி கொண்டவனை, நான் தளர்ந்து விழும் காலத்தில் எனக்கு நிதியாகவும், பொன்னாகவும், இரத்தினமாகவும் இருந்து உதவுபவனை, நாடிச் சென்று திருக்கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்கிறார் ஆழ்வார்.

        பகவான் ஜோதி வடிவானவன். ஜோதியிலிருந்து உலகத்து உயிர்கள் தோன்றியுள்ளன. இந்த உயிர்கள் அனைத்தும் பகவான் என்ற ஜோதியில் ஐக்கியமாகி விடுகின்றன. நாம் அழியும் உடல் அல்ல. அழியாத ஜோதி என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.  வயதான காலத்தில் நம் உடல் தளர்ச்சியடையும்போது நாம் பகவானின் ஜோதி என்ற உண்மைத் தத்துவத்தை நமக்கு உணரச் செய்து, நம் தளர்வுகளை அகற்றி, நமக்கு முக்தி அளிக்கிறான். நம்மை ஆத்மா என்ற நிலையில் வைத்துப் பார்க்கும்போது நமக்கு எல்லையில்லா ஆற்றல் பிறக்கும் என்பதை ஆழ்வார் நமக்குத் தெளிவிக்கிறார்.

       

ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை
     இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்
     ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய
கூற்றினை குரு மா மணிக் குன்றினை
     நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலைச் சென்று நாடிக்
     கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.       1642

 

காளை போன்ற வீரம் மிக்கவனை, இமயத்தில் திருப்பிரிதியில் எழுந்தருளியிருக்கும் என் சுவாமியை, இவ்வுலகிற்கு அனைத்துப் பயன்களையும் அளிப்பவனை, அண்டத்திற்கு அப்பால் உள்ள பரமபதத்திற்கு  நம்மை அழைத்துச் செல்லும் பகவானை, பகைவர்களுக்குக் காலனாகக் கையில் திருச்சக்கரம் ஏந்தி இருப்பவனை, சிறந்த நீல மணிக்குன்று போன்றவனை, திருநின்றவூரில் அருள் புரியும் முத்துக்குவியல் போன்றவனை, தென்றல் போல் சுகத்தையும் நீரை போன்று குளிர்ச்சியுடைய பரந்தாமனைத் தேடி திருக்கண்ணமங்கையில் நான் தரிசனம் செய்தேன் என்கிறார் ஆழ்வார்.

        இப்பாசுரத்தில் ஆழ்வார், பெருமானின் கல்யாண குணங்களைக் காட்டுகிறார். இகலோக வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை அகற்றி நமக்கு முக்தி அளிப்பவர் பகவான். நமக்கு முக்தி அடையும் தகுதி வரும்போது பகவானே நமக்குக் குருவை அனுப்பி அவர்மூலம் முக்தி பெற வைக்கிறார். அசுரர்களை அழிப்பது போல் முக்திக்குத் தடையாக வரும் தீயசக்திகளை விரட்டி அடிக்கிறார். எனவே ஞான வாழ்க்கைக்கு நாம் தயார் செய்து கொண்டால் அதற்கான சாதகமான சூழ்நிலையினை பகவானே அமைத்துக் கொடுப்பார் என்பது இப்பாசுரப் பொருளாகும்.

       

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச்
     சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை திருமங்கை மணாளனைத்
     தேவனைத் திகழும் பவளத்து ஒளி
ஒப்பனை உலகு ஏழினை ஊழியை
     ஆழி ஏந்திய கையனை அந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல்
     கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே .       1643

 

அனைத்தும் அறிந்தவனைகுதிரை வடிவில் வந்த கேசிகாசுரனை வதம் செய்தவனை, மதிப்பு மிக்க ஆபரணங்கள் வைக்கும் பெட்டி போன்ற திருமகளின் கணவனை, தேவர்களுக்கெல்லாம் தேவனாக இருப்பவனை, பவழத்தின் ஒளி போன்றவனை, ஏழு உலகங்களாய் இருப்பவனை, பிரளய  வடிவாக இருப்பவனை, சுதர்சன சக்கரத்தைத் தரித்தவனை, வேதம் பயின்றவர்களுக்கு ஒழுக்கமாகத் திகழ்பவனை, செங்கழுநீர் மலர்கள் பூக்கும் திருக்கண்ணமங்கையில் நான் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        நம்முடைய பெருமைகளை நாம் மறந்ததன் காரணமாகத்தான் பல துன்பங்களை அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். பெருமைக்குரிய பகவானால் படைக்கப்பட்ட நாம் சிறுமையான செயல்கள் செய்து தாழ்ந்து வருகிறோம். மாயக்கண்ணனின் விளையாட்டுப் போல் நம்முடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. பகவானின் மனிதப் படைப்பு என்பது பெருமைக்குரியது. நாம் அதை இழிவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதுவும் அவனது விளையாட்டுகளில் ஒன்றாகும். அசுரர்களை அழித்த பகவானின் படைப்பாகிய நாம் ஒளியற்றவர்களாக இருக்க முடியாது. அனைத்தையும் வெற்றி கொள்ளும் வாய்ப்பு நம்மிடம் உள்ளது. கர்மவினை என்ற மாயத்திரை விலகினால் நமது பெருமைகள் நமக்கே புரியும்.

 

திருத்தனை திசை நான்முகன் தந்தையைத்
     தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை
     விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை அரியைப் பரி கீறிய
     அப்பனை அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில்
     கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.       1644

 

எக்காலத்திலும் நிறைந்த திருப்தியை உடையவனை, பிரம்மனின் தந்தையை, தேவாதி தேவனை, மும்மூர்த்திகளுள் மூலமானவனை, சுடர் விளக்காய் பிரகாசிப்பவனை, மண்ணுலகமும், விண்ணுலகமுமாக இருப்பவனை, நெற்றிக்கண் படைத்த சிவபெருமானுக்கு தன் மேனியில் சரிபாதியை தந்தவனை, நரசிம்மனை, குதிரை வடிவில் வந்த கேசிகாசுரனை அழித்த கேசவனை, சமுத்திரநீர் வற்றுமாறு செய்த திறமையானவனை, மகிழ்வுடன் இசைபாடும் கரிய வண்டுகள் நடமாடும் நந்தவனங்கள் கொண்ட திருக்கண்ணமங்கையில் நான் தரிசனம் செய்தேன் என்று பாடுகிறார் ஆழ்வார். 

        பகவான் சுடர் விளக்காய் இருந்து ஜோதியை அளிப்பவன். இத்தகைய ஜோதியானது நம் அனைவரின் ஆன்மாவிலும் குடிகொண்டுள்ளது. இவையே நமது வடிவமாகக் கொண்டுள்ளது. நமது சரீரமானது மண்ணில் தோன்றியது. இறுதியில் இது மண்ணிலேயே கலந்து விடும்.  ஆனால் ஆத்ம ஜோதி என்பது அழிவற்றது. நாம் அனைவரும் நித்தியர்கள் எனபதற்கு இதுவே சான்றாகும். ஆன்மாவிற்கு மரணமோ, துக்கமோ இல்லை. பிறப்பும் இறப்பும் இல்லை. இக்கருத்தினை ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கிறார்.

       

வெம் சினக் களிற்றை விளங்காய் வீழக்
     கன்று வீசிய ஈசனை பேய் மகள்
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத்
     தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை
     நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்
    கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.       1645

 

கொடுமையான சினம் கொண்ட யானை போன்றவனை, கன்றாக வந்த அசுரனை விளாமரத்தில் காய்கள் விழுமாறு சுழற்றி வீசிய கண்ணனை, பூதனை என்னும் பேய்மகள் அழியும்படி அவள் தனத்தில் பூசியிருந்த நஞ்சினை சுவைத்து அவள் உயிரை வாங்கியவனை, இலங்கை மன்னன் இராவணன் இறக்குமாறு ரகுவம்சத்தில் தோன்றியவனை, அன்பர்களுக்கு ஆராவமுதமாக இருப்பபவனை, தன்னிடம் ஆசைபடுபவர் தலைமீது நிற்கின்ற, அவர்களை முழுமையாகக் காத்தருள்பவனை, கம்சன் இறக்குமாறு செய்தவனை நான் திருக்கண்ணமங்கையில் தரிசனம் செய்தேன் என்கிறார் ஆழ்வார்.

        பகவான் அடியவர்களை அனுக்கிரகிப்பதுபோல் எதிரிகளையும் கொடும் விரோதம் கொள்பவனாகத் திகழ்கின்றான். விளாமரமாகவும், கன்றாகவும் வந்த வத்சாசுரனையும், கபித்தாசுரனையும் ஒரு சேர வீழ்த்தியவன் கண்ணன். இச்செயல் அவனது பராக்கிரமத்தைக் காட்டுகிறது. பகவான் புரிந்த இத்தகைய சூட்சுமமான செயல்கள் நம் வாழ்க்கையிலும் பயன்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கைப் போராட்டத்திலும் இத்தகைய சூட்சுமங்களைப் பயன்படுத்தி வெற்றி காண  வேண்டும் என்ற நிலையில் ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கிறார்.

       

பண்ணினைப் பண்ணில் நின்றது ஓர் பான்மையைப்
     பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை
    வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை அலை நீரினை
    மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினை கண்கள் ஆரளவும் நின்று
    கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.       1646

 

இனிமையான இசையினைப் போலவும் அந்த இசையின் பொருளாகவும் விளங்குபவனை, பாலினுள் நெய் மறைந்திருப்பது போல் எங்கும் மறைந்து உறைபவனை, வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவாக அருள் புரிபவனை, ஜோதிமயமானவனை, வேள்வி அக்னியில் ஆகுதியைப் பெறுபவனை, தீபச்சுடராய் ஒளிர்பவனை, மலை போன்ற உறுதி மிக்கவனை, நீர் போன்று உயிரைக் காப்பவனை, பூரண வெண்ணிலவு போன்ற ஒளிமிக்க திருமாலை, வேதியர்கள் கண் போன்றவனை, எனது கண்கள் திருப்தி அடையும்வரை திருக்கண்ணமங்கையில் நான் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        இசையினால் விலங்கும், சிறு குழந்தையும், பாம்பும் லயித்து மயங்கும். அது போன்று எம்பெருமானும் அனைவருக்கும் விரும்பி மயக்கம் தரவல்லவன். கரந்த பாலின் உள்ளே மறைந்திருக்கும் மணமிக்க நெய் போன்று நம்முள் அந்தர்யாமியாக  இருப்பவன். அவன்மீது பக்தி பெருகப் பெருக நம்முள் இருக்கும் அவனை நாம் அறிந்து கொள்ள முடியும். நித்ய விபூதியாகிய பரமபதத்தில் நித்யவாசம் செய்து நம்மையெல்லாம் காத்தருள்கிறான். விளக்கொளியானது தன்னைத்தானே பிரகாசித்துப் பிறவற்றையும் பிரகாசிக்கச் செய்வது போல் விளங்குகிறார் எம்பெருமான் என்பது இப்பாசுரப் பொருளாகும்.

 

கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று
     காதலால் கலிகன்றி உரைசெய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை
    வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ்
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர்
    மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பு ஆகில்
    கற்கலாம் கவியின் பொருள் தானே.       1647

 

திருக்கண்ணமங்கை என்னும் திவ்ய தேசத்தில் எம்பெருமானாகிய பரந்தாமனைத் தரிசித்தேன் என்று அன்பொழுக கூறுகிறார். கலியன் இயற்றிய இசையுடன் கூடிய அருந்தமிழ் மாலை பத்தினையும் பக்தியோடு பாட வல்லவர்கள், நிலவு தவழும் வானில் தேவர்களாக மகிழ்வுடன் வாழ்வார்கள். வெண்மைநிறச் சங்கேந்திய ஸ்ரீகிருஷ்ணா! உனக்கு ஏற்புடையதாயின் இப்பாடல்களின் பொருள்களை எங்களுடன் நீயும் சேர்ந்து அனுபவிக்கலாம் என்று மனமுருகிப் பாடுகிறார் ஆழ்வார்.

        திருநாட்டில் சென்று காண வேண்டிய பரமபுருஷனை இந்நிலத்தில், திருக்கண்ணமங்கையில் காணப் பெற்றேன். இவற்றைப் பாடுபவர்கள் விண்ணுலகில் தேவர்களாக விளங்குவார்கள். தங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் எனக்கு நீவிர சீடனாகி எம்பாக்களைக் கற்க வேண்டும் என்று பெருமானிடம் கூறுகிறார் ஆழ்வார். கனவு நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். பகவான் ஒளிமயமானவன் என்றால் அவனது படைப்புகளாகிய நாமும் ஒளிமிக்கவர்கள். ஒழுக்கமற்று, துரோகத்துடன், நன்றி கொன்று, தெய்வத்தை மறந்து, அற்ப பொருளில் அடிமை கொண்டு இருக்க முடியாது. இவை அனைத்தும் முன்வினை என்னும் மாயத்திரையில் நாம் சிக்குண்டு அவதியுறுவதால் வரும் துன்பம்.  கனவு நிலையை அகற்றி நினைவு நிலைக்கு நாம் வர வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே.        1848

 

ஈடில்லாத நல்லுறவாய், எனக்கு உயிரினும் மேலான ஆத்மாவாய், ஒப்பற்ற பொருளாய், இனிமேல் வரப்போகும் பரமபதமாய் இருக்கும் கோசலை மைந்தனை நேற்று வணங்கியது திருநீர்மலையில். இன்று கருக்கொண்ட பயிர்களால் சூழப்பட்ட திருக்கண்ணமங்கையில் சென்று வணங்குவோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.

தானே வந்து உதவும் ஒரு நல்ல உறவினனாய்  எனக்கு ஆத்மாவாய் சிறந்த சத்தை விளைவிக்கும்  பொருளாய்  பின்னால் மரணத்துக்குப் பின்  ஸ்வாபாவிகமாக வரும் நல்ல மோக்ஷத்தைத்  தருபவனான  யெளவனப் பெருமானை நேற்று  கண்டது  திருநீர்மலையில்,  இன்றோ வெனில்  முற்றிய நெற்பயிர்  சூழ்ந்த திருக்கண்ணமங்கையில் சென்று வணங்குவோம்

        பெண்கள் திருமணம்முடித்துப் புக்ககம் செல்லும் தருவாயில் தன் பிறந்த இடத்தில் நெடுநாள் பழகிய தோழிகளின் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று சொல்லிக் கொண்டு செல்வது என்பது நமது மரபு.  அது போன்று ஆழ்வாரும் தன் புக்ககமான பரமபத பயணத்திற்கு செல்வதற்கு முன் தனது ஈடுபாட்டிற்குகந்த திருப்பதிகளான திருநீர்மலை சென்று நீர்வண்ணப் பெருமாள் முன்னிலையிலும், திருக்கண்ணமங்கையிலும் சென்று பத்தராவிப் பெருமான் முன்னிலையிலும் தான் பரமபதம் செல்வதாகப் பிரிவாற்றாமையுடன் கண்ணீர் மல்கத் தெரிவித்துவிட்டு செல்கின்றார். ஆழ்வாரின் இத்தகைய பண்பு இப்பாசுரவழி அறிந்து நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது எனலாம்.

 

பத்தர் ஆவியைப் பால் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினை சென்று விண்ணகர்க் காண்டுமே.      1855.

 

அடியார்களுக்கெல்லாம் உயிராக இருப்பவனை, களங்கமற்ற நிலவையொத்த அழகு பொருந்தினவனை, ஆபரணமாலை போன்றவனை, முத்து, நீலமணி, மாணிக்கம் போன்ற இரத்தினக் குவியல் போன்ற ஜகத்காரண பூதனுமான பெருமானை இன்று திருமாலிருஞ்சோலையில் வணங்கி, நாளைத் திருவிண்ணகர் சென்று வணங்குவோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.

‘பத்தராவி’ என்பதற்கு இருவகையாகப் பொருளினை அருளிச்செய்வர், பக்தர்களுக்கு ஆவியாயிருப்பவன் என்பது ஒருபொருள்.  பக்தர்களைத் தனக்கு ஆவியாகவுடையவன் என்பது மற்றொரு பொருள். “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்“ என்று கீதையில் அருளிச்செய்தபடியே ஞானிகளான பக்தர்களைத் தனக்கு உயிர்நிலையாக உடையவன் என்றவாறு. பால்மதியை சந்திரனைப் போல எப்பொழுதும் ஆனந்தமாகக் கண்டு கொண்டிருக்க வேண்டிய வடிவுபடைத்தவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

        பக்தர்களுக்கு ஆவியாக இருப்பவன் என்பதை இங்கு ’பத்தராவி’ என்று கூறுகிறார் ஆழ்வார். ஞானியர்களான பக்தர்களைத் தனக்கு உயர்நிலையாக இருப்பவன் என்று கீதையிலும் அருளியுள்ளார். மக்கள் உயிர், உடல் ஆகியவற்றை லௌகிகப் பொருட்கள் பெறுவதற்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் எம்பெருமான் அவர்களை விட்டு விலகி இருக்கிறான். ஆனால் அடியார்கள் என்றும் பகவானின் சிந்தனை வயப்பட்டு வாழ்கிறார்கள். எனவே அவர்களது உயிரில் அவன் கலந்துள்ளான் என்பது இதன் பொருளாகும்.

       

மண் நாடும் விண் நாடும் வானவரும்
     தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல்
     தான் விழுங்கி உய்யக்கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
     கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத
     போது எல்லாம் இனிய ஆறே.       2008

 

பூவுலகமும், சுவர்க்கமும், தேவர்களும், அசுரர்களும் மற்றும் உள்ள எல்லா ஜீவராசிகளும் தடுக்க முடியாத பிரளய வெள்ளத்தில் அழிந்து போகாதபடி உலகினைத் தனது வயிற்றில் அடங்கும்படி உண்டு காப்பாற்றித் தந்த பரம தயாளனான எனது அன்புத் தலைவன் திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியுள்ளான். அவனது திருவடிகளை நம் சிரசு மேல் வைத்துப் பயனுறுவோம்.  அவனது வடிவை சிந்தனையில் வைக்காத பயனற்ற பிறவிகள் எடுத்த மாந்தரைப் பற்றி  ஒருபோதும் எண்ணப்பெறாத  காலமெல்லாம் எனக்கு இனிமையான காலமாகக் கழியும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        வானத்து மழைநீர், தூய்மையான புனிதநீர் மண்ணில் விழும்வரை புனிதமானது. மண்ணில் அது விழும் நிலையைப் பொறுத்து அதன் தூய்மைத்தன்மை நிர்ணயிக்கப்படும். குளத்தில் விழுந்தால் அது மக்களுக்குப் பயன்படும். குட்டையில் விழுந்தால் அது கழிவுப் பொருளாகி ஒதுக்கப்படும். அது போன்று நாம் பிறக்கும்போது தூய்மையாகப் பிறந்தாலும் நாம் வளரும் நிலையினைக் கொண்டு நமது தூய்மை நிர்ணயிக்கப்படும். நமது முற்பிறவியின் கர்மவினைக்கு ஏற்றவாறு பெருமானும் நம்மைப் பூமியில் படைக்கிறான். அதற்குத் தகுந்தாற்போல் பலன்களும் கிடைக்கின்றது. துன்புறும்போதும் பகவானை நினைத்து வந்தால் நமது பிறவி தூய்மையானதாக முடியும் என்ற கருத்தினை ஆழ்வார் வலியுறுத்துகிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...