கண்ணனாக அவதரித்த
காலத்தில் நப்பின்னையுடனும், மலர் மகளோடும் அன்புடன் கலந்திருப்பவன். அசுரர்களிடம் இரக்கமின்றி
இருப்பவன். அத்தகையவன் என்றும் உறையும் ஊர் திருநீர்மலையாகும். சோலைகளால்
சூழப்பட்ட திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை,
திருக்கோவலூர் முறையே நின்றவனும், அமர்ந்தவனும்,
இருந்தவனும், நடந்தவனும் உள்ள எம்பெருமான்,
இந்நான்கு நிலைகளில் நீர்மலையில் காட்சி தருகிறான் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
கண்ணனாக
அவதரித்தபோது நப்பின்னை பிராட்டியோடும், திருமகளோடும் அன்புடன் கலந்து, எக்காலத்தும்
அசுரர்களிடம் இரக்கமின்றி, இருப்பவருக்கு என்றும் இருக்கும்
இடமாக இருப்பது திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட நீர் வளமுடைய திருநறையூர்,
திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் ஆகிய இடங்களில் முறையே நின்றவனும், அமர்ந்தவனும், கிடந்தவனும், நடந்தவனுமாகிய பெருமானுக்கு இடமாகிய
மலையாக இருப்பது திருநீர்மலையாகும்.
இப்பாசுரத்தில் ‘ஆயர் குலக்கொடி’ என்பது நப்பின்னையைக் குறிப்பதாகும்.
‘அணிமாமலர் மங்கை’ என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். அவளின் அம்சமானவளே ருக்மணி
பிராட்டியாகும். மூன்று பிராட்டிகளை அடைய, அசுரர்களை
அழித்தவனாவான். அரக்க குணம் கொண்ட துரியோதனனை குருக்ஷேத்திரத்தில் பகவான்
அழித்தார். இராவணனை இலங்கை போரில்
அழித்தார். இரண்ய சிசுபாலர்களை அழித்து மக்களைக் காத்தார். பலரை துன்புறுத்தி வந்த
கம்சனையும் அழித்தார். எனவே அசுர குணம் கொண்டவர்களுக்குப் பகவான் இரக்கமே
காட்டமாட்டார் என்பது இப்பாசுரவழி அறியப்படுகிறது.
உள்ளத்தை விட்டு
ஒரு நொடிப் பொழுதும் நீங்காதிருக்கும் என் செல்வமே! அனுபவிக்க அனுபவிக்க இன்பமாக
இருக்கின்ற தேவகி மைந்தனே! அழகிய குளிர்ந்த திருவாலிநகர் மணாளனே!
திருமாலிருஞ்சோலையில் உலாவி வரும் யானைக் கன்று போன்றவனே! என்றும் அணையாத தீபச்சுடரே! திருநறையூரில்
அருள் புரியும் பரிபூரணனே! இந்தளூர் எம்பெருமானே! அடியேனிடம் சிறிதும் இரக்கம்
காட்டவில்லையே என்று ஆழ்வார் கூறுகிறார்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் பகவானிடம் இறைஞ்சிக் கேட்கிறார். கடலில் நீர்
வற்றுவதுண்டோ. உன் திருவுள்ளத்தில் இரக்கம் மாறுவதுண்டோ, இப்படியும்
என்னைக் கொல்லலாமா? பாவியான எனக்குச் சிறிதும் இறங்க
மாட்டாயோ? என்று வினவுகிறார். நம் மீது இரக்கம்
கொண்டுள்ளதால்தான் நாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பகவானின் கருணை
இன்றும் அமுதவெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாம் அற்ப பொருளுக்காக
அவரது கருணையை அலட்சியம் செய்கிறோம். ஆத்ம தரிசனத்தைத் தவிர வேறு எதையும்
பகவானிடம் வேண்டக் கூடாது என்ற மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது
இதன் பொருள்.
நீர்வளம் கொண்ட
திருவிண்ணகரில் குடி கொண்டிருக்கும் பெருமானே! திருநறையூரில் தேன் போன்று
இனிப்பபவனே! திருக்குறுங்குடியில் வந்து கலந்து கொள்ள நிற்பவனே! சந்திரன் போன்ற
முகத்தில் மானைப் போன்ற கண்கள் என்னை அம்பெனத் தாக்குவதால் பயந்து நடுங்கி ஓடி
வந்து, தலைவா! என்று
உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாயாக என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
இலக்கியப்
படைப்பாளர்கள், பெண்களின்
விழிகளை மானுக்கு ஒப்பிடுவார்கள். அதன் மருட்சிப் பார்வையும் பெண் விழிகளை
ஒத்திருக்கும். அந்த மானின் விழி அழகானது நப்பின்னைப் பிராட்டியின் விழிகளின்
அழகிற்குத் தோற்று நிலை கண்டு வருந்தி நிற்கிறதாம். மேலும், கவியின்
ஆட்சியால் கொடுமை கோலம் பூண்ட உலகம் கொடு உலகம். சௌரிராஜப் பெருமானைத்
தொழுதெழுவோர் பார்வையில் படாதவாறு உயர்ந்து நிற்கின்றதாம் உயரிய மதிள்கள்.
நங்கையரின் கண் பார்வை அம்புபோல் தாக்குவதால் உன்னைச் சரண் அடைகிறேன்.
பெண்களின் மோகத்தினால் பல மன்னர்கள் நாடுகளை இழந்துள்ளார்கள். முனிவர்கள் நிலை
குலைந்துள்ளார்கள். நமது மக்களும் இதனால் தங்களது இலட்சியங்களை மறந்து தவறான
பாதையில் சென்று துன்பங்களை அனுபவிக்கிறார்கள். பெண் மோகம் என்பது ஒருவரை
செயலிழக்கச் செய்யும். எனவே சிற்றின்பத்தை விட்டு ஆன்மிகத்தில் ஈடுபடுமாறு ஆழ்வார்
தெளிவிக்கிறார்.
வயது முதிர்ந்த
உடல் தளரும் காலத்தில் நமது கண்கள் பீளையோடு சுழன்று, கோழை மேலிட்டு நம்மை
வாட்டும்போது இளைய பருவத்தில் இனிமையாக
பேசும் மங்கையர் நம் நிலையைப் பார்த்து பரிதவித்து ‘மெதுவாக பார்த்துப் போங்கள்’
என்று கூறும் நிலைக்கு முன்னர், ஆகாயமும், மலைகளும், வேதங்களும், யாகங்களுமே
வடிவமாகியிருக்கும் எம்பெருமான், விரும்பியிருக்கும் தலமான
திருநறையூரை நெஞ்சமே! நாம் சென்று வணங்குவோம் என்கிறார் ஆழ்வார்.
வயோதிகம் வரும்போது நாம் தடியுடன், கூனிட்டு நடந்து
செல்லும் நிலை வரும். நம்மிடம் அன்பாக இருந்த மங்கையர் நம்மை வெறுத்தோ அல்லது நம் மீது பரிதாபமோ காட்டுவார்கள். அத்தகைய நிலை
என்றும் எனக்கு வரக்கூடாது என்கிறார். இக்காலத்தில் அடுத்தவரின் அனுதாபத்தையோ,
பச்சாதாபத்தையோ பெறக்கூடாது என்பது ஆழ்வாரின் எண்ணம். இவ்வுலகில் நாம் யாருக்கும் பாரமாகவோ, பரிதாபமிக்க பொருளாகவோ மாறி விடக்கூடாது. அதற்கு முன்பே என் நெஞ்சு பகவானை
அடைந்து விட வேண்டும் என்கிறார்.
‘புள்கௌவக் கிடக்கின்றீரே’ என்று தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், ‘தளர்விலர் ஆகி சார்வது சதிரே’ என்று நம்மாழ்வாரும் இதே கருத்தைக்
கூறுகின்றார்கள்.
மணம் பொருந்திய கூந்தலையுடைய மாதர்கள் கூட்டமாகத் திரண்டிருந்து பரிகாசமாகச்
சிரித்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இருமிக் கொண்டு எங்கள் அருகில் வந்தது எதற்காக? என்று எம்மைப் பார்த்து இகழ்ந்து கேட்குமுன், சந்திரனும்,
நெருப்பும், காற்றும், கதிரவனுமாகி, தேஜசுடன் இருக்கும் பகவானுடைய
ஒளிமிக்க புகலிடமான திருநறையூரை நாம் வணங்குவோம்! மனமே! எழுந்திருப்பாயாக என்று
கூறுகிறார்.
தேனைப் பருகக்கூடிய
வண்டினங்கள் அமரும் கூந்தலையுடைய மாதர்களைப் பார்த்து அதனை வர்ணிக்கும் விதமாக,
இத்தகைய கூந்தல் உண்டோ என்று அவர்கள் பரிகசித்தாலும் அதை அலட்சியம்
செய்து அவர்களிடம் நெருங்குபவர் காமுகர் என்கிறார் அண்ணங்கராச்சாரியர். இளமை, செல்வம் ஆகியவை இருக்கும்போதுதான் மங்கையரின் அன்பு நமக்குக் கிடைக்கும்.
அவை அகன்றுவிட்டால் கேலியும், வெறுப்பும் தான் கிடைக்கும்.
அப்போது நாம் மனம் வருந்தித் துன்பம் கொள்ள வேண்டிவரும். இத்தகைய அவல நிலையைக்
களைய திருநறையூரில் உள்ள பகவானை சரணடைந்து விடுமாறு ஆழ்வார் கூறுகிறார்.
அழகிய மலர்களைச்
சூடி மணமிக்க கூந்தலையுடைய பெண்கள் திரளாகக் கூடியிருக்கும் இடத்தில்
நையாண்டியாகக் கிழவனாரே! என்று என்னைப் பார்த்து, உமக்கு வயதான பின்னும் எங்களையும், எங்களுடைய
அலங்காரத்ததையும் எதற்காகப் பார்க்கிறீர்? என்று அவர்கள்
கூறுவதற்கு முன், நல்லாட்சி நடத்திய சோழ மன்னன்
கோச்செங்கணான் வணங்கித் துதித்த தலமான திருநறையூர் நம்பியை நாம் வணங்குவோம். நெஞ்சமே! எழுந்திராய் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
ஒன்றுக்கும் உதவாதபடி உடல் மெலிந்தாலும், நப்பாசையால்
மங்கையர் அழகை ரசிப்பதும், அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்களைக்
பார்க்கும்போது, எங்களழகை நோக்குவது எதற்காக? என்று ஏசுவார்கள். அவமானப்படுத்துவார்கள். இத்தகைய அவமானங்களைச்
சுமப்பதற்கு முன் இறைவனை சரண் புகுந்துவிட வேண்டும் என்பதே ஆழ்வாரின்
அறிவுரையாகும். இறைவன் எப்போதும் நம்மைக் காத்து வருகிறான். இத்தகைய நிலையினையும்
நாம் உணர்ந்து அவனடி பனிதல் வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திருவிளையாடல்களை பகவான்
நடத்திக் காட்டுகிறான் என்பதே இதன் பொருளாகும்.
வஞ்சிக்
கொடியையும், நாகத்தையும்,
இளங்கொடியையும், தோற்கடிக்கும் நுண்னிய அழகிய
இடையையும், பரிமளம் மிகுந்த கூந்தலையும் உடைய மங்கையர் வாசற்
கதவைத் தாளிட்டு அவமதிக்கும் முன், பாக்கு மரங்களின்
திரள்கள் தாமிரம் போல் பழுத்திருக்கும் செழுமையான வளம் மிக்க மலர்வனங்களால்
சூழப்பட்ட நாராயணன் வீற்றிருக்கும் திருநறையூரை நாம் வணங்குவோம். மனமே! எழுவாயாக!
என்று கூறுகிறார் ஆழ்வார்.
இளமைக் கவர்ச்சி என்பது ஒரு மாயை. அந்த மாயையில் சிக்கியவர்கள் தப்ப
முடியாது. உடல் குன்றிய காலத்தில் மங்கையரின் இடையழகை ரசித்து அவர்கள் இருப்பிடம்
செல்வார்கள். இப்பாவி எதற்கு வந்தான். ‘ஒழிந்து போ’ என்று இகழ்ந்து வாயிற்கதவை
மூடுவர். அப்போதும் சபலத்தால் தயங்கி தயங்கி நிற்க வேண்டிவரும். இத்தகைய நிலை
வருவதற்கு முன்பாகப் பகவானிடம் சரண் அடைந்துவிட வேண்டும். அதன்பின் நம்மை எந்த
அவமானமும் தீண்டாது. முதுமை நம்மிடம் வருமுன்னரே பகவானை நாம் துணை கொள்ள வேண்டும்
என்பது ஆழ்வார் நமக்குத் தரும் அறிவுரையாகும்.
மானையும், மீனையும், கூர்மை
மிக்க வேலையும், அழகிய செங்கழுநீர்ப் பூவையும் வென்ற கரிய
விழிகளைக் கொண்ட மனதில் கபடமான எண்ணங்களும், வார்த்தைகளும்
கொண்ட பெண்கள் நம்மை ஏளனம் செய்து சிரிக்கும் முன்பாக, மலங்கு,
வரால், வாளைப் போன்ற மீன் இனங்கள் துள்ளி விளையாடும் பசுமையான
வயல்களால் சூழப்பட்ட நன்மை தரும் திருநறையூரை சென்று நாம் வணங்குவோம். மனமே!
எழுந்திராய் என்று ஆழ்வார் கூறுகிறார்.
மாதர்களது
கண்வலையில் அகப்பட்டு ‘’இப்படியொரு கண்ணழகுண்டோ?” என்று ஈடுபட்டு முதுமையிலும் விடமாட்டாது அங்குச் சென்று
அவர்களுடைய கண்களிலேயே கண் வைத்திருப்பர்கள்; ஐயோ! இந்தக் கிழவனார்க்கு நம் கண்ணிலே என்ன
காரியம் உண்டு? என்று சொல்லி அவர்கள் சிரித்துத்
துரத்துவார்கள். இப்படிப்பட்ட பரிபவங்களுக்கு ஆளாகால் திருநறையூரைத் தொழுவது
நன்று என்கிறார்.
வெருண்டாற்போல்
பார்க்கின்ற பார்வைக்கு மான்நோக்கும்,
பளபளவென்று மிளிர்வதற்கும் புடைபரந்து நீண்டிருக்கும் தன்மைக்கும்
மீனும், கூர்மையாகப் பாயுந்தன்மைக்கு வேலும், கண்ணுக்கு ஓப்பாகும். ஆதலால் “விலங்குங் கயலும் வேலுமொண் காவியும்
என்கின்றனர்.
‘மின்னலைப் போன்ற
இடையையுடைய மங்கையர் முன்னர் கொண்டிருந்த ஆசையை மாற்றிக் கொண்டவராய் வயதான நீங்கள்
இருமிக் கொண்டிருக்கும்போது எங்களிடம் எதற்காக வந்தாய்? என்று அவர்கள்
இகழ்ந்து நம்மை நிராகரிப்பதற்கு முன்னால் நீரினால் சூழப்பட்ட இலங்கையில்
வசிப்பவர் மலங்கும்படி, வானர
வீரரான அனுமன் மூலம் தீ மூட்டிய, ஸ்ரீராமனுடைய நல்ல தீர்த்தங்களைக் கொண்ட திருநறையூரை நாம் வணங்குவோம். மனமே!
எழுந்திரு என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் பெண்கள் மயக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதை
ஆழ்வார் அழகாக வலியுறுத்துகிறார். இவ்வையகத்தில் பெண்களின் அலங்கோல நிலைகளை
நிதர்சனமாக நாம் காண்கிறோம். மின்னலைப் போன்று நுட்பமான இடையையுடைய மாதர்கள்
தங்களது செல்வமும், இளமையும்
மிகுந்து காணப்படுவார்கள். சில நாட்களில் தனக்கு ஏற்பட்ட அன்பினைத் தவிர்த்து
அவர்கள் நம்மை ஒதுக்கி ஏளனம் செய்வார்கள். இதையே முன்நிகழ்வாகக் கொண்டு
மற்றவர்களுக்கு ஏற்படும் இந்த நிலைதான் நமக்கும் என்று கருத வேண்டும். இத்தகைய
காட்சிகளைப் பார்ப்பதற்கு முன் பகவானின் கருணையினைப் பெற வேண்டும். எனவே அதற்கு
முன் திருநறையூர் பெருமானை சரண் அடைய மனமே எழுந்திராய்! என்று கூறுகிறார் ஆழ்வார்.
நம்மீது ஏற்பட்ட கருணையால் இத்தகைய அறிவுரைகளை ஆழ்வார் கூறுகிறார்.
‘வில்லினைப்
போன்ற அழகிய நெற்றியையுடைய மங்கையர் அவனது இளமையும், அழகும், முன் கொண்டிருந்த ஆசையினையும் தவிர்த்து
ஏளனமான நகைப்புடன், சதை
சுருங்கிய இந்தக் கிழவன் பொல்லாதவன் என்று இகழ்ந்து பேசுவதைக் கேட்பதற்கு முன்
ஓதுவதற்கரிய நான்கு வேதங்களையும் ஓதி இவ்வுலகில் அவற்றை நிலைபெறச் செய்யும்
நல்லொழுக்கமுடைய அந்தணர்கள் குடியிருக்கும் திருநறையூரை நாம் வணங்குவோம். மனமே! நீ
எழுந்திரு என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் மங்கையரின் ஏளனப் பேச்சுக்கள் வருவதற்கு முன்பே பகவானிடம் நாம்
சரண் புக வேண்டும் என்று கூறுகிறார். வில்லில் புறப்படும் அம்புகள்போல் அவர்கள்
கண்களிலிருந்து புறப்படும் பார்வையால் தடுமாறுவதை ‘வில்லேர் நுதல்’
என்று கூறப்படுகிறது. அன்பே! அழகே!
என்றெல்லாம் இளமைக் காலத்தில் பேசி மயக்கும் பெண்கள், நாம் வயது முதிர்ச்சியடையும் நாட்களில் நம்மை
ஏளனமாகப் பேசி அலட்சியப்படுத்துவார்கள். பெண்கள் மீதுள்ள மோகத்தை அகற்றி
எம்பெருமானிடம் மனதைக் கொடுக்க வேண்டும். அளவிட முடியாத மனித மனத்தினை அற்ப
பொருளுக்காகச் செலவிட்டு மங்கையரிடம் மனதைச் செலுத்தி பலவீனமுடையதாகும் நிலையினை
நாம் மாற்றித், திருநறையூர்
பெருமானிடம் மனதைச் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
‘வாட்படை போன்ற
அழகிய கண்களையுடைய மங்கையர், முன்பு
இவன் மன்மதன் என்று புகழ்ந்து, பிறகு கோழை நெஞ்சில் அடைக்கத்
தளர்ந்திருக்கும் இந்தக் கிழவன் வந்த காரியம் என்ன, எதற்கு வந்தான் என்று இகழ்ந்து கேட்பதற்கு முன்,
திருவீதிகளில் யாகங்களும், திருவிழாக்களும் எந்நாளும் நடைபெறும்
திருநறையூர் நம்பியைத் தினந்தோறும் நாம் தொழ வேண்டும். மனமே! நீ எழுந்திரு
என்கிறார் ஆழ்வார்.
இளமைப் பருவத்தில் ஆடவர்களை, இவன் மன்மதன் என்று வர்னிப்பார்கள். கிழத்தனம் வந்தவுடன்
அலட்சியப்படுத்துவார்கள். பெண்களின் மனமானது சபலங்கள் நிறைந்தது. அவை மாறிக்கொண்டே
இருக்கும். அவர்களின் மாய வலையில் வீழ்பவர்கள் மீள முடியாது. அவமானங்கள் வந்து
சேருமுன் நறையூர் நம்பியைத் தொழ வேண்டும். பகை வருமுன் பாதுகாக்கப்பட வேண்டும்.
பகை என்பது பலவிதங்களிலும் வரலாம். சுயநலமாகவும், பேராசையாகவும் அமையும். பகவானின் துணையோடு இத்தகைய
பகையை கூர்மழுங்கிய அம்புகளாகச் சிதறிக் போகுமாறு செய்தல் வேண்டும் என்று
இப்பாசுரத்தின் மூலம் கூறுகிறார்.
‘கோவைப்பழம்
போன்ற அழகிய அதரத்தையுடைய பெண்கள்மீது கொண்டிருந்த ஆசையை விட்டொழிக்கும்படி,
முதுகு கூனலாகி, சரீரம் தடி பிடித்து நடக்கும்படி, பலவீனமுற்று மெலியுமுன், பனி சேர்ந்த ஆகாயத்தில் பால் போல்
குளிர்ச்சியாக விளங்கும் சந்திரனுடைய துன்பத்தை அகற்றிய பெருமான் உறையும் நகரமான
திருநறையூரை நாம் வணங்குவோம். நெஞ்சமே! நீ எழுந்திரு’ என்று கூறுகிறார் ஆழ்வார்.
மாதர்களின் அபிமானத்திற்குப் பாத்திரமாகி நிமிர்ந்த நடையுடன் மார்பு
நெறித்துக் கிடந்தவர்கள், அம்மாதர்கள்
கொண்ட அபிமானம் நீங்கும்படியாக, உடல்குன்றி ஒரு நற்காரியமும் செய்ய முடியாத நிலை வருமுன் திருநறையூரை தொழுவது
நலம் என்கிறார் ஆழ்வார். இந்த உலகின்
அதிசயம் என்ன என்று தருமரைக் கேட்க, தினமும் மக்கள் மடிந்து கொண்டிருக்க தாங்கள் நிலையாக வாழ்வோம் என்று மக்கள்
எண்ணிக் கொண்டிருப்பதே அதிசயம் என்றார். அற்ப பொருளின் மீது ஈடுபாடு கொண்டால்
துன்பம் வரும் என்று தெரிந்தும் அதன்மீது ஈடுபாட்டுடன் உள்ளார்கள். அது போன்று
இளம் பெண்கள் அன்பு நிலையற்றது என்று தெரிந்தும் அறியாமையால் பகவானை மறக்கிறார்கள்
என்பதே இதன் பொருளாகும்.
பிறைநிலவு போன்ற
அழகிய நெற்றியை கொண்ட மங்கையர், முதுமையில் நம் மீது ஆதரவையும், ஆசையையும் விலக்கிக்
கொள்ளும் முன்பாக ஓ.! மனமே.! தேன் நிறைந்த மலர்வனங்கள் சூழ்ந்த திருநறையூரை
வணங்குவாயாக என்று அறிவுரை சொன்ன, குருதியால் கரை படிந்த
கொடிய வேலினை உடைய திருமங்கையின் அரசனான கலியன் அருளிய இப்பாமாலைகளை மறவாமல்
பாடுவோர் நித்யசூரிகளின் தலைவராக இருப்பார்கள்.
மாதர்களிடத்தில் அன்பு வைப்பதும், பின் அவர்களால்
அவமானப் படுத்தப்படுவதும் வாழ்வில் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வே. அற்பமான இவற்றை
வெறுத்து விலக்குவது சாலச்சிறந்தது. தாவிக் கொண்டிருக்கும் மனத்தை உறுதியுடன்
அடக்கிப் பயிற்சியால் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
அச்சத்தைத் தவிர்த்து மனத்தை எதிர்த்துப் போராடப் பழகிக் கொள்ள வேண்டும். இவை
அனைத்தும் பெருமானின் துணையுடன் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய ஆத்ம
இரகசியத்தை உணர்ந்து, கற்று பேற்றினை அடைய வேண்டும் என்பது
ஆழ்வாரின் விருப்பமாகும்.
பாற்கடல்
கலங்குமாறு கடைந்து அதிலிருந்து அமிர்தம் எடுத்து அசுரர்கள் பறித்துச் சென்றதால்
நமக்குக் கிடைக்குமோ? கிடைக்காதோ
என்ற அஞ்சிய தேவர்களின் கலக்கம் தீரும்படி அவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட்ட
பரஞ்சோதி, வலக்கையில் சுதர்சனத்தையும், இடக்கையில் பாஞ்ச ஜன்னியத்தையும் தரித்தவன் இருக்கும் தலம் நன்மைத் தரும்,
உண்மையைப் பேசும் அந்தணர்கள் வாழும் திருநறையூராகும் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
அமிர்தத்தை தேவர்களுக்குத் தரமால் அசுரர்கள் கவர்ந்து சென்றதைப்
பார்த்துப் பகவான், அழகே உருவான மோகினி வடிவம் எடுத்து
அமிர்தத்தை அசுரர்களிடமிருந்து கைப்பற்றி அதனைத் தேவர்களுக்குப் பகிர்ந்து
வழங்கினார். தேவர்களுக்கு அமுதம்
வழங்கியதால் எம்பெருமானுக்குத் திருமேனியில் பொலிவு பெற்றது. பக்தியைக் கொண்டு உரிய
தகுதிகளைப் பெற்றுவிட்டால் பகவானே நம்மை வழிநடத்த வருவான், நமக்கு
ஏதேனும் ஒரு துறையில் தகுதி இருந்தால் அந்தப் புகழைத் தடுக்க எவராலும் முடியாது.
அவர்களுக்குப் பகவானின் துணை என்றென்றும் துணை நிற்கும் என்பது இப்பாசுரத்தின்
பொருளாகும்.
‘போர் புரிவதில்
வல்லமை மிக்க நரசிங்கமாய் வெளிப்பட்டு இரண்யகசிபுவின் முரட்டு மார்பை அழகும்,
ஒளியும் பொருந்திய நகங்களால்
இரண்டாகப் பிளந்து, கிழித்த
பரம பவித்ரனான பகவான் வீற்றிருக்கும் ஊர் திருநறையூராகும். இத்தலத்தில் குயில்கள்
மாமரங்களின் சிவந்த தளிர்களைக் கோதிவிட்டு மகிழ்ந்துக் கூவுகின்றன. மலர்
மொட்டுக்கள் நிறைந்திருக்கும் தோட்டங்களால்
சூழப்பட்ட புனிதமான அழகிய தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
அதர்மம் தலையெடுக்கும்போது அது தகர்த்தெறிந்து தர்மத்தை நிலைநாட்டுவதில்
பகவான் வல்லவர். அதர்மம் எத்தகைய பாதுகாப்பு அரணை வைத்திருந்தாலும் அதனைத்
தகர்த்தெறிவார். யுத்தம் செய்வதில் வல்லவரான பகவான் நரசிங்க வடிவம் எடுத்து
இரணியகசிபுவின் மார்பைப் பிளந்தார் என்று குறிப்பிடுகிறரா் ஆழ்வார். பிரகலாதனுக்கு
நேர்ந்த துன்பத்தைப் பொறுக்க மாட்டாமல் இரண்யகசிபுவின் மார்பைப் பிளந்து அவனை வதம்
செய்தார். எனவே திருநறையூர் பெருமானை சரண் கொள்ளுங்கள் என்கிறார் ஆழ்வார். மேலும்
அங்குள்ள பாகவதர்கள் விஷ்ணுபுராணம், பாகவதம் போன்றவற்றை தினசரி ஓதி அதன் அர்த்தங்களை அனைவருக்கும்
உபதேசிக்கின்றார் என்பது இதன் பொருளாகும்.
யானைகள், குதிரைகள், தேர்கள்,
காலாட்படைகளாக அணிவகுத்து
இலங்கையைச் சிதைத்து அழித்த ஸ்ரீராகவன் உறையும் ஊர் திருநறையூராகும். இத்தலம் மீன்களைப் பிடிக்க இரண்டு கைகளாலும்
அணைத்து, அவை நழுவி துள்ளியோட, மறுபடியும்
அவற்றைப் பிடிக்கும் முயற்சியில் விழுந்து எழுந்திருக்கும் உழவர்களுக்கு அஞ்சி
ஆமையானது மஞ்சள் செடிகளுக்கு அருகில் உள்ள புதர்களில் மறையும் இடமாகும். இத்தகைய
வயல்வெளிகள் உள்ள இடம் திருநறையூர் என்று பாடுகிறார் ஆழ்வார்.
மீனை இரண்டு கைகளாலும் தழுவிப் பிடித்து
அவ்விடத்தில் பசுமையான புற்கள் மலைகள் போலே வளர்ந்திருக்குமாம். மீன்களைப்
பிடிக்கிற உழவர்கள் இரண்டு கையாலுமாகத் தழுவுவர்கள்; அவை மிக்க வழுக்கும் தன்மை உள்ளதால், பிடிப்பவர்களை
உதறித்தள்ளிவிட்டுப் போய்விடும்; அங்ஙனம் தள்ளப்பட்டு
விழுந்த உழவர்கள் மறுபடியும் அவற்றைப்பிடிக்க எழுந்திருப்பர்கள். அதைக்கண்ட ஆமையானவை அஞ்சி வரப்பிலே நின்ற மஞ்சள் பற்றையிலே புகுந்து
மறையும். இப்படிப்பட்ட
வயல் வளத்தையுடையதாகத் திருநறையூர்
திகழ்கின்றது.
இராவணன் போருக்குப் புறப்பட்டு வரும்போது மலைகள் நடந்து வருவது போன்று
யானையும் குதிரையும் கொண்ட படைகள் வருமாறு காணப்படும். இத்தகைய படைகளையெல்லாம்
பொடியாக்கிய வீரன் ஸ்ரீராமன். அதர்மத்தைக் கொண்ட இராவணன் சீதையை அபகரித்தான். யார்
யாரோ அறிவுரை சொல்லியும் கேட்காமல் போர் புரிந்து இராமனின் பாணங்களுக்கு
இறையானான். அதர்மம் எத்தகைய வலிமையாக இருந்த போதிலும் பகவான் அதனை அழித்துத்
தர்மத்தை நிலைநாட்டுவார் என்பது இப்பாசுரத்தின் மையப் பொருளாகும். அத்தகைய பகவானை
வணங்கி அதர்மத்தை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.
உறியில் நிறைத்து
வைத்திருந்த வெண்ணெயைக் களவாடி வாரி உட்கொண்டு அக்குற்றத்திற்காக யசோதையால் உரலில்
கட்டப்பட்டவனும், மணமுள்ள
கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு காளைகளை வென்றவனுமான பெருமான் உறையும்
ஊர் திருநறையூராகும். புள்ளிகள் நிரம்பிய மயில்கள் நந்தவனங்களில் நடனமாட, வண்டுகள் அப்போது மலர்ந்த நறுமண மலர்களிலிருந்து
இசைபாடும் ஊராகும் என்கிறார் ஆழ்வார்.
திருவாய்ப்பாடியில்
தனது இல்லத்தில் வெண்ணெயைக் களவாடி யசோதையால் கயிற்றில் கட்டுண்ணப்பண்ணான்
ஸ்ரீகிருஷ்ணன். தாயின் மனம் கோணாதவாறு தாம்புக்கயிறுக்கு ஏற்றவாறு உடலை வைத்து
அவள் மகிழ்ச்சியுறச் செய்தான். அன்புக்குக் கட்டுப்பட்டவன், அதர்மத்திற்காக வீரனாக மாறி அசுரர்களை அழித்தவன்.
ஆழ்வார் குறிப்பிடும் அசுரன் என்பது நமது குணமாகும். பகவானின் துணையுடன் அவற்றை
நம்மிடமிருந்து அழித்தல் வேண்டும். அத்தகைய பெருமான் தனது சௌலப்பிய குணத்தினை
திருநறையூரில் பிரகாசிக்கச் செய்கிறான் என்கிறார்.
ஏழு காளைகளின்
பலத்தை அடக்கி, மெல்லிய
தோள்கையுடைய நப்பின்னைப் பிராட்டியைத் திருமணம் புரிந்தவனும், இரட்டை மருத மரங்களைத் தவழ்ந்து சென்று சாய்த்த ஜகன்னாதன் வீற்றிருக்கும்
தலம் திருநறையூராகும். இப்புனிதத் தலம் அன்னப்பறவைகள் தனது பேடைகளோடு கூடி,
செறிந்த வளையல்கள் அணிந்த பெண்களின் பின்னே போய், அவர்கள் நடப்பது போலவே நடக்க முயற்சித்து, அது
முடியாமல் போக மிகவும் வெட்கமடைந்து புதரில் ஒளிந்து கொள்ளும் இடமாகும் என்று
குறிப்பிடுகிறார் ஆழ்வார்.
எத்தகைய இடர்பாடுகள் அசுர வடிவில் வரினும் அதை எதிர்கொண்டு அழிப்பது
பகவானின் செயலாகும். பகவானின் இத்தகைய கதைகளை மீண்டும் கேட்பதால் ஒளி வந்து இருள்
விலகிப் போவதுபோல் நம் மனம் தூய்மை அடைந்து விடுகின்றது. சிங்கத்தைக் கண்டு அற்ப விலங்குகள் ஒடி
ஒளிவதைப் போல நம்மைச் சூழ்ந்துள்ள அற்பத்தனங்கள் விலகிப் போகும். இறைவனின் அருள் கிடைப்பதால் இத்தகைய அற்ப
குணங்கள் நம்மை விட்டு அகன்று விடுகின்றன.
ஆழ்வார் இத்தலத்தில் வாழும் பெண்களின் நடையழகை வர்ணித்து, அன்னமும் அதைப் போன்று நடக்க முயிற்சித்துத் தோற்று ஓடும் என்ற கற்பனையை ஆழ்வார்
கையாண்டுள்ளார்.
பெரிய வாயையுடைய
மனக்கொடுமை கொண்ட பேய் பெண்ணான பூதகியின் தனங்களை உறிஞ்சி அவள் உயிரைக்
முடித்தவனும், கம்சனின்
அரண்மனை நுழைவாயிலில் நிறுத்தப்பெற்ற மதமூட்டிய குவலயாபீடம் என்ற யானையை உயிர்
விடுமாறு போர் செய்தவனுமான ஸ்ரீகிருஷ்ணன் வாழும் ஊர் திருநறையூராகும். இத்தலம்
அன்னங்கள் மலர்ந்தலர்ந்த வாயையுடைய கருநெய்தல் மலர்களின் தேனைப் பருகி விரிந்த
தாமரை மலர்களில் கண்வளரப்பெற்ற வளம் நிறைந்த புனிதமான தலமாகும் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
கொடியவர்களின் பேச்சைக் கேட்டு நடந்தால் அவர்கள் அழிந்து போவார்கள் என்பது
இப்பாசுரத்தின் கருத்தாகும். கம்சனின் துர்போதனையால் பூதகி அழிந்தாள்.
கொடியவர்களின் பேச்சைக் கேட்டு வழிநடப்பவர்கள் பகவானால்
அழிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகிறது.
திருநறையூர் என்னும் தலமானது கட்டவிழ்கின்ற நெய்தற் பூவிலே மதுவைப் பருகி,
நன்றாக மலர்ந்த தாமரைப் பூவைப் படுக்கையாக்கிக் கொண்டு அதிலே போய்ப்
படுக்கப்பெற்ற அன்னங்களைக் கொண்ட ஊராகும் என்று கூறுகிறார். அன்பினால் அருளும் பகவான் அதர்மத்திற்கு
என்றும் காலனாகிறார். எனவே நாம் அதர்மத்தை வெறுத்து தரும நெறியில் வாழ்வோம்.
வேதம் சொல்லித்
தந்து, உபயநயனம்
செய்வித்த குருவான சாந்தீபீனி என்ற அந்தணர், கடலில் மூழ்கிய
தன் மகனை மீட்டுத் தருமாறு கேட்கக் குருதட்சணையாக அதை நிறைவேற்றித் தந்தவன்
வீற்றிருக்கும் ஊர் திருநறையூராகும்.
பறவைகள் மரப்பொந்தில் வாழ்கின்ற குஞ்சுகளின் உணவுக்காக நெடுந்தூரம் சென்று
நத்தைகளைத் திரட்டிக் கொண்டு போகும் அழகிய தெளிந்த நீரையுடைய பொய்கைகளைக் கொண்ட
இடமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஸ்ரீகிருஷ்ணன் கம்சனை வதம் செய்தபிறகு அவந்தீ நகரத்திலிருந்து சாந்தீபீனி
என்ற அந்தணரிடம் சகல சாஸ்திரங்களையும் கற்றபின், குருவானவர்
தான் பன்னிரு ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய தன் மகனை மீட்டுத்தர
வேண்டினார். கடலில் சிறை வைக்கப்பட்ட மகனை
மீட்க அசுரனைப் போரிட்டு வதம் செய்து குருவின் மகனை மீட்டுத் தந்தார். ‘மாதவத்தோன்
புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை, ஓதுவித்த
தக்கணையா உருவுருவே கொடுத்தான்’ என்று பெரியாழ்வாரும்
தமது திருமொழிப் பாசுரத்தில் பாடியுள்ளார். விதியை மாற்றியமைப்பவர் பகவான் என்பது
இதன்வழி அறியலாம். உயிரிழந்தவரை எழுப்பும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே உள்ளது. எனவே
அவனை அனுதினமும் வணங்கிப் போற்ற வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
வெள்ளைக்
குதிரைகள் பூட்டிய தேரினையுடைய அர்ச்சுனனுக்காக எதிரிகளின் பலமுள்ள மிடுக்கான
படைகள் அழியுமாறும், சிந்து தேசத்து அரசன் ஜயத்ரதன் முடியும்படியும் தேரைச்
செலுத்திய பரிசுத்தனான எம்பெருமான் குடியிருக்கும் ஊர் திருறையூராகும். இத்தலம் மிகுதியாகக் கொழுத்த மீன்களைப்
பிடித்து உண்ணும் கொக்குகள் ஓடிச்சென்று தன் பேடைகளோடு துணைகொண்டு கூடி செறிந்து
இதழ்களையுடைய தாமரைப் பூவில் தேன் உறிஞ்சும் இடமாகும் என்கிறார் ஆழ்வார்.
அர்ச்சுனனுக்குத்
தேர்ப் பாகனாயிருந்து வெற்றி பெறுவதற்கு துணையாக இருந்து அதனைப் பெறுவித்தவனும், சைந்தவனை
முடியச் செய்தவனுமான பெருமான் வாழுமிடம் திருநறையூர். அர்ச்சுனனுடைய தேர்க் குதிரைகள்
வெண்மையான நிறத்தைக் கொண்டவை என்பது “வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை
முன்பு நின்று, கள்ளப் படைத்துளையாகிப் பாரதங் கைசெய்யக் கண்டாருளர்” என்று பெரியாழ்வாரும் தமது அருளிச்செயலினால்
விளங்குகிறார்.
அர்ச்சுனனுக்கு தேர்ப்பாகனாயிருந்து வெற்றி பெறுமாறு செய்தவன் ஸ்ரீகிருஷ்ணன்.
அவனது புறவிகள் வெண்ணிறமானது என்பதை ‘வெள்ளைப்புரவிகுரக்கு வெல்கொடித் தேர்மிசை
முன்பு நின்று, கள்ளப் படைத்துளையாகிப் பாரதங் கைசெய்யக் கண்டாருளர்’ என்று பெரியாழ்வார் பாடியுள்ளார். தனது
சக்கரத்தால் சூரியனை மேகமாக மறைத்து அர்ச்சுணன் ஜயத்ரதனை போரில் வீழ்த்துமாறு
செய்தார் பகவான். அத்தகைய மிகப்பெரியவன் அர்ச்சுனனுக்காக இதனைச் செய்தார் என்பது
அவரது சௌலப்பியக் குணத்தைதைக் காட்டுகிறது.
பூமியில்
நடமாடுகின்ற சுமையானது தொலையும்படி
அர்ச்சுனனின் தேரைச் செலுத்திய தேவாதி தேவன் குடியிருக்கும் தலம் திருநறையூராகும்.
இத்தலம் தேனின் வெள்ளம் பெருகா நின்ற குளிர்ந்த தளிர்கள் நிறைந்த வயல்கள்
நாற்புறமும் சூழ்ந்திருக்கும் நாரைகள் உலாவிவரும் நல்ல கழனிகளால் சூழப்பட்ட
இடமாகும். புஷ்பத்தை, தோற்கடிக்கிற,
தளிர்களையுடைத்தான வேலியாலே சூழப்பட்டும் நாரைகள்
உலாவப்பெற்றுமிருக்கிற வயல்களாலே சூழப்பட்ட என்னும் வடசொல் ஐயீறாகத் தாரையெனத்
திரிந்ததெனக் கொண்டால், தேனொழுகுகின்ற வேலி என்றதாம். வேலியின் சிறப்பே இதுவானால் உள்ளுள்ள
சிறப்பு வாசாமகோசர மென்கை.
இந்த உலகத்து உயிர்களைத் தாங்கும் சக்தி படைத்தவள் பூமித் தாயாகும்.
நன்மைகளாகவும், வல்லவர்களாக எவ்வளவு பேர் இருப்பினும்
மகிழ்வுடன் அவர்களைத் தாங்குவாள். அவர்களைச் சுமப்பதற்கு மகிழ்ச்சியும், பூரிப்பும் அடைவாள். அதே மக்கள் துஷ்டர்களாகவும் மற்ற உயிர்களுக்குத்
தீங்கு விளைவிப்பவர்களாகவும் இருப்பினும் பூமித்தாய் வருந்துவாள். கம்சன், ஜராசந்தன் போன்ற அசுரர்களைத் தாங்க முடியாமல் தவித்துப் பரந்தாமனிடம்
முறையிட்டாள். அதனால் பூமி தேவியின் பூபாரத்தைக் குறைக்க பகவான் கிருஷ்ணனாக
அவதரித்தான். கொடிய அசுரர்களை அழித்துப் பூபாரத்தைக் குறைத்தான். அத்தகையவன்
நறையூரில் உள்ளான். அவனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள் என்பது போல் இப்பாசுரம்
அமைந்துள்ளது.
திருத்துழாய்
மாலையைத் தனது நீண்ட முடியிலே அணிந்து கொண்ட பெருமான் நித்யவாசம் செய்யும் புகழ்
விளங்கும் நெருக்கமுடைய பெரிய மாளிகைகள் சூழ்ந்த திருநறையூரில் வாசம் செய்வது
குறித்து, மிகுந்த
பிரகாசமான வேலாயுதத்தை எறிவதில் வல்லவரான கலியன் என்கிற திருமங்கையாழ்வார் இயற்றிய
இப்பத்துப் பாடல்களைப் பாடக் கூடியவர்களுக்குத் திருமால் பாதுகாப்பாகவும்
உறுதுணையாகவும் இருப்பான் என்பது இப்பாசுரப் பொருளாகும்.
நானே சகல சராசரங்களையும் நிர்வகிக்க வல்லவன் என்று, திருத்துழாய்
மாலை அணிந்தவனான பரமபுருஷன் திருநறையூர் தலத்தில் வாழ்கிறான். அங்குள்ள மாளிகையில்
இன்னார் குடியுள்ளார்கள் என்று சொல்லுமளவும் நெருங்கிக் கட்டப்பட்டதாக இருக்கும்
என்று கூறுகிறார் ஆழ்வார். திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை, பக்தியுள்ளவர்களுக்கு எத்தகைய நிலையிலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக
இருப்பார். இவ்வுலக மக்கள் அனைவருக்கும் அவரது தகுதிகளுக்கேற்றவாறு பலனைத்
தந்துள்ளார் எனலாம். எனவே இப்பாசுரங்களைப்
பாடவல்லவர் சகல நலன்களையும் பெறலாம் என்பது ஆழ்வாரது கருத்தாகும்.
‘ஆகாயத்தையும்,
பெரிய பூமியையும், எட்டுத் திசைகளையும், அலை வீசுகின்ற கடல்களையும், மலைகளையும் அமுது செய்த திருக்கழுத்தை உடையவனும்,
கிளைகளுள்ள ஆலமரத்தின் தளிர் இலைமேல்
யோக நித்திரை செய்தவனுடைய திருப்பாதக் கமலங்களை அடைய வேண்டும் என்று
நினைப்பவர்களே! அழகிய மணமுள்ள செண்பகப் பூவினை நுகர்ந்த வண்டுகள் மகிழும், பூவின் மேல் தங்கி இருக்கும் கோச்செங்கட்
சோழ மன்னன் வந்து பணிவிடை செய்த திருநறையூர் கோயிலைச் சென்றடைவீர்களாக’ என்ற
பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
உலக இயக்கங்களும் அதன் முடிவும் பகவானிடம் உள்ளன. இடையில் நாம் வாழும் குறுகிய
வாழ்க்கையில் எதனையும் தீர்மானமாக அறிய முடியாத நிலையில் நாம் உள்ளோம். ஆகவே பகவானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு
நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை நன்முறையில் வாழ்ந்து முடிப்பதே
விவேகம். இத்தகைய நிலை நமக்கு வர வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.
‘தென்னறையூர் மன்னு மணிமாடக்கோயில் மணாளனை’ என்று இத்தலத்து இறைவனை இதே
ஆழ்வார் பாடியுள்ளார். இத்தலத்து நம்பி சந்நிதிக்கு மனிமாடக்கோயில் என்ற பெயரும்
உள்ளது.
பிரளய காலத்தில்
பெரு வெள்ளமானது உலகினை மூழ்கடித்தபோது கொழுத்த மீனாக வடிவம் எடுத்து, மலைகளின் மேல் உலாவி, அண்டத்துக்கப்பால் எழுந்து விளையாடிய பகவானின் திருப்பாதங்களின் கீழ்
சுகமாக வாழ ஆசைப்படுகிறீர்களே! கூட்டம் கூட்டமாகத் திரண்ட இளம் வண்டுகளைக் கொண்டு
வந்து தள்ளி, உலகெல்லாம் சந்தனம் மற்றும் அகில் கட்டைகளை
எடுத்துக் கொள்ளும்படி வளம் கொழிக்கும் காவிரியானது, உழப்படும்
கழனிகளின் வரப்புகளின் மீது ரத்தினங்களை அள்ளித் தெளித்து, தலமான
சோழன் பணி செய்த திருநறையூர் மணிமாடத்தைச் சென்றடையுங்கள் என்கிறார் ஆழ்வார்.
பிரம்மனின் கல்பகால முடிவில் நைமித்திக பிரளயம் ஏற்பட்டது. அச்சமயம்
பிரம்மனின் வேதங்களை அசுரன் அபகரித்துச் சென்றுவிட, பெருமான்
மீன் வடிவமெடுத்து அசுரனை வதம் செய்து வேதங்களை மீட்டார். இத்தகைய ஊழிக்
காலங்களும், இயக்கங்களும் கணக்கற்று நடந்து முடிந்துள்ளன.
நம்முடைய சிற்றறிவிற்கு அவை புலப்படாமல் உள்ளன. அவ்விதமிருக்க அற்ப பொருளுக்குப்
பின் சென்று திரிவதே வாழ்க்கை என்று கருதாமல் பகவானின் திருவடிகளைச் சரண் புகுந்து
பக்தி செய்ய வேண்டும். அதுவே அறிவுடமை ஆகும். இதனை இப்பாசுரவழி ஆழ்வார் நமக்குப்
புலப்படுத்துகிறார்.
பெரிய சமுத்திர
நீரை பீதாம்பரமாக அணிந்தும், உலகத்தின் பரப்பளவை பாதமாகக் கொண்டும், வாயுவைத்
திருமேனியாகவும், எண் திசைகளும் தோள்களாகவும், அண்டங்கள் அனைத்தும் திருவடியாகவும் கொண்டிருக்கும் பகவானிடம் சேர
எண்ணுகிறவர்களே! ஆரவாரம் கொண்ட பெரிய யானைகளை வழிநடத்தி வெண்னணி என்னும் இடத்தில்
எதிர்த்துப் போரிட்ட வீரக்கழல் அணிந்த அரசர்களின் தலைமேல் காகங்கள் கொத்துமாறு
திருநறையூர் நம்பியிடம் தெய்வ வாள் பெற்று வலிமை காட்டி யுத்தம் செய்து வெற்றி
பெற்ற கோச்செங்கட் சோழன் அடைந்த திருநறையூர் மனிமாடக் கோயிலுக்குச் செல்லுங்கள்
என்கிறார் ஆழ்வார்.
எம்பெருமானுக்குக்
கடல் நீரானது ௮ரையிலுடுக்கும் ஆடையாகின்றது. பூமிப்பரப்பெல்லாம்
திருவடியாகின்றது; வாயுராசியெல்லாம்
திருமேனியாகின்றது; திசைகளெட்டும் திருத்தோள்களாகின்றன.
அண்டகடாஹமானது திருவபிஷேகமாகின்றது. ஆக இவ்வகைகளாலே
ஜகத்ரூபியாயிருக்கின்ற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் கிட்ட வேண்டும் என்று
இருப்பவர்கள் திருநறைபூர் மனிமாடம் சேர்மின்கள். எம்பெருமான் ஜகத்ஸ்வரூபியாக இருக்கும் நிலையினை
உருவகத்தாலே அனுபவிக்கிறார் ஆழ்வார். இத்தகைய சர்வேஸ்வரனின் திருவடிகள் கிட்ட
வேண்டும் என்று வேண்டுகிறார். நாம் காணும் இவ்வுலகம் பகவானின் திருவுருவமாகும்.
பகவானை காண இயலவில்லை என்று கூறுபவர்கள் தாங்கள் அறியாமையில் உள்ளார்கள்.
மாயத்திரை காரணமாக அவர்களுக்குப் புலப்படுவதில்லை. பகவானே உலகம் என்றால் நாம்
காணும் உலகப் பொருட்களில் பகவான் உள்ளார் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைகிறது.
பசுமைமிக்க
திருக்கண்களையுடைய நரசிங்கமாய் எதிரிகள் அஞ்சும்படி உற்று நோக்கிப் பருத்த மலை
போன்ற புஜங்களையுடைய இரணியனைப் பிடித்திழுத்து, தன் நகங்களின் நுனியால் அவனது உடலிலிருந்து உதிரத்தை
வெள்ளமாகப் பெருக வைத்தவனின் திருப்பாதக் கமலங்களின் கீழ் நிற்க
விரும்புகிறவர்களே! யானைகளைத் தள்ளிவந்து, வெண்ணி என்னும்
இடத்தில் எதிர்த்துப் போரிட்ட வீர அரசர்களின் பலம் குன்றும்படி அழித்து
வெற்றிபெற்ற கோச்செங்கணான் அடைந்த கோயிலான திருநறையூர் மணிமாடக் கோயிலைச்
சேருவீர்களாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
பகவானிடம் வரத்தைப் பெற்றுக் கொண்டு அவனுடைய நாமத்தையே யாரும் உச்சரிக்கக்
கூடாது என்று அகங்காரத்துடன் பேசினார் இரண்யன். செய்த நன்றியை மறந்தவர்கள் எவராக
இருந்தாலும் அவர்களுக்கு உய்வு என்பதில்லை என்று உணர்த்தவே பகவான் நரசிம்ம அவதாரம்
எடுத்தார். இது செய்நன்றி கொன்ற செயலாகும். அத்தகைய கொடியவனை பகவான் தனது
நகத்தினால் குத்திக் கிழித்து அவனை அழித்தார். அந்தப் பகவான் திருநறையூரில்
குடிகொண்டுள்ளார். அவரைத் தரிசித்து மேன்மை அடையுங்கள் என்று கூறுவது போல்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
முன்பு
திருவிக்கரமானய் மூன்று உலங்களையும் அளந்து, மாறுபட்ட நரசிம்மமாகி இரணியனின் தேகத்தைப் பிளந்து வெற்றி
கொண்டு அவனை வீர சுவர்க்கத்திற்கு அனுப்பி வைத்தவனுக்கு விருந்தனனாக ஆசைப்படுபவர்களை! சைய
மலையிலிருந்து பெருகும் காவிரி கிளர்ந்து எழுந்து மலைகளை உடைத்துக் கொண்டு,
தங்கத்தைச் சிதறடித்து, மேலும் பல
நவரத்தினங்களை இறைத்தபடி, கரைகளில் ஒதுக்கி, வெளிநிலங்களில் எங்கும் பரவச் செய்யும் நாட்டின் தலைவனான செங்கணான் அரசனது
திருநறையூர் மணிமாடத்தை அடைவீர்களாக என்கிறார் ஆழ்வார்.
மூன்று உலகங்களை அளந்து, நரசிங்கமாகி இரண்ய
கசிபுவைப் பிளந்தது ஆகியவை மேற்சொன்ன பாசுரங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்
மீண்டும் இதனை நினைவுபடுத்துகிறார்.
உலகத்தை அளந்தது அசுர சக்திகளைப் பாதாளத்தில் அழுத்தவும், இரண்யனை அழித்தது தன் பக்தன் பிரகலாதனைக் காப்பதற்காகத்தான். இது போன்ற
இரு விஷயங்களுமே நல்லவர்களையும், அன்பர்களையும்
காப்பதற்காகப் பகவான் செய்த வீரச் செயல்களாகும். பணபலம், படைபலம்,
புகழ் போன்ற எல்லாவற்றையும் மீறிய தெய்வசக்தி அதர்மத்தை அழிக்கத்
தயார் நிலையில் இருக்கிறது என்பதை இப்பாசுர வழி அறியலாம்.
தான்
நினைத்தவண்ணம் வடிவம் எடுப்பவனை, ஒளி பொருந்திய மூவுலகையும் அடக்குபவனை, விரிந்த
விசும்பாக இருப்பவனை, தன்னுருவில் மும்மூர்த்திகளைத்
தோற்றுவிப்பவனை, கண்ணனாய் அவதாரமெடுத்தவனை தஞ்சமடைய
ஆசைப்படுபவர்களே! மின்னும் வேலாயுதத்தையுடைய விளந்தைவேள் என்ற அரசனை வீரசுவர்க்கம்
அனுப்பிய தென்னாட்டையும், கொங்கு நாட்டையும் ஆண்ட செங்கணான்
வடிவமைத்த திருநறையூர் மணிமாடத்தை சென்றடைவீர்களாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
எம்பெருமான் தவிர மற்றவர்களின் ஸ்வரூபங்களையெல்லாம் அவனது விருப்பப்படி
உருவாக்குகின்றான். லீலாவிபூதி முழுவதையும் தன் மனதுபடி உருவாக்குகிறான். தன்னையே
மூன்றாக வகுத்துக் கொண்டு மும்மூர்த்திகளைத் தோற்றுவிப்பவன். அனைத்து உயிர்களிலும்
அந்தர்யாமியாக இருந்து காத்து வருகிறான். கோகுலத்துக் கண்ணனாக திருஅவதாரமெடுத்து
திருநறையூரில் சேவை சாதிக்கின்றான். அவனைத் தரிசனம் செய்து அற்ப வாழ்வினை விட்டு
ஞான வாழ்வினை மேற்கொண்டு, வாழ்வின் இலட்சியத்தை ஈடேற்றிக்
கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பேய் மகளான பூதனை மாளும்படி விஷப் பாலோடு உயிரையும் உறிஞ்சியவன். புராதனப்
பெருமை வாய்ந்த துவாரகையின் அரசன். பசுக்களின் பின்னே இலையால் குழல் செய்து ஊதிச்
சென்றவன். கோபியரின் வளைத்திரள்களை விளையாட்டாக அபகரித்தவன். அத்தகையவனின்
திருவடிகளைச் சரண்புக விரும்புகிறவர்களே! மலையில் உள்ள மணிகளை அடித்து வந்து
உலகத்தாரை கடைத்தேற்ற வளம் கொடுக்கும் காவிரியை உடைய நாட்டுக்கு அரணாய், வில்லைக் கையிலே கொண்டிருக்கும்
சோழன் செங்கணான் சேர்ந்திருக்கும் கோயிலான திருநறையூர் மணிமாடத்தைச்
சென்றடைவீர்களாக! என்கிறார் ஆழ்வார்.
பசுக்களை மேய்த்தவன் துவாரகைக்கு அரசனாக இருந்து மக்களைக் காத்து
வருகிறான். கோபியர்களின் வளையல்களை அபகரித்த பெருமான் கீதையை போதித்துள்ளார்.
இலையில் குழல் ஊதி கன்றின் பின் சென்றவர் பாஞ்சஜன்னியத்தைத் தாங்கிப் பாரதப் போரை
அதிர வைத்தவராவார். இவ்விதம்
குழந்தையாகவும், சிறு பாலகனாகவும், பொறுப்பான
அரசனாகவும் பல லீலைகள் புரிந்து நல்லவர்களை வாழ வைத்துள்ளார். இத்தகைய பெருமானான
ஸ்ரீகிருஷ்ணன் திருநறையூரில் வாசம் செய்கிறார்.
முருக்கு
இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்
முருக்கம்
பூப்போலவும், கோவைக்கனி
போலவும் அதரத்தையுடைய நப்பின்னையின் கணவன், முன்பு
அரசர்களெல்லாம் அழியும்படி போர்க் களத்தில் வென்று, கார்த்த
வீரியார்ஜூனன் வீரியம் அழியுமாறு அவனது தலையைச் சாய்த்த பகவானின் திருவடிகளை
உங்கள் சிரத்தில் வைத்துக் கொள்ள விரும்புகிறவர்களே! வேதத்தில் சிறந்ததாகக்
கருதப்படும் புருஷ சூக்தம் முதலியவற்றை ஓதும் வாயினையுடைய எட்டுத் தோள்கள் கொண்ட,
கைலாச நாதனுக்கு எழுபது ஆலயங்கள் அமைத்து உலகை ஆண்ட, உயர் குலத்தில் தோன்றி செல்வச் செழிப்பான சோழன் செங்கணான் நிறுவிய கோயிலான
திருநறையூர் மணிமாடத்தை சென்றடைவீர்களாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
கோச்செங்கணான் முதலில் சிவபக்தனாக இருந்த சமயம் எழுபது சிவாலயங்களைக்
கட்டுவித்தான் என்று தேவாரப் பாடல்மூலம் அறியப்படுகிறது. மேலும் பெரிய புராணத்தில்
சேக்கிழார் பெருமான் செங்கணான் சந்திரசேகரருக்காகப் பல கோயில்கள் கட்டினான் என்ற
குறிப்பும் உள்ளது. இத்தகைய அரசன் திருமாலுக்கும் திருநறையூரில் கோயில்
கட்டியுள்ளான். அத்தகைய பெருமை மிக்க
கோயிலில் குடிகொண்டுள்ள எம்பெருமானை தரிசித்து வாழ்வில் பயன் பெறுங்கள் என்று
ஆழ்வார் கூறுகிறார்.
துளசி மாலை
அணிந்தவனும், திருவரங்கத்தை
ஆள்பவனும், தாமரையில் தோன்றிய மகாலட்சுமியின் கணவனும்,
முனிவர்கள் துதி பாடும் பெருமையுடையவனும், சகஸ்ரநாமங்களை
உடையவனான எம்பெருமானைப் போற்றுகிறேன்.
நப்பின்னையின் கணவனின் பெருமைகளை உடையவர்களே! திருவழுந்தூரில் படையுடன் பகை
அரசர்களின் தேகங்கள் துண்டாகும்படி தேர்ப்படை வீரன் கோச்செங்கட் சோழன் சேர்ந்த
கோயிலான திருநறையூர் மனிமாடத்தை சென்றடையுங்கள் என்றவாறு இப்பாசுரம் அமைந்துள்ளது.
மாலையணிந்துள்ளவனும், குளிர்ந்த திருவரங்க மாநகரை
ஆள்பவனும், தாமரைப்பூவில் பிறந்து ஒப்பற்றவளான பிராட்டியை
ஆள்பவனும், மஹரிஷிகள் துதிக்குப்படியாயுள்ள பெருமை
வாய்ந்தவனும், ஸஹஸ்ரநாமங்களை வாசகமாகக் கொண்ட ஸ்வாமியும்
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனுமான எம்பெருமானுடைய பெருமைகளைக் கேட்க
வேண்டியிருக்குவர்களே!, இன்னாரின்னாரென்று
ப்ரஸித்தராய்க்கொண்டு பூமியை ஆள்பவராய் திருவழுந்தூரிலே வந்து எதிரிட்டவர்களான
ஆயுதபாணிகளான அரசர்களின் சரீரங்கள் துணிபடும்படி குதிரைப்படைகளைச் செலுத்தினவனும்,
தேர் வீரனுமான கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்
சேர்மின்கள். ‘உபயவிபூதியையும் நானே ரக்ஷிக்கக்கடவேன்’ என்று
தனிமாலை யிட்டுக்கொண்டிருப்பவனும் ஜகத்ரக்ஷணத்திற்காகத் திருவரங்கம் பெரியகோயிலை
இருப்பிடமாகக் கொண்டுள்ளவனும் தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய அத்விதீயையான
பிராட்டிக்கு வல்லபனும் ப்ரஹ்மபாவநையையே தலைக்கொண்டிருக்கிற ஸநகாதி மஹரிஷிகள்
துதிக்கும் பெருமையையுடையவனும், அநுபவிப்பார்க்கு
இழிந்தவிடமெங்கும் துறையாம்படி ஆயிரந்திருநாமங்களை உடையவனும் நப்பின்னைப்
பிராட்டிக்கு நாதனுமான பெருமானுடைய பெருமைகளை அனுபவிக்க வேண்டில் திருநறையூர்
மனிமாடம் சேர்மின்கள்.
உண்மை
உறைப்பவர்களும், நான்கு வேத
விற்பன்னர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழும் திருநறையூர் மணிமாடத்தில்
குடிகொண்டிருக்கும் செந்தாமரைக் கண்ணனைக் குறித்து, பொய்யுரைகள் சிறிதும் கலவாத சத்திய வார்த்தைகளைக்
கொண்ட திருமங்கை மன்னன் ஸ்ரீஸ்துதியில் புலமை நிறைந்த மொழிகளைப் பேசும் கலியன் இனிதாகப்
பாடிய இப்பாசுரங்களை பக்தியுடன் ஓதுவோர் விண்ணுலகில் எமலோகம் சென்று கடுஞ்சொல்
கேட்கும் கேட்டிலிருந்து விலகிப் போவார்கள். அவர்களை வானவர்கள் பாடிக்
கொண்டாடுவார்கள் என்பதே இதன் பொருளாகும்.
சத்தியத்தைக் கடைபிடித்துவரும் வேதம் கற்ற அந்தணர்கள் வாழும் ஊர்
திருநறையூராகும். இத்தலத்து பெருமான் மீது பாடிய பாசுரங்களைப் படிப்பவர்களை
நித்யசூரிகள் எதிரே வந்து தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துச் சென்று நம்மை உயர
இருக்க வைத்து அவர்கள் தாழ இருந்து நம் திருவடிகளைத் தொழுது பெருமை கொள்வார்கள்.
மேலும் இப்பாசுரங்களைக் கற்றால் ஞானிகளாகச் செய்யும் வல்லமையை அளிக்கும். தேவலோக
வாழ்வும் தேவையில்லை. ஆத்ம தரிசனம் செய்து பிறவா முக்தி நிலையினை நாம் பெற
வேண்டும் என்பதே இப்பாசுரத்தின் பொருளாகும்.
என்னைத்
தனக்காகச் சேஷத்தில் ஈடுபடுத்திக் கொண்டவன். கொடிய பகை அரசர்களின் தோள்களும், தலைகளும் துண்டாகும்படி
வில்லிலிருந்து அம்புகள் எய்த எம்பெருமான் நித்ய வாசம் செய்யும் தலம்
திருநறையூராகும். இத்தலமானது மன்மதனையும்,
சூரபத்மனையும்
ஒத்திருக்கும் ஆண்களும், வேல் போன்ற விழிகள் கொண்ட
மங்கையரும் வாழும் தெருக்களை உடையதாகும். நாள்தோறும் திருவிழாக்களும், ஆரவாரங்களும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கும் இடமாகும் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
பெருமான் ஆழ்வாரை, இவன் நமக்கு உரியவன் என்று எண்ணி
சேஷத்துவம் செய்யப் பணித்தான். அதன் பயனாக எல்லாவிதமான கைங்கர்யங்களையும்
செய்யுமாறு தெரிவித்தான். நாம் பகவானுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டுமானால் அதையும்
பகவான் தான் முடிவெடுத்து, அதற்கான வாய்ப்பையும் அவனே
கொடுத்தருள்கிறான். இவர்கள் பகவானின் கருணைப் பார்வை பெற்றவர்களாவர். கொடும்
அசுரர்களை வதம் செய்து மக்களைக் காத்தவன். இவ்விதமாக நம்பியவர்களுக்காக எதையும்
செய்யும் பகவான் திரைநறையூரில் வாசம் செய்கிறான் என்பது பொருளாகும்.
பரசுராமர்
முனிவராக திருஅவதாரம் செய்து இருபத்தோரு தலைமுறைக்கான அரசர்களை வெட்டி வீழ்த்திக்
கூரிய வாயையுடைய கோடாரியை ஆயுதமாகக் கொண்டவன், மாலைகள் அணிந்த திருத்தோள்களை உடையவன். அகன்ற சோலையின்
ஓரிடத்தில் பெண்களின் அழகிய பற்களைப் போல் முல்லை அரும்புகள் மலர்ந்திருக்க,
கருங்குவளை மலர்கள் மங்கையரின் கண்கள்போல் பூத்திருக்க, தாமரை மலர்கள் மங்கையரின் முகம்போல் காட்சியளிக்கும் சோலைகள் நிறைந்த
திருநறையூரில் கோயில் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.
ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகையின் வாரிசாகப் பிறந்த பரசுராமன் தன்
தந்தை சொல் காப்பதற்கென்றே பிறந்தவன் என்று பெயர் பெற்றவன். துஷ்டர்களான அரசர்களை
அழித்து நாட்டைக் காத்தான். இராம அவதாரம் நிகழ்ந்தபோது பரசுராமன் இராமனை
சந்தித்தார். இராமனின் அறிவுரைகளைக்
கேட்டுத் தன் கோபத்தை அடக்கித் தன் சபதத்தை நிறுத்தினார். அத்தகைய பெருமான்
திருநறையூரில் வாசம் செய்கிறான். அவரைத் தரிசித்து வேண்டிய வரங்களைப் பெறுங்கள்
என்பதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
தெளிந்த
திருப்பாற்கடலில் நஞ்சை உமிழும் வாயையுடைய, பகைவர்மேல் சீற்றம் கொள்ளும் ஒளிபொருந்திய ஆதிசேஷன் மேல்
அரிதுயில் கொண்டவன், துள்ளி விளையாடிய மாரீச மானை மாளும்படி
அம்பு எய்தவன், மகாபலியிடம் பூமியை யாசித்தவன் திருநறையூரில்
கோவில் கொண்டுள்ளான். இத்தலம் பறவைகள்
நிறைந்த தோட்டங்களில் செங்கழுநீர் பூக்கள் பெண்களின் கரிய விழிகளை நினைவுபடுத்த,
தாமரை மலர்கள் அவர்களின் வதனங்களை நினைவூட்டும் என்று பாடுகிறார்
ஆழ்வார்.
அவதாரங்களின் மூலமான திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் பற்றி முதலடியில்
பாடுகிறார். மது கைடபர்கள் பெருமானுக்கு
தீங்கிழைப்பதால் ஆதிசேஷன் அவர்களை விஷத்தை உமிழ்ந்து விரட்டியடித்தான்.
எம்பெருமானுக்கு திருக்கண் வளர ஆசையுண்டோ? துன்பமடைந்த
தேவர்கள் தங்களை வந்து எழுப்புவார்களே. எனவே அடியார்கள் துயர் தீர்க்கத்
திருவவதாரம் செய்வீர் என்று ஆழ்வார் வேண்டுகிறார். இன்னல் தீர்க்கும் பெருமான்
திருநறையூரில் கோயில் கொண்டுள்ளார். அவரைத் தரிசித்து மாயத் திரைகளை விலகும்படி
செய்யுங்கள் என்கிறார் ஆழ்வார்.
கண்ணன் மறைந்து
நின்று வெண்ணெயை தின்றதற்காக யசோதை
பிராட்டி கோபித்து தாம்புக் கயிற்றால் உரலோடு சேர்த்து கட்டுவித்தாள். கட்டுண்ட
கண்ணன் விம்மி அழுதான். அவன் திருநறையூரில் எழுந்தருளியுள்ளான். அத்தலமானது
மெல்லிய மலர்களின் மேல் வண்டுகள் மகிழ்வுடன் தேனைப்பருக, குளிர்ந்த தென்றல் மலர்களை இறைக்க, வெண்மையான முல்லை மலர்கள் முறுவலிக்கும் புனிதத்தலமாகும்
என்கிறது இப்பாசுரம்.
யசோதை கண்ணன் செய்யும் சிறுவிளையாட்டினால் கோபமுற்று தாம்பினால் கட்டும்போது
கோபிக்கும்போது, கண்ணனுக்கு
இத்தகைய தண்டனை கொடுக்கிறோமே என்றும் வருந்துகிறாள். அதைக் கண்ட கண்ணன் தன் மேனியை
சிறிதாக்கி கட்டுவதற்கு வழிவகுக்கிறான். மேலும் அவன் அழுததற்கான காரணம்
கட்டுவித்தலன்று. தயிர், பால் களவு செய்ய
வேண்டிய நேரத்தில் இவ்வாறு கட்டுண்டு கிடக்கிறோமே என்று எண்ணி அழுததாகச்
சொல்லப்படுகிறது. அன்புக்கு கட்டுப்படும்
பெருமான் திருநறையூரில் வாசம் செய்கிறான்.
கம்சன் நடத்திய
தனுர் யாகத்தில் கலந்து கொள்ள வடமதுரை சென்று, எதிரிகளான மல்லர்களை அழித்து, அதனுடன் கொடிய கம்சனை முடித்து, காளிங்கனின் செறுக்கினை அடக்கிய பரந்தாமன்
திருநறையூரில் வாசம் செய்கிறான்.
குற்றமற்ற சொற்களைக் கொண்ட வேதங்களை முறையுடன் கற்று சோமயாகம் போன்ற
வேள்வியினை நடத்துவது தமது தொழிலாகக் கொண்ட வேதம் ஓதும் அந்தணர்கள் வாழும்
இடமாகும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
உலக நன்மைக்காக இத்தகை செயல்களைச் செய்த பெருமான் நம்முடைய ஞானத்
திருவிளக்கையும் அடையாளம் காட்டும் கருணை வள்ளலாகவும் திகழ்கின்றார். அழியும் அற்ப
பொருட்கள் வேண்டும் என்று அவரிடம் கேட்காதீர்கள்.
அவை நமக்கு இறுதிவரை பயன் தராது. பிறவா நிலையான முக்தியினை பகவானிடம்
கேளுங்கள். நம்முள் ஒளி படைத்துக் கொண்டிருக்கும் ஆத்ம தரிசனத்தைக் கேளுங்கள்.
பகவான் நிச்சயம் அதை நமக்குத் தருவான் என்று ஆழ்வார் அறிவுறுத்துகிறார். அத்தகைய பெருமான் திருநறையூரில் கோயில்
கொண்டுள்ளான்.
வள்ளியின் கணவனான
சுப்பிரமணியன் முதலியவர்களோடு சிவபெருமான் ஓர் ஒப்பந்தப்படி காத்தும், வாணாசுரனின் ஆயிரம் தோள்களை அறுத்த
எம்பெருமான் திருநறையூரில் சேவை சாதிக்கின்றான். அத்தலமானது தாமரை மலரில் படுத்த
ஆண் நண்டு ஆதவன் மறைந்ததும் மலர் மூட அதில் சிறைபட, மறுநாள்
சூரியோதயத்தில் மலர் திறக்க அதனால் விடுபட்டு முகத்தில் மகரந்தப் பொடிகளோடு
திரும்பி, அதனால் பெண் நண்டுகள் ஊடல் கொண்டு கோபித்துக்
கொள்ளும் கழனிகள் சூழ்ந்த இடமாகும் என்று ஆழ்வார் பாடுகிறார்.
இப்பாசுரத்தில் ஆண் வண்டானது தனது பெண் வண்டு கருவுற்றிருப்பதால் அதற்குச்
சத்தான ஆகாரம் தர வேண்டும் என்றெண்ணி தாமரை மலரில் உள்ள மகரந்தங்களை எடுத்து வந்து
தர முயிற்சித்து அதை சேகரிக்கும்போது, ஆதவன் மறைந்து,
அதனால் மலர் மூடிவிட, வண்டு துடித்து இரவு
முழுவதும் மலரில் சிறைபட்டது. மறுநாள் மலர் மலர்ந்ததும் வண்டு தான் சேகரித்த
பொடியுடன் ஓடோடி பெண் வண்டை அடைந்தது. ஆனால் ஆம்பல் மலரானது பெண் வண்டின் துன்பம்
கண்டு ஆண் வண்டை நெருங்க விடாமல் மூடிக்கொண்டது. தங்கத்துடன் சிறிது செப்பு
கலப்பது போல் மெய்யோடு சிறிது பொய் கலந்தால்
கள்ளவிழும் மலர்போல் காவியமாகும். இத்தகைய கற்பனையில் இப்பாசுரத்தை ஆழ்வார்
பாடியுள்ளார்.
பரகாலர்
பாசுரத்திற்கும் பராங்குசர் பாசுரத்திற்கும் இடையே நிலவும் ஒற்றுமை காதல். வேற்றுமை திருக்கண்ணபுரத்தில் நண்டுகள் கூடுதல்
திருநறையூரில் நண்டுகள் ஊடுதல் என்பதாகும்.
கூட்டம் கூட்டமாக
வந்த வேற்படையை உடைய அரசர்கள் அழியுமாறு அர்சசுணனின் தேரைச் செலுத்தியவன், கோவர்த்தன கிரியைக் குடியாகப்
பிடித்து யாதவர்களைக் காத்தவன், கூர்மையான சுதர்சன சக்கரத்தை
ஆயுதமாகக் கொண்டவன் திருநறையூரில் வாசம் செய்கிறான். இத்தலம் நான்கு வேதங்களையும், ஐந்து வகையான வேள்விகளையும், ஆறு வேதாகமங்களையும்,
ஏழு ஸ்வரங்களையும் எப்போதும்பொழுது போக்காகக் கொண்ட அந்தணர்கள்
குடியிருக்கும்ம் இடமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பதினோராயிரம் தேர் வீரர்களுடன் வந்து பாண்டவர்களைத் தாக்கிய அரசர்களை,
தனது சாதுர்யத்தால் மண்ணின் பாரங்களைக் குறைப்பதற்காக அவர்களைப்
பரந்தாமன் வீழ்த்தினான். இந்திரன் ஆயர்பாடி மக்களின் மேல் கோபம் கொண்டு ஏழு
நாட்கள் மழை பெய்வித்தான். பகவான் நினைத்திருந்தால் தனது சக்ராயுதத்தில் அவனை
வீழ்த்தியிருப்பார். அவன் பொழியும் மழையை நீராக உண்ட காரணத்தினால் பொறுத்து,
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காத்தான்.
செய்வதறியாமல் திகைத்து இந்திரனும் தன் தவறை உணர்ந்து மழையை நிறுத்திக் கொண்டான்.
இத்தகையவன் திருநறையூரில் வாசம் செய்கிறான்.
பந்து பிடித்து
விளையாடும் விரல்களையுடைய பாஞ்சாலி விரித்த கூந்தல் முடிப்பதற்காகப் பாரதப் போரில்
மணமிக்க யானையின் மீது ஏறி வந்தவர்களும், வீரக் கழல் அணிந்தவர்களுமான அரசர்கள் மனம் கலங்கும்படி
பாஞ்சஜன்னியத்தைத் திருவாயில் வைத்து ஊதிய பகவான் திருநறையூரில் கோயில்
கொண்டுள்ளான். தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மனோடும், சிவனுடனும் ஒத்த பெருமையுள்ள
வள்ளல் குணம் கொண்ட வேதியர்கள் வாழும் இடமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
கௌரவர்கள் திரௌபதியை துகிலுரிந்தபோது கண்ணன் வந்து காத்தான். கண்ணனுக்கு
கௌரவர்கள்மேல் அடங்காத கோபம். மேலும் வாளா முகமாக இருக்கும் பாண்டவர்களையும்
தலையறுக்க வேண்டும் என்று எண்ணிய அதே சமயம் திரௌபதியை தலைவிரி கோலத்தில் காண
சகிக்காத கண்ணன் கழுத்தில் திருமாங்கல்யம் இல்லாத நிலையை அவனால் பார்க்க இயலாது. பாண்டவர்களுக்காகத் தூது போனது,
போரில் அர்ச்சுனனுக்கு உதவியது, சாரதியாய்
தேரில் அமர்ந்தது ஆயுதம் எடுக்காகது, கீதை போதித்து
அர்ச்சுனனை போர் செய்யத் தூண்டியது இவை அனைத்தும் பாஞ்சாலிக்காக என்பது
வியாக்யானப் பொருளாகும்.
கங்கையாகிற
நதியையும், பிறைச்
சந்திரனையும், நாகத்தையும், அடப்பம்
பூவையும், செஞ்சடையின்
மேல் தாங்கி, மேனியில் சாம்பல் பூசிக் கொண்டு, காளை வாகனத்தில் அமரும் சிவபெருமானின் பிரம்ம கபால தோஷத்தை நீக்கத் தன்
திருமார்பிலிருந்து மணமிக்க நீரை தந்த பரந்தாமன் மணமுள்ள நந்தவனங்கள் சூழ்ந்த
அழகிய திருநறையூரில் எழுந்தருளி இருக்கிறான்.
சிவபிரானுக்கு ஏற்பட்ட பிரம்ம கபால தோஷத்தை நீக்குவதற்கு
பதரிகாசிரமத்திற்கு சென்று அங்குள்ள நாராயண மூர்த்தியை மனமுருகி வேண்ட, பெருமான் தோன்றி தனது உடலைக் கீறி அதில் உள்ள மணமிக்க நீரை
ப்ரோக்ஷித்தார். அதனால் அவரது தோஷம் நீங்கியது. இதே கருத்தினை திருமழிசையாழ்வாரும், ‘கீறுதிங்கள் வைத்தவன் கைவைத்த வன்கபால மிசை, ஊறு
செங்குருதியால் நிறைத்த’ என்று பாடியுள்ளார். அவரது தோஷத்தை தீர்த்த பெருமான்
திருநறையூரில் உள்ளார். அவரை வழிபட்டு நமது தோஷங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்ற
பொருளில் அமைந்துள்ளது.
நல்ல குணங்களைப்
பெற்ற வைதீக அந்தணர்கள் வாழும் திருநறையூரில் அருள் புரியும் பெருமானைப் பற்றி, மதில்களாலும், வயல்களாலும் சூழப்பபட்ட திருமங்கை மன்னரான கலியன் இயற்றிய இத்தமிழ்ப்
பாசுரங்களைப் பக்தியோடு ஆராய்ந்து பாடுபவர்களிடம், முன்
தீவினை எதுவும் நெருங்காது. அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இவ்வுலகில் புகழ்பெற்ற
பின்னர் வைகுண்டத்தில் வானவர்கள் வணங்கும்படி வாழ்வார்கள் என்பது இப்பாசுரக்
கருத்தாகும்.
வேறு எந்தவிதமான நன்மைகளையும் விரும்பாமல் எம்பெருமானைத் தொழுது பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்ட
வேதம் கற்ற அந்தணர்கள் திருநறையூரில் வாழ்கிறார்கள். இப்பாசுரங்களை தினசரி
படிப்பவர்கள் இவ்வுலகில் இகலோக சுகங்களை அனுபவித்து பின் மேலுலகத்தில்
நித்யசூரிகளின் ஆதரவுடன் வாழ்வார்கள். ஜீவாத்மாவான நாம் பரமாத்மாவுடன் இணைவதே நமது
தலையாய கடமையாகும். அதுவே பேரின்ப வாழ்க்கையாகும். அத்தகைய வாழ்க்கைதான் நமது
பிறவிப் பிணியை அழிக்கக் கூடியதாகும். இத்தகைய லட்சியங்களுடன் இப்பாசுரங்களை தினசரி
நாம் பாராயணம் செய்ய வேண்டும்.
மான் தோலை
மார்பில் சாற்றிய பிரம்மச்சாரியாகிய மகாபலியிடம் சென்று பூமியை யாசித்துப் பெற்று,
தனது திருவடிகளால் மூன்றடி அளந்த
பெருமானை அடியேன் திருநறையூரில் தரிசித்தேன். இத்தலமானது தேன் நிறைந்த பூக்களைக்
கொண்ட திருவேங்கடமலையில் குடியிருப்பவனுடைய வாசஸ்தலமாகும். அத்தகைய வல்லமை கொண்ட
பகவானை திருநறையூரில் தரிசித்து நம்மையும் தரிசிக்குமாறு தெரிவிக்கிறார் ஆழ்வார்.
எம்பெருமான் என்னைப்
பெறுதற்குப் பல அவதாரங்களெடுத்துத் தேடித் திரிந்தான்; அக்காலங்களிலே நான் விமுகனாயிருந்திட்டேன்; இன்று நான் அவனைத் தேடித்திரிய வேண்டிற்று; அறுகாதப் பயணம்போய்த் திருமலையுச்சியிலே
காணவேண்டாமல், விடாய்த்த
விடத்திலே தண்ணீர் குடிக்கப் பெறுமாபோலே திருநறையூரிலே காணப்பெற்றேன் என்கிறார்.
உலகங்களை அளப்பபவரும் அவரே, அனைவரையும் காப்பவரும் அவரே என்ற எண்ணம் கொள்ள வேண்டும். எனவே இகலோக ஆசைகளை விடுத்து இத்தகைய ஞானத்தினை
நாம் பெறவேண்டும். எம்பெருமான் என்னை பெறுவதற்காக பல்வேறு அவதாரங்களில்
தோன்றினான். இதையெல்லாம் உணராத நான் அவனை பாராமுகனாக இருந்து விட்டேன். ஆனால்
இன்று நான் அவனைத் தேடித் திரியவேண்டிய ஒரு நிலை வந்துவிட்டது. காத தூரம் பயணம்
மேற்கொண்டு திருமலை உச்சியில் போய் காணாமல் தாகம் எடுத்த இடத்திலேயே தண்ணீர்
குடித்தது போல் திருநறையூரில் அவனைக் காணப்பெற்றேன் என்று மனமுருகிப் பாடுகிறார்
ஆழ்வார்.
முன் காலத்தில்
அமிர்தத்தைப் பெற வேண்டித் திருப்பாற்கடலைக் கடைந்தவனை, பிரளய காலத்தில் பெரிய மீனாக
உருவெடுத்துப் பெரு வெள்ளத்தைத் தன் வயிற்றில் அடக்கி, மக்களைக்
காத்த பெருமானை, திருவாலி
திருநகரியில் அருள் புரியும் திருமகளின் நாதனான பரந்தாமனை, நல்ல
நீர் பாயும் வயல்களால் சூழப்பெற்ற திருநறையூரில் தரிசித்தேன் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
முன்பொரு சமயம்
ஆற்று நீர், ஊற்று நீர்,
மழை நீர் போன்றவற்றைக் கடைந்தவனும், பிரளய காலத்தில் அந்நீரை மீனாக அவதரித்துத் தன் வயிற்றில் அடக்கி அமைத்த பெருமானை திருவாலி நகரில் திருமகளுடன் கூடி இருக்கும் எம்பெருமானை நல்ல நீர்பாயும் வயல்களால் சூழப்பட்ட திருநறையூரில் கண்டேனே என்கிறார்.
திருப்பாற்கடலைக் கடைந்தபோது வந்த விஷம்போல் நம் மனதை தியானத்தின் மூலம்
கடைந்தெடுத்தால் நம்மிடமுள்ள விஷத்தன்மை கொண்ட தீய எண்ணங்கள், செயல்கள் போன்றவைகள் அழிந்து போகும்.
அதன் பிறகு நம் மனத்தில் பல அரிய நல்லெண்ணங்கள் தோன்றி நமக்கு ஞானம்
பெறுவதற்கான வழிவகை செய்யும். அத்தகைய எண்ணங்களின் செயல்பாட்டினால் நம் மனதில்
ஆத்ம ஒளி தோன்றும். அமிர்தம் சாகா நிலை தருவது போன்று ஆத்ம ஒளியும் நம்மை பிறவா
நிலைக்கு அழைத்து செல்லும் என்ற பொருளில் ஆழ்வார் கூறுகிறார். இதில் வரும்
முந்நீர் என்பது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்று மேலெழுந்தவாரியாக பொருள் கொண்டாலும், மூன்று
செயல்களான மண்ணைப் படைத்தல், மண்ணை அழித்தல், மண்ணைக் காத்தல் போன்ற மூன்று செயல்களை இந்த நீர் செய்வதால் முந்நீர்
என்று பொருள் கொள்ளப்படுகிறது.
பரிசுத்தமான
வாயையுடைய பெரிய திருவடியான கருடனின் மேலேறி வந்து தடாகத்திலே, கஜேந்திரனான யானையின் துயரினைப்
போக்குவதற்காகச் சுதர்சனச் சக்கரத்தை ஏவி யானையின் காலைக் கௌவிக் கொண்டிருந்த
முதலையை இரு துண்டாக்கி அழித்த தேவாதி தேவன், செந்தாமரைக்
கண்ணனை, திருநாவாய் என்னும் திருப்பதியில்
எழுந்தருளியிருப்பவனைத் திருநறையூரிலும் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
தூய வாயையுடைய கருடன் மேல் வேகமாக வந்து யானையின் துயர் தீர்த்து முதலையைத் துணித்தவனான தேவாதி தேவனை செந்தாமரைப் பூவை ஒத்த கண்களை உடையவனை திருநாவாய் என்னும் இடத்திலிருப்பவனை திருநறையூரில் கண்டேனே என்கிறார்.
கஜேந்திரனைக் காத்தருளிய செந்தாமரைக் கண்ணன், தேவாதி
தேவன் என்று பெயர் பெற்று பரமபதத்தை விட்டு எழுந்து திருநாவாய் என்னும்
திவ்யதேசத்தில் குடிபுகுந்தான். அது போன்று பரமபதத்தைப் போன்றே இருக்கும்
திருநறையூரைத் தேடி குடிபுகுந்தான். எந்தப் பிறவி எடுப்பினும் பகவானை மறவாமல்
பூஜித்து வந்தால் நம் தீவினைகள் களைந்து பகவான் நம்மைக் கரை சேர்த்து விடுவான்.
மேலும் புதிதாகவும் எந்தப் பாவங்களும் செய்யாத ஒரு மனநிலையினை பகவான் நமக்கு
அருள்வான். இத்தகைய அற்புத வழியினை ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கின்றார்.
நாட்டில் நடமாடாத
அபூர்வமான வடிவத்தில் தோன்றிய நரசிம்மரை, இரனியனின் உடலைக் கிழித்து அழித்தவரை, இளமை
பொருந்திய தருக்களைக் கொண்ட தோட்டங்கள் சூழ்ந்த திருநீர் மலையில் அருள் புரிபவரை,
வாடாத அழகிய மலர்களையும், திருத்துழாய்
மாலையையும் திருமுடியில் அணிந்தவரை நாள்தோறும் தேடியலைந்து பின் திருநறையூரில்
கண்டு தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பரமபக்தனான, ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்தவைகளை
பொறுத்திருக்கமாட்டாதே நரசிம்ஹரூபியாய் தூணில் தோன்றி, இரணியனுடலைப்
பிளந்து அந்த விடாய் தீரத் திருநீர்மலையிலே ஸந்நிதி பண்ணியிருப்பவனாப், ஜகத்ரக்ஷணத்துக்கு முடியவித்து மாலையிட்டுக் கொண்டிருப்பவனான
எம்பெருமானை நாடோறும் தேடித்திரிந்து இன்று, திருநறையரில்
கண்டேனே! என்கிறார்.
பரம பக்தனான பிரகலாதனுக்கு நேர்ந்த தொடர் துன்பங்களைக் கண்டு மனம்
கொதித்து அதனைப் பொறுக்க மாட்டாமல் நரசிம்மமாய் அவதரித்து இரணியனை உடலைப் பிளந்து
அவனை அழித்தார். பகவான் அபூர்வமான வடிவில்
அவதாரமெடுத்தார். மேலும் அபூர்வமான செயல்களையும் செய்தவண்ணம் உள்ளார். அசுர
சக்திகள் வீழ்ந்து கொண்டே இருப்பதால்தான் இவ்வுலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டு
இருக்கின்றது. இத்தகைய பகவான் திருநறையூரில் உள்ளார். அவைரை தரிசித்து பெறற்கரிய
பேறுகளைப் பெறுங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
உயரிய கற்களால்
கட்டப்பட்ட மதில்களையுடைய அரண்மனையில் இலங்கை வேந்தனான நீசன் இராவணனின் வலிமை
வாய்ந்த தேகம் அழியுமாறு சார்ங்கம் என்ற கொடிய வில் அம்புகள் கொண்டு அவனை வதம்
செய்த கோதண்டபாணியை, பக்தி
செல்வத்தைக் கொண்ட விபீஷணனுக்குச் சிறப்பாக அருள் புரிந்த அந்த நல்லவனைத் தேடித்
திரிந்து கடைசியில் திருநறையூரில் வந்து தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
விபீஷணன் வந்து
சேர்ந்தபோது அங்குள்ள வானரமுதலிகள், ‘சத்ருபக்ஷத்தில் நின்றும் வருகின்ற இவனைச் சேர்த்துக் கொள்ளலாகாது;
சேர்த்துக்கொண்டால் மஹத்தான கெடுதிவிளையும் என்று சொல்லித்தகைய,
அவனைக் கைக்கொண்டே தீர்வேன்; ஒருகாலும்
கைவிடமாட்டேன்’ என்று பெருமான் அருளிச் செய்ய, ‘அப்படியாகில்
அடியோங்கள் கிஷ்கிந்தைக்கு மீளுகிறோம்’ என்று வானர முதலிகள் சொல்ல ‘நீங்கள்
இஷ்டப்படி செய்யலாம்; விபீஷணனைக் கைக்கொள்வதை மாத்திரம்
ஒருபடியாலும் தவிரமாட்டேன்’ என்று சிக்கென அருளிச்செய்து விபீஷணாழ்வான் இடத்தில்
விசேஷகடாக்ஷம் பண்ணினமை அறியத்தக்கது. தன்னை நம்பி வந்து சரணடைந்தவனே கைவிடுதல் நன்றன்று என்று வானரர்களுக்கு
அறிவுறுத்தி மனவுறுதியுடன் விபீஷணனை ஏற்றுக் கொண்டான் இராமபிரான்.
விபீஷணன் இராமனிடம் சரணடைய வந்தபோது வானரர்கள் பகையரசனிடமிருந்து வந்துள்ள
இத்தகையவனை சேர்க்கக் கூடாது என்றும், மீறினால் நாங்கள்
கிஷ்கிந்தைக்கு செல்வோம் என்று கூற,
ஸ்ரீராமனும் தாராளமாகச் செல்லலாம். அனைத்தையும் துறந்து
என்னைச் சரணடைய வரும் ஒருவனை நான் காப்பதே எனது கடன் என்று கூறினார் இராமன். அதிபுத்திமானாக இருந்த இராவணன் முற்பிறவிப்
பயனால் தவறுகள் பல புரிந்தான். அதற்கான
தண்டனையும் அடைந்தான். எனவே அடுத்தவர்க்கு தீவினைகள் புரியக் கூடாது என்ற உறுதியை
நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பாசுரக் கருத்தாகும்.
தேவலோகத்தோடு
மற்றுமுள்ள மனிதர்களையும் மற்றும் பிராணிகளையும் தனது திருநாபிக் கமலத்தில் உள்ள
பரிமளமான தாமரை மலரில் படைத்தவனுமான, ஆச்சர்யமான குணங்களைக் கொண்ட அந்த மாயவனை, அம்பு
போன்ற விழிகளையுடைய யசோதையின் சிங்கக் குட்டியை, அடியார்களின்
நம்பிக்கைக்கு உரியவரைத் தேடியலைந்து இறுதியில் திருநறையூரில் தரிசித்தேன் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
ப்ரஹ்மாதிகளின்
குடியிருப்போடே கூட மற்றுமுள்ள மனுஷ்யாதிகளை எல்லாம் தன் திருநாபியிலே செவ்விப்
பூவின்மேலே தனது ஸங்கல்பத்தாலே உண்டாக்கி அருள்பவனும், இப்படி, ஸங்கல்பத்தாலே
ஸர்வத்தையும் படைக்கவல்லவனாக இருக்கச் செய்தேயும் தான் மெய்யே வந்து பிறந்தவனான
பெருமானைக் திருநறையூரில் கண்டேனே!
பிரம்மாதிகளினுடன் சேர்ந்து குடியிருக்கும் மற்ற உயிரினங்களையும் தன்
நாபியிலே செவ்விப் பூமேல் தனது சங்கல்பத்தால் சர்வத்தையும் உண்டாக்கியிருக்கும்
பெருமான் நறையூரில் உள்ளான். நம்பிக்கைக்குரிய தருமர், பீஷ்மர்
ஆகியோர் கைவிட்டபின் திரௌபதிக்கு ஒரே நம்பிக்கை கிருஷ்ணர்தான். பகவான் எல்லா
விதிகளையும் மீறித் திரௌபதியின் மானத்தை காக்க வேண்டும் என்ற எண்ணத்தைச்
செயல்படுத்தினான். அத்தகைய
நம்பிக்கைக்குரிய பெருமான் திருநறையூரில் வாசம் செய்கிறான். அவனைத் தரிசனம் செய்து
வேண்டிய வரங்களைப் பெறுங்கள் என்கிறது இப்பாசுரம்.
மிகுந்த
காவலையுடைய நீண்ட சோலைகளைக் கொண்ட, காண்டவமென்னும் வனத்தை அக்னிக்கு இரையாக்கியவனை, திருமெய்யத்தில்
கோயில் கொண்டிருக்கும் பகவானை, தேன் நிறைந்த கற்பக மரத்தை,
சத்திய பாமா பிராட்டிக்காகத் துவாரகையில் கொண்டு வந்த நட்ட
ஸ்ரீகிருஷ்ணனைத் தேடியலைந்து திருநறையூரில் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
அக்னி பகவானின் பசியைத் தீர்க்க
எம்பெருமான் காண்டவ வனத்தை அழிக்கும்படி சொன்னார். அதன் காரணமாக அக்னியின் பசி அடங்கியது. அதே
போன்று நமது தாகத்தையும் பகவான் தனிக்கக் கூடியவர். சத்யபாமாவுக்காகக் கற்பக
மரத்தைத் தேவலோகத்திலிருந்து கொண்டு
வந்தார். இதையறிந்த இந்திராணி அதனை
இந்திரனிடம் சொல்லித் தடுத்தார். அதனால் இந்திரன் போர் தொடுத்து வந்தான். ஆனால்
பகவானின் தொடர்ந்த தாக்குதலால் நிலைகுலைந்து போய்த் தோற்றுப் போனான். அத்தகையவன்
திருநறையூரில் வாசம் கொண்டுள்ளான். அவனைத் தரிசிக்க வாருங்கள் என்று கூறுகிறார்.
பூமியின் மீது
உண்டான சுமைகளை நீக்குவதற்காகப் பகையரசர்களின், ஒழுங்காக அணிவகுத்து வந்த மிகப்பெரிய படைகளுடன் போரிட்டு,
அழித்து அவர்களை வீரசுவர்க்கம் அடையும்படி பாரதப் போரில்
பார்த்தனின் தேரினைச் செலுத்தியவன் ஸ்ரீகிருஷ்ணன். அத்தகையவனை நான் மிகுந்த
பக்தியுடன் தேடியலைந்து திருநறையூரில் கண்டு கொண்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
பாரதப் போரில் மிகப் பெரிய பலம் கொண்ட மாவீரர்களையெல்லாம் பல்வேறு
யுக்திகளைப் பயன்படுத்தி அவர்களையெல்லாம் அழித்தார் பகவான். தான் வந்த நோக்கத்தை
நிறைவு செய்தவுடன் அவர் திருப்பாற்கடல் சென்றார். அத்தகைய பெருமை வாய்ந்த பகவான்
திருநறையூரில் கோயில் கொண்டுள்ளார்.
அவரைத் தரிசிக்கும் பேற்றினை
நான் பெற்றது போல் நீங்களும் பெற வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார். நம்மில் உள்ள
தேவையற்ற பாரங்களைத் தகர்த்து எறியக் கூடியவன் பகவான் என்ற கருத்தை இப்பாசுரம்
மூலம் ஆழ்வார் வலியுறுத்துகிறார்.
மென்மேலும்
அதிசயித்து வருகின்ற அளவற்ற பிரகாசத்தையுடைய சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்ச சன்னியம் என்று சங்கினையும் பெரிய
கைகளில் தரித்த பெருமானை, தேன்
மிகுந்து காணப்படும் நந்தவனங்களைக் கொண்ட திருக்குடந்தையில் சயனித்திருக்கும்
சாரங்கபாணியைத் தேடி திருநறையூரில் வணங்கினேன் என்று பொருள் மென்மேலும் அதிசயித்து
வருகின்ற அளவற்ற பிரகாசத்தையுடைய சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்ச சன்னியம் என்று சங்கினையும்
பெரிய கைகளில் தரித்த பெருமானை, தேன் மிகுந்து காணப்படும்
நந்தவனங்களைக் கொண்ட திருக்குடந்தையில் சயனித்திருக்கும் சாரங்கபாணியைத் தேடி
திருநறையூரில் வணங்கினேன் என்று பொருள்பட பாடுகிறார் ஆழ்வார்.
ஆற்றுப்பெருக்குப் போலே மேன்மேலும் மிக்கு
வளரா நின்ற எல்லையில்லாத தேஜஸ்ஸையுடைய திருவாழியாழ்வானோடுகூட.
ஶ்ரீபாஞ்ஜசன்னியாழ்வானும் குடியிருக்கும் அழகிய திருக்கைகளையுடைய
திருக்குடந்தையில் கண்வளர்ந்துள்ளவனானவனை திருநறையூரில் காணப்பெற்றேன்.
ஒளிபொருந்திய சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்ச சன்யத்தையும் ஏந்தியவன் அசுரர்களை அழித்து நம்மைக் காத்துள்ளான்.
தருமம் எங்கே உள்ளதோ அங்கேதான் பகவானின் சகாயம் கிடைக்கும். தருமத்தில்
பிடிப்புள்ளவர்களாக வாழ வேண்டும் என்ற நீதியை மறக்கக் கூடாது. துரியோதனனின்
சூழ்ச்சியால் நாட்டை இழந்த பாண்டவர்களின் மேல் பரிவு ஏற்பட்டு அவர்களைக் காத்தான்.
எனவே நாம் தருமத்தை தவறாமல் கடைபிடித்தால் அந்த இறைவன் நம்மைக் காப்பான்.
தருமத்திற்கு துணை நிற்பவனான எம்பெருமான் திருக்குடந்தையிலும் திருநறையூரிலும்
கோயில் கொண்டுள்ளான். அவனைத் தரிசித்து வளமோடு வாழுங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
நிலையான
பெருமைகள் பல பெற்ற வட மதுரையில் வசுதேவருக்கென்று பெருமை சேர்க்க அவதரித்துத் திருநறையூரில் குடிகொண்டிருக்கும் நம்பியைப் பற்றி, மணமிக்க மலர் மாலைகளையுடைய மலை
போன்ற திடந்தோள்களைக் கொண்ட திருமங்கைமன்னன் கலியன் இயற்றிய இப்பாசுரங்களைப்
பக்தியோடு பாடவல்லவர்கள் பரமபதம் சென்று தேவர்களால் கொண்டாடப்படுவார்கள் என்று
ஆழ்வார் கூறுகிறார்.
வடமதுரையானது ஆச்சாரிய சம்பந்தம் நிறையப் பெற்ற ஊராகும். ஸ்ரீவாமனமூர்த்தி
நெடுநாள் தவமிருந்த இடமும், ஸ்ரீசத்ருக்ணாழ்வார் அரசாட்சி
புரிந்த இடமுமான வடமதுரையில் ஸ்ரீகிருஷ்ண பகவானும் அவதரித்துள்ளான் என்பதால்
இவ்வூர் அதிகம் ஏற்றம் மிகுந்ததாகும். இந்தப் பத்து பாசுரங்களில் அதர்மம் எவ்விதம்
தலையெடுத்தாலும் அதைத் தெய்வசக்தி முற்றிலும் அழித்துவிடும் என்ற கருத்தினைத்
தெரிவிக்கின்றன. எனவே நம் மனம்
அதர்மத்தைத் தொடாமல் இருக்க நமக்குத் தெய்வ சக்தி அவசியம் தேவை. இப்பாசுரங்களை
பக்தியுடன் படிப்பதால் அத்தகைய தெய்வசக்தி நமக்குச் சித்திக்கும் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
தமது துணையோடு
சேர்ந்த அழகு மிக்க அன்னப்பறவை, தன் துணையைவிட்டுப் பிரியாமல் கூட இருந்து, தாமரையின் இதழ்களை எடுத்தெறிந்து தேன்பருகும்
வயல்கள் சூழ்ந்த திருநறையூரில் குடி கொண்டிருப்பவனை, பிரம்ம
கபாலத்தை கையிலேந்தியதால் பெற்ற சாபத்தைத் தீர்த்த எம்பெருமானின் திருவடிகளை நீ
சென்றடைவாய் மனமே என்று ஆழ்வார் பாடியுள்ளார்.
பிரம்மனது ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததால் ஏற்பட்ட சாபத்தினைப் போக்க பெருமானிடம்
சிவபெருமான் வேண்டியதால், பெருமான்
அவரது சாபத்தைத் தீர்த்தார். ஹம்ச பட்சியானது தனது பேடையுடன் அவ்வப்போது
சண்டையிட்டும், பின்
சமாதானமடைந்து நெருங்கியிருந்து தாமரையில் உள்ள தேனைப் பருகி இன்புறுகிறது.
நிலையில்லாத உறவினை சேர்வதை விடுத்து நிலைபேறான பெருமானின் திருவடிகளை நாம் சரண்
அடைந்தால் எத்தகைய துன்பங்களையும் அவர் அகற்றிவிடுவார். அத்தகைய பெருமான்
திருநறையூரில் கோவில் கொண்டுள்ளார்.
உப்பங்கழிகளில்
நிறைந்துள்ள கனம் மிக்க சங்குகள் எல்லா இடங்களிலும் நிறைந்து காணும்படி பாய்ந்து
வழி நெடுகிலும் வீதிகளிலும் அழகிய முத்துக்களைச் சுமந்து இறைக்கும் வளமான காவிரி
நதி பாயும் திருநறையூரில் உறைகின்ற, பழிவாங்கும் உணர்வினைக் கொண்ட பலம் பொருந்திய இராவணனின் பருத்த பத்து தலைகளும்
சிதறி விழுமாறு தீ போன்ற அம்புகளை எய்த இராகவனுடைய திருவடிகளை நீ அடைவாய் மனமே!
என்று பாடுகிறார் ஆழ்வார்.
தீயசெயல்களினால்
பழிமிகுந்த இராவணனுடைய பத்துத் தலைகளும் பறிப்போகும்படி அம்புசெலுத்தின பெருமான்
இன்னமும் அப்படிப்பட்ட அசுரர்களை அழிப்பதற்காகத் திருக்கோயில்
கொண்டிருக்குமிடம் திருநறையூர். இவ்வூர் திருவீதிகளில் பொன்னியாறு
பெருகும்போது கொழிக்கப்படும் சங்குகள் வழியெங்கும் முத்துக்களைப்
பிரஸவித்துச் செல்வம் நிறைந்திருக்கின்றது; இப்படிப்பட்ட திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய
அடியிணைகளை அடைவதே நெஞ்சுக்குக் காரியமாக வேணும்.
எப்போதும் தீய செயல்களையே புரிந்து வரும் பழிமிகுந்த பத்து தலை இராவணனின்
தலைகள் பறிபோகுமாறு பானங்களை விடுத்து அவனை அழித்தான். அதேபோன்ற இத்தகைய கொடுஞ்செயல்கள் புரியும் மனிதர்கள்
இன்றும் இவ்வையகத்தில் உள்ளார்கள். அவர்களை அழிப்பதற்காக பெருமான் திருநறையூரில்
வாசம் செய்கிறான். பழிவாங்கும் உணர்வினால் இராவணன் அடைந்த தோல்வியை மனதில் கொண்டு,
பழி வாங்கும் உணர்ச்சியை நம் மனதிலிருந்து அறவே நீக்க வேண்டும் என்ற எண்ணத்தை
ஆழ்வார் நமக்கு வலியுறுத்துகிறார்.
அருஞ்சுவை கொண்ட
சுளைகளையுடைய பலாக்கனிகளிலிருந்து தேன் பெருக, வாழை மரங்களிலிருந்து பருத்த பழங்கள் நெருக்கமாகக் குலை
தள்ளிய தோட்டங்களைக் கொண்ட திருநறையூரில், சங்கு போல் வெண்மை
நிறம் கொண்ட பலராமனின் சகோதரனாக, மூவுலகையும் உண்டுமிழ்ந்து,
கடையப்பட்ட தயிர் வெண்ணெய்
உண்ட எம்பெருமானின் திருப்பாதக் கமலங்களை நீ சென்றடைவாய் மனமே! என்று பாடுகிறார்
ஆழ்வார்.
வளைகொண்ட
வண்ணத்தன் பன்தோன்றல் பலராமனுடைய திருமேனிநிறம் வெளுப்பாதலால் ‘வளைகொண்ட
வண்ணத்தன்’ என்று பலராமனைச் சொன்னபடி. “முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோடப், பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன்” என்ற பெரியாழ்வாரின்
அருளிச்செயல்களைக் காண்க.
எம்பெருமானின் திருமேனி மேகம் போன்று நீல நிறத்தை உடையதாகும்.
திரேதாயுகத்தில் இவன் சங்கு போன்ற வெண்மை நிறத்தவன். இவ்வாறு யுகந்தோறும் வழிபாடு
செய்தாலொழிய ஒரு வடிவம், ஓர் உருவம் என்று அறிய முடியாது.
சிவந்த கண்களையுடைய இப்பெருமானை அனைவரும் வர்ணித்துப் பேசினாலும், அவன் காட்டிய வடிவத்தை அடியேன் கண்டது போல் எவர் காண முடியும்? என்று திருநெடுந்தாண்டகத்தில் ஆழ்வார் உரைக்கின்றார். எனவே அத்தகைய பெருமானை நாமும் திருநறையூரில்
சென்று சேவிப்போமாக.
மிகவும்
நெருக்கமாகவும், ஒழுங்காகவும்
படர்ந்திருக்கின்ற கொடிகள் மாளிகைகளின் மேலே எல்லா இடங்களிலும் பரவி ஆகாயத்தை
மறைக்க, நிறைந்த செல்வத்தைக் கொண்ட திருநறையூரில் குடக்
கூத்தாடினவனை, கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்து மழையைத
தடுத்தவனை, மலை போன்ற திரண்ட தோள்களையுடைய பரந்தாமனின்
ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த திருப்பாதக் கமலங்களை நீ சென்றடை மனமே! என்று
கூறுகிறார்.
கண்ணனின் லீலைகளைப் பலமுறை ஆழ்வார்கள் தமது பாசுரங்களில்
எடுத்துரைத்துள்ளனர். பகவானின் பெருமைகளைச் சொல்வது நம் மனத்தை நல்வழியில் திருப்ப
வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தில்தான். நிலையற்ற செல்வத்தையும், போகங்களையும் நினைத்து நினைத்து அவனை மறந்து வருகிறோம். மனிதனால் மறக்க
முடியாத இகலோக ஆசைகளில் நாம் அகப்பட்டு அல்லல் படுகிறோம். மக்கள் படும் இத்தகைய
அவல நிலையை மாற்றவே ஆழ்வார் நம்மைத் திருநறையூர் சென்று அவனைச் சரணடையுமாறு
வேண்டுகிறார். தனக்காக மட்டுமல்லாமல் இவ்வையகத்தில் உள்ள அனைவரது மனங்களும் அந்த
திசைக்கு செல்ல வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
அகில்
கட்டைகளையும், சந்தனக்
கட்டைகளையும், மின்னும் பொன்னையும், அழகிய முத்துக்களையும், காவிரியில் பொங்கும் அலைகளை மிகுதியாகக் கொண்டு சேர்க்கும் திருநறையூர்
எம்பிரானை, பாரதப்போரில் கதிரவனை தனது ஒளி பொருந்திய
சக்ராயுதத்தால் மறைத்தவனை, ஏழுலகங்களையும் திருவயிற்றுக்குள்
அடக்கி மறைத்து வைத்த எம்பெருமானின் அழகிய திருவடிகளை நீ சென்று அடைவாய் மனமே!
என்று பாடுகிறார் ஆழ்வார்.
எம்பெருமானுடைய திருவடிகளை உளமாற, நாவாறப் போற்றி,
அதனை அடை நெஞ்சமே என்கின்றார் ஆழ்வார். பாரதப்போரில் பாண்டவர்களுக்காகப்
பார்த்தசாரதியாக நின்று தருமத்தை நிலைநாட்டுவதற்காகப் பல சாதுர்யமான செயல்கள்
புரிந்து போரில் பாண்டவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்தான். நம்மிடம் தருமம்,
உண்மை இருக்குமானால் எத்தகைய பலமுள்ள எதிரிகளையும் பகவானின்
துணையுடன் வெற்றி கொள்ளலாம் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும். எனவே இத்தகைய தரும
குணம் கொண்ட பெருமானை திருநறையூரில் சென்று சேவித்து உய்யலாம் என்கிறார் ஆழ்வார்.
மேற்கில் ஒளிர்
மின்னல் மின்னியதும் பொன்னையும், முத்தையும், சிங்கங்களின் நகங்களையும், துவாரத்தையுடைய பெரிய யானைகளின் கொம்புகளையும், குளிர்ந்த
அலைகளின் மூலம் கொழிக்கின்ற காவிரி பாயும் திருநறையூரில் மின்னலைப் போன்று நுண்ணிய
மெல்லிய இடையைக் கொண்ட மென்மையான குணம் பொருந்திய திருமகளை மார்பிலே தரித்துக்
கொண்டு களிக்கும் திருமாலின் திருப்பாதக் கமலங்களை நீ சென்றடைவாய் மனமே என்று
இப்பொருள்பட ஆழ்வார் பாடுகிறார்.
திருமகள் செல்வத்திற்கு அதிபதி.
எம்பெருமான் அந்த மகாலட்சுமியை தன் மார்பில் தாங்கியுள்ளார். சகலவிதமான ஐஸ்வர்யங்களை அளிக்கக்கூடிய வல்லமை
படைத்தவர் எம்பெருமான். நமது இந்த வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் தாயின்
கர்ப்பத்தில் நாம் பிறக்காமல் நிலையான பேரின்பத்தை நமக்கு அளிக்க வல்லவர்.
பிறப்பதும் பின் இறப்பதும் இதுவே துன்பம் தரும் நிலையாகும். உயிர்களுக்கு இது கொடுந்துயரத்தைத் தருவதாக
உள்ளது. அதனை மாற்றும் வல்லமை கொண்டவர்
திருநறையூரில் உள்ளார். அவரை சென்று அடை மனமே என்று கூறுகிறார்.
அழகும் வளமும்
மிக்க கதிர்களையுடைய சற்றே முளைத்த நெற்பயிர்களின் இடை இடையே ஒரு பக்கம் தாமரை
மலர்கள் பூத்திருக்க, மற்றொரு
பக்கம் சற்று உயரே வளர்ந்த கரும்புகள் தழைத்து வளர்ந்து பயன்களைத் தரும்
திருநறையூரில் மேகவண்ணன் கொண்ட தேவாதி தேவன் துளசி மாலையைத் திருமுடியில் தரித்த
கண்ணபிரானின் தளிர் போன்ற திருவடிகளை நீ சென்றடைவாய் மனமே! என்கிறார் ஆழ்வார்.
கரும்பு விளையும் நிலத்தில் கருப்பங்கட்டைகளை வெட்டிவிட்டு நெற்பயிர்களை
நடுவார்கள். செந்நெல்லுக்கு அருகில் தாமரை பூத்து வளரும். பழைய
கருப்பங்கட்டையிலிருந்து மேலும் துளிர்த்து வளரும். செந்நெல் வளர்வதற்கு முன்னரே
கரும்புகள் செழித்து வளர்ந்துவிடும். இத்தகைய பயன்தரும் பயிர்கள் நிறைந்த ஊர்
திருநறையூராகும். அங்கு மழைமேகம் போன்று பகவான் உள்ளார். மக்களுக்கு மழை எந்த அளவு
பயன்படுகிறதோ அதைவிட அதிகமாகப் பகவானின் கருணைமழை நம்மைத் துன்பங்களிலிருந்து
விடுவித்து நமக்கு நன்மை புரிகிறது. எனவே இத்தகைய பெருமானை, மனமே
நீ சென்று சரணடைந்து விடு என்கிறார்.
திருநறையூர்
தோட்டங்களில் உள்ள முற்றாத இளம் பாக்கு மரங்களின் உச்சியில் குலை குலையாகப்
பழுக்கப்போகும் கனிகளும், பச்சைக் காய்களும், நல்முத்துக்கள் போன்ற அழகு மிக்க வெண்ணிற பாளைகளும் குவிந்து கிடக்கும்.
இத்தகைய வளம் மிக்க ஊரில் மலை போன்ற கம்பீரமான மணிமாடக்கோயிலில் மிகவும் பொருந்தி
நிலைத்து நிற்கும் பகவானுடைய நீண்ட திருவடிகளை நீ சென்றடைவாய் மனமே! என்று
பாடுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரங்களில் ஆழ்வார் திருநறையூரைப் பற்றியும் அவ்வூரின் எழில் மிக்க
இயற்கை வளங்களைப் பற்றியும் அழகுற எடுத்தியம்புகிறார். பாக்கு மரங்களின் வனப்பும்,
அதன் இளங்காய்ப்பும், அதில் வரும் பாளைகளின்
அணி வரிசையும் அழகுற வர்ணிக்கின்றார். ‘இரும்பொழில்சூழ் மன்னு மறையோர்
திருநறையூர் மாமலைபோல் பொன்னியலுமாடம்’ என்று தமது திருமடலில் இவ்வூரினைப்
பற்றிப் பாடியுள்ளார். மேலும் இங்கு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் பெருமானின்
பாதங்களைச் சரணடைந்து வேண்டிய வரங்களைப் பெறலாம் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
வேதம் கற்ற
விற்பன்னர்கள் நடத்தும் பெரியதான வேள்விகளில் உண்டான புகையானது மேலே எழும்பி
எல்லாவிடத்திலும் பரவி விண்ணையே மறைக்கின்ற பெரும் செல்வச் செழிப்பினையுடையது
திருநறையூராகும். இங்குச் சந்திரனைத் தரித்த சடைமுடிகொண்ட சிவபெருமானும், நான்முகனும் போற்றி வணங்கித்
துதிக்கும்படியான பகவானாக அருள் புரியும் பரந்தாமனின் திருவடிகளை அடைவாய் மனமே
என்று வியந்து பாடுகிறார் ஆழ்வார்.
யாகங்களை
அநுஷ்டிக்கும் வைதிக ப்ராஹ்மணர்கள் வாழ்கிற இடம் திருநறையூர் என்பதாகும்.
திருவாய் மொழியை அடியொற்றி அருளிச்செயற்படி. ஹோமாக்நிகளிற் கிளர்ந்த தூபம்
ஆகாசமெங்கும் பரவி மறைத்திருக்கப் பெற்ற திருநறையூரில் பிரமன், சிவன் முதலான தெய்வங்கள் பணிந்து
போற்ற, ஸ்வாமியாக எழுருதருளியிருக்கும் எம்பிரானுடைய
இணையடியை அடை நெஞ்சே! என்கிறார்.
யாகங்களை அனுட்டிக்கும் வைதிக பிராமணர்கள் வாழ்கின்ற புனிதமான ஊர்
திருநறையூராகும். பகவான் மூன்று ரூபமாகப் பிரம்மா, சிவன்,
விஷ்ணு என்ற ஒரே பரம்பொருளாக அருள் புரிகிறான். இதில் வேற்றுமைகளை
வளர்த்து வாதம் செய்தால் காலம்தான் விரயமாகும். நமது இலட்சியமான பரமபதத்தை அடைவது
தடைபட்டு போகும். ஆகவே பகவான் எல்லாமுமாக இருக்கிறார் என்று நினைந்து திருநறையூரை
நோக்கி மனதைச் செலுத்துங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
உறுதி மிக்க
சுண்ணாம்புக் கலவையில் பூசப்பட்ட மதில்கள் சூழ்ந்த திருநறையூரில் குடி
கொண்டிருக்கும் எம்பெருமானைக் குறித்து அன்னங்கள் சந்திரனைப் போல் வெண்மையாக
இருக்கும் வயல்களைக் கொண்ட அவ்வூரின்
தலைவன் திருமங்கை மன்னன் பாடிய பாசுரங்களைப் பக்தியுடன் பாட வல்லவர்கள்
விண்ணுலகில் தேவர்களோடு வீற்றிருக்கும் வாழ்வினைப் பெறுவார்கள் என்ற பொருளில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
இப்பத்து பாசுரங்கள் அனைத்தும் ஆழ்வார், பகவானின்
பெருமைகளையும், நமக்கு நல்வழி காட்டும் வழிகளாக அமைந்தன.
மும்மூர்த்திகளை உருவாக்குபவன், திருமகளைத் தனது மார்பினிலே
தரித்துக் கொண்டவன். மேகவண்ண நிறத்தவன், பாரதப் போரில்
கதிரவனை மறைத்துப் பாண்டவர்களைக் காத்தவன். அன்பர்களைக் காக்க சங்கும், சக்கரமும் ஏந்தி இருப்பவன் என்று பெருமைபட பாடியுள்ளார். இவற்றைத் தினமும்
படிக்கப் படிக்க நம்மிடமுள்ள அசுரப் பேய்கள் நம்மை விட்டு விலகிவிடும். இவற்றை
பக்திபூர்வமாகப் படித்தால் தேவர்களால் வரவேற்கப்பட்டு அவர்களுடன் வீற்றிருக்கும்
சிறப்பினைப் பெறுவார்கள் என்பது இதன் பொருளாகும்.
திருக்குடந்தையில்
சயனித்திருக்கும் திருமாலை, வராகமாகிய பூமியை சமுத்திரத்திலிருந்து மீட்ட எங்கள் பகவான், பகைவர்களின் கோட்டை அழியுமாறு கொடிய அசுரர் வாழும் இலங்கையை
நிர்மூலமாக்கியவன், உலகை அளந்த திருவிக்ரமனை நாம் சொல்லி
வணங்கினால் அது நமோ நாராயணமே என்று ஆழ்வார் கூறுகிறார்.
வராஹரூபியாய்த்
திருவவதரித்துப் பூமியை உத்தரித்த விடாய் தீரவும், இராமாவதாரம் செய்தருளி ௮ரக்கரை
அழித்து இலங்கையைப் பாழ்படுத்தின சிரமம் தீரவும், மாவலியின்
செருக்கை அடக்கவேண்டி உலகமெல்லாம் தாவின ஆயாஸம் தீரவும், திருக்குடந்தையிலே
திருக்கண் வளர்ந்தருளா நின்ற பெருமான் திருநறையூரில் திகழா நின்றான். அவனுடைய
திருநாமத்தை அநுஸந்திப்போமாக.
நம்மிடமுள்ள அசுர எண்ணங்களை
விரட்டுகின்ற உறுதியான தீர்மானத்தின் காரணமாகவே மீண்டும் மீண்டும் ஆழ்வார்
இதை நினைவுபடுத்துகிறார். பாசுரங்களைத் தினசரி படிக்குப் பழக்கம் நம்மைக்
கரையேற்றிவிடும் என்று ஆழ்வார் கூறுகிறார். நம்பிக்கை நமக்கு உயர்ந்த துணையாகும்.
எனவே பகவானின் நாமம் இட்டுக் கூற வேண்டுமானால் அது “நமோ நாராயணாய” என்ற தாரக
மந்திரத்தைத் தினசரி ஜபித்து எல்லா வெற்றிகளையும் அடைவோமாக என்கிறார் ஆழ்வார்.
முன்பு ஒரு நாள்
விஷத்தையுடைய காளியன் என்ற நாகம் அஞ்சும்படி இடையப் பையன்களின் மத்தியில் தாமரைப்
பூக்களுமுள்ள யமுனை ஆற்றின் மடுவில் பாய்ந்து அதனோடு போரிட்டு நடனமாடிய மேன்மை
பெற்ற திருவடிகளை உடையவன், வராகமூர்த்தியாகி பூமியைக் குத்தி எடுத்து வந்தவன், இரண்டடியால்
மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் அளந்தவன் நாமத்தைச்
சொன்னால் அது ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இவ்வுலக உயிர்களுக்குத் துன்பம் ஏற்பட நேரிட்டால் தெய்வ சக்தி அதனைப்
பார்த்துக் கொண்டு இருக்காது ஏதேனும் ஒரு வடிவம் கொண்டு மக்களைக் காப்பதற்காக
அந்தத் தீய சக்தியை வதம் செய்துவிடும். பணம், பதவி, புகழ் உள்ளது என்று ஆணவத்தில் அதர்மத்தை யாரேனும் கையிலெடுத்தால் இறைசக்தி
வெகுவிரைவில் அவர்களை அழிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பகவான்
நடத்தும் நமது வாழ்வில் அவரை மீறி எந்தக் காரியமும் செய்து விட முடியாது. மீறி
நடந்தால் அது அழிவை நோக்கித்தான் செல்லும் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
கட்டுத்தறிக்கு
அடங்காமல் சீறிக் கொண்டு பாயும் கொடிய கண்களைக் கொண்ட யானையின் குடல் கலங்குமாறு
அதன் வளைந்த தந்தத்தினாலான கொம்புகளைப் பிடுங்கி எறிந்தவன், பாற்கடலிலிருந்து அமுதினைக்
கடைந்தெடுத்தவன், மகாலட்சுமியை மார்பில் தரித்தவன், வண்டுகள் பாடும் கூந்தலையுடைய யசோதை கடைந்தெடுத்த தயிர், வெண்ணெய் இவற்றை வெட்கமறியாமல் களவாடி உண்ட பகவானின் நாமத்தைச் சொன்னால்
அது ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதாகும்.
கம்சனால் ஏவப்பட்டு, ஒருவருக்கும் அஞ்சாமல் இருந்த
குவலயாபீடம் என்ற யானை கண்ணனைக் கொல்வதற்காக மதமூட்டி அனுப்பப்பட்டது. பாலகனான கண்ணன் சேற்றிலிருந்து செடியைப்
பிடுங்கி எறிவது போன்று அதன் தந்தத்தைப் பிடுங்கி எரிந்து அவற்றையே ஆயுதமாக்கிக் கொன்றான்.
இத்தகைய பெருமானை நாம் மனமுருகி ‘ஓம் நமோ நாராயணா’ என்றுக் கூறினால் துன்பங்கள்
விலகி நன்மைகள் ஏற்படும். வாழ்க்கை
என்னும் போர்க்களத்தில் இந்த மந்திரம் நமக்கு வெற்றியை ஈட்டித் தரும் என்பது
இப்பாசுரப் பொருளாகும்.
கல்லினால்
கட்டப்பட்ட திருமதில்களால் சூழப்பட்ட காஞ்சியில் வசிக்க விரும்பிய, உலகமெல்லாம் துதிக்குமாறு திருப்பாடகமென்னும் திருப்பதியில்
உறையும் பகவான், இலங்கை அரசனான இராவணனின் பலமான உடம்பை வில்
வளைத்து அம்பெய்து அழித்த பெருமானே! விபீஷணனுக்கு
நன்மைகள் புரிந்த எம்பிரான் திருநாமத்தைச் சொன்னால் அது ‘ஓம் நமோ நாராயணாய’
என்பதாகும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ
தூதர் சந்நிதியை ‘பாடும் அகம்’ என்று கூறுவர். துரியோதனன் கண்ணபிரானை வஞ்சகமாகக்
கொல்ல குழி அமைத்து அதன்மேல் பட்டுத்துணி போட்டு அமர்த்தினான். பெருமான்
விஸ்ரூபமெடுத்து மல்லர்களையெல்லாம் அழித்தார். அத்திருக்கோலத்தில் இத்தலத்தில்
சேவை சாதிக்கின்றார். பெரியாழ்வாரும் ‘அரவுநீள்
கொடியோனவையுளாசனத்தை அஞ்சிடாதே இட,
அதற்குப் பெரியமாமேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்’ என்று பாடியுள்ளார். அத்தகைய பெருமான்
திருநறையூரிலும் சேவை சாதிக்கின்றார்.
முன்பொரு
காலத்தில் கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்துப் பசுக்கூட்டங்களை
பெருமழையிலிருந்து காத்த பகவான், எதிர்த்து வந்த ஏழு காளைகளின் வலிமையை அடக்கியவன், திருக்கோவலூரில்
நின்ற திருக்கோலமாய் காட்சி தருபவன். இலங்கையிலிருந்து தன்னைப் பனியாத அசுரர்கள்
இறக்கும்படி போர் செய்து அவர்களை எமன் உண்ணும்படி செய்தவன். அவனுடைய திருநாமத்தை
சொன்னால் அது ‘ஓம் நமோ நாராயணா’ என்பதாகும்.
முற்பிறவியில் நாம் செய்த நன்மை தீமைகளுக்கேற்ப இப்பிறவியில் நமது
வாழ்க்கை அமையும் என்பது சான்றோர் வாக்கு. நம் வாழ்வின் இன்ப துன்பங்கள் இதைக்
கொண்டுதான் தீர்மானிக்கப்படும். ஆனால் இப்பிறவியில் நாம் சொல்லும் மந்திரங்களின்
பலன்கள் நமக்கு இப்பிறவியிலேயே நன்மை பயக்கும் என்றும் கொள்ளலாம். அதிலும் ‘ஓம்
நமோ நாராயணாய’ என்னும் மந்திரமானது முற்பிறவியின் துன்பங்களையும், இப்பிறவியின் நல்வாழ்வையும் நன்முறையில் அமைத்துக் கொடுக்கும் என்பது
நிதர்சனமான உண்மை. இதையே ஆழ்வாரும் நம்மிடம் வலியுறுத்துகிறார்.
காட்டில் உள்ள
கரடிகளையும், குரங்குகளையும்,
மூசுஇனத்து வானரங்களையும் படையாகக் கொண்டு கொடிய அரக்கருடைய ஆணவத்தை
அழித்து வெற்றி பெற்ற என் ஸ்வாமியின், எனக்கு எப்போதும்
தேனும், பாலும், அமுதும் போல் இனிமையாக
இருக்கும் திருமாலின் திருநாமத்தை நானும் உச்சரித்தேன். தொண்டர்களெல்லாம்
சொல்லுங்கள். அது ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரமாகும் என்ற பொருளில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
‘ஓம் நமோ நாராயணாய’ என்பது அஷ்டாட்ஷர மந்திரமாகும். தொண்டர்களெல்லாம்
இம்மந்திரத்தைச் சொல்லிக் கரையேறலாம். மனத்தாலும், செயலாலும்
எவ்வித தீமைகளும் செய்வதில்லை என்ற உறுதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை
அனுதினமும் சொல்லி வந்தால் மகரிஷிகள் செய்த தவத்தின் பயனை நாம் அடையலாம். இதனை
உச்சரிக்கும்போது அசுர குணங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓடிவிடும். நம் உள்ளமே திருக்கோயிலாக மாறிவிடும். அதில்
பகவான் பள்ளி கொள்வார். அதனினும் நாம் அடைய வேண்டிய லட்சியம் எதுவுமில்லை என்று
கூறுகிறார்.
அசையாமல்
ஸ்திரமாக நிற்கும் பெருமலைகளும், வற்றாத அலைகளையுடைய பெருங்கடலும், பரந்து விரிந்த
பூமியும் இவையெல்லாம் சிறிதும் குன்றிவிடாமலும் பாழாகாமலும் காத்துவரும் பெருமான்,
கோவர்த்தனகிரியை குடையாக எடுத்த கோபாலன் திருநாமம் ‘ஓம் நமோ
நாராயணா’ என்பதாகும். பக்தர்களே! இதனை நீங்கள் நன்றாக அறிந்து அதன்படி நடந்து
கொள்வீராக என்பது இதன் அர்த்தமாகும்.
நம்மை இவ்வுலகிற்கு அளித்தவன் நாராயணன். உன்னால் இவ்வுலகிற்கு வந்த
நாங்கள் உன்னிடமே வந்து விடுகிறோம் என்று சொல்வது சரணாகதியாகும். கலியுகக்
கொடுமைகளிலிருந்து விடுபட்டுப் பரமபதம் அடைவதற்கு ஒரே வழி இம்மந்திரத்தைச்
உச்சரிப்பதாகும். பெருமானைவிட பெருமானின் நாமத்திற்கு அதிக சக்தி உள்ளது. இவ்வாறான
நாமஜெபம் மூலம் இறைவனை எளிதில் அடைந்து விடலாம். கட்டித்தங்கம் என்பது இறைவன்.
ஆபரணத்தங்கம் என்பது அவனது திருநாமங்களாகும். எனவே நமக்கு நேரம்
கிடைக்கும்போதெல்லாம் ஆபரணத் தங்கத்தை அணிந்து கொள்வது போல் அவனது நாமத்தையும்
நாம் சொல்லிப் பழக வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
கடுமையான
காற்றோடு கூடின மேகமானது கல் மழை பொழிய, எங்களுக்கு இது கொடிய இரவாக உள்ளது. நீயே எங்களைக் காக்க
வேண்டும் என்று யாதவர்கள் அஞ்சி வேண்ட, விபரீத விளைவுகள்
எதுவும் ஏற்படும் முன்னர் சுற்று மலைகளைக் கொண்ட கோவர்த்தனகிரியைக் குடையாகப்
பிடித்துப் பசுக் கூட்டங்களைத் துன்பத்திலிருந்து காத்த எம்பகவானின் திருநாமம்
‘ஓம் நமோ நாராயணா’ என்பதாகும்.
அண்டத்து இயக்கங்கள் அதிர்வலைகளாலானது. இது ஆதி தத்துவத்தின் மூலம்
துவங்கும் காரியத்தின் துவக்கம் எனலாம். நம் அறிவினில் சிறியது மனம், அதனினும் சிறியது ஆன்மா. நுண்னிய பொருட்களை நீண்ட நேரம் பார்க்கவோ,
நினைக்கவோ முடியாது. அறிவு மூலம் மனத்தை உணர்ந்து பின் மொத்த மன
ஆற்றலை ஆத்மா மீது விரித்து, அதன் மூலம் பரமாத்மாவை காணுதல்
என்பது சான்றோர் அறிவுரையாகும். ‘நார’ என்பது மானுடத்தைக் குறிக்கும். ‘அயனம்’
என்பது பிரம்மத்தை ஆராய்ந்து முடிவுணர்தல் ஆகும். இந்தத் திருமந்திரத்தில்
அனைத்தும் அடக்கம். இதனையே ஆழ்வார் நமக்கு அறிவுறுத்துகிறார்.
பொங்கி வரும்
அலைகளையுடைய கடலைத் தனது உடலைச் சுற்றும் ஆடையாகக் கொண்ட பூமி பிராட்டிக்கும், அலர்மேல் மங்கைக்கும், பிரம்மா, சிவபெருமான், இந்திரன்
மற்றுமுள்ள அனைவருக்கும் நாயகனாய், எங்கள் பெருமான், வானவர் முதல்வன் திருநாமம் ‘ஓம் நமோ நாராயணா’
என்பதாகும். நமது நீண்ட நாள் பாவங்கள் அழிவதற்கு இதனைத்
தினசரி சொல்லுங்கள் என்ற ஆழ்வார் கூறுகிறார்.
கடலை உடையாக உடையவள் பூமி பிராட்டியார். ‘அலர்மேல்மங்கை மலர் மார்பா’
என்று ஆழ்வார்கள் போற்றுகிறார்கள். தேவர்கள் போற்றுகின்ற பெருமானாகத் தோன்றுகிறார்
பகவான். இந்தத் திருமந்திரத்தை உச்சரித்து வந்தாலே வேதங்களைக் கற்றதற்கு சமம்
என்று கூறுவார்கள். சகலவித சாத்திரங்களையும் கற்றுணர்வதற்கு ஈடாகும். படித்தவர்,
பாமரர் போன்ற அனைத்து மக்களும் எளிதில் உச்சரிக்கும் மந்திரமாகும்.
நாம் அனைவரும் கரையேற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆழ்வார் இதனைப் பாசுரமாகத்
தெரிவித்துள்ளார். நம் மனதை திருக்கோயிலாக மாற்றும் இம்மந்திரத்தை அனைவரும் தினசரி
உச்சரித்தல் வேண்டும் என்று ஆழ்வார் அறிவுறுத்துகிறார்.
பெரிய குளங்கள், பொய்கைளால் சூழப்பட்ட மணிகள்
கொழிக்கும் காவிரியாறு பாயும் திருநறையூரில் அருள் புரியும் பெருமானை நாவினால்
துதித்து, நெஞ்சில் நிறுத்தி, நம்பியின்
திருநாமப் பெருமைகளைப் பற்றிக் கரு நெய்தல் போன்ற விரிந்த கண்களை உடைய மங்கையர்
காதலன் கலியன் இயற்றிய இப்பாமாலையினை விருப்பத்தோடு படிப்பவர்களின் பாவங்கள்
அழிந்துவிடும் என்ற வகையில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
திருவெட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணா’ அதன் பெருமைகளை ஆழ்வார்
எடுத்துரைத்தார். இத்தகைய மந்திரங்கள் நம்
வாழ்க்கைக்கு கவசங்கள் போல் காத்து வருகின்றன. அகப்பகைவர்களையும், புறப்பகைவர்களையும் வெற்றி கொள்ளும் இந்த அற்புதமான மந்திரத்தை நாம்
இடைவிடாமல் உச்சரித்தல் வேண்டும் என்று நம் பேரில் உள்ள கருணையினால் ஆழ்வார் இதனை
வலியுறுத்திக் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து உச்சரித்து வந்தால் முற்பிறவியில்
செய்த பாவங்கள் அகன்றுவிடும். அதுபோல் மேற்கொண்டு பாவங்கள் புரியா வண்ணம் நம்மைக்
காத்து வரும் என்பது என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.
பால் கறப்பதற்காக
இளம் பசுவானது அதன் கன்றை நினைத்துக் கத்துவது போன்று, மறக்காமல் அடியேன் உன்னை அழைக்கின்றேன். தேன்
நிறைந்த அழகிய மலர்த் தோட்டங்களால் சூழப்பட்ட திருநறையூரில் அருள் புரிந்து வரும்
பகவானே! எனக்குத் தந்தை போன்றிருக்கும் எம்பெருமானே! இவ்வுலகில் நான் இனி
சம்சாரத்தில் பிறவாதபடி அருள் புரிய வேண்டும் என்ற பொருளில் ஆழ்வார் பாடியுள்ளார்.
திருநறையூர்ப்
பெருமானே! உன்னை இடைவிடாது அநுபவிப்பதற்கு இடைவூறான ஸம்ஸார ஸம்பந்தத்தைக்
கழித்தருளாய் என்கிறார்.
கன்றுக்குட்டியானது தனது தாய்ப்பசு
பால் சுரவாவிடில் அதனையே நினைத்துக் கதறுமாபோலே பேறுபெறாத அடியேன் ஓயாது உன்னையே
சொல்லிக் கதறுகின்றேன்; இன்னமும்
எத்தனை காலம் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து அனர்த்தப்படுவேன்? பட்டதெல்லாம் போதாதோ? இனி எனக்குப்பிறவி நேராதபடி காத்தருள்வாய்
என்கிறார்.
திருநறையூர் பெருமானே! உன்னிடமிருந்து அருள் என்னும் பால் வராவிட்டாலும் கூட
நான் தொடர்ந்து உன்னை நோக்கி வேண்டுகிறேன். பகவானின் அருள் வெள்ளம் எப்போதும்
பாயத் தயாராக உள்ளது. நமது கர்ம வினைகள்தான் அதனைத் தடுக்கின்றன. பகவான் மீது
எந்தவிதமான குறையுமில்லை. நாம்தான் குறையுடையவர்களாக இருக்கின்றோம். எனவே அவனுடைய
அருளுக்காக நாம் தொடர்ந்து முறையிட்டால் கர்மவினைகளின் தாக்கம் குறைந்து விரைவில்
அவருடைய அருளைப் பெறுவோம். மறுபிறவி அடையாமல் பேரானந்த நிலையினை நாம் பெறுவோம்
என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
எக்காலத்திலும்
வற்றாத சமுத்திரங்களையும், ஏழு பெரிய மலைகளையும், பிரளய காலத்தில் ஒரே கவளமாக
விழுங்கிய, என்றும் நிலைத்திருக்கும் புகழை உடையவனே! உனக்கே
உரியவனாக இருக்கும் அடியேன், உன்னையே நாமம் சொல்லி
அழைக்கின்றேன். எனக்குத் தந்தையாகிய பகவானே! உனது திருநாமங்களைச் சொல்லும் பெரும்
பாக்கியம் பெற்ற என்னிடம் கருணை காட்ட வேண்டும் என்று ஆழ்வார் பகவானை
வேண்டுகிறார்.
பிரளய காலத்தில் உலகங்களையெல்லாம்
திருவயிற்றில் வைத்துக் காத்தருளினாயே,
அப்போது யாரேனும் கூப்பிட்டோ காத்தருளிற்று? பிரஜைகளின்
நோயையறிந்து பரிஹரிக்கும் மாதாவைப்போலே நீயே முற்பட்டன்றோ காத்தது. அப்படி
உன்பேறாகக் காத்தருள வேண்டியிருந்தும், நானும் உன்னை
நோக்கிக் கூப்பாடு போடுவதைக் கண்டாகிலும் இரங்கியருளலாகாதோ? என்கிறார்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் பலவாறாகப் பகவானை வேண்டுகிறார். ஒரு தாய் தன்
நோய்வாய்ப்பட்ட குழந்தையை எவ்வளவு கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிறாளோ,
அது போன்று எங்களைக் காக்கின்றாய். அவ்விதமிருந்து நான் உன்னிடம்
நெருங்கிக் கூக்குரலிட்டு கூப்பிட்டும் உன் மனம் இறங்கவில்லையா? என்று கூறுகிறார். இவ்வுலகில்
குடும்பம், உறவுகள் இவைகளை ஒதுக்கிவிட்டு பகவானை மட்டும்
உறவாகக் யார் கருதுகிறார்களோ அவர்களுக்கு எம்பெருமானின் அருள் உடனே கிட்டிவிடும்.
எனவே நிலையற்ற உறவுகளை நீக்கிப் பகவானை சரணடைவோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பகவானே! உனது
திருவருளை அடியேன் பக்கத்திலேயே நிலை நிறுத்தினாய். இனி இத்தகைய கருணையை நான்
மற்றொருவருக்கு விட்டுக் கொடுக்கமாட்டேன். மேகங்கள் திரண்டு படியும் பாற்கடலையும், திருமலையையும், திருக்கோட்டியூரையும், திருவுள்ளம் மகிழ்ந்து
எழுந்தருளியிருக்கும் உன்னை அடியேன் விரும்பி அனுபவித்து மகிழ்ச்சிக் கொள்கிறேன்
என்று ஆழ்வார் மனமுருகிப் பாடுகிறார்.
அடியேனுடைய பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து இத்தகைய அருளை என்மேல்
பிரயோகித்துள்ளாய். இத்தகைய அருளை மற்றவர் எவரேனும் பெற்றதுண்டா? இவ்வருளை பெற்றவன் நானேயாவேன். நீ என்னுள்ளத்தில் குடிகொண்டுள்ளதால்
மற்றவர்களுக்கு அதில் இடம் துளிகூட இல்லை. உன்னுடைய அருளை நான் முழுவதும்
பெறும்படியான பாக்கியத்தை நீ எனக்கு அருள வேண்டும். என்னுள்ளில் நீ தங்கியதால்
மாயைகள் அனைத்தும் அகன்றுவிட்டது. எனவே மென்மேலும் என்மேல் கருணையை பொழிவாயாக
என்று ஆழ்வார் கூறுகிறார். தனக்கு வேண்டுவது போன்று நம் அனைவருக்கும் அவர்
வேண்டுகிறார் என்பது இதன் பொருளாகும்.
கொக்கின் வடிவமாக
வந்து தன்னைக் கொல்ல வந்த பகாசுரனின் வாயை இரண்டாகப் பிளந்த புனிதமானவனே! என்று
நான் அழைத்த அளவில் என்னுள்ளே பொருந்தி, என் நெஞ்சத்தில் வந்து குடிகொண்டு, என்
தாபம் தணித்த ஒப்பற்ற கள்வனே! திருக்கடல்மல்லையில் சயனித்திருக்கும் இனிப்பான
கரும்பே! அடியார்களுக்கு நிறைந்த அருளை வாரி வழங்கும் வள்ளலே! இவ்விதமான உன்னை
நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன் என்று கனிந்து பாடுகிறார் ஆழ்வார்.
விரோதிகளை அழிக்க வேறொருவரை நியமிக்காமல் அதற்குத் தானே அவதாரமெடுத்து
அழித்தார். பிறர் அறியாவண்ணம் செய்பவனை கள்வனென்பர். பெருமானும் நம்முள்ளிலிருந்து
நாமறியாவண்ணம் நம்மை இயக்குகின்றதால் அவனைக் கள்வனென்பர். திருக்கள்வனூர்
திவ்யதேசத்து பெருமானின் திருநாமம் ‘கள்வன்’ என்பதாகும். ‘உலகமேத்தும்
காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!’ என்று திருநெடுந்தாண்டகத்தில் ஆழ்வார்
பாடியுள்ளார். அநாதியான உனக்கே உரித்தான உயிரை நான் என்னுடையது என்று கொள்வதால்
நானும் கள்வனானேன் என்று பிள்ளை பெருமாள் ஐயங்கார் கூறுகிறார். நீ அளித்த இவ்வுலகப்
பொருட்களை நான் பயன்படுத்தி உன்னைக் கள்வன் என்று கூறுகிறேனேயென வருந்திக்
கூறுகிறார்.
வில் போன்ற அழகிய
நெற்றியும், கூரிய வேல்
போன்ற நீண்ட விழிகளையுடைய சீதையும் நீயுமாகக் கற்கள் நிறைந்த கொடிய கானகத்திலே
அலைந்த வலிமை மிக்க யானை போன்றவனே! அடியார்களுக்கு உடன் வந்து நன்மை செய்பவனே!
நரநாராயணனாய் அவதரித்தவனே! எங்கள் நம்பியே! உன்னை அடியேன் வணங்கித் தொழும்
முறைமையை எங்களுக்குச் சொல்லி அருள வேண்டும் என்று ஆழ்வார் கேட்கிறார்.
கொடிய விலங்குகள் காட்டில் சுற்றித்திரிந்த நிலையில் ஒரு மதம் கொண்ட யானை
போன்ற கம்பீரத்துடன் நடமாடினார் ஸ்ரீராமன். பதரிகாசிரமத்தில் நரன் என்ற சீடனாகவும்,
நாராயணன் என்ற ஆச்சார்யனாகவும் அவதரித்துத் திருமந்திரத்தை
அனைவருக்கும் போதித்தார். சம்சாரிகள் தங்களையும், பகவானுக்கு
செய்ய வேண்டிய கைங்கர்யத்தை மறந்தும், சம்சாரமென்னும் கடலில்
மூழ்கியுள்ளார்கள். அந்நிலையில் அவர்களுக்குத் திருமந்திரத்தினை எடுத்துச் சொல்லி
முக்தி அளிப்பதற்கான செயல்களைச் செய்தார் பகவான் என்பது இப்பாசுரத்தின்
பொருளாகும்.
பனி நிறைந்த
இமயத்தில் உள்ள திருப்பிரிதியில் எழுந்தருளியிருக்கும் பவழங்கள் திரண்டாற் போன்ற
அழகியவனே! தொண்டர்களுடைய நன்மையை என்றும் நினைப்பவனே! திருமூழிக்களம் என்னும்
திவ்ய தேசத்தில் சேவை சாதிக்கும் தீபமே! இனிமையானவனே! தொண்டர்களாகிய நாங்கள்
அனுபவிக்கும்படி இனிய அமுதமானவனே! கனி போன்றவனே! உன்னை வணங்கியதால் பிறவிப்
பேற்றினை அடைந்தேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.
இமயத்தின் உள்ள திருப்பிரிதியில் எல்லோரும் விரும்பும் வகையில் சேவை
சாதிப்பவன், திருமூழிக்களத்தில் ஸ்வரூபரூப குணங்களைக்
கொண்டவனே! என்று போற்றிப் பாடுகிறார். நமது சரீரம் அழியக்கூடியது. அழியும் இந்தச்
சரீரத்தில் அழியாத தீபம் நம்முள்ளில் இருக்கிறது. அந்தத் தீப தரிசனத்தைக் கண்டு
விட்டால் பிணிகள் இல்லை, பிறவிகள் இல்லை, துன்பங்கள் இல்லை. ஆத்ம தீபமாக இருப்பவர் நம் பெருமான். எனவே அத்தகைய
பெருமானை தரிசிக்கும் உபாயத்தை நாம் நாட வேண்டும். அதுவே நாம் பிறவி பெற்றதற்கான
பயன் என்பதை நாம் அறிய வேண்டும்.
அடியேனுக்கு
பாதுகாப்பு தந்த எனது ஐஸ்வர்யமே! திருநீர்மலை என்னும் திவ்ய தேசத்தில் பள்ளி கொண்ட
முத்து மாலை போன்றவனே! என்னைப் பாதுகாத்து என்றும் என்னைக் காத்தருளியவனே!
அடியேனுக்கு உனது அருளின்றி வேறு புகலிடம் இல்லை. திவ்ய தேசங்களில் சென்று
வணங்கும் அடியார்களுக்குக் கதியாக இருப்பவனே! உன்னைத் தரிசனம் செய்து உள்ளத்தில்
பதிக்கும் பேற்றினைப் பெற்றேன் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
வைத்தமாநிதிப் பெருமானே! திருநீர்மலை, விண்ணகரம்,
திருவெஃகா விரிதிரை நீர்வேங்கடம் மாமாடவேளுகை, மண்ணகத்த தென்குடந்தை, தேனார் திருவரங்கம், தென்கோட்டி கண்டியூரரங்கம், மெய்யம் கச்சிபேர்மல்லை,
சீரார் திருவேங்கடம், திருக்கோவலூர், மதிட்கச்சியூரகம், பேரகம் போன்ற திவ்ய தேசங்களில்
அருள்பாலிக்கும் பெருமானே! உன்னைக் கண்டு நான் முக்தியடைந்தேன். மனதில் ஞானம்
வந்துவிட்டால் நம்மில் கொண்டுள்ள தீய குணங்கள் நம்மை விட்டு அகன்றுவிடும். நம்
உடலே திருக்கோயில் அதில் பகவான் எழுந்தருள்வார் என்று ஆழ்வார் கூறி அத்தகைய நிலையினை
நாம் அடைய வேண்டும் என்று கூறுகிறார்.
என் அப்பா!
விரோதிகளை அழிக்கும் நாராயணா! என்று அடியேன் உனது திருநாமங்களைச் சொல்லி
அழைக்கும்போது மற்றவர்கள் என்னைப் பித்தனே என்று பரிகாசம் செய்கின்றனர். நல்முத்து
போன்றவனே! இரத்தினத்தைப் போன்று பிரகாசிப்பவனே! என் மாணிக்கமே! முளைக்கின்ற
விதைபோல் பயனளிப்பவனே! உன் இயல்பை அறிந்த நான் உன்னை விட்டுவிட்டு நான் எவ்விதம்
அகல்வேன் என்று வருந்தி ஆழ்வார் பாடுகிறார்.
எம்பெருமானே! மற்ற மக்களைப் போலே பிடித்த உணவே! பிடித்த உடையே என்று
உன்னைக் கூற இயலவில்லை. அத்தா, அரியே என்று பகவந் நாமங்களைக்
கூறிக்கொண்டிருப்பதே எனது வேலையாகும். இம்மண்டலத்தில் உள்ளவர்க்கு நான்
பைத்தியக்காரனாகத் தோன்றுகிறேன். உன்னை அத்தா! என்று அழைத்தால் அவர்கள் என்னைப்
பித்தா! என்று அழைக்கிறார்கள். இவர்களைக் கண்டு அஞ்சி உன்னை விட்டு விடலாமென்றால் என்னால்
அது முடியாது. மனிதர்களுக்கு இருக்கும் பலவிதமான பித்துக்களுக்கு இறைவனிடம்
பித்தாக இருப்பது சாலச் சிறந்ததாகும். இதனையே ஆழ்வார் வலியுறுத்துகிறார்.
தூய்மை மிக்கவனே!
ஒளிமிக்க பூரண சந்திரன் போல் பிரகாசிப்பவனே! எல்லா உயிர்களுக்கும் தாய் போல் அருள்
செய்யும் குளிர்ந்த செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய நாராயணா! கண்ணா!
அலைகடல் சூழ்ந்துள்ள எழு உலகங்களையும் முன்னொரு காலத்தில் பிரளயத்தின்போது உண்டு உமிழ்ந்தவனே! உன்னை அடியேன் எந்நாளும்
மறக்கமாட்டேன் என்று ஆழ்வார் மனமுருகிப் பாடுகிறார்.
ஆழ்வார் எம்பெருமானை என்றும் தூய்மையான மனத்தைக் கொண்டவனே என்று
போற்றுகிறார். அநுகூலர், பிரதிகூலர் என்ற பாகுபாடு இல்லாமல்
எல்லா நேரத்திலும் நமக்கு வழங்கும் நன்மைகளையே சிந்தித்துக் கொண்டிருக்கும்
தூய்மையானத் திருவுள்ளத்தைக் கொண்டவன் எம்பெருமான். அரக்கர்கள் திருந்தி வாழப் பல
சந்தர்ப்பங்கள் அளித்தும் அவர்கள் விட்டில் பூச்சிகள் போன்று இறந்து போனார்கள்.
இடைக்குலத்தில் பிறந்த நீ அனைவருக்கும் பிள்ளையாகக் காட்சி அளித்தாய். அனைவரையும்
காக்கும் ஆபத்பாந்தவனான உன்னை நான்
எவ்விதம் மறப்பேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பகவானின்
தொண்டர்களே! வண்டுகள் நிறைந்துள்ள அழகிய மலர்வனங்கள் சூழ்ந்துள்ள திருநறையூரில்
அருள் பாலிக்கும் நம்பிக்கு, எக்காலத்திலும் அடியவனான கலியன் என்கின்ற திருமங்கையாழ்வார் இயற்றிய
இந்தத் தமிழ்ப் பாமாலையினைப் பாடி ஆடினால் உங்கள் சம்சாரத் துன்பம் விலகி
வைகுந்தத்தை அடையலாம் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
இந்தப் பத்துப் பாசுரங்களில்
ஆழ்வாரால் பாடப்பெற்ற அனைத்தும் பகவானை உள்ளத்தில் எழுந்தருளச் செய்வதுதான் நமது
பிறவிப் பயன் என்பதை விளக்குகின்றன. பிறப்பு, இறப்பு என்ற சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாம் இந்த உலகில்
சுழன்று கொண்டே இருக்கின்றோம். இந்த இடத்தைக் காட்டிலும் மிகவும் மேன்மையான இடம்
உண்டு. அதுதான் நம்முடைய உண்மையான இருப்பிடம். அதற்கான பயிற்சிக்களம் தான் இந்தப்
பூமி. இந்த பயிற்சிகளைக் கற்பதை விடுத்து அற்ப பொருட்களைத் தேடி அலைந்து நம்
காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். பகவானை நெஞ்சில் நிறுத்தி நாம் அவனை
அடைவதுதான் நமது ஒரே குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அதற்காகத் தான் நாம்
வந்துள்ளோம். இதனை நாம் நன்கு மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது
ஆழ்வாரின் விருப்பமாகும்.
ஓ! திருநறையூரில்
நின்ற நம்பியே! அன்னமாகவும், வராகமாகவும் என் மனதில் புகுந்து கவர்ந்த கள்வனே! என்று சொன்னதும் என்
கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிகிறது. உள்ளத்தில் உன்னைப் பற்றி நினைத்தவுடனே
மனம் நீராகக் கரைந்து உருகிப் போவதால் உன்னையல்லாமல் மற்றொருவரை மனத்தினால்
வேண்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
முன்வினைப் பயன் காரணமாக நாம் இவ்வுலகில் பல்வேறு பிறவிகள் எடுத்துப்
பிறக்கிறோம். புண்ணியவானான பகவான் இத்தகைய இழிவான மனிதப்பிறவியில் பிறந்து, எம்மைக் காப்பதற்காக இத்தகைய பிறவிகளை எடுத்தத் தங்களது குணத்தை எண்ணிக்
கசிந்துருகினேன் என்று ஆழ்வார் கண்கள் பணிக்கப் பாடுகிறார். மேலும் இத்தகைய தயாள
குணம் கொண்ட பகவானைத் தவிர்த்து வேறு யாரை நான் சரணம் செய்வேன் என்று கூறுகிறார்.
வராக அவதாரமெடுத்து வேதங்களை மீட்டு ஹம்சரூபியாய் பிரம்மனிடம் உபதேசித்து வேதங்களை
அளித்த வள்ளலே! என்னையறியாமல் என் நெஞ்சில் புகுந்து என்னை அபகரித்தவனே என்று
வாயாரப் பாடுகிறார் ஆழ்வார்.
நாட்டில் எங்கும்
நடமாடாத நரசிம்ம வடிவாகி என் பக்கம் வந்து நெஞ்சத்தில் பதிந்து கவர்ந்து
கொள்ளக்கூடிய மிகுந்த மிடுக்கான வடிவம் கொண்ட தேவகி மைந்தனே! நறையூரில் நின்ற
நம்பியே! இலக்கணம் வழுவாத கவிதைகள் இயற்றி நீசர்களைப் பாடுவதைத் தவிர்த்தேன். உன்னைத் தவிர வேறு ஒருவரையும் கவிபாட மாட்டேன்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
நரசிம்ம அவதாரம் என்பது உலகில் எங்கும் கண்டறியாத பிறவியாகும்.
பிரகலாதனைக் காப்பதற்காக மிருகமும் இல்லாமல், மனிதனும்
இல்லாமல் ஒரு பிறவி எடுத்துத் தன்னைக் கீழ்மையாக்கிக் கொண்டவனை இவ்விதம் தாழ்ந்த
ஜென்மத்தில் பிறக்கின்றீரே! என்று வருந்திப் பாடுகிறார் ஆழ்வார். அடியேன்
மனங்கொள்ளவில்லை. பிரகலாதனின் மனதில் புகுந்தது பெரிய விஷயமன்று, கல்நெஞ்சனான என் நெஞ்சில் குடிபுகுந்தீரே! இதன் காரணம்தான் என்ன? என்று வினவுகிறார் ஆழ்வார். இத்தகைய சக்தி வாய்ந்த உன்னை வாயாரப்
புகழ்ந்து பாடுவதை விடுத்து மற்றவரை என் நாவினால் பாட முயலமாட்டேன் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
என் தந்தையும்
தாயாரும் என்னைப் பெற்றெடுத்துவிட்டு தனது கடமையை முடித்துக் கொண்ட பிறகு
அடியேனுக்கு தந்தையாகவும், அன்னையாகவும் எல்லாம் தானேயாகி நின்ற பெருமை நிறைந்த அழகிய ஒளியே! திருநறையூர் நின்ற நம்பி!
உனது மைப் போன்ற திருமேனி நிறத்தை அல்லாது விரும்பி வேறு
ஒருவரையும் மறந்தும் துதிக்க மாட்டேன் என்ற கூறுகிறார் ஆழ்வார்.
மாதா பிதாவைக் காட்டிலும் பரம உபகாரனான உன்னை எவ்வகையிலும் மறவேன். எனது
பெற்றோர்கள் பிரஜைகளை உற்பத்தி செய்து வளர்த்துத் தம் கடமையை முடித்துக்
கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைக் கைவிட்ட காலத்திலும் என்னைக் கைவிடாது
உடனிருந்து காத்தருள்கிறாய். ‘சேலேய் கண்னியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,
மேலாத் தாய்தந்தையும் அவரேயினி ஆவாரே’ என்று சகலவித பந்துவுமாகப்
பெருமான் உள்ளார் என்று ஆழ்வார் உறுதியாகக் கூறுகிறார். நமக்குத் தாயாக, தந்தையாக, குருவாக இருந்து அனுதினமும் நம்மைக்
காத்து வருகிறார். எனவே அவரைத் துதிப்பதே நமது முழுமுதற் கடமையெனக் கொள்ள
வேண்டும்.
அழகிய கரிய
வண்டுகள் சுற்றித் திரியும் தேன் பெருகப் பெற்றதுமான மலர்வனங்கள் சூழ்ந்த
திருநறையூரில் நின்ற நம்பியே! சிறு குழந்தையாய் உலகங்களை உண்டு ஓர் ஆலந்தளிரின்
மேல் பள்ளி கொண்டவனே! என் நெஞ்சில் உறைபவனே! இப்படி நீ என் உள்ளத்தில்
குடியிருப்பதை அடியேன் முதலில் அறிந்திராமல் இருந்து இப்போது அறிந்து கொண்டேன்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஆலிலையின் மேல் பள்ளி கொண்ட உன்னை என் நெஞ்சினில் உறைகின்றபடி நன்கு
அறிந்து கொண்டேன். மற்றவர்போல் நான் நன்றியற்றவனல்ல. இப்பெருநன்றியை சிந்தியாமல்
ஒரு பொழுதும் இருக்க மாட்டேன். அது போன்று மூங்கில்களைக் குடைந்து வரும் அணிவண்டுகள்
நிறைந்த நறையூரில் நீ வாசம் செய்வதை விட்டு என் நெஞ்சில் வந்து அமர்ந்த உன்னை
என்றும் நினைந்து கொள்வேன் என்று கூறுகிறார். ஒழுக்கம், நேர்மை இவைகளைக் கொண்டு மனதைத்
தூய்மையாக்கினால் பெருமான் நம் நெஞ்சிலும் வாசம் செய்வார் என்ற பொருளில்
இப்பாசுரத்தை அருளியுள்ளார்.
ஓ! திருநறையூர்
நம்பியே! திருவிக்ரமனாகிய உன்னைத் தேவர்கள் தியானித்து ஸ்தோத்திரம் செய்து
தரிசிப்பதென்பது இயலாத காரியம். ஆண்டவனே! என்று வானவர்களால் ஆதரித்துத்
துதிக்கப்படுகிற உனக்கு நான் அடிமையானேன். என் மனதுக்குள் புகுந்த உன்னை இனி நான்
வெளியேற விடமாட்டேன். உன் விஷயத்தில் நான் வெட்கத்தை அறவே விட்டொழித்தேன் என்று
ஆழ்வார் கூறுகிறார்.
ஸ்வரூபம், ரூபம், குணம்,
விபூதி போன்றவற்றில் எல்லை இல்லாமல் இருப்பவன் பெருமான். பிரமன்
முதலிய தேவர்கள் இத்தகைய குணங்களைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். ஆனால் உன்னை
நித்ய கைங்கர்யம் செய்கிறேன் என்ற காரணத்தினாலேயே என்னுள்ளிள் புகுந்து கொண்டாய்.
இனி எக்காலத்திலும் உன்னை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்கிறார். அற்பமான
பொருட்களுக்கெல்லாம் ஆசைப்பட்டு பகவானிடம் எல்லாம் வேண்டும் என்று கேட்பதே
இழுக்காகும். அவன் அனைத்தையும் நமக்கு அளித்து விட்டான். நாம் அதனை நன்முறையில்
பயன்படுத்தாமல் மேற்கொண்டு ஆசை என்னும் தீயில் விழுந்து, அதனால்
துன்பம் கொண்டு, கால
விரயம் செய்து வருகிறோம். இதனை விடுத்து பகவான் பெயரில் அன்பைப் பொழிந்து அவனை
உள்ளத்தில் கொள்ள வேண்டும்.
ஓ! நறையூர் நின்ற
நம்பியே! எனது அரிதான உயிர் போன்றவனே! என்னை முழுவதும் ஆள்பவனே! என்னிடத்தில்
கருணையைக் குறைவின்றி அருளிய எம்பெருமானே! நானும் என் தந்தையும், பாட்டனும் அவருக்கு முன்னால் ஏழு
தலைமுறைகளும் தொன்று தொட்டு உனக்குப் பணிவிடை செய்து வருகிறோம். அதற்கு வெகுமதி
போல் என் மனதில் வந்து புகுந்து கொண்டாயே. உன்னைப் போகவிடுவேனா என்று ஆழ்வார்
பாடுகிறார்.
நாங்கள் ஏழு தலைமுறைகளாக அநந்யார்ஹ சேஷத்துவத்தில் ஊன்றிப் போய்
இருப்போம். இப்படி அடிமைச் சுவடு நன்கறிந்துள்ள என் நெஞ்சில் வந்து சேர்கின்ற
தேவரீரை இனி வேறிடம் போக விடுவேனா.
பகவானுக்கு நாம் செய்யும் இத்தகைய பணிவிடைகளுக்குக் காரணம் முற்பிறவியில்
நம் முன்னோர்கள் பகவானுக்கு செய்த கைங்கர்யங்களாகும். எனவே அதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நம்
சந்ததியினரும் அத்தகைய தொண்டுகள் செய்து வருவார்கள். அதற்கு, மற்ற ஆசைகளுக்கு நாம் இடமளிக்காமல் பகவானை உள்ளத்தில் கொண்டு வந்து
சேர்ப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும். மேலும் வந்து தங்கிய பெருமானை
எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் விட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்
என்பது இதன் பொருளாகும்.
கருணைமிக்க
மனமும், அன்னம் போன்ற
மெல்லிய நடையுடைய தேவி மகாலட்சுமி குடியிருக்கும் திருநறையூர் நின்ற நம்பியே!
பெரிய அரசர்களெல்லாம் அஞ்சும்படி கர்த்த வீரியார்ஜூனனுடைய ஆயிரம் தோள்களையும்
கோடரியால் வெட்டி வீழ்த்திய ஜமதக்னி மைந்தனே! என் நெஞ்சத்திலிருந்து உன்னை இனி
வேறு ஒருவரின் கடினமான உள்ளத்தில் சென்று குடியிருக்க விடமாட்டேன். உன்னை என்
நெஞ்சிலிருந்து நகர விடாமல் செய்கிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஆழ்வார் வேண்டுதலையும் மீறிப் பகவான் அவர் உள்ளத்திலிருந்து மீண்டு
வெளியேற முயற்சித்து மிடுக்குடன் நின்றார். அந்த மிடுக்கில் ஒரு குறையுமில்லை
என்கிறார் ஆழ்வார். இறைவா! நீ செய்யும்
காரியத்திற்கு ஒரு இடைஞ்சலும் வரக்கூடாதென்று நினைப்பவன் நான். அத்தகைய மிடுக்கினை
அடியேனிடத்தில் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். மற்றவர் நெஞ்சம்
வலிமையானதென்றும் தம்முடைய நெஞ்சம் மென்மையானது என்று உரைக்கிறார். எனவே அன்பினைக்
கொண்டு ஆண்டவனை நம் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது இப்பாசுரப்
பொருளாகும்.
நல்ல அழகுள்ள
மலர்களிலே வண்டுகள் குடையப் பெற்ற
திருநறையூரில் நின்ற நம்பியே! வானத்து தேவர்கள் எப்போதும் பொன் மலரிட்டு
வணங்கித் தங்கள் கைகூப்பி உனது திருவடிகளில் வீழ்ந்து வேண்டிக் கொள்ளும் பகவானே!
இப்போது என் மனத்துள் வந்து புகுந்த உன்னை மற்றொருவரிடம் செல்லவிட மாட்டேன் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
நான் முன்பாக
வந்திருக்க, பின்பு நீ புகுந்துண்டாயோ
நீ போக நினைக்க? உனக்கொரு
குறையுண்டாய் என்னால் தீரப்பெற்றானாய்த்தான் போக நினைக்கிறாயோ? இரண்டுமில்லை, நீயே நான் நினையாதிருக்க வந்து புகுந்த, உன் போக்யதையையும் அறிவிப்பித்தாய்;
நீயோ பரிபூர்ணன்; என்னாலொன்றும் வேண்டுவதில்லை, நான் போக்யதையாலே போகவொட்டாமை, பிராட்டியை ௮ண்டைகொண்டு வளைத்தேனத்தனை என்று
கருதப்படுகிறது.
தேவர்கள் அனைவரும் தங்களை வணங்கி வரும் நிலையில் அவர்களை விட்டு விட்டு என்
மனதில் புகுந்து கொண்ட பெருமானே! இனி நான் தங்களை போகவிட மாட்டேன் என்று
கூறுகிறார். இறைவன் நம் மனதில் புகுவது என்பது மிகப் பெரிய பாக்கியமாகும்.
முற்பிறவிப் நற்பயன்களால் மட்டுமே அது சாத்தியமாகும். உலகத் துன்பங்களைப் போக்கும்
பகவானை யார் தான் வெளியே அனுப்புவார்கள். நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து அன்பை
மழையாகப் பொழிந்து இறைவன நம் உள்ளத்தில் எழுந்தருளச் செய்தல் வேண்டும் என்கிறார்.
ஆழ்வார் பெற்ற இத்தகைய அரிய வாய்ப்பினை நமக்கும் தெரிவித்து இப்பாசுரவழி இதனை
அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
ஓ! நறையூர் நின்ற
நம்பியே! எனக்கு அந்தராத்மாவாக இருந்த பகவானே! மாமிசங்களாலான இந்தச் சரீரத்தைப் பல
வகையாலும் பேணிக் காத்து மிகவும் துன்பப்பட்டு வளர்த்து வைத்ததால் என்னைப் பற்றி
எனக்கு உணர்த்த அடியேன் மனத்தில் புகுந்த தேன் போன்றவனே! இனிய கரும்பின் சாறு போன்றவனே!
என் சிந்தையால் இப்போது நானே உன்னை அடையப் பெற்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதற்காகவே இந்த உடல்
சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பகவத் காரியத்திற்கு பயன்படும் இந்த உடலை
அதற்குப் பயன்படுத்தாமல் எந்தவித பயனும் பெறாமல் ஒழிந்தேன். உடலைத் தக்கவாறு
பேணிப் பாதுகாத்ததற்கு அதற்கானத் தக்க பயனைப் பெற்றேன். சரீரத்தைப் போற்றிப் பாதுகாப்பது நலமே, ஆனால் அது எம்பெருமானின் பயன்பாட்டிற்கு மட்டுமே இருத்தல் வேண்டும். அவன்
அளித்த இத்தகைய சரீரத்தை அவனுக்கே ஆட்கொள்ளப்பட வேண்டும். இதுவரை போஷித்து வந்தது
எவ்வித பயனும் இல்லாமல் போனது. ஆனால் எம்பெருமான் என்னுள் புகுந்தபோது அது
பயனுள்ளதாகி விட்டது என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
நல்ல நீரையுடைய
கழனிகளால் நாற்புறமும் சூழப்பெற்ற திருநறையூரில் நித்யவாசம் செய்தருள்கின்ற
நம்பியைக் குறித்து, ஆர்பரிக்கும்
அருவி நீரையுடைய பெரிய மலை போன்ற திடந்தோள்களையுடைய கவிஞரான திருமங்கையின் தலைவன்
பாடிய உருக்கமான சொற்களால் பாடப்பட்ட இப்பாமாலையினை ஓதுபவர்கள் திருநாடான
பரமபதத்தில் இயல்பாக நெடுங்காலம் ஆனந்தமாக வாழ்வார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இப்பத்து பாசுரங்கள் அனைத்தும் பகவானை நம் நெஞ்சத்தில் கொண்டு வர வேண்டும்
என்ற நோக்கத்தினை வலியுறுத்தின. நம் மனமானது மின்னும் இரத்தினம் போன்று ஆத்ம
ஜோதியைக் கொண்டுள்ளது. அதில் தேவையற்ற குப்பைகளைச் சேர்த்து வைத்தால் ஆத்ம
ஜோதியின் வெளிச்சம் தெரியாமலேயே போகும். அதனால் நமக்கு அறியாமைதான் மிஞ்சும்.
இறைவனை மறவாமல் நாள்தோறும் வழிபடும் நிலையில் இத்தகைய குப்பைகள் அகன்று விடுவது
மட்டுமல்லாமல், இறைவன்
நிறைவுடன் நம் மனத்தில் குடியேறுவார். அதைத் தொடர்ந்து நமக்கு ஆத்மஜோதி தரிசனம்
கிட்டும். பிறவாமை பேறும் வாய்க்கும் என்பது இப்பாசுரத்தின் ஆழமான பொருளாகும்.
சினத்தினால்
சிவந்த விழிகளையுடைய அரக்கர்கள் மடியுமாறு சீறும் கோதண்டத்தையுடைய ஸ்ரீராமா என்று
வேதம் அறிந்தவர் தம் மனத்தில் தியானித்து, எப்போதும் தலைவணங்கித் துதிக்கும் முனிவரைப் போல, நீண்ட முடியினைத் தரித்த தாசரதியை, ஏழு மரா
மரங்களையும் ஓரே அம்பால் துளைத்து வெற்றியடைந்த கோசலை மகனை, சிறந்த
ஞானியரும் அடைய முடியாத நறையூர் நம்பியை அடியேன் கனவில் தரிசித்தேன். அதனால் என்
இரு விழிகளும் ஆனந்தக் களிப்படைந்தன என்று கூறுகிறார் ஆழ்வார்.
பகைவர்களை அழித்துப் பக்தர்களைக் காத்த எம்பெருமான் என்று கற்றவர்களால்
கொண்டாடப்படுகிறார். அரக்கர்களை ஒழித்த வில்லாளன் என்ற நினைவில் பக்தர்கள் தங்கள்
நெஞ்சங்களில் வைத்துத் துதிப்பார்கள். அடியவர்களுக்குப் பல நன்மைகள் புரிந்த
போதிலும் அடுத்து அவர்களுக்கு என்ன நன்மை செய்யலாமெனச் சதா சிந்தித்துக்
கொண்டிருக்கும் பெருமானை எண்ணி மனமுருகும் பக்தர்கள், தன்
மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் நன்மை செய்து அவர்களும் நம்புமாறு செய்வதனால் ‘மரமேழெய்த
மைந்தனை’ என்று போற்றப்படுகிறார். தெளிந்தவர்களும் காண முடியாத பெருமானை தெளியாத
நான் கண்டு கொண்டேன் என்கிறார். முன்பு மனம் கண்டதை பின்பு கண்கள் கண்டது என்று
ஆனந்தித்துக் கூறுகிறார் ஆழ்வார்.
தாய்ப் பசுவை
நினைக்கும் கன்றுபோல் என்னையும் தன்னையும் நினைக்கச் செய்து, எனக்குத் தேவையான நன்மைகளையெல்லாம்
தானே சிந்தித்துச் செய்யும் என் தந்தையை, ஊழிக்காலத்தில்
உலகங்களை உண்டு, பின் உமிழ்ந்த பவள வாயனை, மகர குண்டலங்களைத் திருச்செவிகளில் அணிந்த தேவகியின் மைந்தனை, மதில் நிறைந்த திருக்கோவலூரில் கிருஷ்ணனாய் வீற்றிருப்பவனை, தேவர்களுக்கு நடுவில் சிங்கமாகவும், மிடுக்கான
காளையாகவும் காட்சி தருபவனை என் அன்பான நறையூர் நின்ற நம்பியைத் தவிர வேறு
யாரையும் ஆதரியேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
உலகுக்கெல்லாம் தாயின் நிலையிலிருந்து காத்துவரும் பெருமானை நினைக்கிறார்
ஆழ்வார். நாம் அவனை மறந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்வில் அனைவரும் தன்னை நினைக்குமாறு
செய்தருள்கிறார் பகவான். நம்மை நினைத்திருந்து அவன் நமக்கு அருள் செய்பவன் என்ற
கருத்து புலப்படுகிறது. எனது அறியாமையை நீக்கி நல்வழி காட்டியவன் பகவான். அவனையே
கடைசிவரை ஆதரிப்பேன் என்று ஒருமுகப்பட்ட மனத்துடன் கூறுகிறார். அத்தகைய மனத்தால்
தான் வெற்றி கொள்ள முடியும் சிதறிய மனம் பலவீனமாகிவிடும். இத்தகைய பலவீனத்தை ஒழித்து நாம் பலவானாகத்
திகழ வேண்டும் என்பதே ஆழ்வாரின்
விருப்பமாகும்.
தான் பிறந்தவுடன்
வந்து என் நெஞ்சில் குடி கொண்டவன், மற்றொருவர் மனத்தினை இருப்பிடமாகக் கொள்ள மாட்டான். அடியேனுடைய
சிந்தனையால் வந்து அவன் என்னை எமதூதர்களிடம் காட்டிக் கொடுக்கமாட்டான். இத்தகையப் பேற்றினை உறுதியாகப் பெற்றுள்ளேன்.
இவ்விதமிருக்க மலர்வனங்கள் சூழ்ந்துள்ள திருக்குடந்தையில் அருள் புரிபவனை, குடக்கூத்தாடிய என் அப்பனை, என் முன்னோர்களுக்குத்
தந்தையான திருநறையூர் நம்பியை என்னால் எவ்விதம் மறக்க இயலும் என்கிறார் ஆழ்வார்.
எம்பெருமான் என் நெஞ்சில் வந்து தங்குவதற்கு நான் எவ்வித முயற்சியும்
எடுக்கவில்லை. அதனால் எந்நாள் வந்து தங்குவான் என்று நான் அறியேன். அவன் வந்து
தங்கியவுடன் திருவனந்தாழ்வானுடனும் செல்லவில்லை. நிரந்தரமாய் என் நெஞ்சில்
தங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். நான் பல பாவங்கள் செய்து எமதூதர்களிடம்
தண்டனை பெறும் நிலையில் அவர்களிடமிருந்து என்னைக் காத்து என்னை நித்ய கைங்கர்யம்
செய்ய வைத்தான். இத்தகையதானப் பேற்றினைப் நான் பெற்றேன். இதை உபகாரமாகச் செய்தால்
பிரதி உபகாரம் செய்யலாம். எதுவுமில்லா நிலையில் நான் அவனை எவ்விதம் மறப்பேன்
என்பது இதன் பொருளாகும்.
அதிக பலசாலியான
துரியோதனன் முதலான கௌரவ அரசர்கள் இறக்குமாறு பாரத யுத்தத்தில் பார்த்தனின் தேரை
நடத்தி பாண்டவர்களுக்கு வெற்றியினைத் தேடித்தந்த கிருஷ்ணன், சீறிப்பாயும் புது வெள்ளத்து காவிரியால் சூழப்பட்ட
திருவரங்கத்தை ஆள்பவன். வைகுண்டத்துத் தலைவனை, என்னை தாசனாகக் கொண்டவனை, கடல்சூழ்ந்த இலங்கை கலங்குமாறு அம்புகள் எய்த
தாமரைக் கண்ணனை அன்றி வேறு ஒருவருக்கும் என் மனம் அடிபணியாது என்கிறார் ஆழ்வார்.
பலமுள்ள கௌரவ சேனைகளைத் தனது சாமர்த்தியத்தால் பல உபாயங்கள் கொண்டு கிருஷ்ணன்
வீழ்த்தினார். அதர்மம் எத்தகைய பலமாக இருந்த போதிலும் தெய்வ சக்தி அதினினும் சக்தி
வாய்ந்ததாகும். இதனை உணர்த்தவே பகவான்
பார்த்தனுக்கு சாரதியாக வந்து கீதையைப் போதித்தார். எனவே அவரைத் தவிர வேறு
ஒருவரையும் ஏற்க மாட்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார். இக்கருத்தினை நாமும் ஏற்று பகவானைப்
பணிவோம்.
எமலோகத்தில்
கொடிய நரகத்தில் வேதனையடையும்போது அங்கு வந்து அஞ்சாதே, என்று அடியேனைக் காத்தருளும்
தாமரைப் போன்ற திருவடிகளையுடைய பகவானை, வானவர்க்கு ஆபரணமாய்
இருப்பவனை, திருவேங்கட மலையில் அருள் புரியும் சிங்கம்
போன்றவனை, குதிரையாய் வந்த கேசிகாசுரனின் வாயைக் கிழித்தவனை, வெண்ணெய் திருடி உண்டு உரலில்
கட்டுப்பட்டவனை, இனிய கரும்புச்சாறு போன்றவனை, தேனும் பாலும் போன்ற திருநறையூர் நம்பியை அல்லாது என் மனம் வேறு
ஒருவரையும் நினையாது என்று கூறுகிறார்.
பல்வேறு பாவங்கள் புரிந்து அதனால் நரகம் சென்று கொடிய நோவு படுங்கால்,
செய்த பாவங்களுக்குப் பலனை அனுபவிக்கட்டுமென்று பாரா முகமாக இராமல்
என்னை நாடி வந்து அஞ்சாதே! நான் அபயம் அளிக்கிறேன் என்று கூறிய பகவானே! என்று
கூறுகிறார் ஆழ்வார். முற்பிறவியிலும், இப்பிறவியிலும் செய்த
பாவங்களைக் கண்டு அஞ்சாமல் அவனது பாதங்களைச் சரணடைந்தால் அவன் நம்மைக்
காத்தருள்வான். யசோதை மனம் நோகாமலிருக்க உரலில் கட்டுண்டபோது தன் மேனியை
சிறுத்துக் கொண்டு சௌசீல்ய, சௌலப்யாதி குணங்களைக் காட்டினான்
என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
எள்ளத்தனை நொடிப்
பொழுதிலும் என் மனத்தை விட்டு அகலாமல் இருக்கும் புகழ் உடையவனை, கோங்கு மரங்களில் மலர்கள் மலர்ந்து பொன்
தகட்டடைப் போல் காட்சி தரும் தழைத்த தோப்புகள் நிறைந்த திருமாலிருஞ்சோலையில்
வீற்றிருக்கும் கற்கண்டு போன்று இனிப்பானவனே! கருப்பஞ்சாறு போலிருப்பவனை, முன்னர் அன்புடன் நான்மறைகளையும் சாந்தீபினி
முனிவரிடம் கற்ற பாண்டித்தியத்தை, பாற்கடலில் துயில்பவனை நறையூர் நம்பியை அன்றி மற்றொருவரை நான் பாட மாட்டேன்.
எக்காலத்திலும்
என் மனதை விட்டு அகலாதவன், கற்கண்டு போன்று இனிப்பவன். நான் மறைகளை அறிந்தவன் என்றெல்லாம்
பகவானைப் போற்றும் ஆழ்வார் அவன் ஒருவனையன்றி வேறு ஒருவரையும் பாட மாட்டேன் என்று
கூறுகிறார். உள்ளத்தில் புகுந்துவிட்ட பகவானின் கருணையை வெளிப்படுத்தும் விதத்தில்
இப்பாசுரம் உள்ளது.
ஆழ்வாரது உள்ளத்தில் பகவான் புகுந்து நித்யவாசம் செய்த அவரது கருணையை
இப்பாசுரத்தில் பாடுகிறார். ‘கோங்கு நின்று பொன்னரி மாலைகள் சூழ்பொழில்
மாலிருஞ்சோலையதே’ என்று பெரியாழ்வார் பாடியுள்ளார். ‘கோங்கலரும் பொழில்
மாலிருஞ்சோலை’ என்றாள் ஆண்டாள் பிராட்டியார். பொன் போன்ற நிறத்தையொத்த கோங்கு
மலரானது பொன்தட்டு போல் காணப்பட்டதாக ஆழ்வார் தெரிவிக்கின்றார். எனவே அவரையல்லாது
வேறு ஒருவரை என் மனம் நினைக்காது என்று கூறுகிறார்.
இசைக்கு மொழியான
யாழின் தந்திகளில் உண்டான ‘பாலை’ என்னும் பண் போன்று இனிமையானவனை! என் உள்ளத்தில்
குடி கொண்டு என் விழிகள், மனம், வாய் ஆகிய எனது அவயங்களைத் தனக்கு
இருப்பிடமாகக் கொண்டவனை, வேதியர்கள் நெஞ்சத்துள் வாழும்,
மீன்கள் துள்ளி விளையாடும் கடல் நிறத்து வைகுந்த வாசனான கடல் வண்ணனை,
திருநறையூர் நம்பியை, அவன் பண்புகளை அல்லாமல்
என் வாய் மற்றொன்றை பேசாது என்று ஆழ்வார் கூறுகிறார்.
பண்வர்க்கத்திலே இனிய பேச்சையுடைய யாழ்
நரம்பிலே யாழிலே பிறக்கப்பட்ட, அப்பண்போலே போக்யனாய்க்கொண்டு
வந்து புகுந்து, என் கண்ணும் கெஞ்சும் வாயுமிடங் கொண்டான்
கண்ணுக்கு வேறொன்றைச் காணவொண்ணாதபடி, தானே விஷயமானான்;
வாக்குக்குவேறே சிலரைப் பேசுகைக்கு விஷயமல்லாதபடி தானே விஷயமானான்;
நெஞ்சுக்கு வேறே சிலரை நினைக்க அவகாசமில்லாதபடி தானே விஷயமானான்.
இனிமையான ‘பாலை’ என்னும் இராகத்தில் வெளிப்படும் இசையின் இனிமையாகப்
பகவான் உள்ளான். எனது அவயங்களை அவன் எடுத்து ஆட்கொண்டதால் என் வாய் அவன்
வண்ணமேயானது. மறையோர் மனத்தைத் தன் உள்ளமாகக் கொண்டவன். கடல்நீர் நிரம்பியுள்ளது
போல் அவனது லாவண்யமும் நிறைந்துள்ளது. கடலில் மீன்கள் உள்ளது போன்று அவனது
திருக்கண்களும் உள்ளன. பார்க்கத் தகாத காட்சிகள், கேட்கவல்லாத
வார்த்தைகள், நினைக்கத் தகாத நினைவுகளை, பேசக்கூடாத சொற்கள்
போன்றவற்றிகெல்லாம் நான் அதில் ஈடுபடாமல் தவிர்த்து என்னை உத்தமனாக்கியவனே
என்று கூறுகிறார் ஆழ்வார்.
இவ்வுலகிலேயே
பகவானின் திருவருளைப் பெற்றேன். எனவே இனிமேல் என்னை எவ்வித பாவமும் வந்து
அண்டாது. துன்பங்களை அகற்றி இன்பங்களைத்
தரும் ஒப்பற்ற, அழகிய,
காலம்தோறும் உபாயமாக இருப்பவனை, உலகத்தவரால்
வணங்கப்படும் யோகமானவனை, வானவர்களால் தொழப்படும் முத்தானவனை,
தொண்டர்களால் அனுபவிக்கப்படும் கனி போன்றவனை, விரும்பி
என் நெஞ்சைக் கொள்ளை கொண்ட கள்வனை இன்று நான் தரிசித்தேன் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
எல்லாவித பாவங்களும் தொலைந்து பெற வேண்டிய பேற்றினை இவ்வுலகத்திலேயே,
இப்பிறவியிலேயே பெறப்பட்டதால் இனி எந்தவித பாவங்களும் என்னை
நெருங்காது. சகல பாவங்களையும் தொலைத்தருளி நித்யமான ஆனந்தத்தினை தரக்கூடிய
எம்பெருமானை நான் கண்டு கொண்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார். நாம் உலகத்தவருக்கு
நல் வினைகள் செய்து, தீவினைகளை விலக்கிப் பகவானின்
திருவருளுக்குப் பாத்திரமாக வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
பெருமாள் செய்த
பெரிய உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். எப்போதும் என் மனத்தில் வாசம் செய்து
அதனால் ஏற்பட்ட புகழை உடையவன். தஞ்சை மாமணிக்கோயிலை ஆண்டு வருபவன். நரசிம்மராய்
அவதரித்து இரணியனின் நெஞ்சை பிளந்தவன். நெருப்பு போன்ற பிரகாசத்தை உடைய
சந்திரஹாசம் என்ற வாளை ஏந்திய கொடியவன் இராவணனுடைய நகரமான இலங்கையை அழித்தவன்.
தேவர்களால் வணங்கப்படுபவன். மேரு மலை போன்றவன். நீல மணிக்குன்றினைப் போன்ற நறையூர்
நம்பியைத் தவிர என் மனம் மற்றொரு தெய்வத்தைப் போற்றாது.
பகவான் நமக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு நாம் என்ன கைமாறு செய்தாலும்
தகாது. அரிதான மனிதப்பிறவியைப் பெற்றதால்தான் முன்வினைப்பயன் நீங்கி முக்தி பெறும்
பேற்றினை பெறும் வாய்ப்பு கிட்டியது.
இம்மனிதப் பிறவியை நமக்கு அளித்தது எத்தகைய பேறாகும். இதனை மறவாமல்
நன்றியுடன் அவனை என்றும் நினைக்க வேண்டும் என்று நமக்கு வலியுறுத்துகிறார்
ஆழ்வார்.
இதழ்களை அழகுற
விரித்து மலர்கள் மலரும் சோலைளைக் கொண்ட திருவாலி நாட்டரசர் திருமங்கை மன்னனும், வாளை உருவி வரும் கலியன், நன்மை தரும் நறையூர் நம்பியின் அழகிய சிறந்த திருவடித் தாமரைகளைத் தனது
தலைமேல் சூடியும், வணங்கியும், ஆடியும்,
பக்தர்கள் உய்வதற்காகப் பாடிய இப்பத்து பாமாலைகளை, அன்பர்களே! நீங்கள் பக்தியோடு
பாடினால் உங்களிடம் பாவங்கள் தங்காது என்று கூறுகிறார் ஆழ்வார்.
திருநறையூர் நம்பிக்கு அசாதாரணமான தன்மை ஒன்று இத்தலத்தில்
தென்படுகின்றது. திருவீதிப் புறப்பாட்டின்போது நாச்சியார் முன் செல்ல நம்பிபின்
செல்வது இவ்வூரில் பிரசித்தம். எம்பெருமான் தன் மேன்மையை அடக்கிக் கொண்டு தன்
அடியார்களுக்கு மேன்மையை பிரகாசமாகத் தெரிவிக்கும் திருப்பதியாகும். இத்தலத்தில்
பாடிய பாசுரங்களிலும் இத்தன்மை ஒளிர்விடுகின்றது. ஆழ்வாரும் ‘தொண்டர்க்கு அமுதுண்ண
இச்சொல் மாலைகள் சொன்னேன்’ என்கிறார். நிலையற்ற வாழ்வினை நம்பாமல் நிலையான
பரம்பொருளை மனதில் நிறுத்தி, உள்ளே இருக்கும் ஆத்ம ஜோதியைக்
காணுங்கள் என்று கூறுகிறார்.
‘பரமாத்மா!
இப்பூமியை ஆண்ட பஞ்ச பாண்டவர்களும், சேர, சோழ, பாண்டியர்களும், மன்னாதி மன்னர்களும் வணங்கிய பூமிதேவியின் கணவனே!
மாதவா! மதுசூதனா! நர நாராயணர்களாய் அவதரித்தவனே! திருநறையூர் நம்பியே! தேவ கணங்களை
ஆளும் சிவபெருமானின் அந்தராத்மாவாக விளங்குபவனே! முன்பு ஆதிவராக மூர்த்தியாய்
அவதரித்தவனே! திருவழுந்தூர் ஆமருவியப்பனே! உன்னைத் தவிர நான் யாரையும் தரிசனம்
கொள்வதில்லை’ என்கிறார் ஆழ்வார்.
பரமபுருஷனே! பஞ்சவன், பௌழியன் சோழன் ஆகிய
தங்கள் தங்கள் தேசங்களுக்கு ஸகல ஐஸ்வர்ய பூர்ண அரசர்கள் தங்களின் விருப்பம் பூர்த்தி அடைய பணிந்து துதிக்கும்படியான துதிக்கத் தக்கவனே!
மாதவனே! மதுசூதா! நரனே! நாரணனே! நறையூர் நம்பீயே! எம்பெருமானே! ருத்ரனுக்கும் அந்தர்யாமியானவனே!! தேவர்களுக்கும் முன்பு ஆதிகாரணமான வராகமாய்
அவதரித்தவனே! அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே! உன்னைத் தவிர வேறு நல்ல துணை நான் அறியேன்.
சிவபெருமானும் திருமாலும் ஒருவரே என்கிறார் ஆழ்வார். இவ்விருவரும் உடலும்
உயிருமாய் நம்மில் ஐக்கியமாகி உள்ளார்கள். எனவே வேறுபாடுகளை நீக்கி ஹரியும்
சிவனும் ஒன்று என்ற கொள்கையினைக் கொண்டு நமது இலட்சியமான பிறவிப் பெருங்கடலைக்
கடக்க வேண்டும். பகவானே நமக்கு உற்றத் துணை என்று எண்ணிஅவனைச் சரண்ண்புக
வேண்டும்ம் என்பது கருத்தாகும்.
நிலவொளி வீசும்
உயரமான நிலாமுற்றத்தில் நின்று கொண்டு,
வாரீர்! திருக்கண்ணபுரம் கோயிலைப் பாரீர் என்று கூறி மற்றவருக்கும்
அதைக் காட்டி விவரிக்கிறாள். இவளைத்
தலைவனுடன் இணைத்து வைக்கும் சக்தியுள்ள பாணரே இவளாக இருக்கும்போது இனி இவள்
வெட்கப்பட்டு மீளக் கூடுமோ? இவளை இப்படியாக்கிய திருநறையூர்
நம்பியின் செயல் நன்றாகத் தான் உள்ளதா? என்று பொருள்பட
அமைந்துள்ளது.
மனிதர்களே இல்லாத இடத்தில் இவளை வைத்தால் பகவான் மீது கொண்ட பித்து
குறையும் என்றெண்ணி நிலா முற்றத்தில் அவளை வைக்கிறாள். ஆனால் இவளோ அங்குச் சென்று
‘அதோ கண்ணபுரம்’ என்று அரற்றுகிறாள் என்று திருத்தாயார் புலம்புகிறாள். நாயகியின்
தயக்கங்களைப் போக்கி நாயகனுடன் சேர்த்து வைப்பவன் பாணன் எனப்படுவான். பரக்கால
நாயகியின் உள்ளிருக்கும் சக்தி பகவானுடன் இணைய முடிவெடுத்து பகவானுடன் சமர்ப்பணம்
செய்து விட்டாள். பிறகு அவள் அதிலிருந்து மீள முடியாது. கண்ணபுர சௌரிராஜனை
நினைக்கும்போது திருநறையூர் நம்பியையும் நினைத்து வாடுகிறாள். மகளை வருத்தும்
இச்செயல் சரிதானா? என்று கேட்பது போல் இப்பாசுரம்
அமைந்துள்ளது.
சுட்ட சாம்பலை
மேனியில் பூசும் சிவபெருமானுக்கு பிரம்மனால் ஏற்பட்ட சாபத்தினால் வந்த சங்கடத்தைத்
தீர்த்தவன் எம்பெருமான். அத்தகையவன் என்
நெஞ்சில் புகுந்து என்னை உருக்கி உண்கின்ற மணவாளனை இன்று திருநறையூரிலே தரிசித்து, நாளைத் திருமெய்யத்தில் சென்று வணங்குவோம் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
ஸ்மசான பூமியில் சுட்ட சாம்பலைப் பூசிய ருத்ரன் அனுபவித்த ஒரு கஷ்டத்தைத் தீர்த்தவனான பெருமானை திருநறையூரில் கண்டு வணங்கினோம் என் உடலுக்குள் புகுந்து என் நெஞ்சை உருக்கி உண்ணும் சிறுவனான
பெருமானை திருமெய்யத்தில் சென்றும் வணங்குவோம்.
சிவபெருமானை படைத்தது நான் தான் என்று பிரம்மன் அகந்தையினால் கூற
அதைக்கண்டு வெகுண்ட சிவபெருமான் அவனது ஒரு தலையைக் கொய்தான். அதனால் கோபமுற்று
பிரம்மன் சிவனுக்கு சாபம் தந்ததால் கொய்த தலை கபாலமாகச் சிவனின் விரலில் ஒட்டிக்
கொண்டது. இந்தச் சங்கடத்தைத் தீர்த்தவன் எம்பெருமான். அத்தகையவன் என் உடலில் நுழைந்து நெஞ்சை
உருக்கியவன் என்கிறார். தூய்மையுடைய மனம் தான் பகவானின் கோயில். அதனால் பகவான்
ஆழ்வாரின் தூய்மையான நெஞ்சில் குடிபுகுந்து அவரை உருகும்படி செய்தார் என்று
கூறுகிறார். அது போன்று நாமும் அத்தகைய தூய்மையான நிலையை அடைய வேண்டும்.
திருங்கைகையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
கன்றுகள்
மகிழ்ச்சியுடன் மேய்த்துக் கொண்டிருக்கும் காளையே! அழகு மிக்க மலர் வனங்களால்
சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் கொலுவிருக்கும் என் கண்மணியே! நாற்சந்தியிலும்
மரக்கால்களைக் கட்டிக் கொண்டு கூத்தாடி ஆனந்தித்தவனே! திருவேங்கட மலையில்
எழுந்தருளியுள்ளவனே! அசுரக் குலங்களைக் கொன்று வேரோடு அகற்றிய அரசனே! சோலைகள்
நிறைந்த திருநறையூரில் நின்றருள்பவனே! அடர்த்திய குழல் கற்றையும் கறுத்த
திருமேனியும் கொண்ட என் துணைவனே! என்றெல்லாம் புலம்பித் தன் மகளை நிறைத்து இரு
தனங்களும் நனையுமாறு தாயார் கண்ணீர் பெருகி சோர்வடைகிறாள். புல்லாங்குழல் இசைத்துப் பசுக்கள் வேறிடம்
செல்லாமல் பாதுகாத்து வீடு திரும்புமாறு செய்கிறான். அதுபோல் உலகத்து உயிர்களைத்
தன்பால் ஈர்த்து பாதுகாப்பவன் பகவான் ஒருவனே என்பது இதன் பொருளாகும்.
ராமகிருஷ்ணாதி
ரூபத்தாலே அவதரித்து இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரை ரக்ஷித்தவளவோடே
நின்றாலும் ஆறியிருப்பேன்; அறிவுகேட்டுக்கு மேலெல்லையான கன்றுகளையும் உட்பட மேய்த்த உன்னைவிட்டு
எங்ஙனே ஆறியிருப்பேன் என்கிறாள். அறிவில்லாமையில் கடைநின்ற கன்றுகளையும் ரக்ஷித்த
நீ, உன்வாசியை அறிந்து உன்னையொழியச்செல்லாத என்னை ரக்ஷியாதொழிவதே! நானும் கன்றாகப்
பிறக்கப்பெற்றிலேனே! என்கிறாள்.
“கண்ணபிரான்
பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும்போது அவை கைதவறிப் போகையாலே அவற்றை மடக்கிப்
பிடிக்கப்போன இடத்திலே விடாய் தீருவிருப்பதொரு சோலையைக் கண்டு திருவாய்ப்பாடியாக
நினைத்துப் புகுந்தான்; அப்பொழில் மயல்மிகு பொழிலாகையாலே
கால்வாங்கமாட்டிற்றிலன்; அதுவாயிற்றுத் திருக்கண்ணபுரம்“
என்பராம்.
மென்மையான இளம்
தனங்கள் நிறம் மாறிப் பசலை என்னும் நோய் பூத்திருக்கின்றன. கயல் விழிகளில் கண்ணீர்
ததும்பி இருக்கிறது. அடிக்கடி பிரமை பிடித்தது போல் தனியே நிற்கிறாள். சிவந்த
கால்களையுடைய ஆண் புறாக்கள் தங்கள் பேடைகளோடு மகிழும் ஒலி கேட்டு உடல் உருகி, அவள் தன்னோடு தொடர்பு கொண்டதை எண்ணி
பகவான் எழுந்தருளியிருக்கும் திருத்தண்காவையும், குளிர்ந்த
திருக்குடந்தையையும், திருக்கோவலூரையும் பாடி நடனமிடும்
குரலைக் கேட்டுப் பெண்ணே! வாய் விட்டு நம் மணாளனை அழைப்பது நம் குலத்திற்கு ஆகாது
என்று கூறி திருநறையூரைப் பாட மறந்தேனோ என்ற
பொருளில் பகவானை நினைத்துத் தன் பெண் புலம்புவதை திருத்தாயார் நிலையில்
ஆழ்வார் பாடுகிறார்.
தன் மகள்
சோர்வுற்ற நிலையைக் கண்ட திருத்தாயார். இவளுக்கு நாம் ஏதேனும் இதமான வார்த்தை
சொல்லிப் பார்ப்போம். அதனாலாகிலும்
வழிப்படக் கூடுமோ” என்றெண்ணி 'நங்காய் நீ இங்ஙணம்
வாய்விட்டுக் கூப்பிடுதலும் மோகித்தலுமான இவை நின்பெண்மைக்குத் தகாது, நம் குடிக்கும் இழுக்கு’ என்று சொல்ல, அங்ஙனம் அவள்
இதம் சொன்னதுவே ஏதுவாக மேன்மேலும் அதிகமாக முயன்று பணைத்த படியைச் சொல்லுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக