வியாழன், 15 ஜனவரி, 2026

18. திருக்கண்ணங்குடி

 

திருமங்கையாழ்வார்                                                                        பெரிய திருமொழி

 

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய
     வாள் அரவின் அணை மேவி
சங்கம் ஆர் அம் கைத் தட மலர் உந்தித்
     சாம மா மேனி என் தலைவன்
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம்
     அருங் கலை பயின்று எரி மூன்றும்
செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர்
     திருக்கண்ணங்குடியுள் நின்றானே.       1748     

 

மரக்கலங்களையுடைய பெரிய அலைகளைக் கொண்ட சமுத்திரத்தில் விசாலமான பிரகாசமுடைய ஆதிசேஷன் மீது யோக நித்திரை செய்பவன், பாஞ்சஜன்னியத்தை கரத்தில் தரித்தவன், தாமரை மலரை நாபியில் கொண்ட சியாமள மேனிப்பெருமான், என் தலைவன் அருள் புரியும் திருத்தலம் திருக்கண்ணங்குடியாகும். ஆறு வேதாகமங்களையும், ஐவகை யாகங்களையும், நான்கு மறைகளையும், அரிய கலை நூல்களையும் கற்று, மூன்று அக்னிகளையும் வளர்க்கும் கலங்காத மனமுடைய வேதியர் வாழும் இடமாக இத்தலம் அமைந்துள்ளது.

திருப்பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொள்ளுகின்ற வ்யூஹமூர்த்தியே, திருக்கண்ணங் குடியில் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளியுள்ள எம்பெருமானென்கிறார். சீக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு வகையாக உள்ளது. ஐந்து வேள்விகளானது ப்ரஹ்மயஜ்ஞம், தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யஜ்ஞம் என்பனவாம்.  வேதம் ஓதுதல் பிரஹ்மயஜ்ஞம், பலியீதல் பூதயஜ்ஞம், பித்ருக்களை உத்தேசித்துத் தர்ப்பணம் விடுதல் பித்ருயஜ்ஞம், விருந்தினர்க்கு உணவளித்தல் மநுஷ்யயஜ்ஞம்.  நால்வேதமாவது ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. தைத்திரியம், பௌடியம், தலவகாரம், சாமம் என இவை என்றலும் உண்டு.  அருங்கலையென்றது வேதங்களுக்கு உபப்ரும்ஹணமாகவுள்ள ஸ்மிருதீதிஹாஸ புராணங்களை என்பதாகும்.  ஞானமனுட்டானமிவை நன்றாகவே உடையரான மஹான்கள் வாழுமிடம் திருக்கண்ணங்குடி என்பதாயிற்று என்று பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் கூறுகிறார்.       

 

கவள மா கதத்த கரி உய்யப் பொய்கைக்
     கராம் கொளக் கலங்கி உள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை
     துணிபடச் சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர்
     கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத்
     திருக்கண்ணங்குடியுள் நின்றானே.     1749

 

கவளம் கவளமாக உண்ணும் மதத்தையுடைய கஜேந்திரனாகிய யானை, பொய்கையில் வாழ்ந்து, முதலையினாலே கௌவப்பட்டு, மிகவும் கலக்கப்பட்டு, சிந்தித்து, வருந்தி நின்ற அளவிலேயே அதைக் காக்கும் பொருட்டு மேலிருந்து தோன்றி வலிமை மிக்க முதலையை ஜொலிக்கின்ற தனது சுதர்சனத்தால் துண்டாகுமாறு செய்தான் எம்பெருமான். இத்தலத்தில் கருநெய்தல், தாமரை, ஆம்பல், செங்கழுநீர், நெய்தல் போன்ற மலர்களால் நிரம்பியுள்ள அழகான வயல்களையுடைய ஒளி பொருந்திய மாளிகைகள் கொண்ட சிறந்த இரத்தினங்களாலான  மதில்களையுடைய இடமாகும் என்று திருக்கண்ணங்குடியைக் கூறுகிறார் ஆழ்வார்.

        இத்திருப்பதியில் வாழும் வேத வேதாந்தங்களைக் கற்றவர்கள் அந்த வேதத்தின் முக்கிய தாத்பர்யத்தை செய்யுங்கால் வரும் இடையூறுகளை அறவே ஒழித்து அக்கைங்கர்யத்தை காத்தருளுபவன் எம்பெருமான். முதலை என்பது நமது முன்வினைப் பயன்களாகவும், யானை ஜீவாத்மாக்களாகவும், பகவான் பரமாத்மாவாக வந்து நம்மையெல்லாம் காத்தருள்கிறான் என்ற நிலையிலும் இப்பாசுரத்தின் பொருளை நோக்கலாம்.


வாதை வந்து அடர வானமும் நிலனும்
     மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி
     விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்
போது அலர் புன்னை மல்லிகை மௌவல்
     புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும்
     திருக்கண்ணங்குடியுள் நின்றானே.       1750

 

பிரளய காலத்தில் துன்பம் சேர்ந்து அதிகரிக்க ஆகாயமும், பூமியும், மலைகளும் கடலில் மூழ்கிவிட, பகவான் பெரிய மீன்வடிவாகி பெருவெள்ள நீரை தனது திருவயிற்றில் வைத்து அடக்கினார். அத்தகைய எம்பெருமான், பருவ காலத்தில் மலரும் புன்னை, மல்லிகை, முல்லை போன்ற மலர்களின் பரிமள வாசனையையும், தேனையும், வருடி வரும் குளிர்ந்த தென்றல் காற்று எல்லா திசைகளிலும் கமழ வைக்கும் திருக்கண்ணங்குடியில் கோயில் கொண்டிருக்கிறார்.

        பிரளய வெள்ளத்தில் மூழ்கித் துன்புறும் காலத்தில் ஒரு லக்ஷம் யோஜனை நீளமும், பதினாறாயிரம் யோஜனை அகலமும் கொண்ட பெரு மீனாக அவதரித்து உலகினைக் காத்தார். பெருமான் நியமனப்படி பெரிய ஓடம் தோன்ற அதில் சப்த ரிஷிகளும், ஸமஸ்க பிராணிகளும் ஏறிவர, பெருங்காற்று ஓடத்தை நகர்த்தியபோது, பெருமான் தனது மத்ஸ்ய ஒற்றைக் கொம்பினால் தூக்கிப்பிடித்து காத்தார். பஞ்சமா பாதகங்களையும் மன்னித்து அருளும் கருணை வள்ளல் நமக்கு நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் திருக்கண்ணங்குடியில் எழுந்தருளியிருக்கும் பெருமானை சரண்புக வேண்டும் என்ற பொருளில் அமைந்துள்ளது .

 

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி
     வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றி ஆய் அன்று பார் மகள் பயலை
     தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து
     உயர் கொடி ஒளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத்
     திருக்கண்ணங்குடியுள் நின்றானே   1751

 

முன்பொருநாள் வெற்றி பெரும் தன்மையுடையதும், வலிமையும் மிக்க, பெரிய மலை போன்ற வடிவைக் கொண்ட, வெறுக்குமாறு கோரப் பற்களும், நெருப்பினையொத்த கண்களையுடைய வராகமாய் அவதரித்து, பூமிபிராட்டியின் விரகதாபத்தைத் தீர்த்தவனாவான். அர்ச்சுனனுக்குத் தேரோட்டியவன், பலவகையான வடிவங்களையுடையவன், நீண்ட காலமாக உள்ள நெடிதுயர்ந்த வானில் உள்ள சந்திரனைத் தொடும் அளவுக்கு மாடமாளிகைகள் நிறைந்த திருக்கண்ணங்குடியில் எழுந்தருளியுள்ளான் என்கிறார் ஆழ்வார்.

வெற்றியுடைதாய், வலிமையுடயதாய் மலை போன்ற பெரிய உருவத்தையும், வெளுத்த தந்தங்களையும், ஒளியுள்ள நெருப்புப் போன்ற குரூரமான கண்களை உடையதுமான வராஹமாய் வந்து, அன்று பூமாதேவியின் விரஹதாபத்தினைத் தீர்த்தவனும், பாண்டவர்களுக்குச் சாரதியுமான எம்பெருமான், பலவகைப்பட்ட உருவம் உடையவனாய் முடிவு இல்லாமல் பல காலமுள்ள உயர்ந்த கொடிகளானவை ஒளி மிக்க சந்திர மண்டலங்களையும் ஓங்கின சிகரங்களை உடையவையான நல்ல அழகிய மாட மாளிகைகளையுடைய திருக்கண்ணங்குடியுள் நின்றானே! என்று கூறுகிறார்.

        பூமிபிராட்டி எம்பெருமானை விட்டுப்பிரிந்து பிரளய வெள்ளத்தில் சிக்குண்டதால் பசலையென்னும் நோயால் நிறவேறுபாடு கொண்டிருந்தாள். அசுரனை வென்று பெருமாள் பூமிபிராட்டியை அணைத்த மாத்திரத்தில் அவளது பசலைநோய் விலகியது. அசுரனை வென்றது போன்ற பகவான் நம்முள் இருக்கும் அசுர குணங்களையும் அழித்து நம்மை மீட்டு அவருள் ஐக்கியப்படுத்திக் கொள்வார். அத்தகைய பெருமை கொண்ட பகவான் திருக்கண்ணங்குடியில் உள்ளார். அவரைத் தரிசனம் செய்து விடுதலை பெறுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

 

       

 மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்
     மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக
     பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்
அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து
     அலை புனல் இலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே.       1752

 

மகாபலி வளர்த்த பெரிய வேள்வியில் வாமன மூர்த்தியாய் சென்று மூன்றடி நிலத்தைத் தாரை வார்க்கச் செய்து, பின் பெரிதாக வளர்ந்து ஏழு உலகங்ளையும் இரண்டு அடியாக, பரந்த திக்குகள் அனைத்தும் அடங்கும்படி அளந்தவன் எம்பெருமான். அன்னப்பறவை மெல்லிய தாமரைப் பூவில் அழகிய ஆசனத்தில் அலையடிக்கும் நீரிலுண்டான இலை போன்ற குடையின் நிழலில் அழகிய நெற்கதிர்கள் கவரி வீச வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியில் கோயில் கொண்டுள்ளார் என்கிறார் ஆழ்வார்.

        உலகம் அனைத்தும் பகவானுடையதாகும்.  அவர்தான் நமக்கு இயற்கை வடிவில் தானமாகத் தந்துள்ளார். இந்தப் பூமியும் சகல அண்டங்களும் பகவானுடையது. நமது கர்மவினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பகவானால் உருவாக்கப்பட்டது இப்பூவுலகம். மனிதனாகப் பிறப்பதற்கு மாதவம் பெற வேண்டும். அத்தகைய மனிதப் பிறவியில் நமது முன்வினைப் பாவங்களைத் தீர்த்துக் கொள்ள நாம் பிறந்துள்ளோம். ஆனால் நாம் மேற்கொண்டு பாவங்கள் பல புரிந்து அதிகமாக்கிக் கொண்டிருக்கிறோம். இதனை உணர்ந்தாலே நாம் பாவம் செய்வதிலிருந்து விலகி இருப்போம் என்பது இப்பாசுரப் பொருளாகக் கொள்ளலாம்.

       

மழுவினால் அவனி அரசை மூவெழுகால்
     மணி முடி பொடிபடுத்து உதிரக்
குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம்
     தவிர்ந்தவன் குலை மலி கதலி
குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும்
     குளிர் தரு சூத மாதவியும்
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத்
     திருக்கண்ணங்குடியுள் நின்றானே.       1753

 

ஜமததக்நி மஹரிஷியின்‌ புத்திரனாகப்‌ பரசுராமனாய்‌ திருவவதரித்து, 'கார்த்த வீர்யார்ஜூனன் ‌ அவனது குமாரர்களும் குற்றம் புரிந்தது ‌காரணமாக அவர்களைக்‌ கொன்றவளவோடு கோபம்‌ தணியப்பெறாமல்‌ க்ஷத்ரிய வம்சம்‌ முழுவதன் மேலும்‌ கோபாவேசங் கொண்டு உலகத்தில் உள்ள அரசர்கள்‌ பலரையும்‌ இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்டு அவர்களது ரத்த வெள்ளத்தைப்‌ பெரிய ஏரியாகத்‌ தேக்‌கி அதிலே மூழ்கிப்‌ பித்ருக்களுக்குத்‌ தர்ப்பணக்ரியை நடத்தின பெருமான்‌ உறையுமிடம்‌ திருக்கண்ணங்குடியாகும்.

        இருபத்தோரு தலைமுறையாக நாடாளும் மன்னர்களின் மணிகள் நிறைந்த கிரீடங்கள் விழுமாறு கோடாலியினால் பொடிப்பொடியாக்கி, அவர்களது ரத்த சம்பந்தமான உறவினர்களையெல்லாம் கொன்று, பெருவெள்ளத்தில் குளித்து, கடுங்கோபத்தைத் தணித்த பெருமான், குலைகள் நிரம்பிய வாழைத் தோப்பும், ஓங்கி வளர்ந்துள்ள பாக்கு மரங்களும், குரவமரங்களும், பலாமரங்களும், குளிர்ந்த மாமரங்களும், குருக்கத்தி மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டுள்ள, நெடிதுயர்ந்த மாட மாளிகைகள் நிறைந்த திருக்கண்ணங்குடியில் கோயில் கொண்டுள்ளார் என்கிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் ஆழ்வார் பரசுராம அவதாரம்பற்றிக் குறிப்பிடுகிறார். நாடாளும் அரசன் என்பவன் தெய்வத்தின் பிரதிநிதியாகப் போற்றப்படுபவன்.  தருமநெறியில் நின்று குடிமக்களைக் காப்பாற்ற வேண்டிய உன்னதமாகக் கடமை அவனுக்குண்டு. அப்படிப்பட்ட அரசனே கடமை தவறி தருமத்தை மீறினால் குடிமக்களின் நிலை மிகவும் துன்பமாகிவிடும். எனவே தவறிழைத்த மன்னர்களுக்குத் தான் செய்த தவறை உணர்த்த பகவான் பரசுராமர் அவதாரமெடுத்து இருபத்தோரு தலைமுறைக்கான அரசர்களைக் கொன்று குவித்தார். நெறிதவறிய மக்களைத் தண்டிக்கவும் பகவான் தயங்கமாட்டார் என்பது இதன்வழி அறியலாகிறது.

       

வான் உளார் அவரை வலிமையால் நலியும்
     மறி கடல் இலங்கையார் கோனை
பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப்
     பரு முடி உதிர வில் வளைத்தோன்
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆடக்
     கண முகில் முரசம் நின்று அதிர
தேன் உலா வரி வண்டு இன் இசை முரலும்
     திருக்கண்ணங்குடியுள் நின்றானே.      1754

 

தனது தவ வலிமையால் தேவர்களைத் துன்பம் கொள்ளச் செய்த கடல்சூழ் இலங்கை வேந்தன் இராவணன் மேல் சூரிய வெப்பம் போல அம்புகள் எய்து அவனுடைய பருத்த தலைகளைப் பனம்பழம் உதிரும்படி செய்த ஸ்ரீராமன், காட்டில் சஞ்சரிக்கும் மயில் கூட்டங்கள் தோகை விரித்தாட வெண்மேகங்கள் திரண்டு முரசுபோல் முழங்க, தேனில் மூழ்கிய வண்டுகள் இன்னிசைபாடும் திருக்கண்ணங்குடியில் கோயில் கொண்டிருக்கின்றார் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        நெடுங்காலம் அருந்தவம் புரிந்து, மானிடரைத் தவிர மற்ற யாராலும்  தனக்கு இறப்பு இல்லை என்ற வரத்தைப்  பெற்றான் இராவணன்.  இந்திரனின் செல்வத்தைக் கொள்ளை கொண்டான். குபேரன்  குடியிருந்த  இலங்கையில் அவனை  விரட்டித் தான் புகுந்து கொண்டான். அவனது புஷ்பக விமானத்தை அபகரித்து மகரிஷிகளுக்கும் சாதுக்களுக்கும் சொல்லொணாத் துயரினைத் தந்தான்.  அத்தகைய வலிமை  உள்ளவனை  போர்க்களத்தில் வதம் செய்த எம்பெருமான்  திருக்கண்ணங்குடியில் எழுந்தருளி இருக்கிறார்.  அவரை தரிசித்து மேன்மை அடையுங்கள் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.

       

அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை
     அஞ்சிடாதே இட அதற்குப்
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவப்
     பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரதகத் திரளும்
     வயிரமும் வெதிர் உதிர் முத்தும்
திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்
     திருக்கண்ணங்குடியுள் நின்றானே.     1755

 

பாம்புக் கொடியைக் கொண்ட துரியோதனன் சபையில் கண்ணனை அவமரியாதை செய்யப் பொய்யாசனம் போட, அதைத் தெரிந்த கண்ணன் தனது விசுவரூபத்தினை எடுத்து அண்டங்கள், திசைகள் அனைத்தும் தன் உருவில் காட்டினான். சஹ்ய மலையிலிருந்து இரத்தினங்கள், மரகதங்கள், வைரங்கள், முத்துக்கள் ஆகியவற்றை அலைகள் தள்ளிவந்து வயல்களில் குவிக்கும் திருக்கண்ணங்குடியில் அருள் புரிகிறான்.

        துரியோதனன் கண்ணனை கொல்வதற்காகப் பலவிதமாக யோசித்து பின் பொய்யாசனம் செய்து அதில் விழ வைக்கப் பார்த்தான். பகவான் இதையறிந்து பாண்டவ தூதனாக வந்த தமக்கு ஏற்பட்ட நிலையை அறிந்து அவனுக்குப் புத்திபுகட்ட விசுவரூப தரிசனம் தந்து அங்குள்ள மல்லர்களை எல்லாம் அழித்தார். காஞ்சீபுரம் திருப்பாடகத் தலத்தில் பாண்டவ தூதனாக இன்றும் காட்சி தருகிறார். இவரைத் தூதஹரி என்றும் கூறுவர். பெருமான் தன் பாதங்களைப் பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளைக் கொண்டு அருள்கிறார்.

       

 பன்னிய பாரம் பார் மகட்கு ஒழியப்
     பாரத மா பெரும் போரில்
மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர்
     மைத்துனற்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்
     சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்
     திருக்கண்ணங்குடியுள் நின்றானே   1756

 

பூமிபிராட்டியால் தாங்க முடியாத அளவு இருந்த பாரம் நீங்கப் பாரதப் போரில் அரசர்கள்  மாளுமாறு,  மணிகள்  கட்டிய  பெரிய  உறுதிமிக்க இரதத்தை மைத்துனன் அர்ச்சுனனுக்காகச் செலுத்தி அதில் மாயங்கள் பல புரிந்த ஸ்ரீகிருஷ்ணன், திருக்கண்ணங்குடியில் வீற்றிருக்கிறார். குருக்கத்தி கொடிகளும், சுரபுன்னை மரங்களும், செண்பக மலர்களில் வண்டுகள் மெல்ல பாடியபடி தேனருந்தும் சோலைகள் நிறைந்த இடமாகும் என்று தெரிவிக்கிறார் ஆழ்வார்.

        ஸர்வம்ஸஹா என்று பூமிபிராட்டிக்கு ஒரு பெயருள்ளது. எவ்வளவையும் பொறுக்க வல்லவள் என்றது இதன் பொருளாகும். தன் மீது நல்லவர்கள் எவ்வளவு பேர் இருப்பினும் மகிழ்வுடன் தாங்குவாள். ஆனால் அதில் ஒரு துஷ்டன் இருந்து விட்டால் இரும்பை சுமப்பது போன்று சுமப்பாள். கொடியவர்களான கௌரவர்களைச் சுமப்பதில் துன்பம் கொண்ட பூமிபிராட்டியின் பாரத்தைக் குறைக்க பாரதப் போரில் அர்ச்சுனனுக்காகப் பார்த்தசாரதியாகத் தேரோட்டி கௌரவர்கள் அனைவரையும் அழித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பாண்டவர்கள் வெற்றிக்காக இத்தகைய மாயங்களைச் செய்த பகவான் திருக்கண்ணங்குடியில் அருள் புரிகிறார் என்பது ஆழ்வார் நமக்குக் காட்டிய நல்வழியாகும்.

 

கலை உலா அல்குல் காரிகைதிறத்துக்
     கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற
     திருக்கண்ணங்குடியுள் நின்றானை
மலை குலாம் மாட மங்கையர் தலைவன்
     மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்
     வல்லவர்க்கு இல்லை நல்குரவே.       1757      

 

நல்ல ஆடை உலாவிவரும் இடையை உடைய சீதாபிராட்டிக்காகக் கடலைவிட பெரிய படைகளோடு போய்ச் சார்ங்கம் என்னும் வில்லால் இலங்கையை தீயினால் அழியுமாறு செய்தவனை, திருக்கண்ணங்குடியில் அருள் புரியும் லோகநாதனை, குறித்து மலை போன்ற மாடங்களையுடைய திருமங்கை மன்னன், வேல் எறிவதில் வல்லவரான கலியன் இயற்றிய இத்தமிழ் பாசுரங்கள் பத்தையும் பாடக்கூடியவர்களுக்கு வறுமை என்பதே இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஆடை அழகுடன் கூடின இடையும் உடைய  அழகிய ஸீதைக்காகக் கடலைத் தாண்டிச் சென்று,   வில்லால் இலங்கை  தீப்பற்றி எரியும்படி அழித்த  திருக்கண்ணங்குடியுள்  நின்ற பெருமானைக் குறித்து  மலை போன்ற  மாடங்களையுடைய  திருமங்கை  தலைவன்  சிறந்த வேற்படையுடைய  திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த  சிறந்த இந்தக் குறைவற்ற  பத்துப் பாசுரங்களையும்  ஓத வல்லவர்க்கு  இறைவன் அருள் என்றும் உள்ளது

        எம்பெருமானை ஒரு விநாடிகூட விட்டுப்பிரியாத வாழ்ந்து கொண்டிருக்கும், உடைவாய்ப்பு முதலிய செயற்கையழகும், இயற்கையழகும் நிறைந்த பிராட்டியை மீட்க இலங்கை சென்று போரிட்டார். மேலும் இப்பாசுரங்களை படிப்பதால் வறுமை நீங்கிச் செல்வச் செழிப்புடன் வாழ்வார். இதில் வறுமை என்பது செல்வத்தை மட்டும் குறிப்பதன்று. அறிவுபலம், ஞானபலம், வைராக்கிய பலம் ஆகியவை இல்லாமல் இருப்பதும் வறுமைதான். அவற்றைப் போக்கக்கூடியவர் திருக்கண்ணங்குடியில் வாசம் செய்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...