வியாழன், 15 ஜனவரி, 2026

21. நந்திபுர விண்ணகரம் -

 


திருமங்கையாழ்வார்                                                                            பெரிய திருமொழி

       

தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு
     விசும்பும் அவை ஆய்
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை
     ஆய பெருமான்
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட
     மார்வர் தகைசேர்
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      நண்ணு மனமே !    1438

 

குற்றமில்லாத இவ்வுலகம், நிலம், நெருப்பு, காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்குப் பகவான் ஜீவனாக இருக்கிறான். குற்றமற்ற உள்ளம், தூக்கம், மரணம் ஆகியவைகளுக்குத் தலைவனாக உள்ளான். தாய் யசோதை கோபம் கொள்ள அதற்கு வருந்துவதுபோல் பாவனை செய்து, அவள் அயர்ந்த நேரத்தில் தயிரைக் குடித்து குடக்கூத்தாடியவன், விசாலமான மார்பை உடையவன், நமக்கெல்லாம் அருளை வழங்குபவனுமான ஜகந்நாதன் திருநந்திபுர விண்ணகரத்தில் உறைகிறான். மனமே! அவனை அடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

சரீரம் பஞ்ச பூதங்களால் ஆனது, பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகியவை ஆகும். பஞ்சபூதங்கள் அழிவுடையது. அதனால் சரீரமும் அழிந்தே தீரும் என்பது நன்கு விளங்கும். “சரீரம் அவயவக் கூடம் என்று பகவத் கீதையில் கண்ணன் எம்பெருமான் கூறியுள்ளான்”. அவயவக் கூடம் என்றால் பல பொருட்களின் சேர்க்கை என்பதாகும். இப்படி பல பொருட்களின் சேர்க்கையாலான எந்த ஒரு வஸ்துவும் அழிந்தே தீரும். இதனாலேயே சரீரம் அழிவுடையது, ஆத்மாவுக்கு அழிவில்லை என்கிறது கீதை பேருரை.

ஜீவாத்மாவிற்கு தன் கர்ம பலனை அனுபவிப்பதற்காகப் பிறவி எடுக்கின்றது. இந்தக் கர்ம பலனை அனுபவித்து முடித்த அந்த நிமிடமே ஜீவாத்மா அவ்வுடலைவிட்டு வெளியேறிவிடும். ஜீவாத்மா வெளியேறினால் சரீரம் அழிந்தே ஆக வேண்டும்.

        நமது சரீரம் பஞ்ச பூதங்களாலானது. பகவான் அதற்குத் தலைவன். தலைவன் சொற்படி  கேட்பது நமது கடமை. தீமையிழைக்காமல், அனைவரிடத்தில் அன்புடன் இருத்தல், ஒழுக்கமான வாழ்வைப் பேணுதல் மனிதனின் கடமை என்று பகவான் கூறுகிறார்.  எனவே அவனது கட்டளைகளை நிறைவேற்றுவது நமது கடன். இந்தக் கடமைகளை மீறுவதால்தான் நாம் நாள்தோறும் துன்பங்களை எதிர்கொள்கிறோம். இத்தகைய எளிய தத்துவங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும். 

 

உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான்
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன்மேல்

நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.      1439

 

மனமே! நான் சொல்வதைக் கேட்டால் பிழைக்கும் வழி கிடைக்கும்.  முன்பொருநாள் ஏழுலகங்களையும் தன் சரீர அளவுக்கு சுருக்கி அதை உண்ட பகவான் நந்திபுர விண்ணகரத்தில் குடிகொண்டுள்ளான். கரிய நிற வண்டுகள் தன் இனத்தோடு தேனை உண்டு, மலர்களைக் கோதி அதன் பின் நைவனம் (குறிஞ்சிப் பண்) இராகத்தில் ரீங்காரமிடும் நந்தவனங்களைக் கொண்டுள்ள இத்தலத்தை அடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பிழைக்கும் வழி என்பது பகவானை மனத்தில் இருத்தி அவனிடம் அன்பு செலுத்துவதாகும். இவ்வுலகத்தார் பொருள் ஈட்டினால் அது நிம்மதி என்று கருதுகி மனமே! நான் சொல்வதைக் கேட்டால் பிழைக்கும் வழி கிடைக்கும்.  முன்பொருநாள் ஏழுலகங்களையும் தன் சரீர அளவுக்குச் சுருக்கி அதை உண்ட பகவான் நந்திபுர விண்ணகரத்தில் குடிகொண்டுள்ளான். கரிய நிற வண்டுகள் தன் இனத்தோடு தேனை உண்டு, மலர்களைக் கோதி அதன் பின் நைவனம் (குறிஞ்சிப் பண்) இராகத்தில் ரீங்காரமிடும் நந்தவனங்களைக் கொண்டுள்ள இத்தலத்தை அடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பிழைக்கும் வழி என்பது பகவானை மனத்தில் இருத்தி அவனிடம் அன்பு செலுத்துவதாகும். இவ்வுலகத்தார் பொருள் ஈட்டினால் அது நிம்மதி என்று கருதுகிறார்கள். ஆனால் திடீரென்று தோன்றும் மரணம் அந்தப் பொருளை விட்டுப் பிரியும் சூழல் ஏற்படுத்தி விடுகின்றது. சேர்த்த பொருள் பின்வருவதில்லை. மீண்டும் நரகக் குழியில் விழுந்து அவர்கள் அடுத்த பிறவியை நோக்கிச் செல்கிறார்கள்.  பொருளைத் தேடுவதால் இத்தகைய துன்பம் ஏற்படுகின்றது. நந்திபுர விண்ணகர பகவானிடம் மனதை செலுத்தி மரணத்திற்குப் பிறகு பிறப்பற்ற பேரானந்த வாழ்வை பெற முயல்வோம்.

றார்கள். ஆனால் திடீரென்று தோன்றும் மரணம் அந்தப் பொருளை விட்டுப் பிரியும் சூழல் ஏற்படுத்தி விடுகின்றது. சேர்த்த பொருள் பின்வருவதில்லை. மீண்டும் நரகக் குழியில் விழுந்து அவர்கள் அடுத்த பிறவியை நோக்கிச் செல்கிறார்கள்.  பொருளைத் தேடுவதால் இத்தகைய துன்பம் ஏற்படுகின்றது. நந்திபுர விண்ணகர பகவானிடம் மனதை செலுத்தி மரணத்திற்குப் பிறகு பிறப்பற்ற பேரானந்த வாழ்வை பெற முயல்வோம்.

       

உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி யாமை முன நாள்
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.      1440

 

ஊழிக்காலத்தில் ஏழு உலகங்களையும், ஏழு கடல்களையும், (உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், புனல்) ஏழு மலைகளையும் (இமயம், மந்தாரம், கைலாயம், வடவிந்தம், நிடதம், ஹேமகூடம், நீலகிரி) தன் வயிறு நிரம்பும்படி உண்டு, படைப்புக் காலத்ததில் வெளிப்படுத்திய பகவான் திருநந்திபுர விண்ணகரத்தில் குடிகொண்டுள்ளான். பூக்கள் மலர்கின்ற நந்தவனங்களில் திரியும் பொன்னொளித் தும்பிகளால் அழகு பெற்ற, பயிர்கள் நிறைந்து இருண்டுள்ள வயல்களால்  சூழப்பபட்ட அந்நகரை சென்று அடைவாய் மனமே என்று பாடுகிறார் ஆழ்வார்.

        உலகங்கள் மறைவதும் மீண்டும் வருவதும் பகவானால் நடத்தப்படும் லீலைகள். நாம் உறங்கும்போதும் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் அதை அறிவதில்லை. அறியாமல் இருப்பதால் இந்த உலகம் இயங்கவில்லை என்று பொருள் கொள்ளலாகாது.  அது போன்று கடவுளைக் கண்டால் தான் நம்புவேன் என்று கூறுவது பொருத்தமற்றது என்று இதனால் தெளிவாகிறது. அனைத்தையும் பகவான் இயக்குகிறான். அதற்கேற்றவாறு நாம் ஆடுகின்றோம். இப்பக்குவம் நமக்கு வந்தால்தான் ஆன்மீகத்தின் முதல் படியை நாம் கடந்தோம் என்று கொள்ளலாம்.

       

பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர்
இறைகள் அவை நெறு நெறு என வெறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான்  
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.       1441

 

பிறைச்சந்திரன் போல் பிரகாசிக்கும் கோரைப் பற்கள் வெளிப்பட முறுக்கியபடி வந்து எதிரிட்டு யுத்தம் செய்வோம் என்று வந்த அரக்கர்களின்  உடல்கள் நெறுநெறுவென முறிந்து விழ, அவர்கள் பயந்து வயிறு எரியுமாறு நின்ற இடம் ஜெகன்னாதன் குடிகொண்டுள்ள நந்திபுர விண்ணகரம் என்னும் தலமாகும். இத்தலத்தில் தோகை மயில்கள் நடம்புரிய, குயில்கள் இசைக்க, மலர்கள் சிதறிக்கிடக்க, வண்டுகள் ரீங்காரமிட, ஓங்கி மாமரங்கள் நறுணம் வீசும் தோட்டங்களில் கருமேகங்கள் படிந்திருக்கும் இடமாகும். மனமே! இத்தலத்தை அடைவாயாக என்கிறார் ஆழ்வார்.

பயங்கரமான பற்களைக்‌ கொண்ட அசுரர்கள்‌ செருக்குக்‌ கொண்டு எதிரிட்டு‌ போர் புரிவதாக யுத்த அரங்கத்‌தில்‌ திரண்டவாறே அம்புகளைப்‌ பொழிந்தோ திருவாழியாழ்வானைப்‌ பிரயோகித்தோ அவ்வசுரர்களின்‌ உடல்‌களை நெறுநெறுவென்று முறித்து, அவர்கள்‌ கையிலிருந்த ஆயுதங்களையும்‌ சிதைத்து வயிறெரியச்‌செய்த பெருமானுறையுமிடம்‌ நந்திபுர விண்ணகரமாகும்.

        தேவ அசுரப் போரில் பகவான் தேவர்களின் பக்கம் இருந்தார். தேவஅசுர யுத்தம் என்பது நமக்குள் நடக்கும் யுத்தமாகும். தீய எண்ணங்களும், சுயநல குணமும் கொண்டவையாக நம் மனதில் உள்ளன. நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தரும்போது நாம் தேவர்களாகவே மாறி விடுகிறோம். பகவானும் நம்முள் இருந்து கொள்வார். தீய செயல்களில் நாம் அசுரர்களாகி துன்பத்தைச் சுமந்து நிற்கிறோம். இதனை உணர்ந்தால் துன்பம் இல்லை மன உளைச்சல் இல்லை என்பது இதன் கருத்தாகும்.

 

மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர்
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம்கை உடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.     1442

 

கண்ட இடங்களிலெல்லாம் புகை படியும்படி நெருப்பைக் கொட்டிக் கோபம் கொண்டு யுத்தம் செய்வோம் என்று வந்த அசுரர்களின் தோளும், அவர் கால்களும், தலைகளும், பொடிப்பொடியாகும்படி அம்புகளை எய்தவன். நாந்தகம், சார்ங்கம், சுதர்சனம், கௌமோதகி, கதை, பாஞ்சஜன்னியம் ஆகிய பஞ்சாயுதங்களைத் தன் அழகிய திருக்கரங்களில் தரித்த ஜகந்நாதன் எப்போதும் குடி கொள்ளும் தலம் நந்திபுர விண்ணகரமாகும். மனமே! நீ அங்குச் சென்றடைவாயாக!

அசுரர்கள்‌ போருக்கு வரும்போது கண்டவிடமெங்கும்‌ நெருப்புகளை வாரிக்‌ கொட்டுவதும்‌ கோபாவேசங் கொண்டு கோலாகலங்கள்‌ பண்ணுவதும்‌ வழக்கம்‌. ௮ங்ஙனம்‌ வரும் அசுரர்களின்‌ தோளும்‌ தலையும்‌ ஒரு நொடிப்‌ பொழுதில்‌ பொடிபட்டொழியும்படி அம்புகளைச்‌ செலுத்தி வெற்றி பெற்ற‌ பெருமான்‌ இன்னமும்‌ அப்படிப்பட்ட அசுரர்களை அழிப்பதற்‌காகப்‌ பஞ்சாயுதங்களையும்‌ உடன்‌ கொண்டவனாகி நந்திபுர விண்ணகரத்தில் நித்யவாசம் செய்கிறான்.

        மனமே! விண்ணகரப் பெருமானை சரணடைந்துவிடு. அவ்விதம் செய்தால் மனதில் உள்ள தோஷங்கள், அசுரப் பிசாசுகள் போன்றவற்றை பகவான் சிரத்தையின்றி நொடிப்பொழுதில் அகற்றிவிடுவார். மனதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுதான் நமது முதல் கடமை. இதைச் செய்து விட்டால் இந்த உலகத்திற்கு வந்த கடமை முடிந்தது என்று கொள்ளலாம். நம் மனமென்னும் அஸ்திவாரத்தை தூயதாக்கிவிட்டால் வேறு எதையும் நாம் செய்ய வேண்டியதில்லை.  பகவானின் திருக்கோயிலாக நாம் மாறி விடுவோம் என்பது இதன் பொருளாகும்.

       

 தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள்
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர் தான்
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.      1443

 

முன்னொரு காலத்தில் உலகத்தைக் காக்க ஸ்ரீராமனாக அவதரித்து, தம்பியான இலட்சுமணனும், தனது காதலே வடிவெடுத்த சீதையும் துணையாக வர வெம்மையாகப் பற்றி எரியும் காட்டில் நடந்தவர் இப்போது இன்பமாக வாழும் தலம் நந்திபுர விண்ணகரமாகும்.  இத்தலத்தில் குயில்கள் கிளைகளில் நின்று குதித்துக் கூவ, அது கேட்டு மயில் நடம்புரிய, அழகான தோட்டங்களைக் கொண்ட தலமாகும். மனமே! நீ அங்குச் சென்றடைவாயாக என்ற பொருளில் அமைகிறது.

மனிதப் பிறவியின் நோக்கம் நீங்கள் எந்த மூலத்திலிருந்து வந்தீர்களோ அந்த மூலத்துடனே ஒன்றாகி, இனி பிறப்பு-இறப்பு சுழலில் மீண்டும் சிக்கிவிடாமல் தப்பிப்பது.  இந்து மதத்தில் ரிஷிகளும், மகாத்மாக்களும், ஞானிகளும், அவதார புருஷர்களும் நமக்கு இதைத்தான் சொல்லித் தந்துள்ளார்கள்.

தெய்வ பக்தியை முன்னிறுத்தி உபதேசிப்போர், நாம் மரணத்திற்குப் பிறகு இறைவன் திருவடியை நிரந்தரமாகச் சேர்வது, இறைவனின் உலகத்தில் போய்ச் சேர்ந்து அவரோடு நிரந்தரமாக இருப்பது, அவரது நிரந்தர சேவையில் ஈடுபடுவது, அவருடைய ரூபமாகவே ஆவது, அவரோடு ஒன்றாகிவிடுவது என்று பல்வேறு நிலைகளை நமக்கு உபதேசிப்பார்கள்.

        மனிதப் பிறவிகளைத் தெய்வமே எடுத்தாலும் இன்ப துன்பங்களை அனுபவித்தாக வேண்டும் என்பது இதன் கருத்தாகும். சக்ரவர்த்தியான இராமபிரானுக்கு காட்டில் துன்புறும் வாழ்க்கை அமைந்தது. அயோத்தியில் அரசராக  இருக்க வேண்டியவர் விதி வசத்தால் கானகத்தில் இருக்க வேண்டியதாகிற்று. தெய்வ அவதாரமாகினும் விதியை மாற்ற முடியாது. துன்பங்களை  எதிர்க்கொள்ளும் பக்குவ மனத்துடன் தயாராக இருக்க வேண்டும் என்று உணர்த்துவதற்காக ஆழ்வார் இப்பாடலைப் பாடியுள்ளார்.

       

தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான்
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ்
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே    1444

 

தந்தையான நந்தகோபன் புத்திரப் பேறின்றி துயருற்ற நாளில் இரவிலே திரு ஆயர்பாடிக்கு அவர் துன்பம் தீர்க்க வந்த ஸ்ரீகிருஷ்ணனைத் தேவர்கள் இவன் எங்கள் தெய்வம் என்று கூறி மலர்தூவி வணங்கினர். அவன் கோயில் கொண்டிருக்கும் தலம் திருநந்திபுர விண்ணகரமாகும்.  இப்புனிதத் தலம் இசைக் கருவிகளில் மந்தமான ஓசையை இடியாக நினைத்துக் கார் காலத்தில் கிளர்ச்சியுடன் மயில்கள் நடம்புரிய நந்தவனங்கள் சூழ்ந்த தலமாகும். எனவே மனமே! நீ அங்குச் சென்றடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

இத்திருப்பதியில் மந்தமான வாத்ய கோஷத்தைச் சோலையில் உள்ள மயில்கள் செவியுற்று, மேகங்கள் முழங்குகின்றனவென்று எண்ணிச் சிறகை விரித்தாடுகின்றனவாம். திருவல்லிக்கேணியில் தொண்டையர்கோன் போலவும், பரமேச்சுரவிண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும், அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும்,  திருநறையூரில் செங்கணான் கோச்சோழன் போலவும் இத்திருப்பதியில் நந்திவர்மன் என்னும் ஓர் அரசன் சில திருப்பணிகள் செய்தான் என்று சொல்லிப் போவார்கள்.

        அண்ட சராசரங்களுக்குத் தலைவனான பெருமான் ஒருவருக்கு மகனாகப் பிறக்கிறார் என்றால் அவர் எத்தகைய பேறு பெற்றிருக்க வேண்டும். கம்சனால் ஆபத்து என்று அறிந்து கோகுலத்தில் யசோதையால் வளர்க்கப்பட்டான். பகவானது செயல்களில் பல நன்மைகள் ஏற்படுவதுண்டு. இத்தகைய பெருமான் நந்திபுர விண்ணகரத்தில் கோயில் கொண்டுள்ளார் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி யாளர் திரு ஆர்
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர்
மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய்
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே    1445

 

தியானம் செய்யக்கூடிய தெய்வம் இவனைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தீர்மானித்து முனிவர்கள் அழகிய இசையால் பாடல்களைப் பாடி வணங்குவார்கள். பாட்டுக்கு ஏற்றவாறு ஆடவும் செய்வார்கள். பூவுலகில் இது போன்ற அழகு மிக்க நகரில்லை என்று தேவர்கள் மலர் தூவ நந்திபுர விண்ணகர ஜகந்நாதன் எழுந்தருளியுள்ள தலம் நந்திபுர விண்ணகரமாகும்.  மனமே! நீ அங்குச் சென்றடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

        இந்தப் பூவுலகம் அவரவரின் மனநிலைக்கு ஏற்றவாறு சொர்க்கமாகவும், நரகமாகவும் திகழ்கின்றது.  தீயகுணங்களைக் கொண்ட கொடிய துரியோதனனுக்கு பார்ப்பதெல்லாம் தீயதாகத் தெரிந்தது. அது போன்று நற்குணங்களைக் கொண்ட தருமனுக்கு அனைத்தும் நல்லவையாகத் தெரிந்தது. எனவே நாம் பார்க்கும் பார்வையில்தான் நன்மை தீமை அறிய  முடிகின்றது. இப்பூவுலகில் பகவான் குடிகொண்டிருக்கும் தலங்கள் அனைத்தும் சொர்க்க பூமியாக இருந்தும் அதனை அறியாமல் இருக்கிறோம் என்ற பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது.

இறைவன் நம்மைச் சோதிப்பது எல்லாம் அவன் தரும் அருட்கொடைகளுக்கு நம்மைத் தகுதியானவர்களாக ஆக்குவதற்குத்தான். அதை நாம் புரிந்து கொண்டு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை இறைவன் பொருட்டால் ஏற்றுக்கொண்டு, இறைவழியில் செயல்பட்டு நற்செயல்கள் செய்துவந்தால் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற முடியும். நன்மைகள் பக்கம் நம்மை அழைத்துச்செல்லும் நற்செயல்களை எப்போதும் செய்வோம், மற்றவர்களையும் அது போன்ற செயல்களைச் செய்யும்படி தூண்டுவோம். இதன் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் இறையச்சத்துடன் திகழும். இறைவனின் அன்பும், கருணையும் நம்மை வழிநடத்தி நன்மைகளைப் பெற்றுத்தரும்.

       

வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக மிக்க பெருநீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.      1446

 

மரக்கலங்கள் நிறைந்த கடலானது ஆகாயத்தின் உச்சிவரை சென்று பொங்கிய ஊழிக்காலத்திலும் பகவானின் ஆணையை மீறாமல் இருக்கும் அன்பர்கள் சரீர நாசத்தில் அழியாதிருப்பார்கள். மனமே! இதை நீ அறிந்திருந்தால் பொங்கி வரும் நீரானது அடித்துக் கொண்டு வரும் நவரத்தினங்களின் ஒளி இருளை அகற்றி எங்கும் ஒளி வீசும் பகவான் வாசம் செய்யும் திருநந்திபுர விண்ணகரத்தை சென்றடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

        ஊழிகாலத்தில் கடல் பொங்கினாலும் பகவானின் கட்டளைகளை மீறாமல் இருப்பவர்கள் அழிய மாட்டார்கள். எவருக்கும் மனதாலும், செயலாலும், சொல்லாலும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும். உண்மை பேசுதல் வேண்டும்.  சுயநலத்தை அகற்ற வேண்டும். தெய்வ நம்பிக்கை வேண்டும். கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும். இத்தகையவர்கள் நித்திய ஜீவன்களாய் வாழ்வார்கள். வேதங்களும் இதை அடிக்கடி நினைவுபடுத்துகின்றன. மனதை அலைய விடாமல் ஒரு நிலையில் வைக்கப் பழக வேண்டும் என்பதை இதன் பொருளாகும்.

       

நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடை யானை  ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே   1447

 

        தேன் நிறைந்த மலர்களைக் கொண்ட மலர் வனங்களில் கார்மேகங்கள் சூழ்ந்த நந்திபுர விண்ணகரத்தில் வாசம் செய்யும் பகவான் பெருமைமிக்க, ஒளி பொருந்திய சக்கரத்தையும், வலபுரிச் சங்கையும் தன் அழகிய கைகளில் ஏந்தியிருக்கிறான்.  அவனைப் போற்றி ஒளி பொருந்திய வேலாயுதத்தை கையிலேந்திய கலியன் பாடிய இப்பாசுரங்களைப் பாடும் பக்தர்களின் பாவங்கள் எல்லாம் முழுவதுமாகத் தீர்ந்து போகும் என்று ஆழ்வார் பாடுகிறார்.

        தேன்மிக்க சோலைகளில்‌ மேகங்கள்‌ வந்து உலாவப்பெற்ற நந்திபுர விண்ணகரில்‌ நித்யவாசம்‌ செய்தருள்பவனான நாதன்‌ விஷயமாகத்‌ திருமங்கை ஆழ்வாரருளிச் செய்த இத்திருமொழியை முறைவழுவாது ஓதவல்ல அடியவர்‌களின்‌ பாவங்களெல்லாம்‌ ஒழிந்துபோகுமென்று இத்திருமொழி கற்றார்க்குப்‌ பயனருளிச்‌ செய்து தலைக்கட்டினார்.

        கலியன் பாடிய பாசுரங்கள் பகவானின் பெருமைகளைச் சொல்வதோடு மக்களின் துன்பங்களைப் போக்கி பேரானந்த பெருவாழ்வுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகின்றன. ஊழிகாலத்தில் பகவானின் கட்டளைகளை மீறாதிருத்தல் என்பதும், இவ்வுலகை சொர்க்கமாக மாற்றுவது என்பதும், மனித உருவில் அவதாரம் எடுப்பினும் அதன் இன்ப துன்பங்களை அனுபவிப்பது போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன. பாவ வலையில் சிக்கியிருந்தாலும் இப்பாடல்களை படிப்பின் அதிலிருந்து விடுபட்டு விடலாம் என்பது இதன் கருத்தாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...