வியாழன், 15 ஜனவரி, 2026

12. திருக்குடந்தை

 

 பெரியாழ்வார்                                                                       பெரியாழ்வார் திருமொழி

 

தூநிலா முற்றத்தே போந்து விளையாட தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட
      வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று
நீ நிலா நின் புகழா நின்ற ஆயர்தம்
     கோ நிலாவ கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி 

வானிலா அம்புலீ! சந்திரா வா என்று

     நீ நிலா நின் புகழா நின்ற ஆயர் தம்

கோ நிலவாய் கொட்டாய் சப்பானி!

     குடந்தை கிடந்தானே! சப்பானி.     78

 

ஆகாயத்தில் விளங்கும் நிலவே! வெண்மையான நிலவொளி வீசும் முற்றத்தில் நீ விளையாடும்படி வா என்று உன்னைப் போற்றுகின்ற ஆயர்குல தலைவரான உன் தந்தை கண்டு ஆனந்தம் கொள்ளும்படி சப்பாணி கொட்டுக. கும்பகோணத்தில் பள்ளிகொண்டு அனைவருக்கும் அருள் பாலிப்பவனே! நீ விரைந்து வந்து சப்பானிக் கொட்டுவாயாக! என்பது இதன் பொருளாகும்.

ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற ஓ! அம்புலி, ஓ! சந்திரனே, வந்து அழகிய முற்றத்திலே விளையாடுவதற்காக வா! என்று அழைத்து, உன்னைப் புகழ்கின்ற இடையர்களுக்கு தலைவனான நந்தகோபர் சந்தோஷிக்கும்படி சப்பாணி கொட்டு! திருக்குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவனே! நீ நின்று சப்பாணி கொட்டு என்பதாக அமைகிறது.

        ஆயர்குலத்திற்குத் தலைவனான நந்தகோபன், கண்ணனுக்குத் தந்தையாக இருக்கக்கூடிய அவன் மகிழும்படி சப்பாணி கொட்டுக என்று யசோதை கூறுகிறாள். அது சமயம் வானத்துச் சந்திரனை உவமை காட்டி விளையாட வரும்படி அவள் சொல்கிறாள். வானத்துச் சந்திரன், விண்மீன்கள் மற்றுமுள்ள அனைத்துமே பகவானின் ஏவலுக்கு உட்பட்டவை. அவன் ஏழு உலகங்களுக்கும் தலைவனாகத் திகழ்கிறான். குடந்தையில் பள்ளி கொண்டு உலகம் முழுவதையும் காக்கும் பெருமானே, நீ கைகொட்டுக என்கிறாள்.

 

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.  173

 

சோலைகளிலும் ஓடைகளிலும் உண்டான நறுமணம், உள்ளே கண்வளர்ந்து இருக்கின்றவனுடைய திருமேனியின் நறுமணமும் சேர்ந்து திருக்குடந்தை, திருக்கோட்டியூர், திருப்பேர் நகர் முதலிய ஊர்களில் பரவி, ஊர் முழுவதும் நறுமணம் வீசுவதை சொல்கிறார். நல்ல மணம் பொருந்திய திருக்குடந்தை, திருக்கோட்டியூர் திருப்பேர்நகர் மற்றும் பல இடங்களிலும் திரிந்து விளையாடும் சங்கம் பிடிக்கும் என் மகனுக்குத் தக்க ஓரு நல்ல அரக்கு நிறம் கொண்ட கோல் கொண்டு வா! என்று அழைக்கிறார்.

        கண்ணனிடம் உள்ள சங்கு தீயவர்களுக்கு அச்சத்தைத் தரும். நல்லோர்களுக்கு அபயத்தைத் தரும். குருக்ஷேத்திரத்தில் கண்ணன் ஊதிய பாஞ்சஜன்யம் என்ற சங்கினால் எதிரிகள் நாடி தளர்ந்து போனார்கள். உடலை வீழ்த்தி என்ன பயன்? ஆன்மாவை அழிக்க முடியாது; என்று பார்த்தனைப் பார்த்துப் பகவான் கேட்டான். எனவே அந்த கைக்குக் கோல் கொண்டு வரச் சொல்கிறார். இங்குக் கோல் என்பது அதர்மத்தை அழிக்கும் ஆயுதமாகும். தருமத்தை நிலைநிறுத்தும் தூண்டுகோலாக நாம் திகழ வேண்டும். அதையே இறைவனுக்கும் அர்ப்பணம் செய்தால் திசை மாறிச் செல்பவர்களும் கரை சேர்க்கப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும்.  

       

ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.  177

 

ஊழிக்காலத்தில் உலகை உண்டு வயிற்றில் வைத்து ஆல் இலைமேல் பள்ளி கொண்டவன் எங்கள் கண்ணன் ஆதிசேஷன் மீது இவன் பள்ளி கொள்பவன்.  பாற்கடலில்  நீண்ட காலம் யோக நித்திரை செய்து வருகிறான். இளம் பிராயத்திலேயே அர்ச்சுனன் மீது அன்பு கொண்டு அருள் செய்தவன். திருக்குடந்தையில் பள்ளி கொண்டவனுக்கு கோல் கொண்டுவா என்று காக்கையைப் பார்த்துப் பாடுகிறார்.

        பாரதப் போரின்போது பீஷ்மர் போரைத் தவிர்க்கப் பல முயற்சிகள் எடுத்தார். கண்ணனும் அர்ச்சுனனும் நர நாராயணர்கள். கண்ணன் யாருடன் இருக்கிறானோ அவன் வெற்றி பெறுவான் என்று ஆலோசனை கூறினார். ஆனால் துரியோதனன் இதை உணராமல் போரிட்டு அழிந்தான். எனவே கண்ணனிடம் நெருங்கி அவனது பிரியத்தை நாம் பெற்றால் வெற்றி நிச்சயம் என்று பொருள்பட ஆழ்வார் கூறுகிறார்.

 

குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதிமுகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த எம் கோவே குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.    188

 

பலப்பல குடங்களை எடுத்து வானத்திலே வீசிக் கூத்தாடும் இப்பூமியில் உள்ள அத்தனை ஆத்மாக்களுக்கும் தலைவனே. பிராமணர்களுக்குச் செல்வம் அதிகம் கிடைத்தால், யாகம் செய்வார்கள். அதுபோல இடையர்களுக்கு அதிக செல்வம் கிடைத்தால் அவர்கள் குடகூத்து ஆடுவார்கள். தலையிலே அடுக்கிய குடம் இருக்க, இருதோள்களிலும் இருகுடங்களிருக்க, இருகையிலும் குடங்களை ஏந்தி ஆகாசத்திலே எறிந்து ஆடுவது குடகூத்து ஆகும். இவனுக்கு இந்த உலக ஐஸ்வர்யங்கள் போல இல்லாமல், பிறந்து படைத்த ஐஸ்வர்யம் ஆகும். இடையர்களுக்கு உள்ள ஐஸ்வர்யமான மிக அதிகமான பசுக்கள் கூட்டம். அதில் இவனுக்கு அந்தக் குறையே இல்லாததால் வந்த செருக்கு ஆகும். அதனால் இவன் குடகூத்து ஆடுகிறான் என்கிறார். இந்தக் கூத்து ஆடுவர் வேறு பலர் இருந்தாலும், இவன் ஆடியதைப் போல வேறு ஒருவரும் ஆடவில்லை என்றும், பரத சாஸ்திரத்திலும் காண அரிதாகும் என்கிறார்.

        குடக்கூத்தில் எப்போதும் வெல்பவன் கண்ணன், நான் என்று அகந்தை கொள்ளும் மாந்தர்களின் செறுக்கை அழிப்பவன். ஆணவமே நமது முன்னேற்றத்தின் தடைக்கல் ஆகும்.  ஆணவம் கொண்ட இரண்யாசுரனை அழிப்பதற்காக நரசிம்ம அவதாரமெடுத்து அவனது அகந்தையினை அடக்கினார். ஆழ்வார் இவையெல்லாம் நமக்கு நினைவுபடுத்தி ஆணவம் மிக்கவர்கள் எவ்விதம் அழிந்தார்கள் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற பொருளில் இப்பாசுரத்தை அருளினார்.

 

ஆண்டாள்                                                                                           நாச்சியார் திருமொழி

       

பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய்தால் போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடந்தைக் கிடந்த குடம் ஆடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே.    628

 

ஆலிலையில் துயின்றிருக்கும் பரந்தாமனின் அன்பு வலையில் அகப்பட்டடு கொண்டிருக்கிற என் மனத்தை வேல் கொண்டு துளைப்பது போல் புத்திக்கு தோன்றியபடியெல்லாம் பேச வேண்டாம். கோலைக் கையில் கொண்டு பசுக்களை மேய்த்தவனாய்க் குடக்கூத்தாடி, களைத்துத் திருக்குடந்தையில் வந்து பகவான் சயனித்துள்ளான். அவன் மார்பில் உள்ள குளிர்ச்சியான துளசி மாலையை எடுத்து வந்து அடர்த்தியும், மென்மையும் கொண்ட என் கூந்தலில் சூட்டுங்கள் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

        பால் உள்ள ஆல் இலையில் உறக்கம் கொண்ட பரமனிடம் அன்புற்று அந்த வலையில் சிக்கி இருந்தவளை, வேலால் துளை செய்தது போல, என் மனம் புண்படும்படி உங்களுக்கு வேண்டியது எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசாமல், தடி கொண்டு பசு மேய்த்த ஆயபாய், திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் குடம் ஆடிய குடக் கூத்தன் போல் கருத்த அழகிய குளிர்ந்த துளசி கொண்டு, அடர்ந்த மென்மையான என் கூந்தலில் சூட்டி விடுங்கள்

        தனது விரகதாபத்தைத் தணிக்குமாறு ஆண்டாள் வேண்டுகிறாள். அசுரனிடம் போரிட்டு பூமித்தாயை மீட்டார். நரசிம்மராகத் தோன்றி பிரகலாதனைக் காக்க இரணியனை வதம் செய்தார். பாண்டவர்களுக்கு இராஜ்ஜியத்தை அளிக்க உதவினார்.  பாஞ்சாலியின் மானம் காத்தவர் பெருமான். தேர்த்தட்டில் அமர்ந்து பார்த்தனுக்கு கீதை போதித்தார். ஆமை வடிவெடுத்து மந்தார மலையைக் காத்தார். இவற்றை நினைத்து ஆண்டாள் பகவான் மீது பேரன்பு கொண்டது போன்று நாமும் அவனிடம் பேரன்பு கொள்ள வேண்டும்.

 

திருமழிசையாழ்வார்                                                                         திருச்சந்தவிருத்தம்

       

இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உக
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?     807

 

அன்று இலங்கை சென்று அதன் அரசனான இராவணன் அஞ்சிக் கலங்கப் பத்துத் தலைகளும் பூமியில் விழும்படி அவனை வீழ்த்தி வெற்றி பெற்ற வீரராகவா! பூணூல் தரித்தவர், வேத சாஸ்திரங்களைக் கற்றவர், நல்லாசிரியரிடம் நூல் பொருள்தனைக் கேட்டு உணர்ந்தவர் வழிபாடு செய்யும் திருக்குடந்தையில் நித்திரை செய்யும் திருமாலும் நீயல்லவா என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

முற்காலத்தில் இராவணனது வலிய பத்துத் தலைகளைப் பூமியில் விழுந்தொழியவும், அவ்வரக்கன் அஞ்சிக் கலங்கவும், இலங்கை சென்று அவனுடைய கூட்டத்தினரை அடியோடு வேரறுத்து வெற்றி வாகை சூடிய மஹாவீரனே! உடம்பிலே யஜ்ஞோபவீதத்தை உடையவரும், வேதங்களை நாக்கின் நுனியில் உடையவரும், நல்லாசிரியர் பக்கலிலே சாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்வர்களுமான வைதீகர்கள் வழிபாடுகள் செய்யும்படியாகத் திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளிய சர்வேஸ்ரனும் நீயன்றோ என்று பாடுகிறார்.

        இப்பாசுரத்தில் யாரெல்லாம் பகவானை வணங்குகிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.  திருக்குடந்தை சான்றோர்கள் வசிக்கும் இடம் என்று இக்குறிப்பில் தெரிகிறது. பகவானின் பராக்கிரமங்களை சாமானியர்கள் புரிந்து கொள்ள இயலாது. மக்கள் தனக்கு வேண்டுவனவற்றை பகவான் தந்தால் வாழ்த்துவார்கள். தரவில்லையென்றால் நிந்திப்பார்கள்  இது அறியாமையின் செயலாகும். ஆனால் வேதம் கற்றவர்கள் எந்நிலையிலும் பகவானை நிந்திக்க மாட்டார்கள். வினைப்பயன் காரணமாக இத்துன்பங்கள் ஏற்படுகின்றன என்று அவர்கள் அறிவார்கள். அத்தகைய சான்றோர் நிலைக்கு நாம் உயர வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே.     808

 

சங்கு வளையனிந்த சீதையின் மேல் மோகம் கொண்ட இராணனின் தேகம் அழியுமாறு யுத்தம் செய்து அவன் தலைகளைக் கொய்தவன் ஸ்ரீராமன். மலர் மணம் நிறைந்த கூந்தலையுடைய மங்கையர் மூழ்கி நீராடுவதால் தண்ணீர் மேல்படி வரை எழும். தடாகங்களை உடைய குடந்தை நகரில் தாமரை போன்ற அங்கங்களையுடைய ஆராவமுதன் நித்திரை செய்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

சங்கு வளைகளைப் கையில் அணிந்துள்ள பிராட்டியினுடைய திருத்தனத் தடத்திலே விஹாரத்தை விரும்பிப் படுபாவியான இராவணனது சரீரம் மாளவேண்டுமென்று முன்பு இலங்கைக்கு எழுந்தருளி அவ்வூரை ஆக்கிரமித்து அவன் தலைகளை அறுத்தொழித்தவனாய், கடல் போன்ற ச்ரமஹரமான திருமேனியை உடையவனான இராமபிரான், பரிமளம் பொருந்திய நீண்ட கூந்தலையுடையவர்களான திவ்யசுந்தரிகள் அவகாரிக்கப் பெற்ற தீரத்தமானது விருத்தி அடைந்திருக்கப்பெற்ற குளிர்ந்த திருக்குடந்தையில் பள்ளிகொண்ட சுந்தரனே! என்று பாடுகிறார்.

        காமம், கோபம், தற்பெருமை, இறுமாப்பு, வெறுப்புணர்வு, போன்ற தீய குணங்கள் படைத்தவர்கள் அசுரர்கள் என்று பகவான் கூறுகிறார். இவர்கள் இத்தகைய தீய குணங்களில் வாழ்ந்து துன்பம் கொள்கிறார்கள். சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள செய்யத் தக்க செயல்களைச் செய்வதற்கு முயல வேண்டும். இவை அனைத்தும் குடந்தை ஆராவமுதனை சரணடைந்து நாம் நல்லோர்களாக வாழ முயற்சிப்போம் என்பது கருத்தாகும். இராவணனன் காமத்தினால் சீதையைக் கவர்ந்து சென்றான்.  காம மயக்கம் அவன் அறிவைக் கெடுத்தது. காமம் என்பது ஒரு மனிதனை அழிக்கும் எமன் என்பதை ஆழ்வார் இப்பாசுரத்தின் வாயிலாக எச்சரிக்கை செய்கிறார்.

 

 மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?     809

 

அரக்கர்களான இரட்டை மருத மரங்கள் முறிந்து விழும்படி உரலுடன் தவழ்ந்து சென்றாய்.  மதம் கொண்ட குவலயாபீடம் என்ற யானையின் மத்தகத்தில் அதன் வலிமை அழியும்படி தந்தத்தைப் பிடுங்கினாய். அதனால் மற்றவர்களை மகிழ வைத்த புருஷோத்தமா! குதிரை வடிவில் வந்த கேசிகாசுரனின் வாயைப் பிளந்த கேசவா! உலகளந்த பாதங்களை உடைய திருவிக்கிரமா! வேதம் கற்றவர்கள் உன்னிடத்தில் வரம் பெற்று போகும்படி திருக்குடந்தையில் நித்தியவாசம் செய்யும் திருமாலும் நீயல்லவா என்று ஆழ்வார் மனம் நெகிழ்ந்துப் பாடுகிறார்.

        வேதம் கற்றவர்கள் அற்ப பொருட்களைப் பகவானிடம் கேட்கமாட்டார்கள். பகவானிடம் ஐக்கியமாகவே விரும்புவார்கள். பகவான் அவர்களுக்கு யோகம் பயிலும் முறையை அருள்வான். பெருமானே அந்த யோகத்தை நமக்குக் கற்றுத் தருவான் என்றும் கூறுகிறார். அற்ப வாழ்வினை களைந்துவிட்டு திருக்குடந்தை சாரங்கனை சரண் அடைந்து எம்பெருமான் தரும் யோக வாழ்வினை மேற்கொண்டு வானுலகப் பேற்றினைப் பெறுமாறு உலக மக்களைக் கேட்டுக் கொள்கிறார்.  இப்பாசுரத்தில் மூலம் இது தெளிவாகிறது.

       

சாலி வேலி தண் வயல் தடங்கிடங்கு பூம்பொழில்
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே.     810

 

செந்நெல் பயிர்களை வேலியாக உடைய குளிர்ச்சியான வயல்களையும், பரந்த அகழிகளையும், மலர்த்தோட்டங்களையும்,  அழகிய உயர்ந்த மாளிகைகளையும் உடைய குளிர்ந்த திருக்குடந்தையில் அருள் புரியும் கோவிந்தா! காலநேமி, வக்கரதந்தன், கரன், முரன் முதலான அரக்கர்களின் தலைகளை எமனிடம் சேருமாறு சார்ங்கம் என்ற  வில்லை வளைத்த அழகிய கைகளையுடைய வீரனே! என்று புகழ் பாடுகிறார் ஆழ்வார்.

காலசேமி என்பவன்‌ இராவணனுடைய மாதுலன்‌, இவன்‌, தாரகாசுர யுத்தத்தில்‌ எம்பெருமானால் கொல்லப்பட்டவன்‌, தக்தவக்தான்‌ என்பவன் கண்ணபிரான்‌ ருக்மணிப் பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து போர் செய்த அரசர்களில்‌ இன்னொருவன்‌ முரன்‌ என்பவன் நரகாசுரனுடைய மந்திரி. கரன்‌ என்‌கிற ஒரு ராட்ஷசனாக இருப்பினும்‌ ௮வன்‌ இங்கே விவக்ஷித்தவனல்லன்.‌ அவன்‌ ராமாவதாரத்தில்‌ கொல்லப்பட்டான். இப்பாட்டில்‌ கிருஷ்ணவதார சரிதங்கள்‌ அநுஸந்திக்கப்படுவதால்‌ கரன்‌ என்பது முரனுக்கு அடைமொழியாயிற்று.

        அசுரர்கள் மக்களுக்குச் செய்த தீங்கினை நமக்கு எடுத்துக் காட்டி அவர்களின் முடிவு எவ்வாறு அமைந்தது போன்ற கருத்துக்களை ஆழ்வார் தெரிவிக்கிறார். தீயவர்கள் மக்களுக்குச் செய்யும் கொடுமைகள் நீண்ட நாட்களுக்குத் தொடராது என்ற கருத்தினை வெளிப்படுத்தத் திருக்குடந்தையில் பெருமான் வாசம் செய்கிறார். இது தீயவர்களுக்கு விடப்படும் சவாலாகக் கருதி மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அருள் உள்ளத்தில் ஆழ்வார் இப்பாசுரத்தைத் தந்துள்ளார்.

       

செழுங் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று
எழுந்திருந்து தேன் பொருந்து பூம்பொழில் தழைக் கொழும்
செழுந் தடங் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?     811

 

திருமலையிலே கனத்த பனிப்பொழியவும், உயர்ந்து வளர்ந்த மூங்கில்கள் பனிக்கட்டிகளின் பாரத்தால் தரையில் வளைந்து சூரியனின் கதிர்கள் வீசுகையில், பனி உருகி மூங்கில் காய்ந்து விண்ணை முட்டும்படி உயர்ந்து நிற்கும். அத்தகைய திருவேங்கட மலையிலே நீ நின்ற கோலத்தில் காட்சி தருகிறாய். வண்டுகள் உயரே எழுந்து மறுபடி கீழே வந்து தேன் பருகி வாழும் தழைத்த பூந்தோட்டங்களையும், நீர் நிரம்பிய தடாகங்களையும் கொண்ட திருக்குடந்தையில் நித்திரை செய்கிறாய் என்று ஆழ்வார் கூறுகிறார்.

‘’நிலையார நின்றான்‌ தன்‌ நீள்கழலே அடை நெஞ்சே'' என்று நிலையழகிலே ஈடுபடுவோர்க்கும் ‘கிடந்ததோர்‌ கிடக்கை கண்டு மெங்ஙனம்‌ மறந்து வாழ்ந்தேன்‌’’ என்று சயனத்‌ திருகோலத்திலே ஈடுபடுவார்க்கும்‌ போக்யமாகத்‌ திருவேங்கட மலையில்‌ நின்‌றருளியும்‌ திருக்குடந்தையில்‌ சாய்ந்‌தருளியும்‌ அடியார் பக்கலுள்ள வ்யாமோஹத்தின்‌ காரியமன்‌றோ என்கிறார்.

        இப்பாசுரத்தில் நின்றான்-கிடத்தான் தத்துவத்தை ஆழ்வார் உணர்த்துகிறார்.  திருமலையில் நின்ற கோலத்தில் உள்ள பெருமான் பக்தர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்குகிறார். குடந்தையில் சயனக் கோலத்தில் அழிவில்லாத பேரின்ப வாழ்க்கையைத் தருகிறார். பிறவித் துன்பத்தை அடைய சாரங்கனை சரண் அடைய வேண்டும். இவ்வுலக வாழ்வினை வளமோடு வாழ நின்ற கோலத்து பெருமானும், பரமபதம் பெற கிடந்த கோலத்து பெருமானையும் பக்தி கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை இப்பாசுரம் மூலம் அறியலாம்.

       

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே!    812

 

கேசவா! சீதையைத் தேடி காட்டில் அலைந்த உனது கால்கள் வலிக்கின்றனவா.?  வராக அவதாரமெடுத்து பூமித்தாயை மீட்டெடுத்து வந்த களைப்பில் உனது திருமேனி துவண்டதோ? தடையாய் இருந்த மலை, காடுகளைக் கடந்து வரும் காவிரி கரையில் உள்ள திருக்குடந்தையில் நித்திரை செய்பவனே! உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன் பக்தன் வந்துள்ளேன். எழுந்து பேசுவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

        ஆழ்வார் பகவானிடம் உரிமையுடன் எழுமாறு கூறுகிறார். பெருமான் சற்றே எழ முயற்சிக்கையில் ஆழ்வார் அவரைச் சிரமம் கொள்ள விடாமல் தடுத்துவிட்டார். அதனால் பெருமான் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார். இறைவனின் பரம்பொருள் தன்மையைக் காலமும் கணக்கும் நீத்த காரணன் என்கிறான் கம்பன். இதையே Time and Space factor  என்று அறிவியல் கூறுகிறது. பரம்பொருளே வெவ்வேறு வடிவங்களாக வெளிப்படுகிறான் என்று தத்துவங்கள் பகர்கின்றன. அதை ‘ஏகம் சத்’ என்கிறது வேதம். ஒன்றானது பிரம்மம்; அதன் பேர் உண்மை என்றார் பாரதி.  எல்லா காலத்துக்கும் பொருந்துவது இந்த உண்மையே.

        குடந்தை கிடந்த பெருமாளையே, ஆழ்வார், தான் பெரியவன், உன்னைத் தரிசிக்க வந்திருக்கிறேன், நீ படுத்துக்கொண்டு உள்ளாயே, ”எழுந்திருந்து பேசு வாழி கேசனே” என்று கூறுகிறார்.   திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், பக்திஸாரர் என்றும் போற்றப்படும் திருமழிசை ஆழ்வாரின், “எழுந்திருந்து பேசு என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க, பாதி எழத் தொடங்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனேஎன்று வாழ்த்தி, இனி எழுந்திருக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில் பாடினார். அந்தத் திருக்கோலத்திலேயே தலையைச் சற்று உயர்த்தி வலது கையை மடக்கி, தூக்கிய தலையைத் தாங்கிக் கொள்ளும் கோலத்தில் உத்தான சயனத்தில் இங்கு எம்பெருமான் அருள் பாலிக்கிறான்.

 

திருமழிசையாழ்வார்                                                             நான்முகன் திருவந்தாதி

 

நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்  2417        

 

திருக்குடந்தை, திருவெஃகா, திருவள்ளூர், திருவரங்கம், அன்பில் மற்றும் திருப்பாற்கடல் ஆகிய திவ்யதேசங்களில் ஆதிசேஷன் மேல் அரிதுயில் கொள்ளும் எம்பெருமான், ஆதிமுதல்வன் அடியார்கள் உள்ளத்திலும் புகுவதற்கு காத்துக் கிடக்கிறான். நாம் அவனை நெருங்கினால் அவன் விரைந்து நம்மில் புகுவான். ஆனால் நாம் இத்தகைய பெருவாழ்வினைப் புறந்தள்ளி அழியும் பொருட்களுக்குப் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம். எனவே பகவானை அடைவதற்கு வாழும் காலத்திலிருந்தே அவனை நெஞ்சில் நிறுத்த முயற்சிக்க வேண்டும். எம்பெருமான் நம் உள்ளத்தில் வந்து நித்தியவாசம் புரிவதற்கு தயாராக உள்ளார். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.  

பல புனிதத் தலங்களில் சயனம் கொண்டிருக்கும் ஆதி முதல்வனான பகவான் அடியார்களின் உள்ளத்திலும் புகுவதற்காகக் காத்திருக்கிறான். நாம் அவனை நெருங்கினால் அவன் நம்மை ஆட்கொள்ளத் தயாராக இருக்கிறான். ஆனால் நாம் பகவானைப் புரிந்து கொள்ளாமல் மெத்தனமான உள்ளோம். பேரானந்தப் பெருவாழ்வினைப் பெறுவதற்கு நாம் எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. அழியும் பொருட்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறோம். பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழன்றுவிட்டு இறுதியில் மரணத்தை நோக்கிப் பயணிக்கின்றோம். பகவான் நமக்கு எதுவும் வழங்கவில்லை என்று புலம்பியபடியே இம்மண்ணுலக வாழ்வினை முடிக்கிறோம்.

 

திருமங்கையாழ்வார்                                                                           பெரிய திருமொழி

 

ஆவியே! அமுதே! என நினைந்து உருகி அவர் அவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.    949

 

என் உயிரே! அமுதமே! என்று மங்கையரிடம் மோகம் கொண்டு பிதற்றி அவரை நினைந்து உருகி அப்பெண்களின் தனங்களை துணையாகக் கொண்டு பாவியாகிய நான் இது நித்யமல்ல என்பதை உணராமல் நீண்ட நாட்களாக வாழ்வை வீணடித்தேன். அழகு மிக்க இறக்கைகளைக் கொண்ட ஆண் அன்னப் பறவை தன் பேடையோடு சேர்ந்து நீந்தி வரும் நீர் சூழ்ந்த திருக்குடந்தையில் ஆராவமுதனை வணங்கிப் பாமாலை பாட நாராயணா என்னும் திருநாமம் சிறந்ததென்று கண்டு கொண்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

பாவியான யான், "ஆவியே, அமுதே" என்றெல்லாம் பிதற்றிய வண்ணம், சகலவிதமான சிற்றின்ப எண்ணங்களுடன் பெண்டிர் பின் அலைந்து, நாட்களை வீணாக்கி, அறிவின்மையால் என் வாழ்வைத் தொலைத்தேன்! அப்படிப்பட்ட நான், தன் துணையோடு மட்டுமே சேரும் அன்னங்கள் வாழும் வற்றாத நீர்ச்சுனைகள் மிக்க திருக்குடந்தைப் பெருமானை அடைந்து, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேன்! இப்பாசுரத்தில் "தூவிசேரன்னம் துணையொடும் புணரும்" என்று ஆழ்வார் பாடும்போது, பெருமாளை விட்டு என்றும் பிரியாமல் அவர் நெஞ்சில் குடியிருக்கும் பிராட்டியின் தன்மையைக் குறிப்பிடுவதாகப் பெரியோர் கூறுவார்கள்.

        பெண்ணாசையில் மூழ்கியவர்கள் பிறவிப் பிணியைக் கடக்க முடியாது. அது நமது ஆத்மாவை உணரவிடாமல் தடுக்கும்.  இத்தகைய ஆசையை வைத்துக் கொண்டு ஆண்டவனை அடைய முடியாது. எனவேதான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். அந்த ஆசையை விரட்டும் மந்திரம் ‘நாராயணா’ என்னும் மந்திரமாகும். இத்தகைய ஆசையிலிருந்து என்னைத் தெளிய வைத்தது இம்மந்திரமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

       

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் நாராயணா என்னும் நாமம்.    954

 

பாடல்களை இயற்றும் புலவர்களே! வாருங்கள்! நீங்கள் உயர்வு பெற ஒன்று சொல்கிறேன்.  நீங்கள் புகழ்ந்து பாடுவோரின் குடிப்பிறப்பை அறிய மாட்டீர்கள். இன்று செல்வந்தராயுள்ள நீங்கள் முன்னாளில் ஏழை என்பதை அறிய மாட்டீர்கள். அவர்கள் குணமும் தெரியாது.  ஆனால் அவர்களை வேண்டுவனவற்றைத் தரும் கற்பகமே! என்று கூறுவீர்கள். கற்றாரை காப்பவரே! என்று பலவாறு புகழ்வீர்கள். நீங்கள் திருக்குடந்தைக்கு வந்து ஆராவமுதனை தரிசித்து ‘நாராயணா’ என்னும் நாமத்தைச் சொல்லிப் பாமாலை பாடினால் கடைத்தேறுவீர்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பக்தியுடன் பகவானைத் தொழும் பாடல்களை ஆண்டவன் விரும்புகிறான். பாடல்களை இயற்றுபவர்கள் பகவானை மட்டும் நினைத்துப் புகழ்ந்து இயற்ற வேண்டும்.  இறைவனை பற்றிப் பாடல்கள் எழுத எழுத அந்த இறைவன் அவன் மனதில் குடிபெயர்வான். அதற்குத் தகுதியானவர்களாக நாம் மாற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஆழ்வார் இப்பாசுரம் மூலம் நமக்குத் தெரிவிக்கிறார்.

 

ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே!    991

 

திருவூரகத்தில் வாழ்பவன், திருக்குடந்தையில் ஆலயம் கொண்டவன், பகைவர்கள் எதிர்த்தபோது வில்லின் இருமுனையும் வளையுமாறு செய்து அசுரர்களின் தேர்ப்படையைத் தூளாக்கியவன் எங்கள் ஸ்ரீராமபிரான். வற்றாத காவிரி நீர் வளத்தால் சூழப்பட்ட திருப்பேர் நகரில் வாசம் செய்பவன். ஆயிரம் திருநாமங்களைக் கொண்டவன்.  வண்டுகள் ரீங்காரமிடும் மலர்மாலைகளை அணிந்தவன். தாரா என்னும் நீர்ப்பறவை நிறைந்த நிலங்களால் சூழப்பட்ட சாளக்கிராமத்தை மனமே! நீ அடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

        இவ்வுலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீராமன் திகழ்ந்தான். திருமாலின் அவதாரமாக இருப்பினும் மனிதப் பிறவிக்கேற்றவாறும், அதன் வினைகளுக்கேற்றவாறும் துன்பங்களை அனுபவித்தான். இருப்பினும் உத்தமனாகத் திகழ்ந்தான். எனவே இராமனின் திருநாமங்களைச் சொன்னாலே நம் வாழ்வில் சூழ்ந்துள்ள இருள் விலகி ஓடிவிடும். எனவே மண்ணுலகில் வாழும் மனிதர்களின் மனங்களையும் அங்குச் செல்லுமாறு வழிகாட்டுகிறார் ஆழ்வார்.

       

அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே  1078

 

கண்ணனாக அவதரித்த காலத்தில் நப்பின்னையுடனும், மலர் மகளோடும் அன்புடன் கலந்திருப்பவன். அசுரர்களிடம் இரக்கமின்றி இருப்பவன் என்றும் உறையும் ஊர் திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் முறையே நின்றுவனும், அமர்ந்தவனும், இருந்தவனும், நடந்தவனும் உள்ள எம்பெருமான் இந்நான்கு நிலைகளில் நீர்மலையில் காட்சி தருகிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

        இப்பாசுரத்தில் ‘ஆயர் குலக்கொடி’ என்பது நப்பின்னையைக் குறிப்பதாகும். ‘அணிமாமலர் மங்கை’ என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். அவளின் அம்சமானவளே ருக்மணி பிராட்டியாகும். மூன்று பிராட்டிகளை அடைய அசுரர்களை அழித்தவனாவான். அரக்க குணம் கொண்ட துரியோதனனை குருக்ஷேத்திரத்தில் பகவான் அழித்தார்.  இராவணனை இலங்கை போரில் அழித்தார். இரண்ய சிசுபாலர்களை அழித்து மக்களைக் காத்தார். பலரை துன்புறுத்தி வந்த கம்சனையும் அழித்தார். எனவே அசுர குணம் கொண்டவர்களுக்குப் பகவான் இரக்கமே காட்டமாட்டார் என்பது இப்பாசுரவழி அறியப்படுகிறது.

       

வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த
தோளாளா என் தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே.     1202

 

பூமியை அளந்த திருவடிகளை உடையவனே! குளிர்ச்சியான திருக்குடந்தையை ஆளுகின்ற சாரங்கபானியே! கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்தவனே! வாள் போன்ற என் விழிகள் நீரைப் பொழிய இளம் தனங்களில் பசலை நோய் படரத் தினந்தோறும் உன்னை நினைத்து உருகும் எனக்கு நீ துணையாக வர வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

வயலாளி மணவாளனையே இடைவிடாது நெஞ்சில் பாவனை செய்துகொண்டிருந்ததனால், அவன் கண் முன்னே வந்து தோற்றுகிறவனாகக் கொண்டு அவனோடு நேரே வார்த்தை சொல்லுவதாகச் சில பாசுரங்கள். பிராட்டி அசோகவனத்தில் திருவடியை நோக்கிப் பெருமாளுக்குத் தாதுமொழிகள் சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையிலே பெருமாளையே ஸம்போதநம் பண்ணி ‘நாதா! என் விஷயத்தில் சிறிது அபராதம் பண்ணின காகத்தின் விஷயத்தில் உன் பராக்கிரமத்தைப் பெரிதாகக் காட்டினாய்; தங்களிடமிருந்து என்னை அடியோடு பிரித்துக் கொணர்ந்து சிறை வைத்திருக்கின்ற மஹாபாபியான இராவணன்மேல் பொறுமை பாராட்டி நிற்கின்றாய். இஃது என்ன? என்றிப்படிப்பட்ட சில வார்த்தைகளை முன்னிலேயாகவே சொன்னதுபோல இப்பரகால நாயகியும் வயலாளி மணவாளளே முன்னிலையாக்கிச் சில பாசுரங்கள் பேசுகிறாள்.

        ஆழ்வார் பகவானின் பெருமைகளை இங்குப் பறைசாற்றுகிறார். தன்னைத் தலைவியாகப் பாவித்து அவர் பெருமைகளை நம் நெஞ்சத்தில் பதிக்கின்றார். பெருமானை அடைய முடியாததால் மனம் துன்பங்கொண்டு பசலையால் வாடுகிறாள். இதனைக் காமம் என்று நினைக்கக் கூடாது. இதனை ஆத்ம ஐக்கியமாகச் சிந்தித்தல் வேண்டும். அற்ப பொருளின் மீது பற்று கொண்டுள்ளதால் இத்தகைய தெய்வீக நிலையை நாம் புரிந்து கொள்ள இயலவில்லை எனலாம். பக்தியுடன் மனம் பக்குவப்பட்டு இந்நிலையை அறிய முயற்சித்தல் நன்று என்ற கருத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.

 

 குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடம் ஆடி
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ?
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே?      1205  

 

குயில்கள் பாடுகின்ற பொழில்களால் சூழப்பட்ட குளிர்ச்சியான திருக்குடந்தையில் அருளும் குடக்கூத்தாடிய பெருமானே!  தூங்காத கண்களையுடைய நான் உன்னை நினைத்துத் துயரடைகின்றேன். வயலாளி மணாளா!  முயல் ஆடும்  சந்திரன் ஆகாயத்தில் தோன்றியவுடன் என் வளையல் கழன்று விழுகின்றதே. தாகத்தால் மெலிந்த என்னை இத்தனை வேதனைகளுக்கிடையே மேனி நிறத்தையும் பசலை படரச் செய்கின்றாயே! என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.

இப்பாமாலையில் தலைவி பிரிவுத்துயரால் வருந்துகிறாள். உடல் மெலிந்து கைகள் சிறுத்துவிட்டபடியால் அணிந்திருந்த கைவளை நழுவி விழுகின்றது. என் வேதனையைத் தீர்க்க நீ வராமல் இருப்பது ஏனோ? என்று வருந்திக் கூறுகிறாள். நாம் எதற்காகவோ கண்ணீர் வடிக்கிறோம். ஆனால் பகவானுக்காகக் கண்ணீர் வடிக்கிறோமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தலைவியின் இந்தக் கண்ணீர் மோகத்தினால் வந்ததல்ல. அன்பால் வந்த கண்ணீர் என்கிறார் ஆழ்வார்.

        இவ்வுலகில் தம் மனைவி மக்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்கள். செல்வம் வேண்டும், பதவி வேண்டும், பொருள் வேண்டும். பட்டம் பதவிகள் வந்து சேர வேண்டும் என்றெல்லாம் அவனிடம் வேண்டுகிறோம். ஆனால் நமக்கு உயிர் கொடுத்து நம்மைப் படைத்த ஆண்டவனுக்காக யாரும் கண்ணீர் சிந்துவதில்லை. ஆனால் தலைவி பகவானுக்காக அழுகிறாள். இது அன்பால் வந்தது. இது போன்ற அன்பை நாமும் பெற வேண்டும் என்று ஆழ்வார் விரும்புகிறார்.

 

வார் ஆளும் இளங் கொங்கை வண்ணம் வேறு
     ஆயினவாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள் இப்
     பெண் பெற்றேன் என் செய்கேன் நான்?
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்
     ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த
தேர் ஆளன் என் மகளைச் செய்தனகள்
     எங்ஙனம் நான் செப்புகேனே?     1394     

 

என் புதல்வியானவள் கச்சுக்குள் அடங்கும் தனது இளம் தனங்களின் நிறம் வேறுபட்டதை எண்ணிப் பார்க்கவில்லை. எம்பெருமானது திருநாமங்களைத் தவிர வேறெதுவும் பேசுவதில்லை.  இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்ற நான் என் செய்வேன். குளிர்ச்சி மிகுந்த திருக்குடந்தையில் அருள் புரியும் மாலையணிந்த சாரங்கன் பாண்டவர்களுக்காகப் பாரதப் போரில் தேரைச் செலுத்தியவன் என் மகள் செய்தவற்றை நான் எவ்விதம் எடுத்துரைப்பேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

பரகால நாயகி தனது கச்சுக்குள் அடங்கும் அவளது இளம் கொங்கைகளின் நிறம் மாறிப் போனதை அவள் நினைத்துப் பார்க்கவில்லை. நினைப்பதெல்லாம்  எம்பெருமானின் திருநாமங்களையே. அதைத் தவிர வேறொன்றை அவள் நினைப்பதுவும் இல்லை. அவள் பேசுவதும் இல்லை. இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றவனாகிய நான் இங்கே என்ன செய்வேன்? குளிர்ச்சி பொருந்திய குடந்தைதன்னில் அருள் புரிபவனாம், மாலையணிந்த சக்ரபாணி. பாண்டவர்களுக்காக அன்று பாரதப்போர் தன்னில் தேரைச் செலுத்தியவன். என் மகளைச் செய்தவற்றை எப்படி நான் உரைப்பேன்? என்கிறாள் திருத்தாயார்.

        தன்னைத் தாயாகப் பாவனை செய்து தன் ஆதங்கத்தை ஆழ்வார் வெளியிடுகிறார். சிங்கத்தின் வலிமை வேறொரு சிங்கம்தான் அறியும். சிறு முயல் அறிய வாய்ப்பில்லை. அது போன்று பகவான் மீது பற்று கொண்டவர்கள் அற்ப விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். அவனை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்.  உலகியல் இன்பங்கள் அவர்களைக் கவராது. பகவானால் ஈர்க்கப்பட்டவர்கள் வேறு எதிலும் அக்கறை செலுத்துவதில்லை என்பதை இப்பாசுரம் மூலம் அறியலாம்.

       

பொங்கு ஏறு நீள் சோதிப் பொன் ஆழி தன்னோடும்
சங்கு ஏறு கோலத் தடக் கைப் பெருமானை
கொங்கு ஏறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே.    1526

 

மென்மேலும் அதிசயித்து வருகின்ற அளவற்ற பிரகாசத்தையுடைய சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்சஜன்னியம் என்ற சங்கினையும் பெரிய கைகளில் தரித்த பெருமானை, தேன் மிகுந்து காணப்படும் நந்தவனங்களைக் கொண்ட திருக்குடந்தையில் சயனித்திருக்கும் சாரங்கபாணியைத் தேடி திருநறையூரில் வணங்கினேன் என்று பொருள்பட பாடுகிறார் ஆழ்வார்.

ஒளிபொருந்திய சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்ச சன்யத்தையும் ஏந்தியவன் அசுரர்களை அழித்து நம்மைக் காத்துள்ளான். தருமம் எங்கே உள்ளதோ அங்கேதான் பகவானின் சகாயம் கிடைக்கும். தருமத்தில் பிடிப்புள்ளவர்களாக வாழ வேண்டும் என்ற நீதியை மறக்கக் கூடாது. துரியோதனனின் சூழ்ச்சியால் நாட்டை இழந்த பாண்டவர்களின் மேல் பரிவு ஏற்பட்டு அவர்களைக் காத்தான். எனவே நாம் தருமத்தை தவறாமல் கடைபிடித்தால் அந்த இறைவன் நம்மைக் காப்பான். தருமத்திற்கு துணை நிற்பவனான எம்பெருமான் திருக்குடதையிலும் திருநறையூரிலும் கோயில் கொண்டுள்ளான்.  அவனைத் தரிசித்து வளமோடு வாழுங்கள் என்று  ஆழ்வார் கூறுகிறார்.

       

 கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.     1538

 

திருக்குடந்தையில் சயனித்திருக்கும் திருமால், வராகமாகிய பூமியை சமுத்திரத்திலிருந்து மீட்ட எங்கள் பகவான், பகைவர்களின் கோட்டை அழியுமாறு கொடிய அசுரர் வாழும் இலங்கையை நிர்மூலமாக்கியவன், உலகை அளந்த திருவிக்ரமனை நாம் வணங்க வேண்டுமென்றால் நாம் ‘நமோ நாராயணா’ என்று சொல்லி வணங்க வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.

        திருகுடந்தையில் பொருந்தி பள்ளிகொண்டிருக்கும் அழகான குணபூர்ணனான பெருமானும் வராகமாக அண்டத்திலிருந்து பூமியை  விடுவித்தவனும்  சாமர்த்யமான எங்கள் பெருமானும்  சத்துருக்களின் கோட்டை அழியும்படியாகக் கொடிய அரக்கர்களின்  இலங்கையை வீரத்தால் அழித்தவனும்  உலகை இரண்டு அடிகளால் அளந்த  ஆச்சர்யமான பெருமானின் நாமங்களைச் சொல்வதால் அதுவே  ‘நமோ நாராயணா’’ என்னும் மந்திரமாகும்.

        நம்மிடமுள்ள அசுர எண்ணங்களை  விரட்டுகின்ற உறுதியான தீர்மானத்தின் காரணமாகவே மீண்டும் மீண்டும் ஆழ்வார் இதை நினைவுபடுத்துகிறார்.பாசுரங்களைத் தினசரிபடிக்குப் பழக்கம்நம்மைக் கரையேற்றிவிடும் என்று ஆழ்வார் கூறுகிறார். நம்பிக்கை நமக்கு உயர்ந்த துணையாகும். எனவே பகவானின் நாமம் இட்டுக் கூற வேண்டுமானால் அது “நமோ நாராயணாய” என்ற தாரகமந்திரத்தைத் தினசரி ஜபித்து எல்லா வெற்றிகளையும் அடைவோமாக. 

       

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்
     மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து தென்புலர்க்கு என்னைச்
     சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்
     கோவினை குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை
     எம்பிரானை எத்தால் மறக்கேனே  1570

 

நான் இவ்வுலகில் பிறந்தவுடன் தானாக வந்து என் நெஞ்சில் குடிகொண்டவன். மற்றொருவர் மனத்தை இருப்பிடமாகக் கொள்ளமாட்டான். அடியேனுடைய சிந்தனையால் வந்த அவன் என்னைக் கால தூதர்களிடம் காட்டிக் கொடுக்கமாட்டான். இத்தகைய பேற்றினை நான் பெற்றுள்ளேன். இவ்விதமிருக்க மலர்வனங்கள் சூழ்ந்துள்ள திருக்குடந்தையில் அருள் புரிபவனை, குடக்கூத்தாடிய என் அப்பனை, என் முன்னோர்களுக்குத் தந்தையான திருநறையூர் நம்பியை என்னால் எவ்விதம் மறக்க இயலும் என்று ஆழ்வார் கூறுகிறார்.

நீ என் உள்ளத்தில் வந்துவிட்டாய். இந்தப் பேற்றினை நான் இழக்க மாட்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார். பகவான் நம் உள்ளத்தில் எழுந்தருளிவிட்டால் நம்முடைய துன்பங்களுக்கு முடிவு வந்துவிடுகிறது. ஆனந்த வாழ்வுக்கு நாம் தகுதியாகி விடுகிறோம். இப்படிப்பட்ட பெரும் பாக்கியத்தை யாராவது இழப்பார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது அந்தப் பெரும் பாக்கியத்தை நாம் அடைய வேண்டும் என்ற திருவுள்ளத்திலேயே ஆழ்வார் இப்பாசுரத்தை அருளியிருக்கிறார்.

        பகவான் நம் உள்ளத்தில் எழுந்தருளிவிட்டால் நம்முடைய துன்பங்களுக்கு முடிவு வந்துவிடுகிறது. ஆனந்த வாழ்வுக்கு நாம் தகுதியாகி விடுகிறோம். இப்படிப்பட்ட பெரும் பாக்கியத்தை யாரேனும் விட்டு விடுவார்களா? என்று கூறி அத்தகைய பெரும் பாக்கியத்தை நாம் அடைய வேண்டும் என்ற திருவுளத்தில் ஆழ்வார் கூறுகிறார்.

       

பேரானைக் குறுங்குடி எம் பெருமானை *திருத்தண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும்
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென் அரங்கத்தே.     1606

 

        திருப்பேர் நகரில் சயனம் கொண்டிருக்கும் அப்பக்குடத்தானை, திருக்குடந்தையில் பள்ளி கொண்டிருக்கும் சாரங்கபாணியை, ஒளி பொருந்திய கச்சினை அணிந்த அழகான தனங்களையுடைய இலக்குமியின் கணவனை, எத்தனை முறை தரிசித்தாலும் திருப்தி அடையாத இனிய அமிர்தம் போன்றவனை, திருவழுந்தூரில் நின்றருளும் மழை மேகம் போன்ற ஆமருவியப்பனை தரிசித்து ஆனந்தமடைந்தேன்’ என்கிறார் ஆழ்வார்.

        நாம் அனுபவிக்கும் அத்தனை பொருட்களும் சலிப்பைத் தரவல்லன. செல்வம், பொன், பொருள் இவை அத்தனையும் நமக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்காது. அதிக பணம் வந்தால் ஒரு சலிப்பு வந்துவிடும், அமைதி நம்மை விட்டுச் சென்று விடும். ஆனால் பகவானிடம் ஏற்படுகின்ற அன்பு, உறவு, ஐக்கியம் என்பது எக்காலத்திலும் திகட்டாத பேரின்பமாகும். அந்த உறவை அடைவதே நாம் இலட்சியமாகக் கொண்டு வாழ்தல் வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.       

       

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ?
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா உன்னை என்றும் மறவாமைப் பெற்றேனே.     1732

 

எம்பிரானே! என் உள்ளத்தினுள் நீ வந்து புகுந்தாய். புகுந்தபின் திரும்பிப் போவதைப் பற்றி நினைக்கவே இல்லை. இந்த ஒரு பாக்கியம் எனக்குப் போதாதோ? பூங்கொத்துக்கள் நிறைந்த நந்தவனங்கள் சூழ்ந்த திருக்குடந்தையில்  எழுந்தருளியிருக்கும் தேவகி  மைந்தனே! உன்னை என்றும் மறவாமல் இருக்கும் பேறு பெற்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        கடும் தவம் கொண்டவர்களும் பகவான் எதிரே தோன்றியதும் சுயநலமாகச் செயல்பட்டு எனக்கு மரணம் வரக் கூடாது, அண்டங்களை நானே ஆள வேண்டும், மனிதர்களாலும் தேவர்களாலும் எனக்கு ஆபத்து வரக் கூடாது என்ற வகையில் வரம் கேட்கிறார்கள். ஆனால் ஆழ்வாரோ ‘இறைவா நீ என் மனத்தில் நீங்காமல் இருக்க வேண்டும். அதன் பலனாய் நான் எவ்வித தீவினைகளும் செய்யாதிருத்தல் வேண்டும்’ என்று கூறி தான் அப்பாக்கியத்தைப் பெற்று விட்டதாகக் கூறுகிறார். இதை மக்களுக்கும் ஒரு உபாயமாகத் தெரிவிக்கிறார்.  உலகத்து இன்பங்களை நாடாதீர். ஆரம்பத்தில் சுகமளிப்பதாக இருப்பினும் பின் துன்பத்தில் கொண்டு சேர்க்கும். எனவே இறைவன் உங்கள் உள்ளத்தில் புகுவதற்கு இடம் கொடுங்கள் என்கிறார் ஆழ்வார்.

 

தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்
     சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
     செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல் அடியார் வணங்கப்
     பல் மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்
     அச்சோ ஒருவர் அழகியவா.    1759

 

இதழ்கள் மலர்ந்த நீலோற்பவங்கள் மணம் வீசும் தீர்த்தங்கள் சூழ்ந்த திருக்குடந்தையில் பள்ளி கொண்டிருக்கும் வாலிபர் இவர்தானோ என்று தெரிந்து கொள்ள இயலவில்லை. சிவந்த ஒளியுடைய சுதர்சனத்தையும் பாஞ்சஜன்னியத்தையும் தரித்துக் கொண்டு பாதகடகம் அணிந்த பாதங்களை உடையவர், மங்கையர்களால் சேவிக்கப்பட்டு, பல்வகை இரத்தினங்களோடும்,  முத்துக்களோடும் விளங்குகின்றவர். ஒளி வீசும் பொன்னாபரணங்களை அனிந்துள்ள நான்கு திருத்தோள்களைக் கொணடவர். ஐயோ! இப்படியொரு அழகா அதை எப்படி விவரிப்பேன் என்று பெண் வியந்து பாடுவது போல் ஆழ்வார் வியந்து பாடுகிறார்.   

தோழி!  இப்பெரியவர்‌ திருக்குடந்தையிலே கண்‌ வளர்க்தருளுகிறவாறு விளங்குகின்றார். அவர்தானோ இவர்‌!, நன்றாகத் தெரியவில்லையே! திருவாழி திருச்சங்குகளை இரு கைகளில்‌ ஏந்தியிருக்‌கின்றார்‌; இளமகளிர்‌ யெவளவன புருஷர்களைச்‌ சுற்றிக்‌ கொண்டிருப்பாரகளாகையாலே இவரும்‌ இளமகளிர்களால்‌ சுற்றி வணங்கப்பட்டிருக்கிறார்‌.  அவர்கள உள்ளம்‌ குளிரும்படி முத்துமயமும்‌ பொன்‌மயமான திருவாபரணங்களை அணிந்து கொண்டிருக்கிறார். அவர்களை உவந்‌து தழுவுவதற்கு நான்கு திருத்‌தோள்களை உடையராயிருக்கிறார்‌; இவருடைய அழகோ நம்மால்‌ பேசப்போகாது, இவர்‌ இன்னாரென்‌று தெரியவில்லையே தோழி! என்கிறாள்.

 

 வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி அருளும் அமரர் தம்
கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே.    1853 

 

வானுலகத்தில் உள்ளவர்களுக்கு அமுதம் எடுத்து அளித்த உதாரனனை, தேன் போன்று இனிப்பானவனை, குவலயாபீடம் என்கிற யானையைக் கொன்று அழித்தவனை, தேவாதி தேவனை, இன்று நீண்ட வயல்களையுடைய திருச்சேறையில் தரிசித்து நாளைத் திருக்குடந்தை சென்று வணங்குவோம் என்று பக்தியுடன் ஆழ்வார் கூறுகிறார்.

எருதுக்குப்‌ பேராதலால்‌ அதனை வலியடக்கினவன்‌ என்று உரைக்கவுமாம்‌. கம்ஸனாலே ஏவப்பட்ட‌ அரிஷ்டன் என்பவன் எருது வடிவங்கொண்டு பசுக்களையெல்லாம்‌ முட்டி இடைச்‌சேரியைப்‌ பயப்படுத்‌திக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணரது திருவயிற்றின்மேல்‌ கண்‌ வைத்துக்‌ 'கொம்புகளை நீட்டிப்‌ பாய்ந்துவர, கண்ணபிரான்‌ அவனைக் கொம்புகளிற்‌ பிடித்து அசையவொட்டாமல் செய்து தன் காலினால்‌ அவன்‌ வயிற்றில்‌ ஓரிடி இடித்து அவன்‌ கழுத்தைப்‌ பிடித்துக் கசக்கி ‌அவனுடைய கொம்புகளில்‌ ஒன்‌றைப்பறித்து அதனாலேயே அவனையடித்துக்‌ கொன்‌றான்‌.

        அசுரர்களால் தேவர்களுக்கு வந்த ஆபத்தினைக் களைய பாற்கடலைக் கடைந்தபோது மத்தாக இருந்த மந்தார மலை ஆடியதால் அதைத் தாங்குவதற்கு ஆமை வடிவம் கொண்டு கடலுக்குள் சென்று மத்தைத் தாங்கிப் பிடித்தார். பின் அதில் வந்த அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கினார்.  இத்தகைய தேவர்களுக்கெல்லாம் தேவனான பெருமான் திருச்சேறையில் நம்மை ஆண்டு வருகிறார். நாம் திருக்குடந்தையில் சென்று சேவிப்போம் என்ற பொருளில் இப்பாசுரம் அமைகிறது.

       

இங்கே போதும்கொலோ
இன வேல் நெடுங் கண் களிப்ப?
கொங்கு ஆர் சோலைக் குடந்தைக் கிடந்த மால்
இங்கே போதும்கொலோ  1949

 

தேன் நிறைந்த மலர்களைக் கொண்ட நந்தவனங்கள் அடங்கிய திருக்குடந்தையிலே சயனித்திருக்கும் ஆராவமுதனான பெருமான், கூரிய வேல் போன்ற என் இரு கரிய விழிகள் கண்டு களிக்கும்படி இங்கே எழுந்தருளுவாரோ? அந்த அளவிற்கு நான் பாக்கியம் செய்துள்ளேனா? என்று வினவுகிறார் ஆழ்வார்.

        பகவானின் தரிசனத்திற்காக ஏங்கும் தலைவியின் மனநிலையினை ஆழ்வார் கூறுகிறார். பாண்டவர்களுக்காகப் பகவான் பல விதங்களில் உதவியுள்ளார். துரியோதனன் வஞ்சகமாகக் கிருஷ்ணரை சிறை வைக்க நினைக்கையில் அதை எதிர் கொண்டு தனது விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினார். கண்ணற்ற திருதராஷ்டிரனுக்கும் பகவானின் தரிசனம்   கிடைத்தது. பகவானைக் கண்ட இந்தக் கண்கள் வேறு எதையும் காண விரும்பவில்லை என்றும், பழையபடி நான் குருடனாகவே இருக்க விரும்புகிறேன் என்றும் பகவானிடம் வேண்டிக் கொண்டார். பகவானின் தரிசனம் என்பது பூர்வ ஜென்மத்தில் செய்த பாக்கியம் காரணமாகக் கிடைத்துள்ளது.  இதை நினைவு கூர்ந்து தலைவி பேசுகிறாள். குடந்தையில் சயனம் கொண்டிருக்கும் பெருமான் நான் காணும்படி இங்கே வருவாரா? அந்த அளவுக்கு நான் பாக்கியம் செய்துள்ளேனா? என்று கூறுகிறாள். இத்தகைய அரிய மனநிலை நம் எல்லோருக்கும் வர வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி
சிறியான் ஓர் பிள்ளை ஆய் மெள்ள நடந்திட்டு
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தார் தம்மையே?    1975

 

பரிமளம் மணம் நிறைந்த மலர்வனங்களால் சூழப்பட்ட வியக்கத்தக்கதான திருக்குடந்தையில் பொருந்தியிருந்து அருள் பாலிக்கும்,  கிருஷ்ணாவதாரத்தில் சிறு குழந்தையாய் தளிர்நடை போட்டு உயரத்தில் உள்ள உறியில் மணம் மிக்க வெண்ணெயை ஆனந்தமாகச் சாப்பிட்டவருமான என் பகவானை அறிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்வது எமக்குத் தகுமோ? என்று கூறுகிறார் ஆழ்வார்.

        பகவான் சிறுபிராயத்தில் கோபிகள் இல்லத்திற்கு தளிர்நடையில் சென்று களவாடி வெண்ணெய், நெய் ஆகியவற்றை சாப்பிட்டதால் அவை மென்மேலும் பெருகின. அதில் யாருக்கும் பாதிப்பு என்பதில்லை. அது அவர்களுக்கு நன்மையாகவே முடிந்தது.  அவரது இளமைக்கால லீலைகளை அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறுவது தகுமோ? என்று தலைவி கூறுகிறாள். அசுரர்களை வதம் செய்த இக்குழந்தை சாதாரண குழந்தை என்று சொல்ல இயலுமா? ஆதியந்தமில்லா பகவானே ஆயர்பாடியில் சிறு குழந்தையாகப் பால லீலைகளைப் புரிந்தான் என்பது இதன் உட்கருத்தாகும். அது போன்று கோபிகளிடம் அவன் செய்த குறும்புத்தனங்கள் அனைத்தும் அவர்களுடைய அறியாமையை நீக்கி உயர் நிலையை அடையச் செய்யும் நோக்கம்தான் என்று தலைவி கூறுகிறாள்.

 

அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த்
     திரை ததும்ப ஆஆ என்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும்
     தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில்
     வைத்து உம்மை உய்யக்கொண்ட
கொண்டல் கை மணி வண்ணன் தண்
    குடந்தை நகர் பாடி ஆடீர்களே.   2010

 

அண்டம் உள்ளே அழுந்தும்படி அலையடிக்கும் சமுத்திர வெள்ளம் ததும்ப ஆ.ஆ என்று அலறிய அடியார்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், கருணை மழை பொழிந்து, ஏழு உலகங்களையும் அமுது செய்து வயிற்றினுள் அடக்கி, அப்படி உங்களைப் பாதுகாக்க கார்மேகமான வள்ளல் பெருமானை நீலமணிவண்ணனைக் குளிர்ச்சியான திருக்குடந்தையில் உறைபவனைப் பாமாலை பாடி ஆடுங்கள் என்று பொருள்பட ஆழ்வார் பாடியுள்ளார்.

சமுத்திர வெள்ளம் பெருகி அனைத்தையும் மூழ்கடித்தபோது அலறிய அடியார்கள், தேவர்கள், முனிவர்கள் அனைவருக்கும் கருணை காட்டித் தன் வயிற்றிலே காப்பாற்றியவன் எம்பெருமான். நம்முடைய நிலை எதுவாக இருப்பினும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் தாயன்புடன் அனைவரையும் காத்தருளி அவரவர் வினைப் பயன்களை மாற்றித் தூய்மையடையச் செய்கிறவன் எம்பெருமான்.  எனவே பிறவிப்பயன் என்பது எம்பெருமானை எந்நாளும் மறவாமல் அவனை நினைத்து ஆடிப்பாடி பக்தி கொள்வதே ஆகும். காளிங்கன் மீது நின்று நடனம் ஆடினான் கண்ணன். கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்தான். ஏழு காளைகளைக் கொன்றான். பூதனையின் உயிரைக் குடித்தான்.  கம்சன் மற்றும் மல்லர்களை எமலோகம் அனுப்பினான். பாண்டவர்களைக காத்து கௌரவர்களை அழித்தான். பெருமானின் இத்தகைய லீலைகளை என்றும் மனதில் நிறுத்த வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

 

திருமங்கையாழ்வார்                                                                   திருக்குறுந்தாண்டகம்

       

மூவரில் முதல்வன் ஆய ஒருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம் பொன்னை அமரர் சென்னிப்
பூவினை புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே?     2037

 

மும்மூர்த்திகளில் முதல்வனான பகவானை, மகாபலியிடம் உலகத்தைத் தானமாகப் பெற்றுக் கொண்டவனை,  திருக்குடந்தையில் கோயில் கொண்டிருப்பவனை, புதிதாக எடுத்த தேன் போல் இனிப்பவனை, கலப்படமற்ற பசும் பொன் போன்ற தூயவனை, தேவர்கள் தலையில் சூடிக்கொள்ளும் மலரானைப் போற்றித் துதிக்கும் தொண்டர்கள் கணக்கற்ற பெருமைகளில் எதைச் சொல்லிப் புகழ்வார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.

        பகவானின் பெருமைகளை எதனைக் கூறிப் புகழ்வது என்கிறார் ஆழ்வார். இந்த உலக இயக்கம் என்பது கோடான கோடி ஆண்டுகளாக இயங்கி வருகிறது. புயலில் சிக்கித் தவிக்கும் மரக்கலம் போல் நம் வாழ்க்கை உள்ளது. இந்நிலையில் அற்புதமான இதிகாசங்களை நமக்குப் பகவான் தந்துள்ளார். இதைக் கொண்டு நாம் பிறவா நிலையினைப் பெற முயற்சித்தல் வேண்டும். நம்முள் இருக்கும் ஆன்மாவை நேரில் கண்டு கொள்ளுமாறு நாம் பக்தி மார்க்கத்தில் திளைக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

       

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேன் ஆக எண்ணி அதனுள்ளே பழுத்தொழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே.     2045

 

கருமையான நெய்தல் மலர்களைத் தோற்றுப்போகும் அளவிற்கு அழகிய கண்களைக் கொண்ட பெண்களுடன் கூடுவதையே எண்ணித் தினமும் பாவம் செய்வதையே விரும்பிப் பாவப் படுகுழியில் முழுதும் அழுந்தி விட்டேன். அழகிய வெண் சிறகினைக் கொண்ட அன்னப் பறவைகள் வாழும் நீர் நிலைகள் சூழ்ந்துள்ள திருக்குடந்தையில் சயனித்திருக்கும் ஆராவமுதனை நான் எண்ணாமல் பெரும் பாவியாகி விட்டேன் என்று மனமுருகிப் பாடுகிறார் ஆழ்வார்.

முன்பாட்டில், ஐயோ! பழுதே பல பகலும்‌! போயினவேயென்று கழிவிரக்கங் கொண்டு, கீழ்‌ நாட்களெல்லாம்‌ வாளராவிருந்‌தொழிக்து பாவியானேனே யென்று முடிமேல்‌ மோதிக்கொள்ளுகிறார்‌. உன்னில் ஈடுபடவேண்டிய‌ திருக்கண்‌களை விட்டொழிந்து, பிளிச்சைக்‌ கண்களையெல்லாம்‌. காவி வென்ற கண்‌ணாராக ப்ரமித்து' அவர்களோடு கூடிவாழ்வதே பரம‌புருஷார்த்தமென்று கருதினேன். பகவத்குணங்களிலேயே. பழுத்தாற் பேரலவும்‌ அந்தப்‌ பாவங்களிலேயே பழுத்தொழிந்தேன்‌ நான்‌. பரமபோக்யமான திருக்குடந்தை மாநகரில. திருக்கண்‌ வளர்ந்தருள்கின்ற ஆராவமுதாழ்வாரைச்‌ சிறிதாகிலும்‌ நெஞ்சில்‌ நினைத்திருந்தேனாகில்‌ பாவங்கள்‌ தொலையப்‌ பெற்றிருப்‌பேன்‌ என்கிறார்.

        தேவர்களேயானாலும் கர்ம வினையிலிருந்து தப்ப முடியாது. மனிதர்களும் தேவ நிலைக்கு உயர்ந்து தெய்வ நிலையினை அடைய வேண்டியவர்கள். அவர்கள் பெண்கள் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தால் பாவம் அதிகரிக்கும். பிறப்பு இறப்பு என்ற தொடர் நீண்டு கொண்டிருக்கும். இவை எல்லாவற்றையும் விட்டு ஆராவமுதனை சரணைடையுங்கள் என்கிறார். மக்களின் பாவங்களைத் தன் மீது சுமத்திக் கொண்டு இவ்வாறு பாடுகிறார். 

 

திருமங்கையாழ்வார்                                                                    திருநெடுந்தாண்டகம்

       

பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்பப்
     பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
     சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்
    தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு
நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன
     நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே.     2068

 

மென்மையான இளம் தனங்கள் நிறம் மாறிப் பசலை என்னும் நோய் பூத்திருக்கின்றன. கயல் விழிகளில் கண்ணீர் ததும்பி இருக்கிறது. அடிக்கடி பிரமை பிடித்தது போல் தனியே நிற்கிறாள். சிவந்த கால்களையுடைய ஆண் புறாக்கள் தங்கள் பேடைகளோடு மகிழும் ஒலி கேட்டு உடல் உருகி, அவள் தன்னோடு தொடர்பு கொண்டதை எண்ணி பகவான் எழுந்தருளியிருக்கும் திருத்தண்காவையும், குளிர்ந்த திருக்குடந்தையையும், திருக்கோவலூரையும்  பாடி நடனமிடும் குரலைக் கேட்டுப் பெண்ணே! வாய் விட்டு நம் மணாளனை அழைப்பது நம் குலத்திற்கு ஆகாது என்று கூறி திருநறையூரைப் பாட மறந்தத்தேனோ என்ற  பொருளில் பகவானை நினைத்து தன் பெண் புலம்புவதை திருத்தாயார் நிலையில் ஆழ்வார் பாடுகிறார்.

தன் மகள் சோர்வுற்ற நிலையைக் கண்ட திருத்தாயார் இவளுக்கு நாம் ஏதேனும் இதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாகிலும் வழிப்படக் கூடுமோ, என்றெண்னி 'நங்காய் நீ இங்ஙணம் வாய்விட்டுக் கூப்பிடுதலும் மோகித் தலுமான இவை நின்பெண்மைக்குத் தகாது, நம் குடிக்கும் இழுக்கு’ என்று சொல்ல, அங்ஙனம் அவள் இதம் சொன்னதுவே ஏதுவாக மேன்மேலும் அதிகமாக முயன்று பணைத்த படியைச் சொல்லுகிறது இப்பாசுரம்.

       

முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன்
     மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்
     அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும்
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்
     பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடி
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
     பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே.     2070

 

முற்றாத தனங்களையுடைய என் மகள் பெருமானின் அகல மார்பில் திருமகள் வாசம் செய்கிறாள் என்று தெரிந்தும் அவன்மீது காதல் கொண்டு அவனுக்கு அடிமையாகி இருக்கிறாள். தன்னடக்கத்தைத் துறந்து என்றும் பெருமூச்சு விடுகிறாள். திருவரங்கத்தில் நித்தியவாசம் புரியும் பெருமானின் புகழ்பாடி ஆடுவோமா என்கிறாள். தாயாகிய எனது அறிவுரைகளைக் கேட்பதில்லை. திருப்பேர் நகரின் நாயகனைப் புகழ்ந்து பாடியும், திருக்குடந்தை ஆரவாமுதனை இடைவிடாது பாடியும், வியர்த்து அழகிய தாமரைக் குளத்தில் குளிக்கப் போகிறாள் என்று திருத்தாயார் புலம்புகிறாள்.

ஒப்பில்லாதவளான என் பெண்ணானவள் முழுமுற்றும் போந்திலாத அழகிய தனங்களையுடையவள். சித்திரப்பதுமை போன்றவளான ஶ்ரீ மஹாலஷ்மியின் அற்புதனான எம்பெருமானுடைய பெற்றெடுத்த தாயாகிய நான் சில வார்த்தைகள் சொல்லச் சிறிதேனும் காது கொடுத்துக் கேட்பதில்லை. திருப்பேர்நகரைப் பாடியும், குளிர்ந்த திருக்குடந்தை நகரைப் பாடியும், அழகிய திருமார்பினுள் அடங்கி வாழும்படியைக் கண்டு வைத்தும் அவனுக்கே அற்றுத் தீர்த்தாள். தன்னுடைய அடக்கமொழிந்தாள். திருமூச்செறியா நின்றாள். தோழி! திருவரங்கநகர் படிந்தாடுவோம்? என்கிறாள். திருப்பொற்றாமரைத் தடாகத்தில் குடைந்தாடுவதற்கு எழுந்து சென்றாள். தோழியர்காள்! உங்கள் பெண்னின்படியும் இவ்வண்ணமேயோ? என்கிறாள்.

தோழியரே! இவள்போல் உங்கள் பெண்களும் இவ்விதம் உள்ளார்களா என்று பாருங்கள். எல்லாப் பெண்களும் உலகியலில் ஒட்டாமல் பகவானிடம்  பற்று கொள்வதே மேன்மை தரும். ஆத்மாவுக்கு ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது.  எல்லோரும் ஆத்ம ஜோதியில் ஐக்கியமாக வேண்டியவர்களே. அதுவே நிலையான பேரின்ப நிலை என்று பொருள்பட ஆழ்வார் பாடுகிறார்.

 

அலைகடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை 

குன்றாத வலி அரக்கர் கோனைமாளக்

கொடுஞ்சிலை வாய்ச் சரந்துரந்து குலங்களைந்து

வென்றானை குன்றெடுத்த தோளினானை

விரிதிரை நீர்வி ண்ணகரம் மருவி நாளும்

நின்றானை  தண்குடந்தைக் கிடந்த மாலை

நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே.    2080

 

அன்று ஆயர் குலத்தில் பிறந்த நப்பின்னைக்கு நாயகனானவன், திருப்பாற்கடலைக் கடைந்தவன், கடலில் அணைகட்டிய என் முறை மாப்பிள்ளை போன்றவன், வலிமையுள்ள இராவணன் இறக்குமாறு கொடி வில்லில் அம்புகள் தொடுத்து அரக்கர் குலங்களை வேரறுத்தவன், கோவர்த்தன கிரியைத் தாங்கிய வலிமைமிக்க தோளுடையவன், தடாகங்கள் நிறைந்த திருவிண்ணகரத்தில் எழுந்தருளியிருப்பவன், குளிர்ச்சி மிக்க திருக்குடந்தையில் யோக நித்திரை செய்பவன். இத்தகைய பல பெருமைகளைக் கொண்டவனை நாய்போல் தாழ்ந்த அடியேன் நினைத்து வாழ்கிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

முன்பொரு சமயம் ஆயர்குலச் சிறந்த மகளான நப்பின்னையின் நாயகரும் அலைகடலை  கடைந்தவரும்  கடலில் அணை கட்டின பெருமானும்  குன்றாத மிடுக்கையுடைய அரக்கர்கள் அரசனான இராவணன் முடியும்படியாகக் கொடிய வில்லிலே  அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து  அரக்கர் குலங்களை அழித்து  வெற்றி பெற்றவரும்,  கோவர்த்தனமலையை குடையாக எடுத்த தோள்களையுடையவரும்,  அலைகளுள்ள பொய்கைகள் நிரம்பி  திருவிண்ணகரத்தில் எப்போதும் இருப்பவரான பெருமானை  குளிர்ந்த திருக்குடந்தையில்  இருக்கும் திருமாலை  நெடிய பெருமானை  நாய்போல் நீசனான அடியேன்  நினைத்தேன்.

        இங்கு நாய் என்று ஆழ்வார் கூறுவது ஒரு நிலையில் நிற்காமல் அலையும் மனதினைக் குறிப்பதாகும். பகவானின் பெருமைகளில் மனம் உருகி பக்தி செலுத்தாமல் அற்ப ஆசைகளில் மூழ்கி ஏன் அலைகிறீர்கள்? கிடைத்தற்கரிய இம்மனிதப் பிறவியை ஏன் விரயம் செய்கிறீர்கள்? என்ற பொருளில் உலகத்தவரின் நிலையை எடுத்துக்காட்டி பகவானின் பெருமைகளை எண்ணி மனம் உருக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழ்வார் இப்பாடலைப் பாடுகிறார்.

 

திருமங்கையாழ்வார்                                                           திருவெழுக் கூற்றிருக்கை

 

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
     ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள்
     இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில்
     அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
     மார்வினின் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை
    நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை.      2672

 

        பகவானே! இராமனாகவும், வாமனனாகவும் அவதரித்தவனே! நாபிக்கமலத்தில் இவ்வுலகைப் படைக்கப் பிரம்மனை ஈன்றாய். சூரிய சந்திரர் இலங்கையில் சஞ்சரிக்கவும் அஞ்சுகின்ற காலத்தில் அம்புகள் எய்தி இலங்கையை அழியச் செய்தாய். பூணூல், மான் தோல் முடியுடன் பிரம்மச்சாரியாகி நான்கடி நிலத்தில் மூன்றடி மண் யாசித்தாய். குள்ளமாக இருந்து நீர் இரண்டே அடியில் ஒரே தடவை மூவுலகினையும் அளந்தாய்! என்ற பகவானின் செயல்களையெல்லாம் வியப்புடன் பாடுகிறார் ஆழ்வார்.

         உலகங்களைப் படைத்தமை சொன்னார், படைத்த உலகத்திற்குத் தீங்கு சேருங்காலத்தில் படாதனபட்டு ரக்ஷிக்கிறபடியை இதில் சொல்லுகிறார். குளவிக் கூடுபோலே ராக்ஷஸர்களுக்குக் கூடாகிய இலங்கையை நீறுபடுத்தினபடியைச் சொல்லுகிறார். தேவதைகள் அனைவரும் இராவணனுக்கு அஞ்சி நடுங்கி மறைந்து வாழ்ந்தனராதலால் சூர்ய சந்திரர்களும் இலங்கையின் மேலே சஞ்சரிக்க மாட்டார்களாம் ஆகவே, இருசுடர் மீதினிலியங்காத இலங்கையாயிற்று. எம்பெருமானை ஆராதிப்பதற்காகத் தாமரைப்பூப் பறிக்கப் போன பொய்கையின்கண் முதலைவாயிலகப்பட்ட ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய கூக்குரலைக்கேட்டு எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தினின்று கருடாரூடனாய் ஓடிவந்து முதலையைக் கொன்று ஆனையைக் காத்தருளின கதை உலகப்பிரஸித்தம்.

 

பூதத்தாழ்வார்                                                                            இரண்டாம் திரருவந்தாதி

       

தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம்.     2251

 

அழகிய தஞ்சை மாமணிக்கோயில், சிறந்து விளங்கும் திருவரங்கம், இயற்கை சூழல் நிறைந்த திருத்தண்கால், பக்தர்கள் தியானிக்கும் திருமலை, அழகிய திருப்பாற்கடல், கடல் சூழ்ந்த  திருக்கடல்மல்லை, நெடிதுயர்ந்த திருக்கோவலூர், அழகிய மதிள்கள் உடைய திருக்குடந்தை ஆகிய இடங்களைவிட அடியார்களின் இதயக்கமலத்தில் குடிகொள்வதே பெருமானுக்கு விருப்பம் என்று ஆழ்வார் கூறுகிறார்.

        பகவான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பது உண்மை. ஆனாலும் அலைபாயும் மனத்தினை கொண்டு அவனை கிரகித்துக் கொள்ள இயலாது. எனவே பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்கு சென்று வந்தால் நம் மனம் அலைபாய்வதை விடுத்து ஒருநிலைப்படும். அதனால் தெளிவு பிறக்கும். தீய வினைகள் செய்யக்கூடாது என்ற வைராக்கியம் வளர்ந்து நாம் உத்தமர்களாக மாறுவோம்.

 

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்! நீ
செங்கண் நெடு மால் திருமார்பா! பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பு அணைமேல் சேர்ந்தாய்
குடமூக்கில் கோயிலாக் கொண்டு  2278     

 

எங்கள் பெருமானே! தேவர்களின் தலைவனே! சிவந்த கண்விழிகளைக் கொண்டவனே!  நெடிதுயர்ந்த உருவம் எடுத்த விஸ்வரூபனே! மகாலட்சுமியை மார்பில் தரித்துக் கொண்டவனே! திருக்குடந்தையில் கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டு ஓங்கிய ஆயிரம் படங்களும் வாயும் கொண்ட ஆதிசேஷன் மேல் சயனம் கொண்டிருக்கிறாய் என்ற பொருளில் ஆழ்வார் பாடியுள்ளார்.

திருமகளை மார்பிலுடையவனும் சிவந்த கண்களையுடைய  பெருமானும்,  நித்யசூரிகளுக்கு தலைவனும் எங்கள் பெருமானுமான நீ கும்பகோண க்ஷேத்திரத்தை  கோயிலாகக் கொண்டு விகஸித்த, படங்களையும்  மூக்கையுமுடையவனும் ஆயிரம் வாயையும் உடையவனுமான ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டாய்.

        எல்லா காரியங்களையும் முடிக்கும் பெருமான் ஏதும் அறியாதவன் போல் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ளார். சக்கரம்வேகமாகச் சுழலும்போதுது அதன் சுழற்சி நம் கண்களுக்குத் தெரிவதில்லை. சுழலாமல் நிற்பது போன்று நமக்குத் தெரியும்.அது போன்றுறு பகவானின் செயல்கள் மிகவும் விரைவாக உள்ளது. ஆனால் இயக்கமின்றி இருப்பது போல் சயனிக்கும் நிலைதான் நமக்குத் தெரியும். அது போன்று நமது உடலைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உள்ளிருக்கும் ஆத்மாவை நினைக்கும் பொருட்டு சரீரத்தினைவேகமாகச் செயல்படபட வைக்க வேண்டும்.  சோம்பித் திரியாமல் அவனை அடைவதற்கான முயற்சிகளை வேகமாக எடுத்தல் வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

 

பேயாழ்வார்                                                                                    மூன்றாம் திருவந்தாதி

       

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும் வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
இறை பாடி ஆய இவை.    2311

 

திருப்பாற்கடல், திருக்குடந்தை, திருவேங்கடம் இத்தலங்களை எப்போதும் நினைக்கும் என் சிந்தனை, நிறைவான வைகுண்டம், திருமாலின் புகழ் சொல்லும் வேதம், திருப்பாடகம், அனந்தாழ்வான் ஆகிய இவைகளெல்லாம் அழகிய திருத்துழாய் மாலையனிந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணன் குடியிருக்கும் வாசஸ்தலமாகும் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

ஆழ்வார், அழகிய திருத்துழாய் மாலை அணிந்த திருமால் நித்யவாஸம் செய்கின்ற ராஜதானிகளாக (ஸ்தலங்களாக) திருப்பாற்கடல், திருக்குடந்தை, திருவேங்கடம், ஆழ்வாரின் சிந்தை, பரமபதம், வேதங்கள், திருபாடகம், ஆதிசேஷன் ஆகியவற்றை சொல்கிறார்.  நிறை விசும்பு  என்று சொன்னது, மற்றவைகள்போல் குறைவில்லாத வைகுந்தம் என்பதற்காகும். இந்தத் திவ்யதேசங்களில் ப்ரத்யக்ஷமாக நேரடியாகத் தெரிவதுபோல், ஆழ்வாருக்கு வேதங்களின் ஒலிகளிலும் எம்பெருமான் தெரிகிறார். இருந்தாலும், வாய்ந்த  என்ற ஒரு சிறப்பு சேர்த்து மறை என்ற வேதத்தைச் சொல்கிறார்.

        ஆழ்வார் தனது சிந்தனையைப் பகவான் குடியிருக்கும் வாசஸ்தலத்துடன் இணைத்திருக்கிறார். காய்கதிர் செல்வனை வலிவற்ற மேகங்கள் மறைப்பது போல் நமக்குள்ளிருக்கும் பகவானை அறியாமை என்னும் மேகம் மறைக்கின்றது. ஆழ்வாரின் சிந்தனை எப்போதும் பகவானை நினைப்பதால் அறியாமை என்ற மேகம் அவரைச் சூழ்வதில்லை. நாம் எல்லோரும் அப்பேற்றினை அடைவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

 

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு  2343

 

திருவிண்ணகரமும், திருவெஃகாவும், நீர்வளம் மிக்க திருமலையும், பூமியிலுண்டான வைகுந்த மாநகர் போன்ற பெரிய மாடங்களை உடைய திருவேளுக்கையும், அழகிய திருக்குடந்தையும், தேன் பாயும் சோலைகளையுடைய திருவரங்க மாநகரும், திருக்கோஷ்டியூரும், தனது உள்ளங்கையாலே மாவலியிடம் நீர் ஏற்றப் பெருமான் தங்கும் இடங்களாகும்.  போகும்போது எத்தகைய எளிமையும் சௌசீல்யமும் கொண்டவனாகத் தோன்றினானோ அதுபோல் இத்திருப்பதிகளில் எளிமையாகக் காட்சி தருகிறான். இத்திருத்தலங்கள் அனைத்தும் மூர்த்தி சிறப்பு பெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன.

மாவலி சக்ரவர்த்தியிடம் யாசகம் செய்து, அவனிடமிருந்து நீர் பெற்று தன்னுடைய உடமைகளான இந்த உலகத்தை எல்லாம் வசப்படுத்திய நீர்மை - எளிமை என்னும் உயரிய கல்யாண குணத்தை காட்டி உறைகிறான். ஒரு காலத்தில், விபவத்தில், யாசகம் செய்ததைப் போல், இந்த ஆத்மாக்களை பெறுவதற்கு எளிமை - நீர்மை சௌலப்யம், சௌசீல்யம் போன்ற குணங்களை எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டு உறைகின்ற திவ்யதேசங்கள் இவை, என்று ஆழ்வார் சொல்கிறார்.

        பிரம்மனின் துயர் துடைக்கத் திருவரங்கம் திவ்யதேசத்தில் பாம்பனையின் மேல் பள்ளி கொண்டு நம்மையெல்லாம் காத்து வருகின்றார். சிறப்பு மிக்க இத்தகைய தலங்களுக்குச் சென்று மிகவும் எளிதாக வரங்களைப் பெற முடியும் என்று கூறுகிறார் ஆழ்வார்.   

 

நம்மாழ்வார்                                                                                                    திருவாய்மொழி

       

ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே  3194

 

எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத அமுதமே!  என் பெருமானே! அடியேனின் சரீரம் உன்மீது கொண்ட அன்பால் நீராய்க் கரைந்து அலைந்து உருகுமாறு செய்கின்ற உலகளந்த திருமாலே! சீர்மைமிக்க செந்நெற் கதிர்களையுடைய சாமரம் போல் வீசும் செழுமையான நீர்வளம் கொண்ட தீர்த்தங்களையுடைய  திருக்குடந்தையில் அழகு பொங்கப் பள்ளிகொண்டிருந்த உன்னைச் சேவிக்கப் பெற்றேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

எனக்கு இயற்கையான தலைவனாய், எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத எப்பொழுதும் இனிமையானவனாய், அடியேனுடைய சரீரம் உன் விஷயத்தில் அன்பே வடிவாக நீரைப்போலே உருக்குலைந்து வருத்தத்துடன் கரையும்படி உருகப்பண்ணும் அளவிடமுடியாத இனிமையை உடையவனே! கனத்தாலே விஞ்சின செந்நெற்கதிர்கள் கவரிவீசினாப்போலே இருப்பதாய் அதற்குக் காரணமான ஜல ஸம்ருத்தியை உடைய திருக்குடந்தையிலே அழகு விஞ்சின ஒப்பனை திகழும்படிக் கண்வளர்ந்தருளினாய். என் கண்ணாலே கண்டு அனுபவித்தேன். ஆனால் வேறு பரிமாற்றங்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறார் ஆழ்வார்.

        வானமாமலை பெருமாள் ஆழ்வாருக்கு முகம் காட்டவில்லை. திருக்குடந்தையில் சேவை சாதிக்கலாமென அங்கு வந்தால் அப்போதும் வரவில்லை. ஆழ்வார் மனம் வருந்தி அழுதார். எம்பெருமானே! உன்னைக் காண எத்தனை இடங்களில் தேடிவருவேன் என்று ஆற்றாமையால் அழுதார். எல்லையற்ற உன் அருளை இரு கைகளில் ஏந்தி மனத்தில் இருத்தினேன் என்று பெரியாழ்வார் பாடுகிறார். அமுதனின் வாயில் ஊறிய நீரை கைகளில் ஏந்தி தன் மேல் தெளித்துக் கொண்டாள் ஆண்டாள். ‘தேனாகி அமுதாகித் திகழ்ந்தானே’ என்று திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் பாடுகிறார்.

       

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும் * திருக்குடந்தை
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே.     3311

 

தூய்மையின் வடிவமான என் சுவாமியே!  என்னை அடிமை கொண்டவனே! எவ்விதமான பெரிய உருவம் வேண்டுமானாலும் எடுக்க வல்லவனே! அழகிய காளை போன்றவனே! அழகிய செந்தாமரை மலர்கள் செழுமையான நீரில் மலரும் திருக்குடந்தையில் அழகிய தாமரை போன்ற தன் பெரிய விழிகளை மூடிக்கொண்டு ஆராவமுதன் உறங்குகின்றானே! நான் என் செய்வேன்? என்று ஆழ்வார் கூறுகிறார்.

எனக்கு ஸ்வாமியாய், எனக்கு ஸத்வகுணம் பிறக்கும்படி பரிசுத்தமான வடிவை உடையவனாய், எனக்கு அனுபவத்தைக் கொடுப்பவனாய், எல்லா விதங்களிலும் இருக்கும் உயர்ந்த திருமேனிகளை ஆசையால் அங்கீகரித்து இருப்பவனாய், அந்த அந்த விக்ரஹங்களில் இருக்கும் அழகாலே எல்லாருடைய மனங்களையும் கவர்ந்து செருக்கனாயிருக்குமவனாய் இருப்பவனே! சிவந்து பெருத்த தாமரைகள் மிகுதியாக நீரின்மேலே எல்லாவிடங்களிலும் மலரும் திருக்குடந்தையிலே அந்த உயர்ந்ததான தாமரைப்பூப்போலே இருக்கிற திருக்கண்கள் வளரும்படி கிடக்கிறவனே! நான் இப்பொழுது என் செய்வேன்?

        பெரிய உருவம் எடுப்பவன் என்னை கவனியாமல் உறங்குகிறானே! திவ்யமங்கள விக்ரகத்தை உடையவனே! விக்ரக அழகைக் காட்டி என்னை ஆட்படுத்தியவனே! சம்சாரிகளின் நல்வினை தீவினைகளைக்கேற்ப பல்வேறு சரீரங்களை அளிப்பவனே! என்று ஏங்குகிறார் ஆழ்வார்.  பகவானின் நினைவாலே ஏங்குவதுதான் உண்மையான வாழ்க்கை. மற்றெல்லாம் ஆடம்பர வாழ்க்கை என்பதை ஆழ்வார் உணர்த்துகின்றார்.

       

என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா?
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்?
என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ? என்னும்
முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே?     3465

 

தாமிரத்தாலான மதில்கள் சூழ்ந்த திருக்குடந்தையில் கிடந்தவனே! நான் என் செய்வேன்? யார் என்னிடமுள்ள குற்றங்களை நீக்குவார்? என்னை என்ன செய்ய நினைத்திருக்கிறாய்? உன்னால் அல்லாமல் வேறு எவராலும் ஒரு குறையும் ஏற்படக் கூடாது. அடியேன் இனி வாழும் நாட்களில் எத்தனை நாட்கள் உடலில் உயிர் தங்கியிருக்குமோ, அந்நாள் வரை உன் திருப்பாதங்களைப் பற்றியபடியே கழிக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

நான் என்னைக் காத்துக்கொள்ள என்ன செயலைச் செய்வேன்? எனக்கு ரக்ஷகர் யார்? என்னை என்ன செய்வதாக இருக்கிறார்? உன்னைத் தவிர வேறு யாராலும் ஒரு குறையும் போக்கப்பட வேண்டியவனாக நான் இல்லை. மிகவும் திண்ணிய மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! அடியேனுடைய ஆத்மா உஜ்ஜீவிக்கும் காலம் இருக்கும் நாள் எத்தனை நாளோ அந்த நாளெல்லாம் உன் திருவடிகளை பிடித்துக்கொண்டே நடக்கும்படி பார்த்தருள வேண்டும்.

        உலகத்தவர் பொய்யான வாழ்வினை வாழ்ந்து கொண்டு இருப்பதை ஆழ்வார் இவ்வாறு கூறுகிறார். எந்நாளும் பகவானின் பாதங்களையே பற்றிக் கொண்டிருக்கும் ஆழ்வார் மக்களுக்காகப் பழியை தன் மேல் சுமத்திக் கொண்டு பகவானிடம் இவ்விதம் வேண்டுகிறார்.  என்னுடைய ஆத்மா உன் திருவடிகளை அடைந்து கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே அற்ப சிந்தனைகளை விடுத்து பகவானைப் பற்றி அவனது திருவடிகளை சரண் அடையுமாறு நம்மிடம் வேண்டுகிறார்.  

 

 செலக் காண்கிற்பார் காணும் அளவும் * செல்லும் கீர்த்தியாய்
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பு ஆய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.    3313      

 

நற்குணங்கள் அதிகம் நிரம்பப்பெற்றவர்கள் வாழும் திருக்குடந்தையில் சயனித்திருப்பவனே! எல்லா உலகங்களையும் ஆள்பவனே! பெருமைகளுக்கெல்லாம் எல்லை காண முடியாதவனே! இதுவரை நடத்தியது போக மீதியை எண்ணிப் பார்த்தாலும் அளவிட முடியாத கீர்த்தியை உடையவனே! உன்னைத் தரிசிப்பதற்காக அடியேன் தவிப்போடு ஆகாயத்தைப் பார்த்துக் கண்ணில் நீர் பெருக வணங்குகிறேன் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள் காணுமளவுக்கும், மேலே போகக்கூடிய குண கீர்த்தியையுடையவனாய் அதற்கு முடிவு இல்லாமல் இருப்பவனே! எல்லா உலகத்தையும் அடிமையாகவுடைய அத்வீதீயமான திருமேனியை உடையவனாய் உன்பக்கல் ஆசை விஞ்சி இருப்பவர்களுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! உன்னை நான் நினைத்தபடி கண்டு அனுபவிக்கைக்காக அலமந்து ஆகாசத்தை நோக்கிப் பக்தி பரவசரைப் போலே அழுது ப்ரபன்னரைப் போலேத் தொழுவேன்.

         நமக்கும் பகவானுக்கும் உள்ள உறவு ஊழி காலங்களாக ஏற்பட்டிருக்கும் உறவாகும். நமக்கு அவன் செய்திருக்கும் உதவிகளை நினைத்தால் கண்ணில் நீர் மல்கும். ஆனால் நாம் செய்நன்றியை மறந்து பகவானை விட்டு விலகி வருகிறோம். அற்ப பொருட்களின் பின்னால் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆழ்வாரோ பகவானின் தரிசனம் கிடைக்குமா என்று விண்ணை நோக்கிக் கண்ணீர் மல்கக் காத்திருக்கிறார்.

       

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.    3314

 

செழுமைமிக்க வயல்கள் சூழ்ந்த திருக்குடந்தையில் பள்ளி கொண்டிருப்பவனே! செந்தாமரை போன்ற கண்களையுடையவனே! கண்களில் நீர்வழிய அழுகின்றேன். கைகூப்பி வணங்குகிறேன். பாடி அரற்றுகிறேன்.  உன் தரிசனம் பெற மெய் மறந்து கூத்தாடுகிறேன். என்னைத் தழுவியிருக்கின்ற பாவத்தால் நீ வரும் பக்கம் நோக்கி நாணித் தலை கவிழ்ந்திருக்கிறேன். வணங்குகின்ற அடியேனுக்கு உனது திருவடிகளைச் சேரும் வகையை நீதான் காட்டியருள வேண்டும் என்கிறார் ஆழ்வார்.    

அழுவது, தொழுவது, ஆடிப் பார்ப்பது, பாடுவது, அலற்றுவது, என்னைத் தழுவி இருக்கும் காதலாகிற ப்ரபலமான பாபத்தால் அவன் வரக்கூடிய பக்கங்களைப் பார்த்து அங்கு வாராமையாலே வெட்கப்பட்டுத் தலை கவிழ்ந்திருப்பேன். மிகுதியாய் அழகாய் இருக்கும் நீர் நிலங்களையுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனாய் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனே! உன்னைத் தொழுபவனான என்னை உன் திருவடிகளை அடையும்படி ஒரு நல்ல வழியை நீயே பார்க்க வேண்டும்.

        நாம் பகவானிடம் நெருங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள்தான். இதனை அகற்ற முயல வேண்டும். பாவம் என்னும் நெருப்பினை அணைக்க பக்தி என்னும் நீரை ஊற்ற வேண்டும். அதை விட்டு நெருப்பில் எண்ணெய் விடுவது போல் மேலும் பாவங்கள் செய்து வந்தால் பகவான் நம்மை விட்டு அகன்றுவிடுவான். இதை மனதில் இருத்தி அவனை அடைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.       

       

சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக்குழி தூர்த்து * எனை நாள் அகன்று இருப்பன்?
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே
யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே அரிஏறே!       3199

 

வழி வழியாக வந்த புகழோடு வாழ்பவர் நிறைந்த திருக்குடந்தையில் சயனித்து அருள்பவனே! தேவர்களின் தலைவனே! யாழிசை போன்று இனிமையானவனே! அமிர்தமானவனே!  அறிவின் பயனாய் விளங்குபவனே! சிங்கம் போன்ற ஸ்ரீஹரியே! முற்பிறவிப் பாவங்களால் சூழப்பட்ட என்னை அதிலிருந்து விலக்கி உனது திருவடிகளை அடையும் வழியை அறிந்திருந்தும் ஆசை என்னும் வினையினால் எத்தனை காலம் உன்னை விட்டு நீங்கியிருக்கப் போகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

இயல்பான புகழையுடையவர்களுக்காகத்தான் திருக்குடந்தையிலே சயனித்தருளினாய். நித்யசூரிகளுக்கும் தலைவனாய் யாழின் இசைபோலே, எப்பொழுதும் இனிக்கும் அமுதம்போலே, ஸ்துதிப்பது முதலான செயல்களால் நாக்குக்கு இனியவனாய், மனதுக்கும் இனியவனாய் உயர்ந்த சிங்கத்தைப் போன்ற பெருமையை உடையவனே! உன் திருவடிகளைச் சேர்ந்து அதற்கே ஆட்பட்டிருக்கும் பழமையான நிலையைக் கண்டிருந்தே, நிரப்பமுடியாத ஆசை என்னும் குழியைத் தூர்த்து எத்தனை நாள் அகன்று இருப்பேன். என் அநாதிகால பாபத்தை அறுத்து உன் திருவடிகளைச் சேரும்படிச் சூழ்ந்தருள வேண்டும்.

இயல்பாக அமைந்த புகழையுடைய பெரியோர்கள் நித்தியவாசம் செய்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! யாழினிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே! என்னுடைய பழைமையான இரு வினைகளையும் அறுத்து உனது திருவடிகளைச் சேர்வதற்குரிய முறையை யான் அறிந்திருந்தும், தூர்க்க முடியாத இந்திரியங்களாகிற குழியை நிறைத்துக்கொண்டு எத்தனை காலம் உன்னை நீங்கி இருப்பேன்? உன்னைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும்.

செவிக்கு இன்பமளிக்கும் இசையாகவும், உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உணவாகவும், அமுதாகவும் விளங்குபவன் பரமனே என்று ஊழ்வியல் பகர்கின்றது.

        பழியை தம் மேல் இட்டுக் கொண்டு உலகத்தவரை காக்கிறார் ஆழ்வார்.  பாவத்தை விலக்க வேண்டுமெனில் ஆசையை அறவே விட்டொழிக்க வேண்டும்.  ஆனால் மக்கள் அந்தக் குழியிலே விழுந்து உழல்கிறார்கள். இந்த அவல நிலை நீங்க வைராக்கியத்துடன் போராடி ஆசையை விலக்க வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.

       

அரிஏறே என் அம் பொன் சுடரே செங்கண் கரு முகிலே!
எரி ஏய் பவளக் குன்றே! நால் தோள் எந்தாய் உனது அருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.     3316

 

ஆண் சிங்கம் போன்றவனே! அழகிய பொன்னின் ஒளியே! சிவந்த கண்களையுடைய கார்மேகமே! நெருப்பு போன்ற பவளக் குன்றே! நான்கு திருத்தோள்களையுடைய என் தந்தையே! திருக்குடந்தையில் உறைகின்ற திருமாலே! உனது அருளால் பிரியாத அடிமையாக என்னை ஏற்றுக் கொண்டவனே! உன் திருப்பாதங்களைத் தந்து என் பிறப்பை அறுத்துவிடு. இல்லையேல் உயிர் நீப்பேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

சிறந்த சிங்கமே! நான் அனுபவித்தற்குரிய அழகிய பொன் போன்ற ஒளியுருவனே! சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே! நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலை போன்றவனே! சதுர்ப்புஜ ஸ்வாமியே! உனது கிருபையினால் என்னைப் பிரியா அடிமை கொண்டாய்! திருக்குடந்தையில் வாழும் திருமாலே! இனிமேல் தரித்திருக்ககில்லேன்! உனது திருவடிகளைக் கொடுத்தருளி எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும் என்கிறார்.

கட்டுக்கடங்காத ஸ்வாதந்த்ரியத்தாலே செருக்குடன் இருப்பவனாய் விரும்பத் தக்க பொன்போலேயிருக்கிற திருமேனியில் ஒளியை எனக்கு அனுபவிக்கக் கொடுத்தவனாய் சிறந்த திருக்கண்களையுடையவனாய் முன்பு சொன்ன பொன்னொளிக்கு இருப்பிடமான கறுத்த திருமேனியையுடையவனாய், எதிரிகளுக்கு அக்னிபோலே சிவந்த பவளக்குன்று போலே உயர்ந்த திருமேனியையுடையவனாய், நான்கு தோள்களையும் காட்டி என்னை எழுதிக்கொண்ட ஸ்வாமியே! உன்னுடைய க்ருபையை ஒருகாலும் பிரியாதபடி வாசிக கைங்கர்யங்களைக் கொண்டாய். திருக்குடந்தையிலே பிராட்டியுடன் சேவை சாதிப்பவனே! இனி நான் உன் பிரிவைத் தாங்கமாட்டேன். உன் திருவடிகளைத் தந்து என்னுடைய சரீர ஸம்பந்தத்தை போக்கியருள வேண்டும்.

        இத்தகைய ஒரு உயர்ந்த ஞானம் கோடியில் ஒருவருக்குக்கூட இல்லை எனலாம்.  பகவானிடம் உலக மக்கள் என்ன வேண்டுகிறார்கள்? எனக்குச் செல்வத்தைக் கொடு, பதவியைக் கொடு, பொன் பொருள் கொடு என்று நிலையில்லாத பொருட்களையே கேட்கிறார்கள். பிறப்பை அறுத்துவிடு என்று வேண்டுவதில்லை. பிறப்பை அறுக்கவே பகவான் நமக்கு இப்பிறவியைக் கொடுத்துள்ளான். ஆனால் நாம் ஆசை என்னும் குழியில் விழுந்து துன்பம் கொண்டிருக்கிறோம். இதை அனைவரும் உணர வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

       

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்
வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போது
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.     3317

 

வளைந்த வாயையுடைய சுதர்சன சக்கரத்தைப் படையாக உடையவனே! திருக்குடந்தையில் பள்ளி கொண்டிருப்பவனே!  பெரிய அற்புதங்களை நடத்தியவனே! என் துன்பத்தை நீக்கினாலும், நீக்காமற் போனாலும் வேறு ஒருவரையும் துணையாகப் பற்றமாட்டேன். பிரிவு துன்பத்தால்  என் உடல் தளர்ந்து உயிர் பிரிந்து போகும்போது நழுவாதபடி உனது திருப்பாதங்களைக் விடாமல் பிடித்துக்கொண்டு செல்லும்படி நீ அருள வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

நீ என் துன்பத்தைப் போக்கினாலும் போக்காவிட்டாலும் வேறொரு துன்பத்தைப் போக்கும் புகல் எனக்கு இல்லை. சூழ்ந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையாய்! திருக்குடந்தையிலே சயனித்திருக்கிற மிகவும் ஆச்சர்யமான அழகை உடையவனே! என் உடல் தளர்ந்து எனது ப்ராணன் நிலைகுலைந்து சரீரத்தைவிட்டு போகும்போது சித்தமானது பலவீனத்தை அடையாமல் உன் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக ஒருபடிப்படப் பிடித்து இருக்கும்படி நீயே அனுமதி பண்ணியருள வேண்டும்.

        ஒரே பரம்பொருளை உறுதிப் பொருளாகப் பற்றிக்கொண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பது உட்கருத்தாகும். இறைவனிடம் மனம் ஒன்றி இரு. இதுவும் கடந்து போகும். எது ஒன்றும் இங்கு நிரந்தரம் இல்லை. நான் என்னும் அகந்தையை விட்டொழி. அதனால் செயல் அடிபடுகிறது. செயல்பட வைப்பது அவன் என்ற பேருண்மையை புரிந்து நடத்தல் நலம்.   எனவே வாதங்கள் செய்து காலம் கடத்துவதை விட ஒரே பரம்பொருளை உறுதியாகப் பற்றுமாறு ஆழ்வார் நம்மை வலியுறுத்துகிறார்.

 

இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மானே
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே.      3202

 

என்னை முற்றிலும் திருத்தி உனது உபய பாதங்களின் கீழ் தங்கும்படி செய்தருளின பெருமானே! அழிவில்லாத நித்ய சூரிகளின் தலைவர்க்கும் தலைவனே!  ஆதியாகத் தோன்றிய ஆலிலைக் கிருஷ்ணனே! திசையெல்லாம் ஒளி வீசும் செழுமையான இரத்தினங்கள் வந்து சேரும் திருக்குடந்தையில் உலகம் ஆடாதிருக்க வேண்டிப் பள்ளி கொண்டிருப்பவனே! நான் கண்டு அனுபவிக்கும்படி நீ வர வேண்டும் என்று ஆழ்வார் பாடுகிறார்.

என்னை அடிமைத்தனத்தில் இசையும்படிப் பண்ணி, உன் திருவடிகள் விஷயமான வழி மற்றும் பலனாகிய எண்ணத்துடன் இருத்திய ஸ்வாமியே! பகவதனுபவத்துக்கு ஒரு அசைவும் இல்லாத சூரிகளுக்குத் தலைவர்களான அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் ஆகியோருக்கும் தலைவனாய், எல்லாவற்றுக்கும் காரணனாய் மிகவும் மேன்மை பொருந்திய திருமேனியை உடையவனே! திக்குக்கள் தோறும் ஒளியை வீசும் அழகிய விலையுயர்ந்த ரத்னங்கள் சேருகிற திருக்குடந்தையில் அலைச்சல் தீர்ந்து உலகம் கொண்டாடும்படி சயனித்திருப்பவனே! நான் காணும்படி வர வேண்டும்.

        நாம் திருந்த வேண்டிய முக்கிய காரியும் ஒன்றுண்டு. நமது வெற்றுடல்களைப் போற்றி பாதுகாக்கிறோம். நாம் உடல்கள் அல்ல, அழியாத ஆத்மாக்கள். இதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வியப்பே! கர்மவினையின் பலனே இதற்குக் காரணம் எனலாம். நாம் ஆத்மாக்கள் என்று நினைவில் கொள்ளும்போது எல்லையற்ற வலிமையைப் பெறுகிறோம். அத்தகைய நினைவே என்றும் வலிமையையும் ஆற்றலையும் தரும். முதற்கண் நாம் திருந்தி வர வேண்டும். அந்தப் பாக்கியத்தையும் இறைவன் தான் தந்தருள வேண்டும். ஏனெனில் நம் இயக்கங்களே பெருமான் அருளியது என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

 

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊராய் * உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?     3203     

 

கண் குளிர உன்னைத் தரிசிக்குமாறு வராமல் அரூபமாய் வந்திருக்கும் என் மாயவனே!  அற்புதமான செயல்களைச் செய்தவனே! தெவிட்டாத அமுதமாய் என் மனத்திலும், உயிரிலும் கலந்துள்ளவனே! என் தீராத வினைகளைத் தீரும்படி என்னை ஆட்கொள்பவனே! திருக்குடந்தையில் வாழ்பவனே! நீ ஆட்கொண்டும் அடியேன் இன்னமும் இங்கே உழன்று கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

கண்ணாலே அனுபவிக்கலாம்படி திருமேனியழகோடு நடந்து வாராமல், உருவமில்லாதவனாய் என் மனதிலே தோன்றி உன் ஆச்சர்ய குணங்களை எனக்குக் காட்டுபவனாய், அழிவில்லாத திருமேனியோடு எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத அம்ருதம் போலே இனியவனாய் உனக்கு அடிமையான என் ப்ராணனின் இருப்பிடமான நெஞ்சுக்குள்ளே மிகவும் ஆனந்தத்தை விதைக்கிறாய். தீராத வினைகள் தீரும்படி என்னை வாசிக கைங்கர்யம் கொண்டவனாய், கண்டு அனுபவிக்கும்படி திருக்குடந்தையை தனித்துவம் வாய்ந்த இருப்பிடமாய்க்கொண்டு இருப்பவனே! உனக்கு அடிமைப்பட்டிருந்தும் வேறு கதியில்லாத அடியேன் இன்னும் மேலுண்டான காலத்திலும் நினைத்தபடி அனுபவிக்கமுடியாமல் வருந்துவேனோ?

திருவுருவத்தோடு வராமல்  அருவமாய், என் மனக்கண் முன் தோன்றுபவனே! என் மாயனே! மாய மூர்த்தியாய்த் தோன்றுபவனே!  எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத அமுதம் போன்றவனே!  என் மனதுக்குள்ளே  தித்தித்திருக்குமவனே!  தீராத வினைகளைத் தீரும்படியாக அடியேனை ஆட்கொண்டு அருளினவனே!  திருக்குடந்தையை  ஒப்பற்ற ஊராய்க் கொண்டவனே!  அடியேன் உனக்கு  அடிமைப்பட்டும் இன்னமும் இங்கு அலைந்து திரிவேனோ?

        நம்முடைய தீவினைகளைத் தீர்க்கும்படி செய்யும் நிலையைப் பகவான்தான் நம்முள் உருவாக்குகிறார். நாம் பகவானை சரண் புகுந்தால் நமது பாவ வினைகளை அகல்வதற்கான செயல்களை நாம் செய்யும்படி அவர் செய்கிறார் என்பது பொருளாகும். அவ்விதம் கர்மவினைகளை அழித்தபிறகும் இவ்வுலகில் நாம் உழல்கிறோம் என்றால் அதற்கான காலம் கைகூடி வரவில்லை என்று அர்த்தம். எனவே காலம் வரும் வரை நாம் காத்திருத்தல் வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

       

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே.       3204

 

உழல்தடிகளைக் கோர்த்தது போல் இருக்கின்ற எலும்புகளையுடைய பூதனையின் தனத்தின் வழியே அவள் உயிரை முடித்தவனின் திருப்பாதங்களைச் சரணாகக் கொண்ட குருகூர் சடகோபன் குழலிசையைவிட இனிமையாகப் பாடிய ஆயிரம் பாமாலைகளுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் பக்தியுடன் பாட வல்லவர்கள் மான் போன்ற விழிகளையுடைய மங்கையர்க்கு மன்மதன் போன்று பொலிவுடன் காணப்படுவார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையினுள்ளிருந்த அவளுடைய ப்ராணனை எடுத்த க்ருஷ்ணனுடையவையாய் தமக்கு உபாயமாக முன்பு காட்டிகொடுத்த திருவடிகளையே உபாயமாகப் புத்திபண்ணிக்கொண்ட, திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் குழலிலும் மிகவும் இனிதாக இருக்கும்படி அருளிச்செய்த தனித்துவம் வாய்ந்த ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்தையும், தங்கள் சிறுபிள்ளைத்தனம் தீர்ந்து சொல்ல வல்லவர்கள் மான்போலிருக்கிற கண்களையுடைய திவ்ய அப்ஸரஸ்ஸுகளுக்கு ப்ரஹ்மாலங்காரம் செய்யும் க்ரமத்தில் விரும்பத்தக்கவர்களாக ஆவார்கள். மான் போன்ற கண்களை உடையவர்களுக்குக் காமுகர்கள் எப்படியோ அதைப்போலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இந்தப் பாசுரங்களைச் சொல்ல வல்லவர்கள் என்று கருத்து.

        நாம் வெற்றுடல்கள் அல்ல. அழியாத ஆத்மாவாக  உள்ளோம் என்கிற விழிப்புணர்வு வராதவரை நாம் அறியாமை உடையவர்களே என்பதை அறிதல் வேண்டும். இத்தகைய அறியாமைத் திரையானது நாம் முற்பிறவியிலும் இப்பிறவியிலும் செய்த பாவங்களால் வருகிறது.  எனவே பாவங்களைக் களைய புண்ணியங்களை செய்து பகவானை சரண் புக வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...