திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருவழுந்தூரில் மழை வேண்டி வேள்வி நடத்த வேண்டியதில்லை. நாளும் மேகம் மழையை
பொழியும். மும்மூர்த்திகளின் வடிவமே என்னும்படியான அந்தணர்கள் மூன்று காலங்களிலும்
ஹோமம் வளர்க்கின்ற அழகுள்ள திருவீதிகள் அங்குள்ளன. தந்தையான வசுதேவர் கால்களில்
பூட்டப் பட்டிருந்த பெரிய விலங்கு இற்று விழும்படி நள்ளிரவில் அவதரித்த கண்ணன்
நித்யவாசம் செய்கின்ற ஊர் திருவழுந்தூர் ஆகும்.
தன் தந்தையான வசுதேவர் கால்களில் பூட்டப்பட்டிருந்த பெரிய விலங்கு இற்று
விழும்படி நள்ளிரவில் அவதரித்த கண்ணன் என்று ஆழ்வார் கூறுகிறார். தந்தைக்கு
யாரேனும் களங்கம் செய்தால் அதை மகன் தீர்க்க வேண்டும். அந்த கடமையைக் கண்ணன்
செய்தார். இத்தகைய கொடுஞ்செயலை செய்த கம்சனை அவர் அழித்தார். அவர் பிறந்த போதே
அந்த விலங்கு இற்று போனது. தந்தையின் அடிமை விலங்கை மட்டுமல்லாது நம் அனைவரின்
பிறப்பு இறப்பு என் விலங்கினையும் அறுக்க வந்தவர் அந்த எம்பெருமான். இதனையே
இப்பாசுரத்தின் மூலம் குறிப்பாக உணர்த்தி திருவழுந்தூரில் கோயில் கொண்டிருக்கும்
பகவானைத் துதிக்கும்படி அவர் நல்வழி காட்டுகிறார்.
தண்ணீரில்
செழுமையாக வளர்ந்த பெரிய வாளை மீன்களுக்கு அஞ்சி, ஓடிப்போன குருக இனப் பறவை, ஆரல் என்னும்
சிறு மீன்களைக் கதுப்பில் அடக்கிக் கொண்டு மீண்டும் நெருங்கி வந்து சேரும் அழகான
கழனிகளை சூழ்ந்துள்ள ஊர் திருவழுந்தூர்
ஆகும். ஊக்கத்தோடு கிளர்ந்தெழுந்த கௌரவ
சேனைகளைக் கொண்ட அரசர்கள் இறக்கும்படி பாரத யுத்தத்தில் பார்த்தனுக்கு சாரதியாக
இருந்து அதைச் செலுத்திய தேவாதி தேவனுடைய ஊர் திருவழுந்தூராகும்.
குருகுகளானவை
திரள் திரளாக மீன்களைப் பிடிக்க நீர் நிலைகளில் வந்து இழிந்து தம் வாய்க்கு
அடங்கக்கூடிய சிறுமீனைப் பிடித்துக் கதுப்பிலே அடக்கிக் கொண்டிருக்கச் செய்தே
வேறேயொரு பெரியமீன் வந்து தோற்ற, அதைப்பிடிக்க அஞ்சி ஓடிப்போய், பின்னையும் ஆசையினால்
வந்து கிட்டா நிற்குமென்கை. இந்த வர்ணனையின் உட்கருத்தைப் பெரியவாச்சான் பிள்ளை வெளியிடுகிறார். “பாரத
ஸமரத்தில் பீஷ்மாதிகள் ‘அதிரதர், மஹாரதர் என்றிங்ஙனே
பேர்பெற்று ஜீவித்திருந்தோம், இப்போதாகப் பூசல் கோழைகளாக
வொண்ணாது’ என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது, தேர்க்காலிலே
உழக்குண்டு போகவொண்ணாதென்று அகலுவதாய்க் கொண்டு அவர்கள் படுவனவற்றைப் படாநின்றன
வாய்த்துக் குருகினங்களும்” என்கிறார்.
பகவான் பாரத யுத்தத்தில் பார்த்தனுக்காகத் தேரோட்டியது அவனது அன்பைக் காட்டியது. கௌரவ அரசர்களைப் பெருமான் இறக்கும்படி தேரைச் செலுத்தி துரியோதனக் கூட்டங்களை அழித்தார். அதர்மத்தை ஒடுங்கச் செய்தார். அந்தப் பகவானே திருவழுந்தூரில் திருக்கோயில் கொண்டிருக்கிறார். அனைத்து மக்களும் பகவானிடம் அன்பு கொண்டிருந்தால் அவர்களின் வாழ்க்கைச் சாரதியாக இருந்து அவர் நல்வழி காட்டுவார் என்பது கருத்தாகும்.
‘கிளைகள் நிறைந்த
குருக்கத்தி மரத்தின் மேல் தளிர்களைக் கோதி தேனுண்ட வண்டினங்கள் அம்பு போன்ற
விழிகளையுடைய பெண்களின் ஐந்து விதமாக முடிக்கப்படும் கூந்தலின் மேல் சென்று சேரும்
இடம் திருவழுந்தூர் ஆகும். சிவந்த பொன்
போன்ற தாமிரத்தில் செய்யப்பட்ட மதில்கள் சூழ்ந்த இலங்கையின் அரசனான இராவணனது
பத்துத் தலைகளையும் பிரம்மாஸ்திரத்திற்கு இலக்காக்கி அறுத்தொழித்த கம்பீரமான
இராகவனின் அயோத்தி போலுள்ளது’ என்ற வகையில் ஆழ்வார் கூறுகிறார்.
அதர்மத்தை அழித்த ஸ்ரீராமபிரான் திருவழுந்தூரில் கோயில் கொண்டிருந்தாலும் அது
அயோத்தியைப் போலவே காட்சி தருகிறது என்று கூறுகிறார். இத்தலத்தை வணங்குவது அயோத்தி இராமனை
வணங்குவதற்கு ஈடாகும் என்றவாறு இப்பாசுரம் அமைந்துள்ளது.
பொதுவாக, ஸ்ரீமஹாவிஷ்ணு எடுத்த அனைத்து அவதாரங்களும் அசுரர்களை
அழித்து, தர்மத்தைக் காக்கவும், அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டிப்
பக்தர்களைத் துன்பங்களிலிருந்து காத்து ரட்சிக்கவும் எடுத்தவையே ஆகும். ஆனால்,
பெருமாள் எடுத்த அவதாரங்களிலேயே
மிகவும் சிறப்புக்குரிய அவதாரமாக எல்லோராலும் போற்றப்படுவது நான்காவது அவதாரமாகிய
நரசிம்ம அவதாரம் ஆகும். ஏனென்றால், மற்ற அவதாரங்கள் அனைத்திலும் அவதாரம் எடுத்துச் சிறிது காலம் பொறுத்து, நேரம் காலம் பார்த்து, போர் செய்து அதற்குப் பிறகுதான் தர்மம்
நிலைநாட்டப்பட்டது, பக்தர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால், நரசிம்ம அவதாரம் அப்படியில்லை. ‘நாளை என்பதே
அறியாதவர் நரசிம்மர்’ என்பார்கள். தானே கடவுள் என்னும் கர்வத்துடன் இருந்த இரண்யனை
அழித்துப் பிரகாலாதனைக் காத்தார்.
‘பேடையோடு கூடி
தன் குஞ்சுகளுக்காக இரை தேடிச் செல்லும் பறவை, விளை நிலங்களில் சிறிய கயல் மீன்களைத் தேடி
எடுக்கும் வளமான கழனிகள் சூழ்ந்த ஊர் திருவழுந்தூராகும். இவ்வூர் ஊழிக்காலத்தில் ஆலிலை மீது
பொருந்தியிருந்து அடியேன் உள்ளத்திலும் புகுந்து, என் நெஞ்சிலும் கண்களிலும் நிலைத்து நிற்கும்
எம்பெருமான் நித்யவாசம் செய்யும் திருத்தலமாகும்’ என்கிறார் ஆழ்வார்.
இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால்,
காணாமல் போனவர்கள் வீடு திரும்பவும்,
தொலைந்து போன பொருட்கள் மீண்டும்
கிடைக்கவும், மேல்
அதிகாரிகளிஅராஜகத்திலிருந்துது விடுபடவும், திருமணத்தடை நீங்கவும் வழி பிறக்கின்றது என்று
கூறுவர்.
ஊழிகாலத்தில் இத்தலம் அழியாத பெருமையுடையது என்பதை ஆழ்வார் குறிப்பாக
உணர்த்துகிறார். இத்தகைய பெருமாவணங்கிப் பெறற்கரியரிய பேறுகளை எல்லாம்
பெறுங்கள் என்று இப்பாசுரத்தின் மூலம் நல்வழி காட்டுகிறார். எக்காலத்திலும்
இத்தலத்து இறைவன் நமக்குத் துணை இருப்பார் என்பது இதன் உட்பொருளாகும்.
துணிக் கொடிகளும், தேர் செல்லும்போது ஏற்படும்
தூசுகளும், மங்கையர் தம் கூந்தலில் ஊட்டிய அகிற்புகையும்
ஒன்று சேர்ந்து மழை மேகத்தை நினைவுறுத்தும் அழகிய வீதிகளைக் கொண்டது
திருவழுந்தூராகும். இவ்வூர் பகலுக்கும், இரவுக்கும் தலைவனாய்,
பூலோகமும், விண்ணுலகமும் தானேயாகி, நிகரில்லாத சூரிய சந்திரர்களும் இருளுமாகி நின்ற ஆமருவியப்பன் நின்றருளும்
திருத்தலமாகும்.
நமக்கு ஏற்படும் இன்பங்களும், துன்பங்களும்கூட
இறைவனின் திருவுள்ளத்தின்படியே வருகின்றன என்பது தெரிகிறது. இவ்வுலகில் உள்ள
அனைத்தும் இறைவனின் வடிவங்கள். அதற்குள் ஆத்மா பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே எவ்வுயிர்க்கும் தீங்கிழைத்தல் கூடாது என்று சாத்திரங்களும், புராணங்களும் வலியுறுத்துகின்றன.
அதாவது துன்பம் நம் வாழ்க்கையில் வரும்போது அதனைக்
கண்டு மலைத்துத் துவண்டு விடாமல் இருக்க வேண்டும். எல்லா மனிதர்கள் வாழ்விலும்
துன்பம் வரவே செய்யும். எனவே அந்தத் துன்பத்தைக் கண்டு நகைத்து அதனைக் கடந்து
செல்ல வேண்டும். அவசரம்,
நோய், பசி, தாகம்,
தூக்கம் ஆசையென மனிதனுக்கு பெருமான் வழங்கிய பலஹீனங்களின் வரிசையில் துக்கமும், கவலையும் ஒன்று. இறைவன் மகா நீதியரசர்.
அவர் சர்வ லோகத்துக்கும் நியாயாதிபதி, அவர்
நியாயக்கேடு இல்லாத சுத்ததேவன். அவர் யாரையும் நியாயம் இல்லாமல் தண்டிப்பதும்
இல்லை. காரணம் இல்லாமல் யார் கையிலும் இருந்து எதையும் பிடுங்குவதும் இல்லை. எனவே நம்மை நாமே ஆராய்ந்து பார்த்துத்
திருத்திகொண்டால் துன்பத்திலிருந்து
சுலபமாக விடுபட முடியும் என்ற அறிவுரையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நெடிதுயர்ந்த
மாடங்களில் நாட்டப்பட்டிருக்கும் சூலம் கார்மேகங்களின் வயிற்றைக் கிழித்த உடனே மழை
பொழிகின்ற நாட்டிய ஒலிகளால் ஏற்படும் ஆரவாரம் ஓயாமல் இருக்கும் அழகான வீதிகளைக்
கொண்டது திருவழுந்தூராகும். இவ்வூர் தாமரை பூத்ததுபோல் சிவந்த திருவாயால்
புன்முறுவல் செய்தருளி என் அருகில் வந்து என் நெஞ்சத்திலே புகுந்து நின்ற
ஆமருவியப்பன் எழுந்தருளிய ஊராகும் என்கிறார் ஆழ்வார்.
சர்வ
வியாபக இறைவன் தனது அனைத்து உண்மையான பக்தர்களை, அவர்கள் எந்த வடிவில் அவனை நேசித்தாலும், அறிவான். அவர்களது பிரார்த்தனைகளுக்குப் பலவழிகளில் பதிலளிக்கிறான்.
இறைவனுக்கு காட்டப்படும் பக்தி எப்பொழுதும் ஒரு விதமான வெளிப்படையான அல்லது
பூடகமான பதிலை வரவழைக்கிறது. உண்மையான பக்தி இறைவனால் புறக்கணிக்கப் படுவதில்லை.
இக்கலியுகத்தில் மனிதனின் நிலை என்ன? தங்களது
மனங்களைக் குப்பைகளைப் போடும் குப்பைக் கூடைகளாகத்தான் அவர்கள்
வைத்திருக்கிறார்கள். பணப்பித்து, பெண்பித்து, பதவிப்பித்து, சுயநலம், துரோகம்,
நன்றி மறத்தல், பெரியோரை மதியாமை, தெய்வ நிந்தனை போன்ற குப்பைகளைத்தான் அவர்கள் மனதில்
நிறைத்திருக்கிறார்கள். கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர்
பொருட்செல்வம் இல்லாதவனை தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை
போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பைப் போற்றாமல் தன்
சுற்றத்தாரையும் உறவினரையும் கூடக் கொல்லத் துணிவான். இவற்றை
நீக்கி அவர்கள் மனத்தில் இறைவனை எழுந்தருளப் பண்ண வேண்டும் என்பதே ஆழ்வாரின்
விருப்பமாகும்.
அலை கடலென
நீண்டுள்ள அழகிய வீதிகளில் வானளாவி ஓங்கி இருக்கின்ற சாந்திட்ட வெண்மணி மாடத்தில்
கரும்பு ஆலையின் புகை சூரியக் கதிர்களை மறைக்கும் தலம் திருவழுந்தூர் ஆகும். இவ்வூரில் மாலையில் வந்து மலர்ப் படுக்கையில்
தங்கி அடியேன் நெஞ்சில் புகுந்து என்
நீலோற்பவம் போன்ற விழிகளில் நீர் தளும்பும்படி விடைபெற்று நின்று கொண்டிருப்பவர்
கொலுவிருக்கும் தலமாகும்.
தூய்மை மற்றும் புலனடக்கம் ஆகியவை
அகவிழிப்புணர்வைத் தூண்டும் குணங்கள். மனத்தூய்மை
அடைந்த பிறகு, விவேகம்,
வைராக்கியம், மனவடக்கம், புலனடக்கம், பொறுமை, அகிம்சை
போன்ற குணங்கள் வளரும். தூய்மை, புலனடக்கம் போன்ற ஒழுக்க விதிகளைக்
கடைபிடித்தாலன்றி நம் மனம் திருக்கோயிலாக முடியாது. தேவாதி தேவனான பகவான் அமரும்
சிம்மாசனம், தூய்மையின்றி இருக்கலாமா என்பதை சிந்திக்க
வேண்டும். பகவான் தூய்மையானவன், யாரிடமும் வேறுபாடு
காட்டாதவன், கருணை உள்ளவன். இத்தகையவன் சுயநலம்
கொண்டவர்களின் உள்ளத்தில் எவ்வாறு வந்து
தங்குவான்? இந்தச்
சிந்தனை நம்
எல்லோரிடத்திலும் ஏற்பட வேண்டும் என்று இப்பாசுரத்தில் ஆழ்வார் தெரிவிக்கிறார்.
‘பஞ்சு போன்ற
மென்மையான பாதங்களைக் கொண்ட நல்ல பாவையரின் பொற்சிலம்புகளில் ஏற்படும் ஆரவார ஓசை
ஓய்வின்றி ஒலிக்கும் அழகிய வீதிகளைக் கொண்டது திருவழுந்தூராகும். இவ்வூர்
வஞ்சிக்கொடி போன்ற இடை நோகும்படி கூடிநின்ற கனவில் என் உள்ளம் நிறையும்படி கைகூப்பி வணங்கப்படும்
ஆமருவியப்பன் நின்ற திருத்தலமாகும்’ என்றவாறு இப்பாசுரம் அமைந்துள்ளது.
பஞ்சு போன்ற மிருதுவான பாதங்களையுடைய நல்ல
பெண்கள் அணிந்துள்ள அழகிய தங்க சிலம்புகளிலிருந்து உண்டான இடைவிடாத
ஆரவாரமிருக்கும் ஊர் அணியார் வீதி திருவழுந்தூர். வஞ்சிக்கொடி போன்ற இடைதளர்ந்து
மெலியும்படி என்னுடன் சேர்ந்து நின்ற கனவு மயமான சேர்க்கையில் எனது நெஞ்சு
நிறையுமாறு கைகூப்பி நின்றார். அப்படி நின்ற பெருமானின் ஊர் திருவழுந்தூர் போலும்.
திருவழுந்தூர் ஆமருவியப்பன் ஆழ்வார் நெஞ்சில் குடிகொண்டதைப் பெருமையுடன்
கூறுகிறார். இத்தகைய பெரும் பாக்கியத்தை
வையகத்தில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறவியே நமக்கான துன்பம். இவை நீங்க
வேண்டுமெனில் தீவினைகள் தொலைய வேண்டும். அதற்குப் பகவானிடம் பக்தி கொண்டு அவன்
அருளை பெற வேண்டும். ஏனெனில் பாவம், புண்ணியம் இரண்டும் விலக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கடந்தால்தான் நாம்
ஆத்ம ஒளியை தரிசிக்க முடியும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஒருநாளும் வற்றாத
ஆழமான நீர் நிலைகளில் உள்ள தாமரை மலர்களின் மேல் வரிவண்டுகள் இசைபாட, அன்னப்பறவை தன் பேடையோடு கூட நடனம்
செய்யும் அழகான கழனிகள் கொண்ட ஊர் திருவழுந்தூராகும். இவ்வூர் நேற்று நான் இருக்குமிடத்திற்கு
எழுந்தருளி என் பஞ்சேந்திர அறிவையும், அழகையும் கவர்ந்து மிக
நேர்த்தியான எனது ஆடைகள் தளரும்படி செய்து பிரிந்து போன புனிதமானவருடைய ஊராகும்.
என்னுடைய செவி, வாய், கண்,
மூக்கு, உடல், என்னும்
பஞ்சேந்திரியங்களின் உடையவும் வ்ருத்திகளைத் தன்வசமாக்கிக் கொண்டவரும், எனது மேனியழகைக் கொள்ளை கொண்டவரும், அரையில்
பரியட்டம் தங்காதபடி பண்ணிவிட்டுப் போனவருமான தலைவர் வாழுமிடம் திருவழுந்தூர். இப்படி என்னைப் படுகொலை செய்பவர் எங்ஙனே பரிசுத்தராவர்? பெண் கொலைப் பாதகியன்றோ இவர் என்று பெருமானைச் சாடுகிறாள்.
ஐம்புலன்கள், அறிவு அனைத்தையும் தன் பக்கம் இழுத்து
தன்னை நல்வழியில் பகவான் சேர்த்துவிட்டதை ஆழ்வார் பெருமைபடக் கூறுகிறார். இறைவனின்
நினைவின்றி அற்பப் பொருட்களைத் தேடி வாழ்நாளை விரயம் செய்து கொண்டிருக்கும் கோடான
கோடி மக்களுக்காக இரங்கி அவர் இந்த நல்வழியைக் காட்டுகிறார்.
நெற்பயிர்களின்
நடுவினிலே பூத்த கருநெய்தல் பூக்கள் திருவழுந்தூர் பெண்களின் கரிய விழிகள் போன்று அழகுடன் விளங்க, தடாகத்தின் நீரில் பூத்த அல்லி
மலர்கள் அவர்களின் வாய் போன்று தோற்றமளிக்க, அடர்த்தியான
இதழ்களைக் கொண்ட தாமரைப் பூக்கள்
அவர்களின் வதனத்தை நினைவுறுத்த, அத்தகைய வயல்களை உடைய
திருவழுந்தூரில் வீற்றிருக்கும் ஆமருவியப்பனைக் குறித்துப் பூங்கொடிகள் மிகுந்த
புதர்களில் குயில்களைக் கூவி அழைக்கின்ற
திருமங்கை நாட்டு மன்னன் பரகாலன் இயற்றிய இப்பாமாலையைப் பாடினால் பாவங்கள்
தங்காமல் ஓடிடும்.
திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தும் நம் உள்ளங்த்தில் பகவானை
எழுந்தருளச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்தன. பக்தியுடன் இதைப்
படிப்போருக்கு பாவங்கள் நீங்கி உள்ளம் திருக்கோயிலாக மாறிவிடும். பகவானை தரிசித்து
அவனை அடைய மனம் உருகி வழிபடும் பழக்கத்தினை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது
ஆழ்வாரின் விருப்பமாகும்.
‘நரசிம்ம
ரூபியாய் அவதாரமெடுத்து வலிமை மிக்க இரணியனின் மார்பை இரண்டாகப் பிளந்து
திருவுள்ளமுவந்தவனும், இடக்கையில்
பாஞ்ஜன்யத்தையும், வலக்கரத்தில்
தீட்சணமான சுதர்சனத்தையும் தரித்தவனை, செவ்விய கமலத்தில் பறந்து செல்லும் நான்முகனைப் போன்று ஓயாமல் வேதங்களை ஓதும்
அந்தணர்கள் வாழ்கின்ற திருவழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகிய தாமரைப் போன்ற
விழிகளையுடைய ஆமருவியப்பனை அடியேன் தரிசிக்கும் பேறு பெற்று மகிழ்ந்தேன்’ என்ற
பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
பிரகலாதனின் அன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தவே திருமால் நரசிம்மப்
பெருமானாக அவதாரம் எடுத்தார். தன்னை மனம் உருகி அழைப்பவர்களுக்கு, நொடியில் வந்து உதவி செய்வதை நரசிம்ம
அவதாரம் நமக்கு உணர்த்துகிறது. அது மட்டுமின்றி, இறைவன் எங்கும் உள்ளார் என்பதை நரசிம்ம அவதாரம்
நமக்குச் சுட்டிக் காட்டுகிறது நரசிம்ம
அவதாரத்தின் பெருமை உணர்த்தப்பட்டு, செயற்கரிய செயல்களையெல்லாம் செய்த அந்த இறைவன்தான் திருவழுந்தூரில் கோயில்
கொண்டுள்ளான். அவனை வந்து தரிசித்து வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
‘அரசர்களெல்லாம்
மடிந்தொழியும்படி கொலை செய்யும் கோடரியை ஏந்திய பரசுராமனை, கிழத்தனம் சற்றும் அணுகாத தேவாதி தேவனை, கடல்போல் நிறமுடையவனை, அன்பர்கள் துன்பத்தில் அழுந்தும்போது ஐயோ
என்றிரங்கி அருள் செய்பவனை, திருவழுந்தூரில்
எழுந்தருளியிருக்கும் ஆமருவியப்பனை அடியேன் கண்ணாரக் கண்டு களிப்படைந்தேன்’
என்கிறார் ஆழ்வார்.
பரசுராமனின் தந்தையான ஜமதக்னி முனிவரை அரசன் கொன்றான். முனிவரின் மனைவி
துக்கம் தாளாமல் இருபத்தியொரு முறை வயிற்றில் அடித்துக் கொண்டு புலம்பினாள். இதைக்
கண்ணுற்ற பரசுராமன் இருபத்தியொரு தலைமுறைக்கு அரச குலத்தை அழிப்பேன் என்று சபதம்
செய்தான். அத்தகைய அவதாரமெடுத்த பெருமான் திருவழுந்தூரில் கோயில் கொண்டுள்ளான்.
அவனைத் தரிசித்து வல்லமை பெறுங்கள் என்பது இதன் கருத்தாகும்.
‘அனைத்தையும் தன்
உடைமையாகக் கொண்டுள்ளவனை, ஆர்பரிக்கும்
சமுத்திரங்கள் சூழ்ந்த உலகங்களைப் படைத்தவனை, வாணாசுரப் போரில் ஒப்பந்தப்படி சிவபெருமான் விலக,
அதனால் அனைவரும் தோற்று ஓடும்படி
செய்து சக்ராயுதத்தால் அசுரனைக் கொன்றவனை,
திருவழுந்தூரில் நித்ய வாசம் செய்பவனை
அடியேன் தஞ்சம் அடைந்ததால் பிழைத்துப் போனேன்’ என்கிறார் ஆழ்வார்.
எம்பெருமானாய் ஒலிக்கும் நீருடைய கடலால் சூழ்ந்த உலகங்களைப்
படைத்தவனாய், ரிஷப வாஹனமுடைய ருத்ரனை பாணாசுர போரில் அன்று அசுரனை சக்கரத்தால் ஓடஓட விரட்டினவனாய், சத்ருக்கள் நிறைந்திருக்கும் இலங்கையை அழித்தவனான பெருமானை அழகிய பூமிக்கு ஆபரணமாயிருக்கும் திருவழுந்தூரில்
அடியேன் அப்படி இருப்பவனை அடைந்து வணங்கி
உய்ந்து போனேனே என்கிறார்
செல்வம், ஞானம், வல்லமை போன்ற அனைத்தையும் வழங்கும் கருணை
கொண்ட எம்பெருமானை தரிசனம் செய்து எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள்
என்று ஆழ்வார் குறிப்பாக உணர்த்துகின்றார். எனவே திருவழுந்தூர் சென்று நமது
மாசுக்ககளை நீக்கி எல்லா நன்மையும் பெறுவோம் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
‘கோவர்த்தனக்கிரியை
குடையாகப் பிடித்துப் பெருமழையைத் தடுத்தவனை, சிறந்த குலத்தில் பிறந்த கஜேந்திராழ்வான் அழியாமல்
காத்து தயை செய்தவனை, போர்
செய்யவல்ல காளை போன்றவனை, முன்பு
கிருஷ்ணனாய்ப் பசுவின் நெய்யை விரும்பி உண்டவனை, அழகு மிக்க திருவழுந்தூரிலே நின்றளும் ஆமருவியப்பனை
அடியேன் தரிசித்து மனத்தில் இருத்தி குறையற்று நிறைவடைந்தேன்’ என்ற பொருளில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
மலையால் மழையை
தடுத்தவனை அன்று நல்ல குலத்தில் தோன்றிய கஜேந்திர யானை அழிந்து போகாதவாறு
அதனுக்கு அருள் செய்தவனும் அன்று பசுவின் நறுநெய்யை மனம் பொருந்தி உகந்து உண்டவனும் போரில்
வல்லவனுமாக இருப்பவனை அழகிய திருவழுந்தூரில் அடியேன் கண்டு கொண்டு வணங்கி
நிறைவு பெற்றேன்.
இப்பிறவியில் நாம் காணும் துன்பத்தைப் போக்கி நம்மை நிலையான வாழ்வுக்கு
அழைத்துச் செல்லக்கூடியவன் எம்பெருமானான ஆமருவியப்பனை மனதில் நிறுத்தி
நிறைவடைந்தேன் என்கிறார் ஆழ்வார். நம்முடைய மனமானது அலைபாயும் நிலையில் அலைந்து
கொண்டிருக்கிறது. அலைகள் அடங்கிய மனதை
அடக்கி மனநிறைவைக் கொடுப்பவன் திருவழுந்தூரில் இருக்கிறான்.அவனைத் தரிசித்து மேலான
நிலையினை அடையுங்கள் என்கிறார் ஆழ்வார்.
‘கொடிய கம்சனை
சீறித் தொலைத்தவனை, திருக்கண்ணமங்கையில்
நின்று அருள்பவனை, வஞ்சனையுடையவளான
பேய்ச்சி முலையில் வாய் வைத்துப் பாலோடு அவள் உயிரையும் உண்ட கண்ணனை, அழகு மிக்க சொற்களால் வேதங்களை ஓதும்
வேதியர்கள் வாழும் அழகிய திருவழுந்தூரில் மை மலை போன்ற வடிவமுடைய ஆமருவியப்பனை
அடியேன் தரிசனம் செய்தேன்’ என்கிறர் ஆழ்வார்.
தீங்கிழையாமை, வாய்மை, கோபத்திலிருந்து
விடுதலை, துறவு, மன அமைதி, பிறர் குறை சொல்லாமை, அனைத்து உயிர்களிடத்தும் கருணை, பொருளாசையின்மை, மென்மை, பணிவு, அமைதியின்மையிலிருந்து
விடுதலை, வீரம், மன்னிக்கும் தன்மை, பொறுமை, உறுதி, தூய்மை, சண்டித்தனமின்மை துரோகமின்மை போன்ற
குணநலன்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய இலட்சியங்களுக்குத் தடையாகப்
பல அசுரசக்திகள் நம்மிடையே சூழ்ந்து நம்மை வாட்டுகின்றன. அதனால்தான் பெருமுயற்சி
எடுப்பினும் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில்லை. ஆனால் தெய்வசக்தி கொண்டு
தடைகளை நீக்கி இவற்றை நிறைவேற்றலாம். எனவே தெய்வத்திடம் சரண் புகுவதே சாலச்
சிறந்தது எனலாம். பாதுகாப்புள்ள அரண் நம்மிடையே உள்ளபோது பாதுகாப்பற்ற இடத்தில்
நாம் இருப்பது நமது அறியாமையையே காட்டுகின்றது என்பது இப்பாசுரத்தின் மூலம்
தெளிவாகிறது.
‘இந்திரனுக்கும், பிரம்மனுக்கும்
மேலானவனை, யானைத் தோலை
விரும்பி அணியும் சிவபெருமானும் திகைக்கும் வண்ணம் புகழ் பெற்ற திருவிக்கிரமனை,
திருவழுந்தூரில் அடியேன் தரிசித்து
மகிழ்ந்தேன். இத்தலமானது அந்தணர்கள்
அடிபணிந்து பெருமானைப் போற்றுகின்ற அற்புதமான தலமாகும்’ என்கிறார் ஆழ்வார்.
மனிதன்
தன்னுள் அடங்கியுள்ள அற்புதங்களையும் தன்னுள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும்
அற்புதங்களின் பக்கமும் தனது சிந்தையைத் திருப்பினாலே இறைவனின் பேராற்றலையும்
அளவிலா கருணையையும் உணர முடியும். எல்லோருக்கும் மேலானவரின் உறவு கிடைத்து
விட்டால் அற்ப சக்திகள் நம்மைத் தீண்டாது.
சிங்கமானது மற்ற மிருகங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. அது போன்று மேலான நிலையில் உள்ள பெருமான்
திருவழுந்தூரில் ஆமருவியப்பனாகக் குடிகொண்டுள்ளான். அவரைத் தரிசனம் செய்து பயமற்ற
ஆனந்த நிலையினை அடையுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
‘திருமகள்
நித்யமாக வாழும் திருமார்பை உடையவனை, திசைகள், பூமி, நீர், நெருப்பு இவற்றின் வடிவமாகத் திகழ்பவனை, காற்றின் ஓசையில் சஞ்சரிப்பவனை, அரூபமாய் உலவுபவனை, திருவழுந்தூரில் வேராய்
ஊன்றி நிற்கும் கற்பக மரம் போன்ற ஆமருவியப்பனைத் தரிசித்து மகிழ்ந்தேன்’ என்று
பெருமையுடன் ஆழ்வார் பாடுகிறார்.
திசைகள், பூமி, நீர் தீ இவற்றின் வடிவமாக இறைவன்
இருக்கிறான். ஐம்பூதங்களின் வடிவமாய் இருந்து சகல உயிர்களையும் காத்து வருகிறான்.
பல அவதாரங்கள் எடுத்த எம்பெருமான் ரூபமுள்ளவனாக ஸ்தூல உடல் தாங்கியும் சகல
ஜீவராசிகளை இயக்கி வருகிறான். அந்த ஒளியே ஆத்மாவாகத் திகழ்கிறது. இத்தகைய ஜோதி நம்
எல்லோரிடத்திலும் உள்ளது. இடைவிடாமல் அவனைத் தொழும்போது அந்த ஒளியினை நாம்
தரிசிக்க முடியும். அதன்பிறகு நாம் அடைவது எதுவுமில்லை என்பது இப்பாசுரத்தின்
கருத்தாகும். ஆத்ம ஜோதி என்பது ஈடு இணையற்ற ஜோதியாகும். அது நம்
ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. ஆனால் நம் கண்களுக்கு அது தெரியாததால் நாம் அதை
அறியாமல் இருக்கிறோம். இடைவிடாத தெய்வ சிந்தனைமூலம் நாம் இந்த ஆத்ம ஒளியினை
தரிசிக்க முடியும். அந்தத் தரிசனம் கிடைத்துவிட்டால் அதற்கு மேல் நாம் அடையக்கூடிய
பேறு எதுவுமில்லை எனலாம்.
என்னை உறுதிமிக்க
பக்தனாக எண்ணி மனத்தில் குடிபுகுந்து கொண்டவனை, பூமிதேவியின் தனங்களை அழுந்தும்படி அணைத்தவனை, தெருக்கள் தோறும் பழைமை பொருந்திய நான்கு மறைகளும் அலைகடல் போல்
முழங்குகின்ற திருவழுந்தூரில் உறைபவனை, சாத்திரங்களில்
நிறைந்திருக்கும் சொற்களுக்குப் பொருளாய் விளங்கும் ஆமருவியப்பனை நான் தரிசித்து
மகிழ்வுற்றேன் என்கிறார் ஆழ்வார்.
என்னை நிலையான கைங்கர்யம் பண்ணுபவனாக ஆக்கி உகந்தானை பூமாதேவியை அனுபவித்த வித்தகனை அநாதியான நான்கு
வேதங்களையும் வீதிதோறும் அலைகள் நிறைந்த கடல்போல் முழங்கும்
அழகிய திருவழுந்தூரில்
இருப்பவனை சாஸ்திரங்களின்
பொருளாக இருப்பவனை
கண்டு கொண்டு களித்தேனே.
பகவானைத் தவிர வேறு அற்ப பொருள்களில் மனதைச் செலுத்தாதவன்தான் பகவானின்
பார்வையில் உறுதியான பக்தன் என்று கொள்கிறான். துரியோதனனுக்குப் பல
படைக்கருவிகளைத் தந்து, அர்ச்சுனனுக்கு அவன் வேண்டியவாறு
தான் மட்டும் துணையாக இருந்து பாரதப்போரைபாண்டவர்களுக்குச் சாதகமாகக முடித்துக்
கொடுத்தான். உண்மையான பக்தன் பகவானை நன்கு உணர்ந்து அதன்படி செயல்படுவான். எனவே
நாம் உறுதியான பக்தனாகச் செயல்படட வேண்டும் என்பது இப்பாசுரப் பொருளாகும்.
‘திருப்பேர்
நகரில் சயனம் கொண்டிருக்கும் அப்பக்குடத்தானை, திருக்குடந்தையில் பள்ளிகொண்டிருக்கும் சாரங்கபாணியை,
ஒளி பொருந்திய கச்சினை அணிந்த அழகான
தனங்களையுடைய இலக்குமியின் கணவனை, எத்தனை முறை தரிசித்தாலும் திருப்தி அடையாத இனிய அமிர்தம் போன்றவனை, திருவழுந்தூரில் நின்றருளும் மழை மேகம்
போன்ற ஆமருவியப்பனை தரிசித்து ஆனந்தமடைந்தேன்’ என்கிறார் ஆழ்வார்.
திருப்பேர்
நகரிலே ஸந்நிஹிதனானவனை, திருக்குடந்தையிலே
வந்து, கண்வளர்ந்து தன்னுடைய
சேஷித்வத்தை உதறிப்படுத்தவனை நித்யமான யெளவனத்தையுடைய பெரியபிராட்டியாருக்கு
வல்லபனானவனை, (ஆராவின்னமுதை) அவ்விருவருமான சேர்த்தி
இவர்க்கு இனிதாயிருக்கிறபடி திருவழுந்தூரிலே நித்யவாஸம் பண்ணுகிற கார்காலத்தில்
மேகம்போலே ஸ்ரமஹரமான வடிவழகையுடையவனை, கண்டுகொண்டு களித்தேனே, கண்கள்
குளிரக்காணப் பெற்றேனை என்று கூறுகிறார் ஆழ்வார்.
நாம் அனுபவிக்கும் அத்தனை பொருட்களும் சலிப்பைத் தரவல்லன. செல்வம், பொன், பொருள் இவை அத்தனையும் நமக்கு உண்மையான சந்தோஷத்தைக்
கொடுக்காது. அதிக பணம் வந்தால் ஒரு சலிப்பு வந்துவிடும், அமைதி நம்மை விட்டுச் சென்று விடும். ஆனால்
பகவானிடம் ஏற்படுகின்ற அன்பு, உறவு, ஐக்கியம் என்பது
எக்காலத்திலும் திகட்டாத பேரின்பமாகும். அந்த உறவை அடைவதே நாம் இலட்சியமாகக்
கொண்டு வாழ்தல் வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.
‘வலிமை மிக்க
முருகப்பெருமானைப் போன்றவர்கள் நிறைந்த திருவழுந்தூரில் பகவான்
எழுந்தருளியுள்ளான். அனைத்து
தருமங்களுக்கும் மூலமானவன். அந்தப் பகவானைக் குறித்து திருவாலி மன்னனும், எதிரிகளின் இரத்தக்கறை கொண்ட வேலாயுதத்தை
நன்கு வீசக்கூடியவருமான கலியன் இயற்றிய இப்பத்து பாசுரங்களை முறையாகப்
பாடக்கூடியவர்கள் வைகுண்டத்தை முழுமையாக ஆள்வார்கள்’ என்கிறார் ஆழ்வார்.
எவராலும் வெல்ல முடியாத சூரனை தன் வேற்படையால் அழித்துத் தேவர்களைக்
காத்தருளினார். ஆழ்வார், சுப்பிரமணியக் கடவுளைக் குறிப்பது அவரது
வீரத்தினை எடுத்துரைத்து, அது
போன்று வீரமிக்கவர்கள் திருவழுந்தூரில் உள்ளார்கள்
என்று குறிப்பிடுகிறார். ஹரியும் சிவனும்
ஒன்று என்ற தத்துவத்தை இப்பாசுரம் மூலம் ஆழ்வார் நமக்கு உணர்த்துகிறார். எனவே
வேறுபாடுகளைக் கற்பித்து நாம் அடையும் இலக்கைத் தவறவிடக்கூடாது. தருமச் செயல்கள்
அனைத்தும் பகவான் மூலமாக இவ்வுலகத்தில்
நடைபெறுகின்றன என்ற கருத்துக்களை இப்பாசுரத்தில் அறியலாம்.
‘இலக்குமியின்
இலட்சுமிகரமான செல்வனே! தெய்வங்களுக்கெல்லாம் தலைவனே! சிவந்த திருவிழிகளை உடையவனே!
எழில் வடிவம், சிவந்த சுடர்
போன்ற சுதர்சனச் சக்கரத்தைச் செலுத்துவதில் வல்லவனே! பிரளய காலத்தில் உலகை
உண்டவனே! அழகிய மார்பினைக் கொண்டவனே! திருவழுந்தூரில் அருளும் ஆமருவியப்பனே! ஓர்
உறுப்பிலிருந்தே என்னால் தப்பி பிழைக்க முடியவில்லை. ஐம்புலன்கள் என்னைத்
துன்புறுத்துகின்றன. அதைக்கண்டு பயந்து உன்னைச் சரணடைகிறேன்’ என்கிறார் ஆழ்வார்.
திருவுக்கும்
திருவாகிய செல்வா! எம்பெருமான் ஸ்ரீக்கும் ஸ்ரீயாயிருப்பனென்றால் என்ன
கருத்தென்னில், ஸ்ரீ என்றாலும்
திரு என்றாலும் ‘அதிசயத்தை விளைவிப்பவள்’ என்று பொருள் கொள்ளத்தக்கது. எல்லார்க்கும் அதிசயத்தை விளைப்பவளான அவள்
தனக்கும் அதிசயத்தை விளைப்பவன் எம்பெருமான் என்றவாறு. பிராட்டிக்கு எம்பெருமானுடைய ஸம்பந்தத்தினால்
அதிசயம்; எம்பெருமானுக்குப்
பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம் என்றுணர்க. பிராட்டிக்கு எம்பருமானுடைய ஸம்பந்தத்தினால் அதிசயம் என்பதற்கு
மேலுதாஹரிக்கப்பட்ட ஸ்ரீஸூக்திகள் ப்ரமாணம்; எம்பெருமானுக்கு பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம் என்பதற்கு ஸ்ரீராமாயண வசநம் ப்ரமாணம்.
ஐம்புலன்கள் ஐந்து பகைவர்களாக நம்மைக்
கீழ்நிலைக்கு இழுத்து சென்று துன்புறுத்துகின்றன. கண்கள் பார்க்கக் கூடாதவற்றைப்
பார்ப்பதும், காதுகள் கேட்கக்
கூடாதவற்றைக் கேட்பதும், நாவில்
சொல்லத் தகாத வார்த்தைகள் வாய் பேசுவதும். நுகரக்கூடாதவற்றை மூக்கு நுகர்வதும்,
வணங்கக் கூடாதவர்களை சிரம் தாழ்த்தி
வணங்குவதும் நம்மைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. எனவே பகவானை சரண் புகுந்து
ஐம்புலன்களை வெல்ல வேண்டும் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
‘மலர்களினால்
கட்டப்பட்ட பந்தைப் பிடிக்கும் மெல்லிய விரல்களையுடைய, வளையல்களை அணியும் தோள்களைக் கொண்ட பதுமையான
திருமகளோடு கூடி எனக்குத் தரிசனம் தந்தவனே! என் உள்ளத்தில் பொருந்திய கார்மேக
வண்ணனான திருமாலே! நான்கு வேதங்களாய் உள்ளவனே! விஸ்வரூபம் எடுத்தவனே!
திருவழுந்தூரில் மேற்கில் எழுந்தருளியிருக்கும் ஆமருவியப்பனே! உனது திருவடிகளின்றி
வேறு புகலிடத்தை நான் அறியேன்’ என்று ஆழ்வார் பாடுகிறார்.
பந்து
பிடித்திருக்கும் மிருதுவான விரல்களையுடையவளும் நல்ல வளையல்களை உடைய தோள்களை உடையவளும் பதுமை போன்றவளுமான திருமகளுடன்
உடனே வந்தாய்! வந்து என் மனத்தில் வந்து நின்றவனே! கருத்த நிறத்தையுடையவனே! மேகம்
போன்று குளிர்ந்த ஒளியுடையவனே! சாந்தோக்ய உபநிஷதர்த்தத்தை அறிந்தவனே! ப்ருஹதாரண்யக
உபநிஷதர்த்தத்தை அறிந்தவனே! தைத்திரிய உபநிஷதர்த்தத்தை அறிந்தவனே! சாமவேதர்த்தத்தை
அறிந்தவனே! ஸர்வஜ்ஞனே! அழுந்தூர் மேல் திசையில் இருக்கும் பெருமானே! அந்தோ! உன்
திருவடியைத் தவிர வேறொரு புகலை அறியேன் என்கிறார்.
நமது சரீரம் உண்மையானதல்ல. ஆத்ம ஒளியே பரம்பொருள் ஆகும். அதில் இறைவன்
இருக்கிறார். அவரை உறுதிப் பொருளாகப் பற்றுபவர்களுக்கு பிறவிப்பிணி அகன்று போகும்.
நிலையான பேரின்ப வாழ்வு கிடைக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால் அதை விடுத்து மனைவி, மக்கள், சுற்றம், செல்வம், புகழ், பதவி, பட்டம் போன்ற நிலையற்றவைகளை எண்ணி நம் வாழ்நாளை
வீணடிக்கிறோம். பகவானுக்கு தர வேண்டியமனத்தைத் தகுதியற்றற விஷயங்களில் செலுத்தி
வருகிறோம் என்று பொருள்பட ஆழ்வார் கூறுகிறார்.
திருவழுந்தூரில்
மேற்கில் எழுந்தருளியிருக்கும் ஆமருவியப்பா! நெய் தடவியது போல் பளபளக்கும்
சக்கரத்தையும், பாஞ்சஜன்னியத்தையும்
தரித்திருக்கும், நீண்ட தோளுடையவனே! என்னை இந்த உலகத்தில் பற்று கொள்ளுமாறு
ஈடுபடுத்திவிட்டாய். வாழ்வின் மேன்மைக்கும், தாழ்மைக்கும் என்னுள் இருக்கும் ஐம்புலன்கள் என மனதை
தம் வழியில் திருப்பப் பார்க்கின்றன. அதனால் என்னுள் கொண்ட துன்பம் அகல நான்
உன்னைச் சரணடைந்தேன். உன் திருவடியைத்
தவிர வேறொன்றும் நானறியேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஐயா! அழுந்தூர்
மேல் திசையில் இருக்கும் பெருமானே! கூர்மையான சக்கரத்தையும் சங்கையும்
கையிலுடையவனே! நீண்ட தோள்களை உடையவனே! உலகத்திலுள்ள மற்றவர்களுக்குக் காட்டாத
அருளையும் அன்பையும் என்னிடம் காட்டினாய். சிற்றின்ப வாழ்வுக்கும் பேரின்ப
வாழ்வுக்கும் நான் அறியாதபடி என்னுள்ளே புகுந்து பஞ்சேந்திரியங்கள் என் சரீரத்திலே
குடியேறி இருக்க அவற்றை திருப்தியடையச் செய்து வாழ்வதற்குப் பயப்பட்டு உன்னை வந்து
அடைந்தேன். உன் திருவடி அன்றி வேறு ஒன்றை அறியேன் என்கிறார்.
பகவானைத் துதித்து பேறு அடைய வேண்டிய மனத்தை, ஐம்புலன்கள் தங்கள் இஷ்டம்போல் காம இச்சைகளிலும்,
வேறு அற்ப விஷயங்களிலும் செலுத்துவதை
அறவே தவிர்க்க வேண்டும். நம்முடைய எதிரிகள் வெளியில் இல்லை. நம்முள்ளில்
இருக்கிறார்கள். ஐம்புலன்களான இந்த எதிரிகளை அடக்குபவன் வெளி எதிரிகளை
நொடிப்பொழுதில் அடக்கி விடுவான். உள்ளில் உள்ள எதிரியை வெல்ல நாம் பகவானை சரணடைதல்
ஒன்றே உபாயமாகும் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
‘பரமாத்மா! இப்பூமியை ஆண்ட பஞ்ச பாண்டவர்களும், சேர, சோழ, பாண்டியர்களும்,
மன்னாதி மன்னர்களும் வணங்கிய
பூமிதேவியின் கணவனே! மாதவா! மதுசூதனா! நர நாராயணர்களாய் அவதரித்தவனே! திருநறையூர்
நம்பியே! தேவ கணங்களை ஆளும் சிவபெருமானின் அந்தராத்மாவாக விளங்குபவனே! முன்பு
ஆதிவராக மூர்த்தியாய் அவதரித்தவனே! திருவழுந்தூர் ஆமருவியப்பனே! உன்னைத் தவிர நான்
யாரையும் தரிசனம் கொள்வதில்லை’ என்கிறார் ஆழ்வார்.
சிவபெருமானும் திருமாலும் ஒருவரே என்கிறார் ஆழ்வார். இவ்விருவரும் உடலும்
உயிருமாய் நம்மில் ஐக்கியமாகி உள்ளார்கள். சிவபெருமானும் திருமாலும் வேறு வேறல்லர். காரண- காரியங்களுக்காகத் தனித்தனி
மூர்த்திகளாகத் திகழ்கின்றனர். இருவரும் ஓருருவில் காட்சியளிக்கும் சங்கர நாராயணரின் தோற்றம் அற்புதமான
திருக்காட்சி! எனவே
வேறுபாடுகளை நீக்கி ஹரியும் சிவனும் ஒன்று என்ற கொள்கையினைக் கொண்டு நமது
இலட்சியமான பிறவிப் பெருங்கடலைக் கடக்க வேண்டும். பகவானே நமக்கு உற்ற துணை என்று
எண்ணி அவனைச் சரண் புக வேண்டும் என்பது கருத்தாகும்.
‘விரோதியான
இரணியன் வீரசுவர்க்கம் செல்லும்படி நரசிம்மராகத் தோன்றிப் பருத்த வடிவுடைய அவனது
மார்பினைக் கிழித்தவனே! முன்பு பசுக்களைக் காப்பாற்ற கோவர்த்தன மலையைக் குடையாகப்
பிடித்தவனே! பரமாத்மா! அண்டங்களின் தலைவனே! ஆமருவியப்பனே! இக்கலியுகத்தின் இயல்பை
நான் தெரிந்து கொண்டேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
உனது திருவடிகளை வணங்குவதன்றி வேறு ஒன்றும் நான் அறியேன்’ என்கிறார் ஆழ்வார்.
தன்னை விட்டு
நீங்கினவன் என்று பொருள் பட்டுப் பகைவனை உணர்த்தும் சொல் இது. அமர்க்களத்தில் மாண்டொழிந்தவர்கள் வீரஸ்வர்க்கம்
புகுவர்களென்பது நூற்கொள்கையாதலால் ‘விண்புக’ எனப்பட்டது. தலைகீழாக நடக்கும்
கலியுகத் தன்மைகளைக் கண்டு கொண்டேன். இப்படிப்பட்ட நிலைமையில் நமக்குச் செய்யத்தக்கது
என்று ஆராய்ந்து பார்த்தவளவில் உன் திருவடிகளை ஆச்ரயிப்பதே கருமம் என்று துணிந்து
கொண்டேன்; அத்துணிவுக்கீடாக
உனது திருவடிகளையன்றி வேறொன்றையும் அறியாதவனாக இருக்கின்றேன். என்றாயிற்று.
இக்கலியுகத்தின்
இயல்பை நான் புரிந்து கொண்டேன். இக்கலியுகம் நன்றி மறக்கும் இயல்பினைக்
கொண்டவர்களைகக் கொண்டுள்ளது. தெய்வத்தை மறந்து பொருளுக்காக மானத்தை இழக்கும் அவல
நிலையில் மனிதர்கள் உள்ளார்கள். நன்றி மறக்கும் குணங்களைக் கொண்ட மக்களை
இக்கலியுகம் கொண்டுள்ளது. செல்வத்திற்காக மானத்தை இழந்து வீணான காரியங்களில்
காலத்தை விரயம் செய்து பின் துன்பத்தில் உழல்கிறார்கள். அழியும் பொருட்களில் மோகம்,
காமத்தில் விருப்பம் போன்றவை
அதர்மத்தை அழிக்கும் நிலைக்களனாக உள்ளது. இத்தகைய இயல்பு நரகக் குழியில்
தள்ளிவிடும். இதிலிருந்து மீளப் பகவானின் திருவடிகள் ஒன்றே உபாயம் என்பதால் உனது
திருவடிகளைப் நான் பற்றுகிறேன் என்ற பொருளில் இப்பாசுரம் அமைகிறது.
‘எதையும்
வாய்க்கு வந்தபடி பேசுவோர் வசைகூறி சிரிக்கும்படியாக, தோய்ந்த தயிரையும் நெய்யையும் உண்ணும்போது, தாய் யசோதை பார்த்துக் கட்டிப்போட்டாள்.
அப்போது அழுது ஏங்கிய கண்ணபிரானே! ஈரேழு உலகத்தின் தலைவனே! கிருத, திரேத, துவாபர, கலியுகம் போன்ற நான்கு யுகங்களாக இருப்பவனே! திருவழுந்தூரில் ஆமருவியப்பனாக
எழுந்தருளி இருப்பவனே! உன் பாதம் பணிவதை தவிர வேறொன்றையும் நானறியேன்’ என்கிறார்
ஆழ்வார்.
மற்றவர்கள் சிரிக்கும்படி தயிர் நெய் ஆகியவற்றை உண்டவன் பகவான். அதனால் உரலில்
கட்டிப்போடப்பட்டான். அதற்காக அழுது புரண்ட கண்ணன் மண்ணுலகத்திற்கும்
விண்ணுலகத்திற்கும் தலவைவனாகத் தோன்றினான். அனைவரையும் ஆண்டு வரும் பகவான்
மனிதனாகப் பிறப்பெடுத்தபோது மனிதனைப் போலவே நடந்து கொண்டான். அன்றியும் எல்லா
யுகங்களுக்கும் அவனே தலைவன். அந்தக் கிருஷ்ணனைத் தவிர வேறு எவரும் நம்மைக் காக்க
முடியாது. மாய உலகில் சிக்கியிருக்கும் நம்மைக் காப்பவனும் அவனே! அவனது
திருவடிகளைச் சரண் புகுந்து நாம் அனைவரும் அவனது பாதம் பணிவோம் என்பது இதன் பொருளாகும்.
‘கம்சனை அவன்
பயம் கொள்ளும்படி அழித்த மேக நிறம் கொண்டவனே!
கடல் வண்ணம் கொண்ட கண்ணா! ஏழு எருதுகளின் கொம்புகளை முறித்து வெற்றி
கொண்டவனே! ஏழு உலகங்களுக்கும் தலைவனே!
திருவழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் ஆமருவியப்பா! சகிக்க முடியாமல் எனது
ஐம்புலன்கள் தரும் சிற்றின்ப போகங்களால் அவை அனுபவிக்க முயல்கின்றன. அதற்குப்
பயந்து உன்னைச் சரண் அடைகிறேன்’ என்கிறார் ஆழ்வார்.
உன் பக்கலில்
நல்லெண்ணங் கொண்டு வாழ்ந்து போகலாமாயிருக்க அது செய்யாதே தீய புத்தியைக் கொண்ட
கம்ஸன் அஞ்சி யொழியும்படி அவனைச் சினந்து நிக்ரஹித்தவனே; நப்பின்னைப் பிராட்டியோடு கலவிசெய்ய இடையூறாயிருந்த
ஏழு விருஷபங்களையும் வலியடக்கி அப்பிராட்டியைத் தழுவிக் கொண்டவனே!, பூலோகம், புவர் லோகம், ஸுவர்லோகம், மஹோலோகம், ஜநலோகம்,
தபோலோகம், ஸத்யலோகம் ஆகிய மேலே ஏழுலகங்களையும் நிர்வஹித்து
நடத்துமவனே! பல்லைக்கடித்துக் கொண்டு பொறுத்திருப்போம் என்றாலும் பொறுத்திருக்க
முடியாத துக்காநுபவங்களை நான் அடைந்திடும்படி பஞ்சேந்திரியங்கள் ஹிம்ஸிக்க, அந்த ஹிம்ஸைகளுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே
வந்து புகுந்தேன் என்றாராயிற்று.
சிற்றின்ப போகங்கள் ஆரம்பத்தில் சற்று சுகம் கொடுப்பது போல் தோன்றினாலும்
நாளடைவில் தாங்கொணாத் துயரத்தைத் தரும். காமம் என்பது அடங்கக் கூடியதாக இல்லை.
நெருப்பு போல் கொழுந்துவிட்டு எரியும். இதில் மூழ்கியவர்கள் மீள முடியாதவர்களாக
அதில் உழல நேரும். அதனால் நோய், அவமானம், தெய்வத்தை
மறக்கும் நிலை போன்ற அவல நிலை ஏற்படும். இத்தகைய அவல நிலையைப் போக்க பகவானைச் சரண்
அடையுங்கள் என்று கூறுவதாகப் பொருள் காணப்படுகிறது.
திருவிக்கிரமனே!
பூமிக்குப் பாதுகாப்பாகிய சமுத்திரத்தில் அரிதுயில் கொண்டிருப்பவனே!
திருவழுந்தூரில் மேற்கில் குடிகொண்டிருக்கும் ஆமருவியப்பனே! உன்னை நினைக்க
முடியாமல் ஐம்புலன்கள் என் உள்ளத்தில் புகுந்து தடைவிதித்து என்னைத்
துன்புறுத்துகின்றன. அத்தடையினை தவிர்த்து உன்னைச் சரணடைகிறேன். உன் மனதிலும்
புகுந்தேன். உணவு, உடை
கிடைக்கச் செய்ய வேண்டும். எந்நாளும் உனக்குப் பணி செய்ய எனக்கு அனுக்கிரகம் செய்ய
வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
மாபாரதத்தில்
அர்ஜுனன் மனதைக் காற்று என்பான். அதை அடக்க முடியாது என்பான். அதற்குக் கண்ணன் ஒரு
விதத்தில் நீ கூறுவது உண்மைதானென்றாலும் பழக்கத்தாலும், வைராக்யத்தாலும், இடைவிடாத கவனத்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு நீ
தியானத்தைப் பழகிக்கொள் என்பான். மனதை நாம் வெல்ல வேண்டுமென்றால் மனத்
தூண்டல்களையும், ஆசைகளையும் அடக்கியாக வேண்டும். ஆசைகள்தான்
மனதைத் தூண்டி, எஜமானனுக்குப் பின்னால் ஓடும் நாய்போலப்
புலன்களுக்குப் பின்னால் போகும் படிக்குச் செய்து விடுகின்றன. இதனால் கானல் நீரை
உருவாக்கும் புலன்களுக்கும், இன்பத்தைத் தேடி அலையும்
மனதிற்கும் இடையே சிக்கிக் கொண்டு ஜீவன் தவியாய் தவிக்கிறது.
இதிகாச கதைகளில் துரியோதனனும், இராவணனும்
இப்புலன்களின் பலன்களால் மாண்டு போனார்கள். எனவே புலன்களினால் ஏற்படும் துன்பங்களை
அகற்றுமாறு ஆழ்வார் நம்மை எச்சரிக்கிறார். இதன் ஆபத்துகளைத் தவிர்க்க ஆமருவியப்பன்
திருவடிகளைச் சரணடையுமாறு இப்பாசுரம் மூலம் நமக்கு நல்வழி காட்டுகிறார்.
கருடக் கொடியுடைய
பெருமானே! விஸ்வரூபம் எடுத்தவனே! தீயைக்
கக்கும் அனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டவனே!
திருவழுந்தூரில் நின்றருளும் ஆமருவியப்பனே! ஐம்புலன்களும் என்னை ஆள்பவர்களாக எனது உடலில்
வியாபித்துத் துன்புறுத்துகின்றன. அதன் துன்பத்தை என்னால் தாங்க இயலவில்லை. உன்
அடியாரிடம் கருணை கொள்ள மாட்டாயா’ என்றபடி ஆழ்வார் வேண்டுகிறார்.
ஐம்புலன்களையும்
அடக்க முடியாது. ஆனால் பக்குவப்படுத்தி, கூர்மைப்படுத்தி நமது கட்டுப்பாட்டுக்குள் அவற்றைக் கொண்டு
வந்தால் மட்டுமே மாயையின் கட்டுகள் அறுந்து போகும், ஞானப்
பயணம் எளிதாகும். இதுகுறித்து திருமந்திரத்திலிருந்து மேலும் சில பாடல்களைக்
காணலாம். "புலம் ஐந்து புள் ஐந்து புள்சென்று
மேயும். நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல் கொண்டு
மேய்ப்பான் ஒருவன் உலமந்து போம்வழி ஒன்பது தானே.'
என்கிறது திருமந்திரப் பாடல்.
ஐம்புலன்கள் படுத்தும் பாட்டை ஆழ்வார் எடுத்துக் கூறுகிறார். ஐம்புலத்தின்
ஆட்சியால் மனிதன் செய்யத் தகாத செயல்கள்மூலம் பணம் திரட்டுகிறான். சமூக விரோதியாகவும்
மாறுகிறான். பெண்களின் மோகத்தினால், காமத்தினால் பேராபத்தில் சிக்குகிறான். இறைவன் என்ற பாதுகாவலுடன் இந்த ஐம்புலன்களின் ஆதிக்கத்தில்
நாம் விடுபட வேண்டும் என்றவாறு இப்பாசுரப் பொருள் அமைகிறது.
‘அன்னப்பறவைவைகள்
கூடி வாழும் மலர்வனங்கள் நிறைந்த திருவழுந்தூரில், மேற்கு திசையில் வீற்றிருக்கும் ஆமருவியப்பனைப்
பற்றி வலிமை மிக்க தோள்களையுடைய கலியன் இயற்றிய இப்பாசுரங்களைப் பாடுபவர்கள்,
வெண் கொற்றக்குடையின் கீழ் அரசர்களாக
வெகுகாலம் உலகை ஆட்சி செய்து மகிழ்வோடு வாழ்வார்கள்’ என்கிறார் ஆழ்வார்.
அன்னப்பறவைகள்
பரந்த பூஞ்சோலைகளால் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே! ஒரு நாளும்
அழியாத மிடுக்கான தோள்களையுடைய திருமங்கைக்கு அரசனான ஆலி நாடன் என்னும் திருமங்கை
ஆழ்வார் அருளிச்செய்த இனிய தமிழ்ப் பாசுரங்கள் நல்ல மணி போன்ற தூய்மையான மாலையான
இவை பத்தும் ஓதவல்லார்மன்னவர்களாகப் பலகாலம் உலகாண்டு பெரிய வெண்குடை கீழ் இருந்து
மகிழ்வார்கள்.
ஐம்புலன்களிலிருந்து மனிதன்விடுபடப் பகவானின் பாதங்களைச் சரணடைய வேண்டும்
என்று இப்பத்து பாசுரங்களில் ஆழ்வார் தெரிவித்தார். புலன்களைக் கட்டுப்படுத்தாமல்
இருந்ததால் பெண்ணாசை, பொன்னாசை,
மண்ணாசை மற்றும் ஆணவத்தினால்
இக்கலியுகத்தில் அழிந்தவர்கள் அதிகம். இயற்கையை மீறாமல், இறைத் துணையோடு நாம் ஐம்புலன்களை வெல்ல வேண்டும்
என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.
‘எங்கும்
நிறைந்துள்ள புகழ் மிக்க நான்கு வேதங்கள், ஐந்து வகையான வேள்விகள், கேள்விஞானம்
அனைத்தையும் இயற்கையாகவே அறிந்துள்ள, குணம்கொண்ட திருமாலின் நாபிக்கமலத்தில் உதித்த பிரம்மாவுக்கு ஈடான வேதியர்கள்
வாழும் செல்வ வளம் கொண்டது திருவழுந்தூர் தலமாகும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஆமருவியப்பனை
செந்தாமரை மலர்மகளான மகாலட்சுமியும், பூமிதேவியும், சிவந்த பொன்
போன்ற திருவடிகளை வருட, முனிவர்கள்
துதிபாட, திருப்பாற்கடலில்
அனந்தாழ்வான் படுக்கையில் துயிலும் மாயவனைத் தரிசனம் செய்வோம்’ என்கிறார் ஆழ்வார்.
தெய்வ கடாட்சம் இயற்கையாக அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்லும் பேறு அத்தகைய
தெய்வ சக்தி இருப்பவர்களுக்கே கிடைக்கும் என்பது இதன் உட்பொருளாகும்.
எங்கும் பரவிய
நிறைந்த புகழுடைய நான்கு வேதங்களும் ஐந்து வேள்விகளும் கேட்டறிய வேண்டியவைகளும்
இயற்கையாகவே அறிந்துகொள்ளக்கூடியவைகளும் அழகிய கமலத்தில் தோன்றிய
பிரம்மனையொத்தவரான சிறப்புடைய வைதிகர்கள்
வாழும் அழகிய திருவழுந்தூரில் வந்து நின்று உகந்த அமரர் தலைவன் எம்பெருமான்.
செந்தாமரை மலரில் தோன்றிய திருமகளும் பூமாதேவியும் அழகிய பொன்மயமான
திருவடிகள் இரண்டையும் வருட முனிவர்கள் துதிக்க அலைகள் நிறைந்த திருப்பாற்கடலில்
அனந்தன் என்னும் ரேகைகளுடைய பாம்பு படுக்கையில் சயனித்திருக்கும் மாயனைக் கண்டு
களியுங்கள் என்கிறார்.
வேதம்
முதவியனஅவ்வூரில் உள்ளள அந்தணர்களிடம் இயற்கையில் நிறைந்திருத்தலால் அவர்
ஒவ்வொருவரும் பிரம்மனை யொத்திருப்பரென்கிறது. அன்றியே, தமது
தவவலிமையால்அவ்வூரில் உள்ளள அந்தணர் ஒவ்வொருவரும் பிரம்மனைப் போல ஸ்ருஷ்டிக்க
வல்லவரெனினுமாம்.
‘நெற்பயிர்கள்
நிறைந்த கதிர்கள் கவரி வீச, அங்குள்ள
சங்குகளில் காற்றுபட்டு முழங்க, செந்தாமரை மலரில் அன்னம் தன் துணையோடு அமர்ந்திருக்க, செல்வ வளமுடைய அழகிய திருவழுந்தூரில் அருளுகிறார்
ஆமருவியப்பன். ஏழுலகங்களும் அஞ்ஞானத்தில்
மூழ்கி இருந்தபோது முனிவர்களும், அசுரர்களும் கலங்கி நின்றார்கள். அப்போது ஹயக்ரீவராய் தோன்றி நான்கு
வேதங்களின் பொருளை, சாஸ்திரங்களை
உபதேசித்த என் பரந்தாமனை தரிசனம் செய்து உய்வு பெறலாம்’ என்கிறார் ஆழ்வார்.
முன்னொரு
காலத்தில் மது, கைடபர் என்ற அசுரர்கள் வேதங்களை அபஹாரித்துக் கொண்டு கடலில் முழ்கி
மறைந்துவிட, ஞான ஒளியைத்தரும்
பெருவிளக்கான வேதங்கள் ஒழிந்தமை பற்றி உலகமெங்கும் பேரிருள் மூடி நலியா நிற்க,
பிரமன் முதலியோர் அனைவரும்
கண்கெட்டவர் போல யாதொன்றும் செய்வதறியாமல் திகைத்து வருந்துவது கண்டு திருவுள்ள
மிரங்கித் திருமால் கடலினுள் புகுந்து அவ்வசுரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக்
கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்து ஹம்ஸரூபியாய்ப் பிரம்மனுக்கு அளித்தான்.
தங்களை மறந்து சிற்றின்பத்தில் மூழ்கி மக்கள் தவிக்கிறார்கள். அழிவில்லாத
ஆத்மா தாங்கள் என்பதை பலவீனத்தால் மறந்து, துன்பத்துடன் கலங்கி கண்ணீர் வடிக்கிறார்கள். பகவானை தரிசித்து இத்துன்பத்தைப்
போக்கிக் கொள்ளுமாறு ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கிறார்.
‘காவிரி நதியானது
சந்தனம், அகில் கட்டைகளையும்,
பொன்னையும், இரத்தினங்களையும் திரட்டி வந்து தள்ளும். கழனிகளில்
நீர் பாயும் வழிகளில் அலையால் அடித்து வரப்பெறும். அதனால் செல்வ வளம் பெருகும்
திருவழுந்தூரில் மகிழ்ச்சியோடு நின்றருள்கின்ற
தலைவனே! தேவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவனே! கஜேந்திராழ்வானை
முதலையிடமிருந்து காத்தருளிய தூயவனை தரிசித்து உய்வோம்’ என்கிறார் ஆழ்வார்.
மலையிலிருந்து
சந்தன மரங்களையும், அகில்
கட்டைகளையும், பொன்னையும்,
மணியையும் தள்ளிக் கொண்டு வந்து
வயல்களிலெல்லாம் நீர்பாயும் அலைகளோடு வரும் காவேரி வளம் பெருகும்
செல்வத்தையுடைய அழகிய திருவழுந்தூரில் வந்துநின்று உகந்த அமரர் தலைவன் எம்பெருமான், நல்ல குலத்தில் பிறந்த யானை பொய்கையில்
புகுந்தபோது வலிமையுள்ள முதலை பிடித்ததினால் அம்முதலைக்கு பயந்து நின்று நிலா
பரவிய சந்திரனை ஒத்த ஒளிமயமானவனே! என்று துதிக்க யானையின்துன்பத்தைப் போக்கிகி என் குற்றமற்ற பெருமனைக் கண்டு களியுங்கள்
என்கிறார்.
அழியும் உடம்பில் அழியாத உயிரையும் வைத்து, அந்த உயிர் மீண்டும் பிறவாத் தன்மையை அடையவே மனித
உடலில் உயிரைப் படைத்தான். நாம் சிறுமைபடுவதற்குக் காரணம் ஐம்புலன்களே! எனவே
ஐம்புலன்கள் என்னும் பேராபத்திலிருந்து நம்மைவிடுவிக்கக் கூடியவர் பகவான் மட்டுமே!
பகவானின் நாமங்களை ஓதினால் நம்மைக் கீழ்நிலையில் இழுத்து செல்லும் புலன்களை
அழித்து மேன்மையடையச் செய்வார் என்பது திண்ணம்.
‘சிலம்பு முதலிய
ஆபரணங்களை அணிந்து சிவந்த கண்களுடன் மலை போன்று பெரிய வராகமாகி அழகிய பூமிதேவியை
கொம்பினால் குத்தி எடுத்துத் தனது தந்தத்தில் வைத்தவன் எம்பெருமான். சிறகுகள் உடைய
வண்டுகள் ரீங்காரம் செய்ய, பாக்கு
மரத்தோட்டத்தில் குயில்கள் கூவ, அதற்கேற்றாற்போல் மயில்கள் நடனமாட, அலைகளையுடைய காவிரி நீர் சுற்றிப் பாய்வதால் அழகு மிகுந்து காணப்படுகிறது. அத்தகைய
இடத்தில் நின்றருளும் ஆமருவியப்பனை தரிசனம் செய்யலாம்’ என்கிறார் ஆழ்வார்.
பாக்கு மரங்கள்
நிறைந்துள்ள சோலைகளெங்கும் குயில்கூவ, மயில்களாடச, சிறகுகளையுடைய வண்டுகள் ரீங்கரிக்க அலைகளையுடைய காவேரி நீர் எல்லா
இடங்களிலும் சூழ்ந்து பாய அழகு மிக்க சிறப்புடைய அழகிய திருவழுந்தூரில் வந்து நின்று உகந்த அமரர் தலைவன் எம்பெருமான் ஒரு
சிவந்த ஒரு மலை. இரு தண்டை, சிலம்பு முதலான ஆபரணங்களை அணிந்து வராஹரூபமாக விளங்கி, பூமாதேவியை அண்டத்திலிருந்து குத்தி எடுத்து அணைத்து
பற்களினிடையே வைத்தருளிய எம்பெருமானை கண்டு களியுங்கள் என்கிறார்.
நம்முடைய உண்மை சொரூபத்தை மறைத்து அசுர சக்திகள் நம்மை அடையாளமின்றி
ஆக்கியுள்ளன. ஆத்ம சொரூபிகளான நாம் பெண் பித்தர்களாகவும், பணப்பித்தர்களாகவும், அஞ்ஞானிகளாகவும், அறிவிலிகளாகவும் இருக்கிறோம். இதிலிருந்து விலக
எம்பெருமானை தரிசித்தல் ஒன்றே உபாயமாகும்.
‘மிகுந்த
சினம்கொண்ட பலமிக்க நரசிங்கமாய் தோன்றி, வலிவுள்ள இரணியகசிபுவின் மார்பை பிளந்தவனை, வஞ்சக நெஞ்சோடு வந்த பூதனையைக் கொன்ற மாயவனை,
அழகிய வளையல்களை அணிந்த, கோவைப்பழம் போல் வாயினைக் கொண்டு, கிளிபோல் இனிய மொழி பேசி, அன்னநடை பயிலும் எழில்மிக்க மங்கையர்
குடியிருக்கும் செல்வச் செழிப்புமிக்க திருவழுந்தூரில் வீற்றிருக்கும் எம்தலைவனான
ஆமருவியப்பனை தரிசனம் செய்யலாம்’ என்கிறார் ஆழ்வார்.
வரிசை வரிசையாக
வளையல்கள் அணிந்த கைகளிலே வைத்திருக்கும் கோவைப் பழம் போன்ற வாயையுடைய மரகதம் போன்ற பச்சை நிறமுடைய கிளியைப் போன்ற இனிய
சொற்களையும் அன்னம் போன்ற நடையழகையுமுடைய இளம் பெண்களின் செல்வம் பெற்ற அழகிய
திருவழுந்தூரில் வந்து நின்று உகந்த அமரர் தலைவன் எம்பெருமான் மிக்க சீற்றமுள்ள
வலிய நரசிம்ம மூர்த்தியாய் மிக்க பராக்ரமமுள்ள இரணியனின் மார்பைப் பிளந்து,
மனதில் வஞ்சக எண்ணத்தோடு வந்த
பேய்ச்சி மாள அவள் உயிரை வாங்கி எம்மாயோனைக் கண்டு களியுங்கள் என்கிறார்,
இக்கலியுகத்தில் நன்றி மறந்த அரக்க குணம் கொண்டவர்கள் நல்லவர்களின் நல்
உள்ளங்களைக் காயப்படுத்துகிறார்கள். பகவான் வேறொரு உருவில் வந்து அவர்களுக்குப்
பாடம் புகட்டி நல்லவர்களைக் காப்பான் என்பதும் இதற்காகப் பகவான்ன் பல உருவங்கள்
எடுக்கிறார் என்பதை இங்குக் கருத்தாகக் கொள்ளலாம்.
‘தேவர்களின்
துயர் தீர வாமன மூர்த்தியாக அவதரித்துப் பிரம்மச்சாரியாய் மகாபலியிடம் மூன்றடி
நிலத்தை யாசித்துப் பெற்றவன், ஈரடியால் உலகத்தை அளந்தவன் வெற்றி தரும் சக்கரத்தை ஏந்தியவன். தேன் நிறைந்த
தோட்டங்களைச் சூழ்ந்த வீதியிலும், மாட மாளிகைகளிலும், மற்றுமுள்ள
இடங்களிலும், புகழுடைய
வேதங்களை ஓதும் வேதியர்கள் குடியிருக்கும் திருவழுந்தூரில் திருக்கோயில்
கொண்டிருக்கும் ஆமருவியப்பனை தரிசனம் செய்யலாம்’ என்கிறார் ஆழ்வார்.
தேன் நிறைந்த
சோலைகளால் சூழ்ந்த அழகிய வீதிகளும் செழித்த மாட மாளிகைகளும் மற்றுமுள்ள
இடங்களிலும் ஆத்மகுணம் நிறைந்த பழைய புகழுடைய வைதிகர்கள் வாழும் சிறப்புடைய
செல்வம் நிறைந்த அழகிய திருவழுந்தூரில் வந்துநின்று உகந்த அமரர் தலைவன்
எம்பெருமான், வானவர்களின்
துயர் தீர வாமனனாய் வந்து தோன்றி மஹாபலியினிடத்தில் மூன்றடி நிலத்தை
வேண்டிப்பெற்று ஏழ் உலகும் தன் திருவடிக் கீழ்அடங்கும்படி அளந்து வெற்றி பெற்று
ஒப்பற்ற திருவிக்கிரமனாக வளர்ந்த, சக்கராயுதத்தை கையிலுடையவனை எம்தலைவனைக் கண்டு களியுங்கள்
என்கிறார்,
இக்கலியுகத்தில் அதர்மம் செய்பவர்கள் அதிகம். நன்னெறியை வழுவாத மக்கள் இறைவன்
திருவருளைப் பெற முடியாது. ஒழுக்கமற்றவர்களோ விழைவதையெல்லாம் துய்க்க முனைவார்கள்.
பிறருடைய பொருளைப் பறித்து வாழவே விரும்புவார்கள். ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவர்கள்
அவற்றை உயிரெனப் போற்றி வாழ்வார்கள். இவ்விதம் அதர்மம் செய்பவர்கள் ஒருநிலைக்கு
மேல் செல்ல முடியாமல் பகவான் தடுத்து விடுகிறான். அதனால்தான் இக்கலியுகத்திலும்
தர்மம் அவ்வப்போது வென்று வருகிறது என்பதைப் பொருளாகக் கொள்ளலாம்.
‘பந்தைப்
பிடிக்கும் அழகிய கைகளையுடைய சீதைக்காக, சூரிய ஒளி விழாத இலங்கையின் மன்னனான இராவணனின் வலிமை மிக்க கைகளும், தலைகளும் அறுக்கப்பட்டு விழும்படி செய்த
ஸ்ரீராமன், தமிழும், வடமொழியும் கற்ற, நாவன்மைமிக்க பிரம்மனைப் போன்ற பிராமணர்கள் ஹோமம்
செய்யும் தலம் திருவழுந்தூராகும். அந்தப்
புகை நிறைந்த தலத்தில் கோயில் கொண்டுள்ள
ஆமருவியப்பனை தரிசனம் செய்யலாம்’ என்கிறார் ஆழ்வார்.
ஸம்ஸ்கிருதம் அத்தனை மனிதர்களுக்குமான மொழியாகும். அது சர்வதேச மொழி. அதுவே
தேவ பாஷையும் ஆகும். தேவர்களுக்கு ‘கீர்வாணர்’ என்று பெயர். அதனால்
ஸம்ஸ்கிருதத்துக்கு ‘கைர்வாணீ’ என்ற பெயரும் இருக்கிறது. ‘தேவ பாஷை’ என்று அதைத்
தமிழ்க் கவிதைக்குச் சக்கரவர்த்தி ஸ்தானத்திற்கு வைக்கப்பட்ட கம்பரும் சொல்கிறார்:
“தேவ பாடையில் இக்கதை
செய்தவர்” என்கிறார்.
சமஸ்கிருதம் என்பது தேவ பாஷை என்பார்கள். இதைக் கற்றவர்கள் செய்யும் ஹோமம்
மணம் கமழும் புனித பூமியாகும். தீய சக்திகள் இவ்விடத்தில் நுழைய முடியாது. நம்மைப்
படுகுழியில் தள்ளப் பல அசுர சக்திகள் உள்ளன. அதுசமயம் நம்மைக் காக்க ஆயிரம்
தெய்வத் தேவதைகள் தயாராக உள்ளன. வேத மந்திரங்கள் ஒலிக்கும் இத்திருத்தலத்தில்
இத்தகைய தெய்வ தேவதைகள் உள்ளன என்பதை அறியலாம்.
‘மத்தகங்கள்
பதித்த மதம்கொண்ட குவலயாபீடம் என்ற யானை அழியும்படி அதன் தந்தங்களை முறித்து,
ஏழு காளைகளின் வலிமையை அடக்கி,
கோபிகைகளுடன் குறவைக் கூத்தாடி,
வாசனை வீசும் பூக்களைக் கூந்தலில்
சூடிய யசோதை வைத்த தயிர், வெண்ணெயை
மகிழ்வோடு உண்டவன் மாயக் கண்ணன். அவனே ஆமருவியப்பனாகத் திருவழுந்தூரில் வாசம்
செய்கிறான். பவழம் போன்ற பழங்களும், மரகதம் போன்ற காய்களும், வெண்
முத்துக்கள் போன்ற பாளைகளும், பாக்கு, வாழை போன்ற
மரங்களும் இத்தலத்தில் அழகுடன் திகழ்கின்றன. இப்பெருமானை தரிசனம் செய்யலாம்’ என்று
ஆழ்வார் நம்மை அழைக்கிறார்.
சிவந்த
பவழத்தையும் மரகத பச்சையையும் வெண்ணிற முத்தும் தோன்றும் பாக்குமரங்களும் பல வகை
வாழை மரங்களும் வளத்தோடு எல்லா இடங்களிலும் அழகிய பொன் மயமான மதிள்களாலும் சோலைகளாலும் சூழ்ந்த அழகு நிறைந்த செல்வமுடைய அழகிய
திருவழுந்தூரில் வந்துநின்று உகந்த அமரர் தலைவன் எம்பெருமான் பெருத்த தலையையும்
மதமுடைய யானை அழியும்படி அதன் கொம்பைப் பறித்து இளமையான ஏழு எருதுகளை அடக்கி
ஆய்ச்சியரோடு குரவை கூத்தாடி நறுமணம் வீசும் மலர்களொடு கூடின கூந்தலையுடைய ஆய்ச்சி
யசோதை வைத்திருந்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயனை கண்டு களியுங்கள் என்கிறார்.
தருமத்தை நிலைநாட்டப் போராடுபவர்களை அழிக்க இத்தகைய மதயானை போன்றவர்கள்
வருவார்கள். ஆனால் பகவானின் ஆற்றலால் இவர்கள் அழியப்படுவார்கள். ஆகவே தர்மத்தைக்
காக்கும் முயற்சியில் வரும் தடைகளையும், பகைவர்களையும் கண்டு சிறிதும் மனத்தளர்ச்சி அடையக் கூடாது என்பது ஆழ்வாரின்
கருத்தாகும்.
‘மஞ்சத்தின்
நடுவில் அமர்ந்த கம்சனும், சாணூரன்,
முஷ்டிகன் ஆகிய மல்லர்களும், தனுர் யாகத்தில் வைக்கப்பட்ட வில்லும்,
கம்பீரமான குவலயாபீட யானையும்,
சகடத்தில் மறைந்து சென்ற அசுரனும்,
வலிமையுள்ள தோள்களைக் கொண்ட அசுரர்களை
வதம் செய்த பெருமானை, பசுமையான
நந்தவனங்கள் சூழந்த திருவழுந்தூரில் ஆமருவியப்பனாகக் காணலாம். உற்சவ காலங்களில்
மணிகள் பதித்த திண்ணைகளில் அழகிய கூந்தலில் மலர்சூடி வரும் நங்கையர்கள் திருவிழா
காணும் செல்வச் சிறப்பு மிக்க ஊராகும்’ என்கிறார் ஆழ்வார்.
இளம் சோலைகளால்
சூழ்ந்த அழகிய தெருக்களிலே நடக்கின்ற விழாக்களில் ரத்தினங்கள் பதிக்கப்பெற்ற
திண்ணைகளிலெல்லாம் மணம் மிக்க மலர்கள் அணிந்த கூந்தலுடைய பெண்கள் இருக்கும்
சிறப்பான அழகிய திருவழுந்தூரில் வந்து நின்று உகந்த அமரர் தலைவன் எம்பெருமான்
மஞ்சத்தின் மத்தியில் ஏறியுள்ள கம்ஸனும், மல்லர்களும், வில்லும்
அழகிய யானையும் உருண்டு ஓடும் சகடமும் உடையும்படி அழித்திட்ட நீண்டு உயர்ந்த பெரிய
வலிமையுடைய தோள்களையுடையவனும் வெற்றியினால்
புகழுடையவனுமான அழகிய சக்கர கைகளையுடைய நெடியோனை கண்டு களியுங்கள் என்கிறார்.
தர்மங்களைப் பற்றித் தீர்மானமாகச் சொல்வதற்கு சாஸ்த்திரம் ஒன்றிற்குத்தான்
உரிமை உண்டு. சாஸ்த்திரம் எதைச் சொல்கின்றதோ அதைத்தான் நாம் அனுஸரிக்க வேண்டும்.
சாஸ்த்திரத்தின் வாயிலாகத்தான் எது பாபம், எது புண்ணியம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் விடாமல் போராட்டம்
நடைபெறுகிறது. தருமத்தில் உறுதியாக நிற்பவர்களுக்குப் பகவானின் அருள் உண்டு. உறுதி
இல்லாதவர்கள் தோல்வியைத் தழுவித்தானாக வேண்டும். ஆத்ம தரிசனம் பெற போராடினால் அதன்
தடைகளைப் பகவான் முற்றிலும் நீக்கி விடுவார் என்பது இதன் கருத்தாகும்.
‘முன்பு வராகமாய்,
மச்சமாய், நரசிம்மமாய் அவதரித்து உலகைப் படைத்து, காத்து, உண்டு, வெளிப்படுத்தி அருளிய பரந்தாமனை, தேவர்களின் தலைவனான இந்திரனும், பிரம்மனும், சிவனும்
திருவடி பணியும்படி திருவழுந்தூரில் வீற்றிருக்கும் ஆமருவியப்பனை, திருவாலித் தலைவனான கலியன் இயற்றிய
இப்பாசுரங்களை பக்தியோடு பாட வல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகினை ஆளக்கூடிய
அமரர்கள் ஆவார்கள்’ என்கிறார் ஆழ்வார்.
அன்று
வராஹமாகவும் மீனாகவும், நரசிம்மமாகவும்
உலகை படைத்துக் காத்து, உண்டு,
உமிழ்ந்த எம்பெருமானை தேவர்களுக்குத்
தலைவனான இந்திரனும் பிரம்மனும், அவன் மகன் ருத்ரனும் உன் திருவடிகளை வணங்கும்படி திருவழுந்தூரில் நின்ற
பெருமானைக் குறித்த, கரைபடிந்த
நீண்ட வேலாயுதத்தை பிடிக்க வல்லவரான ஆலிநாடன் என்னும் திருமங்கை ஆழ்வார்
அருளிச்செய்த இந்த இனிய பாடல்களான ஒன்றோடு கூடின நான்கும் ஓரைந்துமான பத்துப்
பாசுரங்களையும் ஓதவல்லார் ஒலிக்கின்ற கடலால் சூழ்ந்த இவ்வுலகங்களை ஆளவல்ல
தேவர்களாவர் என்கிறார் ஆழ்வார்.
ஆழ்வாரின் பாசுரங்கள் பகவானை தரிசனம் செய்ய வழிகாட்டியது. கலியுகத்தில்
தோன்றியுள்ள அசுர சக்திகள் நமக்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருக்கின்றது. நம்மில்
கொண்டுள்ள சுயபலமும், சுயநினைவும்
இழந்து அற்ப பொருட்கள்மீது நாட்டம் கொண்டு ஓடுகிறோம். நம் உண்மை சொரூபத்தை மாயை
மறைக்கின்றது. இறைபக்தியின் துணை கொண்டு மாயையை விலக்கி அவனை அடைவோம்.
‘சிறந்த
கூந்தலையுடைய கோபியர் ஆனந்திக்கும்படி வெண்ணெயுண்ட கோபாலனாய் அவதரித்து, அனந்தாழ்வானை படுக்கையில் விரும்பிப் பள்ளி
கொண்டவனை இன்று திருவழுந்தூரில் தரிசித்து நாளை திருவெஃகாவில் சென்று வணங்குவோம்’
என்கிறார் ஆழ்வார்.
திருவழுந்தூரில்
எழுந்தருளியுள்ள பெருமானுடைய திருநாமம் ஆமருவியப்பன். ஆதலால் கூந்தலார் மகிழ் கோவலனாய் என்று
கூறப்படுகிறது. கூந்தலார் என்பது பெண்டிர்க்கு இயற்கை பற்றிய பெயர். அவர்கள்
மகழும்படியான கோவலன், “பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரைப் பெறுதுமென்று மாசையாலே, கண்டவர்கள் போக்கொழிந்தார், கண்ணிணையால் கலக்கநோக்கி, வண்டுலாம் பூங்குழலினார் உன்வாயமுத
முண்ணவேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார்“ “முந்தை நன்முறை அன்புடை மகளிர்
முறைமுறை தந்தங் குறங்கிடையிருத்தி, எந்தையே! இவை முதலான பாசுரங்களில் கூந்தலார்
மகிழ்ச்சி விளங்கக் காண்க.
கோபியர்கள் ஆனந்தம் அடையும்படி கோபாலனாய் அவதரித்தவன் கண்ணபிரான். வெண்ணெய்
உண்டு அனந்தாழ்வானைப் படுக்கையாகக் கொண்டவன். காளிங்க நர்த்தனமாடி கோபிகைகளைக்
காத்தவன். இத்தகைய எல்லா செயல்களும் யாதவர்களுக்கும், கோபிகைகளுக்கும், நல்லோர்களுக்கும் ஆனந்தத்தை கொடுப்வைகளாகவே
இருந்தன. பகவானின் சிறுபிராயத்து லீலைகள் ஆனந்தமயமானவை. அசுரர்களை அழித்தது, பாண்டவர்களுக்காகத் தேரோட்டியது, திரௌபதியின் மானம் காத்தது, கம்சனைக் கொன்றது, எல்லா செயல்களும் கோபியர்களை ஆனந்தம் கொள்ளச்
செய்தவையாக இருந்தன. அத்தகைய பெருமையைக்
கொண்டவன் திருவழுந்தூரில் எழுந்தருளியுள்ளான் என்பது இதன் பொருளாகும்.
கற்களால்
கட்டப்பட்ட உயர்ந்த பெரிய மதிள்களால் சூழ்ந்த காஞ்சீபுரத்திலே பொருந்தியிருக்கும்
யானை போன்றவனே என்றும் திருப்பாற்கடலில் கிடந்த கனிபோன்றவனே என்றும், தாதுக்கள் மிக்க மலர்களையுடைய பொய்கைகளையும் நீர்
நிலைகளையும் வேலியாக உடைய அழகிய திருவழுந்தூரிலே நின்று உகந்திருக்கின்ற பெருமானே!
என்று சொல்லி நாதம் மிக இருக்கும் பெரிய வீணையை மார்பின் மேல் தாங்கிக் கொண்டு தூய
புன்முறுவலுடன், பல்வரிசை தோன்ற சிறிதே சிரித்து தனது
மெல்லிய விரல்கள் சிவக்கும்படியாக மீட்டி என்பெண் கிளிப்பிள்ளைபோல் பாடுகிறாள்.
‘நீண்ட மதில்கள் சூழ்ந்த காஞ்சித் திருப்பாடகத் தலத்தில் குடிகொண்டிருக்கும் யானையே! எக்காலத்திலும் யோகநித்திரை கொள்ளும் கனியே! மணமுள்ள மலர்களையும், தடாகங்களையும் சுற்று வேலியாகக் கொண்ட அழகிய திருவழுந்தூரில் நின்றருளி வரும் என் முறை மாப்பிள்ளையே! என்று சொல்லி நாதம் மிகுந்த இசையைக் கொண்ட வீணையை தனங்களில் உரசுமாறு தாங்கிப் பிடித்து, தூய்மையான புன்சிரிப்பால் பல்வரிசை தெரியுமாறு புன்னகை செய்து, தனது மெல்லிய விரல்கள் சிவக்கும்படி வீணையை மீட்டி என் பேதைப் பெண் கிளி போன்று, அவன் பெயரை இசைக்கின்றாள்’ என்று தாயார் பாடுவது போன்று அமைந்துள்ளது. இம்மண்ணுலகத்தில் பிறந்த பயனை என் மகள் சரியாகப் பயன்படுத்திவிட்டாள். அற்ப மனிதர்களின் நடுவில் இவள் தனித்துவம் பெற்று விட்டாள் என்ற கருத்தில் அமைகிறது.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
ஆறு கால்களையுடைய
சிறு வண்டே! அழகிய மலர் வனங்களில் அதன் மலர்களில் உள்ள தேனை உண்டு மயங்கி உன்
பேடையுடன் பூவில் கூடி இனிதே அமர்ந்து களித்தாய்! உன்னை வணங்கிச் சொல்கிறேன். பசுக்கூட்டங்கள் மேய்த்தவனை, நித்யசூரிகளின் தலைவனை, அழகிய
திருவழுந்தூரில் நின்றவனை, இன்றே சென்று பயப்படாமல் நெருங்கி
நின்று ஒரு காரிகை உன்மேல் காதல் கொண்டிருக்கிறாள் என்று சிறியதொரு வார்த்தையைச்
சொல்லிவிட்டு வா! என்று தலைவி சொல்வது போல் அமைந்துள்ளது.
முன்னடிகளில்
வண்டை விளித்துத் தொழுது, பின்னடிகளில், அது செய்ய வேண்டிய காரியத்தை
விதிக்கின்றாள். திருவழுந்தூர் ஆமருவியப்பன் திருவடிவாரத்திலே சென்று தனது
நிலைமையைச் சொல்லுமாறு வேண்டுகின்றாள். அந்த வண்டு தன்
பேடையோடு கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தமையால் ‘நான் துணைவனைப்
பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக்கிடக்கும்போது நீ இப்படி உன்காரியமே கண்ணாக
இருப்பது தகுதியோ? என்கிறாள். மேலும், பூவைக்
கண்டால் அருவருத்தும் போக்யவஸ்துக்களில் வெறுப்புற்றும் மேனி நிறமிழந்தும்
இராநி்ன்ற என்னையும் உன்னைப் போலே யாக்க வேண்டாவோ? நானும்
துணைவனோடு கலந்து வாழும்படி நீ காரியஞ் செய்ய வேண்டாவோ?
என்றும் கூறுகிறாள்.
தலைவி பகவானிடத்தில் ஒரு வண்டைத்
தூது அனுப்புவதை ஆழ்வார் இப்பாசுரத்தில் தந்துள்ளார். பசுக்கூட்டங்களை
மேய்த்தவனிடம் சென்று ஒரு காரிகை உன்மேல்
காதல் கொண்டிருக்கிறாள் என்று சொல்லிவிட்டு வா! என்று அவள் கூறுகிறாள். ஆநிரை
மேய்த்தவன் என்பது உயிர்களாகிய பசுக்கள் வழி தவறாமல் நடத்தி செல்பவர் என்றும்
பொருள் கொள்ளலாம். தலைவியானவள் தான் உணவு உண்ணாமல் அவனை நினைத்து வருந்தியுள்ளபோது
தனது துணையுடன் தேன் அருந்தி இன்பம் கொண்டுள்ளதை வருந்திப்பாடுவது போல்
அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக