பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
காகமே! கொங்கு
நாட்டிலும், குடந்தையிலும்,
திருக்கோட்டியூரிலும், கோவிலடி போன்ற
திருப்பதிகளில் திரிந்து விளையாடுகிறவன் என் செல்வன் கண்ணன். சங்கினைத் தாங்கும்
அவனது பெரிய கைக்குத் தகுந்தாற்போல் நல்ல அரக்கு பூசிய மிருதுவான கோலினைக்
கொண்டுவா என்று யசோதை கூறுவது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது.
புஷ்பங்களால் நறுமணத்தை உடைய திருக்குடந்தையிலும், திருக்கோட்டியூரிலும்,
திருப்பேர் நகரிலும், மற்றுமுள்ள
திருத்தலங்களிலும் ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை பிடித்துக் கொண்டிருக்கிற, திரிந்து விளையாடும் விசாலமான திருக்கைக்குத் தகுந்தாக இருக்கும், நல்ல வடிவை உடைய ஒரு கோல் கொண்டு வா! அரக்கு பூசப்பட்டு இருக்கும் ஒரு
கோல் கொண்டு வா என்கிறார் ஆழ்வார்.
சோலைகளிலும் ஓடைகளிலும் உண்டான நறுமணம், உள்ளே கண்வளர்ந்து இருக்கின்றவனுடைய
திருமேனியின் நறுமணமும் சேர்ந்து திருக்குடந்தை, திருக்கோட்டியூர்,
திருப்பேர் நகர் முதலிய ஊர்களில் பரவி, ஊர்
முழுவதும் நறுமணம் வீசுவதை சொல்கிறார்.
நல்ல மணம்
பொருந்திய திருக்குடந்தை, திருக்கோட்டியூர்ச், திருப்பேர்நகர் மற்றும் பல
இடங்களிலும் திரிந்து விளையாடும் சங்கம் பிடிக்கும் என் மகனுக்குத் தக்க ஒரு நல்ல
அரக்கு நிறம் கொண்ட கோல் கொண்டு வா என்று அழைக்கிறார்.
கருமேகம் போன்ற
நிறத்தைக் கொண்டவனே! இங்கு வாராய்! தெளிந்த அலையுடைய நீரால் சூழப்பட்ட திருப்பேர்
நகரிலும், திருவரங்கத்திலும்
பள்ளிகொண்ட ஸ்ரீமந் நாராயணா, சாப்பிட வாராய்! என்று யசோதை
அழைக்கிறாள். இப்போதுதானே சாப்பிட்டேன் என்று கண்ணன் வீட்டினுள் ஓடுகிறான்.
இத்தகைய குறும்பு செய்த அவனைத் தண்டிக்க எண்ணிய யசோதை அவனைத் தூக்கி கொஞ்சும்படி
கற்ற மாயம் என்ன?.. என்று ஆழ்வார் இப்பாசுரத்தில்
கேட்கிறார்.
காளமேகம் போன்ற
வடிவை உடையவனே, இங்கே
வாராய்; ‘கொண்டல் வண்ணனை வெண்ணைய் உண்ட வாயன் ‘ - அமனாலாதிபிரான் பாசுரப்படி திருவரங்கம்
பெரிய கோவிலிலே வசிக்கின்ற பிள்ளையே ! இங்கே வாராய்! நீர்மலாமான அலைகளை உடைய
புனலாலே சூழப்பட்ட திருப்பேர்நகரில் கண் வளர்ந்து அருளின ஸ்ரீமன் நாராயணனே, இங்கே அம்மு உண்ண வா என்று கண்ணனை
தாயானவள் அழைக்கிறாள்; நான் அம்மம் உண்டு வந்தேன் காண்;
என்று சொல்லி விரைவாய் வந்து வீட்டுக்குள் நுழையத் தாயான யசோதையும்
இவன் வரவைக் கண்டு எதிரே போய் மருங்கி எடுத்துக் கொள்ளும்படி கண்ணன் கற்ற கல்வி
இருந்தபடி என்று மனம் மகிழ்கிறார் என்பது இந்தப் பாடலின் பொழிப்புரை.
யசோதை கண்ணனை
பலவாறு புகழ்ந்து ‘கண்ணா! வா’ என்று அழைக்க, அவன் மகிழ்ச்சியோடு “அம்மம் உண்ண வந்தேன்“ என்று சொல்லி ஓடி
வந்து வீட்டினுள் புக, யசோதை அவன் வந்த அழகையும்
முகமலர்த்தியையும் கண்டு மகிழ்ந்து அவனை எதிர் கொண்டு அவனைத் தன் இடுப்பில் ஏற்றி
அணைத்துக் கொண்டதை ஆழ்வார் ‘கண்ணன் கற்ற கல்வி’ என்று வியக்கிறார். தாயான யசோதை
வியக்கிறாள் என்றும் சொல்லலாம். கண்ணன் முன்பு செய்த தீமைகளைத் தாயாகிய தான்
மறந்துவிட்டு அவனை எதிர் சென்று எடுத்துக் கொள்ளும்படி செய்த விசித்திரத்தில்
ஈடுபட்டு இவனைப் புகழ்ந்து மகிழ்ந்து பொலிகிறாள். ‘கொண்டல்வண்ணன்’ ‘திருவரங்கத்து
பிள்ளை’ ‘திருப்பேர் நகரில் உறையும் திருநாரணன்’ என்பன கண்ணனை குறிக்கும்.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
‘திருக்கரங்களில்
சங்கையும், சக்கரத்தையும்
தரித்தவன், கரிய மேகத்தின்
நிறத்தைப் போன்றவன், உண்மையானவன்,
அடியார்களுக்கு மெய்யன், தன் திருவடிகளைப் பனிவோர்களை அன்பராக்கிக்
கொள்பவன். திருப்பேர் நகரில் எழுந்தருளியிருப்பவன். அனந்தாழ்வானைப் பாயாகக்கொண்ட
பகவானின் திருநாமங்களைச் சொல்லிப் பிறவிப் பயன் அடைந்தேன்’ என்கிறார் ஆழ்வார்.
அநுகூலர்க்குப் பல்லாண்டு பாடுவதற்குப்
பாங்காகவும் பிரதிகூலர்க்குக் கொலைத்தொழில் செய்ய உறுப்பாகவும் திருக்கைகளிலே
திருவாழி திருச்சங்காழ்வார்களை ஏந்தியிருப்பவனும், நீர்கொண்டெழுந்த காளமேகம் போன்ற
திருநிறத்தையுடையவனும், தன்னைப்
பற்றிச் சாஸ்த்ரங்களிலே சொல்லப்பட்டுள்ள வைபவங்களில் ஈஷத்தும்
பொய்யாகாமேயிருப்பவனும், அர்தவைபவங்களை
எல்லாம் பக்தர்கட்கு மெய்யே காட்டித் தந்தருள்பவனும், தன் திருவடிகளிலே வந்து பணிகின்றவர்களுக்கு
ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னிவழுவிலா அடிமை செய்யும் பேற்றைத் தந்தருள்பவனுமான
எம்பெருமான் பரமபோக்யமான திருப்பேர் நகரில் அரவணையில் கண்வரளந்தருளா நின்றான். ௮ன்னவனுடைய
திருநாமங்களை நான் வாயாரச்சொல்லி உய்வுபெற்றவிதம் என்னால் பாசுரமிட்டுச்
சொல்லப்போகாது என்கை என்பது இப்பாசுர வியாக்யானம்.
சங்கு வெற்றியைத் தரும். சக்கரம் தருமத்தை நிலைநாட்டும். கருமேகம் மழையை அளிக்கின்றது. அது போன்று
நமக்கு அருளை வழங்குபவன் அந்தப் பகவான். இவ்வுலகில் சில மக்கள் போலிகளாக
உள்ளார்கள். வஞ்சத்தை மனதில் வைத்து, அடுத்தவரைக் கெடுத்து, சுயநலப்
பித்தர்களாக உள்ளார்கள். பணத்திற்காக எதையும் செய்யும் பஞ்சமா பாதகர்கள் நடுவில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய போலி மனிதர்களை நம்பி நம் பிறவிக்
காலத்தை வீண்டிக்க வேண்டாம் என்று ஆழ்வார் நம்மை எச்சரிக்கிறார்.
‘மரக்கலங்கள்
சூழப்பட்ட ஏழு கடல்களும், மலைகளும்,
ஆகாயமும், இந்நிலவுலகமும் ஆகிய எல்லாவற்றையும் பிரளய காலத்தில்
உண்டு, படைப்புக் காலத்தில்
வெளிப்படுத்துபவன் பகவான். அவன் திருப்பேர் நகரில் கோயில் கொண்டுள்ளான். சந்திர
மண்டலத்தையும், மேக
மண்டலத்தையும் தொடும் அளவுக்குச் சோலைகளையுடைய அளைந்நகரில் பகவான் திருநாமங்களைச்
சொல்லி அடியேன் பிறவிப் பயனடைவேன்’ என்கிறார் ஆழ்வார்.
ஊழிக்காலத்தில் உலகை உண்ட பெருவாயனாகப் பகவானின் பெருமைகளை ஆழ்வார்
உணர்த்துகின்றார். ஊழி காலம் என்பது பலமுறை நடந்துள்ளது. சிருஷ்டி கர்த்தாவான
பிரம்மவே அதைப் பற்றி அறியாமல் தானே பரம்பொருள் என்று ஆணவம் கொண்டு சிவபெருமானால்
ஒரு தலையை இழந்தார். பெருமான் அவரது ஆணவத்தைப் போக்கினார், உலக ரகசியங்கள் அனைத்தையும் அவனறிவான். நமது சொற்ப
காலங்களில் உலக ரகசியங்களை அறிந்து கொள்வது கடினம். இதில் சிறு ரகசியங்கள் அறிந்து
கொள்ள பகவானின் கருணை வேண்டும். அவனது திருநாமங்களைச் சொல்லி அன்பைப் பெற்று
விட்டால் எல்லா உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும் என்கிறார் ஆழ்வார்.
நான்முகனாகிய
பிரம்மனை நாபிக் கமலத்தில் தோற்றுவித்தவனும், தனது திருமார்பில்
உண்டான ஸ்வேதஜலத்தால் சிவபெருமானின் பிரம்மஹத்தி சாபத்தை நீக்கி, நீர் முன் போலவே மேலுலகத்தை ஆள்வீர் என்று கூறியவனும், பெரிய மலைகள் போன்ற மதில்களால் சூழப்பட்ட திருப்பேர் சேஷசயனத்தின் மேல் கரிய மலை ஒன்று பள்ளி கொண்டது
போலிருக்கும் அப்பக்குடத்தானின் திருநாமங்களைச் சொல்லி அடியேன் உய்ந்தேன்.’’
என்கிறார் ஆழ்வார்.
‘’சிருஷ்டி கர்த்தாவான பிரம்மன் ஆணவத்தால் பேசியதால் சிவபெருமான் அவனது
தலையைக் கிள்ளி எறிந்தான். அந்தத் தலை சிவனைப் பற்றித் தோஷமானது. அந்தச் சாபத்தினை திருமால் தீர்த்து வைத்தார். அது போன்று
நம்முடைய எல்லா தோஷங்களையும் களையக் கூடியர் திருமால்தான். அத்தகைய பெருமையுடைய
பகவானின் திருநாமங்களைச் சொல்லி உய்வு அடைந்தேன். அதுபோல் நீங்களும் பகவானைப்
பற்றுங்கள்’’ என்கிறார் ஆழ்வார்.
சதையுடன் கூடிய
பிரம்மனின் தலையைக் கையில் ஏந்தி உலகெல்லாம் அலைந்த சிவபெருமான் இந்தச் சாபத்தை
நீக்க வேண்டும் என்று கேட்க, மார்பிலிருந்து நீரை எடுத்து அவர் சாபத்தைத் தீர்த்த எம்பெருமான்
திருப்பேர் நகரில் எழுந்தருளியுள்ளான். வண்டுகள் நிறைந்த நந்தவனங்களால் சூழப்பட்ட
நெருங்கிய வயல்களையுடைய திருப்பேர் நகரில் அருள் புரியும் தேவாதி தேவனது
திருநாமங்களைச் சொல்லி நான் உய்வு பெறுவேன்’ என்கிறார் ஆழ்வார்.
தர்மத்தின் பெயரில் உயிர்கொலை செய்தாலும் நம்மைத் தோஷம் பற்றும். பகவான் மனிதனாகப் பிறந்தாலும் தோஷம் அவரைப்
பற்றியது. பல்லாயிரம் அம்புகளை எதிர்கொண்ட அவர் சாதாரண வேடுவனின் அம்பினால் உடலை
விட்டார். இந்நிலையில், தீவினையால் செய்யப்படும் தோஷங்கள்
எத்தனைக் கொடியது. வாழ்வில் நல்வினை, தீவினை செய்வது
நம்மிடத்தில் உள்ளது. நமது தவறுகளைப் பிறர்மீது சுமத்தி பாவங்களை மேலும்
சுமக்காமல் நல்வினை செய்து பயனுறுவோம் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
கண்ணபிரான்
ருக்மணி பிராட்டியை அழைத்து வரும்போது தடுத்த ‘தந்தவக்கரன்’ என்ற அசுரனின் வாயைக்
கிழித்துப் போட்ட மாயனே! என்று தேவர்கள் வேண்டினர். நரசிம்மராய் தோன்றி இரண்யகசிபுவை நகங்களால்
கீறி வதம் செய்து மனம் மகிழ்ந்த சக்கரபணியை, திருவாழியாலே அழகுப் பெற்றவனும், திருப்பேர்
நகர் பெருமானை வேண்டியும் பிறவிப்பயன் பெற்று உய்ந்தேன்’ என்று ஆழ்வார்
பாடுகிறார்.
பகவானின் பெருமைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதால் ஒளியைக் கண்ட இருள்
போல் நம்மிடம் கொண்டுள்ள அசுர சக்திகள் விலகி ஓடுகின்றன. ஒழுக்கமுள்ளவர்களின்
தேஜஸ் ஒளியால் அற்பர்களின் ஆணவம் அடங்கி ஓடுகிறது. இக்கதைகளை மீண்டும் படிக்கும்போது நமது மனம்,
அறிவு ஆகியவை ஒளி பெறுகின்றது. அந்த ஒளியைக் கொண்டு நம்மில்
குடிகொண்டுள்ள ஆத்ம ஒளியைக் காண முடியும். அதுவே நமது இறுதியான லட்சியம் என்றவாறு
இப்பாசுரம் பொருள் கொள்கிறது.
அழகிய ஆபரணங்களை
அணிந்த சீதாப் பிராட்டியின் பொருட்டு மலைகளால் சமுத்திரத்தில் அணைகட்டி இலங்கை
சென்று கொடிய இராவணனது இருபது தோள்களையும் கோதண்டத்தால் அறுத்த பகவான் திருப்பேர்
தலத்தில் கோயில் கொண்டுள்ளான். நல்லொழுக்கமுள்ள
நான்கு வேதங்களிலும் சிறந்த வைதிகர்கள் வேதங்களை முழங்க அதை மகிழ்வுடன் கேட்டவாறு
அருள் புரிகிறான். மலங்கு மீன் துள்ளிப்பாயும் வயல்களையுடைய அவ்வூரில் நான்
வாழ்கிறேன் என்கிறார் ஆழ்வார்.
நீரிலே ஆழ்ந்து போகவேண்டிய மலைகளைக் கொண்டு
கடலிலே அணைகட்டி அவ்வழியால் இலங்கை சென்று இராவணனது இருபது தோள்களையும்
துணித்தொழித்த பெருமான் இன்றைக்கும் அங்கனொத்த ஆச்ரித விரோதிகளைத்
தொலைப்பதற்குத் திருப்பேர் நகரைக் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளான்.
அத்திருப்பதியைப் பொருந்தி நான் வாழ்ந்தேன் என்கிறார்.
இவ்வுலகில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்திற்கும் காரண காரியங்கள் உள்ளன.
பகவானின் எண்ணப்படி அவை நடந்தேறி வருகின்றன. நாம் தீவினைகளை விலக்கி நல்வினைகளை
செய்யத் தீவிர முயற்சி எடுத்தால் முன் செய்த தீவினைகளை பகவான் அழித்து விடுவார். இத்தகைய உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள
வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
கண்ணன் வெண்ணெயை
திருடித் தின்ன, யசோதை
கோபம் கொண்டு மத்தினால் அடிக்கக் கை ஓங்கிய பிறகு மனம் வராமல் துண்டாயிருந்த
கயிறுகளை முடிச்சிட்டு உரலில் கட்டும்போது அதை ஏற்றுக் கொண்டான். அத்தகையவன் உறுதியான மதில்களால் சூழப்பட்ட
திருப்பேர் நகரில் கோயில் கொண்டுள்ளான்.
சமுத்திரம் போன்ற நிறத்தைக் கொண்டவனை ஆயிரம் திருநாமங்களால் அனுதினமும்
சொல்வதால் நான் வாழ்கிறேன்’ என்கிறார் ஆழ்வார்.
திருவாய்ப்பாடியில்
தயிர், நெய், பால், வெண்ணெய் முதலியன 'பாழ்போகலாகாது,
இவற்றை உட்கொள்வதற்கு ஒரு பிள்ளை வேணும்’ என்றே நோன்பு நோற்றுப்
பிள்ளை பெற்றிருந்தாலும், கண்ணபிரான் அவற்றை அளவு கடந்து
உண்கையாலே திருமேனிக்குத் தீங்காகுமோ என்றஞ்சின யசோதைப் பிராட்டி கோபத்தை
ஏறிட்டுக் சொண்டு மத்தினால் புடைப்பதாக வெருட்டிக் கண்னிநுண் சிறுத்தாம்பினால்
கட்ட, அதற்கு இசைந்திருந்தானாம் கண்ணபிரான். தனது ஸௌசீல்யம், ஸெளலப்யம் ஆச்ரிதபாரதந்திரியம்
முதலிய சீலங்களை வெளியிடுதற்கென்றே பரத்வ நிலையைத் தவிர்ந்து மனுஷ்யனாக அவதரித்ததனால்
உரலோடு கட்டுண்டிருக்கை முதலிய இவ்வகைகளால்தான் அக்குணங்களை விளங்கச்செய்து கொள்ள
வேண்டும்.
ஓவ்வொரு நாளும் பகவானின் திருநாமங்களைச் சொல்பவர்களே வாழ்கிறார்கள். அவனது
நாமாவளியைச் சொல்லச் சொல்ல நம்முடைய பாவ மூட்டைகள் கீழே விழுகின்றன. அவனை
மறக்கின்ற ஒவ்வொருவரும் பாவங்களைக் கூடுதலாகச் சுமக்கின்றனர். வைரமாகப் பகவானின் திருநாமங்கள்
இருக்க அற்ப பொருட்களுக்கு ஆசைபட்டு துன்பத்தில் விழாதீர்கள் என்பது இப்பாசுரக்
கருத்தாகும்.
அழகு மிக்க பொன்
போன்ற ஏழு உலகங்களும் அறியும்படி ஆயர்பாடியில் நப்பின்னையின் கொடி போன்ற மேனியை
அணைவதற்காகக் காளைகளைக் கொன்றான். அப்பெருமான் திருப்பேர் நகரில் வாசம்
செய்துள்ளான். செப்புத் தகடுகளாலான மதில்களால் சூழப்பட்ட அந்நகரில் வாழும்
பகவானின் திருநாமங்களைப் நாள்தோறும் பாடி உய்ந்தேன் என்கிறார் ஆழ்வார.
நப்பின்னை பிராட்டியை மணந்து கொள்வதற்கு
இடையூராக இருந்த கொழுத்த காளைகள் ஏழையும ஸர்வலோக ப்ரஸித்தமாகக் கொன்றொழித்த 'வெற்திபெற்ற அந்தப் பெருமான் மணவாளக்கோலம் விளங்கத் திருப்பேர் நகரில்
ஸேவை ஸாதிக்கின்றான். அப்பெருமானது திருநாமங்களை நாடோறும் வாழ்த்திப் பாடுவோம்.
மக்களுக்குத் துன்பம் விளைவித்த
ஏழு காளைகளைப் பகவான் கொன்றார். அவைகள் நமது ஆத்மாவை மூடி மறைக்கும் ஏழு விதமான
திரைகள் என்று நாம் கொள்ள வேண்டும்.
தியானம், யோகம்
போன்றவற்றால் இத்திரைகளை விலக்க முடியும்.
பகவான் தந்த சக்திகளைச் சரியான முறையில் உபயோகித்து நம் துன்பங்களைக் களைய
வேண்டும். சோம்பி இருந்தால் பகவானின் துணை நமக்குக் கிடைக்காது என்ற பொருளில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
நால்வகை வேதமைந்து வேள்வி ஆறங்கம் வல்லார்
மேலைவானவரின் மிக்க வேதியர் ஆதிகாலம்
சேலுகள் வயல்திருப்பேர்ச் செங்கண்மாலோடும் வாழ்வார்
சீலமாதவத்தர் சிந்தையாளி என்சிந்தையானே. 1436
நான்கு
வேதங்களிலும், ஐந்து
யாகங்களை நடத்துவதிலும் மேம்பட்ட, வைதிகர்கள் வாழும் திருப்பேர்
நகரில் பகவான் கோயில் கொண்டுள்ளான். சேல்
மீன்கள் துள்ளும் வயல்கள் சூழ்ந்த நகரில் செந்தாமரைக் கண்ணனாக அருள்
பாலிக்கின்றான். நல்லொழுக்கமும், நற்குணமும் கொண்ட மனங்களைத்
தனது வாசஸ்தலமாகக் கொண்டுள்ளான். பகவான் என் சிந்தனையில் எப்போதும்
குடிகொண்டுள்ளான் என்கிறார் ஆழ்வார்.
ஐந்து
வேள்விகளானது,
பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம்,
பித்ரு யஜ்ஞம், மனுஷ்யயஜ்ஞம் என்பனவாம்.
பிரம்மயஜ்ஞமாவது--வேதத்தில் நித்யம் ஒரு ப்ரச்னமோதுவது. தேவயஜ்ஞமாவது
அக்னிஹோத்திரஞ் செய்வது. பூதயஜ்ஞமென்பது பிரானிகளைப் பலியிடுவது.
பித்ருயஜ்ஞமென்பது பித்ருக்களை உத்தேசித்துத் தர்ப்பணம் விடுவது.
மனுஷ்யயஜ்ஞமென்பது விருந்தாளிகளுக்கு உணவு
முதலியன வழங்குவது முதலியவையாகும்.
பகவான் மனிதர்களைப் பார்ப்பதில்லை. அவர்களிடமுள்ள செல்வத்தைப்
பார்ப்பதில்லை. பட்டம், பதவி போன்றவற்றை அவர்
பார்ப்பதில்லை. நற்குணங்களும், தூய அன்பும் நிறைந்த உள்ளம் எங்கிருக்கின்றதோ அதைத் தேடி வந்து வாசம்
செய்கிறான் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைகின்றது.
வண்டுகள்
ரீங்காரமிடும் நந்தவனங்களையுடைய திருப்பேர் நகரில் பாம்பணயின் மேல் அரிதுயில்
கொள்ளும் திருமாலைப் பற்றிக் கொடிகள் பறக்கும் மதில்களையும், மாளிகைகளையும் கொண்ட திருமங்கையில்
பிறந்த வலிமை மிக்க தோள்களையுடைய கலியன் சொன்ன அழகிய சொற்களால் இயற்றிய
இப்பாமாலையைப் பாடி ஆடுவோர் பரம பதத்தில் வாசம் செய்வார்கள்.
ஆழ்வாரின் பத்து பாசுரங்கள் அனைத்தும் பகவானின் பெருமைகளையும், அவர் கோயில் கொண்டுள்ள இடங்களைப் பற்றியும் விவரித்தன. இவைகள் அனைத்தும்
உண்மைத் தத்துவங்களை நமக்கு எடுத்து இயம்பின. இவ்வுலகில் நாம் அறிய வேண்டியது,
பகவான் பரமாத்மாவாக இருக்கிறார். நாம் அவரிடமிருந்து வந்துள்ளோம்.
நாம் ஜீவாத்மாவாக இருந்தாலும் பரமாத்மாவின் ஒரு கூறாக உள்ளோம். இறுதியில் அவரிடம்
ஐக்கியம் அடைவதே நமது லட்சியமாகும்.
இத்தகைய லட்சியத்தை அடைய வேதங்களும், இதிகாசங்களும்,
புராணங்களும், பிரபந்தங்களும் நமக்கு
வழிகாட்டுகின்றன என்ற கருத்து புலப்படுகின்றது.
எதனாலும் அழிக்க
முடியாத ஒளியுடையவன் எம்பெருமான். இரணியனை தனது கூரிய நகங்களால் கிழித்து அழித்த
அந்தத் தேஜஸ்வியை அளவினால் கூற முடியாது.
நித்யசூரிகளுக்கு அருள் செய்கின்ற அந்த அமிர்தத்தை, தேவர்களின் அருள் விளக்கை, இன்று திருப்பேர் நகரில் வணங்கி, நாளைத்
திருவெள்ளறையில் சென்று
தரிசிப்போம் என்கிறார் ஆழ்வார்.
ப்ரஹ்லாதாழ்வானுக்கு
விரோதியைப் போக்கின பரமபுருஷனாய், பரமகிருபாளுவான பெருமானைத் திருப்பேர் நகரிலே கண்டோம். இனிச் சென்று திருவெள்ளரையிலே காணக்கிடப்போம் என்கிறார் ஆழ்வார். இத்தகைய
பெருமான் காற்றாலும் மற்றொன்றாலும் அணைக்க முடியாத அழகு பொருந்திய ஒளியொத்த
விளங்குகிறான்.
எம்பெருமான் நமது உடலில் ஆன்மாவாகத் திகழ்கிறார். நம்
ஒவ்வொருவருக்குள்ளும் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆன்மாவை அழிக்க முடியாது.
ஆன்மாவில் அனைத்து வலிமைகளும் அடங்கி இருப்பதால் கிரகங்களும் நம்மைக்
கட்டுப்படுத்த முடியாது என்கிறார் ஆழ்வார். இத்தகைய சத்திய வார்த்தைகளை உலகுக்கு
கொண்டு வர நாலாயிரப் பாடல்களை ஆழ்வார்கள் நமக்களித்துள்ளார்கள்.
பெருமை பெற்றுள்ள
மாட மாளிகைகளைக் கொண்ட திருப்பேர் நகரில் காட்சி தரும் மணவாளனைப் பற்றி அனைத்து
சாஸ்த்திர நூல்களையும் கற்ற கலியன் இயற்றிய சிறந்த சொற்களாலான இப்பாடலை பக்தியுடன்
பாடும் அன்பர்களுக்கு அழிவு ஏற்படாது. மேலும் அவர்கள் பரமபதத்தை ஆள்வார்கள் என்ற
பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது.
“பெற்றம்” என்று பெருமையாய்,
பெருமைபொருந்திய மாளிகைகளையுடைத்தான திருப்பேர்நகரில் உறையும்
எம்பெருமானை சான்றதாகிறது, இப்பாசுரத்தில் பெற்றம்' என்று பசுக்களுக்குப் பெயராய், கோபாலனாகையாலே
பசுக்களை ஆள்பவனும் திருப்பேர் நகரிலுள்ளவனுமான பெருமானை என்றதாகிறது, இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாகத் திருமங்கையாழ்வார் திருவாய்
மலர்ந்தருளிய இப்பாசுரங்களை ஓதவல்ல தொண்டர்கட்கு ஒருநாளும் எம்பெருமானைவிட்டுப்
பிரிதலின்றியே நித்யாநுபவமாம்படி, பரமபதம் அவர்களிட்ட
வழக்காகுமென்று பயனுரைத்து தலைக்கட்டினாராயிற்று.
திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களில் பகவானின் பெருமைகளை நம் உள்ளத்தில்
பதிய வைத்ததுமல்லாமல் பல உயரிய சிந்தனைகளையும் நமக்கு அளித்துள்ளார்.
நம்பிக்கைக்குரியவன் பகவான் மட்டுமே என்ற உயரிய தத்துவம் உணர்த்தபட்டது.
அடியார்களுக்கு உயிராய் இருந்து இயக்குபவன் பகவான். தன்னை நம்புபவர்களுக்கு
வழிகாட்டியாக இருப்பவன் என்ற நீதி வலியுறுத்தப்பட்டது. ஹரியும் சிவனும் ஒன்று
என்று உலகத்தாருக்கு புரிய வைத்தார் ஆழ்வார். இத்தகைய பக்தி பாசுரங்களைப்
படிப்பவர்களுக்குத் துன்பம் என்பதே இல்லை என்ற கருத்து இப்பாடல்களில்
அமைந்துள்ளது.
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்
பேசினார் பிறவிநீத்தார் பேருளான் பெருமைபேசி
ஏசினார்உய்ந்து போனார் என்பது இவ்வுலகின் வண்ணம்
பேசினேன் ஏசமாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு
ஆசையோ பெரிதுகொள்க அலைகடல் வண்ணர்பாலே. 2048
திருப்பேர்
நகரில் அருள்பாலிக்கும் பரந்தாமனின் மகிமைகளைப் பேசுபவர்களுக்குப் பிறப்பென்பது
கிடையாது. சிசுபாலன் போன்றவர்கள் ஏசினாலும் அதுவும் துதிப்பாடலாக ஏற்றுக்
கொள்ளப்பட்டு அவனுக்குப் பரம பதம் அளித்தார். எனக்கு மோட்சம் கிடைக்கும் என்றாலும்
என்னால் ஏச முடியாது. அவனது பெருமைகளேயே பேசிக் கொண்டிருப்பேன். பகவான் மேல் நான்
கொண்டிருக்கும் ஆசை பெரிது. அறிவற்ற நான் இப்பிறவியை முடிவுக்குக் கொண்டு வர அவனை
நான் சரணடைந்தேன்’ என்கிறார் ஆழ்வார்.
யாகத்திற்கு வருகை புரிந்த கிருஷ்ணனை சிசுபாலன் கொடிய வார்த்தைகளால் பேசி
அவமானப் படுத்தினான். ஒரு இடையனுக்கு எவ்வாறு முதல் மரியாதை செய்யலாமென ஏசினான்.
அவனது வசைகளை துதியாக ஏற்று சக்கரத்தை ஏவி அவனுக்கும் பரமபதத்தை அளித்தார். தன்னை
நிந்தித்தவனுக்கே பரமபதம் அளித்த பெருமான் தன்னைப் போற்றும் அடியவர்களுக்கு
எதைத்தான் தரமாட்டான் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
உளுத்துப் போன
மாமிசத் துகள்கள் உதிரும் மண்டையோ ட்டை தரித்து வெளி இல்லங்களில் பிச்சை ஏற்றுத்
திரியும் சிவபிரானின் சாபத்தைத் தீர்த்த பகவான் ஸ்ரீமந் நாராயணன் அருள் புரியும்
இடமான திருக்கண்டியூர், திருமெய்யம்,
திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பேர்நகர், மாமல்லபுரம் போன்ற
திவ்யதேசங்களுக்கு சென்று சேவிப்பவர் பிறவிப் பயன் பெறலாம். மற்றவர்கள் பாவ
வினைகள் தீர்ந்தும் முக்தியடையாத நிலை பெறுவர். இங்குப் பிறவிப்பயன் என்று கூறுவது
பிறப்பு இறப்பு இல்லாத பேரானந்த நிலை, ஆத்மாவை அறிந்து விட்ட
தூய நிலை, வேறுபாடுகளைக் கடந்துவிட்ட ஒரு அற்புத நிலை,
பகவானின் ஒரு கூறாய் நாம் இருப்பதை உணர்த்தும் நிலை என்பதாகும்.
எனவே மக்கள் அனைவரும் இத்தகைய திவ்யதேசங்களுக்குச் சென்று பெருமானை சேவித்தல்
வேண்டும் என்று உணர்த்துகிறார்.
ஒரு காலத்தில், பிரம்மாவுக்கு (நான்முகன்) ஐந்து
முகங்கள் இருந்தனவாம். பிரம்மாவுக்கும், சிவனுக்கும் ஏதோ
காரணத்தால் சண்டை. வந்த கோபத்துக்கு, சிவன் பிரம்மாவின் ஒரு
தலையைக் கிள்ளி எடுத்து விட்டாராம். சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்
கொண்டதால், அந்தக் கபாலம் அவருடைய கையிலேயே ஒட்டிக் கொண்டதாம். இந்தத்
திருக்கண்டியூர் பெருமாள் கோவிலுக்கு வந்து வணங்கிய பின்தான் தோஷம் நீங்கி, அந்தக் கபாலம் அவர் கையை விட்டு நீங்கியதாம். அதானால்தான், இந்தப் பெருமாள் ஹரசாபம் நீக்கிய பெருமாள் என்று
போற்றப்படுகிறார்.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
திருநீரகம்
என்னும் திருப்பதியில் குடிகொண்டிருப்பவனே! உயர்ந்த திருவேங்கட மலையில்
நின்றருள்கிறவனே! நிலாத்திங்கள்துண்டம் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ளவனே!
அழகிய காஞ்சியிலும், திருஊரகத்திலும்
எழுந்தருளி இருப்பவனே! அழகிய தடாகக் கரையில் உள்ள திருவெஃகாவில் திருக்கண்
வளர்ந்தருள்பவனே! சிந்திப்பாருடையவரின் உள்ளத்தில் உறைபவனே! உலகமெல்லாம்
துதிக்கும்படி திருக்காரகம் என்னும் தலத்தில் நிற்பவனே! கோபியர் உள்ளங்களைக்
கவர்ந்தவனே! விரும்பத்தக்கதாய் அழகிய காவிரியின் தெற்கில் திருப்பேர் நகரில்
இருப்பவனே! என் மனதில் நீங்காமல் காட்சி தருபவனே! பெருமைக்குரிய பெருமானே! உன்
கமலப் பாதங்களைப் பூஜித்து சேவிக்கின்றேன் என்கிறார் ஆழ்வார். நினைத்தவர்கள்
உள்ளத்தில் உறைபவனே! எல்லா உலகங்களும் புகழ்ந்து துதிக்கும் திருக்காரகம் என்னும்
திருப்பதியின் தலைவனே! திருக்கார்வானத்தில் வாழ்பவனே! திருக்கள்வனூரை சேர்ந்தவனே!
அழகிய காவிரியின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பேர்நகரின் தெய்வமே!
என்னுடைய நெஞ்சத்தில் நீங்காது இருக்கும் பகவானே! உன்னுடைய திருவடிகளை
வணங்குகிறேன் என்று உருக்கமாக இந்தப் பாசுரத்தில் படுகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள
பெருமாளை மட்டுமில்லை, திருப்பதி மலையப்ப சுவாமியையும்,
திருப்பேர் நகர் என்று தூய தமிழில் அழைக்கப்படுகின்ற கோவிலடி
திவ்யதேசப் பெருமாளையும் இந்தப் பாசுரத்தில் குறிப்பிட்டு வணங்குகிறார்.
பாசுரத்தின் முடிவில் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா? பேராது
என் நெஞ்சில் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே! திருமங்கை ஆழ்வாருடைய
நெஞ்சத்து உணர்வுகளில் இந்தப் பாசுரத்தில் கூறப்பட்டுள்ள அனைத்துப் பெருமாளும்
குடிகொண்டு இருக்கிறானாம். பரவசமும் பக்தியும் நெருக்கமும் உருக்கமும்
இல்லாவிட்டால் இதெல்லாம் சாத்தியம்தானா?
மரக்கலங்களில்
சிறந்த இரத்தினங்களைக் கொண்டு தள்ளும் கடற்கரையைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில்
கோயில் கொண்டிருப்பவனே! திருமதில்களையுடைய காஞ்சியில் வாழ்பவனே! திருப்பேர் நகரில்
குடிகொண்டிருப்பவனே! அழகிய கொன்றை மாலையை இடப்பக்கம் சூடிய மலை மன்னன் இமவானின்
மகளான பார்வதியை இடப்பக்கம் அமர்த்தியுள்ள சிவபெருமானுக்கு உன் மேனியில் இடம்
தந்தவனே! குளிர்ந்த திருவேங்கட மலையில் நின்றருள்பவனே! பவள நிறத்தவனே! எங்கே போனாய்? பகவானே!
உன்னைத் தேடி இந்த ஏழை அலைகின்றேனே! என்று ஆழ்வார் பகவானை வேண்டுகிறார்.
பகவானைத் தேடுவதிலும் ஒரு அடித்தளம் அமைய வேண்டும். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்றெண்ணி தேடுவது
சுயநலமாகும். இக்காரியத்தால் பகவான் நம்மை விட்டு விலகி விடுகிறான். சுயநலமில்லா
அன்பைக் கொண்டு அவனை அடைய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்வார் இப்பாசுரம்
இயற்றியுள்ளார்.
முற்றாத
தனங்களையுடைய என் செல்வி, திருமகள் மாயவனின் அகன்ற மார்பில் குடியிருக்கிறாள் என்று தெரிந்தும்
அவனுக்கு அடிமையானாள். தன்னடக்கத்தைத் துறந்தாள். பெருமூச்செறிந்தாள். அழகிய
திருவரங்கத்தில் அரிதுயில் கொள்ளும் அரங்கனைப் புகழ் பாடி ஆடுவோமா என்கிறாள்.
தாயாகிய எனது சொல் கேளாள். திருப்பேர் நகர் புகழ்பாடி, குளிர்ந்த
திருக்குடந்தையில் அருளும் ஆராவமுதமனையும் பாடி வியந்தவள் அழகிய தாமரைக் குளத்தில்
குளிக்கச் சென்றுள்ளாள். தோழியர்களே! என் மகள்போல் உங்கள் பெண்களும் உங்களோடு
ஒட்டாமல் உள்ளார்களா? என்று திருத்தாயார் கூறுவது போல்
அழ்வார் கூறுகிறார்.
பரக்கால
நாயகியின் தாயார், தன்னுடைய
பெண் குழந்தை படும் வேதனையைக் கண்டு வருந்தி, இவளுக்கு நாம்
ஏதேனும் ஹிதமான வார்த்தைகள் சொல்லிப் பார்ப்போம், அதனாலேயாவது
ஒரு வழி பிறக்குமா என்று எண்ணுகிறாள். அழகிய முத்து ஹாரங்களை மார்பில்
அணிந்திருக்கும், அமிர்தம் கடையும்போது அமிர்தம் போல்
வெளிபட்ட, அழகில் நிகரில்லாத பெரியபிராட்டி, ஆராவமுதனான எம்பெருமானின் அழகிய திருமார்பினுள் இருக்கிறாள், என்னை நேராகக் கண்ட பிறகும், தன் ஆசையைவிட
மறுக்கிறாளே என் பெண் என்று வருந்துகிறாள். யார் என்ன சொல்வார்களோ என்ற அச்சமும்
இவளிடத்தில் இல்லை. நாணமும் இல்லை, வெட்கத்தை விட்டுத்
தனக்கும் எம்பெருமானிடத்தில் ஒரு இடம் கிடைக்குமா? என்று
கேட்டுக்கொண்டு பெருமூச்சு விட்டவண்ணம் நிற்கிறாள் என்கிறாள் திருத்தாயார்.
எல்லாப் பெண்களும் உலகியலில் ஒட்டாமல் பகவானிடம் பற்று கொள்வதே மேன்மையைத்
தரும். ஆத்மாவுக்கு ஆண், பெண் என்ற வேறுபாடு கிடையாது.
எல்லோரும் ஆத்ம ஜோதியில் ஐக்கியமாக வேண்டியவர்களே! அதுவே நிலையான பேரின்ப நிலை
என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருக்குடந்தை, திருவெஃகா, திருவள்ளூர்,
திருவரங்கம், அன்பில் மற்றும் திருப்பாற்கடல்
ஆகிய திவ்ய தேசங்களில் ஆதிசேஷன் மேல் அரிதுயில் கொள்ளும் எம்பெருமான், ஆதிமுதல்வன் அடியார்கள் உள்ளத்திலும் புகுவதற்கு காத்துக் கிடக்கிறான்.
நாம் அவனை நெருங்கினால் அவன் விரைந்து நம்மில் புகுவான். ஆனால் நாம் இத்தகைய
பெருவாழ்வினைப் புறந்தள்ளி அழியும் பொருட்களுக்குப் பின்னால் சென்று
கொண்டிருக்கிறோம். எனவே பகவானை அடைவதற்கு வாழும் காலத்திலிருந்தே அவனை நெஞ்சில்
நிறுத்த முயற்சிக்க வேண்டும். எம்பெருமான் நம் உள்ளத்தில் வந்து நித்தியவாசம்
புரிவதற்கு தயாராக உள்ளார். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே
ஆழ்வாரின் கருத்தாகும்.
எம்பெருமானுக்கு, பரமபதம் திருப்பாற்கடல் திருமலை
முதலான உகந்தருளின இடங்களில் இருப்பத்தைக் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய
கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், சமயம் பார்த்து
அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற இடங்களில் எம்பெருமான் தங்குகிறான்
என்பது இதன் கருத்தாகும்.
திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுள்ளுர்,
திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய இடங்களில் அரவணைமீது
கிடந்தருள்வது, அன்பர்களுடைய இதயத்தில் புகுவதற்காகவே என்று
காரணங் கற்பிக்கின்றார் ஆழ்வார். எப்பொழுதும் எம்பெருமானுடன் அணைந்தேயிருக்க
வேண்டும் என்று ஆசையுடையவர்கள் ‘அணைப்பார்’ எனப்படுவார்கள். அவர்களுடைய
திருவுள்ளத்திலே பொருந்தினவனாக ஆவதற்காகவே இருக்கும் எம்பெருமான் ‘கருத்தன் ஆவான்’
என்று சுட்டப் பெறுகின்றான்.
நம்மாழ்வார் திருவாய்மொழி
திருமாலிருஞ்சோலை
மலை என்றேன். உடனே திருமால் என் மனத்திற்குள் வந்து புகுந்து கொண்டான்.
இப்படிப்பட்ட பெருமான் வாழுமிடம் திருப்பேர் நகராகும். அவன் பிரகாசமான மணிகளை
நீரில் அடித்துக்கொண்டு வரும் காவிரியின் தென்பகுதியில் திருப்பேர் நகர் என்னும்
தலத்தில் திருமகளை மார்பில் தரித்துகொண்டுள்ள
அப்பக்குடத்தானாகச் சென்று சயனிக்கின்றான்.
நாட்டில்
வார்த்தை சொல்வதைப் போலே நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேன். அப்படிச் சொன்ன
அளவிலே ச்ரியபதியாய் பரிபூரணனான பகவான் வந்து என் நெஞ்சுக்குள்ளே பூர்ணமாகப்
புகுந்தான். அந்தத் திருமால் சென்று சயனித்தருளின இடம், மிகவும் உயர்ந்த மாணிக்கங்களை
உந்தித் தள்ளுகிற நீரையுடைய காவிரியின் தென்பக்கத்தில் இருக்கும் அழகிய
திருப்பேர்நகர் என்று கூறுகிறார் ஆழ்வார்.
அவனைக் காணும் அந்தப் பாக்கியத்தை ஆழ்வார் பெற்று விட்டார். ஆனால் உலகத்தவர் நிலை என்ன? நம்மவருக்குப் பகவான் குடிகொண்டுள்ள திருத்தலங்களுக்கு செல்லவும்
நேரமில்லை. பகவானின் பெருமைகளைக்
கேட்கவும் அவகாசமில்லை. அற்ப அழியும்
பொருட்களை நாடியே அவன் மனம் அலைகிறது. இறுதியில் இறப்பினைத் தேடும் அவல நிலை
அடைவது அவர்களுக்கு வழக்கமாகியுள்ளது. இந்த உண்மைகளை உணர்த்தவே ஆழ்வார்
திருமாலிருஞ்சோலையை சரண் அடையச் சொல்கிறார்.
திருப்பேர் நகர்
என்ற தலத்தில் உறைகின்ற எம்பெருமான் இன்று என்னுள் புகுந்து இதை விட்டுப்
போகமாட்டேன் என்று என் நெஞ்சில் நிறைந்தான். ஏழு மேகங்களையும், ஏழு கடல்களையும், ஏழு மலைகளையும் கொண்ட இந்த உலகத்தை உண்டும், மனம்
நிறையாத வயிற்றை உடையவன் என் இதயத்தில் அடங்கும்படி பிடித்து வைத்துள்ளேன் என்று
ஆழ்வார் பெருமிதமாக் கூறுகிறார்.
திருப்பேரிலே
நிரந்தரமாக வாழும் ஸர்வேச்வரன் முன்பு குறைவாளனாய் இருந்தாற்போலே இன்று வந்து
போகேன் என்று என் நெஞ்சிலே பரிபூர்ணமாம்படிப் புகுந்தான். மேகங்கள் ஏழையும், சமுத்ரங்கள் ஏழையும், குல பர்வதங்கள் ஏழையும் லோகங்களை எல்லாம் அமுது செய்தும் நிறையாத வயிற்றை
உடையானை என்னுள்ளே எல்லா விதத்திலும் பரிபூர்ணமாய் அனுபவிக்கப் பெற்றேன்.
அடியார்களுக்கு எளியவனான ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடைவது எளிதாகி, அதன் காரணமாக எல்லா துக்கங்களும் விலகப் பெற்றேன் என்கிறார்.
மூவுலகை உண்டு பெருவயிற்றை உடையவன், மூவுலகை அளந்த
திருவிக்கிரமன், பார்த்தனுக்கு விசுவ ரூபத்தைக் காட்டி
திகைக்க வைத்தவன், அசுரர்களுக்குக்
காலனாக விளங்கியவன்
இத்தகையவன் தன்னை எளிமையாக்கிக் கொண்டு ஆழ்வாரின் இதயக் கமலத்தைக் கோவிலாக்கி
அதில் அடங்கியுள்ளான். எனவே நாமும் பகவானிடத்தில் அன்பைப் பொழிந்தால் அவனும் நம்
உள்ளத்திலும் வந்து அமர்வான் என்பது இப்பாசுரப் பொருளாகும்.
எம்பெருமானின்
திருவடிகளைத் துணையாக இறுகப் பிடித்தேன். அதனால் இனி பிறவி என்பதை அழித்துக்
கொண்டேன். பிறவிப்பிணி என்பது எனக்கு இல்லை.
இல்வாழ்வு என்னும் மாயையை அழித்தேன். அதனால் கொடிகள் கட்டிய கோபுரங்களும், மாட மாளிகைகளும் சூழ்ந்த திருப்பேர்
நகரில் பள்ளி கொண்டுள்ளவனின் திருவடிகளைச் சேர்வது எனக்கு எளிதாகி விட்டது. அடுத்த பிறவி இல்லை என்ற பாக்கியம்
ஆழ்வாருக்குக் கிடைத்து விட்டது. ஆனால் உலகத்தவர் சிற்றின்பம், ஆணவம், சுயநலம், பொறாமை என்ற பேய்களைப் பிடித்துக்
கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இவை அருவருக்கத் தக்க காட்சிகளை நம் கண் முன்னே
கொண்டு வருகின்றது. பகவானை இறுகப்
பற்றாததனால் இத்தகைய துன்பத்தில்
கிடக்கிறார்கள். திடசித்தம், வைராக்கியம், உண்மையான அன்பு இல்லாமல் கடவுளைத் தொழுவது வாழ்க்கையின் விரயமாகும். இதனை
உணர்த்தி பகவான் மீது அன்பு கொள்ளுமாறு ஆழ்வார் தெரிவிக்கிறார்.
கொடிகளையுடைய
கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேரை இருப்பிடமாக உடைய சுலபனான
எம்பெருமானின் திருவடிகளை அடைவது எனக்கு எளிதான பின்பு அவற்றைப் பெற்றேன். அதன்
காரணமாகப் பிறவித் தொடர்பை அறுத்தேன். அதனால் வரும் துக்கங்களைச் சேரேன்.
ஸம்ஸாரத்தில் நிற்கையாகிற அஞ்ஞானத்தைப் போக்கினேன். எனக்குப் பரமபதத்தைக்
கொடுப்பதாக இருந்தான். அதனாலே என் கண்ணும் நெஞ்சும் களிக்கும்படி ஆனந்தித்தேன்
என்கிறார்.
எளிதாயினவாறென்று எங்கண்கள் களிப்ப
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளிதாவிய சோலைகள்சூழ் திருப்பேரான்
தெளிதாகிய சேண்விசும்பு தருவானே. 3747
கிளிகள் தாவிக்
குதிக்கின்ற தோட்டங்கள் நிறைந்த திருப்பேர் நகரில் எழுந்தருளியுள்ள எம்பெருமான், தெளிவான, பெருமை
வாய்ந்த பரமபதத்தை எனக்குத் தரவிருக்கிறான். இது எப்படி இத்தனை சுலபமாகச்
சாத்தியமாயிற்று என்று என் கண்கள் மகிழும்படி அவனைத் தரிசிக்கின்றேன்!
மகிழ்ச்சியான சிந்தனைகளோடு ஆனந்தமாய்
அவனைப் பாடி மகிழ்கிறேன்! என்கிறார் ஆழ்வார்.
“கிளி
தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவான்” என்ற பின்னடிகளை முன்னம் யோசித்துக்
கொள்வது, முன்னோர்
மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்கள் கிளியோடொக்கச்
சொல்லப்படுவர்கள். அத்தகைய ஸத்புருஷர்கள் வாழுமிடமான
திருப்பேர்நகரில் உறையும் பெருமான் இருள் தருமா ஞாலம்போலன்றியே எப்போதும் தெளிவையே
பண்ணக் கடவதான திருநாட்டை எனக்குத் தருவதாகத் துணிந்திருந்தான்; துர்லபமான விஷயம் நமக்கு இங்ஙனே எளிதானபடி என்னே! என்று, முன்பு விடாய்த்திருந்த எனது கண்கள் களித்தன; சிந்தையும்
களித்தது என்றாராயிற்று.
இப்பாசுரத்தால் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கும் பகவானை நாம்
எத்தகைய நெருக்கத்தில் இருக்கிறோம் என்று
நம்மால் உணர முடிகின்றது. ஆழ்வார் பக்தி கலந்த பாசுரங்கள்மூலம் அன்பைப் பொழிவதால்
எம்பெருமான் அவரை ஆட்கொண்டு விட்டான். ஆனால் உலக மக்களாகிய நாம் எத்தகைய நிலையில்
உள்ளோம் என்பதை நினைத்துப் பார்த்தல் வேண்டும். பகவானை நோக்கி ஒரு அடிகூட வைக்காத
அவல நிலையில் நாம் இருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும் என்று ஆழ்வார் நமக்குத்
தெரிவிக்கின்றார்.
வண்டுகள் நிறைந்த
சோலைகள் சூழ்ந்த திருப்பேர் நகரில் குடியிருக்கும் பகவான் எனக்காகப் பரமபதத்தைத்
முடிவு செய்து அதனால் சதையிலான என் சரீரத்தில் புகுந்து, என்னோடு ஒட்டிக் கொண்டான். அதனால்
எனக்குத் தடுமாற்றத்தைக் கொடுக்கும் பாவ, புண்ணிய வினைகளை
என்னிடமிருந்து அகற்றினான் என்றவாறு இப்பாசுரம் அமைந்துள்ளது.
வண்டுகள் நிறைந்த
பொழிலையுடைத்தாய் அழகியதான திருப்பேர் நகரிலே எழுந்தருளி இருப்பவன், எனக்குப் பரமபதத்தையே தருவதாக எண்ணி,
என்னோடு சேர்ந்து சபதம் செய்து மாம்ஸம் நிறைந்த கூடான இந்தச்
சரீரத்துக்குள்ளே இன்று தானே வந்து புகுந்து, அவனைப்
பிரிந்து நாம் தடுமாறுவதற்குக் காரணமான புண்ய பாபங்களைப் போக்கினான். மற்றை
உகந்தருளின (எம்பெருமான் ஆசைப்பட்டு வாழும்) தேசங்களைவிட என் நெஞ்சில் அதிகம் ஆசை
கொண்டு இங்கே புகுந்து அவன் அனுபவிக்க அதைக் கண்டு ஆனந்திதேன் என்கிறார்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் பகவானை வேண்டும்போது தனக்கு பாவம், புண்ணியம் இரண்டும் வேண்டாம் என்கிறார். புண்ணியம் பெற்றால் சொர்க்கத்தில்
சுகபோக வாழ்வு பெறலாம். ஆனால் போக வாழ்வு
முடிந்தவுடன் அவர்கள் மீண்டும் நிலவுலகில் பிறப்பார்கள். எனவே பிறவிப்பயன் தமக்கு
முழுவதும் வேண்டாம் என்ற நிலையில் பாவ, புண்ணியம் இரண்டையும்
நீக்கி என்னைப் புனிதனாக்கினான் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
திருப்பேர்
நகரில் பள்ளி கொண்டவனும், திருமாலிருஞ்சோலையில் உறைகின்றவனுமான எம்பிரான், ‘இன்று
என்பால் வந்து எழுந்தருளி’ என்று என் நெஞ்சு நிறையும்படி புகுந்து கொண்டான்.
அப்பக்குடத்தானின் விருப்பத்தைப் பெற்றதால் அமிர்தம் உண்டதுபோல் ஆனந்தம்
அடைந்தேன்’’ என்கிறார் ஆழ்வார்.
என்னை
அடைவதற்காகத் திருப்பேர் நகரிலேயும் பின்பு இன்னும் அருகில் உள்ள திருமாலிருஞ்சோலை
மலையிலும் நிரந்தரமாக வாழும் மஹோபகாரகன் இன்று தானே வந்து “இங்கேயே இருப்பேன்”
என்று எண்ணி என் நெஞ்சு நிறையும்படிப் புகுந்தான். அவனுடைய பெரிய ஆசையைப் பெற்று
குணானுபவம் என்னும் அமுதத்தைப் பருகி ஆனந்தித்தேன். இப்படி என் நெஞ்சில்
நிரந்தரமாக இருப்பவனை அனுபவித்துக் களிக்கிற எனக்கு என்ன குறை உண்டு என்கிறார்.
எம்பெருமானுக்கு கோயில்களாகப் பல இடங்கள் இருக்க, ஓரிடமும்
இல்லாதது போல் என்னுள் புகுந்தான். நாம்
வாழ்கின்ற இவ்வுலகம் என்பது வேறு, இறைவன் நம்முள் புகுந்து
கொள்ளும்போது நாம் அடையும் ஆனந்த உலகம் என்பது வேறு. இதனை அனுபவித்து
உணர்ந்தால்தான் புரியும். பகவான் நம்முள் புகுந்தால் நம்மிடம் இருக்கும் தீய
குணங்கள் எதுவும் இல்லாத நிலையை நாம் அடைவோம். தூய்மை வந்தால் வலிமை வரும்,
நம்பிக்கை வரும். அமுதம் உண்ட மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
ஆழ்வாருக்குக் கிடைத்த அந்தப் பாக்கியம் நமக்கும் கிடைக்க அந்த உயர் நிலையை நாம்
அடைய வேண்டும் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
வண்டுகள் தேனை
உண்டு களிக்கும் சோலைக்குள் சூழ்ந்த திருப்பேர் நகரில் சயனித்திருக்கும்
எம்பெருமான் அப்பக்குடத்தானைத் தரிசித்து மகிழ்ந்தேன். ஆனால் அவன் என் கண்ணுக்கு இலக்காகி விட்டுப்
பிரியாமல் நின்றேன்! இவ்விதம் அவனை
அனுபவித்துக் களித்துக் கொண்டிருக்கும்போது தேவலோகம் செல்லும் நினைவுகள் எனக்கு
வருமா? சரம ஸ்லோக நம:
என்ற சொல்லில் அவன் நாமங்களைப் பாடும் பாக்கியங்களைப் பெற்றதே போதும் என்ற
பொருளில் அமைந்துள்ளது.
வண்டுகள்
களிக்கும் பொழில் சூழ்ந்த திருப்பேர்நகரான் தன்னை எப்பொழுதும் கண்டு
அனுபவிக்கும்படி என் கண்ணுக்குள்ளே நின்று போகாமல் இருக்கிறான். இப்படி அனுபவித்து
ஆனந்தித்த எனக்கு மேலே பரமபதத்திலே போய் அனுபவிக்க என்ன குறை இருந்தது? அதிகமான தொண்டு மேலெழுந்து முடிவிலே
தொழுகைக்கு வாசகமான “நம:’’ என்னும் வார்த்தையைச் சொன்னேன். எல்லா விதத்திலும்
மிகவும் இனியவனாகக் கொண்டு என் நெஞ்சிலே த்ருடமாகப் புகுந்தான் என்கிறார்.
இம்மண்ணுலகில் தேவலோகம் காணலாம். காண முடியும். காண வேண்டும் என்ற
திருவுளத்திலேயே பகவான் தலங்கள் தோறும் அர்ச்சாவதாரமாகத் தோன்றுகிறார். ஆகவே இறைத்
தலங்களுக்குச் சென்று அவனைச் சேவித்து அவனது அன்பைப் பெறுவதே பேரின்பமாகும் என்பது
இப்பாசுரக் கருத்தாகும்.
பகவான் என்
விழிகளை விட்டு அகலாமல் நிற்கின்றான். நினைத்துப் பார்த்தால் அவனை உலகை
அளந்தவன். அணுவாக எல்லா இடத்திலும்
வியாபித்துள்ளான். ஏழிசைகளில் அனுபவிக்கும் உணர்வாக இருக்கிறான். அழகிய மனிகள்
பொருத்தப்பட்ட மாட மாளிகைகள் நிறைந்த திருப்பேர் நகரில் அவன் கண்
வளர்ந்திருக்கிறான். இன்று அவன் என் மனத்துள் புகுந்து நிறைத்துக்
கொண்டிருக்கிறான் என்பதை உறுதியாகச் சொல்வேன்’ என்கிறார் ஆழ்வார்.
வெளிக்கண்களுக்கு
எப்பொழுதும் அனுபவிக்கும்படி அகலாமல் இருக்கிறான். என்னைப் பரமபதத்தில் கொண்டுபோய்
அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் பெரியவனாய் இருக்கிறான்.
எண்ணிப்பார்க்கில் மிகவும் நுண்ணிய தன்மைகளை உடையவனாய், தானே ஏழ் இசையின் சுவைகளை உடையவனாய்,
பல வர்ணங்களில் உயர்ந்ததான மாணிக்கங்களாலே அமைக்கப்பெற்ற மாடங்கள்
சூழ்ந்த திருப்பேரிலே வாழ்பவன், என் மனதில் நிர்ஹேதுகமாக
(காரணமே இல்லாமல்) இன்று த்ருடமாம்படிப் புகுந்தான். “இன்று காரணமே இல்லாமல்
எனக்கு நன்மை செய்தவன் முன்பு என்னைக் கைவிட்டிருந்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்கவேண்டியிருந்தது என்கிறார்.
மனம்தான் நம் அத்தனை செயல்களுக்கும் மூல காரணமாக விளங்குகிறது. இந்த
மனத்தை நமது சேவகர்களாக ஆக்கிக் கொண்டால் நமக்குத் துன்பங்கள் வருவது நின்று
போகும். இந்த மனமானது நம்மை அழியும் பொருட்களில் மயங்கச் செய்கின்றது. இதனை உணராமல் மனதிற்கு விரோதமான காரியங்களில்
ஈடுபட்டு துன்புறுகிறோம். இம்மனத்தைக் கட்டுப்படுத்தும் கணத்திலேயே பகவான் நம்
மனத்தில் குடிகொள்வான் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
பல காலமாகக்
கவனிக்கப்படாமல் இருந்த என்னை ஒரு பொருட்டாகக் கருதி என் மனதில் வந்து நிறைந்து
கொண்டான். இன்று இப்படி கருணை செய்தவன்
அன்று என்னை ஐம்புலன்களில் திரியும்படி செய்தது எதற்காக? மலைபோல் திகழும் மாட மாளிகைகள் சூழ்ந்த திருப்பேரையில் சயனித்திருக்கும்
பகவான் இதற்கு ஒரு தகுந்த காரணத்தைக் கூறியருள வேண்டும் என்று புரிய வைக்கப்
போகிறேன்.
தீவினைகள் மீதம் இருக்கும்வரை ஐம்புலன்கள் நம்மிடம் கட்டுப் படாமல்
நமக்குத் துன்பத்தைத் தந்தவண்ணம் இருக்கும். புண்ணிய காரியங்கள் செய்து தீவினைகளை
முதலில் அழிக்க வேண்டும். நல்ல
மனிதர்களின் நட்பு, நல்ல எண்ணங்கள், நல்ல
செயல்கள், போன்றவற்றில் ஈடுபட்டு வந்தால் அதன் பிறகு எல்லா
நல்ல நிலைகளும் நமக்குக் கூடி வரும் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
‘என் தந்தையே!
மகிழ்வோடு திருவாய்மொழி பாடும் கைங்கர்யத்தை
செய்து உனது திருவடியை அடையும் பேற்றினைப் பெற்றேன். இனிமேல் நான்
விரும்புவது உன் அடியவனாக இருப்பதுதான். குருவின் மூலமாக வேதம் படித்த வைஷ்ணவ
வித்தகர்கள் வாழும் திருப்பேர் நகரில் அருள் புரியும் பரந்தாமனுக்கு கைங்கர்யம்
செய்யும் தொண்டர்களுக்குத் துன்பம் என்பதே அணுகாது’ என்கிறரார் ஆழ்வார்.
என் முயற்சியாக
எந்த ஒரு காரணமும் இல்லாமல் உன் திருவடிகளை அடைந்தேன். ப்ரீதியால் தூண்டப்பட்டு
வாசிகமான கைங்கர்யத்தைச் செய்து உன்னுடைய திருவடிகளைப் பெற்றேன். இயற்கையான
பந்துவானவனே! இந்தக் கைங்கர்யமே எனக்கு எப்பொழுதும் வேண்டுவது. ஆசார்யன் மூலமாக
வேதார்த்தங்களைக் கற்று அதை நடத்தவல்லவர்கள் பகவதனுபவத்துடன் வாழும் திருப்பேரிலே
எழுந்தருளியிருக்கும் உனக்காகவே இருக்கும் அடியவர்களுக்குத் துன்பங்கள் தன்னிடையே
நில்லாதே. இத்திருவாய் மொழிக்குப் பலனாகப் பரமபதத்தை ஆள்வதை அருளிச்செய்கிறார்.
திருவாய் மொழி பாசுரங்களைப் பாடியதால் நம்மாழ்வார் இப்பேற்றினைப் பெற்றார்.
இப்பாசுரங்களை மனம் உருகி படித்தாலும் அதே பேறு கிடைக்கும் என்பது இதன்
பொருளாகும். இப்பிரபந்தங்கள் பகவான் நமக்களித்த பொக்கிஷமாகும். ஆழ்வார்களைக்
கருவியாக்கி பெருமான் நமக்காகத் தந்தருளியுள்ளார். இந்த ஞான அமிர்தத்தை அனைவரும் பருகிப் பகவானின்
பேரருளைப் பெற வேண்டும் என்பதே ஆழ்வார்களின் விருப்பமாகும்.
நீண்ட வயல்கள்
சூழ்ந்த திருப்பேர் நகரில் சயனித்திருக்கும் பகவான் மீது நல்லோர்கள் பலர்வாழும்
குருகூரில் தோன்றிய சடகோபர் இயற்றிய தமிழ் சொற்களாலான பிரபந்தப் பாசுரங்களில்
இந்தப் பத்துப் பாமாலைகளையும் தினமும் பக்தியுடன் படிப்பவர்களுக்குத் துன்பங்கள்
தொலைந்து போகும். மேலும் வைகுண்டத்தை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்ற பொருளில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
துக்கத்துக்கு
இடமில்லாத தேசமாய் பெரிய பரப்பை உடைய வயல்களாலே சூழப்பட்ட திருப்பேர் விஷயமாக
உயர்ந்த மஹான்கள் பலரும் திருவாய்மொழி கேட்டு வாழும் திருநகரிக்குத் தலைவரான
நம்மாழ்வாருடைய சொற்கள் சேர்ந்திருக்கும் ஆயிரம் தமிழ் பாசுரங்களுக்குள் இவை
பத்தையும் கற்க வல்லவரான தொண்டர்கள் தாங்கள் நிர்வாஹகராய் நடத்துவது, பெரியதாகச் சூழ்ந்திருக்கும்
பொன்மயமான பரமபதமே.
இப்பத்து பாசுரங்களும் பகவான் நம் உள்ளத்தில் புகுவதற்கான ஆயத்தங்களை நாம்
செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகின்ற வகையில் அமைந்துள்ளன. மனதில் தீய வண்ணங்கள்
உள்ளவரைப் பகவான் நம்மிடம் நெருங்கமாட்டான். வஞ்சகம், பொறாமை,
சுயநலம், ஆசை போன்ற தீய குணங்களே பகவான்
நம்மிடம் வராமைக்கான காரணமாகும். அவனது சிம்மாசனம் தூய்மையை அடிப்படையாகக்
கொண்டதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக