முன்பு வண்டுகள்
தேன் உண்ணும் மணமுள்ள மலர்களால் ஆன மாலைகளை ஏந்திக் கொண்டு நமது துன்பங்கள் அழிய
வேண்டுமென்று உனது திருப்பாதக் கமலங்களிலே தொண்டர்களும், தேவர்களும் வணங்கினார்கள். பூமியையும், விண்ணையும்
அளந்தவனே! அடியேனை ஆண்டவனே! திருவிண்ணகரில் உறைபவனே! உன்னை நான் வணங்கும் படியான
கருணையை எனக்கருள நினைத்தாயானால் இனி இந்தக் குடும்ப வாழ்க்கை எனக்கு வேண்டாம்
என்று ஆழ்வார் வருந்திக் கூறுகிறார்.
இவ்வுலகமெல்லாம்
பிறர் வசப்பட்டிருக்கையில் தன் திருவடிகளைப் பரப்பி இலச்சினைபட நடந்து அவற்றை
ஆட்படுத்திக் கொண்டது போலவே, அடியேனையும் ஆட்படுத்திக் கொள்ளவேணும். உனது
ஸ்வரூபரூபகுண விபூதிகளையெல்லாம் அடியேன் ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி
அருள்புரிய வேணும். இவ்வளவே அடியேனின் விருப்பம். இப்பாழும்
ஸம்ஸாரத்தில் அடியேனுக்கு இனி வாழ்வு வேண்டாம். திருவிண்ணகரிலே வந்து நித்ய
ஸந்நிதி பண்ணியிருப்பது ஸபலமாகும்படி இத்தனையருள் செய்யவேணும் என்றாராயிற்று.
இல்லற வாழ்வு காரணமாக அற்ப பொருட்களை நாடி ஓட வேண்டியுள்ளது. மனைவி மக்களைக் காத்தல் வேண்டும் எனச்
செல்வத்தை நோக்கித் தங்கள் வாழ்வை வீணடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
அதனால் நம்மைப் படைத்த பெருமானைக் கூட நினைக்க முடியவில்லை. இதனால் பிறப்பு இறப்பு போன்ற துன்பங்களைத்
தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். இத்தகைய சம்சார பந்தம் அறுந்து விட்டால் பற்றற்ற
ஞான நிலை கைகூடும். எனவே எனக்குக் குடும்ப வாழ்வு வேண்டாம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
தனது சக்தியின்
பிரபாவத்தால் பாற்கடலைக் கடைய கயிறாகிய வாசுகி என்ற பாம்பானது விஷத்தைக்
கக்குகிற்று. அதனைச் சிவபெருமான் உண்பதை நீ பார்த்தாய். தேவர்கள் அமிர்தத்தைச்
சாப்பிட, அமிர்தமாக
வெளிப்பட்ட திருமகளை அடைந்த நாராயணா! அடியேனை ஆண்டு கொண்ட ஒப்பில்லாதவனே! உன்னைத்
தரிசிக்கும் பாக்கியத்தை எனக்குத் தர எண்னினால், திருவிண்ணகரில்
எழுந்தருளியவனே! இந்தச் சம்சார வாழ்க்கையிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
உன்னை நான்
வணங்கும்படியான கருணையை எனக்கு அருள நினைத்தால் இனி குடும்ப வாழ்க்கை எனக்கு
வேண்டாம் என்று ஆழ்வார் வேண்டுகிறார். இதனால் அற்ப பொருளை நோக்கி ஓடவேண்டியுள்ளது.
பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதனால் படைத்த பகவானை நினைப்பதற்கு
தோன்றவில்லை. இந்தச் சம்சார பந்தம் அறுந்துவிட்டால் பற்றற்ற ஞான நிலை கைகூடும்
என்று ஆழ்வர் கூறுகிறார்.
உலகத்தவர் மீது கருணை கொண்ட பகவானே! தேவர்களுக்காகப் பாற்கடலைக் கடைந்து
அமிர்தம் அளித்த நீ நஞ்சினைப் போல் துன்பம் விளைவிக்கும் இந்தச் சம்சார சாகரத்தைக்
கடக்க அருள் செய்ய வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுவது நம் அனைவருக்கும்
சேர்த்துதான் என்பதை இப்பாசுரம் மூலம் நாம் அறியலாம்.
கரிய கூந்தலின்
நிறத்தைக் கொண்டவனே! உனது சரீரத்தில் பாதியை ஆக்கிரமிக்கும் நெருப்பின் நிறமுடைய
சிவபெருமான், பகைவரான
அசுரர்களின் முப்புரங்கள் முடியுமாறு பெரிதான மேருமலையை வில்லாக வளைத்து
ஆக்னேயாஸ்த்ரம் விடும்போது அதில் ஆவிர்ப்பித்த வாசுதேவனே! என்னை ஆண்டவனே! உன்னைத்
தரிசிப்பதை எனக்கருள எண்னினால், விண்ணகர் உறைபவனே! இந்தக்
குடும்ப வாழ்வை இனி விரும்பமாட்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இவ்வுலகமெல்லாம்
பிறர் வசப்பட்டிருக்கையில் தன் திருவடிகளைப் பரப்பி இலச்சினைபட நடந்து அவற்றை
ஆட்படுத்திக் கொண்டது போலவே அடியேனையும் ஆட்படுத்திக் கொள்ள வேணும்; உனது ஸ்வரூப ரூபகுண
விபூதிகளையெல்லாம் அடியேன் ஸாக்க்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி. அருள்புரிய
வேணும். இவ்வளவே அடியேன் வேண்டுவது,
இப்பாழும் ஸம்ஸாரத்தில் அடியேனுக்கு இனி வாழ்வுவேண்டாம். திருவிண்ணகரிலே வந்து
நிதய்ஸந்நிதி பண்ணியிருப்பது ஸபலமாகும்படி இத்தனை அருள் செய்யவேணும்
என்றாராயிற்று.
பகவானுக்கு சங்கர நாராயணன் என்ற திருநாமம் உண்டு. ஹரியும் சிவனும் ஒன்று
என்ற தத்துவம் இதன் மூலம் உணரப்படுகிறது. சரிபாதி மேனியராகத் திகழும் கோலம்
இருவரும் ஒருவரே என்ற அடிப்படையில்தான். எனவே பகவானின் பெருமைகளை உணர்ந்தவர்கள்
துன்பங்கள் நிறைந்த குடும்ப வாழ்வை விரும்பமாட்டார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.
பிரளய காலத்தில்
சந்திரனையும், பிரகாசமான
சூரியனையும், உலகங்களையும், அதில் உள்ள உயிர்களையும் உண்டு மிகச்சிறிய வடிவு கொண்ட
குழந்தையாய் ஆனாய். அலை முழங்கும் கடலின் நடுவே ஆலிலையில் கண் வளர்ந்த ஆண்டவனே! உன்னைச் சதா தரிசிக்கும் கருணையை எனக்கு
அருள்வாயானால் விண்ணகரில் குடியிருப்பவனே! சம்சார வாழ்வை இனி விரும்பமாட்டேன்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஊழிக்காலத்தில் எல்லா உலகங்களையும் உண்டு மிகச் சிறிய வடிவு கொண்ட நீ
உன்னைத் தரிசிக்கும் கருணையை அருளினால் சம்சார வாழ்க்கையை நான் விரும்பாத உறுதி
நிலையினை அடைவேன் என்று கூறுகிறார். பகவானின் கருணையின்றி சம்சார வாழ்வை விடுதல்
இயலாது. நாம் குடும்ப வாழ்கை உதறிவிட்டு துறவு கோலம் பூண்டாலும், மனம் அவ்வப்போது சம்சார வாழ்வை நோக்கிப் போகும். எனவே அதை உறுதியாக்கச்
செய்வது இறைவனின் கருணையேயாகும். எனவே அவனின் இசைவு இருந்தால் அத்தகைய வாழ்வையும்
நாம் மேற்கொள்ள முடியும் என்ற கருத்தினை இப்பாசுரம் வெளிப்படுத்துகிறது.
ஏழு கண்டங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகளுக்கும் தலைவனாய், ஊழிக்காலத்தில் இவை அனைத்தையும் திருவயிற்றில் அடக்கியவனே! எல்லா
எழுத்துக்களுக்கும் மூலமான அகரத்தின் பொருளான ஆண்டவனே! உன்னைத் தரிசிக்கும்
பாக்கியத்தை எனக்கு அருள்வாயானால், விண்ணகரத்தில் உறைபவனே!
இந்தச் சம்சார வாழ்வை நான் விட்டு விடுவேன் என்கிறார் ஆழ்வார்.
எல்லா எழுத்துக்களுக்கும் மூலமான அகரத்தின் பொருளாக இருப்பவனே என்று
ஆழ்வார் கூறுகிறார். மனிதனின் முதல்
எழுத்து ‘அ’ என்பதாகும். எந்நாட்டவராக
இருந்தாலும் அவர்கள் அகரத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த அகரத்திற்குப் பொருளாக இருப்பவன் பகவான்.
அவன் உலகமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ளான் என்பது தெரிகிறது. எந்தத் தெய்வத்தை
வணங்கினாலும் அவன் என்னையே வணங்குகிறான் என்று கீதையில் பகவான் அருளியுள்ளார்.
எந்த நாடாக இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும் அவர்கள்
ஓரே பரம்பொருளையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதன் உட்கருத்தாகும். எனவே இவ்வுலகம் ஒரே பரம்பொருளை கொண்டுள்ளது
என்பது அறிய முடிகின்றது. அத்தகைய
நிலையில் உள்ள உனது தரிசனத்தை எனக்குக் காண்பித்தால் இந்தச் சம்சார வாழ்க்கையை
நான் உதறித் தள்ளிவிடுவேன் என்று கூறுகிறார்.
மேகங்கள்
படிந்திருக்கும் சமுத்திரங்களுக்கும், மலைகளுக்கும், உலகங்களுக்கும் தலைவனாகவும், பிரம்மா முதலானவர்களுக்கும் அறிய
முடியாத பெருமை உடையவனாகவும் இருப்பவனே!
நான்கு வேதங்களாகவும் இருக்கும் ஒப்பில்லாத ஆண்டவனே! உன்னைத் தரிசிக்கும்
பேற்றினை எனக்கு அருளினால், விண்ணகரில் கோயில்
கொண்டிருப்பவனே! எனக்கு இந்த இல்லற வாழ்வு வேண்டாம் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
அழியும் உடலல்ல நாம், அழியாத ஆத்மாக்கள் என்று வேதம்
கூறுகிறது. பிறப்பு இறப்பு என்பது நாம் நினைத்து வந்ததல்ல. இறைவனின் சித்தமாகும்.
நாம் பலவற்றை சாதிக்கப் பிறந்துள்ளோம். எவையும் நம்மால் முடியும். கிரகங்களும் நம்
கட்டுப்பாட்டுக்குள் வரும். இயற்கையை
வெல்வதற்காக நாம் மண்ணுலகம் வந்துள்ளோம். எல்லையற்ற வலிமையினை நாம் கொண்டுள்ளோம்.
இது வேதத்தின் வாக்காகும். அச்சம் நம் சுபாவமல்ல. ஆண்மையுடன் எதிர் கொள்ளும்
வீரத்தை நாம் பெற்றுள்ளோம். இதனை நாம் மறந்துள்ளோம். இத்தகைய மறதி பகவானை
மறந்ததால் வந்தது. எனவே பகவானை நினைத்து அனைத்து சக்திகளையும் நாம் பெறலாம் என்பது
இதன் கருத்தாகும்.
வேதம் கற்ற
வைதிகர்கள் தேவதைகளினால் தங்கள் செல்வம் பெருகி திருப்தியாக வாழ்வதற்காகச் சந்தியா
காலங்களில் உருக்கிய நெய்யினால் அக்னியில் ஹோமம்
செய்கின்றனர். அந்த மந்திரங்களின்
அங்கமான பிரணவத்திற்கும் மூலப் பொருளாகத் திகழ்கின்ற ஆண்டவனே! உன்னைச் சதா
தரிசிக்கும் அருளை எனக்குத் தருவாவேயானால் விண்ணகர் பெருமானே! இந்தச் சம்சார
பந்தத்திலிருந்து என்னை விடுவித்துவிடு என்று ஆழ்வார் பெருமானை வேண்டுகிறார்.
தங்கள்
இல்லங்களில் செல்வமானது பெருகி திருப்தியாக வாழ்வதற்காக வேதம் கற்ற வைதிகர்கள்
தேவதைகளுக்கு உருக்கிய நெய்யினால் அக்னியில் ஹோமம் செய்கின்றனர் அந்த
மந்திரங்களின் அங்கமான பிரணவத்திற்கு மூலப்பொருளான பெருமானே என்னை ஆண்டவனே
எப்போதும் எப்பொழுதும் உன்னைத் தரிசிக்கின்ற பாக்கியத்தை அடியேனுக்கு நீ
அருள்வாயானால் இந்த இல்லற வாழ்க்கையை நான் இப்போதே விட்டு விடுகிறேன்.
ஓம் என்னும் பிரணவ மந்திரத்திலிருந்தே எல்லா மந்திரங்களும் தோன்றின.
பகவான் மந்திர வடிவமாகத் திகழ்கின்றார்.
அதனால்தான் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்பவர்கள் சக்தியினைப் பெற்று பல
சித்திகளைப் பெறுகிறார்கள். எனவே இதனைப் பெறத் தடுக்கும் சம்சார வாழ்வினை வெறுத்து
ஒதுக்கிவிட வேண்டுகிறேன் என்றவாறு பொருள் தருகிறது.
காதல் செய்து இளையவர் கலவிதரும்
வேதனை வினையது
வெருவுதலாம்
ஆதலின் உனதடியணுகுவன் நான்.
போதல ர்நெடுமுடிப்
புண்ணியனே!
ஆண்டாய்!
உனைக்காண்பதோர் அருளெனக் கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே! 1455
இளம்
மங்கையர்களிடம் அன்பு வைத்துக் கூடியதெல்லாம் துன்பத்தைத் தரக்கூடிய அச்சத்தைத்
தருகிறது. ஆதலால் உன் திருவடியைச்
சேவிக்கின்றேன். ஒவ்வொரு காலங்களிலும் மலரும் மலர்களை அணிந்த திருமுடியைக் கொண்ட
தூயவனே! என்னை ஆண்டு கொண்டிருப்பவனே! உன்னைத் தரிசிக்கும் பேற்றை எனக்கு
அருளுவாயானால் இந்தச் சம்சார வாழ்க்கையை நான் உதறி விடுவேன். விண்ணகரில் உறைபவனே!
என்மேல் உனது கருணையைக் காட்டுவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
அழகிய மலர்களால்
அலங்கரிக்கப்பட்ட
நீண்ட முடியையுள்ள
புண்ணியனே! இளம் பெண்கள் காதல் செய்து கொடுக்கும் துக்கரூபமான
கலவிக்கு காரணமான
கர்மமானது எனக்கு
அச்சந்தருவதாக உள்ளது ஆகையினால் உன் திருவடிகளை எனக்கு அருளுவாயாகில் ஸம்ஸார வாழ்க்கையை விரும்பமாட்டேன், திருவிண்ணகரில் இருப்பவனே!
பெண்களின் அன்பு என்பது சலனத்தை ஏற்படுத்தவல்லது. அடிக்கடி மனதை மாற்றிக் கொள்ளும் அவர்களிடம்
வைக்கும் சகவாசம் துன்பத்தைத் தரக்கூடியது. இவை அனைத்தும் சம்சார பந்தத்தால்
வந்தது. முதலில் இன்பத்தைத் தந்து பின்பு
தாங்கொணாத் துன்பத்தைத் தரவல்லது. எனவே பெண் தொடர்பு சிறிதும் வேண்டாம். குடும்பப்
பற்றை உதறி விடுகிறேன். உனது திவ்ய தரிசனம் கலந்த கருணையை நீ எனக்கு அருள வேண்டும்
என்று ஆழ்வார் பகவானை வேண்டுகிறார்.
இறப்பதும் பின்பு
பிறப்பதும் போன்ற சம்சார வாழ்க்கையை விரும்பாமல் உன் திருப்பாதக் கமலங்களைச்
சரணடைகிறேன். ஓதப்பட்டு வரும்
நான்மறைகளாகி சிவபெருமான், பிரம்மா, இந்திரன் ஆகிய மூன்று தேவ வடிவாய் இயங்கும்
ஆண்டவனே! உன்னைத் தரிசிக்கும் அருளை எனக்குத் தருவாயானால் விண்ணகர் வாழ்பவனே! இல்லற வாழ்வை நான் விரும்பாது ஒதுக்குவேன்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
மேற்சொன்ன மூன்று தெய்வங்களுமே பெருமானின் வடிவங்களே! பேதங்களை வளர்த்துச்
சர்ச்சையில் ஈடுபடாமல் பரம்பொருளை தியானித்து வாழ்வின் பயனை நாம் பெற வேண்டும்
என்ற நிலையில் ஆழ்வார் கூறுகிறார். வினைகளின் தொடர்பால் இறப்பு மற்றும் பிறப்பு
வருகிறது. ஆண்டவனின் அருளோடு இவ்வினைகளை ஒதுக்க முயற்சித்தல் வேண்டும். இறைவனிடம் மாறாத அன்பும் பற்றும் வைத்தல்
வேண்டும். அவனிடம் யாசித்தல் அன்பாகாது.
எல்லாவற்றையும் தியாகம் செய்து பற்றினை அறுத்து அவனைச் சரணடைய வேண்டும் என்பது
ஆழ்வாரின் கருத்தாகும்.
மலர்கள்
நிறைந்துள்ள தோட்டங்களால் அலங்கரிக்ககப்பட்ட விண்ணகர் மேல் எல்லோரும் நேசிக்கும்
திருமங்கையாழ்வார் இயற்றிய இத்தமிழ்ப் பாசுரங்களைப் பாடக்கூடியவர்கள், வாமனனாகத் தோன்றிய ஒப்பிலா அப்பன்
திருவடிகளை அடைவார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
மேற்கண்ட பாசுரங்களில் பகவானின் பெருமைகளையும், சம்சாரத்தில்
உழன்று அதில் படும் துன்பங்களையும் களைய வேண்டியதன் அவசியத்தை ஆழ்வார்
வலியுறுத்தியுள்ளார். பிறப்பு இறப்பு என்ற சங்கிலித் தொடரைப் பகவான் ஓருவன்தான்
அறுக்க முடியும். அவனது தரிசனம் என்பது நம்முடைய ஆவல், அன்பு,
தியானம் போன்றவற்றால்தான் கிடைக்கும். நமது மகரிஷிகள் இறை தரிசனம்
பெறுவதற்கு பல வழிகளை அளித்துள்ளார்கள். அதனைச் செயல் வடிவம் ஆக்க வேண்டும். எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காமல் பகவானிடம்
அன்பு செலுத்தி, தியான யோகங்களைப் பயில வேண்டும். இதனைப் பாசுரவழி நமக்கு அளித்துள்ளார் ஆழ்வார்.
மற்றவர்கள்
கூறும் அற்பமான சொற்களை மனதில் பொறுத்துக் கொண்டிருந்தேன். ஐம்புலன்களுக்கும் நான்
கொடுக்க வேண்டிய பொருளான இன்பத்தை அளித்தேன். தமக்கு வேண்டியவர்களிடம் அன்பும், வேண்டாதவர்களிடம் பகையும் கொண்டு
வாழ்ந்து வந்தேன். அவற்றை எல்லாம் இப்போது என் உள்ளத்திலிருந்து அகற்றிவிட்டு
இப்படி இருந்ததற்காக வெறுப்புற்று திருவிண்ணகர் உறைபவனே! உன்னைத் தஞ்சமென
அடைந்திருக்கிறேன் என்று வருந்திப் பாடுகிறார் ஆழ்வார்.
உலக வாழ்வில் விருப்பு வெறுப்புடன் தாம் வாழ்ந்த வாழ்க்கையை எண்னி மனம்
வருந்திப் பாடுகிறார் ஆழ்வார். ஐம்புலன்களுக்கு கொடுக்க வேண்டிய இன்பத்தை
அளித்தேன். வணங்கத் தகாதவர்களிடம் தலை வணங்கினேன். பேசக்கூடாத வார்த்தைகளை இந்த
நாவினால் பேசினேன். பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்தேன். கேட்கக் கூடாத
வார்த்தைகளை இச்செவியினால் கேட்டேன். சேரக்கூடாத சகவாச நுகர்ச்சிகளை எல்லாம் இந்த
மூக்கு நுகர்ந்தது. இத்தகைய வாழ்க்கையை நான் வெறுத்து திருவிண்ணகரத்தில் உறையும்
உன்னைச் சரணடைகிறேன் என்கிறார் ஆழ்வார்.
திருவிண்ணகரத்தில்
கோயில் கொண்டிருப்பவனே! எந்நாளும் தியானிக்க
வேண்டிய உன்னை முன்னர் மறந்திருந்தேன். இவ்வாறு மறந்த அறிவற்ற நிலையில்
மனத்தால் குற்றம் புரிந்த உணர்வில் வருந்தினேன். இதனால் பல்பிறவிகள்
எடுக்கும்படியாகிவிட்டது. மகாலட்சுமியை மார்பில் தரித்தவனே! இப்போது உனது திருவடியைச்
சரணடையத் தகுந்தவனாகி இருக்கிறேன் என்றவாறு ஆழ்வார் கூறுகிறார்.
உலகத்தவரின் அறியாமையை ஆழ்வார் இங்கு உணர்த்துகிறார். இம்மண்ணுலகிற்கு நாம்
வந்தது சுகபோகங்களை அனுபவிப்பதற்கல்ல. பகவானை ஒருமுகமான மனத்தோடு தியானித்து நம்
கர்ம வினைகளை அழிப்பதற்காகத்தான் இப்பறவி எடுத்தோம். மானிடர்கள் அதையே மறந்து
நம்முடைய பிறப்பு இறப்பிற்காகவே வழிவகுக்கிறோம். இத்தொடர் சங்கிலியை உடைக்க
வேண்டுமெனில் சுயநலத்தை விட்டு அனுதினமும் தியானம் செய்தல் வேண்டும். எவருக்கும்
தீங்கிழைக்காத மனத்தினை நாம் பெறவேண்டும்
என்று அறிவுறுத்துகிறார் ஆழ்வார்.
திருவிண்ணகரத்தில்
கோயில் கொண்டிருப்பவனே! எந்நாளும் தியானிக்க
வேண்டிய உன்னை முன்னர் மறந்திருந்தேன். இவ்வாறு மறந்த அறிவற்ற நிலையில்
மனத்தால் குற்றம் புரிந்த உணர்வில் வருந்தினேன். இதனால் பல்பிறவிகள்
எடுக்கும்படியாகிவிட்டது. மகாலட்சுமியை மார்பில் தரித்தவனே! இப்போது உனது
திருவடியைச் சரணடையத் தகுந்தவனாகி இருக்கிறேன் என்றவாறு ஆழ்வார் கூறுகிறார்.
உலகத்தவரின் அறியாமையை ஆழ்வார் இங்கு உணர்த்துகிறார். இம்மண்ணுலகிற்கு
நாம் வந்தது சுகபோகங்களை அனுபவிப்பதற்கல்ல. பகவானை ஒருமுகமான மனத்தோடு தியானித்து
நம் கர்ம வினைகளை அழிப்பதற்காகத்தான் இப்பறவி எடுத்தோம். மானிடர்கள் அதையே மறந்து
நம்முடைய பிறப்பு இறப்பிற்காகவே வழிவகுக்கிறோம். இத்தொடர் சங்கிலியை உடைக்க
வேண்டுமெனில் சுயநலத்தை விட்டு அனுதினமும் தியானம் செய்தல் வேண்டும். எவருக்கும்
தீங்கிழைக்காத மனத்தினை நாம் பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஆழ்வார்.
திருவிண்ணகரில்
எழுந்தருளியிருப்பவனே! பெற்ற பிள்ளைகள், மனைவி முதலானோர் மரண காலத்தில் உதவ மாட்டார்கள் என்பதை நான்
தெரிந்து கொண்டேன். உன் அருளினால் ஐம்புலன்களினால் ஏற்படும் வேதனைகள் தீரும்படி
எறிந்தேன். இப்போது என் உள்ளத்தில் வெறுப்பும், விருப்பும்
இல்லாத வெறுமையினை உணர்ந்து உன் திருவடிகளை அடைய பொருத்தமானவனாக வந்திருக்கிறேன்
என்று ஆழ்வார் கூறுகிறார்.
மலர்களை நாடித்தான் வண்டுகள் செல்கின்றன. அது போன்று நாம்
தகுதியுடையவர்களாக ஆகும்போது பகவான் தானே நம்மை வழிநடத்த வருகிறார். மரண காலத்தில்
நம் மனைவி, மக்கள், உற்றார் உறவினர்
எவரும் நமக்கு உதவ மாட்டார்கள். பகவான் ஒருவரே நமக்கு உற்ற துணை என்பதை நாம் நன்கு
புரிந்து கொள்ள வேண்டும். உலகம் என்பது ஒரு நாடக மேடை நாமெல்லாம் வந்து செல்லும்
பாத்திரங்களாக உள்ளோம். இந்த உண்மையை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்
என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.
இனிமையான
இசைபாடித் தேனை அருந்தும் வண்டுகள் குடியிருக்கும் மலரை அணிந்த கூந்தலையுடைய
மடந்தையர் வாழ்த்திப் பல்லாண்டு பாட, புகழுடைய அரசனாக இருந்து அரசாட்சி செய்தவர்கள் எல்லோரும் மாண்டு போனார்கள்
என்ற வாசகம் தப்பில்லை. திருவிண்ணகரத்தில்
குடிகொண்டிருப்பவனே! இவ்விதமான நிலையற்ற வாழ்வை வெறுத்து உன்னைச் சரணடைகின்றேன்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
பிராக்ருதமான
செல்வம் நிலைநிற்க மாட்டாதாகையாலும், கைங்கரியமாகிற அப்ராக்ருத செல்வமே நிலை நிற்பதாகையாலும் இம்மைச்
செல்வத்தை வெறுத்து மறுமைச் செல்வத்தை விரும்பி உன்னடி பணிந்தேனென்கிறார்.
இவ்வுலகை ஆட்டிப்படைத்த அதிகாரமிக்க அரசர்கள் மாண்டு போகிறார்கள். உலகில் பேரும் புகழும் கொண்டவர்களும் மாண்டு போகிறார்கள். மாட மாளிகையில் வாழ்ந்த செல்வந்தர்களும் மாண்டு போகிறார்கள். உலகில் அவதரித்த மகான்களும், ஞானிகளும் மரித்துக் போகிறார்கள். நீர்குமிழி போன்று தோன்றி மறைகின்ற நிலையற்ற வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். நிலையான உன்னைச் சரண் அடைகிறேன். துன்பமும், சஞ்சலமும் நிறைந்த இந்த வாழ்க்கையை வெறுத்து பகவானிடம் சரண் புகுவதே விவேகம் என்று ஆழ்வார் கூறுகிறார்.
நல்லவிதமான
நெறிகளைக் கற்காத எனது ஐம்புலன்களை அதன் விருப்பப்படி செய்ய விடமாட்டேன்.
மல்யுத்தத்தில் சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்கள் மாளுமாறு அவர்களது வலிமையை அழித்த மற்போரில்
வல்ல கண்ணபிரானே! செல்வத்தினால் அழகு மிக்க மதில்களால் சூழப்பட்டு சுற்றிலும்
அகழியால் கோட்டையையுடைய இலங்கையை அழித்த கோதண்டபானியே! திருவிண்ணகரத்தில்
எழுந்தருளி இருப்பவனே! உன்னைச் சரணடைகின்றேன் என்று பொருள்பட பாடுகிறார் ஆழ்வார்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற ஐம்புலன்கள்தான் நம்மைக்
கீழ்நோக்கி தள்ளுகின்றன. பகவானின் பிள்ளைகளாகிய நம்மைக் கீழ் நிலைக்கு எடுத்துச்
செல்கின்றன. இதை நாம் மறந்து திரிகின்றோம். ஐம்புலன்களை அதன் விருப்பப்படி
செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினால்தான் நம்முடைய உண்மையான வலிமையை நாம் அறிய
முடியும். பகவானை அடைவதற்கு வேண்டிய பணிகளைச் செய்ய இந்த ஐம்புலன்களைக்
கட்டுப்படுத்தி பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
திருவிண்ணகரில்
உறைபவனே! அடியேன் வேறுவிதமாக உன்னை வேண்டுகிறேன். சினம் இல்லாமல் மனதில் இருத்திக்
கொள்ள வேண்டும். கொடுமையான நரகத்தில் என்னைத் தள்ள நினைத்து எனது ஐம்புலன்களும்
செயல்படுகின்றன. அவை குடியிருக்க நீ உடன்பட்ட போதிலும் அவற்றை நம்பாமல் உன்னைச்
சரணடைந்தேன் என்று பெருமானை வேண்டுகிறார் ஆழ்வார்.
உலகத்தில்
வேண்டுகோள் இரண்டு வகைப்படும். வேண்டினவுடனே பெறவேண்டிய நிர்ப்பந்தமின்றிக் காலக்கிரமத்தில்
பெறலாம்படியான பொருள்களைப் பற்றின வேண்டுகோள் ஒன்று; வேண்டினவுடனே
கிடைத்தாலன்றி உயிர்தரிக்க முடியாமல் அப்போதே பெறவேண்டின பொருளைப்பற்றின
வேண்டுகோள், மற்றொன்று இவ்விரண்டு வகையான வேண்டுகோளில்
இரண்டாவது வகையான வேண்டுகோளை இப்போது அடியேன் செய்கின்றேன் என்கிறார்.
நமது பகைவர்கள் இந்த ஐம்புலன்கள்தான். அவைகள் நமக்குள்ளே இருந்து நம்மை
ஆட்டுவிக்கின்றன. அதன் விருப்பத்தின்படி நடந்தால் பல ஆபத்துக்களை நாம் எதிர்கொள்ள
வேண்டிவரும். பல அவமானங்களைச் சுமுக்க வேண்டிவரும். இந்த இழிவுகளை வெளிப்பகை
செய்வதில்லை. உள்ளில் இருப்பவையே செய்கின்றன. இப்புலன்களை நம் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வரும் வலிமை நமக்கு உள்ளது.
பகவானின் துணை கொண்டு புலன்களை அடக்க வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
நெருப்பினை
உமிழும் கொடிய பாவங்கள் நல்லவர்போல் என்னோடு பிரியாமல் கலந்து நின்று கொடிய
நரகத்தில் என்னைத் தள்ள முயன்று வேகமாகச் செயல்படுகின்றன. முதுமையற்ற தேவாதி தேவா, சந்திரனின் வியாதியை நீக்கிய
திருவரங்கத் திருவிண்ணகரில் எழுந்தருளியிருப்பவனே! உன்னைத் தஞ்சமடைந்தேன் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
எம்பெருமான்
சந்திரனுடைய துயரைத் தீர்த்ததாக ஆழ்வார்கள் பலவிடங்களிலும் அநுசந்திக்க
காண்கிறோம். இவ்வரலாற்றின் விவரணம் இதிகாச புராணங்களில் நமது சிற்றறிவிற்கு
புலப்படவில்லை, தக்க
முனிவனது சாபத்தால் ஷ்யமடைந்து வந்து சரணம் புகுந்த சந்திரனை சிவபிரான்
காத்ததாக வரலாறு காண்துண்டு; ப்ரயோஜ்ய கர்த்தாவாகச்
சிவபிரானது செயலை ப்ரயோஜசக கர்த்தாவான திருமால் மேல் ஏற்றிக் கூறியிருப்பதாகக்
கொள்வர்.
கொடிய பாவங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து என்னை விட்டுப் பிரியாமல்
கொடிய நரகத்தில் தள்ள வேகமாக முயற்சிக்கின்றன. உடனிருந்தே கொல்லும் வியாதிபோலச்
சகுனி துரியோதனனைக் கெடுத்தான். பாண்டவர்களுக்குத் தாங்கொணாத் துயரத்தை அளித்தது
சகுனிதான். அது போன்று நம்முள் இருக்கும் உட்பகை நம்மைத் துயரத்தில்
ஆழ்த்திவிடும். சுயநலமாக நம்மை மாற்றிவிடும். துரோகத்தைச் செய்து நம்மைப்
படுகுழியில் தள்ளிவிடும். இதனை அகற்றி பகவானை சரணடைய வேண்டும் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
அழகிய மலர்ந்த
தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்ட மகாலட்சுமிக்கும், பூமிபிராட்டிக்கும், சிறந்த
வானவர்களுக்கும் விருப்பமானவனே! குறையற்ற செங்கோல் பிடிப்பவராய் வெண்கொற்றக்
குடையை உடைய துரியோதனனிடம் தூது சென்றவனே!
தூய்மையாகப் பேசுபவனே!
ஒளிபொருந்திய விளக்கின் சுடராக என் நெஞ்சில் குடியிருக்கும் வேத வடிவானவனே!
திருவிண்ணகரில் கோயில் கொண்டுள்ளவனே! உன்னைச் சரண் அடைகிறேன் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
பிராட்டிமாரும்
நித்யசூரிகளும் புருஷகாரமாகச் சரணம் புகுகிறார். இதில் போகார் தாமரையாள் ‘தன்கோதா!, புலவிதன் கோதா!, குலவானவர்தம் கோதா! என்று யோசிக்கலாம் செவ்வித் தாமரைப்பூவை இருப்பிடமாக
உடையளான ஸ்ரீமஹாலஷ்மிக்கு அன்பனே! நி்த்யசூரிகட்கு அன்பனே! என்கிறார். பிராட்டியை
பிரணயவசத்தால் பிரிந்திருக்கும் காலத்தில் அப்பிரிவினாலுண்டான ஊடலைத் தீர்த்துத்
தேறுதல் செய்விக்கும் நி்த்யசூரிகளுக்கு அன்பனே! என்கிறார்.
பெருமானிடம் இரு தேவிகளும் மிகவும் அன்பு கொண்டவர்களாக உள்ளார்கள்.
வானவர்கள் அனைவரும் பெருமானிடம் பேரன்பு கொண்டு அவரைத் துதித்து வருகிறார்கள்.
எல்லா உலங்களுக்கும் தலைவராக இருந்தும் துரியோதனனிடம் தூது சென்றார். இவை
அனைத்தும் பாண்டவர்கள்மீது வைத்துள்ள அன்பின் காரணமாகத்தான் என்று சொல்லலாம்.
மேலும் பாரதப் போரிலும் பாண்டவர்களுக்குப் பலமாக இருந்தார். இத்தகைய பெருமானிடம்
நான் சரண் புகுந்தேன் என்று பாடுகிறார் ஆழ்வார்.
தேன் நிறைந்த
மலர்களைக் கொண்ட மலர்வனங்களை உடைய, சூழப்பட்ட திருவிண்ணகரத்தில் குடிகொண்டிருக்கும் பகவானைக் குறித்து,
பகைவரின் வேதத்தில் பாயும் வேதாயுதத்தையுடைய திருமங்கை மன்னன்,
கலியன் என்ற திருமங்கை மன்னன் இயற்றிய இத்தமிழ்ப் பாசுரங்களைப் பாட
வல்லவர்கள் மன்னராய் வாழ்ந்தபின்னர் தேவர்களுடைய கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட
வைகுண்டத்தைச் சேர்வார்கள் என்கிறார் ஆழ்வார்.
தேன்நிறைந்த
அழகிய வண்ணமயமான பூக்களையுடைய பசுஞ்சோலைகள் நிறைந்த திருவிண்ணகர்
பெருமானைக் குறித்து
வானைத் தொட்டிருக்கும் வலிய மதிள்களைக் கொண்ட, காவிரி நதிபாயும்
வயல்களையுடைய திருமங்கைத் தலைவனான கலியன், பகைவருடைய உடலில் புகும்படியான வேற்படையையுடைய திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த தமிழ்ப் பாசுரங்களை ஓத வல்லார்கள்
ஸ்வாமியாய் தேவர்களிருக்கும் கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட வைகுண்ட மாநகரத்தை அடைவார்கள்.
திருமங்கை மன்னன் தமது பாசுரங்களால் பகவானின் பெருமைகளையும் பதிய
வைத்ததோடு, வையகத்தில் வாழ்வோருக்கும் நல்வழி
காட்டியுள்ளார். பாண்டவர்களுக்குத் தூது சென்றது, ஐம்புலன்களை
அடக்குவது, வானவர்களைக் காத்தது, உடனிருந்தே
கொல்லும் வியாதியை அகற்றுவது போன்றவைகளை தெளிவாகத் தெரிவித்துள்ளார். எனவே நம்முள்
இருக்கும் ஆத்ம ஜோதியைக் காண நாம் பகவானிடம் சரண் புகுதல் வேண்டும் என்ற கருத்தினை
பல கோணங்களில் நமக்குப் புரியுமாறு ஆழ்வார் தெரிவித்துள்ளார்.
திருவிண்ணகரத்துப்
பெருமானே! உன்னை உணர்ந்ததனால் உண்டான பேரின்பத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன். உன்
எழிலுருவம் என் நெஞ்சில் பதிந்துள்ளது. ஒரு விநாடியும் அதை என்னால் மறக்க
முடியவில்லை. அதனால்தான் இனி உலகத்தில் பிறந்து சம்சாரத்தில் உழல விரும்பவில்லை.
அவ்விதம் செய்தால் உன்னை மறக்க வேண்டிவரும்.
அது இனி என்னால் முடியாது. இனி பிறாவாப் பேறு பெறுவது உனது கருணையினால்தான்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
சிற்றின்பங்களை நான் துறப்பேனேயன்றி,
தேவரீருடைய அனுபவமாகிற பேரின்பத்தை
ஒருநாளும் இழக்கமாட்டேன்; தேவரீருடைய
வடிவழகு என்னால் மறக்க முடியுமாகிலன்றோ இன்பத்தை நான் துறந்தவனாவேன். வடிவழகை மறவாதவனாகையாலே இனபத்தைத் துறவாதவனாயினேன். இப்படிப்பட்ட நான் இனிமேலும் இவ்விருள் தருமாஞாலத்தில் பிறந்து பிறந்து
கஷ்டங்கள்பட நினைப்பேனோ? “மறந்தேனுன்னை
முன்னம்” என்று கீழ்நாட்களில் தேவரீரை மறந்திருந்தேனாகிலும் இனிமேலுள்ள காலம்
மறவாதேயிருக்கப் பார்த்திருப்பவனாதலால் அடியேன் பிறவித்துயர் நீக்கி நித்யானந்தம்
அநுபவிக்கவே உரியேனாயினேன் என்றாராயிற்று.
இறைவனை உணர்ந்ததனால் உண்டான பேரின்பத்தை ஆழ்வார் வருனிக்கின்றார். நாம் இவ்வுலகில்
இன்பங்கள் என்று கருதுவது சிற்றின்பத்தைத்தான்.
சிற்றின்பத்திற்கே இத்தகைய வலிமை
என்றால் பேரின்பத்தின் வலிமை எத்தகையதாக இருக்கும். அதைப் பெற்றவர்கள் ஒரு போதும் சிற்றினபத்தை நாட
மாட்டார்கள். எனவே அனைவரும் பகவானை உணரும்
முயற்சியில் ஈடுபடுங்கள் என்று கூறுகிறார்.
திருவிண்ணகரில்
எழுந்தருளியுள்ள திருமாலே! உலகத்தவரோடு உறவு, அன்பு, விரோதம் அனைத்தையும் துறந்தேன்.
அவ்விதம் துறந்த காரணத்தினால் உன் திருப்பாதக் கமலங்களுக்கும் தொண்டு செய்ய
உரியவன் ஆனேன். உன்னை என் மனத்தினுள் தவறாமல் தரித்துக் கொண்டேன். தர்மவான் போல்
திரிகின்ற நீ இதை அறிவாயா என்று ஆழ்வார் வினா எழுப்புகிறார்.
உறவு, அன்பு ஆகியவை பெற்றோர், மனைவி
மக்கள் உறவுகள் ஆகியோரிடம் மீது நாம் வைக்கும் பற்றாகும். இத்தகைய பற்று இருக்கும்
வரை நாம் பகவானிடம் நெருங்க முடியாது. குழந்தை விளையாட்டுப் பொம்மைமீது தற்காலிக
அன்பு வைத்துத் தாயைப் பார்த்தவுடன் பொம்மையை எரிந்து விடும். அது போன்ற
நிலையில்லா உறவுகளின் மீது நாட்டம் செலுத்திக் கொண்டிருக்கும் வரை பகவான் பாரா
முகமாகவே இருப்பார். எல்லாவற்றையும் துறந்து விட்டுப் பகவானே! நீயே கதி என்று சரண்
புகும்போது அவர் நமக்கு அருள் புரிவார் என்பது இதன் கருத்தாகும்.
நீர்வளம் கொண்ட
திருவிண்ணகரில் குடி கொண்டிருக்கும் பெருமானே! திருநறையூரில் தேன் போன்று
இனிப்பபவனே! திருக்குறுங்குடியில் வந்து கலந்து கொள்ள நிற்பவனே! சந்திரன் போன்ற
முகத்தில் மானைப் போன்ற கண்கள் என்னை அம்பெனத் தாக்குவதால் பயந்து நடுங்கி ஓடி
வந்து தலைவா! உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாயாக என்ற பொருளில் ஆழ்வார்
பாடுகிறார்.
நங்கையரின் கண் பார்வை அம்புபோல் என்னைத் தாக்குவதால் உன்னைச் சரண்
அடைகிறேன் என்கிறார். பெண்களின்
மோகத்தினால் பல மன்னர்கள் நாடுகளை இழந்துள்ளார்கள். முனிவர்கள் நிலை
குலைந்துள்ளார்கள். நமது மக்களும் இதனால் தங்களது இலட்சியங்களை மறந்து தவறான
பாதையில் சென்று துன்பங்களை அனுபவிக்கிறார்கள். பெண் மோகம் என்பது ஒருவரை
செயலிழக்கச் செய்யும். எனவே சிற்றின்பத்தை விட்டு ஆன்மிகத்தில் ஈடுபடுமாறு ஆழ்வார்
தெளிவிக்கிறார்.
திருவிண்ணகரத்தானே! சந்தனக் கலவையால் பூசப்பட்ட மெல்லிய தனங்களைக்
கொண்ட மங்கையரின் பருத்த தோள்களோடு அணைவதால் ஏற்படும் இன்ப வெள்ளத்தில் மூழ்கிக்
கிடக்கிறேன். அதனால் கொடிய சம்சார நரகத்தில் அழுந்திக் கிடக்கிறேன். புண்ணியனே!
உனது திருவடித் தாமரைகளைப் பற்றியதால் என் பாவங்கள் அனைத்தும் தொலைந்தன என்று
கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் பெண் மோகத்தால் ஏற்படும் துன்பத்தை எண்ணி மனம் வருந்திப்
பாடுகிறார். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவைதான் நம்
முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளன. பெண்ணாசையால் காமம் கூடுகிறது. அதனை அறிவால்
அடக்குவதே விவேகமானது. அது பகவானின் பாதங்களில் சரண் புகுந்தால் மட்டுமே
சாத்தியமாகும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.
நமக்காக ஆழ்வார் அனைத்தையும்
சுமந்து கொண்டு பகவானிடம் மன்றாடி வேண்டுகிறார். எனவே அவருடன் சேர்ந்து
நாமும் பகவானைப் பிரார்த்தித்து நல்வழி பெறுவோமாக.
வற்றாத பெரிய
கடல் சூழ்ந்த இலங்கையில் இராவணனை அழித்த அயோத்தி மன்னனான ராஜாராமனே! திருவிண்ணகரத்தில் உறைபவனே! நான் மற்ற
தெய்வங்களை மனத்திலும் நினைப்பதில்லை. உன்னை என் மனத்தில் இருத்திக் கொள்ளும்
பாக்கியத்தைப் பெற்றேன். அதனால் எனக்குப் பிறவாமை என்ற பயனைப் பெற்றேன் என்று
ஆழ்வார் பாடுகிறார்.
ஒருவராலும்
அழிக்கவொண்ணாத அரணையுடைத்தான இலங்கையை நீறுபடுத்தி இராவணனையும் வேரோடே
களைந்தொழித்தாற்போலே அடியேனுடைய பிரதிபந்தங்களை எல்லாம் தொலைத்தருளின பெருமானே!
நான் ஆச்ரயிக்கத் தகுந்த தெய்வம் வேறொன்று இருப்பதாக நெஞ்சிலும் நினையேன்; ஸர்வ ஸ்மாத்பரனான உன்னையே நெஞ்சில்
தாங்கிப் பேறு பெற்றேன். என்ன பேறு பெற்றேன் என்றால்
தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதற்கு ஒருகால் காரணமாகக்கூடிய ஜன்மமும் தொலையப் பெற்றேன்;
திருவிண்ணகரிற் கண்ட காட்சியிலே பெற்ற பேறுகாண் இது.
பரம்பொருள் ஒன்றே என்ற தெளிவு நம் எல்லோருக்கும் வர வேண்டும். அவர்கள் ஒரு
தெய்வத்தையே மனத்தில் இருத்திக் கொள்வார்கள். பகவானிடம் நாம் வேண்டும் வரம்
பிறவாமை மட்டும்தான். தேவையற்ற நினைவுகளை
நாம் குப்பையாக மனத்தில் தேக்கியுள்ளோம். நம் மனமானது இறைவன் குடிகொள்ளும்
கோயிலாகும். அத்தகைய இடம் மிகவும்அ சுத்தமாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும்.
சுயநலம், துரோகம், செய்நன்றி மறத்தல்,
தெய்வ நிந்தனை, சிற்றின்பத்தில் பற்று வைத்தல்
போன்றவற்றையெல்லாம் அகற்றி நம் மனத்தை இறைவன் குடிகொள்ளும் கோயிலாக மாற்ற வேண்டும்
என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
மையொண் கருங்கடலும் நிலனும் மணிவரையும்
செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகையுணர்ந்தேன் உண்மையால் இனி
யாதுமற்றோர்
தெய்வம் பிறிதறியேன் திருவிண்ணகரானே! 1473
திருவிண்ணகரில்
குடிகொண்டுள்ள பெருமானே! மைப் போன்ற அழகு மிக்க கருங்கடலும், பூமியும், சிறந்த
நெடிதுயர்ந்த மலைகளும், அழகிய சந்திர சூரியர்களும்
ஆகியவையாய் வியாபித்துள்ள உன்னை மனத்தினால் நான் உய்யும்படி உணர்ந்து
கொண்டேன். இது உண்மை! இனி வேறொரு
தெய்வத்தை எண்ண மாட்டேன் என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
திருவிண்ணகர்ப் பெருமானே! ஸப்தஸாகரங்கள், அவற்றால் சூழப்பட்ட பூமி, அதற்கு ஆணியடித்தாற்போலே இருக்கிற குலாசலங்கள், சந்திரன்
ஸூர்யன் முதலிய சுடர்ப்பொருள்கள் ஆகிய இவையெல்லாம் நீயே; உன்
உருவமே இவையெல்லாம் என்று நான் நன்குணரப்பெற்றேனாதலால் ஸர்வசரீரியான உன்னைவிட்டு
உனது சரீரமான தேவதாந்திரங்களைத் தெய்வமாக நெஞ்சில் தான் நினைப்பேனோ? இதுவரையில் நான் அழிந்துபோனது போலல்லாமல் இனி உஜ்ஜீவிக்க
ப்ராப்தனாயினேனாதலால் உன்னைத் தெரிந்து கொண்டேன்.
உலகில் உள்ள அனைத்தும்
பகவானின் உருவமே! இதனை உணராமல் அனைத்தும் வேறு வேறு என்று பிரித்துப் பார்ப்பதால்
நமக்கு அச்சம் வருகிறது. துன்பம் தொடர்கிறது. நம்முள் பிரகாசிக்கும் ஆத்ம ஒளிதான் மற்றொரு
மனிதனிடமும் உள்ளது. அதிலும் பகவான் குடிகொண்டுள்ளார். இந்தத் தத்துவத்தைப்
புரிந்து கொண்டால் மற்றவர்களிடம்
கொண்டுள்ள கோபம், துவேஷம், பொறாமை போன்ற குணங்கள் நம்மை விட்டு
விலகும். எனவேதான் மற்றவருக்குத் தீங்கிழைத்தல் கூடாது என்று பெரியோர்கள்
கூறுகிறார்கள். ஒருமுகப்பட்ட மனத்துடன் நாம் தெய்வத்தைத் தியானம் செய்து இத்தகைய
ஞானத்தைப் பெற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.
திருவிண்ணகரானே!
அடியேன் மேலும் ஒரு கோரிக்கை உங்கள் முன் வைக்கிறேன். அடியேன் விரித்துரைக்கும்படி எண்ணாமல் நான்
சொல்வதன் சாரத்தைப் புரிந்தருள வேண்டும். உன்னைத் தவிர மற்றொரு தெய்வித்தை
வாய்விட்டு அழைக்கமாட்டேன். அவர்களிடம்
மேலான குணங்கள் இருப்பினும் அவரை உள்ளத்தால் நினைக்கவோ, அவரிடம் பற்றிக் கொள்ளவோ மாட்டேன்
என்றவாறு ஆழ்வார் கூறுகிறார்.
மனதை ஒருமுகப் படுத்துவதில்தான் எல்லா வெற்றிகளும் அமைகின்றன. நம்முடைய
மனத்தின் சக்தி சிதறுவதால்தான் பெரும்பாலான தோல்விகளை நாம் சந்திக்கிறோம். தெய்வ
தரிசனத்திற்கும் இது பொருந்தும். ஒரு தெய்வத்தை மனதில் இருத்தி பிரதிஷ்டை செய்து
சதாசர்வ காலமும் பூஜிப்பவர்கள் தெய்வ தரிசனத்தை விரைவில் பெறுவார்கள். சஞ்சல
மனத்துடன் பல தெய்வங்களை வணங்குபவர்கள் ஒரு தெய்வத்தையும் சரியாகக் கிரகித்துக்
கொள்ள முடியாது. ஒரு தெய்வத்திடம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி வைக்கும்போது ஆத்ம
ஒளி பிரகாசிக்கும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.
திருவிண்ணகரத்தானே!
உலர்ந்து தீய்ந்து போன கொடிய பாலைவனத்தின் வலிமையான யானையினால் தள்ளப்பட்டு
கெட்டுப் போன பெரிய மரங்கள்போலச் சம்சார பாலையில் அகப்பட்டுப்
பரிதவிக்கின்றவர்களைத் துணையாக நினையாமல் உன் விஷயத்தில் கனிந்து தெளிந்த புத்தி
வைத்துள்ள எனக்கு வைகுந்த வாசம் கிட்டுவது எப்போது என்று வினவுகிறார் ஆழ்வார்.
தீக்ஷணமான
மருகாந்தாரத்திலே வலிதான ஒரு யானையாலே தள்ளப்பட்டு உருமாய்ந்து போகிற பெரிய
மரங்கள் போலே இவ்வுலகில் எத்தனையோ பலசாலிகள் கருமங்களாலே முடிக்கப்பட்டு
முடிந்து போகிறார்கள் ஆதலால் இப்படிப்பட்ட ஸம்ஸாரத்தை ஒரு பொருளாக மதியாமல் பரம
தயாளுவான தேவரீர் பக்கலிலே நெஞ்சை செலுத்தியிருக்கும் அடியேனுக்குப் பரமபதம் கிடைக்கும் நாள்
எதுவோ? அந்நாளை
அருளிச்செய்ய வேணும் திருவிண்ணகரப்பனே! என்று கூறுகிறார்.
சம்சார சாகரத்தில் பற்றி இருப்பவர்கள் பொன், பொருள்களுக்காக
அடிமை வேலை செய்கிறார்கள். அது கிடைக்காமல் போகும்போது குறுக்கு வழிகளில் அவைகளைப்
பெற முயற்சிக்கிறார்கள். வஞ்சகம் ஏமாற்று வேலை போன்ற வழிகளைப் பின்பற்றுவதால்
மேலும் மேலும் பாவ மூட்டைகளை அவர்கள் சுமக்க நேருகிறது. இம்மண்ணுலகத்தில் யார் பிறப்பினும் இந்தத்
தோஷங்களிலிருந்து தப்பிக்க முடியாது. இந்தச் சம்சார சாகரத்தில் இருப்பவர்களின்
துணையை நான் பற்றாததற்குக் காரணம் இதுவே என்று கூறுகிறார் ஆழ்வார்.
திருவிண்ணகரத்தானே!
குடக்கூத்து ஆடிய கோவிந்தா! மது என்னும் அரக்கனைக் கொன்ற மதுசூதனா! உலகத்து
வழக்கில் இல்லாத அபூர்வமான கீர்த்தியைக் கொண்டவனே! மல்யுத்தம் புரிவதில் வல்லவனே!
மகாலட்சுமியை மார்பில் உடையவனே! உன் பொருட்டு தொண்டனாய் நல்லவனாய்ச் செயல்படும்
அடியேனைப் பாவங்கள் வந்து துன்புறுத்தாதவாறு அருள் புரிய வேண்டும் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
அடியேனுடைய
குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பிராட்டி இணைபிரியாது இருக்கும்போது
அடியேனுக்கு என்னகுறை? திருமாலே!
மிடுக்குடையவனே! மிடுக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடினவனே! பரிபூரணனே!
மதுவைக் கொன்றவனே! கேலாவிலக்ஷணமான புகழையுடைய திருவிண்ணகரப்பனே! சோதிவாய்திறந்து
ஒருவார்த்தையருளிச் செய்யவேணும். தேவரீருக்கே அடிமைப்
பட்டிருக்கையாகிற நன்மையையுடைய அடியேனைக் கருமங்கள் நெருக்காதபடி ஆதரித்தருள
வேணுமென்கிறார்.
தெய்வம் உண்டு என்ற பயத்தின் காரணமாகத்தான் பலர் அதர்மத்தில் இறங்கத்
தயங்குகிறார்கள். தெய்வ பயம் இல்லாமல் போனால் இந்த உலகமே அதர்மத்தில்
மூழ்கிவிடும். தவறிழைத்தால் தெய்வம் தண்டிக்கும் என்ற பயம் பலரிடம் இருப்பதால்தான்
இந்த உலகம் அமைதியுடன் இயங்க முடிகின்றது. உன்னிடம் நான் நல்லவனாகச் செயல்படும்
என்னைக் காப்பாற்றுவாயாக என்று ஆழ்வார் கூறுகிறார்.
அழகிய இதழ்களைக்
கொண்ட தாமரை மலர்களை உடைய பொய்கைகள் சூழ்ந்த குளிர்ந்த சோலைகளையுடைய செல்வம் மிக்க
நீண்ட வீதிகளையுடைய திருவிண்ணகரத்தில் குடி கொண்டிருக்கும் உப்பிலியப்பனைக்
குறித்து கருமேகம் போல் வள்ளல் குணமும் நீண்ட கைகளும் கொண்ட கலியன் இயற்றிய
இப்பாமாலையினை யார் பக்தியுடன் பாடுகிறார்களோ அவர்களிடம் எவ்விதமான துன்பமும்
நெருங்காது என்று ஆழ்வார் கூறுகிறார்.
உன் பொருட்டு நல்லவனாய் வாழும் என்னைக் காக்க வேண்டும். சம்சார சாகரத்தில்
சிக்கியிருப்பவர்களைத் துணையாகக் கொள்ள மாட்டேன். உன்னைத் தவிர வேறொரு தெய்வத்தை
மனத்திலும் நினையேன் என்று பாசுரவழித் தெரிவித்துள்ளார். இத்தகைய பாடல்கள்
அனைத்தும் நம்முடைய மண்ணுலக வாழ்க்கையை முடித்து வைக்கும் அரும்பணியை நமக்கு
நினைவூட்டுகின்றன. அற்ப பொருட்களை ஒதுக்கி ஆண்டவனை மட்டும் நம் மனதில் நினைக்க
வேண்டும் என்ற ஞானத்தை ஆழ்வார் வழங்கியுள்ளார்.
அடியார்களுக்கெல்லாம்
உயிராக இருப்பவனை, களங்கமற்ற
நிலவையொத்த அழகு பொருந்தினவனை, ஆபரணமாலை போன்றவனை, முத்து,
நீலமணி, மாணிக்கம் போன்ற இரத்தினக் குவியல் போன்ற ஜகத்காரண
பூதனுமான பெருமான் இன்று திருமாலிருஞ்சோலையில் வணங்கி, நாளை திருவிண்ணகர் சென்று வணங்குவோம் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
பக்தர்களுக்கு ஆவியாக இருப்பவன் என்பதை இங்கு ’பத்தராவி’ என்று கூறுகிறார்
ஆழ்வார். அடியார்களுக்கு உயிராய் இருப்பவன். சந்திரன் போல் பிரகாசித்திருப்பவன்,
ஆபரண மாலை அணிந்திருப்பவன் என்றெல்லாம் ஆழ்வார் பகவானைப் போற்றிப் பாடுகிறார். ஞானியர்களான
பக்தர்களைத் தனக்கு உயர்நிலையாக இருப்பவன் என்று கீதையிலும் அருளியுள்ளார். மக்கள்
உயிர், உடல் ஆகியவற்றை லௌகிகப்
பொருட்கள் பெறுவதற்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் எம்பெருமான் அவர்களை விட்டு
விலகி இருக்கிறான். ஆனால் அடியார்கள் என்றும் பகவானின் சிந்தனையிலும் கைங்கர்யத்திலும்
ஈடுபட்டிருப்பார்கள். எனவே அவர்களது உயிரில் அவன் கலந்துள்ளான் என்பது இதன்
பொருளாகும். எனவே அடியார்களுக்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் தொண்டாகக்
கருதப்படுகிறது.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
கண்ணனாக அவதரித்த
காலத்தில் நப்பின்னையுடனும், மலர் மகளோடும் அன்புடன் கலந்திருப்பவன். அசுரர்களிடம் இரக்கமின்றி
இருப்பவன் என்றும் உறையும் ஊர் திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட
திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை,
திருக்கோவலூர் முறையே நின்றவனும், அமர்ந்தவனும்,
இருந்தவனும், நடந்தவனுமாக உள்ள எம்பெருமான்
இந்நான்கு நிலைகளில் நீர்மலையில் காட்சி தருகிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இப்பாசுரத்தில் ‘ஆயர் குலக்கொடி’ என்பது நப்பின்னையைக் குறிப்பதாகும்.
‘அணிமாமலர் மங்கை’ என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். அவளின் அம்சமானவளே ருக்மணி
பிராட்டியாகும். மூன்று பிராட்டிகளை அடைய அசுரர்களை அழித்தவனாவான். அரக்க குணம்
கொண்ட துரியோதனனை குருட்சேத்திரத்தில் பகவான் அழித்தார். இராவணனை இலங்கை போரில்
அழித்தார். இரண்ய சிசுபாலர்களை அழித்து மக்களைக் காத்தார். பலரை துன்புறுத்தி வந்த
கம்சனையும் அழித்தார். எனவே அசுர குணம் கொண்டவர்களுக்குப் பகவான் இரக்கமே
காட்டமாட்டார் என்பது இப்பாசுரவழி அறியப்படுகிறது.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
திருப்பாற்கடல், வைகுந்தம், திருவேங்கடம்,
வண்டுக் கூட்டங்கள் நிறைந்த
நந்தவனங்களைக் கொண்ட அழகிய சோளிங்கபுரம், பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
திருவிண்ணகர் போன்றவற்றில் நித்திய வாலிபனான
ஸ்ரீமந் நாராயணனுக்கு முன் காலத்திலிருந்தே கோயில்களாக உள்ளன. இப்போது என்
உள்ளமும் அவன் உறைவிடமாக ஆகிவிட்டதே என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஸ்ரீவைகுண்டத்தை
வாசஸ்தலமாகவுடைய எம்பெருமானுக்குத் திருப்பாற்கடல் திருவேங்கடம் திருக்கடிகை
முதலிய திருப்பதிகள் முன்பெல்லாம் கோயிலாக அமைந்திருந்தன, இப்போதோ வென்னில், அவன் விரும்பியெழுந்தருளி இருப்பதற்குப் பாங்காக என்னுடைய நெஞ்சகம்
அவனுக்கு ஆலயமாகக் கிடைத்து விட்டதனால் அத்திருப்பதிகளிற் பண்ணும் அவற்றை
என்னெஞ்சிலே பண்ணிக்கொண்டு கிடக்கிறான் என்பதாம்.
ஸ்ரீவைகுண்டத்தில் நித்யவாசம் செய்பவனுக்கு வியூகஸ்தானமான
திருப்பாற்கடலும், மண்ணுலகில் உள்ள திருவேங்கடமும், வண்டுக் கூட்டங்கள் நிறைந்து காணப்படும் திருக்கடிகையும், அடுத்துள்ள திருவிண்ணகரும் ஆகிய
திருப்பதிகளில் வாசம்புரியும் பெருமான் பல எதிரிகளை அழித்துள்ளான். அது போன்று
என்னுள்ளில் இருக்கும் தடைகளான எதிரிகளை அழிப்பது அவன் பொறுப்பாகும். அது
மட்டுமின்றி என் நெஞ்சிலே புகுவதற்காகத் திருப்பாற்கடலிலும், திருவேங்கடத்திலும் எழுந்தருளி நித்யவாசம் செய்கின்றான்.
பிரம்மனின் துயர் துடைக்கத் திருவரங்கம் திவ்யதேசத்தில் பாம்பணையில் மேல்
பள்ளி கொண்டு நம்மையெல்லாம் காத்து வருகின்றார். சிறப்பு மிக்க இத்தகைய
தலங்களுக்குச் சென்று மிகவும் எளிதாக வரங்களைப் பெற முடியும் என்று கூறுகிறார்
ஆழ்வார். பக்தர்களுக்காக எதையும் வழங்கும் எம்பெருமானாகத் திருவரங்கத்துப்
பெருமான் திகழ்கின்றார். அது போன்று சில திவ்யதேசங்களுக்கு மிகச் சிறப்பான மகிமை
உண்டு. அத்தலங்களை தேர்வு செய்து மிக எளிதாக நாம் வரங்களைப் பெற முடியும். இதனை
உணர்த்தவே ஆழ்வார் இப்பாசுரத்தை அருளியுள்ளார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி
பலவகையாய் பரந்து
விளங்கும் பரந்தாமன், என்னை
அடிமைக் கொண்டவன். செல்வமாகவும், வறுமையாகவும்
இருக்கிறான். நரகமும், சொர்க்கமும் அவனே! வெல்லும் பகையும், நட்பும்
அவனே! உயிர் குடிக்கும் நஞ்சும், உயிரூட்டும் அமுதமும் அவனே!
எல்லா இடத்திலும் வியாபித்திருகின்ற அந்த எம்பெருமான் இத்தகைய நிலையினை எனக்குக்
காட்டிக்கொடுத்து என்னை ஆள்வான் பகவதனுபவ ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கக்கூடிய,
நல்ல மனிதர்கள் வாழ்க்கூடிய குடும்பங்கள் வாழும் திருவிண்ணகர் தலத்தில் தரிசனம்
செய்தேன்’ என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில்
பெருமான் சேராத பொருட்களையெல்லாம் தன்னிடத்தில் சேர்த்துக் கொண்டுள்ளான்.
இவையெல்லாம் அவனுடைய சரீரமாகச் சொத்தாக இருக்கின்றன. எம்பெருமான் தம்மை அவரோடு
சேர்த்துக் கொண்டதற்கு வியப்புடன் நோக்குகிறார். காதலின் கோபம் கொள்வது என்பது
ஏற்கத்தக்கதல்ல. இதனைப் பிரணயக் கோபம் என்று சொல்வர். இத்தகைய கோபம்
அதிகப்படும்போது அதற்குப் பரிகாரம் என்பதே இல்லை. அவ்விதமாக எம்பெருமானிடமே கோபம்
கொண்ட நம்மைச் சேர்த்துக் கொண்டானே என்று ஆழ்வர் வியப்புறுகிறார். இதனைப்
பெருமானிடம் கேட்க அதற்குப் பெருமான், இவ்வுலகில் உள்ள மாறுபட்ட பதார்த்தங்கள் எல்லாம் என்னிடத்திலே
தங்கியிருக்கின்றன. அவ்விதம் இருக்கும்போது உம்மை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வது
பெரிய விஷயமல்ல என்று கூறி தனது விபூதியைக் காட்டுகிறான். பகவத்கீதையில் தனது
பத்தாவது அத்தியாயத்தில் அர்ச்சுனனுக்கு விரிவாக எடுத்துரைக்கிறான்.
ப்ரீதி, அப்ரீதி ஹேதுவான – சில விஷயங்கள்
இன்பத்திற்கும் சில விஷயங்கள் துன்பத்திற்கும் காரணமாக விருத்த அர்த்தங்களைத்
தனக்கு விபூதியாகவுடைய, அப்படிப்பட்ட எல்லா இடத்திலும்
வியாபிதிருக்கிற அந்த எம்பெருமானைத் திருவிண்ணகரில் கண்டேன் என்கிறார்.
அவரவர்களின் கர்மவினைகளுக்கு ஏற்பப் பலன்களைத் தர வேண்டியிருப்பதால்
எதிர்மறையாகவும் விளங்குகின்றான். தீய கர்மங்கள்
செய்தவர்க்கு நரகத்தையும், நல்வினை செய்தவர்க்கு
சொர்க்கத்தையும் அளிப்பவன். இருவிதமாக இருந்து அவரவர்களின் வினைகளுக்கேற்ப பலன்களை
அளிக்கிறான். தீயவர்களுக்கும் அவர்களது வினைகளுக்கான தண்டனையை அளித்து, அதன் பின்பு அவர்களுக்கு நல்லவற்றை செய்து அருள்கிறான் என்ற பொருளில்
அமைந்துள்ளது.
இவ்வுலகில்
பார்க்கும் இன்பம், துன்பம்
இரண்டுமாய், கலக்கமும், தெளிவுமாய்,
தண்டித்தலும், மன்னித்தலுமாய், கோபமும் சாந்தமுமாய் இருந்து
காண்பதற்கரியவனாய் உள்ள எம்பெருமான், என்னை அடிமை கொண்டவன்
வாழும் ஊர் இயல்பாகத் தெளிந்தும், அலையடித்தால் கலங்குவதுமான
நீர்வளம் கொண்ட திருவிண்ணகர் என்னும் தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் விண்ணகரை நன்னகர் என்று
ஆழ்வார் குறிப்பிடுகிறார். எம்பெருமானின் குணத்தை ஒவ்வொரு திவ்ய தேசத்திலும்
காணலாம் என்று மணவாளப் பெருமான் தனது ஆச்சார்ய ஹிருதயத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘விளம்ப
விரோதமளிக்கும் விருத்த கட்டனா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீரணம்’ என்று
குறிப்பிட்டுள்ளார். பரமபதத்தைக்
காட்டிலும் விண்ணகர் உயர்ந்தது என்று வியாக்யானங்கள் குறிப்பிடுகின்றன. சேராத
பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடிய குணத்தினை இத்தலத்து பெருமான் பெற்றுள்ளார்.
ஆழ்வாரிடம் பெருமான் காலந்தாழ்த்தி வந்ததால் கோபமுற்று இக்குணம் இருந்தும்
தாமதித்து வந்தது ஏன் என்று வினவுகின்றார். பெருமான் தனக்கான குணத்தினைக்
அவருக்குக் காட்டி அவரைச் சமாதானப்படுத்தினார்.
கர்மவினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கின் காரணமாகவே
அவர் இவ்விதம் எதிர்மறையாக உள்ளார். தீவினைகள் உடையவர்கள் கலக்கம் கொள்கிறார்கள்.
நல்வினை புரிந்தவர்கள் மெய் ஞானிகளாகிறார்கள். எனவே கர்மவினைகளுக்கேற்ப பகவான்
எல்லாச் சூழல்களையும் ஏற்படுத்தித் தந்து அந்தச் சூழலாகத் தானே இருக்கிறார்.
நல்வினைகள் புரிந்தால் நம் வாழ்வினை நன்மையாக முடிப்பான் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
சிறு நகரமும், கடல் சூழ்ந்த கண்டங்களுமாய்,
ஞானமும், மூடத்தனமுமாய், நாட்டில் சூழும் ஒளியாய், இருளாய், பூமியாய், ஆகாயமாய், இருக்கும்
பகவான் உயர்ந்த மாட மாளிகைகள் சூழ்ந்த திருவிண்ணகரில் குடி கொண்டிருக்கிறான். அவனது ஒளிபொருந்திய கீர்த்திகளைப்
பாடுவதல்லாமல் புண்ணியம் தேட எல்லோருக்கும் வேறு எந்த வழியும் கிடையாது என்கிறார்
ஆழ்வார்.
விசேஷமாக ஞானத்தையுடையவர்கள் இருக்குமிடமும், ஞானமற்றவர் இருக்கும் கிராமமும்
தன்னிடத்தே உடைத்தவனாகப் பெருமான் திகழ்கின்றான். ஒப்பில்லாத எல்லாவிடத்திலும்
ஒளியுடன் விளங்கக்கூடியவரும், அஞ்ஞானத்தின் இருளாய், அதன்
நிலத்தான பூமியும், ஒளிமிக்க ஆகாயமும் ஆகியவற்றைத் தனக்கு
சரீரமாகக் கொண்டவன் எம்பெருமான். நீள் மாடங்கள் சூழ்ந்த திருவண்ணகரில்
பொருந்தியுள்ள பிரான், ஒளியைக் கொண்ட குணப்பிரதையை அல்லால்.
எம்பெருமானுடைய பெருமைகள்தான் இவர்களை உஜ்ஜிவனம் அடையச் செய்யும்.
பல பிறவிகளில் செய்த நல்வினைகளால் ஒருவனுக்கு ஞானம் உண்டாகிறது. செய்த தீயவைகளால் மூடத்தனம் வருகிறது. இருளும்
ஒளியும் கூட ஒருவரின் கர்ம வினைகளுக்கேற்ப அமைகின்றன. ஆகவே பகவானே எல்லாமுமாய்
இருக்கிறார். உலக விவரங்கள் அனைத்தும் பகவானின் திருவுளப்படியே நடக்கின்றன என்று
கூறுகிறார் ஆழ்வார். நாம் நல்லதை செய்ய வேண்டும். மற்றவற்றை பகவான் பார்த்துக்
கொள்வார் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.
புண்ணியம், பாவம், கூடுதல்,
பிரிதல், நினைவு, மறதி,
உண்மை, பொய், இவைகளாய்
இருப்பவன். இவை எதுவும் இல்லாதவனாகவும்
இவற்றுக்கு அப்பாற்பட்டவனாய் இருக்கிறான்.
அவனே உறுதியான மாடமாளிகைகள் சூழ்ந்த திருவிண்ணகரில் அருள் புரிகின்றான்.
அந்தக் கண்ணபிரானின் இனிய திருவருளே பிழைப்பதற்குரிய புண்ணியம் என்பதைத் தெரிந்து
கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். கோணலும் நேர்மையுமாய் கறுப்பும்
வெளுப்புமாய் மெய்யும் பொய்யுமாய் யௌவனமும் கிழத்தனமுமாய் நவீனத்வமும்
ஜீர்ணத்துவமுமாய்க் கொண்டு வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட திடமான மதிளாலே சூழப்பட்ட
திருவிண்ணகரிலே வர்த்திக்கிற ஸர்வேச்வரன் ஆக்கின சோலையன்றோ பிரமன் முதலான
உத்க்ருஷ்ட தேவதைகளையுடைத்தான மூவுலகமும் என்கிறார்.
எல்லாம் கண்ணனின் இன்னருள் என்று ஆகும்போது
பொய்ம்மையும் துன்பமும் என்ன செய்து விடும்? இதை அறிந்து கொள்க. புண்ணியமும் பாவமும் அவனே, இணைதலும் பிரிதலும் அவனே, நினைப்பும் மறப்பும் அவனே, இருப்பதும் இல்லாததும் இவை அல்லாததுவும் அவனே. வலிமையான மாடங்கள் சூழ்ந்த
திருவிண்ணகர் நகரில் அவன் இருக்கின்றான்.
கர்ம வினைகள் உயிர்களைத் தீர்க்கும் பொருட்டுப் புண்ணிய, பாவங்களாகக் கூடுதல், பிரிதலாக, உண்மை பொய்யாகப் பகவான் இருக்கிறார். அதுசமயம் இவையனைத்தையும்
கடந்தவராகவும் இருக்கிறார். பாவ புண்ணியங்களையெல்லாம் நாம் கடந்து செல்ல
வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். அதை எடுத்துக் காட்டும் வகையில் பகவான்
எல்லாவற்றையும் கடந்தவராகவும் இருக்கிறார் என்பது பொருளாகும்.
பெரிய
தெய்வங்களையுடைய இம்மூன்று உலகங்களையும், வஞ்சனையும், நேர்மையுமாய், குரூர எண்ணங்கள் கொண்ட கருமையாய், தூய்மையான
குணங்கள் கொண்ட வெண்மையாய், மெய்யும், பொய்யும்
கலந்த நடவடிக்கை உள்ளதாய், இளமையும் முதுமையுமாய், புதுமையும், பழமையும் நிறைந்த தோட்டமாக எம்பிரான்
அருளியிருப்பதைப் பார்க்கிறீர்கள்! அவன் பெரும் மதில்கள் சூழ்ந்த திருவிண்ணகரில்
கோயில் கொண்டுள்ளான் என்று பாடுகிறார்.
சிலரிடத்தில்
கோணல் தவிர வேறு கிடையாது, சிலரிடத்தில் செம்மை தவிர வேறு கிடையாது, இவையிரண்டும்
அவனிட்ட வழக்கு. கைதவமும் செம்மையுமாகிற இரண்டும் எம்பெருமானிடத்திலேயே உண்டு
என்றும் கொள்ளலாம். கண்ணனாய்ப் பிறந்து கரியகோலத்
திருவுருவமாய்க் காட்சித் தருவன், நம்பி மூத்தபிரானாய்ப்
பிறந்து வெளுத்த திருக்கோலமாய் ஸேவை ஸாதிப்பன்.
வஞ்சனை, நேர்மை, குரூரம்,
தூய்மை எல்லாமே பகவான் என்று கூறுகிறார் ஆழ்வார். மகாபாரத
யுத்தத்தில் கௌரவர்களைத் தோற்கடிக்க ஒரு சில வஞ்சகங்களை செய்ய வேண்டி இருந்தது.
அது சமயம் நேர்மையின் சிகரமாகவும் அவர் தோன்றினார். தன்னைக் கொல்ல வந்த பூதனையை
குரூரமாகக் கொன்றார். தன்னை நம்பி வரும்
பக்தர்களுக்குப் பல அவதாரங்கள் எடுத்து அவர்களின் பாவங்களைப் போக்குகிறார் என்பது
இப்பாசுரக் கருத்தாகும்.
மூவுலகங்களுமால்லய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில்வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய் பழியாய்
தேவர் மேவித்தெழும் திருவிண்ணகர் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே. 3254
மூவுலகமும் அவனே!
இவை எதுவாகவுமின்றி இருப்பவனும் அவனே! மகிழ்ச்சி, கோபம், இரண்டுமாய் இருப்பபவன்.
ஸ்ரீதேவியாகவும், மூதேவியாகவும் இருப்பவன். புகழ், பழி இரண்டுமே அவன்தான். தேவர்கள்
விரும்பி வணங்கும் திருவிண்ணகரில் அருள் புரியும் பகவான் பாவியான அடியேன்
உள்ளத்திலும் பரஞ்சோதியாக உறைகிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
மூன்று உலகங்களை
உடையனாயும் அல்லாத பரமபதத்தை உடையவனாகியும், மகிழ்ச்சியாகியும் சீற்றமாகியும், தாமரைப்
பூவில் வசிக்கின்ற திருமகளாகியும் மூதேவியாகியும், புகழாகியும்
பழிப்பாகியும், தேவர்கள் மனம் மகிழ்ந்து தொழுகின்ற
திருவிண்ணகர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற உபகாரகன், பாவியேனாகிய என்னுடைய மனத்தின் கண்ணே நித்திய வாசம் செய்கின்ற மேலான
ஒளியுருவன் ஆவான். ‘நான் அல்லேன்’ என்னச் செய்தே தன் குணங்களையும் செயல்களையும் காட்டி மறக்க ஒண்ணாதபடி
கலந்து அதனாலே பேரொளிப் பிழம்பாயிருக்கிறவன் திருவிண்ணகரிலே நின்றருளின
சர்வேஸ்வரன் கண்டீர் என்கிறார்.
அவரவர் புரிந்த கர்ம வினைகளுக்குத் தகுந்தவாறுதான் மகிழ்ச்சியும், கோபமும் ஏற்படுகின்றன. ஒருவன் புகழுடன் விளங்குவதற்கும், பழியுடன் வாழ்வதற்கும் கர்மவினைகளே காரணம். அதனால்தான் இவை அனைத்தையுமே
பகவான் ஏற்கிறார். நமக்கு வேண்டிய அறிவாற்றலை பகவான் வழங்குகிறார். அதைப்
பயன்படுத்தி நாம் நல்வினைகளைச் செய்ய முடியும். மீறித் தீவினைகள் புரியும்போது
தான் பகவான் பல வடிவங்களை எடுத்து அதை ஒடுக்குவார் என்பது இதன் கருத்தாகும்.
ஒளிமயமான
தேகத்தைக் கொண்டும், அழுக்கு
உறைந்த உடம்பாய் ஊனக் கண்களுக்குத் தென்படாமலும், ஞானிகளுக்குக்
காட்சி தந்தும், பலவித அவதாரங்கள் எடுத்து அற்புதங்கள்
நடத்திய எம்பிரான், அனைத்து தேவர்களும் சிரம் பதித்து
வணங்கும் திருவிண்ணகரில் கோயில் கொண்டிருக்கிறான். சம்சாரக் கடலிலிருந்து கரையேற
அனைவருக்கும் வரம் தரும் அவன் திருப்பாதங்களையன்றி வேறு புகலிடம் கிடையாது என்று
ஆழ்வார் கூறுகிறார்.
எம்பெருமானுக்கு
இரண்டு வகையான சரீரங்கள் உண்டு. அப்ராக்ருதமாய் சுத்தஸத்வமயமான அஸாதாரண திவ்யமங்கள
விக்ரஹம் ஒன்று, – ஜகத்
ஸர்வம் சரீரம் தே. என்கிறபடியே ஸகல ஜகத்தும் அவனுக்குச்
சரீரமாகையாலே இந்த ஸமஸ்த ஹேயாஸ்பத சரீரம் மற்றொன்று. பிரமன்
தேவர்கள் தலைபடைத்த ப்ரயோஜனம் பெற்றோம் என்று வணங்கும்படி திருவிண்ணகரிலே
உறைகின்றான், அவனுடைய திருவடிகளல்லது புகலிடம் வேறில்லை
என்கிறார்.
பிரகிருதி
சம்பந்தம் இல்லாத திருமேனியையுடையவனாயும், உலகத்தையே உருவமாகவுடையவனாயும், கண்களுக்கு
வெளிப்படாது மறைந்தவனாயும், இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச்
செய்து கண்களுக்குத் தோன்றுகின்றவனாயும், அந்ததந்த
அவதாரங்களில் பல ஆண்டுகள் நிலை பெற்று நிற்கின்றவனாயும், வஞ்சனையான
காரியங்களைச் செய்கின்றவனாயும் இருந்து, தேவர்கள் தலைகளால்
வணங்குகின்ற திருவிண்ணகரம் என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமானுடைய சிறப்பையுடைத்தான திருவடிகள் அல்லாமல் எத்தகையார்க்கும் வலிய
உபாயம் வேறு ஒன்று இல்லை என்பது திருவாய்மொழி வியாக்யானம்.
நம்முடைய ஊனக் கண்களால் இறைவனைப் பார்க்க இயலாத காணத்தினால்தான் நாம்
கணக்கற்ற பிறவிகளில் உழன்று கொண்டிருக்கிறோம். நமது சிந்தனைகள் அனைத்தும் புற
உலகில் உள்ளது. நமது சிந்தனையை அகத்தில் திருப்பினால் ஞானக்கண்களைப் பெறுவோம்.
அதனில் நமக்குள் அழிவற்ற ஆத்மஜோதி இருப்பதை அறிவோம். நமது முனிவர்கள் மனத்தை ஒருநிலைப்படுத்தி
அற்புதமான உண்மைகளை நமக்குத் தந்துள்ளார்கள். அதைச் செயல்படுத்தாததால் பல்வேறு
அவலங்களைச் சந்தித்து வருகிறோம் என்று
இப்பாடல் தெரிவிக்கின்றது.
தெற்குத்
திசையில் புகலிடமாகத் திருவிண்ணகர் என்னும் ஷேத்திரத்தில் அருள் புரியும் பகவான்
என்னை ஆட்கொண்ட என்னப்பன், என் கண்ணனிடம் நான் சரணடைகின்றேன். அவன் தேவர்களுக்குக் காப்பகமாகவும்,
அசுரர்களுக்குக் கொடிய எமனாகவும்
விளங்குபவன். உலகங்களைத் தன் பாத நிழலில் வைத்து அருள்
புரிகின்றான். கீழான குணங்கள்
உள்ளவர்களுக்குத் தன் பாத நிழலினைக் காட்டாமல் இருக்கின்றான் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
தேவர்களுக்கு
எந்த ஆபத்து வந்தாலும் ஓடிவந்து திருவடிகளிலே விழ ‘முப்பத்து மூவரமரர்க்கு முன்
சென்று கப்பந்தவிர்க்கும் கலியே’ என்கிறபடியே அவர்களுக்காகத் தன்னை
அம்புக்கிலக்காக்கி அவர்களைக் காப்பாற்றும் வலிய ரக்ஷ்கன், இப்படிப்பட்டவன் அசுர ராக்ஷஸ
கோஷ்டியில் வந்தாலோ அவர்களுக்குக் கொடிய யமனாயிருப்பன். ப்ரஸித்தனாயிருக்கிற
எம்பெருமான் தேவர்களுக்கு வன்சரணாயும் அசுரர்களுக்கு வெங்கூற்றமாயும் இருந்தால் அவனுக்கு இது
குறையாகாதோ? என்னில், ஆகாது.
தேவர்களுக்கு நன்மை செய்யவேணும், அசுரர்களுக்குத்
தீமைசெய்யவேணும் என்று எம்பெருமானுக்கு இங்ஙனே ஒரு ஆக்ரஹமில்லை, ஒருங்கே எல்லார்க்கும் நன்மை செய்யவேணுமென்பதே அவனுடைய திருவுள்ளம்.
எல்லாரும் உபயோகங்கொள்ளக் கழுத்தலே கல்லைக்கட்டிக் கொண்டு விழுந்து சாவார் போலவும்,
விளக்கிலே விட்டில்கள் தாமே வந்து விழுந்து மடிந்து போமா போலவும்
எம்பெருமானிடத்திலும் அவரவர்களே வந்து விழுந்து மடிந்தால் இது இவனது குற்றமாகுமோ? என்கிறார்.
இங்குத் தேவர்கள் என்று
சொல்லப்படுவது தருமத்தில் பிடிப்பு உள்ளவர்களைக் குறிப்பதாகும். பகவானிடம் பரிபூரண சரணாகதி செய்கிறார்கள்.
அசுரர்கள் தர்மத்தை மீறுபவர்கள். தவமிருந்து வரங்களைப் பெற்றுக்கொண்டு பகவானுக்கு
நன்றி மறப்பவர்களாக இருப்பார்கள். அதனால் பெருமான் அவர்களுக்குக் காலனாக
விளங்குவார். நாம் அசுர குணங்களை
விட்டுவிட்டு தேவ குணங்களைப் பெற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.
தங்கத்தைப்
போன்று ஒளி வீசும் மதில்கள் சூழ்ந்த திருவிண்ணகரில் எழுந்தருளியிருப்பவன் எனக்குத்
தந்தையாய், தாயாய்,
செவிலித்தாயாகவும் உள்ளான்.
அவன் பொன்னைப் போன்றும், மாணிக்கத்தைப் போன்றும்,
முத்தைப் போன்றும் இருப்பவன். தனக்கு நிகரானவர் இல்லாத
ஒப்பிலியப்பன், தனது திருவடி நிழலை எனக்குத் தந்தான் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
‘பொன்,
மணி, முத்து போன்றவன் என் தலைவனான இந்தப்
பெருமாள். தன் பக்தனுக்கு உதவி செய்வதில் ஒப்பாரும், மிக்காரும்
இல்லாத தனித் தலைவன். என் தந்தை. மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்தத்
திவ்ய தேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல; என்னைப்
பெற்ற தாய், என்னை வளர்க்கும் தாய். தனது திருவடி நிழலால்
என்னை என்றென்றும் காப்பான்,’ என்று உள்ளம் உருகிப்
பாடுகிறார் நம்மாழ்வார்.
இந்தப் பாசுரத்தை
ஒட்டியே இந்தக் கோயிலில், என்னப்பன், பொன்னப்பன், மனியப்பன்,
முத்தப்பன், திருவிண்ணகரத்தான் என்று பெருமாள்
ஐவராகக் கொலுவிருக்கிறார். தங்க விமானம் கொண்டு பரிமளிக்கிறார் ஒப்பிலியப்பன்.
நெடிதுயர்ந்த நின்ற கோலம். கண்களாலேயே மென்மையாக அழைக்கிறார். தங்கக் கவசம் பூண்டு
ஜொலிக்கிறார். இவர் காலடியில் இடது பக்கம் மார்க்கண்டேயரும், வலது பக்கம் பூமிதேவியும் மண்டியிட்டு இவருக்கு வணக்கம்
செலுத்துகிறார்கள்.
ஒரு மனிதனை எவர் வேண்டுமானாலும் கைவிடலாம். ஆனால் தாயார் ஒரு போதும் கைவிட
மாட்டாள். அவள் பேரன்பு கொண்டவள். அத்தகையத் தாயை நமக்கு அளித்தவன் அந்தப்
பகவான். எனவே அவனே தாயாய், தந்தையாய், செவிலித்தாயாய் பல வடிவங்களில் நம்மைக்
காத்து வருகிறான். இவ்வாறு நம் மீது கருணை
மழை பொழியும் பகவானை நாம் மறத்தல் கூடாது. மனம் போன போக்கில் சிற்றின்ப வாழ்வில்
செல்லக் கூடாது என்பதை ஆழ்வார் நமக்குக் கூறுகிறார்.
வெயில் நிழல், பெருமை சிறுமை, குறுகியிருத்தல் நெடிது வளர்தல், நிற்பன, சுழல்வன இப்படி எல்லாமாக இருப்பவன் ஒரு சமயம் எதுவுமே ஒட்டாதவனாகவும்
காட்சியளிக்கிறான். இளமையான வண்டுகள் ரீங்கரிக்கும் திருவிண்ணகரில் குடியிருக்கும்
எம்பிரானின் திருப்பாதங்களையன்றி மற்றுமோர் பிடிமானம் கிடையாது என்பதைத் தெரிந்து
கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
நிழலும்
வெய்யிலுமாகி, சிறுமையும்
பெருமையுமாகி, குறுமையும் நெடுமையுமாகி, திரிகின்றவையும் நிற்கின்றவையுமாகி, மற்றுமாகி,
அவை அல்லனுமாகி, இசைபாடுகின்ற இளமை பொருந்திய
வண்டுகள் வாழ்கின்ற திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய திருவடிகளே
அல்லாமல் மற்றும் ஒரு பற்றுக்கோடு இலோம்; நீங்களே காணுங்கோள்
என்கிறார். வேறு ரக்ஷகத்தையுடையோம் அல்லோம். “என்னையே சரணமாகப் பற்று” என்னுமவன் அன்றிக்கே, திருவடிகள்தாமே
தஞ்சம் என்பார் ‘கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம்’ என்கிறார். “மாமேகம் சரணம் வ்ரஜ” - என்பது, ஸ்ரீ கீதை, 18:66. “மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி” - என்கிறது பரிபாடல்.
இவ்வுலகில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் பகவானால்
அளிக்கப்பட்டதாகும். ஆனால் உலக மாந்தர்கள்
அனைவரும் இதனை அறியாமல் கணக்கற்ற துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களிடமிருந்து வேறுபடுத்திக் கொண்டு பார்ப்பதால்தான் மற்றவர்களுக்குத் தீமைகள்
செய்து அந்தத் தீமைகளின் பலன்களைத் தாங்கள் அனுபவித்து வருகிறார்கள். காண்பது
எல்லாமே இறைவனின் காட்சி என்ற தெளிவு நமக்கு வரவேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
உலகத்து
மாந்தர்களே பாருங்கள்! கண் முன்னால் நிமிர்ந்து உலகளந்த பாதங்களையுடையவனைப்
பற்றிக் குருகூர் சடகோபர் அருளிய ஆயிரம் பாசுரங்களுள் திருவிண்ணகரைக் குறிக்கும்
இந்தப் பத்துப் பாமாலைகளையும் பிழையின்றி தினமும் பாட வல்லார்கள் என்றும்
தேவர்களாய்ப் போற்றப்படுவார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இத்திருவாய்மொழியை
அதிகரிக்கவல்லவர்கள் நித்யசூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று
பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். இப்பதிகமானது காண்மின்களாலகீரென்று (இந்த
வினோதத்தைக் காணுங்கள்) கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன் தன்னைக் குறித்து அருளிச்
செய்ததாகத் தகும், ஏனெனில்,
மாவலியை வடிவழகாலும் பேச்சில் இனிமையாலும் மயக்கினது போல இருக்கும்
மயக்கித் தன் காரியத்தை ஸாதித்துக் கொண்டதனால்.
ஐம்பூதங்களால் ஆனது அண்டம் என்கின்ற பூமியாகும். அந்த ஐம்பூதங்களால்
ஆக்கப்பட்டதுதான் மனித உடல். இந்த உடல் அழிந்தால் மண்ணில் கலக்கிறது. ஆனால்
அழியும் உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவதில்லை. அது பரமாத்மாவின் கூறு என்று
சொல்லலாம். எல்லா உயிர்களும் பகவானே என்று
சொல்வதற்கு இதுவே மூலகாரணமாகும். இந்த ஆத்மாவை அறிந்தவர்க்கு பிறவி இல்லை. அச்சம்
இல்லை, மரணமும் இல்லை. இத்தகைய அற்புத நிலையை நாம் அடைய
வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக