செவ்வாய், 18 நவம்பர், 2025

88. ஶ்ரீவில்லிப்பத்தூர்






 

பெரியாழ்வார்                                                                                  பெரியாழ்வார் திருமொழி 

மின் அனைய நுண் இடையார் விரி குழல்மேல் நுழைந்த வண்டு
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடிகேசா முலை உணாயே.       133 

      மின்னலைப் போன்ற மெல்லிய இடையை உடைய  பெண்களின் விரிந்த கூந்தலின் மேல் தேனை உண்பதற்காகப் புகுந்த வண்டினங்கள் தேனைப் பருகிய மகிழ்வில் இனிய ஓசையை எழுப்பும். ஸ்ரீவில்லிபுத்தூரில் குடி கொண்டிருப்பவனே!  உன்னைக் கண்டவர்கள் இவனைப் பெற்ற தாய் என்ன தவம் செய்தாளோ? என்று பாராட்டிச் சொல்லும் வார்த்தைகளை எனக்களித்த ரிஷிகேசா பால் பருக வா! என்று ஆழ்வார் அழைக்கிறார்.
      மகனைப் பெற்ற நிலையில் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். இந்த மகனைப் பெறுவதற்கு இவள் என்ன தவம் செய்தாளோ? என்று மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு அத்தாய் மேலும் மகிழ்ச்சி அடைகிறாள்.  அத்தகைய பெருமையினை கண்ணன் யசோதைக்குத் தந்தான்.  வில்லிபுத்தூர் பெருமான், உலகினைக் காக்கும் திறம் கொண்டவர். அத்தகையவன் யசோதைக்குப் பிள்ளையாகப் பிறந்திருப்பது அவள் செய்த தவத்தின் பயனே என்று கூறலாம்.  அத்தகைய வார்த்தைகளை எனக்களித்த இருடிகேசா! பால் அருந்த வா! என்று தாய் அழைப்பது போன்று ஆழ்வார் அழைக்கிறார்.      

ஆண்டாள்                                                                                                         நாச்சியார் திருமொழி 

மென்னடை அன்னம் பரந்து விளையாடும்
     வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என்
     பொரு கயல் கண்ணினை துஞ்சா
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி
     எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே !
     உலகு அளந்தான் வரக் கூவாய்.       549 

      மெல்ல நடந்து வரும் அன்னப்பறவைகள் எங்கும் பரவி விளையாடுவதற்கான இருப்பிடமானது ஸ்ரீவில்லிபுத்தூராகும். அங்கு எழுந்தருளியிருக்கும் வடபத்ரசாயியின் பொன்னான திருவடிகளைக் காண ஆவல் கொண்டுள்ளேன்.  போர்குணம் கொண்ட இரு கெண்டை மீன்கள் போன்று என் விழிகள் உறங்க மறுக்கின்றன. குயிலே இனிய அன்னத்தையும், பாலமுது ஊட்டி வளர்க்கப்பட்ட என் அழகிய கிளியை உன்னோடு தோழமைக் கொள்ளச் செய்கிறேன். உலகளந்த பெருமான் என்னிடத்தில் வருமாறு கூறுவாயாக என்று கூறுகிறாள் ஆண்டாள்.
      நித்யசூரிகளின் அருகில் வீற்றிருப்பதை விட்டு விட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் வந்து நாற்புறமும் அன்னப்பறவைகள் உள்ள இடத்தில் வாசம் செய்கிறார் எம்பெருமான். அந்நிலையில் அவன் தனது பசியைத் தீர்த்துக் கொள்கிறான். அதுபோன்று என் பசியைத் தீர்ப்பது எப்போது? என் கண்கள் எப்போதும் அவனது திருவடிகளையே சேவித்துக் கொண்டுள்ளது என்கிறாள். இதனைக் கண்ட ஒரு குயிலானது ‘அம்மா! இவ்வாறு வருந்தலாகுமா? எம்பெருமான் இங்கு வருவது சாத்தியமாகுமா? என்று வினவ அதற்கு ‘குயிலே! நெஞ்சு உலரும்படி கூவுவது பயனில்லை. பெருமான் மனது வைத்தாலன்றி இது நடப்பது சாத்தியமாகுமா? என்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...