திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
காவி உடையால் தன் சரீரத்தை
மறைத்து பஞ்சவடிக்கு விரைந்து வந்து சீதா தேவியிடம் மையல் கொண்ட இராவணனது ஊரான
இலங்கையை அழிய அம்பெய்து முடித்த பூரண சக்தியுடைய வீரத்திருமகனான எம்பெருமான்
மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய ஆய்ச்சியர், இவன் வெண்ணெய் திருடி உண்டவன் என்று பரிகசித்த கோவிந்தன், திருஎவ்வுளூரில்
கண் வளர்ந்தருளுகிறான். முன்னடிகளில் ஸ்ரீராமனாகவும், பின்னிரண்டடிகளில்
ஸ்ரீகிருஷ்ணனாகவும் இவ்வூரில் சேவை சாதிக்கின்றான். இராவணன் சீதையைக் கவர்வதற்காக
சன்னியாசி வேடமிட்டு பிச்சை கேட்பதுபோல் கேட்டு கவர்ந்து சென்றான். அத்தகையவனை தன்
அம்பால் நிர்மூலம் செய்தவன் இங்குள்ளான். அது போன்று வெண்ணெயுண்டவனான கிருஷ்ணனும், இவ்விதம்
இராமகிருஷ்ணராக இங்கு வாசம் செய்கின்றான். எவராலும் வெல்ல முடியாத இராவணனை போரில்
வென்று முடித்தார். அதே சமயம் கிருஷ்ணாவதாரத்தில் விளையாட்டாக வெண்ணெய் உண்டு
அனைவரின் பரிகாசத்தையும் ஏற்றான்.
அழகில் சிறந்தவளான வைதேகி மேல்
மோகம் கொண்ட சந்திரஹாசம் என்ற வாளையுடைய இராவணனது மெய்யான பொன் முடிகள் பத்தையும், முன்பு
இராமாவதாரத்தில் நடந்த இராம இராவணப் போரினால் ஒரே அனல் உமிழ் என்ற சிவந்த
பாணத்தினால் மண்ணில் உருளச் செய்த என் தலைவனான வீரராகவன் திருஎவ்வுளூரில் கண்
வளர்ந்தருளுகின்றான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
பிராட்டியைப் பிரிந்த பெருமான் வெண்மையான
மேகக் கூட்டங்களைக் கண்டவுடன் சீதையின் நினைவில் தவித்தான். இதைக் கண்ட அனுமன் ஒரு
பெண்ணிற்காக வீரம் பொருந்திய இராமன் இவ்வாறு கலங்குகிறானே என்று நகைத்தான். பின்
இலங்கை சென்று அசோகவனத்தில் சீதையைக் கண்டவுடன் அய்யகோ! இத்தகைய பிராட்டியைப்
பிரிந்த பின்பும் உயிர் வாழ்கிறானே, அவனிலும் மிக்க கலநெஞ்சம் உண்டோ என்று நினைத்தான் அனுமன்.
இவ்வாறு எண்ணத் தூண்டியது சீதையின் வடிவழகே ஆகும். அத்தகைய அழகு பொருந்திய
பிராட்டியிடம் காதல் கொண்ட பெருமான் வீரராகவனாக திருஎவ்வுளூரில் சேவை சாதிக்கின்றான்.
ஸ்ரீராமாவதாரத்தில் அனுமனை
பிராட்டிக்குத் தூது அனுப்பி சிறந்த இலங்கையை ஓர் அம்பினால் மாண்டு போகும்படி
அழித்தவன், கிருஷ்ணாவதாரத்தில்
மன்னர் குலத்தில் அவதரித்தும் பாண்டவர்களுக்காகத் தூது சென்று பாண்டவ தூதன் என்று
உலகத்தவரால் போற்றப்பட்ட வீரராகவன் எவ்வுளூரில் கிடந்தான் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
ஸ்ரீராமன் அதர்மம் செய்த
இராவணனிடம் சென்று சமரசம் பேச விரும்பவில்லை. மேலும் அரச பரம்பரையில் இத்தகைய
தூதினை தானே மேற்கொள்ளத் தவிர்ப்பார்கள். எனவே இராமதூதனான அனுமனை அனுப்பி
எச்சரித்து வருமாறு கூறி அனுப்பினார். இருப்பினும் தான் தூது பணியினை மேற்கொள்ள
இயலாமல் போனது சிறிது வருத்தம்தான் என்றார். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் துரியோதனன்
பாண்டவர்களக்குச் செய்த துரோகத்திற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக
தானே தூது சென்றார். இந்த அவதாரத்தில் தூது சென்ற பிறகுதான் பெருமானுக்குத் திருப்தி
உண்டாயிற்று என்பது பட்டர் வியாக்யானமாக உள்ளது.
பந்தினைத் தன் மெல்லிய
விரல்களால் அணைத்துப் பிடித்திருக்கும் நப்பின்னைப் பிராட்டியை மணமுடிக்க குரூரமான
மிடுக்குடைய ஏழு முரட்டுக் காளைகளையும் வென்ற துவாரகாபதி, உலகெங்கும்
பரந்த புகழையுடைய நந்தகோபனுக்கு திருக்குமாரனாக பரிபூரணமாக அவதரித்த எம்பெருமானும், நற்குலத்துக்கெல்லாம்
நாதனுமானவன் திருஎவ்வளூரில் கண் வளர்ந்து அருளுகிறான் என்ற பொருளில் ஆழ்வார்
பாடுகிறார்.
நப்பின்னையின் தந்தை சொன்னபடி
வலிமையுள்ள ஏழு காளைகளை அடக்கிய பெருவீரன் அந்த விடாய் தீர திருஎவ்வுளில்
திருக்கண் வளர்ந்துள்ளான். கையிலே பந்தைப் பிடித்து அதைவிட மென்மையான விரல்களைக்
கொண்டவளான நப்பின்னை சித்திரப் பதுமைப் போன்று திகழ்வாள். கண்ணபிரானைப் பிள்ளையாகப்
பெற நோன்பு நூற்றவன் வசுதேவன். அவனைப் பார்த்த கணத்தில் நன் நோன்பின் பயனைப்
பெற்றான். அத்தகைய மகனை நந்தகோபனிடம் விடவேண்டியது ஆகிவிட்டது. ஏழு காளைகள் என்பது
நம்மில் உள்ள ஏழு அசுர குணங்களாகும். அதனை அடக்குபவனும் எம்பெருமானே என்ற
கூறுகிறார் ஆழ்வார்.
நினைத்துப் பார்த்தால் முன்பொரு
காலத்தில், ஊழிக்கால
முடிவில், சிறு
குழந்தையாய் ஏழு உலகங்களை உண்டு ஆலந்தளிரின்
மேல் நீண்ட காலம் பள்ளி கொண்ட கிருஷ்ணன், நீல வண்டுகள் தேனை உண்டு வாழும் நெய்தல்
மலர்களில் படிந்த வண்டுகள் மலரில் உள்ள தேனைப் பருகி வாழப்பெற்ற அழகிய குளிர்ந்த
நெய்தல் வயல்களையும், மணம்
கமழ்கின்ற சோலைகளையுடைய திருஎவ்வுளூரில் சயனித்திருக்கிறான் என்ற பொருளில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
உலகமெல்லாம் மறையும் நிலையில்
இருந்த ஊழிக்காலத்தில் தான் மட்டும் மறையாமல் சிறு குழந்தையாக ஆலிலைமேல்
சயனித்திருப்பது அனைத்தையும் மறைப்பதற்காக. ஆனால் திருஎவ்வுளூரில் சயனித்திருப்பது
உலகத்தைக் காத்துக் கரையேற்றுவதற்காக. அவனைப் பொருத்தவரை இப்பிரபஞ்சம் இயங்குவதும்
முடிவதும் ஒரு விளையாட்டாகும். இந்த உலகம்
கொடியதாக தெரிந்தாலும் அதுவும் பகவானின் விளையாட்டு என்று கொள்ள வேண்டும்.
பகவானின் திருவடியைப் பற்றியபடி இவ்விளையாட்டில் நாமும் பங்கு கொண்டால் ஒரு
துன்பமும் நேராது என்பதாக பொருள் அமைகிறது.
அடியவர்கள் ஒன்று கூடி
நெருக்கமாகத் திரண்டு, ‘சுவாமி!
குணங்களால் நிறைந்தவனே! உனக்கு வணக்கம்’ என்று கூறி இடைவிடாமல் போற்றும்படி
இருப்பவன். செந்தாமரைக் கண்ணுடையவன்.
ஸ்வாமியாய் இருப்பவன், குறைகளை
நீக்குபவன், தேவர்களுக்கெல்லாம்
தலைவன். சிவனுக்கும் தேவன் என்று சனகர் முதலிய முனிவர்கள் போற்றும் பரந்தாமன் திரு
எவ்வுளூரில் சயனித்திருக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பெருமானை பக்தி மார்க்கத்தோடு
தொழுபவர்கள் அதற்கு அநுகூலமாகத் தாழ்ந்த தோற்றத்தில் இருப்பார்கள். அத்தகையவன்
ஆபத்பாந்தவனாக இருந்து அருள் புரிகிறான்.
இவ்விதம் நாம் அழைத்துவரும் அளவிற்கு எளியவனாக இருந்தாலும் அவன் சாமானியனல்ல.
தேவர்களுக்கெல்லாம் மூத்தவனென்றும், முக்கண்ணனான சிவனுக்கு அந்தர்யாமியாக இருந்து காரியங்கள்
பல நடத்துபவனாக இருக்கின்றான். இவ்விதமான உண்மைகளை அறிந்த சனகாதி முனிவர்கள்
தொழுதேத்தும் பரம் பொருளாகத் திகழ்பவன்.
சௌலப்யமும், பரத்வமும்
உடைய பெருமான் திருஎவ்வுளூரில் இருந்து சேவை சாதிக்கின்றான்.
சந்திரன் ஜலம் ஆகாசம் அக்னி வாயு ஆகியவற்றை சரீரமாயும் நான்முக பிரம்மாவுக்கு தந்தையாயும் ஸாமவேதத்தால் ஸ்தாபிக்கப்பட்ட காரணபூதனானான எம்பெருமான் தனது சரீரத்தின் ஒருபக்கத்திலே இருப்பவனாய் வண்டுகள் நிறைந்த கொன்றை மாலையையும் கங்கா ஜலத்தையும் நீண்ட சடையிலுடைய சிவ பெருமான் உலகமெல்லாம் தாவி அளந்த விசாலமான
எம்பெருமானின் திருவடிகளை தன் தலைமீது
சூடி வணங்கச்செய்த எங்கள் அப்பன் எம்பெருமான் பள்ளிகொண்டுள்ளார்.
காரியவர்க்கங்களை எல்லாம் தனக்கு
சரீரமாகக் கொண்டு, தான்
அவற்றிற்கு ஆத்மாவாக இருப்பவன். உலகங்களைப் படைத்த நான்முகக் கடவுளைப்
படைத்தவனாவான். கீதையில் ‘வேதங்களுக்கெல்லாம் நான் சாமவேதமாக இருக்கிறேன்’
என்கிறார். கங்கா தீர்த்தத்தை தன் சடையில் தாங்கி திருமேனியில் ஏகதேசத்தில்
உறைகின்ற சிவபெருமான் தனது தலையினால் சுமக்கின்ற திருவடிகளை உடைய எம்பெருமான்
எவ்வுளூரில் சேவை சாதிக்கிறான்.
உலகங்களைப் படைக்க சங்கல்பம் செய்தவனும், கபிலனாய் அவதரித்தவனும், பிரம்மா, விஷ்ணு, சுவன் என்று மும்மூர்த்திகளுக்கு அந்தர்யாமியாய் இருப்பவனும், வேதத்தின் பொருளைக் விரிவாகச் சொன்னவரும், காயாம்பூ நிறம் கொண்டவனும், எல்லா உயிர்களுக்கும் தலைவனும், வடிவு கொண்ட புண்ணிய வடிவானவனும், ஸர்வ ஸ்வாமியுமாய், தேவர்களின் நாயகனும், எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி ஒரே வடிவாக நின்றவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனாகவும், ‘ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம’ என்று உபநிஷத்தில் ஓதப்பட்டவனும், கீதையை ஓதியவனும், தான் ஒருவர்க்கு மனத்தினால் எட்டாதவனாக இருப்பினும், தன் அடியார்களுக்கு நெருங்கி இருப்பவனும், ஆலிலை மேல் பாலகனாகக் காணப்பட்ட போதும் அடியவர்களுக்குத் தந்தையாக விளங்குபவனுமான பகவான் திருஎவ்வுளூரில் கண் வளர்ந்தருளினான் என்று கூறுகிறார். மேலும் நாம் உடல்கள் அல்ல. அழியாத ஆத்மா என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆழ்வார் இப்பாசுரத்தை நமக்கு வழங்கியள்ளார்.
சீதையாய் அவதரித்து பந்தைப்
பிடித்து மெல்லிய விரல்களை உடையவளும், குளிர்ந்த தாமரையில் பிறப்பிடமாகக் கொண்ட மகாலட்சுமி
உறையும் மார்பை உடையவனும்,
நீலமணி போன்ற நிறத்தை உடையவனும், சுவர்க்கத்தில் வாழும் தேவர்களுக்குத் தலைவனான
தேவேந்திரனுக்கும் நாயகனாக விளங்கும் எம்பெருமான் திருஎவ்வுளூரில் சேவை
சாதிக்கின்றான் என்ற ஆழ்வார் கூறுகிறார்.
ஒரு நாளும் எம்பெருமைனைப்
பிரியாமல் பெருமான் மீது கொண்ட நித்ய அன்பினாலும், கையில் பந்துமாய் கொண்டு, அந்தப்
பந்தையும் தாங்கி ஏந்த முடியாத தளிர் போன்ற மெல்லிய விரல்களைக் கொண்டவளான
பிராட்டியானவள் தனது குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாகக் கொண்டவள். என்றுமே
எம்பெருமானை நினைத்தவண்ணம் உள்ளதால் இளம் பூவும் அவளுக்கு நெரிஞ்சி முள்ளாக
நினைத்து அவனது திருமார்பில் வாசம் கொள்கிறாள். நீலநிறம் என்பது தூய்மையின்
அடையாளம். எனவேதான் பகவான் நீலநிறத்தைக்
கொண்டிருக்கிறார். அத்தகையவன் திருஎவ்வுளூரில் வாசம் கொண்டுள்ளான் என்பது இதன்
கருத்தாகும்.
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள்
கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே.
1067

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக