நம்மாழ்வார் திருவாய்மொழி
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே? 3612
தெருவெல்லாம் செங்கழுநீர்ப்
பூக்களின் நறுமணம் கமழும் திருக்காட்கரையில் குடிகொண்டிருக்கும் மாயவனின்
அதிஅற்புதமான லீலைகளை நினைக்கும் போதெல்லாம் உள்ளம் கரைந்து மயங்குகிறது.
ஆத்மாவையும் கடந்து ஆசை பொங்கிப் பெருகுகின்றது. தொண்டனான நான் இதை அடக்க என்ன
செய்யப் போகிறேன் என்று கேட்கிறார் ஆழ்வார்.
பெருமானை எப்படியாவது தரிசிக்க
வேண்டும் என்று மனம் துடிக்கின்றது. தெருவெல்லாம் அழகிய செங்கழுநீர் மலர்கள்
சூழ்ந்துள்ளது. பெருமானுக்கு விருப்பமான தாமரை மலரில் மாலை சமர்ப்பிக்கிறார்கள்.
தாமரையே தாமரையை சாத்திக்கொண்டுள்ளது என்கிறார்.
பெருமானை தரிசிக்க முடியாத நிலையில் தன் ஆத்மாவால் தாங்க முடியாதபடி ஆவல்
பொங்குகின்றது. ஆற்றுப்பெருக்குப் போன்று மென்மேலும் வருகின்ற காதலானது அணுவளவில்
உள்ள ஆத்மாவின் அளவாக உள்ளதே. மனம் உருகாதபடியும், வேட்கை பெருகாதபடியும் இருக்க நான் என்
செய்வேன். அவனது திருக்குணங்களை தவிர்த்தாலன்றி இது நடவாது. சௌந்தர்ய சௌசீல்ய
குணங்களில் என்னை ஆட்கொண்டுள்ளான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
நினைதொறும் சொல்லும்தொறும் நெஞ்சு
இடிந்து உகும்
வினைகொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே. 3613
சுனைகளையும், மலர்வனங்களையும்
கொண்ட திருக்காட்கரையில் வாழும் என் அப்பனே! பாவங்களை நீக்குகின்ற உன் கல்யாண
குணங்களை நினைக்கும்போதும்,
சொல்லும் போதும் என் நெஞ்சம் உருகி நீராய்க் கரைகின்றது! கொடிய வினைகளைப்
போக்குகின்ற உன் சீலத்தை நான் பாடும் சமயத்திலோ என் ஆருயிர் வெந்ததைப் போல்
பதமாகிவிடுகிறது. ஆதலால் உனக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டுமென்பதே மறந்து
விடுகின்றது என்கிறார் ஆழ்வார்.
இத்தலத்தில் பெருமான் தனது
சௌசீல்ய குணத்தைக் காட்டுகின்றார். மிகப் பெரியவன் மிக எளிமையானவனோடு சரிசமமாக
இருப்பத்தே சௌசீல்ய குணமாகும். ஆச்சாரிய ஹிருதயத்தில் அழகிய மணவாளர் போகத்தில்
தட்டுமாறும் சீலம் காட்கரையிலே கரையழித்தும் என்கிறார். ஆழ்வாரிடத்தில் உள்ள தன்மை
பெருமானிடத்திலும், பெருமானிடத்தில்
உள்ள தன்மை ஆழ்வாரிடத்திலும் தட்டு மாறியுள்ளது என்கிறார். இத்திவ்ய தேசத்தில்
பெருமான் ஆழ்வாருக்குத் தொண்டு புரிய வந்துள்ளார். உன்னோடு நான் கலந்து பரிமாறும்
பரிமாற்றத்தை நினைக்க சக்தியற்றவனாகியுள்ளேன். பாவங்களை அகற்றும் உனது
திருக்குணங்களை நினைக்கும் போது நெஞ்சு சிதலமாகிறது. மனத்தால் நினைக்க முடியாததை வாயால் எவ்விதம்
எடுத்துரைப்பேன். இவரது வாக்கானது பேசிக் கொண்டே என் செவியில் புகுந்து என் நெஞ்சை
அழிக்கின்றது. பகவானின் கல்யாண குணங்களை எண்ணி எண்ணி மனம் உருகிப்போகின்றது.
இத்தகைய உருக்கத்தினாலேயே உன்னை வந்து அடைகிறேன் என்கிறார் ஆழ்வார்.
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப்
புகுந்து என்னை
ஈர்மைசெய்து என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன். 3614
கார்மேகம் போன்ற நிறம் கொண்டவன், அழகு நிரம்பிய
சோலைகள் நிறைந்த திருக்காட்கரையில் குடியிருக்கும் என் அப்பன் வஞ்சனையினால்
என்னுள் புகுந்து வஞ்சித்த விதத்தை நான் அறியவில்லை! எனக்குத் தாரகனாயிருப்பவன்
போல் தன் அருளால் என்னைக் கவர்ந்து, நெஞ்சுள் புகுந்து அவன் பெருமைகளில் என்னை மூழ்கும்படி
செய்து என் உயிரானான். ஆனால், அந்தக் கள்வன் என் உயிரையல்லவா கொள்ளை கொண்டான் என்கிறார்
ஆழ்வார்.
முறை தவறாது என்னுள் புகுந்தான்.
தான் பரிமாறுவதாக முன்னமே சொல்லியிருந்தால் இவர் இசைய மாட்டார் என்றெண்ணி வஞ்சகமாக
என்னுள் புகுந்தார். புகுந்தபின் தன் சீர்மயைக் காட்டத் தொடங்கினார். தான்
தாழ்ந்து தனது சீலகுணத்தைக் காட்டத் தொடங்கினான். அதனால் மனத்தை ஈடுகொள்ளும்படியாயிற்று.
இத்தகைய செயல்களைச் செய்தவன் திருக்காட்கரையில் கார்முகில் வண்ணனாக
காட்சியளிக்கிறான். என்னோடு கலந்து என்னுடைய நீர்மையையும் கொள்ளை கொண்டு போனதால்
கடலை கழுத்தளவு பருகிய கார்மேகம் போல் காட்சியளிக்கிறான் என்கிறார்.
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும்
நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு அருளே. 3615.
ஊழிக்காலத்தில் தன்னுள் அனைத்து
உலகங்களையும் வைத்துக் காத்தவன், முறை தவறாதபடி எல்லாவற்றிலும் அணுவாக இருந்து இயக்கும்
எம்பிரான், வாசனை
வீசும் சோலைகள் நிறைந்த திருக்காட்கரையில் அருள்புரியும் என் அப்பன், என்னையும் ஒரு
பொருட்டாக எண்ணி, திருவருள்
புரிந்து, சிறியவனான
என் ஆத்மாவில் குடியிருந்து என்னைக் கரைக்கிறானே என்கிறார் ஆழ்வார்.
என்னை ஒரு பொருட்டாக எண்ணி என்
ஆத்மாவில் குடியிருந்து என்னைக் கரைக்கின்றானே! என்று ஆழ்வார் கூறுகிறார். நமக்குள்ளே இருக்கும் ஆத்மாவும், பகவானுக்கும்
நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆத்மா உண்மைப் பொருள், பகவானும்
உண்மைப் பொருள். அதனால்தான் பொய்யான உடல்
இச்சைகளைத் துறந்து ஆன்ம உணர்வில் நாம் மூழ்க வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
வேதங்களும் இதையே கூறுகின்றன. பகவானின்
கருணையினால்தான் ஆத்மா மலர்கிறது. எனவேதான் அற்பப் பொருட்களை விடுத்து ஆண்டவனை நாட
வேண்டும் என்கிறார்.
திரு அருள் செய்பவன் போல என்னுள்
புகுந்து
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
திரு வளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே! 3616
எனக்குக் கருணை செய்கிறவன் போல்
என்னுள் புகுந்து என் உடலையும் உயிரையும் விழுங்கி என்னை ஸ்வீகரித்துக் கொண்டான்.
அழகான சோலைகள் நிரம்பிய திருக்காட்கரையில் குடியிருக்கும் என் அப்பன், கரிய
திருமேனியுடைய நம் கண்ணன் கள்ளத்தனம்தான் எப்படி இருக்கின்றது என்று கேட்கிறார்
ஆழ்வார்.
எம்பெருமான் என்னை அடிமை கொள்வது
போன்று என் சரீரத்தையும்,
என் ஆன்மாவையும் ஆட்கொண்டுவிட்டான். இப்பாசுரத்தில் அடிமை கொள்வதையே
திருவருளாகப் பாவிக்கின்றார். திருவிருத்தத்தில் நான் அழுக்குடம்பு என்று நான்
விலகி விலகி போனாலும் அவன் விரும்பி என்னை ஏற்றுக் கொண்டு என்னுள் புகுந்தான்
என்று கூறுகிறார். பகவான் எனக்கு கருணை புரிந்ததால்தான் என்னை நாளும்
நல்வழிப்படுத்தி நன்னெறியில் செல்லவிட்டான்.
பகவான் நம்முள் புகுவது நம் முற்பிறவிப் பலனே. இக்கருத்தினையே நமக்காகச்
சொல்லி நம்மை நல்வழிப்படுத்துகிறார்.
என் கண்ணன் கள்வம் எனக்குச்
செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க் கோது இது
புன்கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே. 3617
என்
கண்ணனின் கள்ளத்தனங்கள் எனக்கு உண்மையிலேயே விஷமமானவை என்று தோன்றுகின்றன. அந்தக் கண்ணன் என்னில் கலந்து என் உயிரைக்
கவர்ந்து சென்றதால் வந்த குற்றம் இத்தகைய தோற்றங்கள் அதிகமாயின! துன்புற்று
இராப்பகலாய் என் கண்ணன் என்று புலம்பி அவன் குடியிருக்கும் திருக்காட்கரையைப் நான்
போற்றுகின்றேன் என்கிறார் ஆழ்வார்.
கண்ணன் கள்வனென்று தெரிந்தும்
அவனை விட்டு அகலாமல் ஆழ்வார் நெருங்கி இருப்பதற்கான காரணம் அவனை கண்டவுடன் அவனது
வஞ்சனைகள் அகன்று விடுகின்றதே. அதனால் நான் தோற்று விடுகிறேன். நான் என்ன செய்வேன்
என்கிறார். ஒருநாள் அவன் களவிலே அகப்பட்டால் நான் மீளமாட்டேன். எம்பெருமானைப்
பார்த்த மாத்திரத்தில் அவன் செய்யும் அத்தனைக் குறும்புகளும் என்னால்
மறக்கடிக்கப்படுகின்றன. அவன் செயல்கள் எனக்கு நன்மையைத் தருவது போல் உள்ளன.
இத்தகைய கண்ணன் என்னுள் புகுந்து என்னை ஆட்கொண்டுவிட்டான் என்கிறார் ஆழ்வார்.
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா
என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோள் குறைபட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே.
3618
திருக்காட்கரையில் கோயில்
கொண்டிருக்கும் கண்ணா! என்று காதல் நோய் அதிகமாகி அவனை நினைத்துக் கரைந்து
உருகுகின்றேன். அவனால் ஆட்கொள்ளப்பட்ட நானும் சம்மதித்து என்னோடு கூடி என் உயிரைக்
கவர்ந்து சென்ற மாயன் முழுமையாக திருடாமல் சிறிது உயிரை மிச்சமாக விட்டு
வைத்திருக்கிறான். அந்த மிகுதி இருக்கிற உயிர்தான் அவனைத் துதித்துக்
கொண்டிருக்கிறது என்கிறார் ஆழ்வார்.
அவனைக் காட்டிலும் அவன்
இருக்கும் ஊரின் மீது எனக்கு அலாதியான பற்று ஏற்பட்டுவிட்டது. ஊருக்கு அவனால்
ஏற்றமா அல்லது ஊரால் அவனுக்கு ஏற்றமா என்பது போலுள்ளது. அதனால் ஊரையும் சொல்லி
அவனையும் சொல்லி கண்ணா! என்றும் காட்கரை அப்பனே! என்றும் ஆழ்வார் அழைக்கின்றார்.
பரமபதநாதனென்றால் உனக்கு ஏற்றம் இல்லையா. அதனால் தான் இத்தலத்தில் வந்து வாசம்
செய்கிறாயா என்று கேட்கிறார். எல்லாவற்றையும் பறித்துக் கொண்ட கண்ணன் என் உயிரை
விட்டு வைத்துள்ளான். அதுவும் அவனை நாடியே செல்லும் என்கிறார்.
கோள் உண்டான் அன்றி வந்து என்
உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்
காள நீர் மேகத் தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது? என் ஆர் உயிர் பட்டதே! 3619
நீருண்ட காளமேகம் போன்ற
திருக்காட்கரையில் உறையும் என் அப்பனுக்கு என் ஆருயிர், அவனைத்
தரிசித்த அன்றே அடிமைப்பட்டு விட்டதே! என்னிடம் ஒரு பலனும் எதிர்பாராமலே ஒரு
காரணமும் இல்லாமல் தினம் தினம் வந்து என் உயிரினில் தங்கி என்னை இனிய
அனுபவத்துக்கு உள்ளாக்கிப் என்னை விட்டுப் பிரிந்து செல்கிறான். இப்படியே என் உயிர் முழுவதுமாகக் கொள்ளை
கொண்டுவிட்டானே! என்கிறார் ஆழ்வார்.
தன் உயிரைக் கொள்ளைக் கொண்டதை
இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார். இந்த
உயிர் பகவானுக்குச் சொந்தமானது என்பதை நாம் அடிக்கடி மறந்து போய்க்
கொண்டிருக்கிறோம். அதனால் பகவானின் நினைவு நமக்கு அறவே மறந்து விடுகிறது. உண்பது, உறங்குவது, மரணம் அடைவது
இதுவே பிரதானமாகக் கருதி வாழ்கிறோம். இத்தகைய அவலமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டும். இந்த உயிர் பகவானுக்கு சொந்தமானது என்ற எண்ணத்தை நாம் அடிக்கடி
நினைத்து வந்தால் இறுதி காலத்தில் அது நம்மை விட்டுப் போனாலும் அவரால் வழங்கப்பட்ட
உயிரை அவர் எடுத்துக் கொள்கிறார் என்ற எண்ணம் மேலோங்கினால் பல துன்பங்கள் நம்மை
விட்டு விலகும் என்ற கருத்தைக் கூறுகிறார்.
ஆர் உயிர் பட்டது எனது உயிர்
பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனி வாயது ஓர்
கார் எழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வவாரிக்கே? 3620
எழிலான, கார்மேகம்
போன்ற திருக்காட்கரையில் கோயில் கொண்டுள்ள, சிறப்பான அழகுடைய நான்கு திருத்தோள்களைக் கொண்ட
தெய்வத்திடம் என் ஆருயிர் அடிமைப்பட்டிருக்கிறது. அவனது கண்கள் பெரிய இதழ்களைக்
கொண்ட தாமரை போலிருக்கும். திருவாய் கொவ்வைக் கனியை ஒத்திருக்கும். அவனிடம்
பறிகொடுத்த எனது உயிர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.
பெருமானது திருக்கண்களும், திருவதரங்களும்
ஆழ்வாரைப் படுத்திய பாட்டைக் கூறுகிறார். மேலும் திருக்காட்கரை கோயிலும் அவரை
நாளும் விடாது படுத்தியது என்கிறார். எம்பெருமானின் திருக்குணங்களில் முழுதும்
ஈடுபட்டவர்கள் எல்லோருக்கும் இத்தகையதான பாடு வருகின்றது என்கிறார். அழியக்கூடிய
உடலைப் பற்றி அவர் கவலை கொள்ளாமல் ஆத்மாவைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார்.
ஆத்ம ஸ்வரூபம்தான் நமக்கு உண்மையான ஆனந்தத்தைத் தருகிறது. இதனை நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கூறுகிறார். இதனை மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள
வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன்
காணில் என்று
ஆர்வு
உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத்
தான் என்னை முற்றப் பருகினான்
கார்
ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே. 3621
கார்மேகத்தை ஒத்த திருமேனி நிறம்
கொண்ட திருக்காட்கரை அப்பன் மிகவும் வேகமானவன். எப்படிச் சொல்கிறேன் என்றால்
அவனைக் கண்டதும் உடனேயே வாரி எடுத்து விழுங்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ஆனால் அவனோ என்னை முந்திக் கொண்டு, என்னை இளகச் செய்து முற்றிலுமாகப் பருகிவிட்டான் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
திருவாய் மொழி ஆயிரத்துள்
இப்பாடல் உயிராகக் கருதப்படுகிறது. பகவானைப் பார்த்த மாத்திரத்தில் அவரை
வாரியெடுத்து விழுங்கி விடவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்கு முன்னரே பகவான்
ஆழ்வாரை விழுங்கி விட்டாராம். எத்தகையதொரு சௌசீல்யம். இத்தகைய குணத்தை எங்கு போய் சொல்வேன் என்று
வினவுகிறார். பகவான் இவ்வாறு தொண்டர்களை அணைத்து தமது சௌசீல்ய குணத்தை காட்டுவது
ஒரு சேதகன் நமக்கு கிடைப்பான் என்கின்ற ஒரு நப்பாசையால்தான். இப்பாசுரத்தின் மூலம்
ஆழ்வார் ஆத்ம ஐக்கியத்தை நினைவுபடுத்துகிறார்.
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப் பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே. 3622
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக