பெரிய திருமொழி திருமங்கையாழ்வார்
தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை
வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனைச் செங் கமலக் கண்ணானை
நாவாய் உளானை நறையூரில் கண்டேனே. 1520
பரிசுத்தமான வாயையுடைய பெரிய
திருவடியான கருடனின் மேலேறி வந்து தடாகத்திலே, கஜேந்திரனான யானையின் துயரினைப் போக்குவதற்காக சுதர்சனச்
சக்கரத்தை ஏவி யானையின் காலை கௌவிக் கொண்டிருந்த முதலையை இரு துண்டாக்கி அழித்த
தேவாதி தேவன், செந்தாமரைக்
கண்ணனை, திருநாவாய்
என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருப்பவனைத் திருநறையூரிலும் தரிசித்தேன் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
கஜேந்திரனைக் காத்தருளிய
செந்தாமரைக் கண்ணன், தேவாதி
தேவன் என்று பெயர் பெற்று பரமபதத்தை விட்டு எழுந்து திருநாவாய் என்னும்
திவ்யதேசத்தில் குடிபுகுந்தான். அது போன்று பரமபதத்தைப் போன்றே இருக்கும்
திருநறையூரைத் தேடி குடிபுகுந்தான். எந்த பிறவி எடுப்பினும் பகவானை மறவாமல்
பூஜித்து வந்தால் நம் தீவினைகள் களைந்து பகவான் நம்மைக் கரை சேர்த்து விடுவான்.
மேலும் புதிதாகவும் எந்த பாவங்களும் செய்யாத ஒரு மனநிலையினை பகவான் நமக்கு
அருள்வான். இத்தகைய அற்புத வழியினை ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கின்றார்.
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை
கொம்பு உலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே 1856
மிகப் பெரிய குவலயாபீடம் என்ற
யானையைப் பார்த்தவர்களுக்கு நடுக்கம் தர, அந்த யானை அஞ்சிக் கலங்குமாறு ஒரு தந்தத்தைப் பிடுங்கி
வீசியவனை, விசித்ரமான
நடையை உடையவனும், அடியார்களின்
நம்பிக்கைக்கு உரியவனையும்,
மலர் வனங்கள் நிரம்பப்பெற்ற திருக்கோட்டியூரில் தரிசனம் செய்து நாளைத்
திருநாவாயில் சென்று வணங்குவோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
கண்டாரை நடுக்கம் கொள்ளக்கூடிய
வல்லமை மிகுந்த யானையை கம்சனால் ஏவி விடப்பட்டு கண்ணனை அழிப்பதற்கு வந்தது.
அத்தகைய யானையின் தந்தத்தை முறித்து மக்களை காத்தவன். அபயக்குரல் எழுப்பிய ஆயர்களை
நொடிப்பொழிதில் வந்து காத்தருளினான். எக்காலத்திலும் நம்மை ஒருநாளும் கைவிடமாட்டான்.
அத்தகையப் பெருமானை திருக்கோடியூரில் இன்று கண்டேன். நாளை திருநாவாயில் காண்பேன்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
குறுக்கும் வகை உண்டுகொலோ கொடியேற்கே? 3750
பரம போக்யனான ஸ்ரீமந் நாராயணனை
மனத்தில் நிலை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்திலே ஒருமையாக
நினைப்பவர்கள் ஈறு மணம் வீசும் குளிர்ச்சியான பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநாவாய்
என்னும் தலத்தை அடைய வேண்டும். அங்கு உறைந்திருக்கும் இறைவன் அனுபவ விரோதிகளையெல்லாம்
போக்கக் கூடியவனும், பாவங்களை
எல்லாம் நிரந்தரமாக அழிக்கக் கூடியவன். கொடியவனான எனக்கு அங்கே சென்றடையும்
பாக்கியம் உண்டோ என்று கேட்கிறார் ஆழ்வார்.
இத்தலத்துப் பகவான் எல்லாப்
பாவங்களையும் போக்கக் கூடியவன். கொடியவனான எனக்கு அங்கு செல்ல பாக்கியமுண்டா என்று
கேட்கிறார் ஆழ்வார். இவர் கொடிய பாவம் செய்தவரல்ல. ஆனாலும் பழியைத் தன் மேல்
சுமத்திக் கொண்டு உலகத்தவருக்காக இவ்விதமான வேண்டுகோளினை பெருமான் முன் வைக்கிறார்.
உலக ஆசைகளில் மூழ்கி இருக்கும் மக்களின் பாவங்களைப் போக்கிக் கொள்ள பகவான் உறையும்
இத்தகையத் தலங்களுக்குச் சென்று வர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கொடி ஏர் இடைக் கோகனகத்தவள்
கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப் பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப்பெறும் நாள் எவைகொலோ! 3751
பூங்கொடி போன்ற அழகிய இடையையுடைய
தாமரையில் அமரும் மகாலட்சுமியின் நாயகனும், கூரிய வேல் போன்ற விசாலமான திருக்கண்களையும் மென்மையும்
உடைய நப்பின்னையின் மணாளனுமான திரிவிக்கிரமன் குடியிருக்கும் சோலைகள் சூழ்ந்த
திருநாவாய் தலத்தை அடியேன் அடையும் நாள் எந்நாளோ என்று ஆழ்வார் கேட்கிறார்.
பெரிய பிராட்டியரோடும்
நப்பின்னைப் பிராட்டியரோடும் கூட அவன் எழுந்தருளியிருக்கின்ற திருயாவாயில் நான்
போய் புகுவது என்றோ என்று கேட்கிறார். கொடி போன்ற அழகிய இடையையுடையவளாய், தாமரை மலரைப்
போன்ற அழகிய பரிமளம் நிரம்பப்பெற்றவளாய், கூரிய வேல் போன்ற கண்களைப் பெற்ற நப்பின்னைக்கு மணவாளனாகத்
திகழ்பவன், இவ்விதம்
இரு பிராட்டிகள் அருகே சேவை சாதிக்கும் அழகை நான் கண்ணாரக் காண வேண்டாமா என்று
கேட்கிறார் ஆழ்வார்.
எவைகொல் அணுகப் பெறும் நாள் என்று
எப்போதும்
கவையில் மனம் இன்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே. 3752
ஸ்ரீமந் நாராயணன் உறையும்
குற்றமற்ற திருநாவாயைத் தரிசிக்கும் நாள் என்று வருமோ? என்ற எப்போதும்
எண்ணிக் கண்ணீர் விடுகிறேன். வேறொன்றிலும் மனம் செல்வதில்லை. திருநாவாயில் வாழும் பேறு பெற்ற அடியார் கூட்டங்களில்
ஒருவனாகக் கலந்து கொள்ளும் அந்த ஒரு நாள் என்று வருமோ தெரியவில்லை என்று
கேட்கிறார் ஆழ்வார்.
திருநாவாய் திவ்யதலத்தில்
மக்களோடு மக்களாக நான் சேவிக்கும் நாள் என்றோ என்கிறார். யான் அறியவிலையே என்று
வருத்தமுறுகிறார். இவ்வாறு நான் எப்போதும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
அடியார்களுடன் நான் குழுமியிருந்து பெருமானை தரிசிக்கக் காத்திருக்கிறேன். அவ்வாறு
கூடாமலிருக்கும் நிலையை எனக்குத் தருவது தகுமோ என்கிறார். இப்பாசுரம் மூலம்
திருத்தலங்களுக்கு அன்பர்கள் அடிக்கடி செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
பெருமானை அடையும் உயர் நிலையை நாமெல்லோரும் அடைய வேண்டுமென்பதே ஆழ்வாரின்
விருப்பமாகும்.
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன
நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீள் ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
வாள் ஏய் தடம் கண் மடப் பின்னை மணாளா! 3753
ஓங்கி உயர்ந்த மலர்வனங்கள்
சூழ்ந்த திருநாவாய்த் தலத்திலே உறையும் வாள் போன்ற விசாலமான கண்களும் மென்மையும்
கொண்ட நப்பின்னை மணாளனே! உன்னை விட்டுப் பிரியாமல் பணி செய்யவே ஆசைப்படுகிறேன்.
எனக்கு அந்தப் பாக்கியம் என்று கிடைக்கும் என்ற தெரியவில்லை என்று கேட்கிறார்
ஆழ்வார்.
இந்த ஆத்மா உள்ளவரை நான்
திருநாவாய் பெருமானுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டுமென்று ஆவலாக உள்ளேன்.
நப்பின்னைப் பிராட்டியரோடு கூட இருக்கும் இருப்பின் அழகினை நான் காண்பது எந்நாளோ
என்று கேட்கிறார். நான் பெருமானைப் பிரிந்து துக்கப்பட வேண்டிய நாள் எவ்வளவு நாள்
உள்ளதோ என்று ஆதங்கத்துடன் கேட்கிறார். நித்ய சூரிகள் புரியம் கைங்கர்யத்தை நானும்
செய்ய ஆவலாக உள்ளேன். கைங்கர்யம் புரிய புஷ்பங்களுக்குக் குறையில்லாத இடமாக
திருநாவாய் திகழ்கின்றது.
மணாளன் மலர் மங்கைக்கும் மண்
மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண் ஆரக் களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்டே?
3754
மகாலட்சுமிக்கும், பூமிதேவிக்கும்
மணாளனானவனை, உலகத்து
உயிர்களுக்கெல்லாம், தேவர்களுக்கெல்லாம்
கண் போன்றவன், வைகுண்டத்தில்
உறைபவன், விரும்பிக்
குடியிருக்கும் தலமான திருநாவாயைக் கண் குளிரத் தரிசித்து ஆனந்தப்படும் நாள் என்று
வருமோ என்று வினவுகிறார் ஆழ்வார்.
என் கண்களில் விடாய்த் தீர நான்
திருநாவாய்ப் பெருமானைக் காண்பது எந்நாளோ என்கிறார் ஆழ்வார். மலர் மங்கைக்கும்
மண்மடந்தைக்கும் மணாளனாக எம்பெருமான் திகழ்கிறான். வானுலகிலுள்ள தேவர்களுக்கும்
மண்ணுலகிலுள்ள மனிதர்களுக்கும் என்றுமே தேவனாகத் திகழ்கிறான். பிராட்டிமாரும்
தானும் தனக்குத் தகுதியான பரமபதத்திலிருந்து நித்யசூரிகளை காக்கிறான். இறுதிவரை
நம் கூட இருந்து நம்மைக் கரை சேர்ப்பவன் பெருமான் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக்
கொள்ளவேண்டும் என்பது இதன் கருத்தாகும்.
கண்டே களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே? 3755
வண்டுகள் நிறைந்த பூஞ்சோலைகள்
சூழ்ந்த திருநாவாயில் கோயில் கொண்டிருக்கின்ற எங்களின் யாதவத் தலைவனே! அடியேன்
பூலோகத்தில் உன் சன்னதியைக் கண்டு களிக்கும் நாள் என்ற வருமோ? குற்றம்
குறைவின்றி நான் உனக்குத் தொண்டனாய் இருப்பதை அறியாயோ என்று கேட்கிறார் ஆழ்வார்.
குற்றம் குறையின்றி நான்
இருப்பதை நீ அறியாயா? உன்னைத்
தரிசிக்கும் பேறு எனக்கு எப்போது கிட்டும்? என்று ஆழ்வார் கேட்கிறார். தூய்மையானவர்கள்தான் இறைவனின்
அருளைப் பெற முடியும் என்பதை ஆழ்வார் வலியுறுத்துகிறார். பிறக்கும்போது நாம்
தூய்மையானவர்களே. இடையில் ஏற்பட்ட மாயத்திரைகள் நம்மை மறைத்து நம்மை பாவம் செய்யத்
தூண்டுகிறது. இதனை நன்குணர்ந்து பிறவிகள் களைய இம்மாயத்திரையை நம் அறிவு கொண்டு
விலக்கி நாம் இறைவனின் பாதங்களை அடைய முயற்சித்தல் வேண்டும் என்பதே இப்பாசுரம்
நமக்குக் கூறும் அறிவுரையாகும்.
கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய்
தேவாசுரம் செற்றவனே! திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே. 3756
மூவுலகங்களுக்கும் மன்னனாய்
இருந்த மகாபலியிடம் சென்று மூன்றடி நிலத்தை யாசித்துப் பெற்று அளந்து கொண்டவனே!
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களை அழித்த திருமாலே!
திருநாவாயில் குடியிருக்கும் என் நாராயண நம்பி! அந்தோ இவன் நமது பக்தன் என்று
அருள் செய்யக் கூடாதா என்று கேட்கிறார் ஆழ்வார்.
மூவுலகின் மன்னனான மகாபிலியிடம்
மூன்றடி மண் கேட்டு யாசித்தவனே என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். உலகத்தை அளந்தது
தீயசக்தியை பாதாளத்தில் அழுத்துவதற்குத்தான். நல்லோர்களை வாழ வைக்க சில அசுர
சக்திகளை பகவான் நிர்மூலமாக்குகிறான். ஆணவத்தினால் அழிந்த மகாபலியை கீழே அழுத்தி
அவன் திருந்தி நல்லவனாக வாழ பாதளலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இதனை உணர்த்த
ஆழ்வார் இப்பாசுரம் மூலமாகத் தெரிவிக்கிறார்.
அருளாது ஒழிவாய் அருள் செய்து
அடியேனைப்
பொருளாக்கி உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே! 3757
தென் திருநாவாயிலே
எழுந்தருளியிருக்கின்ற என் தெய்வமே! அடியேனை ஒரு பொருட்டாக நினைத்து உன் பொன்னான
திருவடியின் கீழ்ப் புகும்படி திருவருள் புகுந்தாலும் சரி, என்னிடம் கருணை
காட்டாதிருந்தாலும் சரி! ஆனால், அறியாமையை நீக்கி உன்னை என் நெஞ்சத்தில் இருத்திக் கொள்ளும்
தெளிந்த அறிவினைத் தரவேண்டுகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
என்னை ஒரு பொருட்டாக கருதி
உன்னுடைய அழகிய பொன் போன்ற திருவடிகளில் புகும்படி செய்தாலும் சரி, கருணை
காட்டாவிட்டாலும் சரி அறியாமையை நீக்கி உன்னை மனதில் இருத்திக் கொள்ளும் தெளிந்த
அறிவினை எனக்குத் தர வேண்டும். துன்பம் வரும்போது அறியாமையால் பகவானை
நிந்திக்கிறோம். அவ்விதமில்லாமல் எந்நிலையிலும் உன்னை மறவாத நிலையினை எனக்கருள
வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
தேவர் முனிவர்க்கு என்றும்
காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திருநாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி? அந்தோ 3758
ஸ்ரீமந் நாராயணன் என்றும்
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும்
காண்பதற்கு அரியவன்.
மும்மூர்த்திகளுக்கும் முதல்வன். மூவுலகையும் ஆளும் அந்தத் தேவன் விரும்பி
உறையும் திருநாவாய் திருத்தலத்தை அடைந்து அவன் தரிசனம் பெறும் புண்ணியசாலி யாரோ? அந்தோ! நான்
அந்தப் பேற்றினைப் பெறவில்லையே! என்று வருந்துகிறார் ஆழ்வார்.
ஸ்ரீமந் நாராயணன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும்
காண்பது அரிது என்கிறார். ஆனால் அன்பர்களுக்கு அவன் எளியவன் என்கிறார். சுயநலமற்ற
தூய அன்பிருந்தால் ஓடி வருவான் என்கிறார். பகவானை தரிசிக்கும் பாக்கியம் பெற
வேண்டுமானால் நாம் அன்புடையவர்களாக மாற வேண்டும். அத்தகைய நிலையில் நிச்சயம் அவனை
தரிசிக்கலாம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
அந்தோ அணுகப் பெறும் நாள் என்று
எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்
கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
வந்தே உறைகின்ற எம் மா மணி வண்ணா!
3759
பூங்கொத்துக்கள்
நிறைந்திருக்கின்ற தோட்டங்கள் சூழ்ந்த திருநாவாயில் வந்து அருள் புரிகின்ற எம்
மாமணி வண்ணனே! அந்தோ! திருமாலே! உன்னை அடையப் பெறும் நாள் எப்போது என்று சிந்தை
கலங்கிக் கூவுவது உன் செவியில் ஏறவில்லையா! என்று கேட்கிறார் ஆழ்வார்.
உன்னை அடைய என் சிந்தை கலங்கிக்
கூவுவது உன் செவியில் ஏறவில்லையா? என்று ஆழ்வார் வினவுகிறார். அவருடைய இந்த வார்த்தையில் உரிமை
கலந்த அன்பை வெளிப்படுத்திக் கூடியவைகளாக உள்ளன.
அன்புணர்ச்சி அதிகரிக்கும்போது உரிமையும் தனாக வந்துவிடும். ஆழ்வார்
பெற்றிருக்கும் இந்த பாக்கியத்தை உலகத்தவர் எப்போது பெறப் போகிறார்கள். சிந்தை
கலங்குமாறு பகவானை எண்ணி உருகும் நாள் எப்போது வரும் என்று கேட்கிறார்.
வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானை
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே.
3760
மணிகள் பதிந்த மாடமாளிகைகள்
புதுப்பொலிவுடன் திகழும் சிறந்த ஊரான திருநாவாயில் உறையும் ஸ்ரீமந் நாராயணனைப்
பற்றி திட்பமான மதில்கள் சூழ்ந்த தென்குருகூரில் பிறந்த சடகோபர் இசையோடு கூடிய
ஆயிரம் தமிழ்ப் பாசுரங்களால் போற்றிப் பாடினார். அவற்றில் இப்பத்துப் பாடல்களையும்
பக்தியுடன் பாடக்கூடியவர்களை இவ்வுலகை ஆட்சி செய்த மல்லிகையைப் போலே மணம் கமழ
வாழ்வார்கள் என்று கூறுகிறார்.
ஸ்ரீ சடகோபர் இயற்றியுள்ள
இத்திருவாய் மொழியில் பகவானைத் தரிசிக்கும் பாக்கியம் எப்போது கிடைக்கும் என்ற
தோரணையில் வினா எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளன. அதே சமயம் பகவானின் பெருமைகளை
நம் மனதில் பதிய வைக்கும் விதத்திலும் இப்பாசுரங்கள் வழிகாட்டின. நாம் வெற்றுடல்கள்
அல்ல. அழியாத ஆத்மாக்கள் என்பதைக் குறிப்பாக உணர்த்தின. ஆழ்வார் இப்பாசுரத்தின்
மூலம் வாழ்க்கையின் இலட்சியத்தை வெகு அழகாக எடுத்துரைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக