திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தனுர்யாகம் என்ற திருவிழாவினை கம்சன் சிறப்பாக நடத்தினான். அதற்கு கண்ணனை வரவழைத்து மல்லர்களைக் கொண்டு அவனை அழிப்பது என்ற எண்ணத்தில் இருந்தான். கண்ணனைக் கொல்வதற்காக மதம் பிடித்த குவலயாபீடம் என்ற யானையைக் கொண்டு அவனை கொல்லத் துணிந்தான். ஆனால் கண்ணனானவன் அனைவரையும் அழித்து துவம்சம் செய்தான். அத்தகையவன் திருபுரமெரித்த சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை பதரிகாச்ரமப் பெருமானாக நின்று போக்கி சிவனைக் காத்தார். களைந்தொழிந்த தேவனும் எதிரிகள் வீழும்படி சாட்டையை திருக்கையில் பற்றிக்கொண்டு பார்த்தசாரதியாய் சேவை சாதிக்கின்றான். தனது சிற்றன்னை சொன்ன சொல்லை ஏற்று முடியினைத் துறந்து வனம் சென்றவன். இவ்வாறு கண்ணனாகவும், ராமனாகவும் அவதரித்து அக்கால மகான்களை வாழ்வித்தருளின பகவான் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.
பகவான் வேதத்தின் பொருளாகவும், சுவையாகவும்
விளங்குபவன். பற்றற்ற வாழ்வினை மேற்கொள்ளும் முனிவர்கள் உண்ணும் குற்றமற்ற கனி
போன்றவனும் அவனே. உலகத்தார் பணிந்து போற்றும் ஆதிநாயகனும் அவனே. அமிர்தத்தைப்
போன்றவனாவான். என்னை எந்நாளும் அடிமை கொண்டவன்.
இத்தகைய பெருமைகள் உடையவனை நிகரில்லலாப் பெண்கள் வாழும் மாடங்கள் நிறைந்த
திருமயிலையின் அடுத்துள்ள திருவல்லிக்கேணியில் கண்டேன் என்ற கூறுகிறார் ஆழ்வார்.
பகவான் வேத ஸ்வரூபியாக
இருப்பவன். உலகில் ஒவ்வொரு மக்களின் விருப்பத்திற்கேற்றவாறு உபாயங்களையும், பலன்களையும்
வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்படி அளிப்பவன். நந்தகோபன் வயிற்றில்
பிறந்த ஆனைக்கன்று போன்ற பிள்ளையானவன். தினமும் அவனைக் காண வேண்டும் என்ற ஆவலைத்
தூண்டுபவன். பூமியில் உள்ளோரெல்லாம் வணங்கித் துதிக்கும் ஜகத்காரணனானவன். தன்னை
விரும்பி வருபவனைத் தூக்கி கழுத்தில் அமர்த்தி சுமப்பவனும், தன்னை
நிந்திப்பவர்களை விட்டு விலகும்படி இருப்பவனும் அவனே. தினமும் சேவிக்கத்தகுந்த
வடிவழகைப் பெற்றவனானவன் திருவல்லிக்கேணியில் வாசம் செய்கின்றான் என்பது இதன்
பொருளாகும்.
கம்சன் பலவிதமாக கிருஷ்ணனைக் கொல்வதற்கு முயன்று தோற்றுப் போனான். பூதனை என்னும் அரக்கியை பெண் உருவம் கொண்டு தனது விஷப்பாலை அருந்திக் கொல்ல நினைத்தாள். கிருஷ்ணன் அவளை கொன்று முடித்தான். அதுபோன்று திருமால் தேவர்களுக்காக பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, அசுரர்கள் அதனைப் பறித்தனர். ஜெகன்மோகனனான பெருமான் மோகினி உருவம் கொண்டு அமுதத்தை மீட்டெடுத்தார். இத்தகைய பெருமான் நம்மைக் காக்க திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான் என்பது இதன் பொருளாகும்.
இந்திரனுக்கென்று யாதவர்கள்
கொண்டாடிய விழாவில் பழங்காலம் தொட்டு செய்து வருகின்ற மந்திர விதிப்படி பூஜை
நடத்தாமல் தடுத்த கண்ணன் மீது சினம் கொண்டு இடைவிடாமல் மழை பொழிவிக்க ஆயர்கள் மனம்
நொந்தனர். எங்கள் தலைவனே! எங்களோடு பசுக்கள் இனமும் துன்பப்படாது காத்தருள்வாய்
என்று பிரார்த்தனை செய்தனர். அப்போது பெரிய கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து
மழையைத் தடுத்து அருளினவனை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.
இந்திரனுக்கு செய்யவுள்ள பூஜை குறித்து கண்ணன் வினவியபோது வருடத்திற்கு ஒருமுறை இத்தகைய பூஜை செய்து அவனை மகிழ்விப்போம் என்றனர். உங்களை எல்லாம் காப்பது இந்த கோவர்த்தன மலை. எனவே அதனை வழிபடுவதே சிறந்தது என்றான். இதனால் சினம் கொண்ட இந்திரன் கோகுலத்தில் அடைமழை பெய்வித்து அவர்களை துன்பத்தில் ஆழ்த்தினான். ஆனால் கண்ணனோ கோவர்த்தனத்தை தாங்கிப் பிடித்து மக்களையும் ஆநிரைகளையும் காத்தருளினான். அத்தகையவன் இன்று திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.
தனக்கு இனிய துணைவியான தாமரையில் பிறந்த திருமகளை மார்போடு
இணைத்துக் கொண்டவன். பூமிதேவியின் நாயகன். ஆயர்குலச் செல்வியான நப்பின்னையின்
மணாளன். மற்றவர்க்கெல்லாம் உறுதுணையாக இருப்பவன், பஞ்ச பாண்டவர்களுக்காக தூது சென்றவன்.
என் குலத் தந்தையாகிய பகவானைத் திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.
திருப்பாற்கடலில் தோன்றிய
மகாலட்சுமியை துணையாக ஏற்றார் பகவான். பூமி பிராட்டிக்கு வந்த துன்பங்களைக்
களைந்து அவளையும் துணையாக ஏற்றார். ஏழு
காளைகளை அடக்கி நப்பின்னையின் மணாளனாகப் பெற்றார். இத்தகையவன் உலக உயிர்கள் அத்தனையும்
காத்து அருள்கிறான். சத்தியத்தைப் பின்பற்றுபவர்களுக்குத் துணையாக இருப்பவன்.
எளியவர்களையும் ஏற்பவன். இத்தகைய நற்குணங்களைப் பெற்ற பெருமான்
திருவல்லிக்கேணியில் உள்ளான். அவனை சரண் புகுந்து பேரின்ப வாழ்வினைப் பெற வேண்டும்
என்பது இதன் பொருளாகும்.
திருதராட்டினன் மகனாகிய
துரியோதனனின் தம்பி துச்சாதனன் திரௌபதியிடம் சென்று எங்களுக்கு அடிமை செய்வாய்
என்று சொல்ல, அது
கேட்டுத் துடித்து கண்ணனைக் காப்பாற்றுமாறு அழைத்தாள். திரௌபதியின் இந்த
வருத்தத்தால் கௌரவர்கள் நூறு பேர்களின் மனைவிகளின் மாங்கல்யம் இழக்குமாறு செய்தான்
கண்ணன். இந்திரன் மகனான அர்ச்சுனன் தேருக்குச் சாரதியாக நின்று பாரதப் போரில்
பாண்டவர்களை வெற்றி பெறச் செய்த பகவான் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.
அரசர்க்கெல்லாம் தாம் அரசன் என்ற
செருக்குடன் செயல்பட்ட துரியோதனனின் தம்பி துச்சாதனன் கூறிய சுடுசொற்களைக் காது
கொடுத்து கேட்க முடியாமல்,
கரிய இருள் போன்ற கூந்தலையுடைய திரௌபதி கண்ணனை நினைத்து ‘கோவிந்த!
புண்டரீகாக்ஷ; ரக்ஷமாம்
சரணாகதாம்’ என்று பெருமானைச் சரணடைந்தாள். அவளின் வயிற்றெரிச்சல் காரணமாகவே பார்த்தனுக்கு சாரதியாக இருந்து
கௌரவர்களின் மனைவிகள் அனைவரையும் கைம்பெண்களாக்கி கதறி அழுமாறு செய்து முடித்தான் கண்ணன். இத்தகைய பெருமான்
அல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக அருள் பாலிக்கின்றான் என்பது பொருளாகும்.
பரதாழ்வானும், சத்ருக்னனும், இலட்சுமணனோடு
சீதாப் பிராட்டியும் எல்லாக் காலங்களிலும் துதி செய்யும்படி வீற்றிருப்பவன்,
இராவணனைக் கொன்ற எம்பெருமான், அவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன். அல்லி மலர்கள் மணம்
வீசும் குளிர்ந்த சோலைக்குள் குயில்களின் பாட்டிற்கேற்ப ஆடும் மயில்கள் நிறைந்தது.
சூரியனின் கதிர்கள் நுழைந்தறியாத சோலை சூழ்ந்தது அந்த திருவல்லிக்கேணி என்ற
பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
தந்தைக்கு மகனாக, தாய்க்குப்
பிள்ளையாக, மனைவிக்கு
கணவனாக, தம்பிக்கு
அண்ணனாக, பகைவர்களுக்கு
காலனாகத் திகழ்ந்தவன் இராமன். இலக்குமணன் ஸ்ரீராமனை விட்டு பிரிய இயலாத
காரணத்தினால் பிராட்டியுடன் தம்மையும் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டினான். இவற்றோடு
பரத சத்ருக்னனையும் தம் மனதில் சேர்த்தான். இத்தகைய ஸ்ரீராமனை திருவல்லிக்கேணியில்
கண்டேன் என்கிறார் ஆழ்வார். சூரியனே உள்ளே வராதவாறு குளிர்ச்சியான அழகிய மணம்
வீசும் சோலைகள் நிறைந்தும்,
அழகு மயில்கள் நடனம் புரியவும், குயில்கள் கானம் இசைக்கும் தலமாக இத்தலமாக விளங்கியது என்ற
பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது.
பள்ளியில் படித்துவிட்டு வந்த
தன் மகனாகிய பிரகலாதனுடைய வாயிலிருந்து விஷ்ணுவின் ஓராயிர நாமங்கள் வெளிவர, அதை எள்ளளவும்
பொறுக்க மாட்டாமல் இரணியன் மகனைக் கோபித்தான். தூணிலே இருப்பான் என்று மகன் சொல்ல
தூணை கதையால் உடைக்க, பிறை
போன்ற வளைந்த பற்களுடன்,
தீக்கண்களுடன்,
அகன்ற வாயைத் திறந்து இரணியனை மடிமீது இருத்தி அழித்த தெளிசிங்கப்
பெருமானாக வந்தவரை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.
இறவாத வரம் பெற்றவனும், அனைவரும்
தன்னைக் கடவுளாக வணங்குமாறு செய்வித்த இரணியன் தன் மகனையும் ‘இரண்யாய நம: என்று
கூறுமாறு தெரிவித்தான். ஆனால் பிரகலாதனோ அஷ்டாக்ஷர மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’
என்று தொடர்ந்து சொல்லி வந்தான். இதனைக் கண்டு வெறுப்புற்ற அசுரன், மகனென்றும்
பாராமல் பல்வேறு சித்ரவதைகள் புரிந்தான். தூணில் இறைவன் உள்ளான் என்று கூற, இரணியன் தூணை
உதைக்க அதிலிருந்து பிரவேசித்த நரசிம்ம மூர்த்தி அசுரனை வதம் செய்தார். அத்தகைய
பெருமானை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
மீன்கள் நிறைந்த தடாகத்தில் தினமும் வழிபாட்டிற்காக புதுத் தாமரை மலர் பறிக்கும் கஜேந்திரன் என்ற யானை துதிக்கையைத் தூக்கிப் பிளிறுமாறு, முதலை ஒன்று அதன் காலைப் பற்றியது. அந்த யானையின் துன்பம் தீர்க்க கருடன் மீது அமர்ந்து விரைந்து வந்த பகவான் சுதர்சனச் சக்கரத்தை முதலை மீது ஏவினான். யானையும் முதலையும் முற்பிறவியில் அரசர்களாக பிறவி எடுத்து பெரியோர்களை அவமதித்த காரணத்தால் அவர்கள் இட்ட சாபத்தின் காரணமாக அடுத்த பிறவியில் யானையாகவும், முதலையாகவும் பிறந்தனர். யானையை முதலையிடமிருந்துக் காத்த அந்த எம்பெருமானைத் திருவல்லிக்கேணியில் நான் கண்டேன். தேன் நிறைந்த மலர்களையுடைய சோலைகள் நிறைந்த பெரிய மாடங்களைக் கொண்ட மயிலையை அடுத்து இருப்பது அந்தத் திருத்தலமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக