ஞாயிறு, 9 நவம்பர், 2025

102. வடமதுரை (மதுரா)



பெரியாழ்வார்                                                                                    பெரியாழ்வார் திருமொழி     

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து
எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே .       16. 

      கண்ணன் பிறந்த செய்தி கேட்டு யாதவகுல மக்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.  நெய், தயிர், பால் நிறைந்த  உறியை அறுத்துக் கொண்டு வந்து முற்றத்தில் உருட்டிவிட்டு கும்மாளமிட்டனர். ஒரு சிலர் ‘கண்ணன் நீடூழி வாழ வேண்டுமென்று’ அவற்றையெல்லாம் தானம் செய்தனர். ஆனந்தம் அதிகமாகி நிலை கொள்ளாமல் ஆடியதால் அவர்கள் குடுமியும் அவிழ்ந்து ஆடியது. இவ்வாறு ஆயர்ப்பாடியே மகிழ்ச்சிக் கோலம் பூண்டது என்கிறார் ஆழ்வார்.
      திருவாய்பாடி இடையவர்கள் கண்ணன் பிறந்த செய்தி கேட்டு ஆனந்தித்தார்கள். மகிழ்ச்சியின் காரணமாக தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல். தங்களது உறியில் உள்ள பால், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களை அறுத்துக் கொண்டு வந்து அனைவருக்கும் தானம் செய்தனர். அவதாரப் புருஷர்களும், நன்மக்களும் எவ்விடத்தில் உள்ளார்களோ அந்த இடம் சொர்க்க பூமியாகிவிடும்.  அவ்விடத்தில் வாழும் பசுக்கள் தடையின்றி பாலைப் பொழியும்.  மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசும். கனி கொடுக்கும் மரங்களும் நிறைவான பலன் தரும். இவ்வாறு கண்ணன் பிறந்த செய்தியை ஆயர்ப்பாடி மக்கள் மகிழ்ச்சியுறும் நிகழ்வினை எடுத்துரைக்கிறார். 

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்
பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல்வண்ணன் பொறுத்த  மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை வலைவாய்ப் பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும்  கொற்றக் குடையே    264 

      இந்திரனுக்காக ஆயர்பாடியில் உள்ள எல்லா வீடுகளிலும் சமைத்துக் குவித்த சோற்று மலை இருந்தது. அதில் பள்ளம் தோண்டி தயிரை ஊற்றினால் அது ஓடையாகப் பெருகும். தயிருக்குப் பதில் வீடுதோறும் கொண்டு போன நெய்யை ஊற்றினால் சேறாகிவிடும். அவை அனைத்தையும் ஒரு சேர உண்டு இந்திரனுக்குக் கோபம் வரும்படி செய்தவன் கண்ணன். இந்திரனின் கோபத்தால் மழை வெள்ளம் தோன்ற அப்போது கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து தனது கரங்களால் எளிதாகக் காத்தான். குறவர் வலை வீசும்போது மானோடு மான் குட்டியும் வலையில் வந்து விழும். அவர்கள் அதைத் தங்கள் வீட்டுப் பெண்களிடம் கொடுக்க, குறத்தியர் பஞ்சுச் சுருளில் பாலைத் தோய்த்து மான் குட்டிகளுக்கு ஊட்டி வளர்ப்பர். அது போன்ற நிலையில் கண்ணன் ஆயர்களைக் காத்தான் என்று ஆழ்வார் கூறுகிறார். 

வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன் வலிப்பட்டு முனிந்து  விடுக்கப்பட்ட
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் 
 குடையே  265 

      இந்திரப் பதவியைப் பெறுவதற்காக செய்ய வேண்டியதை எல்லாம் குறைவில்லாமல் செய்பவன் இந்திரன். அவனுடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு மழை மேகங்கள் திரண்டு வந்து கோகுலத்தில் ஏழு நாட்கள் இடைவிடாமல் மழையைப் பொழிந்தன. பசுக்களும், கன்றுகளும் அம்மழையால் நனைந்து அவதியுற்றன. கோபாலன் அனைவரையும் காக்க அடி மண்ணோடு கோவர்த்தன மலையை எடுத்து தலைகீழாக குடையாகப் பிடித்தான். ஒரு குட்டி யானையை சிங்கக்குட்டி ஒன்று துரத்தி வந்து சண்டைக்கு இழுக்கிறது. அதைக் கண்ட பெண் யானை தன் குட்டியைக் கால்களில் இடுக்கிக் கொண்டு சிங்கக்குட்டியோடு போர்செய்வது போல் காட்சி தருகிறது. பெண் யானையைக் கண்ணனாகவும், யானைக்குட்டியும், கோகுலத்துப் பசுக்களும், ஆயர்களுமாக கற்பனை செய்து வெகு அழகாக ஆழ்வார் பாடியுள்ளார். உலகத்து உயிர்களுக்கெல்லாம் தாய் போல் அன்பு காட்டக்கூடியவன் கண்ணன் என்பதை ஆழ்வார் இங்கே சொல்லாமல் சொல்கிறார்.  

அம்மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் என்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த  மலை
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக்  குடையே.                                                                                                                                                                                                266 

      நெடிய கோவர்த்தன மலையில் வசிக்கும் பருத்த புஜங்களையுடைய குறவர்கள், தங்களை சரணமென்று பற்றியுள்ள தங்கள் மனைவிமார்களான கோகுலத்துப் பெண்களை, வேடர்கள் தினைப்புனத்தில் மேயும் மான்களைக் காட்டி கொல்லையில் வியாபரிக்கிற அப்பெண்களின் கண்களைக் காட்டி இவை மான் பேடைகள் என்று பிரமித்துப் பார்க்க, நம்முடைய கொல்லையை அழித்துக் கொண்டிருக்கும் மான் கூட்டங்களைப் பாரீர் என்று கூறி அவற்றை விரட்ட அம்புகள் தொடுப்பர். ஆனால் இன்றோ அழகிய மை அணிந்த விசாலமான கண்களையும், ‘மடப்பம்’ என்ற குணத்தையுடைய ஆய்ச்சியரும், ஆயர்களும், பசுக்கூட்டங்களும், அடர்ந்த மழையில் கனத்தினால் கண்ணா சரணம்! என்றும், எம்பிரானே! எமக்கு ரக்ஷகனாகயிருக்கும் தன்மையினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அலற, அவ்வேண்டுகோளை ஏற்று அதே கோவர்த்தன மலையை விளங்கா நின்ற திருவாழி ஆழ்வானை தரித்துள்ள எம்பெருமானான கண்ணபிரான் சக்கரமாக எண்ணிப் பிடித்துத் தூக்கி நிறுத்தி அவர்கள் எல்லோரையும் காப்பாற்றினான் என்று ஆழ்வார் கூறுகிறார். 

கடு வாய்ச்சின வெங்கண் களிற்றினுக்குக் கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே    267 

      சிறிய கண்களில் கூரிய பார்வையில் வரும் சினமும், அஞ்சத்தக்க பெரிய வாயையும் உடைய ஆண் யானைக்கு ஒவ்வொரு கவளமாக திரட்டியெடுத்து உணவு கொடுக்கின்ற யானைப் பாகனைப் போல,இ தேவர்களின் தலைவனான கண்ணபிரானின் திருக்கைகள் மலையின் அடிப்புறத்தைத் தாங்குகிறது.  மற்றொரு கை மலையைப் பெயர்த்துத் தாங்குகிறது. மேகங்கள் கடலின் மேற்புறம் சென்று கடல் நீரும் வற்றும்படி நீரை உறிஞ்சி அங்கிருந்து கோகுலம் வந்து குடத்தில் நீர் கொட்டுவதைப் போல் ஒவ்வொரு துளிகளும் இருக்கும்படி ஏழு நாட்கள் விடாமல் மழை பெய்தது.  அப்போது கோகுலத்தைக் காக்க கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி கோகுலத்து மக்களையும் ஆநிரையையும் காத்தான் என்று கூறுகிறார் ஆழ்வார். உலகத்து உயிர்களுக்கு யார் துன்பத்தைக் கொடுத்தாலும் அத்தகைய அதர்மத்தைக் அழிக்க பகவான் நம்மைத் தேடி உடன் வருவான் என்ற கருத்து புலப்படுகிறது. 

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக் களி யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்து
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே!                                                                                                                                                                                                 268 

      முன்பொரு காலத்தில் வராக வடிவமெடுத்து கடலுக்குள் சென்று பூமியைத் தன் கொம்பினால் தூக்கி வந்தவன், எங்கள் தந்தையான கண்ணபிரான் இம்மலையை லேசாக ஒரு மண்கட்டி போல் தூக்கிப் பிடித்திருக்கிறான். விண்ணுலகில் உள்ள தேவர்களே!  வானவர்களே! உங்களுக்கு பலம் அதிகம் இருந்தால் இம்மலையை வாங்கிப் பிடியுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுவது போல் கண்ணன் நிற்கிறான்.  கோவர்த்தனகிரியில் உள்ள ஒரு யானை பாறையில் முட்டி விளையாடுகிறது. அதனால் அதன் தந்தம் உடைந்து போகிறது. அதன் கொம்பு முறிந்ததால் வாயிலே மதநீர் பெருகுகிறது. அந்த யானை துதிக்கையை உயரே தூக்கிப் பிறை நிலாவைத் தன் ஒடிந்த தந்தம் என்று நினைக்கிறது என்றால் நிலாவுக்கு அருகில் மலை உச்சி இருக்கிறது என்றல்லவா ஆகும் என்கிறார். 

செப்பாடு உடைய திருமால் அவன் தன் செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்
கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள் காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்துவடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.    269 

      உலகத்து உயிர்களுக்கெல்லாம் எப்போதும் இன்னல்கள் வராதவாறு காக்கும் செவ்வைக் குணத்தையுடையவனான திருமால் தன் செந்தாமரை மலர் போன்ற செவ்விய கரத்திலுள்ள விரல்கள் ஐந்தினையும் மலையாகிற குடைக்கு காம்பின் அடியில் உண்டான கிளைக் கொம்புகள் போல் அமைத்துக் கொண்டு தன் அழகிய நீண்ட தோளைக் குடைகாம்பு போல் செய்து அம் மலையைத் தலைகீழாகத் தாங்கிப் பிடிக்கிறான். அப்போது அதன் எல்லாப் பக்கங்களிலும் பரந்து கீழே விழும் தெளிவான அருவி நீர் அழகிய முத்தாரம் போல் விளங்கியது.  அந்த அருவி நீர் கண்ணன் மீது விழுந்தபோது முத்துச்சட்டை அணிந்தாற்போல் காட்சி அளித்தது என்று ஆழ்வார் கூறுகிறார். இப்பாடலில் கண்ணனின் பெருமைகளையும், வல்லமைகளையும் ஆழ்வார் வையகத்திற்கு அருளியுள்ளார். 

படங்கள் பலவும் உடைப் பாம்பு அரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே      270 

      கானகத்தில் இராமன் இருந்தபோது பிராட்டியானவள் இலங்கை வேந்தனால் சிறையெடுக்கப்பட்டதால் அவளை மீட்டெடுக்க இராம தூதுனான அனுமன் இலங்கை சென்றபோது அரக்கர்கள் அதன் வாலில் தீ வைத்தார்கள். அந்தத் தீயைக் கொண்டு அனுமன் இலங்கையை எரித்தான். அனுமனின் புத்தி சாதுர்யமிக்க இச்செயலை, அந்த அனுமனின் புகழைத் தாலாட்டாகப் பாடிய பெண் குரங்குகள் தங்கள் குட்டிகளைத் தூங்க வைக்கும் மலை கோவர்த்தனமலையாகும். படங்களையுடைய ஆதிசேஷன் பூமியைத் தாங்கி நிற்கிறார். அதேபோல் கண்ணன் தன் ஐந்து விரல்களைப் பரப்பி குரங்குக் குட்டிகளின் உறக்கமும் கலையாமல் எந்த அதிர்வும் அதற்கு ஏற்படாதவாறு அந்த கோவர்த்தனகிரியை ஏந்தியிருக்கிறார். கண்ணபிரானின் கருணை குணத்தை ஆழ்வார் இப்பாசுரம் மூலம் தெரிவிக்கின்றார்.  

சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச் சரமாரி பொழிந்து எங்கும்  பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார்  சொறிய
கொலை வாய்ச்சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும கொற்றக்                                                                                                                                                                         குடையே    271 

      திறமையான போர்வீரர்கள் சரமாரியாக போர்க்களத்தில் அம்புகள் தொடுப்பதுபோல் இடைவிடாமல் மேகங்கள் மழையைக் கொட்டுகின்றன. கோவர்த்தன மலையில் வசிக்கும் வேங்கைகள்  முனிவர்கள் வசிக்கும் பர்ண சாலைக்குள் புகுகின்றன. ரிஷிகள் பரிவோடு அந்த வேங்கைகளின் கழுத்தை இதமாகச் சொறிகிறார்கள். அவை நிம்மதியாக அங்கே உறங்குகின்றன. நாராயணனாகிய கண்ணன் அந்த வேங்கைகளின் உறக்கம் கலையாமல், அதே சமயம் ஆயர்பாடியை மழையிலிருந்து காக்க மலையைக் கேடயமாக எடுத்துப் பிடித்திருக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார். கண்ணன் ஆயர்களைத் தவிர விலங்குகளுக்கும்கூட துன்பம் வராமல் காப்பாற்றும் அருள் உள்ளம் கொண்டவர். அத்தகையவனை நாம் மனத்தில் இருத்தி நாளும் துதிப்போமாக என்கிறார்.     

வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம் உடைக் குட்டன்களை
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.     272 

      முசு என்ற ஜாதிக்குரங்குகளின் திரள்கள் பயிற்சிக்காக தம் குட்டிகளை முதுகில் தாங்கி ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு எவ்விதம் தாண்டுவது என்பதை அந்தத் தாய்குரங்கு தன் குட்டிகளுக்குக் குதித்துக் காட்டுகின்றன. தாய்க்கும் சேய்க்கும் எந்த அதிர்வும் வராதவாறு மிகவும் லேசாக மலை அசைவது தெரியாது கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடித்தான் எங்கள் கண்ணபிரான். கல்நெஞ்சக்காரியான பூதனையினுடைய விஷப்பாலை உறிஞ்சி உண்ட வாயையுடையவனான தாமோதரன் அந்த மலைக்கு ஒரு வலிய துணைப் போலத் தாங்கி நிற்கிறான். கோவர்த்தனன் என்ற தனது திருநாமத்தால் அம்மலைக்கும் பெயரிட்டு உலகில் புகழ் பெறவே கடினமான பாரமாகக் கொண்ட அம்மலையைக் ஒரு தூணாகத் தாங்கி, குடையாக இந்நிலவுலகில் அனைவரும் காணுமாறு  எடுத்து உயர்த்திப் பிடித்தானோ? என்று வினா எழுப்புகிறார் ஆழ்வார். இறைவன் அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறான் என்ற கருத்தில் இப்பாசுரத்தை நமக்கு வழங்கியுள்ளார் ஆழ்வார். 

கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடி ஏறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போல எங்கும்
குடி ஏறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே    273                        
      அழகிய செந்தாமரை போன்ற திருக்கரங்களையும் திருவிரல்களையும் கொண்ட கண்ணன் ஏழு நாட்கள் இந்த குன்றினை ஏந்திய போதும், அழகு சிறிதும் குறையாமல், கொஞ்சமும் வாட்டமும் முடியாமல், திருநகங்களும் சிறிதும் நோவு எடுக்காமல், சிறிதும் மாற்றம் இல்லாமல் இருந்த நீலமணி போன்ற நிறத்தவனான கண்ணன் எடுத்த மலையும் அவன் நின்ற நிலையும் ஒரு மாயா ஜால வித்தையை காட்டுவது போல் உள்ளது. அந்த மலை முகட்டில் சேர்ந்த பல மேகங்கள் மழையை பெய்வித்து செழிப்பாக செய்ததனால் அந்த மலையின் முன்புறம் நரைத்திருந்ததைப் போல் உள்ள கோவர்தனம் என்ற குடையே என்கிறார். இப்படி மழை பெய்து எங்கும் ஜலம் நிறைந்த காலத்திலும் மழை பொழியாமல் வெளுத்து இருந்த காலத்திலும் இருக்கும்படி வசிக்க தகுந்த தேசம் ஆனதால், இப்படி மழை பெய்வது இந்திர ஜாலம் அன்று என்றும், எம்பெருமானின் கருணை என்று உரையாசிரியர் கூறுகிறார். 

அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும்  கொற்றக்                                                                                                                                                                                குடைமேல்
திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை   பத்தும்
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே      274 

      திருப்பாற்கடலில் ஆதிசேடன் என்ற நாகத்தைப் படுக்கையாகக் கொண்டு சயனித்து இருப்பவன் ஸ்ரீமந் நாராயணன். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு  அவனே கண்ணனாக அவதரித்து ஆயர்ப்பாடியில் வந்து காளிங்கன் என்ற நாகத்தின் ஆணவத்தை அடக்கித் துரத்தினான். பாம்புக்குப் பகையான கருடனை வாகனமாக்கினான்.  கோவர்த்தனகிரியில் குரவ மரத்தில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடியானது சிறிதும் அலுங்காதபடி கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தான் கண்ணன். இம்மலையில் உள்ள சிறு கொடி, செடி, மரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் ஆகிய எல்லோரையும் காப்பாற்றினான். இத்தகைய புகழ் படைத்த கண்ணனின் கீர்த்தியை வைதீகர்கள் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூரிலே வாழ்ந்த பெரியாழ்வார் மானசீகமாகக் கண்டு அருளிய இப்பாசுரங்களை மனம் ஒருமித்து சொல்லக் கூடியவர்கள் தீவினைகள் அகன்று என்றும் நிலையான வைகுண்டப் பதவியை அடைவது உறுதி என்று கூறுகிறார் ஆழ்வார்.                                                                                             

 ஆண்டாள்                                                                                                                             திருப்பாவை                                                                                                        

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
     தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
     தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
     வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
     தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.           478 

      உணர்வதற்கரிய மாயச் செயல்களை செய்யும் குணங்களை உடையவனும், அதிசயமான காரியங்களை நிகழ்த்துபவனும், பாகவதர்களின் தொடர்பினை நித்யமாகப் பெற்றவனுமான வடமதுரை தேசத்து அரசனும், ரக்ஷகனும், பரிசுத்தமான ஆழம் மிகுந்த மகாநதியான யமுனைத் துறையில் வசிப்பவனும், இடையர் குலத்தில் அணையாப் புண்ணியச் சுடர் போல அவதரித்தவனும், தனது அன்னையின் கருப்பையை ஒளிமிக்கதாக்கி, அவளது திருவயிற்றை விளங்கச் செய்து அவளுக்குக் குன்றாப் புகழ் சேர்த்தவனுமான தாமோதரன் என்கின்ற கண்ணபிரானை தூய்மையான உள்ளத்துடன் வந்து, அவனது திருவடிகளில் தூய மலர்களைத் தூவி வணங்கி, வாயினால் அவனது கல்யாண குணங்களைப் போற்றிப்பாடி, சிந்தனையில் அவனை மட்டும் நிறுத்தி நாம் தியானித்தோமானால், நாம் அறிந்தும் அறியாமலும் முன்னர் செய்த பாவங்களும் நெருப்பிலிட்ட பஞ்சு போலே தடயமின்றி அழிந்து போய்விடும்! ஆகவே அம்மாயபிரானின் திருநாமங்களை விடாமல் சொல்லி பாவை நோன்பிருப்போம் வாருங்கள் என்று தோழிகளை அழைக்கின்றாள் ஆண்டாள்.   

ஆண்டாள்                                                                                                 நாச்சியார் திருமொழி                                                                                        

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே.       538 

      நெற்றி பட்டை உடைய, மிக்க மதம் கொண்ட, குவலயாபீடம் என்ற யானையை உதைத்து தள்ளிய கண்ணன், மாடங்களை உடைய, மாளிகைகளால் சூழப்பட்ட மதுரை மாநகரில், நம் வீட்டை தேடிக் கொண்டு, நம் வீதி வந்து நம்மோடு கூடுமாகில் கூடிடு கூடலே என்பது இந்த பாடலின் பொருளாகும்.
குவலயாபீடமென்னும் யானையை முடித்த கண்ணன், மாட மாளிகைகளாலே சூழப்பட்ட திருவடமதுரை மாநகரிலே நம் வீட்டைத்தேடி, நம் தெருவிற்கே வந்து நம்மை கட்டுவானாகில் கூடிடு கூடலே என்று ஆண்டாள் பாடுகிறார். ஓடை என்று யானையின் நெற்றிப்பட்டத்துக்குப் பெயர். கண்ணன் திருவாய்ப்பாடியில் இருந்து வருவதாகவும், ஆண்டாள் திருவடமதுரையில் இருப்பதாகவும் விளக்கம் சொல்வார்கள். திருவடமதுரை செழிப்புடன் இருப்பதையும் இங்கு நோக்கலாம். விரோதிகளை அழிக்கும் தன்மையை இயல்பாக உடையவன் அவன் கூடிடும்படி கூடலே நீ கூடிடு என்கிறாள். 

அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் திகழும் மதுரைப் பதி  
கொற்றவன் வரில் கூடிடு கூடலே            539 

      ஏற்கெனவே ஆண்டாளுக்காக அவன் என்று முடிவு செய்யப்பட்ட கண்ணன்,  நளகூபன் மற்றும் மணிக்ரீவன் என்கின்ற இரு குபேர புத்ரர்களுக்கு நாரதரால் ஏற்பட்ட சாபத்தின் பயனால் மருத மரங்களாக வாழ்ந்த சமயம், யசோதையால் உரலில் கட்டப்பட்ட கண்ணன் மருத மரங்களைக் கண்டவுடன் அவை தன்னைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய அசுரன் என்ற நிலையில் உரலை இழுத்துக் கொண்டு அந்த இரு மருத மரங்களுக்கிடைய வந்து மரங்கள் முறியும்படி தவழ நடை கற்றவன்! வஞ்சகன் கம்சனை வஞ்சனையால் அழித்தவன்! பிரசித்தி பெற்ற மதுராவில் பல சாதனைகள் புரிந்த அரசனான கண்ணன்,  வரும்போது என் மனமே! நீ சற்றும் பிணக்கிடாமல் நான் கண்ணனிடம் கூடுவதை ஏற்றுக்கொண்டு என் காதலை புரிந்த வண்ணம் நடந்து கொள்வாயாக! என்று கூறுகிறாள் ஆண்டாள். 

கதிர் ஒளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்            560     

      தீபம், பூர்ண கும்பம் ஆகியவற்றுடன் மணப்பந்தலுக்குள் வரவேற்கப்பட்டு எம்பெருமான் எழுந்தருளும் அனுபவத்தை ஆண்டாள் இங்கு  பகிர்கிறாள்.என்கிறாள் கோதை நாச்சியார். தோழீ! அழகிய இளம் பெண்கள் சூர்யனுடைய ஒளி போன்ற ப்ரகாசிக்கும் மங்கள தீபத்தையும் பொற்கலசங்களையும் (பூர்ணகும்பம்) கையில் ஏந்திக்கொண்டு, எதிர் கொண்டு அழைக்க, வடமதுரை மன்னனான கண்ணன் எம்பெருமான் பாதுகைகளை அணிந்துகொண்டு பூமி முழுவதும் அதிரும்படி எழுந்தருளியதை நான் கனாக் கண்டேன் என்று கூறுகிறாள் ஆண்டாள். 

தட வரையின் மீதே சரற்கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல நீயும்
வட மதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ் சங்கே !         569 

      அழகிய வெண்மையான சங்கே! பெரிதாக நின்ற மலையின் மீதே இலையுதிர் காலத்து சந்திரனானது அந்த பெருமலைகளுக்கு இடையில்  சரத்கால சந்திரன் பௌர்னமியன்று உதயகிரியில் தோன்றுவது போல வடமதுரையின் மன்னனாகிய வாசுதேவன் கையில் நீயும் குடியேறி மேன்மையோடு விளங்குகிறாய் என்று பாஞ்சசன்னியம் என்ற சங்கின் பெருமையை அழகான வர்ணனையும் கூறுகிறார் ஆண்டாள். எம்பெருமானின் திருக்கரம் எல்லா உதயத்திற்கும் காரணமாக விளங்குகிறது. ஊழிகாலத்தில் உலகை மறையச் செய்து பின்பு உதயமாகச் செய்வதும் அவனே, உலகம் மறைந்தாலும் தான் மறையாமல் ஆலிலையில் வாசம் செய்கிறான். தேவ அசுர போரில் அவனது மனத்தில் உதித்தவாறு தேவர்களுக்கு வெற்றி அமைகிறது. அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை உருவாக்குவதும் அவனே என்று சங்கின் பெருமையை கூறி பெருமானின் பெருமைகளையும் கூறுகிறாள் ஆண்டாள். 

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா
     மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்
     ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்
     பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி
மற்பொருந்தாமல் களம் அடைந்த
     மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்       617 

      என் நிலைக்கு மாறுபாடாக நீங்கள் இருக்கிறீர்கள். அன்பே வடிவான மாதவன் மேல் நான் கொண்ட சிநேகம் உங்களுக்குப் புரியவில்லையா? உங்கள் அறிவுரைகள் எல்லாம் செவிடனும், ஊமையும் பேசிக் கொண்டதைப் போல் வீணாகிப் போயிவிட்டது. உடல் வருந்துமாறு கண்ணனைப் பெற்றவள் தேவகிபிராட்டியார். ஆனால் அவனோ யசோதையின் வீட்டில் வளர்ந்தான். தன்னைவிட மிகவும் பலம் வாய்ந்த, தனது மேன்மைக்குப் பொருத்தமில்லாத கொடிய மல்லர்களுடன் மோதுவதற்குக் களம் புகுந்த அந்த மாயனுடைய நகரமான வடமதுரைக்கு அருகில் என்னைக் கொண்டுபோய் சேர்த்து விடுங்கள். அதுவே நான் உய்வதற்குரிய சிறந்த வழியாகும் என்று கூறுகிறாள் ஆண்டாள்.  கண்ணன் தன்னை காண வராத தாபத்தினால் நடக்க இயலாமல் சோர்ந்துப் போனாள். உடல் நிறம் மாற, மனம் தளர்ச்சியடைய, வாய் வெளுத்து, உணவு வெறுத்து, உள் மெலிந்து போனேன். இவை நீங்க வேண்டுமெனில் என்னை கண்ணனிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள் என்கிறாள். 

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
     காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை யாப்பும் உண்டான்
     பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ?
கற்றன பேசி வசவு உணாதே
     காலிகள் உய்ய மழை தடுத்து
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற
     கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்      624 

      என் கண்ணன் கன்றுகளை திரள்களாக மேய்த்து அதையே தொழிலாகக் கொண்டுள்ளான். வீட்டைவிட்டு காட்டிலேயே வாழ்ந்து பெரும் பொழுதைக் கழிக்கும் இடையர் குலத்தவன். வெண்ணெய் திருடியதால் உரலில் வைத்துத் தானே கட்டுண்டான் என்றெல்லாம் தூற்றுகிறீர்கள். அவனது இத்தகைய குணத்தைக் குற்றமாக எண்ணும் பாவிகளே! இதுவரை இழிவாகச் சொன்னதை விடுத்து இனியாவது உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் ஏச்சுக்களை நிறுத்தும் நாள் எந்நாளோ? வாயிருக்கிறது என்பதால் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். அவனை வசைபாட நீங்கள் கற்றதை வைத்துக் கொண்டு என்னிடம் ஏதேனும் பேசி திட்டு வாங்குகிறீர்கள். பசுக்களைக் காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தவனைக் குற்றம் சொல்வதை விட்டு நான் திருப்பித் திட்டுவதற்குள் என்னை அந்த வெற்றிக்குடையான கோவர்த்தன மலைக்கு அருகில் கொண்டுவிடுங்கள் என்று கூறுகிறாள் ஆண்டாள். 

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்வேனே        634 

      நெஞ்சிலே கண்ணனை நினைத்து உள்ளுக்குள்ளேயே உருகி கரைந்து நலிந்து கொண்டிருக்கிறேன். அவள் இருக்கிறாளா? அல்லது சென்றுவிட்டாளா? என்று அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அக்கறையில்லாதவனாக என்னை வெறுக்கும் நிலையில் கண்ணன் உள்ளான். தன்பெருமையும், தன்போகமும் ஒருங்கே நிறையப்பெற்றவனான கண்ணன் பெண்கள் திறத்திலேயே பொல்லாங்கு செய்பவனான அவனை நினைத்து என் வெட்கம், மானம், உற்சாகம், தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, புகழ் போன்ற எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொண்டவனை, நேரில் காணும் சந்தர்ப்பம் வாய்த்தால் தேவையற்ற சதைப் பிண்டமாய் இருக்கும் எனது இப்பாழும் தனங்களை வைத்துக்கொண்டு நான் படும் பாட்டை சிறிதும் அறியாதவனாக இருக்கும் நிலையில் அதனை வேரோடு பிடுங்கி அவன் மார்பில் விட்டெறிந்து அவ்விதமேனும் அவன் உணர்வாகின் அதுவே என் துக்கத்தை ஆற்றிக்கொள்ளும் நிலைக்கு வருவேன் என்று கடுந்துயரில் சினத்துடன் கூறுகிறாள். 

பட்டி மேய்ந்து ஓர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே          637 

      ஆனையானது கருப்பந்தோட்டத்தில் திரிவது போன்று கண்ணபிரான் என்கின்ற கறுத்தக் காளையொன்று காவலின்றி விருப்பப்படி திரிகிறது. பலராமனின் ஒப்பற்ற தம்பியாய்க் கோலாகலமாய் விளையாடியபடி இந்தப் பக்கம் போவதைப் பார்த்தீர்களா? தனக்கு விருப்பமான பசுக்களை இனிமையாகப் பேர் சொல்லி மடக்கிப் புல்லும் தண்ணீரும் உள்ள இடத்தில் அழைத்துச் சென்று நீரை குடிக்க வைத்து, பரமானந்தத்துடன் அவைகளை மேயவிட்டுக் கொண்டு அவன் பிருந்தாவனத்தில் இருப்பதை நாங்கள் பார்த்தோம் என்று கூறுகிறாள் ஆண்டாள். பரமபதத்தில் வெளுத்துள்ள சரீரம் பூவுலகில் பிறந்து பின் வனங்களில் திரிந்ததால் கறுத்துப் போயிற்று. பெண்களின் திறத்தில் நிச்சலும் தீமைகளும் செய்து திரிந்து கொண்டிருக்கும் அவன் பலராமனிடம் பவ்யமாக இருப்பானாம். காடுகளாயிருந்த பிருந்தாவனம் கண்ணன் வந்த பிறகு சோலைகளாகவும் பசுக்கள் புற்களை மேய்ந்து திடமாக இருந்தது அத்தகையதொரு இடத்தில் கண்ணன் சேவை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தோம் என்கிறாள். 

அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே?
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே.          638 

      நான் வருந்தும்படியும் அதனால் தளர்ச்சியடையும்படி என்னைப் பிரியவிட்டுப்போய் திருவாய்ப்பாடியை ஆக்கிரமித்து எப்போதும் அனுபவித்துக் கொண்டிருப்பவனாக உள்ளான். எப்போதும் வெண்ணெய், பால், தயிர் போன்றவற்றுடன் இருப்பதனால் தன்மீது குணுங்கு மணம் வீச அனைவரையும் ஈர்த்தவன் கண்ணன். அந்தச் சுகத்தில் திளைத்த வெண்ணெய் வாசனை வீசும் கரிய நிறத்து இளங்காளையன் கோவர்த்தனனைக் கண்டீர்களோ? மின்னலும் மேகமும் ஓன்றோடொன்று இணைத்தது போல் கறுத்த திருமேனியிலே பளிச்சென்ற மின்னல் போன்ற வனமாலையுடன் திகழ்ந்து தோழர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் மாதவனை நாங்கள் பிருந்தாவனத்தில் கண்டோம் என்கிறாள் ஆண்டாள். உலக உயிர்கள் வாழ்வதற்கு கருமேக வண்ணனாக கரிய நிறத்தில் தோன்றுகிறான். 

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே.          639 

      பெண்கள் திறத்திலேயுள்ள வ்யாஹமோகமே ஒரு வடிவு கொண்டவனாகவும், சகல குணங்களாலும் பரிபூர்ணமாக நிரம்பப் பெற்றவனும், அன்பே உருவாக அவதரித்த எம்பெருமானை அன்பைக் காட்டி ஆயர் குலக் கன்னியரை மோத்தில் ஆழ்த்திய அழகிய மணவாளனை பொருந்தாத பொய்களை அடுக்காகச் சொல்பவனை இங்கே வரக் கண்டீர்களா? விண்ணிலிருந்து வரும் சூரிவெப்பத்தைத் தடுக்க தன் சிறகுகளால் விதானம் அமைந்திருக்கும் வினதை புத்திரனான கருடன் மேல் அமர்ந்திருக்கும் கோபாலனைத் தாங்கள் பிருந்தாவனத்தில் தரிசித்தோம் என்கிறாள் ஆண்டாள். ஒருநாள் பிறர்மனையில் வெண்ணெய் களவுண்டு அத்தாயிடம் பிடிபட்டு அவள் விசாரிக்க தன் வீட்டு கன்றுக்குட்டி காணவில்லையென்றும் அதனை வெண்ணெய் தாழியில் உள்ளதா என்று துழாவிப் பார்த்தேன் என்று கண்ணன் சொல்ல, கடுப்பான தாய் அவனை தாம்பில் கட்ட கண்ணன் அழத்தொடங்கியதும் சினம் மறந்து அவனை விடுவித்தாள். இத்தகைய பொய்யனை பிருந்தாவனத்தில் கண்டோம் என்கிறாள். 

கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்ததே கண்டோமே           640     

      கருத்த மழை மேகத்தில் குளிர்ந்த தாமரை பூத்தது போல் தனது திருக்கண்களென்னும் நீண்ட கயிறு கொண்டு என் மனத்தை இழுத்துத் தன் விருப்பம் போல் வசப்படுத்தச் செய்பவன் தாமோதரன். என்னைக் கவர்ந்து கொண்டு என்னுடன் விளையாடும் அவனை இங்குக் கண்டவர் உண்டோ? ஒளிர்கின்ற கம்பீரமான அழகு நிறைந்த யானைக் குட்டிக்கு முகத்திலே முத்துக்கள் போன்று போர்வை போர்த்தி விட்டாற்போல் என்னுடன் விளையாடி நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்ப நிற்கும் முகுந்தனை நாங்கள் பிருந்தாவனத்தில் கண்டோமே என்கிறாள் ஆண்டாள். மேகத்தில் அழகிய இரண்டு தாமரை மலர்கள் மலர்ந்தனவோ? என்று அவனது அழகிய இரு கண்களில் என்னை அகப்படுத்தி தான் போகின்ற இடமெல்லாம் என் மனத்தையும் இழுத்துக்கொண்டு செல்கிறான் அந்தக் கண்ணன் என்கிறாள். ‘மெய்ப்பைக் கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் குப்பாய மங்கி சட்டையாகும்’ என்று இதே கருத்தினை பெரியாழ்வாரும் பகர்கிறார். 

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக ஆடை உடை தாழ பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை விருந்தாவனத்தே கண்டோமே          641 

      திருமகள் கொழுந்தனாய், எனக்கு நீலமணி போன்று விளங்கும் என் மாதவனை, வலையில் சிக்கிய பன்றி தப்பியது போல் இவளது காதல் வலையில் விழாமல் செருக்குற்று எதையும் பிறர் கொள்ளும்படி தராதவனான (மனத்தைக் கொடுத்து பிறகு இழுத்துக் கொள்வான்) ஸ்ரீ கிருஷ்ணனை பார்த்தவர் உண்டா? திருவரையில் தனது பீதாம்பரமான மஞ்சள் வண்ணத்துப் பொன்னாடை பரிவட்டம் பூமியில் புரளுமாறு தாழ்ந்திருக்க, பெரிய கார்மேகமானது பரந்து விரிந்துள்ள வானத்தில் தனக்கு இடமாக்கிக் கொண்டு வருவது போல் திருவீதி நிறைந்து வருகின்ற பக்தவத்சலனை நாங்கள் பிருந்தாவனத்தில் கண்டோம் என்றவாறு ஆண்டாள் கூறுகிறாள். விலை மதிக்கமுடியாத சிறு மணியானது சிறிய துண்டின் ஓரத்தில் முடிந்து கொள்ள எளிதானதுபோல் விலைமதிப்பற்ற என் கண்ணனை பக்தியென்னும் சிறு துணியில் முடிந்து கொள்ளலாம் என்ற கருத்தில் கூறுகிறாள். 

தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியைக் கண்டீரே?
உருவு கரிதாய் முகம் செய்தாய் உதயப் பருப்பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே.        641 

      தயை என்கின்ற தருமத்தை சிறிதும் அறியாதவனாக குறும்புகள் பல செய்வதையே தொழிலாகக் கொண்டவனான கண்ணன், அவன் தனது திருக்கையில் தவழும் ஒளிமிக்க சார்ங்கம் என்ற வில்லினைப் போலவே வளைந்த அழகு பெற்றுள்ள புருவங்களைத் தன்னகத்தே பெற்றவனை, அவ்வழகினை அனைவரும் அனுபவிக்கக் வேண்டும் என்பதால் உகந்தாரோடு எங்கும் எப்போதும் பொருந்தி வாழாதவனான பத்மநாபனைப் பார்த்தீர்களா? கண்டாருடைய கண்களெல்லாம் குளிரும்படியாக செந்தாமரை போன்ற அழகிய திருமேனியுடையவனாய், கறுத்த ஆனால், தேஜஸாக உதயகிரியில் எழும் பிரகாசமான சூரியனைப் போல திகழும் பகவானை நாங்கள் பிருந்தாவனத்தில் சேவித்தோம் என்கிறாள் ஆண்டாள். கண்ணபிரானின் திருப்புருவங்களானது வேறு எதற்கும் ஒப்பாகாது. அவனது வில்லை நோக்குங்கால் முகத்திலிருப்பது கையிலுள்ளதே என்று வியந்தவாறு கூறுவர். இத்தகையவன் வடமதுரையில் சேவை சாதிக்கிறான். 

பொருத்தமுடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கருமா முகிலைக் கண்டீரே?
அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகுவானம் போல்
விருத்தம் புரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டேனே         643 

      அவயங்கள் ஒன்றுக்கொன்று பொருத்தமாய் அழகாய் இருக்கும் எம்பெருமானான கண்ணபிரானை, தேகத்தைப் போல் மனமும் கறுத்திரா நின்றவனை, நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய் கூடிய காலத்தில் உன்னைப் பிரியேன், பிரிந்தால் உயிர் தரியேன் என்று கூறிய சொல்லை பொய்யாக்கியவனை, கரிய மேகம் போன்றவனைப் பாரத்தவர்கள் உண்டா? விரும்பப்படுகின்ற விண்மீன்கள் கூட்டங்களால் நிறைந்திருக்கும் ஆகாயம் போல, நண்பர்களோடு வரும் கோவிந்தனை நாங்கள் பிருந்தாவனத்தில் பார்த்தோம் என்று கூறுவது போல் அமைந்துள்ளது. இப்பாடலில் தேகமும் உள்ளமும் கருப்பு என்று குறை கூறினாலும், நோய்வாய்ப்பட்டவனை குணமாக்க வைத்தியன் கத்தியால் கீறி அவனைக் காப்பாற்றும் உள்ளம் கொண்டவன் போல் இவனும் உள்ளான் என்கிறாள். ‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்தவன்பால் மாளாதகாதல் நோயாளன் போல்’ என்று வித்துவக்கோட்டம்மானைக் குலசேகரர் வேண்டுவது போல் ஆண்டாளும் வேண்டுகிறாள். 

வெளிய சங்கு ஒன்று உடையானைப் பீதக ஆடை உடையானை
அளி நன்கு உடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே?
களி வண்டு எங்கும் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே.          644     

      கடல் போன்ற திருமேனியில் வெளுத்த பாஞ்சசன்னியத்தை தரித்திருப்பானை, அருள் தரும் சக்கரத்தை உடையவனை, பீதாம்பரம் அணிந்திருப்பவனை, பிராட்டியுடன் என்றும் சேர்ந்திருப்பவனை, பக்தர்களிடம் அதிகமாக கருணையுடையவனை, சுதர்சனம் ஏந்திய திருமாலைக் கண்டவர் உண்டோ?  தேன் குடித்ததனால் உண்டான மகிழ்ச்சியினால் வண்டுகள் கூட்டமும் எல்லா இடங்களிலும் ரீங்கரித்துப் பறப்பதைப் போல மணமுள்ள பூவைச் சூடிய சுருண்ட மயிற்கற்றைக் கூந்தல் இழைகள் தோள்களில் கொஞ்சி விளையாட திகழும் கண்ணபிரானை நாங்கள் பிருந்தாவனத்தில் கண்டோமே என்று கூறுகிறாள் ஆண்டாள். பக்தர்களிடம் கருணை கொண்டதனால் எப்போதும் சங்கும் சக்கரமும் ஏந்தியவண்ணம் உள்ளான்.  எந்த நேரத்திலும் தன்னை சரண் அடைந்த பக்தர்களைக் கைவிடாத கருணை உள்ளம் படைத்தவர் பெருமான் என்பது இப்பாசுரத்தின் வழி புலனாகிறது. 

நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்தன்னைக் கண்டீரே?
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே.           645 

      உலகங்களை சிருஷ்டி செய்க.. என்று பிரம்மன் முதலான பிரஜாபதிகளை உண்டாக்கின குளிர்ச்சி பொருந்திய பெரிய தாமரை மலராகிய நாபிக்கமலமான தொப்புள்கொடியில் உந்தியில் வீட்டினை உண்டாக்கி அதன் மூலமாக பல உயிர்களை உண்டாக்கி, பிறப்பு முதல் வீடுபேறு வரை ஒருவரின் வாழ்வில் விளையாட்டாகச் செய்த விமலனைக் கண்டவர் உண்டோ? காட்டில் சென்று தேனுகாசுரனையும், குவலயாபீடமென்னும் யானையையும், கொக்காக வந்த பகாசுரனையும் உடனே மடியும்படி செய்தவனை, காட்டிற்குச் சென்று வேட்டையாடி வருபவனை நாங்கள் பிருந்தாவனத்தில் சேவித்தோம் என்கிறாள் ஆண்டாள். ஆதி முதல் அந்தம் வரை ஒருவரது வாழ்வின் எல்லாவற்றிலும் தொடர்புடையவன் இவள் வாழ்விலும் உட்புகுந்து காரணமுமாகி, செயலுமாகி உள்ளவனை இந்நிலைக்குக் காரணமே இவனது விளையாட்டுக்கள்தான். அவனறிந்தே அனைத்தும் நடைபெறுகிறது. எனவே என் பிறப்பும் அவனுக்கானது என்று பக்தி பொங்க கூறுகிறாள். 

பருந்தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பாரே.         646 

      பருத்த கால்கள் உடைய கஜேந்திராழ்வானை முதலையிடமிருந்து காப்பாற்றி அருள் செய்த எம்பெருமானை இப்பூவுலகில் பிருந்தாவனத்தில் தாம் சேவித்ததைப் பற்றி பெரியாழ்வாரின் புதல்வியான ஆண்டாள் அருளிச் செய்த இப்பாசுரங்களை முன்வினைப் பயனால் ஏற்பட்ட பிறவி நோய்க்கு மருந்தாக தங்கள் மனத்தில் பக்தி பூர்வமாக பதித்து வாழ்பவர்கள் மூவுலகை அளந்த பகவானுடைய நித்யமான திருவடிகளின் கீழ் எந்நாளும் பிரியாமல் இருப்பார்கள். எல்லாத் துன்பங்களும் வினைப்பயனால் ஏற்படுபவை. அவ்விதம் நாம் கொண்டுள்ள வினைகளுக்கும் பகவானின் திருவருளால் ஒரு முடிவு உண்டாகும். ஆகவே மேலே குறிப்பிட்ட பாசுரங்களை பக்தி நயத்துடன் மனதில் பதித்து வாழ்பவர்கள் அந்த பகவானின் திருவடிகளின் கீழ் என்றும் பிரியாமல் நித்யானுபவம் பெறுவார்கள் என்று ஆண்டாள் இப்பாசுரம் மூலமாகத் தெரிவிக்கிறாள். 

 தொண்டரடிப்பொடியாழ்வார்                                                                                     திருமாலை

 வள எழும் தவள மாட மதுரை மா நகரந் தன்னுள்
கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துளவத் தொண்டு ஆய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே.         916 

      அழகு நிறையப் பெற்றதும் வெண்ணிறமான மாடங்களையுடைய பெருமை தங்கிய வடமதுரையில் விசேஷமான உணவினை கவளம் கவளமாக உண்ணும் வலிமையுள்ள பெருத்துள்ள குவலாயபீடம் என்ற யானையை கொன்றனான கண்ணன், அரங்கனுக்காகத் தன்னை அர்பணித்தவரும், இயற்கையான பகவத்சேஷத்வம் என்ற பக்தியில் ஈடுபட்டு நின்றவருமான தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருமாலையானது கவித்துவத்தில் சில குற்றங்குறைகள் இருப்பினும் அது பகவானுக்கு இனிமையாக உள்ளது.
திருமாலைப் பாசுரங்களில் சில இடங்களில் ஆழ்வார் பகவானை வணங்காதவர்களை தண்டிப்பேன் என்றும், அவர் உண்ணும் உணவினை பறித்து நாய்க்கு போடுவேன் என்றும் வெகுண்டு கூறியுள்ளதையும், தாம் அது தவறு என்றுணர்ந்து அதனைக் குற்றமாகக் கருதினாலும் பெருமான் அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறார். பகவானுக்குப் பாமாலை இனிமையானதால் தொண்டர்களுக்கும் அது இனிமையாக இருக்கும். 

திருமங்கையாழ்வார்                                                                                          பெரிய திருமொழி 

வில் ஆர் விழவில் வட மதுரை
     விரும்பி விரும்பா மல் அடர்த்து
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்
     காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்
     சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
     நறையூர் நின்ற நம்பியே.       1512 

      கம்சன் நடத்திய தனுர்யாகத்தில் கலந்து கொள்ள வடமதுரை சென்று, எதிரிகளான மல்லர்களை அழித்து, அதனுடன் கொடிய கம்சனை முடித்து, காளிங்கனின் செறுக்கினை அடக்கிய பரந்தாமன் திருநறையூரில் வாசம் செய்கிறான். குற்றமற்ற சொற்களைக் கொண்ட வேதங்களை முறையுடன் கற்று சோமயாகம் போன்ற வேள்வியினை நடத்துவதை தமது தொழிலாகக் கொண்ட வேதம் ஓதும் அந்தணர்கள் வாழும் இடமாகும் என்று ஆழ்வார் கூறுகிறார். உலக நன்மைக்காக இத்தகைய செயல்களைச் செய்த பெருமான் நம்முடைய ஞானத் திருவிளக்கையும் அடையாளம் காட்டும் கருணை வள்ளலாகவும் திகழ்கின்றார். அழியும் அற்ப பொருட்கள் வேண்டும் என்று அவரிடம் கேட்காதீர்கள். அவை நமக்கு இறுதிவரை பயன் தராது. பிறவா நிலையான முக்தியினை பகவானிடம் கேளுங்கள். நம்முள் ஒளி படைத்துக் கொண்டிருக்கும் ஆத்ம தரிசனத்தைக் கேளுங்கள். பகவான் நிச்சயம் அதை நமக்குத் தருவான் என்று ஆழ்வார் அறிவுறுத்துகிறார். அத்தகைய பெருமான் திருநறையூரில் கோயில் கொண்டுள்ளான். 

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார்க்
கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன் உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே.        1527 

      நிலையான பெருமைகள் பல பெற்ற வடமதுரையில், வசுதேவருக்கென்று பெருமை சேர்க்கவென்று அவதரித்து, திருநறையூரில் குடிகொண்டிருக்கும் நம்பியைப் பற்றி, மணமிக்க மலர் மாலைகளையுடைய மலை போன்ற திடந்தோள்களைக் கொண்ட திருமங்கைமன்னன் கலியன் இயற்றிய இப்பாசுரங்களைப் பக்தியோடு பாடவல்லவர்கள் பரமபதம் சென்று தேவர்களால் கொண்டாடப்படுவார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
      வடமதுரையானது ஆச்சாரிய சம்பந்தம் நிறையப் பெற்ற ஊராகும். ஸ்ரீவாமனமூர்த்தி நெடுநாள் தவமிருந்த இடமும், ஸ்ரீசத்ருக்ணாழ்வார் அரசாட்சி புரிந்த இடமுமான வடமதுரையில் ஸ்ரீகிருஷ்ண பகவானும் அவதரித்துள்ளான் என்பதால் இவ்வூர் அதிகம் ஏற்றம் மிகுந்ததாகும். இந்த பத்து பாசுரங்கள் அதர்மம் எவ்விதம் தலையெடுத்தாலும் அதை தெய்வசக்தி முற்றிலும் அழித்துவிடும் என்ற கருத்தினைத் தெரிவிக்கின்றன.  எனவே நம் மனம் அதர்மத்தைத் தொடாமல் இருக்க நமக்கு தெய்வ சக்தி அவசியம் தேவை. இப்பாசுரங்களை பக்தியுடன் படிப்பதால் அத்தகைய தெய்வசக்தி நமக்கு சித்திக்கும் என்று கூறுகிறார் ஆழ்வார்.  

நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ?         1833 

    பரபக்தியின்றி நாத்திகவாதம் செய்பவர்க்கும், பகவானை என்றும் நினைக்காதவர்களுக்கும்  கிட்டாதவனை, மணம் மிகுந்த பூம்பொழில்கள் சூழ்ந்த வடமதுரையில் பிறந்தவனை, தேசமெல்லாம்  வணங்கும் திருமாலிருஞ்சோலையில் அருள் புரிபவனை, சிறந்த குழல் கற்றையையுடைய பகவானை, மீன் போன்ற விழிகளைக் கொண்ட என் மகள் தரிசனம் செய்ய முடியுமா? என்று கேட்கிறாள் தாயார்.
      பக்தியில்லாதவற்கு அவன் அரியவன். இதனால் எம்பெருமானின் ஸ்வாதந்திரம் வெளியிடப்பட்டதாம். பரம பக்தியுண்டானாலன்றி சிலருக்கு இரங்கி அருளான். சிலர் திறத்தில் அந்யபரமான சிந்தனைகளைக் கொண்டோருக்கும் அருள்புரிவான். இத்தகைய திருக்குணத்தை வாய்க்கப் பெற்றவனான பகவான் வடமதுரையில் பிறந்து பிரகாசித்து வந்தான். அது தனது ஏட்டுபுறத்தில் கேட்டு போகவேண்டாதபடி திருமாலிருஞ்சோலையில் விளக்கொளியாக நிற்கிறான். அத்தகையப் பெருமானை என் மகள் காண இயலுமோ? என்று சந்தேகத்துடன் கேட்கிறாள் தாயார்.                  

நம்மாழ்வார்                                                                                                                             திருவாய்மொழி                                                                                                            

வாய்க்கும்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து
     ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்
     வயல் சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்
     வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்
     மலர் அடிப்போதுகளே          3439 

      பெருமானைத் தொழும் பேறு நித்தியம் அடியேனுக்குக் கிடைக்குமா? எனது மனநிலையானது தினசரி இத்தகைய தரிசனம் கிடைக்கக் காத்துக் கிடக்கிறது. நன்கு வாய்த்துள்ள நிலங்களில் இனிய கரும்பும், நன்கு முற்றிய பெருநெல்லும் சூழ்ந்துள்ள திருவாறன்விளை, பெரும் புகழினையுடைய, மூவுலகங்களுக்கும் பெருமானான வடமதுரையில் பிறந்த நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுக்கு கைங்கர்யம் பண்ணக்கூடிய பாக்கியம் அடியேனுக்குக் கிட்டுமோ? என்கிறார். இது சாமானிய மக்களான நமக்கும் சேர்த்தே வேண்டுகிறார். வினைகளால் மறைக்கப்பட்ட கண்களிலுள்ள மயக்கத்திலிருந்து விடுபட்டு திருத்தலங்கள் தோறும் சென்று அவனை சிரம் தாழ்த்தி வணங்க வேண்டும் என்றவாறு ஆழ்வார் உணர்த்துகிறார். 

இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்
     படையாய்! ஏறும் இரும் சிறைப்புள்
அதுவே கொடியா உயர்த்தானே!
     என்று என்று ஏங்கி அழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
     இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மது வார் சோலை உத்தர
     மதுரைப் பிறந்த மாயனே?           3723 

      மின்னுகின்ற திருவாழியைப் படையாகத் தரித்திருப்பவனே! உனது வாகனமான கருடனைக் கொடியில் உயர்த்தியவனே! நான் எப்படியெல்லாமோ அழைத்தும் கருணையே வடிவான நீ வராமரிலிருப்பது உன் குணத்துக்குப் பொருத்தமான செயலா? என்றெல்லாம் புலம்பி ஏங்கி அழுகின்றேன். அப்படிக் கதறிக் கண்ணீர் விட்டாலும் அதை எந்த மாதிரி நீ எடுத்துக் கொள்கிறாயோ? தேன் துளிர்க்கும் பூந்தோட்டங்கள் நிறைந்த வடமதுரையில் பிறந்த கண்ணபிரான் இப்பெரிய உலகத்தின் பாரம் தீர்க்க வந்து அவதரித்தவன். அவன் கருத்தை அறிந்தவர் யார்? என்று கேட்கிறார் ஆழ்வார். கஜேந்திரன் என்கிற யானை அழைத்ததும் ஓடி வந்தாய். திரௌபதி மானம் காக்க விரைந்தோடி வந்தாய்.  பிரகலாதனின் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு தூணைப்பிளந்து வந்து அவனைக் காத்தாய். இவ்விதம் அனைவர் குரலுக்கும் செவிசாய்க்கும் நீ என் குரலைக் கேட்டும் கேளாமல் இருப்பது ஏனோ என்ற கருத்தில் இப்பாடலைப் பாடுகிறாள். 

பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்று எழுவர்
இருள்கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை
மருள்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே        3783 

      ஒருவர் கையில் பொருள் இருக்குமானால் அவனைப் புகழ்ந்து அவனை உறவாகக் கொண்டு மகிழ்ந்திருக்கும் உலகம் இது. அறிவின்மையை ஏற்படுத்தித் துன்பத்தைக் கொடுக்கும் வறுமை வந்தபோது, இருக்கிறாயா என்று கேட்பதற்குக்கூட ஆள் இருக்காது. எனவே அஞ்சக்கூடிய செயல்களைச் செய்யும் அசுரர்களை அழிப்பதற்காக வடமதுரையில் அவதரித்த கண்ணபிரானின் அருளுக்குப் பாத்திரமாக அவனது அடியவராக முற்படுங்கள். அதுவே உய்ய வழி. அதைப்போன்ற பாதுகாப்பு வேறு கிடையாது என்று கூறுகிறார் ஆழ்வார். ‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு’ என்று திருவள்ளுவரும் தமது குறளில் கூறியுள்ளதை இங்கு ஒப்பு நோக்கலாம்.  பொருள் இல்லாதோரை அனைவரும் இகழ்வார்கள். செல்வந்தர்களை வேறு நன்மை இல்லாதிருந்தாலும் அவர்களைப் போற்றிப் பணிவர். வள்ளுவரின் இக்கூற்று நம்மாழ்வார் பாசுரத்திற்கும் பொருந்துவன போல் உள்ளது. நெருங்கிய உறவுகளும் செல்வம் இல்லாத நிலையில் நம்மை விட்டு அகன்று விடும் நிலையில் உண்மையான உறவான பகவானைப் பற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது என்ற கருத்தினை வலியுறுத்துகிறார் ஆழ்வார். 

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே         3676 

      ஆபத்துக் காலத்தில் உதவி செய்ய ஒருவர் வேண்டுமே என நினைத்து செல்வம் இருக்கும்போதே பலருக்கும் உபகாரம் செய்து உறவைப் பலப்படுத்திக் கொள்வர் பலருண்டு. ஆனால் அந்தக் கடன்பட்ட அற்பர்கள் இன்னல்கள் வரும் காலத்தில் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி மெதுவாக நம்மை விட்டு அகன்றுவிடுவார்கள். அவர்களது எண்ணம் பொய்த்துப் போய் எவ்வித உதவியும் பெற முடியாமல் நிர்கதியாய் நிற்பார்கள். அதனால் மனம் வருந்தி புலம்பித் தவிப்பவர்கள் ஏராளம். இதனை வர்ணித்து என்ன பயன்? இவ்விதம் நாம் ஏமாந்து தெளிவு இல்லாதவர்களாக உள்ளோம். அத்தகைய நேரத்தில் நமக்கு உதவிக்கரம் நீட்டி நம்மை அரவணைத்துக் காப்பவர் பகவான் ஒருவர் மட்டுமே. அதனால் வடமதுரையில் தோன்றிய கிருஷ்ண பரமாத்மாவின் வளமான பெருமைகளைப் பேசி, அவனையே சரணடையுங்கள். அதுவே உய்யும் வழி. அதை விட்டால் வேறு வழி கிடையாது என்று கூறுகிறார் ஆழ்வார்.     

சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து இன்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே         3785 

      சௌகர்யமாக நாங்கள் வாழ்கிறோம் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டு, இன்மொழி பேசும் பெண்களிடம் இனிய போகங்களை அனுபவிப்பவர்கள், செல்வமும் இளமையும் வற்றிய காலத்தில் இம்மங்கையரால் புறக்கணிக்கப்பட்டு தாழ்நிலை அடைவர். அதனால் அதிர்ச்சி தரும் செயல்களைச் செய்த அசுரர்கள் மண்ணில் சாயும்படி வடமதுரையில் பிறந்த கண்ணனுக்குக் கைங்கர்யம் செய்து அவன் நம்மை எதிர்கொண்டு வரும்படியாக நடந்து கொள்வதே உய்யும் வழி. அதுவல்லால் பேரின்பம் வேறெதிலும் இல்லை என்று கூறுகிறார் ஆழ்வார். செல்வம் இருக்கும்வரை நம்மைப் புகழும் மாதர்கள் அவை இல்லையென்று தெரிந்து அவர்களால் ஏற்படும் அவமானங்களையும், படும் துன்பங்களையும் எடுத்துரைத்து இதனைக் களைய எம்பெருமானைச் சரண் புகுதலே நாம் உய்யும் வழி என்று கூறுகிறார். 

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்யப் போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே          3786 

      இவ்வுலகில் நிலையான இன்பம் என்று ஒன்றுமே இல்லை என்பதை நீங்கள் ஏன் நினைத்துப் பார்ப்பதில்லை. அந்தோ!  உறுதியான சுகம் பகவான் என்பதை அறியாமல் நமக்கு முன் எத்தனை பேர் பிறந்து, வாழ்ந்து, மடிந்து போயிருக்கிறார்கள். அவர்கள் பரமபுருஷார்த்தம் என்பதை உணராமலேயே தமது காலத்தை கடத்தி விட்டார்கள். அவர்களைப் போலில்லாமல் நீங்களாவது நிறைவையுடைய வடமதுரையில் தோன்றிய வாசுதேவனின் வளமான பெருமைகளைப் பாடி, அவனது கல்யாண குணங்களை நாளும் சிந்தித்து உய்யப் பாருங்கள். அதுவே உறுதியான சுகம்.  சுருக்கமாகக் கூறின் அவனை நினைத்து உய்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறுகிறார் ஆழ்வார். உண்பது, உறங்குவது, போகங்களை அனுபவிப்பது, பின் மரணம் அடைவது என்பதை பின்பற்றி மக்கள் வாழ்கிறார்கள். செல்வம், பதவி, பெண்சுகம் அனைத்தும் நிலையற்றது என்றும் பகவானின் திருக்கடாக்ஷமே நிலையானது என்பதை ஆழ்வார் இப்பாடல் மூலம் நமக்கு தெளிவிக்கிறார். 

மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே          3787

      வடமதுரையில் அவதரித்த நந்தகுமாரனின் குற்றமற்ற பெருமைகளைப் படித்து, குற்றமில்லாமல் தினமும் நற்குணத்தோடு வாழப் பாருங்கள். அவன் பசுக்களை மேய்ப்பதற்கென்றே பிறந்தவன். இந்த உலகத்தின் பரந்த நிலையிலுள்ள எல்லா உயிர்களுக்கும் வேறெந்த வழியும் கிடையாது என்பதைச் சுருக்கமாகச் சொன்னோம். எத்தனைச் சொன்னாலும் வேறு வழியில்லை. ஐயோ! மானிடர்களே! உங்களது அறிவினைச் சிதற விடாதீர்கள்! நீங்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இந்த உண்மையைப் புரிந்து கொள்வீர்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். ஆழ்வார் இப்பாசுரத்தில் நாம் எம்பெருமானைப் பற்றுவதில் உள்ள எளிமையையும், இனிமையையும் நன்கு எடுத்துரைக்கிறார். நாம் இவ்வுலகில் பிறவி எடுத்தது மேற்கொண்டு பாவங்களை அதிகப்படுத்துவதற்கல்ல, முற்பிறவியில்  செய்த பாவங்களையும் இப்பிறவியிலேயே போக்கிக்கொள்ளத்தான் என்ற கருத்தினை ஆழ்வார் வலியுறுத்ததுகிறார். 

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே.          3788 

      அற்புதமான லீலைகளைப் புரிந்தவனின் பெருமைகளைப் பாடி வாழ்வதே சிறந்த குணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தோ! பொழுதை நல்ல விதமாகச் செலவிடுவதற்கும், நற்குணங்கள் கொண்டவர்களுக்கு வாழ்க்கைத் துணையாக இருப்பதற்காகவும் வடமதுரையில் வந்து தோன்றியவனின் வளமான பெருமைகளை விரும்பிப் பாடுங்கள். இதைவிட உறுதுணையாக இருப்பது வேரொன்றும் இல்லை! என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பகவானின் பெருமைகளை விருப்பத்தோடு பாடுங்கள். இதைவிட உறுதுணையாக இருப்பது வேறு ஒன்றுமில்லை. பொருளும், மனைவி மக்களும் நமக்கு துணை இல்லை. பொருளின்றி அவர்கள் உற்ற துணையாகக் கொள்ள மாட்டார்கள். சுயநலமே பிரதானமாகக் கொண்ட இவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில் எவ்வித பயனுமில்லை.  எக்காலத்திலும் நம்மை விட்டுப் பிரியாமல் உறுதுணையாக வரும் உத்தமான அந்த கண்ணனின் பாதத்தை பற்றுங்கள். அதுவே உண்மையான உறவாகும் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.          

யாதும் இல்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம்
மா துகிலின் கொடிக்கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே
        3789 

       பகவத் விஷயம் தவிர வேறு ஒன்றைப் பற்றிக் கொண்டு, இதைவிடப் பாதுகாப்பு எதுவும் இல்லை என்று நினைப்பது, பெரிய பாம்படம் என்ற நகையை அணியக் காதினை வளர்ப்பவர்கள், தரித்ரம் வந்ததும் அதை மூளியாக விட்டு வைப்பதைப்போல் ஆகிவிடும். நல்ல முறையான வாழ்க்கையை இழக்க நேரிடும். ஆகையால் பெரிய துணிக்கொடிகள் பறக்கும் மாடமாளிகைகள் நிறைந்த வடமதுரையில் அவதரித்த, மலர்மாலை அணிந்த தோள்களையுடைய கண்ணன் திருப்பாதங்களை சரணடையுங்கள். அதை விட்டால் வேறுவழி இல்லை என்று கூறுகிறார் ஆழ்வார்.
      கனங்குழை இடுவதற்காகக் காதைப் பெருக்கப் புகுந்து அதனுடைய தற்போதைய நிலையையும் அழித்து வாழ்வதால் நல்ல முறையான வாழ்வினைப் பாழாக்கிக் கொள்வது போலாகும். உயர்ந்த ஜீவனத்தில் ஆவல் கொள்வதை விட்டு விட்டு ஜீவனறற விஷயங்களில் ஆர்வம் காட்டுவதால் அவனது வாழ்வு பயனற்ற ஒன்றாக மாறிவிடும் என்பதை இப்பாசுரம் மூலம் ஆழ்வார் நமக்கு உணர்த்தி அதனால் வடமதுரையானைச் சரணடையுங்கள் என்று கூறுகிறார். 

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே.         3790 

      பூமிபாரம் போக்குவதற்காக வடமதுரையில் வந்து தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர். கண்ணனைத் தவிர சரண் புக வேறு எவரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சொந்தம் என்று நிச்சயமாக நீங்கள் நினைத்திருக்கும் பொருள் ஏதாவது இருந்தால் அதை அவன் திருப்பாதங்களில் அதையும் சமர்ப்பணம் செய்து உய்யுங்கள். அது உங்களுடையதல்ல என்று நினைக்க வேண்டும். அவன் இன்றி உலகில் வேறு எதுவுமே இல்லை என்கிறார் ஆழ்வார்.
      உண்மையான சொந்தம் என்பது பகவானின் திருப்பாதங்களே. பரிபூரண சரணாகதி அடையாமல் நாம் இறைவனை அடைய முடியாது. தூய்மையுடையவர்களாக இருக்க வேண்டும். உலகப் பற்று என்பது சுயநலத்தைக் கொண்டது. சுயநலமில்லாமல் நாம் பகவானுடன் சேர வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் நாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆழ்வார் இதனை இப்பாசுரத்தின் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார்.   
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...