திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன்
தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே 1768
கொடிய பாவத்தை உடையவளாகிய நான்
என்னை அழித்துக் கொள்ள இயலாதபடி உள்ளேன். ஒளி பொருந்திய பொன்னை தோற்கடிக்கும்
சுரபுன்னைப் பூக்களின் வாசம் வீசும் நிழலில் என்னுடன் கூடி என் மேனி நிறத்தைக்
கவர்ந்து கொண்டு பிரிந்து சென்ற எம்பெருமானின் தலமாகவும், முத்துப்போல்
மொட்டரும்பிய புன்னை மரப்பூக்களால் சூழப்பட்டு விளங்கும் திருப்புல்லாணியைச்
சேர்ந்து வணங்குவோம் என்கிறார் ஆழ்வார்.
திருநாகை தலத்தில் அனுபவத்தில்
வந்த நாயகி பாவனை இத்தலத்திலும் தொடர்கிறது எனலாம். ‘பிரிந்தவர்கள் சேர்வது
கடற்கரையில்’ என்று கூறுவது போன்று திருப்புல்லாணியும் ஒரு கடற்கரை தலமாததால் இது
பொருந்தி வருகின்றது. அந்தோ! இப்பாழும் உயிர் என் உடலை விட்டு பிரியாமல் உள்ளதே!
தலைவனை பிரிந்து நோய்படும் இவ்வுடல் பிரியாதா என்று வினவுகிறாள். என்னுடன்
சேர்த்து என் மேனி நிறத்தையும் கவர்ந்து சென்று விட்டாரே! அழிவது உடல் மட்டுமே.
ஆத்மா இருக்கும்போது அதில் குடியிருக்கும் பெருமானை விட்டுவிட்டு எப்படி நம்மை
அழித்தக் கொள்வது? என்று துன்புறுகிறாள் தலைவி.
உருகி நெஞ்சே நினைந்து இங்கு
இருந்து என்? தொழுதும் எழு
முருகு வண்டு உண் மலர்க் கைதையின் நீழலில் முன் ஒருநாள்
பெருகு காதன்மை என் உள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி உந்து புல்லாணியே 1769
நெஞ்சமே! இங்கிருந்து சிந்தித்து
உருகுவதால் என்ன பயன்? முன்னொரு
நாளில் வண்டுகள் தேனருந்தும் மலருடைய தாழம்பூவின் நிழலில் என் உள்ளத்தில் காதல்
பெருகும்படி செய்து, பிரிந்து
போனவனின் வாசஸ்தலமான கடல் அலைகள் வீசி தரையில் இரத்தினங்களை கொண்டு சேர்க்கும்
இடமான திருப்புல்லாணியை அடைந்து வணங்குவோம்! எழுந்திரு! என்கிறாள்.
நெஞ்சமே! பெருமான்
திருப்புல்லாணியில் வாசம் செய்து வரும்போது நாம் இங்கிருந்து பெருமானை நினைத்து
உருகுவதில் என்ன பயன். நமது உருக்கமும் சிந்தனையும் தீரவேண்டுமென்றால் உடன் அங்கு
செல்ல வேண்டும். பெருமானின் பிரிவிற்கு காரணமென்ன? நம்மிருவருக்கும் பொருள் ஈட்டிவர
சென்றாரோ. அவ்விதமிருப்பின் அதன் காரணத்தைச் சொல்லி சென்றிருக்கலாமே. சொல்லிப்
போவதற்கு அவகாசமில்லாமல் திருப்புல்லாணிக்குச் சென்று வாசம் செய்கிறாரே. அவரைச்
சென்றடைவோம! விரைந்து வா,
என்று கூறுகிறாள்.
ஏது செய்தால் மறக்கேன்? மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே. 1770
ஓ மனமே! எம்பெருமானை
மறவாமலிருக்க என்ன செய்யலாம்? மகரந்தப் பொடிகள் நிறைந்த அழகிய மலர்கள் நிறைந்த தடாகங்கள்
சூழ்ந்த சோலைகளின் தாழ்வரைகளில் என்னைத் தொடர்ந்து வந்து பேதையே! உன்னை ஒரு நாளும்
பிரியேன்! என்று கூறிப் பிரிந்தவன் குடிகொண்டிருக்கும் இடம் எப்போதும் மலர்மணம்
வீசும் அழகிய மலர்வனங்கள் சூழ்ந்த திருப்புல்லாணியாகும். அதை வணங்கி எழுவோம் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
உலக மாந்தர்கள் தம் காதலர்களுடன்
கூடிப்பிரிந்தால் கூடியபோது மறக்க மாட்டார்கள். அது போன்று பிரிந்த போதும் நினைக்க
மாட்டாதவர்களாக இருப்பார்கள். அத்தகைய நிலை தலைவிக்கு ஏற்பட்டது. பிரிந்தபோது மறக்க இயலாதவாறு படாதபாடு படுகிறார்கள்.
பின் தெளிவடைந்து இனி எதைப் பெற வேண்டுமானாலும் அவன் வழியாகப் பெற
வேண்டியிருப்பதால் மறக்கும் வழியைப் பிரார்த்தித்துப் பெற வேண்டி உள்ளதால் அவள்
திருப்புல்லாணியை அடைய நினைக்கிறாள். நமது ஆத்ம சிந்தனையை தூண்டிவிட்டு வேடிக்கைப்
பார்ப்பதும் பகவானின் செயலாகும்.
கொங்கு உண் வண்டே கரியாக வந்தான்
கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி உந்து புல்லாணியே. 1771
தோழியே! இனிய தேனை உண்டு மகிழும்
வண்டு ஒன்றே சாட்சியாக, பாவியான என்னிடம் கூடவந்த பெருமான் என்னிடம் கொடுத்த
வாக்குப்படி நடந்து கொள்ளவில்லை. அவன் வீற்றிருக்கும் இடமான அலைகள் வந்து மோதும்
சமுத்திரக் கரையோரங்களில் இரத்தினங்களைக் கொழிக்கும் திருப்புல்லாணியைப் போய்
வணங்கி எழுவோம் என்கிறார்.
தலைவனை விட்டு பிரிந்த துன்பத்தை
தோழியுடன் பகிர்கிறாள். தோழியும் தாங்கள் சேர்ந்ததற்கு சாட்சி உண்டா? என்று கேட்க, நான்
பிரிவாற்றாமையால் மெலிந்து கிடக்க, எனது துளப மாலையில் உள்ள பூக்களின் தேனை அருந்த வந்த வண்டே
எனக்கு சாட்சியாகும். அவ்விதம் அதுவும் சாட்சி சொல்லாமல் போனால் நான் என்ன
செய்யட்டும்! சாட்சிகள் இல்லாமல் பெருமானோடு சம்பந்தம் கொண்ட பாவியாகிப் போகிறேன்
போ! என்று வருந்திக் கூறுகிறாள். மீண்டும் எழுந்து நாங்கள் சேர்ந்த போது பாடிய
பாசுரங்களே இதற்கு சாட்சி! என்று தலைவி கூறுகிறாள்.
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன்
தொழுதும் எழு
துணரி ஞாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம்
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே 1772
கொத்தான மலர்கள் நிறைந்த கோங்கு
மரத்தின் வாசமுள்ள மலர்களை நமது கரிய கூந்தலில் அணிவித்து உன்னை விட்டுப்
பிரிந்தால் என் ஆன்மா தளரும் என்று அன்பாகக் கூறிப்பிரிந்த பெருமானைப் பாவியான
நான் நினைக்கும் போதெல்லாம் என் மனம் துன்பமடைகிறது. அவன் திருக்கோயில்
கொண்டிருக்கும், கடல்
அலைகள் சங்குகளையும், நல்ல
இரத்தினங்களையும் ஒதுக்கித் தள்ளும் திருப்புல்லாணியை வணங்கி எழுவோம் வாருங்கள்
என்று கூறுகிறார்.
சென்ற பாட்டில் மறக்க
முடியவில்லை என்று சொன்ன தலைவி இப்பாட்டில் நினைக்க முடியவில்லை என்று கூறுகிறாள்.
அதற்கு தோழியானவள் அசோகவனத்தில் சீதை தனிமைப்பட்டு இருந்தபோது சென்ற காலங்களில்
இராமனுடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து நினைத்து பொழுதைக் கழித்தாள். அவளைவிட நீ
ஒன்றும் சிறந்தவளில்லை என்ற கூறுகிறாள். தலைவியும் அதனை ஆமோதித்து இவ்வகையில் நான்
பெரும் பாவியானேன் என்று வருந்துகிறாள். இத்தகைய அன்புள்ளம் கொண்டவளே பாவி என்று
கூறினால் பகவானை மறந்து திரியும் நாம் எத்தகைய பாவி என்று கூறுவது என்பதாகப்
பொருள் அமைகிறது.
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு
இருந்து என்? தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவும் இடம்
கள் அவிழும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே 1773
வெட்கமில்லா மனமே! பெருமானையே
நினைத்து இங்கேயே இருப்பதால் பயன் ஏதுமில்லை. பக்தர்களுக்கு கருணை புரிவதில்
வள்ளலாகவும், வியப்பான
செயல்களைச் செய்தவனும்,
நீலமணி நிறத்தில் உள்ளவனுமான பெருமான் கோயில் கொண்டிருக்கும் இடமாகிய
தேன்கசியும் செங்கழுநீர் மலர்களும், வெள்ளை மடலையுடைய தாழம்பூக்களும், பலவிதமான
பறவைகளும், சேறான வயல்களும் சூழ்ந்திருக்கும் திருப்புல்லாணியை வணங்கித் தொழுவோம்
புறப்படு என்று கூறுகிறாள்.
பெருமான் தனது அருளை
பக்தர்களுக்கு என்றும் வாரி வாரி வழங்குவதால் அவனை வள்ளல் என்று குறிப்பிடுகிறாள்.
அவ்விதம் என்னுடன் ஒன்றாகக் கலந்தவன் இப்போது நான் பதறி ஓடிவந்தும் எட்டாக் கனியாக
உள்ளானே. இத்தகைய வஞ்சம் புரிகிறவனை மாயன்
என்று கூறுகிறாள். அவன் என்னை ரக்ஷித்தாலும், என்னை விட்டு அகன்றாலும் அவன் வடிவு படைத்தவனாக உள்ளான்.
அவன் திருப்புல்லாணியில் நித்யவாசம் செய்வதால் அங்கு சென்றால் அவனுக்கும் நமக்கும்
பந்தம் ஏற்படும் என்று நம்பி செல்கிறாள்.
தலங்களில் சென்று அவனை தரிசித்தால் அவனது கருணை நமக்கு கிடைக்கும் என்று கருத்தில்
கூறுகிறாள். பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய்
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன்?
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம்செய்து வந்து உந்து புல்லாணியே. 1774
பாவியான மனமே! பிரிந்து போன
அவனுக்கு உன் எண்ணங்கள் மட்டுமே பாலமாய்
மிஞ்சி இருக்கின்றன. இரவும் பகலும் இனி
உறங்காமல் இருப்பதால் என்ன பயன்? வெண்மைநிற அலைகள் குதிரை போல் தாவி முத்துக்களை வெண் மணல்
மேல் கொண்டு வந்து தள்ளும் இடமான திருப்புல்லாணியிலே கோயில் கொண்டு எழுந்தருளிருயிக்கும்
ஜகந்நாதனை வணங்கி வேண்டுவோம் வா..! என்று கூறுகிறாள்.
பெருமான் என்னை விட்டுப்
பிரிந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அவன் எண்ணங்கள் மட்டும் எனக்கு பாலமாக மிஞ்சி
நிற்கின்றது. அவன் பிரிவை நினைத்து துன்பம் அதிகரிக்கின்றது. பகவான் பிரிந்து
போனாலும் அவனுடன் நான் கொண்ட உறவு என்னைவிட்டு நீங்காமல் உள்ளது. அவனின்றி அவனது எண்ணங்களைக்
கொண்டு நான் எவ்விதம் வாழ்வது? அந்த எண்ணங்களாலே அவனை அடைவது மட்டும் எனது
குறிக்கோளாகத் திகழ்கின்றது. எத்தனை நாட்கள் அவனை நினைத்து இரவும் பகலும்
உறங்காமல் இருப்பது. அவனை அடைய அவன் இருப்பிடத்திற்கு செல்வது ஒன்றே உபாயமாகும்
என்று கூறுகிறாள்.
அலமும் ஆழிப் படையும் உடையார்
நமக்கு அன்பர் ஆய்
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே. 1775
கலப்பையும், சுதர்சனச்
சக்கரமும் ஆயுதங்களாகக் கொண்ட பெருமான் நமக்கு அன்பராய் இருப்பதுபோல் பாவனை
காட்டிக் கபடராகிச் சற்றும் கருணை இல்லாமல் இருக்கிறார். தென்றல் காற்றையுடைய வாய்க்கால்களிலே, கடற்கரை
சோலைகளிலே களி வண்டுகளின் கூட்டம் இசைபாடும் திருப்புல்லாணியைத் தொழ முறையிடுவோம்
வா..! என்ற கூறுகிறாள்.
தலைவியானவள் பெருமானின் பிரிவைத்
தாங்க மாட்டாமல் துன்புறுகிறாள். ஒரு கையில் கலப்பையினையும், மற்றொரு கையில்
சுதர்சனச் சக்கரத்தையும் ஏந்தியுள்ள பெருமான் எளியவராக வந்தார். இவரே நமக்கு
எல்லாம் என்று நினைத்தேன். நம்மிடம் எப்போதும் பரிவுடன் இருப்பார் என்று நினைத்த
அவர் என்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டார். அத்தனையும் கபடமா? ஒரு
பெண்டாட்டியை இவ்விதம் சிறிதும் இரக்கமில்லாமல் வஞ்சிப்பதா? அவர்தான்
அப்படி ஒதுங்கியிருந்தால் நாமும் அது போல் இருக்க முடியுமா. எனவே திருப்புல்லாணி
சென்று அவரை சேவிப்போம். விரைந்து வா..! என்று கூறுகிறாள்.
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால்
ஒளி மா மலர்
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய்
போதும் மாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே 1776
பெண்ணே! நாம் நீராடி, அவனது திருநாமத்தை ஓதி, ஒளிமிக்க அவனது
பாதக் கமலங்களைத் தினமும் நம் சிரத்தினால் தலைவணங்கிச் சேவிப்போமாக. இவை நமக்கு
நலமுண்டாகும். நமக்கு எதுவும் வழங்கக் கூடாது என்று அவன் வைராக்கியமாக இருந்தாலும்
நான் கொண்ட அன்பு எனக்குப் பலன் தரும். மேலும் அவனுக்கு நாளும் அடிமையாக இருக்கும்
பாக்கியம் ஒன்றே போதும். வேறு எதுவும் வேண்டேன். எனவே புறப்படு, புல்லாணி
சென்று பெருமானை சேவிப்போம்! என்று கூறுகிறாள்.
தோழியே! இதுவரை பெருமானுக்காக
தொண்டு புரிந்து வந்தேன். இதைத் தவிர வேறொன்றுமில்லை என்று நினைத்திருந்தேன்.
இருப்பினும் என் குறித்து எந்தவிதமான பற்றுதலையும் பெருமான் அளிக்கவில்லை. எனவே
இனிமேல் நாமே வேறு சில உபாயங்களைச் செய்து அவன் மனதை மாற்ற வேண்டும். நீராடி
முடித்து நாளும் அவனது திருநாமங்களை விடாது சொல்வோம். நியமநிஷ்டைகளைக்
கடைபிடிப்போம். ஒளிமாமலர் பாதங்களை ஈடுபாட்டுடன் சேவிப்போம். கீதையில் கூறியவாறு
அவன் தனது திருவாக்கினால் சொன்னவற்றைத் தானே நான் சொல்லுகிறேன். அவனது
ஸ்வரூபத்திற்கு அழிவு வரக்கூடாதென்று நினைத்து அதற்கு விரதம் இருக்கிறேன். பலன்
கிடைத்தாலும் கிடைக்க மாட்டாமல் போனாலும் நாம் திருப்புல்லாணி செல்வோம் என்கிறாள்.
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்
எழில் தாமரை
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணிமேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலிமாலை
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே. 1777
ஒளி தரக்கூடிய அழகிய முத்துக்களையும், இளம்
பவழங்களையும், அழகிய
தாமரைப் பொய்கைகளையயும் கொண்ட சோலைகளால் சூழப்பட்ட அழகிய திருப்புல்லாணியைக்
குறித்துத் தெளிவான புகழினையுடைய திருமங்கையாழ்வார் பாடிய இப்பாடல்களைப்
பக்தியுடன் பாடுபவர்களுக்கு துன்பம் இல்லாத வைகுண்டமே இருப்பிடமாக அமையும் என்று
கூறுகிறார்.
மேற்கண்ட பாசுரங்களில் பரக்கால
நாயகிக்கு நேர்ந்த அனுபவங்களை விவரிக்கிறார். தன்னையே எனக்குத் தந்த கற்பகம் அவன்!
தன்னையே முழுமையாகக் கொடுத்தான். ‘தமதனைத்தும் அவர்தமக்கு வழங்கியும் தாம் மிக
விளங்கும் தன்மை பெற்றவர் எம்பெருமான்’ என்று ஸ்வாமி தேசிகன் கூறுகிறார்.
அடுத்து தன் மனத்திடமும் தோழியிடமும் தன் புலம்பலைத் தெரிவிக்கிறாள். பின் சற்றே
தெளிந்து இதுவே புருஷார்த்தம் என்று நினைத்து நீராடி, திருநாமம் ஓதி, அவனது
மலர்ப்பாதங்களை சிரசினால் வணங்குவோம் வா! விரைந்து திருப்புல்லாணி செல்வோம்!
என்கிறாள்.
கா ஆர் மடல் பெண்ணை அன்றில்
அரிகுரலும்
ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ
பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன்
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே? 1778
பெண்ணே! சோலைகளில் மடலையுடைய பனை
மரத்தின் மேல் அமர்ந்துள்ள அன்றில்
பறவையின் தழுதழுத்த காமக்குரல், அம்புபட்ட புண்ணின் மேல் இறங்கிய வேலைக் காட்டிலும் கொடியதாக
உள்ளது. பூக்களில் வாசம் வீசும்
திருப்புல்லாணியை நான் வணங்குவேன். ஏதும் செய்யாமல் துன்பப்படுவது நமக்கு சரியாக
வராது என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
‘திருப்புல்லாணி சென்று அவன்
பாதம் தொழுவோம் என்று ஆவல் கொண்டிருந்த நமக்கு அது நடக்காமல் துன்பப்படுவதே
பலனாயிற்றே’ எப்பொழுதும் வருந்தியிருப்பதே நம் தொழிலாகிவிட்டதே என்று தாங்கொணா
வருத்தத்துடன் பேசுகிறாள். தோழி! கால்கள் தளர்ந்தாலும், மாலை நேரம்
வந்தாலும் திருப்புல்லாணிக்கு நாம் செல்ல இயலவில்லை. மடல்கள் நிறைந்த பனைமரத்தில்
அன்றில் பறவைகள் எழுப்பும் மனத்தை வருத்தும் குரலோசை என மனத்திலே வெந்த புண்ணில்
வேலிடுவதற்கொப்பான துயரைத் தருகிறது என்று வருந்துகிறாள். தெய்வீக வாழ்வு என்பது
ஒரு புது உலகை நோக்கிச் செல்வது போன்று. இவ்வுலகில் இருந்து கொண்டே தெய்வீக
உலகத்தில் நாம் பிரவேசிக்க முடியும்.
சான்றாக நமது மகரிஷிகள் அவ்விதம் வாழ்ந்தார்கள் என்பது நாம் அறிந்த
ஒன்றாகும்.
முன்னம் குறள் உரு ஆய் மூவடி மண்
கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன்
பொன்னம் கழிக் கானல் புள் இனங்காள் புல்லாணி
அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனைச் செப்புமினே. 1779
‘பொன்னங்குழி என்னும் அழகிய
கடற்கரை நிலங்களில் சுற்றித் திரியும் பறவை இனங்களே! முற்காலத்தில் வாமன
அவதாரமெடுத்து மூன்றடி மண் பெற்று உலகங்களை அளந்த திருவிக்ரமன் செயலுக்கு நான்
முழுவதும் மயங்கி உடலெல்லாம் பசலை பெற்றேன். எனது இந்த நிலையை திருப்புல்லாணி
சென்று அன்னமாகி மறைகளை நமக்கு உபதேசித்த ஜகந்நாதனுக்குச் சொல்லுங்கள்’ என்று
கூறுகிறாள்.
பொன்னங்குழி என்னும் கடற்கரையில்
உள்ள பறவைகளை பெருமானிடம் தூது விடுகிறாள் தலைவி. பறவைகளே! அவரிடம் சென்று எனது
சிந்தை நோய்கள் பற்றிச் செப்புமாறு கூறுகிறாள். ‘முன்னர் அவனைத் தேடிச் சென்ற என்
தனி நெஞ்சமும் இன்னும் திரும்பியபாடில்லை. அவனது பிரிவினால் துயருற்று அதனால் பசலை
நோயில் வாடுகிறேன். வேதப் பொருளை பிரம்மனுக்கு எடுத்தருளினான. அத்தகையவன் நம்
இழிவுகளையெல்லாம் நீக்கி ஆத்ம தரிசனத்திற்கு வழிவகுப்பான். எனவே திருப்புல்லாணிப்
பெருமானான ஜகந்நாதனிடம் சொல்லுங்கள் என்று தலைவி சொல்கிறாள்.
வவ்வித் துழாய் அதன்மேல் சென்ற தனி
நெஞ்சம்
செவ்வி அறியாது நிற்கும்கொல்? நித்திலங்கள்
பவ்வத் திரை உலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே. 1780
பறவைகளே! பெருமானது துளசி
மாலையைப் பிடித்துக்கொண்டு சென்ற என் உள்ளம் உடலுக்குத் திரும்ப வேண்டும்.
முறையறியாமல் அங்கேயே தங்கி விட்டதோ? கடல் அலைகளில் முத்துக்கள் மிதந்து வரும்
திருப்புல்லாணியைக் கைகூப்பி வணங்குகிறேன். என் மனத்திலுள்ள நோயை அழகிய திவ்யமான
வில்லேந்திய பெருமானிடம் சொல்லுங்கள்! என்று கூறுகிறாள்.
தனது சிந்தை நோயை பெருமானிடம்
கூறுங்கள் என்று புள்ளினங்களைத் தூதுவிடுகிறாள். தலைவன் பிரிந்து சென்றபோது அவன்
அணிந்திருந்த திருத்துழாய் மாலையுடன் என் நெஞ்சமும் அவருடன் கூட சென்று விட்டது.
அவ்விதம் அவரைத் தேடச்சென்ற தனிமனம் இன்னும் என்னிடம் திரும்பவில்லை. இவ்விதம்
செய்யலாகுமோ? திருப்புல்லாணியை சென்றடைய வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். அதற்குப்
பதிலாக சிந்தை நோய் என்னைப் பற்றிக் கொண்டதே! இவ்விதம் நான் சிந்தனை மறந்து
மனோவியாதியால் துடிக்கும் நிலையினை நீங்கள் போய் எம்பெருமானிடம் கூறுவீரா? என்று
புள்ளினங்களைக் கேட்கிறாள்.
பரிய இரணியனது ஆகம் அணி உகிரால்
அரி உரு ஆய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்கு
பொரு திரைகள் போந்து உலவு புல்லாணி கைதொழுதேன்
அரி மலர்க் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே. 1781
நரசிம்ம அவதாரமெடுத்து
இரண்யகசிபு என்ற அசுரனின் பருத்த மார்பினைத் தனது கூரிய நகங்களால் கிழித்தெடுத்த
பெருமான் நம்மிடத்தில் அருளிச் செய்த விதம்தான் எப்படி? மாறி மாறி
தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கடல் அலைகள் உலாவும் திருப்புல்லாணியைக் கைகூப்பி
வணங்கும் என் செவ்வரிப் பரந்த கண்களிலிருந்து கண்ணீர் ததும்ப, அழகிய ஆடையும், இடையில்
தங்குவதில்லை என்று வருந்திக் கூறுகிறாள்.
பிரகலாதனைக் காக்க பெருமான்
நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனின் உடலைக் கிழித்து அவனை அழித்தார். பிரகலாதனின்
பக்தியைவிட நம் பக்தியில் குறை உள்ளதோ? இவ்விதம் தரிசனம் அளிக்ககாமல் இருப்பது
தகுமோ? திருப்புல்லாணியில்
வந்து பகவானை தரிசித்த மாத்திரத்தில் கண்ணீர் பெருகுகிறது. இத்தகைய நிலையானது
அவளுக்கு இது கடைசி பிறவியாகும். தலைவியை பிறவிக் கடலிலிருந்து விடுவிக்க
திருவுள்ளம் கொண்டுவிட்டார் என்பது அர்த்தமாகிறது. இத்தகைய சிந்தனைகள் நம்
மனத்திலும் ஏற்பட வேண்டுமென்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
வில்லால் இலங்கை மலங்கச் சரம்
துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என் தன்னை ஏசிலும் பேசிடினும்
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே 1782
இலங்கை முழுதும் அழியுமாறு தனது
சார்ங்கம் என்ற வில்லை வளைத்து கூரிய அம்புகளைப் பொழிந்த பலமுள்ள எம்பெருமான்
பின்னே சென்ற மனம் திரும்பி வரும்வரை தாயாரும், தோழியரும் என்னைப்
பரிகாசம் செய்தாலும், திட்டினாலும், என்னைக்
கண்டித்துச் சொன்னாலும்,
திருப்புல்லாணியிலே கோயில் கொண்டிருக்கும் பெருமானுடைய பொய்யான
வார்த்தைகளை நம்பி உயிர் தரித்திருக்கிறேன் என்று கூறுகிறாள்.
பரக்கால நாயகியின் சுற்றத்தாரும், உறவினர்களும்
நங்காய்! மெய் போலும் பொய் வல்லனான பெருமானின் வார்த்தையை நம்பினாயே, பெண்களைப் பரிகசிப்பதே
அவன் தொழில், அவன்
மீது கொண்ட காதலை விட்டுவிடு! என்கிறாள். அதற்கு தலைவியானவள், அய்யோ! அவன்
பெண்டிர்கள் மீது கொண்ட பச்சாதாபத்தை நீங்கள் அறியவில்லையா. உண்ணாது உறங்காது
பிராட்டிக்காக இலங்கை சென்றவனை இவ்விதம் கூறுவதா? நமக்கு உதவவில்லை என்ற
காரணத்தினால் அவனை இவ்வாறு பழிப்பதா? அவனுடன் சென்ற நெஞ்சானது திரும்பி என்னிடம் வந்தால்தான்
உங்களது பேச்சுக்களைக் கேட்க முடியும். அவன் வார்த்தை பொய்யானாலும் அவனை விட்டால்
வேறு கதியில்லையே என்று மனம் நொந்து கூறுகிறாள்.
சுழன்று இலங்கு வெம் கதிரோன்
தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிது ஆகி அம் சுடரில் தான் அடுமால்
செழுந் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன்
இழந்திருந்தேன் என் தன் எழில் நிறமும் சங்குமே. 1783.
மேருமலையைச் சுழன்று வரும்
ஒளிதரும் சூரியன் தேரோடு மேற்கில் அஸ்தமித்தான். அழகிய கிரணங்களைக் கொண்ட சந்திரனோ
நெருப்பைப் போல் தகிக்கிறான். செழுமை தங்கிய தடாகங்களும், பொய்கைகளும், மலர் வனங்களும்
சூழ்ந்த திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதனைக் கைகூப்பி வணங்குகின்றேன். ஆனால், என் மேனி நிறத்தையும், கைகள் மெலிதானதால் சங்கு வளையலையும், அவர் பிரிந்த
பின் இழந்துவிட்டேன் என்று துன்புறுகிறாள் தலைவி.
உலகப் பொருள்கள் எவையேனும் கண்டு
கொண்டாகிலும் இந்தப் பிரிவாற்றாமையை ஒருவாறு ஆற்றுவோமென்று பார்த்தால் ஆதித்தன்
அஸ்தமித்து சென்று விட்டான், குளிர்ச்சி தரும் சந்திரனோ உதித்த பின்பும் நெருப்பாகச்
சுடுகிறான். திருப்புல்லாணியைத் தொழ வேண்டுமென்று வந்த என் மேனி இளைத்து விட்டது.
கைவளை கழன்று பாவப்பட்டு பரிதாபமாக நிற்கிறேன்.
எம்பிரானோடு சேர்ந்து என் மேனி வளம் கொள்ள வேண்டும். மகிழ்வுடன் இன்னும்
ஆபரணங்கள் அணிய வேண்டும் என்று நினைத்து உள்ளவற்றையும் இழந்து நிற்கிறேன் என்று
வருந்துகிறாள்.
கனை ஆர் இடி குரலின் கார் மணியின்
நா ஆடல்
தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனை ஆர் மணி மாடப் புல்லாணி கைதொழுதேன்
வினையேன்மேல் வேலையும் வெம் தழலே வீசுமே 1784.
கனைத்து இடி இடித்தாற்போல் அதிக
ஒலியிடும் கறுத்த மாட்டின் கழுத்திலுள்ள மணியின் நாக்கு அசைந்து ஏற்படும் ஒலி
தினையளவும் ஓயாமல் தீயைக் காட்டிலும்
ஓங்கி எரிகின்றது. அழகுமிக்க மணிமாடங்கள் கொண்ட திருப்புல்லாணியை நோக்கி
கைகூப்பித் தொழுவதற்கு ஆசைப்பட்டவளான பாவி என் மேல் ஆர்ப்பரிக்கும் கடலும்
நெருப்பை வாரி வீசுகிறதே என்று கூறுகிறாள்.
வயல்களில் பகலெல்லாம்
மேய்ந்துவிட்டு மாலைப் பொழுதில் மீண்டும் வருகின்ற மாடுகளின் கழுத்திலுள்ள
மணிகளின் ஓசை சற்றும் ஓயாமல் நெருப்பாகச் சுடுகிறது. கடல்நீர் நெருப்பை அள்ளிக்
கொட்டுகிறது என்கிறாள். பகவானின் பிரிவு தலைவிக்கு இத்தகைய துன்பம் ஏற்பட்டு
புலம்ப வைக்கிறது. இதுவே தெய்வீக நிலை என்று சொல்லலாம். நிலவும் சுடும், காணும்
பொருளும் வெறுக்கும். பகவான் உள்ளத்தில் புகுந்துவிட்டால் மற்ற அனைத்தும்
தேவையற்றதாகிப் போகும். தலைவி போன்று நாமும் தெய்வீக நிலை அடைந்து ஆத்ம ஐக்கியம்
பெறவேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
தூம்பு உடைக் கை வேழம் வெருவ
மருப்பு ஒசித்த
பாம்பின் அணையான் அருள்தந்தவா நமக்கு
பூஞ் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என் தனக்கு ஓர் வெம் தழலே. 1785
துளை கொண்ட துதிக்கையைக் கொண்ட
குவலயாபீடம் என்ற யானை பயம் கொள்ளும்படி அதன் தந்தங்களை முறித்த, கருடன் மீது அமர்ந்து
வரும் சேஷசாயியான பகவானைத் தொழுவதற்கு ஆவல் கொண்ட எனக்கு அருள் செய்தவிதம் இதுவோ? சுரபுன்னை
மரங்கள் பொன் போன்ற மலர்களை உதிர்க்கும் தலமான திருப்புல்லாணி ஜகந்நாதனைக்
கைகூப்பி வணங்கிய எனக்குப் பிறை மதியும் தீயைப் போல் சுடுகின்றதே என்று
வருத்தமுடன் கூறுகிறாள்.
அதர்மத்திற்கு துணை புரிந்த
குவலயாபீடம் என்ற யானை அழித்தவன். அத்தகையவன் மீது அன்பு கொண்டு தவிக்கும் எனக்கு
அருள் செய்வது இதுதானோ?
பிரிவு துன்பத்தால் தலைவி பெருமானைப் பழித்துக் கூறுகிறாள். தன் மேல்
துளியும் அன்பு செலுத்தவில்லை என்று வருந்திக்
கூறுகிறாள். அன்பு கொண்டவர்களால் தான் ஒருவரைக் கோபிக்க முடியும். பகவான்
மீது பொய்க் கோபம் கொண்டு தலைவி பேசுவது அவள் பகவான் மீது கொண்ட பரிசுத்தமான
அன்பைக் காட்டுகிறது. அழியும் செல்வங்களின் மீது காட்டும் பக்தியை விடுத்து
பெருமான் மீது பக்தி காட்ட வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு
சுடரும்
ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன்
ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே. 1786
வேதம், யாகம், விண்ணுலகம், சந்திர, சூரியர்கள், உலகத் தோற்றம்
இவ்விதம் எல்லாமும் ஆனவன் இப்படியா புரிவான்? அவன் திறத்தில் எனக்கு செய்தது என்ன? என்று தலைவி கேட்கிறாள்.
மலர்கள் நிறைந்த புன்னை மரங்கள் சூழ்ந்த திருப்புல்லாணி ஜெகந்நாதனை
வணங்கிப் போற்றுகிறேன். அவனைப் பிரிந்த
நான் சமுத்திரம் போல் உறங்காமல் இருக்கிறேன் என்று கூறுகிறாள்.
பகவான் ஸ்ரீமந்நாராயணன்
வேதமாகவும், யாகமாகவும், விண்ணுலகமாகவும், சந்திர
சூரியர்களாகவும், உலகில் உள்ள அனைத்துத் தோற்றங்களிலும் எல்லாமாக உள்ளான். இத்தகைய
என் விஷயத்தில் இப்படியா அருள் புரிவான்? அழகு மலர்கள் நிறைந்த புன்னை மரங்கள் சூழ்ந்த
திருப்புல்லாணி ஜகந்நாதனை வணங்கிப் போற்றுகிறேன். சமுத்திரத்தின் அலைகள் ஓயாமல்
கரையை தொட்டுக் கொண்டு செல்வது போன்று உறங்காமல் தவித்துக் கொண்டுள்ளேன். தலைவி
பேரானந்தப் பெருநிலையை அடைவதற்கான நிகழ்வுகள் இது என்று அறிந்து கொள்ளலாம்.
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி
அம்மானை
மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை
கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார்
மன்னவர் ஆய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே 1787

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக