நம்மாழ்வார் திருவாய்மொழி
மதநீர் அருவிபோல் பாய்ந்துவரும், பெரிய மலை போல் நின்ற குவலயாபீடம் என்ற யானையின் இரண்டு தந்தங்களான சிகரத்தை முறித்து, அதோடு கட்டிப் புரண்டு உருண்டு கண்ணபிரான் அதைக் கொன்றான். பலம் பொருந்திய யானையை நடத்தவல்ல பாகர்களை உயிர்விடச் செய்தான். அரங்கில் மோதிய சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களை அழித்தான். சுற்றிலும் இருந்த அரசர்களைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தான். இறுதியில் உயர்ந்த சுற்றுமுண்டான மாடத்தில் மீதிருந்த கம்சனின் முடியைப் பிடித்திழுத்து கீழே விழச்செய்து அவன் மீதேறி அவனைக் கொன்றழித்தான். இத்தகைய பெருமைமிகு ஆயர்குலக் கண்ணன் திருச்செங்கனூர் திருச்சிற்றாற்றில் குடிகொண்டுள்ளான். அதுவே நாங்கள் அடைவதற்கேற்ற புகலிடமாகும் என்கிறார் ஆழ்வார்.
நாங்கள் அடைவதற்குப் புகலிடமாகவுள்ள என் அமுதம் போன்றவன், எமக்கு பரமபோக்யனாயும், தேவாதி தேவனாகவும், தேவர்களின் சுவாமியுமாககவுள்ள என்னப்பன், கடல் பொங்கும் மூன்று உலகங்களையும் படைத்து, காத்து, அழிக்கும் செயலை மும்மூர்த்திகளான நான்முகனுக்கு அந்தர்யாமியாய் இருந்து ஸ்ருஷ்டியை நடத்துகின்றான். தானான தன்மையில் காத்தல் தொழிலை நடத்தியும், சிவபெருமானாக இருந்து அழிக்கும் தொழிலையும் நடத்துகிறான். அவனே என் அச்சத்தைப் போக்கி என்னைக் காக்கிறான். அவன்தான் செவ்விய கயல்மீன்கள் மகிழ்வுடன் விளையாடும் தேன் போன்ற நீர்நிலைகள் சூழ்ந்த திருச்செங்குன்றூரிலுள்ள திருச்சிற்றாற்றில் அருள் புரிகிறான். அவன் எல்லாவற்றிற்கும் ஆதியானவன். அவனல்லாமல் வேறு யார் எனக்குத் துணையாக வரமுடியும் என்று கூறுகிறார் ஆழ்வார்
என்னுள்ளிள் அமர்ந்திருக்கும் பெருமான், வானத்து தேவர்களின் தெய்வமாகத் திகழ்கின்றான். வராகமாக அவதரித்து பூமியை ஒரு கோட்டில் எடுத்து வந்த சுவாமி, முற்பிறவியில் செய்த வலிமையான பாவங்கள் முழுவதும் அழியுமாறு என்னை ஆள்கின்ற எம் பெருமான். தென்திசைக்கு அணிகலனாய் விளங்கும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையின் மேற்குப் பகுதியில் நின்றருளுகிறான். அந்த இமையவரப்பன் திருப்பாதங்களையன்றி, சரணம் புக வேறொன்றுமில்லை. இன்னொன்றைப் பற்றி நான் நினைப்பதுமில்லை என்கிறார். பகவானின் திருப்பாதங்களைத் தவிர நான் சரண்புக வேறு ஒன்றுமில்லை. மற்றவற்றை நான் நினைப்பதுமில்லை. இவ்வுலகில் சரண்புக மற்ற விஷயங்கள் ஏற்றதாயில்லை. மரணப்படுகுழியில் வீழ்வதற்கேற்றவாறு இவ்வுலகில் மற்ற லௌகீக விஷயங்கள் உள்ளன என்று விரிவாகக் கூறுகிறார் ஆழ்வார்.
மூவுலகங்களும் நிறையும்படி பெருமை பெற்ற உருவமாய் நிமிர்ந்த குள்ளமான வாமன மூர்த்தி, முழக்கமிடும் திருப்பாற்கடலைக் கடைந்த என் அழகு மிகுந்த மாணிக்கம் போன்ற எம்பெருமான், செறிந்த குலைகள் சுமந்த வாழை, கமுகு, தென்னை இவை சூழ்ந்த திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு என்னும் அழகிய தலத்தில் அனைவரும் அறிய பூர்ண வடிவமாக நின்றருளுகிறான். அந்தப் பரந்தாமன் திருவடிகள் அல்லாமல் எனக்குப் பாதுகாப்பு வேறெதுவும் இல்லை என்கிறார். இவ்வுலகத்தில் மக்கள் படும் துயரினைக் கண்டு வாழ்க்கை எத்தகைய கொடியது என்று அறிந்து கொள்ள வேண்டும். பிறப்பு, இறப்பு, மரணம் இதைத்தவிர வேறொன்றுமில்லை என்ற நிலை வந்தால் இந்த சாரமற்ற வாழ்க்கையில் எத்தகைய பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்து பகவானின் பாதங்களே நமக்கு பாதுகாப்பு என்பதை நாம் உணரவேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
நான்கு விதமான வேதங்களையும் நன்கு ஓதும் நல்ல வேதியர்கள் வேள்வி யாகம் செய்யும் ஹோமத்தில் வரும் மணம் மிகுந்த புகையானது வானத்திற்குள் பரவி சூரிய வெளிச்சத்தை மறைக்கும் சிறப்பினைக் கொண்ட வானளாவிய மாட மாளிகைகளையுடைய திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு தலத்தில் எழுந்தருளி இருக்கும் பகவான் எனக்கு நல்ல பாதுகாவலனாக உள்ளான். அவனின்றி வேறு ஒரு பாதுகாவல் எனக்கு கிடையாது. அவனுக்குப் புறம்பாக எதுவும் இல்லை என்பது உறுதியாகையால் அவனின்றி என் உயிரானது மற்றொன்றில் அணையாது. மாயை என்னும் வலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் மானிடர்களுக்கு உண்மையான பாதுகாப்பு எது என்று உணரும் பக்குவம் நமக்கில்லை. இப்பாசுரங்களைப் படிப்பவர்கள் முற்பிறவியில் புண்ணியம் செய்திருப்பார்கள். சிலர் இதனை மேம்போக்காக படிப்பார். ஆனால் பொருளறிந்துப் படித்து அதன் மூலம் பகவானை நெருங்குபவர்களே பாக்கியவான்கள் என்ற கருத்தில் அமைகிறது.
பெருமானே! எனக்கு நல்லவிதமான பாதுகாப்பை, எனது ஆருயிரை, இமையவரப்பனை, தாயார் போன்று கருணை கொள்பவனை, தன்னுடைய தன்மைகளைத் தானே முழுவதுமாக அறியாதவனை, திருப்பாற்கடலில் அரிதுயில் கொண்டுள்ள பெருமனை, வலிமை மிக்க மாடமாளிகைகள் நிறைந்த திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு தலத்தில் கண்டேன். அங்கு பகவத் குணங்கள் நிரம்பி எப்பொழுதும் மனத்தில் கொண்டிருக்கும் அந்தணர்கள் வாழ்கின்றனர். அவர்கள் மும்மூர்த்திகளுக்கு ஒப்பானவர்கள் என்று கூறுகிறார். ஆழ்வாரின் உயிருக்கு அரணாகத் திகழ்கின்றார். உலகத்தவர் உடலுக்கு அரண் சேர்க்க பலவித உபாயங்களைக் கையாள்கின்றனர். ஆனால் உடலுக்குள் உறையும் ஆன்மாவில் மறைந்திருக்கும் குறைகளைக் களைய முற்படுவதில்லை. இதுவே ஒரு மாயையாகத் திகழ்கின்றது. அந்த மாயையைக் களைந்து நம் உடலுக்கு அரணாகத் திகழ்பவர் பெருமான் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்துகிறார் ஆழ்வார்.
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு தலத்தில் நான் தரிசித்த ஸ்வாமி இமையவரப்பன் என் சிந்தனையுள் எப்பொழுதும் தன் திருவடிகளைப் பதித்திருக்கின்றான். அவன் சிவந்த தாமரையைப் போன்ற திருக்கண்களையும், சிவந்த கைகளையும், செந்தாமரை மலர்ந்த உந்தியையும், அழகிய மலர்போன்ற மார்பினையும், சிவந்த பீதாம்பரத்தையும், சிவந்த திருமுடியையும், மாணிக்க ஹாரமும், திவ்யமான ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு வீற்றிருக்கிறான். அவனது வடிவழகை உலகத்தவர் வாயாரப் புகழுகிறார்கள். அத்திருக்கண்ணோக்கினாலே பிறந்த உறவை உட்கிரகித்துக் கொள்ளும் அவனது சிவந்த அதரங்களில் வழியும் புன்னகையும், பொலிந்த திருப்பவளத்தில் எழும் புன்னகைக்குத் தோற்றவர்கள் ஏராளம். அழகே தோற்கும்படி அமைந்திருக்கும் திருநாபியும், பிராட்டி குடியிருக்கும் அகன்ற மார்பும், இவ்வழகுடன் கூடிய திவ்யாயுதங்கள் ஏந்திய அழகினைக் காணாத கண்களும் உண்டோ என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
ஆழ்வார் இப்பாசுரத்தை முத்தாய்ப்பாகக் கருதி என் சிந்தையுள் இருந்த அழகு மிக்க பெருமானை, செழிப்பான இந்நிலவுலகில் வாழும் நான்கு விதமான வேதங்களை ஓதுவோர், திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங் கரையில் அருள் புரியும் எம் பெருமான் இருக்கும் திசை நோக்கிக் கைகூப்பித் தொழுவார்கள். அவனையே அடைக்கலம் கொள்ளும் தேவர்களுக்கு அரணாக இருப்பவனை, மிகவும் பலம் பொருந்திய கையினால் கொடுமைகள் பல செய்த அசுரர்களுக்கு காலன் போல் இருந்து தன் சக்கரப்படையைக் கொண்டு அழித்தவனை எவ்விதம் நான் புகழ்வேன் என்று அறியாமல் இருக்கிறேன். மூவுலகங்களையும் படைத்துக், காத்து, பின் அழிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் பெருமான்! நீயல்லவோ? என்று கூறுகிறார்.
பிரம்மன் முதல் சிறு எறும்புகள் வரை எல்லா உயிர்களையும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் எம்பெருமான் பிரம்மாவாகவும், விஷ்ணுவாகவும், சிவனாகவும் இருந்து நடத்துகிறான். எதனையும் விட்டுவிடாமல் சரிவர எல்லாவற்றிற்கும் உள்ளுயிராய் இருக்கின்றான். அனைத்து உயிர்களுக்கும் எம்பெருமான் ஜீவனாயிருக்கிறான். தருமம் செய்பவர்களும், அடுத்தவர்களுக்கு உதவும் இன்னார் என்று சொல்லும்படியும், ஒழுக்கம் நிறைந்தும், அறிவுகூர்மையும் ஞானமும் கொண்டும், அதற்கேற்றவாறு மிகுந்த ஆசார வாழ்க்கை வாழ்ந்தும், இமையவரம்பனுக்கு ஒவ்வொரு நாளும் திருவாராதனம், திருமஞ்சனம், அர்ச்சனை அலங்காரங்கள் புரிந்து வாழும் மக்களைக் கொண்ட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றில் இமயவரம்பன் இருந்து அருள் புரிகின்றான்.
பசுமையான குளிர்ச்சி மிக்க வயல்கள் சூழ்ந்துள்ள திருச்செங்குன்றூரில் உள்ள திருச்சிற்றாற்றங்கரையில் சேவை புரியும் இமயவரப்பனை, எல்லா மக்களின் மனத்திலும் அந்தர்யாமியாக இருந்து அவரவர்களுக்கு வேண்டியதை வழங்கும் இப்பெருமானை, இப்பூவுலகத் தேவரான மூவாயிரம் வேதியர்களைச் சிறப்போடு வாழ வைத்த எம்பெருமானை, அற்புதமான லீலைகளைச் செய்த மாயவனை, நான்முகனாகவும், முக்கண்களையுடைய சிவபெருமானாகவும் இருந்து அருள்பவனை இத்தலத்தில் தரிசிக்கும் பேறு பெற்றேன் என்கிறார். மனத்தூய்மையுடன் பகவானை தரிசனம் செய்யும் வழக்கத்தினை ஏற்படுத்தி, இவ்வையகத்தார் பன்னெடுங்காலம் வாழ்ந்து, அதன்பின் உய்ய வேண்டும் என்ற கருணையின் அடிப்படையில் இப்பாசுரத்தினை இயற்றியுள்ளார் என்பது இதன் பொருளாகும்.
உலகங்களையெல்லாம் உண்டு
வயிற்றில் வைத்துக் காத்து பின் உமிழ்ந்த என் சுவாமியை! இனிமையான
தேனைப்போலும், கரும்புச்சாறைப்
போலும், அமிர்தம்
போலும் உள்ளவனை, தன்
கொப்பூழில் நான்முகனைத் தோற்றுவித்த அற்புதமானவனைக் குறித்து வளமிக்க
திருக்குருகூரில் அவதரித்த சடகோபர் பாடிய ஆயிரம் பாசுரங்கள் அனைத்தும் ஆத்மாவைத்
தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன. அதில் இந்தப் பத்துப் பாமாலைகளையும் படிப்பவர்கள்
இப்பிறவி முடிந்தவுடன் வைகுண்டம் அடைவார்கள் என்பது நிச்சயம். மேலும் பிறவித்தளை
என்னும் பெரிய மாய நாடகம் மீண்டும் தொடராமல் பிறவிக்கு முடிவாக வருமாறு அருள்
புரிவார் என்று கூறுகிறார் ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக