நம்மாழ்வார் திருவாய்மொழி
அழகிய நீர்நிலைகளில் எப்போதும் வந்திருந்து இரை உண்டு, தனது பேடைகளோடு மகிழ்வுடன் பாடியபடி உள்ள கொக்கு கூட்டங்களே! கழனிகள் நிரம்பி வழிந்து செந்நெல் கதிர்கள் ஓங்கி வளரப்பெற்றுள்ள திருவண்வண்டூரில் நித்யவாசம் புரிபவனும், திருக்கையில் பொருந்தியுள்ள ஒளிமிக்க சக்கரத்தைத் தரித்தவனும், சிவந்த கனி போன்ற திருவதரத்தையுடையவனும், என்னை அவனுக்கு அடிமையாக்கியுள்ள அந்த புன்முறுவலுடன் காட்சிதரும் பெருமானை நேரில் சந்தித்து நின் வெண்சிறகினால் அவரைக் கைகூப்பித் தொழுது வணங்குவாயாக. இதனைக் கண்டு பெருமான் நெருங்கி வந்து விசாரிக்கும்போது, வினையால் நான் படும் கொடிய துன்பத்தையும், நான் அவர் மீது கொண்ட அளவில்லாத காதலையும் தெரிவிப்பாயாக என்று பறவையிடம் தூது விடுகிறார்.
மென்மையான பேடையோடு உலவி என்றும் உடன் விட்டுப் பிரியாமல் வெளுப்பின்றி கருநிறத்தோற்றம் கொண்ட இரைதேடும் நாரையே! பெருமானது இத்தலத்தில் என்றும் ஒலிக்கும் வேதஒலியும் நித்ய பாராயணமும் நடைபெறும் திருவண்வண்டூரில் நாதனாகத் திகழும், உலகமெல்லாம் பிரளயத்தால் துன்பம் நேர்ந்தபோது தன் வயிற்றில் வைத்துக் காத்தருளிய நாதனைக் கண்டு அவனது சௌந்தர்ய அழகினைக் கண்டு திகைத்து நில்லாமல் மரபின்படி திருவடிகளில் விழுவாயாக. அவ்விதம் தொழும்போது உனது இரு சிறகுகளால் அவரது திருவடிகளை சற்று வேகமாக அடித்து உனது கோபத்தைக் காட்டுவாயாக. மேலும் நான் படும் பாட்டையும் அவரிடம் எடுத்துச்சொல்லி தலைவி இவ்வாறு கோபித்துள்ளாள் என்பதைத் தெரிவிப்பாயாக என்கிறாள்.
திரள்திரளாக எங்கும் வயல்களிலே
உலாவும் பறவைகளே! சிறந்த செல்வம்
விஞ்சியிருக்கும்
திருவண்வண்டூரில்
இருப்பவனும், சுழன்று வருகிற சக்கரத்தைக் கையிலுடையவனும்
கனி போன்ற வாயை உடையவனுமான பெருமானைக்
கண்டு பணிவன்புடன் நான் படும் துயரைச் சொல்லுங்கள் என்கிறார்
ஆழ்வார்.
திருப்புளி மரத்தைச் சுற்றிச்
சுற்றி பறந்து செல்லும் பறவைகள் அனைத்தும் ஆழ்வாருக்கான கைங்கர்யத்தில் ஈடுபட
வந்துள்ளன. சிறந்த செல்வங்களையுடைய திருவண்வண்டூரில் உறையும் பெருமான், சற்றே ஆழ்வாரை
மறக்கும்படியாயிற்று. ஆழ்வாரின் கூற்றுப்படி இவ்வூரில் பெருமான் உறைவதால் பரமபதம்
இல்லை என்றாகிவிட்டது. மேலும் இப்பெருமான் அவதாரமில்லை என்றும் இவர் நித்யம்
என்றும் அர்த்தம் கொள்ளப்படுகின்றது. எனவே அர்ச்சையாகத் திகழும் இப்பெருமானிடம்
சென்று பேசுங்கள் என்கிறாள். ஒளியுடைய, என்றும் சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தை
கையிலேந்தி தனது கனிவாயில் சற்றே புன்னகைத்துச் சிரிக்கும் சிரிப்பில் நான்
மயங்கிச் சாய்ந்தேன். அது போன்று அவரைக் கண்டு மயங்கிப் போகாமல் மிகவும் பவ்யமாக
பணிந்து என் இடரைக் கூறுவாயாக! என்று கூறுகிறாள்.
இப்பாசுரத்தில் தலைவி தன்னை பெருமானிடம் சேர்த்து வைக்க ஹம்சப் பறவையினைத் தூது விடுகிறாள். பறவைகளே! எனக்குள்ளது போன்ற துன்பங்கள் உங்களுக்கில்லை. நீங்கள் பேடையுடன் மகிழ்வுடன் உள்ளீர்கள். நீங்கள் பெருமானிடம் சென்று உங்களுக்குத் தெரியாத விஷயங்களை தெரிவிக்க வந்துள்ளேன் என்று கூறுவாயாக என்றாள். இதைக் கேட்டுப் பறவைகள் நடுங்கியது. இத்தகைய வார்த்தைகளை பெருமானிடம் நான் எவ்விதம் சொல்வேன் என்று தயங்கியது. அதற்குத் தலைவியானவள் பெருமானுக்குண்டான திவ்ய குணங்களை செயல்படுத்தச் சொல்கிறேன். இவர் எத்தகைய சர்வக்ஞனாக இருப்பினும் நான் படும் துன்பங்கள் தெரியவில்லையே! வேதஒலி கேட்கும் திருவண்வண்டூரில் கடல் வண்ணனான எம்பிரானைக் கண்டு உடல் நலிந்து, ஒருத்தி உமக்காக நாளும் உருகுகிறாள் என்று உணர்த்துங்கள் என்கிறாள். உலகில் எல்லா உயிர்களையும் காக்கும் எம்பிரான் என் இன்னலைத் தீர்க்காமல் உள்ளாரே என்று அவரிடம் சொல்வாயாக என்கிறாள்.
திணர்த்த வண்டலங்கள் மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே. 3231
அன்னப்பறவைகள் தம் பேடையின் ஊடலினால் கொண்ட சினத்தினைப் போக்க தான் வெளியே சென்று வந்த காரணத்தை மெல்லியதாக்கூறி அதனை தேற்றி விடும். அத்தகைய குணம் கொண்ட அன்னங்களே! எம்பெருமானுக்கு உணர்த்தலும், ஊடலும் அறியா! கலவையின்றி, சேர்த்தலின்றி, பிரிவுமின்றி உள்ள எம்பெருமான் இதனை அறிந்திருக்கமாட்டார். உலகமனைத்துமுள்ள சங்கினை அள்ளித்தந்து தம் வண்டல் மண்ணுடன் கொண்டு சேர்க்கும் திருவண்வண்டூரில், நல்லார்கள் அனைவரும் வந்து இங்கே தங்கிவிடும் ஏற்றம் கொண்ட இவ்வூரில் உள்ள பெருமான் தனது திருமுடியில் குளிர்ந்த திருத்துழாயைச் சூடி தலைவியின் வரவை எண்ணி காத்திருப்பார். நீங்கள் அவரைப் பார்த்த மாத்திரத்தில் உங்களுக்குத் தேவையானதைப் பெற்று என் துயரினைப் பற்றியும் அவரிடம் எடுத்துரைத்து என் இன்னலைப் போக்குவதற்கான செயலில் ஈடுபடுங்கள் என்று தலைவி நைந்து அன்னத்திடம் கூறுகிறாள்.
உயர்ந்துள்ள புன்னை மரத்தில் சம்சாரபந்தமே இல்லாத குயில்கள் இரண்டு அமர்ந்த நிலையில், தலைவி அதனைத் தொழுகிறாள். ஏகாந்தமாக நீங்கள் உள்ள நிலையில் உங்கள் போகத்திற்கு பிரிவு உண்டாக்குவது போன்று வந்து நிற்கிறேன் என்று உரத்த குரலில் தன் நிலையினை அதனிடம் கூறி, இதுபோன்று பெருமானிடம் என் துன்பங்களை உரத்த குரலில் கூறுவாயாக என்கிறாள். சேற்றில் வாளை மீன்கள் துள்ளி விளையாடும் தடாகங்களைக் கொண்ட திருவண்வண்டூரில் உறையும் ஆற்றல் படைத்த ஒளிபொருந்திய சுடராழியைக் கையில் ஏந்தியிருக்கும் அமரர் பெருமானான தேவாதிதேவனைக் கண்டு அனைத்தும் கூறி அவனிடமிருந்து பதில் பெற்று வாராய். மேலும் எனது அமைதியின்மை தீருமாறு பெருமானைக் கண்டு தீர்வதொரு வண்ணம் மாற்றி மறுமாற்றத்தை வாங்கி வாருங்கள் என்கிறாள்.
இப்பாசுரத்தில் ஸ்ரீராமனிடம் கிளி நேரில் சென்று கேட்பது போல் அமைந்துள்ளது. பெருமானை சென்று அடைவதற்கான வழியினை தலைவி கூறுகிறாள். ஏதாவதொரு வழியில் அவனிடம் சென்று விடுங்கள். திருவண்வண்டூர் மாடமாளிகை கண்டு மயங்காமல் அவன் இருப்பிடம் செல்லுங்கள். அவனிடத்தில் ஒரு வார்த்தை மட்டும் அமைதியாக பேசி என் நான்படும் அவஸ்தைகளைப் பற்றி பெருமானிடம் சொல்லுங்கள். இப்பெருமானானவர் நெடிய கரிய திருமேனியைக் கொண்டவர். அவர் மீது மையல் கொண்டதே இத்திருமேனியால்தான். செந்நிறத்து சிறு அதரங்களைக் கொண்டவர். கண்குளிர பார்க்குங்கால் சற்றே புன்னகைத்து பேசிப்பேசி மயக்குவார். அவரது ஒவ்வொரு செயலிலும் தோற்பாய். நான் அவ்விதமே தோற்றேன். சங்கும் சக்கரமும் உள்ளதாவெனக் கண்டு என் நிலை கூறி வாருங்கள் என்கிறாள்.
அழகிய சிறிய வடிவினைக்கொண்ட பூவைப் பறவைகளே! நீங்கள் பெருமானை சந்தித்தபின் என்னிடம் வந்து நடந்தவைகளை ஒரு வார்த்தையில் அப்படியே சொல்லிவிட வேண்டும். நான் உயிர் பிழைப்பது நீங்கள் கூறும் ஒரு வார்த்தையில்தான் உள்ளது. திருவண்வண்டூரில் செருந்தி, ஞாழல், கொன்றை, மகிழம், புன்னை ஆகிய மரங்கள் சூழ்ந்துள்ள இத்தலத்துப் பெருமான் பெரிய குளிர்ந்த தண்தாமரைக் கண்களையுடைய நீண்ட திருமுடியையும், விசாலமான நான்கு தோள்களையுடைய, திண்ணிய கரிய பெரிய முகில் போன்ற வடிவினனாகத் திகழ்கின்றான். நான் சொன்ன அடையாளங்கள் ஒன்று விடாமல் கண்டு அவனை நன்கு தரிசித்து அதில் மயங்கிவிடாமல் ஒரு மறுமொழி கேட்டு என்னிடம் வந்து சொல்ல வேண்டும் என்கிறாள். மேலும் நீவீர் பார்த்த அதிசயங்களை ஒன்றுவிடாமல் என்னிடம் கூற வேண்டும்.
அன்னங்களே! நீவிர் சீதாபிராட்டியும் ஸ்ரீராமனும் ஏகாந்தத்தில் இருக்கும்போதும் நான் கூறியவற்றை பெருமான் திருவடிகளைத் தொழுது அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். தாமரை மலரில் அசைந்து அசைந்து நடந்து செல்லும் பறவைகளே, விடிகாலைப் புலர்பொழுதில் சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூரில் விரோதிகளை அழிக்கும் நிலையில் கடுமையாக இருப்பவனும், அடியார்களிடம் தன்னைக் கொடுப்பவனும், எளிமையானவனும், அந்த நெடுமால் கொடுத்தாலும் கொடுத்தோம் என்ற எண்ணம் கொள்ளாதவனாகத் திகழ்கின்றான். கொடிய வல்வினைகள் சூழ்ந்துள்ள நான் அவர் அருகில் இருப்பதே எனக்குத் துன்பத்தைத் தருகிறது. எனவே பெருமான் தன்னிலையில் உள்ளபோது எனது வேண்டுதலைச் சொல்லுங்கள் என்று தலைவி அன்னத்திடம் தூது விடுகிறாள்.
பரிமளம் மிக்க வண்டினங்களே! பல பறவைகளை நான் தூதனுப்பிய போதிலும் பெருமானின் மனம் மாறாததால் வெறி வண்டினங்களே! அவரிடம் தூது செல்ல உங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன். தெளிந்த நீரைத் தருகின்ற பம்பா என்னும் புண்ணிய நதியின் வடதிசையில் அமைந்துள்ள திருவண்வண்டூர் பெருமான் ஸ்ரீராமனாகச் சேவை சாதிக்கின்றார். நிகரற்ற வல்லவனான இராவணனுடைய மதில்களைத் தூள் தூளாக்கி இலங்கையை அழித்த மாவீரனான ஸ்ரீராமனிடத்தில் நானும் என் மனதைப் பறிகொடுத்துள்ளேன் என்பதைச் சொல்வாயாக என்கிறாள். பெண் பிறந்து அனைத்து கடமைகளையும் முடித்து விட்டோம் என்று ஒரு தந்தை நினைப்பது போன்று பெருமானும் நமக்கான கடமைகள் முடிந்துவிட்டதாக நினைப்பார், ஆனால் அவர் என்னை மறந்து போனதால் தம் கடமையில் தவறியாதக காணப்படுகிறார். அவர் ரக்ஷிப்பதற்கு நானும் உள்ளேன் என்பதைச் சொல்வாயாக. உம்மை எண்ணி ஒருத்தி இங்கு உயிர் வாழ்கிறாள் என்று அவரிடம் நினைவுபடுத்துங்கள் என்று கூறுகிறாள்.
ஒளியுடையதாய திருமேனியில் கொண்ட
புரிநூலை மார்பில் தரித்த நீலநிறத்தைக் கொண்ட, குள்ளமான வடிவில் பிரம்மச்சாரியாக
உள்ள, அகன்ற
இந்த உலகினையெல்லாம் தன் திருவடிகளில் அளந்த பொல்லாத வன்கள்வனான வாமனமூர்த்தியின்
திருவடி மேல் குருகூர் சடகோபன் சொன்ன இசையோடு கூடிய ஆயிரம் பாமாலைகளுள்
திருவண்வண்டூர் தலத்தினைப் பற்றி பாடிய இப்பத்துப் பாசுரங்களையும் தினமும் இனிமை
மாறாமல் பாடக்கூடியவர்கள் மின்னலைப் போன்று இடை கொண்ட பெண்களுக்கு மன்மதனாயக்
காட்சியளிப்பர். மேலும் காமினிகளுக்குக் காமுகர் இனிய பொருளாக இருப்பது போன்று
பெருமானுக்கும் விரும்பத்தக்கவராவார். எதிரியின் செருக்கினை அடக்கியது போன்று
பிரணய ரோஷத்தால் வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கி பின் தன்னுடன் சேர்த்துக்
கொண்டார் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக