நம்மாழ்வார் திருவாய்மொழி
அறிவில்லாத மனமே! நீ உன்னுடைய கலக்கத்தை நிறுத்திக்கொள். திருவட்டாற்றில் பள்ளி கொண்டிருக்கும் ஆதிகேசவப் பெருமான் நமக்கு பேரருள்புரிய தீர்மானமாக உள்ளான். எம்பெருமானைப் பெறுவதே தனது குறிக்கோளாகக் கொள்ளும் அடியார்களுக்கு யாம் தொண்டாற்றுவோம். அவருடைய அருளைப் பெறுவதற்கு தகுதியுள்ள அடியார்களுக்கு அடியவனான எனக்கு திருவாழியை ஏந்தியுள்ள சக்ரப்பாணி அருள் செய்ய முற்பட்டிருக்கிறான். நித்யசூரிகளிடம் காட்டும் அருளையெல்லாம் தன்னொருவனுக்காக மடைதிறந்து விட்டிருக்கிறான். பெருமான் ஆழ்வாருக்கு அருள் புரிவதென்பது அவருக்கு விதிக்கப்பட்டதாக உள்ளது. அதனை அவருக்கு செய்யாவிடில் விதி மீறிய செயலாகக் கருதப்படும் என்று பெருமான் நினைப்பதாக ஆழ்வார் கூறுகிறார். மனமே! உன்னிடமுள்ள மருளான அஞ்ஞானத்தைக் கொடுக்கும் இப்பெரிய உலகத்தில் நான் பிறவியெடுக்க விரும்பவில்லை. பெருமான் என்னை கைபிடித்து அழைக்கும் நேரத்தில் அவனுடன் சேர்ந்து நித்யவிபூதி அடைவதும், என்றும் அவன் திருவடியில் கிடப்பதையே நான் என்றும் விரும்புகிறேன் என்று கூறுகிறார். பெருமானும் இந்நிலையில் ஸ்வாதந்திர குணத்தை விடுத்து பாரதந்திரம் என்னும் குணத்தைக் காட்டுகிறார்
நான் சொல்வனவற்றைக் கேட்கும் நெஞ்சே! திருவாட்டாற்றானின் வளைந்தவாறுள்ள திருவடிகளை வணங்கி இந்தப் பெரிய உலகில் பிறவியெடுப்பதை அறுத்துவிட்டோம். பெருமான் தன் குழலழகைக் காட்டி தன்னை ஆட்கொண்டான் என்கிறார். பெருமானும் ஆழ்வாருக்கு அடுத்த பிறவியென்பது இல்லை என்றார். ஆதிகேசவ பெருமானின் புகழைப் பல பாக்களால் பாடியதால் என் தற்போதைய பாவங்களும், என் பழவினைகளும் வேரோடு அறுந்தது மட்டுமின்றி அவர் மீது பாக்களைப் பாடும்படியான பாக்கியத்தையும் எனக்கு அருளினார். உலகத்தாரோடு தொடர்பு அறும்படி செய்து இவருக்கு ஒரு தொடர்புமின்றி ஆழ்வாரை அழைத்துச் செல்ல பெருமானும் நினைத்தார். தனது இயல்பான குணங்களை அடியோடு ஒழித்து நாராயணனை அடைந்துவிட்டோம் என்கிறார் ஆழ்வார். இத்தலத்தில் ஆழ்வாருக்கு அருளியது பிரணத பாரதந்திரியம் என்னும் குணமாகும். தனது அடியார்கள் நினைத்ததை அல்லது வேண்டியதை உடன் கொடுக்கும் குணம் இதுவாகும்.
என் மனமே! வினைகொண்டுள்ள இப்பூவுலகம் எனக்கு வேண்டாம். நாராயணனது பல நாமங்களையும் சொல்லியதால், அவனை அடையும் பேறு கிடைத்தது. இப்பூவுலகில் வளமான நாடு என்றால் அது திருவட்டாறாகும். இத்தலத்து பெருமானுக்கு அடியார்களை ரக்ஷிக்கும் குணம் உள்ளது. அதுபோன்று பெருமானுக்கு செய்வதற்கு கைங்கர்ம் நிறையவே உள்ளது. எனவே பெருமானுக்கும் தொண்டர்களுக்கும் மிகவும் பிடித்தமான இடம் இத்திருவட்டாறாகும். இத்தலத்திற்கு வரும் மக்கள் அதிகம் துன்பம் கொண்டிருப்பதால் அவர்களின் துன்பத்தைப் போக்கும் ஆர்வத்துடன் இங்கு எழுந்தருளியுள்ளான். அங்கு ஆதிகேசவனாக வந்து சயனித்திருப்பவன் இன்று எம்பெருமான் அடியேனுக்கு விண்ணுலகம் தருவதற்கு விரைகிறான் என்கிறார். பரமபதத்தில் எம்பெருமானுடைய திருக்குணங்கள் பகல்விளக்கு போன்று ஒளிக்குன்றியுள்ளது. ஆனால் நிலவுலகில் இருட்டறை விளக்கு போல் ஒளிர்கின்றது. இதுகாறும் திருவாய்மொழியை தலைக்காட்டுவதற்காக நிலவுலகில் ஆழ்வாரை இருக்கச் செய்தான். அச்செயல் இப்போது முற்றுப்பெறும் நிலையில் அவரை அழைத்துச்செல்ல விரைகிறான். இத்தகைய செயல் நாம் திட்டமிட்டவாறு நடைபெறுகிறது. அதற்கு மேலும் நான் நினைத்ததெல்லாம் தந்து என்னை மகிழ்வில் மூழ்கடித்துவிட்டார் என்று ஆழ்வார் மனநிறைவுடன் கூறுகிறார்.
நல்நெஞ்சே! ஆயுதம் தாங்கிய கொடிய மனத்தினைக் கொண்ட இரணியனின் மார்பினை இரண்டாகப் பிளந்தவன் திருவாட்டாற்றில் வந்து சயனித்துள்ளான். அவன் என் நெஞ்சத்துள் புகுந்துள்ளான். மறுபடியும் வெளியே வந்தால் அவனை மீண்டும் என் மனத்தில் இருத்தி வைப்பது என்பது முடியாத காரணமாகும். எனவே அவனை விடேன் என்கிறார். மன்னர்கள் அஞ்சும்படி பாரதப் போரைத் தொடங்கி, தன் அடியார்களான பாண்டவர்களுகாக ‘ஆயுதம் எடுக்க மாட்டேன்’ என்றவன், பாண்டவர்களுக்காக சாட்டையென்னும் ஆயுதத்தைக் கொண்டு சாரத்தியம் செய்தான். சக்கரப்படையால் கதிரவனை மறைத்த பெருமான் அடியேனுக்காக என் அகங்கார மமகாரங்களைத் தொலைத்து கூடுதலாக எவ்வளவோ செய்துள்ளார். நம்பெருமான் எனக்குள் புகுந்து இங்கிருந்தே தமிழ்நூலான திருவாய்மொழியை ஒரு கட்டளைக்குட்படுத்தி, பண்படுத்தி, பிரித்து, நூலாக்கி அனைத்துக் கோயில்களிலும் பாடும்படி செய்துவிட்டார். எனவே ஏற்பதற்கு நெஞ்சும், வழங்குவதற்கு பகவானும், அதனைப் பெறுவதற்கு என் மூலமான தொடர்பும், வழங்கத் தூண்டிவிட பிராட்டியும் உள்ள போது அனைத்தும் கிடைத்தே தீரும் என்கிறார் ஆழ்வார்.
மனமே! பரமபதத்தை அடைய அர்ச்சிராதி மார்க்கத்தை அமைத்துக் கொடுத்த ஆதிகேசவன் திருவட்டாற்றில் கண் வளர்ந்தருள்கிறான். தேன் நிறைந்த மலர்களுள் திருத்துழாயும் அவன் திருவடிகளில் திகழ்கின்றன. செழுமையான கருடன் மேலேறி பக்தர்களைத் தேடித் திரிபவனான எம்பெருமான் என்னை நாடி வந்துள்ளான். நெஞ்சே! இனி நான் வானேறுவதில் ஐயமுண்டோ என்று வினவுகிறார். இதனைச் செய்தால் இவன் மோட்சம் செல்வான் என்று சாத்திரங்களில் பெருமான் சொன்னவாறு நான் செல்வதால் பெருமானும் தருகிறார் என்கிறார். சொன்னபடி திருப்பாதங்களை என் தலை மேல் வைக்கிறான். அப்படியிருக்க நான் நரகத்தில் ஏறுவேன் என்பது நடக்கக்கூடியதா என்று கேட்கிறார் ஆழ்வார். நெஞ்சு பரபரத்து தானும் செல்ல எத்தனித்தபோது, நெஞ்சே! என்னை இதுநாள்வரை நம்மை சொல்லொனாத் துன்பத்தில் ஆழ்த்திய சம்சாரமென்னும் நரகத்தினை பெருமானின் நிழலின் துணைகொண்டு அதனை எள்ளி நகையாடிச் செல்லலாம் என்கிறார். ஆழ்வார் தன்னுடன் வருவதையெண்ணி உவகை கொள்ளும் போது அவரது தாமரைப்பாதங்களில் சூட்டியுள்ள துளபமாலையில் உள்ள தேன் மேலேறி வரும்போது பெருமிதம் கொள்கிறார்.
பெரிய மலை போன்று உயர்ந்த மாட மாளிகைகளையுடைய திருவட்டாற்றில் ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் எம்பெருமான் மதம் மிகுந்த, கொலைக் குணம் கொண்ட குவலயாபீடத்தின் தந்தங்களை முறித்தவன். அத்தகையவனின் சிவந்த திருவடிகளில் என் தலை சாய்த்துள்ளேன். இதனால் எனது நீண்ட நாள் பிரார்த்தனை ஈடேறிவிட்டது என்கிறார். இதனைக் கண்ட பெருமானுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்துக் கிடைக்காத ஆழ்வாரின் சிரசானது தன் திருவடியில் பட்டதால் அவரது தாமரை போன்ற கண்கள் சற்றே மலர்ந்தது என்கிறார். பெருமான் ஆழ்வார் நெஞ்சத்தில் வந்து அமர்ந்துவிட்டார். அடியார்கள் நெஞ்சில் அமர்ந்துள்ளது போல் எப்பொழுதும் என் நெஞ்சத்தில் நிலை பெயராமல் வீற்றிருக்கிறான். பூமிபிராட்டியானவள் இத்திவ்ய தேசத்தை ஏற்றம் பெற வைக்க வேண்டி மலையுடன் சற்று உயர்த்தினாள் என்பது கருத்தாகும். ‘தடம் தாமரைகட்கே கூவிக்கொள்ளும் காலமின்னும் குருகாதோ’ என்று கேட்டவாறு பெருமான் இசைந்தார் என்று கூறி கழல்கள் அணிந்த அவன் திருப்பாதங்களை அடைந்து விட்டோம் என்கிறார் ஆழ்வார்.
தொடர்ந்து ஆர்ப்பரித்து வீசும் அலைகள் நிறைந்த கடலால் சூழப்பட்ட, தென்னாட்டுக்கே திலகம் இட்டார் போன்று, மணிகள் பொருந்திய மாட மாளிகைகள் நிறைந்த திருவட்டாறு என்னும் தலத்தில் நம் கோவிந்தன் குடிகொண்டிருக்கிறான் என்று கூறுகிறார். பெருமான் தான் மட்டுமின்றி ஆயர்குலப் பெண்கள் மற்றும் ஆநிரைகளுடன் ஆழ்வாரின் நெஞ்சத்தில் குடிகொண்டுள்ள நிலையில் ஆழ்வாரும் தன் நெஞ்சத்தைத் திறந்து வைத்தான் என்பது இதன் கருத்தாகும். ஆழ்வார் குட்டநாட்டுத் திருப்புலியூரில் ‘அன்றி மற்றோர் உபாயம் என்? இவள்அம் தண் துழாய் கமழ்தல்’ என்று கூறியது போன்று அவனது மலர் போன்ற திருவடி மேலுள்ள நறுமணம் வீசும் திருத்துழாய் என் தேகத்திலே நிலை பெற்று கமழ்கின்றது என்கிறார். ஆழ்வார் தான் அங்கு நினைத்ததை திருவட்டாற்றுத் தலத்தில் பெருமான் நடத்திக் காட்டியதாக வியக்கின்றார். கீழ்ப்பாட்டில் ‘குறைகழல்கள் குறுகினமே’ என்று கூறியதை இப்பாட்டில் அது உண்மையே என்று வலியுறுத்துகிறார். சப்தமிடும் வீரக்கழல் அணிந்த ஆதிகேசவனின் திருப்பாதங்களை நாம் நெருங்கிவிட்டோம் என்கிறார் ஆழ்வார்.
பரந்தாமன் திருவடியில் கிடக்கும் துளபமாலை மணம் திருமேனி முழுவதும் வியாபித்து அக்கமழும் திருத்துழாய் வாசம் அவன் திருமுடியிலும் சென்றடைகின்றது. ஆழ்வார் தமக்குக் கிடைத்துவிட்டார் என்ற ஏற்றத்தில் மகிழ்ச்சியுறுகிறார். கையில் இருக்கும் சக்கரத்தாழ்வாரோ நினைத்தபோது விரைந்து சென்று வினைமுடித்து திரும்பிடுவார். ஒளிகொண்ட அச்சக்கரமானது விரைந்து சென்று போரிட்டுத் திரும்புகிறது. அச்சக்கரத்தைக் கொண்டு தம் எதிகளை விரைந்து முடிப்பார். அத்தகைய கண்ணன் கடல்நீரின் நிறத்தைப் போலவும், கருநிற மை போன்றும் ஆதிகேசவன் திருவட்டாற்றில் துயில்கிறான். ஆயர் குலப்பெண்கள் அனைவரும் கண்ணன் திருமேனியைத் தடவி அதிலுள்ள மையினை எடுத்து இட்டுக்கொள்வார்களாம். தன் கருமை நிற வண்ண தேகத்திலிருந்து மை எடுத்தளிப்பான் என்று பொருள்படக் கூறுகிறார். அஞ்சன மலைபோல் பெருமான் இங்கு காட்யளிக்கிறார் என்று ஆழ்வார் கூறுகிறார். அந்த எம்பெருமான் என் நெஞ்சில் திகழ அப்படி நான் என்ன செய்துவிட்டேன்? என்று மருகி அவனது க்ருபையே தனி என்று கூறுகிறார் ஆழ்வார்.
கௌஸ்துப மணி தரித்திருக்கும் பெருமானின் திருமார்பு திவ்யமாகத் திகழ்கிறது. அதில் மகாலட்சுமிக்கும் இடம் தந்துள்ளான். பசுமையும் குளிர்ச்சியும் ஒருங்கே நிலைக்கப்பெற்ற அழகு மிகுந்த திருவாட்டாற்றில் வாசம் செய்து வருகிறான். உலகத்தோரெல்லாம் வணங்கும் புகழ்மிக்க கருடாழ்வானே அவனுக்கு வாகனமாகத் திகழ்கின்றான். இதனால் பெருமானுக்கும் புகழ் வந்துவிட்டது என்கிறார். அனைத்து உயிர்கட்கும் துன்பம் தந்த கொடுமை மிகுந்த போர்க்குணம் கொண்ட அசுரர்களை குலத்தோடு அழித்தவனாகத் திகழ்கின்றான். அவன் ஒருநாளும் கைவிட்டுவிடாமல் தன்னைக் காத்து வருகிறான். அத்தகைய உயர்நிலையில் உள்ள பெருமான் மிகவும் தாழ்மையான என் மனதில் எப்பொழுதும் பிரியாமல் குடிகொண்டுள்ளான் என்கிறார் ஆழ்வார்.
‘எனக்கே ஆட்செய் எக்காலத்தும்’ என்று, என் மனக்கே வந்து இடை வீடுஇன்றி மன்னி’ என்று ஆழ்வார் முன்பாசுரத்தில் வேண்டியவாறு எமைப் பிரியாது ஆட்செய் என்று என்னைப் பிறப்பறுத்து பெருமான் என்னை ஆட்கொண்டார். அன்றொரு காலத்தில் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனின் மார்பினை இரண்டாகப் பிளந்தவன். அந்த சிரமம் தீர வரியையும், வாள் போன்ற கூரிய அலகுகளைக் கொண்ட அனந்தாழ்வான் மீது திருவட்டாற்றில் எல்லோருக்கும் சேவை சாத்திக்கின்றான். என் மனதைவிட்டு நீங்காமல் என்னை ஆட்கொண்டுவிட்டான். இனி வேறொரு பிறவி எடுக்காதவாறு அவனுக்கு தொண்டு செய்யவும் அருள் புரிந்தான். ‘அருள் பெறுவார் அடியார்தம் அடியனேற்கு’ என்று முன்பாசுரத்தில் கூறியவாறு பக்தனின் பக்தனான பெரியோர்களுக்கும் அடியார்களுக்கும் நாம் கைங்கர்யம் செய்தால் பெறுவதற்கரிய பயன்களைப் பெற முடியும் என்பதனை நிரூபித்துவிட்டான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஒலிகொடுக்கும் நல்ல கழல்களை
அணிந்த பெருமான் தன் திருப்பாதங்களைக் காண்பிக்கிறார். நித்தம் தன் திருவடிகளை நித்யசூரிகளுக்கு
மட்டும் காட்டும் எம்பெருமான் இப்போது தமக்கும் காட்டியுள்ளார் என்று கூறுகிறார்.
மேலும் கொடுமைமிக்க நரகத்திலே புகுவதை ஒழித்தார் திருவட்டாற்று எம்பெருமான்
என்கிறார். ஆழ்வாருக்கு பரமபதபிராப்தி
கிட்டியதை எண்ணி ஆழ்வார் திருநகரி மக்கள் ஆனந்தம் கொண்டதால் அவ்வூர் வளமாயிற்று.
அத்தகைய வளமிக்க திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் கானத்தோடு பாடிய
தமிழ்மாலை ஆயிரத்துள் இந்தப் பத்துப் பாசுரங்களும் இனிய சொற்களால் ஆனவை. இவற்றைக்
கேட்டு வானவர்களும், நித்யசூரிகளும்
போதும் என்று நிறைவு கொள்ள மாட்டார்கள். ‘ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே’ என்று கூறுமாப்போலே
கேட்பதற்கு இனிமையான சொல்லையும் விட பொருள் இனியதாயிருக்கும். வானவர்களும்
மீண்டும் மீண்டும் இதே பத்துப் பாசுரங்களை பாடுமாறு நிர்பந்தித்து மலர்தூவி
ஆராதிக்கிறார்கள் என்பது இப்பாசுரங்களின் ஏற்றமாகக் காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக