புதன், 26 நவம்பர், 2025

63. திருக்கடல்மல்லை - மகாபலிபுரம்


 திருமங்கையாழ்வார்                                                                           பெரிய திருமொழி 

பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணைப் படு கடலில் அமுதத்தை பரி                                                                                                                                                     வாய் கீண்ட சீரானை
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம்  கரும்பினை
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை புணர் மருதம் இற நடந்த                                                                                                                                                           பொன் குன்றினை
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத்                                                                                                                                                             தலசயனத்தே   1088 

      உலகங்களை உண்டுமிழ்ந்தவன். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அமுதம் போன்றவன். குதிரை வடிவில் வந்த கேசியின் காலை முறித்தவன். என் தலைவனானவன் பவளத்தூண் போன்றவன். அடியார்கள் மனதில் தோன்றி வளரும் கரும்பு போன்றவன். குவலயாபீடம் என்ற யானையின் கொம்பை முறித்தவன். சிங்கம் போன்ற தலைவன். மருத மரங்களைச் சாய்த்தவன். கஜேந்திரன் துயரை நீக்கியவன். கற்பகம் போன்று வேண்டிய வரத்தைத் தந்தருளும் பகவானைத் திருக்கடல் மல்லை தலசயனத்தில் கண்டேன் என்கிறார் ஆழ்வார். 
      ஆழ்வார் தமது பாசுரத்தில் கலங்கள் இயங்கும் மல்லை என்கிறார். பகவானது வாத்ஸல்யம் என்ற கப்பல் மாமல்லைக்கு வந்ததாம். பவழங்களையும், முத்துக்களையும் இறக்கியதாம். வந்த முத்துக்களின் ஒன்று தலசயனத்தில் தங்கியது. அதுவே பூதத்தாழ்வார் என்கிறார் ஆழ்வார்.  இத்தலத்து வராகப் பெருமான் வலப்பக்கத்தில் பூமி பிராட்டியைத் தாங்கி நிற்கிறார். ஏனமாகிய ஞானபிரானும் கானத்தின் கடல்மல்லையில் வாழ்கிறார். பெருமான் உலகைக் காக்க இலையில் படுத்தார். கடமையை செய்ய கடலில் படுத்தார். தம் அடியார்களுக்காக இங்கு தரையில் படுத்தார். ‘மாமேகம் சரணம் வ்ரஜ’ என்று சொன்னவனை நாம் சரண் அடைவோம். 

பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப் பொய்ந் நூலை மெய்ந்                                                                                                                                                               நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை என் வணங்கப்படுவானை                                                                                                                                                                               கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத்தை                                                                                                                                                                           தொத்து ஆர் சோலை
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் 
                                                                                                                            கடல்மல்லைத் தலசயனத்தே. 1089 

      பொல்லாத செயல்களைச் செய்வது, வயிற்றுப் பிழைப்பிற்காக பிறருக்கு அடிமையாக இருந்து பணி செய்வது, அபத்தமான உண்மைக்குப் புறம்பான தவறுகள் உள்ள சமய நூல்களை மெய்யான நூல்கள் என்று எண்ணி படித்துப் பாழாகிப் போகாமல் உய்ய வாருங்கள் என்றும், மனிதர்களே கெட்டுப் போகாமல் என் சொல்லை ஆதரியுங்கள் என்று வற்புறுத்தியும், அதை ஏற்க மறுக்காமல் அவர்களை விட்டொழித்தார். பத்தராவிப் பெருமான் முகம் கொடாமல் பிராட்டியுடன் சல்லாபித்து இருந்ததால் தலசயனப் பெருமானை தஞ்சம் அடையப் புறப்படுகிறார்.  திருமகள் வாக்கினால் தூண்டப்பட்ட பெருமான் தலசயனத்தில் வந்து அருள் புரிந்தார். இப்பெருமான்  எனக்குத் தந்தையானவன், என் போன்றோர் வணங்கும்படி எளியவனாய் இருப்பவன், அடியார்கள் போற்றும் வேதப் பொருளானவன். காளமேகம் போன்ற நிறமுடைய எங்கள் தலைவன் திருநின்றவூரில் முத்துத் திரள் போல் குளிர்ச்சியாய் இருப்பவன். காண்டவ வனத்தைத் தீக்கிரையாக்கிய பகவான் கடல்மல்லை பூமியில் பள்ளி கொண்டிருப்பதைக் கண்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார். தலசயனத்துப் பெருமானை தாம் சேவித்து ஆனந்தம் கொண்டது போன்று அனைவரும் சேவித்து ஆனந்திக்க வேண்டும் என்பதே அவரது அவாவாக உள்ளது. 

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய் உலகு உய்ய நின்றானை                                                                                                                                                                      அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ   கானில்
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு                                                                                                                                                      நெறியை வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ்                                                                                                                                                                            கடல்மல்லைத் தலசயனத்தே.  1090 

      இவ்வுலகம் நன்முறையில் இயங்குவதற்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவில் பிரிந்து பிரளய காலத்தில் ஒன்றாக இணைந்து நிற்பவன். கிருஷ்ணாவதாரத்தில் பூதகியின் விஷப் பாலை அருந்தியவன்.  கன்றுகளை திறமையுடன் மேய்த்து விளையாடிவன். காளமேகம் போன்றவன். தஞ்சையில் எழுந்தருளி இருப்பவன். உலகைக் காக்க குதிரை மீது  கல்கியாய் அவதரிக்கப் போகிறவன். இத்தகைய பெருமை மிக்கவனை சோலைகள் சூழ்ந்த கடல் மல்லையில் தலசயனப் பெருமானாக தரிசித்தேன்.   அதர்மம் புரிகிறவர்கள் எத்தகைய உயரத்தில் இருந்தாலும் அவர்கள் அடக்கப்படுவார்கள் அல்லது அழிக்கப்படுவார்கள் என்பது இப்பாசுரக் கருத்தாகும். 

பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை தன்னைப் பிணை மருப்பின் கருங்                                                                                                                                       களிற்றை பிணை மான் நோக்கின்
ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை                                                                                                                                                                         குரவை முன்னே
கோத்தானை குடம் ஆடு கூத்தன் தன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றம்                                                                                                                                                                                          ஏந்திக்
காத்தானை எம்மானைக் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லைத்                                                                                                                                                                 தலசயனத்தே. 1091 

      பேய் குணம் கொண்ட பூதனைத் தாய் வடிவில் வந்து கண்ணனுக்கு பாலூட்ட அதை உண்டவன், கறுத்த யானை போன்றவன், மான்விழி யசோதையின் தயிர், வெண்ணெய் மேல் ஆவல் கொண்ட தலைவன். வேதியர்க்கு அமுதம் போன்றவன். முன்பு குரவைக் கூத்தும், குடக்கூத்தும் ஆடியவன். பசுக்கள் துன்பமடையா வண்ணம் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தவன். என்னை ஆட்கொண்ட இத்தகைய பெருமை கொண்டவனை சோலைகள் சூழ்ந்த கடல்மல்லை தலசயனத்தில் கண்டு கொண்டேன் என்கிறார் ஆழ்வார்.
      கடல்மல்லைப் பெருமான் கொடிய பூதனையை முடித்தார் போல் நமது விரோதிகளையும் முடிக்க வல்லவன். யானைக்குட்டியை பார்த்தால் ஏற்படும் மகிழ்ச்சி போன்று அவனது திவ்யமங்கள விக்ரகத்தை பார்த்தால் மனம் மகிழும். யசோதையானவள் மிகவும் சிரம் கொண்டு தயிர் கடைந்து எடுத்த வெண்ணெயை தன் வயிறாற உண்டு களித்தவன். நித்ய சூரிகளை இங்கிருந்தே காத்து அருள்பவன். ஒவ்வொரு இடைப் பெண்ணுக்கும் ஒரு கண்ணனாக உருவெடுத்து அவர்களை மகிழ்வித்தவன்.  குடக்கூத்தாடி அனைவரையும் மகிழ்விக்கும் பெருமான் தலசயனத்தில் சேவை சாதிக்கிறான். 

 பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழப் பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி  இன்பம்
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன ஈர் இரண்டு மால்                                                                                                                                    வரைத் தோள் எம்மான் தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று அப்பொய் அறைவாய்ப் புகப்                                                                                                                                                    பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ்                                                                                                                                         கடல்மல்லைத் தலசயனத்தே .1092 

      சக்கர வடிவில் வந்த அசுரனை சிதறி விழுமாறு திருப்பாதங்களால் உடைத்தவன். ஆலிலையில் பாலகனாய் பள்ளி கொண்டவன். மணிக்குன்று போல் அழகும், மலை போன்ற உறுதியான நான்கு தோள்களைக் கொண்டவன்.  பூமாதேவியின் தோள்களோடு அணைந்தவன். பாண்டவ தூதனாக சென்று துரியோதனனின் மல்லர்களை நிலவறையில் அழியும்படி செய்தவன். இத்தகைய பெருமைகளைக் கொண்டவனை தலசயனத்தில் கண்டு கொண்டேன் என்கிறார் ஆழ்வார்.   
      நந்தகோபர் இல்லத்தில் தவழ்ந்து விளையாடி வந்த கிருஷ்ணனைக்  கொல்ல கம்சன் சகடாசுரனை ஏவினான். கண்ணன் அவனைக் கொன்றான். பிரளய காலத்தில் உலகங்களை உண்டுமிழ்ந்து நம்மையெல்லாம் காத்தவன். இரண்யனைக் கொன்று பூமிபிராட்டியை மீட்டவன். பாண்டவ தூதனாகச் சென்று தன்னைக் கொல்ல வந்த மல்லர்களை வீழ்த்திக் கொன்றவன். பாரதப் போரில் துரியோதனனை அழித்து பாண்டவர்கள் இழந்த இராஜ்ஜியத்தைப் பெறுமாறு செய்தவன். அதர்மம் புரிவோர் எத்தகைய வல்லமை பெற்றவர்களாக இருந்தாலும் பெருமான் அவர்களை அழித்து விடுவான். இத்தகைய பெருமான் தலசயனத்தில் சேவை சாதிக்கின்றான். 

கிடந்தானை தடங் கடலுள் பணங்கள் மேவிக் கிளர் பொறிய மறி திரிய                                                                                                                                                             அதனின் பின்னே
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் பார் இடத்தை                                                                                                                                                                              எயிறு கீற
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா                                                                                                                                                                  வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லைத்                                                                                                                                                    தலசயனத்தே. 1093. 

      திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் விரித்த படங்களின் கீழ் பள்ளி கொண்டவன். மாரீசன் பொய்மானாக வந்து உலாவ, அதன் பின்னே விரட்டிச் சென்று அதனை முடித்தவன். குவலாயபீடம் என்ற யானையின் கொம்புகளை முறித்து அழித்தவன். வராகமாக வடிவெடுத்து உலகத்தைப் பற்களால் பறித்து எடுத்தவன். பூலோகமும், விண்ணுலகமும் போதாதபடி விஸ்வரூபம் எடுத்து அளந்தவன். இத்தகைய பெருமைகள் கொண்ட என் தலைவனை கடல்மல்லை தலசயனத்தில் கண்டு கொண்டேன் என்கிறார் ஆழ்வார்.

      திருக்கண் வளர்ந்தருளுகைக்கு தகுதியானவன் எம்பெருமான். கிளர்ந்த பலவகைப் புள்ளிகளையுடைய வஞ்சனை மிகுந்த மாய மானாக வந்த மாரீசனை பின்சென்று அதனை கொன்று முடித்தான். நம்மை சுற்றிலும் உள்ள தீயசக்திகளை அழிப்பதற்கு நமக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறான். ஆழ்வார் குறிப்பிடுவது தீயசக்தி என்பது மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் ஆசை என்னும் தீயசக்தியாகும். பகவானின் பெருமைகளை அடிக்கடி நாம் சொல்லும் பட்சத்தில் பெருமானின் பாதுகாப்பு வளையத்தில் நாம் இருப்போம். எவ்வித அசுர சக்தியும் நம்மை அண்டாது என்பது ஆழ்வாரின் கருத்தாகும். 

பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெருவரைத் தோள் இற நெரித்து அன்று                                                                                                                                                          அவுணர் கோனை
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனைப் பொரு கடலுள் துயில்                                                                                                                                                         அமர்ந்த புள் ஊர்தியை
ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை உள்ளுவார் உள்ளத்தே                                                                                                                                                                 உறைகின்றானை
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லைத்                                                                                                                                                              தலசயனத்தே. 1094. 

      தன்னை தெய்வம் என்று போற்றாமல் ஆணவம் கொண்ட இரணியனின் தோள்கள் இற்றுப் போகும்படி வராக வடிவம் எடுத்தவன், பிரகலாதனுக்கு பல கொடுமைகள் புரிந்த அசுரனின் மார்பைக் கிழித்தவன், திருப்பாற்கடலில் சயனித்தும், கருடனை வாகனமாகக் கொண்டவன், பூதனையின் விஷப்பாலை அருந்தியவன், தன்னை நினைப்போர் நெஞ்சில் குடியிருக்கும் பெருமானை பலகாலமாக தேடித் திரியும் நான் கடல் மல்லையில் பாம்பணையோ, ஆலிலையோ, தர்ப்பையோ இல்லாமல் தரையில் பள்ளி கொண்டிருக்கும் இலாவண்யத்தைத் தரிசித்தேன் என்கிறார் ஆழ்வார்.
      தன்னை மதியாத அரக்கர்களை ஒழிந்து போகும்படியாக தனது வலிமையான தோள்களால் போரிட்டு எதிரிகளை மாய்த்தவன். உலகத்திற்குத் தானே அரசன் என்ற இறுமாப்புடன் மார்பில் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டவனை நரசிங்க வடிவமெடுத்து அவனுடைய மார்பை இரு கூராகப் பிளந்தவன். அத்தகையவன் திருப்பாற்கடலில் திருக்கண் வளர்ந்தருளியவன். துன்பம் கொண்டு துயரடைந்துள்ள தொண்டர்களுக்காக பெரிய திருவடியில் விரைந்து வந்து நம்மைக் காப்பவன். ‘நஞ்சுதீற்றிய அம்முலைப் பாலை அமுதுண்பதுபோல் உண்டு அவளுயிரை மாய்த்தவன்’. இத்தகையவன் தலசயனத்தில் சேவை சாதிக்கின்றான். 

பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானைப் பிறை எயிற்று அன்று அடல்                                                                                                                                    அரியாய்ப் பெருகினானை
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரைமேல் கிடந்தானை                                                                                                                                                        பணங்கள் மேவி
எண்ணானை எண் இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம்                                                                                                                                                               போன்று நீண்ட
கண்ணானை கண் ஆரக் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லைத்                                                                                                                                                     தலசயனத்தே      1095 

      மோகினியாய் அவதரித்து இனிய அமிர்தத்தை அசுரர்கள் உண்ணாதபடி தேவர்களுக்குத் தந்தவனை, பிரகலாதனுக்காக கோரைப் பற்களுடன் நரசிங்கமாய் உருவெடுத்து இரண்யனை அழித்தவனை, நீரால் சூழப்பட்ட திருமெய்யம் என்ற குன்றின் மேல் அனந்தனின் படங்களின் கீழே கண் வளர்ந்திருப்பவனை, அளவற்ற பெருமைகளைக் கொண்டவனை தாமரை விழிகளைக் கொண்டவனை நான் சோலைகள் நிறைந்த கடல் மல்லையின் தலசயனத்தில் தரிசித்தேன் என்கிறார் ஆழ்வார்.
      துர்வாச முனிவனின் சாபத்தால் இந்திரன் தன் சக்தியை இழந்தான். இதனால் அசுரர்களின் பலம் பெருகி தேவர்களுக்குத் துன்பம் தந்தார்கள். பெருமான் மோகினி வடிவமெடுத்து பாற்கடலில் வந்த அமுதத்தை அசுரர்கள் பெறாதவாறு தேவர்களுக்கு வழங்கினான். இத்தகையவன் திருமெய்யம் என்னும் திருத்தலத்தில் பாம்பணையில் பள்ளிகொண்டிருப்பவன்.  பக்தர்களுக்கு தனது கல்யாண குணங்களினால் நன்மைகள் பல அளிப்பவன். உறங்குபவன் போல் மக்களின் இன்னல்களை கண்டறிந்துக் காப்பவன். இத்தகையவன் தலசயனத்தில் சேவை சாதிக்கின்றான். 

தொண்டு ஆயர் தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆள் ஆய்  உய்தல்
விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலங்                                                                                                                                              கைவாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்  ஆறும்
கண்டானைத தொண்டனேன் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ்                                                                                                                                         கடல்மல்லைத் தலசயனத்தே. 1096 

      பக்தர்கள் பூஜிக்கும் பாத கமலங்களைக் கொண்டவனை, மண்ணை அளந்த திருவடிகளை உடையவனுக்கு தொண்டு செய்யாமல் வாழ்ந்த அசுரர்களின் அரசனான இராவணனை நாய், நரி, கழுகு போன்ற விலங்குகளுக்கு உணவாகும்படி, வலக்கரத்தால் அம்பு எய்தவன் ஸ்ரீராமன். வேதத்தின் சாரம் வெற்றுடலல்ல அவை அழியாத ஆத்மாக்கள். பகவானிடமிருந்து  வந்த கோடிக்கணக்கான துகள்களாக, உயிர்களாக நாம் இருக்கிறோம். ஒரு காலகட்டத்தில் இக்கூறுகளான உயிர்களை அவன் ஏற்றுக் கொள்கிறான். எவ்வளவு கீழ்நிலையில் இருந்தாலும் நாம் பகவானிடம் ஐக்கியமாகப் போகிறவர்களே! இதுவே வேதத்தின் வாக்காகும். பகவானிடம் ஐக்கியமாவதற்காக, ஆத்மாக்கள் தன் திருவடிகளைப் பணிந்து உய்வதற்காக, நான்கு வேதங்கள், பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம் என்னும், ஐந்து வேள்விகள், சிட்சை, வியாகரணம், சந்தம், நிரத்தம், சோதிடம், கற்பகம் என்ற ஆறு அங்கங்கள் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளான். இவற்றின் சாரமாக இருக்கும் பரந்தாமனை நான் சோலைகள் சூழ்ந்த கடல் மல்லை தலசயனத்தில் தரிசிக்கும் பேறு பெற்றேன் என்கிறார் ஆழ்வார்.     

பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர் கோனைப் பட வெகுண்டு                                                                                                                            மருதஇடை போய் பழன வேலி
தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயில் அமர்ந்த                                                                                                                                                  தலைவன் தன்னை
கடம் ஆரும் கருங் களிறு வல்லான் வெல் போர்க் கலிகன்றி ஒலிசெய்த                                                                                                                                                                இன்பப் பாடல்
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார்                                                                                                                                                                   தாமே.         1097 

      படங்களை உடைய அனந்தனின் மேல் பள்ளிகொண்டு அன்று இரண்யகசிபு மடியுமளவிற்கு கோபம் கொண்டவன், இரு மருத மரங்களிடையே தவழ்ந்து சென்றவன், வயல்களை வேலியாக உடைய திருக்கடல்மல்லையில் பூமியைப் படுக்கையாகக் கொண்டவன்.  இத்தகைய பெருமைகள் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலை குறித்து முரட்டு யானையை நடத்தும் வல்லமை பெற்ற திருமங்கை மன்னன் உரைத்த இனிய பாமாலைகளான இப்பத்து பாடல்களையும் பக்தியோடு பாட வல்லவர்கள் பாவங்கள் நீங்கப் பெறுவர் என்கிறார் ஆழ்வார்.
      பெருமான் பள்ளிகொள்ளப் போவதால் அகமகிழ்ந்த பெரிய படங்களையுடைய திருவனந்தாழ்வான் மேல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு திருக்கண் வளர்ந்தருள்பவனும், தனது பக்தர்களுக்கு விரோதிகள் ஏற்பட்டால் அப்படுக்கையிலிருந்து உடன் எழுந்து அவர்களின் இன்னல்களைக் களைவான். பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரமெடுத்து இரணியன் முதலிய அசுரர்களை அழித்தவனாவான். அதுபோன்று கிருஷ்ணாவதாரத்திலும் அசுரர்களை வீழ்த்தியவன். அத்தகையவன் நீர்வளம் பொருந்திய திருக்கடல் மல்லையில் சேவை சாதிக்கின்றான். 

நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே.    1098 

      வாளைத் தரிக்கும் தகுதியற்ற அசுரர்களுக்கு நடுவே மோகினியாய் வடிவமெடுத்துத் தேவர்களுக்கெல்லாம் அமிர்தத்தை பகிர்ந்தளித்த எம்பெருமானை வசிப்பதற்கேற்ற குளிர்ந்த கடல் சார்ந்த மாமல்லபுரத்துப் பூமியில் பள்ளி கொண்டவனை நினையாதாரை நான் இமைப்போதும் நினைக்க மாட்டேன் என்கிறார் ஆழ்வார்.
      கடல்மல்லை பெருமானை சிந்தை செய்யாதோரை நான் பொருட்டாக மதிக்க மாட்டேன். வேறொரு பலனையும் விரும்பாமல் எம்பெருமானையே விரும்பி ஏற்றுக் கொண்டோரை நான் விரும்புவேன். அவ்விதம் இல்லாமல் அற்ப பொருளை விரும்பி அது கிடைக்க என்னை அணுகினால், தன் எண்ணம் நிறைவேற சிறிய தெய்வங்களை அணுகாமல் நம்மிடம் வந்தார்களே என்று அவர்களை ஏற்றுக் கொள்வேன். நம்மை உபயோகமாக கொள்ளா விடினும் உபாயமாகக் கொண்டார்களே என்று மகிழ்வேன். அத்தகைய ஆழ்வார் கடல்மல்லைப் பெருமானை போற்றிப் பாடியுள்ளார்.     

பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்
கார்வண்ண முது முந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே.   1099 

      கடல் நிறத்தவனான பரந்தாமனின் மார்பில் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் முறையே தாமரை மலரில் தோன்றிய மகாலட்சுமியும், ஆத்ம குணங்கள் நிறைந்த பூமிதேவியும் வீற்றிருக்கும் புகழை நினைத்து, அதன் பிறகு அவனது வாசஸ்தலமான கரிய கடலின் கடற்கரையிலுள்ள மாமல்லபுரத்து தலசனத்தை நினைக்கவல்ல மனமுடையவர்களே எங்களை ஆள்வதற்கு உரியவராவார் என்று பாடுகிறார் ஆழ்வார்.

      திருக்கடல்மல்லையை எந்நாளும் எவர் சிந்திப்பாரோ அவரே என் ஸ்வாமிகள் என்கிறார். குற்றங்குறைகளையே செய்தவண்ணம் உள்ள நம் போன்றார் பெருமானை அடிபணிதல் வேண்டாமோ? நம்மை தண்டிப்பானோ என்று பயந்து ஒதுங்கினால் மேலும் பாவங்கள் சேரும். இதனைக் களைய பல பரிகாரங்கள் உண்டு. ‘திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ’ என்ற கூற்றிற்கேற்றவாறு  நம்மைக் காத்தருள பெரிய பிராட்டியும், பூமிதேவியும் ஒருசேர வீற்றிருப்பதால் நாம் பயம் கொள்ளலாகாது. ‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா! என்றவாறு பெருமானின் திருமார்பில் அமர்ந்து அவனுக்கு புருஷகாரம் செய்து நம் பாவங்களை மன்னித்தருள்கிறாள். 

ஏனத்தின் உருவு ஆகி நில மங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே.     1100 

      வராகரூபியாய் திருவடிவெடுத்து பூமித்தாயின் அழகு பாதிக்காத வகையில் அண்டத்து சுவரிலிருந்தும் எடுத்துக் காத்தவன், வானவர்கள் தங்கள் தகுதிக்கேற்றபடி மகிழ்ச்சியுடன் போற்றி வலம் வரும்படி காட்டின் நடுவே கடல் சார்ந்த மாமல்லபுரத்தில் அருள் புரியும் ஞான ஒளி பொருந்திய திருமேனியையடைய பெருமானை நினைப்பவரே அடியேனுக்கும் நாயகராவார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      திருக்கடல்மல்லையில் ஞானபிரான் என்ற திருநாமத்தையுடைய எம்பெருமான் இரண்யனைக் கொன்று பூமிபிராட்டியை பாயாகச் சுருட்டி பூமிக்கு நேர்ந்த பிரளயத்தைப் போக்கினான். அவ்வமயம் அண்டத்தில் ஒட்டிக் கொண்டதால் பூமிதேவியின் அழகு குலைந்தது. அதைப் போக்கி அவளது வடிவழகை மீட்டெடுத்தான் பகவான். எனவே ஆழ்வார் ‘நிலமங்கை எழில் கொண்டான்’ என்று பாடுகிறார். சுற்றிலும் வனங்கள் நிறைந்த கடல்மல்லையில் சேவை சாதிக்கிறார் பெருமான். ‘வானத்தெழுந்த மழைமுகில் போலெங்கும் கானத்து மேய்ந்துகளித்து விளையாடி’ என்று பெரியாழ்வாரும் கானகத்தைப் பாடியுள்ளார். ‘எறிதிரை வையம் முற்றும் ஏனத்து உருவாயிடந்த பிரான்  என்று நம்மாழ்வார் திருவிருத்தத்தில் பாடியுள்ளார். 

விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்துக்
கண்டாரை கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சு உடையார் அவர் எங்கள் குலதெய்வமே.         1101     

      எதிரிகளைத் தோற்கடித்து அவர்களது சரீரத்தை நாய், நரி போன்ற விலங்குகள் மேல்விழுந்து உண்ணுமாறு செய்தவன். மங்கையர் விரும்பும் அவர்களின் மிடுக்கான சரீரத்தை நெருப்பு பற்றி அழிக்கும்படி கொடிய யுத்த களத்தில் செய்த பகவான் மாமல்லபுரத்தில் பள்ளி கொண்டுள்ளார். அவரைப் புகழ்ந்து பேசும்படியான மனமுடைய தொண்டர்களை எங்கள் குலதெய்வமாகவே கருதுகிறோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.  
      தலசயனத்துப் பெருமானானவர் நல்வார்த்தை சொல்பவராகவும், தன் மேல் எதிரம்பு கோற்கும் அகங்காரிகளான விரோதிகளின் செருக்கை அடக்குபவராகவும் உள்ளார். அத்தகைய கொடிய எதிரிகளின் உடலை நாய், நரி பிடுங்கித் திங்குமாறு செய்பவர்.  மேலும் மாதர்கள் அனுபவித்த படை வீரர்களின் மார்பை அக்னி பகவான் அனுபவிக்குமாறு செய்பவர். இவ்விதமாக நமது ஆங்காரத்தையும் தொலைத்து, நம்மை ஆட்கொள்ள வந்துள்ள எம்பெருமான் திருக்கடல்மல்லையில் தரையில் வாசம் செய்கிறார். அவரை பக்தியுடன் கொண்டாடும் தொண்டர்கள் அனைவரும் எனக்கு குல தெய்வமாகவே தென்படுகிறார்கள் என்கிறார் ஆழ்வார்.       

பிச்சச் சுறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர்
விச்சைக் கிறையென்னும் அவ்விறையைப் பணியாதே
கச்சுக் கிடந்தனூர் கடல் மல்லைத் தலசயனம்
நச்சுத் தொழுவாரை நச்சு என்தன் நல்நெஞ்சே
!      1102. 

      என் நல் மனமே! மயிலிறகினால் செய்யப்பட்ட சிறு குடையும், சிறிய விசிறியுமுடைய சமணர் முதலானோர்கள் சர்வஜ்ஞனென்று சொல்லிக் கொள்ளும் அவர்களது இறைவனைப் பணியாமல், வேகவதி நதியின் வெள்ளத்தைத் தடுக்க குறுக்கே சயனித்த பள்ளி கொண்ட பெருமானை விருப்பத்துடன் ஏற்று வணங்குபவர்களை, எனது நல்ல நெஞ்சமே! நீ மட்டுமே ஆர்வத்துடன் தொழ வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      குடையும் விசிறியும் கொண்ட சமணர்கள் என்பது வியாக்யானக் கருத்தாகும். இத்தகைய சமணர்கள் சர்வஜ்ஞன் என்ற  தெய்வத்தைக் கொண்டு அவரே கல்விக்குக் கடல் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். பின்பு கச்சி என்னும் காஞ்சியிலுள்ள திருவெஃகாவில் யாதோத்காரியாகவும் திருக்கடல் மல்லையில் தலசயனராகவும் உள்ள பெருமானை ஏற்றுள்ளனர். ‘வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்மல்லையாய், மதிட்கச்சியூராய்’ என்ற திருநெடுந்தாண்டகப் பாசுரம் இங்கு பொருத்தமாக அமைகின்றது. பரவாசுதேவனாகிய ஒரு சிறந்த ரத்தினத்தை வாத்ஸல்யமான கப்பலானது திருக்கடல் மல்லை என்ற தீவினிலே கொண்டு வந்து தள்ளிற்றாம். அங்கு அந்த ரத்தினம் விலை போகாததால் காஞ்சியில் கொண்டு வந்து தள்ளிற்று என்ற கூறுகிறார். 

புலன்கொள் நதிக்குவையோடு புழைக்கைம் மாகளிற்றினமும்
நலங்கொள் நவமணிக்குவையும் சுமந்து எங்கும் நான்றொசுந்து  
கலங்களியங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தாரவரை வலங்கொள் என் மடநெஞ்சே!
    1103                                     

      அறிவற்ற நெஞ்சமே! இந்திரியங்களைக் கவர்கின்ற தங்கக் கட்டிகளோடு பெரிய யானைக் கூட்டத்தினையும்,  நவரத்தினக் குவியல்களையும் சுமந்து எங்கும் கப்பல்கள் சுற்றிக் கொண்டிருக்கும் பெருமை பெற்ற மாமல்லபுரத்தில் இருக்கும் தலசயனப் பெருமானைச் சுற்றி வருவோரை நீயும் சுற்றி வருவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.     
      திருக்கடல்மல்லை என்னும் திருப்பதி கடற்கரை அருகில் உள்ளதால் அங்கு வரும் மரக்கலங்கள் சிறந்த வணிகர்கள் தமது பொருட்களை எடுத்து வந்து நன்முறையில் வாணிபம் செய்வார்கள். இப்பாசுரத்தில் நிதி என்னும் சொல் பொன்னைக் குறிக்கும். சிறந்த பொற்குவியல்களையும், யானைக் கூட்டங்களையும், நவமணிகளையும் அளவுக்கு மீறி கப்பல்களில் கொண்டு வருவார்கள். அதனால் கலங்கள் பாரம் தாங்காமல் துவண்டு நின்றனவாம். அப்படிப்பட்ட நல்ல சரக்குகளை சுமந்து கலங்கள் தங்கும் கடறகரையில் உள்ள மல்லாபுரியில் உள்ள பெருமானை வழிபட நினைக்கும் பக்தர்களை நான் வழிபடுவேன் என்று கூறுகிறார் ஆழ்வார். 

பஞ்சிச் சிறு கூழை உரு ஆகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே!     1104 

      எனது தூய்மையான நெஞ்சமே! பஞ்சு போன்ற முடியை உடைய குழந்தையாக அவதரித்து வஞ்சகியான பூதனையின் விஷம் தோய்ந்த பாலினைக் குடித்த பகவான் முன்னர், தன்னோடு இசையாத கம்சனை அழித்த கோவிந்தன் உறையும் மாமல்லபுரத்தை மனமுருகித் தொழுகின்ற அடியார்களை நீ வணங்குவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
  பஞ்சு போன்ற சிறு கூந்தலையுடைய பூதகி யசோதை போன்று வேஷமிட்டு வந்து கண்ணனுக்கு பாலூட்ட வந்தாள்.  நம்முடைய தாய்தான் நமக்கு பாலூட்ட வருகிறாள் என்று கண்ணன் நினைத்து வருவான் என்று எண்ணத்தில் பூதகி தாய்வேடம் பூண்டு வந்தாள். ‘பஞ்சிறுகூழையுருவாகி’ என்ற பதம் கண்ணபிரானின் தலை முடியானது சிறு பஞ்சை சேர்த்து வைத்து அவற்றை கட்ட முடியாதபடி கற்றையாக இருந்தது என்றும் கொள்ளலாம். அத்தகைய இளம் பிராயத்திலேயே பூதகியின் விஷப்பாலை உண்டவனும் கம்சனின் உயிரை மாய்த்தவனுமான எம்பெருமான் திருக்கடல்மல்லையில் உள்ளான். அத்தகையவனைச் சிந்தை செய்யும் பாகவதர்களை எனது நெஞ்சம் சிந்தை செய்யும் என்கிறார் ஆழ்வார்.                       
 

செழு நீர் மலர்க் கமலம் திரை உந்து வன் பகட்டால்
உழும் நீர் வயல் உழவர் உழப் பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல்மல்லைத் தலசயனம்
தொழும் நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே!
   1105 

      எனது தூய்மைமிக்க மனமே!  உழவர்கள் நீர் அலைகளையும், தாமரை மலர்களையும், தள்ளுகின்ற காளைகளை ஏரில் பிணைத்து வயலை உழ, அவ்வுழவுக்கு முன் தாமரை, செங்கழு நீர்ப் பூக்களின் வாசனை வீசும் திருக்கடல் மல்லையில் உள்ள தலசயனப் பெருமானை வணங்கும் மனத்தவரையே நீ தொழ வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
      இப்பாசுரத்தில் திருக்கடல்மல்லையின் நில நீர் வளங்களை அழகாக எடுத்து இயம்புகிறார் ஆழ்வார். உழவர்கள் கழனிகளை உழும்போது அங்குள்ள தாமரை மலர்களையும், நீர் வெள்ளங்களையும் காலால் தள்ளிக்கொண்டே வலிய எருதுகளைக் கொண்டு உழவர்கள் உழவார்கள். அவ்வமயம் முன்னும் பின்னும் மலர்கள் தப்பிப் பிழைத்து தன் கடமையென மணங்களை வீசியவண்ணம் இருக்குமாம். அப்படிப்பட்ட வயல்கள் சூழ்ந்து திருக்கடல்மல்லையை தொழுவதையே தனது கடமையாகக் கருதும் பாகவதர்களை என் நெஞ்சு தொழுதவண்ணம் இருக்கும் என்கிறார் ஆழ்வார். 

பிணங்கள் இடு காடு அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என் தன் மட நெஞ்சே!     1106 

      அறிவற்ற நெஞ்சமே!  பிணங்களை எரிக்கின்ற சுடுகாட்டிலே நடம் புரியும் சிவபெருமானின் இடப்பக்கம் இருப்பவன் சுதர்சனச் சக்கரத்ததை ஏந்திய ஸ்ரீஹரி. சிவனோடு திருமால் வீற்றிருக்கும், வானவர்கள் உலாவுகின்ற பெருமையையுடைய மாமல்லபுரத்தில் பள்ளிகொண்டு அருளும் பரந்தாமனை வணங்கும் மனமுடையவர்களை நீ வணங்குவாயாக என்கிறார் ஆழ்வார்.
      இப்பாசுரத்தின் முன்னடியில் எம்பெருமானின் சௌசீல்ய குணத்தினை அழகாக விவரிக்கின்றார் ஆழ்வார். தாமஸ குணம் கொண்ட சிவபிரானுக்கும் தனது திருமேனியின் வலப்பாகத்தில் இடம் கொடுத்துள்ளார் பெருமான். இதே கருத்தினை நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் ‘வலத்தனன் திரிபுரமெரித்தவன்’ என்று பாடியுள்ளார். சிவபெருமான் பெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அதை மெச்சிய எம்பெருமான் தனது வலது பக்கத்தில் சிவனுக்கு இடத்தையே அளித்தார். ஆபத்துகளில் திருமேனியில் இடம் கொடுப்பது என்பது மஹாகுணமாக ஆழ்வார்கள் கருதுகிறார்கள். இத்தகைய குணம் கொண்ட பெருமான் திருக்கடல் மல்லையில் வாசம் செய்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.       

கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லைத் தலசயனத்து
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார்
முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் முதல் ஆவாரே.    1107 

      மணம் வீசும் வீதிகளைக் கொண்ட மாமல்லபுரத்தில் எழுந்தருளி இருக்கும் பகவானுடைய திருப்பாத கமலங்களை எந்நேரமும் நினைக்கும் அடியார்க்கு அடியவனும், கூரிய வேலினைக் கொண்டு போரிடுவதில் வல்லவனும், கலிகன்றி என்னும் நாமத்தையுடைய திருமங்கை ஆழ்வாரின் இப்பாமாலையினைப் பாடுபவர்கள் முடிசூடிய மன்னர்களுக்கும் தலைவராகத் திகழ்வார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      திருக்கடல்மல்லை வீதிகள் என்றும் நறுமணம் கமழும் இடமாகத் திகழும். தலசயனமாகப் பள்ளி கொண்டுள்ள பெருமானுடைய திருவடிகளை  என்றும் சிந்தித்தவண்ணம் பாகவதர்களுக்கே தான் அடிமைபட்டதாக ஆழ்வார் கருதுகிறார். பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தமென்று பரமபோக்யமாக அருளிச்செய்து வந்த ஆழ்வார் பலன் சொல்லுமிடத்து அஹங்காரத்திற்கு மூலகாரணமான இகலோக ஐஸ்வர்யத்தை பலனாகச் சொல்வதற்கான காரணம் என்னவென்று நஞ்சீயர் பட்டரை வினவியபோது அதற்கு ‘திருமங்கையாழ்வார் திருவவதிரித்த பின்பு பொருட்களை கொள்ளயடித்து பாகவதர்களுக்கு கைங்கர்யம் பண்ணியபோது மிகுதியான ஐஸ்வர்யமும் இவ்வாழ்வார் மனதில் உதித்ததாகத் தெரிவித்தார்’. எனவே எந்த பலனை விரும்பினாலும் அந்தந்த பலன் இவ்வருளிச்செயல் மூலம் கிடைக்கும் என்பது உண்மை. 

சங்கு தங்கு தடங் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் * அருள்புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ!
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளந்
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே!      1195 

      இன்னிசை பாடும் இளவண்டுகள் மணமிக்க செண்பகம், மல்லிகை இவற்றைத் தழுவிப் பார்த்து அவை கொதித்தபடியால் அதைவிட்டு  தென்னம் பாளைகளில் சேரப்பெற்ற திருவாலியில் உறையும் வயலாளி மணவாளா! திருப்பாற்கடலிலும், மாமல்லபுரத்திலும் சயனித்திருந்தவனே! இப்போது கருணையோடு என் நெஞ்சத்தில் பிரவேசித்தாய். இனி நீ வெளியேற முயன்றால் வெற்றி கிட்டாது என்ற பொருளில் பாடியுள்ளார். சங்குகள் தங்கியுள்ள கடற்கரையில் உள்ள திருக்கடல் மல்லையில் அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் பெருமான் ஆழ்வார் நெஞ்சில் குடி புகுந்துள்ளார். பல்வேறு திருப்பதிகள் இருக்க என் நெஞ்சில் வந்து தங்கினாயே! இனி இவ்விடம் விட்டு உன்னால் போக இயலாது என்கிறார். அன்பினால் கட்டுண்டால் நாம் வசப்பட்டு விடுவோம். இதையே ஆழ்வாரும் கையாண்டுள்ளார். எந்நிலையிலும் அன்பும் பொறுமையும் வெல்கிறது. அதனால் ஆழ்வாரும் இத்தகைய அன்பைக் கொண்டு என்னை விட்டு அகல முடியாது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். 

புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா!
கள்வா! கடல்மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?     1551 

      கொக்கின் வடிவாக வந்த பகாசுரன் என்ற அசுரனின் வாயைப் பிளந்த பரம பவித்ரனே! என்று நான் அழைக்க என் நெஞ்சத்துள் வந்து குடிகொண்டு என் தாபங்களைத் தணிக்கவல்ல ஒப்பற்ற கள்வனே! ஒருவரும் அறியாமல் பல நன்மைகளைச் செய்பவனே! கடல் மல்லையில் சயனித்திருக்கும் கரும்பே! அடியார்களுக்கு வள்ளலாக அருளை வாரித் தருபவனே! இப்படிப்பட்ட உன்னை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      கம்சனால் ஏவிவிடப்பட்ட, கொக்கு வடிவில் வந்த பகாசுரனின் வாயை இரண்டாகப் பிளந்தவன் கண்ணன். ஆழ்வார் கண்ணனை கள்வன் என்று கூறுகிறார். இவரது பல பாக்களில் கள்வன் என்று குறிப்பிடுகிறார். திருக்கள்வனூர் பெருமானுக்கு கள்வன் என்று பெயர். ‘உலகமேத்தும் காரகத்தாய்! கார்வானத்துள்ளாய் கள்வா’ என்று குறிப்பிடுகிறார். பிள்ளை பெருமாள் ஐயங்கார் தனது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் ‘புள்வாய் பிளந்த புயலே! என்று கூறுகிறார். உலகத்து பொருளெல்லாம் நினது. அதில் என் உயிரும் நினது. உன் பொருளை மாந்தர்கள் திருடி வைத்துக் கொண்டு நின்னைத் திருடன் என்கிறார்களே. இத்தகைய பேதைமையை என்னவென்று சொல்வது என்று திகைக்கிறார் ஆழ்வார். 

திருமங்கையாழ்வார்                                                                                 திருக்குறுந்தாண்டகம் 

பிண்டி ஆர் மண்டை ஏந்திப் பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் *உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே        1050 

      உளுத்துப் போன மாமிசத் துகள்கள் உதிரும் மண்டையோட்டை தரித்து வெளி இல்லங்களில் பிச்சை ஏற்றுத் திரியும் சிவபிரானின் சாபத்தைத் தீர்த்த பகவான் ஸ்ரீமந் நாராயணன் அருள் புரியும் இடமான திருக்கண்டியூர், திருமெய்யம், திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பேர் நகர், மாமல்லபுரம் போன்ற திவ்ய தேசங்களுக்கு சென்று சேவிப்பவர் பிறவிப் பயன் பெறலாம். மற்றவர்கள் பாவ வினைகள் தீர்ந்தும் முக்தியடையாத நிலை பெறுவர். இங்கு பிறவிப்பயன் என்று கூறவது பிறப்பு இறப்பு இல்லாத பேரானந்த நிலை, ஆத்மாவை அறிந்து விட்ட தூய நிலை, வேறுபாடுகளைக் கடந்துவிட்ட ஒரு அற்புத நிலை, பகவானின் ஒரு கூறாய் நாம் இருப்பதை உணர்த்தும் நிலை என்பதாகும். எனவே மக்கள் அனைவரும் இத்தகைய திவ்ய தேசங்களுக்குச் சென்று பெருமானை சேவித்தல் வேண்டும் என்று உணர்த்துகிறார். 

திருமங்கையாழ்வார்                                                                                  திருநெடுந்தாண்டகம் 

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
     மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்கத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
     குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
     பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா!
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
     ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே .     2060     

      ‘‘மரக்கலங்களில் சிறந்த இரத்தினங்களைக் கொண்டு தள்ளும் கடற்கரையைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் கோயில் கொண்டிருப்பவனே! திருமதில்களையுடைய காஞ்சியில் வாழ்பவனே! திருப்பேர் நகரில் குடிகொண்டிருப்பவனே! அழகிய கொன்றை மாலையை இடப்பக்கம் சூடிய மலை மன்னன் இமவானின் மகளான பார்வதியை இடப்பக்கம் அமர்த்தியுள்ள சிவபெருமானுக்கு உன் மேனியில் இடம் தந்தவனே!  குளிர்ந்த திருவேங்கட  மலையில் நின்றருள்பவனே! பவள நிறத்தவனே! எங்கே  போனாய்?  பகவானே! உன்னைத் தேடி இந்த ஏழை அலைகின்றேனே!’’ என்று ஆழ்வார் பகவானை வேண்டுகிறார்.
      பகவானைத் தேடுவதிலும் ஒரு அடித்தளம் அமைய வேண்டும். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்றெண்ணி தேடுவது சுயநலமாகும். இக்காரியத்தால் பகவான் நம்மை விட்டு விலகி விடுகிறான். சுயநலமில்லா அன்பைக் கொண்டு அவனை அடைய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்வார் இப்பாசுரம் இயற்றியுள்ளார். 

பூதத்தாழ்வார்                                                                                            இரண்டாம் திருவந்தாதி

தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம்.                 2251 

      அழகிய தஞ்சை மாமணிக்கோயில், சிறந்து விளங்கும் திருவரங்கம், இயற்கை சூழல் நிறைந்த திருத்தண்கால், பக்தர்கள் தியானிக்கும் திருமலை, அழகிய திருப்பாற்கடல், கடல் சூழ்ந்த  திருக்கடல்மல்லை, நெடிதுயர்ந்த திருக்கோவலூர், அழகிய மதிள்கள் உடைய திருக்குடந்தை ஆகிய இடங்களைவிட அடியார்களின் இதயக்கமலத்தில் குடிகொள்வதே பெருமானுக்கு விருப்பம் என்று ஆழ்வார் கூறுகிறார்.
      பகவான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பது உண்மை. ஆனாலும் அலைபாயும் மனத்தினை கொண்டு அவனை கிரகித்துக் கொள்ள இயலாது.  எனவே பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்கு சென்று வந்தால் நம் மனம் அலைபாய்வதை விடுத்து ஒருநிலைப்படும். அதனால் தெளிவு பிறக்கும். தீய வினைகள் செய்யக்கூடாது என்ற வைராக்கியம் வளர்ந்து நாம் உத்தமர்களாக மாறுவோம்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...