செவ்வாய், 18 நவம்பர், 2025

87. ஆழ்வார் திருநகரி

 


நம்மாழ்வார்                                                                                                             திருவாய் மொழி 

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே?          3222 

      பேரண்டமும், தெய்வமும், உலகமும், உயிர்களும் மற்றும் எதுவும் இல்லாத ஊழிக்காலத்தில் பிரம்மனைப் படைத்து உலகங்களையும், உயிர்களையும் படைத்தான். இத்தகைய பகவானே மலை போல் காணப்படும் மணிமாடங்கள் நிறையப்பெற்ற திருக்குருகூரில் ஆதிபிரானாக நின்றருள் புரிகிறான். அவனை விட்டு மற்ற தெய்வங்களை நீங்கள் நாடலாமோ? என்று கேட்கிறார் ஆழ்வார்.
      சகல ஜகத்காரண பூதனான எம்பெருமான் திருநகரியில் எளியவனாகக் காட்சி தருகிறான். இவ்விதம் உள்ள நிலையில் வேறு தெய்வத்தை தேடி அலைகிறீர்களே? இத்தகைய சர்வேஸ்வரன் வியப்பூட்டும்படியாக மலைபோன்ற மணிமாடங்கள் கொண்ட ஆழ்வார்திருநகரியில் நம்மைக் காண வருவார் யாருமுண்டோ? என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் பெருமான். அதைவிடுத்து வேறு தெய்வத்தை நாடுகிறீரே? என்று வருந்துகிறார் ஆழ்வார். 

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனை
பாடி ஆடி பரவிச் செல்(ன்)மின்கள் பல் உலகீர் பரந்தே     3223. 

      மானிடர்களே! உங்களைப் படைக்கும்போதே நீங்கள் தேடிச் சென்று வணங்கும் தெய்வத்தையும் பரந்தாமன் படைத்துவிட்டான். அவன் விரும்பி உறையும் கோயில் மாடமாளிகைகள் சூழ்ந்து அழகாய் இருக்கும் திருக்குருகூர். அங்கே திருக்கல்யாண குணங்களும், புகழையுமுடைய ஆதிபிரான் அருள் புரிகிறார். பலவகையான நாடுநகரங்களில் உள்ளவர்களே! நீங்கள் கூட்டமாகச் சென்று அவனைப்பாடிப் போற்றி புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      உலகத்தவர்களே! நீங்கள் எந்த தெய்வத்தை நாடிச் செல்கிறீர்களோ அவர்களைப் படைத்தவன் எம்பெருமான். எனவே அத்தகைய காரணபூதனான ஸ்ரீமந் நாராயணன் திருநகரியில் காட்சி தருகிறான். அவனைப் பணியுங்கள். இப்பெருமான் பரமபதத்தில் உள்வெதுப்போடு காண்கிறான். நம் வினைப் பயனால் நாம் வெதும்பித் துன்பம் கொள்வது போன்று பெருமானும் கொள்கிறான். கர்மவினைகளால் உலகில் பிறப்பவர்கள் துன்பத்தை அடைவார்கள் என்பதால் அதற்கானத் தெய்வத்தையும் அன்றே எம்பெருமான் படைத்துவிட்டார். எனவே துன்பத்தை விட்டு திருக்குருகூர் பிரானிடம் பலன்களைத் தேடிக்கொள்ளுங்கள் என்கிறார் ஆழ்வார்.     

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே.        3224 

      பரந்தாமன் எல்லாத் தெய்வங்களையும், பலவகையான உலகங்களையும், படைத்து, பிரளய காலத்தில் அவைகளை விழுங்கி வயிற்றில் மறைத்து வைத்துக்காத்து, உற்பத்திக் காலத்தில் வெளியிட்டு திருவிக்ரமனாய் அளந்து, வராகமாய் பிரளயத்தில் தூக்கி வந்து, இவையனைத்தையும் அறிந்து தெளிவற்று உள்ளீர்களே! தேவர்கள் வணங்கும் திருக்குருகூரில் அருள் புரியும் தெய்வத்திற்கு நிகராக வேறு தெய்வம் இருந்தால் வந்து பேசுங்கள். பல உலகங்களிலும் இருப்பவர்களே! இவ்வுலகத்து உயர்தினை, அஃறினை பொருட்களிலும் அவனே ஆத்மாவாக இருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.
      உலகினைக் காப்பதற்காகப் பெருமான் அசுரர்களுடன் செய்த போரும், நமக்காகச் செய்த நற்காரியங்களை மனதில் நினைத்துக் கொண்டால் இவனே பரம புருஷன் என்பதை அறியலாம். தேவவர்க்கம் முதல் பூவுலகினையும் படைத்து, மண்ணோடும், விண்ணோடும், வானவரும், தானவரும் மற்றுமெல்லா உலகினையும் உண்டு உமிழ்ந்து, வாமனனாகி மூவுலகை அளந்து, மஹாவராகமாகி பூமியைக் காத்தவனாகிய இத்தகையவனே பரதேவதன் என்று தீர்மானமாக எண்ணுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். 

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நல் மோக்கத்துக் கண்டு கொள்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே?     3225 

      முக்கண் உடையவன், திரிபுரம் எரித்தவன் என்றெல்லாம் புகழப்படும் சிவபெருமானும், பிரம்மனும் போற்றக்கூடிய பெருமை கொண்டவன் எம்பெருமான். பிரம்ம கபாலத்திற்கு நல்ல முக்தியைக் கொடுத்த வரலாற்றில் இதனை அறியலாம்.  ஒளி பொருந்திய அழகிய மதில்கள் சூழ்ந்த திருக்குருகூரில் அருள் புரியும் எம்பெருமானின் முன் பயனற்ற சொற்களை பேசுவதால் என்ன பயன்? என்று கூறுகிறார் ஆழ்வார்.
      அனுமானத்தால் ஈசவரனை சாதிக்க விரும்புவர்களுக்கும், பசுபதியே சர்வேசுவரன் என்று கூறுபவர்களுக்கும் ஸ்ரீமந் நாராயணனே மூல காரணமாகத் திகழ்ந்து அருள்கிறான். பிரம்மனின் தலையை கிள்ளி எரிந்ததால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க பதரிகாச்ரமப் பெருமானிடம் வேண்ட அதனைத் தீர்த்து வைத்தார். சிவனும் பெருமானும் ஒருவரே என்ற கருத்தை ஆழ்வார்கள் பல பாசுரங்களில் எடுத்துரைத்துள்ளார்கள். எனவே பயனறற வாதங்கள் கூறுவதை விட்டு காலத்தை விரயமாக்காதீர்கள் என்று கூறுகிறார்.   

இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே      3226 

      புராணங்களை உதாரணமாகப் பேசுவோரும், சமணர்களும், பௌத்தர்களும் வலிய வந்து வாதத்திற்கு அழைக்கும் வைசேடிகர்களும் மற்றும் நீங்கள் வழிபடும் தெய்வமுமாகி நிற்பவன் எம்பெருமானே. நெருங்கி வளர்ந்த செந்நெற்பயிர்கள் வீசும் திருக்குருகூரில் பொலிவுடன் நின்று அருள் புரியும் ஆதிபிரானைத் தரிசித்தால் நான் சொன்ன சொல் பொய்யில்லை என்பதை அறிவீர்கள். எனவே அவனைத் துதியுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      நீங்கள் வழிபடும் எல்லாத் தெய்வங்களுமாக இருப்பவன் எம்பெருமானே! என்று ஆழ்வார் கூறுகிறார். எல்லாத் தெய்வங்களும் ஒரே பரம்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் ஏதோ மாயை காரணமாக அதனைப் புரிந்து கொள்ளாமல் தேவையற்ற வாதங்களில் ஈடுபட்டு காலத்தினை விரயம் செய்து வருகிறார்கள். எனவே இத்தகைய குழப்பங்களைக் கைவிட்டு திருக்குருகூரில் வாசம் செய்யும் ஆதிநாதனை வழிபட்டுத் தெளிவினைப் பெறுங்கள் என்று கூறுகிறார். 

போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே         3227 

      மக்களே!  நீங்கள் வேறு தெய்வங்களை ஆராதிக்க என்ன காரணமெனில் எல்லோரும் வைகுண்டம் சென்றால் உலகம் என்னும் ஒன்று இல்லாமல் போகும் என்பதால் உங்களை இப்படித் தன்னை நெருங்காதபடி வெளியே தேக்கி வைத்துள்ளார். சேற்று நிலத்தில் செந்நெல் பயிர்களும், தாமரையும் ஓங்கி வளரப் பெற்ற திருக்குருகூரில் மிகுந்த ஆற்றலோடு அருள்புரியும் மாயவனின் வேலை இது என்பதைப் புரிந்து கொண்டு அவனது திருவடிகளைப் பற்ற ஓடுங்கள் என்கிறார் ஆழ்வார்.
      ஆழ்வார் இப்பாசுரத்தில் வேறு தெய்வங்களைப் போற்றுவதற்கான காரணத்தை நயமாக எடுத்துச் சொல்கிறார்.  எல்லோரும் ஸ்ரீமந் நாராயணனை வணங்கி விட்டால் அனைவரும் நடுநிலை பேறான வைகுண்ட பதவியை அடைந்து விடுவார்கள். பின்பு உலக இயக்கங்கள் நின்று விடும். அவ்விதம் செய்ய பகவான் விரும்பாத காரணத்தினால் பலர் தன்னை நெருங்காமல் பார்த்துக் கொள்கிறான். அதையும் மீறி அவனை நெருங்கி அடைபவர்கள் புண்ணியம் செய்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். 

ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள்
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே      3228 

       சம்சார சக்கரத்தில் ஓடியோடிச் சுழன்று பல்வேறு வம்சப் பரம்பரையில் பிறவிகள் எடுத்து மற்ற தெய்வங்களைப் பாடியாடிப் பணிந்து அவற்றைப் பலவிதமாக வழிபட்டு மீண்டும் பிறவாமையைப் பெற்றீர்களா? இல்லையே! தேவர்கள் கூடித் துதிக்க நின்றருளும் திருக்குருகூரில் அருள் புரியும் கருடக் கொடியையுடைய ஆதிபிரானுக்கு அடியவராய் செயல்படுங்கள். பிறப்பு அழிந்தே போகும் என்கிறார் ஆழ்வார்.
      வேதாந்தங்களைக் கற்பதனால் என்ன பலன் உண்டாகுமோ அது உங்களுக்கு இதுவரை தெரியவில்லை. இந்நாள் வரை கண்ட பலன் தானே இனிமேலும் அளிக்கும். எனவே கருடக்கொடி உடையவனை சரண் புகுவதே சிறந்தது என்கிறார். மற்ற தெய்வங்களையெல்லாம் ஓடியோடி சென்று வணங்கியதால் என்ன பலன் ஏற்பட்டது? அடுத்தடுத்து பிறவிகள் பல பிறந்து சம்சாரத்தில் உழன்று துன்பங்கள் பல அனுபவித்து வருகிறீர்கள்.  நீங்கள் தொழுதுவரும் தெய்வங்களும் திருக்குருகூர் வந்து ஆதிபிரானை சரணடைந்து வருகின்றன. பிறவிப் பிணியை அறுப்பவன் பகவான் ஒருவனே! இதனை நன்குணர்ந்து அவனை அடிமை செய்து வாழ்தல் சிறந்தது என்கிறார் ஆழ்வார்.      

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே     3229 

      அடிமை செய்து உள்புகுந்து மார்க்கண்டேயன் வந்து தன்னைச் சரணடைந்ததும் சிவபெருமான் அவனைக் காத்ததும் நாராயணன் அருள் மட்டுமே. எனெனில் சிவபெருமான் காலனை உதைத்தது இடது கால். இடப்பக்கம் இருப்பவர் ஸ்ரீமந் நாராயணன்.  கொக்கைப் போன்று வெண்மை நிறமாகப் பூக்கும் தாழைகளை வேலியாகக் கொண்ட திருக்குருகூரில் ஆதிபிரான் நின்றருள மற்ற தெய்வங்களைப் பற்றி பேசிக் காலத்தை விரயம் செய்கிறீர்களே என்று கூறுகிறார் ஆழ்வார்.
      சிவபெருமான் மார்க்கண்டேயனுக்கு அருள் செய்தது திருமாலின் அருளால் ஆகும். அச்சிவபிரானுக்கு அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்பவன் ஸ்ரீமந் நாராயணன். மகாபாரத ஆரண்யபருவத்தில் இச்செய்தி நன்கு விளக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாகவதத்திலும் பனிரெண்டாவது ஸ்கந்தத்தில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பின்னாளில் மார்க்கண்டேயன் வேண்டியபடி மகாபிரளயத்தை காணுமாறு அருளினான். தேவர்களையும், மக்களையும் காத்தருளிய எம்பெருமானிடம் சரணடைந்தான். 

விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.      3230 

      திருக்குருகூர் ஆதிநாதப் பெருமான் அளவிட்டுக் காண்பதற்கு அரியவன். வெவ்வேறான ஆறு வகைப்பட்ட பாஹ்ய சமயங்களும், அவற்றைச் சார்ந்தவர்களும் எவ்வளவு குதர்க்கமாக வாதிட்டாலும் பகவானுடைய பெருமைகளை சொல்ல  முடியாது. வளமிக்க குளிர்ந்த கழனிகள் சூழ்ந்த அழகான திருக்குருகூரில் அருள் புரியும் பரந்தாமனை நெஞ்சில் பதித்துக் கொள்ளுங்கள்! உங்களைக் கடைத்தேற்ற அதுவே சிறந்த உபாயமாகும் என்கிறார் ஆழ்வார்.
      வேதம் முதலிய சாத்திரங்களை முறையாக அனுட்டிக்காதவர்கள் வேத பரஹ்யர்கள் எனப்படுவர். இவர்கள் ப்ரமாணங்களுக்கு தவறான அர்த்தங்கள் கொண்டு அனைவருக்கும் போதிப்பார்கள். அவர்கள் எவ்விதம் வாதிட்டாலும் பெருமானின் பெருமைகளை அறுதியிட்டுக் கூற இயலாது.  அவனை விவாதங்கள் மூலம் அறிய இயலாது. தூய்மையாலும், தவத்தாலும், ஒழுக்கத்தாலும் அடைய வேண்டிய பெருமானை வாதப் பிரதிவாதங்களால் அடைதல் என்பது இயலாத காரியம். எனவே காலத்தை விரயம் செய்யாமல் அவனை அடைவதற்கானத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.      

உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும் மற்றும் தன்பால்
மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர் அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே     3231 

      அனைத்துத் தெய்வங்களும், அனைத்து உலகங்களும் மற்றும் எல்லாப் பொருட்களும், குற்றமில்லாத அவனது திருமேனியாகவே உள்ளன. செந்நெல்லும், கரும்பும் ஓங்கி வளர்ந்துள்ள திருக்குருகூரில் குள்ளவடிவ வாமன பிரம்மச்சாரியாக அவதரித்த அந்த எம்பெருமான்தான் வீற்றுள்ளான். அவனே குடக்கூத்தாடிய கண்ணன் ஆவான். இவனுக்கு அடியவராய் இருப்பதே உமக்குப் புகழைத்தரும் என்கிறார் ஆழ்வார்.
      தனது ஐஸ்வர்யத்தில் ஒன்றும் குறையாமல் திருநகரியில் வந்து நின்றருளியவன் பொலிந்துநின்ற பிரானாக காட்சி தருகிறான். இந்திரன், சந்திரன், குபேரன் என்று சொல்லப்படுகிற சகல தேவதாவர்க்கமும், ஸமஸ்த லோகங்களும் மற்றுமுண்டான சேதநாசேதவர்க்கமுமான இவையாகப் பெற்ற எம்பெருமான் திருநகரியில் நின்றருளுகிறான். இப்பெருமான் ‘மறுவின் மூர்த்தி’ என்றும் அழைக்கப்படுகிறான். உலக உயிர்கள் அனைத்தையும் இயக்குபவர் பகவான் ஒருவரே. எனவே அவரை சரணடையுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். 

ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே     3232 

      மணம் வீசும் மகிழ மாலையை மார்பில் அணிந்த மாறன் என்ற சடகோபன், நாவால் பாடிய பாமாலையை கைங்கர்யம் செய்து சுதர்னத்தைக் கையிலேந்திய பகவானை அடைந்தார்.  வளமிக்க திருக்குருகூர் நகரில் அவதாரம் செய்து இவர் விரும்பி இயற்றிய ஆயிரத்துள் இப்பத்தினை தினமும் பக்தியுடன் பாடக்கூடியவர்களுக்கு திரும்பி வராத வைகுந்த வாசம் கிட்டும். பரமபதம் பெறுவது அவர்கள் கையில் உள்ளது என்பது இதன் கருத்தாகும்.
      இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பயனுரைத்த தலைக்கட்டும் பாசுரமாகும். இங்கு எம்பெருமான் கையும் திருவாழியுமான அழகைக்காட்டித் தம்மை ஆட்படுத்திக் கொண்டுள்ளான். எல்லா உயிர்களிடத்தும் ஆத்மாவாக  இருப்பவன் பகவான். இத்தகைய மகத்தான உண்மையை அறிந்து கொள்ளாததால் நாம் பல பிறவிகள் எடுத்து துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறோம். கணக்கற்ற தோல்விகளை சந்திக்கிறோம். எல்லா சக்தியும் நம்மமுள் இருந்தும் சக்தியற்றவர்களாக உள்ளோம்.  அவற்றை நீக்கி நமக்கு ஞானத்தை அளிக்கும் அருமருந்தாக இப்பாசுரங்கள் விளங்குகின்றது.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...