நம்மாழ்வார் திருவாய்மொழி
துவள் இல் மா மணி மாடம்
ஓங்கு
தொலைவில்லிமங்கலம்
தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு
ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்
தாமரைத் தடம் கண்
என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க
நின்று நின்று குமுறுமே 3495
அன்னையர்களே! குற்றமில்லாத பெரிய
ரத்தினங்கள் பதித்த மாட மாளிகைகள் நிறைந்திருக்கும் தொலைவில்லிமங்கலம் என்கின்ற
இரட்டைத் திருப்பதியை தொழநின்ற இப்பராங்குச நாயகியை, அரவிந்தலோசனின் நினைவிலிருந்து
மீட்கலாம் என்ற ஆசையை அறவே விட்டு விடுங்கள்! இவளுடைய நிலைமையை இப்போது சொல்கிறேன்
கேளுங்கள்! அழகிய வெண்ணிறமான பாஞ்சசன்னியம் என்ற சங்கையும், ஒளிமிக்க
சுதர்சனம் என்கின்ற சக்கரத்தையும், தாமரை போன்ற விசாலமான திருக்கண்களையும் பற்றி நாளும் சொல்லுகின்றவளை,
தன் அழகான குவளை மலர்கள்
போன்ற விழிகளைக் கொண்டு அதில் நீர் நிரம்ப ஆங்காங்கே பிரமை பிடித்து நின்று
நின்று ஒன்றும் சொல்லமாட்டாமல் குமுறி அழுகிறாளே! என்று கூறுகிறாள்.
குமுறும் ஓசை விழவு ஒலித்
தொலைவில்லிமங்கலம்
கொண்டுபுக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள்
தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க
நெக்கு ஒசிந்து கரையுமே
3496
ஆரவாரிக்கும் வாத்தியங்கள்
முழங்க திருவிழாக்கள் நடக்கும் தொலைவில்லி மங்கலத்துக்கு, அமுதம் போன்ற
மெல்லிய இனிய வார்த்தை பேசும் இப்பெண்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போனதால், இவள் மீது
உங்களுக்கிருந்த ஆசையை நீங்களே அகற்றிக் கொண்டீர்கள்! அவனை தரிசித்த அந்த
சுகானுபவத்தை மனத்திலிருந்து அகற்ற மாட்டாமல் பிரமை பிடித்து நிற்கிறாள். அதோடு
நெறிந்த வாயோடு தேவபிரான் என்று உதடுகள் துடிக்கச் சொல்கிறாள். கண்களில் நீர் மல்க
நெகிழ்ந்து கரைந்து உருகுகிறாள் என்பது இதன் பொருளாகும்.
தொலைவில்லிமங்கலத்தில் உத்ஸவ
காலத்தில் சென்றால் வேத ஒலியும் விழா ஒலியும் கேட்டவண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட
விழாக்களுக்கு இப்பெண் பிள்ளையை அழைத்துச் சென்றதனால் பெருமான் மீது ஈடுபாடு
அதிகமாகி விட்டதோ? நாமே ஈடுபடச் செய்து பின்பு மீட்கப் பார்த்தால் முடியுமோ?
என்கிறாள். சித்திரத்தில் எழுதி வைத்த பதுமை போன்று ஒன்றும் செய்ய மாட்டாதவளாக
இருக்கிறாள். பெருமானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லியவாறு இருக்கிறாள். இத்தகைய
நிலையை அடைய தலைவி பாக்கியம் செய்துள்ளாள் என்று தாயானவள் புலம்புகிறாள்.
கரை கொள் பைம் பொழில் தண் பணைத்
தொலைவில்லிமங்கலம்
கொண்டுபுக்கு
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்
திசை ஞாலம் தாவி
அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி
நெடும் கண் நீர் மல்க
நிற்குமே.
3497
தாமிரபரணி ஆற்றின் கரையை
தன்வசப்படுத்திக் கொண்டு பரந்த சோலைகளால் சூழப்பட்ட குளிர்ச்சி மிகுந்த மருத
நிலங்களைக் கொண்டுள்ள தொலைவில்லிமங்கலத்துக்கு புகழ்மிக்க இனியமொழி பேசும் இவளை
அழைத்துக் கொண்டு போய் இவளிடம் உங்களுக்குள்ள உரிமையை நீக்கிக் கொண்டீர்கள். அலைவீசும்
பாற்கடலில் ஸ்ரீநிவாஸனாய் கண்வளர்வதையும், திசையெல்லாம் பரவி உலகங்களைத் தாவி அளந்ததையும், பசுக்களை
மேய்த்த லாவண்யத்தையும் பிதற்றிக் கொண்டு தன் நீண்ட கண்களில் நீர் பெருக
நிற்கிறாள் என்று தலைவியின் நிலையைக் கூறுகிறார்.
இப்பெண் பிள்ளையை
தொலைவில்லிமங்கலத்துக்கு அழைத்து சென்றதும் சோலையின் அழகையும், நிலங்களின்
வளமையையும் இவளுக்கும் காட்டத்தான் வேண்டுமோ! தாமிரபரணியின் அழகைக் கண்டு உங்களது
உறவினை அறுத்தெரிந்து அவ்வூரிலேயே ஈடுபட்டு விட்டாள். க்ஷீரசாகர சயனத்தையும், திருவிக்ரம
காட்சியையும், ஆநிரைகள்
மேய்த்த லாவண்யத்தையும், பிதற்றிக் கொண்டு இங்கேயே கிடக்கிறாள். இனி அவளை
அங்கிருந்து அகற்றிக் கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல என்று கூறுகிறாள்.
நிற்கும் நால்மறைவாணர் வாழ்
தொலைவில்லிமங்கலம்
கண்டபின்
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள்
கண்டீர் இவள்
அன்னைமீர்
கற்கும் கல்வி எல்லாம் கருங் கடல்
வண்ணன் கண்ண பிரான்
என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து
உள் மகிழ்ந்து குழையுமே
3498
அன்னையர்களே! நிலைத்து நிற்கும்
வேதங்களிலும், சிறந்து
விளங்கும் வேதியர்கள் வாழும் தொலைவில்லிமங்கலத்தைப் பார்த்த பின்னர் அடக்கமில்லாத
பெண்ணாகிவிட்டாள். எல்லோரும் கேலி பேசுவதைப் பாருங்கள். இவள் பேசும் பேச்செல்லாம் கருமைநிறம் கொண்ட
கண்ணபிரான் என்றே வருகிறது. அவனது அழகு, குணம், பெருமை இவற்றை
நினைத்து நினைத்து மகிழ்ந்து குழைந்து அடக்கமின்றி இருக்கின்றாள் என்று தலைவி
நிலையை எடுத்துரைக்கிறார்.
தொலைவில்லிமங்கலத்திற்கு இவளை
அழைத்துச் சென்றபோது அங்கு வேத பாராயணங்கள் அழகுற நடந்தேறியது. அதைக் கண்டு இந்த
வேதங்களையெல்லாம் நான்முகனுக்கு உபதேசித்தவன் இங்குள்ளான் என்றாள். அதனால் அவன்
மீது காதல் அதிகமானது. அதோடு வேதங்கள் ஓதும் ஸ்ரீவைஷ்ணவர்களிடமும் அன்பு
தழைத்தோங்கியது. இவ்விதம் பகவத் பாகவதர்களிடம் தூய்மையான அன்பு கொண்டுள்ள இவளிடம் சம்சாரிகளான நீங்கள்
இனி உறவு கொண்டு வர முடியுமோ? என்று தோழி கூறுகிறாள்.
குழையும் வாள் முகத்து ஏழையைத்
தொலைவில்லிமங்கலம்
கொண்டுபுக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்
பிரான் இருந்தமை
காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு
அன்று தொட்டும்
மையாந்து இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும்
அத் திசை உற்று
நோக்கியே.
3499
தாய்மார்களே! ஒளிமிகுந்த கனிந்த
முகம் கொண்ட உடன் வசப்படும் இவளைத் தொலைவில்லிமங்கலத்துக்குக் கூட்டிக் கொண்டு
போய், அங்கு
தானே ஆபரணமாய் விளங்கும் ஒளிமிக்க செந்தாமரை போன்ற விழிகளை உடைய தேவப்பிரான்
வீற்றிருந்த அழகைக் காட்டினீர்கள்! அன்று முதல் மழை பெய்தது போல் கண்ணீர் பெருக
சிந்தையுள் பெருமானின் அற்புத குணங்களை நிறைத்து, மயங்கி அவ்வூர் இருக்கும் திசையை உற்று
நோக்கித் தொழுகின்றாள் என்ற கருத்தில் அமைகிறது.
பெருமான் மீது கொண்டுள்ள
இப்பெண்ணின் பக்தியானது ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்திருக்க, நீங்கள்
தொலைவில்லிமங்கலத்திற்கு அழைத்துச் செல்லலாமோ? எப்போதும் ஆபரணங்களை அணிந்து கொண்டு தன் அழகினை
காட்டிக்கொள்ளும் பெருமானுக்கு இத்தலத்தில் செந்தாமரை போன்ற திருக்கண்களுடன்
வீற்றிருக்கும் அழகினைப் பார் பார் என்று நிர்பந்தித்துப் பார்க்கச் சொன்னீர்கள்.
அதனால்தான் இத்தகைய அனர்த்தத்தை சந்திக்கும்படியாகி விட்டது. அவள் கண்ணீருடன்
அத்தலத்துத் திக்கையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்கிறாள் தோழி.
நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு
செந்நெல் ஓங்கு
செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை
வண் தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அத் திசை அல்லால் மறு
நோக்கு இலள் வைகல்
நாள்தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன்
நாமமே இவள் அன்னைமீர்! .3500
அன்னையர்களே! பார்க்கும்
இடமெல்லாம் கரும்பும், செந்நெல்
பயிரும் ஓங்கி செழித்திருக்க, நீர் நிலைகளில்
செந்தாமரை நிறைந்திருக்கும் குளிர்ச்சியான தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ள
தொலைவில்லிமங்கலத்தைப் பார்த்தால் அத்திசையிலிருந்து பார்வையைத் திருப்பி
வேறெதையும் காண்பதில்லை! ஒவ்வொரு நாளும் வாய் ஓயாமல் நீலமணி நிறத்தவன் நாமத்தையே
உச்சரித்துக் கொண்டிருக்கிறாள் என்று தலைவி நிலையில் ஆழ்வார் பாடுகிறார்.
இப்பெண்பிள்ளை என்றும் மோகித்த
நிலையிலேயே இருக்கிறாள். கண்ணத் திறந்து பார்ப்பதில்லை. அவ்விதம் பார்த்தாலும்
மற்ற விஷயங்களைப் பற்றி கவனியாமல் தலத்தையே பார்த்தவண்ணம் உள்ளாள். அவள் எங்கு
பார்த்தாலும் கருப்பஞ்சோலையும், தாமரை மலர்களும் தகழா நின்ற தாமிரபரணி அருகில் உள்ள
தொலைவில்லி மங்கலத்தை நோக்கியவாறு உள்ளாள். வாய் கொடுத்து பேச நினைத்தால் மணி
வண்ணனான பெருமானைப் பற்றியே பேசி வருகிறாள். இவை அனைத்தும் நாங்கள் செய்த தவறுகளே
என்று வருந்துகிறாள் தோழி.
அன்னைமீர் அணி மா மயில் சிறுமான்
இவள் நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்
தொலைவில்லிமங்கலம்
என்று அல்லால்
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்
வண்ணன் மாயம் கொலோ?
அவன்
சின்னமும் திருநாமமும் இவள்
வாயனகள் திருந்தவே. 3501
தாய்மார்களே! அழகிய மயிலைப்
போலும், சிறு
மானைப் போலும் இருக்கும் இவள் நம்மை மீறி
விட்டாள். தொலைவில்லிமங்கலம் என்னும் பெயரையன்றி வேறு எந்த வார்த்தையையும்
கேட்பதில்லை. இது முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியமோ? மேக
நிறத்தவனின் மாயமோ? தெரியவில்லை.
அவன் சின்னங்களையும் திருநாமங்களையும் இவள் வாய் ஓயாது கூறிக் கொண்டிருக்கிறாள்
என்ற கருத்தில் அமைந்துள்ளது.
எம்பெருமானுடைய லக்ஷணங்களும், திருநாமங்களும்
இப்பெண்பிள்ளை வாயில் நுழைந்து புறப்படுவதாலேயே அழகு பெற்றன என்கிறாள் தோழி. மயில்
தோகை போன்ற கூந்தலையுடைய இவள் தோழியான என் வார்த்தையிலும் நம்ப்க்கையற்றுப்
போனாள். இத்தகையவள் தொலைவில்லித்
திருப்பதியைப் பற்றி பேச ஆரம்பித்தால் மட்டும் காது கொடுத்துக் கேட்கிறாள். வேறு
எந்த வார்த்தைகளும் அவள் செவிகளில் விழுவதில்லை. இந்தப் பிறவியில் இவள் எந்தவித சுக்ருதமும்
செய்ததாகத் தெரியவில்லை. இவளுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டது முகில்வண்ணன் மாயமோ?
என்று வியக்கிறாள் தோழி.
திருந்து வேதமும் வேள்வியும்
திரு மா மகளிரும் தாம்
மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை
வண் தொலைவில்லிமங்கலம்
கருந் தடம் கண்ணி கைதொழுத அந் நாள்
தொடங்கி இந் நாள்தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன!
என்று என்றே நைந்து
இரங்குமே 3502
தெளிவான வேத மந்திரங்கள் சொல்லி
ஆகமங்கள் நடத்தும், அந்தணர்கள்
நிறைந்த, மகாலட்சுமி
போன்ற பெண்கள் வாசம் செய்யும் தாமிரபரணியின் வடகரையிலுள்ள
தொலைவில்லிமங்கலத்திற்குச் சென்ற நாள் முதல் இதுவரை, கரிய விசாலமான விழிகளையுடைய இவள்
அரவிந்தலோசனர் முதலிய இறைவனின் நாமங்கள் சொல்லி உடலும் உயிரும் நையும்படி
புலம்புகின்றாள் என்று தோழி கூறுகிறாள்.
தொலைவில்லிமங்கலத் திருப்பதியை
சேவிக்கப்பெற்ற நாள் முதல் இப்பெண்பிள்ளை அத்தலத்துப் பெருமானது கண்ணழகில்
மயங்கித் தளர்ந்து போகிறாள். வேதபாராயணங்களும், யஜ்ஞயாகங்ளும் ஒருசேர, ஸ்ரீதேவி பூதேவி ஒருங்கே இருக்கும்
பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பதியென்று இத்தலத்தின் மகிமையைக் கூறுகிறாள்.
எப்போதும் ஒழுங்குபட விளங்கப் பெற்ற வேதங்கள் இத்தலத்தில் ஓதப்பெறுகின்றன.
பகவானுக்காக புலம்புபவர்களைக் காண்பது அரிது. தலைவி அந்த உன்னத பாக்கியத்தைப்
பெற்றுவிட்டாள் என்று தோழி கூறுகிறாள்.
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள்
கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை
மணிவண்ணவோ! என்று
கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தான் உறை
தொலைவில்லிமங்கலம்
என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்
திருநாமம் கற்றதன்
பின்னையே
3503
இப்பெண்ணானவள் தினமும்
பார்ப்பவர் இரங்கும்படி வாய் குழற, கண்களில் நீர் வழிய, மரங்கள் வருந்தும் வகையாக நீலமணி போன்ற நிறத்தவனே! என்று கதறகின்றாள். குதிரையாய் வந்த அசுரனின்
வாயைப் பிளந்த கேசவன் உறையும் தொலைவில்லிமங்கலம் இருக்கும் திசை நோக்கித் தொழுது
வணங்குகிறாள். அந்த ஊரின் பெயரை
அறிந்ததில் தான் இவ்விதம் நடந்து கொள்கிறாள் என்று தோழி கூறுகிறாள்.
இவளை தொலைவில்லித் திருப்பதிக்குக்
அழைத்துச் சென்று, அவ்வூர் பெருமானின் திருநாமத்தை அவளுக்குச் சொல்லி அவள் அதைக்
கற்றபின் அஃறினைப் பொருளும் கரையும்படி மணிவண்ணா என்று சொல்லி தம் இரு கரத்தையும்
கூப்பித் தொழுகிறாள். அன்னையே! இவை அனைத்தும் உங்களால் தானே வந்தது. இப்போது
புலம்பி என்ன பயன் என்கிறாள். மரங்களும் இவள் நிலையறிந்து இறங்குமாப்போலே
பாவமில்லாத எத்தனையோ பேர்களின் வாயில் இவை புகுந்ததென்று தெரியாது. கம்சனின்
ஏவுதலால் குதிரை வடிவெடுத்த அசுரனை அழித்த கண்ணபிரான் தொலைவில்லிமங்கலத்தில்
நித்யவாசம் செய்கின்றான் என்கிறாள் தலைவி.
பின்னைகொல் நில மா மகள்கொல்
திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயம்கொலோ? இவள் நெடுமால்
என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து
உறையும்
தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த்
திருநாமம் * கேட்பது
சிந்தையே 3504
இவ்விதமாகப் புலம்பும் இவள்
நப்பின்னையோ? பூமிதேவியோ? மகாலட்சுமியோ? இவள் பிறப்பு
என்ன மாயமோ? இவள் ‘திருமால் நெடிதாய் வளர்ந்தான்’’
என்று நின்று கொண்டு கூவுகிறாள். தொலைவில்லிமங்கலத்துக்கு அருள் புரியும்
நோக்கத்தில் முற்பட்டு வந்தவன், ஸ்ரீநிவாசனாக நின்றும், அரவிந்த லோசனனாக வீற்றிருந்தும் இருக்கும் பெருமையை எத்தனை
முறை கேட்டாலும் அலுக்காமல் முகம் மலர்கிறாள். அவ்வூர் திசை நோக்கித் தொழுதவண்ணம்
உள்ளாள் என்ற கருத்தில் அமைகிறது.
பராங்குச நாயகியின் பக்தியைக்
கண்டு இவள் பிராட்டிகளில் ஒருத்தியாய் உள்ளாள் என்கிறார். கிருஷ்ணாவதாரத்து
நப்பின்னையாக இருப்பாளோ? என்று வினவுகிறார். வராக பெருமாளை நினைக்குங்கால் இவள்
பூமி பிராட்டியாக இருப்பாளோ என்று கேட்கிறாள். இராமவதாரத்து சீதையாக இவள் திகழ்கிறாளோ என்கிறாள். இவள் இங்கே வந்து
பிறந்தது என்ன மாயமோ? எந்நேரமும்
‘நெடுமால்’ என்று கூறுகிறாள். முற்பட்டு வந்து அப்பெருமான் நின்றிருந்து உறைகின்ற
தொலைவில்லிமங்கலத்தையே எண்ணித் தலை வணங்குகிறாள். அவன் திருநாமத்தைக் கேட்பதே
அவளது சிந்தனையாக வாழ்கிறாள்.
சிந்தையாலும் சொல்லாலும்
செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை
தாய் என்று அடைந்த
வண் குருகூர் சடகோபன் சொல்
முந்தை
ஆயிரத்துள் இவை தொலை
வில்லிமங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப்
பத்தும் வல்லார்
அடிமைசெய்வார் திருமாலுக்கே 3505
மனத்தாலும் சொல்லாலும், செய்கையாலும்
தேவப்பிரானையே பெற்றோராகத் தஞ்சமடைந்த திருக்குருகூர் சடகோபர் இயற்றிய ஆயிரம் பாடல்களுள், தொலைவில்லிமங்கலத்தைக்
குறிப்பதான இந்தப் பத்துச் பாசுரங்களையும் பாடக் கூடியவர்கள் திருமாலுக்குக்
கைங்கர்யம் செய்யும் பேற்றினை அடைவார்கள் என்பது இதன் கருத்தாகும்.
தலைவி பகவானின் திருநாமங்களைச்
சொல்லி கண்ணீர் பெருக்கியதை இப்பாசுரங்கள் நன்கு உணர்த்துகின்றன. உலக வாழ்வு
நிலையற்றது. உற்றார் உறவினர் நம் துணைக்கு வரமாட்டார்கள். சேர்த்து வைத்த
செல்வமும் நம்மைக் கரை சேர்க்காது. பகவான் ஒருவரே நம்மை கரை சேர்ப்பார். அவரின் திருநாமங்களை
அனுதினமும் சொல்லி வருவதே நாம் கடைத்தேறுவதற்கான உபாயமாகும். இதனைச் சொல்லி வருவதே
மகாபலமாகும். இதனைக் கற்பதனால் பெருமானும் பிராட்டியுமாக சேர்த்தியில் அடிமை
செய்யப் பெறுவார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக