நம்மாழ்வார் திருவாய்மொழி
கேசவா என்று மூன்றெழுத்துடைய பெருமானின் நாமத்தை சொல்லுங்கால் இடரென்று பேர் பெற்றவையெல்லாம் தொலைந்து போகும். விரோதமென்று பேர் பெற்றதெல்லாம் தொலைந்து போகும். இதில் ப்ராரப்த கர்மங்களும், ஸஞ்சித கர்மங்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் நசித்துப் போகும். எப்பொழுதும் நிரந்தரமாகக் கொடுஞ்செயல்களைப் புரிந்துவரும் எமதூதர்கள் நம்மை நெருங்க மாட்டார்கள். மிகவும் கொடிய வேதனைகள் அனுபவித்தாக வேண்டும் என்ற நிலையில் கேசவா! என்ற ஒரு வார்த்தை அவைகளைக் கெடும். கேசவனை அர்ச்சித்தவர்களுக்கு நரக வேதனை என்பது கிடையாது. கரிய வண்டுகள் ரீங்காரம் செய்யும் தடாகங்களையுடைய வயல்கள் சூழ்ந்த திருவனந்தபுரம் என்ற தலத்தில் நஞ்சினைக் கக்கும் நச்சரவமான அனந்தாழ்வான் மீது விருப்பத்தோடு சயனித்திருக்கும் அவனைக் காண இன்றே அங்கு செல்வோம் என்கிறார் ஆழ்வார்.
குருந்த மரங்களும், செருந்தி மரங்களும், புன்னை மரங்களும் நல்ல மணம் வீசும் அழகிய மலர்கள் நிறைந்த தோட்டங்களைக் கொண்டு அவற்றின் அருகே குன்று போல் உள்ள நெடிதுயர்ந்த மாட மாளிகைகள் கொண்டுள்ள திருவனந்தபுரத்தில் மாயவன் பத்மநாபன் அரவின் மேல் பள்ளி கொண்டுள்ளான். அவனது ஒவ்வொரு நாமமும் சொல்லும் நிலையில் ஆயிரம் செயல்களைச் செய்யும் வல்லமை படைத்ததாகும். அவனை நினைத்து நாமங்களைச் சொல்பவர்களுக்கு பரமபதத்தை அடைவது மிகவும் எளிதாகும். இப்பிறப்பு மட்டுமன்றி ஏழ்பிறப்பிலும் சம்சார தோஷத்தில் கட்டுண்டு நாம் துன்பம் கொள்ளும் போது நம்மை அது தீண்டாது காக்கும். ஏழு பிறப்பிலும் துன்பங்கள் உங்களை நெருங்காது என்கிறார். எனவே இன்றே அத்தலம் நோக்கிச் செல்லுங்கள் என்று நம்மை விரைவுபடுத்துகிறார் ஆழ்வார்.
பிரளய காலத்தில்
உலகங்களையெல்லாம் உண்டுமிழ்ந்து படைப்புக் காலத்தில் வெளியிட்டவன். குளிர்ச்சியான
திருவனந்தபுரத்தில் கண்வளர்ந்து அருள்கிறான். அவனுடைய வாகனம் கருடன். அவன் கருடக்
கொடியை உடையவன். விரைவில் அவன்
இருக்குமிடம் சென்றீர்களானால் துக்கங்களும், துக்கத்திற்குக் காரணமானவைகளும் அழியும். பாவங்களும்,
நோய்களும் விரைந்து உங்களை விட்டு அகலும். புண்ணிய பிராப்தி உள்ளவர்களே
இத்தலத்திற்கு வந்து அர்ச்சனை செய்ய முடியும் என்பது இதற்குப் பொருளாகும். நாம்
அறிந்ததைச் சொன்னோம் என்கிறார் ஆழ்வார். இந்த இயல்பினை அறியாதவர்களுக்கும்
நெஞ்சில் படும்படி உரைக்கின்றார். பிரதிபந்தங்கள் தொலைவதற்கு இன்ன திருநாமமே சொல்ல
வேண்டுமென்ற நிர்ப்பந்தமில்லை. ‘பேராயிரமுடையபெம்மான்’ என்று ஆழ்வார்களும்
குறிப்பிடுகின்றனர். பகவானின் ஒரு நாமமே நம்முடைய எல்லாத் துன்பங்களையும்
அகற்றிவிடும். அவனது ஆயிரம் திருப்பெயர்களில் ஒன்றையாவது சொல்லி கடைத்தேறப்
பாருங்கள் என்கிறார் ஆழ்வார்.
விசாலமான நீர்பரப்பையுடைய கடல் சூழ்ந்த, மணம் கமழும் அழகிய சோலைகளும், வளமான கழனிகளும் நிறைந்த திருவனந்தபுரத்தில் விருப்பத்தோடு வந்து உறைகின்ற பெருமானை முறைப்படி மலர்களால் அர்ச்சனை செய்து, மனதில் பக்தியுடன் பூஜை செய்பவர்கள் நோயும், முன்வினைகளும் தீர்ந்து புண்ணியம் செய்தவர்களாவார்கள். திருநாட்டில் செய்யும் நித்ய பூஜையைவிட தாமரை பூத்தாற்போல் இத்தலத்தில் செய்யும் பூஜையானது புகழைச் சேர்க்கும் என்கிறார். இவ்விஷயத்தை நாம் உங்களுக்குத் தீர்மானமாக சொல்கிறோம். திருவனந்தபுரம் சென்று பகவானுக்குத் தொண்டு புரிவது என்பது எத்தகைய அரிய செயலாகும்? இந்த பாக்கியத்தைச் செய்தவர்கள் கொண்டாடப்படுவார்கள். இத்தகைய பாக்கியத்தைத் தயங்காமல் வெளி உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள். அதனால் பலரும் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்து பயன் பெறுவார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
செழித்து வளர்ந்துள்ள அழகியத் தோட்டங்கள் நிறைந்த திருவனந்தபுரத்தில் பெருமான் பத்மநாப ஸ்வாமியாக பள்ளி கொண்டிருக்கிறார். அப்பெருமானது திருவடித் தாமரைகளை அணுகுவோர் வானத்துத் தேவர்களாவார்கள். பக்தியுடன் நல்ல நீர்கொண்டு திருமஞ்சனமாட்டி, நல்மலர்களால் அர்ச்சனை செய்து, தந்தையான அவரது திருநாமங்களை நாளும் சிந்தனை செய்யுங்கள். அவ்விதம் செய்தால் புண்ணியம் சேர்ந்து கொடிய இப்பிறவி என்னும் சங்கிலியை அறுக்க முடியும். மேலும் அத்தகையவர்கள் நித்யசூரிகளாகத் திகழ்வார்கள் என்கிறார் அழியக்கூடிய செல்வங்களைத் தேடி ஓடுவதைவிட பிறவிப்பிணி நீங்கும் வரத்தைப் பெருமானிடம் நாம் யாசித்துப் பெறவேண்டும். பிறவிகள் தோறும் துன்பப்படும் சிற்றின்பம் நிறைந்த இத்தகைய உலக வாழ்க்கைத் தேவைதானா என்று வினவுகிறார் ஆழ்வார்.
நம்முடையவர்களே! குமரக்கடவுளின் தந்தையான சிவபெருமானுடைய பிரம்மஹத்தி தோஷத்தில் இன்னல்கள் பல அனுபவித்த போது அதைப் போக்கியவர் கோவிந்தன். அவர் தேவர்கள் என்கின்ற பெயருடன் உலாவி வருபவர்களுக்கெல்லாம் முதல்வனானவர்; திருவனந்தபுரத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். அங்கே இந்திரன் தலைமையில் விண்ணவர்களெல்லாம் பிரம்மன் முதலானோர் தாமிருக்கும் திருநாட்டினை விட்டுவிட்டு இங்கு வந்து அர்ச்சனை செய்கின்றனர். மூன்று வகைப்பட்ட அதிகாரிகள் இங்கு வந்து மூன்று வாசல்களில் வழியாக எம்பெருமானை தரிசிக்கிறார்கள். முக்தர்கள் திருமுகத்தின் நேராக உள்ள வாயிலின் முன் நின்றும், அரன், அயன் போன்ற தேவர்கள் திருநாபிக்கு நேராக உள்ள வாயிலிலும், நம்போன்றோர்கள் கிடைத்தற்கரிய திருவடிக்கு நேரே உள்ள வாசலில் தரிசித்தல் வேண்டும். அந்தப் புண்ணியத் தலத்திற்கு நாமும் போய்ச் சேர வேண்டும். உங்களுக்கெல்லாம் பந்துக்களாக உள்ளதால் அடியேன் சொல்வதைக் கேளுங்கள் என்கிறார்.
நீர்நிலைகளில் பெரிய வாளை மீன்கள் துள்ளிப் பாயும் செழுமையான வயல்கள் நிறைந்த திருவனந்தபுரத்தில், நஞ்சினைக் கக்கும் பாம்பணை மேல் பள்ளி கொண்டு நம்மைக் காக்கும் என் பரந்தாமன், பிரளய காலத்தில் அனைத்தையும் வயிற்றில் உண்டு வைத்துத் துடைத்துவிட்டாற்போல் ஆக்கிவிட்டான். அத்தகையவனே பிரளயம் முடிந்தவுடன் உற்பத்திக் காலத்தில் உலகங்களையும், தெய்வங்களையும், அனைத்து உயிர்களையும் மற்ற எல்லாவற்றையும் படைத்தான். அவன் குடிகொண்டுள்ள கோயிலின் வாசலைப் பெருக்கி, நீர் தெளித்து நன்கு மெழுகி மாக்கோலமிட்டால் நம்மைச் சேர்ந்துள்ள கொடிய பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்ளலாம். பாவ மூட்டைகளே நம் வாழ்வில் அனைத்துத் துன்பங்களையும் தருகின்றன. எனவே அனைவரும் இத்தலத்திற்கு வந்து பிறவித்தளைகளை அழித்து விடுங்கள் என்கிறார் ஆழ்வார்.
நாட்டினை தன் அழகால் வெருட்டித் திரிகின்ற மன்மதனைப் பெற்ற தந்தையான பத்மநாபன் வாழும் இடமாகக் கொண்டது எழிலான திருவனந்தபுரம் என்கிறார்கள். நம்மவர்களாக உள்ள பக்தர்களே! நீங்கள் புரிந்து கொள்ளும்படி சொல்கிறேன். படங்களையுடைய ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட அனந்தபத்மநாபனின் திருப்பாதங்களைத் தரிசிக்க திருவனந்தபுரத்தில் திருக்கண் வளர்ந்தருள்கின்ற சர்வேஸ்ரனின் ஊருக்கு நடந்திடுங்கள்! அப்படி செய்தால் நம்மால் போக்க முடியாத கடுமையான பாவங்களும் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்கிறார். ‘பரமபதத்தில் ஒரு புதுமை செய்ய ஒண்ணாது அன்றோ அங்குத்தைக் காட்டிலும் இங்குத்தைக்குத் தன்னேற்றம் இருக்கிறபடி’ என்பது வியாக்யானப் பொருளாகும். நம்முடைய துன்பங்களுக்கு நாம் முற்பிறவியில் புரிந்துள்ள கணக்கற்ற பாவங்களே காரணமாகும். நம்மை வலுவிழக்கச் செய்வது இப்பாவங்களே. இதனைப் போக்க போலித்தனமற்ற பக்தியை பெருமானிடம் செலுத்தி புண்ணியச் செயல்களைச் செய்ய வேண்டும். இது ஒன்றே உய்யும் வழி என்ற கருத்தை வலியுறுத்துகிறார் ஆழ்வார்.
நாம் உமக்கு அறியும்படி சொன்ன இறுதிக் காலமும் நெருங்கிவிட்டது. செழிப்பான சோலைகள் நிறைந்த, நம்மைக் காக்கவல்ல, திருவனந்தபுரம் திவ்யத் தலத்திற்குச் சென்று நல்ல மணமுள்ள மலர்களை, பறவைகள் எச்சமிடாத, மூளியானவையாக இல்லாததாகப் பார்த்துச் சேகரித்துக்கொண்டு வாமனனாகத் தோன்றிய அனந்தபத்மநாபனின் செந்தமரைத் திருவடிகளில் சமர்ப்பித்து, தூபமிட்டுப் போற்றி வணங்குங்கள். இதனால் சௌக்கியமாக வாழ முடியும் என்பதை அனுபவத்தில் காண்பீர்கள் என்கிறார் ஆழ்வார். முன்பாசுரத்தில் ப்ராப்திகாலம் தெரியவில்லையே என்று தடுமாறினார். இப்போது மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று அறிந்து கொண்டார். மகாபாரதத்தில் பீஷ்மர் மரணதருவாயில் இருக்கும்போது அவரிடமிருந்து அரிய தருமசூக்ஷ்மங்களை கேட்டறியுமாறு தருமருக்கு கண்ணபிரான் கூறினார். அதுபோன்று ஆழ்வாரும் பீஷ்மர் நிலையில் தன்னை இருத்திக்கொண்டு என் காலத்தில் நான் கூறுவதைக் கேட்டு உய்வடையுங்கள் என்கிறார்.
திருமகளின் மணாளனே! என்று சொன்ன அளவில் பாவங்களெல்லாம் வேரோடு அறுந்துவிடும். பொன்னாலான மதில்களைக் கொண்ட திருவனந்தபுரத்தில் அருள்புரியும் அனந்தபத்மநாபனைத் தினமும் சந்தன காப்பிட்டு, நல்ல செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, தூப, தீபங்களைக் காட்டி பூஜை செய்பவர்கள் முடிவில்லாத புகழினை அடைவார்கள் என்கிறார். அந்திமக்காலத்தில் தாய் தந்தையர் பெயரைச் சொல்லி அவரை நினைத்து நாம் ஈடுபடுத்திக்கொண்டிருந்தால் அக்காலத்தில் ஏற்படும் மனத்துன்பங்கள் தன்னிடையே மாய்ந்து போகும். அந்திமக்காலத்தில் நம் நினைவுகள் அற்றுப் போகும் நிலையில் இப்போதிருந்தே பெருமானை சேவித்து நற்செயல்களைப் புரிந்த நிலையில் அக்காலத்தில் நல்ல நினைவுகளை நாம் பெறலாம் எனபதும் இப்பாடலின் ஆழ்ந்த கருத்தாகும். இறுதிக் காலத்தில் மற்றவர்களும் நல்வழி பெறவேண்டும் என்ற ஆழ்வாரின் திருவுள்ளத்தில் எழுந்த இப்பாசுரத்தின் மூலம் நமக்கெல்லாம் நல்வழிக் காட்டியுள்ளார்.
அழிவில்லாத எல்லையற்ற
பெருமையினைக் கொண்ட எழில் பொங்கும் திருவனந்தபுரத்தில் பைந்நாகத்தின் மேல்
அரிதுயிலில் சயனிக்கும் ஆதிமூலத்தை நித்யவிபூதியில், கொத்துக் கொத்தாகப் பூக்கும் அழகிய
மலர்வனங்களைக் கொண்ட திருக்கூருகூரில் அவதரித்த சடகோபர் ஆயிரம்
பாசுரங்களால் பெருமானைப் போற்றித் தொழுதார். அவற்றுள் இந்தப் பத்துப் பாமாலைகளையும்
படிப்பவர்கள் உயிர் பிரிந்தபின் தேவலோகம் சென்று பசுமையான வளையல்கள் அணிந்த
மூங்கில் போன்ற தோள்களையுடைய தேவ மங்கையரால் நன்கு உபசரிக்கப்படுவர். இவர்கள்
நித்யசூரிகளைவிட மேம்பட்டவர்களாத் திகழ்வார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். முன்
பாசுரங்களில் சுவர்க்க போகங்களைப் பழித்துப் பேசிய ஆழ்வார், ஒரு
பாசுரத்தில் ‘நிதியும் நற்சுண்ணமும் நற்குட விளக்கும் மதிமுக மடந்தையர்
ஏந்தினர் வருதே’ என்று கூறிய ஆழ்வார் இப்பாசுரத்தில் பெண்மையைப் போற்றுவதாக
வியாக்யானம் கூறுகிறது.
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக