பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
கண்ணபிரானை வஞ்சனையால் கொல்வதற்காக கொடிய கம்சனால் ஏவி விடப்பட்ட, கொடிய உருவத்துடன் தாயுருவம் கொண்டு அன்னை போன்று வந்த பூதனையைக் கொல்லும்படி விஷத்தோடு கூடிய அவளது தனத்தில் வாய் வைத்துப் பாலோடு உறிஞ்சி அவள் உயிரையும் குடித்தவன் கண்ணன். நீலரத்தின மணி போன்ற திருமேனியை உடைய வல்லானை, மணிவண்ணனைத் தேடுகின்றவர்களே! அவன் பல்லாயிரம் தேவியரோடு, கடல் அலைகள் வீசும் துவாரகையில் அன்பினால் ஆட்பட்டவர்கள் அனைவருடன் சூழ்ந்திருக்க சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தபோது பார்த்தவர்கள் பலருண்டு. கொடிய நரகாசுரனால் சிறை வைக்கப்பட்ட பதினாறாயிரம் கந்தர்வாதி கன்னிகைகளை மீட்டு அவர்களை மணந்து ஒன்றாக வீற்றிருந்த கண்ணனை கண்டீர்களா? என்று ஆழ்வார் கேட்பது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது.
அலையெறியாய் நின்றுள்ள கடலால் சூழப்பட்ட திண்மையான மதில்களால் சூழப்பட்ட துவரகாபுரியின் அரசனும், தன் மைத்துனர்களான பஞ்ச பாண்டவர்களின் நலனுக்காக பக்கபலமாக நின்று துரியோதனாதியர்களை அழித்து அவன் சூதினால் கவர்ந்து கொண்ட இராஜ்ஜியத்தை அவர்களுக்கு மீட்டுக் கொடுத்தவனும் சகல பாவங்களைப் போக்குபவனுமான புருஷோத்தமன் திருக்கண்டங்கடியில் எழுந்தருளியுள்ளான். வேள்வித் தூண்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுத் தனது இரு கரைகைகளிலும் சமமாக யாகம் செய்யும்போது கொழுந்துவிட்டு எரியும் அக்னியில் போடப்படும் மூலிகைகள், நெய் போன்றவற்றால் புகை சூழ்ந்து மணம் வீசும் திருக்கண்டங்கடி என்னும் திவ்யத்தலமாகும் என்று இத்தலத்தின் பெருமையைக் எடுத்துக் கூறுகிறார் ஆழ்வார்.
வடதிசையிலுள்ள மதுரையும், புனிதமே வடிவான சாளக்கிராமமும், வைகுண்டமும், துவாரகையும், திருஅயோத்தியும், இடமுடைத்தாயிருந்துள்ள ஸ்ரீபத்ரிகாச்ரமம் போன்றவைகளை பெருமான் வாசஸ்தலமாக கொண்டுள்ளவனாய் உள்ளது. எமக்குப் பெருமானாக உள்ள புருஷோத்தமனாய்த் திகழ்கின்ற ஸ்வாமியின் இருப்பிடமானது, மந்திரம் முதலான பெரிய மலைகளானவை தொடர்ந்து அதிரவும், பூமியானது பிளவுபட்டு இடிந்து விழவும், மாங்கனிகளுடைய தலையளவும் கிளம்பிக் கரையில் நிற்கின்ற மரங்களில் மோதி முறித்தும், எதற்காகவும் எள்ளளவும் கலங்காத கடலும்கூட கலங்கும்படியாக வேகமாய் கொண்டு இழியா நின்றுள்ள கங்கைநதி தீரத்தில் கண்டமென்னும் கடிநகர் திகழ்கின்றது என்ற கருத்தில் அமைகின்றது.
பதினாறாயிரம்
தேவியர் பணிபுரிய துவாரகையில் அவர்களுக்கு கணவராக வீற்றிருக்கும் மணவாளன் வாழும்
கோயில் திருவரங்கமாகும். அங்கு மலர்ந்துள்ள தாமரை மலரானது, பரந்தாமனின் நாபியில்
தோன்றிய தாமரை மலரைப் பார்த்து கர்வம்
கொள்வது போல் உள்ளன. அதைப் பார்த்து மற்ற தாமரை மலர்களும் தானும் அரங்கனின்
நாபியில் உள்ளது போன்று நினைக்கும்.
சூதாடுபவர்கள், களவு தொழில் மேற்கொள்பவர்கள், மது அருந்திக் கொண்டே
இருப்பவர்கள் மற்றும் கேளிக்கைகளில் பொழுதைப் போக்குபவர்கள் எப்போதும் அவர்களது
செயல்களிலேயே இருந்து உழன்று வருவார்கள். அவர்கள் தங்களது செயல்களில் கொண்டுள்ள
பற்றுதலே காரணமாகும். அதுபோன்று நாம் பகவானைப் பற்றி எப்போதும் நினைத்துக்
கொண்டும், பாடிக்கொண்டும் உள்ள சத்சங்கத்தில் நெருங்கி
சேர்ந்து கொண்டால் நமக்கும் பகவானின் பற்றுதல் அதிகரிக்கும். திருவரங்கத்தில்
பூக்கும் தாமரை மலர்கள் அனைத்தும் தானும் அரங்கனின் நாபியில் பூத்தது போன்ற
எண்ணத்தில் இருக்கும் என்று ஆழ்வார் கற்பனையாகக் கூறுகிறார்.
மிகப் பெரிய
மலை உச்சியில் தெளிவாய் நாட்டப்பட்டக் கொடியை எல்லோரும் சுலபமாகப் பார்ப்பார்கள்.
என் இதயத்தில் தீப ஒளி போல் விளங்கும் ஒளியுடைய நம்பியே! வடதிசையில் உள்ள துவாரகையும், வைகுண்டமும், திருப்பாற்கடலும் இவையெல்லாம் ஒதுக்கிவிட்டு
என் இதயத்தில் வசிக்க இடம் செய்து கொண்ட உன் அருளை என்ன சொல்லிப் போற்றுவது? என்று
ஆழ்வார் நெக்குருகிப் பாடுகிறார்.
இப்பாசுரத்தில்
தீப ஒளியாகப் பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகிறார் ஆழ்வார். அந்த ஒளியைக்
காண்பது உலகத்தவரின் இலட்சியமாகும். அந்த இலட்சியத்தை தான் அடைந்து விட்டதாகக்
கூறுகிறார். மலையுச்சியின் கொடி போன்று துவாரகை, வைகுண்டம்,
திருப்பாற்கடல் ஆகியவை விளங்குவதாக உள்ளன என்கிறார். அவர் இங்கு
எழுந்தருளியுள்ளதை நாம் காண முடியாது, ஆனால் உணர முடியும்.
எனவே நம் உள்ளத்தில் உள்ள பரம்பொருளின் கூறான தீப ஒளியை கிடைத்தற்கரிய இந்த
மானிடப் பிறவி மூலம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஆண்டாள் நாச்சியார் திருமொழி
மன்மதனே!
சுவரில் உன் பெயரை எழுதினேன். அத்துடன் சுறாமீன்கள் எழுதப்பட்ட நல்ல துகில்
கொடிகளையும், குதிரைகளையும், சாமரம் வீசும் பெண்களையும் கரும்பு
வில்லையும் உனக்களித்தேன். இளமைப் பருவம் முதல் இன்று வரை துவாரகாநாதனுக்கே என் தனத்தையும்
தேகத்தை அர்ப்பணித்து வணங்கினேன். என் ஆற்றாமையைப் புரிந்து கொண்டு விரைவாக என்னை
அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறாள்.
ஆயர்ப்பாடிப்
பெண்கள் கண்ணன் மீது கொண்ட தூய்மையான அன்பைப் பெரியாழ்வார் பல இடங்களில் நமக்குத்
தெரிவிக்கிறார். அதுபோல் ஆண்டாளும் இதனை பாசுரவாயிலாக நமக்குத் தெரிவிக்கிறாள்.
ஆண் பெண் என்ற இருதரப்பிற்கும் ஆத்மா என்பது ஒப்பற்ற பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.
நாம் அனைவரும் அந்த இலட்சியத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். ஆண்டாள் கொண்ட
விரகதாபம் வெறும் உடல் உணர்ச்சியைக் குறிப்பதாகக் கொள்ளக் கூடாது. இறைவனிடம்
ஒருசேர சங்கமிக்கும் பேரானந்தத்தை ஆண்டாள் விரும்புகிறாள் என்று கருத வேண்டும்.
தன் மீது அன்பை
ஆவலோடு பெருவாரியாகச் செலுத்துபவர்கள் அன்றி மற்ற எந்தவொரு இடத்திலும்
பொருந்தாதவனாக உள்ளான் கண்ணன். அழகிய மலர்களால் ஏற்படும் நறுமணம் மிகுந்த
துவாரகையின் அரசனாகத் திகழ்கின்றான். பசுக்கூட்டங்களையும் கன்றுகளையும் நன்கு
மேய்த்து விளையாடும் அந்த கோபாலன் இங்கு என்னிடம் வரும்போது மனமே! நீ எவ்வித
பிணக்கும். பாசாங்கும் செய்யாமல் இணக்கமாக அவனுடன் கூடிடுவாயாக! என்ற பொருளில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
அன்பிற்கு
அடிபணிபவன் கண்ணன் என்பதனை ஆண்டாள் இங்கு குறிப்பிடுகிறாள். பரம ஏழையான குசேலனிடம்
எத்தகைய அன்பு வைத்திருந்தான் என்பதை உலகமே அறியும். பாண்டவர்களின் அன்பினை ஏற்று
அவர்களின் போருக்கு உறுதுணையாக இருந்தான். அது போன்று அன்பில்லாத துரியோதனனின்
அழைப்பை ஏற்காமல் விதுரனின் இல்லத்தில் தங்கி உணவருந்தினான். கோகுலத்து மக்களின்
துயரினைப் போக்க கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து பெருமழையிலிருந்து காத்தான்.
இத்தகைய பரமதயாள மனத்தினைக் கொண்ட அவனைப் பணிந்திடு மனமே! என்கிறாள்.
கரிய
நிறத்திலுள்ள கரிச்சான் குருவிக்கூட்டங்கள் விடியற் காலையில் எழுந்திருந்து
திருமாலிருஞ்சோலைப் பெருமான், துவாரகாபதி ஆளும் கண்ணன் ஊழிக் காலத்தில் ஆலிலையில்
யோக நித்திரை செய்தவனான மகாவிஷ்ணு வருவதாகச் சொல்கிறதே! ஒருவேளை சதா அவன் நினைவாகவே இருப்பதால்
கரிக்குருவி பாடுவதாக மருள்கிறேனோ? பறவையின் பேச்சு
உண்மையாக இருக்குமா? என்று வினா எழுப்புகிறாள் ஆண்டாள்.
ஆண்டாள்
எப்போதும் பகவானின் நினைவாகவே தாம் இருப்பதாகக் கூறுகிறாள். மாலிருஞ்சோலை பகவான்
வருவதாக குருவிகள் கூறுகிறதே என்று நினைக்கிறாள். ஊழிகாலத்தில் ஆலிலையில் வாசம்
செய்தவன் இங்கு வருகிறான். நான் படும் துன்பத்தைக் கண்டு என் துயர் போக்க
வருகிறானா? உயிர் இருந்தும் இல்லாதவள் போலிருக்கும் எனக்கு உயிர்
கொடுக்க வருகிறானா? நாளும் அவனை நினைப்பதால் பறவையின் பேச்சு
உண்மைதானோ? இவ்வாறு பலவாறு எண்ணி அவன் வந்தால் எவ்வாறு
வரவேற்பது என்பது குறித்து நினைக்கிறாள் ஆண்டாள்.
நான் வளர்த்த கிளி கூட்டிலிருந்தபடியே கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும். இது என்னுடைய விரக தாபத்தை அதிகப்படுத்தியதால் கிளியை பட்டினிப் போட்டேன். கிளி தனது துன்பம் தாங்காமல் உலகளந்த பெருமானே! என்று உரக்கக் கூவுகிறது. கிளிக்கே இத்தனை பக்தி இருக்கும்போது நீங்கள் அவனப் பழித்து அந்தப் பழியை ஏற்கலாமா? இதனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகள் அழியும். உயர்ந்த மாடங்கள் சூழ்ந்திருக்கும் துவாரகையில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தீர்களேயானால் நீங்கள் தலை நிமிர்ந்து வாழலாம் என்று கூறுகிறாள் ஆண்டாள். இப்பாசுரத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, தெய்வ நிந்தனை நம்மைத் துன்பத்தில் சேர்க்குமேயன்றி ஒரு நாளும் இன்பத்தைத் தராது என்பது இங்கு உணர்த்தப்படுகிறது. தெய்வ பக்தியால் நமக்கு புண்ணியம் சேர்கிறது. அதனால் நம் பலவிதமாக மேம்பட்டு மகிழ்வுடன் வாழ்கிறோம் என்பது இதன் கருத்தாக அமைகிறது.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பேய் மகளான
பூதனை மாளும்படி விஷப்பாலோடு உயிரையும் உறிஞ்சியவன். புராதனப் பெருமை வாய்ந்த
துவாரகையின் அரசன். பசுக்களின் பின்னே இலையால் குழல் செய்து ஊதிச் சென்றவன்.
கோபியரின் வளைத் திரள்களை விளையாட்டாக அபகரித்தவன். அத்தகையவனின் திருவடிகள்
சரண்புக விரும்புகிறவர்களே! மலையில் உள்ள மணிகளை அடித்து வந்து உலகத்தாரை
கடைத்தேற்ற வளம் கொடுக்கும் காவிரியை உடைய, நாட்டுக்கு அரணாய், வில்லைக் கையிலே கொண்டிருக்கும் செங்கணாச் சோழன் சேர்ந்திருக்கும் கோயிலான
திருநறையூர் மணிமாடத்தைச் சென்றடைவீர்களாக! என்கிறார் ஆழ்வார்.
பசுக்களை
மேய்த்தவன் துவாரகைக்கு அரசனாக இருந்து மக்களைக் காத்து வருகிறான். கோபியர்களின்
வளையல்களை அபகரித்த பெருமான் கீதையை போதித்துள்ளார். இலையில் குழலூதி கன்றின் பின்
சென்றவர் பாஞ்ச சன்னியத்தைத் தாங்கி பாரதப் போரை அதிர வைத்தவராவார். இவ்விதம் குழந்தையாகவும், சிறு பாலகனாகவும், பொறுப்பான அரசனாகவும் பல லீலைகள்
புரிந்து நல்லவர்களை வாழ் வைத்துள்ளார். இத்தகைய பெருமானான ஸ்ரீகிருஷ்ணன்
திருநறையூரில் வாசம் செய்கிறார்.
மிகுந்த
காவலையுடைய நீண்ட சோலைகளைக் கொண்ட, காண்டவமென்னும் வனத்தை
அக்னிக்கு இரையாக்கியவனை, திருமெய்யத்தில் கோயில்
கொண்டிருக்கும் பகவானை, தேன் நிறைந்த கற்பக மரத்தை, சத்தியபாமா பிராட்டிக்காக துவாரகையில் கொண்டு வந்து நட்ட ஸ்ரீகிருஷ்ணனைத்
தேடியலைந்து திருநறையூரில் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
அக்னி
பகவானின் பசியைத் தீரக்க எம்பெருமான்
காண்டவ வனத்தை அழிக்கும்படி சொன்னார். அதன் காரணமாக அக்னியின் பசி அடங்கியது
அதேபோன்று நமது தாகத்தையும் பகவான் தணிக்கக் கூடியவர். சத்யபாமாவுக்காக கற்பக
மரத்தை தேவலோகத்திலிருந்து கொண்டு
வந்தார். இதையறிந்த இந்திராணி அதனை
இந்திரனிடம் சொல்லி தடுத்தார். அதனால் இந்திரன் போர் தொடுத்து வந்தான். ஆனால்
பகவானின் தொடர்ந்த தாக்குதலால் நிலைகுலைந்து போய் இந்திரன் தோற்றுப் போனான்.
அத்தகையவன் திருநறையூரில் வாசம் கொண்டுள்ளான். அவனை தரிசிக்க வாருங்கள் என்று
கூறுகிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி
அன்னை என் செய்யிலென்? ஊர் என் சொல்லில்
என்? தோழியீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை’
அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன்
வலையுளே. 3260
தோழியர்களே!
தேவர்களின் தலைவன் வலிமையாகக் கட்டப் பட்ட துவாரகையின் மன்னன், நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ணனின் வலைக்குள் வீழ்ந்து விட்டேன். ஆகவே
என் தாய் என்ன செய்தால் என்ன? என்னிடம் நீங்கள் ஆசை வைக்க
வேண்டாம் என்று தலைவி தோழியர்களுக்குக் கூறுவது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது.
தலைவியானவள்
தான் படும் துன்பத்தினை விரக்தியுடன் தன் தோழியிடம் கூறுகிறாள். பகவானுடைய கருணை
என்னும் வலையில் நான் விழுந்து விட்டேன். தருமத்தை நிலைநிறுத்தும் பராக்கிரமம்
என்னும் அவரது குணத்தில் நான் வயப்பட்டு அவரது வலையில் விழுந்து விட்டேன்.
அசுரர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் அவரது தயாள குணத்தைக் கண்டு அதில் நான்
விழுந்து விட்டேன். உலகளந்த அந்த மாயவனின் வலையில் நான் சிக்குண்டுக் கிடக்கிறேன்.
இதனால் ஆண்டவனுக்கே நான் பரிபூரணமாகச் சொந்தமாகிவிட்டேன். ஆகவே தோழிகளே! என் மீது
நீங்கள் எவ்வித ஆசையும் வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறாள் தலைவி.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக