திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திரு நைமிசாரண்யத்தில் குடி கொண்டுள்ள என் இறைவனே! ஒளியுள்ள புன்னகை, சிறிய நெற்றி பெரிய தோள்களுடைய பெண்களின் தனங்களையே சிறந்த பயனெனப் போற்றினேன். அதைக் குற்றமாக எண்ணிப் பிறப்பை நோயாகக் கருதி, அதனை அறுத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாமலிருந்தேன். பிறகு நினைத்துப் பார்த்துப் பெண்களிடம் அடைந்த உடல்சுகத்தை எண்ணி வெட்கப்பட்டு நைமி சாரண்யத்தில் உள்ள பெருமானின் திருவடியை அடைந்தேன்! என்கிறார் ஆழ்வார். பெண்கள் மீதுள்ள மோகம் நிலையற்றது! பெண்ணாசை உள்ளவரை ஒரு மனிதன் பிறவிக்கடலை கடக்க முடியாது. பிறப்பு மட்டும் நிரந்தர நோய். அதனைக் கடந்து நைமிசாரண்யப் பெருமானை அடைவதே மனிதனின் முக்கிய இலக்காகும் என்ற கருத்தினை இங்கு வலியுறுத்துகிறார்.
நைமிசாரண்யத்தில் உள்ள என் தந்தையே! சிலம்புகளை அணிந்த அழகிய கால்களையுடைய, கறுத்த நீண்ட கண்களையுடைய பெண்களிடம் மையல் கொண்டு மனதைச் செலுத்தினேன். தருமங்களை மறந்து இன்பமாக வாழ்நாளைக் கழித்தேன். இந்திரியங்கள் வழியாக அனுபவிக்கும் போகங்களில் என்னை மென்மேலும் ஆட்படுத்திக் கொண்டு என் வாழ்நாளை வீணடித்தேன். போதும், போதும் என்று சொல்லும்படி எனக்கு வேண்டியதை அளித்துள்ள பெருமானே! ஆச்சர்யமான செய்கைகளைச் செய்யும் எனது ஸ்வாமியே! தேவர்கள் அன்புடன் போற்றி வணங்கும் நின் திருவடிகளைப் பற்றி இன்று வந்து சேர்ந்தேன். மோகத்தைக் கொண்டு வாழ்பவர்கள் பின்னாளில் துன்பம் கொள்கிறார்கள். இத்தகைய மோகத்தினால் பஞ்சமா பாதங்கள் செய்யும் அளவிற்கு மனிதன் துணிகிறான். எனவே இதனை அறவே அழித்து விடுமாறு நமக்குத் தெரிவிக்கிறார்.
கடலிலேயுள்ள வெளுத்த அலைகள் அதிரும்படியாக தேவர்களுக்காக பாற்கடலைக் கடைந்தவனே! எம்பெருமானே! அதிகமாக சூதாடியும், துணிந்து களவுத் தொழில் செய்தும், சுருண்ட கூந்தலைக் கொண்ட பெண்களிடம் பலவாறு ஆசை கொண்டு கண்டபடி திரிந்தும் இருந்த நான் இறுதியில் எமலோகத்தில் ஏற்படும் மரணவேதனையை எண்ணி நடுங்கியவனாய் நைமிசாரண்யத்தில் எழுந்தருளியுள்ள உன் திருப்பாதங்களை வந்தடைந்தேன். பாற்கடலை கடைந்தது போன்று நம் மனமாகிய கடலை கடைந்தெடுக்க வேண்டும். அப்போது பல்வேறு மோகங்கள் நஞ்சாக வெளிப்படும். பிறகே அமிர்தமென்னும் தெளிவு நம் மனத்தில் பிறக்கும். பெண் மோகம் மரண காலத்தில் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும். எனவே இதை விடுத்து நைமிசாரண்யப் பெருமானைச் சரண் அடைந்து உய்வோம்! என்கிறார் ஆழ்வார்.
நைமிசாரண்யத்தில் கோயில் கொண்டுள்ள என் தலைவனே! காக்கும் நம்பிக்கைக்குரியவனே! மணம் வீசும் கூந்தலையுடைய தனது மனைவியை விட்டுப் பிறரது மனைவி, பொருள் இவற்றை விரும்புபவர் மடிந்த பிறகு எம தூதர்கள் பிடித்துக் கட்டி வைத்து அடித்து, தீப்பொறி வீசும் செம்பினால் செய்யப்பட்ட பெண் பிரதிமையைப் பாவீ.... அணைத்துக் கொள் என்று கூறுவர். அதற்காகவே அஞ்சி உனது திருப்பாதக் கமலங்களை நான் வந்து சரண் அடைகிறேன் என்கிறார் ஆழ்வார். பிற பெண்களை விரும்பும் நபர்களுக்கும் ஏற்படும் கதி பற்றி ஆழ்வார் கூறுகிறார். நம் மனம் என்பது கோயிலாகும். அதை பெண் மோகம் என்ற அசுத்தத்தை இட்டால் துன்பமே நேரும். அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை ஏற்படுத்தி நம்மை நரக வேதனையில் தள்ளிவிடும் என்கிறார்.
திரு நைமிசாரண்யத்துள் எழுந்தருளியிருக்கும் பெருமானே! வறுமையால் துன்பமடைந்து ஒரு பிடி அன்னம் தாருங்கள் என்று யாசித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லிக் கொடிய சொற்களால் வெறுத்துப் பேசிய தாழ்ந்தவனான நான் அத்தீவினைகளுக்குரிய பலனை என்றும் நினைத்துப் பார்க்கவில்லை. கொடிய வார்த்தைகளையும், கொடிய செய்கைகளையும் உடைய எமதூதர்களால் ஏற்படக்கூடிய கடும் தண்டனைகளுக்கு அஞ்சி நடுங்கி உனது திருப்பாதங்களைத் தேடி வந்துள்ளேன்! என்று வேண்டுகிறார் ஆழ்வார். நமது வினைப்பயனைத் தீர்க்கவே வறுமையுடன் படைக்கிறான். அத்தகையவனிடம் அன்பு கொண்டு அவன் பசியாற அன்னம் வழங்குதலே இறைவனுக்கு செய்யும் மிகப் பெரிய கைங்கர்யமாகும் என்பதை ஆழ்வார் இப்பாசுரத்தின் மூலம் நமக்கு விளக்கியுள்ளார்.
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமானே! திருநைமிசாரண்யத்தில் எழுந்தருளியுள்ள எனது தலைவனே! கோணலான புத்தியால் மற்றவர் கோபப்படும்படியான தொழிலைச் செய்து, காட்டிலே திரிந்து நாய்க்கூட்டங்களோடு திளைத்து பல உயிர்களை வேட்டையாடி, வழிப்போக்கர்களைத் துரத்தி, இருட்டிலே உழன்று பல உயிர்களைப் பறித்தேன். இத்தகைய செயல்கள் அனைத்தும் குற்றம் என்று அறியாதிருந்தேன். நெடுங்காலம் சிந்தித்துப் பார்த்து உன் திருப்பாதங்களைத் தஞ்சமாக வந்து விட்டதால், எம லோகத்திலுள்ள நரகவாசத்தை அனுபவிக்கும் துன்பத்தை நான் அழித்துவிட்டேன்! என்று ஆழ்வார் மனம் நொந்து கூறுகிறார். வழிப்பறி செய்து பொருளீட்டுதல், கலப்படம் செய்து பணம் ஈட்டுதல், பிறர் பொருளைக் கவருதல், அப்பாவிகளைக் கொல்லுதல் போன்ற இழிதொழில்களை செய்யாதிருக்க ஆழ்வார் நம்மைக் கேட்டுக்கொள்கிறார்.
விளாமரமாய் வந்த அசுரனை அழித்தவனே! அசுரர்களுக்கு என்றும் நஞ்சாய் இருப்பவனே! திருநைமிசாரண்யத்தில் உறையும் எம்பெருமானே! நீதி நூல்களால் தள்ளப்பட்டதை உள்ளத்தில் எண்ணி, பேசி, உடம்பாலே செய்து, பிறகு மரணம் அடைந்தவர்கள் சென்றடையும் பழைய நரக வழிகளைப் பற்றி கேட்டவுடன் பயந்து நடுங்கி உன் திருவடியைச் சரணடைந்தேன்! வஞ்சகனான அடியேன் உள்ளத்தில் புகுந்து பிரியாமல் இருக்கிறாய் தேவனே! என்று மனமுருகிப் பாடுகிறார். மனத்தால், செயலால், எவருக்கும் தீங்கிழைத்தல் பாவம். மீறி இதனைச் செய்யும் நிலையில் எமதூதர்களால் துன்பம் அனுபவிக்க நேரிடும். நான் உன்னை சரண் புகுந்தும் நான் செய்த பாவங்களை மறந்து என்னை ஏற்றுக் கொண்டாயே! கருணை வள்ளல் என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை என்ற கருத்தில் இப்பாசுரம் அமைகிறது.
திருக்குறுங்குடியில்
எழுந்தருளியுள்ள கடல்வண்ண பகவானே! நைமிசாரண்யத்தில் உறையும் பெருமானே! கலிபுருஷன்
என்னைத் துன்புறுத்தும்படி ஐம்புலன்களையும் தூண்டிவிடுகிறான். அவற்றை என்னால் கட்டுப்படுத்த இயலாத நிலையில்
நான் எவ்விதம் வாழ்வது. அந்த ஐவர் செய்த
கொடுமைகளை இனியும் செய்ய இயலாதவாறு என் நாவில் நல்லோசை, நயமிக்க நற்சொற்களால்
பல்வேறு மலர்களைக் கொண்டு உன் பாதங்களை வணங்கி அவற்றையே தஞ்சமாக எண்ணி வந்து
சேர்ந்தேன்.
திருக்குறுங்குடியிலும், நைமிசாரண்யத்திலும் உறையும் பெருமானே, தளர்ச்சியடைந்துள்ள
என்னை கலிபுரஷனாகப்பட்டவர் என் மீது ஐம்புலன்களை ஏவி விட்டார். அதனால் இவை ஐந்தும்
என்னை மிகவும் பாடுபடுத்தி வருகின்றன. நான் என் செய்வேன்? இனி அவர் எங்கே
வாழப்போகிறார் என்று இந்த ஐந்தும் நினைத்துவிட்டன. எனவே உன் திருப்பாதங்களில் நான்
சரணடைந்து விட்டேன். அதனால் என்னை ஆட்கொண்ட கொடுமையை நான் அழித்துவிட்டேன்.
குறுங்குடியில் வசிக்கும் கடல்வண்ணா! என் வாயினால் இனிமையான சொல்லெடுத்துப் பாடி,
வாசமலரிட்டு உன்திருவடித் தொழுதேன் என்கிறார் ஆழ்வார்.
தேன்
நிறையப்பெற்ற தாமரை மலரில் அவதரித்த திருமகளின் கணவனே! திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவனே!
திருநைமிசாரண்யத்தில் குடி கொண்டிருக்கும்
ஜனார்த்தனா! உடலில் உள்ள சதையே சுவராக, எலும்புகளே தூணாக,
ரோமங்களை வேய்ந்து ஒன்பது வாசல்களைக் கொண்டிருக்கும் குடிசையாகிய
இவ்வுடலை விட்டு ஆன்மா பிரியும்போது உன் திருப்பாதங்களே சரணமென்று
எண்ணியிருந்தேன். எனது தவமாக விளங்கும் உன் கருணையால் உன் திருப்பாதங்களைப்
பற்றினேன்.
சரீரத்தை ஒரு
குடிசையாக உருவகப்படுத்துகின்றார் ஆழ்வார். குடிசையில் இடையிடையே சுவர்கள்
வைக்கப்பட்டிருக்கும்; இவ்வுடலில் மாமிச பிண்டங்கள் சுவர் போலிருக்கின்றன;
குடிசையில் தூண்கள் நாட்டப்பட்டிருக்கும்; இதில்
எலும்புகள் தூண்கள் போன்றுள்ளன. குடிசையில் பல வாசல்களுண்டு; உடலிலும் நவத்வாரங்கள் உள்ளன.. குடிசை ஓலைக்கொத்து முதலியவற்றால்
மூடப்பட்டிருக்கும்; உடலும் உரோமங்களால் மூடப்பட்டிருக்கின்றது.
ஆக இவ்வகைகளாலே ஒரு குடிசை என்பது உடலாகும். குடிசையிலே நாம் வாழ்வது போல்
இவ்வுடலில ஆத்மா வாழ்கின்றான்; இவ்வுடலைவிட்டு ஆத்மா
வெளிக்கிளம்புங் காலமே மரணமெனப்படும். அப்படி மரணம் நேர்ந்த பிறகு இவ்வாத்மா
போய்ச் சேரவேண்டிய இடம் எம்பெருமான் திருவடிகளே என்கிறார் ஆழ்வார்.
துன்பங்கள்
வராதபடி எண்ணித் திருநைமிசாரண்யம் சென்று வழிபடுவோம் வாருங்கள் என்று, தேவேந்திரன் வானவர்களை அழைத்து வந்து வணங்கும் இத்தலத்தில்
எழுந்தருளியிருக்கும் தேவராஜப் பெருமானை, நெஞ்சினுள் வைத்து
அவரிடம் பக்தி மேலிட திருமங்கை ஆழ்வார் பாடிய இப்பாமாலையை திறம்பட ஓதுபவர்கள்
சமுத்திரத்தால் சூழப்பட்ட இம்மண்ணுலகினை வெண்கொற்றக் குடையின் கீழ் ஆண்டு,
தேவர்களோடு சேருவார்கள். வானவர்களும் தங்களது சுகபோக வாழ்வினை ஒதுக்கித் தள்ளிவிட்டு
திருநைமிசாரண்யத்துப் பெருமானை வழிபடுங்கள் என்று கூறுகிறார். இத்தகைய பெருமைமிகு
தலத்தில் ஆழ்வார் பாடிய பாசுரங்களைப் நாளும் ஓதுமாறு கூறுகிறார். சத்சங்கம் என்பது
சொர்க்கத்தைக் காட்டிலும் மேலானது. ஆனால் மானிடர்கள் இதனை அறிந்து கொள்ளாத
பேதைகளாக வாழ்கிறார்கள் என்ற கருத்தினை ஆழ்வார் நமக்கு உணர்த்துகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக