நம்மாழ்வார் திருவாய்மொழி
கொடியார் மாடக் கோளூர் அகத்தும்
புளியங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. 3697
பசுமையான கொடிகள் நிறைந்த
மாடமாளிகைகளைக் கொண்ட திருக்கோளூரிலும், திருப்புளிங்குடி தலத்திலும் இங்கு அங்கு திரும்பாமல் நீ
மகிழ்வோடு பள்ளி கொண்டிருப்பது அடியார்களின் அல்லல் தீர்த்த அயர்ச்சியினாலா? இல்லையேல்
திருவிக்கிரமனாய் வளர்ந்து இவ்வுலகத்தைத் தாவியளந்த களைப்பா?
சொல்லியருள வேண்டும் என்று பெருமானை நோக்கிக் கேட்கிறார்
ஆழ்வார்.
திருக்கோளூரிலும், திருப்புளிங்குடியிலும்
பரிவர் பலர் புடைசூழத் திருக்கண் வளர்ந்தருளிய விதத்தைப் பேசுகிறார் ஆழ்வார்.
இத்திருப்பதியில் நீ ஆடாமால் அசையாமல் திருக்கண் வளர்வதற்கு என்ன காரணம்? தேவர்கள்
சரணடைந்ததால் அசுரர்களை வதைத்து அவர்களது இன்னல்களை போக்கிய களைப்போ அல்லது
மூவுலகை அளந்த களைப்போ என்று வினவுகிறார். ‘நடந்த கால்கள் நொந்தனவோ? நடுங்க
ஞாலமேனமாய் இடந்த மெய்குலங்களோ’ என்ற திருச்சந்தவிருத்தப் பாடல் இங்கு
நினைவு வருகின்றது. உறங்கும்போது இடம் வலம் மாறி திரும்பி படுப்பது வழக்கம்.
அவ்விதம் ஒருபோதும் அசையாமல் கிடக்கின்றீரே? என்று ஆழ்வார் கேட்கிறார்.
பண்டை நாளாலே நின் திரு அருளும்
பங்கயத்தாள் திரு
அருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால்
குடிகுடி வழிவந்து
ஆட்செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால்
நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப்புளிங்குடிக்
கிடந்தானே!. 3684
தெளிந்த அலைகள் தவழும் தாமிரபரணி
ஆற்றங்கரையில் குளிர்ச்சி மிகுந்து பசுமையான வயல்கள் சூழ்ந்த திருப்புளிங்குடியில்
பள்ளி கொண்டிருப்பவனே! முற்காலம் முதற்கொண்டு உனது திருவருளும், மலர் மகளான
திருமகளின் கருணை பெற்றால் உன் கோவிலைப் பெருக்குவது முதலான பலவிதமான சேவைகளை
பரம்பரையாகச் செய்து கொண்டிருக்கிறோம். இவ்விதமான தொண்டர்களான எங்களுக்கு அருள்
செய்து உனது ஜோதிமயமான வாய் திறந்து ஒரு வார்த்தை பேசி உன் தாமரை விழிகளால்
எங்களைப் பார்க்கக் கூடாதா என்று கேட்கிறார் ஆழ்வார்.
வேறு புகலற்ற அடியேனைக் குறித்து
ஒரு வார்த்தை அருள வேண்டுமென்று வேண்டுகிறார். பிராட்டியின் தெய்வீக பலமாகவே
பெருமானின் திருவருள் வாய்க்கப்பட்டுள்ளது. திருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல்
முதலிய பணிகளால் கோயிலை சீர்மைப்படுத்தி கைங்கர்யம் மேற்கொள்வது தலையாய பணியாகும்.
வம்ச பரம்பரையாக கைங்கர்யம் செய்த எம் தொண்டர்க்கு சோதிவாய் திறந்து
மலர்ந்தருளுமாறு வேண்டுகிறேன் என்று ஆழ்வார் மனமுருகி வேண்டுகிறார்.
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின்
தீர்த்த
அடிமைக்
குற்றேவல்செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ
ஒருநாள்
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத
பங்கயமே தலைக்கு
அணியாய்
கொடிக்கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப்புளிங்குடிக்
கிடந்தானே. 3685
கொடிகளால் சூழப்பட்ட அழகிய
மதில்கள் சூழ்ந்த பசுமையான வயல்களையும், சோலைகளையும் கொண்ட திருப்புளிங்குடியில் கண்
வளர்ந்தருள்பவனே! வழிவழியாக வந்த குலத்திலே உன் கைங்கர்யத்தை மேற்கொண்டு, உன்
திருவடிகளைத் தாண்டாமல் இருக்கும் அடியார்களாக நாங்கள் உள்ளோம். இத்தகைய அடியாரான
எங்களிடம் கருணை கொண்டு உலகங்களை அளக்க நிமிர்த்திய உன் பாத கமலங்களை ஒரு நாளாவது
தலைக்கு அணியாய்ச் சூட்டக்கூடாதா என்று கேட்கிறார் ஆழ்வார்.
பெருமானே! உனது திருவடிகளை என்
சிரசின்மீது வைத்தருள வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார். குடிக்கிடத்தல், ஆக்கஞ்செய்தல், தீர்த்தவடிமைக்
குற்றவேல் செய்தல் போன்றவற்றை ஆழ்வார் தமது சேஷத்வத்தைக் காத்துக் கொள்ளும்படி
குலமரியாதை தவறாதவராகக் காணப்படுகிறார். பெருமான் நித்யசூரிகள் சூழ இருக்குபோது
நிர்ப்பயமாய் எழுந்துள்ளானே என்ற சோகமும், இது போன்று ஆழ்வாருக்கு அருள மனம் வரவில்லேயே என்ற மற்றொரு
சோகமும் அவரை வாட்டுகின்றது என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை
காலம்
கிடத்தி உன் திருஉடம்பு
அசைய
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை
வழி வரும்
தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை
மங்கையும் நீயும்
இடம் கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்
திருப்புளிங்குடிக்
கிடந்தானே! 3686
திருப்புளிங்குடியில் பள்ளி
கொண்டிருப்பவனே! எத்தனைக் காலம் இவ்வாறு உறங்கியே கிடப்பாய்? கிடந்த நாள்
கிடந்தாயிற்று! உன் திருவுடம்பு அசைய எழுந்திருப்பாயாக! தொடர்ந்து உனக்குத் தொண்டு
செய்துவரும் பரம்பரை அடியார்களான எங்களிடம் கருணை வைத்து அகலமான உன் தாமரைக்
கண்கள் விழித்தெழந்து உன் தேவியான அலர்மேல் மங்கையோடு நீயும் மூவுலகத்தாரும்
தொழும்படியாக எழுந்து உட்கார்ந்தருள வேண்டும் என்ற வகையில் ஆழ்வார் கூறுகிறார்.
எம்பெருமான் போகுமிடமெல்லாம்
இளையபெருமாளைப் போல் கூடவே திரிந்து இந்த நிலைமையில் இந்த கைங்கர்யம் செய்ய
வேண்டும் என்று வழுவாதிருக்க ஆவல் கொண்டுள்ளார். தடங்கொள் தாமரைக் கண்கள் விழிக்க
வேண்டும், எழுந்திருக்க
வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். திருமழிசைபிரான் குடந்தைப் பெருமானை ‘நடந்த
கால்கள் நொந்தவோ’ என்ற பாசுரம் போன்று இங்கும் பெருமானை எழுந்திருந்து
பேசுமீரே என்கிறார். காலங்கிடத்தி சயனித்திருப்பது சிரமமாயிராதோ, எழுந்திராய்!
என்று வேண்டுகிறார்.
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை
இருந்து வைகுந்தத்துள்
நின்று
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு
அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்து ஆடி
நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்ப நீ காண வாராயே. 3687
எம்பெருமானே! திருப்புளிங்குடியில்
சயனித்த அழகையும், வரகுண
மங்கை தலத்தில் வீற்றிருந்த கோலத்தையும், ஸ்ரீவைகுண்டத்தில் நின்றிருந்த கம்பீரத்தையும் தரிசித்துத்
தெளிந்த என் சிந்தையிலும் மனத்திலும் நீங்காமல் குடியிருந்து என்னை ஆள வேண்டும்.
நினைத்தவர்கள் நெஞ்சம் குளிரும்படி, உன் சீல குணத்தாலே மூவுலகத்தில் வாழ்பவர்களும் வியக்குமாறு, நாங்கள் உன்
பெருமைகளில் மூழ்கி மகிழ்வோடு கூடி நின்று கூத்தாடி ஆர்ப்பரிக்க, பளிங்கு போன்ற
தெளிந்த நீரை முகர்ந்து வரும் மேகத்தில் பவளம் போன்ற கனிந்த உன் திருவாய் சிவந்து
கிடக்க, எங்களுக்குக்
அருள் செய்து நாங்கள் தரிசிக்கும்படி வரவேண்டும் என்கிறார் ஆழ்வார்.
திவ்ய தேசங்களில் பெருமான் நின்ற, அமர்ந்த, சயனித்தத்
திருக்கோலத்தை நம்மாழ்வார் தனித்தனியே அனுபவித்தள்ளார். அது போன்று ஒரே சமயத்தில்
மூன்று பெருமானையும் ஒரு சேர அனுபவித்தும் பாடியுள்ளார். அதே போன்று
திருமங்கையாழ்வாரும் காஞ்சி திவ்ய தேசத்தில் ஊரகம், வெஃகா மற்றும் திருக்கச்சி ஆகியவற்றில்
உள்ள பெருமானை அனுபவித்துப் பாடியுள்ளார். இத்தகைய தரிசனத்தை எங்களுக்கு
அளிக்குமாறு வேண்டுகிறார்.
பவளம்போல் கனி வாய் சிவப்ப
நீ காண வந்து நின் பல்
நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண்
தாமரை தயங்க
நின்றருளாய்
பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப்புளிங்குடிக்
கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய் சினப் பறவை
ஊர்ந்தானே. 3688
கவளமாக உணவு கொள்ளும் கஜேந்திரன்
என்னும் யானையின் துன்பத்தினைத் தீர்க்க தடாகக் கரைக்குச் சினம் கொண்ட கருடப்
பறவையின் மீது பறந்து வந்த வேந்தனே! பவளக் கொடிகளின் கீழ் சங்குகள் திரண்டு
காணப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிர்ச்சியான திருப்புளிங்குடியில் திருக்கண்
வடிவம் கொண்ட முத்துப்பற்கள் ஒளிவீச புன்புறுவல் செய்து கொண்டு, தாமரை போன்ற
உன் திருக்கண்கள் ஒளிவிட நீ வந்து தரிசனம்
தந்தருள வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
கஜேந்திரனுக்கு அருளியது போன்று
எமக்கும் அருள வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார். அது போன்று சிவந்த பவளவாய்
அதரத்தில் முறுவல் செய்து எங்களை மகிழ்விக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறார். மேலும்
திருக்கண் தாமரையால் எம்மை நோக்கி ஆனந்தம் தர வேண்டும் என்கிறார். சங்குகள் மிதந்து வரும் தாமிரபரணி ஆற்றின்
கரையில் உள்ள திருப்புளிங்குடியில் சேவை சாதிப்பவனே எமக்கருள்வாய்! என்று
வேண்டுகிறார்.
காய் சினப் பறவை ஊர்ந்து பொன் மலையின்
மீமிசைக் கார் முகில்
போல
மா சின மாலி மாலிமான் என்று அங்கு
அவர் படக் கனன்று முன்
நின்ற
காய் சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல்
திருப்புளிங்குடியாய்
காய் சின ஆழி சங்கு வாள் வில்
தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே. 3689
மேரு மலையின் மீது தங்கும்
நீருண்ட கார்மேகம் போல கோபம் கொண்டு தாக்கவல்ல கருடப்பறவையின் மீது ஏறி வந்து, மிகுந்த கோபம்
கொண்ட மாலி, சுமாலி, மாலியவான் என்ற
அரக்கர்களை விரட்டிக் கொன்று முன் நின்ற காய்ச்சின வேந்தே! பிரகாசமான திருமுடியுடையவனே! வளம் மிகுந்த வயல்களால் சூழப்பட்ட
திருப்புளிங்குடியில் சயனத்திருக்கும் பெருமானே! அடியார்களின் எதிரிகளைக்
காய்கின்ற சினமுடைய சுதர்சனம், பாஞ்ச சன்னியம், நாந்தகம், சார்ங்கம், கௌமோதகி ஆகிய இவற்றைத் தரித்து என் துன்பத்தை நீக்குபவன்
நீயல்லவோ என்று கூறுகிறார் ஆழ்வார்.
கொடிய அரக்கர்களையெல்லாம் வதம்
செய்தவனான யான் உம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றாமல் விடுவேனா? நின் விருப்பம்
அவ்விதமாயிருப்பின் எவ்வித தடையுமின்றி நான் அருள்வேன் என்கிறார் பெருமான்.
எம்பெருமான் இலங்கையில் கொடிய அரக்கர்களை வதம் செய்ய கருடனாகச் சென்று முடித்தார்.
திருமங்கையாழ்வார் கருடனை ‘காய்சினப் பறவை’ என்று குறிப்பிடுகிறார். பெருமான்
விரோதிகளிட௺ம் அவ்வப்போது அருள் தோன்றினாலும் கருடனுக்கு அது தோன்றுவதில்லை.
அவர்களை முடித்தே தீருவான் என்று கூறுகிறார்.
எம் இடர் கடிந்து இங்கு என்னை
ஆள்வானே!
இமையவர் தமக்கும் ஆங்கு
அனையாய்
செம் மடல் மலருந் தாமரைப் பழனத்
தண் திருப்புளிங்குடிக்
கிடந்தாய்
நம்முடை அடியர் கவ்வைகண்டு உகந்து
நாம் களித்து உளம் நலம்
கூர
இம் மட உலகர் காண நீ ஒருநாள்
இருந்திடாய் எங்கள்
கண்முகப்பே. 3690
எங்களது எல்லாத் துயரையும்
போக்கி எங்களை நல்வழியில் வழிநடத்துபவனே! தேவர்களுக்கு அனைத்துமாக இருப்பவனே!
சிவந்த இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலரும் வயல்களையுடைய குளிர்ச்சி மிகுந்த
திருப்புளிங்குடியில் சயனித்திருப்பவனே! நம்முடைய அடியார்கள் உன்னைப் பூஜித்து
ஆரவாரம் செய்வதைப் பார்த்து மகிழ்கிறோம். அந்த மகிழ்ச்சியினால் நெஞ்சமும் நலமுடன்
திகழ்கின்றது. அறியாமையில் சிக்கிய மக்களைக் காக்க நீ ஒரு நாளாவது எங்கள் கண்முன்
வந்து வீற்றிருக்க வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
உலகில் நல்லோர்கள் மட்டுமின்றி
அடுத்தவர்க்கு துன்பம் இழைக்கக் கூடியவர்களையும் எம்பெருமான் ரக்ஷிக்கிறான். அவனை
நல்வழிபடுத்த பெருமான் பலவிதங்களிலும் முயற்சிக்கிறான். முடியாத நிலையில் அவனுக்கு
சிறுதண்டனை கொடுத்து நல்வழிப்படுத்துகிறார். அத்தகைய பெருமான் என் கண் வட்டத்தில்
ஒரு நாள் இருக்க வேண்டுமென ஆழ்வார் விரும்புகிறார். தேவர்களுக்கும் இவ்வாறே ரக்ஷிக்கின்றான்.
இத்தகைய குணம் கொண்ட பெருமான் திருப்புளிங்குடியில் அனைவருக்கும் சேவை
சாதிக்கின்றான் என்பது இதன் கருத்தாகும்.
எங்கள் கண் முகப்பே உலகர்கள்
எல்லாம்
இணை அடி தொழுது எழுது
இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால்
தலைத்தலைச் சிறந்து
பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்
திரு
வைகுந்தத்துள்ளாய்! தேவா
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒருநாள்
இருந்திடாய் வீற்று
இடம் கொண்டே 3691
எங்கள் கண் முன் உலகத்தவரெல்லாம்
உன் திருப்பாதங்களைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, பின் எழுந்து கெஞ்சி, தங்கள் பக்தி
வெளிப்பட தத்தம் துதிகளால் போட்டி போட்டுக் கொண்டு ஆராதிக்கிறார்கள்! சந்திரனைத்
தொடுமளவிற்கு மாட மாளிகைகள் கொண்ட திருப்புளிங்குடியில் சயனித்திருப்பவனே! ஸ்ரீ வைகுண்டத்தில் வீற்றிருக்கும் வாசுதேவா!
விசாலமான இவ்வுலகில் ஒரு நாள் நாங்கள் தரிசிக்குமாறு வீற்றிருந்தருள வேண்டுகிறேன்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஆழ்வாரின் வேண்டுதலைக் கேட்டு,
ஆழ்வீர், எனது
வீற்றிருக்கும் அழகினைக் காண வேண்டுமென்றால் அது திருநாட்டில் தான் காண வேண்டும்!
என்று பெருமான் கூற, ஆழ்வாரோ
எங்களுக்கு இங்கேயே காட்டியருள வேண்டும்! என்று வேண்டுகிறார். அறியாமை நிறைந்த சில
மக்கள் நாத்திகவாதம் பேசுகிறார்கள். அதனைக் களைய ஒரு முறை தரிசனம் தந்தருள
வேண்டும் என்கிறார். எனவேதான் சந்திர மண்டலத்தை விட உயரமான மாடங்களைக் கொண்ட
திருப்புளிங்குடியில் சேவை சாதிக்கிறார்.
வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா
ஞாலத்து
இதனுளும் இருந்திடாய்
அடியோம்
போற்றி ஓவாதே கண் இணை குளிரப்
புது மலர் ஆகத்தைப்
பருக
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும்
செழும் பனைத்
திருப்புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
கொடுவினைப் படைகள்
வல்லானே. 3692
சேறு மிகுந்த வயல்களில் உள்ள
நீரில் வாளை மீன்கள் சம்பாப் பயிர்களில் ஏறித் துள்ளிக் குதிக்கும் செழிப்பான மருத
நிலத்திலுள்ள திருப்புளிங்குடியில் கண் வளர்ந்தருள்பவனே! அசுரர் குலத்திற்கு
காலனாக வந்து அவர்களை வேரறுக்க கொடிய சக்ராயுதம் செலுத்துவதில் வல்லவனே! எங்களுக்காக இந்த விசாலமான உலகில் வந்து
வீற்றிருக்க வேண்டும். உன் அடியவர்களாகிய நாங்கள் கண்குளிரப் புதுமலர் போன்ற உனி
திருமேனி அழகைப் பருகி இடைவிடாமல் போற்றும் பேற்றினைப் பெற வேண்டும்! என்று
கூறுகிறார் ஆழ்வார்.
எம்பெருமானுடைய தளிர்ந்த
திருமேனிக்கு இந்த முரட்டு நிலம் தாங்காது. ஆயினும் இங்குள்ள பக்தர்கள்
சேவிப்பதற்காக இத்தகைய துன்பங்களைத் தாங்கி வருகிறார். எம்பெருமானுடைய
சௌகரியத்திற்கு இந்நிலம் தகுதியற்றது என்கிறார். சம்சார சாகரத்தில் உழன்று
கொண்டிருக்கும் நாங்கள் உனது பெருமையை அறியவில்லை. உன்னைக் கொண்டு பல காரியங்கள்
சாதிக்கும் நிலையில் உன்னை அறிய மாட்டாமல் சம்சாரத்தில் சிக்கித் தவிக்கிறோம்.
இதனைக் களைந்து எம்மை ஏற்றுக் கொள்வாயாக! என்கிறார் ஆழ்வார்.
கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கு
இடர் கெட அசுரர்கட்கு
இடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே
கலி வயல்
திருப்புளிங்குடியாய்
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை
நிலமகள் பிடிக்கும்
மெல் அடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
கூவுதல் வருதல்
செய்யாயே. 3693
தேவர்களின் துன்பம் அழிவதற்காக அசுரர்களுக்குத்
துயரத்தைச் செய்த கடுமையான நஞ்சாயிருந்தவனே! கொடிய காரியங்களைச் செய்யும்
பஞ்சாயுதங்களை இயக்க வல்லவனே! எனது அமுதமே! வளமுடைய வயல்களைக் கொண்ட
திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டிருப்பவனே! அழகுக்கு ஒருவரும் நிகரில்லாத
ஸ்ரீதேவியும், பூமிதேவியும்
பிடிக்கும் உன் மென்மையான திருப்பாதங்களை, கொடிய பாவம் செய்த அடியேனும் பிடிக்கும்படி என்னை
அழைப்பாயாக! அல்லது ஒரு நாள் வந்தருள வேண்டும்! என்கிறார் ஆழ்வார்.
தேவர்களைக் காக்க அசுரர்களை
அழித்த நீ கொடிய பாவங்கள் செய்த அடியேன் பிழைக்கும்படி ஒரு நாள் வந்து காட்சி தர
வேண்டும்! என்று ஆழ்வார் வேண்டுகிறார். ஆழ்வார் அத்தகைய கொடிய பாவங்கள் எதையும்
செய்யவில்லை. இருப்பினும் நமக்காகப் பழியை தம் மேல் சுமத்திக் கொண்டு நம் நன்மைக்காக
இறைவனிடம் வேண்டுகிறார். நம்முடைய கொடிய பாவங்கள் அழிந்தாலன்றி நம் துன்பம்
நீங்காது. அதற்கு முதற்படியாக அழியும் பொருளை நாடுவிதை விட்டுவிட்டு இறைவனை நாம்
நாடிச் செல்ல வேண்டும் என்பதே ஆழ்வார் வலியுறுத்தும் கூற்றாகும்.
கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன்
தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும்
இவையும் ஓர் பத்தும்
வல்லார்கள்
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான்
அடி இணை உள்ளத்து
ஓர்வாரே. 3694

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக